‘இரவாடிய திருமேனி’- வாசிப்பு
வேல்முருகன் இளங்கோவின் மூன்றாவது நாவல் ‘இரவாடிய திருமேனி’ எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கடந்த சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியானபோது அதன் தலைப்பும் முன்னட்டையும் வெகுவாக ஈர்த்ததால் வாசிக்க ஆர்வமாக இருந்தேன். பாண்டியர்களுக்குப் பின்பான, முகலாயர்களுக்கு முன்பான நாயக்கர் கால மதுரையைக் களமாகக் கொண்ட கற்பனை நாவல்.

நிறையக் கதை மாந்தர்கள் இருந்தாலும் நாவல் முதன்மையாக நான்கு கதைச் சரடுகளின் பின்னலாக அமைந்துள்ளன. சாம்பன் எனும் கள்வனின் வாழ்க்கை முதல் சரடு. சாம்பனின் தந்தை, ஆசிரியர் சுருளி, சுருளியின் மகன் சங்கன், வனத்தில் சாம்பனை மீட்கும், அவனை வழிநடத்தும் பேய்ச்சியின் வடிவிலான பெண் ஆகியோரைச் சுற்றிக் கதை நிகழ்கிறது. இரண்டாவது சரடு, பண்டிதர் உத்திராபதி எனும் வைத்தியரின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகள் கோதை, மருமகன் பரிதி, சீடரும் சம்பந்தியுமான பெரியசாமி ஆகியோருடையது. மூன்றாவது சரடு ஞான சபையின் தலைவர் ஸ்ரீவத்சர், அவரது சீடரான கோபிலன் ஆகியோரின் கதை. நான்காவது சரடு, அரசர் கிருஷ்ணப்ப நாயக்கர், ராணி, மன்னரின் மெய்க்காவல் படைத் தலைவரான மாறவர்மன் ஆகியோருடைய கதைகள். மன்னருக்குப் பெரிய பங்கு ஏதுமில்லை. மகளை நோயில் இழந்த மாறவர்மன் முக்கியக் கதை மாந்தர் எனச் சொல்லலாம். மன்னரால் புறக்கணிக்கப்பட்ட ராணி வெறுப்பும் கனிவும் என எதிரெதிர் இயல்புகளின் கூட்டில் உருவான கதாபாத்திரம்.
நாவல் பின்தொடர முனையும் முக்கிய மெய்யியல் கேள்வி, மனித குலமறிந்த முதல் இலக்கியப் படைப்பான ‘கில்காமேஷ்’ தொடங்கி இன்றுவரை பல படைப்புகள் விவாதிக்கும் மரணம் எனும் அப்பட்டமான நிதர்சனத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாவலுக்குள் மரணம் என்பது இருள், இரவு எனப் பல பரிமாணங்கள் கொள்கிறது. எந்தத் தத்துவத்தாலும், தர்க்கத்தாலும் விளக்க முடியாத, எந்த நம்பிக்கையாலும் நிரப்ப முடியாத பெரும் பாழாக உருக்கொள்கிறது. இருளை வெல்வதற்கான வழியாகத் தத்துவங்கள், மதங்கள், அறங்கள், அரசு போன்றவற்றை ஒளியெனக் கருதினால் அவை அனைத்தையும் பொருளற்றதாக ஆக்கும் காலத்தின், இருளின், மரணத்தின் இன்றியமையாத தன்மையை, இறுதி வெற்றியைப் பறைசாற்ற முயல்கிறது இந்த நாவல். தடயமின்றி இருளில் மறைபவை காலத்தைக் கடந்த பேரிருப்பாக மாறிவிடும் என இருளின் புகழ் பாடுகிறது.
அரசு, மதம், ஞான பீடம் போன்ற அமைப்புகளுக்கு எதிராகக் கள்வனை அரசின்மைவாதியாக நிறுத்தி ஒருவித இருமையைக் கட்டமைக்கிறார். சாம்பன் வளரியைக் கொண்டு ஞானத்தின் குறியீடாகச் சுடர்ந்துகொண்டிருக்கும் அணையா விளக்கை அடித்து வீழ்த்தி இருளின் வெற்றியை நிலைநாட்டுகிறான். காவியத்தை இயற்றிய காந்தர்வன் அதை முற்றிலுமாக அழிக்கிறான். நாவலின் முதன்மைப் பாத்திரமான சாம்பன் இருட் சிறையில் சுவடின்றி மறைகிறான். சிறையும் இருளும் அவனை வெருட்டவில்லை. அவனை அது முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. மெய்யியல் தளத்தில் சார்வாகம் வைதீகத்தின் மீது கொள்ளும் வெற்றியைப் பற்றிச் சொல்கிறது. ஸ்தூலமானவை, புலன் அனுபவத்திற்கு உட்பட்டவை அரூபமான கருது கோள்களின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.
இத்தகைய நாவல் களத்திற்கு வலுவான மொழி தேவை. வேல்முருகன் இளங்கோவிடம் நல்ல மொழி வளம் உள்ளது. கம்பனின் காவியம் அரங்கேறிய திருவரங்க சபையில் ஒரு கள்வனின் காவியமும் அரங்கேறுகிறது என்பது மிக சுவாரசியமான கரு. பிடிபட்டு மரண தண்டனையை எதிர்கொள்ளக் காத்திருக்கும் கள்வன், காவலர்கள், வைத்தியர்கள் சகிதம் மேற்கு மலைக்காட்டில் தொன்மத்தில் மட்டும் உலவும் தீக்கடம்பை எனும் அரிய தாவரத்தைத் தேடிப் புறப்படுகிறான். அரசரிடம் தீக்கடம்பையை உரிய காலத்திற்குள் கொண்டுசேர்க்கவில்லை என்றால் பெரும் வைத்தியரான உத்திராபதி பண்டிதர் தலை வாங்கப்படும் என்று அரசர் ஆணையிடுகிறார். தீக்கடம்பை அழியாத புகழையும் ஆட்சியையும் தரவல்லது என்றொரு பாடல் கர்ண பரம்பரையாக வருகிறது. அதைத் தேடி பலர் தங்களை இழந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தீக்கடம்பை தெய்வமாகிய ஒரு பெண் என்றொரு பாடபேதமும் உள்ளது. சாம்பனின் வழியாகத் தனது வஞ்சத்தைத் தீக்கடம்பை தீர்த்துக்கொள்கிறாள் என்றொரு வாசிப்பிற்கும் இடமுண்டு. மந்திரத்தால் மிருகங்களைக் கட்டுவது, முற்பிறவி நினைவுகளைக் கொண்டுவரும் கல்மரம், செந்நாய் வடிவமெடுக்கும் வனப்பேய்ச்சி, சிலையைப் புணர்வது எனச் சுவாரசியமான சாகச அதிபுனைவு நாவலுக்கான கூறுகள் கொண்டதாக உள்ளது ‘இரவாடிய திருமேனி’. நாவலின் உயிர்ப்பான பகுதி என வனத்தில் கல் மரத்தைத் தீண்டும்போது சாம்பன் காணும் கனவுக் காட்சியைக் குறிப்பிடலாம். தேடித்தேடி வேட்டையாடப்பட்ட குடியின் தெய்வமாக முன்பொரு காலத்தில் சாம்பன் வழிபடப்பட்டவன் எனும் பகுதி அபாரமாக உள்ளது. நாவலின் களத்தைச் சுருங்கச் சொல்லும்போது மிக நல்ல நாவலாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால் நாவல் சில நல்ல தருணங்களை அளிப்பதோடு முழுமை பெறாமல் நின்றுவிடுகிறது என்பதே அதன் முதன்மையான சிக்கல்.
‘இரவாடிய திருமேனி’யை எப்படி வகைப்படுத்துவது? வரலாற்றுக் காலத்தில் நிகழ்வதாகத் தோன்றினாலும் இதை வரலாற்றுப் புனைவாக வகைப்படுத்த முடியாது. வரலாற்று ஊகப் புனைவு என்று சொல்லலாமா? அல்லது அதிபுனைவு என்று வகைப்படுத்தலாமா? கதைசொல்லியே கதை மாந்தராக வரும் பின்நவீனத்துவ மீ புனைவாகக் கருதலாமா? இந்த நாவலின் மிகைகளைக் காவிய அழகியலைக் கொண்டு நிகர்செய்ய ஒரு இடமுண்டு என்பதால் காவிய அழகியலைப் பொருத்திப் பார்க்கலாமா? எழுத்தாளர் சாம்ராஜ் இந்த நாவலை எதிர்க் காவியம் எனப் பின்னட்டைக் குறிப்பில் குறிப்பிடுகிறார். எதிர்க் காவியம் என்றால் என்ன என்றொரு கேள்வியும் எழுகிறது. மரபான காவியங்கள் அறத்தை வலியுறுத்துவது, அரசை வலுப்படுத்துவது என்றொரு பார்வை உண்டு. இரவாடிய திருமேனி அவற்றுக்கு எதிர்த்திசையில் உள்ளது என்பதால் எதிர்க் காவியம் என்கிறாரா? காவிய அழகியலை மறுப்பது எதிர்க் காவியம் என்றால் நவீன நாவல் எனும் வடிவமே எதிர்க் காவியம்தானே. ‘இரவாடிய திருமேனி’ காவிய மொழியில் எழுதப்பட்ட நவீன நாவல். காவியத்தை இயற்றிய காந்தர்வனே குறிப்பிடுவதுபோல இது ஒரு ‘தான்தோன்றித்தனமான’ ஆக்கம் எனச் சொல்லலாம். பிருஹத் கதாவை பைசாசிக மொழியில் இயற்றி அதைத் தீக்கு இரையாக்கிய குணாட்யரின் வார்ப்புருதான் காந்தர்வன். நாவலுக்குள்ளேயே அதன் மீதான விமர்சனங்களும் ஆங்காங்கு காணக் கிடைக்கின்றன.
யதார்த்த நாவல்கள் பொதுவாகக் கதாபாத்திரங்களை வலுவாக உருவாக்கி அவர்களைப் பின்தொடர்ந்து செல்பவை. நவீனத்துவ நாவல்கள் கதை மாந்தர்களைக் காட்டிலும் கேள்விகளுக்கும் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவை. அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதற்கான ஊடகமாகக் கதைமாந்தர்களைக் கருதுபவை. இவ்விரு போக்கிற்கும் டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி ஆகியோரை முதன்மை முன்மாதிரிகளாகக் கருதலாம். நான் சிறந்த நாவல் எனக் கருதுபவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் பயணம் நிகழ்வதை உணர்ந்திருக்கிறேன். இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே சமரசப் புள்ளியை நோக்கிச் செல்வதைக் கவனித்திருக்கிறேன். ‘இரவாடிய திருமேனி’யில் கதை மாந்தர்களின் பயணமும் சிந்தனையோட்டமும் இயையவில்லை என்பதே என் எண்ணம்.
‘இரவாடிய திருமேனி’யின் முதன்மைச் சிக்கல் என்ன? கலை ஏதோ ஒருவகையில் இயற்கையை, வாழ்வைப் பிரதியெடுப்பது. அத்தகைய பிரதியெடுப்பில் நுட்பம் கூடுந்தோறும் கலை மதிப்பு உயர்கிறது. ‘இரவாடிய திருமேனி’யில் ஏற்கெனவே வாழ்வைப் பதிவு செய்த ஆக்கங்களில் வரும் கதை மாந்தர்களும் சிந்தனைகளும் பிரதியெடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஆகவே அது தன்னியல்பில் வாழ்வின் மங்கிய, பலவீனமான, நீர்த்த நகலாக உருக்கொள்கிறது.
ஒரு இலக்கிய ஆக்கத்தினால் பாதிப்புக்குள்ளாகி எழுதுவது பிழையான செயல் அல்ல. இலக்கியம் அப்படித்தான் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் அந்தக் கதை மாந்தர் நம்முடையவராக ஆகும்போது மட்டுமே கலையாக ஆகும். மேற்கில் ஃபேன் பிக்சன் என்றொரு வகைமை உண்டு. ஏற்கெனவே புகழ்பெற்ற கதை மாந்தர்களைக் கொண்டு அதன் நீட்சியாக வேறு கதைகளை வாசகர்கள் உருவாக்குவார்கள். ஜெயமோகன், சு. வெங்கடேசன், சாண்டில்யன், முத்துநாகு, டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கிவரை பல எழுத்தாளர்களின் கதை மாந்தர்கள் உலவுகிறார்கள். இரவாடிய திருமேனி நாவலில் வரும் ஞான சபைப் பகுதியை வாசித்தபோது எழுத்தாளர் பகடிசெய்ய முயல்கிறாரோ என்றொரு எண்ணம் ஏற்பட்டது. அப்படிச் செய்திருந்தால் கூட அதற்கொரு நியாயமும் இடமும் உண்டு. பல நாவல்களின் கதை மாந்தர்களைக் கொண்டு நல்ல பகடி நாவலை எழுத முடியும். ஞான இருக்கை, ஞான சுடர், ஞான சபை என வரிக்கு வரி ஞானம் சுட்டப்படுகிறது. உண்மையில் அந்த உரையாடல்களிலும் தத்துவத் தெறிப்புகளிலும் ஆழமோ புதுமையோ இல்லை. ஆழத்தையும் தீவிரத்தையும் பாவனை செய்கிறது. ஞானசபையில் நிகழும் விவாதம் கலையின் வீழ்ச்சி தொடர்பானதாக இருக்கிறது. ஸ்ரீவத்சரின் தரப்புதான் என்ன? உபநிஷத் தரப்பைச் சேர்ந்தவர் எனப் போகிற போக்கில் ஒரு வரி சொல்லப்படுகிறது. யவனர்கள், சார்வாகர்கள் என எவருடைய தரப்பும் துலங்கவில்லை. யவனர்கள் உலகாயதர்களாகத் தோற்றம் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பலிச் சடங்குமீது நம்பிக்கை உள்ளது. அது ஆற்றலை அளிக்கும் என நம்புகிறார்கள். ஞானசபையில் எதுவுமே விவாதிக்கப்படவும் இல்லை. வெவ்வேறு மதத்தவர் வெறுமே பூசலிட்டுப் பிரிந்துசெல்கிறார்கள்.
நாவலைத் தத்துவத்தின் கலை வடிவம் எனக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். எனினும் நாவலைத் தத்துவ நோக்குகளின் மோதல் அல்லது அவற்றிற்கு இடையேயான உரையாடலின் கலை வடிவம் என கருதுகிறேன். இந்தக் கூற்று பிறழ்ந்துபோனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாக இரவாடிய திருமேனியைக் கருத முடியும். நாவலின் பெரும்பாலான கதை மாந்தர்கள் ஒரேயடியாகத் தமக்குள் உசாவி அலுப்பூட்டுகிறார்கள்.
இவை தவிர வாசிக்கும் போது வேறு பல நெருடல்களும் இருந்தன. சடாரென்று அரிகண்டம் கொடுக்க முன்வருபவனைப் பற்றிய ஒரு பகுதி இறுதியில் வந்துசேர்ந்துகொள்கிறது. மாறவர்மன் அவனை மீட்ட பிறகும் எதுவுமே நடக்கவில்லை. மாறவர்மனை உயர்த்திக் காட்டிவிட்டு மறைந்து விடுகிறது அந்தப் பாத்திரம். கோதை யைச் சுடுசொற்களால் அவமானப்படுத்தினாலும் கரிசனையோடு நடத்துபவள் என்பதே ராணியின் சித்திரம். திடீரென்று ஒருநாள் அவளது அவையில் கதை சொல்லிக் கொண்டிருந்த காந்தர்வனோடு கூடுமாறு மிரட்டிப் பணிக்கிறாள். அது பல நாட்களுக்குத் தொடர்கிறது. கோதைக்கு காந்தர்வன்மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது பதிவாகியுள்ளது என்றாலும், ராணி அவளது உள்ளக்கிடக்கை உணர்ந்துகொண்ட வளாகச் சித்தரிக்கப்பட்டாலும்கூட எத்தனை முயன்றும் இந்தச் சித்தரிப்பை நியாயப்படுத்திக்கொள்ளும் தர்க்கத்தை நாவல் அளிக்கவில்லை. பாலியல் சுரண்டலின் வலியில் இருந்து வெகுசுலபமாகப் பெண் மீண்டுவிடுவாள் என்பது எத்தகையதொரு ஆபத்தான விருப்பக் கற்பனை! நாவலின் உச்சம் என்று சொல்லப்படும், மந்திரத்தால் கட்டுண்ட யானை செந்நாயால் குதறப்படும் காட்சியை வாசித்தபோதும் அது வனப்பேச்சியின் கருணை என்று நியாயம் செய்யப்பட்டதை அறிந்தபோதும் கரிசனம் அற்ற எழுத்து என்று எண்ணம் ஏற்பட்டது. அப்படியொரு கலைஞர் இருக்கக் கூடாதா என்றால் இருக்கலாம்தான். குரூரத்திற்கும் அருவருப்பிற்கும் நவீன இலக்கியத்தில் நிச்சயம் இடமுண்டு. எழுத்தில் அரசியல் சரித்தன்மை பேண வேண்டும் எனும் நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் மாறவர்மன் மகளுக்காகக் கண்ணீர்விடும் இடத்தை வாசிக்கும்போதும் விதவிதமான முலை வர்ணனைகளை வாசிக்கும்போதும் சிக்கலான மொழியில் எழுதப்பட்ட வெகுமக்கள் பிரதி என்ற எண்ணம் ஏற்பட்டது.
இன்னும் சரியாகச் சொல்வதானால் அதீத வன்முறையையும் காமத்தையும் இயல்பாக்கம் செய்யும் நவீன வெப் சீரீஸ்களின் தாக்கத்தில் உருவான பிரதியாக இந்நாவல் தோற்றம்கொள்கிறது. வெகுமக்கள் பிரதியாக இருப்பதிலும் தவறில்லை. தீவிர இலக்கியத்திற்கும் வெகுமக்கள் இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குழப்பிக்கொள்ள நாம் புரிந்துகொண்டுள்ள பின் நவீனத்துவத்தைச் சாக்காகச் சொல்கிறோம். பதிப்பு வாய்ப்பு என்ற அளவில் மட்டுமே இந்தச் சமத்துவம் நிலவுகிறது. இன்னும் எழுதும் இடத்தில் இந்தப் பாகுபாடு முன்பைக்காட்டிலும் தீவிரமாக இருக்கிறது என்பதே என் நம்பிக்கை. எந்தப் படைப்புமே முழுமையானதல்ல. கலைக் குறைபாடுகள், தோல்விகள் எப்பேர்பட்ட படைப்புகளிலும் நிகழலாம். ஆனால் பாவனைகளற்று இருக்க வேண்டும் என்பதே அடிப்படை எதிர்பார்ப்பு. ‘இரவாடிய திருமேனி’ நல்ல களம், மொழி ஆகியவை இருந்தும் போதுமானத் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது. இலக்கியம் என்ன பேசுகிறது என்பதைவிட அதை எப்படிப் பேசுகிறது என்பதை மீண்டுமொருமுறை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 5 followers
