A. Muttulingam's Blog

January 11, 2025

முதல் சம்பளம்

                                          முதல் சம்பளம்

                                        அ.முத்துலிங்கம்

வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன்.  சம்பளத்துக்கு வேலை. என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சுப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை.  மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம். அதுவும் கணக்கு எழுதும் வேலை எனக்கு தேவையே இல்லை. வாழ்நாள் முழுக்க அதைத்தானே செய்தேன்.

சுப்பர்மார்க்கட்டில் வண்டில் தள்ளும் வேலைக்கு முயற்சி செய்தேன். வாடிக்கையாளர்கள் சாமான்களை வண்டிலிலே வைத்து தள்ளிச் சென்று காரிலே சாமான்களை ஏற்றி வண்டிலை விட்டுவிட்டு போவார்கள். அவற்றை சேகரித்து சுப்பர்மார்க்கட் உள்ளே கொண்டு போய் நிறுத்தவேண்டும். அதைக் கெடுத்தவர் புலம்பெயர்ந்த  தமிழர்தான். அவர் அங்கே 30 வருடமாக சேலை செய்கிறாராம். 20 வண்டில்களை சேகரித்து ஒரேயடியாக உள்ளே தள்ளிக்கொண்டு போவதில் ஒரு சாதனை வைத்திருந்தார். அந்தச் சாதனையை நான் முறியடித்துவிடுவேன்  என பயந்தாரோ என்னவோ, அந்த வேலை எனக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டார்.  

வேறு பல வேலைகளுக்கு முயற்சிகள் செய்தாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. இப்படி நான் சோர்ந்துபோய் இருந்த சமயம்தான் ஒரு நாள் அதிகாலை டெலிபோன் மணி அடித்தது. மற்றப் பக்கம் இருந்தவர் ஒரு நிமிடம் பேசிய பின்னர்தான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். எப்போது என்று கேட்டேன். இன்றைக்கு. எத்தனை மணிக்கு? காலை 9 மணி. என்ன இடம்? அவர் முகவரியை சொல்லச் சொல்ல எழுதினேன்.  தூரமான தேசம்.  நான் அது பற்றி யோசிக்கும்போதே வாய் ’சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டது. உடல் உழைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; மூளை பாவிக்கத் தேவையில்லை.

ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தேன்.  நான் சந்தித்தது  ஒரு யூதப் பெண்மணி. பெயர் எமூனா என்றார். அவர் உடையும், இருந்த தோரணையும், பேசிய விதமும் எனக்குப் பிடித்துக்கொண்டது. கருணை உள்ளவர் என்று உடனேயே என் மனதில் பதிந்தது. காப்புறுதி நிறுவனம் சார்பில்   விபத்தில் மாட்டிய ஒரு தமிழ் பெண்மணியின் உடல், மன நிலையை அவர் மதிப்பீடு செய்யவேண்டும். இவருடைய மதிப்பீட்டின் அளவுகோல் படி அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப் படும் என்பதை எமூனாவே என்னிடம் சொன்னார்.

விபத்தில் மாட்டிய பெண்ணின் பெயர் சின்னநாயகி என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரியநாயகி கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னநாயகி புதிதாக இருந்தது. அவர் ஒரு திருமண விழாவுக்கு உறவுக்காரருடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது வேறு காருடன் மோதி விபத்து நடந்தது. மூன்று நாள் மருத்துவமனையில் நினைவு தப்பிக் கிடந்தார். உடம்பில் பல இடங்களில் முறிவு. தலையில் பலமான அடி. காரில் பயணம் செய்த மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பிவிட்டனர். ஒருமாத காலமாக இவருக்கு  சிகிச்சை நடந்தது.  இப்பொழுது வீட்டில் இருந்து சிறிது சிறிதாக தேறி வருகிறார். 

சின்னநாயகி கட்டையாக உருண்டையாக  இருந்தார். தும்மல் ஆரம்பிப்பதுபோல முகம் கோணலாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து புலம்பெயர்ந்தவர். அவருக்கு கணவரும் ஒரு மகனும்.  நோயாளியும் மொழிபெயர்ப்பாளரும் அவர்களுக்குள் பேசுவது தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சின்னநாயகி இடைவேளைகளில் தன் சரிதத்தை எனக்குச் சொல்லிவிடுவார். மகன் அவரை பின்னேரம் வந்து கூட்டிப்போவார் என்றார்.  

நான் தயாராக இருந்தேன். எமூனா ஆரம்பித்தார். நான் மொழிபெயர்த்தேன்

இன்று எப்படி உடம்பு இருக்கிறது?

வலிதான். வலியில்லாத ஒரு நிமிடத்தைக்கூட நான் அனுபவித்தது கிடையாது.

இரவு தூங்கினீர்களா?

நித்திரை மாத்திரை போட்டுவிட்டு படுத்தேன். மூன்று மணி நேரம் தூங்கினேன். பின்னர் எழும்பி இன்னொரு வலி மாத்திரை போட்டேன். சிறிது நடந்தேன். சுடுதண்ணீர் வைத்துக் குடித்தேன். தூங்க முடியவில்லை.

உங்களுக்கு சொல்லித்தந்த உடல் பயிற்சிகளை செய்கிறீர்களா?

பயிற்சி செய்தால் வலி இன்னும் கூடுகிறதே. ஏதோ கொஞ்சம் ஏலக்கூடியதை செய்கிறேன்.

கல்யாணவீடு, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறீர்கள? அப்படிப் போனால் உங்களுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறேன்.  முகத்தில் சிரிப்பு வரும்.

போகிறேன். என்னுடைய அக்கா அதுகளுக்கு கூட்டிப் போவார்.

நல்லது. நல்லது. உங்கள் சுவாச…….

திடீரென்று சின்னநாயகி எழுந்து நின்று தாதி வெப்பமானியை உதறுவதுபோல கையை உதறினார். என்ன என்று கேட்டபோது மருத்துவருடைய குறிப்பை மறந்துவிட்டதாகக் கூறி கைப்பையில் துளாவி எடுத்து  எமூனாவிடம் நீட்டினார்.

உங்கள் மருத்துவரும் சுவாசப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். இது என்ன புதிதாக இருக்கிறது?

மூச்சு விடக் கஷ்டம். பாதி மூச்சுத்தான் வருகிறது. சுவாசப்பை நிறைவதே இல்லை. உடனே களைப்பும் வருகிறது என்றுவிட்டு இளைத்தார்.

நீங்கள் உங்கள் சமூகக் கூட்டங்களில் பாடியுள்ளதாக முன்பு சொன்னீர்களே. எங்கே ஒரு பாட்டுப் பாடுங்கள் பார்ப்போம்.

உடனே சின்னநாயகியிடம் ஒரு மாற்றம் வந்தது. முகத்திலே சிரிப்பு போல ஒன்று தோன்றியது. அழகாகக்கூட தெரிந்தார்.

சுவாசமே சுவாசமே

என்ன சொல்லி என்னை சொல்ல

காதல் என்னை கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம்

சுவாசமே சுவாசமே .

அவர் பாடிய சங்கீதத்தில் கொஞ்சம் மீதி இன்னும் இருந்தது.  இரண்டு மைல் ஓடியதுபோல அவருக்கு மேலும் கீழும் இழுத்தது. நான் திகிலுடன் இதையும் மொழிபெயர்க்க வேண்டுமா என்பதுபோல பார்த்தேன். எமூனா  வேண்டாம் என்றார்.

தொடர்ந்து சின்னநாயகி பேசினார். திடீரென்று வலி வருகிறது. சிவப்பு வலி மாத்திரை போட்டாலும் போகுதில்லை. மஞ்சள் போட்டாலும் போகுதில்லை. அது நினைத்த பாட்டுக்கு  வருகிறது. நினைத்த நேரம் போகிறது.

கழுத்து வலியா?

இல்லை, கை வலி.

அங்கேயுமா? நடுச்சாமத்தில் வலி வந்தால் என்ன செய்வீர்கள்?

கையை  நீட்டிக்கொண்டு சுடுதண்ணீர் பைப்பை திறந்துவிடுவேன். முதலில் குளிர்ந்த தண்ணீர் வரும். பின்னர் அது சூடாகி சுடுநீர் வரும். அதை மாறி மாறிப் பிடிப்பேன். வலி போகாது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

உங்கள் கணவரையும் நீங்கள்தான் பார்க்கவேண்டுமா?

வேறு ஆர்? நான்தான் பார்க்கவேண்டும். அவர் மறதி என்னிலும் மோசம். குளிர் பெட்டியை திறந்து தலையை நுழைத்து எதையோ தேடுவார். ஆனால் மறந்துவிடும். கதவு வந்து அவர் குண்டியிலே அடிக்கும். அப்படியே உறைந்த கல்லைப்போல நிற்பார்.

போனதடவை உங்களுக்கும் மறதி வருகிறது என்று சொன்னீர்களே.

அதுதான் மோசம். பக்கத்து கடைக்கு போனால் என்ன சாமான் வாங்க வந்தேன் என்பது நினைவில் இல்லை. ஒருநாள் எங்கே நிற்கிறேன் என்பது மறந்துவிட்டது. என்னுடைய வீட்டு முகவரியும் ஞாபகத்தில் இல்லை. ஒன்பது  வயதுச் சிறுமி ஒருத்தி என்னப் பிடித்து அழைத்துப்போய் வீட்டில் சேர்த்தாள்.

 உங்கள் பெயரையும் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் ஓர் அட்டையில் எழுதி அதை எந்நேரமும் கழுத்தில் தொங்க விடவேண்டும். அதை கடந்த தடவை சொன்னேனே.

அதுவும் எனக்கு மறந்துபோனது.

 சரி, மருந்தாவது கிரமமாக எடுக்கிறீர்களா?

எங்கே எடுக்கிறேன். எனக்கு அதைப் பார்த்து நேரத்துக்கு நேரம் தவறாமல் தர ஒருவரும் இல்லையே. சிலவேளை முற்றிலும் மறந்துபோகிறேன்.

இப்படி எங்கள் அறிவுரைகளை உதாசீனம் செய்தால் எப்படி உடம்பு சுகப்படும்?

திடீரென்று ஒரு பழைய பாடலை சின்னநாயகி சொன்னார். ’அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி/ எடுத்த கருமங்கள் ஆகா – கொடுத்த/  உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்/ பருவத்தால் அன்றி பழா.

நான் அங்குமிங்கும் தலையை திருப்பினேன். அதையும் மொழிபெயர்ப்பதா என்பதுபோல பரிதாபமாக எமூனாவைப்  பார்த்தேன். அவர் மொழிபெயர்க்கச் சொன்னார்.

சுருக்கமாக ’எது எது எப்போ நடக்கவேண்டுமோ அது அது அப்போ நடக்கும்’ என்றேன்.

உங்கள் கால்வலி எப்படி?

உடனேயே சின்னநாயகியின் முகம் மலர்ந்தது. சொல்லவேணும் சொல்லவேணும் என்று நினைத்து வந்தனான். எல்லாம் மறந்துவிட்டது. அந்த வலியை விளங்கப்படுத்தவே முடியாது. எலும்புக்குள் இருந்து தொடங்கும். வித்தியாசமானது.

அது என்ன வித்தியாசமான வலி?

வித்தியாசம் என்றால் வித்தியாசம்தான். அமெரிக்கா காசும் காசு. கனடா காசும் காசு. ஆனால் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

எமூனா சிரித்தார். நானும் சிரித்தேன்.

உடனேயே சின்னநாயகி உசார் வந்து இடது கால் சப்பாத்தை அதிகாரிக்கு காட்டுவதற்காக சட்டென்று குனிந்து அகற்றினார். மோசமான  நாற்றம் ஒன்று எழுந்தது. சதை அழுகிய மணம். காற்றின் நிறம்கூட மாறியதுபோல எனக்குப் பட்டது. எமூனா பார்க்க முன்னரே நான் அவர் பாதத்தை கண்டுவிட்டேன். வீங்கி வரிவரியாக சிவந்துபோய் முயல்குட்டி போல உட்கார்ந்திருந்தது. அதற்குள் இருந்து என்னவோ வெளியே வரத் துடித்தது. கால் விரல்கள் ஒன்றுடன் ஒன்று  ஒட்டிப்போய் வாத்தின் விரல்கள்போல ஆகிவிட்டன.

’மூடுங்கள் மூடுங்கள்’ என்று எமூனா கத்தினார். நாங்கள் அங்கேயிருந்த ஒரு மணி நேரத்தில் முதல் தடவையாக எமூனா குரலை உயர்த்தினார்.

இப்பொழுது வலி எண் என்னவென்று அமைதியாக கேட்டார்.

எந்த வலி?

எது ஆகக்கூடிய வலியோ அது?

நான் மொழிபெயர்க்க முன் அவர் ‘ரென்’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

எமூனா எழுதிக்கொண்டார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு கிடைத்துவிட்டதாக  அறிந்தேன். தொகை தெரியவில்லை. ஒரு லட்சம் டொலராக இருக்கலாம். ஒரு மில்லியன் கூட இருந்தாலும் அதிசயப்படக் கூடாது. அந்த இழப்பீட்டுப் பணத்தில் என் பங்கும் இருந்தது. எமூனா வைத்திருந்த கோப்பில் சின்னநாயகியின் படம் ஒன்று இருந்தது. விபத்துக்கு முன்னர் எடுத்தது.  நான் அதை என் பக்கத்தில் இருந்து தலை கீழாகப் பார்த்தேன்.  அழகான சிரித்த முகம். ஒரேயொரு கணநேரத்தில்  நடந்த விபத்தில்  அவர் முகம் அப்படி மாறிவிட்டது. இனிமேல் அவருக்கு அதுதான் முகம். ஒரு மில்லியன் டொலர்கூட அந்த வலி முகத்தை மாற்றமுடியாது.

இன்று என்னுடைய சம்பளக் காசு 50 டொலர் வந்தது. ஊபரில் போக 48 டொலர். திரும்ப 48 டொலர்; மொத்தம் 96 டொலர். இந்த விவகாரத்தில் எனக்கு நட்டம் 46 டொலர்.  ஆனாலும் என் உழைப்பில் கிடைத்த முதல் சம்பளம். அப்படியே, அது என்ன வார்த்தை, உடம்பு எல்லாம் புளகாங்கிதம் அடைந்தது.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2025 05:39

November 17, 2023

Somewhere it is Three O’ clock right nowSomewhere It Is T...

Somewhere it is Three O’ clock right now

Somewhere It Is Three O’clock RightNow

(Original short story in Tamil by A. Muttulingam; Translated by Thila Varghese)

I was third in line. In exactly four minutes, my life was going to change. Since Chandrasekharan had already gotten through, our plan seemed to be working. Sri Lanka’s Katunayake International Airport was bustling. Now Padmanabhan was in line ahead of me and behind me was Sudhakaran. The immigration officer’s face seemed friendly. I tried to control the butterflies in my stomach and look casual. Of the four of us, Sudhakaran was the one who might give the game away. From the corner of my eye, I could see his fingers trembling.

After Operation Ellalan at Anuradhapuram Air Force Base in October 2007, security at the airport had been tightened. There were no such issues during the first overseas trip I took in 2005. Two years later, I was now at the airport trying to make a similar journey. I told the officer that I was going to Brazil to join the crew onboard a ship, exactly as the agent had coached me. The officer believed me. He raised the stamp in his hand high in the air and brought it down on the eighth page of my passport and pushed it toward me. Taking my passport, I said softly, “Thank you,” and moved on. Now, three of us were inside. Sudhakaran was the only one on the other side. If he too made it, Canada would be graced by my arrival.

When he stood in front of the officer, Sudhakaran was no longer a whole body. Instead he became an assortment of body parts, each of them trembling with a life of its own. Even his forehead was quivering. As he handed over his passport to the officer, it slipped from his hands and fell on the floor. He bent down and picked it up, and without even straightening his body, he stretched out his hand to offer the passport. Flipping through the pages of the passport, without looking at the person standing in front of him, the officer asked a few indifferent questions. Sudhakaran started answering questions that the officer didn’t ask. The officer asked, “What are you taking with you to join the crew onboard the ship?” Sudhakaran should have simply shown him the sailor training certificate. Instead, he said, “6,000 Canadian dollars.” When the officer asked, “Who else is with you?” he sang our names loudly and clearly. They called us back and searched us and seized a total of 24,000 dollars.

First, we were taken to a private room and stripped and searched. Then they checked our suitcases, carefully examining every nook and corner of them, section by section. In the end, they decided that we were the Liberation Tigers of Tamil Eelam and that we were going abroad with 24,000 dollars to buy a ship. They didn’t tell us in which country one could buy a whole ship for 24,000 dollars. We were handcuffed and forced into a jeep. Above us, the plane we were supposed to have boarded took off for Canada.

Because I worked in a bank, I could speak a little Sinhala. I asked the guard where they were taking us.  He said, “Third floor.” Our pulses dropped. The third floor was a torture chamber.

“What will happen then?” I asked.

“After interrogating you, they’ll send you to Boosa prison,” he replied.

Boosa was where they locked up Tamil militants. No one had ever known anyone who returned from there.

“What will happen after that?” I asked.

The guard’s dark upper lip curled to one side. Then he laughed. “They will decide whether to bury or burn the body.”

I did not say anything after that.

*   *  *

It started with a phone call. After taking my A-level high school exams, I was working in a bank. My classmates had either joined the Tamil separatist movement or gone abroad, after selling whatever they could—goats, cattle, jewelry—to pay the airfare. I didn’t even consider it. Appa was not well, and Amma’s eyesight was fading. I was their only son. How could I leave them? Every evening after I came home, I would serve them the food the maid had cooked. We would sit down and eat together. Thus our life passed from one day to another, each day the same as the day before it and the day after it.

I had a good reputation at the bank. Customers trusted me easily because I talked to them politely. The owner of a video store used to visit the bank often. He took a liking to me. After learning about my family, he came up with a marriage proposal. He had a female relative in Thampalakamam. I lived in Trincomalee, an hour’s bus ride away. As soon as I saw the potential bride, I liked her. Her complexion reminded me of blood mixed with water. Though her body looked a bit puffy, her eyes flitted about playfully without focusing on anything in particular. When she moved, her beauty increased. My parents also agreed to the proposal, and the wedding took place soon after. Once we were married, there was just one problem. My wife, Malathi, had to get ready by seven o’clock in the morning every day and take the bus to her workplace at Thampalakamam. She would come home in the evening exhausted after work. Looking at her, I would feel sorry.

 One night at seven o’clock, the phone rang. Amma picked up.

The caller said, in a rude voice, “I need to speak to Kanakarajan.”

“He hasn’t come home from the office yet. I will tell him when he comes back. Who is this? What’s the matter?” Amma asked.

After scolding her, the caller gave her a number and said, “When your son comes home, tell him to talk to me.”

Amma immediately understood that this meant big trouble. When I came home from the office, Amma and Malathi told me what had happened. I called that number.

“Kanakaraja, I am from the Tamil separatist movement. We need ten lakh rupees tomorrow morning. Bring that amount to the location I give you.”

I would have fainted and collapsed, but Amma and Malathi were standing by my side.

“Ten lakhs? I’m just an ordinary bank clerk. I’m looking after my aging parents. I just got married. You’re mistaking me for someone else.”

“I know all that. For the last two years, you have been begging your manager for a promotion. He won’t give it to you. Take ten lakhs from your bank and give it to us,” said the voice.

“Stealing? I will lose my job.”

“Your job? Is your job more important than your life? I’ll give you twenty-four hours to come up with the money. If you go to the police, you will return home, but your wife will not return from Thambalakamam. I’ll give you the details tomorrow.” Before I could start pleading, he hung up.

My hands trembled. But Malathi was a courageous person. She had encountered similar incidents in Thambalakamam. She also had connections with the Tamil separatist movement. Many of her friends had died as martyrs.

“Why are you scared? What am I here for?” she said. Malathi herself phoned the separatist movement office and inquired; they were surprised. “We never ask the general public for money in this manner. This is the work of some gangster group looking to extort money. We must somehow outsmart them,” they said, and gave her a detailed plan. Malathi said, “Yes, yes,” and nodded her head.

The next phone call came the following night. “It is not possible for me to smuggle ten lakh rupees. I will bring five lakhs. After that, you must leave me alone,” I pleaded convincingly. They agreed. When I got ready to leave the next morning with a bag filled with paper, Malathi insisted on coming with me. It was getting late. I had to be at the Dockyard telephone center at ten o’clock. Without giving me a chance to talk her out of it, Malathi got into the auto rickshaw with me. When we arrived, no one was there. I called and told them I had come with the money. “Okay, wait there. Someone will arrive in an auto. Give him the money,” they said. The plan was that when I handed over the money, the people from the movement would come out of hiding and catch the culprit. But the auto hadn’t arrived yet, and there was no sign of the people from the movement either.

After a while, a young man arrived in an auto. He was talking on his cell phone casually as he stepped out, an eighteen-year-old with a thin frame that looked like a bent sugarcane stalk. He appeared pale and anemic. One push and he would have fallen down. There was a bald spot in one of his eyebrows. He looked like he’d just woken up and hadn’t eaten in days. Still holding the phone to his ear, he asked for the bag. The people from the movement were nowhere to be seen. If I gave him the bag, he would leave. To pass the time, I said, “Give me the phone. I need to talk to your boss.” He reluctantly gave me the phone. The person at the other end of the line asked me to hurry. “That’s him. Give him the bag. Give him the bag.” Fortunately, just then, two armed men from the separatist movement arrived in an auto and jumped out of it one after the other. Scooping up the fellow with the half-eyebrow, they threw him inside the vehicle and told us to follow them. All of this was over and done in the time it takes to strike a match.

My work was done and I was eager to return home, but this adventure had brought great joy to my wife. Her eyes had widened; she looked thrilled. She was ready to follow them another hundred miles. When we took a turn on Customs Road, we could see a militant with a gun standing in the guard tower. A large signboard in red and yellow hung at the entrance. They took the boy to the back of the building and started thrashing him as if they were beating dust off a sack. He started screaming. We were afraid the emaciated fellow would die. Someone who looked like the leader of the group rushed over with a thick rope and interrogated him.

“What is your name?”

“ChendhanAmudhan.”

“Did your father not have any other names available? Did he name you ChendhanAmudhan because Vandhiyadhevan, Arulmozhivarman, and Sundarasozhan were already taken?”

“Please don’t beat me, Ayya. I did it out of hunger.”

“Instead of selling flowers, you are selling people?”

“Ayya, please believe me. I don’t know anything,” he bawled.

It had been two days since he had eaten, he told us. His family consisted of his three younger sisters and his mother. Unable to bear their hunger, he accepted this job. He was told that someone would give him a bag, and if he brought it to them, they would give him 5,000 rupees. He did not know their name or address. He had only the cell phone number. “Don’t kill me. I’m telling the truth,” he wailed. We sensed that he was being honest.

The problems began after that.

The gangster started calling Amma and scolding her everyday. “Hey, you blind woman. Don’t think your son has escaped. Death by my hand awaits him for having betrayed us.” He threatened her like this every day. But when he said, “I’ll set the house on fire,” we had to think about solutions. There was no point in going back to the people at the separatist movement. The only way to escape was to go abroad. My wife would follow me later. After thinking through our options, we finally came to this decision.

The agent asked for an initial payment of twenty lakhs – the remainder could be paid after I arrived in Canada. Malathi’s father gave us some money. Somehow I managed to raise twenty lakh rupees by pawning my wife’s jewellery and gave it to the agent. 

There were two of us in our group. The plan was that we would go to Russia first and from there, to Uruguay. The agent in that country, who spoke Spanish and some English, would escort us to Canada. When we arrived in Uruguay, that agent took us to a hotel. On its roof was a white flag with blue stripes. Even the sky looked different. The agent told us that he would come and pick us up exactly at ten o’clock the next morning, and warned us twice against leaving the room. 

The young boy who shared the room with me was called Pragadheesh. We had known each other only for those three days. He called me “Annei,” meaning older brother. His shoulder bones were still developing, and his facial hair was barely starting to sprout. He had a knack for turning a day that began well into a terrible one by the end. One day, when Pragadheesh took off his shirt and began to change clothes, I saw that there were scars all over his body. I asked him about them. He said, “Seventeen scars on the body means that I’ve escaped death seventeen times, Annei. These are my diary entries.”

The agent’s order was that we should sleep well and be ready in the morning. “Annei, let’s go out. We have a once-in-a-lifetime opportunity. Please come.” Pragadheesh insisted.

I refused. “All cities are the same. Go to bed.”

“Uruguay football team is so talented, Annei. We have to take a look at the people of this country.  Why should we be afraid? Let’s go see the city.”

He stood in front of the mirror and combed his hair in ten different ways. He made himself up as if he were getting ready to go and see his girlfriend.

“This is the only country in the world that produces electricity without polluting the environment. But look at the street lights. They have broken them by throwing stones at them. This is a bad place. Don’t go,” I said. 

Running his tongue over his upper teeth, he said, “Annei, I have dodged death seventeen times.”

Finally I went to bed, saying, “OK, lock the room and take the key with you. I will not wait for you.” I had no idea when he left.

When morning arrived the next day, the door was still locked. Pragadheesh lay on the floor by the door inside the room, key in his hand. His head lay on one shoe; the other shoe was on his foot. I touched him. The body was cold. Pragadheesh was dead. Did he fall and die before going out or did he die after he came back? I couldn’t tell. The hotel manager called for an ambulance. I stood there trembling. When the agent called on the telephone, I told him what happened. “Leave. Leave right now. I’ll get caught,” he yelled. How could I leave?

The police interrogated me for a week. The agent had disappeared, and the police couldn’t catch him. An autopsy confirmed that Pragadheesh had suffered a heart attack. Who knows whose child he was? He was not even sixteen years of age. He was so eager to see the whole world. He combed his hair in ten different ways. When he died, I was sleeping just two feet away. I was also there when they buried him, the one who had escaped death seventeen times. I recited a Thevaram hymn for him. No one knew whether Pragadheesh had gone out that day. The authorities sent me back home because I had a passport and a return ticket.

When I went to see the agent in Colombo, he was furious. He was angry about the decisions I had made in Uruguay. After I pleaded with him, short of falling at his feet, he once again attempted to send me abroad. That was how the trip to Brazil came about. But now, because of that idiot Sudhakaran, we were all locked up.

At the Boosa prison, they took away my chain, watch, ring, and handbag, and noted them down.  When they cut the thread that Amma had tied around my wrist as a safety talisman after making a pledge to God, it felt like a sign that the end was near. The jail was packed with Tamil prisoners. All of them were militants. There were one or two Sinhalese as well. No one understood the guards’ orders, which were given in Sinhala. We somehow managed to obey them by observing one another. In our room alone, they had crammed seventy-five people.

I had just two discomforts. Mosquito bites and hunger. I thought of my hunger at all times, morning, afternoon, evening, and at night. No sleep. If I fell asleep, food appeared in my dream, in many varieties.

One day, as hunger gnawed at my thoughts, a Sinhala prisoner came to me and offered me some samaposha. I found out later that his name was Kobbekaduwa. They had thrown him in jail because he was writing poetry against the war. 

“Nothing can be achieved by war. The real enemy of man is hunger. That’s what we have to fight against,” he said. The ball of samaposha on the plate looked at me. “They don’t say ‘I am hungry’ in Swahili. They just say, ‘hunger is calling me’,” he added.

What a surprise! For the past six months, hunger had been calling me twenty-four hours a day.

Outside the prison, my agent was not idle. He got hold of a lawyer and had us eventually released from Boosa prison. Amma’s eyesight was completely gone. “Going abroad failed both times. Let go of the idea,” said Malathi. I mortgaged some property we had, a little over an acre, and opened a photocopy centre. It did well and in one year, I had to get two more machines. After the war ended, I acquired a cell phone agency as well. My business grew exponentially over the next ten years. I hired twelve people. We opened the store for business at 8 a.m. and closed only at 10 p.m.

One day we needed a new employee. We placed an advertisement and received150 applications in response. Even a couple of graduates had applied for the job. The manager said that he would interview the applicants and send me the top ten for my final selection at three o’clock that afternoon. One of them came at four o’clock. He had a thin body that was almost concave in appearance. The name in the application form was “ChendhanAmudhan.” He was the same young man who had come ten years ago to collect the ransom money. The same half eyebrow.

He didn’t recognize me. When I looked at him closely, he took a step backwards.

“When did the manager ask you to come?” 

“More or less today.”

“Didn’t he say ‘at three o’clock’?”

“Ayya, somewhere it is three o’clock right now,” he said and lowered his head.

“Do you have the qualifications needed for this job?” I asked. 

He looked straight into my eyes and mumbled, “starvation.” Then he looked down at the floor again. 

There could be no better qualification for this job, I thought. ………………………………

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2023 05:06

August 16, 2023

மழலையர் மகிமைமழலையர் மகிமைஅ.முத்துலிங்கம்வாசிங்டனில் அப்ப...

மழலையர் மகிமை

மழலையர் மகிமை

அ.முத்துலிங்கம்

வாசிங்டனில் அப்படித்தான் செய்தி. மிகச் சிறந்த மழலையர் பள்ளி என்றார்கள். இரண்டு மழலையருக்கு ஓர் ஆசிரியை வீதம் பொறுப்பு. முழுக்கவனம் கிடைப்பது உத்தரவாதம். வீட்டிலிருந்து பள்ளி ஐந்தே நிமிட தூரம்தான். குட்டிக்குட்டி மேசைகள். குட்டிக்குட்டி நாற்காலிகள். கதவு திறப்பதற்கு குட்டி கைப்பிடிகள். சகானாவுக்கு இரண்டே வயது. கடந்த ஒருவாரமாக மழலையர் பள்ளிக்கு அனுப்புவதற்கு வேண்டிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியைகளை குழந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல்நாள் குழந்தை செல்லும்போது ஆசிரியைகளின் முகத்தைக் கண்டுஅழக்கூடாதல்லவா? அவை ஒன்றும் அப்படி மோசமான முகங்கள் அல்ல. 

இரவு படுக்க முன்னர் அடுத்தநாள் பள்ளி பற்றி நினைவூட்டப்பட்டது. காலை எழுந்தவுடன் குழந்தை ’ஒ பள்ளி,பள்ளி’ என்று துள்ளியது. அது என்ன மனதில் நினைத்து துள்ளியதோ தெரியாது. அவசரமாக காலை உணவு உண்டு, புதிய ஆடை புனைந்து, முதுகுப் பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டது. அந்தப் பயணம்  20 வருடம் தொடரும் என்பது குழந்தைக்கு தெரியாது.

முதல் நாள்

தயாராக நிற்கும் பந்தயக் குதிரையின் ஞாபகத்தை வரவழைப்பவர் ஜெனி. ஒன்று – பத்து  அளவுகோலில் அழகு எண் 7. அவர் வாசலில் இரண்டு கைகளையும் நீட்டியபடி நின்றார்.  குழந்தைகள் ஒவ்வொன்றாக அவரை நோக்கி ஓடின. முகக்கவசம் அணிந்த சகானா முகக் கவசம் அணிந்த ஜெனியின் கைகளுக்குள் ஓடினாள். சற்று நேரத்தில் முகக்கவசம் அணிந்த பல்வேறு வகைக் குழந்தைகள் மத்தியில் சகானா இரண்டறக் கலந்தாள். அவள் முகக் கவசத்தில் ’சகானா’ என பெயர் எழுதியிருந்தது. ஆகவே தொலைவதற்கு சாத்தியமில்லை. எல்லாம் திட்டமிட்டபடி சுமுகமாக நடந்து முடிந்தது.

ஆசிரியர்களுக்கு பெற்றோர் அடிக்கடி கடிதம் எழுதுவார்கள். அதில் சரித்திர முக்கியத்துவம் எதுவும் கிடையாது. ஆசிரியரிடமிருந்து பெற்றோருக்கு கடிதம் வருவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்படி கடிதம் வந்தால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். ’உங்கள் பிள்ளையை வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்’ அல்லது ’உங்கள் பிள்ளை மூன்று நாள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு தடை’ இப்படி ஏதாவது கெட்ட செய்தியாக இருக்கும்.

அன்று காலை 11  மணிக்கு சகானாவை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். குழந்தையின் உடையில் ஒருகடிதம் குத்தப்பட்டிருந்தது. டைப் செய்யப்பட்டு, கடிதஉறையில் இட்டு, கையொப்பம் வைத்த கடிதம். இப்படி ஒரு கடிதத்தை கண்டால் பெற்றோருக்கு எப்படி கிலி பிடிக்காமல் இருக்கும். வேறு என்ன, முறைப்பாட்டுக் கடிதமாகத்தான் இருக்கும். ஜனாதிபதி உங்கள் பிள்ளைக்கு பரிசு கொடுக்க வருகிறார் என்றா இருக்கப் போகிறது? ஓர் இரண்டுவயது குழந்தை பற்றி முதல் நாளே அதன் ஆசிரியை பெற்றோருக்கு முறைப்பாட்டுக் கடிதம் எழுதுவது உலகவரலாற்றில் இதுவே முதலாவதாக இருக்கும். கடிதம் ஒருபக்கம் நீளம் கொண்டது. கடவுள் சொல்லச் சொல்ல எழுதியது போல அத்தனை நேர்த்தியாகவிருந்தது. அதைச் சுருக்கி கீழே தந்திருக்கிறேன்.

அன்புள்ள பெற்றோருக்கு

சகானா இனிமையான சுபாவம் கொண்டவள்.  அவள் தனியாக இல்லை. அவளுடைய பிரச்சினை கொண்ட இன்னும் பல குழந்தைகளும் இங்கே படிக்கின்றனர். சகானா எல்லோருடனும் எளிதாக அணைந்துவிடுகிறாள்.  அத்துடன் சொன்னதைக் கேட்கும் குணம் உள்ளவள். ஆனால் அவளுடைய உடல் கடிகாரமும், பள்ளிக்கூடக் கடிகாரமும் இணைய மறுத்துவிட்டன. சரியாக காலை 10.45க்கு சகானாவின் உடல்கடிகாரம் அவளுக்குள் அடிக்கத் தொடங்கியது.  ’மம்மி’ என்ற அலறல் அவளுடைய சின்னத் தொண்டையிலிருந்து கிளம்பியது. அது வகுப்பறையை நிறைத்தது. பள்ளிக்கூடத்தை நிறைத்தது. பள்ளியை பார்வையிட வந்த புதிய பெற்றோர் சத்தம் கேட்டு திடுக்கிட்டு பின்பக்கமாக அடிவைத்து, திரும்பி தங்கள் காரை நோக்கி ஓடினர்.  இந்த அலறல் பலநிமிடங்கள் தொடர்ந்தது. மூன்று ஆசிரியைகள் கூட்டுச் சேர்ந்து ஆற்றியும் அழுகையை நிறுத்த முடியவில்லை.

மழலையர் மகிமையானவர்கள். பெற்றோராகிய நீங்கள் குழந்தைக்கு காப்பகத்தில் எப்படி ஒழுகுவது என்பதை சொல்லித் தரவேண்டும். மூச்சுப்பயிற்சி கற்பிப்பதும் நல்லது. பள்ளியின் நடைமுறைகளைக் கற்றுக் கொடுப்பது அவசியம். குழந்தை எடுத்து வைக்கும் இந்தச் சின்னஅடி பெரிய மாற்றத்துக்கு சமம். உங்களுடன் சேர்ந்து நாங்கள் குழந்தை எதிர்பார்ப்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுத்த முயல்வோம். இனிமேல் குழந்தையை 10.45க்கு வீட்டுக்கு அழைத்துச் செல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். யார் கண்டது? இன்னும் ஒருவாரத்தில் சகானா 11.00 மணிவரை பள்ளிக்கூடத்தில் நிற்க ஆசைப்படலாம். சகானாவின் முதல் வெற்றிகரமான வாரத்தை நாம் எல்லோரும் கொண்டாடுவோம்.

தங்கள் உண்மையான,

ஜெனி கொன்சிடீன்

குழந்தைக்கும் ஒரு தரப்பு இருக்கிறதுதானே. ‘ஏன் அழுதாய்’ என்று கேட்டபோது, அது  ‘காலைச் சாப்பாடு வயிற்றினுள் முடிந்துவிட்டது’ என்றது.

இரண்டாவது நாள்

பெற்றோர் குழந்தைக்கு மூச்சுப் பயிற்சி அளித்தனர். ’இழு’என்று சொன்னதும் குழந்தை தலையை மேலே மேலே தூக்கியது. மூச்சை இழுக்க அதற்கு தெரியவில்லை. குழந்தை சாப்பிடுவதற்கு மூன்று விதமான உணவுப் பொருள்களை பெட்டியில் அடைத்து பெற்றோர் அனுப்பினார்கள். ஆசிரியை அப்படித்தான் செய்யவேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார். உலர் உணவு ஒன்று; ஈரமான உணவு ஒன்று; பழம் ஒன்று. குழந்தை இதில் ஏதாவது ஒன்றை இடைவேளையில் சாப்பிடும் என்பது எதிர்பார்ப்பு. அன்று குழந்தை ஒருவித பிரச்சினையும் இல்லாமல் மற்றக் குழந்தைகளுடன் அணைந்த்து.

பெற்றோர் சொல்லிக் கொடுத்ததுபோல அவ்வப்போது மூச்சுபயிற்சி செய்யவும் மறக்கவில்லை.  மணிக்கூட்டில் 10.45 வந்தது. மூன்று ஆசிரியைகளும் எதையோ எதிர்பார்த்து ஓர்இடத்தில் குவிந்து நின்றார்கள். ஆனால் அதைக் கடந்து குழந்தை போனது.

விளையாட்டுகளில் கலந்துகொள்ள அதற்கு நேரம் இருக்கவில்லை. இசை நாற்காலி விளையாட்டில் யாரோ கடைசி நாற்காலியை இழுத்துவிட்டது போல தனியாக  நின்று யோசித்தது.  எல்லாக் குழந்தைகளும் 11 மணிக்கு வீட்டுக்குப் போனபோது அந்தக் குழந்தையும் போனது. அன்று கடிதம் வரவில்லை. ஆனால் பெற்றோரின் செல்பேசியில் குரல் அஞ்சல் ஒன்று எப்பவோ வந்து உட்கார்ந்திருந்தது.

’இன்று வெற்றிகரமான நாள். 10.45க்கு தயாராக இருந்தோம். சகானா. (sound barrier) ஒலித்தடையை வெற்றிகரமாகத் தாண்டினாள். ஒரேயொரு சின்னப் பிரச்சினை. இடைவேளையின் போது ஏதாவது ஓர் உணவுவகை சாப்பிடவேண்டும். அதுதான் காப்பகத்தின் விதி. சகானா மூன்று உணவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு 45 நிமிடம் எடுத்துக்கொண்டாள். ஒருமணி நேரத்தில் 45 நிமிடம் உணவுக்குப் போனது. மற்றக் குழந்தைகள் 15 நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு விளையாட்டுகளில் கலந்து கொண்டார்கள். மூன்றுவகை உணவு குழந்தைக்கு அதிகம். இனிமேல் ஒன்று போதும்.’

மூன்றாவது நாள்

காலையில் சகானா இருளான வீட்டு மூலையில் போய்  குந்தியிருந்து கொண்டு அன்றைய திட்டம்பற்றி யோசித்தாள். பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல அவள் முகத்தில் உற்சாகம் வடிந்திருந்தது. பாடசாலை  உடுப்பணிந்து, முதுகுப்பை மாட்டி,  எல்லாமே தயார் நிலையில் காணப்பட்டது. அவள் தலை முழங்காலுக்கு கீழே தொங்கியது. அது நல்ல சகுனமில்லை. வீட்டுமூலையில் இருந்து அவள் அசைவதாகத் தெரியவில்லை.

’பள்ளிக்கு செல்லலாம் சகானா. அங்கே ஜெனி உனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.’

தொங்கிய தலை தெற்கு வடக்காக ஆடியது.

’உன்னுடைய சிநேகிதி லூலூ உன்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்.’

தலை ஆடியது.

’உனக்கு  கேக்  கிடைக்கும்.’

’வேண்டாம்.’

’உனக்கு குக்கி கிடைக்கும்.’

’எனக்குப் பிடிக்காது. அவர்கள் மழைக் காலத்தை திருப்பிக் கேட்கிறார்கள்.’

‘யார்?’

‘அவர்கள்தான்.’

’சரி, உனக்குத் தெரியுமா? பள்ளியிலே குட்டி குட்டி ரொய்லெட் இருக்கு. அதில் நீ வேண்டிய மட்டும் உட்காரலாம்.’

விர்ரென்று கிளம்பிய சகானா துள்ளிக் குதித்து புறப்பட்டாள். நாரை ஒன்று தண்ணீரிலிருந்து எம்பிப் பறந்து போனது. அதையே பார்த்தபடி நடந்தாள். இதனிலும் பார்க்க அழகான ஒன்றை பள்ளியிலே கற்கமுடியுமா?

இருபது பொம்மைகளில் ஒன்று தொலைந்தாலும் அதைப் பெயர்  சொல்லி சரியாக  கண்டுபிடிப்பது; தமிழில் கேள்வி கேட்டால் ஸ்பானிஷ் மொழியில் பதில் சொல்வது; யாருடைய பிறந்தநாள் என்றாலும் பாடலில் தன்பெயரைச் சேர்த்துப் பாடுவது; இப்படியான திறமைகளையெல்லாம் ஒருங்கே பெற்றிருந்த சகானா அன்று 11 மணியாகியும் ஒவ்வொரு குட்டி நாற்காலியாக மாறிமாறி உட்கார்ந்து விளையாடினாள்.

இன்னும் வீடு திரும்பவில்லை. இன்றைக்கு ஆசிரியை அறிக்கை எப்படி வரும்? ஜெனி மதியூகி; தர்க்கவியல் படித்தவர். எழுத்தாகவா அல்லது குரல் அஞ்சலாகவா? ஒரு வேளை முறைப்பாட்டை ஜெனி நேரே கொண்டு வந்தாலும் வரலாம்.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2023 09:28

July 2, 2023

அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை

டிசம்பர் 21 நடுச்சாமம். கனடாவின் அதி நீண்ட இரவு. 15 மணி நேரம் இரவு; 9 மணி நேரம் பகல். வெளியே பனி கொட்டிக்கொண்டே இருந்தது. யன்னலில் பாதி உயரத்துக்கு ஏறிவிட்ட்து. அது சற்று ஓய்ந்ததும் வேறு விதமான சத்தம் ஆரம்பித்தது. சற்று நேரம் நின்று மறுபடியும் துவங்கியது. பழுதுபட்ட வாகனம் கிளம்புவதுபோல ஒரு வித்தியாசமான ஒலி. மெதுவாக படுக்கையை விட்டு எழும்பி போய் வெளி லைட்டை போட்டேன். பக்கத்து வீட்டு நிலவறையில் வாடகைக்கு குடியிருக்கும் சோமாலியாக்காரர்  என் வீட்டு பனியை நீண்ட பனிவாரியால் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார். அடர்த்தியான கறுப்பு குளிர் அங்கி அணிந்து தலையையும் காதையும் மறைத்து தொப்பி அணிந்திருந்தார். என்ன காரணத்துக்கு அவர் இந்தப் பாடுபடுகிறார்.

அடுத்த நாளே காரணம் புரிந்தது. அவருடைய மகளுக்கு மறுபடியும் கணிதம் சொல்லித்தர வேண்டுமாம். நான் ஏற்கனவே மறுத்து விட்டேன். ஓய்வு பெற்ற பிறகு நான் ஒருவருக்கும் பாடம் சொல்லித் தருவதில்லை. ஆனால் ஓமர் ஆமெட் என்னை விடுவதாயில்லை. அவருடைய 12 வயது மகள் அபசிர் ஆறாம் வகுப்பு படிக்கிறாள் ஆனால் பத்தாம் வகுப்பு கணிதங்களை ஒருவித பிரச்சினை இல்லாமல் செய்துமுடிப்பாள். போன மாதம் அவள் என்னிடம் வந்தபோது நான் அவளை பரீட்சித்தேன். அந்தச் சிறுமிக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று எத்தனை தரம் சொன்னாலும் தகப்பன் கேட்பதாயில்லை. .

அபசிர்  வந்த முதல் நாள் அவளுடைய புத்திக் கூர்மையை சோதிக்க ஒரு சின்னக் கணக்கு கொடுத்தேன். ஒரு தோட்டத்தில் சில மரங்களும் குருவிகளும் இருந்தன. குருவிகள் மரத்துக்கு ஒன்றாக உட்கார்ந்தால் ஒரு குருவி மிஞ்சும். இரண்டு இரண்டாக உட்கார்ந்தால் ஒரு மரம் மிஞ்சும். எத்தனை மரங்கள், எத்தனை குருவிகள்?  அவள் நான் கேள்வியை முடிக்க முன்னரே பதில் சொல்லிவிட்டாள்.    

நீதான் மிக அருமையாக கணிதங்களுக்கு விடை காண்கிறாயே. உன் அப்பா விருப்பப்படி கனடாவில் நாடளாவிய விதத்தில் நடைபெறும் கணிதப் பரீட்சையில் ஏன் பங்கு பற்றக் கூடாது. என்று கேட்டேன். சிறுமியாக சோமாலியாவில் வாழ்ந்தபோதே அவளுக்கு கணிதத்தில் அளவற்ற ஆர்வம். போர் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபிக்கு குடிபெயர்ந்தார்கள். அங்கே அவளுக்கு தகப்பன் கணிதப் பாடம் சிறப்பாகப் படிக்க ஒழுக்கு செய்தார். அபசிர் கணிதத்தில் பெரும் புகழ் பெறவேண்டும் என்பது அவர் விருப்பம். அவளுக்கு அது பிடிக்கவில்லை. அந்தச் சின்ன வயதில் தன்னுடைய சொந்த சிந்தனைப் பாதையை உருவாக்க  விரும்பினாள். ’எல்லா முறையும் ஒரே முடிவைத்தானே தரும்’ என்றேன். அவள் தலை குனிந்து நின்றாள். கணிதப் புதிரிலும் பார்க்க கூடிய புதிராக அவள் இருந்தாள்.

சாப்பிடுவதற்கு மனைவி ரொட்டி கொண்டுவந்து வைத்தார். சிறுமி சடக்கென்று ரொட்டியை எடுத்து பிசைந்து உருண்டையாக்கி மெள்ள கடித்து சாப்பிட்டாள். ஏன் அப்படி செய்தாள் என்று கேட்டேன். அகதி முகாமில் எப்பவும் உணவுத் தட்டுப்பாடு. காதிலே பசி பசி என்ற சத்தம் கேட்கும். ரொட்டியை உடனே சாப்பிடாவிட்டால் யாராவது பறித்து தின்று விடுவார்கள். உருட்டி வைத்ததும் அது உங்களுடையது ஆகிவிடுகிறது. ஒருவரும் தொடமாட்டார்கள் என்றாள். அவள் ஏதாவது பேசத் தொடங்கினால் அவளை மறுபடியும் கணிதப் பக்கத்துக்கு திருப்பமுடியாது. கதைத்துக்கொண்டே இருப்பாள்.

’எங்களுடைய வீடு ஒட்டகச் சாணியால் செய்தது. ரயில் வண்டிபோல வீடு நீளமாக இருக்கும். சோமாலியாவில் ஒரு பழமொழி உண்டு. ஒட்டகம் இல்லாதவன் செத்தால் அது செய்தியே அல்ல. என்னுடைய அப்பாவிடம் சில ஒட்டகங்கள் இருந்தன. அவர் அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போவார். சில சமயம் ஒரு மாதமாகியும் திரும்பமாட்டார். புல்வெளியில் ஒட்டகப் பாலைக் குடித்துக்கொண்டு வாழப் பழகியிருந்தார். திரும்பும்போது ஒட்டகம் கொழுத்திருக்கும், அப்பா மெலிந்துபோய் இருப்பார். ஒவ்வொரு வருடமும் அரபு நாடுகளுக்கு ஒட்டகம் ஏற்றுமதி செய்வார். ஒட்டக மூத்திரத்துக்கு மருத்துவ குணங்கள் உண்டு. நான் அவற்றை போத்தலில் அடைத்து விற்பேன். அப்பா அந்தக் காசை என்னிடமே தருவார். நாங்கள் பணக்காரர்கள் இல்லை ஆனால் வசதியாக இருந்தோம். நாட்டை விட்டு புறப்பட்டபோது ஒட்டகங்களை விற்றோம். ஒட்டகங்களில் அப்பாவின் டெலிபோன் நம்பர்களை பதிந்து வைத்திருப்போம். ஒட்டகங்களை வாங்கியவர், எங்களுடன் நல்ல உறவு வைத்திருந்தவர். விற்பனை கணக்குகள் என் மூளையில் இருக்கும். நண்பர் கணிசமான தொகைக்கு ஏமாற்றிவிட்டார் என்பது நான் சொல்லித்தான் அப்பாவுக்கு தெரியும். போர் நல்லவர்களையும் மோசமானவர்களாக மாற்றிவிடும்.’

அபசிர் தினம் வருவாள். ரொட்டியை உருட்டி உருட்டி சாப்பிடுவாள். பிறகு அன்றைய கதையை ஆரம்பிப்பாள். என்னிடம் படிப்பதை நிறுத்திவிட்டாள். எனக்கும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. ’சோமாலியாவில் ஐந்து குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டன. நீங்கள் ஒரு குழுவிடம் பிடிபட்டதும் மற்றக் குழுக்களை தாக்கிப் பேசினால் விட்டுவிடுவார்கள். ஆனால் எங்களை பிடித்த குழு எது என்பதை எப்படியோ நுட்பமாக அறிந்து வைக்கவேண்டும். உங்கள் வாழ்க்கை அதில்தான் தங்கியிருக்கிறது.’

’துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடத் தொடங்குவோம். எந்த திசை என்று இல்லை. எந்தப்பக்கம் ஓடினாலும் ஒரு காட்டில்தான் முடியும். இரண்டு நாட்கள் நாங்கள் மரத்திலே தங்கினோம். நான் கீழே இறங்கவே இல்லை. அப்பா பழங்களும் கிழங்குகளும் பறித்து தந்தார். யாரிடம் இருந்து மறைந்து வாழ்ந்தோம் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. பக்கத்து மரத்திலே தங்கிய பெண் மரத்திலேயே ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார். அது இரண்டு நாள் வாழ்ந்தது. மூன்றாவது நாள் அந்த மரத்தின் அடியிலேயே அதை புதைத்தார்கள்.’

’மரத்திலே வாழ்ந்த அந்த இரண்டு நாளும் என் மனதிலே நிறைய கணித தேற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவற்றை என்னால் நினைவில் நிலைநிறுத்தி  வைக்க முடியவில்லை. அத்தனை வேகமாக அவை கொட்டிக் கொண்டே இருந்தன. மரத்திலே இருந்து இறங்கிய பின்னர் என் கையில் கிடைத்த பழைய தினசரி பேப்பர் ஒன்றில் ஞாபகத்தில் வந்த தேற்றங்களை குறித்து வைத்துக் கொண்டேன். பாதிக்கு மேல் அவை மறந்துபோய் விட்டன. பின்னர் எத்தனை முறை யோசித்தாலும் அந்த தேற்றங்கள் எனக்கு மறுபடியும் கிடைக்கவே இல்லை.’

’சோமாலியாவில் இருந்து தப்பி நைரோபி வந்த பிறகு கனடாவுக்கு போவதற்கான முயற்சிகளை அப்பா தொடங்கினார். நைரோபியின் பெரிய ஆடைக்கடை ஒன்றுக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். விசா எடுப்பதற்கு நல்ல ஆடை உடுத்தி நான் நிற்கும் படம் தேவை என்று அப்பா சொன்னார். நான் நல்ல அளாவான ஆடை ஒன்றை தெரிவு செய்துவிட்டு உடை மாற்றும் அறைக்குள் அளவு பார்க்க நுழைந்தேன். நல்ல அளவாக இருந்தது. ஒரு சீமாட்டிபோல என்னை அந்த ஆடை மாற்றிவிட்டது. அப்பா அங்கேயே என்னை படம் பிடித்தார். ஆடையை அங்கேயே விட்டோம், படத்தை விசாவுக்கு அனுப்பினோம்.  விசா நிராகரிக்கப்பட்டது.’ 

’துரோகத்துக்கு மாத்திரம்தான் ஆகக்கூடிய தண்டனை சோமாலியாவில்கிடைக்கும். கல்லால் எறிந்து கொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை இறந்தால் போதுமானது., விட்டுவிடுவார்கள். அது என்னை தொந்தரவு செய்தது. அடுத்த தடவை அகதி விண்ணப்பம் கொடுக்க அப்பா போனபோது அவருடன் நானும் போனேன். வெள்ளைக்காரர் கறுப்பு கண்ணாடி மாட்டியிருந்தார். அவர் என்னவோ கேட்டார். அப்பாவின் பதில்கள் தாறுமாறாக இருந்தன. அப்பா சொன்ன சம்பவங்கள் அகதிக் கோரிக்கைக்கு காணாது என்றார் வெள்ளைக்காரர். மரத்தில் ஏறி அங்கே இரண்டு நாட்கள் உணவின்றி கழித்ததை அப்பா சொன்னபோது அதை  எல்லோரும்தான்  சொல்கிறார்கள் என்றார் கண்ணாடிக்காரர்.’

அடுத்த முறை அதிகாரி ஒரு பெண்மணி. வெள்ளைக்காரி. தாடை கீழே இறங்கியிருக்கும் பெண்மணி.. அப்பாவுக்கு நம்பிக்கை பிறந்தது. வெள்ளைக்காரி கேட்டார் ’உங்களுடைய விருப்பம் என்ன?’ அப்பா நான் எதிர்பார்க்காத பதிலை சொன்னார். ’நான் வறுமையில் வாடி சாகவேண்டும். மரத்தில் இருந்து கீழே விழுந்து சாகக்கூடாது. கொலைபட்டு சாகக்கூடாது. போராளிகள் சண்டைபோடும்போது இடையில் புகுந்து குண்டடிபட்டு சாகக்கூடாது. இவ்வளவுதான் கேட்கிறேன்’ என்றார் அப்பா. இதற்கும் விசா கிடைக்கவில்லை. இப்படி பலமுறை நடந்தது. கடைசியில் விண்ணப்பம் வெற்றியடைந்ததற்கு ஒரு சம்பவம்தான் காரணம். கென்யா பேப்பர்கள் அதைப் பற்றி விரிவாக எழுதின. அந்தச் சமயம் அப்பா அனுப்பிய விண்ணப்பத்துக்கு அவர் எதிர்பாராத தருணத்தில் விசா கிடைத்தது.’

அன்றும் அபசிர். சிரித்து குதித்தபடி ஓடி வந்தாள். 13 வயதுகூட இராது. தலையில் சால்வையால் அவசரமாகச் சுற்றி மீதித்துணியை முதுகிலே வழிய விட்டிருந்தாள். கண்களில் ஏதோ புதிதாக கண்டுபிடித்த அறிகுறி. அவை பளபளவென்று மின்னின. அவள் உடல் சரும நிறமும் ஆடையும் ஒரே நிறத்தில் இருந்தது. ‘இன்று வீட்டுக்கார அம்மா என்னை கூப்பிட்டார். அவருடன் மேல்மாடிக்கு போனேன். அங்கே பெரிய அறை இருந்தது, எங்கள் முழு வீட்டிலும் பார்க்க பெரிய அறை. நம்ப முடியுமா? உடுப்புகள் வைப்பதற்கு மாத்திரம் அந்தப் பெரிய அறை’ என்றாள். அதைத் தெரிந்து என்ன பிரயோசனம். உனக்கு ராமானுஜன் எண் பற்றி தெரியுமா? என்றேன். தெரியாது என்றாள். அந்த மந்திர எண் 1729. அபூர்வமானது. யோசித்து அதைக் கண்டுபிடி. தெரியாவிட்டால் கூகிளில் தேடு’ என்றேன்.

அவள் சொல்லத் தொடங்கினாள். ‘ஐந்து வயது தொடங்கும்போதே எனக்கு எல்லா எழுத்துக்களும் எண்களும் தெரியும். கூட்டல் கழித்தல் பெருக்கல் என  கொஞ்சம் கொஞ்சமாக நானே பயின்றுகொண்டேன். அந்தக் குக்கிராமத்தில் இருந்த ஒரேயொரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். அங்கே நாள் முழுக்க விளையாட்டுத்தான். களிமண்ணைப் பிசைந்து மரம், செடி, பூனை, ஒட்டகம், எலி, என்று உருவங்கள் செய்வது. என் மூளை எண்களை வைத்து விளையாடியது. கணக்குகளை மனதுக்குள் போட்டபடி களிமண்ணை உருட்டுவேன். நான் எப்பவும் செய்வது உருளைக்கிழங்குதான். என்ன உருவம் இறுதியாக கிடைத்தாலும் உலகத்தில் எங்கோ ஒரு கிழங்கு அதுபோல இருக்கும்தானே.’

’நான் எப்படி எதை நோக்கி ஆராய்ச்சியை ஆரம்பிப்பது?’ நான் சொன்னேன், ’சோமாலிய மரத்திலே தோன்றியதுபோல சில உண்மைகள் உனக்கு தானாகவே கிடைக்கலாம். அல்லது ஒன்றை நோக்கி உன் ஆராய்ச்சியை தொடங்கலாம். உதாரணம், ஆறுகோண வடிவத்தில் தேனீக்கள் உண்டாக்கும் தேனடை. அது திறன் நிறைவு கொண்டது. அது எப்படி என்று நீ ஆராய்ச்சி செய்து கணிதமூலம் நிரூபிக்கலாம்.’

’சரி, செய்கிறேன். இதைக் கேளுங்கள். நான் இரவு முழுக்க யோசித்து முடித்த ஒன்றை இன்று எப்படியும் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேன். உங்களுக்கு தெரியும் பைதகரஸ் தேற்றத்தை மூன்றுவிதமாக நிரூபிக்கலாம். நான் நாலாவது நிரூபணத்தை கண்டுபிடித்தேன். அந்த நிரூபணத்தின் கடைசி வரியை எழுதியபோது இரவு மூன்று மணி. உங்களை நினைத்துக்கொண்டேன். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தேன்.’

’ஆனால் காலையில் எனக்கு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. இந்த தேற்றத்தை ஏற்கனவே ஒருவர் கண்டுபிடித்துவிட்டார் என்று கூகிள் சொன்னது. அழுதுகொண்டே இருந்தேன். அப்பா என்னை திட்டி இங்கே அனுப்பியிருக்கிறார்.’ ’இதற்கெல்லாம் யாராவது அழுவார்களா? கணித மேதை எஸ். ராமானுஜன் கண்டு பிடித்த அனேக கணித தேற்றங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவைதான். அவர் அழுது பின்வாங்கினாரா?’

’நாலாவது தேற்றத்தை கண்டுபிடித்தது யார் என்று நீங்கள் கேட்கவில்லையே. சொன்னால் நம்பமாட்டீர்கள்.’

’அப்படியா? அதுயார்?’

’ஜேம்ஸ் கார்ஃபீல்டு. அமெரிக்காவின் 20வது ஜனாதிபதி. லத்தீனும் கிரேக்கமும் படித்தவர். கணிதப் பின்புலம் அவருக்கு கிடையாது. அவர் போய் இந்த தேற்றத்தை கண்டுபிடித்திருக்கிறார்.’

’அது சரி. நீ பெருமைப் பட அல்லவா வேண்டும். ஒரு ஜனாதிபதி கண்டுபிடித்ததை நீ 13 வயதிலேயே அடைந்துவிட்டாய். நீ சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்றுதானே அர்த்தம்.’

’அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம்தானே?’

’அதுவும் ஒருவித திறமைதான்.’

’ஆனால் எனக்கு ஏமாற்றம் ஏற்படுவதை தாங்கமுடியவில்லை.’

’உனக்கு என்ன வேண்டும்? கணிதத்தில் பரிசு வேண்டுமா உன் அப்பா சொல்வது போல. அல்லது புகழ் வேண்டுமா?’

’பரிசு வேண்டாம். புகழும் வேண்டாம். ஒரு புது தேற்றம் கண்டு பிடிப்பதில் உள்ள மகிழ்ச்சி இருக்கிறதே. அதுதான் முக்கியம்.’

’நீ ஓர் அபூர்வமான பெண். கணித சிந்தனை உனக்கு இயல்பாகவே உள்ளது. உயிருக்கு பயந்து மரத்தின் மேல் ஒளித்திருந்த ஒரு சிறுமிக்கு அந்த நேரத்தில் சிக்கலான கணிதங்களுக்கு விடைகள் தோன்றியிருக்குமா? பலனை எதிர்பாராமல் கணிதத்துக்குள் நீ மூழ்கவேண்டும். உனக்கு அமெரிக்க கணித நிபுணர் George Dentzig இன் கதை தெரியுமா?’

’இல்லை.’

’இவர் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது ஒருநாள் மிகவும் தாமதமாக வகுப்புக்கு வந்தார். அங்கே வகுப்பு முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். ஆனால் கரும்பலகையில் இரண்டு கணிதப் புதிர்கள் எழுதியிருந்தன. இவர் அவற்றை தன் கொப்பியில் எழுதிக்கொண்டு தன் விடுதிக்கு திரும்பினார். நாலு நாட்கள் அந்தப் புதிருடன் இரவும் பகலும் கழித்தார். அப்படி கடினமான ஒரு கணிதத்தை அவர் முன்னர் கண்டதில்லை. ஆனல் ஒருவாறு புதிரை அவிழ்த்துவிட்டார். ஐந்தாவது நாள் பேராசியரைக் கண்டு மன்னிக்க வேண்டும். கொஞ்சம் தாமதமாகிவிட்டது என்று விடையை காண்பித்தார். பேராசிரியர் மயங்கி விழத் தயாரானார். அந்தக் கணிதங்கள் வீட்டுப் பாடம் அல்ல. உலகத்திலே யாரும் தீர்க்க முடியாத கணிதப் புதிர்கள். இந்த மாணவன் வீட்டுப் பாடம் என நினைத்து அவற்றுக்கு விடை எழுதிவிட்டான். மேலும் படிப்பை தொடரும் அவசியமின்றி அவனுக்கு உடனேயே  பி.எச்டி பட்டம் கிடைத்தது. இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா?’

’தெரியாது?’

’கணிதத்தை கணிதத்துக்காக காதலி. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதை எழுதி உன் டைரியில் வைத்துக்கொள்.’ சரி என்று சொல்லிவிட்டு போனாள்.

இரண்டு நாள் சென்றது.  காலை தொடங்க முன்னரே  வேகமாக வந்து தொப்பென்று என் முன் அமர்ந்தாள்.  முகம் கொந்தளித்தபடி இருந்தது.  நான் பேசாமல் இருந்தேன். ’நான் மூக்கில் வளையம் மாட்டப்  போறேன்.’ ‘ நல்லது.’ ‘ தோள் மூட்டில் பச்சை குத்தப் போறேன்.’ ‘ அதுவும் நல்லது, தோள் மூட்டு வெறுமையாகத்தான் இருக்கிறது.’ ‘நைரோபியில் விசா படமெடுப்பதற்காக திருடிய  ஸ்டைலான ஆடை போல அணியவேண்டும்.’ ‘அதற்கென்ன, கனடாவில் இல்லாததா? வாங்கலாம்.’ ‘ ஒரு மீன் இருக்கிறதாம். ஆற்றிலே பிறக்கும் பின்னர்  நீந்திப் போய் கடலிலே வாழும். இறுதியில் ஆற்றுக்கு திரும்பி  அது பிறந்த  இடத்திலே சாகும். எனக்கு சோமாலியா போய் அங்கே சாகவேண்டும்.’  ’உடனே செய்யவேண்டியதுதான்.  மரத்திலே  தனிமையில் நாட்களைக் கழிக்கலாம். புது தேற்றங்கள் கண்டுபிடிக்கலாம்.’ ‘ அப்பா என் அமைதியை குலைக்கிறார். கணிதப் போட்டியை தினம் நினைவுபடுத்துகிறார். கணிதத்தை நினைத்தாலே வெறுப்பு வெறுப்பாக வருகிறது. ’ ‘சரி, இந்த ரொட்டியை சாப்பிடு.’ அவள் கண்களில்  கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

‘எத்தனை பாடுபட்டு கனடா விசா கிடைத்தது. நீ மகிழ்ச்சியாக இல்லையா?’

’ஒரு சம்பவம் நடந்தது. அதை நைரோபி பேப்பர்கள் எழுதின. அந்தச் சம்பவத்தை காட்டி அப்பா விசா பெற்றுவிட்டார். எனக்கு அது அளவில்லா வெறுப்பை தருகிறது.’

‘வெறுப்பு உன் சிந்திக்கும் திறமையை எரித்துவிடும். நைரோபி ஆசிரியர் எங்கே படிப்பை விட்டாரோ அங்கேயிருந்து ஆரம்பி.’

‘அது எப்படி?. என் ஆசிரியரில்தானே பிரச்சினை.’

’நீ சொல்லவில்லையே..’

’ஓ, அந்த துரோகிக்கு நைரோபி சிறையில். ஏழு வருடங்கள் தண்டனை. பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பற்றி எழுதினவே.’

’ஏன்? என்ன செய்தார்?’

‘றேப் பண்ணினார்.’

’யாரை?’

’என்னைத்தான்.’

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2023 04:44

சீலாவதி

இரவு பத்துமணி இருக்கும்போது டெலிபோன்அடித்தது. அப்பொழுதெல்லாம் செல்பேசி கிடையாது. கைவிரலால்  சுழட்டிப் பேசும் தொலைபேசிதான். ஆப்பிரிக்காவில் பலவருடங்கள் வாழ்ந்திருந்தாலும் இரவு பத்துமணிக்கு அழைக்கும் நண்பர்கள் யாரும் உண்டாகவில்லை. டெலிபோனை எடுத்து ‘ஹலோ’ என்றேன். ஒருமுறை இப்படித்தான் நடு இரவில் ஓர் அழைப்பு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்தது. என்னை இரவு  விருந்துக்கு அழைக்கவில்லை. ஓர் எச்சரிக்கை தருவதற்காக வந்த அழைப்பு. ஆகவே கை லேசாக நடுங்கத் தொடங்கியது.

இந்த அழைப்பு அப்படி அச்சுறுத்தும் செய்தியை கொண்டுவரவில்லை. அதிலும் மோசமானது. அழைத்தவருடையது  ஆணை கொடுத்துப் பழகியகுரல். தன் பெயர் சாயித் என்றார்.  உடனேயே புரிந்துவிட்டது. எனக்கு பரிச்சயமான லெபனிஸ் தொழிலதிபர். என்ன விசயமாக அழைத்தார் என்று கேட்டேன். ’ஓர் இளம்பெண் வீதியிலே அலைந்து கொண்டிருக்கிறார். அவர் பேசிய மொழி புரியவில்லை. பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.  ’ஸ்ரீலங்கா,ஸ்ரீலங்கா’ என்று பிதற்றுகிறார் என்று சொல்லிவிட்டு டெலிபோனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண் அழுவதும் ஒரு வார்த்தை பேசுவதும் பின்னர்அழுவதுமாக இருந்தார். எனக்கு அழுகை புரிந்தது; வார்த்தை புரியவில்லை. ஏனென்றால் அது சிங்களம், ஆகவே மனைவியிடம் பேசச் சொல்லி கொடுத்துவிட்டு மனைவியின் முகத்தை பார்த்தபடியே இருந்தேன். அது கலவரமாக மாறியது. லெபனிஸ்காரரிடம் முகவரியை பெற்றுக்கொண்டு உடனேயே அங்கே புறப்பட்டோம்.

காரிலே போனபோது மனைவி கதையை சொன்னார். அந்தப் பெண்ணுக்கு வயது 15, பெயர் சீலாவதி. இங்கே வேலைக்காரப் பெண்ணாக ஒரு வருடமாக வேலைபார்க்கிறார். வீட்டுக்காரர்களின்  கொடுமை  தாங்காமல் வீட்டைவிட்டு அதிகாலையே கிளம்பிவிட்டார். நாள் முழுக்க 40 மைல் தூரத்தை கடந்திருக்கிறார்.  காலையிலிருந்து  சாப்பிடவில்லை. யாரிடம் போவது, எங்கே தங்குவது ஒன்றுமே தெரியாமல் கலங்கி நின்ற போதுதான் தற்செயலாக இந்த லெபனிஸ்காரர் அந்தப் பெண்ணைக் கண்டிருக்கிறார்.

நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது இரவு 11 மணியாகிவிட்டது. சாயித் வாருங்கள் என்றார். சந்தையில் இரைச்சல் அடங்கிவிட்டாலும் வேர்க்கடலை வறுத்த மணம் போகவில்லை. சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் ஹமட்டான் காற்றுக் குளிர், குதியில் ஆரம்பித்து எலும்புகளுக்குள் புகுந்து உபத்திரவம் செய்தது.  முழங்காலுடன் கால் முடிந்த பிச்சைக்காரன் கீழே அமர்ந்திருக்க, இந்தப் பெண் நடுங்கிக்கொண்டு நின்றார். ’எங்கே வேலை பார்க்கிறார்?’ என்று மனைவி கேட்டபோது அவர் ’உடுகம்போல சகோதரர்கள்’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த சகோதரர்கள்  ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். மரம் ஏற்றுமதி செய்யும் இத்தாலிய கம்பனி ஒன்றில் வேலை பார்த்தார்கள். மூத்தவர் என்ஜினியர், இளையவர் கணக்காளர்.  இரண்டு சகோதர்களும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தனர். கிறிஸ்மஸ் சமயம் பெரிய விருந்துகள் வைத்து ஆட்டமும் பாட்டும் விடியவிடிய நடக்கும்.  ஒருமுறை இந்தக் கொண்டாட்டத்திற்கு போன சமயம்  கம்பனி அதிபர் அலெசாண்ட்ரோவை பார்த்திருக்கிறேன். ஆறடி உயரமாக இருப்பார். கை விரல்களில் பச்சை, மஞ்சள், நீலம் என பல நிறங்களில் மோதிரங்கள். சிவப்பு முகத்தில் வாழைப்பழத்தில் இருப்பதுபோல காணப்பட்ட கறுப்பு புள்ளிகள் அவர் கம்பீரத்தை கூட்டின.

அந்த நாட்டிலே ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்டவர் இந்த அலெசாண்ட்ரோதான். சில மந்திரிகள் ஜனாதிபதியிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை அலேசாண்ட்ரோவிடம் முடித்துத்  தரச்சொல்லி  கேட்பார்கள். அலெசாண்ட்ரோ  முதலில் மந்திரியை திட்டுவார். ‘உன்னுடைய மூளையில் தண்ணீர் கலந்துவிட்டது. இனிமேல் உனக்கு இந்தப் பதவி சரிவராது’ என்று வைதுவிட்டு அவர் கேட்ட உதவியை செய்து கொடுப்பாராம்.  

காரிலே திரும்பியபோது பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் இந்தப் பெண் எப்படி அங்கே வந்து மாட்டிக்கொண்டார்  என்று மனைவி கேட்டார். ஒரு சொந்தக்காரர் அவரைப் பிடித்து இங்கே வேலைக்கு அனுப்பியிருக்கிறார். மூத்தவருடைய பிள்ளைகளைப் பார்க்க என்றுதான் அவரை கூட்டிவந்தார்கள். ஆனால் வந்த பின்னர் சமையல், வீட்டுவேலை, துணி துவைப்பது என்று எல்லாமே அவர் தலையில்தான். அதுமட்டுமில்லை. மூத்தவர் வீட்டில் வேலை முடிந்தால் இளையவர் வீட்டிலும் செய்யவேண்டும். காலை 5 மணிக்கே  எழும்பி இரவு 11 மணிக்கு படுக்கப் போகும் வரைக்கும் ஒரே வேலைதான்.

சீலாவதியை வீட்டு வெளிச்சத்தில் பார்த்த நான் திடுக்கிட்டுவிட்டேன். முயலினுடையது போன்ற பழுப்பு   நிறக்கண்களால், ஒரு நிலையில் நிற்காமல் பயத்தில் இங்கும் அங்குமாகப் பார்த்தார். உடம்பில் ஏறிய சிறு நடுக்கம் இன்னும் ஓயவில்லை. பூப்போட்ட  சீத்தைத் துணியில்  மேல்சட்டை. ஒரு வாரம் முன்னர் தோய்த்திருக்கக்கூடிய பச்சைநிற கட்டைப் பாவாடை. பேப்பர் போல  தேய்ந்து போன பாட்டா செருப்பு. அடர்த்தியான தலைமுடியை வாரிஅலட்சியமாக முடிந்திருந்தார். இத்தனை மலிவு உடையிலும் அவர் அழகு ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கக் கூடியதுதான்.

சீலாவதி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாததால் பசியோடிருந்தார். மனைவி அவசர அவசரமாகச் சமைத்து பரிமாற கூச்சத்துடன் சாப்பிட்டார். அவரிடம் ஒரு பைகூடக் கிடையாது. அப்படியே வெறும் கையுடன் ஓட்டமும் நடையுமாகப் புறப்பட்டிருக்கிறார். மனைவி தன்னுடைய இரவு ஆடையை அணியக் கொடுத்து  தூங்கச் சொன்னார். ’இது மோசமான ஊர். அந்த லெபனிஸ்காரர் கண்ணில் நீ பட்டபடியால்  தப்பிவிட்டாய். அவர் நல்லவர். எல்லோரும் அவர் மாதிரி நடக்கமாட்டார்கள். இந்த நாட்டு போலீசிடம் மாட்டியிருந்தால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். பிரச்சினைகளைப் பேசித்  தீர்க்கலாம், வீட்டைவிட்டு ஓடுவது என்பது ஓர்அந்நியநாட்டில் மிகவும் ஆபத்தானது.  நாளை காலை உன்  எசமானர்களிடம்  பேசி இதற்கு முடிவுகட்டுவோம்.’ இப்படியெல்லாம் மனைவி ஆலோசனை வழங்கினார்.

அந்தப் பெண் தூங்குவதாகத் தெரியவில்லை.  அவர் மூளைக்குள் பலவிதமான சிந்தனைகள் ஓடியிருக்கும். எதையோ நினைத்து பயந்து நடுங்கினார். எதிர்பாராத விதமாக ‘அம்மா, கேப்சியரா ஹொட்டல் எந்தப் பக்கம்இருக்கிறது?’என்றார். கேப்சியரா என்பது வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வந்து தங்கும் உயர்தர ஹொட்டல். வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு பெண், அடுத்தநாள் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாதவர், கேட்கும் கேள்வியா இது?  மனைவிக்கு யோசனையாக இருந்தது. எனினும் ஹொட்டல் இருக்கும் திசையை  காட்டிவிட்டு விளக்கை அணைத்தார்.

அடுத்தநாள் காலை சனிக்கிழமை மனைவி வழக்கத்திலும் பார்க்க சீக்கிரமாகவே தேநீர் தயாரிக்க எழுந்தார்.  முதல் வேலையாக சீலாவதியை கொண்டுபோய் சகோதரர்களிடம்  விடவேண்டும். அவர்கள் இரவிரவாக எங்கேயெல்லாம் தேடியலைந்தார்களோ? ஒருவேளை போலீசுக்கு முறைப்பாடு கொடுத்திருக்கலாம். திடீரென்று மனைவி கத்திக் கொண்டு ஓடி வந்தார். சீலாவதியை காணவில்லை. படுக்கையில் தலையணையில் பள்ளம் இருந்தது, அவர் இல்லை.  மனைவியின் ஆடையை கழற்றி சுருட்டி  வைத்துவிட்டு தன் உடுப்பை அணிந்து கொண்டு கிளம்பியிருக்கிறார்.    

ஓர் இரவு முடிவதற்குள் இந்தப் பெண் எங்களை இந்தப்பாடு படுத்துகிறாரே. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடந்தால் இப்பொழுது நாங்கள்தான் முழுப்பொறுப்பு. லெபனிஸ்காரர் பெண்ணை எங்களிடம்தான் ஒப்படைத்தார். போலீஸ்காரர் விசாரணையிலும் நாங்கள்தான் மாட்டுப்படுவோம்.  உடுகம்போல சகோதரர்கள் எங்கள்  மீதுதான் பழி போடுவார்கள். அலெசாண்ட்ரோவுக்கு விசயம் தெரிந்தால் எங்கள் நிலைமை படுமோசமாகிவிடும்.  

கேப்சியரா ஹொட்டல் பக்கமாக காரை செலுத்தினேன். என் ஊகம் சரிதான். சீலாவதி வேகமாக கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். நான் காரை மெதுவாகக்கொண்டு போய் பக்கத்தில் நிறுத்தினேன். அவர் திடுக்கிட்டுவிட்டார். ஒன்றுமே பேசாமல் மறுபடியும் காரிலே ஏறினார். சீலாவதி ஒன்றும் ஹொட்டல் உல்லாசத்தை அனுபவிக்க போகவில்லை.  அவருக்கு தன் எசமானர்களிடம் திரும்ப விருப்பமே இல்லை. கடலில் விழுந்து தற்கொலை செய்யவதற்காக  வீட்டைவிட்டு கிளம்பியதாகப் பின்னர் அவர் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.

’நாங்கள் என்ன செய்யமுடியும்? உன்னிடம் பாஸ்போர்ட்கூடக்  கிடையாது. எப்படி உன்னை திருப்பி அனுப்புவது? அவர்களோ அலெசாண்ட்ரோவின் ஆட்கள். அவர்களைப் பகைக்க முடியாது. போலீசில் உன் எசமானர்கள்  புகார் கொடுத்திருந்தால் உன் பிரச்சினை மேலும் பெரிதாகிவிடும். போலிசார் எங்களையும் விசாரிப்பார்கள்.  எதற்கும் பயப்படவேண்டாம். நான் அவர்களுடன் பேசி உன்னை விடுவித்து உன் அம்மாவிடம்  அனுப்பி வைப்பேன்.’ மனைவி இதை மொழிபெயர்த்தார்.

அவர் எதற்காக வீட்டைவிட்டு ஓடினார்?  ஏதாவது குற்றம் செய்தாரா?  என்று மனைவி விசாரித்தார்.  இரண்டு நாள் முன்னர் நடந்ததை அந்தப் பெண் விவரித்தார். கணவரும் மனைவியும் முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவரைப் போட்டு அடித்தார்கள். வழக்கமாகச் செய்வதுபோல நாயை வெளித் தூணிலே சங்கிலியால் கட்டிவிட்டு அதற்கு சாப்பாடு வைத்தார். பின்னர் கதவை பூட்டிப் படுக்கப் போய்விட்டார். நாய் தூணைச் சுற்றி ஓடியபோது சறுக்கி கீழே தரையில் விழுந்துவிட்டது. திண்ணை  தரையில் இருந்து மூன்று அடி உயரம். நாய் சங்கிலியில் தொங்கியபடியே மூச்சடைத்து இறந்துவிட்டது. இதற்காகத்தான் அடித்தார்கள்.

அதுவரை குனிந்து கேட்டால்தான் புரியும் வகையில்  மெல்லிய குரலில் பேசியவர் திடீரென்று வீறிட்டு அழுதபடி பேசத் தொடங்கினார். ’என் அம்மா சாவீடுகளில் காசுக்கு ஒப்பாரி வைப்பவர். வறுமையான குடும்பம். இவர்களை நம்பி என்னை அனுப்ப இப்படி சித்திரவதை செய்கிறார்கள். எனக்கு ஒருவரும் இல்லை. என்னை எப்படியும் திருப்பி அனுப்பி விடுங்கள். மன்றாடிக் கேட்கிறேன். என் அம்மா வீட்டிலே ஒப்பாரி வைத்து அழக்கூடாது.’

என் நண்பர் ஒருவருக்கு உடுகம்போல சகோதர்களை ஏற்கனவே தெரியும். ஒருமுறை நண்பரை  நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.  உடுகம்போல சகோதரர்களுடன் அலெசாண்ட்ரோவை போய்ப் பார்த்தார். அவர் ஒரு டெலிபோன் அழைப்பில் உத்தரவை திரும்ப பெற்றுக்கொள்ள வைத்துவிட்டார். ஜனாதிபதிக்கும் அலெசாண்ட்ரோவுக்கும் இடையில் இருந்த ஆழமான  நட்பை காட்ட நண்பர் ஒரு கதை சொல்வார். ஜனாதிபதிக்கு மூன்று மனைவிகள். கடைசி மனைவியின் அண்ணன் அலெசாண்ட்ரோவின் கம்பனியில் மனேஜராக வேலை பார்த்தார். ஒருநாள் குடிவெறியில் மனேஜர் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கட்டி வைத்திருந்த மரப்பலகை பொதியில் ஏறிப் படுத்து  தூங்கிக் கொண்டிருந்தபோது அலெசாண்ட்ரோ அங்கே போயிருக்கிறார். அந்த நிமிடமே மனேஜருக்கு வேலை போனது. அடுத்த நாள் வேறு ஒரு விசயமாக ஜனாதிபதியை பார்க்க அலெசாண்ட்ரோ போனார்.  மனேஜர் வேலை நீக்கப்பட்ட காரணத்தை ஜனாதிபதி கேட்டார். அதற்கு அலெசாண்ட்ரோ சொன்ன பதில் பின்னர் நாடு முழுவதும் பிரசித்தமானது.  ’மணிக்கூடு முடிந்துவிட்டது.’ ஜனாதிபதி விழுந்து விழுந்து சிரித்தாராம்.  

என் நண்பரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டோம்.  மனைவி ஓயாமல் அழும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருமணிநேரம் கழித்து கம்பனி வளாகத்துக்குள் கார் நுழைந்தது.  குடியிருப்புகள்  தனித்தனியாக அமைந்திருந்தன. எல்லாம் ஒரேவித  வடிவம் கொண்ட வீடுகள். வீடுகளைத்  தாண்டி மைதானத்தில் டென்னிஸ் கோர்ட்டும், பாட்மின்ரன் கோர்ட்டும் இருந்தன. வீட்டுத் தோட்டங்கள் கம்பனியால் பராமரிக்கப்பட்டு ஒரு பூங்காவனத்துக்குள் நுழைவது போன்ற உணர்வைக் கொடுத்தன.

பல இத்தாலியர்கள் தங்கள் தங்கள் நாய்களுடன் வீதியில் உலாவினர்.  தூரத்தில் சகோதரர்கள் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களுக்குப் பக்கமாகச் சென்று காரை நிறுத்தினேன். ஒரு பக்கத்தில் மூத்தவரும் அவர் மனைவியும். எதிர்ப் பக்கத்தில் இளையவரும் மனைவியுமாக விளையாடினர். இரண்டு மனைவியரும் விளையாட்டுக்கு சற்றும் பொருத்தமே இல்லாத நீண்ட உடை  அணிந்திருந்தனர். பிள்ளைகள் ஓடியோடி வெளியே பறக்கும் இறகுப் பந்துகளை பொறுக்கிப் போட்டனர்.

நாங்கள் நாலு பேரும் காரைவிட்டு இறங்கி தயக்கத்துடன் காத்திருந்தோம். அவர்கள் எங்களைக் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. எங்கே போவது என்றும் முடிவெடுக்க முடியவில்லை. அவர்கள் வீட்டுக்குப் போவதா அல்லது இறகுப்பந்து மைதானத்திலே நிற்பதா? சகோதரர்கள் விளையாட்டை  நிறுத்தாமல் எண்ணிக்கையை உரத்துச் சொல்லியபடி ஆடினார்கள். ஆட்டத்தை பாதியில் நிறுத்த முடியவில்லை என்று தெரிந்தது. நாங்கள் காத்திருந்தோம்.

இறகுப்பந்து விளையாட்டு என்பது இழுவல் பிடித்தது. சீக்கிரத்தில் முடிவுக்கு வராது. டென்னிஸ் என்றால் 15, 30, 40 பின்னர் ஒருபுள்ளியோடு விளையாட்டு முடிவை அடைந்துவிடும். இறகுப்பந்தில் எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பித்து 20 மட்டும் போகும். அதில் இருவருக்கும் சமம் என்றால் 29கடந்து முதலில் யாருக்கு 30 கிடைக்கிறதோஅவரே வெற்றியாளர் ஆவர். 10 நிமிடம் கழிந்தும் விளையாட்டு முடிவடையவில்லை. நாங்கள் நின்றோம்.

எங்களுடன் காத்து நின்ற சீலாவதி  திடீரென்று இரண்டு கைகளையும் தலையில் வைத்து குனிந்தபடி அவர்கள் வீட்டுக்குள் ஓடிமறைந்தாள். எங்களுக்கு கிடைத்த உன்னதமான வரவேற்பை  பார்த்து அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருக்கவேண்டும். அவர்களுடைய வேலைக்காரி நேற்று அதிகாலை 5 மணிக்கு காணாமல் போயிருக்கிறாள். ஒரு முழுப்பகலும் இரவும் அவள் திரும்பவில்லை.  அவள் ஏன் வீட்டைவிட்டு ஓடினாள் என்ற கேள்விக்கு  விடை கண்டுபிடிக்கும்  ஆசை விளையாட்டுக்காரர்களுக்கு  இருந்ததாகத் தெரியவில்லை. அவள் போலீசில் பிடிபட்டிருந்தாலோ அல்லது இறந்து போயிருந்தாலோ எத்தனை பெரிய சங்கடத்தில் மாட்டியிருப்பார்கள்.

விளையாட்டு முடிந்து அப்பொழுதுதான் பார்ப்பதுபோல மூத்தவர் கையிலே இருந்த ராக்கெட்டை மேலே தூக்கி அசைத்தார். எங்களுடன் வந்த நண்பர் கையைக் காட்டினார். எனக்கும் மனைவிக்கும்  என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எங்களுக்கு கிட்ட ஓர் அரசர் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்த மூத்த சகோதரர் ’வீட்டுக்கு வாருங்கள்’எனஅழைப்பார் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. கையை நீட்டினார். நான் கொடுத்தேன். திறப்பை துளையில் இட்டு திருகுவதுபோல ஒரு திருப்பு திருப்பினார். பின்னர் ’உள்ளே வரப்போகிறீர்களா?’ என்றார். இவர் என்ன விருந்துக்கு  கூப்பிட்டு வந்தோமா? தொலைந்துபோன அவருடைய வேலைக்காரியை மீட்டு 40 மைல் தூரம் அழைத்து வந்திருக்கிறோம். நண்பர் பக்கம் அவர் பார்வை திரும்பவே இல்லை. என்னுடைய திடுக்கிடலை மறைத்துக் கொண்டு ’இல்லை’என்றேன். ’எப்போது வேலைக்காரியை பிடித்தீர்கள்?  எங்கே தங்கினாள்?’ போன்ற  கேள்விகள் அவருக்கு எழவே இல்லை. பேப்பர் போடும் பையன் மூன்று மாதக் கடன் காசை கேட்க வந்தது போல என்னை அருவருப்பாகப் பார்த்தார். முக்கியமாக அவருடைய மேன்மையான  உதட்டிலிருந்து  நன்றி என்ற வார்த்தை வெளியே வரவே  இல்லை.

வீடு திம்பிய பின்னர் மனைவி இன்னொரு  விசயத்தையும் சொன்னார். சீலாவதியை மூத்தவர் பல தடவை கெடுத்திருக்கிறார்.  ’சீலாவதி பாவம்,  இந்தச் சின்னவயதில் அவளுக்கு எத்தனை பெரிய சோதனை. அவள் யாரிடம் போவாள்?’என்றார் மனைவி. ’ஏன், எனக்கு இதை முதலிலேயே சொல்லவில்லை’ என்று நான் கேட்டேன். ’சொன்னால் என்ன செய்திருப்பீர்கள்? இத்தனை மோசமாக அவர்கள் நடந்தும் உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிரச்சினையை தீர்ப்பதாகச் சொல்லி சீலாவதியை கூட்டிக்கொண்டு போனீர்களே. அந்தப் பெண்ணும் உங்களை நம்பி வந்தது.  உடுகம்போல உங்களை வீட்டினுள்ளே அழைக்கக்கூட இல்லை. என்ன பேசிக் கிழித்திருப்பீர்கள்?’

என் மனைவி மணமுடித்த 20 வருடங்களில் என்னிடம் அப்படி பேசியதே  கிடையாது. அவர் முகம் கோபத்தில் விகாரமாக மாறியிருந்தது.  எனக்கு என் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமதிப்புகளின் எண்ணிக்கை ஒன்று கூடியது. இதற்கு ஒருமுடிவு கட்டவேண்டும் என்று என்மனது திட்டம் போட்டது. ஓர்அந்நிய நாட்டில் வந்திருந்து உடுகம்போல சகோதரர்கள் இத்தனை அட்டகாசம்போட அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?

அந்தப் பெண்ணுக்கு நான்தான் பொறுப்பு. அவளை அழைத்துப்போன சமயம் அவர்கள் என்னை வெளிப்படையாக உதாசீனம் செய்தபோது நான் அதைப் பொருட்படுத்தாமல் சீலாவதிக்கு ஒரு தீர்வு கண்டிருக்கவேண்டும். அந்தக் கடமையில் தவறிவிட்டேன்.  உடுகம்போலவுடைய  அதிகார மமதைக்கு எல்லையே இல்லை. ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டு ஏதோ நாங்கள்தான் குற்றம் இழைத்ததுபோல அத்தனை அசட்டையாக எங்களை நடத்தினான். ஒருவேளை அவனுடைய  குற்றம் எங்கள் மூலம் பரவி வெளியுலகிற்கு தெரியக்கூடாது என்றுகூட  நினைத்திருப்பான்.  எல்லாம் அலெசாண்ட்ரோ அவர்கள் பக்கம் இருக்கும் துணிச்சல்தான்.  

இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இந்தச் சிந்தனையுடன் நான் தூங்கப் போனேன். சீலாவதிக்கான தீர்வு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது எனக்குத் தெரியாது.

அதிகாலை டெலிபோன் அடித்து பதற்றமாக எழுந்தேன். ஜெனீவாவில் இருந்து மேலதிகாரி அழைத்து ’மாற்றல் உத்தரவு’ என்றார். ’எங்கே?’ ’சோமாலியா.’ ’எப்போது?’ ’இன்றைக்கே. உங்கள் பயண டிக்கட் இன்று கையில் கிடைக்கும்.’  ’என்னுடைய திட்டப்பணி பாதியில் நிற்கிறதே?’ ‘ பரவாயில்லை. மாற்று ஏற்பாடு செய்தாகிவிட்டது.’

என் மனைவியின் முகம் சிறுத்து வாடிப்போயிருந்தது. விமான நிலையத்தில் எங்கள் பறப்புக்காக காத்திருந்தோம். ‘என்ன துக்கம் உமக்கு?’ ‘இன்னும் ஒரேயொரு நாள் கழித்து புறப்பட்டிருக்கலாம். நாளை ஆப்பிரிக்க வயலெட்  பூக்கிறது.’ ‘எங்கே பூக்கிறது?’ ‘எங்கள் வீட்டில்தான். இரண்டு வருடமாக இலையில் தண்ணீர் படாமல் ஊற்றி வளர்க்கிறேன். அபூர்வமான பூ. திடீரென்று பூக்கும். திடீரென்று நிறுத்திவிடும்.’ ‘வீட்டில் எங்கே இருக்கிறது?’  ‘உங்கள் படிப்பு மேசையில்தான்.’   ’அப்படியா? நான் கவனிக்கவில்லையே. அத்தனை விசேடமானதா?’ ‘இனி என்ன பிரயோசனம். 200 வருடங்களுக்கு முன்னர் இந்தச் செடியை ஒரு ஜேர்மன் அதிகாரி தான்சேனியா காட்டிலே கண்டுபிடித்தார். இப்ப உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அது பூக்கும்போது மிக அழகாக இருக்கும். ஓர் இரவு தங்க ஏலாதா? நாளை காலை பூத்துவிடும்’ அந்தச் சமயத்தில்கூட  எனக்கு சிரிப்பு வந்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை.

’அது சரி. எதற்காக உங்களை திடீரென்று மாற்றினார்கள். உங்கள் ஒப்பந்தப்படி இன்னும் ஆறுமாதம் இருக்கிறதே.’

’உண்மையான பதில் வேணுமா?’

’ஓமோம்.’

‘மணிக்கூடு முடிந்துவிட்டது.’

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2023 04:38

கடல் ஆமை விஞ்ஞானி

இது ஓர் உண்மைக் கதை. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் நடந்தது. அவருடைய பெயர் டேவிட் (பொய்ப் பெயர்). அமெரிக்காவில் கடல் ஆமைகள் ஆராய்ச்சி மையம் ஒன்றில் விஞ்ஞானியாக  பணியாற்றுகிறார். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத முடிவில் தவறாமல் காட்டுக்குச் சென்று ஒரு கிறிஸ்மஸ் மரம் வெட்டி வருவார். அவரும் மனைவியும் கிறிஸ்மஸ் மரத்தை சோடித்து வண்ணமயமான மின்விளக்குகள் பூட்டி கொண்டாடுவார்கள். இந்த வருடம் விசேடமானது. அவர்களுடன் மூன்று வயது மகனும் சேர்ந்துகொள்வான். மனைவியின் பெயர் லூசி (உண்மையான பெயர்), மணமுடித்து ஏழு வருடங்கள் ஆகின்றன.  லூசி வீட்டிலிருந்தபடியே கம்புயூட்டர் வரைபடங்களை ஒப்பந்தத்துக்கு  வரைந்து நல்ல வருமானம் ஈட்டினார். மகிழ்ச்சியான குடும்பம். 

இம்முறை, அதாவது நவம்பர் 2022ம் வருடம், டேவிட்டும் அவருடைய இரண்டு நண்பர்களும் காட்டுக்குள் கிறிஸ்மஸ் மரம் வெட்டப் போனார்கள். மூன்று மரங்கள் வெட்டுவது என்று திட்டம். டேவிட் பல வருடங்களாக இந்தக் காட்டில் மரம் வெட்டுகிறார். அவருடைய நண்பர்களுக்கு இது முதல் முறை. நல்ல கிறிஸ்மஸ் மரங்களை இலவசமாக வெட்டலாம் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்திருந்தார். டேவிட் நல்ல அழகான, நேர்த்தியான மரம் ஒன்றை தெரிந்துவிட்டு அதை வெட்ட முன்னர் நண்பர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான மரங்களை தேர்வு செய்யச் சொன்னார். அவர்கள் இடத்தை விட்டு அகன்றதும், தன்னுடைய சங்கிலி வாளை எடுத்து டேவிட் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். வெட்டிய பின்னர் மரம் இன்னும் அழகாகவும், அவர் வீட்டுக்கு அளவானதாகவும்  இருந்தது. லூசிக்கு பிடிக்கும் என மனதில் நினைத்துக் கொண்டார். மரத்தை தூக்கி தன்னுடைய பொதி சுமக்கும்  வாகனத்தில் ஏற்றினார்.

நண்பர்களைத் தேடிய போது, கறுப்பு பூட்ஸ்போட்ட,  காட்டு வாசிகளின் போர்வையை எறிந்து உடலில் சுற்றிகொண்ட, உருண்டையான  மனிதர் ஒருவர் உரத்துக் கத்தியபடி ரெமிங்டன் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியவாறு வேகமாக வந்தார். அவருடைய அகலமான முகம் சூரிய ஒளியில் சிவந்துபோய் கிடந்தது. பற்கள் தாறுமாறாக இருந்தபடியால் அவர் பேசியது குளறுபடியாக வெளியே வந்தது. சட்டென்று நின்று, ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் டேவிட்டையும் அவர் சாய்த்த  மரத்தையும் கூர்மையாகப் பார்த்தார். ’யார் அனுமதியுடன் மரத்தை வெட்டினீர்கள்?’ என்றார். காடு அதிரும் சத்தத்தை கேட்டு நண்பர்கள் சூழ்ந்து விட்டார்கள். விஞ்ஞானி திடுக்கிட்டு ’மன்னிக்க வேண்டும். கடந்த எழு வருடங்களாக நான் இங்கே வந்துதான் கிறிஸ்மஸ் மரம் வெட்டுவேன்.’ ’நான் கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா? இந்த இடம் உங்களுக்கு சொந்தமானதா?’ ’இல்லை, ஆனால் நான் இங்கேதான் கிறிஸ்மஸ் மரங்கள் வெட்டினேன்.’ ’ஏழு வருடங்களாக  நீங்களும் நண்பர்களும் மரம்  திருடியிருக்கிறீர்கள்.’ நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நடுங்கத் தொடங்கிவிட்டார்கள்.

டேவிட் டுக்கு ஒருவாறு நிலைமை புரிந்தது. ’ஐயா, எனக்கு இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்று தெரியாதே?’  ’அது எப்படி? இங்கே பலகையில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறதே. கடந்த ஒரு வருடமாக இந்த இடம் எனக்குச் சொந்தம்.’ ’பெரிய தவறு நடந்துவிட்டது, ஐயா. இம்முறை எங்களை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படியான பிழை நடக்காது.’ ’உங்களை எப்படி நம்புவது. மூன்றுபேர் திட்டமிட்டு  மரம் திருட வந்திருக்கிறீர்கள். பார்த்தால் திருடர் மாதிரியே தெரிகிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா மொன்ரானாவில் மரம் திருடுவது பாரதூரமான குற்றம்.’

’தயவுசெய்து சொல்லுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாங்கள் கட்டத் தயாராக இருக்கிறோம். இப்பவே பணத்தை செலுத்தி விடுகிறோம். நாங்கள் விஞ்ஞானிகள். நான் கடல் ஆமைகளைக் காப்பாற்றும் விஞ்ஞானி.’ இப்படிச் சொல்லியபடி டேவிட் தன்னுடைய  அலுவலக அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். இத்தனை நேரமும் அவருடைய நெஞ்சைக் குறிவைத்த துப்பாக்கியை நிமிர்த்தி ஆறுதலாக  அட்டையை வாங்கி எழுத்துக்கூட்டி படித்தார். முகத்தில் பெரிய மாற்றமில்லை.

’உங்கள் நண்பர்களும் விவரங்களை தரட்டும். போலீஸ்காரர் முடிவு செய்வார்.’ சிக்கல் அதிகாமாகிக்கொண்டே போனது. இந்த மனிதருக்கு என்ன தேவை? எதற்காக இப்படி பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். மறுபடியும் துப்பாக்கிக்காரர் பேசினார். ’விஞ்ஞானியான உங்களுக்கு நாட்டின் சட்டம் தெரியும்தானே. மரம் திருடுவது மாநிலச் சட்டத்தை மீறுவது  மட்டுமல்ல;  நாட்டின் சட்டத்தை மீறுவதும் கூட. இதற்கு சிறைத்தண்டனை உண்டு.’

பிரச்சினை என்னவென்றால் மூன்று விஞ்ஞானிகளுக்கும் மன்றாடத் தெரியவில்லை. அவர்கள் தொழில்கள் அப்படி. இப்பொழுது மற்ற விஞ்ஞானிகளும் சேர்ந்துகொண்டு, அழுகை வாசலில் நிற்க, தாங்கள் திருட வரவில்லை. இம்முறை மட்டும் மன்னிக்க வேண்டும் என்று அவரவருக்கு தெரிந்த முறையில் கெஞ்சினார்கள். இறுதியில் துப்பாக்கிக்காரரின்  கண்களில் ஒரு சொட்டு கருணை தெரிந்தது. ‘சரி, நான் மரங்களை காப்பாற்றுகிறேன். நீங்கள் போய் கடல் ஆமைகளை காப்பாற்றுங்கள். என் முடிவு இதுதான். உங்கள் சங்கிலி வாளையும், வெட்டிய மரத்தையும் இங்கே இறக்கி வைத்துவிட்டு போங்கள். இப்பவே ஒரு கிறிஸ்மஸ் மரக்கன்று வாங்கி வந்து அதே இடத்தில் நட்டுவிட்டு வாளையும், மரத்தையும் மீட்டுக்கொண்டு போகலாம். இனிமேல் இந்தப் பக்கம் நான் உங்களை பார்க்கக்கூடாது.’ பெருந்தன்மையுடன் சிரித்தார். ஒரு சுறா மீன் சிரித்ததுபோல இருந்தது.

மூவரும் பாய்ந்து வெளியேறினார்கள். வெறும் 150 டொலர் பெறுமதியான கிறிஸ்மஸ் மரத்துக்கு இந்த மனிதன் துப்பாக்கியை தூக்கி விரட்டிவிட்டான். விஞ்ஞானிகள் என்றதும் எவ்வளவு இளக்காரமாகப் பார்த்தான். மூவரும் தங்கள் தங்கள் யோசனைகளில் குமைந்தார்கள். டேவிட்டுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அதுவும் தன் நண்பர்கள் முன்னிலையில், ஏதோ தலைமைக் கொள்ளைக்காரனை பிடித்ததுபோல நெஞ்சுக்கு நேராக அவன் துப்பாக்கி நீட்டியதை நினைத்தார். கேவலமாகவிருந்தது. அவருடைய நண்பர்கள் வெளியே அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் என்ன நினைத்திருப்பார்களோ?

இரண்டு நண்பர்களும் அவருடன் பல்கலைக்கழகத்தில்  படித்தவர்கள்தான். குர்தி  மயக்க மருந்து துறையில் நிபுணராக கடமையாற்றுகிறார். அவர் வேண்டாமென்று சொல்லியும்  அவருக்கு நல்ல கிறிஸ்மஸ் மரம் இலவசமாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி டேவிட் கூட்டி வந்திருந்தார். வயது 31, கொசோவோ நாட்டுக்காரர். தன் நாட்டின் வயதிலும் பார்க்க தன் வயது அதிகம் என்று பெருமையடித்துக்கொள்வார்.  புதுக் கார் வாங்கினால் அதை ஓட்டிப் பார்ப்பது போல அவருடைய 31ம் பிறந்த தினம் வந்தபோது அந்தப் புதிய வயது  சரியாக வேலை செய்கிறதா என்பதை நாள் முழுக்க பரீட்சித்துப் பார்த்தார் என்று நண்பர்கள் சொல்வார்கள்.  சில வேளைகளில் ஏதாவது தப்பாகச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பார். லூசிக்கு அவரை பிடிக்காது. ஒரு முறை அவர் வீட்டுக்கு விருந்துக்கு போய்விட்டு திரும்பும் சமயம் வாசலில் அவர்கள் பேசிக்கொண்டு விடைபெறும்போதே  கதவை சாத்திவிட்டர். இப்படி ஏதாவது சின்னப் பிழை விடுவாரே ஒழிய  விசுவாசமான நண்பர்.

ஸ்டீவ் உயிர் வேதியியல் துறையில் உயர் பதவியில் இருந்தார். பின்னர் என்ன காரணமோ வேலையை வேண்டாமென்று உதறிவிட்டார். அஞ்சலகத்தில் போய் கையொப்பம் வைக்கும்போதும் தன் பெயரை எழுதி பி.எச்டி என்று பதிய மறக்க மாட்டார். இப்பொழுது உச்சரிப்பு பயிற்சியாளராக பணிபுரிகிறார். அக்கா, தங்கைகளை ஒருவர் பின் ஒருவராக காதலித்தார். பின்னர் இருவரையும் விட்டுவிட்டு தான் ஒருபால் விருப்பினன் என முகப்புத்தகத்தில் அறிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் மரத்து சம்பவத்துக்கு பின்னர் அவர் நட்பை தொடர்வாரோ தெரியாது. முகத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வாகனத்தில் பயணம் செய்கிறார்.

கிறிஸ்மஸ் மரங்கள் விற்கும் கடை வந்ததும் டேவிட் மரக்கன்று தேடி உள்ளே நுழைந்தார். மற்றவர்கள் அலங்காரத்துக்கு வைக்கும் கிறிஸ்மஸ் மரங்களை தங்கள் தங்கள் வீடுகளுக்கு காசு கொடுத்து வாங்கினார்கள்.

திரும்பவும் காட்டுக்கு போனபோது துப்பாக்கிகாரரை காணவில்லை. அவர் வேறு திருடர்களை பிடிக்கப் போயிருக்கலாம். ஆனால் மரமும், சங்கிலி வாளும் கவனிப்பாரின்றி கிடந்தன. வாக்கு கொடுத்தபடி கிறிஸ்மஸ் மரக்கன்றை நட்டுவிட்டு, வெட்டிய கிறிஸ்மஸ் மரத்தையும், சங்கிலி வாளையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பினார்கள். ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

                              *                                           *

கதை இங்கே முடியவேண்டும். ஆனால் முடியவில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

லூசியை அழகி என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு அழகியாக வர விரும்பும் முகம் இருந்தது. சமீபத்தில் டேவிட்டுக்கு பதவி உயர்வு கிடைத்தபோது அவருக்குத் தெரியாமல் ரகஸ்யமாக அவர்கள் நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து கணவனை ஆச்சரியப்படுத்தினார். மிக நல்ல மனைவி, ஆனால் அபூர்வமாக எப்பவாவது கோபம் வரும்போது ஆக மலிவான இரண்டு கோப்பைகளை தேடியெடுத்து போட்டு உடைப்பார்.

லூசிக்கு கிறிஸ்மஸ் மரம் நன்றாகப் பிடித்துக்கொண்டது. கணவனும், மனைவியும் மகனுமாக  மரத்தை சோடித்தார்கள். அன்றிரவு சீன உணவகத்திலிருந்து வரவழைத்த உணவை கிறிஸ்மஸ் மரத்துக்கு கீழே அமர்ந்து உண்டார்கள்.

அடுத்த நாள் காலை டேவிட் வழக்கம்போல அலுவலகத்துக்கு புறப்பட்டு போய்விட்டார். லூசி மகனை குழந்தைகள் காப்பகத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். பின்னர் அன்று முடிக்கவேண்டிய கம்புயூட்டர் வரைபடங்களை செய்து அனுப்பினார். வீட்டை சுத்தமாக்கினார். துணிகளை சலவை யந்திரத்தில் போட்டார். அஞ்சல் பெட்டியில் சேகரமான கடிதங்களை எடுத்து வந்து மேசையில் வைத்தார். முதல் நாள் வாங்கிய சீன உணவு  கொஞ்சம் மீதம் இருந்தது. ஒரு கோழிக்கால் சூப்  செய்தார். காப்பகத்துக்கு  போய் மகனை அழைத்து வந்தார். அவருடைய மனம் அலை பாய்ந்தது. நிம்மதி போய்விட்டது. எப்படி யோசித்தாலும் மனம் ஓர் இடத்தில் வந்து நின்றது, மேலே நகரவில்லை.

நாற்காலியை  இழுத்து வரவேற்பு அறையின் நடுவில் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். அப்படித்தான் அவர் மனதை அமைதிப்படுத்துவார். பக்கத்தில் தரையில் உட்கார்ந்து மகன் புத்தகப் பக்கங்களை திருப்பி விளையாடினான். ஒவ்வொரு பக்கம் புரட்டும் போதும் ஒரு புது மிருகம் எழும்பி நின்று சத்தம் போடும். அவனைப் பார்க்க பார்க்க லூசிக்கு துயரம் பொங்கியது. வாய்விட்டு அழுதார். மகனை எடுத்து மடியில் வைத்து கொஞ்சினார். அவன் தாயாரை நோக்கி ஒன்றுமே புரியாமல் கன்னத்தை தடவினான். அவனுடைய சின்ன விரல்கள் கண்ணீரில் நனைந்தன. அவன் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.

லூசிக்கு தன்னுடைய அம்மாவின் யோசனை வந்தது. அம்மாவுக்கு தொலைபேசினார். அவர் என்ன சொல்வார் என்று லூசியால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. லூசி சொன்னதில் தாயார் பாதியைத்தான்  கேட்டார். உடனேயே குழறத் தொடங்கினார். ’நான் உனக்கு சொன்னேனே. விஞ்ஞானிகளை நம்பக்கூடாது என்று. இதுதான் எனக்கும் நடந்தது. உன் அப்பா உனக்கு மூன்று வயது நடந்தபோது ஒருவித காரணமும் இல்லாமல் திடீரென்று மறைந்தார். நான் உனக்குத் தந்த  ஆலோசனைகளை நீ எப்பவும் மதித்தது கிடையாது. இப்ப ஒன்றுக்கும் யோசியாதை. குழந்தையை தூக்கிக்கொண்டு உடனே புறப்படு. சிலந்தி தான் உண்டாக்கிய நூலில் தொங்குவதுபோல நீ தொங்கிக்கொண்டு இருக்கிறாய். தேவை இல்லை.  உன்னுடைய அறை அப்படியே இருக்கிறது. நான் இருக்கிறேன், நீ இங்கே வா. நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.’

லூசி தனக்கு வேண்டிய அத்தியாவசியமான பொருள்களை ஒரு சூட்கேசில் அடுக்கினார். இன்னொடு பெட்டியில் குழந்தையின் சாமான்களை  அடைத்தார். இரண்டுக்கும் நடுவில் ஒரு கதிரையில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினார்.  கிறிஸ்மஸ் மரம் அழகாக அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகள் எரிந்து நூர்ந்து மறுபடியும் எரிந்தன. மகனை பார்க்க லூசிக்கு மறுபடியும் துக்கம் பொங்கி வந்தது. அவனை அணைத்துக்கொண்டு பேசினார். ‘நீ இனிமேல் தகப்பன் இல்லாமல் வாழப்பழக வேண்டும். நான் அப்படித்தான் வளர்ந்தேன். துணிவாக இரு’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையை தூக்கி கொஞ்சினார். அது புரியாமல் மிரள மிரள விழித்தது.

டேவிட் வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி பிந்தி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். எப்பவும் அவர் கிளம்பத் தயாராகும் போதுதான் தலைமைச் செயலகத்திலிருந்து முக்கியமான தகவல் ஏதாவது வரும். கடந்த வருடங்களிலும் பார்க்க நடப்பு வருடத்தில் மீன் வலையில் மாட்டி இறக்கும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒரு பத்திரிகை விளக்கம் கேட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சிந்தித்தபடி வேகமாக காரை ஓட்டினார்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. டேவிட் இறங்கி உள்ளே நுழைந்தார். மனைவியின் கோலத்தைப் பார்த்து ஒரு கணம் திகைத்து அப்படியே நின்றார். லூசிக்கு அவரைக் கண்டதும் கோபத்தை மீறி அழுகைதான் வந்தது. ‘என்ன? என்ன நடந்தது?’ டேவிட் பதறினார்.

’எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது. இனிமேல் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு இரண்டு வாழ்க்கை தேவையில்லை. எனக்கு ஒரு வித தடையும் இல்லை. நான் அம்மா வீட்டுக்கு போறேன்’ என்றபடி லூசி எழும்பினார்.

‘என்ன பேசுகிறீர். ஏன் அம்மா வீட்டுக்கு போகவேண்டும்? என்ன நடந்தது? சொன்னால்தானே தெரியும். விளையாடுகிறீரா?’

’விளையாட்டா? நான் மணத்தை முறிக்கப் போறேன்.’

’பரவாயில்லை. என்ன குற்றம் என்றாவது சொல்லலாம். இல்லையா?’

’நீங்கள் இனி இன்னொருத்தியுடன் வாழ்வதுதான் முறை. அம்மாவுடன் பேசிவிட்டேன். அங்கேதான் நானும் பிள்ளையும் போகப் போகிறோம்.’

’இன்னொருத்தியா? இது என்ன கூத்து. அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.’  

’விளையாட்டாய் பேசினால் போதுமா? உங்களுடன் கதைப்பதில் ஒருவித  பிரயோசனமும் இல்லை.’ லூசி சூட்கேசை தூக்கினார்.

துப்பாக்கிக்காரனுடைய சம்பவத்துக்கு பிறகு டேவிட்டுக்கு  நன்றாக மன்றாடுவதில் பயிற்சி இருந்தது. கெஞ்சும் குரலில் கேட்டார், ’அந்த இன்னொருத்தி யார் என்றாவது சொல்லிவிட்டு போகலாமே. நான் நிறுத்த மாட்டேன்.’

’சரி, சொல்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஒரு கிறிஸ்மஸ் மரம் காட்டிலிருந்து வெட்டிக்கொண்டு வந்தீர்கள். அது இங்கே சோடிப்போடு இருக்கிறது. உங்கள் கோட்டுப் பையில் நேற்று இன்னொரு கிறிஸ்மஸ் மரம் வாங்கிய ரசீது காணப்பட்டதே. அது யாருக்கு, அவளுக்குத்தானே?’

நூறு மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழும் கடல் ஆமைகளின் வழித்தடத்தை ஆராய்ந்து,  அவை அடுத்து எந்தப் பாதையில் போகும், எங்கே முட்டை இடும், அதற்கு எத்தனை நாட்கள் செல்லும்  என்பதை முன்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வல்லமை படைத்த  கடல் ஆமை விஞ்ஞானி, அரைக் கணம் திகிலடித்து சும்மா நின்றார். பின்னர் அவர் வாய், பட்டனை அழுத்தினால் கார் பின்கதவு மெள்ள மெள்ள திறப்பதுபோல,  ஆவென்று திறக்க ஆரம்பித்தது.

அது மூட முன்னர் கதை முடிந்தது.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2023 04:26

January 24, 2023

கடல் ஆமை விஞ்ஞானி

கடல் ஆமை விஞ்ஞானி

அ.முத்துலிங்கம்

இது ஓர் உண்மைக் கதை. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் நடந்தது. அவருடைய பெயர் டேவிட் (பொய்ப் பெயர்). அமெரிக்காவில் கடல் ஆமைகள் ஆராய்ச்சி மையம் ஒன்றில் விஞ்ஞானியாக  பணியாற்றுகிறார். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத முடிவில் தவறாமல் காட்டுக்குச் சென்று ஒரு கிறிஸ்மஸ் மரம் வெட்டி வருவார். அவரும் மனைவியும் கிறிஸ்மஸ் மரத்தை சோடித்து வண்ணமயமான மின்விளக்குகள் பூட்டி கொண்டாடுவார்கள். இந்த வருடம் விசேடமானது. அவர்களுடன் மூன்று வயது மகனும் சேர்ந்துகொள்வான். மனைவியின் பெயர் லூசி (உண்மையான பெயர்), மணமுடித்து ஏழு வருடங்கள் ஆகின்றன.  லூசி வீட்டிலிருந்தபடியே கம்புயூட்டர் வரைபடங்களை ஒப்பந்தத்துக்கு  வரைந்து நல்ல வருமானம் ஈட்டினார். மகிழ்ச்சியான குடும்பம். 

இம்முறை, அதாவது நவம்பர் 2022ம் வருடம், டேவிட்டும் அவருடைய இரண்டு நண்பர்களும் காட்டுக்குள் கிறிஸ்மஸ் மரம் வெட்டப் போனார்கள். மூன்று மரங்கள் வெட்டுவது என்று திட்டம். டேவிட் பல வருடங்களாக இந்தக் காட்டில் மரம் வெட்டுகிறார். அவருடைய நண்பர்களுக்கு இது முதல் முறை. நல்ல கிறிஸ்மஸ் மரங்களை இலவசமாக வெட்டலாம் என்று சொல்லி அவர்களை அழைத்து வந்திருந்தார். டேவிட் நல்ல அழகான, நேர்த்தியான மரம் ஒன்றை தெரிந்துவிட்டு அதை வெட்ட முன்னர் நண்பர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான மரங்களை தேர்வு செய்யச் சொன்னார். அவர்கள் இடத்தை விட்டு அகன்றதும், தன்னுடைய சங்கிலி வாளை எடுத்து டேவிட் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். வெட்டிய பின்னர் மரம் இன்னும் அழகாகவும், அவர் வீட்டுக்கு அளவானதாகவும்  இருந்தது. லூசிக்கு பிடிக்கும் என மனதில் நினைத்துக் கொண்டார். மரத்தை தூக்கி தன்னுடைய பொதி சுமக்கும்  வாகனத்தில் ஏற்றினார்.

நண்பர்களைத் தேடிய போது, கறுப்பு பூட்ஸ்போட்ட,  காட்டு வாசிகளின் போர்வையை எறிந்து உடலில் சுற்றிகொண்ட, உருண்டையான  மனிதர் ஒருவர் உரத்துக் கத்தியபடி ரெமிங்டன் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியவாறு வேகமாக வந்தார். அவருடைய அகலமான முகம் சூரிய ஒளியில் சிவந்துபோய் கிடந்தது. பற்கள் தாறுமாறாக இருந்தபடியால் அவர் பேசியது குளறுபடியாக வெளியே வந்தது. சட்டென்று நின்று, ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் டேவிட்டையும் அவர் சாய்த்த  மரத்தையும் கூர்மையாகப் பார்த்தார். ’யார் அனுமதியுடன் மரத்தை வெட்டினீர்கள்?’ என்றார். காடு அதிரும் சத்தத்தை கேட்டு நண்பர்கள் சூழ்ந்து விட்டார்கள். விஞ்ஞானி திடுக்கிட்டு ’மன்னிக்க வேண்டும். கடந்த எழு வருடங்களாக நான் இங்கே வந்துதான் கிறிஸ்மஸ் மரம் வெட்டுவேன்.’ ’நான் கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலா? இந்த இடம் உங்களுக்கு சொந்தமானதா?’ ’இல்லை, ஆனால் நான் இங்கேதான் கிறிஸ்மஸ் மரங்கள் வெட்டினேன்.’ ’ஏழு வருடங்களாக  நீங்களும் நண்பர்களும் மரம்  திருடியிருக்கிறீர்கள்.’ நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நடுங்கத் தொடங்கிவிட்டார்கள்.

டேவிட் டுக்கு ஒருவாறு நிலைமை புரிந்தது. ’ஐயா, எனக்கு இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்று தெரியாதே?’  ’அது எப்படி? இங்கே பலகையில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறதே. கடந்த ஒரு வருடமாக இந்த இடம் எனக்குச் சொந்தம்.’ ’பெரிய தவறு நடந்துவிட்டது, ஐயா. இம்முறை எங்களை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படியான பிழை நடக்காது.’ ’உங்களை எப்படி நம்புவது. மூன்றுபேர் திட்டமிட்டு  மரம் திருட வந்திருக்கிறீர்கள். பார்த்தால் திருடர் மாதிரியே தெரிகிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா மொன்ரானாவில் மரம் திருடுவது பாரதூரமான குற்றம்.’

’தயவுசெய்து சொல்லுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாங்கள் கட்டத் தயாராக இருக்கிறோம். இப்பவே பணத்தை செலுத்தி விடுகிறோம். நாங்கள் விஞ்ஞானிகள். நான் கடல் ஆமைகளைக் காப்பாற்றும் விஞ்ஞானி.’ இப்படிச் சொல்லியபடி டேவிட் தன்னுடைய  அலுவலக அடையாள அட்டையை எடுத்து நீட்டினார். இத்தனை நேரமும் அவருடைய நெஞ்சைக் குறிவைத்த துப்பாக்கியை நிமிர்த்தி ஆறுதலாக  அட்டையை வாங்கி எழுத்துக்கூட்டி படித்தார். முகத்தில் பெரிய மாற்றமில்லை.

’உங்கள் நண்பர்களும் விவரங்களை தரட்டும். போலீஸ்காரர் முடிவு செய்வார்.’ சிக்கல் அதிகாமாகிக்கொண்டே போனது. இந்த மனிதருக்கு என்ன தேவை? எதற்காக இப்படி பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். மறுபடியும் துப்பாக்கிக்காரர் பேசினார். ’விஞ்ஞானியான உங்களுக்கு நாட்டின் சட்டம் தெரியும்தானே. மரம் திருடுவது மாநிலச் சட்டத்தை மீறுவது  மட்டுமல்ல;  நாட்டின் சட்டத்தை மீறுவதும் கூட. இதற்கு சிறைத்தண்டனை உண்டு.’

பிரச்சினை என்னவென்றால் மூன்று விஞ்ஞானிகளுக்கும் மன்றாடத் தெரியவில்லை. அவர்கள் தொழில்கள் அப்படி. இப்பொழுது மற்ற விஞ்ஞானிகளும் சேர்ந்துகொண்டு, அழுகை வாசலில் நிற்க, தாங்கள் திருட வரவில்லை. இம்முறை மட்டும் மன்னிக்க வேண்டும் என்று அவரவருக்கு தெரிந்த முறையில் கெஞ்சினார்கள். இறுதியில் துப்பாக்கிக்காரரின்  கண்களில் ஒரு சொட்டு கருணை தெரிந்தது. ‘சரி, நான் மரங்களை காப்பாற்றுகிறேன். நீங்கள் போய் கடல் ஆமைகளை காப்பாற்றுங்கள். என் முடிவு இதுதான். உங்கள் சங்கிலி வாளையும், வெட்டிய மரத்தையும் இங்கே இறக்கி வைத்துவிட்டு போங்கள். இப்பவே ஒரு கிறிஸ்மஸ் மரக்கன்று வாங்கி வந்து அதே இடத்தில் நட்டுவிட்டு வாளையும், மரத்தையும் மீட்டுக்கொண்டு போகலாம். இனிமேல் இந்தப் பக்கம் நான் உங்களை பார்க்கக்கூடாது.’ பெருந்தன்மையுடன் சிரித்தார். ஒரு சுறா மீன் சிரித்ததுபோல இருந்தது.

மூவரும் பாய்ந்து வெளியேறினார்கள். வெறும் 150 டொலர் பெறுமதியான கிறிஸ்மஸ் மரத்துக்கு இந்த மனிதன் துப்பாக்கியை தூக்கி விரட்டிவிட்டான். விஞ்ஞானிகள் என்றதும் எவ்வளவு இளக்காரமாகப் பார்த்தான். மூவரும் தங்கள் தங்கள் யோசனைகளில் குமைந்தார்கள். டேவிட்டுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. அதுவும் தன் நண்பர்கள் முன்னிலையில், ஏதோ தலைமைக் கொள்ளைக்காரனை பிடித்ததுபோல நெஞ்சுக்கு நேராக அவன் துப்பாக்கி நீட்டியதை நினைத்தார். கேவலமாகவிருந்தது. அவருடைய நண்பர்கள் வெளியே அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் என்ன நினைத்திருப்பார்களோ?

இரண்டு நண்பர்களும் அவருடன் பல்கலைக்கழகத்தில்  படித்தவர்கள்தான். குர்தி  மயக்க மருந்து துறையில் நிபுணராக கடமையாற்றுகிறார். அவர் வேண்டாமென்று சொல்லியும்  அவருக்கு நல்ல கிறிஸ்மஸ் மரம் இலவசமாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி டேவிட் கூட்டி வந்திருந்தார். வயது 31, கொசோவோ நாட்டுக்காரர். தன் நாட்டின் வயதிலும் பார்க்க தன் வயது அதிகம் என்று பெருமையடித்துக்கொள்வார்.  புதுக் கார் வாங்கினால் அதை ஓட்டிப் பார்ப்பது போல அவருடைய 31ம் பிறந்த தினம் வந்தபோது அந்தப் புதிய வயது  சரியாக வேலை செய்கிறதா என்பதை நாள் முழுக்க பரீட்சித்துப் பார்த்தார் என்று நண்பர்கள் சொல்வார்கள்.  சில வேளைகளில் ஏதாவது தப்பாகச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பார். லூசிக்கு அவரை பிடிக்காது. ஒரு முறை அவர் வீட்டுக்கு விருந்துக்கு போய்விட்டு திரும்பும் சமயம் வாசலில் அவர்கள் பேசிக்கொண்டு விடைபெறும்போதே  கதவை சாத்திவிட்டர். இப்படி ஏதாவது சின்னப் பிழை விடுவாரே ஒழிய  விசுவாசமான நண்பர்.

ஸ்டீவ் உயிர் வேதியியல் துறையில் உயர் பதவியில் இருந்தார். பின்னர் என்ன காரணமோ வேலையை வேண்டாமென்று உதறிவிட்டார். அஞ்சலகத்தில் போய் கையொப்பம் வைக்கும்போதும் தன் பெயரை எழுதி பி.எச்டி என்று பதிய மறக்க மாட்டார். இப்பொழுது உச்சரிப்பு பயிற்சியாளராக பணிபுரிகிறார். அக்கா, தங்கைகளை ஒருவர் பின் ஒருவராக காதலித்தார். பின்னர் இருவரையும் விட்டுவிட்டு தான் ஒருபால் விருப்பினன் என முகப்புத்தகத்தில் அறிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் மரத்து சம்பவத்துக்கு பின்னர் அவர் நட்பை தொடர்வாரோ தெரியாது. முகத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வாகனத்தில் பயணம் செய்கிறார்.

கிறிஸ்மஸ் மரங்கள் விற்கும் கடை வந்ததும் டேவிட் மரக்கன்று தேடி உள்ளே நுழைந்தார். மற்றவர்கள் அலங்காரத்துக்கு வைக்கும் கிறிஸ்மஸ் மரங்களை தங்கள் தங்கள் வீடுகளுக்கு காசு கொடுத்து வாங்கினார்கள்.

திரும்பவும் காட்டுக்கு போனபோது துப்பாக்கிகாரரை காணவில்லை. அவர் வேறு திருடர்களை பிடிக்கப் போயிருக்கலாம். ஆனால் மரமும், சங்கிலி வாளும் கவனிப்பாரின்றி கிடந்தன. வாக்கு கொடுத்தபடி கிறிஸ்மஸ் மரக்கன்றை நட்டுவிட்டு, வெட்டிய கிறிஸ்மஸ் மரத்தையும், சங்கிலி வாளையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பினார்கள். ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

                              *                                           *

கதை இங்கே முடியவேண்டும். ஆனால் முடியவில்லை. இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

லூசியை அழகி என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு அழகியாக வர விரும்பும் முகம் இருந்தது. சமீபத்தில் டேவிட்டுக்கு பதவி உயர்வு கிடைத்தபோது அவருக்குத் தெரியாமல் ரகஸ்யமாக அவர்கள் நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்து கணவனை ஆச்சரியப்படுத்தினார். மிக நல்ல மனைவி, ஆனால் அபூர்வமாக எப்பவாவது கோபம் வரும்போது ஆக மலிவான இரண்டு கோப்பைகளை தேடியெடுத்து போட்டு உடைப்பார்.

லூசிக்கு கிறிஸ்மஸ் மரம் நன்றாகப் பிடித்துக்கொண்டது. கணவனும், மனைவியும் மகனுமாக  மரத்தை சோடித்தார்கள். அன்றிரவு சீன உணவகத்திலிருந்து வரவழைத்த உணவை கிறிஸ்மஸ் மரத்துக்கு கீழே அமர்ந்து உண்டார்கள்.

அடுத்த நாள் காலை டேவிட் வழக்கம்போல அலுவலகத்துக்கு புறப்பட்டு போய்விட்டார். லூசி மகனை குழந்தைகள் காப்பகத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். பின்னர் அன்று முடிக்கவேண்டிய கம்புயூட்டர் வரைபடங்களை செய்து அனுப்பினார். வீட்டை சுத்தமாக்கினார். துணிகளை சலவை யந்திரத்தில் போட்டார். அஞ்சல் பெட்டியில் சேகரமான கடிதங்களை எடுத்து வந்து மேசையில் வைத்தார். முதல் நாள் வாங்கிய சீன உணவு  கொஞ்சம் மீதம் இருந்தது. ஒரு கோழிக்கால் சூப்  செய்தார். காப்பகத்துக்கு  போய் மகனை அழைத்து வந்தார். அவருடைய மனம் அலை பாய்ந்தது. நிம்மதி போய்விட்டது. எப்படி யோசித்தாலும் மனம் ஓர் இடத்தில் வந்து நின்றது, மேலே நகரவில்லை.

நாற்காலியை  இழுத்து வரவேற்பு அறையின் நடுவில் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். அப்படித்தான் அவர் மனதை அமைதிப்படுத்துவார். பக்கத்தில் தரையில் உட்கார்ந்து மகன் புத்தகப் பக்கங்களை திருப்பி விளையாடினான். ஒவ்வொரு பக்கம் புரட்டும் போதும் ஒரு புது மிருகம் எழும்பி நின்று சத்தம் போடும். அவனைப் பார்க்க பார்க்க லூசிக்கு துயரம் பொங்கியது. வாய்விட்டு அழுதார். மகனை எடுத்து மடியில் வைத்து கொஞ்சினார். அவன் தாயாரை நோக்கி ஒன்றுமே புரியாமல் கன்னத்தை தடவினான். அவனுடைய சின்ன விரல்கள் கண்ணீரில் நனைந்தன. அவன் ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.

லூசிக்கு தன்னுடைய அம்மாவின் யோசனை வந்தது. அம்மாவுக்கு தொலைபேசினார். அவர் என்ன சொல்வார் என்று லூசியால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. லூசி சொன்னதில் தாயார் பாதியைத்தான்  கேட்டார். உடனேயே குழறத் தொடங்கினார். ’நான் உனக்கு சொன்னேனே. விஞ்ஞானிகளை நம்பக்கூடாது என்று. இதுதான் எனக்கும் நடந்தது. உன் அப்பா உனக்கு மூன்று வயது நடந்தபோது ஒருவித காரணமும் இல்லாமல் திடீரென்று மறைந்தார். நான் உனக்குத் தந்த  ஆலோசனைகளை நீ எப்பவும் மதித்தது கிடையாது. இப்ப ஒன்றுக்கும் யோசியாதை. குழந்தையை தூக்கிக்கொண்டு உடனே புறப்படு. சிலந்தி தான் உண்டாக்கிய நூலில் தொங்குவதுபோல நீ தொங்கிக்கொண்டு இருக்கிறாய். தேவை இல்லை.  உன்னுடைய அறை அப்படியே இருக்கிறது. நான் இருக்கிறேன், நீ இங்கே வா. நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.’

லூசி தனக்கு வேண்டிய அத்தியாவசியமான பொருள்களை ஒரு சூட்கேசில் அடுக்கினார். இன்னொடு பெட்டியில் குழந்தையின் சாமான்களை  அடைத்தார். இரண்டுக்கும் நடுவில் ஒரு கதிரையில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினார்.  கிறிஸ்மஸ் மரம் அழகாக அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகள் எரிந்து நூர்ந்து மறுபடியும் எரிந்தன. மகனை பார்க்க லூசிக்கு மறுபடியும் துக்கம் பொங்கி வந்தது. அவனை அணைத்துக்கொண்டு பேசினார். ‘நீ இனிமேல் தகப்பன் இல்லாமல் வாழப்பழக வேண்டும். நான் அப்படித்தான் வளர்ந்தேன். துணிவாக இரு’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையை தூக்கி கொஞ்சினார். அது புரியாமல் மிரள மிரள விழித்தது.

டேவிட் வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி பிந்தி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். எப்பவும் அவர் கிளம்பத் தயாராகும் போதுதான் தலைமைச் செயலகத்திலிருந்து முக்கியமான தகவல் ஏதாவது வரும். கடந்த வருடங்களிலும் பார்க்க நடப்பு வருடத்தில் மீன் வலையில் மாட்டி இறக்கும் கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒரு பத்திரிகை விளக்கம் கேட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சிந்தித்தபடி வேகமாக காரை ஓட்டினார்.

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. டேவிட் இறங்கி உள்ளே நுழைந்தார். மனைவியின் கோலத்தைப் பார்த்து ஒரு கணம் திகைத்து அப்படியே நின்றார். லூசிக்கு அவரைக் கண்டதும் கோபத்தை மீறி அழுகைதான் வந்தது. ‘என்ன? என்ன நடந்தது?’ டேவிட் பதறினார்.

’எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது. இனிமேல் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு இரண்டு வாழ்க்கை தேவையில்லை. எனக்கு ஒரு வித தடையும் இல்லை. நான் அம்மா வீட்டுக்கு போறேன்’ என்றபடி லூசி எழும்பினார்.

‘என்ன பேசுகிறீர். ஏன் அம்மா வீட்டுக்கு போகவேண்டும்? என்ன நடந்தது? சொன்னால்தானே தெரியும். விளையாடுகிறீரா?’

’விளையாட்டா? நான் மணத்தை முறிக்கப் போறேன்.’

’பரவாயில்லை. என்ன குற்றம் என்றாவது சொல்லலாம். இல்லையா?’

’நீங்கள் இனி இன்னொருத்தியுடன் வாழ்வதுதான் முறை. அம்மாவுடன் பேசிவிட்டேன். அங்கேதான் நானும் பிள்ளையும் போகப் போகிறோம்.’

’இன்னொருத்தியா? இது என்ன கூத்து. அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.’  

’விளையாட்டாய் பேசினால் போதுமா? உங்களுடன் கதைப்பதில் ஒருவித  பிரயோசனமும் இல்லை.’ லூசி சூட்கேசை தூக்கினார்.

துப்பாக்கிக்காரனுடைய சம்பவத்துக்கு பிறகு டேவிட்டுக்கு  நன்றாக மன்றாடுவதில் பயிற்சி இருந்தது. கெஞ்சும் குரலில் கேட்டார், ’அந்த இன்னொருத்தி யார் என்றாவது சொல்லிவிட்டு போகலாமே. நான் நிறுத்த மாட்டேன்.’

’சரி, சொல்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஒரு கிறிஸ்மஸ் மரம் காட்டிலிருந்து வெட்டிக்கொண்டு வந்தீர்கள். அது இங்கே சோடிப்போடு இருக்கிறது. உங்கள் கோட்டுப் பையில் நேற்று இன்னொரு கிறிஸ்மஸ் மரம் வாங்கிய ரசீது காணப்பட்டதே. அது யாருக்கு, அவளுக்குத்தானே?’

நூறு மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழும் கடல் ஆமைகளின் வழித்தடத்தை ஆராய்ந்து,  அவை அடுத்து எந்தப் பாதையில் போகும், எங்கே முட்டை இடும், அதற்கு எத்தனை நாட்கள் செல்லும்  என்பதை முன்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வல்லமை படைத்த  கடல் ஆமை விஞ்ஞானி, அரைக் கணம் திகிலடித்து சும்மா நின்றார். பின்னர் அவர் வாய், பட்டனை அழுத்தினால் கார் பின்கதவு மெள்ள மெள்ள திறப்பதுபோல,  ஆவென்று திறக்க ஆரம்பித்தது.

அது மூட முன்னர் கதை முடிந்தது.

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2023 04:55

October 31, 2022

கல்வீட்டுக்காரி

கல்வீட்டுக்காரி

அ.முத்துலிங்கம்

தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன.  அவர் ஒன்றும் சொந்த மனைவி சாப்பிடுவதற்கு எதிரியல்ல. நல்ல மனுசர்.  எதற்காக அவரிடமிருந்து மனைவி மறைத்தார்? பசிக்கு சாப்பிடுவதும் ஒரு குற்றமா? ’நான் உம்முடைய புருசன்தானே. இதிலே என்ன ஒளிவுமறைவு’ என்றார். ஒரு வருடமா? இரண்டு வருடமா? 20 வருடங்களாக அவரிடமிருந்து மரகதசவுந்தரி ஒளித்திருக்கிறார்.  ஒரு நாளைக்கு மனைவியிடம் காரணத்தை கேட்கவேண்டும் என்று நினைத்தார். அந்த நாள் வரவே இல்லை. அவர் சிலநாட்களிலேயே இறந்துபோனார்.

மரகதசவுந்தரி அன்று சமையல்காரி சமைத்த உணவை இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்தார்.  கணவனுக்கும் மேசையில் பரிமாறினார். பிறகு வழக்கம்போல தனக்கு பசிக்கவில்லை, பின்னர் சாப்பிடுவதாகச் சொன்னார். கணவரும் சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். மரகதசவுந்தரி வாழையிலையிலோ பிளேட்டிலோ உண்பதில்லை. ஒரு குண்டானில் சோறு, கூட்டு, குழம்பு, பாரைக் கருவாட்டுப் பொரியல் என்று நிறைத்து, மணிக்கட்டுவரைக்கும் கை சோற்றுக்குள் புதைந்துபோக  குழைத்தார்.  அந்த நேரம் பார்த்து ஏதோ காரியமாக சமையலறைக்குள்  கணவர் நுழைந்தார். மரகதசவுந்தரி ஒரு காலை மடித்து, ஒரு காலை நீட்டி தரையிலே குண்டானுக்கு முன் உருட்டிய சாதத்துடன் அமர்ந்திருந்தார். கணவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அரசரத்தினம் பரம்பரை பணக்காரர். அவருக்கு வன்னியில் நெல் வயல்கள், பளையில் தென்னந் தோப்புகள், நீர்வேலியில் வாழைத் தோட்டங்கள் என பலதும் இருந்தன. வேலைக்காரர்களுக்கும், எடுபிடிகளுக்கும் குறைவில்லை. பணக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. இவர் நல்லவர்.  பல வருடங்களுக்கு முன்னர் மரகதசவுந்தரியை ஒருநாள் கோயில் கூட்டத்திலே பார்த்தார்.  கும்பலிலே அந்தப் பெண் உட்கார்ந்திருந்தபோது சாதாரணமாகத்தான் தென்பட்டாள். அவள் கண்கள் மயிலிறகில் இருக்கும் கண்கள் போல அகலமாக இருந்தன. எழுந்து நடக்கத் தொடங்கியவுடன் அவளுடைய சின்ன இடை அப்படியும் இப்படியுமாக ஆடியது. அது விநோதமாக இருந்தது. அவளைத்தான் மணமுடிப்பேன் என்று வீட்டில் சொல்லிவிட்டார். மரகதசவுந்தரி வசதியில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவளாதலால் ஒருவித தடங்கலும் இன்றி திருமணம் சிறப்பாக நடந்தது.

திருமண நாள் இரவு தம்பதிகளை உட்காரவைத்து உணவு பரிமாறினார்கள். மரகதசவுந்தரிக்கு காதுகளில் பசி ஆணை ஒலித்தபடியே இருக்கும்.  அம்மா அவளை அடிக்கடி திட்டுவார். ’உனக்கு இரண்டு சகோதரங்கள். நீயே எல்லாத்தையும் விழுங்கிவிடுகிறாய். குண்டோதரன் வயிற்றில் புகுந்த வடவைத்தீபோல உன் வயிற்றிலும் பசி அணைக்கமுடியாமல் எரிகிறது.  மணமுடித்தால் உன் கணவன் உன்னை நாலு நாளில் துரத்திவிடுவான்.’ தாயாரின் எச்சரிக்கையை மரகதசவுந்தரி நினைத்துக் கொண்டாள். தம்பதிகளுக்கு இலை படைத்து ஒரே அளவு பதார்த்தங்களை வைத்தார்கள்.  இருவரும் சாப்பிடுவதை உன்னிப்பாகக் கவனித்தபடியே சுற்றத்தார் சுற்றி நின்றனர். கணவர் இலையில் படைத்த அத்தனை உணவையும் தின்று தீர்த்தார். மரகதசவுந்தரி நாலு மடங்கு சாப்பிடக் கூடியவள். ஆனாலும் பசியை அடக்கிக்கொண்டு தன் உயிரை விடுவதுபோல பாதி உணவை இலையில் விட்டாள். சுற்றத்தாருக்கு  மிக்க மகிழ்ச்சி. அம்மா அடிக்கடி சொல்லும் வடவைத்தீயை  அவள் வென்றுவிட்டாள்.  

முதல் இரவுக்கு அவர்களைஅறையின் உள்ளே  தள்ளிப் பூட்டினார்கள். பிரமிப்பூட்டும் பெரிய வீடு.  வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தின் ஒரு கரையில் நின்று பார்த்தால் எதிர் கரையில் மனிதர்கள் சின்னனாகத் தெரிவார்களாம். என்ன அலங்காரமான அறை. ஆனால் பசி அவளை ஒன்றையும் அனுபவிக்க விடவில்லை. கணவர் அவள் இடுப்பை  சுற்றி வளைத்தபோது காதல் மூளவில்லை, அங்கே பசிக்கனல்தான் மூண்டது. இடது கையால் கன்னத்தை அசையாமல் பிடித்து, இடம் தேர்வு செய்து முத்தம் கொடுத்தார் கணவர்.  ஒரு மாதிரி முதல் இரவு கழிந்து கணவர் தூங்கியதும் தட்டிலே மீந்து கிடந்த பலகாரங்களை அள்ளி வாயில் திணித்து பசியை ஓர் அளவுக்கு தணித்துக்கொண்டாள்.

மரகதசவுந்தரிக்கு இரண்டு மகள்கள். ஒருத்திக்கு 16 வயது, பெயர் இளவரசி; குந்தவைக்கு 14 வயது. மகள்களைக் கண்டிப்புடன் வளர்த்தார்.  கணவருடைய மரணப்படுக்கை ஆணைப்படி இளவரசியை அமெரிக்க மிஷன் உடுவில் மகளிர் கல்லூரியில் படிப்பித்து அங்கேயே ஓர் ஆசிரியை ஆக்கவேண்டும் என்பது அவர் லட்சியம்.  தெற்காசியாவிலேயே முதல் இடத்தில் இருக்கும்  வதிவிட வசதி கொண்ட கல்லூரியில் படிப்பதென்பது எத்தனை மதிப்பான காரியம்.

வழுவழுப்பான இரண்டு பெரும் தூண்களுக்கு மத்தியில் அமைந்த விறாந்தையில் தேக்கு மரத்தில் செய்து மெத்தை போட்ட ஒரு சாய்வு நாற்காலி இருந்தது. அதிலே வீற்றிருந்து மரகதசவுந்தரி வீட்டு தோட்டத்தை ரசிப்பார். கேட்டின் இரு பக்கமும் போகன்வில்லா பூத்துக் குலுங்கும். மாமரங்களும், பலா மரங்களும், வேப்ப மரங்களும்  இலுப்பை மரமும் நீண்டு வளர்ந்திருக்கும். இலுப்பை பூ பட்டுப்போல விழுந்து தரையை மறைக்கும். இலுப்பை பூ தாகத்துக்கும் சாப்பிடலாம்; பசிக்கும் சாப்பிடலாம்.  சிறுவயதில் தான் பசிதாங்காமல் இலுப்பைப் பழங்களாகத் தின்றது நினைவுக்கு வந்தது. 100 இலுப்பை கொட்டைகளை சேகரித்து தந்தால் அம்மா ஒருசதம் கொடுப்பார். அதற்கு கடையில் சீனிபிஸ்கட் வாங்கி சாப்பிட்டது எத்தனை மகிழ்ச்சியான நினைவு. சிறிது காலம் வீட்டில் அம்மா காய்ச்சிய இலுப்பெண்ணெய் மணமாகவே இருக்கும்.

எல்லையற்ற அதிகாரம் போல் மகிழ்வளிக்கக்கூடியது இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை.  பாவாடை நாடாவை தளர்த்திவிட்டு, தரையில் உட்கார்ந்து, குண்டான் சட்டிக்குள் கையை நுழைத்து, சோற்றுடன் பாரைக் கருவாட்டை சுட்டோ, பொரித்தோ, பொடிப்பொடியாக்கியோ குழைத்து குழைத்து உண்பதன் இன்பத்துக்கு ஈடு இந்த உலகில் வேறு உள்ளதா என யோசிப்பார். தன் தாயாரை நினைத்து மெலிதாகச் சிரிப்பார்.  

ஒருநாள் காலை பத்து மணியிருக்கும்.  தோட்டக்காரர்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். கணக்கப்பிள்ளை குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டிருந்தார். மரகதசவுந்தரி அசைந்து வெளியே வந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோலவே கம்பீரமாகக் காணப்பட்டார்.  இரண்டு பிள்ளைகளின் தாய் என்றாலும், குண்டான் குண்டானாக சாப்பிட்டாலும், அவருடைய இடையின் அளவு ஓர் இஞ்சுகூட அதிகரிக்கவில்லை. கறுப்பு கரை வைத்த வெண்பச்சை பருத்திப் புடவையில் மிகையில்லாத அலங்காரம். 38 வயது என்று சொல்லவே முடியாது. இடுப்பிலே  கையை வைத்து அடியெடுத்தவர் ஒரு காட்சியை கண்டு அப்படியே நின்றார். 100, 200 தேங்காய்கள் குவிந்திருக்க அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அலவாங்கில் குத்தி உரித்தான் வேலைக்காரன். ஒரே கதியில் வேலை நடந்தபோது ஓர் இசை கூடி வருவதுபோல அந்த நேரம் ரம்மியமானது. ஓர் அணில் குடுகுடுவென்று ஓடி வந்து நின்று இரண்டு கால்களையும் தூக்கி இப்படியும் அப்படியும் பார்த்தது. வேலைக்காரன் எதிர்பாராத ஒரு காரியம் செய்தான். கையிலே வைத்திருந்த தேங்காயை தலைக்கு மேல் தூக்கி அப்படியே அணில்மேல் போட்டான். அது சத்தம் காட்டாமல் இறந்துபோனது.

மரகதசவுந்தரி அதிர்ந்துபோய்விட்டார். கோபத்தில் முகம் சிவக்க  கோழிபோலக் கத்தினார். ‘அந்த அணில் உனக்கு என்ன பாவம் செய்தது. உன்னை தின்ன வந்ததா? பயமுறுத்தியதா? அல்லது உன் வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததா? அது தன் பாட்டுக்கு இந்த உலகத்தின் அழகை கொஞ்சம் கூட்டியது. இது குற்றமா? படு பாவி, உனக்கு இங்கே வேலை இல்லை, போ’ என்று துரத்திவிட்டார்.  அவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட தருணம் அது. அவர் கணவர் சாந்தமானவர். ஒருவரையும் வேலையை விட்டு நீக்கியதில்லை. மரகதசவுந்தரியை கல்வீட்டுக்காரி என்று சனங்கள் அழைக்கத் தொடங்கியது அதன் பின்னர்தான். கண்டிப்பானவர் என்ற செய்தி பரவிவிட்டது. நெல் வயல்காரர்களும், தென்னந் தோப்புக்காரர்களும், வாழைத் தோட்டக்காரர்களும் கேள்வி கேட்காமலே பதில்களுடன் காத்திருந்தனர். கணக்கப்பிள்ளையும் ஓர் அதிசயத்தை கண்டார். சென்ற இரண்டு வருடங்கள் ஈட்டிய லாபத்திலும் பார்க்க கடந்த ஆறுமாதங்களில் அதிகமான லாபம் கிடைத்தது.

கதையின் நடுவுக்கு வந்த பின்னரும் முக்கியமான ஒருத்தரை இன்னும் அறிமுகம் செய்யவில்லை. கல்வீட்டில் இருந்து அரைமைல் தூரத்தில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அந்தக் கிராம மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராமத்துச் சனமும் சாமான்கள் வாங்க வருவார்கள். எந்த நேரமும் சனக் கூட்டத்துக்கு குறைவில்லை. முதலாளி சாமான்களை விற்கும்போது வாடிக்கையாளர்களின் பெயர்களைச் சொல்லி காசை வாங்குவார்.  பெயரைச் சொன்னால் அவருக்கு முகம் தெரியும். இது பெரிய கலை. அவருடைய விலைகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சனங்களிடையே அவருக்கு மதிப்பு இருந்தது.

இவருக்கு ஒரு மகன் இருந்தான். பெயர் செல்வகுமரன். வயது 19, 20 என்று வைத்துக் கொள்வோம். எஸ்.எஸ்.சி சோதனை இரண்டு தடவை பெயில் என்பதால் தகப்பனுடன் கடையை பார்த்தான். ’நீ சும்மா வந்து கடையில்  என்னோடு நின்றால் போதும். வியாபாரம் என்பது என்ன? வாடிக்கையாளர்களை தெரிந்து வைத்திருப்பதுதானே’ என்பார்.  நீளக் கால்சட்டையும், பச்சை கலரில் கோடுபோட்ட சட்டையும் அணிந்து ஸ்டைலாக காட்சியளிப்பான். சுருள் சுருளான கேசம். வைலர் கைக்கடிகாரம் தெரிவதுபோல கையை சுருட்டியிருப்பான். முடியை கைகளால் அடிக்கடி கலைப்பான். சும்மா இருக்கும்போதே அவனுக்கு சிரிப்பதுபோல முகம். அவன் சிரித்தால் எதிரில் நிற்பவர் மயங்கிவிடுவார். அப்படி ஒரு வசீகரம்.

தகப்பன் பார்த்தார் செல்வகுமரன் நிற்கும் நேரங்களில் எல்லாம் வியாபாரம் கூடியது. அவன் ஆட்கள் பெயர்களை மனனம் செய்வதில்லை. அவன் செய்வதெல்லாம் ஒரு சிரிப்புத்தான், அதில் ஏதோ மாயசக்தி இருந்தது. கல்வீட்டுக்காரர்கள் மட்டும் பலசரக்கு வாங்குவதற்கு வருவது கிடையாது. வாரத்துக்கு என்ன தேவை என்று கல்வீட்டிலிருந்து டெலிபோனில் செய்தி வரும். கடைப்பையன் ஒருவன் சாமான்களை கொண்டுபோய் இறக்கி வைப்பான். மாதமுடிவில் கணக்கப்பிள்ளை பணம் அனுப்புவார்.

அப்படித்தான் ஒருநாள் கடைப்பையன் இல்லாதபடியால் செல்வகுமரன் சாமான்களை சைக்கிளில் ஏற்றி கல்வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இளவரசி இருந்தாள். சைக்கிள் ஓட்டி வந்த வாலிபனைக் கண்டதும் அவள் இதயம் நின்றது. இத்தனை அழகான ஒருத்தன் இந்தக் கிராமத்தில் இருக்கிறானா? அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். அவனுடைய கண்கள் முதலில் சிரித்தன. பின் வாய் மெல்லத் திறந்து சிரித்தது.  ஒருவித திட்டமிடாமல் இயல்பாகவே  இவையெல்லாம் நடந்தன. ஒரு முழுநிமிடம் சைக்கிளை விட்டு இறங்காமல் காலை நிலத்தில் ஊன்றியபடி கண்களை  எடுக்கமுடியாமல் நின்றான். இளவரசி ஏதோ பெயர் சொல்லி கத்தியபடியே உள்ளே ஓடினாள்.  இதுவரை காலமும் கடைப்பையன்தான் இந்த வீட்டுக்கு சாமான்கள் விநியோகித்தான். ’இனிமேல் நான்தான்’ என்று செல்வகுமரன் தீர்மானித்தான்.

அன்று முழுக்க இளவரசி பேய் அறைந்தவள் போல நடமாடினாள். தன் அறையில் போய் படுத்துக் கொண்டாள். அவளுக்கு தனிமை தேவையாக இருந்தது. அவன் சைக்கிளில் வந்து சறுக்கியபடி திரும்பியவிதம், கீழே இறங்காமல் சைக்கிள் கைப்பிடியை பிடித்து நிலத்தில் கால் ஊன்றி நின்றது, அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை செய்தது எல்லாம் திருப்பித் திருப்பி படம்போல மனதில் ஓடியது. ஒரு சாதாரண பலசரக்குக்கடை வேலைக்காரன் இத்தனை அழகானவனா? என்ன ஸ்டைலாக தோற்றமளித்தான். அவளால் நம்பமுடியவில்லை.

இரண்டு நாட்கள் ஓடின. மனசு  பதற்றம் ஓயவே இல்லை. தங்கை குந்தவையிடம் கெஞ்சினாள், ’வா, அந்தக் கடை மட்டும் போய் வருவோம். எனக்கு ஒற்றை ரூல் கொப்பி ஒன்று வீட்டுப்பாடம் எழுத அவசரமாக வேணும்.’ ‘ஐயோ, நான்வர மாட்டேன். அம்மா தோலை உரிச்சுப் போடுவா.’ ’சீ போ. உன்னை தங்கச்சி என்று சொல்ல வெட்கமாயிருக்கு.’ ’வேலைக்காரனிடம் சொன்னால் அவன் வாங்கி வருவான்.’ ’அவனுக்குத் தெரியாது. நான்தான் கொப்பியில் ரூல் சரியாய் அடித்திருக்கா என்று பார்த்து வாங்கவேணும்.’ ’அக்கா, அந்தக் கடைக்கு கிட்டவே போக ஏலாது. ஒருநாள் ஒருத்தன்  ‘கல்வீட்டுக்காரியின் மகளும் கல்நெஞ்சுக்காரி’ என்று என் காதுபடவே பேசினான். ’சரி, நீ வராவிட்டால் போ. நான் போறன்.’   ’நுள்ளாதே, நுள்ளாதே வாறன். அம்மாட்ட பிடிபட்டால் நீதான் காப்பாற்ற வேணும்.’ ’சரி சரி வா. என்ன சிரச்சேதம் செய்யப் போறாவா?’

கடையிலே அவன் மட்டும் இருந்தான். அவன் நாலைந்து கொப்பிகளை எடுத்துக் காட்டினான். இவள் ஏதோ புடவை வாங்க வந்ததுபோல ஆற அமர ஒவ்வொன்றாக வெய்யிலில் பிடித்து ஆராய்ந்தாள். கோடுகள் சரியாக ஓடுகின்றனவா எனச் சோதித்தாள். ஒற்றையை இரண்டு விரலாலும் பிடித்து உரசிப் பரிசோதித்தாள்.  அவன் தலையை மட்டும் கிட்ட நீட்டி ‘எந்த ஸ்கூல்? என்றான். பின்னர் ’என்ன படிக்கிறீர்?’ என்றான். அவள் சொன்ன பதில் வார்த்தைகள் அவனை நோக்கிப் போய் பதி வழியிலேயே முடிந்துவிட்டன. ஒரு கொப்பி வாங்கி முடிய பத்து நிமிடம் ஆனது. பின்னர் ஒரு பேனை வேண்டுமென்றாள். அவன் பல பேனைகளை எடுத்து வைத்தான். அவள் கடுதாசியில் தன் பெயரை எழுதிப் பார்த்தாள். பின்னர் தன் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதிப் பரிசோதித்தாள். பிறகு பேனை சரியில்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சடாரென்று புறப்பட்டாள். குந்தவைக்கு எரிச்சல். ஒரு எளவு பிடித்த கொப்பிக்கு இவ்வளவு நேரமா?  

செல்வகுமரனிடமிருந்து முதல் தொலைபேசி இரண்டு நாள் கழித்து சிலோன் ரேடியோவில் அவள் ’இசைச் சித்திரம்’ கேட்டுக் கொண்டிருந்தபோது வந்தது. டெலிபோன் எப்பொழுதும் பூட்டியிருப்பதால் இளவரசி  அழைக்க முடியாது, ஆனால் வரும் அழைப்புகளை ஏற்று பேசலாம். அம்மா தோட்டத்தை மேற்பார்வை செய்யப்  போயிருந்தார். இளவரசி ’ஹலோ’ என்றதும் அவனுக்கு தெரிந்துவிட்டது. தன் பெயரைச் சொன்னான். இவள் ’தெரியும்’ என்றாள். ’ரூல் கொப்பி சரியா?’ என்றான். ’ஓம்’ என்றாள். ’வீட்டுப் பாடம் செய்தீர்களா?’ என்றாள். ’ஓம்.’ ‘உங்கள் வகுப்பில் எத்தனை மாணவிகள்?’ ’என்ன என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ ’நானும் தபால் மூலம் படிக்கிறேன். என்னிடம் நல்ல வேதியியல் நோட்ஸ் இருக்கு, உங்களுக்கு வேணுமா?’ என்றான். திடீரென்று கோட்டைத் தாண்டினான். ’எனக்கு உங்கள் நினைப்பாகவே இருக்கு.’ அவள் சொன்னாள் ’எனக்கும்தான்.’

அடிக்கடி பேசிக்கொண்டார்கள். அவர்களுக்காகவே சங்கேத வார்த்தைகள் உருவாகின. கடிதங்கள் பறந்தன. ஒருநாள் இரவு உணவு நேரத்தின்போது மரகதசவுந்தரி ஓர் அறிவித்தல்  செய்தார். ’இன்றுதான் கடிதம் வந்தது. இனிமேல் இளவரசி உடுவில் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பாள்.’ எத்தனை அழுது கூத்தாடியும் இளவரசியின் எதிர்ப்பு பலனளிக்கவில்லை.  உடுவில் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தாலே அது  தனி மதிப்புத்தான்.   பைத்தியம் பிடித்ததுபோல இளவரசி முதல் ஒரு மாதத்தை விடுதியில் கழித்தாள். மாத முடிவில் அம்மா வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். சனி, ஞாயிறு தங்கிவிட்டு திங்கள் காலை திரும்பவேண்டும். சனிக்கிழமை போனது. அவன் அழைக்கவில்லை. சரி, ஞாயிறு அழைப்பான் என நினைத்தாள். அது எப்படி முடியும்? அம்மா வீட்டிலே இருந்தார். ஏமாற்றமாகிவிட்டது. அடுத்தநாள் அதிகாலை புறப்பட வேண்டும்.

படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். தூக்கமே வரவில்லை. நடுச் சாமம் எழும்பி யன்னலில் போய் நின்றாள். நீல நிற இருட்டு. தொழுவத்தில் மாடுகள் நின்றன. உற்றுப் பார்த்தபோது ஏதோ அசைந்தது. ஓர் உருவம் கைகாட்டியது. இதயம் படபடவென்று எலும்பை உடைத்து வெளியே வரத் துடித்தது. மெதுவாக இறங்கி பின் கதவு வழியாக வெளியே வந்தாள். செல்வகுமரன் நின்றான். இடது கன்னத்தில் சந்திர ஒளிபட்டு தகதகவென்று அவன் மின்னினான். அழுகை பீறிட்டுவர அப்படியே கட்டி அணைத்தாள். இரவு ஒன்பதிலிருந்து அங்கே காத்து நின்றதாக அவன் சொன்னான்.

இப்படியே சந்திப்பு தொடர்ந்தது. உலகத்துக் காதலர்கள் பெற்றோரிடம் பிடிபடுவதுபோல இவர்களும் ஒருநாள் அகப்பட்டார்கள். செல்வகுமரன் எழுதிய கடிதம்தான் காரணம். முதல்நாள் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ’அடிமைப்பெண்’  முதல் காட்சி பார்த்துவிட்டு அதிலே ’ஆயிரம் நிலவே வா’ என்று வரும் பாடலில்  ஒரு வரியை திருடி எழுதியிருந்தான். ’நள்ளிரவு துணையிருக்க, நாமிருவர் தனியிருக்க.’ இந்த வரிதான் பிடிபட்டது. மரகதசவுந்தரி கோபம் வந்தால் கணவர் வைத்திருந்த அலங்காரப் பிரம்பை  வெளியே எடுப்பார். சும்மா ஒரு வெருட்டுத்தான்.  அவர் பிரம்பை உருவி எடுத்ததும் வேலைக்காரர்கள் வெளியே ஓடிவிட்டார்கள். குந்தவை பாய்ந்து வந்து தாயாரை கட்டிப்பிடித்தாள். மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை இல்லை. இளவரசி சாப்பிட மறுத்தாள். அவள் சொல்லிவிட்டாள் ’எனக்கு கல்யாணம் என ஒன்று நடந்தால் அது செல்வகுமரனுடன்தான்.’ 

செல்வகுமரனும் பெற்றோரும் ஒரு நல்ல நாள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்த தட்டுடன் பெண் பார்க்க வந்தார்கள். மரகதசவுந்தரி நினைத்ததற்கு மாறாக அவர்கள் நல்ல பண்பாடு உள்ளவர்களாக காணப்பட்டார்கள். மாப்பிள்ளை திடமான உடல்கட்டுடன் மரியாதை தெரிந்தவனாக இருந்தான். இப்படி ஓர் அழகன் இந்த ஊரில் இருக்கிறானா என இளவரசி அதிசயித்ததுபோல தாயாரும் வியந்தார். உடனேயே மனதில் சம்மதம் தோன்றிவிட்டது.  அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம், ஆனால் ஒரு நிபந்தனை. மகள் படிப்பை தொடர்ந்து கணவர் ஆசைப்பட்டதுபோல உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக அமரவேண்டும். எல்லோருக்கும் அதில் சம்மதம்.

திருமணம் முடிந்த பின்னர் இளவரசி விடுதியில் போய் தங்கினாள். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மரகதசவுந்தரியின் ஏ30 கார் போய் அவளை அழைத்து வரும். இரண்டு நாட்கள் செல்வகுமரன் அவர்களுடன் வந்து தங்குவான். இது தொடர்ந்தது. சிலசமயங்களில் தாயார் கார் அனுப்பாமல், ’படிப்பு முக்கியம்’ என்பார். இளவரசியை ஓர்  அடிமையாகவே மரகதசவுந்தரி நடத்தினார்.

ஒருநாள் குந்தவையிடமிருந்து இளவரசிக்கு கடிதம் வந்தது. குந்தவை கடிதம் எழுதுவதே இல்லையாததால் அதனை அவசரமாகப் பிரித்தாள்.

’எடி அக்கா,

நீ போய் விடுதியில் உட்கார்ந்து கொள். உனக்கு என்ன? நான் இங்கே இடிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை படிக்கவேண்டாம் என்று சீமாட்டி நிறுத்திவிட்டார். உன்னுடைய பழைய பூப்போட்ட கிமோனாவை எனக்கு தந்து அதை வீட்டு வேலைக்கு போடச் சொல்கிறார். அட்டூழியம் என்றால் தாங்க முடியவில்லை.  இந்த ஊருக்கு அவர்தான் ராணி என்ற நினைப்பு. அவவின் மண்டை முழுக்க பாரைக் கருவாடுதான். நான் துணியிலே பூக்கள் செய்து வீணாகிறேன். என்னுடைய முறைப்பாடுகளைக் கேட்க ஒருவருமில்லை.  அடிக்கடி அப்பாவின் பிரம்பை வெளியே எடுக்கிறார். குத்துச்சண்டை வீரர் தலையை கைகளால் மூடிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஓடுவதுபோல நான் ஓடுகிறேன்.   நான்தான் இங்கே நிரந்தர வேலைக்காரி.  எத்தனை கிள்ளும் உன்னிடம் வாங்குவன். ரூல் கொப்பி வாங்க உன்னுடன் நூறு தடவையும் நான் வரத் தயார். எனக்கு மீசை முளைத்துவிட்டது. அதைப் பார்ப்பதற்காவது  உடனே வா.’

இளவரசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்றே தாயாரை வந்து தன்னைக் கூட்டிப்போகும்படி அழைத்தாள். தாயார் வந்தார், ஆனால் கூட்டிப்போகவில்லை. ’என்னுடைய பிரம்புக்கு  வேலை வைக்காதே. உனக்கு ஒரு நிபந்தனை போட்டு உன் திருமணத்தை முடித்துவைத்தேன். அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது உன் கடமை.  உனக்கு என்ன அவசரம், 19 வயதுதானே ஆகிறது. படிப்பை நிறுத்தலாம் என்று கனவிலும் நினைக்காதே.’  ’என்னை இப்படி படி படி என்று வதைக்கிறாய். குந்தவையை படிக்கவேண்டாம் என்று நிறுத்திவிட்டாயே.’ ’அதை விடு. அந்த மூதேவிக்கு படிப்பு ஏறாது.’

அம்மாவின் பிடியிலிருந்து விலக ஒரேயொரு வழிதான் இருந்தது. படிப்பை முடித்துவிட்டு குமரனுடன் எங்கேயாவது தூரதேசத்துக்கு ஓடிவிடுவது. அப்பா சொன்னாராம்; நான் அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டுமாம். பாவம் குந்தவை, அவள் தனித்துவிட்டாள்.குதிரைக்குட்டி போல துள்ளித் துள்ளி திரிவாள். அவள் மகிழ்ச்சியை தேடிப் போவதில்லை. உயிர் வாழ்வதே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

குந்தவையின் இரண்டாவது கடிதத்தை பதைபதைப்புடன் திறந்தாள்.

’எடி அக்கா,

உனக்கு மூளையே கிடையாது. நிலைமை மோசமாய் போகிறது. சீமாட்டி காலை மாற்றிப் போடுவதுபோல ஆட்களை மாற்றுகிறார். துப்பல் பணிக்கத்தை உடைத்ததற்காக நேற்று வேலைக்காரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.  அணிலைக் கொன்றதற்காக ஒரு வேலைக்காரனைத் துரத்திய அம்மா இல்லை இது. அவருடைய தோலுக்குள் இன்னொரு அம்மா இருப்பது உனக்குத் தெரியாது. நான் சொல்லச் சொல்ல நீ கேட்பதே இல்லை. உன்ரை ஆசைப் புருசன்  இப்ப இலுப்பைப் பழம் தின்ன வரும் வௌவால்களை இரவில் வலைவைத்து பிடிக்கிறார். அவற்றின் நரி மூஞ்சி  பார்க்கச் சகிக்காது. சமையல்காரி அதை சமைத்து கொடுக்கிறாள். உனக்குத் தெரியும், அது வாயால்தான் கக்கா செய்யும். அதன் இறைச்சி சமைத்தால் மூன்று நாள் வீடு மணக்கும். நீ அங்கே படிச்சுக் கிழி. சீமாட்டியின் ராச்சியம் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் கடைசி. இனியும் நான் செத்த பிணமாகிய உனக்கு கடிதம் எழுதப்போவதில்லை.’

இளவரசிக்கு கைகள் நடுங்கின. அம்மா கார் அனுப்பப் போவதில்லை. விடுதியில் அனுமதி வாங்கிப் புறப்பட முடியாது. இரவு உணவு சமயம் ஒருவரும் அறியாமல் கேட் ஏறிக் குதித்தாள். எந்த பஸ், எங்கே எடுப்பது என ஒன்றுமே தெரியாது. சிநேகிதி சொன்னதுபோல ஆவுரஞ்சிக் கல்லுக்கு பக்கத்தில் நின்றாள். இரண்டு பஸ் பிடித்து வீடு வந்துசேர்ந்தபோது ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் அணைந்துவிட்டன.  தாயார் புயல்போல சீறிக்கொண்டு  பிரம்பை எடுத்தாலும் எடுப்பார். சமையல்காரியின் பின் கதவு வழியாக  மெல்ல சமையல் அறைக்குள் நுழைந்தாள். அம்மா சாப்பிடும் குண்டான் வழித்து துடைத்து கழுவாமல் கிடந்தது. இந்த வயதிலும் ஒரு குண்டான் பசியா? வீடு முழுக்க பிரேதம் அழுகிய மணம். 

தங்கையின் அறைக் கதவு பூட்டாமல் கிடந்தது. எட்டிப் பார்த்து எழுப்புவோமா என்று யோசித்தாள். பின்னர் நேரே போய் அம்மாவின் கதவை தட்டினாள். மறுபடியும் தட்டினாள். ’ஆர்’ என்ற அதட்டல் குரல் வந்தது. பதில் பேசாமல் நின்றாள். ஆவேசமாகக் கதவை திறந்த மரகதசவுந்தரி வாய் பிளக்க அப்படியே நின்றார். குலைந்த ஆடை. கலைந்த கேசம். முகத்திலே கோபம் கொதிக்க ’என்ன இளவு இந்த நேரம்?’ என்றார். இவள் பதில் பேச முன்னர் இன்னொரு காட்சியை கண்டாள். தபால் மூலம் படிப்பவனும், வௌவால் இறைச்சி தின்பவனுமான இவளுடைய புருசன் மெதுவாக வெளியே வந்து குனிந்த தலையுடன்  நின்றான். எந்த நேரமும் வசீகரமாகக் காணப்படும் அவன் வதனம் அத்தனை கோரமாக மாறியிருந்தது. இளவரசியின் தேகம் அனலாக எரிந்தது. தொண்டைக்குள் ஒரேசமயத்தில் பல வார்த்தைகள் உண்டாகி சிக்குப்பட்டன.

’நீ ஒரு தாயா? உன் சொந்த மகளை நடுத்தெருவுக்கு துரத்திவிட்டாயே. நீ பேய். நீ பிசாசு. வஞ்சகி, என் புருசனைப் பறித்த நீ நல்லாயிருப்பாயா? உனக்கு வெட்கமே இல்லையா?’

மரகதசவுந்தரி கோழிக்குரலில் கூவினார்.

’வாயை பொத்தடி. என்னடி வெட்கம். நான் என்ன வீதி வீதியாய் அலைஞ்சு வேசை ஆடினேனா? இது என் சொந்த மருமகன். சொந்த மருமகன்.’

END          

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 05:29

August 31, 2022

ஜெகந்நாதரின் தேர்

ஜெகந்நாதரின் தேர் – அ. முத்துலிங்கம்

4 MINUTEREAD

சில வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது நான் அவரை Juggernaut எனக் குறிப்பிட்டேன். பிரம்மாண்டமான, நிறுத்தமுடியாத விசை என்று பொருள். ஜெகந்நாதர் என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொல் இது. பூரி ஜெகந்நாதருடைய ரத யாத்திரை 12-ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. தேர் புறப்பட்டால் பெரும் விசையுடன் நிற்காமல் செல்லும். அதைக் குறித்துத்தான் அந்தச் சொல் உருவானது என ஆங்கில அகராதி சொல்கிறது.

ஆரம்பத்திலிருந்து ஜெயமோகனின் எழுத்து அப்படித்தான் இருக்கிறது. வெண்முரசு தொடங்கியபோது பலர் அந்த முயற்சி பாதியில் நின்றுவிடும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் ரதம் நிற்கவில்லை. தொடர்ந்து 6 வருடம் 7 மாதங்கள் எழுதி, 26.000 பக்கங்களை எட்டிய  பின்னர், அனைத்துலகிலும்  படைக்கப்பட்ட ஆகப்பெரிய நாவலாக வெண்முரசு, நிறைவுக்கு வந்தது.  இந்த நீண்ட ஓட்டத்திற்குப் பின்னர் ஜெயமோகன் ஓய்வெடுப்பார் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு என நூறு சிறுகதைகள் எழுதினார். பின்னர் நாவல்கள், குறுநாவல்கள் என ஓயாமல் எழுதிய வண்ணமே இருக்கிறார்.

அவரை நான் அறிந்தது கடிதம் மூலம்தான்.  நான் அப்பொழுது ஆப்கானிஸ்தானில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கதை ஒன்று அந்த நாட்டின் பின்னணியில் இந்தியா டுடேயில் பிரசுரமானது. ஜெயமோகன் அதுபற்றி எழுதினார். அவருடைய கதைகள் வெளியானால் நான் அவருக்கு எழுதுவேன். ஒரு வித்தியாசம், அவருடைய கடிதம் நாலு பக்கத்துக்கு குறையாமல் இருக்கும். என்னுடையது அரைப் பக்கத்தை தாண்டாது. அவை ஆனந்தமான நாட்கள். அப்பொழுதுதான் மின்னஞ்சல் வசதி தமிழில் வந்திருந்தது. ஒரே கொண்டாட்டம். தமிழில் ‘இ’ எழுத்து வராது. ஆகவே அந்த எழுத்து வராத வார்த்தைகளாகப் பார்த்து ஒருவருக்கு ஒருவர் எழுதுவோம். எனக்கு பகல், அவருக்கு இரவு ஒரு மணி, இரண்டு மணியாக இருக்கும்.  அவர் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘கடைசியாக கூட்டுக்கு வரும் பறவை வென்றதா? தோற்றதா?’ இந்த விவாதம் தொடர்ந்தது. கடைசிவரை விடை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அருண்மொழி அவரிடம்  ’போய்த் தூங்குங்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுவார். அப்பொழுது ஜெயமோகனுக்கு வாசகர்கள் குறைவு. ஆகவே முழு ராச்சியத்தையும் நான் கைப்பற்றியிருந்தேன். ஒரு முறை கடிதத்தில் அவர் முழுச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டார். உண்மைக் கதை. தேவ கடாட்சம் என்ற ரவுடி பற்றியது.  அந்தக் கதை இன்றுவரை பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன். 

வெண்முரசு கொடுத்த ஆச்சரியங்கள் கணக்கில் அடங்கா. வியாச மகாபாரதத்தில் 50 பக்கம் வரும் பகுதி, வெண்முரசில் 1000 பக்கங்களாக விரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான புது உவமைகள். ஓர் உவமை மீண்டும் பயன்படுத்தப்பட்டது கிடையாது. பல நூறு புதிய சொற்களும், சொல்தொடர்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிறவிநூல், தீச்சொல், அறப்புதல்வி, பிழையீடு, மொழிமீட்சி, நீராட்டறை, மணத்தன்னேற்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம். வியாசர் சொல்லாமல்விட்ட பல தகவல்கள் கிடைக்கின்றன. திருதராஷ்டிரன் என்ன உணவருந்தினான்? கோதுமை அப்பமும், பருப்பு மாமிசம் சேர்த்த கூட்டும். எப்படிப்பட்ட படைக்கலன்களை பயன்படுத்தினார்கள்? 12,000 அம்புகளை நொடியில் செலுத்தக்கூடிய பொறிவிற்கள் தயார் நிலையில் இருந்திருக்கின்றன.  இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு வளர்ந்த மூங்கில் விற்கள்மேல் அமைக்கப்பட்ட வண்டிகள். சாலையில் சக்கரங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வண்டியில் பயணிப்பவர்களை அடைவதேயில்லை. இப்படி பலவிதமான தொழில் நுட்ப உச்சங்களைப் பற்றிய விவரங்கள் வெண்முரசில் கிடைக்கின்றன.

நான் பாகிஸ்தானிலும் பின்னர் கென்யாவிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன்.  விஷ்ணுபுரம் வெளிவந்த பிறகு அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. முதல் 20 பக்கத்தை படித்துவிட்டு புத்தகத்தை கீழே வைத்துவிடுவேன். பிரமிப்பு தாங்கமுடியவில்லை. முடிந்துவிடுமோ எனப் பயந்துகொண்டு மெதுமெதுவாக வாசித்தேன். அற்புதமான நாவல் என்று கண்டுபிடித்த முதல் பத்து பேர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கனடாவில் இருந்து கடிதம் எழுதினேன். அவர் ஒரு  கேள்வி கேட்டார் ’கென்யா முத்துலிங்கமும் நீங்களும் ஒருவரா?’ என்று. ’ஓம்’ என்றேன். பின்னர் கனடாவுக்கு வந்தார். அவருடைய  முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் இருவருக்கும் மறக்கமுடியாத நாட்கள். நயாகரா அருவியையும்,  இலைகள் நிறம் மாறும் அதிசயத்தையும் பார்த்து சிறு குழந்தைபோல ரசித்தார். அப்பொழுது மீசை வைத்து இளம் நடிகர்போலவே இருப்பார். வெளிநாட்டவர்களுக்கு  அறிமுகம் செய்யும்பொது ’தமிழில் நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்’ என்று அப்போதே கூறினேன். அவர் வருகை ஞாபகமாக தபால் தலை ஒன்று வெளியிட்டு அதை ஒட்டி பல கடிதங்களை இந்தியாவுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தோம்.

மாபெரும் படைப்பான  வெண்முரசின் ஆரம்பத்திலும் நிறைவிலும் எனக்கு ஒரு தொடர்பு உண்டு. 2013 டிசெம்பரில் வெண்முரசு  அறிவித்தல் வந்தபோது நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினேன். ’இது நியாயமா? இதை முடிக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா தெரியாது.’  ஆறு வருடம் 7 மாதம் தொடர்ந்து எழுதினார். கடைசி அத்தியாயம் எழுதி அவர் ஓய்ந்த நாள் 13 ஜுலை 2020.  தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்தினேன். அன்றுதான் கண்ணன் பிள்ளைத் தமிழ் எழுதி வெண்முரசை அழகான நிறைவுக்கு கொண்டுவந்திருந்தார். அவர் மனதிலே பூரண திருப்தியும் அமைதியும் நிலவிய நேரம். 

வியாசர் பாரதம் சொல்லச் சொல்ல, விநாயகர் ஒரு தந்தத்தை முறித்து கையை எடுக்காமல் மேரு மலையில் எழுதினார் என்பது ஐதீகம். நாளுக்கு  ஒரு அத்தியாயம் என்ற முறையில் நிறுத்தாமல் எழுதி முடித்தது சாதனை இல்லாமல் வேறு என்ன?  அது மாத்திரமல்ல, வியாச பாரதத்தை நீட்டியும் அகலித்தும் ஆழமாக்கியும் எழுதப்பட்டது இது. பல மடங்கு பெரியது. வியாசரே பிரமித்துப் போகும் அளவுக்கு புதிய தகவல்களைக்  கொண்டது. 

இதிலே உள்ள அற்புதம் என நான் நினைப்பது முன்னரே அறிவித்துவிட்டு விண்கலம்  அனுப்புவதுபோல 10,000 வாசகர்கள் வாசித்து அதன் பாதையை தொடர தினமும் எழுதி பதிவிட்டதுதான்.  கம்பருக்கோ, வால்மீகிக்கோ, வியாசருக்கோ எழுதியதை மீண்டும் சரிபார்த்து  திருத்தும் வாய்ப்பு  இருந்தது.  இங்கே அது கிடையாது. எழுதியது எழுதியதுதான். முன்னர் எழுதியதை  பின்னர் புத்தகமாக்குவதுதான் மரபு. இது புத்தகமாகவே எழுதப்பட்டது. முன்னுக்குப் பின் முரண் இல்லை. அசுர சாதனை,  மனிதப் பிரயத்தனத்துக்கு அப்பால்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

கனடாவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோவை நான் நேர்காணல் செய்திருக்கிறேன். இவரை சிறுகதைகளின் அரசி என்று சொல்வார்கள். நாவல்களுக்கு நோபல் பரிசு கொடுப்பார்கள், ஆனால் சிறுகதைகள் மட்டுமே எழுதி நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் இவர்தான். ஒரு சிறுகதை எழுத 6 – 8 வாரங்கள் எடுப்பதாக இவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒருமுறை ஆறுமாதம் தொடர்ந்து எழுதிய சிறுகதை ஒன்றை அப்படியே தூக்கி வீசிவிட்டார். அதனுடைய அடிநாதம் சரியாக அமையவில்லையாம்.  சில சிறுகதைகளை முடிக்க முடியாமல் துண்டு துண்டாக வெட்டி வேறு சிறுகதைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். ’சிறுகதை அரசி’ 15 தடவைகளுக்கு மேல்  தன் படைப்பை  திருத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் பார்த்தால் நாளுக்கு ஒன்று என தொடர்ந்து 100 சிறுகதைகள் படைத்த ஜெயமோகனுடைய  சாதனையை எதனுடன் ஒப்பிடுவது?  இவருடைய சிறுகதைகள் சாதாரணமானவை அல்ல. அவை எல்லாமே உலகத் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தக்கூடியவைதான்.

இங்கேதான் நாம் பாரதி சொன்னதை நினைத்துப் பார்க்கவேண்டும். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.’  பாரதிக்கு  இருந்த பெரும் ஆதங்கம் இதுதான். அவருடைய எழுத்து வெளி உலகத்திற்குப் போய்ச் சேரவில்லை. புதுமைப்பித்தனின் படைப்புகளை உலகம் அறியவில்லை. அதற்கான முயற்சிகளையும் பெரிதாக ஒருவரும் முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரமான உண்மை.

700 வருடங்களாக கல்கத்தா நூலகம் ஒன்றில் கவனிப்பாரற்றுக் கிடந்த பாரசீக கவிதைப் புத்தகம் ஒன்றை எட்வார்டு ஃபிட்ஸ்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இன்று உமர் கயாம் உலகம் முழுக்க கொண்டாப்படுவதற்கான காரணம் அந்த மொழிபெயர்ப்புத்தான். இஸ்மெயில் காதரே எனும் அல்பேனிய எழுத்தாளர் அந்த மொழியில் ஒரு நாவல் எழுதினார். அல்பேனிய  மொழி பேசுவோர் உலகத்தில் முப்பது லட்சம் மக்கள்தான். நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆள் கிடைக்கவில்லை. ஆகவே  நாவலை முதலில் பிரெஞ்சில் மொழிபெயர்த்து பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றினார்கள்.  அந்த நூலுக்கு சர்வதேச புக்கர் விருது வழங்கப்பட்டது. நோபல் விருதுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்படும் விருது அது.

ஜெயமோகன் இனி என்ன செய்யவேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை சொல்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்.  அவர் பல தலைமுறை வேலையை செய்துவிட்டார். 10 பேராசிரியர்கள், 20 எழுத்தாளர்கள், 30  பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை அவர் தனியொருவராக  செய்து முடித்திருக்கிறார்.  பாரதியார் சொன்னார் திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று. இன்னமும் உலகம்  இலியட்டையும், ஒடிசியையும், ஏனிட்டையும், சேக்ஸ்பியரையும் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் படைப்புகளுக்கு முன்னர் இவை எல்லாம் மங்கிப்போய் நிற்கின்றன. இவருடைய படைப்புகளை வெளிநாட்டோர் கொண்டாடவேண்டிய நாள் வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழுக்கு வெற்றி.  

’வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும் வீரன்’ என்று இந்திரஜித்தை கம்பர் வர்ணிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என விரல்களை எண்ணும்போது வரும் முதலாவது என்ற அர்த்தமில்லை. விரற்கு முன் நிற்பவர், அதாவது ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கு முன்பே நிற்பவர் ஜெயமோகன்.  உலகப் படைப்பாளிகளில்  விரற்கு முன் நிற்பவர்.

பிரம்மாண்டமான நிறுத்த முடியாத விசையாக ஜெயமோகன் தமிழுக்கு கிடைத்திருப்பது பெரும் வரம். உலக மகா படைப்பான வெண்முரசை நிறைவேற்றிய பின்னரும் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறார்.  எத்தனை விசையோடும் வீச்சோடும் எழுதியும் என்ன பிரயோசனம்? அவருக்கு மலர் வெளியிடுவதோடு கடமை முடிந்ததா? அவரது படைப்புகளை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை உள்ளது. வேறு யாரும் செய்யப் போவதில்லை; நாம்தான் செய்ய வேண்டும். அது நாம் தமிழுக்கு செய்யும் சேவை அல்ல; உலகத்துக்கு செய்யும் தொண்டு. 

***

அ. முத்துலிங்கம் – தமிழ் விக்கி பக்கம்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2022 05:19

தடங்கல்

                                             தடங்கல்

                                         அ.முத்துலிங்கம்

நாற்பது வருடங்களுக்கு முன்னராக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு நீல நிற வான்கடிதம் இந்தியாவிலிருந்து எனக்கு வந்தது. அதுவே எனக்கு  முதல் வந்த ஒரு வான்கடிதம்.  அப்படி எழுத எனக்கு யாருமே இல்லை. அந்தக் கடிதம்  எழுதியது கி.ரா என்பதை அறிய ஆச்சரியமாக இருந்தது. மூன்று மாதத்துக்கு முன்னர் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அத்துடன் என்னுடைய ஒரு சிறுகதையையும் அனுப்பியிருந்தேன். அதற்குப் பதில்தான் இது. ஞாபகத்திலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

‘வெளிநாட்டுக்கு கடிதம் எழுதுவது என்றால் முதல் பிரச்சினை கடித உறைதான். எங்கேயெல்லாமோ அலைந்து இதைப்பெற்று எழுதுகிறேன். உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் நல்லாய் எழுதுகிறீர்கள். ’வையன்னா கானாவின்’ ரசனையும் டிகே சியின் ரசனையும் ஒரே மாதிரித்தான்.’ இப்படியெல்லாம் எழுதியிருந்தார். என் எழுத்துக்கு கிடைத்த முதல் ஆசீர்வாதம் என இதை எடுத்துக்கொண்டேன்.

நான் ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்துப் போன பின்னர் எழுதுவதோ, படிப்பதுவோ நின்றுவிட்டது. அவ்வப்போது விடுமுறையை கழித்துவிட்டு  வீட்டுக்கு திரும்பும்போது தமிழ் புத்தகங்கள் வாங்கிச் செல்வேன். கி.ராவினுடைய புத்தகங்களை தொடர்ந்து வாசித்தேன். ஒருமுறையாவது அவரை சந்திக்கவேண்டும் என நினைப்பேன். அது நிறைவேறவேயில்லை.

ஒரு தடவை இந்தியா போயிருந்தபோது வாடகைக் கார் பிடித்தோம். மனைவி சிதம்பரம் கோயிலுக்கு போகவேண்டும் என்றார். காரை ஓட்டி வந்தவர் சிதம்பரத்துக்கு போகும் வழியில் கி.ராவை பார்க்கலாம் என்று சொன்னார். நல்ல யோசனையாகப் பட்டது. கி.ராவுக்கு அறிவித்துவிட்டு போவதுதான் முறை, ஆனால் தொலைபேசி எண் தெரியாது. கையிலே முகவரி இருந்ததால் ஒருவித பிரச்சினையும் இல்லாமல் கி.ரா வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். அவர் வீட்டிலே இருந்தார். ஒல்லியாக, சட்டை இல்லாமல் படங்களில் இருப்பது போலவே காட்சியளித்தார். என்னை அவருக்கு தெரியவில்லை. என் பெயரை சொல்லி நான் கடிதம் எழுதியதையும் அவர் பதில் போட்டதையும் சொன்னேன். உடனேயே புரிந்துகொண்டார்.

அவருடன் பேசுவது இயல்பாகவே வந்தது. அவருக்கு புதிய விசயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்தது. பேச்சு எங்கேயெல்லாமோ போனது. ஆப்பிரிக்காவில் மரங்கள் பொதுவுடமை. யாருடைய மரத்திலும் யாரும் பழம் பறிக்கலாம் என்றேன். உடனேயே உற்சாகமாகிவிட்டார். ஒரு முறை எங்கள் வீட்டு பப்பாளி மரத்தில் பழங்கள் தயாரானவுடன் இன்னொருவர் வந்து பறித்துப் போனதை சொன்னேன். ‘அது உண்மைதானே. நிலங்களும், மரங்களும் பொதுவானவை. மனுசன் வேலி போட்டு தனக்கென பிரித்துக்கொள்கிறான்’ என்றார்.

இன்னொரு விசயம் சொன்னதும் திடுக்கிடுவார் என நினைத்தேன், ஆனால் மனம் மகிழ்ந்தார். ஆப்பிரிக்காவில் பெண் மணமுடிக்கும்போது ஆண் அவளுக்கு விலை கொடுப்பதை சொன்னேன். ஒரு பெண்னுக்கு 10, 20 ஆடுகள் கொடுத்து ஆண் மணமுடிப்பான். பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்தால் அவளுக்கு மதிப்பு அதிகம் என்றேன். அவருக்கு பெரும் மகிழ்ச்சி. ‘அப்படியா, ஏன்?’ என்றார். பெண்ணின் வேலை அதிக பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பது. அதிக பிள்ளை என்றால் அதிக வருமானம். மணமுடித்தபின் பெண் கருவுறுவது நிச்சயமில்லை. ஏற்கனவே குழந்தை இருந்தால் கருவுறும் சாத்தியம் அதிகம்.’ இப்படி எங்கள் சம்பாசணை சுவாரஸ்யமாகப் போனது.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்றார். கணவதி அம்மாவும் வந்து சமையல் ஆகிவிட்டது என்றார். ஆனால் கணவனும் மனைவியும் ஒரு வார்த்தை பேசியதை நாங்கள் பார்க்கவில்லை. சைகை காட்டவில்லை. ஆனால் எப்படியோ கணவனின் நினைப்பை அறிந்து எங்களுக்கும் சேர்த்து சமையல் செய்துவிட்டார். நாங்கள் ஹொட்டலிலும், உணவகங்களிலும் சாப்பிட்டு வந்தோம். முதன் முதலாக ஒரு வீட்டிலே எங்களுக்கு உணவு கிடைத்தது. கணவதி அம்மா பரிமாறினார். சோறும், கத்தரிக்காய் கூட்டும், ரசமும் என்று ஞாபகம். சுவைத்து சாப்பிட்டோம்.

’கார் சாரதி வந்துவிட்டார், புறப்படுகிறோம். உங்கள் அன்பை மறக்க மாட்டோம்’ என்று கூறினோம். சாரதியா? என்றார். ஆமாம், ஓட்டுநர் என்றும் அழைப்போம் என்றேன். ’இலங்கையில் எப்படியெல்லாமோ அழைக்கிறீர்கள், நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே டிரைவர் என்றே பழகிவிட்டது’ என்றார். இருவருடமும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.

அதன் பின்னர் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. 2016ம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்கு அறிவிப்பதற்காக  அவரை தொலைபேசியில்  அழைத்தேன். அவரால் கனடா வரமுடியவில்லை என்பதால் விழாவை தமிழ்நாட்டிலேயே ஒழுங்குசெய்து  விருதையும் பணப்பரிசையும் அனுப்பி வைத்தோம்.

சமீபத்தில் கொரோனா பேரிடர் வந்து உலகம் முழுவதையும் மூடிவிட்டபோது திடீரென்று சூம் கூட்டங்கள் அதிகரித்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வாசகர்  வட்டம் கி.ராவுடனான ஒரு நேர்காணலை மெய்நிகர் கூட்டமாக ஒழுங்கு செய்தது. ஜெயமோகனுடன் பல நண்பர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் உலகம் எங்குமிருந்து கலந்துகொண்டு கி.ராவுடன் உரையாடினார்கள். இந்தக் கூட்டம்  2020 டிசெம்பரில் நடந்தது. இருநூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கனடாவில் இருந்து நானும் பங்குபற்றினேன். என்னுடைய  கேள்வி முறை வந்ததும் நான் கேட்டது இதுதான்.

ஐயா என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நான் இலங்கையை சேர்ந்தவன். பல வருடங்களுக்கு முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதி நீங்களும் பதில்  போட்டீர்கள். உங்கள் வீட்டுக்கு நான் மனைவியுடன் வந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறோம். என்னுடைய கேள்வி இதுதான். எழுத்தாளர் எழுதிக்கொண்டு போகும்போது சில சமயம் தடங்கல் ஏற்படும். உங்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கிறதா? அந்த தடங்கலில் இருந்து மீண்டு எப்படி எழுதினீர்கள்?

இந்தக் கேள்விக்கு ஏறக்குறைய 19 நிமிடத்தில் பதில் தந்தார். மறக்கமுடியாத வரலாற்றுப் பதில். அதை சுருக்கி என் மொழியில் தருகிறேன்.

நாட்டுப்புறக் கதைகளை சேகரிக்கும் போது பால் கதைகள் என்ற வகையில் ஒரு கதையில் ஒரு சம்பவம் சொல்லப்பட்டது. அந்த ஊரிலே பெண்கள்  சாயந்திரமானால் ஒரு செம்பிலே தண்ணீர் பிடித்துக்கொண்டு வெளிக்குப் போவார்கள். ராசாவின் மனைவியும் அவர்களுடன் வெளிக்குப் போவார். ராசாவின் மனைவி எப்படி அவர்களுடன் போகக்கூடும் என்று கேட்கக்கூடாது. நாட்டுப்புறக் கதைகளில் அப்படி நடக்கும்.

அந்தப் பெண்கள் பார்த்தார்கள் ராசாவின் மனைவி தங்கத்தால் ஆன அரை முடி அணிந்திருந்தார், அது இருட்டிலே மின்னியது. வைரங்களும், ரத்தினக்கல்களும் பதித்திருந்தபடியால் அப்படி ஜொலித்தது. அதன் அழகில் பெண்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். அதிலே ஒரு பெண் கணவனிடம் தனக்கும் அப்படி ஒன்று வேண்டும் என அடம்பிடித்தார். புருசனும் சரியென்று பொற்கொல்லரை வரவழைத்தார். அவர் அளவு எடுக்கவேண்டும் என்று தந்திரம் செய்து பெண்னை கணக்குப்பண்ணிவிட்டார். இந்தக்கதையில் ஓர் இடத்தில் ’ஆசாரிப்பயல்’ என்ற வார்த்தை வந்து விழுந்துவிடுகிறது. பொற்கொல்லர்கள் ஆட்சேபித்தார்கள். பத்திரிகை மன்னிப்பு கேட்டது.  கதையை திரட்டியவர் கழனியூரான். அதை செம்மைப் படுத்தியபோது நான் அந்தச் சொல்லை நீக்கியிருக்கவேண்டும். தவறுதான்.  பொற்கொல்லர்கள் புரட்சியாக கோசம் எழுப்பியபடி  ஊர்வலம் போனார்கள். ’அவனை தொலைக்கணும், ஒழிக்கணும்’ என்றபடி என்னைக் கடந்து போனார்கள். நான்தான் அவன் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உணமையில் அந்த வார்த்தை அப்படி ஒன்றும் மோசமில்லை. முஸ்லிம்களும் ஆசாரிகளும் பேசும்போது கெட்டவார்த்தைகள் பறக்கும். குட்மார்னிங் சொல்வது போலத்தான்.

இந்தக் கலவரத்தை கேள்விப்பட்டு சுந்தர ராமசாமி என்னைப் பார்க்க வந்தார். அவர் படி ஏறி வந்ததும் நான் கதவை திறந்தேன். ’உங்களைப் பார்க்க பயப்படுகிறவர் மாதிரி தெரியலையே’ என்றார். இப்படியான சம்பவங்கள் எழுத்தாளர் வாழ்வில் நடப்பதுதான் என்று பேச்சை முடித்தார்.

நான் கேட்டது எழுத்து தடங்கல் பற்றி. அவர் சொன்னது எழுத்தாளருக்கு ஏற்படும் தடங்கல்பற்றி. பூ வேண்டும் என்று கேட்டவனுக்கு பூமாலை கிடைத்ததுபோல ஆகிவிட்டது.

ஆன் செக்ஸ்டன் என்ற அமெரிக்க கவிஞர் சொல்வார் ஒரு வார்த்தையையும் விரயம் செய்யக்கூடாது என்று. ஆலமரத்தைப் பற்றி கவிதை எழுத வேண்டும். சரிவரவில்லை என்றால் ஆலமரத்தை வெட்டி அந்த மரத்தில் ஒரு கதவு செய்யலாம். அதுவும் சரிப்படவில்லை என்றால் ஒரு நாற்காலி செய்யமுடியும்.  அதுவும் பிழைத்தால் ஒரு குழந்தைப் பொம்மையாவது மிஞ்சவேண்டும் என்பார். கி.ராவும் அதையேதான் செய்வார். வார்த்தைகளை வீணாக்கக் கூடாது, அவற்றை  பயன்படுத்த வேண்டும் என்பார். நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்று இல்லை. எல்லாமே நல்ல வார்த்தைதான்.

ஒரு முறை அவர் ஒரு கதை சொன்ன போது வாசகர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி கேட்டார். இதே கதையை வேறு மாதிரி சொல்லியிருக்கிறீர்கள், எது சரியான கதை? இன்று சொன்னதா அல்லது முன்னர் சொன்னதா?  கி.ரா சொன்னார் எழுத்து என்பது வாய்ப்பாடு அல்ல. அது கற்பனை சார்ந்த விசயம். அது மாறிக்கொண்டேதான் இருக்கும். அது வாய்ப்பாடு போல இருந்தால் படைப்பாளிக்கு அங்கே என்ன வேலை.

கி.ராவின் இன்னொரு சிறப்பு சுருக்கமாகச் சொல்லி சிக்கலான ஒன்றை துல்லியமாக விளக்குவது. கதையிலே இரிசி என்ற வார்த்தை வருகிறது. குழந்தைக்கும் புரியும் படி விரசம் இல்லாமல் எப்படி சொல்வது. ‘நொங்கை வெட்டினால் மூன்று குழிகளிலும் நொங்கு இருக்கும். குழிகளே இல்லை என்றால்? குழியில்லாத நொங்கு இரிசி.’

பலருக்குத் தெரியாத இன்னொரு ஆச்சரியமான விசயம் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து புத்தகம் ஒன்று வெளியாகியிருக்கிறது. டில்லியிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து தரும்படி. இவர் எழுதினார் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று. அவர்கள் விடவில்லை. தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள். ’ஆங்கிலம் படித்த  ஒருவர் புத்தகத்தை வாசித்து உங்களுக்கு பொருளை சொல்லட்டும். நீங்கள் அதை உங்கள் மொழியில் எழுதி தாருங்கள். அது இலகுவாக மக்களுக்குப் போய்ச் சேரும்’ என்றார்கள்.  

அப்படியே அவர் செய்து புத்தகம் வெளிவந்துவிட்டது. இது மிகச் சிறப்பான ஏற்பாடாகத் தெரிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்ப்பது என்பது சரிவராது. கு.அழகிரிசாமி அதைத்தான் விரும்புவார். வசனங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிற்கும், ஆனால் பொருள் மாறிவிடும். சேக்ஸ்பியருடைய ஹாம்லெட்டில் வரும் புகழ்பெற்ற வசனம் ‘there’s the rub’, ’அதுதான் தேய்ப்பு’ என்று மோசமாக மொழிபெயர்க்கப்படும். கி.ராவின் புதிய மொழிபெயர்ப்பு உத்தி நல்லாய்த்தான் இருக்கிறது.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு கம்பளத்தின் பின்பக்கத்தை பார்ப்பது போல. அளவு சரி; அதே நிறங்கள். நூல்களின் எண்ணிக்கை மிகச் சரியாக இருக்கும். ஆனாலும் பின்பக்கம் முன்பக்கம்போல இருப்பதில்லை. கி.ரா செய்தது போல  மொழிபெயர்ப்பு இருந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்றே  படுகிறது.  

கி.ராவின் கதைகளில் எனக்கு ’நிலைநிறுத்தல்’ மிகவும் பிடிக்கும். அவர் தன்னுடைய கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாசாணம் என்று ஒரு பையன் பஞ்சம் பிழைக்க ஒரு சின்ன ஊருக்கு வருகிறான். வெகுளி. எல்லோருக்கும் அவன் கேலிப்பொருள். கடுமையாக உழைப்பான். மற்றவர்களுடைய கேளிக்கைக்கு கடவுளால் படைக்கப்பட்டவன். அவன் மணமுடித்து பெண்ணை கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறான். பெண்சாதி  கூட சில நாட்களில் அவனை மதிப்பதில்லை. ஒருமுறை மழை பொய்த்துவிட்டது. ஊரிலே தண்ணீர் இல்லை. உணவு இல்லை. கொடிய பஞ்சம். மாசாணம் ஒரு சங்கல்பம் செய்கிறான். கோயில் வாசலில் போய் உட்கார்ந்து மழை வரும்வரை உண்ணாவிரதம் என்றான். மூன்று நாள் . அவன் அசையவில்லை. இறுதியில் மழை கொட்டுகிறது,  ஊராருக்கு அவனில் பெருமதிப்பு ஏற்படுகிறது. அப்படி கதை முடிகிறது.

கி.ரா தன் கதையைத்தான் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அவர் நோயுடன்தான் வாழ்ந்தார். ‘உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடி. உன்னை நிலை நிறுத்திக்கொள்’ என்பது சேதி.  நாங்கள் கலந்துகொண்ட   மெய்நிகர் சந்திப்பில் கி.ரா அதைத்தான்  சொன்னார். ’சிறுவயதிலேயே நான் நோய் காரணமாக ஆஸ்பத்திரிகளில் கிடந்தேன். இதோ இப்போதும் நான் ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன்.’ இதை அவர் சொன்னது 6 டிசெம்பர் 2020 அன்று. ஐந்து மாதங்கள் கழித்து இறந்துபோனார். கி.ராவின் எழுத்துகளுக்கு தடையாக இருந்தது அவருடைய உடல்நிலைதான். இந்த தடங்கலில் இருந்து அவர் மீண்டு வருவார் என நினைத்தோம். இதுவே கடைசியாக அமைந்துவிட்டது.

END

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2022 05:05

A. Muttulingam's Blog

A. Muttulingam
A. Muttulingam isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow A. Muttulingam's blog with rss.