தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
30 views
புதினம்/நாவல் > ப.சிங்காரம்

Comments Showing 1-7 of 7 (7 new)    post a comment »
dateUp arrow    newest »

Prem | 229 comments Mod
ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி வாசித்து முடித்து அந்த நாவலைப் பற்றி, ஆசிரியரைப் பற்றி தேடித் கண்ட சில கட்டுரைகளை இங்கே தொகுக்கின்றேன். அவர் வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறாமல், மறைந்த பின்பு அவரது புத்தகங்கள் தமிழ் மொழியின் முக்கிய நாவல்களாக பல எழுத்தாளர்களின் பட்டியலில் இருக்கின்றது. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றி மாறன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் அவர்களின் பரிந்துரையால் வெகுஜன மக்களை சென்று சேர்ந்து பரவலான வாசகர்களை அடைந்திருக்கின்றது இவரது புத்தகங்கள். இணையத்தில் நான் தேடிய வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் துணைப் பாடமாக இந்த புத்தகம் இருப்பதாகத் தெரிகிறது.

ப. சிங்காரம் அறிமுகம்:
விக்கிப்பீடியா
அழியாசுடர்கள்
* யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.

* ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன்.



message 2: by Prem (last edited Dec 13, 2020 11:27AM) (new) - rated it 3 stars

Prem | 229 comments Mod
"கடலுக்கு அப்பால்", "புயலிலே ஒரு தோணி" இரு நாவல்களும் அதிகாரப்பூர்வ இலவச மின் பதிப்புகளாக(epub , mobi) அழிசி இணைய தளத்தில் கிடைக்கின்றன - இணைப்பு

"புயலிலே ஒரு தோணி" நாவலின் முதல் அத்தியாயம் அழியாச் சுடர்கள் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது - இணைப்பு

watercolor-painting-hydra-2


Prem | 229 comments Mod
எஸ்.ராமகிருஷ்ணன் அவரது கல்லூரி காலத்தில் "கடலுக்கு அப்பால்" புத்தகத்தை நூலகத்தின் கடல் தொடர்பான விஞ்ஞானப் பிரிவில் தேடிக் கண்டுபிடித்து, ஓரிரவில் வாசித்து விட்டு அவரது நண்பரும் எழுத்தாளருமான கோணங்கி அவருடன் சேர்ந்து மதுரைக்கு சென்று ப.சிங்காரம் அவர்களை சந்தித்த நிகழ்வை "ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் உள்ள மறுமொழியை படித்த பின், அவர் நினைவில் இருந்து எழுதியுள்ளதால் ஊர் பெயர்கள் மாறியுள்ளதாகக் கருதுகிறேன்.

கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
* அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைவிடவும் மதுரை மாநகரம் அதிகக் கதைகள் கொண் டது என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணமுண்டு. குறிப்பாக மதுரையின் சிறுசந்துகள், தினசரி வாழ்வு சார்ந்த மனிதர்கள். நகரின் புதிரான சரித்திரம் மற்றும் மதுரையின் மைய வாழ்வைச் சுற்றி நடைபெறும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளின் பின்னால் அறியப்படாத ஓராயிரம் கதைகள் புதைந்திருக்கின்றன. மதுரையின் இரவும் பகலும் இன்று வரை முழுமையாகக் கதையுலகில் பதிவு செய்யப்படவே யில்லை.

* கடலுக்கு அப்பால் முழுமை பெறாத நாவல் போன்றிருக்கின்றது என்றதும் ஒரு அளவுக்குத் தான் சொல்லியிருக்கிறேன். எதை எழுதாம விடணும்னு தெரிஞ்சிகிடுறதுதானே எழுத்தில முக்கியம் என்றார். சிங்காரம் எழுத்தாளர் என்பது அந்த நிமிசத்தில் உறுதியானது.

* இரண்டாவது உலக யுத்தம் துவங்கிய பிறகு பர்மாவில் ஏற்பட்ட மாற்றங் கள் மறக்க முடியாதவை. குறிப்பாக ஜப்பானிய ஆக்ரமிப்பு மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி போன்றவற்றைத் தான் கண் எதிரில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.

* சிங்காரம் வாழ்க்கையில் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறவில்லை. அது ஒரு செட்டிவீட்டுப் பெண் என்று சொன்னார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை ஒரு நாள் புது மண்டபம் அருகே பார்த்தாகவும் அந்தப் பெண்ணிற்குத் தன்னை அடையாளமே தெரியவில்லை என்றபடியே எனக்கு அவ முகம் அப்படியே மனசில இருக்கு என்றார். அவரது நாவலில் இடம் பெற்ற சம்பவங்கள் அவரது வாழ்வின் பகுதிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது

* அவருக்குப் பிடித்த புத்தகம் எது என்று கேட்டவுடன் சிங்காரம் மணி மேகலை என்று சொல்லி அதற்கும் தன்னுடைய நாவலுக்கும் உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது என்றார்.



message 4: by Prem (last edited Dec 13, 2020 12:54PM) (new) - rated it 3 stars

Prem | 229 comments Mod
ந. முருகேசபாண்டியன் அவர்கள் புயலிலே ஒரு தோணி புத்தகத்தை பற்றி எழுதிய கட்டுரை "தமிழின் முதல் புலம்பெயர் நாவலாசிரியர்" நான் வாசித்த மின்புத்தகத்தில் இருந்தது. மிகவும் அருமையான முன்னுரை. அவர் ப.சிங்காரம் அவர்களை நேரில் கண்டு பேசிய நிகழ்வு "எல்லாம் யோசிக்கும் வேளையில்" என்ற கட்டுரை (இணைப்பு). ப.சிங்காரம் தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது. அங்கீகரிக்கப்படாத எழுத்தாளனின் மனப்பதிவாக இந்த கட்டுரை இருக்கின்றது.

சில பகுதிகள்:
* ‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க... இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... "

இன்றைய காலகட்டத்தில் இது மாறி இருப்பதாகத்தான் தெரிகிறது. என்ன, அதை அனுபவிக்க அவர் இப்போது இல்லை.

* மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’

* நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’

* ‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே... உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா?’’

‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947_லிருந்து மதுரை சீ.வி.சி.கி.யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம்.

* ‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க?’’

‘‘என்ன தனிமை!’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’



message 5: by Prem (last edited Dec 13, 2020 12:55PM) (new) - rated it 3 stars

Prem | 229 comments Mod
"வரலாற்று அபத்தத்தின் தரிசனம்" என்ற தலைப்பில் ஜெயமோகன் ப. சிங்காரம் அவர்களின் இரண்டு நாவல்கள் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை (இணைப்பு). சற்றே குழப்பமான தலைப்பாக இருக்கும் இக்கட்டுரை மூலம் ஜெ.மோ இப்படி கூறுகிறார் "தமிழ் என்றென்றும் பெருமையுடன் எண்ணிக் கொள்ள வேண்டிய மீண்டும் மீண்டும் மீண்டும் வாசித்துப் படைத்தெடுக்க வேண்டிய முக்கியமான சில சிறந்த படைப்புகளில் இந்நாவல்களும் உண்டு". இக்கட்டுரை மூலமாக இரண்டு நாவல்களையும் அவருக்குரிய தனித்த பார்வை கொண்டு அலசுகிறார் ஜெ.மோ. எனக்கும் அவரது பார்வையில் ஒப்புமைகள் இருக்கின்றன புரிந்த வரையில்.

"புயலிலே ஒரு தோணி" பற்றி:
* ஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை _ இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் சிறப்புகளாகக் கொண்டு யோசிப்பது உதவிகரமானது.

* வரலாற்றின் ஓர் அலை, அதில் ஏறி ஒரு கணம் உச்சியில் ஆரோகணித்து மறையும் ஒரு முகம் _ அவ்வளவுதான் இந்நாவல். அந்த மையக் கதாபாத்திரம்கூட படிப்படியான வளர்ச்சிச் சித்திரமாக முன்வைக்கப்படவில்லை. பாண்டியனின் முகம் ஓர் ஓவியம்போலவே நமக்குத் தெரிகிறது. ஆனால், வரலாற்றின் ஒரு பெரும் அலை பொங்கி சுழித்துக் கரைமோதி நுரைத்து வழிந்து இல்லாமலாகும் சித்திரத்தை இந்நாவல் அளித்துவிடுகிறது. தமிழின் பிற நாவல்கள் எதிலும் இதற்கிணையான வரலாற்று தரிசனத்தை நாம் அடைய முடியாது. அந்த தரிசனத்தை அளிக்கும் பொருட்டு உருவம் கொண்டதே இதன் வடிவம்.

* வரலாறென்பதும் காலம் என்பதும் உண்மையில் மனித முகங்களினாலான ஞாபகப் பிரவாகமன்றி வேறல்ல. இந்நாவலில் போரும் அழிவுகளும், வரலாற்றின் எல்லா நிகழ்வுகளும் இவ்வாறு மனிதமுகங்களின் நதியோட்டமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பலநூறு முகங்களில் நேதாஜியும் உண்டு, டாலர் ராஜாமணி அய்யரும் உண்டு. எதுவும் முக்கியமல்ல; எதுவும் முக்கியமற்றதும் அல்ல. கதாபாத்திரங்கள் இல்லாத முகப்பரப்பு என்பதே இந்நாவலின் குறை. முகங்களினாலான வரலாற்றுப் பரப்பு என்பதே இந்நாவலின் சிறப்பம்சம்.

* கடல் அலைகளின் அடிகளையும் பாண்டியனின் நினைவலைகளின் மோதல்களையும் இணைத்திருக்கும் விதம் பலவிதமான கற்பனைச் சாத்தியங்களைத் திறந்துவிடுகிறது. பிறகு மீண்டும் சாகச நாவல்களுக்குரிய துல்லியமான தாவல்நடை. நடுநடுவே மரபிலக்கியங்களினூடாகக் கடந்து செல்லும் எள்ளல் நிரம்பிய விவாதங்கள். ஆக, இந்நாவல் ஒரு மொழி நிகழ்வு என்பதற்கு மேலாக ஒரு மொழிப் பிராந்தியமாக உள்ளது.

* அதிகாரப் போட்டியில் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருந்த மானுடத்தைப் போரினூடாகக் கண்டடைந்த நுட்பமான படைப்பு மனம் கொண்ட ஆழமான தரிசனம் அது. இந்நாவலின் சாரமே அந்த தரிசனம்தான். ஒரு பக்கம் செவ்விலக்கியங்களினூடாகவும் மறுபக்கம் சமகால அரசியல் நிகழ்வுகளினூடாகவும் அந்தப் பார்வை நகர்ந்து அபத்தத்தின் உச்சநிலையைத் தன் பக்கங்களில் சாத்தியமாக்குகிறது. இந்த அபத்த தரிசனத்தாலேயே இது தமிழின் மிக முதன்மையான படைப்புகளில் ஒன்றாக மாறுகிறது.

கடலுக்கு அப்பால் பற்றி:
* கதாபாத்திரங்கள் அவ்வரலாற்றுச் சந்தர்ப்பம் முடிவடைந்ததும் பொருளிழந்து லௌகீகக் கடலில் மூழ்கி கரைந்து மறைவதின் சித்திரத்தை இந்தக் குறுநாவல் அளிக்கிறது. இம்மிகூட கற்பனாவாத, சாகஸப் பண்பு இல்லாத அப்பட்டமான யதார்த்தத்தில் இது காலூன்றி நிற்கிறது. இது புயலுக்குப் பிந்தைய அமைதி.

* `புயலிலே ஒரு தோணி’ மானுட மீறலின் கதை. `கடலுக்கு அப்பால்’ மானுடனின் மீற முடியாமைகளின் கதை. `எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்ற தாயுமானவரின் வரி இந்த நாவலின் உச்சகட்டக் குரலாக ஒலிக்கிறது.



Saravanakumar S K | 16 comments எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இரண்டு நாவல்களுக்கு மேல் எழுத்தே வேண்டாம் என்று விலகிவிட்டார் ப. சிங்காரம் அவர்கள் தனக்கு ஏற்பட்ட நாவலை பதிப்பிட்டு வெளியிடும் மனக்கசப்பில். தமிழுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு.


Satheeshwaran (goodreadscombooktagforum) | 6 comments Amazing thank you 🙏


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread