Karthik Balasubramanian's Blog
August 24, 2024
மிருகம்

அதிகாலையில் வரும் வாட்ஸப் குறுஞ்செய்திகளின் கீச்சிடல்கள் எரிச்சலைக்கிளப்பத் தொடங்கியிருந்தன. அவை எதைப் பற்றியதாக இருக்கும் என்று லஸண்ட்ராவுக்குத் தெரியும். அப்பார்ட்மண்ட்டின் அசோஸியேஸன்குழுமத்திற்கென்றே தனியாகப் பிரித்து எலி சத்தமிடுவதைப் போலக் கீச்சிடும்ஒலியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.
காலையிலேயே அதைப் பார்த்து அன்றைய தினத்தைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்தவளாக, படுக்கையை உதறி எழுந்தாள். வானம் மேகமூட்டமாயிருந்தது. இரவில் வரைந்து வைத்திருந்த அக்ரலிக் ஓவியத்தைப் பார்த்தாள். கருப்பு, மஞ்சள், சாம்பல் வண்ணங்களில் தீட்டப்பட்ட அரூப உருவங்கள் பின் இருக்க, முன்னே மரத்தாலான ஒரு பழைய நாற்காலியைவரைந்து வைத்திருந்தாள். அது ஒருவிதமான ரஸ்டிக் தன்மையுடன் நன்றாக வந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு மாதக் காலமாக இதைத்தீட்டிக்கொண்டிருக்கிறாள். நேற்று ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது என்ற நம்பிக்கை வந்த பின்புதான் தூங்கச் சென்றாள். காலையில் எழுந்து பார்த்தால், வரைந்த வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறதோ என்று தோன்றியது.
அதைப் பற்றி யோசித்தபடி பால்கனியின் பிரஞ்ச் மாடல் கதவைத் திறந்தாள். குளிர்காற்று காது மடல்களை உரசிச் சென்றது. கேத்தரீன் ஆன்ட்டி வெளியே சென்றிருப்பாள் போல. அவளுடைய அறை காலியாக இருந்தது.
வாசல் கதவில் நகங்கள் பிறாண்டும் சத்தம் கேட்டது.
வந்துவிட்டானா?
மணியைப் பார்த்தாள். சரியாக எட்டு. பிரிட்ஜில் எடுத்து வைத்திருந்த சாதத்தைக்குழைவாகப் பிசைந்து அதில் பாலைக் காய்ச்சி ஊற்றினாள். பூனை உணவு கொஞ்சம் வாங்கி வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். சுவரில்ஒட்டி வைத்திருந்த மளிகை பட்டியலில் குறித்துக்கொண்டாள்.பிசைந்ததிலிருந்து ஒரு கை சாதத்தைத் தனியே எடுத்து ஒரு கிண்ணத்தில்வைத்தாள்.
கதவைத் திறந்ததும் பழுப்புக்கோடன் நின்று கொண்டிருந்தான். முதுகைக்கீழ்ப்பக்கமாக வளைத்து முகத்தை மட்டும் ஏறிட்டு அவளைப் பார்த்தான். அவள் அவனுக்கான கிண்ணத்தில் நொசித்த பால் சாதத்தை அள்ளி வைத்தாள்.சாப்பிடத் தலை குனிந்தவன் நிமிரவே இல்லை. ‘சளக் சளக்’ சத்தம் மட்டும் வந்தது. ஒரே மூச்சில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டான். சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று இவள் ஒருமுறை பார்த்துக்கொண்டாள். யாருமில்லை. வராந்தா காலியாக இருந்தது. பெரியவர்களைவிடச்சிறுவர்களைப் பார்த்தால்தான் பயம். அவர்கள்தாம் இவள் பழுப்புக்கோடனுக்குச்சோறிடுவதைப் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு நாவால் ஒரு முறை முகத்தைச் சுற்றி சுழற்றினான்.பின்பு அவளை வாஞ்சையாக அண்ணாந்து பார்த்தான். இவள் குனிந்து, “சரி கிளம்பு கிளம்பு” என்று கிசுகிசுத்து ஜாடை செய்தாள். கதவைச் சாத்தப்போனபோது வழக்கம்போல அவன் அங்கிருந்து நகர்ந்திருக்கவில்லை. கதவு திறந்திருந்த இடுக்கின் வழி வால் மட்டும் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது. “உஷ்” என்று சத்தமெழுப்பினாள். வாலை உள்ளிழுத்துக்கொண்டு கிளம்பினான்.
லஸண்டராவுக்கும் பழுப்புக்கோடனுக்கும் இடையில் இது ஓர் உரையாடலாகநிலைபெற்றுவிட்டது. அவன் கிளம்புவதற்கு அவளிடமிருந்து அந்தச் சத்தம் வர வேண்டும். அது ஒருவிதமான விடைபெறல்.
உஷ்!
O
சோம்பல் முறித்துக்கொண்டு அடுப்பில் பிளாக் டீயை வைத்தாள். எடுத்து வைத்திருந்த அந்தப் பால் சாதத்தில் சர்க்கரையை ஒரு ஸ்பூன் அள்ளி நிரவினாள். மெதுவாக ஒவ்வொரு ஸ்பூனாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்.
டீ கொதிப்பதற்காகக் காத்திருந்த இடைவெளியில் அவளை அறியாமலேதன்னிச்சையாக மொபைலை எடுத்து வாட்ஸப்பை பார்த்துவிட்டாள். அசோஸியேஸன் க்ரூப்பில் வரிசையாகச் செய்திகள் வந்து குவிந்திருந்தன. ‘எலிப் புழுக்கைகள்’ என்று திட்டி முணுமுணுத்துக்கொண்டே அவற்றை வாசிக்க ஆரம்பித்தாள்.
“பூனைகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவை கிடையாது. இருப்பவற்றிலேயேஅவைதான் சுத்தம் பேணுபவை. செல்வத்தையும் குபேரனையும்கொண்டுவருபவை.”
“இங்கே நாம் வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிப் பேசவில்லை. வளர்ப்புப்பூனைகள் வேண்டுமானால் ஒரு வேளை சுத்தமாக இருக்கலாம். ஆனால், தெருவில் திரியும் பூனைகள் சுத்தமாக இருக்கும் என்று நம்புவதற்கில்லை.அதிலும் நோயுற்றவையாகவோ அவற்றைப் பரப்புபவையாகவோ இருந்தால் என்ன செய்வீர்கள்?”
“உண்மைதான். இதிலும் அர்த்தமிருக்கிறதுதான்.”
“மியாவ்!!!”
“இங்கே தீவிரமான விவாதம் நடக்கும்போது மீம்களையும் ஜிப்களையும் அனுப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் – செயலாளர்.”
“இப்போதெல்லாம் இந்தப் பூமியே மனிதர்களுக்கானது மட்டும் என்று எண்ணிக்கொள்ளும் சுயநலம் அதிகமாகிவிட்டது.”
“பூனையோ புலியோ பூமியில் உல்லாசமாக உலா வருவது குறித்து யாருக்கும் புகாரில்லை. அப்பார்ட்மண்ட்டுக்குள் அவற்றை அனுமதிப்பதும் சோறிடுவதுமேஇங்கே பிரச்சினை.”
“பூனையிருந்தா எலித் தொல்லை இருக்காது.”
“Cats are connoisseurs of comfort!”
“எகிப்திய நாகரிகத்தில் அவை அற்புத அவதாரங்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அவை நன்மையைத் தம்மோடு அழைத்து வருகின்றன.”
“இது எகிப்து இல்லை. பாரத்!”
“பாரத் இல்லை. இந்தியா.”
“தனி வீடாக இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்? உங்கள் வீடு உங்கள் சுதந்திரம். இது அப்பார்ட்மண்ட். மற்றவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”
“பூனை பிடிக்காதவர்கள் நாயை வளர்த்துக்கொள்ளலாம். நாய் குரைக்கும்போதுபூனை ஓடிவிடும். ஹா ஹா!!”
“லஸண்ட்ராதான் தெளிவாகச் சொல்லிவிட்டாரே, அவரைத் தேடி வந்து கதவைத் தட்டும் பூனையைத் தன்னால் விரட்ட இயலாது என்று. அப்பூனைஅவ்வீட்டாரைக் காக்கும் தேவதையாகப் பார்க்கிறது. இதற்கு மேல் அவர்களின் உறவில் நாம் தலையிடுவது அநாகரிகம்.”
“பூனைகள் சுத்தமானவை, அவர்களுக்கு இடையே இருப்பது உன்னதமான அன்பு என்பதெல்லாம் இருக்கட்டும். பூனைகள் நோயுற்றவர்களுக்கும்முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானவை. அதிலும் தெருப்பூனைகள். தெரு நாய்கள் குழந்தைகளைத் துரத்திச் சென்று குதறி எடுக்கும் வீடியோக்களை இதே வாட்ஸப் குழுமத்தில்தானே யாரோ பகிர்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும் பார்த்தும் இப்படிச் சிலர் பேசுவது வேதனைக்குரியது. ஒருவருக்குப் பூனையின் மீது உண்மையில் அக்கறை உள்ளதென்றால் அவற்றை அனுமதிக்கும் அப்பார்ட்மண்ட்கள் இங்கே ஆயிரம் உள்ளன. அவற்றில் ஒன்றைத்தேர்வு செய்துகொள்ளட்டும்.
மற்ற பிராணிகளிடம் காட்டும் அன்பை ஏன் நீங்கள் மனிதப் பிறவிகளிடம்காட்டுவதில்லை. வயதான தொழுநோயுற்ற பிச்சைக்காரன் பிச்சை கேட்டு வந்து நீங்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பிரியாணி கொடுத்தால் அவன் தினம் அதே வேளை வந்து கேட்கத்தான் செய்வான். அதற்காக அவனை உள்ளே அழைத்துக்கூப்பிட்டு வைத்துக்கொள்ளும் அன்னை தெரேஸாக்களா பூனைகளைக்கொஞ்சும் எல்லோரும்?”
“உண்மைதான்”
“உண்மை”
“வாஸ்தவம்”
“எல்லோருடைய ஒப்புதலும் முக்கியம்.”
வரிசையாக அசோஸியேஸன் குழுமத்தில் நடைபெற்ற வாக்குவாதங்களைவாசித்து முடித்த பின்னர் அவளுக்கு எரிச்சலும் கோபமும் மண்டியது. போனை எடுத்து “பக் ஆப்” என்று எழுதி அந்த குழுமத்தில் அனுப்பிவிட்டு, அந்தக் குழுவிலிருந்து வெளியேறினாள்.
O
அவள் அதை அனுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் கேத்தரீன் ஆன்ட்டியிடமிருந்துஅழைப்பு வந்தது. அவள் எதற்காக அழைத்திருக்கிறாள் என்ன கேட்கப்போகிறாள் என்று வார்த்தை தவறாமல் லஸண்ட்ராவுக்குத் தெரியும். அதுவும் காலையில் அந்தப் போதனைகளைக் கேட்க நேரமோ பொறுமையோ இல்லை.மழை தூறியபடி இருக்கும் இந்தக் காலநிலைக்கு அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்திருக்கலாம். பால்கனி கதவைத் திறந்துவிட்டு, மழை கழுவியிருக்கும் ரேடியல் சாலையையும் அதற்கு அந்தப் பக்கமிருக்கும்ஏரியையும் பார்த்தபடி வேலை செய்வது அவளுக்குப் பிடிக்கும். ஆனால், அந்த வாட்ஸப் செய்திகள் அவளுடைய மனநிலையைக் கெடுத்துவிட்டிருந்தன. உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும். தன் அமைதியைக் கெடுக்கும் எதையும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. ஏற்கெனவே இப்படிப்பொறுத்தும் சகித்தும் தான் அனுபவித்ததெல்லாம் போதும் என்று எண்ணிக்கொண்டாள்.
இப்படித்தான் மனத்தை அரிக்கும் எதொன்றும் தன் பழைய நினைவுகளைக்கிளறுவதில் கொண்டுபோய் நிறுத்தும். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதீப்அழைத்திருந்தான். இன்னும் அவனிடம் இயல்பாகப் பேசும் அளவுக்குத் தான்இன்னும் சமநிலைக்குத் திரும்பவில்லை என்பதை அவள் அறிவாள்.
‘பின்னர் ஒரு நாள் நானே அழைக்கிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
‘பிரச்சினையில்லை, தேவையான நேரம் எடுத்துக்கொள்’ என்று அவ்வளவு நாகரிமாகப் பதில் அனுப்பிவிட்டு நிறுத்திக்கொண்டான். அதன் பிறகு அழைப்போ குறுஞ்செய்தியோ இல்லை. அவ்வப்போது இன்ஸ்டாவில்அவனுடைய ஸ்டோரிகளைப் பார்த்துக்கொள்வாள். உடனிருந்தபோது தன் மீதுஅவ்வளவு ஆக்கிரமிப்புகளைச் செலுத்தியவன், விலகி வந்ததும் இவ்வளவு நல்லவனாகவும் புரிந்துகொள்பவனாகவும் நடந்துகொள்வது அவளுக்கே ஆச்சரியமாகத் தெரிந்தது. இது நடிப்பில்லை. ஆனால், அதுவும் பொய்யில்லை. இரண்டும்தான் அவன்.
மெதுவாக தன் அடி வயிற்றைத் தடவிக் கொண்டாள். நெஞ்சு பக்கென்றுஅடைத்தது. மூச்சை இழுத்துவிட்டாள். “இட்ஸ் ஆல்ரைட்!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள்.
அலுவலகத்திலிருக்கும்போது மதியம் ஒரு தடவை, கிளம்பும் முன்னர் சாயங்காலம் ஒரு தடவை என்று கேத்தரீன் ஆன்ட்டி அழைத்திருந்தாள்.வீட்டுக்குப் போய் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அழைப்புகளைஎடுக்கவேயில்லை.
O
கேத்தரீன் ஆன்ட்டி இரவு உணவாக சப்பாத்தியும் லஸண்ட்ராவுக்குப் பிடித்தமுந்திரி அரைத்துவிட்ட கேப்ஸிக்கம் கிரேவியும் செய்து வைத்திருந்தாள். அவள் உடைமாற்றி வந்து சாப்பிட்டு முடிக்கும் வரை அதைப் பற்றி எந்தப் பேச்சையும்எடுக்கவில்லை. பசியிலிருக்கும் சமயங்களில் அவள் புலி போல உறுமுவாள் என்பது கேத்தரீனுக்குத் தெரியும். சாப்பிட்டு முடித்து, பொன் மஞ்சள் ஒளியின்கீழ் சோபாவில் அமர்ந்து டி.வி.யைப் போட்டாள். பாதியில் நிறுத்தியிருந்தநெட்பிளிக்ஸ் தொடரை ஓடவிட்டாள்.
மறுநாளிற்கான காய்கறிகளை நறுக்கியபடி கேத்தரீன் ஆன்ட்டி “காலையில் பாலன் கூப்பிட்டிருந்தார்” என்றாள்.
“ஹவுஸ் ஓனர் பாலனா?”
“ஆமா”
“என்னவாம்?” கண்களை டி.வி.யை விட்டு நகர்த்தாமல் கேட்டாள்.
“அவரும் அந்த வாட்ஸப் குரூப்ல இருக்கார். ஏன் இப்படி பண்றீங்க. பெட்ஸ்வளர்க்கக் கூடாதுங்கிறது அசோஸியேஸன் ரூல்தானே. அது நம்மஅக்ரிமண்ட்லயும் இருக்கு. பின்னே ஏன் இவ்ளோ பிரச்சினைன்னு கேட்டார்.”
இப்போது ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு,
“சொல்ல வேண்டிதானே நீங்க.. இதொண்ணும் வீட்ல வச்சு வளர்க்கல. அதுவாவருது. போகுதுன்னு.”
“நாம சோறுபோடப் போயிதானே வருது.”
“ஆன்ட்டி.. அது இத்துனூண்டு குட்டி. அதுக்குச் சோறு போடுறதுல நாம என்ன குறைஞ்சிடப் போறோம்?”
“அப்படியில்ல லஸ்ஸி. நாலு பேரு சேர்ந்திருக்கிற இடத்துல எல்லாரையும் அனுசரிச்சுப் போறதுதானே முறை?’
“அந்த நாலு பேருல ஒரு ஆளா ஒரு பூனை வரக்கூடாது. இல்ல?”
“வயசானவங்கலாம் இருக்காங்கன்னு..”
“நீங்களும் இந்த அப்பார்ட்மண்ட் ஆளுங்க மாதிரி பேசாதீங்க ஆன்ட்டி. நான் போயி தெருவுலருந்து அந்தக் குட்டிய இங்க தூக்கிட்டு வரல. அதுவா என் வீட்டு வாசலுக்கு வந்துச்சு. பாவம், நான் சோறு போட்டேன். அவ்ளோதான். எவன் என்ன சொன்னாலும் பாத்துக்கலாம்.”
“பாலனே வீடு மாறச் சொன்னா என்ன பண்றது?”
“என்ன என்ன பண்றது? இவ்ளோ பெரிய ஊர்ல நமக்கு வீடா இல்ல. மாறிப்போம்ஆன்ட்டி. விடுங்க.”
“லஸ்ஸி.. எல்லாத்துலயும் எடுத்தேன் கவுத்தேன்னு முடிவு எடுக்கிறது அவ்ளோசரியாப்படல எனக்கு. பொறுமையா யோசி. இது நல்ல வீடு. நல்ல அப்பார்ட்மண்ட். உனக்கும் ஆபிஸ்க்கு ரொம்பப் பக்கம். பதினைஞ்சு நிமிசம். அதுவுமில்லாம இந்த வீட்டுக்கு நாம எவ்வளோ செலவு பண்ணிருக்கோம். பைப், பால்கனி கார்டன், மேட் ப்ளோர் அது இதுன்னு அம்பதாயிரமாச்சும்ஆகியிருக்கும். எல்லாத்தையும் அப்படியே போட்டுப் போயிட முடியுமா?”
“ஏன் பாலன் காலி பண்ணச் சொன்னாரா?”
“அவர் எதுவும் சொல்லல. இப்போ நீதான் சொல்ற. எல்லாத்துலயும் அவசர அவசரமா, யோசிக்காம கொள்ளாம ஒத்த வார்த்தையப் பிடிச்சுட்டு நீதான் இப்படி நிக்கிற.”
“ஆன்ட்டி ப்ளீஸ். சுத்தி சுத்தியெல்லாம் பேசாதீங்க. பழசை எடுக்காதீங்க. தயவுசெய்து விட்டுருங்க.” என்று சொல்லிவிட்டு டி.வி.யை அணைத்துவிட்டு தன் அறைக்குள் போய்ப் பூட்டிக்கொண்டாள்.
வெறுமையாக இருந்தது. ஒரே ஒரு பூனையை ஆதரிப்பது அவ்வளவு குற்றமா? இந்தச் சின்ன முடிவுக்குக்கூட மற்றவர்களிடம் கூனி கை கட்டி வாய் பொத்தி அனுமதி கேட்டு நிற்க வேண்டுமா? இதைத்தானே பிரதீப் விசயத்தில் அப்பா சொன்னார். குழந்தை விசயத்தில் பிரதீப் சொன்னான். இருவரையும் விட்டு வந்தாகிவிட்டது. என் வாழ்க்கை மீதும் என் உடல் மீதுமே எனக்குச் சுதந்திரம் இல்லையா? இதையெல்லாம் யோசித்தபடி தூங்கிப் போனாள்.
O
அடுத்தடுத்த நாட்களில் பழுப்புக்கோடன் வருவதும் அவனுக்கு இவள் சோறிடுவதும் நிற்கவில்லை. கேத்தரீன் ஆன்ட்டி இரவில் இவளுடன் சேர்ந்துசாப்பிடாமல் தனியாகச் சாப்பிடுவதன் மூலமாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள். லஸண்ட்ராவோ இது எதையும் பொருட்படுத்தியதாகக்காட்டிக்கொள்ளவில்லை இருந்தாலும் அவள் மனத்துள் எல்லாம் ஓரமாக எறும்பைப் போல ஊர்ந்துகொண்டிருந்தது.
லஸண்ட்ரா சென்னையின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றின்மனிதவளத் துறையில் பிரதானப் பொறுப்பிலிருக்கிறாள். அன்றுஅதிகாலையிலேயே முக்கியமான பணியாளர் பயிற்சி வகுப்புகளைஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. நாள் முழுவதும் ஓட்டமும் நடையுமாகக்கழிந்தது. களைப்பின் காரணமாகச் சாயங்காலம் திட்டமிட்டிருந்த முக்கியமான சந்திப்பு ஒன்றை ரத்துசெய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
சாம்பல் வெளிச்சத்தில் வீட்டுக்கு வருவது அவளுக்குப் பிடிப்பதில்லை. வழியில் யாராவது பார்த்து பழுப்புக்கோடனைப் பற்றி விசாரிப்பார்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று அறிவுரை கூறுவார்கள். அப்போது அவர்கள் அதுவரை பார்த்திராத தன்னுடைய இன்னொரு முகத்தைக் காண நேரிடும். அப்படியானசந்தர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பினாள். அவளே தன்னை அமைதியானவளாகவும் எல்லாவற்றையும் இலகுவாகக் கடந்துபோபவளாகவும்மாற்றிக்கொள்ளும் முயற்சியிலிருக்கிறாள்.
பழுப்புக்கோடனைப் பார்த்ததும் அவளுள் பொங்கி வரும் அன்பும் ஆசுவாசமும்ஏனோ இந்த மனிதர்களைப் பார்த்தால் வருவதில்லை.
அப்பார்ட்மண்ட் கார் பார்க்கிங்கில் தன்னுடைய ஆல்ட்ரோஸை நிறுத்திவிட்டு வரும்போது வழியில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்ததைக்கவனித்தாள். பையில் ஏதாவது சாக்லேட்டுகள் இருக்கிறதா என்று பார்த்தாள். இரண்டு மூன்று கேட்பரி டாட்ஸ் சாக்லேட்டுகள் கிடந்தன. வழக்கமாக இவளைப்பார்த்ததும் கையசைத்து ‘ஹாய் ஆன்ட்டி’ என்று சொல்லிப் புன்னகைக்கும்யாரும் அன்று இவளைக் கண்டுகொள்ளவேயில்லை. விளையாட்டு மும்மரமாயிருக்கும் என்று சமாதானம் கொண்டாலும் அதை உறுதிப்படுத்துவதற்காக இவளே அவர்கள் பக்கத்தில் போய், “ஹாய் சோட்டூஸ்” என்றாள்.
விளையாட்டு தடைப்பட்டது. அவர்களுக்குள் கண்களால் ஏதேதோ ஜாடை பேசினார்கள். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சோனு மட்டும் ‘ஹாய் ஆன்ட்டி’என்றாள். வாட்ஸப் குரூப்பில் தொழு நோயாளிகள் பற்றிய கருத்தை முன்வைத்தபாயலின் பெண்தான் சோனு என்றழைக்கப்படும் சோனம்.
இவள் அவளைப் பார்த்து சாக்லேட்டை நீட்டினாள். எப்போதுமில்லாத வழக்கமாக அதை வாங்க மறுத்துவிட்டாள்.
ஏன் என்ன என்று சுதாரிப்பதற்குள் அவர்கள் அனைவரும் அங்கிருந்துஆளுக்கொரு திசையில் ஓடி மறைந்தார்கள். ஒரு நிமிடம் அந்த மொத்த அப்பார்மண்ட்டில் தான் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதாய்த்தோன்றியது. சாக்லேட்டை தூக்கி அப்படியே தரையில் எறிந்துவிட்டு தன் வீட்டுக்குச் செல்ல மாடிப்படியில் ஏறினாள். கால் சோர்ந்து துவண்டன.
O
கழற்றி வீசப்பட்ட ஒரு துணியைப் போல சோபாவின் மேல் கிடந்தாள். மனம் வெறுமையாக இருந்தது.
கேத்தரீன் ஆன்ட்டி, “டீ வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.
அவளை அண்ணாந்து பார்த்து, “யெஸ் ப்ளீஸ்!” என்றாள்.
“டிரஸ் மாத்திட்டு வந்துடுறியா?”
“இல்ல.. நீங்க டீ எடுத்துட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கும் சேர்த்து” என்பதை அழுத்திச் சொன்னாள்.
கேத்தரீன் ஆன்ட்டி சிரித்தபடி தலையாட்டினாள். தன்னுடைய எதிர்ப்பு கவனிக்கப்படுவதும் அது குறித்து லஸண்ட்ரா கவலை கொண்டிருப்பதும்கேத்தரீனுக்கு உள்ளுக்குள்ளே மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பால்கனியின் திரைச் சீலைகளை விலக்கிவிட்டு இரண்டு கதவுகளையும் திறந்து வெளிக் காற்று உள்ளே வர அனுமதித்தாள். சில்லென்று வாடைக் காற்று வீசியது. கேத்தரீன் டீ கோப்பைகளைக் கொண்டு வந்து டீப்பாயின் மேல் வைத்தாள்.
மழை பெய்யும் நாட்கள் எவ்வளவு சுலபமாக ஒரு உரையாடலைத் தொடங்க உதவுகின்றன என்று நினைத்தப்படி, “இன்னிக்கும் மழை வரும் போல இருக்கே!” என்று கேத்தரீன் ஆன்ட்டியைப் பார்த்துக் கேட்டாள்.
“ஆமா, தெனம் இதே வேலை. சாயங்காலம் சாயங்காலம் மழ வந்துடுது.. ச்சைக்”
“அட.. மழை வந்தா நல்லதுதானே ஆன்ட்டி.”
“எனக்கு வெயில்தான் புடிக்கும்.”
இன்னும் அவள் கோபத்திலிருக்கிறாள். அப்படியான பொழுதுகளில்தான்சம்பந்தமில்லாமல் இவள் பேசும் எல்லாவற்றுக்கும் எதிர்த்துச்சொல்லிக்கொண்டிருப்பாள். அதை நீவிச் சரி செய்ய உடலோ மனமோஒத்துழைக்கவில்லை. எனவே பதிலுக்குப் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“இன்னிக்கு பிரதீப் வீட்டுக்கு வந்திருந்தார்.”
அப்பெயரைக் கேட்டதும், லஸண்ட்ராவுக்குத் தூக்கிவாறிப்போட்டது. அதுவரை தளர்வாக முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தவள் சட்டென ஈட்டிபோல நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
“எங்கிட்ட அவன் ஒரு வார்த்தை சொல்லல”
“அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.”
“என்ன விசயமாம்?”
“மெல்பர்ன் கிளம்புறாராம்.”
“மெல்பர்னுக்கா?”
“ஆமா.. ஏதோ ஏஆரோ பிஆரோ வந்துடுச்சாம். கிளம்புறேன்னு சொல்லிட்டுப்போக வந்தார்.”
இதைக் கேட்டதும் அவளுக்கு சட்டென தலைபாரம் அழுத்தியது. ஏற்கெனவே உடலும் மனமும் இளகிப் போயிருந்த நேரத்தில் இந்தச் செய்தி அவளை இன்னும் இளக்கியது.
“பிஆர் கிடைச்சிடுச்சா. எங்கிட்ட அதைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல.”
“உனக்கு கால் பண்ணாராம். நீதான் பிறகு கூப்பிடுறேன்னு சொல்லிட்டுபின்னாடி கூப்பிடவே இல்லயாமே. உன்னத் தொந்தரவு பண்ண வேணாமேன்னுதான் நீ இல்லாத நேரம் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார்.”
“பிறகு கூப்பிடுறேன்னு சொல்லிட்டுக் கூப்பிடலனா, இன்னொரு தடவ கூப்பிட மாட்டானாமா? ஒரு வார்த்தை சொல்றதுல என்ன குறைஞ்சிடும்?”
“லஸ்ஸி.. நாமளும் அவர் சொன்னத ஒரு வார்த்தை கேட்டிருந்தா இந்த நிலைமைக்கே வந்திருக்க மாட்டோமே?” என்றதும் லஸண்ட்ராவுக்குக் கோபம் தலைக்கேறியது. அதை வெளிக்காட்டும் தெம்பு இல்லாமல் உடையத்தொடங்கினாள். அவள் முன்னால் அழுதுவிடக்கூடாது என்று எண்ணியபடிபார்வையை பால்கனிப் பக்கம் திருப்பினாள்.
கேத்தரீன் அவள் பக்கமாக வந்து அமர்ந்தாள். அவளுடைய முதுகைத்தடவியபடி, “பிரதீப்கிட்ட பேசுறியா? நான் கால் பண்ணித்தரவா?” என்றாள்.
“ஒரு மண்ணும் வேண்டாம்” என்று தலையை ஆட்டினாள்.
“நல்ல பொண்ணுல. ஒரு தடவை பேசு. அவர் மெல்பர்ன் போறதைக்கூட தள்ளி வச்சுடுவார். அவர் எல்லாத்தையும் மறந்துட்டார். மன்னிச்சுடுவார். நீ ஒரே ஒரு முறை..” என்று சொல்லி முடிக்கும் முன்பே, இவள் கத்தத் தொடங்கினாள்.
“அவன் யாரு என்னை மன்னிக்கிறதுக்கு. இதுல என் தப்பு எதுவுமே இல்ல. ப்ளீஸ்யு ஸ்டாப் வித்தின் யுவர் லிமிட்ஸ்!” ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
அந்தச் சத்தத்தில் கேத்தரீன் ஆன்ட்டி பதறி எழுந்தாள். அவள் கண்ணும்கலங்கிப் போனது. “உங்கிட்ட வந்து பேசினது என் தப்புத்தான். யார் சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்க. அவ்வளவு அடம். மொத்த அப்பார்ட்மண்ட்டே ஒரு விசயத்தை வேண்டாம் சொல்லுது. மீறி, அப்படித்தான் பண்ணுவேன்னு அவ்ளோ அடம் பிடிக்கிற. அது வெறும் மிருகம். ஞாபகம் வச்சுக்கோ. மக்கள் மனுசர் முக்கியம். நாளைக்கு நீ தனியா இருக்கும்போது அந்தப் பூனையா உன்கூட நிக்கும்? அந்தப் பூனைக்குச் சோறு போட்டு எல்லாப் பாவத்தையும் கழுவிக்கிடலாம்னு பாக்கிற. இல்ல?”
“ஷிட்.. ஷிட்.. உங்க எல்லாத்துக்கும் அந்தப் பூனைதான் பிரச்சினை இல்லையா? விடுங்க அதை நான் பாத்துக்கிறேன்.” என்று கோபமாகச் சொல்லியபடிவீட்டைவிட்டு வெளியே கிளம்பினாள். வெளியேறும்போது வாசற் கதவை அடித்துச் சாத்தியதில் டொப்பென்று சப்தமெழுப்பியது.
O
காரை எடுத்துக்கொண்டு எந்த இலக்குமின்றி தோன்றிய பக்கமெல்லாம் போனாள். மழை அடித்துப் பெய்தது. இ.சி.ஆர். சாலையில் ஓரமாகக் காரை நிறுத்தி அழுதாள். மழை நின்றதும் வீட்டுக்குத் திரும்பினாள்.
அவளுக்கான இரவு உணவு சாப்பாட்டு மேசை மேல் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பசி இல்லை. ஆனால், தலை வலித்தது. எல்லோருக்கும் என்ன பிரச்சினை? பூனையா? இல்லை, அவள் அவளாக இருப்பதுதான் பாயலில்ஆரம்பித்து அப்பா வரை அத்தனை பேரையும் உறுத்துகிறதா?
இவள் வந்த சற்று நேரத்தில் வாசல் கதவைப் பிறாண்டும் சத்தம் கேட்டது.கேத்தரீன் ஆன்ட்டியின் அறை உட்புறமாகச் சாத்தப்பட்டிருந்தது. வேகமாகப்போய் கதவைத் திறந்தாள். பழுப்புக்கோடன் நின்றுகொண்டிருந்தான். மழையில்நனைந்திருப்பான் போல, முடிகள் உடலோடு ஒட்டியிருந்தன. இடது முன்னங்காலால் உடலின் முடிகளைக் கோதிக்கொண்டான்.
சட்டென கதவைச் சாத்தினாள். திக்கற்று அப்படியே நடு ஹாலில்நின்றுகொண்டிருந்தாள். மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் கலைந்ததேனீக் கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டிருந்தன. மெதுவாக மூச்சை இழுத்து உள் வாங்கி வெளியிட்டாள். சமையலறைக்குச் சென்று மதியம் மீதமிருந்தசாதத்தை எடுத்தாள். இவளுக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த பாலை அடுப்பில் வைத்து லேசாகச் சுட வைத்தாள். மனம் படபடவென அடித்துக்கொள்ளவெளியே வாங்கி வந்ததையும் அதோடு சேர்த்துக் கலந்தாள்.
அதை எடுத்துக்கொண்டு அதற்கென்றே வைக்கப்பட்டிருந்த பிரத்தியேகக்கிண்ணத்தில் ஊற்றினாள். கைகள் நடுங்கின.
எப்போதும் ஊற்றியதும் ஓடிப் போய் தலையைக் கவிழ்த்துக்கொள்ளும். அன்று பக்கத்தில் போனதும் ஒரு கணம் தயங்கியது. உடலைக் குறுக்கி மெதுவாக நிமிர்ந்து இவளை அண்ணாந்து பார்த்தது. கள்ளமற்ற ஒளியுமிழும் அதன் கண்களை இவளால் பார்க்க முடியவில்லை. சட்டென தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். நுகர்ந்து பார்த்துவிட்டுத் தயங்கியபடி ஒருமுறை நக்கிப் பார்த்தது. மீண்டும் அதே போலத் தயங்கித் தயங்கி இரண்டு மூன்றுமுறைநக்கிய பின் மொத்தமாக எல்லாவற்றையும் குடித்து முடித்தது.
அது குடித்து முடித்ததும் கதவைச் சாத்தும் போது எட்டிப் பார்த்தாள். அதுஅவளுக்காகக் காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பிப் போயிருந்தது. உடல் முழுதும் கனத்தது. அவளுடைய பாரத்தையே அவளால் தாங்க முடியவில்லை. சோபாவில் போய் பொத்தென அமர்ந்தாள்.
கொட்டும் மழையில் பாழடைந்த அந்த அப்பார்ட்மண்ட்டின் கார் பார்க்கிங்கின்வெளிப்புறம் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறாள். சுற்றிலும் இருளும்மழையும் தவிர ஒன்றுமில்லை. அடித்துப் பெய்யும் மழையில் தன்னையே கரைத்துக்கொள்ள விரும்புகிறவளைப் போல வானத்தை அண்ணாந்து பார்த்து நின்றுகொண்டிருந்தவளின் காலை பழுப்புக்கோடன் வந்து உரசியது. அந்நேரம்சரியாக அடி வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு மின்னல் வெட்டியது. மின்னலின் ஒளி கண்ணில் பட்டுக் கூச விழித்துக்கொண்டாள். பின்னர் மிகச் சத்தமாக இடி இடித்தது. நடுங்கும் கைகளால் காதுகளைப்பொத்திக்கொண்டாள்.
களைப்பில் அப்படியே சோபாவிலேயே தூங்கிப் போயிருந்தவள் கடிகாரத்தைப்பார்த்தாள். மணி மூன்றரை. வெளியில் மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
முடிக்கப்படாத அந்த அரூப நாற்காலி ஓவியத்தைத் தீட்டத் தொடங்கினாள். தேன் வண்ணத் தைலம் கொண்டு தீட்டப்பட்டிருந்த அந்த நாற்காலியின் மேல் பழுப்புக்கோடனை வரைந்தாள். அவளைக் கடைசியாக அண்ணாந்து பார்த்த அந்தக் கள்ளமற்ற கண்களைக் கொண்டுவர அவள் நிறைய மெனக்கெடவேண்டியிருந்தது. ஒருவழியாக பழுப்புக்கோடனை அந்த நாற்காலியில்வரைந்து முடித்து அந்த ஓவியத்தை நிறைவு செய்யவும் வெளியே மழை நின்று செந்தளிர் வெளிச்சம் வரவும் சரியாக இருந்தது. இனி எப்போதும் நிரந்தமாகப்பழுப்புக்கோடனைத் தன்னோடே வைத்துக்கொள்வாள்.
சற்று தள்ளி வந்து மெத்தையில் அமர்ந்தபடி அந்த ஓவியத்தைப் பார்த்தாள். எல்லாமும் சரியாக வந்திருந்தது. பழுப்புக்கோடனின் வால் மட்டும் கேன்வாஸைவிட்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவள் ‘உஷ்!’ என்றாள். பழுப்புக்கோடன் தன் வாலை உள்ளிழுத்துக்கொண்டது.
O
February 29, 2024
ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது.
மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்டுப் போட்டிருந்த தட்டைச் சுற்றிப் பழப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் குமட்டியது.
வாயில் பிரஷை வைத்துக்கொண்டே அன்றைக்கு அணிவதற்குத் தேவையான சட்டை, பேன்ட்டை எடுத்து வைத்தேன். கட்டையில் ஆணி அடிப்பது, ரம்பத்தால் வறவறவென அறுப்பது, கம்பியைச் சுழற்சக்கரத்தில் கொடுத்துத் துண்டிப்பது என விதவிதமாகப் புதிய சத்தங்கள் வெளியிலிருந்து வரத் தொடங்கின. இன்னும் சில மாதங்களுக்கு இச்சத்தங்களுக்குப் பழகித்தான் ஆக வேண்டும்.
வாய் கொப்பளித்துவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். எங்கள் வீட்டை ஒட்டி புதிதாக ஒரு குடிசை எழும்பி நின்றது. அதன் வாசல், தெருவைப் பார்த்து இல்லாமல் என் படுக்கையறை ஜன்னல் பக்கமாக இருந்தது. அக்குடிசைக்குக் கதவு என்ற ஒன்று இல்லை. காடாத் துணியாலான திரையிட்டு அதன் வாசல் மூடப்பட்டிருந்தது.
இந்த இடத்துக்குப் பூமி பூஜை போட்ட நாளன்றுதான் நிவேதினி இரண்டு நாட்கள் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டு பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். முந்தைய நாள் சண்டையோ வாக்குவாதமோ எங்களுக்குள் எதுவும் ஏற்படவில்லை. கிளம்பிய அன்று காலையில்கூட வழக்கம் போலப் பாலை எடுத்துக் காய்ச்சி வைத்திருந்தாள். கிச்சனை ஒதுக்கி பாத்திரங்களைக் கழுவி அடுக்கியிருந்தாள். அவளுடன் இருந்த அந்த எட்டு மாதங்களில், அதற்கு முன்பும்கூட ஒரு முறை இப்படித் தனியே கிளம்பிப் போயிருக்கிறாள். அப்போது என்னையும் உடன் வரச் சொல்லி அழைத்தாள். நான் மறுத்துவிட்டேன். இந்த முறை அதை மனதில் வைத்தோ என்னவோ என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை போல என்றுதான் நினைத்தேன்.
“கொண்டு வந்து டிராப் பண்ணவா?”
“பரவால்ல.. ஓலா புக் பண்ணிருக்கேன்.” அவள் குரல் கட்டிப் போயிருந்தது. ஜலதோசம் பிடித்ததைப் போல முகம் சிவந்து கனத்திருந்தது. அவள் என் முகத்தைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்ததைப் போலத் தோன்றியது.
அதை உறுதி செய்துகொள்ளும் நோக்கில், “வீட்டுச் சாவி?” என்று கேட்டேன்.
கைப்பையினுள் எதையோ தேடியபடி, “என்கிட்ட ஒண்ணு இருக்கு. மிச்ச இரண்டு ஹால்ல தொங்குது” என்றாள். உறுதிசெய்துகொண்டேன்.
அதற்குமேல் கேட்பதற்கு எதுவுமிருக்கவில்லை. திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் எங்களிருவருக்குமிடையே அன்யோன்யம் கூடிவரவில்லை. தேவைப்படும்போது பற்பசையுடன் பரஸ்பரம் உடல்களையும் பகிர்ந்துகொள்ளும் அறைவாசிகளைப் போலவே பழகி வந்தோம். சண்டைகள்கூடப் போட்டுகொண்டதில்லை. ஒருவருக்குப் பிடிக்காத ஏதாவது ஒன்றை மற்றொருவர் செய்தால் அதை வேறு ஒருவருக்கு எடுத்துக்கூறி எச்சரிப்பது போலச் சொல்லிவிட்டுப் போய்விடுவோம். பல நேரங்களில் அந்த முனைப்புகூடக் காட்டாமல் அனுசரித்துக்கொள்வதும் உண்டு. வெளியில் பார்ப்பவர்கள் வித்தியாசமாகக் கேட்கிறார்கள் என்பதற்காகவே ஒருவரை ஒருவர் பன்மையில் விளிப்பதை நிறுத்திக்கொண்டோம்.
முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டால் பிள்ளை பெறுவதில் சிக்கல் வரலாம், பணிவிடுப்பை விரைவுபடுத்த முடியாது என்றெல்லாம் எச்சரித்த யாரும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூறவில்லை. திருமணத்தின்போது எனக்கு முப்பது மூன்று அவளுக்கு முப்பத்திரண்டு.
இரண்டு நாட்களில் திரும்பி வருவதாகச் சொன்னவள் இரண்டு மாதங்களாகியும் வரவில்லை. இடையில் வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பிக் கேட்டபோது ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் வந்தது. இடையில் ஒருமுறை அழைத்தபோது பிறகு தானே கூப்பிடுவதாகச் சொல்லித் துண்டித்துக்கொண்டாள். அதன் பின் விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கும் அனுப்பப்பட்டக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் இல்லை. அப்போதே எனக்கு அவள் திரும்பமாட்டாள் என்று உறுதியாகத் தோன்றியது.
O
அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாராகி வெளியே வந்தபோதுதான் கவனித்தேன். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய கார் சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. நான் யாரையும் துடைத்து வைக்கச் சொல்லவில்லை. எங்கள் தெருவிலேயே சிலர் இதற்கென்று தனியாக ஆள் அமர்த்திச் சுத்தம் செய்கிறார்கள். என்னுடைய காரைத் தோன்றும்போது நானே துடைத்துக்கொள்வதே வழக்கம். புதிதாக வந்திருக்கும் யாராவது கார் மாற்றித் துடைத்திருக்கக் கூடும்.
பொருட்களை வாங்கி, அவற்றைத் துடைத்துத் துடைத்து வைத்துக்கொள்ளும் ஆட்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். நிவேதினி அப்படித்தான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வைத்துக்கொள்வாள். சின்னத் தூசுத் துணுக்கு கண்ணில்படக் கூடாது. அவள் துணிமேல் என் துணி கிடக்கும்போது அதைத் தனியேத் தன் விரல் நக நுனியால் தூக்கி எடுத்துப் போடுவதை நானே பார்த்திருக்கிறேன். கோபம் வரும். காட்டிக்கொண்டதில்லை.
சுத்தம் செய்வதிலேயே இந்தப் பெண் தன் ஆயுளைக் குறைத்துக்கிறாள் என்று நினைத்துக்கொள்வேன். இரவில் உறவுகொண்ட பின்பு, அது எத்தனை மணியாக இருந்தாலும் குளித்துவிட்டே வந்து படுப்பாள். அதுவும் குளித்த பிறகு என் கால் பக்கத்தில் அவள் தலைப்பக்கம் இருக்குமாறு வந்து படுத்துக்கொள்வாள். முதல்முறை அதைப் பார்க்கும்போது ஏனோ சட்டென்று எரிச்சல் படர்ந்தது. ஒவ்வொருமுறையும் மறுநாள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைப்பேன். தயக்கம் மேலிட அப்படியே விட்டுவிடுவேன்.
அவள் கிளம்பிப் போனதற்கு முந்தைய நாள் இரவும் நாங்கள் உறவுகொண்டிருந்தோம். அன்றும் வழக்கம்போல எல்லாம் முடிந்ததும் குளிக்கக் கிளம்பினாள். நான் அவள் திரும்புவதற்குள் தூங்கிப் போயிருந்தேன். இடையில் விழிப்பு தட்டியபோதுதான் அவள் கட்டிலுக்குக் கீழே போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
கையால் தொட்டதும் சுருண்டுகொண்டுவிடும் ரயில்புழுவைப் போல, அறையில் கசிந்த மெல்லிய நீல வெளிச்சத்தில் அவள் தன் கால்களுக்கு இடையே கைகளை நுழைத்துப் படுத்திருந்த காட்சி மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம் போலப் பதிந்துபோயிருக்கிறது.
O
மறுநாளும் கார் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. பறவை எச்சமிட்டிருந்த முன்பக்கக் கண்ணாடி தண்ணீர்விட்டுத் துடைக்கப்பட்டதுபோல பளிச்சென்று மின்னியது. பக்கத்திலிருந்த மின்சாரக் கம்பத்தில் சாய்ந்தபடி அவன் நின்றுகொண்டிருந்தான். வட இந்தியன். எண்ணெய் காட்டப்படாத தேங்காய்ப் பத்தைத் தலை, அழுக்கேறியது என்றோ சுத்தமானது என்றோ கூறிவிட முடியாத கோலத்தில் ஒரு சட்டை, வெட வெடக்கும் பூஞ்சையான உடல் என்று பரிதாபகரமானத் தோற்றத்திலிருந்தான். என்னைப் பார்த்ததும் தோளைக் குறுக்கி முதுகைச் சற்று முன்னால் வளைந்து சல்யூட் வைத்தான்.
“நீதான் துடைச்சதா?”
“ஆமா சார், பில்டிங்ல வேலை பாக்றன்” என்று வீட்டுப் பக்கத்துக் கட்டடத்தைக் காட்டினான்.
பர்ஸைத் திறந்து இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். அதை வேகமாக வாங்க மறுத்தவன் கொச்சைத் தமிழில் காரைக் காட்டி கட்டட வேலை ஆரம்பமாகிவிட்டதால் தூசு அதிகமாகப் படிகிறது என்றான்.
நான் மறுபடியும் அந்த ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினேன். சிரித்துக்கொண்டே பரவாயில்லை என்று சொல்லி மறுத்தான். குச்சி குச்சியாக, நரம்போடும் கைவிரல்கள். முழுதாக ஐம்பது கிலோ தேறமாட்டான்.
அவனைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தேன். அவன் மெதுவாகப் பக்கத்தில் வந்து தலையைச் சொறிந்தபடி சிகரெட்டைப் பார்த்துக் கைக்காட்டினான். பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவிக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கினான். மறுபடியும் ஒரு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
சலூன், ஓட்டல், கட்டட வேலைகள் என்று ஒவ்வொரு இடத்திலும் இவர்கள்தாம் வேலைக்கு இருக்கிறார்கள். மிகச் சொற்பமான சம்பளத்துக்கு இரவு பகலாக கடினமான வேலைகள் பார்க்கிறார்கள். அவனுக்கு நான் கொடுத்த இருபது ரூபாய் ஒன்றும் சிறிய தொகை கிடையாது. பிறகு ஏன் அதை மறுத்துவிட்டு சிகரெட் வாங்கினான்? ஏதாவது நீண்ட நாள் ஆசையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அதே நேரத்தில் நான் சிகரெட் குடிப்பதை அவன் முன்பே கவனித்திருக்கிறான். அதன் பொருட்டே ரூபாயை வேண்டாமென்று சொல்லி சிகரெட் கேட்டிருக்கிறான். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டேன்.
ஆனால், அது அன்றோடு நிற்கவில்லை. அனுதினம் வாடிக்கையாகிப் போனது. கார் சுத்தம் பண்ணுவதற்குத் தினம் ஒரு சிகரெட். அவன் தரும் அதீத மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை கையில் சிகரெட் குறைவாக இருந்தபோது அவனிடம் ரூபாய் கொடுத்து வாங்கி வரச் சொன்னேன். எவ்வளவு வற்புறுத்திக் கொடுத்தும் மிச்ச காசை வாங்க மறுத்துவிட்டான்.
ரூபாய் இல்லாமலாவது வெளியே கிளம்பியிருக்கிறேன். சிகரெட் இல்லாமல் வெளியே வருவதில்லை. நிவேதினிக்கு அந்த வாடையே ஆகாது. அவளிருந்த நாட்களில் வெளியே வந்து தெரு முக்கு வரை நடந்து போய் சிகரெட் குடித்துவிட்டு வருவேன். அவள் கிளம்பிப்போனது எனக்கு என் சுதந்திரத்தை மீட்டெடுத்ததைப் போல இருந்தது.
அந்தக் குடிசையில் அவன் தனியாக இல்லை. அவனுடன் ஒரு பெண்ணும் தங்கியிருக்கிறாள். அவள் அவனுடைய மனைவியாக இருக்க வேண்டும். அவளுக்கு நிச்சயமாகப் பதினெட்டு வயதுகூட இருக்காது. ஒரு நாள் குடிசைக்கு வெளியில், சிமெண்ட் பையின் மேல் அமர்ந்து, தெருவிளக்கு வெளிச்சத்தில் காய் நறுக்கிக்கொண்டிருந்தபோதுதான் அவளை முதன்முதலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் வாஞ்சையாகச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.
நல்ல அழகி. அந்த வயதுக்கே உரிய பளபளப்பு ஏறிய லட்சணமான முகம். நிவேதினியும் அழகிதான். இவள் வயதில் இன்னுமேகூடக் கவர்ச்சியாகவும் வாளிப்பாகவும் இருந்திருப்பாள். இவளைப் பார்த்ததும் நிவேதினியை நினைத்துக்கொள்வதன் வழியே மனம் எந்த இருளுக்குள் என்னை இழுத்துச் செல்கிறது என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அதற்குமேல் அங்கு நிற்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து வீட்டுக்குள் சென்றேன்.
ஒரு ஆள் படுத்தால் காலும் தலையும் இடிக்கும் அளவுதான் அந்தக் குடிசையின் பரப்பு. அதற்கு இன்னும் மின்சாரம் இழுக்கப்படவில்லை. எமர்ஜென்ஸி விளக்கு ஒன்று இருக்கிறது போலும். இருட்டிலும் சென்னையின் புழுக்கத்திலும் எப்படித் தூங்குகிறார்கள் என்று யோசித்தால் பாவமாக இருக்கும். பழைய போர்வைகள், தலையணைகளை எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டான். அப்போதுதான் ஜீதேந்திரா என்று பெயரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
அவ்வப்போது வீட்டு வாசலில் வந்து நிற்பான். எவ்வளவு நேரமாக அப்படி நின்றுகொண்டிருந்தான் என்று தெரியாது. தவறியும் அழைப்பு மணியை அடிக்கவோ, சார் என்று குரல் கொடுக்கவோ மாட்டான். நானாகப் பார்த்தால்தான் உண்டு. மிகுந்த கூச்சத்துடன் டீத்தூள், சக்கரை என்று ஏதாவது கேட்பான். நானாகத்தான் வெளியில் வாங்கியதில் மிஞ்சிப் போகும் உணவுகளை அவனுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருந்தேன். உணவுப் பொருட்களை மட்டும் அவன் மறுத்ததில்லை. எப்போது கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிவைத்துக்கொள்வான். குடும்பமாக இல்லாமல் தனியனாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு நான் அவன் மேல் கருணையோ நம்பிக்கையோ கொண்டிருந்திருப்பேனா தெரியாது.
அந்தப் பெண் எப்போதும் குடிசைக்கு வெளியில் வைத்துதான் சமைப்பாள். சுள்ளிகளையும் உடைந்த கட்டைகளையும் எடுத்துப் பொறுக்கி அடுப்புக்குத் தீமூட்டுவாள். என்ன பிரமாதமான பொருட்கள் அவளிடம் இருக்கக்கூடும்? ஆனால், இரவில் ரொட்டியை அடுப்பில் வைக்க எழும் அதன் வாசம் என் பசியைக் கிளறும். ஒரு வகையில் அந்த வாசனையாவது வயிற்றுப் பசியைக் கிளர்த்துவதோடு நின்றுவிடும்.
O
அன்று இரவு, அப்போதுதான் நல்ல மழை பெய்து சற்று வெறித்திருந்தது. மெல்லிய குளிர் சுவர்களின் வழியே ஊடுருவி அறைக்குள் பரவியது. ஜன்னலின் கதவுகளை லேசாகத் திறந்துவிட்டேன். சாரலைத் தூறியபடி மென்குளிர்க் காற்று அறைக்குள் வீசியது.
தூக்கம் வரவில்லை. நள்ளிரவு ஆகிவிட்டது. இடையில் போன மின்சாரமும் திரும்பியிருக்கவில்லை. என்னை இருளும் நிசப்தமும் சூழ்ந்திருந்தன. கண்களைத் திறந்தாலும் மூடினாலும் வித்தியாசம் தெரியவில்லை. அறையில் நிலவிய அதீத அமைதி என்னுடைய சமநிலையைக் குலைத்தது.
அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து வருவதைப் போல ஒலித்தது. முதலில் பூனையொன்றின் அழுகுரல் என்றுதான் நினைத்தேன். உற்றுக் கேட்டபோதுதான் பூனையுடையதல்ல என்பது புரிந்தது. அது ஒரு பெண்ணின் முனகல். ஜன்னல் பக்கமாக இருந்து வந்தது. பக்கத்துக் குடிசைப் பெண். அவளேதான். முதன்முறையாக அவள் குரலை இப்படியாகக் கேட்கிறேன். அந்தச் சத்தம் என்னை என்னவோ செய்தது. உடல் குறுகுறுத்தது. அந்தக் குளிரிலும் சட்டென்று உடலெங்கும் வெம்மை ஏறியது.
மெதுவாகக் கீழ் ஜன்னலின் கொக்கியைச் சத்தம் வராமல் எடுத்துவிட்டேன். லேசாகக் கதவைத் திறந்தேன். அந்தக் குடிசையின் வாசல் காடாத்துணியாலான திரையால் மூடியிருந்தது. ஆனால், உள்ளே மண்ணெண்ணய் விளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். திரையில் நிழல்களின் முயக்கம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் என் உள்ளங்கைகள் வியர்த்துவிட்டன. முயக்கப் பெருக்கில் சுற்றிலுமிருந்த நிசப்தத்தை அவர்கள் கருத்தில் கொண்டிருக்கவில்லை. ஜன்னல் கதவைத் திறந்ததில், அந்தச் சத்தத்தின் துல்லியம் கூடியது. எனக்கு உடல் பற்றி எரிந்தது. நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. கைகளைக் தொடையிடுக்கில் புதைத்துக்கொண்டேன்.
அப்படியொரு முனகலை, விரகதாபத்தின் ஒலிக்கூச்சலை அதற்கு முன்பு கேட்டதேயில்லை. பார்ன் படங்களில் எழுப்பப்படும் சத்தமெல்லாம் வேண்டுமென்றே கிளர்ச்சியூட்டப் புனையப்பட்டவை என்றே அதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். அதைப் பொய்யாக்கி திரையில் தெரிந்த நிழல்களின் இயக்கம் உச்சத்தைத் தொட்டு நின்றபோது நானும் தளர்ந்து போய்ப் படுக்கையில் விழுந்தேன்.
பொதுவாக உறக்கம் சுழற்றிவிடும். மாறாக, அன்று சுத்தமாக உறக்கம் கூடவில்லை. உடல் கதகதவென்றிருந்தது. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். மனத்துள் ஏதோ ஒன்று தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அது என்னவென்று என்னால் பிரித்தறிந்துகொள்ள முடியவில்லை. நடுவில் சற்று நேரம் தூங்கியதைப் போல இருக்கும். சுய நினைவு வந்து மறுபடியும் விழித்துக்கொள்வேன். ஏதோ ஒரு அமைதியின்மை உள்ளுக்குள் கிடந்து குடைந்தது.
அப்படி ஒருமுறை விழிப்பு வந்தபோதுதான் கீழே திறந்துவைத்திருந்த ஜன்னல் கதவை மெதுவாக இழுத்துச் சாத்தினேன். நான் கேட்டதும் பார்த்ததும் கனவா நினைவா என்று ஒரு கணம் குழம்பிப் போனேன்.
ந்டுவில் மின்சாரம் திரும்பி மெல்லிய நீல வெளிச்சம் அறையெங்கும் பரவியது. அப்போதுதான் சட்டென்று அந்தப் பிம்பம் மனத்துள் எழுந்து வந்தது. சுருண்டு கிடக்கும் ரயில் புழு. படுக்கைக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். ரயில் புழுவைப் போல நிவேதினி சுருண்டு படுத்துக்கிடந்தாள். வேகமாக எழுந்து விளக்கைப் போட்டேன். அறையில் என்னைத் தவிர யாருமில்லை. விளக்கை அணைக்காமல் அப்படியே படுக்கையில் விழுந்தேன்.
அலாரம் அடித்து விழித்தபோது கண்கள் எரிந்தன. அன்று அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ஆனால், அங்கிருந்து வெளியேறுவதுதான் நான் உடனே செய்ய வேண்டியது என்று தோன்றியது. குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பத் தயாரானேன்.
அலுவலகப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வீட்டுக் கதவைப் பூட்டினேன். எக்காரணம் கொண்டு அந்தக் குடிசைப் பக்கமாகப் பார்த்துவிடக்கூடாது என்று மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன்.
வாசலில், வழக்கம்போல கார் சுத்தமாகத் துடைத்துவைக்கப்பட்டிருந்தது. அவன் எப்போதும் நிற்கும் மின்சாரக் கம்பத்தில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்ததைக் கவனித்துவிட்டேன். அவனைக் கண்டுகொள்ளாமல் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டே காரில் ஏறினேன். அவன் முன்னேறிப் பக்கத்தில் வந்தபோது பட்டென்ற சத்தம்வர காரின் கதவை வேகமாக அடித்துச் சாத்திக்கொண்டேன். காரைக் கிளப்பி முன்னால் சென்று கண்ணாடியில் பார்த்தேன். அவன் கார் போகும் திசையைப் பார்த்தபடி நடுவீதியில் நின்றுகொண்டிருந்தான்.
நன்றி : உயிர்மை, ஓவியர் கருப்பன்.
O
September 21, 2023
கேண்மை

தமிழில்வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள்.அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காகமாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசியபுத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன்.இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமேஅயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில்வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப்பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.
அப்பாவின்ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாகஎன் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில்சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்காலத்தில் பிழைப்புக்காக சென்னை வந்துசேர்ந்திருந்தனர். அப்பாவுடன் ஒப்பிட அவருடைய நண்பர் அடைந்திருந்த உயரம் மிகப்பெரியது.அப்பாவுக்கு அரிசி மில் ஒன்றில் குமாஸ்தா வேலை. நண்பரோ அந்த மில்லைவிடப் பல மடங்குபெரிய பெரிய நிறுவனங்கள் சிலவற்றைத் தனதாக ஆக்கியிருந்தார்.
அப்பாஇறந்த சமயம் தவிர்த்து, அதற்கும் முன்பாக, என்னுடைய சிறு வயதுகளில் ஓரிரு முறை எங்கள்வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார். அப்படியான பொழுதுகளில் நாங்கள் வசிக்கும் சிறிய தெருவைஅடைத்துக்கொண்டு நிற்கும் அவருடைய பெரிய கார் கொடுக்கும் தனித்த மரியாதை அடுத்த ஒருவாரத்துக்கு என் நண்பர்கள் மத்தியில் அமலில் இருக்கும். அவர் வரும் பொழுதுகளில் வீட்டில்மெல்லிய பதற்றம் தொற்றிக்கொள்ளும். வீட்டின் வறுமையைக் காட்டி பல் இளிக்கும் ஒவ்வொருபொருளையும் அம்மாவும் அக்காக்களும் மறைக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பார்கள். அதிகம்உபயோகப்படுத்தாத, இருப்பதிலேயே புதியது போல் தோற்றமளிக்கும் டம்ளரில் அவருக்கு காபிபோகும்.
அவரின்தூய கதராடையும், தாட்டியமான உருவமும், சுத்தமாக ஒட்ட நறுக்கப்பட்டுப் பளபளக்கும் நகங்களும், எல்லாச் செய்கையிலும் மிளிரும் ஒருவித நளினமும்என் கண்களை அவரைவிட்டு நகர்த்த அனுமதிக்காது. அவருக்கு எதிரே கைவைத்த பனியன்போட்டுகுச்சி குச்சியான கைகால்களுடன் அப்பா பூஞ்சையாக புன்னகைத்தப்படி அமர்ந்திருப்பார்.
அப்பாவிடம்தன் வறுமை குறித்த அயர்ச்சியோ, வீட்டின் ஒழுங்கின்மை குறித்த அவமானமோ துளியும் வெளிப்படாது.வரதராஜன் சார் என்றில்லை, பொதுவாக நண்பர்களிடம் அதுவும் குறிப்பாக தன் பால்யகால ஸ்நேகிதர்களிடம்பேசும்போது பதின்களில் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடர்வதைப் போன்ற பாவனை அவரிடத்தில்வெளிப்படும். எதிலும் பற்றற்றிருக்கும் ஒருவித ஒட்டாத தன்மையும், அதே வேளையில் அவர்குரலில் ஆத்மார்த்தமாக வெளிப்படும் வாஞ்சையும்தான் அவருடைய ஸ்நேகிதர்களை அவர் பக்கமாகஈர்க்கும் வஸ்துக்களாக இருக்க வேண்டும்.
அப்பாவின்இறப்புக்கும் வரதராஜன் சார் வந்திருந்திருந்தார். விடைபெற்றுச் செல்லும்போது என் கைகளைப்பற்றி மெதுவாக அழுத்தியபோது உணர்ந்த குளுமையும் மென்மையும் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள்கழித்து இப்போதும் அவரின் வருகையைத் தனித்து நினைவில் இருத்தப் போதுமாக இருக்கிறது.
கல்லூரிமுடித்து வீட்டிலிருந்த சமயம். புத்தகங்கள் வாசிப்பதும் அவ்வப்போது எழுதிப் பழகுவதுமாய்பொழுது கழிந்துகொண்டிருந்தது. என்னுடைய ஓரிரு கதைகள் எழுத்து, கலைமகள் போன்ற சிற்றிதழ்களில்வெளியாகி கவனத்தைப் பெற்றிருந்தன. எழுதிப் பிழைக்க முடியாது என்று இதோ என் எண்பதுகளில்வந்திருக்கும் தெளிவு அப்பாவுக்கு அவருடைய ஐம்பதுகளிலேயே இருந்திருக்கிறது.
முதலில்அம்மாவிடம் சொன்னார். பின்பு அக்காக்களிடம். ஒரு நாள், என்னிடமும். எல்லாவற்றையும்நிறுத்திவிட்டு வேறு வேலை ஏதாவது எடுத்துப் பார்க்கச் சொன்னார். எதுவும் பலிக்கவில்லை.ஒரு நாள், என்னைக் கொண்டுபோய் அவர் நண்பர் வரதராஜனின் அலுவலகத்தில் நிறுத்தினார். அடுத்தநாளிலிருந்து அவருடைய நிறுவனத்தின் குமாஸ்தாக்களில் ஒருவனானேன். வேலைக்கு வரச் சொல்லிஅவர்கள் அனுப்பிய கடிதம் வந்துசேர்ந்தபோது நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.அக்கடிதத்தில் அக்கவுண்டன்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அக்கவுண்ட்ஸிலிருந்துஆபிஸ் பாய் வரை எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில்அது குறித்து சிறு சலிப்பும் வருத்தமும் இருந்தாலும், அந்தப் பெரிய நிறுவனமும் அதுகொடுத்த பொருளாதாரப் பாதுகாப்பும் என்னை மெது மெதுவாக ஒரு புதைமணல் போல உள்ளிழுத்துக்கொண்டது.
அங்குவேலைக்குச் சேர்ந்தும் எழுதுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. எழுதுவதற்கு எனக்குப் பிரத்தியேகமனநிலை எதுவும் தேவைப்படவில்லை. அது மட்டுமே அன்றாடத்தின் சலிப்புச்சுழலில் இருந்துதப்பிக்கும் ஒரு வழியாய் இருந்தது. என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிச் சொல்வதற்கும்எழுதுவதற்கும் எனக்கு நிறைய கதைகள் இருந்தன. எழுதிய கதைகள் சிற்றிதழ்களில் வந்து கொஞ்சம்கவனத்தைப் பெற்றன. எளிமையான என் மொழி சில விமர்சனங்களையும் பெற்றது என்றாலும் அது குறித்துபெரிய வருத்தம் எதுவுமிருக்கவில்லை. என்னுடைய எழுத்துக்களை இரண்டாம்முறை வாசித்தால்நிறைய விசயங்கள் புலப்படக்கூடும். ஆனால், நான் யாரையும் அப்படி ‘இரண்டாம்முறை வாசியுங்கள்’என்று கேட்க முடியாது. என்னுடன் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருந்தவர்களின் மொழியிலிருந்தும்அவர்களுடைய உலகிலிருந்தும் நான் நிறைய விலகியிருந்தேன். மொழி எளிமையாக இருக்கிறது என்றார்கள்.கதைகள் உணர்வுப்பூர்வமாக அன்றி ஒருவித செய்தித்தாள் தன்மையில் இருப்பதாக விமர்சித்தார்கள்.அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். ஆனால், அப்போதும் விற்பனைச் செல்வாக்கற்றஎன் கதைகளையும் புத்தகமாகப் போடுவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அப்படிப்போடப்பட்டவையும் ஓர் ஆயிரம் பிரதிகள் விற்பதற்கு முழுதாகப் பத்து ஆண்டுகள் பிடித்தன.இதோ, இப்போது புதிதாக வாசிக்க வருபவர்கள் அவற்றைத் தேடி வாசிக்கிறார்கள். அதே கதைகளைமெச்சுகிறார்கள். எனக்கு இரண்டும் ஒன்றாகத்தான் தெரிகிறது.
என்னுடையகம்பெனியில் இருப்பவர்களுக்கு நான் எழுதுவது பற்றித் தெரியும். ஆனால், அது குறித்துஅவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. அப்பாவின் வழியாகவோ சக ஊழியர்களின்மூலமாகவோ அப்பாவின் நண்பரும் என்னுடைய முதலாளியுமான வரதராஜன் சாரும் நான் எழுதுவதுகுறிந்துத் தெரிந்து வைத்திருந்தார். அவ்வப்போது ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. தமிழைவிடஅதில் இன்னும் தரமாகவே என் எழுத்து வெளிப்பட்டதாக நினைவு. ஆங்கிலப் பத்திரிக்கைகளில்கதைகள் வந்தால் மட்டும் அடுத்தமுறை பார்க்க வாய்க்கும்போது விசாரித்துக்கொள்வார். அடுத்தநிமிடமே ஒரு மெல்லிய புன்னகையுடன் நகர்ந்துவிடுவார்.

என்எழுத்து கண்டுகொள்ளப்படாதது குறித்தோ உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது பற்றியோஇன்று வரை எனக்கு எந்தப் புகாருமில்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதற்காகவேஎழுதுகிறேன். மேலதிகமான எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு கிடையாது. நான் யாரும் செய்யமுடியாத ஒன்றைச் செய்து முடித்ததாக நினைக்கவில்லை. சிறிது அப்பியாசமும் முயற்சியுமிருந்தால்யாராலும் எழுத முடியும். இப்போது கூப்பிட்டு விருது கொடுக்கிறார்கள். விருதுகள் பெற்றுக்கொள்வதில்எனக்கு ஒரே பிரச்சினைதான். பெரிய அரங்கங்களில் விழாக்களை வைக்கிறார்கள். அதைப் போய்வாங்குவதற்கு மூட்டு வலியோடு இருபது படிகள் ஏறி இறங்க வேண்டும். சமயங்களில் அரங்கங்களில்ஏ.சி.யை வேறு கூட்டி வைத்துவிடுகிறார்கள். நல்ல வேளையாக அதே நேரம், மறக்காமல் பொன்னாடையும்போர்த்திவிடுகிறார்கள்.
எனக்கும்குடும்பத்துக்கும் வயிறுக்குப் பங்கம் வைக்காத அளவுக்கு கம்பெனியிலிருந்து சம்பளம்வந்துகொண்டிருந்தது. அப்படியே கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. இடையில்கேட்டுக்கொண்டதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்தேன். அதில் சொற்பமாகக்கொஞ்சம் காசு வந்தது. அங்கு காசு விசயமில்லை. யாராவது வேண்டிக் கேட்டுக்கொண்ட பிறகுமறுப்பதற்கு கஷ்டமாயிருக்கிறது. அவ்வப்போது, முன்னுரை கேட்டு சில புத்தகங்கள் வரும்.வாசித்து ஒரு பக்கமோ இரு பக்கமோ எழுதிக் கொடுத்துவிடுவேன். அதில் கறாராக இருப்பதில்லை.விதவிதமான புத்தகங்கள் வரும். அப்புத்தகங்களில் எங்கேயாவது ஏதாவது ஒரு பொறி கிடைக்கும்.அதை எடுத்துக்காட்டி எழுதிவிடுவேன். அதேபோல என்னுடைய கதைகள் இன்னின்ன இதழ்களில்தான்வரவேண்டும் என்பது போன்ற வரையறையெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. கசடதபறவில் கதைகள் வந்தஅதே காலகட்டத்தில் குமுதத்திலும் என் கதைகள்வெளியாகின.
குமாஸ்தாவாகச்சேர்ந்து பதிமூன்று வருடங்களில் அஸிஸ்டண்ட் மானேஜராகி, மானேஜராகவும் ஆகியிருந்தேன்.பதவியின் பெயர் மாறியது. கொஞ்சம் சம்பளம் கூடியது. வேலை என்ற அளவில் பெரிய மாறுதல்ஒன்றும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மேஸ்திரிக்கான வேலை.
முதலாளிக்குவேண்டப்பட்டவன் என்ற பிம்பம் உடன் வேலைபார்க்கும் மற்றவர்களிடத்தே உருவாகி வந்திருந்தது.சில சமயங்களில் அப்படியான பிம்பம் சற்று உதவினாலும் பல நேரங்களில் அது அவர்களிடமிருந்துஎன்னை விலக்கியே வைத்திருந்தது. எத்தனை எத்தனை அவர்களிடத்தே நான் இளகிப் போகிறேனோ அதுஅவர்களை அத்தனை அத்தனை விலக்கி நிறுத்தியது. அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்கூட அவர்களுக்குச்சிக்கல் இருக்கவில்லை. ஆனால், அன்பை வெகுவாகச் சந்தேகித்தார்கள். நானோ முதலாளிக்குவேண்டப்பட்டவன் என்பதைவிட அவர்களில் ஒருவனாக இருக்கவே நிறைய முறை ஆசைப்பட்டிருக்கிறேன்.உண்மையில், அவர்கள் நினைக்கும் அளவுக்கு நான் வரதராஜன் சாருக்கு நெருக்கமாகவும் இல்லை.எப்போதாவது சந்திக்கும் வேளைகளில் அப்பாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் விசாரிப்பார்.அவ்வளவுதான். அவரைப் பொறுத்தமட்டில் நான் அவர் நிறுவனத்தின் மற்றுமொரு வேலையாள்.
அன்று,அவர் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். அவருடனான அதற்கு முந்தைய சந்திப்பும்நல்லபடியாக அமையவில்லை. கனிவாக இல்லையென்றாலும்கூட கடுமையாகப் பேசுபவர் அல்லர். ஆனால்,அன்று கொஞ்சம் கடுப்படித்தபடியே பேசினார்.
“தியாகு,எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்.”
எப்போதும்சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுவார். பல நேரங்களில் விசயம் விளங்குவதற்கேஒரு சில நிமிடங்கள் எடுக்கும்.
“இன்னிக்குஎன் வண்டி வரும்போதே, ஒருத்தன் ஹாயா பீடி குடிச்சிட்டு இருக்கிறான். அப்படியே மரத்துமேலகங்கை அணைச்சுட்டு கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம பீடித் துண்ட கீழே போட்டுக்கிறான். இதையெல்லாம்நீங்க ஒரு வார்த்தை கேக்கிறதில்ல. இல்லியா?”
“நான்சொல்லி வைக்கிறேன்.”
“அப்போஇதுவரைக்கும் எதுவும் சொல்லல. அப்படித்தானே?”
“அப்படியில்லசார். இன்னும் கொஞ்சம் வலுவா சொல்லி வைக்கிறேன்.”
“என்னவோபண்ணுங்க. இன்னொரு தடவ இப்படி ஒரு காட்சி என் கண்ணுல படக்கூடாது.” என்றார்.
‘சரி’என்பதாக தலையாட்டி நின்றேன். அன்று தபாலில் கொண்டுசேர்க்க வேண்டிய கடிதங்களை என்னிடம்கொடுத்துவிட்டு அருகிலிருந்த டெலிபோனை எடுத்து ‘கர்க் கர்க்’ என்று ஓசையெழ ஒவ்வொருஎண்ணாகச் சுழற்றினார். பின்பு, அங்கிருந்து நான் கிளம்பலாம் என்பதாகச் சைகை காட்டினார்.மருந்துக்கும் புன்னகைக்கவில்லை.
அவரும்புகைபிடிப்பவர்தான். பொதுவாகப் புகைப்பவர்களுக்கிடையே சற்றென்று சிநேகம் முளைத்துவிடுவதைக்கண்டிருக்கிறேன். அவருக்கு இங்கே பீடி குடித்தது பிரச்சினையில்லை. அவர் கார் வருவதைப்பார்த்தும் குடித்துக்கொண்டிருந்ததே குற்றம். அது அவருடைய கார் என்று தெரியாத ஒருவனாகவேஇருக்க வேண்டும். புதிதாகச் சேர்ந்த ஒப்பந்தக் கூலியாட்களில் ஒருவனாக இருக்கக்கூடும்.
மறுநாள்எனக்குக் கீழிருந்த அத்தனைப்பேரையும் அழைத்து இதைச் சொன்னேன். அவர்களுக்கு அதில் கொஞ்சம்வருத்தம். எனக்கும்கூட அவர்களிடத்தில் அப்படிச் சொல்வதில் விருப்பமிருக்கவில்லை. நாள்முழுவதும் பழியாய்க் கிடந்து உழைப்பவர்களுக்குக் கிடைக்கும் இது போன்ற எளிய ஆசுவாசங்களுக்கானவழிகளையும் அடைப்பது சரியில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் முதலாளியின் விருப்பம்என்றோ, ஆணை என்றோ சொல்லப்படும் எதுவும் முதலாளியின் பெயரைச் சொல்லி நான் எடுக்கும்முடிவுகளாத் தோன்றியதிலும் பிழையில்லைதான்.
அன்றிலிருந்துஅவர்களிடத்தே என் மீது மிச்சமிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. இது குறித்துஎனக்கு வருத்தமே. முதலாளி நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு நாளில் இது பற்றி அவரிடம்எடுத்துப் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்னால் அவரே கூப்பிட்டுஅனுப்பிவிட்டார். அத்தனை எச்சரிக்கையையும் மீறி மறுபடியும் யாராவது பீடி பிடித்து அவர்கண்ணில் மாட்டிக்கொண்டார்களா? என்னுடைய அறையிலிருந்து அவர் அறைக்கு நடக்க ஆகும் அந்தஐந்து நிமிட இடைவெளியில் அவர் கூப்பிட்டு அனுப்பச் சாத்தியமிருக்கும் அத்தனை காரணங்களையும்மனது ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கியது.
ஆனால்,அத்தனை சாத்தியங்களையும் மீறி மற்றொன்றின் பொருட்டே அவருடைய அழைப்பு இருந்தது.
“நம்மோடகாண்ட்ராக்ட் லேபர்ஸ்ல ஒரு ஏழு பேரை மட்டும், அடுத்த மூணு மாசத்துக்கு கூடுதலா இரண்டுமணி நேரம் வேலை பார்க்கச் சொல்லணும். புதுசா ஒரு ஆர்டர் வந்துருக்கு. அதை நேரத்துக்குமுடிச்சு கொடுத்தா நமக்கு அடுத்தடுத்து ஆர்டர்ஸ் கிடைக்கும். அதனால ஆள் பார்த்துச்சொல்லிடுங்க. ஆட்கள முடிவு பண்ணிட்டு அதுக்கான கூலிய சம்பளத்துல சேர்த்துப் போடச் சொல்லிஅக்கவுண்ட்ஸ் டிபார்ட்மண்ட்டுக்கும் தகவல் கொடுத்திடுங்க.”
அவர்அபிப்பிராயமோ ஆலோசனையோ கேட்கவில்லை. மேலும் அவர் முகத்தில் வெளிப்பட்ட பரபரப்பு இடையில்வேறு எதையும் பேச அனுமதிக்கவில்லை. நிரந்தரத் தொழிலாளிகளை ஒப்பிட ஒப்பந்தத் தொழிலாளர்கள்ஏற்கனவே ஒரு மணி நேரம் அதிகமாகத்தான் வேலை பார்க்கிறார்கள். அதுவும் அவர்களைவிட குறைவானஊதியத்துக்கு. எல்லா இடங்களிலும் அவர்களுக்குரிய சலுகைகளில் வேறு பாகுபாடு. போதாத குறைக்குஉள்ளே பீடி குடிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டதில் அவர்களுக்கு என் மேல் கோபம்.
பதிலேதும்பேசாமல் நின்றுகொண்டிருந்தேன்.
“தியாகு,நான் சொன்னது புரிஞ்சது இல்லியா?”
“யெஸ்..யெஸ் சார்.. ஆனா”
“என்ன?சொல்லுங்க”
அவர்களுக்குஇருக்கும் சங்கடங்களையும் பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொன்னேன். புகைபிடிப்பதற்காகவெளியில் போய் வர வேண்டிய சிரமம் குறித்தும் சொன்னேன்.
“இதையெல்லாம்சமாளிக்கத்தானே நீங்க மானேஜரா இருக்கீங்க?”
“சரிதான்சார். மானேஜர்ன்னு பேரளவுக்குச் சொல்லிக்கிட்டாலும்கூட இங்க நான் பார்க்கிற வேலை எதுவும்அப்படியில்ல. நானே ஆபிஸ் பாய். நானே மானேஜர். அப்புறம், ஆட்களை கட்டி மேய்க்கிற ஒருமேஸ்திரி!”
“இருக்கட்டுமே.அதனால் என்ன?” என்றார்.
எதையும்பேசிக்கொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு, ஆறு மாதங்கள் கழித்துஅப்பாவின் இறப்பின் போதுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலையை விட்டு நின்றது குறித்து அவருக்கு வருத்தம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.ஆனால், அது பற்றி ஒரு வார்த்தையும் அவர் பேசாதது குறித்து எனக்கு நிறைய வருத்தம் இருந்தது.கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்காக உழைத்திருக்கிறேன். வேலை பார்த்தவரைஎன் மனதுக்கு நேர்மையாகவும் வாங்கிய சம்பளத்துக்கு உண்மையாகவும் இருந்திருக்கிறேன்.எல்லாவற்றையும் மீறி இன்னும் மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் கூடுதலாக வேலையிலிருந்திருந்தால்அத்தனை வருடங்கள் உழைத்தற்கான பணப் பலன்கள் எனக்குக் கிடைத்திருக்கும். பதினான்கு வருடப்பணப் பலன். என்னுடைய பொருளாதாரச் சூழலுக்கு அது கணிசமான தொகை. அது அவருக்கும் தெரியும்.மூன்று மாதங்கள் மட்டுமாவது பொறுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அதைச்சொல்லவில்லை.
அப்பாவின்இறப்பின்போது வந்தவர் அக்காவிடம் ‘நான் என்ன செய்கிறேன்?’ என்று கேட்டிருக்கிறார்.அப்போது காலை மாலை என்று இரண்டு வேளையும், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டைமாடியில் வைத்து கணிதம் மற்றும் ஆங்கிலத்துக்கு டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அதன்பின்ஒரு மாதம் கழித்து இந்தக் கடிதம் வந்திருந்தது. எனக்கு விருப்பமிருந்தால் மீண்டும்தன் நிறுவனத்தில் வந்து சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்.
இப்போது,மூப்பின் காரணமாக நிறைய விசயங்கள் நினைவில் தங்குவதில்லை. பத்து பக்கங்கள் தொடர்ந்துவாசித்தால், மூன்றாம் பக்கம் வாசிக்கும்போது முதல் பக்கம் வாசித்தது மறந்துவிடுகிறது.ஆனால், இது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு நான் பதில் எதுவும்எழுதவில்லை.
நான்வேலையை விட்டு வந்த பின் ஆறு மாத காலம் அப்பா உயிரோடிருந்தார். அவர் வரதராஜன் சாரைப்பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அப்போதும் அவர் அப்பாவின் ஸ்நேகிதராகத்தான் இருந்தார்.
O
ஓவியம் : பூண்டி ஜெயராஜ்
September 11, 2023
மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்
மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்
-- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து --

“சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில்.
இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.
எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரையறுக்கலாம். அதற்கு மாறாக உணர் புலன்களின் தர்க்கத்துக்கு வெளியே நிகழச் சாத்தியமுள்ள ஒன்றை மாற்றுமெய்மை என்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.
அப்படியானால் இதற்கும் மாய யதார்த்தத்துக்கும் என்ன வேறுபாடு? மாய யதார்த்ததில் சொல்லப்படுவது முழுவதும் கற்பனை என்ற தெளிவு எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் உண்டு. அங்கே உருவகங்கள் மற்றும் படிமங்களின் வாயிலாக ஒரு கதையின் வழியே மற்றொரு கதை சொல்லப்படுகிறது.
மறுபக்கத்தில், மாற்றுமெய்மையை முழுவதும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. அது, நடைமுறை வாழ்வின் வெளித்தெரியாத பரிமாணமொன்றை சற்றே கீறிக்காட்டுகிறது. அதிலிருக்கும் உண்மையின் சதவீதம் குறித்த கேள்விகளை வாசகனிடத்தில் எழுத்தாளன் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கிறான். அவ்விதம் சேகரமான கேள்விகளின் வழியாகத் தான் கூறவிழைவதின் அர்த்தத்தைச் செறிவுபடுத்த விழைகிறான்.
வெளியேற்றம் நாவலின் பின்னுரையில் யுவன் இப்படிக் குறிப்பிடுகிறார் – ‘இந்த நாவலில் வருகிற மாய நிகழ்வுகள் நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தென்படுகிறவை அனைத்துமே நிஜமாக நிகழ்ந்தவை. வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை. தன்னியல்பான, நடைமுறை சாத்தியம் உள்ள நிகழ்வுகள் அனைத்துமே கற்பனையானவை.’
வெளியேற்றம் நாவலை குள்ளச் சித்திரன் சரித்திரத்தின் தொடர்ச்சியாகவே தான் எழுத முற்பட்டதாகவும், முதல் சில அத்தியாயங்களுக்குப் பிறகு அது முற்றிலும் வேறொன்றாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது என்று பொருள்படும்படி ஓரிடத்தில் கூறியிருப்பார். இருந்தாலும், இவ்விரண்டு நாவல்களையும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்றை வாசிப்பதற்கான திறப்புகள் இவ்விரண்டு நாவல்களிலுமே நிறைந்து இருக்கின்றன.
இவ்விரு நாவல்களின் அடிச்சரடும், அதைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ள மாற்றுமெய்மை என்னும் உத்தியும் இவற்றை இணைத்து வாசிப்பதற்கும் விவாதிப்பதற்குமான வாய்ப்புகளை அளிக்கின்றன.
குள்ளச் சித்திரன் சரித்திரத்தில் வரும் யோகீஸ்வரரும் குள்ளச் சித்தரும் வெளியேற்றம் நாவலில் வரும் வேதமூர்த்தியும் வேறு வேறு அல்லர். அதேபோலவே முன்னதில் ஹாலாஸ்யம் என்றால் பின்னதில் சந்தானம்.

இவ்விருவரையும் ரிஷி மூலம் தேடி அலையத் துரத்தியது எது? பென்க்வின், புலி, குள்ளச்சித்தர், யோகீஸ்வரர், முத்துச்சாமி, தாமஸ் மன்றோ, வேதமூர்த்தி என எல்லோரும் ஒருவரே. அவர்கள் புழங்கும் கால-வெளி முற்றிலும் வேறானது. அது, இன்றைய அறிவியல் பார்வைக்குத் தென்படாததாகவும் அதன் வரையறைக்குள் அடங்காததாகவும் இருக்கிறது. இந்த ஒன்றை மட்டும் வைத்து இவை மாய மந்திர நாவல்கள் என்றோ ஆன்மிகத்தை விதந்தோதும் நாவல்கள் என்றோ புறமொதுக்கிவிட முடியாது. கலிலியோ கண்டறிந்து சொல்லும் வரை அன்றைய அறிவியல், பூமியை மையமாகக்கொண்டு சூரியன் சுற்றி வருவதாகவே நம்பிக்கொண்டிருந்தது. இதோ இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நாளில் புதியதாக இருபது நிலவுகள் சனிக்கிரகத்துக்கு இருப்பதாக கண்டறிந்து சொல்லியிருக்கிறது அறிவியல். இத்தனைக்கும் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் ஒரு கோள் அது. அப்படியானால் அவை புதிதாக தோன்றிய நிலவுகளா? இல்லை. அவை எப்போதிலிருந்தோ இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அறிவியலின் பார்வை வெளிச்சத்துக்கு இப்போதே வந்துள்ளன என்பதே உண்மை. எனவே அறிவியலின் அறிதலுக்கு மேற்பட்டு இருக்கும் மற்றொரு புலத்தை குறைந்தபட்சம் கற்பனையாவது செய்ய முடிந்தால் மட்டுமே இந்நாவல்களின் உள்ளே செல்லவியலும்.
குள்ளச் சித்திரன் சரித்திரத்தில் ஒரு பகுதி வரும். பழனியப்பனின் மனைவி சிகப்பி, எறும்பு மொய்க்கும் பலகாரத்தை வெளியே கொண்டுபோய் தட்டுவாள். அதைப்பற்றி நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் அவர் “எறும்புகளின் பிரபஞ்சத்தில் சிகப்பி என்ற மனுசியோ, அவளது கையோ கிடையாதில்லையா?” என்பதாகக் குறிப்பிடுவார். இது வால்டேர் மைக்ரோமெகாஸில் முன்வைத்த பார்வையல்லவா? நாம் எப்போதும் மனித மையமாகக்கொண்டே இப்பிரபஞ்சத்தைப் பார்த்துப் பழகிவிட்டோம். யதார்த்த கதைகள் மனித மைய வாதத்தையே திரும்பத் திரும்ப முன்வைக்கின்றன. அதில் குறையொன்றும் கிடையாது என்றபோதும் பிரபஞ்சத்தின் பார்வையில் மனிதனை வைத்துப் பார்க்கும்போது இந்த வாழ்வும், அதை முன்வைத்து நிகழ்த்தப்படும் அத்தனை ஆர்பாட்டங்களும் எத்தனை அற்ப விசயங்கள் என்ற தரிசனம் புலப்படக்கூடும். எறும்பின் உலகிலிருந்து மனிதனுடைய உலகைக் காண்பதைப்போல் இப்பிரபஞ்சத்தின் பார்வையிலிருந்து மனிதனைப் பார்த்தால்? மைக்ரோமெகாஸில் வரும் வேற்றுகிரகவாசிக்கு மனிதனே பாக்டீரியா போன்ற நுண்ணுயிரியாக இருக்கும்போது, அவனுடைய லெளகீகப் பிரச்சனைகள் எத்தனை அற்பமானதாய் இருக்கும்?
இப்படியானதொரு மாற்றுப்பார்வையைத்தான் இவ்விரு நாவல்களும் முன்வைக்கின்றன. அறிவியல் யதார்த்தமற்ற எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். கலைஞனும், தத்துவவாதியும் அந்த அறிவியலையே கேள்வி கேட்கிறார்கள். யுவனும், “எல்லாவற்றையும் மூளைதான் நடத்திவைக்கிறது என்றால் மூளையை நடத்தி வைப்பது எது?” என்று கேட்கிறார்.
வாழ்வின் மீது, வாழ்தலின் அடிப்படை மீது எழுப்பப்படும் கேள்விகள் சிலரை அவர்களுடைய வேர்களிலிருந்து வெளியேற்றுகிறன. அவற்றிற்கான விடை தேடிப் புறப்படும் பயணங்கள், கடைசியில் மீண்டு நிலைத்து எஞ்சி நிற்பதென்னவோ கேள்விகள். இங்கே கேள்விகள் எவ்வளவு முக்கியமானவையோ அதே அளவுக்கு முக்கியமானவை அவற்றின் பதில் தேடிச் செல்லும் பயணங்களும், வெளியேற்றங்களும். வரலாற்றில் விடையைத்தேடி எத்தனையோ சித்தார்த்தன்கள் வெளியேறியிருப்பார்கள் ஆனால் நமக்குக் கிடைத்தது ஒரே ஒரு புத்தன் மட்டுமே. எனவே வெளியேறும் அத்தனை சித்தார்த்தன்களும் புத்தர்களாக ஆவதில்லை என்றபோதும் ஒருமுறை வெளியேறியபின் அவர்கள் யாரும் பழைய சித்தார்த்தன்களாக இருப்பதில்லை.
குள்ளச் சித்திரன் சரித்திரம் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடைதேடிப் போன பயணங்களாக வெளியேற்றத்தைப் பார்க்க முடிகிறது. ஒளிதேடி முளைத்துவரும் கிளைபோல வாழ்வின் அபத்தங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கான விடையைத் தேடி இந்நாவல்களில் வரும் மனிதர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டும் பயணப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். தற்தம் வேர்களிலிருந்து நகர்ந்து தப்பியோடும் விழைவு எல்லோருக்குள்ளும் ஓடக்கூடும். அதன் வீரியம் எத்தனை என்பது இங்கே கேள்வி! எது உங்களை வெளியேற்றுகிறது என்பது இங்கே மிக முக்கியமான கேள்வி?
தாயைப் போல் இருந்த அண்ணியின் மறைவு ஒருவனை அலைக்கழிக்கிறது. அந்தக் குடும்பத்தையே சிதைப்போடுகிறது. அதிலிருந்து அவன் வெளியேறுகிறான். மற்றொருவன் தன் தாயின் மறுபிறப்பாக தன் அண்ணனின் மகளைப் பார்க்கிறான். அதைத் தாங்கிக்கொள்ளவியலாமல் வெளியேறுகிறான். தன் விருப்பம்போல் பிச்சையிடக்கூட உரிமையில்லாத வீட்டிலிருந்து கோபத்தில் ஒருவன் வெளியேறுகிறான். தோட்டியின் மகன், கண் பார்வையற்ற சிறுவன் என ஒவ்வொருவருக்கும் வெளியேறுவதற்கு ஒரு காரணம்.
வெளியேற்றம் நாவலில் முதல் வாசிப்புக்கு எல்லோரும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அத்தனை கண்ணிகளையும் இணைக்கும் ஒரு சரடாகப் பார்க்க முடிந்தாலும், அதற்கும் மேல் அவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்ற கேள்விகளை அடுக்கும்போதே நாவலை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
யுவன் தமிழின் தலை சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர். வாசிப்பவனை தன் கண்களைவிட்டு அகலாமல் நிறுத்தி வைக்கும் வித்தை தெரிந்த கதைசொல்லி. அவர் நாம் நம்பும் காலத்தை அதன் வழியே நிஜத்தை அழித்து கதை சொல்லிச் செல்கிறார். கொடூரமான நினைவென்னும் ஒரு கரைக்கும், அக்கொடூரத்தைச் சொஸ்தப்படுத்தும் கனவென்னும் மறுகரைக்கும் இடையில் தன் புனைவுச்சுழலில் வாசிப்பவனை நிறுத்தி, துடுப்பைத் தூக்கி எரிந்துவிட்டுப் போகிறார். பின்பு, அங்கிருந்து தப்பிக் கரையேறுவது அவரவர் சாமர்த்தியம்.
இவ்வித்தையை, வாசித்தவரை உள்ளிழுக்கும் தன் புதைச்சேற்று மொழியின் வழியாகவும், உதிரிப்பூக்களைத் தொடுத்துச் சரமாக்கிக்கொடுப்பதைப் போல சிறு சிறு கதைகளாகக் கோர்த்து அளிக்கும் உத்தியின் மூலமாகவும் சாத்தியப்படுத்துகிறார்.
மிகப்பெரிய தத்துவத்தையும், தரிசனத்தையும் கூற அவருக்கு சாதாரண வார்த்தைகள் போதுமாயிருக்கிறன. பகடையாட்டத்தில் வரும் ஒரு வரி இது – ‘ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் உள்ள அதே அளவு இடைவெளி ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலும் உள்ளது’. வெளியேற்றம் நாவலில் வீட்டைவிட்டு ஓடிவந்து தவறானதொரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் சிறுவனை, தனக்கு நேரக்கூடிய துன்பங்களைப் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் பெண்ணொருத்தி காப்பாற்றித் தப்புவிப்பாள். அப்போது ஆதுரமாக “போய் வா” என்று சொல்லி அவனின் கையைப் பற்றுவாள். அவளின் உள்ளங்கை ஈரம் அவனைத் தீண்டும் அக்கணத்தை, ‘அது வியர்வையின் ஈரமல்ல, பிரதிபலன் பார்க்காத பிரியத்தின் ஈரம்’ என்று சொல்லியிருப்பார். அதற்கு மேல் நகர அனுமதிக்காமல் அங்கேயே நிறுத்திப் பிடிக்கும் மொழியல்லவா இது?

மொழி இவர் சொன்னபடியெல்லாம் சுழல்கிறது. மதுரை, காரைக்குடி, கும்பகோணம் என்று கதை விரியும் இடங்கள் அத்தனைக்கும் தகுந்தாற்போல தன்னை வளைத்துக்கொள்கிறது. தீவிர இலக்கியங்கள் சுவாரஸ்யமாக இருக்காது என்பது தமிழில் தீவிரமாக நம்பப்படும் ஒரு விதி. யுவன் அதற்கு விலக்கு. சிறு சலிப்பும் தட்டாத சுவாரஸ்யமான கதைமொழி அவருக்கு வாய்த்திருக்கிறது. அற்புதமான தத்துவங்களைக்கூட மிகச்சாதரணமாக ‘அந்தச் சேரை நகர்த்திப் போடுங்கள்’ என்பதுபோல போகிறபோக்கில் சொல்லிப் போய்விடுகிறார்.
யுவன் தன்னுடைய சிறுகதைகளில் கூட ஆற்றொழுக்காக ஒரு கதை, ஒரு மையம் என்று சொல்வதில்லை. ஆதி கிராமமொன்றின் மூத்த கதைசொல்லியைப் போல கதைக்குள் கதை, அதற்குள் மேலும் கதைகள் என்று கதைகளை அடுக்குகிறார். நாவல்களைப் பொருத்தமட்டில் தனித்த மலரொன்றின் மகரந்த அடுக்குகளாகக் கதைகள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கலைத்துப்போட்டு கதைசொல்லுதலை தன் படைப்புகளில் தொடர்ந்து செய்கிறார்.
எங்கள் ஊரில் நான் சிறுவனாய் இருந்தபோதும் நம் தாமோதர ஆசானைப் போன்ற கதைசொல்லி ஒருவர் இருந்தார். திருமணமே செய்துகொள்ளாத பெண்மையின் சாயல் மிளிரும் முதிர் கிழவன். அவர், எங்களுக்கு பல நூறு கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு கதையையேனும் சொல்லிய அன்றே முடித்தாரில்லை. ஒரு கதையை ஆரம்பித்து, மிகச் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று அதன் உச்சகட்டத்தில் நிறுத்திவிட்டு, “மிச்சத்தை நாளைக்குச் சொல்றேன்” என்று சொல்லிக் கிளம்பிவிடுவார். “தாத்தா.. தாத்தா.. மிச்சத்தச் சொல்லுங்க. மிச்சத்தச் சொல்லுங்க” என்று சிறுவர்கள் நாங்கள் அவரைச் சுற்றி படுத்திக்கொண்டிருப்போம். மறுநாள் அந்தக் கதையைத் தொடரமாட்டார். புதிதாக வேறொன்றை ஆரம்பிப்பார். அது முந்தைய வாரம் பாதியில் விட்ட கதையினோடு சென்று இணையும். இப்படிக் கலைப்பதும், பின் சென்று இணைப்பதும் ஓர் அலாதியான கதைசொல்லல் உத்தி. யுவன் தன் நாவல்களில் இதையே செய்கிறார். இதை நம் கதைசொல்லல் மரபின் தொடர்ச்சி என்றே பார்க்கிறேன்.
சிறிய கதைகளின் வழியே அன்றாடத்தில் நாம் கவனிக்கத் தவறும் அற்புதத் தருணங்களை தன் படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார். சேரும் இடத்தைவிட செல்லும் பாதையைக் கொண்டாடும் படைப்பாளி யுவன். வாசகனின் கூரிய கவனத்தைக் கோரும் படைப்புகள். முதல் வாசிப்பில் பிடிபடாத பல முடிச்சுகள் அடுத்தடுத்த வாசிப்புகளில் திறப்பதை உணர முடியும்.
அவர் தமிழ் மின்னிதழுக்கு அளித்த பேட்டியில் “ஒரு சீரிய வாசகன், எனது பெயரைப் பத்திரிகையில் காணும்போது அதைத் தாண்டிப் போகக் கூடாது என்னும் ஆசை. இது நியாயமானது என்றே இப்போதும் படுகிறது” என்று கூறுகிறார். ஒரு முறை அவரின் ஏதேனும் ஒரு புனைவை வாசித்த ஒருவன் மறுமுறை அவர் பெயரைக் கண்டதும் வாசிக்காமல் அவ்வளவு எளிதில் கடந்துபோக மாட்டான். அதற்கு இவ்வரங்கில் கூடியிருக்கும் அத்தனை பேரும் சாட்சி!
O
May 2, 2023
பெயரெச்சம்

அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன்.
அவள் “உச்” என்றாள்.
“ஏய்.. போய் என்னனு பாரேன்டி”
“நீங்களேப் போய் பாருங்க. நான்தான் பொழுதனைக்கும் பாக்குறேனே.”
“யேய்.. நாளைக்கு மார்னிங் ஷிஃப்ட்டுடி. ஃபேக்டரில நிக்க முடியாது. போய்ப் பாரு ப்ளீஸ்."
இரண்டு நிமிடங்கள் கழித்து மறுபடியும் மணி அடித்தது. அவள் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவாறான பாவனை காட்டித் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
எழுந்து உடையைச் சரிசெய்துகொண்டேன். படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் முன்னர் மறுபடியும் மணி அடித்தது. “தோ.. வரேன் சித்தப்பா” என்று எரிச்சலில் கத்தினேன். மணியை அழுத்துவதில் ஒரு நாசூக்கு இருக்கிறது. சித்தப்பாவுக்கு அதுவும் தெரியாது. நேராக நடு மண்டையில் சுத்தி வைத்து அடிப்பதைப் போல அழுத்தி அழுத்தி அடிப்பார். அத்தனைக்கும் அவ்வளவு முக்கியமான காரியமாக இருக்காது. தண்ணீர் தீர்ந்திருக்கும். கொசுவத்தி வேண்டும். ‘கிச்சன் குழாயில் தண்ணீர் சொட்டுகிற சத்தம் கேட்கிறதே’ என்பார். அரிதாகச் சில சமயங்களில் அகோரப் பசி என்பார், அரை வாழைப்பழம் சாப்பிடுவார். இப்படியான சின்னச் சின்ன கோரிக்கைகள்.
சமீப காலமாகத்தான் வீட்டோடு முடங்கிப் போய்விட்டார். தனி ஆள். இருப்பதெல்லாம் எளிய தேவைகள். அதிலும் பெரும்பான்மை அனாவசியத் தேவைகள். சிறு வயதிலிருந்து என் அம்மா அப்பாவிடம் வளர்ந்து, இப்போது எங்களோடு தங்கிவிட்டார். நடுவில் ஒரு நாள் இரவில் சரியாக மூடப்படாத தண்ணீர் குழாயை மூடுவதற்காக அடுப்படிக்கு வந்தவர் அங்கேயே தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டார். எஞ்சியிருந்த நிதானம், மாடியிலிருந்த எங்களை அழைக்கும் வரை தாங்கவில்லை போலும். முட்டியில் நல்ல அடி. ஆப்பரேசன் என்றால் பயம். இருக்கும் பிக்கல் பிடுங்கல்களில் அவரைக் கவனித்து ஹாஸ்பிடலில் சேர்க்க நேரமில்லை. மனமில்லை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒருவேளை அம்மா இருந்திருந்தால், இப்படியே விடச் சம்மதித்திருக்கமாட்டார். அதற்கு பின், சித்தப்பாவால் சேர்ந்தாற்போல பத்தடிகள்கூட நடக்க முடியாது. தேவையென்றால், அவரது அறையிலிருந்தபடியே எங்களை அழைக்கும் அழைப்பு மணியை அவர் கட்டிலின் தலைமாட்டில் பொருத்திக் கொடுத்தோம்.
தாழிடப்படாத கதவைத் திறந்து உள்ளே போனேன். மெல்லிய நீல நிற வெளிச்சம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
அவர் படுக்கைக்கு அருகில் போய், “சித்தப்பா” என்றேன்.
சலனமில்லை. அதற்குள் தூங்கிவிட்டார் போல. மறுபடியும் சற்று அழுத்தி, “சித்தப்பா, என்ன வேணும்?” என்றேன்.
“துரை.. துரை.. வந்துட்டியா? அந்த பேனை ஆஃப் பண்ணிடேன்டா”,
“ஏன், குளிருதா?”
“இல்லயில்லடா.. குருவி.. குருவி அடிபட்டுடப் போகுது.”
அந்த மெல்லிய நீல வெளிச்சத்தில் அறையை நோட்டமிட்டபடி“குருவியா? எந்தக் குருவி? அதெங்க இருக்கு?” என்றேன்.
“அதோ அந்தக் குருவிதான். எப்படியோ ஜன்னல் வழியா வந்துடுச்சு. அதுக்கு இப்போ வெளியேப் போகத் தெரியல. பார்த்தா பாவமாயிருக்கு.”
விளக்கைப் போட்டு சுற்றிலும் பார்த்தேன். சற்றுக் கடினமேறிய குரலில், “சித்தப்பா, சும்மா எதுனா உளறாதீங்க. இங்க குருவியும் இல்ல காக்காவும் இல்ல. கனவு எதுனா கண்டுருப்பீங்க. பேசாம படுங்க.” என்றேன்.
“அடேய் துரை! ரூம்ல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா அலையுதுடா. சுவத்துல போய் முட்டிக்குது. என் தலைக்கு மேலே சுத்துது. நீ உள்ளே வந்ததும் இப்போ சாதுவா ஜன்னல் மேல உக்கார்ந்திருக்கு.”
ஜன்னலைப் பார்த்தேன். நன்றாக மூடியிருந்தது. அங்கு எதுவுமிருக்கவில்லை. மூச்சை இழுத்துவிட்டேன். பாதித் தூக்கத்தில் எழுந்து வந்ததில் தலை வலித்தது.
“சரி, உனக்குத் தெரியலனாக்கூட பரவாயில்லை. அந்த ஃபேனை மட்டும் நிறுத்திடு. பாவம்டா அது. ஃபேன்ல அடி பட்டுடப் போகுது”
அதுக்கு மேல் அவரிடம் பேசிப் பிரயோஜனமில்லை. அவர் பிடித்த பிடியில் இருப்பார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார். அறையின் அத்தனை ஜன்னல்களும் இறுகச் சாத்தப்பட்டிருந்தன. ஃபேன் சுற்றியும்கூட அறையில் வெக்கை கிளம்பிப் புழுங்கியது. இதற்கிடையில் அதையும் நிறுத்திவிட்டால் வியர்வை ஆளை நனைத்துவிடும். வியர்வையின் ஈரம் தாங்காமல் அவர்தான் மறுநாள் தலைவலியால் துடிப்பார். ஆனால், இதையெல்லாம் அப்போது அவருக்குச் சொல்லிப் புரிய வைக்கும் மனநிலையில் நானோ, சொன்னாலும் சரியென்று கேட்டுக்கொள்ளும் பக்குவத்தில் அவரோ இல்லை.
அவர் கேட்டபடி ஃபேனையும் விளக்கையும் அணைத்துவிட்டு, அவர் படுக்கைக்கு அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீர் பிடித்து நிரப்பினேன். அங்கிருந்து கிளம்பும் முன்னர் ஒரு முறை மொபைல் டார்ச்சை எடுத்து அறை முழுவதும் அடித்துப் பார்த்தேன்.
அங்கு எந்தக் குருவியுமில்லை.
O
இன்று நேற்று என்றில்லை. எனக்கு விவரம் தெரிந்த காலம்தொட்டு அவர் இப்படித்தான் இருக்கிறார். அதற்கு முன்பும்கூட. அதுவும் அம்மா தவறியதிலிருந்து இன்னும் அதிகமாகத்தான் ஆகிவிட்டது. அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை. சொல்லப் போனால் சித்தப்பாதான் அவளுக்கு முதல் பிள்ளை. அம்மா இந்த வீட்டுக்கு வரும்போது சித்தப்பாவுக்கு பத்து வயதாம்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்தே நான் பிறந்தேன். அதனால், அவர்களிடையேயான பிணைப்பு அப்படி அமைந்திருக்கலாம். அம்மா திருமணமாகி வந்த நாள்தொட்டு ‘அண்ணி அண்ணி’ என்று வளைய வந்திருக்கிறார். சித்தப்பாவுக்கு இயல்பிலேயே பயந்த சுபாவம். அப்பா எதற்காவது சற்று அதிர்ந்து பேசினால்கூட நாள் முழுவதும் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாராம். அம்மா துணையின்றி வெளியே கடைக்குக்கூட போக மாட்டார். அவர் வயதொத்த பிள்ளைகளோடு விளையாட்டும் கிடையாது. பள்ளி விட்டால் வீடு. வீட்டுக்குள் அம்மா. அவ்வளவுதான் அவர் உலகம்.
அப்படி இருந்தவர், முதன்முதலில் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளியேறியது நான் பிறந்த நான்காவது நாள். அப்பாவும் அவரால் முடிந்த வரை தேடிப் பார்த்திருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா, நாட் கணக்கில் வாரக் கணக்கில் அழுதிருக்கிறாள்.
முப்பதாவது நாள் எனக்கு அவருடைய பெயரையே வைத்து மனத்தைச் சற்றுத் தேற்றிக்கொண்டாளாம்.
பின்னர், சரியாக என்னுடைய ஆறாவது பிறந்தநாளின்போது வெற்றிலை வாசம் கமழ வீட்டுக்கு வந்த நபரை அம்மாதான் சித்தப்பாவென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை தெரு முக்குக்கே துணையில்லாமல் போகப் பயந்தவர் நடு ராத்திரியில் மசானத்துக்குச் செல்லுமளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாய் எப்போதும் எதையாவது முணுமுணுப்பதும் கைகள் காற்றில் எண்களை எழுதி அழிப்பதுமாய் இருந்திருக்கிறார். அத்தனை வருடங்களுக்குப் பிறகும் மாறாத ஒன்றே ஒன்று அம்மாவிடத்தில் அவருக்கு இருந்த பாசம் மட்டுமே.
O
ஒரு முறை வீட்டைவிட்டு வெளியேறியவர்களால் அவ்வளவு சுலபமாக வீட்டில் தங்க முடியாது. வெளி அழைக்கும். வீடு விரட்டும். அதுவும் சித்தப்பாவைப் போன்ற ஒருவருக்கு வீடு தங்கல் என்பது அசாத்தியப் பெருஞ்செயல். எல்லாவற்றையும் மீறி அவரை வீட்டோடு பிணைக்கும் ஒரு சக்தியாக அம்மா மட்டுமே இருந்திருக்கிறாள். அவருடைய அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் அவள் ஒருத்தியால் மட்டுமே முகச் சுழிப்பின்றி பொறுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
பேசிப் பேசி, அவரை வடித்துத் திருத்தி ஓர் ஆண் பிள்ளையாக மாற்றி அப்பாவினுடைய கடையில் நிறுத்தினாள். அப்பாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை என்றபோதும் அம்மாவை மீறிப் பேச அப்பாவிடம் ஒரு சொல் கிடையாது.
சித்தப்பா வந்தவுடன் அம்மாவுக்கு என் மேலேயிருந்த கவனிப்பு குறைந்துவிட்டது. அது குறித்து அப்போது அதிகம் வருத்தமிருந்தாலும் சித்தப்பாவை எனக்கும் பிடித்திருந்தது. இருவருக்கும் ஒரே பெயர். அவரும் என்னைப் போலவே இடதுகைக்காரர். எல்லாவற்றுக்கும் மேல் மற்றவர்கள் எதையெல்லாம் அவரிடம் பைத்தியக்காரத்தனமாக பார்த்துச் சிரித்தார்களோ அவையெல்லாம் எனக்கு அப்போது பெரும் கவர்ச்சியாக தெரிந்தது.
மனிதர்களைத் தவிர்த்து மற்ற உயிர்களிடத்தே பேசுவதும் பழகுவதும் அவருக்கு உவப்பாக இருந்தது. நாய்கள், பூனைகள், தெருவில் திரியும் பசுக்கள். அவ்வப்போது செடி, கொடி, மரங்கள். அவரைத் தேடி நாள் தவறாமல் மஞ்சள் நிறப் பூனை ஒன்று வரும். உரிமையோடு கத்தி அழைக்கும். அதற்கு பாலில் குழைத்துச் சாதம் வைப்பார்.
அவ்வப்போது, அவர் என்னைக் கூப்பிட்டு கையை நீட்டச் சொல்லுவார். ஒரு நிமிடம் ரேகையை உற்றுப் பார்த்துவிட்டு அண்ணாந்து பார்த்து எதையோ முணுமுணுப்பார்.
“டேய் துரை துரை” என்று விளித்துச் சிணுங்கும் தருணங்களில் அவர் உண்மையில் என்னிடம்தான் பேசுகிறாரா இல்லை தன்னைத்தானே விளித்துப் பேசிக்கொள்கிறாரா என்று குழம்பிப்போவேன்.
எப்படியாவது அவருக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்துவிட வேண்டும் என்று அம்மா விரும்பினாள். இவர் குணமறிந்த யாரும் பெண் தர முன்வரவில்லை. அப்பாவும் ‘அவன் போக்கில் அப்படியே விட்டுவிடு’ என்றார். அம்மா, விடாப்பிடியாக இருந்தாள். ஒரு பெண் வந்து நின்றால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று திடமாக நம்பினாள்.
அவளே வருடக் கணக்கில் தேடி அலைந்து தூரத்திலிருந்து ஒரு சம்பந்தத்தைக் கொண்டுவந்து நிறுத்தினாள். பெண் வீட்டுக்குச் சென்று நிச்சயம் செய்வது என்று முடிவான நாளுக்கு அடுத்த நாள் சித்தப்பா மறுபடியும் வீட்டிலிருந்து காணாமல் போனார். அம்மா, தன்னால்தான் சித்தப்பா வெளியேறிவிட்டார் என்றுணர்ந்தபோது அம்மா ஒடிந்துவிட்டாள். இந்த முறை அப்பா தேடுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
அம்மா தனியாக இருக்கும்போது சித்தப்பாவின் நினைவு வரும் தருணங்களில், “பிடிக்கலனா வேண்டாம்ன்னு எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே” என்று அரற்றுவாள். அவ்வப்போது நினைத்து நினைத்து ஆற்ற மாட்டாமல் அழுவாள். சித்தப்பா வீட்டைவிட்டு வெளியேறியது அவளிடத்தே ஆறாத வடுவாய் நிலைத்துவிட்டது.
சித்தப்பாவின் பிறந்தநாளின்போது கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்வாள். சாதுக்களை அழைத்து அன்னமிடுவாள். அப்படி ஒரு நாளில் சுவரில் சாய்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள். “ஒவ்வொரு முறையும் நாந்தானே உன்னை விரட்டிவிட்டேன் தொரெ” என்று தரையோடு இழைந்த குரலில்தான் புலம்பினாள் என்றாலும் எனக்கு நன்றாகவே கேட்டது.
சித்தப்பா போன பின்பு அந்த மஞ்சள் நிறப் பூனை எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.
O
அம்மாவின் உள்ளத்தில் கிடந்து அரித்த சோகம் மெல்ல மெல்ல அவளுடலில் புற்றாக வளர்ந்து நின்றது. அது வளர வளர இவள் ஆள் பாதியாகச் சுருங்கிப் போனாள். அவளால் பெரிய காரியங்கள் எதையும் செய்ய முடியாமல் போனது. சமையலுக்கே அம்மாவினுடைய சித்தியின் துணை தேவைப்பட்டது.
சித்தப்பாவின் மற்றொரு பிறந்த நாளின்போது என்னை அழைத்து சிவன் கோவில் பக்கம் போய் யாரேனும் சாது இருந்தால் சாப்பிட அழைத்து வரச் சொன்னாள்.
பைரவர் சன்னதியில், சிலைக்குப் எதிரேயிருந்த தூணில் சாய்ந்தபடி அரை தூக்கத்திலிருந்தார். அவரைக் கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டார். அவரை அதற்கு முன் அங்கு பார்த்த நினைவில்லை. அங்கே நிரந்தரமாக இருப்பவர்கள் யாரும் அன்று கண்ணில் தென்படவில்லை.
சாதம், சாம்பார், வாழைக்காய்ப் புட்டு, புளிக் கூட்டு, புடலங்காய்ப் பொறியல், பருப்புப் பாயாசம் என்று சித்தப்பா விரும்பியுண்ணும் உணவுகளால் இலையை நிரப்பியிருந்தாள். ஒரு ரசம் வைக்கவே மூச்சிளைத்துத் தள்ளாடும் உடலை வைத்துக்கொண்டு அன்று மட்டும் அவளால் அத்தனை செய்ய எப்படி முடிந்தது?
சாது, சாப்பாட்டுக்கு முன் அமர்ந்து “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்று தொடங்கிய பாடலை ஊணோடு உள்ளமொன்றப் பாடினார். அடி வயிற்றிலிருந்து எழும்பிய அக்குரல் ஆளரவமற்ற அம்மதிய வேளையை முற்றிலும் வேறொன்றாக மாற்றியது.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் இடையில் நிறுத்தி, “சீக்கிரம் வந்துடுவான். நீ சற்று பொறு” என்று அம்மாவைப் பார்த்து ஆசிர்வதிக்கும் தொனியில் உள்ளங்கையை உயர்த்தினார். அம்மாவின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. அப்படியே அவருக்கு முன்னால், தரையில் விழுந்து அவரை வணங்கினாள்.
அப்பா, என்னைப் பார்த்தார். நான் கீழே கிடந்த அம்மாவைத் தூக்கி நிறுத்தினேன். அவள் என் கன்னத்தை வழித்து முத்தமிட்டு “தொரே” என்றாள். அது என்னையல்ல என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.
O
சித்தப்பா மீண்டும் வீட்டுக்கு வந்தார். மிகச் சரியாக அம்மா இறந்த இரவு புலர்ந்த சாம்பல் வெளிச்சத்தோடு வீட்டுக்கு உள்ளே நுழைந்தார். அவருக்கு எப்படித் தெரிந்தது? எங்கிருந்தாவது எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாரா? இல்லை, ஆதி விலங்கொன்றின் அடங்கியிராத உள்ளுணர்வின் மிச்சமா? எனக்கு கேள்விகள் மேல் கேள்விகளாகத் திரண்டு வந்தன.
அவரை ‘வா’ என்றெழைக்கவும் ‘போகாதே’ என்று தடுக்கவும் அங்கிருந்த ஒரே ஜீவனையும் நடு வீட்டில் கிடத்தியிருந்தார்கள். அப்பாவுக்கும் எனக்கும் அம்மா இந்த மட்டில் தன் துயரை நிறுத்திக்கொண்டதில் சற்று ஆசுவாசம்.
துரை சித்தப்பா எதுவும் பேசவில்லை. அழவில்லை. கீழே கிடத்தப்பட்டிருந்த அம்மாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பாவின் வேட்டிக் கிழிசலால் விரல்கள் கட்டப்பட்டிருந்த பாதங்களை மெதுவாகத் தடவிக்கொடுத்தார். தலைச்சன் பிள்ளை செய்ய வேண்டிய கிரியைகள் அத்தனையையும் அதற்காகவே கிளம்பி வந்ததைப் போல அவரே செய்தார். நானோ அப்பாவோ அவரைத் தடுக்கவில்லை.
அதன்பின் அவர் இந்த வீட்டைவிட்டு வெளியேறவேயில்லை. எங்களுடனே தங்கிவிட்டார். அம்மா போன பிறகு சமையலை அவர் எடுத்துக்கொண்டார். அவருக்கு அவ்வளவு சுவையாகச் சமைக்க வரும் என்பதே எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. சின்னச் சின்ன பிறழ்வுகளைத் தவிர அவரால் எனக்கோ அப்பாவுக்கோ பெரிய தொந்தரவு எதுவுமிருக்கவில்லை. அப்பா, நாள் தவறாமல் வெற்றிலையும் சீவலும் வாங்கிக்கொடுத்துவிடுவார். அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் 16 வருட வித்தியாசம், ஆனால், அவர் பார்வைக்கு அப்பாவைவிட முதியவராகத் தோற்றமளித்தார்.
O
எனக்குத் திருமணமான பின், வீட்டுக்கு மாடியெடுத்து அப்பா எங்களை அங்கே எங்களைக் குடியேற்றினார். கீழே இருந்த இரண்டு அறைகளில் ஒன்றை அப்பாவும் மற்றொன்றை சித்தப்பாவும் எடுத்துக்கொண்டார்கள். அப்பா இருந்த வரை சித்தப்பாவை கவனித்துக்கொள்வதில் புவனாவுக்கு எந்தச் சிரமும் இருந்ததாய் அவள் காட்டிக்கொள்ளவேயில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின் சித்தப்பாவின் இருப்பு அவளுக்கு உறுத்த ஆரம்பித்தது. குழந்தைகள் வளர வளர, புவனாவின் ஆதிக்கம் வீட்டைச் சுற்றி கொடிபோல படர்ந்து எழும்பியது.
அவரை அங்கிருந்து வெளியேற்ற காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவரை பக்கத்தில் எங்காவது தனியாகக் குடி வைத்துவிடலாம் என்பது அவள் எண்ணம். உண்மையில் எங்களுக்கு இருப்பதைவிட அவருக்குத்தான் அந்த வீட்டில் அதிக பாத்தியதை இருந்தது. அது எங்களின் பூர்வீக வீடு. ஆனால், அவரை அங்கிருந்து வெளியேற்றினால்கூட அவர் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். அதுதான் அவர் சுபாவம். வெற்றிலையும் சீவலும் இருந்தால் போதும். ‘அவரை இவ்வீட்டிலிருந்து வெளியேற்றுவதை அம்மாவோ அப்பாவோ விரும்ப மாட்டார்கள், அவர்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று சொல்லி அவள் கோரிக்கையை மறுத்துச் சண்டையிட்டதொரு நாளில், “ரெண்டுக்கும் பேரு மட்டும் ஒன்னில்ல.” என்று முணுமுணுத்தப்படி வெளியேறினாள்.
நடமாட்டம் இருந்த பொழுதுகளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவன் கோவிலுக்குப் போவார். அவர் தெருவில் இறங்கி நடந்தால் அங்கங்கே இருக்கும் பத்துப் பதினைந்து நாய்கள் திரண்டு அவர் பின்னால் தொடர்ந்து வாலாட்டியபடி ஓடி வரும். வீட்டுக்கு வெளியில் திடீரென்று ஏழெட்டு நாய்கள் சூழ்ந்திருக்க அதனுடன் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். ஒரு நாள், தெருவில் ஒருவரை வெறி நாய் கடித்துவிட, இதைக் காரணம் காட்டி புவனா பிள்ளைகளை சித்தப்பாவோடு அனுப்புவதை நிறுத்திவிட்டாள்.
விசேஷ நாட்களில் பரதேசிகள் சிலரை அழைத்து வந்து உணவிடுவார். அப்போதெல்லாம் அவரைப் பார்த்தால் அம்மாவின் நகலைப் போலிருக்கும். நான் எதுவும் சொல்லிக்கொள்வதில்லை. “காலம் இருக்கிற நிலைமைல, கண்டவனையெல்லாம் நம்பி வீட்டுக்குள்ள விடலாமா?” என்று புவனாதான் அங்கலாய்ப்பாள்.
அதுவரை அவரைப் பற்றி என்னிடம் புகார் அளிப்பது, உச்சுக்கொட்டி முகம் சுளிப்பது, விருப்பமில்லாமல் காரியங்களைச் செய்வது என்றுதான் இருந்தாள். ஒருமுறை வீட்டு முற்றத்து குழாயில் காலைக் கழுவிவிட்டு குழாயைச் சரியாக மூடாமல் வந்திருக்கிறார். மேல் தொட்டியிலிருந்த தண்ணீர் மொத்தமும் வெளியேறி முற்றத்தில் குளம்போல் தேங்கிவிட்டது. அப்போது கோடைக் காலம். சற்று தண்ணீர் பஞ்சம் வேறு. புவனா குழந்தைகளைத் திட்டும் சாக்கில் அவரைத் திட்டிவிட்டாள். அதன் பின் ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான தடவைகள் தண்ணீர் குழாய் சரியாக மூடியிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பார். இரவு, பகல் என்றில்லை. சொட்டுச் சொட்டாய் வடியும் நீரைக் கண்டால் அவருக்குப் பொறுக்காது. சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அதைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடிப்போய் எங்கோ சொட்டிக்கொண்டிருக்கும் குழாயை மூடிவிட்டு வருவார். அவருடைய இந்தப் பிறழ்வு புவனாவை என்னவோ செய்துவிட்டது. அதன்பின் அவரைப் பற்றிய புகார்களைக் குறைத்துக்கொண்டாள்.
O
அதிகாலையில் அலாரம் அடிக்கும் முன்னரே எழுந்துகொண்டேன். வழக்கமாக குளித்துவிட்டே மற்ற வேலைகளைப் பார்ப்பேன். அப்போதுதான் தூக்கம் தொலையும். ஆனால், ஏதோ ஒன்று உந்தித் தள்ள நேரே கீழே சித்தப்பாவின் அறைக்கு வந்தேன்.
அதே நீல நிற மெல்லிய வெளிச்சம். கதவு சாத்தப்பட்டு மின் விசிறியும் நிறுத்தப்பட்டிருந்ததால் கதவைத் திறந்ததும் வெக்கை முகத்தில் அறைந்தது.
தூக்கத்தைக் கலைத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுடன், அறை வாசலில் நின்றபடி உற்றுப் பார்த்தேன். அவரிடத்தில் எந்தச் சலனமும் இல்லை. பக்கத்தில் போய் அவர் மூக்குக்கு அருகில் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்து நீட்டினேன். என்னையறியாமல் கை விரல்கள் நடுங்கின. சுவாசமேயில்லை. உள்ளங்கையை எடுத்து நெஞ்சில் வைத்துப் பார்த்தேன். உடல் குளிர்ந்து போயிருந்தது. அப்போதுதான் அதைக் கவனித்தேன். அவருடைய வலது மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில், சாம்பலும் வெண்மையும் கறுப்பும் கலந்த வண்ணத்தில் குட்டிக் குட்டி இறகுகள். அவை ஒரு குருவியுனுடையவை. உடலின் மயிர்க்கால்கள் அத்தனையும் குத்திட்டு நின்றன. அன்னிச்சையாக அறையின் ஜன்னல்களைப் பார்த்தேன். அவை இறுகச் சாத்தப்பட்டிருந்தன.
அவர் தலைமாட்டிலிருந்த அழைப்பு மணியை வேக வேகமாக நாசூக்கின்றி பல முறை அழுத்தினேன். விறுவிறுவென அறைக்குள் வந்த புவனாவுக்கு நிலைமையை யூகிக்க சில நொடிகளே போதுமாயிருந்தது.
“அச்சோ” என்று சொல்லி வாயைக் கை வைத்துப் பொத்திக் கொண்டாள்.
ஜன்னலுக்கு வெளியே நாய் ஒன்று குரைத்து ஊளையிட்டது. ஒன்று தொடங்கி அடுத்தடுத்த நாய்கள். சில குரைத்தன. சில அழும் குரலில் ஊளையிட்டன. மெதுவாக ஆரம்பித்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. என்னால் அந்த நேரத்தில் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேக வேகமாக சித்தப்பாவின் மேசையைத் திறந்தேன். அங்கு பழைய பவுண்டைன் பேனா மற்றும் பேப்பர்களுக்குப் பக்கத்தில் எப்போதும் போல சில பிஸ்கட் பாக்கெட்டுகளும் இருந்தன.
அவற்றில் இரண்டை எடுத்துப் பிரித்தேன். அருகில் நின்ற புவனாவை அழைத்து, “இந்தா இந்தா இதைப் பிரிச்சு அந்த நாய்களுக்குப் போடு. பாவம் பசி போல. கத்துதுங்க. சத்தம் தாங்கல.” என்று ஒரு கையால் காதை இறுக்க மூடிக்கொண்டேன்.
புவனா, அவள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து நகராமல் என் கண்களை உற்றுப் பார்த்தவாறு, “எந்த நாய்க, எங்க சத்தம் கேக்குது?” என்றாள்.
O
நன்றி : வனம் மின்னிதழ்
April 20, 2023
தனித்தலையும் நட்சத்திரம்

சட்டென்று எப்படி ஆரம்பிப்பது? எதிலிருந்து தொடங்குவது? அது இயல்பாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால் வார்த்தை தடுமாறி உளறுவதற்கே வாய்ப்பு அதிகம். சின்ன முகச் சுளிப்பொன்று போதும் அவளுக்கு. கண்டுபிடித்துவிடுவாள். பின்னர், காரியம் கெட்டுவிடும். அவளை நான் விசாரிப்பதற்குப் பதில் அவளின் விசாரணைக்கு நான் உட்பட வேண்டியிருக்கும்.
ஆனால், பதில் கண்டுபிடித்தே தீரவேண்டும். ஒரு மாதம் சேகரித்த தகவல்களில் மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளினாலும் அந்த ‘ஒரு விசயம்’ உறுத்திக்கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அச்சமாக இருக்கிறது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்றால், வெளியே சொல்ல முடியாது. அத்தனையும் இரகசியம். கொஞ்சம் ஒப்பந்தத்தை மீறினாலும் பெரிய பிரச்சினையில்போய் முடியும். வேலைகூட போய்விட வாய்ப்புண்டு. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது இப்படியான சிக்கல்களையெல்லாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை.
ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. மீரா, ராபர்ட்டோ பொலேனோவின் ‘த ரொமாண்டிக் டாக்ஸ்’ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அட்டையில் கறுப்பு பூனைப்படம் போட்டிருந்தது. அவள் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில், பார்ப்பதற்கு ஒரு சிறிய பூனைக்குட்டியைப் போலிருந்த ஸ்பீக்கர் வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் மேலும் இரண்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. புத்தகக் குறிப்பு அட்டைகள் இரண்டு புத்தகங்களிலும் நடுவில் சொருகப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. ஹாலுக்கு தமிழ்ப் புத்தகங்கள், டாய்லட்டுக்கு மாத,வார இதழ்கள் என்று வகை பிரிப்பெல்லாம் உள்ளதை கவனித்துக் கண்டறிந்திருக்கிறேன். கேட்டுக்கொண்டதில்லை. ஆனால், அப்படித்தான் என்பது தெரியும்.
அகில் டென்னிஸ் கோச்சிங் போயிருக்கிறான். படிப்பில் சற்று சுணங்கினாலும், விளையாட்டில் படு சுட்டி. அவன் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த பிறகுதான் நான் அவ்விளையாட்டின் விதிகளை கற்றுக்கொண்டேன். அவனும் நானும் வீடும் முற்றிலுமாக மீராவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுவிட்டோம். அவனுக்காகவே தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டவள், அவன் பற்றிய சின்னச் சின்ன விசயங்ளில் கூட அதீத அக்கறையும், பொறுப்பும் காட்டுபவள். ஆனால், ஏன் அப்படி நடந்துகொள்கிறாள்? அவனை ஏன் அப்படிப் போட்டு அடிக்கிறாள்? எங்கிருந்து அவளில் குடியேறியது இப்படியொரு வன்மம்? நேரில் கொஞ்சமாய் சத்தம்போட்டுத் திட்டிவிட்டு அவன் முகம் சோர்ந்து போயிருந்தால்கூட நாள் முழுவதும் வாடி வதங்கிக் கிடப்பவளால் கனவில் எப்படி இரத்தம் தோயத் தோய அவனை அடிக்க முடிகிறது?
எப்போதோ ஒரு முறை என்றால்கூட வேறு ஏதேனும் காரணங்களைக் கற்பித்து ஒதுக்கிவிடலாம். கடந்த மூன்று மாதங்களாக அவளுடைய கனவுகளைக் கண்காணித்து வருகிறேன். இந்த ஒரு கனவு மட்டும் அவளுக்குத் திரும்பத் திரும்ப வருகிறது. அதில் எப்போதும் அகில் எங்கள் வீட்டு மாடிப்படியிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறான். மீரா சோபாவின் மீதமர்ந்து வழமைபோல புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறாள். இவன் வந்ததும் பக்கத்திலிருக்கும் பெல்ட்டால் அவனை மாறி மாறி அடிக்கிறாள். அவன் வலி பொறுக்காமல் கைகூப்பி இறைஞ்சுகிறான். அவள் அடித்துக்கொண்டே அழுகிறாள். இக்கனவுகளில் வரும் ஒரே மாறுதல் அவள் அவனை அடிக்கப் பயன்படுத்தும் ஆயுதங்கள் மட்டுமே. சிலமுறை கைத்தடி. சிலமுறை சாட்டை போன்ற வஸ்து. ஆனால், அவள் கண்களில் மினுக்கும் ஆத்திரமும் கோபத்தில் சுருங்கும் முகமும் துளியும் மாறுவதில்லை.
கோபத்தால் விகாரமடையும் அவளுடைய அந்த முகத்தை எங்கள் திருமண வாழ்வின் ஆரம்பக் காலகட்டத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் பெரும்பாலும் சின்னச் சின்ன புரிதற்குறைகளால் ஏற்படும் மனச்சங்கடங்கள். அற்ப விசயங்களில் துளிர்க்கும் சண்டைகள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது. அதுவும் அகில் பிறந்ததும் இன்னும் குறைந்தது. அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது ஒரு நாள் நாங்கள் சண்டை போட்டதைப் பார்த்துக் கதறி அழுதான். அழுதழுது வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து அவன் முன் நாங்கள் சண்டையிடுதை முற்றிலும் நிறுத்திக்கொண்டோம். அதன் பிறகு அவளுடைய அந்த முகத்தை இக்கனவுகளில்தான் காண்கிறேன். எவன் பொருட்டு எல்லாம் நின்றுபோனதோ அவன் மீதே அவையத்தனையும் வெளிப்படுவதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதே நேரத்தில் நேரில் அவளிடத்தில் வன்மத்தின் நிழலைக்கூட காண முடிவதில்லை.
என்றாவது ஒரு நாள் அவளறியாமல் அவளின் கனவுகளைக் கண்காணித்து வரும் உண்மை தெரிந்தால் அந்த நிழல் முகத்தின் நிஜச் சுவடுகளைக் காண நேரிடலாம். ஆரம்பத்தில் விளையாட்டும் குறுகுறுப்பும் இருந்ததென்னவோ உண்மைதான். மெது மெதுவாகத்தான் நான் இறங்கியிருந்த காரியத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இப்போது, பாதியில் நிறுத்த முடியாது. இத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுவிட்டு, நானே அதிலிருந்து விலகினால் சரியாக இருக்காது. அதுவும் எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான செயல்திட்டம். இது மட்டும் வெற்றிபெற்றால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். இதுவரையில் கிடைக்கும் தகவல்களைத் திரட்டித் தொகுக்கும் நிறுவனமாக மட்டுமே எங்களது பார்க்கப்படுகிறது. இதோடு செயற்கை நுண்ணறிவும், சில மருத்துவத் தொழில்நுட்பங்களும் சேரும்போது ஒரு மாயாஜாலமே நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிக்கப் போகிறோம். ‘மாயா பஜார்’ போன்ற பழைய கறுப்பு வெள்ளை மந்திர தந்திரப் படங்களில் வருமே உள்ளத்தைக் காட்டும் ஓர் அபூர்வக் கண்ணாடி! கிட்டத்தட்ட அதைத்தான் கொண்டுவரப் போகிறோம்.
உறக்கத்தின் பல்வேறு படிநிலைகளில் ஒருவர் உடலில் நடக்கும் பல வேதியல் மாற்றங்கள், நரம்பு மண்டலங்களில் பரிமாறப்படும் செய்திகள் இவற்றைக்கொண்டு அவர் கண்ட கனவை நாங்கள் திரும்ப நிகழ்த்துகிறோம். அக்கனவின் வழியே அவரின் ஆழ் மன விருப்பங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு உரியவற்றை அவருக்குச் சந்தைப்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். இதன் வழியே, விளம்பர நிறுவனங்களுக்குத் தேவையான வியாபார நுணுக்கங்களை அறியத் தருவதே முதலில் எங்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், உள்ளே இறங்கிய பிறகுதான் இங்கு அதைவிட மிகப்பெரியதொரு வாய்ப்பு இருப்பதைக் கண்டுகொண்டோம்.
ஒரு தனி மனிதனின் கனவுகளில் அவனின் தனிப்பட்ட ஆழ்மனப் பதிவுகளைவிட ஒரு சமூகத்தின் கூட்டு நனவிலி ஒன்றும் கூடவே செயல்படுவதைக் கண்டுகொண்டோம். அதன் வழியே ஒட்டுமொட்ட சமூகத்தின் போக்கையே அறிந்துகொள்ள முடிகிறது. சமூக ஊடகங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் என்று பல வகையிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு சம்பவம், உண்மையில் தனி மனிதனின் ஆழ்மனதில் எப்படிப் போய்ச் சேர்கிறது. அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிப் பாதிக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? அவற்றின் சாதக பாதகங்கள் யார் யாருக்கு என்று பல்வேறு விசயங்களை கனவுகளின் சமன்பாட்டின் வழியேக் கண்டறிய முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் ஒரே ஒரு ஸ்மார்ட் வாட்ச். அதில் எங்களின் மென்பொருளை உள்ளேற்றிவிட்டால் மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்.
இதன் ஒரு பகுதியாகத்தான், இத்திட்டக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவரின் கனவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து ஆராய்வது என்று முடிவானது. அதையும் சார்ந்தவர்கள் அறியாமல் செய்ய வேண்டும். ஏனெனில், தான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்தால் அவர்களின் உண்மையான ஆழ்மனம் வெளிப்படாமலே போகக்கூடும்.
முதலில் இதை மீராவின் மீது செயல்படுத்திப் பார்த்தபோது, இதுவரை யாருக்குமே வெளிப்படுத்தப்படாத மீராவின் ரகசியப் பக்கங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. வேலை, சோதனை, வெற்றி என்பதையெல்லாம் தாண்டி இது கொடுத்த கிளர்ச்சி அபரீதமானதாக இருந்தது.
அவளுடைய சுவராஸ்யமான கனவொன்று உண்டு. கொத்துக் கொத்தாய் நட்சத்திரங்கள் குவிந்து கிடக்கும் பால்வீதியில் அவள் இலக்கில்லாமல் பயணிக்கிறாள். மொத்த பிரபஞ்சத்துக்கும் வெளியே சென்று பார்த்துவிடுவது போன்ற ஆர்வத்தில் பறக்கிறாள். இரவுப் போர்வையில் சிதறிக்கிடக்கும் நட்சத்திர முத்துக்களை தன் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் பாவிக்கிறாள். தொடுகிறாள். அன்பாய்த் தடவுகிறாள். ஒவ்வொன்றாய் எடுத்து மடியில் ஏந்தி முத்தமிட்டு முத்தமிட்டு மறுபடியும் அவற்றை மிதக்க விடுகிறாள்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் திருமணமான புதிதில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் வாகைமானுக்குச் சென்றிருந்தோம். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டின் உள்ளேயே மெதுநடைக்குக் கிளம்பினோம். மதியம் நன்கு மழைபெய்து வெறித்திருந்ததால் குளிர் அவ்வளவாக இல்லை. வானமும் மேகமின்றி தெளிவாக இருந்தது. நிலவுகூட இல்லை. அதனால் நட்சத்திரக்கூட்டங்கள் துல்லியமாகத் தெரிந்தன.
வழியில் இருந்த ஒரு பலகையில் உட்கார்ந்தபடி மீரா அந்த நட்சத்திரங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளே சொல்லட்டும் என்று நான் காத்துக்கொண்டிருந்தேன்.
“நித்தில், உனக்கு நட்சத்திரங்கள் பத்தின கதை தெரியுமா?”
“எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைதான்.”
“நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது எங்க அப்பா எனக்கு நட்சத்திரங்கள் பத்தின கதை ஒண்ணு சொல்லிருக்கார். நமக்குப் பிடிச்சவங்க யாராவது கடவுள்கிட்ட போயிட்டா, கடவுள் அவங்களை நமக்காக ஒரு நட்சத்திரமா மாத்தி வானத்தில வச்சுருவாராம். அந்த நட்சத்திரம் எப்பவும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சவங்களுக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியுமாம். இப்போ எனக்கு எங்க அப்பா ஒரு நட்சத்திரமா இருக்கிறது தெரியுது.” இதைச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
இதுவே மற்றொரு நாளாக வேறொரு இடமாக இருந்திருந்தால் நான் அவளை காலாகாலத்துக்கும் கிண்டல் செய்து நோகடித்திருப்பேன். அன்று, அப்படியொரு இரவில் அவள் கண்களில் தேங்கி ஒளிர்ந்த நீரைக் கண்ட பிறகு அப்படிச் செய்யத் தோன்றவில்லை. எங்களுக்கும் அன்றைக்குப் பிறகு அப்படியானதொரு இரவு வாய்க்கவும் இல்லை.
இப்படியாக திரும்பத் திரும்ப வரும் கனவுகளை அதற்குத் தொடர்புடைய நிகழ்வொன்றின் வழியெ அர்த்தப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், அவள் அகிலிடம் வெளிப்படுத்தும் மூர்க்கமும், கோபமும், இரத்தம் பார்க்கும் வெறியும்தான் புரிந்துகொள்ள முடியாதவொன்றாக கிடந்து படுத்தியது.
அவளிருந்த அறைக்குள் நுழைந்ததை முதலில் அவள் பொருட்படுத்தவில்லை. ஹாலுக்கு வந்தேன். எதையாவது பேசிக் கிளறி விசயங்களைப் பெற வேண்டும். மறுபடியும் அவள் அறைக்குள் நுழைந்தேன்.
“ஏம்ப்பா.. ஏதாவது தேடிக்கிட்டு இருக்கியா?”
“இல்ல மீரா.. ஒண்ணுமில்ல. சும்மாதான்”
ஸ்பீக்கரில் ஒலியை நிறுத்தி வைத்தவள், “டீ போடணுமா?”
“இல்லயில்ல.. அதெல்லாம் வேண்டாம்.” என்றேன். என் முகத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தவள், தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கவிழ்த்தி வைத்துவிட்டு, போனில் நேரம் பார்த்தாள்.
மெதுவான குரலில் தயங்கியபடி, “அகில் வர்ற நேரமாச்சு.. ப்ளீஸ் இப்போ வேணாமே” என்றாள்.
“அய்யோ மீரா.. சத்தியமா நான் அதுக்கு வரல. சும்மா பேசலாம்ன்னுதான் வந்தேன்.”
ஒலித்துக்கொண்டிருந்த இசையை இப்போது முற்றிலுமாய் நிறுத்தினாள். கவிழ்த்தியிருந்த புத்தகத்தில் குறிப்பட்டையைச் சொருகி மூடி வைத்தாள்.
“அகில் அடுத்து நைன்த் போறான் இல்லியா?”
“இல்லை எய்த்”
“ஓ ஸாரி.. எய்த். எய்த். அகில் குட்டிய அடுத்த வருசத்திலேருந்து போர்டிங் ஸ்கூல் போடலாமா? என் ஃப்ரெண்டோட பையன் படிக்கிறான். ரொம்ப நல்லா இருக்காம். நீ என்ன சொல்ற?”
“நோ வே நித்தில்.. நோ வே.. இருக்கிறது ஒரே ஒரு பையன். அவனையும் போர்டிங்ல போட்டு நாம ரெண்டு பேரும் நடு வீட்டுல விட்டத்தப் பார்த்து உட்கார்ந்திருப்போமா? ஏன் திடீர்ன்னு இப்படியெல்லாம் உனக்கு யோசனை வருது. அவன் நம்ம கண்ணு முன்னாடியே இருக்கட்டும். அங்க என்ன சொல்லித் தருவாங்களோ அதை நான் இங்கேயே அவனுக்கு சொல்லித்தறேன். ப்ளீஸ் இதைப் பத்தி எங்கிட்ட அடுத்து எதுவுமே பேச வேண்டாம். ப்ளீஸ்”
அவளை சமனப்படுத்திவிட்டு ஹாலுக்கு வந்தேன். அவள் பேச்சில் சிறு இடறல் இல்லை. சந்தேகிக்கவே முடியாத உண்மையான அன்பு அவளுடையது. எனக்குத்தான் மண்டை பிளந்துகொண்டு வந்தது.
சிக்கலான விடை கண்டறியாத விசயங்களை மனதின் ஓரத்தில் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டும். தக்க நேரம் வரும்போது தன்னாலே விடை கிடைக்கும். எனவே அவளுடைய கனவையும் அப்படி ஓரத்தில் போட்டு வைத்திருந்தேன்.
மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒரு நாள் அகில் சிறுவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தான். மீரா உற்சாகமாகியிருந்தாள். பெரிய ஆர்வமில்லை என்றாலும் அவர்கள் இருவரின் சந்தோசம் என்னையும் பற்றிக்கொண்டது. அன்றிரவு இரவு உணவுக்கு ஓட்டலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம்.
உணவு மேசையில் ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கும்போது பள்ளிக்கால நண்பனிடமிருந்து வாட்ஸப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அகில் டென்னிஸ் உடையில் கையில் ராக்கெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை என்னுடைய ஸ்டேட்டஸாக வைத்திருந்தேன். அதற்குத்தான் அவன் பதில் அனுப்பியிருந்தான்.
“இது அகில் இல்லை. என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த நித்திலன்தான். அப்படியே இருக்கிறான்!” என்று அனுப்பியிருந்தான்.
ஒரே வரியில் எனக்கு எல்லாம் விளங்கியது. எங்களின் பன்னிரெண்டு வருடத் திருமண வாழ்வும் அடுத்த பத்து நிமிடங்களில் கண்முன்னே காட்சி காட்சியாக விரிந்தது. அவ்விடத்திலிருந்து முற்றிலும் துண்டித்துப் போயிருந்தேன்.
ஒரே ஒரு உண்மை மட்டும் புரிந்தது. ஒரு வேளை மீராவுக்கு முன்னால் நான் இறக்க நேரிட்டால் அவள் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரமாய் தனித்து அலைந்துகொண்டிருப்பேன்.
O
நன்றி : காலச்சுவடு
ஓவியம் : பூண்டி ஜெயராஜ்
April 12, 2023
ஒளிரும் பச்சைக் கண்கள்

1
அன்று மதியம் நன்கு தூங்கிவிட்டிருந்தேன். கண் விழித்துப் பார்க்கும்போது இரவாகியிருந்தது. சட்டென்ற ஒரு கணத்தில் இது இரவா பகலா என்றொரு குழப்பம். மெல்ல நிதானித்து நினைவுக்கு மீண்டேன். இரவு, பகல், கிழமை என்று மொத்த காலமும் கிளை பற்றித் தொங்கும் இருட்டு வவ்வாலைப் போல தலைகீழாய்ப் போயிருந்தது. உணவு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. காலை உணவு மதியத்துக்கும் மதிய உணவு மாலைக்கும் இரவுணவு நள்ளிரவுக்கும் தள்ளிப் போயிருந்தது. சில நாட்களில் இரு வேளைகள், அரிதாக சில பொழுதுகளில் ஒரே வேளை என்றும் சுருங்கிற்று. அன்றாடத்தின் சகல ஒழுங்குகளும் கலைக்கப்பட்டுவிட்டன. இரவாகியிருந்தபோதும் ஹாலில் விளக்கேதும் போடப்பட்டிருக்கவில்லை. கையிலிருந்த மொபைலில் டார்ச்சினை ஒளிரவிட்டு கவனமாக அடியெடுத்து படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்குச் சென்றேன்.
கண்கள் மெதுவாக வெளிச்சத்துக்குப் பழகின. சுவரில் மாட்டப்பட்டிருந்த தூசு படிந்த திருமணப் புகைப்படத்துக்குப் பின்னால் பல்லியொன்றின் வால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. டி.வி இருக்கும் டேபிளின் மேலே மீராவின் ஒற்றைக் கம்மல் கழற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்கூட்டி சாவி மரத்தால் செய்யப்பட்ட கிட்டார் வடிவச் சாவி மாட்டியிலிருந்து கீழே விழுந்து தரையில் கிடந்தது. பல நாட்களாக அவ்வப்போது அது கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றது. முன்பு போல் இருந்தால், மீராவிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். “சொல்ற நேரத்துல எடுத்து வைக்கலாமே” என்றே பதில் வரும். இப்போது அதுவும்கூட இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஒரு வார்த்தை பேசவில்லை. வீடடங்கு ஆரம்பித்த முதல் வாரத்தில் வந்த சண்டைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறை என்று பிரிந்து கிடக்கிறோம். இதைவிடக் கடுமையான சண்டைகளைக்கூட திருமணமான மூன்று ஆண்டுகளில் சாதாரணமாகக் கடந்து வந்திருக்கிறோம். ஒரு பெண்ணைப் பார்த்து எந்தவோர் ஆணும் எக்காரணத்தை முன்னிட்டும் பேசக் கூசும் வார்த்தைகளை எல்லாம் தாட்சண்யமேயில்லாமல் அவளிடத்தே கொட்டித் தீர்த்திருக்கிறேன். அவற்றோடெல்லாம் ஒப்பிட இது ஒன்றுமேயில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் இருவரையும் கரைகளாக்கி நடுவில் வெறுமை ஒரு சலமனற்ற நதி போல ஓடிக்கொண்டிருக்கிறது. வெறுமையும் தனிமையும் ஒன்றாகச் சேர அனுமதிக்கக் கூடாது என்பது மட்டும் புரிந்தது.
ஆப்பிள் நறுக்கிய கத்தியுடன் சீவிய ஆப்பிள் தோல்களும் விதைகளும் தட்டுடன் அப்படியே சோபாவின் மரக் கைப்படி ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கத்தியின் கூர்மையான பகுதியின் மேல் இழுவியிருந்த ஆப்பிள் துணுக்குகளை விரல்களால் கவனமாய் தடவி எடுத்தேன். அப்போதுதான் என் முதுகின் மேல் துளைத்து வெளியேற முயலும் விழிகளை உணர்ந்தேன். நான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து வலப் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தேன். படுத்திருந்த நிலையில் தலையை மட்டும் மெதுவாக உயர்த்தி எச்சரிக்கும் பாவனையில் அது என்னை முறைத்துப் பார்த்தது.
மோக்கா – என்று பெயர் வைத்திருக்கிறாள். ஆட்காட்டி விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் வைத்துச் சுழற்றி விளையாட உதவும் ஃபிட்ஜெட் கருவியின் மிகச் சரியான வடிவத்தில் முகத்தில் படர்ந்த கருமையும், உடல் முழுவதும் வெள்ளையும் சாம்பலும் கலந்து பரவிய நிறமும் கொண்ட பூனைக்குட்டி. முகத்தின் கருப்பு நிறத்துக்கு நடுவில் ஒளிரும் பச்சை நிறக் கண்களின் வழியே அதனால் ஒரே நேரத்தில் தேவனையும் சாத்தானையும் தருவிக்க முடியும். இப்போது சாத்தானை வரித்துக் கொண்டுவந்து முறைத்தபடி நிற்கிறது.
குட்டியாக இருந்தபோதும் அதன் கண்களில் தென்பட்ட வன்மத்தின் தீவிரத்தால் என் மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. உற்று பார்ப்பது அதன் ஆக்ரோஷத்தை மேலும் கிளறிவிடக்கூடும். மீன் முள்ளைப் போன்று கூர்மையாக வளைந்து நின்ற அதன் நகங்களைப் பார்த்தேன். அனிச்சையாக என் கெண்டைக் கால்களை ஒருமுறை தடவி விட்டுக்கொண்டேன். பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். ஒரு சின்ன பூனைக்குட்டிக்கு அஞ்சுவது பற்றி உள்ளுக்குள் வெட்கமாயிருந்தது.
தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு அறையிலிருந்தும் எந்தவிதச் சத்தமும் வரவில்லை. மீராவும் தூங்கிக்கொண்டிருப்பாளாயிருக்கும். சமீப நாட்களில் அவளின் இருப்புக்குச் சத்தங்கள் மட்டுமே சாட்சியாகியிருக்கின்றன. அவள் விழித்திருக்கும் நேரங்களில் எப்போதும் அவளைச் சுற்றி ஏதாவது ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும். சமையலறையில் நின்று சமைத்துக்கொண்டிருக்கும்போது பழைய டி.வி. நிகழ்ச்சிகள், பலதரப்பட்ட யூ-ட்யூப் சானல்கள், திரைப்படங்கள், சமையல் குறிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள், பாடல்கள், சமீப காலமாக செய்திகள், மருத்துவர்களின் அறிவுரைகள் என்று மொபைலில் இப்படி ஏதேனுமொன்று ஓலித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஹாலில் டி.வி.யிலும் தன்போல ஏதாவதொன்று ஓடிக்கொண்டிருக்கும். இல்லையென்றால் அம்மா, அப்பா, பள்ளித் தோழிகள், பழைய அலுவலக சகாக்கள் என்று யாருடனாவது சலிக்காமல் பேசிக்கொண்டிருப்பாள். இதற்கு முன்பு அவள் இப்படியிருக்கவில்லை. அகமும் புறமும் ஒடுக்கப்பட்டிருக்கும் இந்நாட்களின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. இப்போது பிரிக்க முடியாத பழக்கமாய் அவளுள் வேரூன்றிப் போயிருந்தது.
O
2
வீடடங்கைப் பலரும் விடுமுறையைப் போல கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நாளை நேரக்கூடிய விளைவுகள் குறித்த அச்சமேதுமற்ற சுத்தப் பைத்தியக்காரத்தனம் இது எனவும், மறுபக்கம் நிற்க நேரமில்லாமல் எப்போதும் ஏதேனுமொன்றை துரத்திக்கொண்டு சென்றவர்கள் அத்தனைபேரும் நிறுத்தி நிதானித்து கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளட்டுமே, இப்போது என்ன ஆகிவிடப் போகிறது எனவும் தோன்றுகிறது. இதெல்லாம் முடிவுறும் ஒரு நாளில் மறுபடியும் பழையபடி இன்னுமின்னும் முன்பைக் காட்டிலும் வேகமாக ஓடத்தானே போகிறார்கள்.
ஒருவகையில் இதன் பொருட்டு இப்படியாக நிதானித்துக் களிப்பவர்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. என்னுடைய வேலையைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் அதிகபட்ச தேவையெல்லாம் ஒரு கணினியும் தடையற்ற இணையத் தொடர்பும் மட்டுமே. இவை மட்டும் இருக்குமெனில் எந்த ஒரு குக்கிராமத்திலிருந்தும் என்னால் எவ்வித பிசகுமின்றி என் வேலையைத் தொடர முடியும்.
இப்போது நினைத்துப் பார்க்கையில், தினம் தினம் போக பதினைந்து கி.மீ. வர பதினைந்து கி.மீ. என்று வெயில் மழை பாராது முதுகு நோக பயணம் செய்து அலுவலகம் போய்வந்ததுக்கு எல்லாம் என்ன பொருள் என்பது புரியவில்லை. எல்லோரும் போகிறார்கள் என்பதற்காக, கண்களை மூடிக்கொண்டு நிறைவேற்றப்படும் அர்த்தமறியாதொரு பழைய சடங்கைப் போல அலுவலகம் சென்று வந்திருக்கிறேன். அதற்குமேல் அப்படிப் போனதற்கு ஓர் அர்த்தமில்லை. அலுப்பும் சலிப்பும் மிக்க பயணத்தைத் தவிர்த்ததைத் தவிர இன்று என்னுடைய அன்றாடத்தில் துளி மாற்றமில்லை. சொல்லப் போனால் பயணத்தில் மிச்சமாகும் நேரத்தையும் சேர்த்து அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் பார்க்கும் வரைகலை வடிவமைப்பு அதீத கவனத்தையும் உழைப்பையும் கோருவது. கற்பனையும் தருக்கமும் நுணுக்கமும் தகுந்த அளவில் கூடி முயங்கி எழுந்து வரவேண்டும். அதுவும்கூட இந்தப் பத்து வருடப் பயிற்சியில் வண்டியோட்டுவதைப் போன்ற அனிச்சை செயலாகிப் போயிருந்தது.
அன்று வரைபடத்துக்கான தனித் தனி பாகங்களை வரைந்து முடித்துவிட்டு கடைசியாக அனைத்தையும் ஒன்றிணைத்துச் சேர்க்கும் வேலையையும் முடுக்கிவிட்டு பாதியில் நிறுத்திவைத்திருந்த அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். தனித்தனியாக செய்த துண்டுப் படங்களை இணைத்துக் கட்டும் வேலை இரண்டரை மணி நேரம் வரை நடைபெறும். மிகச் சரியாக மீதம் மூன்று நிமிடங்கள் இருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பத்து நிமிடங்களில் மின்சாரம் திரும்பிவிட்டது. ஆனால், இப்போது மறுபடியும் இணைப்பு வேலையை முதலிலிருந்து தொடங்க வேண்டும். அது தானாகப் பிரச்சனையின்றி இணைத்துக் கட்டப்பெற்ற பிறகே வேலை முடியும். திரும்பச் செய்வது குறித்த சலிப்பைவிட ஒருவேளை இடையில் மீண்டும் மின்சாரம் தடைபட்டால் என்ன செய்வது என்பது குறித்த எரிச்சலே அதிகமாக இருந்தது. கணினியை உயிர்ப்பித்து மறுபடியும் தடைப்பட்ட வேலையை முதலில் இருந்து முடுக்கிவிட்டு நாவலைக் கையில் எடுத்தேன். அப்போதுதான் மீரா அடுப்படியிலிருந்து அழைத்தாள்.
“நித்தில்..”
அவள் அழைத்தது எனக்கு காதில் கேட்டும் பதில் சொல்லும் மனநிலை இல்லை. ‘அதை எடு, இதைச் செய்’ என்று ஏதாவது வேலை ஏவுவதற்காகவே அழைக்கிறாள் என்பதை அவள் அழைக்கும் தொனியிலிருந்தே அறிவேன்.
“ நித்தில்..”
“சொல்லு மீரா”
“வேலை முடிஞ்சதா? கொஞ்சம் ஹெல்ப் வேணும்.”
“இல்ல மீரா.. வேலை இன்னும் முடியல.”
“பொய் சொல்லாத.. சும்மா உக்காந்து புக்தானே படிச்சுட்டு இருந்த. இப்போ ஒரு ஹெல்ப்ன்னு கேட்டதும் வேலை அது இதுங்கிற பாத்தியா?”
“ஹே.. சத்தியமா இன்னும் வேலை முடியலடி”
“நான் ஏதாவது சொன்னா மட்டும் உனக்கு வேலை வந்துடும். நேரம் இருக்காது. அதுவே படம் பார்க்க புத்தகம் படிக்கன்னா மட்டும் நேரம் தனியா முளைச்சு வந்திரும் இல்ல?”, அவள் என்னவோ இதை மெல்லிய புன்னகை இழையோடும் கேலியாகச் சொன்னதுபோல்தான் இருந்தது. என்னால்தான் அன்று அதைச் சிரித்துக் கடந்துசெல்ல இயலவில்லை.
“ஐயோ ப்ளீஸ் ஆரம்பிக்காதே.. இப்போ நான் என்ன பண்ணனும் மட்டும் சொல்லு” கட்டுக்குள் நிற்காமல் என் குரல் உயர்ந்தது.
“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் விடு.. போ போய் உன் வேலையப் பாரு. அவனவன் பொண்டாட்டிக்கு எப்படி ஹெல்ஃப் பண்றான் போய் பாரு. தீபக்கெல்லாம் சனி ஞாயிறு மொத்த சமையலும் அவனே பண்றான். எங்க அண்ணி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் முழுக்க வரிசையா போட்டாவா போட்டுத் தள்ளுறாங்க. நீதான் என்னமோ ஓவரா பண்ற”
“சும்மா கடுப்பேத்தாத மீரா. உங்க அண்ணனுக்கு ஆபிஸ் கிடையாது. வீட்டில இருந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமும் இல்ல. அப்போ இதுவும் செய்வான். இதுக்கு மேலயும் செய்வான். எனக்கு அப்படியா? காலைல பத்து மணிக்கு வேலை செய்ய உட்கார்ந்தேன். இதோ இப்போ நைட்டு எட்டு மணியாச்சு. இன்னமும் இரண்டு மணி நேரம் வேலை இருக்கு. இதுக்கு நடுவுல நீ வேற ஊர் உள்ளவன் ஸ்டேட்டஸ் எல்லாம் மேஞ்சுட்டு வந்துட்டு சும்மா நச்சு நச்சுன்னு படுத்துற”
போகிற போக்கில் அவள் அண்ணனை அவன் இவன் என்று சொன்னதை இப்போது அவள் கவனித்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாய் இதை எடுப்பாள் என்பது எனக்குத் தெரியும். ஒரு சண்டையில் தவறவிட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த சண்டைகளில் எனக்கெதிரான ஆயுதமாய்த் திரும்புவதைக் கவனித்திருக்கிறேன். இப்போது அவள் முகம் சிறுக்க ஆரம்பித்தது. ஏவிய குரலுக்கு வந்து நிற்கும் நாய்க்குட்டிபோல கண்களில் நீர் தேங்கி நின்றது.
“நீ வேலை பார்த்துட்டு இருக்கும்போது ஒண்ணும் நான் கேக்கலியே. காலைல இருந்து உன்ன எதாவது கேட்டனா? மூணு வேலை சமையல், இரண்டு வேளை டீ, அதுக்கு மேல பாத்திரம் தேய்க்கிறது, வீடு கூட்டுறதுலருந்து உன் ஜட்டி, பனியனைத் துவைச்சுப்போடுறது வரை அத்தனையையும் ஒத்தையாளா நின்னு நான்தானே இங்க இழுத்துப்போட்டுப் பண்ணிட்டு இருக்கேன். நடுவுல ஏதாவது உன்ன தொல்லை பண்ணேனா? இல்லியே! நான்...”
அவள் பேசும்போது இடைவெட்டிப் பேசுவது அவளைக் கூர்மையாக அவமதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அப்படியே செய்தேன்.
“ஐயோ கடவுளே.. லிஸ்ட் போட ஆரம்பிச்சுடாத. நான் மட்டும் இப்படி வேலை பார்த்து வாங்கிட்டு வர்ற சம்பளத்தை பக்கத்து வீட்டுல கொண்டுபோயா கொட்டுறேன்? மாங்கு மாங்குன்னு மாடு மாதிரி யாருக்காக உழைக்கிறேன்? சும்மா ஏதோ நீ மட்டும்தான் இந்த வீட்டுல வேலை பார்க்குற மாதிரி பேசுற! எப்பப் பார்த்தாலும் சும்மா நைய் நைய்ன்னுட்டு.. ச்சை!”
“என்ன நைய் நைய்ன்னு சொன்னாங்க இப்போ? எட்டிப் பார்த்தேன். புக்தான் படிச்சுட்டு இருந்த. அதான் கூப்பிட்டேன். அதுக்கு இவ்வளோ பேச்சா.. யப்பா. ஒரு உதவிக்குத் துப்பில்ல.. பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்ல” என் முகத்தைப் பார்க்காமல் சுவரைப் பார்த்து கேலியாகச் சிரித்தபடிப் பேச ஆரம்பித்தாள். என் அகத்தைக் குறுக்கி ஒடுக்கி கிறுக்குப் பிடிக்க வைக்கும் உத்திகளை என்னைவிடக் கச்சிதமாகக் கையாண்டாள்.
“ஓ.. அதான் தெரியுமே எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பத்தே பத்து நிமிசம் இருந்துடக்கூடாது. புக்கைத் திறந்து நாலு பக்கம் பொறட்டிடக்கூடாது. உனக்குப் பொறுக்காதே. மூக்கு வியர்த்துடும். சாடிஸ்ட்.. சைக்கோ.. சைக்கோ..” என்று அவளைப் பார்த்து உச்சக் குரலில் கத்தினேன். கோபத்தில் கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். குறி பார்த்துச் செய்யவில்லை என்றாலும் அது மிகச் சரியாக அவள் முகத்தின் மேல் போய் விழுந்தது.
அதன் பிறகு வேலையை முடித்துவிட்டு அடுப்படிக்குச் சென்று பார்த்தேன். கருகியிருந்த தோசையுடன் அடுப்பு அப்படியே அணைக்கப்பட்டிருந்தது. மற்றபடி எல்லாம் போட்டது போட்டபடி இருந்தது. அவள் அழுதிருப்பாளாய் இருக்கும். என்னால் இதில் எதுவும் செய்வதற்கில்லை. அவள் கண் முன்னால்தான் அவ்வளவு மணி நேரம் முதுகுக்குப் பொருந்தாத நாற்காலியில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாம் தெரிந்திருந்தும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
போகட்டும். கிடந்து அழட்டும். சமாதானப்படுத்தி சரிசெய்யும் மனபோக்கு இல்லை. மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மறுநாள் முழுவதும் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதேநேரத்தில் வழக்கமாக கோபத்திலிருக்கும்போது அவள் செய்யும் கவன ஈர்ப்பு உத்திகள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை.
மூன்றாம் நாள் மனது கேட்காமல் குற்ற உணர்வு மேலிட நானே பேச ஆரம்பித்தேன். அவளுக்குத் தெரியாமல் அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். காயமோ, வீக்கமோ தென்படவில்லை. அவளிடம் என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. சிறு சலனம்கூட இல்லை. ஆனால், அவள் மற்ற நாட்களில் செய்வதைப் போன்றே அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தாள். பாத்திரங்கள் உருட்டப்படும் சத்தம், கப்-போர்ட்டுகள் அறைந்து சாத்தப்படும் ஓசை, தான்தோன்றிப் புலம்பல்கள் என எதுவுமில்லை. குறைந்தபட்சமாக ஒரு முறைப்பு, சிறு சுளிப்புகூட இல்லை. அதுதான் சற்று உறுத்தியது. இயல்பைவிட்டு விலகியிருப்பதே எப்போதும் அச்சத்தைக் கூட்டுகிறது. வழக்கமான சண்டைகளின்போது, “இப்படியே நீ பண்ணிட்டு இரு. என்னைக்காவது ஒரு நாள் வெடிக்கப் போறேன். அன்னிக்குப் பார்ப்ப என்னோட உண்மையான முகத்த” என்ற வாக்கியத்தோடுதான் சண்டையை முடிப்பாள். அதெல்லாம் அவ்வப்போதான கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை உணர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளே உறைந்திருந்ததையும் மறுப்பதற்கில்லை. ஆனால், வெடிப்பதற்குப் பதிலாக இப்படி மொத்தமாக அடைத்துக்கொள்வாள் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவேயில்லை. இயன்றவரை நான் இயல்பாக இருக்க முயற்சித்தேன். அவளிடம் சாதாரணமாகப் பேசுவதைப் போலவே பேசிக்கொண்டிருந்தேன். அவள் எதையும் பொருட்படுத்தியதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
என்னாலும் இரண்டு நாட்களுக்கு மேல் இயல்பாக இருப்பதுபோல் நடிப்பதைத் தொடர முடியவில்லை. சோபாவில் அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள். நானும் சோபாவில் போய் சற்றுத் தள்ளி அந்நியர் ஒருவருக்குத் தருவதைப் போன்ற போதிய இடைவெளிவிட்டுத்தான் அமர்ந்தேன். தீ பட்டதைப் போல் துள்ளி எழுந்து நகர்ந்து போனாள். சுருக்கென்று இருந்தது. திரும்பத் திரும்ப அந்தச் சம்பவம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து அவளிடம் பேசுவதைக் குறைத்தேன். ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்திக்கொண்டேன்.
O
3
ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலிலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். அறையிலும் மனத்திலும் கவிந்திருந்த புழுக்கத்துக்கு இதமாக இருந்தது. காலையில் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்து மோக்காவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வளைந்த கனத்த தட்டில் ஊற்றினேன். அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஹாலுக்குக் கொண்டு வந்தேன். அது முன்பு படுத்திருந்த நிலையிலிருந்து மாறவில்லை. பால் இருந்த கிண்ணத்தை வைக்கப் பக்கத்தில் போனதும் மிரண்டது. மெதுவாகச் சீறியது. பயந்து கையை உதறியதில் தட்டிலிருந்த பால் மொத்தமும் பேப்பரிலும் தரையிலுமாகச் சிந்திப் பரவியது. அப்படியே தட்டை எடுத்து தலையில் ஒரு போடு போட்டுவிடலாமா என்று யோசித்தேன். மறு கணம் பார்க்க பாவமாகவும் இருந்தது.
வீடடங்கு அறிவிக்கப்பட்டு நாங்கள் வீட்டில் அடைய ஆரம்பித்த இரண்டாம் நாள் அது. அலுவலகத்தில் கொடுத்துவிடப்பட்ட மாக் கணினியின் எல்லா இணைப்பு வயர்களையும் தகுந்த இடத்தில் பொருத்திச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மீரா வீட்டுக்கு வெளியிலிருந்து அழைத்தாள்.
“நித்தில்”
“சொல்லு மீரா”
“ஒரு நிமிசம் வெளியே வர்றியா?” அவள் குரலில் உற்சாகம் நிறைந்து ததும்பியது.
“ஃபைவ் மினிட்ஸ்”
“இல்ல இல்ல.. அவ்ளோ நேரமெல்லாம் கிடையாது. உடனே வெளியே வா. ப்ளீஸ்டா” என்று பக்கத்திலிருக்கும் பல வீடுகளுக்கும் கேட்கும் குரலில் கத்தினாள்.
நாங்கள் இருப்பது பழவந்தாங்கலில் தனி வீடு. மேலே வீட்டு உரிமையாளர். கீழே நாங்கள். இரண்டு மா மரங்கள், பின்னால் ஒரு கிணறு, வீட்டுக் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி உட்புறமாக நட்டு வைக்கப்பட்ட மூன்றுவித செம்பருத்திச் செடிகள், நந்தியாவெட்டை, துளசி. சென்னையில் இப்படி ஒரு அழகான வீடு அதிர்ந்து பேசாத உரிமையாளரைக் கொண்டிருப்பது மிகவும் அரிது. அவ்வகையில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது.
வீட்டு வாசலுக்கு வலதுபுறத்தில் சுற்றுச் சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த துளசிச் செடிகளுக்குப் பக்கத்தில் மீரா குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள்.
“வா வா நித்தில் இங்க வந்து பாரு”
அழகிய பொதிப் பஞ்சைப் போலிருந்தது அந்தப் பூனைக்குட்டி. பிறந்து சில நாட்களே இருக்கும். கண்களை பாதியாகத் திறப்பதும், பிறகு, வெளிச்சத்துக்கு கூசி மூடுவதுமாக இருந்தது. சுட்டுவிரலால் மெதுவாக அதன் தலையைத் தடவினாள். தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டது. மெதுவாக அதை தன் இடக்கையில் எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
“ஹே.. கீழே விடு மீரா.. அதோட அம்மா பார்த்தா உன்னைக் கடிச்சுடப் போகுது”
“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது போ”
“பைத்தியம்!”
என்னைப் பார்த்து கண்களைத் தாழ்த்தி அசடாகச் சிரித்தாள். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.
“நோ மீரா.. வேண்டாம். நாம இருக்கிறது வாடகை வீடு. நமக்கு பெட்ஸ் எல்லாம் செட் ஆகாது. மேல் வீட்டு ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா ஏதாவது சொல்லப் போறாங்க.”
“ஆன்ட்டிக்கிட்ட நான் பேசிக்கிறேன். அது பிரச்சனையில்ல. நீ என்ன சொல்ற?” என்றாள்.
“அய்யோ லூஸே.. அதோட அம்மா தேடப் போகுது. பாவமில்லியா” என்றேன்.
“அதெல்லாம் தேடாது. ஒருவேள அப்படித் தேடி வந்தா பார்த்துக்கலாம். இப்போ இதை இப்படியே விட்டாலும் செத்துப் போயிடும். அழகா இருக்கு. இதோட கண்ணை மட்டும் பாரு. ஒரு மாதிரி பச்சை பச்சையா அப்படியே கலர் கோலிக்குண்டு மாதிரி எப்படி இருக்கு. இதை மட்டும் ஒரே ஒரு தடவை பாரு. உனக்கே கீழே விட மனசு வராது” என்றாள்.
அவள் என்னிடம் அனுமதியெதுவும் கேட்கவில்லை. முடிவு செய்துவிட்டுத் தகவலைச் சொன்னாள். அவ்வளவுதான். அதை எடுத்து வளர்ப்பது குறித்து எனக்கு முதலில் தயக்கமிருந்தது உண்மைதான் என்றாலும் அவளின் இரவுநேர அழுகைகளை அது குறைக்கக்கூடும் என்று திடமாக நம்பினேன். நானும் அதன் கண்களைப் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் மேல் அவள் சொன்னதில் உண்மை இருந்தது.
துணியாலான மிதியடிகள் கொண்டு குட்டியாக ஒரு மெத்தை தயாரித்தாள். பாலைக் காய்ச்சி பக்கத்தில் யாரிடமோ பேசி வாங்கி வைத்த ஃபீடிங் பாட்டிலில் அடைத்துக் கொடுத்தாள். எப்போதும் நண்பர்களின் வருகையால் களைகட்டி இருக்கும் எங்கள் வீட்டில், வீடடங்கு காலத்தின் காரணமாய் கவிந்திருந்த வெறுமையை இட்டு நிரப்பியது அதன் வருகை. இருந்தும் அதன் இருப்பினை முழு மனதாக என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது வந்து சேர்ந்த இரண்டாவது நாள்தான் எங்களுக்குள் அந்தச் சண்டை நிகழ்ந்து பேச்சுவார்த்தை நின்று போனது.
பல நேரங்களில் மீராவிடம் பேச வேண்டிய விசயங்களை, சொல்ல வேண்டிய தகவல்களை மோக்காவைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினேன். சண்டைக்குப் பின்னான சமாதான முயற்சிகளின் போது ரொம்பவும் விளையாட்டாகத்தான் இதை ஆரம்பித்தேன். அப்படியாக அதனோடு நட்பாக பேசும் கணங்களில் அது தன் தலையைக் கொண்டுவந்து என் பாதங்களில் மெதுவாக முட்டும். அவள் தடவிக்கொடுப்பதைப் போலவே நானும் அதன் கழுத்தினை மெதுவாகத் தடவிக்கொடுத்தேன். அந்தச் சுகத்தில் அது மேலும் மேலும் நெகிழ்ந்து குழைந்து உருகும். தடவுவதை நிறுத்தியதும் தலையை உயர்த்தி என் முகத்தைப் பார்க்கும். அப்போது அதற்கு இருந்தது அன்பினை இறைஞ்சும் தேவனின் கண்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் அது கொஞ்ச கொஞ்சமாய் மொத்த வீட்டையும் உரிமைகொண்டாட ஆரம்பித்தது. என் படுக்கையறையில் முடி உதிர்ப்பது குறித்து அதனிடமே சொல்வதுபோல மீராவிடம் சத்தம்போட்டுக் கண்டித்த நாளிலிருந்துதான் மீரா தன் படுக்கையை பக்கத்து அறைக்கு மாற்றிக்கொண்டாள். உண்மையில் மோக்காவைத்தான் வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை ஒதுக்கினார்கள்.
அதன் பின் ஒரு நாள் டீப்பாயிலிருந்த என் புத்தகம் கரம்பி வைக்கப்பட்டிருந்தது. நண்பர் ஒருவரிடம் இரவல் வாங்கி வைத்திருந்த புத்தகம். என்னால் கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மோக்காவினுடைய செய்கைதான் என்றாலும் ஓரோரு சமயம் அதனைக் கடிந்து பேசுவதற்கே அச்சமாக இருந்தது. அதனுடைய செய்கைகளைப் பார்க்கும்போது பல நேரங்களில் மீராவினுடையதைப் போலிருந்தது. இதில் யார் யாரைப் பிரதியெடுக்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
O
4
நீண்ட நாட்களாக மழிக்கப்படாமலிருந்த தாடி என்னைச் சுற்றி படர்ந்திருந்த தனிமையின் அடர்த்தியை இன்னும் அதிகமாக்கியதைப் போல் தோன்றியது. ஃபோமைத் தடவி சேவிங் செய்துகொண்டிருந்தேன். மீசையில் பட்டுவிடாமல் அதிகவனமாக முடியை ஒதுக்கிக்கொண்டிருந்தபோதுதான் கண்ணாடியில் அந்தக் காட்சியைக் கண்டேன். என் அலுவலகக் கணினியின் வயரின் மேல் ஒரு காலை ஊன்றி அது நகர்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டு மோக்கா வெகு ருசியாக அதைக் கரம்பிச் சுவைத்துக்கொண்டிருந்தது. கணினி எவ்வகையிலேனும் பழுதுபடுமாகின் இப்போதிருக்கும் சூழலில் அதைச் சரிபார்ப்பது நடவாத காரியம். என்னுடைய மொத்த வேலையும் பாழ். அதற்கும் மேல் வயரைக் கடித்து ஏதாவது ஆகித் தொலைந்தால் என்னாவது?
இதில் கவனம் சிதறி முகத்திலொரு செவ்வரி தீட்டிக்கொண்டேன். ஷேவிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, “யே.. யேய்.. வயரைப் போய் கடிக்கிற! ஷாக் அடிச்சுட்டு செத்துடாதே. அந்தப் பக்கம் போய்த் தொலையேன் சனியனே!. என் உயிரை வாங்கன்னு வந்து சேர்ந்திருக்க” என்று கத்தி காலை ஓங்கித் தரையில் மிதித்துச் சப்தமெழுப்பி அதை விரட்டினேன்.
உச்ஸ்தாயில் ஒலித்த என் கத்தலையும், தரையிலிருந்து வந்த இடியொத்த ஓசையையும் எதிர்பாராத அது திடுக்கிட்டு வெருண்டு விலகியது. மீராவினுடைய அறைக்கு வெளியே நின்றுகொண்டு என்னைப் பார்த்து மெல்லிய குரலில் ‘மியாவ்’ என்றது.
அவ்வறையிலிருந்து மீரா வெளிவந்து கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அதனை கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். அன்றும் மறுநாளும் மீராவினுடைய அறையைவிட்டு மோக்கா அதிகமாக வெளிவரவில்லை. அவ்வப்போது உள்ளிருந்து சத்தம் மட்டும் வரும். நானும் அது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அன்றைக்கு இரவு சிறுநீர் கழிக்க என் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தபோதுதான் வழியில் படுத்திருந்த மோக்காவைத் தெரியாமல் மிதித்துவிட்டேன். எண்பது கிலோ எடையை ஒரு சின்ன பூனைக்குட்டி எப்படித் தாங்கும். வலியில் கதறிக் கத்தித் தீர்த்துவிட்டது. கோபத்தில் என் கால்களை தன் கூரிய நகங்களால் இழுத்துப் பிறாண்டி கிழித்தது. விளக்கைப் போட்டதும்தான் கவனித்தேன். அதன் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் என்ன செய்வதென்றும் புரியவில்லை. அதைத் தொட்டுத் தூக்கலாம் என்று பக்கத்தில் போனதும் மீண்டும் காலின் மீது ஏறிப் பிறாண்டியது. என் முட்டிக்குக் கீழ் அதன் கூரிய நகங்களின் உபயத்தால் குறுக்கும் நெடுக்குமாய் கீறல்கள். கீழே குனிந்து மறுபடியும் தூக்க முயற்சிக்கும்போது அது விலகி ஓடி மீராவின் அறைக்குள் நுழைந்துகொண்டது. அது உள்ளே போனதும் அவ்வறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. நீண்ட நேரத்துக்கு அதன் ஓலச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மீரா கொஞ்சியும் கெஞ்சியும் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். நான் என் அறையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அதன் பச்சைக் கண்களில் வழிந்த கண்ணீர் என்னை அதிகமாய் தொந்தரவு செய்தது. இதற்கு முன் ஒரு பூனையோ நாயோ இப்படி அழுது நான் பார்த்ததில்லை. அதன் பிறகு துளியும் தூக்கம் கூடவில்லை. மனதைச் சமநிலைக்குக் கொண்டுவந்து மீள்வதற்கு மதியமாகியது. அதன் பின்னரே கொஞ்சம் தூக்கம் சாத்தியப்பட்டது. அப்படித் தூங்கித்தான் இதோ இரவில் விழித்திருக்கிறேன்.
O
5
மறுபடியும் பாலைக் காய்ச்சி பின் குளிர்வித்து மற்றொரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் தள்ளி வைத்து மோக்காவை அழைத்தேன். அது அங்கிருந்து நகரவேயில்லை. பால் வைக்கப்பட்ட கிண்ணத்தையோ என்னையோ துளியும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதன் அடமும் புறக்கணிப்பும் எனக்கு மீராவை நினைவுபடுத்தியது. எரிச்சல் மண்டியது. அது அங்கிருந்து நகர்ந்து தொலைந்தால்தான் நான் கீழே கொட்டியிருக்கும் பாலைத் துடைக்க முடியும். இல்லாவிட்டால் அது வழிந்து மீராவின் அறைக்குள் நுழையும். மேலும் சங்கடம்.
மோக்காவுக்குப் பக்கத்தில் போய் கீழே குனிந்து அதனைத் தூக்கி நகர்த்த முற்பட்டேன். கோபத்தில் சீறி, மறுபடியும் அது என் கைகளைப் பற்றிப் பிராண்டியது. வலியிலும் கோபத்திலும் கைகளை வேகமாக உதறினேன். மீரா கதவைத் திறக்கவும் அது கதவினில் போய் அடிபட்டு விழவும் சரியாக இருந்தது. மீரா அதை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். நான் அவளைப் பார்க்கவில்லை. தலையைக் குனிந்துகொண்டேன். அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கும் சாத்தானின் ஒளிரும் பச்சைக் கண்கள் இருந்தது.
கதவு இழுத்து அறைந்து சாத்தப்பட்டது.
இது நடந்து இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. அச்சம்பவத்துக்குப் பிறகு எனக்கு தேவனின் கோவத்தையோ சாத்தானின் கருணையையோ காணும் வாய்ப்பு கிட்டவில்லை.
O
நன்றி : யாவரும்
April 9, 2023
இரு கோப்பைகள்

ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.
முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது.
ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில் சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.
"யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் வீட்டுக் கதவு தான் தட்டப்படுகிறது.
"இந்த நேரத்துல யாராயிருக்கும்" என்ற அவளின் கேள்வியில் பதற்றமும் மெல்லிய பயமும் ஏறியிருந்தது. எனக்கும் அதே பதற்றமும் பயமும் இருந்தது. ஆனாலும், நாங்கள் வசிப்பது மிகப் பாதுகாப்பான தொரு அடுக்ககக் குடியிருப்பு. உரிய அனுமதியில்லாமல் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே வந்துவிட முடியாது. எனவே இங்கே பக்கத்தில் வசிப்பவர்கள் யாராவதாகத் தான் இருக்க வேண்டும் என்றென்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு, டீ-சர்ட்டை அணிந்து கொண்டே ஹாலுக்குச் சென்றேன். டீ சர்ட்டை தலை வழியாக நுழைத்து கைகளை உள்ளேவிட்டு எடுக்கும் இடைப் பட்ட நேரத்தில், மெல்பர்னில் இனவெறித் தாக்குதலுக்குட்பட்ட மலையாளி ஒருவர் கொடுத்த பேட்டி ஒருமுறை மின்னலடித்துப் போனது.
ஹாலில் விளக்கைப் போட்டுவிட்டு, "யாரது?" என்று வினவினேன்.
"கொஞ்சம் கதவைத் திறக்க இயலுமா?" என்று அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் ஒலித்த அந்தக் குரலுக்கு வயது அறுபதுக்கும் மேலிருக்க வேண்டும்.
"இந்த நேரத்தில் ஏன் கதவைத் தட்டுகிறீர்கள்? யார் நீங்கள்?"
"என் பெயர் மார்க்... மார்க் ஹூ. உங்களுக்குப் பக்கத்தில் வீட்டில் தான் வசிக்கிறேன். தயவு செய்து கதவைத் திறங்கள். உங்களிடம் ஓர் உதவி தேவைப் படுகிறது"
எங்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதிதாம் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கும். எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து பார்த்தால் அவர்களது பால்கனி நன்றாகத் தெரியும். ஒரே அடுக்ககக் குடியிருப்பு என்பதால் இருவரது வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பு கொண்டவை. இரண்டு கட்டில்கள் போட்டாலும் ஒரு குழந்தை சுற்றி விளையாட இடமிருக்கும் அளவுக்குப் பெரிய பால்கனிகள் கொண்டவை. எங்கள் வீட்டுப் பால்கனியில் பார்பிக்யூ செய்யும் கனல் அடுப்பு ஒன்றை வீட்டு உரிமையாளர் வைத்துவிட்டுப் போயிருந்தார். நண்பர்கள் கூடும் நாளில் பால்கனியில் அமர்ந்து பார்பி க்யூவில் சுட்ட கறி சாப்பிடுவதுண்டு.
அவர்கள் பால்கனியில் மூங்கில்களால் செய்யப்பட்ட ஒரு காபி டேபிளும், பச்சை வண்ண குஷன் போட்ட இரண்டு மூங்கில் சேர்களும் போடப் பட்டிருக்கும். வரிசையாக தொட்டிச் செடிகள் வைக்கப் பட்டிருக்கும். தினமும் மாலைப் பொழுதுகளில் எதிரெதிராக சேர்களைப் போட்டமர்ந்து தம்பதிகள் இருவரும் தேநீர் அருந்துவார்கள். மழை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் ஒரு சடங்கு போல தவறாமல் இது நடக்கும். பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து, பீங்கான் கோப்பைகளில் கரண்டியால் கலக்கும் போது அவர்கள் எழுப்பும் 'க்ளிங்க் க்ளிங்க்' சத்தம் மிகப் பிரத்யோகமானது. இருவரும் பேசிக் கொண்டே மெதுவாக ஆற அமர அந்தத் தேநீரைச் சுவைப்பதைப் பார்க்கவே அத்தனை பாந்தமாக இருக்கும். அவர்களிடையே பகிர்ந்து கொள்வதற்கு தீராதப் பிரியங்களும், நேரமும், கூடவே தேநீரும் எப்போதும் இருந்தது. இது போன்ற தருணங்களில் எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும் போது பொதுவாக புன்னகைத்து வைப்போம்.
சனிக்கிழமை காலைப் பொழுதுகளில் பக்கத்தில் இருக்கும் இந்திய மளிகைக் கடைக்கு நாங்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் போது, அவர்கள் தள்ளும் வசதி கொண்ட சாமான்கள் வைக்கும் பை ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஃப்ளமிங்டன் காய்கறிச் சந்தைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள். அப்படியாக எதிர்ப்படும் நேரங்களில் ஒரு சிறு தலையசைப்பு. குறு நகை. அவ்வளவுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இதுவரையான இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தகவல் பரிமாற்றங்கள்.
கதவைத் திறந்ததும் அவர் தான் நின்று கொண்டிருந்தார்.
"உள்ளே வாருங்கள். உங்களுக்கு நான் எப்படி உதவ இயலும்?"
வெள்ளை நிறத்தில் ஒரு மெல்லிய காட்டன் சட்டையும், பச்சை நிறத்தில் தடித்த முட்டி வரையிருந்த கால் சராயும் அணிந்திருந்தார். சோபாவில் அமரச் சொன்னதற்கு மறுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
"இந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நானும் என் மனைவியும் இன்று பக்கத்திலிருக்கும் பார்க்கில் நடை பழகிவிட்டு சாயுங்காலம் ஐந்து மணி போல வீட்டுக்கு வந்தோம். வந்ததும் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும் அதனால் கொஞ்சம் நேரம் படுத்துறங்கப் போகிறேன் என்று சொல்லி தூங்கச் சென்றாள். இரண்டு மணி நேரம் கழித்து இரவு உணவுக்கு அழைக்கப் போனேன். அவள் எழவில்லை. அதன் பிறகு இப்போது வரை ஏழு எட்டுத் தடவைகள் எழுப்பிவிட முயற்சித்தேன். அவள் எழுவது போலவே இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூளை உறைந்துவிட்டதைப் போலிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் எழுப்பிப் பார்க்கிறீர்களா?"
மெல்லிய குரலில் இதை அவர்ச் சொல்லி முடிக்கும் போதும் அவர் குரல் பிசிரவில்லை. சீனர்களுக்கே உரித்தான அந்தச் சின்னக் கண்களில் அதற்கு மேல் எந்த உணர்வையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
தன் வீட்டுக் கதவைப் பூட்டாமல் சாத்திவிட்டு வந்திருக்கிறார். தொட்டுத் தள்ளியதும் திறந்து கொண்டது. வீடு அதி சுத்தமாக இருந்தது. மரத்தாலான உணவு மேசையில் இரவு உணவு தயார் செய்யப்பட்டு மூடி வைக்கப் பட்டிருந்தது. கூடவே இரண்டு பீங்கான் தட்டுகளும் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு மேல் சுவரில் ஒரு குதிரையின் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. நேற்று தான் வாங்கி விரித்தது போல கார்பட் புத்தம் புதிதாக இருந்தது. ஹாலில் டி.வி கூட இல்லை. ஹாலை ஒட்டி உள்ளே சென்ற ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
"இதுதான் என் மனைவி சோஃபியா. இப்படியொரு தருணத்தில் அறிமுகப் படுத்துமாறு நேர்ந்து விட்டது. மறுபடியும் தொந்தரவுக்கு மன்னியுங்கள்"
"சோஃபி எழுந்திரும்மா. சோஃபி.. உன்னைப் பார்ப்பதற்காக பக்கத்து வீட்டு இளைஞர் வந்திருக்கிறார். எழுந்துகொள்ளம்மா" என்றார் அதிர்வற்ற குரலில்.
மிகவும் தர்ம சங்கடமான நிலையில் நான் நெளிந்து கொண்டிருந்தேன். படுத்துறங்கியது போலிருந்தவரின் கால் பக்கத்தில் இருந்து, "மேடம் சோஃபியா. எழுந்திருங்கள். எழுந்திருங்கள்" என்று எழுப்ப முயற்சிக் கொண்டிருக்கும் போதே மூச்சு வந்து போகிறதா என்று கவனித்தேன். அவரிடத்தே சிறு சலனமும் இல்லை. இருந்தாலும் அவர் பாதங்களைத் தொட்டு எழுப்ப முற்பட்டேன். அவை சில்லிட்டுப் போயிருந்தன.
முதியவரை வெளியே ஹாலுக்கு அழைத்து வந்து, "நாம் ஏன் 000 வை அழைக்கக் கூடாது?" என்று கேட்டேன்.
"அது தேவைப்படாது. எனக்கும் தெரியும். இருந்தாலும் இந்தப் பாழும் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உள்ளே கொந்தளிக்கும் உணர்ச்சிகளால் எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னால் எதையுமே யோசிக்கக் கூட முடியவில்லை. அதனால் தான் உங்களை அழைத்து வந்தேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள் "
"உங்களது பிள்ளைகளின் அலைபேசி எண்கள் இருந்தால் தாருங்கள். நான் அழைத்துத் தகவலைச் சொல்கிறேன்."
"எங்களுக்கு இப்போது பிள்ளைகள் யாரும் கிடையாது. இருந்த ஒரே மகளும் சிறுவயதிலேயே ஜன்னி கண்டு இறந்துவிட்டாள்"
"நண்பர்கள் யாராவது?"
"வில்லியமுக்கு அழைத்து தகவல் சொல்ல முடியுமா. வில்லியம் தாமஸ். எங்களுடைய குடும்ப நண்பர்"
அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்துத் தகவலைச் சொன்னேன். வில்லியம் தான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் "ஜீசஸை" அழைத்துக் கொண்டார். தான் 'பெண்டில்கில்'லில் இருந்து வர வேண்டும். எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும். அதுவரை மார்க்குக்குத் துணையாக இருக்க இயலுமா என்று கேட்டுக் கொண்டார். அவர் அப்படிக் கேட்டிருக்காவிட்டாலும் கூட எப்படி இந்நிலையில் உதவி கேட்டு வந்த முதியவரை தனியே விட்டு வர இயலும்.
வில்லியம் வந்து கொண்டிருக்கும் தகவலைக் கூறி, மார்க்கை சோபாவில் அமரச் செய்தேன். ஹாலோடு இணைந்திருந்த கிச்சனுள் சென்று அவருக்கு ஒரு கிளாசில் தண்ணீர் கொடுத்தேன். வாங்கி இரண்டு மிடறு குடித்தார். எங்கள் இருவருக்கிடையில் மெளனம் இரை விழுங்கிய பாம்பொன்றைப் போல ஜீவித்திருந்தது. சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். அவர் கண்கள் அங்கே தொங்கவிடப் பட்டிருந்த குதிரைப் படத்தின் மீது குத்திட்டிருந்தன.
"நீங்கள் சிட்னியின் புகழ்பெற்ற 'விட்டோரியா காபி'யைச் சுவைத்திருக்கிறீர்களா? " என்று கேட்டார்.
சில நொடித் தயக்கத்துப் பிறகு, "காபி அதிகம் குடிப்பதில்லை. எப்போதாவது மட்டுமே" என்றேன்.
"விட்டோரியா காபியை சிட்னியில் அறிமுகப் படுத்தியவர்கள் இரண்டு இத்தாலியச் சகோதரர்கள். சிட்னியில் இன்று பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் காபி கடைகளுக்கு ஒரு வகையில் வித்திட்டவர்கள் அவர்கள் தாம். அவர்களின் ஆரம்பக் காலக் கடையொன்றில் தான் நான் முதன் முதலில் சோஃபியாவைச் சந்தித்தேன். முதல் பார்வையில் ஈர்க்கும் வசீகரம் சோஃபியாவைப் போன்ற சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. நான் வேலை பார்த்த அந்தக் கடையில் அவளும் வேலைக்குச் சேர்ந்தாள். அப்போது நாங்கள் இருவரும் எங்களது இருபதுகளில் இருந்தோம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய போலந்து குடும்பம் அவளுடையது. அவளது அப்பா போலந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். எனது மூதாதையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தங்க வேட்டைக்காக சீனாவின் சியாமென் பகுதியிலிருந்து வந்தவர்கள். பல்வேறு காரணங்களால் பலரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். அப்படித் திரும்பாமல் தங்கிவிட்ட ஒரு சில குடும்பங்களில் ஒன்று எங்களுடையது. ஆஸ்திரேலியர்களாக மாறவும் முடியாமல் சீனர்களாகத் திரும்பவும் முடியாமல் தவித்தவர்களின் மிச்சம் நான்.
தூரத்தில் இருந்து அழகிகளை எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் அவர்களையே பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற அவஸ்தை வேறொன்றும் இல்லை. அப்படித்தான் நான் சில காலம் தலையால் நடந்து கொண்டிருந்தேன்.
நல்ல மணமுள்ள காபி போலத்தான் இருந்தது என்னுடைய காதலும், எத்தனை மூடி மறைத்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் காட்டிக் கொடுத்து விட்டிருந்தது. அவளும் அதை உணர்ந்திருந்தாள். ஆனால் ஏனோ இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்போதுதான் 'மெல்பர்ன் கோப்பை' குதிரைப் பந்தயம் வந்தது. கேள்விப் பட்டிருப்பீர்களே. இங்கு மிகவும் பிரசிதம். அப்போட்டி நடக்கும் சில நிமிடங்கள் மொத்த ஆஸ்திரேலியாவும் ஸ்தம்பித்துப் போகும். அதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மழைக் காதலன்' என்ற குதிரையே தொடர் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆண்டும் அக்குதிரையே வெற்றி பெறும் என்று திடமாக நம்பினேன்.
ஊரே மாறி மாறி பந்தயம் வைத்துக் கொண்டிருந்த போதுதான் நானும் சோபியாவும் எங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டோம். மழைக் காதலன் வெற்றி பெற்றால் அதுவரை என்னிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியம் ஒன்றை சோஃபியா சொல்லிவிட வேண்டும். ஒரு வேளை அது தோற்றுப் போனால் அதுவரை அவளிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியம் ஒன்றை நான் சொல்லிவிட வேண்டும். இதுதான் பந்தயம்.
பந்தயத்தில் மழைக் காதலனும், நானும் தோற்றுப் போனோம். ஆனால், அதையே சாக்காக வைத்து அவளிடம் என் காதலைச் சொல்லிவிட்டேன். பந்தயத்தில் நான் தான் தோற்றேன் என்றாலும், அவள் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னாள். அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்தும் ஆகியிருந்தது. மேலும் அப்போது அவளுக்கு இரண்டு வயது மகளும் இருந்தாள்.
நான் எப்படி அவளை நேசித்தேனோ அதே போல அவளுடைய மகளான, நீல நிறக் கண்களைக் கொண்ட ஹெலினாவையும் நேசிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆறாவது மாதத்தில் எங்கள் திருமணம் நடை பெற்றது. எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நாள் எங்கள் மகள் ஹெலினா கொள்ளை நோயொன்று கண்டு இறந்து போனாள். அன்றைக்கு அழுததைப் போல் சோஃபியா என்றுமே அழுததில்லை. அப்போது அவளுக்கு வாக்கு ஒன்று கொடுத்தேன் 'எக்காலத்திலும் அவளைத் தனித்துவிட்டுப் பிரிய மாட்டேன்' என்று. இதோ என் வாக்கைக் காப்பாற்ற வாய்ப்பளித்துப் போய்விட்டாள் புத்தி கெட்டவள். புத்தி கெட்டவள்! பைத்தியக்காரி! "
இத்தனையும் சொல்லி முடிக்கும் போது எங்கே அழுதுவிடுவாரோ என்று அஞ்சினேன். நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. சிறிது நேரத்தில் வில்லியம் வந்ததும் விடைபெற்றுக் கொண்டேன்.
O
அந்த வாரம் முழுவதும் அத்தனை அலுவலக நெருக்கடிகளுக்கு இடையிலும் என் மனது முழுவதும் மார்க்கும் சோஃபியாவும் ஆக்கிரமித்து இருந்தார்கள். வெள்ளிக் கிழமைதான் அந்த வாரம் முழுக்க எங்குமே முதியவர் மார்க்கைப் பார்க்கவில்லை என்ற உண்மை உறுத்தியது.
தினமும் காலைப் பொழுதில் வெறும் துண்டை மட்டும் தோளில் போட்டவாறே, முட்டியைத் தொடாத டவுசர் அணிந்து கொண்டு, கைகளை நீட்டி முன்புறமும் பின்புறமும் வெயிலுக்குக் காட்டியபடி பால்கனியில் நின்று கொண்டிருப்பார். காவ்யாவைக் கூப்பிட்டு எங்கேனும் கடைகண்ணிக்குச் செல்லும் வழியில் அவளாவது அவரைப் பார்த்தாளா என்று விசாரித்தேன். அவளும் பார்த்திருக்கவில்லை. எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை. நேராக அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன்.
அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. நேராக அவரது வீட்டின் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. சில பல முறை தட்டல்களுக்குப் பிறகும் கதவு திறக்கப் படாததால் அவர் அங்கு இல்லை என்று யூகித்துக் கொண்டென்.
மறுநாள் காலையிலும் முதல் வேளையாக சென்று அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். பதிலில்லை. அன்றைக்கு இருந்த மன நிலையில் வில்லியம்ஸின் அலைபேசி எண்ணைக் கூட வாங்கயிருக்க வில்லை. இருந்திருந்தால் அவரிடமாவது ஒரு வார்த்தை மார்க்கைப் பற்றி விசாரித்திருக்கலாம்.
எப்படி மனதை ஒதுக்கி விட்டாலும், பூமராங் போல மார்க்கிடமே வந்து நின்றது. அன்றைய இரவு தூக்கமே சரியாக இல்லை. மறு நாள் மதியம் கொஞ்ச நேரம் தூங்கிச் சரி செய்து கொண்டேன். தூக்கம் கலைந்து சோபாவில் அமர்ந்து இளையராஜாவை ஒலிக்கவிடத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் அந்த 'க்ளிங்க் க்ளிங்க்' என்ற ஒலி கேட்டது. மடியிலிருந்த மடிக்கணினியை அப்படியே தரையில் கிடத்திவிட்டு பால்கனிக்கு ஓடினேன்.
அங்கு மார்க் எனக்கு முதுகு காட்டிவாறு அமர்ந்து தேநீரைக் கலக்கிக் கொண்டிருந்தார். அவர் இருக்கிறார் என்பதே எனக்கு அப்போதைக்குப் போதுமாய் இருந்தது. மெதுவாக உள்ளே செல்ல எத்தனித்த போதுதான் கவனித்தேன். அவருக்கு எதிர்ப்புறம் காலியான இருக்கைக்கு முன்பாக ஒரு கோப்பை நிறைய தேநீர் வைக்கப் பட்டிருந்தது.
O
நன்றி : கபாடபுரம் மின்னிதழ்
April 7, 2023
ஆயிரம்முறை

அந்த அழைப்பு வந்தபோது அலுவலகத்தின் ஓய்வகப் பகுதியிலிருந்தேன். காஃபி மெசினிலிருந்து கிளம்பிய சத்தத்தில் முதலில் மொபைல் ஒலித்தது கேட்கவில்லை. சர்க்கரை வில்லைகளைப் போட்டுக் கலக்கும்போது பீங்கான் கோப்பையில் கரண்டி பட்டு எழும் ஒலியோடு இணைந்து மொபைலும் அடித்தது.
மறுபக்கம் அனு.
“எங்க இருக்க?”
“ஆஃபிஸ்ல”
“சரி.. ரொம்ப வேலையா?”
“அப்படிச் சொல்ல முடியாது. ஆனா இருக்கு. சொல்லு பரவாயில்ல. பேச முடியும்.”
“இல்ல, இப்போ நீ கிளம்பி வர முடியுமா?”
“ஏன் ஏதாவது பிரச்சினையா?”
“தெரியல.”
“தெரியலன்னா என்ன அர்த்தம்?”
“தெரியல்லன்னா தெரியலன்னு அர்த்தம்.” அழுதிருப்பாள் போல. குரல் கனத்திருந்தது.
“ஏன்ட்டி இப்படி சிடுசிடுன்னு இருக்க?”
“கவின் ஸ்கூல்லருந்து கால் பண்ணிருந்தாங்க.”
“ஓ.. என்னாச்சாம்?”
“நீ நேர்ல வா சொல்றேன்.”
“சரி, பத்து நிமிசத்துல கிளம்புறேன். ஒரு மெயில் அனுப்பனும். முடிச்சுட்டுக் கிளம்புறேன்.”
“சரி. சீக்கிரம் வா!”
O
ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிவந்து இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அங்கே எடுக்காமல் வைத்திருந்த விடுமுறை மட்டுமே முப்பது நாட்கள் கையிலிருந்தது. இடையிடையே வந்த சனி ஞாயிற்றோடு சேர்த்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் அலுவலகம் பக்கமே போகவில்லை. எல்லாம் தீர்ந்து அலுவலகத்துக்கு வர ஆரம்பித்து இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. புதிதாகத் தொடங்கவிருக்கும் பிராஜெக்ட் ஒன்றுக்கான ஆயத்த வேலைகள் மட்டுமே நடைபெறுவதால் அனுமதி கேட்டுவிட்டுக் கிளம்பி வருவது பெரிய பிரச்சினையாக இல்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் ஒருமுறைகூட இந்தியா வரவில்லையாதலால் கிடைத்த விடுமுறையில் அவள் வீட்டில் இரண்டு வாரம் சொந்த ஊரில் இரண்டு வாரம் பின்பு சென்னை வந்து வீடு தேட கவினுக்குப் பள்ளி தேட ஒரு வாரம் என்று எப்படிக் கரைந்துபோனது என்றே தெரியவில்லை. மொத்தத்தில் ஓரிடத்தில் தங்கவில்லை.
வீட்டு காலிங் பெல்லை தான் அணைத்து வைத்திருப்பதாகவும் எனவே வந்ததும் அவளுடைய மொபைலுக்கு அழைக்குமாறும் வாட்சப்பில் செய்தி அனுப்பியிருந்தாள். எனக்குப் புரிந்தது. பெல்லை அழுத்தினால், சட்டென்று நடு மண்டையில் விழும் சுத்திபோல ஒலிக்கும் நாற்பது வருடப் பழைய வீடு. தனி வீடு. சின்னச் சின்ன அறைகள். வீட்டைச் சுற்றி துளசி, ஓமம், கற்றாழை, செம்பருத்தி, மருதாணிச் செடிகள் நிரம்பிய சிறிய தோட்டம், கொல்லையில் இரண்டு மாமரங்கள், ஒரு தென்னை, தளும்பி நிற்கும் ஒரு கிணறு என்று சென்னையில் இப்படி ஒரு வீடு அமையப் பெறுவது ரொம்பவும் அரிது. ஈரம் ஊறி நிற்கும் சுவர்கள், தூசு தெரியாத மொசைக் தரை என்பதைத் தவிர பெரிய குறை ஒன்றுமில்லை. சிட்னியிலிருந்த வீட்டில் பெரிய வரவேற்பு அறையும் அதற்குப் பொருத்தமாய் ஐம்பது இஞ்ச் டிவியும் இருந்தது. அதை ஒப்பிட இவ்வீட்டின் வரவேற்பு அறை மிகவும் சிறியது. வெளியிலிருந்து மூன்று பேர் வந்தாலே அறை நிறைந்துவிடும். அதனால் சிறிய டிவி மட்டுமே வைக்க முடிந்தது. அனுவுக்கு அதில் கொஞ்சம் வருத்தமிருந்தாலும் காற்றும் வெளிச்சமும் பரவ தோட்டம் பார்த்தபடியிருந்த சமையற்கூடம் அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. எனக்கு இங்கிருந்து அலுவலகத்துக்கு வெறும் இருபது நிமிடப் பயணம். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதும் சரியான வீடும் கவினுக்குப் பொருத்தமான பள்ளியும் கிடைக்க வேண்டுமே என்பதுதான் பெரிய கவலையாக இருந்தது. தற்செயலாக எல்லாமும் அதுவாக வந்து அமைந்துவிட்டது.
அனுவுக்கு இந்தியாவுக்குத் திரும்புவதில் பெரிய இஷ்டமில்லை. எங்களோடு ஒன்றாக ஆஸ்திரேலியா வந்த பலரும் அங்கே நிரந்தரக் குடியுரிமை வாங்குவதற்கான முயற்சிகளில் இருந்தபோது நான் மட்டும் ஊர் திரும்பிவிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதைக் கேட்டு என்னை அசட்டுப் பைத்தியமாகப் பார்த்த முதல் கண்கள் அனுவுடையவை. எனக்கும்கூட முதலில் அந்த ஊர் பிடித்திருந்தது. இயற்கை பொழியும் வெளியும், நெருக்கடியும் பரபரப்புமுமற்றச் சூழலும் இந்தியா போன்ற வளரும் நாட்டிலிருந்து வரும் யாரொருவரையும் பிடித்து நிறுத்திவிடும். ஆனால், ஒரு கட்டத்தில் அங்கிருந்த சலனமற்ற அமைதியும் செய்ததையே கிரமம் தவறாமல் திரும்பச் திரும்பச் செய்வதிலிருக்கும் சலிப்பும் எனக்கு ஒப்பவில்லை. அங்கே இருந்த இரண்டு வருடங்களின் எந்த ஒரு நாளின் கிழமையைச் சொன்னாலும் என்னால் மிகச்சரியாக அந்த நேரத்தில் எங்கே என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்று சொல்ல முடியும். அத்தனை துல்லியமான வழமைகள். ஒரு கட்டத்தில் மொத்த வாழ்வுமே ஏதோ ஒரு மாயச் சுருளில் சிக்கித் திரும்பத் திரும்ப நிகழ்வதான தோற்றத்தைத் தர ஆரம்பித்தது. கிளம்பிவிட்டேன். கவினுடைய கல்வி வாய்ப்புகள், வளரக் கிடைக்கும் சூழல் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு பார்த்தாலும் அங்கேயேயிருப்பதில் நன்மைகளுக்கு நிகராக இக்கட்டுகளும் இருந்தன. அனுவைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக் கரைக்க வேண்டியிருந்தது.
முதல் அழைப்பில் கவனிக்காதவள், அடுத்த அழைப்பைத் துண்டித்தாள். பழைய கதவு. கவனமெடுத்து ஓசையெழாதவாறு திறந்தாள். வீட்டுக்குள் வந்ததும் சத்தமெழுப்ப வேண்டாம் எனச் சைகை செய்தாள். கவின், யூனிஃபார்மைக்கூட மாற்றாமல் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடாதபடி அணைப்பாகத் தலையணைகளை வைத்து, புரண்டாலும் கீழே விழாமலிருக்க பக்கத்திலேயே பீன் பேக்கை இழுத்து சோபாவை ஒட்டிப் போட்டிருந்தாள்.
படுக்கையறைக்குள் சென்று, அறைக் கதவை முழுவதுமாய்ச் சாத்தாமல் கவின் கண்ணுக்கு எதிரில் இருக்கும்படி ஒருக்களித்துச் சாத்திக்கொண்டாள். அவளின் செய்கை ஒவ்வொன்றும் விசித்திரமாகவும் சற்று அதீதமாகவும் இருந்தது. அழுதிருக்கிறாள் என்பது பொங்கியிருந்த கண்களில் தெரிந்தது. அவளே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தேன். வீடு வந்து சேர்வதற்குள் நடந்துவிடக்கூடாதே என்றஞ்சிய எதுவும் நடந்துவிடவில்லை என்பது மட்டுமே கொஞ்சம் ஆசுவாசமளித்தது.
மதிய உணவு இடைவெளியின்போது கவினுடைய பள்ளியிலிருந்து அழைத்திருக்கிறார்கள். கொண்டுவந்த உணவை அவன் சாப்பிடவில்லை என்றிருக்கிறார்கள். அவன் அப்படிச் செய்வதொன்றும் புதிதில்லை ஆனால் அவர்கள் அப்படி அழைப்பது புதிது. கவின் என்றில்லை, மற்ற பிள்ளைகளும் இப்படிச் செய்வது சாதாரணம்தானே! அப்படியிருக்கையில், இதன் பொருட்டு அவர்கள் அழைத்ததே இவளுக்கு உறுத்தியிருக்கிறது. சாப்பிடாவிட்டால் பரவாயில்லை விட்டுவிடுங்கள், தான் இரண்டு மணிக்குக் கூப்பிட வரும்போது பார்த்துக்கொள்கிறேன் என்றிருக்கிறாள்.
“நீ போனியா?”
“பின்ன, பதறியடிச்சுட்டுப் போயி நின்னேன். அவன் கிளாசுக்குப் போக முன்னாடியே அவங்க கிளாஸ் மிஸ் என்னை ஸ்டாஃப் ரூமுக்குக் கூட்டிப் போனாங்க. இவன் காலையிலயே கிளாஸ் உள்ள போனதும் எல்லாப் பசங்ககிட்டயும் லஞ்ச் பேக்கை வாங்கி பின்னாடி வரிசையா வைக்கிற மாதிரி வைக்க இவன்கிட்டயும் கேட்டிருக்காங்க. இவன் வழக்கம்போல தர மாட்டேன்னு சொல்லிருக்கான்.”
கவின் சிட்னியிலிருந்தபோது அங்கிருந்த ஒரு விளையாட்டுப் பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனை இந்தியா வந்து நேரடியாக எல்.கே.ஜி.யில் விடும்போது கொஞ்சமாவது பழக்கமாயிருக்கட்டும் என்று நாங்கள் தங்கியிருந்த ஹோம்புஷ் பகுதியிலிருந்து சில கிமீ தொலைவிலிருக்கும் ஸ்ட்ராத்ஃபீல்ட் நூலகத்தில் நடைபெறும் இலவச வகுப்புகளுக்கு அனு அவனை அழைத்துச் செல்வாள். அந்தப் பள்ளி கவினுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதே போன்றதொரு சூழலை இங்கே எதிர்பார்த்திருந்த கவின் சற்று ஏமாற்றமடைந்திருந்திருக்கிறான். முதல் நாள் அத்தனை குதுகலமாய்ப் பள்ளிக்குச் சென்றவனிடத்திலிருந்த உற்சாகம் அடுத்த நாள் சுத்தமாக இல்லை. முதல் ஒரு வாரம் அங்கு அவனுக்களிக்கப்பட்ட இருக்கையில் அமராமல் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான். சொல்லிச் சொல்லி இப்போதுதான் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனுடைய புத்தகப் பையை எப்போதும் மார்போடு சேர்த்து அணைத்தபடியே இருப்பான் போல. சில பிள்ளைகள் ஆரம்பத்தில் இப்படிச் செய்வது வழமைதான் என்று அங்கிருக்கும் ஹெட் மிஸ் சொன்னதும் நாங்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
அனுவே தொடர்ந்தாள்.
“அவங்க புதுசா வந்த மிஸ் போல. திரும்பத் திரும்ப கேட்டிருக்காங்க. அப்பவும் மாட்டேன் சொல்லி பேக்கை மாரோட இறுக்கி கட்டிப் பிடிச்சுட்டு இருந்திருக்கான். மத்த மிஸ்களுக்குத் தெரியும் இவன் புதுசுன்னு. இவங்க மிரட்டியிருக்காங்க. அப்பவும் பேக்கைத் தரவேயில்ல போல. அடிக்கிற மாதிரி கை ஓங்கிப் பாத்திருக்காங்க. அடிக்கமாட்டங்கல்ல. அப்பவும் இவன் கொடுக்கல ஆனா அழுதிருக்கான். சரி போன்னு விட்டுட்டு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. கிளாஸ் நடக்குற எதுக்குமே இவன் ரெஸ்பாண்ட் பண்ணல போல. ஜன்னல் வழியே வெளிய வேடிக்கை பார்த்துட்டே இருந்திருக்கான். மிஸ் கூப்பிட்டாலும் திரும்பல. வச்ச கண் மாறாம வெளியவே பார்த்திட்டு இருந்திருக்கான். சரி கண்டுக்காம விட்டா சரியாகிடுவான்னு அவங்கபாட்டுக்குப் பாடம் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்க. அரைமணி நேரம் கழிச்சும் வெளியவே பார்த்திட்டு இருந்திருக்கான். முகமும் ஒரு மாதிரி இருக்கவே. உடம்பு ஏதாவது சரியில்லையோன்னு நினைச்சு பக்கத்துல வந்து சமாதானப்படுத்தி, குடிக்கத் தண்ணிலாம் கொடுத்து, என்ன ஏதுன்னு கேட்டிருக்காங்க. அதுக்கும் பதிலே சொல்லல போல. என்ன என்னவோ கேட்டும் எதுக்கும் அசையல. இதெல்லாம் வித்தியாசமா இருக்கவே இவனுக்கு எல்.கே.ஜி.க்கு வகுப்பெடுக்கிற அத்தனை மிஸ்களும் வந்து பேசியிருக்காங்க. அவனுக்குப் பிடிச்ச செல்வி மிஸ் சொல்லியும் அவன் கேட்கலை. கடைசியா ஹெட் மிஸ் வந்து பார்த்துட்டு எனக்கு கால் பண்ணிருக்காங்க.”
“இதெல்லாம் நம்புற மாதிரியில்ல. இவங்க பையனப் போட்டு அடிச்சுருப்பாங்க இல்ல ரொம்பத் திட்டியிருப்பாங்க.”
“நானும் அதே மாதிரி சந்தேகத்தோடதான் அவன் கிளாசுக்குப் போனேன். அவன் டெஸ்க்கைவிட்டு நகரவேயில்லை. லஞ்ச் டைம்ன்னாலே கிளாஸே கலகலன்னு இருக்கு. இவன் மட்டும் ஜன்னல் வழியா வெளியவே வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தான். பத்து நிமிசம் வாசல்லயே நின்னு கவனிச்சேன். அவன் அசையவேயில்ல. அப்புறம் பக்கத்துல போனேன். என்னை பார்த்தும்கூட அவன் எங்கிட்ட வரல.”
“என்னடி சொல்ற?”
“ஆமா, நான் பக்கத்துல போயி நிக்கிறேன். ஏதோ மூணாவது மனுஷியப் பாக்கிற மாதிரி பாக்குறான்.” இதைச் சொல்லும்போதே அனு விசும்ப ஆரம்பித்தாள்.
“சரி இதுக்கேன் அழற. ஸ்கூல்ல இருந்ததால அப்படிப் பண்ணிருப்பான். வீட்டுக்கு வந்ததும் சரியாகிடுச்சா இல்லையா?”
கண்களைச் சுரிதாரின் ஷாலை எடுத்துத் துடைத்தாள். தண்ணீர் கொடுத்தேன். வேண்டாம் என்று மறுத்துவிட்டு, “இரு சொல்றேன். அவன் பேசவேயில்லை. அங்கயிருந்து வெளியே வந்ததும் வாசல்லயே நிறுத்தி, மிஸ் யாராவது அடிச்சாங்களாம்மா அம்மாகிட்ட பயப்படாம சொல்லுடா தங்கம்ன்னு கேட்டேன். அவன் நான் சொல்ற எதையுமே கேட்கல. அவன் பேக்கை மட்டும் இறுக்கி கட்டிப் புடிச்சுட்டு நிக்கிறான். சரி வீட்டுக்குப் போனா சரியாகிடுவான் நினைச்சேன்.”
“ஸ்கூட்டில வரும்போது நானும் ஏதேதோ பேசிட்டு வரேன். நடு ரோடுன்னுகூட பாக்காம பாட்டுப் பாடுறேன். ஜோக் பண்றேன். எதையுமே அவன் கண்டுக்கல. அந்த பெப்பா பிக் மாதிரி பேசினா எப்படி சிரிப்பான். கண்டுக்கவேயில்ல! சரி, வீடு வரட்டும்ன்னு விட்டுட்டேன். திடீர்ன்னு பேசினான். ‘நோ கவின் ஹவ்ஸ்’ அப்படின்னான். வண்டிய நிறுத்தி முன்னாடி வந்து ஏதோ பேசினானேன்னு என்னடான்னு கேட்டேன். திரும்பவும் ‘நோ கவின் ஹவ்ஸ்’ சொல்றான். அவ்ளோ நேரம் பேசாதவன் ஸ்கூல் பத்தி ஏதாவது சொல்வான் பார்த்தா, வீட்டுக்குப் போக வேணாம்கிறான். சரி முதல்ல அவனைப் பேசவிடுவோம்ன்னு லாலி பாப், சாக்லேட்லாம் வாங்கிக் கொடுத்திட்டு கொஞ்சம் அப்படியே நம்ம ஏரியாவ வண்டில சுத்திட்டு வீட்டுக்கு வண்டிய விடுறேன். அப்பவும் திரும்பத் திரும்ப ‘நோ கவின் ஹவ்ஸ் நோ கவின் ஹவ்ஸ்’ மட்டும் சொல்றான். அப்புறம் யோசிச்சுப் பார்த்தா, அவ்ளோ நேரமா அந்த ஒன்னைத் தவிர அவன் வேறெதுவுமே பேசல. பரவால்லன்னு அவனைக் கண்டுக்காம வீட்டுக்கு கூட்டி வந்தேன். உள்ள வர வேணாம் சொல்றான். அடம் பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டான். எப்படியோ உள்ள அழைச்சுட்டு வந்துட்டேன். ‘அம்மா நோ கவின் ஹவ்ஸ் நோ கவின் ஹவ்ஸ்’ன்னு சொல்லிட்டே இருக்கான். அவனை அதட்டினேன். மிரட்டினேன். ஒரு கட்டத்துல கோபம் வந்து, நல்லா நாலு அடிகூட அடிச்சுட்டேன். அப்பவும் அவன் கேக்கல. இன்னும் சத்தமா அழுதிட்டே அதையே திரும்பத் திரும்பச் சொன்னான். ஒரு ஆயிரம்முறை சொல்லிருப்பான். சலிக்காம சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றான். பாவமா அழுதிட்டே சொல்றதப் பார்த்து எனக்கும் அழுகை வந்துடுச்சு. அழுதுட்டே அவங்கிட்ட கெஞ்சிகூடப் பார்த்தேன், தெரியுமா?” என்று உதட்டைப் பிதுக்கி அவள் இதைச் சொல்லும்போது அவள் கண்ணில் நீர் திரண்டுப் பொங்கியது.
“அதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியல. ரொம்ப பயமாகிடுச்சு. அவனை மெதுவா மடியில படுக்க வைச்சு அவன் மனசை மாத்துறதுக்கு என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, நான் சொன்ன எதுவும் அவன் காதுக்குள்ள போன மாதிரியே தெரியல. அடிச்சதுல தேம்பி அழுதவன் அப்படியே சோபால படுத்துத் தூங்கிட்டான். அதுக்குப் பிறகுதான் உனக்குக் கால் பண்ணேன். எனக்கு என்ன பண்ணன்னு சுத்தமா புரியல ஹரி. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. என் புள்ளைக்கு என்னமோ ஆயிடுச்சு.” என்று என்னைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
எனக்கு அன்று மதியம் வரை நடந்திருப்பதைக் கிரகிப்பதற்கே நீண்ட நேரம் தேவைப்பட்டது. பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. அதில் பயந்திருப்பான். நாளை பள்ளிக்குப் போய் தெளிவாக விசாரித்தால் விளங்கிவிடும். ஆரம்ப நாட்களில் பள்ளியில் அவன் பேசிய ஆங்கிலம் மற்ற பிள்ளைகளுக்கும் அவர்கள் பேசிய தமிழ் இவனுக்குப் புரியாமல் அந்நியமாக இருந்தான். இது பள்ளி என்றில்லை சொந்த ஊர்களுக்குப் போகும்போதே நடந்தது. மேலும் ஆட்கள் சுத்தியிருந்து பழகாதவனுக்கு இங்கே எங்குத் திரும்பினாலும் கும்பல் கும்பலாக ஆட்கள். ஊரில் தாத்தா பாட்டியைத் தவிர யாருடனும் ஒட்டவில்லை.
நாங்கள் அவனைச் சேர்க்கும்போது பள்ளி ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. முதலில் ஒட்டாமலிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் பிள்ளைகளுடன் பழக ஆரம்பித்துவிட்டான். புதிதாக யாரோ சாய் என்று ஒரு பையனைப் பற்றியெல்லாம்கூட முந்தைய நாள் சொல்லிக்கொண்டிருந்தான். ஒருவேளை, பள்ளி பிரச்சினையாக இருந்தால் ஏன் வீட்டுக்கு வர வேண்டாம் என்கிறான்? அனு சொல்வதை வைத்து என்னாலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இவன் விசயத்தில் அனுவுடைய தர்க்க அறிவை தாய்ப்பாசம் மழுங்கடிப்பதைப் பலமுறை நேரில் கண்ட அனுபவம் உண்டு. இவள்தான் ஒரு சாதாரண நிகழ்வை மிகைப்படுத்திக் கூறுகிறாள் என்று தோன்றியது. இப்போது நன்கு தூங்கி எழுந்தான் என்றால் முற்றிலுமாக அதிலிருந்து விடுபட்டு விடுவான் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனாலும் அவன் இப்படி நடந்துகொள்வதற்குப் பின்னால் இருக்கக்கூடிய சாத்தியங்களையே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. அவனுடைய புத்தகப் பையைத் திறந்து பார்த்தேன். இரண்டு மாதங்களாக எப்பவும் எடுத்துப் போகும் அதே புத்தகப் பைதான். ஒரு வித்தியாசமும் இல்லை. கூடுதலாகவோ குறையாகவோ எதுவுமிருக்கவில்லை. அவன் விழித்தபின்பு அவனை ஏதாவது மாலுக்கோ இல்லை பீச்சுக்கோ அழைத்துப் போகலாம் என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.
அனுவும் அழுதழுது சோர்ந்து போயிருந்தாள். அவளை அங்கேயே சற்று நேரம் தூங்கச் சொல்லிவிட்டு நான் வரவேற்பறையில் கவினுக்குப் பக்கத்தில் பீன் பேக்கை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். பிள்ளை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அம்மா தூங்குகிற பிள்ளையை உற்றுப் பார்த்தாலே திட்டுவாள்.
ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்தவன் என்னை அந்நேரத்தில் அங்கு எதிர் பார்த்திருக்கவில்லை. சிரித்தபடி கால்களைக் கட்டிக்கொண்டான். மெதுவாக என்னை அண்ணாந்து பார்த்து, “அப்பா நோ கவின் ஹவ்ஸ்” என்றான்.
“கவின் குட்டிக்கு என்ன பிரச்சினை?”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
“ஸ்கூல்ல யாரும் அடிச்சாங்களா?”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
“ஸ்கூல்ல மிஸ் யாரும் திட்டுனாங்களா சொல்லு?”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
“இல்ல அம்மாதானே திட்டுனா உன்னை. அவளை அடிப்போமா?”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
“என்னடா தங்கம் ஆச்சு?”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
“டேய் கவின், நான் சொல்றது உனக்குக் கேக்குதா இல்லையா? இங்க பாரு. அப்பா கண்ணைப் பாரு.”
“அப்பா.. நோ கவின் ஹவ்ஸ்”
அனு தூக்கத்திலிருந்து எழுந்தவள் நிலைமையை யூகித்துவிட்டாள். ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டவள், “பாத்தியா.. பாத்தியா ஹரி.. இவன் என்ன பண்றான் பாரு”. அவளை அணைத்து அமைதிப்படுத்திவிட்டு, கவினைத் தூக்கி மடியில் வைத்தேன். நெற்றியில் வியர்த்திருந்தது. உள்ளங்கையால் துடைத்து, அவன் நெற்றியில் முத்தமிட்டேன். கைகளையும் முதுகையும் வாஞ்சையாக வருடினேன். மெதுவாக அவனை என் நெஞ்சில் சாய்த்தவாறு, “கவின் குட்டிக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று எங்களிருவர் விளையாட்டின் வழக்கமான கேள்வியைக் கேட்டேன்.
அவன் எதிரேயிருந்த அனுவைப் பார்த்தான். மெதுவாக என்னைத் திரும்பிப் பார்த்தான். பிறகு ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்தபடி, “நோ கவின் ஹவ்ஸ்” என்றான். இதில் அவன் அவனாகவேயில்லை. வழக்கமாய் கண்களில் மின்னும் குறும்போ முகத்தில் மலரும் புன்னகையோ இல்லை. அதுவரை அவனை அப்படிப் பார்த்ததேயில்லை.
அவன் நான் எதுவும் கேட்காத போதும் ‘நோ கவின் ஹவ்ஸ்’ என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கே அடுத்து என்ன செய்வது என்பது விளங்கவில்லை. அனு வீட்டிலிருந்து ஆள் வந்தால் அவனுக்குச் சற்று மாறுதலாயிருக்கும் என்று முடிவு செய்தோம்.
விசயத்தைச் சொன்னதும் அனுவின் அப்பா சிரித்தார். “குழந்தைகள் என்றால் அடம் பிடிக்கத்தானே செய்வார்கள். அனுவும் விக்கியும் பிடிக்காத அடமா?” என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது. அடுத்து இரண்டு மூன்று நாளில் கிளம்பி வருவதாகச் சொன்னபோதே அவருக்கு நிலைமையின் தீவிரம் விளங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குமேல் நான் அவரிடம் சொல்லி அவர்களைப் பதற்றப்படுத்த விரும்பவில்லை. இதைப் பற்றி திரும்பப் பேசுவதும் நினைப்பதுமே அதீத அழுத்தத்தைக் கொடுப்பதாயிருந்தது.
ஒன்றே ஒன்றை மட்டும் கவனித்தோம். வீட்டைவிட்டு வெளியே சென்றால் அமைதியாக இருக்கிறான். அமைதியாக என்றால் ஓர் ஊமைக் குழந்தையைப் போல் எதுவுமே பேசமாட்டான். வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரு பொம்மையைப் போல் வருவான். வேண்டுமென்றே செய்தால்கூட ஒருவரால் இதை அத்தனை கச்சிதமாகச் செய்ய முடியாது. பக்கத்திலிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றோம். அவனுக்குப் பிடித்த டாமினோஸ் பீட்ஸா கடை, ஐபாக்கோ ஐஸ் க்ரீம் பார்லர் என்று கூட்டிப் போனோம். எல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்குப் போகும்போது ‘நோ கவின் ஹவ்ஸ்’ என்பான். அதையே சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்வான். ஒரு கட்டத்தில் கோபத்தில் நானே அவனை அடிக்க கை ஓங்கினேன். அவனுக்கு என்ன பிரச்சினை என்று அவனுக்கே விளங்காதபோது அவனை அடிப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்தபோது எனக்கே என் மேல் வெட்கமாகயிருந்தது.
முதலில் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லி அவளைப் பதற்றப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், அவளிடம் சொன்னேன். நான் நினைத்ததைவிட நிதானமாக அவள் இதை எதிர்கொண்டாள். பக்கத்திலிருக்கும் மசூதிக்குப் போய் ஓதிவிட்டு வரச் சொன்னாள். அவள் சொன்னபடி அங்குப் போய்த் திரும்பும் வழியில் அனு, “ஏன் ஹரி, இப்போ நாம இருக்கிற இந்த வீட்டுல ஏதாவது பிரச்சனை இருக்குமோ?” என்று கேட்டாள்.
“சும்மா பைத்தியம் மாதிரி பேசாத” என்றேன். இப்படி ஆரம்பித்து வீட்டை மாற்றலாம் என்பதில் நிற்பாள். வீட்டை மாற்றுவதென்றால் எத்தனை பெரிய விசயம் என்பது புரியாமல் பேசுகிறாள். அதுவும் பள்ளிகள் தொடங்கியிருக்கும் நேரம். எங்கும் டூலெட் இருக்காது. அட்வான்ஸில் பாதி பிடித்துக்கொள்வார்கள்.
அவள் முகம் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தது போல தீவிரமாயிருந்தது. “இல்லல்ல.. அங்க ஏதோ தப்பாயிருக்கு. அதான் அவன் வீட்டுக்குப் போக வேணாம் சொல்றான். ஆமாமா வீட்லதான் ஏதோ பிரச்சனை. என்னவோ தப்பிருக்கு.” என்றாள்.
“அப்போ வெளியே வந்தா அவன் நார்மலா இருக்கணும்ல. ஏன் ஒரு வார்த்தை பேச மாட்டுறான்? அப்படிப் பார்த்தா இதெல்லாம் ஆரம்பிச்சது ஸ்கூல்லதானே. சும்மா, நீ தேவையில்லாம யோசிக்காத. நாளைக்கு டாக்டரைப் போயிப் பார்ப்போம்.”
“இதென்ன ஜலதோசமா காய்ச்சலா டாக்டரைப் பார்க்க?”
“நான் சொல்றது சைல்ட் சைக்கியாட்ரிஸ்ட்டை. சந்தோஷ்கிட்ட பேசியிருக்கேன். அவன் ஒரு காண்டாக்ட் கொடுத்திருக்கான்.”
“என்னது சைக்கியாட்ரிஸ்ட்டா? லூசு மாதிரி பேசுற. அதெல்லாம் அவனுக்கு ஒன்னுமில்ல. நாளண்ணிக்கு அப்பா அம்மா வந்தா அவன் நார்மலாகிடுவான். நீ சும்மாயிரு.” என்று கத்தினாள். அதுவரையிருந்த அவனுக்கு என்னவோ பிரச்சனை என்று கதறிக்கொண்டிருந்தவள். அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல அசட்டு பாவனை செய்தாள். உண்மையில் அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“இங்க பாரு. இது ஒரு சாதாரண கன்சல்டேஷன்தான். அவங்க இந்த மாதிரி வேறு சிலரைப் பாத்திருக்கலாம். அவங்க அனுபவத்துலருந்து ஏதாவது நல்ல ஐடியா கொடுப்பாங்க. உங்க வீட்லருந்து வர்ற வரை இவனை அப்படியே வச்சிட்டிருக்க முடியுமா?” என்றேன்.
அவள் முடியவே முடியாது என்று காருக்குள்ளேயே கத்த ஆரம்பித்துவிட்டாள். பொதுவாக எங்கள் சண்டைகளின்போது கதறி அழும் அவன் அன்று அப்படியொன்று நடப்பதையேப் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மறுநாள் பொறுமையாகப் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
அன்றிரவு இரண்டு மணி போல கவின் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து, “நோ கவின் ஹவ்ஸ்” என்று சொல்லி அழ ஆரம்பித்தான். அனு தன்னால் இயன்ற சமாதானங்களைச் சொல்லித் தூங்க வைக்க முயன்றாள். ஆனால் அவன் எதையுமே கேட்கவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்த ஆத்திரமும் ஒன்றுமே செய்யவியலாத கையாலாகாதத்தனத்தால் எழுந்த கோபத்திலும் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்க ஆரம்பித்துவிட்டாள். உயிராய் நேசிக்கும் இரண்டுபேரும் ஆளுக்கொரு பக்கமாய் அழுதுகொண்டிருக்க எதுவுமே செய்யவியலாத மரம்போல் அமர்ந்திருந்தேன். எனக்குள்ளே ஏதோ உடைந்து நொறுங்கியதைப் போலிருந்தது.
“இதுக்குத்தான் நான் ஆஸ்திரேலியாவுலயே இருந்திடலாம் சொன்னேன். நீ தான் ஊரு மயிறு மட்டைன்னு என்னை இந்த ஊருக்குக் கூட்டி வந்த. அதுவும் இப்படி ஒரு பாழடைஞ்ச வீட்டுக்குள்ள. அய்யோ அய்யோ அய்யோ” என்று சொல்லி படீர் படீரென்று தன் தலையில் அடித்துக்கொண்டாள். எனக்கேகூட அங்கிருந்து கிளம்பி வந்தது பெரிய தவறோ என்று தோன்ற ஆரம்பித்தது. இப்போது அந்த இடம் காலியாக இருக்காது. பிராஜெக்ட்டும் மாறியாகிவிட்டது. இனி, நினைத்தாலும் கிளம்பிப் போக முடியாது.
அவன் அழுவதை நிறுத்தவேயில்லை. அன்று இரவு மூன்று மணிக்கு காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். வெளியே வந்ததும் சற்று அமைதியானான். வழியில் பெட்ரோல் நிரப்பினேன். அங்கிருந்து தூரம் போனபிறகுதான் பெட்ரோல் போடுமிடத்தில் கொடுத்த கார்டை திரும்ப வாங்கினேனா என்ற சந்தேகம் வந்தது. காரை நிறுத்தி பர்ஸைப் பார்த்தேன். கார்ட் இல்லை. மறுபடியும் காரைத் திருப்பி பங்க் வந்தேன். அங்கே இரண்டேபேர்தான் வேலையில் இருந்தனர். எனக்கு யார் பெட்ரோல் போட்டார்கள் என்பதுகூட நினைவிலில்லை. பெட்ரோல் போட்டவருக்கு என்னை மட்டுமல்ல நான் கார்டை வாங்கி டேஷ்போர்டில் வைத்ததுவரை நினைவிலிருந்தது. கார்ட் உள்ளேதான் இருந்தது.
மறுபடியும் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டியைவிட்டேன். அவன் முகத்தில் காற்றுபடும்படி காரின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு ஒரு மணிநேரம் ஊரைச் சுற்றி வந்ததும் களைத்துப்போய் அவன் தூங்கிவிட்டான்.
அனு கோபித்துக்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வந்தாள். அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. எனக்கு யாரைச் சமாளிப்பது என்று தெரியவில்லை. அவன் நன்றாக அயர்ந்துவிட்டதால் வீட்டுக்குக் காரைக் கிளப்பினேன்.
படுக்கையில் எங்களிருவருக்கு நடுவில் அவனைப் போட்டுவிட்டு இரண்டுபேரும் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தோம். இருவருக்கும் துளித் தூக்கமில்லை. இரண்டு நாட்களில் புயல் வந்து புரட்டிப் போட்டதைப் போலிருந்தது வீடு. நடந்த ஒவ்வொரு நிகழ்வாக யோசித்துப் பார்த்தேன்.
அனு மெள்ளமாய்க் கெஞ்சும் குரலில் “இந்த வீட்டைவிட்டுப் போய்டலாம்ப்பா ப்ளீஸ்” என்றாள். அதையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ஆயிரமாவதுமுறையாக “சரி போய்டலாம்” என்றபோது அவள் தூங்கிப்போயிருந்தாள்.
O
நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2022
April 6, 2023
வடு

என் முப்பத்து மூன்று வருட வாழ்வனுபவத்தில் இதுவரை இரண்டுமுறை மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கிறேன். அது தீபாவளிக்கு முந்தைய நாள். அப்போது பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். வெளியில் பேய் மழை. மழை விட்டதும் ஹோட்டலைவிட்டு வெளியே வந்தால் கொண்டு வந்திருந்த அப்பாவின் டி.வி.எஸ்.50 வண்டியைக் காணவில்லை. ஹோட்டலிலிருந்து நடக்கும் தொலைவில் போலீஸ் ஸ்டேஷன். அசட்டுத் தைரியத்தில் போய் விசயத்தைச் சொன்னோம். வண்டி தொலைந்ததே பரவாயில்லை என்று ஆறுதல் படும்படியாக வரிசையாக கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். திருடியவனிடம் இத்தனை கேள்விகள் கேட்பார்களெனில் ஒருவேளை அவன் திருந்திவிடுவானாயிருக்கும். அடுத்தமுறை பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வரச் சொல்லியிருந்தார்கள். பாஸ்போர்ட்டைச் சரிபார்த்தலுக்கும் ஸ்டேஷனுக்கு எதிரேயிருந்த கடையிலிருந்து வாங்கித் தரப்பட்ட பேப்பர் கட்டுகளுக்குமான தொடர்பு புரிய ஆரம்பித்தபோது கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
இதோ, இப்போது மூன்றாவது முறையாக போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இந்த முறை இன்னும் சற்று விசேஷம். இந்த முறை சொந்த ஊரோ ஏன் நாடோகூட இல்லை. தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரிலிருக்கும் ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டும். இரண்டு மாத வேலை. சிறிய பயணம். தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வங்கியொன்றின் மென்பொருள் வடிவமைப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் கணித்ததைவிட வேலை விரைவாக முடிந்துவிட்டது. அதில் டெலிவரி மானேஜர் ஓட்டாஸூக்கு ரொம்பவும் திருப்தி. அதை வெளிப்படுத்தும்விதமாக கறுப்பு டயல்கொண்ட அழகான ‘டேனியல் வெல்லிங்டன்’ வாட்சை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். நேரம் பின் மதியத்தைக் கடந்துகொண்டிருந்தது.
“நான் இதுவரை பார்த்த சிறந்த மூளைகளுள் ஒன்றுக்கு என் எளிய பரிசு” என்று சொல்லி அத்தனை பேர் முன்னிலையில் அவர் இதை எனக்குக் கட்டிவிட்டபோது அவ்வளவு பெருமையாக இருந்தது. நீண்ட கால விசாவில் என்னை அங்கே வந்துவிடுமாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
சென்னையிலிருந்து கிளம்பும்போதே சொல்லித்தான் அனுப்பியிருந்தார்கள். நானும் மிகுந்த கவனத்துடனே இருந்தேன். பொது இடங்களில் பர்ஸை வெளியே எடுப்பதில்லை. சிக்னல்களில் கார் கண்ணாடிகளைத் திறப்பதில்லை. எப்படியோ சிறு பிசகு நேர்ந்துவிட்டது. நடந்து முடிந்த சம்பவம் குறித்தோ அல்லது அடுத்து செய்ய வேண்டிய காரியங்கள் பற்றியோ எந்தப் பதற்றமும் இல்லாதவனாக பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் ஹேம். நான் அவனைப் பார்ப்பதைக் கண்டதும் என் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து,
“சரி விடு பாத்துக்கலாம்.” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினான்.
“அப்போ கிடைச்சுடுங்கிறியா?” என்றேன்.
“சத்தியமா கிடைக்காது.”
“என்னாடா மச்சி. இப்படி சொல்ற.”
“மூணு வருசமா இங்கதான் குப்ப கொட்டிட்டு இருக்கேன். எனக்குத் தெரியாதா இந்த ஊரைப் பத்தி? எல்லாம் கூட்டுக் களவாணிக. மொபைல், லேப்டாப்ன்னாகூட பரவால்ல. பேரம் பேசி வாங்கித் தந்துடுவானுக. துட்டுலாம் வாய்ப்பே இல்ல.”
“அப்புறம் என்ன மயித்துக்கு இப்போ நாம ஸ்டேஷனுக்குப் போகணும். நேரா ஹூட்டனுக்கே போயிருக்கலாம்.”, நம் மொழி மற்றவர்களுக்குப் புரியாத இடங்களில் வார்த்தை தடிப்பது சுலபமாகிறது. இதே பணத்தை நம்மூரில் வைத்து இழந்திருந்தால் இத்தனை பதற்றமாகியிருக்க மாட்டேன். இவ்வளவு தூரம் வந்து ஏமாற்றப்பட்டதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
“டேய், அதில்லடா. உன்னோடது ஃபோரக்ஸ் கார்ட். அதுக்குத் தனியா இன்ஸூரன்ஸ் உண்டு. போயி ஒரு எஃப்.ஐ.ஆர். போட்டு வந்து அதோட காப்பி கொடுத்தோம்ன்னா பாதிக்கு பாதியாவது கிடைக்கும்.”
“பி.ஓ.எஸ்.ல தானே போட்டு பணத்தை எடுத்திருக்கானுங்க. அதுக்குள்ள எப்படி பொருளா வாங்கிருப்பானுங்க? சனியனுங்க. எல்லா பி.ஓ.எஸ். மிசினுக்கும் தனி ஐ.பி. உண்டே. அதை வச்சு அது என்ன கடை, எப்போ வாங்குனாங்கன்னு பார்த்து, ஒருவேளை எங்கயாவது சிசிடிவி இருந்தா ஆளைப் பிடிச்சுடலாம்ல.”
“மச்சான், நாம இருக்கிறது அமெரிக்கா இல்ல. ஆப்பிரிக்கா.”
“அதுக்கு?”
“டேய், அவ்ளோலாம் வேண்டாம். இவனுங்களுக்கே அது யாருன்னு நல்லாத் தெரியும். தனி கட்டிங்கூட வருமாயிருக்கும். அதுனால திரும்பக் கிடைக்கும்ன்னு கனவுகூட காணாத. அமைதியா இரு. மறுபடியும் சொல்றேன் இதுவே பொருள்ன்னா பரவாயில்ல. அன்னிக்கு மரோபெங்ல என்ன நடந்தது தெரியும்ல. நீயும் கூடதானே இருந்த.” என்றான்.
அவன் சொல்லிய எல்லாமும் எனக்கும் தெரிந்துதான் இருந்தது. எதையாவது மறுத்து, மாற்று வழி சொல்லமாட்டானா என்ற நப்பாசையில்தான் அப்படிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
O
ஜோஹன்ஸ்பர்க்குக்கு வட மேற்கில் சுமார் ஐம்பது கி.மீ. தொலைவிலிருக்கிறது மரோபெங். என்னைப் போல குறுகிய காலப் பயணத்திட்டத்தில் வருபவர்களையெல்லாம் அழைத்துப் போகவென்றே இவர்கள் சில இடங்கள் வைத்திருக்கிறார்கள். ஜோஹன்ஸ்பர்க் மிருகக் காட்சி சாலை, மான்ட் காசினோ, மண்டேலா வீடு என்று வரும் இந்த வரிசையில் மரோபெங்கும் ஒன்று.
இரண்டு கார்களை எடுத்துக்கொண்டு காலையிலேயே ஹூட்டனிலிருந்து கிளம்பிவிட்டோம். அகண்டு விரிந்த சாலையில் ஒரு மணி நேரப் பயணம். அந்தப் பகுதி முழுவதும் பொட்டல் வெளி. சுற்றிலும் காய்ந்த புற்கள். முதலில் நாங்கள் போய் நின்றது தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களின் ஆளுயுர வெங்கலச் சிலைகள் நிறுவப்பட்ட இடத்துக்கு. மண்டேலா, ஆலிவர் டம்போ போன்ற தலைவர்களுக்கிடையே காந்திக்கும் ஒரு சிலை வைக்கப்பட்டிருந்தது. வரிசைக் கிரமமாக நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.
அதன் பின் எங்களுடன் வழிகாட்டியாக லெத்தாபோ இணைந்துகொண்டார். உற்சாகமான மனிதர். ஆப்பிரிக்கர் என்றாலும் அட்சரம் பிசகாத பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு.
“இந்த இடத்தைப் பற்றி கூகுள் செய்துவிட்டுதான் வந்திருப்பீர்கள். அது காட்டும் ஒற்றைப் பரிமாணத்தை அகற்றி புதிய பரிமாணங்களைச் சேர்ப்பதன் வழியே உங்களுடைய இப்பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன். ஆதியிலிருந்து தொடங்க வேண்டியது என் கடமை. இந்த இடத்தின் பெயரே அதைத்தானே சொல்கிறது. ஆமாம், ‘மரோபெங்’ என்பது செட்ஸ்வானா வார்த்தை. அப்படியென்றால், ‘உங்கள் பூர்வீகத்துக்குத் திரும்புங்கள்’ என்று அர்த்தம். மனிதன் மனிதனாக பரிணாமம் பெற்ற இடம் இதுதான். இங்குதான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு மனிதர்கள் என்றழைக்கப்படும் மனித முன்னோடிகளின் தொல் புதைபடிமங்கள் கிடைத்துள்ளன. அதனால் இப்பூமியை ‘மனித இனத்தின் தொட்டில்’ என்றழைக்கிறோம்.” என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டு போனார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறு இடைவெளி விட்டார். எல்லோரும் போட்டோக்கள் எடுக்க, இயற்கை அழைப்புகளை நிவர்த்திசெய்யவென்று அங்கிருந்து கலைந்து போயினர். நான் மட்டும் அப்பொட்டல் வெளியில் தனித்து நின்றுகொண்டிருந்தேன். அவர் சொன்னதே மனத்துள் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு முன்னே நின்றுகொண்டு இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவருக்கும் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்குமிடையில் பெளதீக ரீதியாக ஓராயிரம் வேறுபாடுகள் உண்டு என்றாலும் அனைவரும் புறப்பட்டுக் கிளம்பிய இடம் இதுதானே? அந்த வழிகாட்டியின் மூதாதையர் இங்கேயே தங்கிவிட்டார்கள். எங்களவர்கள் ஆயிரமாயிரம் மைல்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்? ஒரு மரத்தின் எல்லா கிளைகளுமா வானம் நோக்கி வளர்கிறன? சில பூமி பார்த்தும் தாழ்கிறனதானே? எப்படிப் போனாலும் அவற்றின் ஆதி வேர் ஒன்றுதானே. இப்படி நானே எதை எதையோ ஒன்றோடு ஒன்றைப் முடிச்சிட்டுப் பிணைத்துப் பார்த்துக்கொண்டேன். அந்த இளங்காலைப் பொழுதின் ஏகாந்தமும் மென்குளிரும் பரந்து விரிந்து கிடந்த அவ்விடத்தின் பிரமாண்டமும் என்னை உணர்வுக் கொந்தளிப்பில் தள்ளின.
ஹேம், லெத்தாபோவின் தோள் மீது கைபோட்டு சிரித்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தான். அவன் இயல்பே அப்படித்தான். எல்லாவற்றையும் பெரிதாக யோசிப்பான். சிறிய விசயங்களைக் கொண்டாடுவான். பிறர் ரத்தினங்களின் ஜொலிப்பில் லயித்திருக்கும்போது அவன் கூழாங்கற்களின் வழவழப்புக்கு மயங்குவான். எல்லா விசயத்திலும் அவனுக்கென்று தனித்த பார்வையிருக்கும். அது வலிந்து கவன ஈர்ப்புக்காகச் செய்யாமல் இயல்பாக உள்ளெழுந்து வந்ததாக இருக்கும்.
மிஸஸ் பிளஸ் என்று பெயரிடப்பட்ட ஆதிக்கிழவி ஒருத்தியின் மண்டை ஓட்டைப் பற்றி, அதிலும் லட்சம் வருடத்துக்கு முந்தைய மண்டை ஓட்டின் மூக்கெலும்பையும் தாடை வளைவையும் வைத்து அது எப்படி பெண்ணுடையது என்பதைக் கண்டுகொண்டார்கள் என்பதை ஒரு இயற்பியல் பேராசிரியர் சார்பியல் கோட்பாட்டை விளக்கும் பாவனையில் விளக்கிச் சொன்னார் லெத்தாபோ. இப்படியாக, அவர் ஒரு புதிய விசயத்தைச் சொல்லிவிட்டு ஒவ்வொருமுறையும் எங்களனைவரையும் பார்த்துப் பெருமிதம் பொங்கப் புன்னகைப்பார். தினம் தினம் வரும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு அதே கதையை வரி மாறாமல் ஒப்பிக்க வேண்டிய சோர்வளிக்கும் வேலையை எப்படி இத்தனை திருப்தியுடன் செய்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
காமிராவை காரில் வைத்துவிட்டு மதிய உணவை முடித்துத் திரும்புபோது எந்தக் கண்ணாடியும் உடைக்கப்படாமல் காரின் கதவு திறக்கப்பட்டு உள்ளேயிருந்த காமிரா திருடு போயிருந்தது. இத்தனைக்கும் காமிரா வைக்கப்பட்டதற்கும் மதிய உணவை முடித்துத் திரும்பயதற்கும் அரை மணி நேர இடைவெளிகூட இருந்திருக்காது. ஒரு சின்னக் கவனக் குறைவு. அவ்வளவுதான். இந்திய மதிப்பில் லட்ச ரூபாய்க்கு குறையாமலிருக்கும் அதன் விலை. அன்றைய நாளின் உற்சாகத்தை வடியச் செய்ய அந்த ஒரு சம்பவம் போதுமாயிருந்தது.
எங்கள் சீனியர் ராஜேஷ். எட்டு வருடங்களாக ஜோஹன்ஸ்பர்க்கில் இருக்கிறார். அவருக்கு அதை மீட்பதற்கு யாரைப் பிடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் தெரிந்திருந்தது. யார் யாரிடமோ பேசினார். திருடுபோன மூன்றாவது நாள் சாண்டனில் வைத்து ஒருவரைச் சந்தித்தார். காமிராவின் விலையில் மூன்றில் ஒரு பங்கை ராண்டாகக் கொடுத்து அதே காமிராவை அவர்களிடமிருந்து வாங்கி வந்துவிட்டார்.
அதற்குப் பின்பு, மெக்டொனால்டில் பர்கர் பார்சல் வாங்கித் திரும்பும் முன்னே டிக்கியிலிருந்த லேப்டாப் தொலைந்து போனது. ஜிம்மிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, சிக்னல் மாறும் இடைவெளியில் துப்பாக்கி முனையில் கைப் பை பறிக்கப்பட்டது, இவையெல்லாம் நான் இங்கே தங்கியிருந்த இந்த இரண்டு மாத காலத்தில் என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு மட்டும் நடந்தேறிய சம்பவங்கள்.
தென் ஆப்பிரிக்காவை அதன் கிரிக்கெட் அணியின் வழியாக மட்டும் அறிந்து வைத்திருந்த எனக்கு இங்கே வந்து இறங்கிய நாளிலிருந்து காணக் கிடைத்தது எல்லாம் ஆச்சரியங்களே. இங்கே உள்ள மக்களில் வெறும் எட்டு சதவீதத்தினர் மட்டுமே வெள்ளையர்கள். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் நாட்டின் முக்கியமான துறைகளில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாயிருந்தது.
என்னுடைய விசயத்தில் பரத் சொன்னதைத்தான் ராஜேஷும் சொன்னார்.
இந்தியாவிலிருக்கும் என்னுடைய மானேஜருக்கு விரிவாக நடந்த விசயத்தைப் பற்றி மெயில் எழுதச் சொன்னார்கள். நிறுவனம் ஏதாவது செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார்கள். மேனனிடமிருந்து அடுத்த அரைமணி நேரத்தில், வருத்தங்களைத் தெரிவித்துவிட்டு கவனமாக இருக்கும்படி அறிவுரை செய்து பதில் வந்தது.
O
மறு வாரம் ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்ததால், போகும்போது வீட்டுக்கு ஏதாவது வாங்கிப் போகலாம் என்றுதான் ரோஸ்பேங்க் மால் வரை வந்திருந்தோம். இது வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பாதுகாப்புக்குப் பிரச்சினையில்லை. தென் ஆப்பிரிக்காவில் தவறவிடாமல் வாங்க வேண்டிய பொருட்கள் இரண்டு. ஒன்று வைரம். மற்றொன்று மது. முன்னதை விடுத்து பின்னதை வாங்கி வைத்துக்கொண்டேன். அதுபோக ப்ரீத்திக்கு ஒரு வாட்ச். அம்மாவுக்கு கம்பளி ஆடையும் ஆதவுக்கு பொம்மைகளும் வாங்கிக்கொண்டேன். அப்பாவிடமிருந்த வாக்கிங் ஷூவின் முன் பக்கம் லேசாக கிழிய ஆரம்பித்துவிட்டது. மாற்றச் சொன்னாலும் கேட்பதில்லை. அவருக்கு ஷூ வாங்கும்போதுதான் பிரச்சினை தொடங்கியது.
அந்தக் கடையில் கார்ட் மிசின் வேலை செய்யவில்லை. இங்கே யாரும் பணமாக சில பத்து ராண்ட்களுக்கு மேலே வைத்துக்கொள்வதில்லை. குறிப்பாக இந்தியர்கள். ஹேம், தான் வரிசையில் நிற்பதாகவும் என்னை மாலில் இருக்கும் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருமாறும் சொன்னான். என்னை வரிசையில் நிறுத்திவிட்டு அவன் போயிருந்தால் ஒருவேளை இந்தப் பிரச்சினையே வராமல் போயிருக்கலாம்.
நான் வேலைக்கு வந்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்மே இருந்தது. அங்கிருந்த வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் வயதானவர் ஒருவர் பணம் எடுத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து மெதுவாக டைப் செய்து என் பொறுமையைச் சோதித்தார். அதற்குள் எனக்குப் பின்னால் வரிசை சேர்ந்துவிட்டிருந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்கு அடுத்து ஆறரை அடி உயரத்தில் ஆப்பிரிக்க தேசத்தவன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். என் பொறுமையின்மை அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து இசைவாகப் புன்னகைத்தான்.
உயரத்துக்கு ஏற்ற ஆஜானுபாகுவான உடற்கட்டு. தேன்கூட்டுச் சுருள் முடி. அவன் வலது புருவத்தில் பழைய வெட்டுக்குத் தையலிடப்பட்டிருந்த தழும்பு ஒன்றிருந்தது. பத்து பதினைந்து தையலாவது போட்டிருப்பார்கள் போல. அவன் சிரித்தபோது அது ஒரு கறுப்பு ரயில் புழுப் போல சுருண்டுகொண்டது.
அடுத்துச் சில நிமிடங்களுக்குப் பிறகே அந்தப் பெரியவர் அங்கிருந்து நகர்ந்தார். கடைசி வரை அவர் பணம் எடுத்ததைப் போலத் தெரியவில்லை.
ஏ.டி.எம். மிசினின் முன்னால் நின்றபோதுதான் எனக்கு அது நினைவுக்கு வந்தது. என்னிடமிருந்தது ஃபோரக்ஸ் கார்ட். சாதாரண ஏ.டி.எம். கார்ட் கிடையாது. வெளிநாட்டில் செலவு செய்துகொள்வதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்தை அமெரிக்க டாலராக மாற்றி இந்தக் கார்டில் ஏற்றிக் கொடுத்திருந்தார்கள். இதை ஏ.டி.எம்மில் போட்டு பணம் எடுத்துக்கொள்ளலாம்தான். ஒவ்வொரு முறைக்கும் தண்டமாக தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே அதை ஜோஹன்ஸ்பர்க் வந்த நாளிலிருந்து உபயோகப்படுத்தவேயில்லை. செலவுகளை நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். மொத்தச் செலவை, இறுதியாக திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். ஆனால், அப்போதைக்கு வேறு வழியில்லை. கார்டை மிசினுக்குள் விட்டேன். கடவு எண்ணை அழுத்தினேன். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்று கேட்டது. அதையும் கொடுத்தேன். அடுத்தடுத்து சென்று, கடைசியாகப் பணம் மட்டும் வரவில்லை.
எனக்குப் பதற்றமாகிவிட்டது. ஒருவேளை அந்த மிசினிலேயே ஏதாவது பிரச்சினையோ, அதனால்தான் அந்தப் பெரியவரும் திணறிப்போனாரோ என்று யோசித்தேன். கார்டை எடுத்துக்கொண்டு ஹேமை அனுப்புவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து கேன்சல் பட்டனை அழுத்தினேன்.
அதற்குள் பின்னாலிருந்தவன் ‘கமான்!’ என்று சலித்துக்கொண்டான்.
கேன்சலை அழுத்தியும் கார்ட் திரும்பி வரவில்லை. மொத்தமாக அந்தப் பரிவர்த்தனையிலிருந்து வெளியேறியும் வந்துவிட்டேன் ஆனால் கார்டோ பணமோ வெளியே வரவேவில்லை. கேன்சல் பட்டனைத் திரும்பத் திரும்ப தட்டினேன். பயன் ஒன்றும் இல்லை.
பின்னாலிருந்தவன், “என்னவாயிற்று?” என்றான்.
நடந்ததைச் சொன்னேன்.
அவன் எனக்கு முன்னால் வந்து ஏ.டி.எம். கீபோர்டில் எதையோ படபடவென்று அழுத்தினான். மறுபடியும் கடவு எண்ணைக் கேட்டது. அது எப்படி வந்தது என்று யோசிக்கும் முன்னர், “ம்ம்.. சீக்கிரம் கொடுங்கள்” என்று அவசரப்படுத்தினான். கொடுத்தேன். அந்த முறையும் வரிசையாக உள்ளே போய் அதே போலத் திரும்பி வந்தது. கார்டோ பணமோ வெளியே வரவில்லை.
“கார்ட் ஏ.டி.எம்முக்குள் சிக்கியிருக்க வேண்டும். பின்னால்தான் இந்த வங்கியிருக்கிறது. போய்க் கேளுங்கள். அவர்களுடைய ஆள் வந்து திறந்து எடுத்துக்கொடுப்பார்கள்.” என்றான்.
அவன் சொல்வது சரியாகத்தான் தெரிந்தது. அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பின்புறம் இருந்த பேங்கில் போய் கேட்டேன். அன்று சனிக்கிழமை. ஏ.டி.எம். திறக்கும் ஆட்கள் திங்களன்றுதான் வருவார்கள் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
கடையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஹேமிடம் விசயத்தைச் சொன்னதும், “பைத்தியக்காரா!” என்று திட்டினான்.
“கார்ட் உள்ள போயி எவ்ளோ நேரம் ஆச்சு?”
“பத்து பதினைஞ்சு நிமிசம் ஆகியிருக்கும்.”
“அது போதும். இந்நேரத்துக்குத் தூக்கிருப்பானுங்க. சட்டுன்னு அந்த கார்ட் கொடுத்த பேங்குக்கு கால் பண்ணி, கார்டை பிளாக் பண்ணு.”
“கார்ட், மிசின்குள்ளதானே இருக்கு. எதுக்கு பிளாக் பண்ணனும்.”
“மயிரு.. மூடிட்டு சொன்னத மட்டும் செய்டா.”
கார்டை பிளாக் செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து அதைச் செய்யச் சொல்லும் முன் அதற்கான தேவையே இல்லாமல் போயிருந்தது. அதிலிருந்த மொத்த டாலரையும் எடுத்துவிட்டிருந்தார்கள். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே விளங்கவில்லை. ஏ.டி.எம். கார்ட் வெளியே வரவேயில்லை. கார்டே இல்லாமல் அதிலிருந்து அத்தனை பணத்தையும் எப்படி எடுக்க முடியும்? அதுவும் அரைமணி நேரத்தில்!
“உனக்குப் பின்னாடி ஒருத்தன் நின்னான் சொன்னியே. அவன்தான் எல்லாத்தையும் பண்ணிருப்பான்.” என்று சொல்லி இது போன்ற சம்பவங்கள் இங்கே இதற்கு முன்பு எப்படி நடந்திருக்கிறன என்பதை விளக்கினான்.
எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவனின் சிரித்த முகமும் சுருங்கி நெளிந்த அவனுடையப் புருவத் தழும்பும் நினைவுக்கு வந்தன.
O
நாங்கள் இருவரும் ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தபோது பொழுது பின் மதியத்தைத் தாண்டியிருந்தது. ஆடையை மீறி குளிர் மெதுவாகத் துளைத்தது. அது, பார்ப்பதற்கு நம் நாட்டின் சிறு நகரத்து போலீஸ் ஸ்டேஷனை நினைவுபடுத்தியது.
அந்த ஸ்டேஷனில், நன்கு பெருத்து, தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு வெளியே பிதுங்கி வழியும் பிருஷ்டத்தைக் கொண்ட ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டும் அமர்ந்திருந்தாள். அந்த மொத்த ஸ்டேஷனையும் நிறைவாய் உணரச் செய்யும் உருவம். அப்போதுதான் தூங்கி விழித்ததைப் போல அவள் கண்கள் கலங்கியிருந்தன. கறுப்பு முகத்தில் கலங்கியிருந்த விழிகள் பார்ப்பதற்கு அச்சம் தருவனவாக இருந்தன.
ஹேம் நடந்த சம்பவத்தைச் சொல்லி, “முதல் தகவல் அறிக்கை வேண்டும்” என்றான்.
“இன்சூரன்ஸூக்குத் தானே?” என்றாள்.
என்னைப் பார்த்துவிட்டு, “ஆமாம்” என்பதாகத் தலையாட்டினான்.
ஹேம் அவளிடம் சொல்லிய சம்பவத்தை அப்படியே ஒரு வெள்ளைத்தாளில் எழுதித் தரச் சொல்லிக் கேட்டாள்.
“கவனம்! அடுத்தமுறை கேட்கும்போது இடம், நேரம், சம்பவம் என எதுவும் மாறக்கூடாது.” என்றாள். அவளுடைய ஆங்கில உச்சரிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. மொட்டை நாக்கு.
வரிசைக் கிரமமாக எழுதிக்கொடுத்தோம். திங்கட்கிழமை வந்து எஃப்.ஐ.ஆர். காப்பியை வாங்கிக்கொள்ளச் சொன்னாள்.
“ஆளைப் பிடித்துவிட முடியுமா? நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், என்னால் அவனை அடையாளம் காட்ட முடியும். எனக்கு அவன் முகம் நன்றாக நினைவிருக்கிறது. வலது கண் பட்டையில் ஒரு பெரிய தழும்பு உண்டு.” என்றேன். ஹேம் என் முதுகில் கிள்ளினான்.
அவள் நான் சொன்னதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாத பாவனையில் நாங்கள் எழுதிக்கொடுத்த தாளை வாசித்துக்கொண்டிருந்தாள்.
என்னால் அந்த இழப்போடு ஊருக்குப் போக முடியாது. கார்டிலிருந்த மூன்று லட்சம் போய்விட்டது. அது போக, இங்கே அதுவரை ஆன செலவு மொத்தமும் நண்பர்கள்தான் பார்த்துக்கொண்டனர். ஊருக்குப் போய் திருப்பித்தர வேண்டும். அதற்கு என் கையிலிருந்து காசு போட வேண்டும். ஆதவுக்கு வாங்கிய பொம்மைகூட கடனில்தான் வாங்கப்பட்டிருக்கிறது. நினைக்கவே எரிச்சலாக வந்தது. இரண்டு மாதங்கள், நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் உழைத்திருக்கிறேன். கிடைக்கப்போகும் அந்த மூன்று லட்சத்துக்கும் திட்டங்கள் தீட்டி வைத்திருந்தோம் நானும் ப்ரீத்தியும். எல்லாவற்றுக்கும் மேல், ‘பணத்தைத் தொலைத்துவிட்டேன்!’ என்று எந்த முகத்தைக்கொண்டு போய் அவளிடம் நிற்பேன்? அவமானமாக இருந்தது.
“அவன் முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.” என்று திரும்பச் சொன்னேன்.
அந்தத் தாளிலிருந்து கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தவள், ஹேம் பக்கமாகத் திரும்பி, “உன் நண்பன் எப்போது ஊருக்குத் திரும்ப வேண்டும்?” என்றாள்.
“அடுத்த வாரம்.”
“சில நேரங்களில் எஃப்.ஐ.ஆர். தயார் செய்து காப்பி கொடுக்க பத்து நாட்கள்கூட ஆகும். உனக்குத் தெரியுமில்லையா?” என்றாள்.
“இல்லையில்லை. மன்னிக்கவும். நாங்கள், எஃப்.ஐ.ஆர். காப்பியை திங்கட்கிழமை வந்து வாங்கிக்கொள்கிறோம். இப்போது வருகிறோம்.” என்று சொல்லி அங்கிருந்து என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான்.
“ஒரு நிமிடம், இங்கே வாருங்கள்!” என்றாள் அவள். அவள் மேசைப்பக்கமாக நாங்கள் போனதும், “இரவுணவுக்கு ஏதாவது கவனித்துவிட்டுப் போங்கள்.” என்றாள்.
ஹேம் தன் பர்சிலிருந்து இருபது ராண்டுகளை எடுத்து அவள் மேசை மீது வைத்தான். நாங்கள் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தபோது நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது.
O
நாங்கள் ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் அங்கே ஒரு பழைய மாடல் டோயாட்டா கார் நின்றுகொண்டிருந்தது. நாங்கள் ஸ்டேஷனுக்கு உள்ளே வரும்போது அந்தக் கார் அங்கேயில்லை. அதில் ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்துவிட்டது. ஏ.டி.எம். வாசலில் எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தவனேதான்.
வேகமாக ஹேமை அழைத்து அந்தக் காரைக் கை காட்டினேன். அவன் அதைப் பார்த்த மறு நிமிடம் அங்கிருந்து அந்தக் கார் கிளம்பிப் போய்விட்டது.
“ஹேம், அது அவன்தான். அவனேதான்.”
“எப்படிச் சொல்ற?”
“எனக்குத் தெரியும்டா. அதே ஆள்தான். அதே உயரம், பருமன். அந்த புருவத் தழும்பைக்கூட நான் பாத்தேன்.”
“இங்கேயிருந்தேவா?”
“ஆமா, ஏன்? நீ பாக்கலியா?”
“முகத்தைப் பார்த்தேன். ஆனா அவ்ளோ டீட்டைலா இல்ல.”
“சரி வா, உள்ளே போய் சொல்லலாம்.”
“என்னன்னு?”
“அவனைப் பார்த்தத, அதுவும் இங்க வச்சு.”
“பைசா பிரயோசனம் இல்ல. அது அவனாவே இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது.”
“ஏன் முடியாது? அந்தக் கார் நம்பரை நோட் பண்ணி வச்சிருக்கேன். இது போதாதா?” என்றேன்.
“இங்க அது போதாது. முதல்ல அது அவனா இருக்காதுடா.”
“எப்படி சொல்ற?”
“அவன் ஏன் இப்போ உன் பின்னாடி வரணும்? அதுவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு.”
“ஒருவேளை என்னை ஏதாவது ரிவெஞ்ச் எடுக்கணும்ன்னு நினைச்சிருந்தா?”
“கிறுக்கா! அவன் அப்படி நினைச்சிருந்தா இதோ இப்படி இங்க நின்னு நீ பேசிட்டு இருக்க மாட்டே. துப்பாக்கியத் தூக்கி பொட்டுன்னு போட்டு போயிட்டே இருந்திருப்பான். நீ கொஞ்ச நேரம் பேசாம என்கூட அமைதியா வர்றியா?”
ஹேம் சொல்ல வந்தது புரிந்தது. அதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. இங்கே அநேகம்பேரிடத்தில் வெடிக்கும் ஆறாவது விரல் உண்டு. அதே நேரத்தில் நான் பார்த்தது அவனைத்தான் என்பதை எப்படி இவனுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.
O
அதே ரோஸ்பேங்க் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து அவன் என்னைச் சுட்டான். இரண்டு குண்டுகள். இரண்டுமே மிகச் சரியாக என் இதயத்தைக் குறி பார்த்துப் பாய்ந்து வந்தன. அவனுடைய பிரத்யேகப் புன்னகையுடன் நெளிந்த புருவப்புழுவைச் சுமந்தபடியே அவன் என்னைச் சுட்டான். அவனுக்குப் பின்னால் அந்த போலீஸ்காரி முன் பற்களால் பர்கரைக் கவ்வியபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவனுக்குப் பின்னால் அத்தனை கனத்த உருவத்தை எப்படி மறைத்துக்கொண்டு நின்றாள்? யாருமற்ற வெளியில் நான் அந்தப் பெருமரத்தின் வேரை இறுகப் பற்றிக்கொண்டேன். மூன்றாவது குண்டு என் நெற்றியைத் துளைத்தபோது வேரைவிட்டுவிட்டு கீழே விழ ஆரம்பித்தேன். பதறி எழுந்து விழித்துக்கொண்டேன். நினைவைப் போலவே அத்தனை துல்லியமாக இருந்தது. கனவோடு தூக்கமும் கலைந்துவிட்டது. சம்பவம் நடைபெற்ற அன்றும் அடுத்து வந்த நாட்களும் சரியாகத் தூக்கம் பிடிக்கவில்லை. என்னை எப்போதும் யாரோ கண்காணித்துக்கொண்டிருப்பதான பிரமை என்னைத் துரத்தியது. உயரமாக யாரைப் பார்த்தாலும் அவர்களை முந்திப் போய் முகத்தைப் பார்ப்பது பழக்கமானது.
நடுவில் ஒரு நாள் பர்கர் கிங் கடைவாசலில் மண்டியிட்டுப் பிச்சை கேட்டு நின்றவனைப் பார்த்து அலறி ஓடினேன்.
அன்று கட்டங்கின் ஆண்டர்சன் தெருவிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் வேலை. அந்த அலுவலகத்துக்கு எதிர்ச் சாரியில் ஒரு வட இந்திய உணவகம் உண்டு. சாயங்கால வேளைகளில் அங்கே கிடைக்கும் சமோசா பிரமாதமாகவும் டீ சுமாராகவும் இருக்கும். நானும் ஹேமும் ஆளுக்கொரு சமோசாவும் டீயும் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம்.
“மச்சி, உனக்கு ஒரு குட் நியூஸ்.”
வருவோர் போவோரைக் கவனித்தபடியே, “என்னவாம்?” என்றேன்.
“இன்ஸூரன்ஸ் கிளைம் கிடைச்சது போக மிச்சப் பணத்த, நம்ம மேனேஜ்மண்ட்ல இருந்து உனக்கு காம்பன்ஸேட் பண்றதா சொல்லியிருக்காங்க.”
நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. மேனன் ஒரு கஞ்சன். அணியினருக்குச் செய்வதற்கு ஏதோ தன் சொந்தக் கை காசைப் போட்டு செய்வதைப் போல சலித்துக்கொள்வான். ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொண்டால் நன்றியுணர்ச்சிக்கு ஆட்பட வேண்டுமே என்று யோசித்தேன். அதை வைத்து இன்னும் நாலு வேலையைத் தள்ளிவிடுவார்கள். மறுக்க முடியாது. ஏனெனில், இந்த நிகழ்வில் கம்பெனியுடைய தவறு எதுவுமில்லை. முழுக்க முழுக்க இது என்னுடைய கவனக்குறைவால் நிகழ்ந்த ஒன்று. குழப்பமாக இருந்தது.
“ஓட்டாஸ் பேசியிருப்பார் போல.”
என் திறமை மீதான அவர் நம்பிக்கை குறித்து உள்ளே ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஊரில் எட்டு வருடமாக குப்பை கொட்டியவனுக்குத் தோணாதது ஓட்டாஸுக்குத் தோணியிருக்கிறது.
“என்னடா, மூஞ்சுல சந்தோசமே இல்ல.”
“இல்ல மச்சி, இதுல நம்ம கம்பெனி தப்பு எதுவுமேயில்ல. அவங்க ஏன் திருப்பித் தரணும். அதையும்கூட கிளையண்ட் ஒருத்தன் சொல்லித்தர வேண்டியிருக்கு. பேசாம, வேணாம்ன்னு சொல்லிரவா.”
“டேய், உன் நியாய மயிரெல்லாம் இங்க பேசாத. இந்த ஊர்ல யாருக்காக வேலைக்கு வந்த? சும்மா எதாவது உளறாம கொடுத்தா வாங்கிட்டு கம்ன்னு இரு.” என்றான்.
அப்போதுதான் சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவனைக் கவனித்தேன். டீக்கு காசு கொடுத்துக்கொண்டிருந்த ஹேமைப் பிடித்து உலுக்கியபடி, சிக்னல் அருகே எங்களை முறைத்துக்கொண்டிருந்தவன் பக்கம் கைகாட்டினேன்.
“அவன் தான்.” என்றேன்.
நான் சுட்டிக்காட்டிய பக்கம் நாசூக்காய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பொறுமையாக மிச்சப் பணத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டான்.
“உனக்கு வேற எதுவும் வேணுமா?” என்றான்.
“டேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பண்ற.”
“அது அவன் இல்லை.” என்றான் அலட்டிக்கொள்ளாத குரலில்.
“எப்படி.. எப்படி சொல்ற? நீ அவனைப் பார்த்திருக்கியா முன்ன? தெரிஞ்ச மாதிரி பேசுற”
“டேய், நான் அவனைப் பார்த்தது இல்ல. ஆனா, அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில ஒருத்தனைக் காட்டி அவன்தான் உனக்குப் பின்னாடி நின்னவன்னு சொன்னியே, அவனை நான் நல்லாப் பாத்தேன். இவன் அவன் கிடையாது.”
“ஆர் யூ ஷ்யூர்?”
“டூ ஹன்ட்ரட் பர்சன்ட்”
மறுபடியும் சிக்னல் இருந்த பக்கம் பார்த்தேன். இப்போது அவன் அங்கு இல்லை. எனக்கே சற்று குழப்பமாக இருந்தது. உண்மையில், ஏதோ ஒருவகையில் உழைத்த காசு கிடைத்தவரை நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று உள்ளே கிடந்து உழற்றியது. இழந்த பணத்தைவிட ஏமாற்றப்பட்டதே என்னை அதிகமாக அலைக்கழித்தது.
O
ஓட்டாஸுனுடைய அறை நன்கு விசாலமானது. ஆண்டர்சன் தெருவிலிருக்கும் அந்த பில்டிங் முழுவதும் நாங்கள் வேலை பார்க்கும் வங்கியினுடையது. அதன் அனைத்து மென்பொருள் சம்பந்தமான பணிகளையும் கவனிக்கும் எங்களுக்கு பதினாறாவது தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. தெரு முழுவதும் தெரியும்படியான பெரிய கண்ணாடி ஜன்னல் அந்த அறையிலிருந்தது. சொந்த நாடாக இருந்தபோதும் வெகு சில தென் ஆப்பிரிக்கர்களே இங்கே உயர் பதவியிலிருந்தார்கள். ஓட்டாஸ் அவர்களில் ஒருவர். புத்திசாலி. நல்ல நிர்வாகி.
அவரேகூட தனக்குக் கீழ் வேலை பார்க்கும் வெள்ளையர்களை தேவைக்கு அதிகமான மரியாதையுடன் நடத்துவதைப் பார்த்து அது அவருடைய பண்பா பழக்கமா என்று குழம்பியுமிருக்கிறேன். அதே நேரத்தில் அவருக்குக் கீழிருக்கும் வெள்ளை மானேஜர்கள் சிலர் அவரை நடத்தும் விதத்தில் நுட்பமான கேலியிருப்பதையும் கவனித்திருக்கிறேன்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த ஹேமைப் பார்த்தேன். அவனும் தன் பங்குக்கு நன்றி சொன்னான்.
ஓட்டாஸ் இதெல்லாம் பெரிய விசயம் இல்லை என்பதுபோல பார்த்தார். கால்ச் சட்டையில் பர்ஸும் போனும் இருக்கிறதா என்று ஒருமுறை தடவிப் பார்த்துக்கொண்டேன். என்னையறியாமல் அதீத ஜாக்கிரதை உணர்வு வந்துவிட்டது.
“பரத், நீங்கள் இன்னும் நீங்கள் அந்த நிகழ்விலிருந்து மீளவில்லை போலவே?” என்றார்.
நான் மெலிதாய்ச் சிரித்தேன்.
“முதல்முறை இல்லையா? இரண்டு நாட்கள் அப்படித்தான் இருக்கும். இதை வைத்து நீங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் எடைபோட்ட
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
