தீராநதியில் வந்த பிரபஞ்சனிடன கட்டுரை

உயிர் எழுத்தும் உடல் எழுத்தும்
பிரபஞ்சன்-தீராநதி மார்ச் 2013
கண்டுபிடித்தசொற்களால் கண்டுபிடிக்கும் உலகம்
பிருகஸ்பதிதேவர்களின்குரு. அறிவின் சிகரம் என்று கருதப்பட்டவன். ஆனால், ஞானத்தின் பள்ளத்தாக்கில் தனித்து விடப்பட்ட மிருகம் போல உழன்றவன். சாயப்பட்டறைக் கழிவுகளால் கெட்டுப்போன தமிழ் நதிகளைப் போல அவன் அகம் கெட்டுக் கிடந்தது. தன் துர்க்குண வழி காதலாலும் துர்ச்செயல் முன்னுதாரணங்களாலும் தேவர்களை அகங்கார இருட்டுக் குழிகளுக்குள் தள்ளிக் கொண்டிருந்தான்.
இந்தப்பிருகஸ்பதிதன் அண்ணன் மனைவி மம்தாவின்மேல் காமப்பட்டான். மம்தா அதைப்புறக்கணித்தாள். அவள் அவனை ஏற்றுக்கொள்ள ஒருப்படவில்லை. அண்ணன் ஊரில் இல்லாதபோது தன் தீச்சுவாலைகளால் மம்தாவைச் சுற்றி வளைக்கப் போனான். அவள் கடுமையாக மறுத்தாள். தன்னிடம் அவனுக்கு இடம் இல்லை என்றாள்.தான் கர்ப்பிணியாக இருந்த உடல் நலம் குன்றிய மம்தாவின்மேல் அவன் ஆக்கிரமித்தான். படுக்கை அறைக்குள் பிரவேசிக்கும் நச்சுப் பாம்பைப் போல அவன் அவளுக்குள் உடைத்து உள்நுழைந்தான். மம்தாவின் கர்ப்பத்துக்குள் இருந்த சிசு பிருகஸ்பதியின் விந்தைத் தன் காலால் உதைத்துத் தடுத்தது. விலக்கியது. அவன் சீற்றப்படம் எடுத்து கர்ப்பக் குழந்தையின் கண்கள் குருடாகும்படி சபித்தான். அக்குழந்தை குருடாகி வாழ்நாள் முழுக்க அந்தகாரத்துக்குள் கிடந்து உழன்றான். பிருகஸ்பதியின் குழந்தையைக் காட்டில் விடச்சென்ற மம்தாவைக்கடவுளின்குரல் தடுத்து நிறுத்தியது. “மூதி அந்தக் குழந்தையைப் புறக்கணிக்காதே” என்று மம்தாவைத் திட்டுகிறார் கடவுள். ஆனால் ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு எதிராக, மறுப்பை அலட்சியம் செய்து பாலியல் வன்முறையாளனான பிருகஸ்பதியைக் கடவுள் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தார். தேவகுரு என்ற பதவியில் வைக்கப்பட்டிருந்தான், அவன். பிருகஸ்பதி மேல் எந்த விமர்சனமும் இல்லை…
வேதகாலத்துமம்தா முதல் , இன்றைய டில்லிமாணவி…வரை, பெண்கள் இறைச்சிக்கடைக் கழிவுகள்தான். எந்த நாயும் அதைத் தின்னலாம் என்பதுதான் நிலவரம். இதன் அர்த்தம் ஆண்களின் வெளி நீன்னமறப் பரந்து பெண்களுக்குப் பதுங்கு குழிகளையே வாசஸ்தலமாக்கிவிட்டிருக்கிறது. இதன் அர்த்தம் ஆண்குறிகள் நீண்டு நீண்டு ஒரு சாட்டையாக வளர்ந்து பெண்களைப் பொட்டலமாக்கிக் கட்டிவிட்டிருக்கிறது. ஏதுமற்ற ஒரு பிச்சைக்காரன்கூட மனைவியை அடிக்க முடியும். ஏனெனில் அவன்ஆண்.
அதிகாரம்பெண்களின்உடலை மதி/இரவு உணவாக வறுத்துச் சமைத்து மேசை மேல் வைத்து உண்கிறது. சமூகப் பொருளாதார அதிகாரம் தவிர்த்து வெறும் ஆண் என்கிற அதிகாரம் மட்டுமே ஒருவனுக்குப் பெண்ணைப் பாலியல் கொடுமை செய்யப் போதுமானதாக இருக்கிறது
.தேவிபாரதியின் நிழலின்தனிமை என்கிற அவரது முதல் நாவல் மிகவும் காத்திரமான விதத்தில் இந்த ஆண் என்கிற கருணாகரன் என்பவனைப் பற்றியும் அவனால் கந்தைத் துணியாகக் கிழிக்கப்பட்ட சாரதா பற்றியும் விசாரணை செய்கிறது. சம்பவத்தை அறிந்த அந்த இடத்திலிருந்த அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனிடமிருந்த அரிவாளைக் கருணாகரன் பிடுங்கிக்கொண்டபோது அந்தச் சிறுவன் சூளுரைக்கிறான்.
“என்னைக்கிருந்தாலும் ஒரு நா உன்னக் கண்டதுண்டமா வெட்டிக்கொல்லாம உடமாட்டெ, பழிக்குப் பழி வாங்குவன்டா” இந்தக் சூளுரையைச் செய்த அந்தச் சிறுவனின் சுமார் முப்பதாண்டுகளுக்குப் பிறகு அவனது 42ஆவது வயதில் நாவல் தொடங்குகிறது. ஆக முப்பது ஆண்டுகள் வளர்த்தெடுக்கப்பட்ட வன்மத்தின் சரித்திரம் எப்படிக் கிளைவெட்டிக்கொண்டு மூலநதியிலிருந்து பிரிந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது என்பது நாவலாக விரிகிறது. நாவல் என்பது கதை அல்ல என்பதை நாம் அறிவோம். ஒரு சொட்டு ரத்தம் காகிதத்தில் சிந்திப் பரவுவது போல வன்மம் என்கிற தீக்கங்கும் அதை உள்ளங்கையில் ஏந்துகிற மனிதர்களைப் பற்றிய விஸ்தரிப்பே நாவலாக வளர்கிறது. உள்ளங்கையில் ஏந்திய தீக்கங்கு சதையைப் பொசுக்குவது, சதை கருகுவது என்பன நிகழ்ச்சிச் சித்தரிப்பாக வளர்கின்றன.
முப்பதுஆண்டுகளுக்குப்பிறகு அவன் முன் அந்தச் சூளுரைத்த சிறுவனும் இப்போது நாற்பத்திரண்டு வயது இளைஞனுமான அவன் முன் ஒரு கெட்ட ஆவியைப் போல தோன்றுகிறான் கருணாகரன். அதன்பின் அவனை வேட்டை நாய்களான ஞாபகங்கள் தங்கள் கூர்ப்பற்களால் கவ்வுகின்றன. வன்முறை நிகழ்த்தியவன் அக்கிளையை விட்டு வேறு கிளைக்குத் தாவிச் சென்றுவிடுகிறான். வன்முறைக்குள்ளானவர்கள் வன்முறை நிகழ்ந்த அக்கணங்களுக்குள் மறுபிரவேசம் செய்கிறார்கள். நினைவு இதயத்தைக் கிழித்துக்கொண்டு ரத்தம் பீறிட வலியை அனுபவிக்கிறார்கள். நினைவுகள் கடந்தகால நகங்களால் கீறப்படுகின்றன மீண்டும் ஒருமுறை, பலமுறை பரிதாபத்துக்குரிய அவர்கள் முன்னொரு காலத்தில் வெட்டப்பட்ட நச்சுப்பொய்கையில் குதிக்கிறார்கள். வெந்து வெந்து அவர்கள் அந்தக் கொடு வென்நீர்க்குளத்தில் மூழ்கியெடுக்கப்படுகிறார்கள். வன்முறையின், குறிப்பாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் விகசித்துக்கொண்டே இருக்கும் விபரீதம் அதுதான். கொடுமையாளன் பிறிதொரு கொலை செய்யக் கிளம்பிவிடுகிறான். கொலை செய்யப்பட்டவள் மீண்டும் மீண்டும் கொலைசெய்யப் படுகிறாள்.
முப்பதுவருஷத்துக்குமுன் கொடுமை செய்த அவனை முதல் பார்வையிலேயே அவன் அடையாளம் கண்டுகொள்கிறான். வன்முறைக்கு உள்ளானவனின் சகோதரன், பன்னிரண்டு வயதில் பழிக்குப் பழி வாங்கச் சூளுரைத்தவன் ஒரு குமாஸ்தாவாகவும் வன்முறையாளன் அதிகாரம் மிகுந்த பொருளாதாரத்தில் வெற்றி பெற்றதோடு அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவனாகவும் இருக்கிறான். ஏதோ ஒரு அர்த்தத்தில் ஆண்டானும் அடிமையும் சந்திக்கிறார்கள் என்று பெரிய வட்டமாகச் சொல்லக்கூடும். தலைமை ஆசிரியரும் மற்றும் ஆசிரியர்கள், குமாஸ்தாக்கள் அந்தக் கருணாகரன் முன் தொழுதபடி நிற்கிறார்கள். ஆசிரியர்களின் குறைகள் முதலான அவர்களது முறையீடுகளைப் பரிவுடனும் பெருமிதத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தான். “அடுத்த வாரம் மெட்ராஸ் போறெ, மினிஸ்டர்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன், ‘அதுக்கென்ன மாப்ள நம்ம ஸ்கூலுக்குச் செய்யாம வேற ஆருக்குச் செய்யப் போறம்னாரு, செய்வாரு…கிளார்க் ஜாயின் பண்ணியாச்சா? போனவாரமே பில் அப் பண்ணிப்புடறம்னாரே டிஈஓ” என்கிறான் கருணாகரன்.
புதுசாஜாயின் பண்ண கிளார்க் சூளுரைத்த 12 வயதுச் சிறுவனும் பின்னர் வளர்ந்த இப்போதைய 42 வயது இளைஞனும்தான். கொல்லப்பட வேண்டியவன் எனக் கருதப்படும் கருணாகரன்தான். அதிகார மற்றும் செல்வாக்கின் பிரமுகர் ஆன தொனியில் கிளார்க் பற்றி விசாரிக்கிறான். ஆக, அந்த இரண்டு எதிரிகளும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இப்போது நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் வெளியேற ஒரு சரியான சூழல் ஏற்பட்டுவிட்டது.
பிரச்னைஎன்னவெனில்வன்முறைக்குள்ளானநபர் தன் எதிரியை இனம் கண்டுவிட்டான். ஆனால் வன்முறையாளனுக்கோ தான் ஒரு கத்தியின் முனைக்கு நேராக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல தன் வன்முறையையே மறந்துவிட்டிருந்தான். ஏற்கனவே வெடித்து எழுந்த எரிமலை இப்போதைக்கு அடங்கியது போல வன்முறைக்குள்ளான மனிதனோ ஸ்தம்பித்து, திகைத்து, என்ன செய்வது என்கிற பிரமையில் விதிர் விதிர்க்கிறான். இதுதான் சாத்தியம். அடுத்தபடியாக சிதைக்கப்பட்ட பெண்ணிடம் போதிய உஷ்ணத்தோடு தகவல் பரிமாறப்படுகிறது என்றாலும் என்ன?
உறையிலிருந்து நீக்கப்பட்டகத்தி பாயப்போகிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால் அது அப்படியாக நடப்பதில்லை. ‘நிழலின் தனிமை’ அப்படியானநாவல் இல்லை. அதாவது வெறும் கதை இல்லை. நாவல் என்று சொல்லத் தகும் முக்கியமான இலக்கணத்தோடு இயங்குவது இந்த நாவல். மனித முரண் உணர்ச்சி செயல்படும் விவரத்தில் நம் கவனத்தைக் குவிக்கிறார் தேவிபாரதி.
‘வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது’ என்று பலப்பல காலமாக அகிம்சாளர்கள், அருளாளர்கள், பண்பாட்டுக் காவலர்கள் பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன். எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. மறுகன்னத்திலும் அறையும் வன்களாளர்களுக்கு மன்னிப்பின் மொழி தெரியுமா? தெரியாது. அவர்களது மொழியில் பேசி அவர்களைப் புரியச் செய்வது எவ்வளவு தப்பாகும்?
நாவலில்அந்த வன்முறைக்கு இப்போதைய இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறதா என்றால் இல்லை. முடியவில்லை என்பதுதான் விஷயம். பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்தவும் பிரயோகிக்கவும் அசக்தர்களாகிறார்கள் என்பதுதான் நாவலின் முக்கியச் செய்தி.
முதலாளிகள், அரசியல்வாதிகள், காவல்துறையாளர்கள், நிழல் உலகப் பிரமுகர்களாகிய நாளைய ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம் என்கிற சகல அதிகாரங்களையும் தங்கள் ஜோபியில் வைத்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறு பகுதியினருக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் வார்த்தைகளைக்கொண்டு எதிர்க்குரல் எழுப்ப முடிவதில்லை. ஏனெனில் வார்த்தைகள் கொண்டு இயல்வதாகிய ஊடகங்களை மக்கள் எதிரிகளே வைத்திருக்கிறார்கள். அதாவது உரிமை பூண்டிருக்கிறார்கள். சட்டப் பாதுகாப்பு போன்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகிப்பீர்கள் என்றால் உலகம் உங்களை தமாஷ்காரராகவே மதிக்கும்.
நாவலில்இதுதான், இந்த எதார்த்தம்தான் நிகழ்கிறது. 12 வயதில் ‘உன்னை வெட்டுவன்டா’ என்று வன்முறையாளனிடம் அறைகூவல் விடுத்தவன் அவன் கீழே முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஒரு குமாஸ்தாகவும் உதவியாளனாகவுமே வாழ நிர்பந்திக்கப்படுகிறான் என்பதே காலத்தின் குரூரம்.
பழிவாங்கப்படவேண்டிய அந்தக் கருணாகரனைக் காலம் வேறுவகையில் பழிவாங்குகிறது. பாவத்தின் சம்பளம் என்ற பெயரில், என்ன வகையில் தரப்படுகிறது என்பதைப் பாவிகள்கூட அறியமுடிவதில்லை என்பது கசப்பான உண்மை. பாவம் எல்லாக் காலத்திலும் கூலிதரும் என்று உத்திரவாதமாகச் சொல்ல முடியுமா என்றால் முடியாதுதான். கூலியைச் சம்மந்தப்பட்ட நபர்கள் பெறுகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கருணாகரன்கூலி பெற்றதை ஒரு மூன்றாம் நபர் மூலம் தேவிபாரதி மூன்றாம் மனிதரின் பார்வையின் மூலம் சொல்கிறார். தான் காரணமில்லாமல் ஏதோ ஒரு சூழலின் விகாரமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வை, இருக்க வேண்டிய ரௌத்திரமும் இன்றி பட்டுக்கொள்ளாமல் தூர நின்று இப்படிச் சொல்வது நாவலைக் காவியத் தளத்துக்கு இட்டுச் செல்கிறது. அந்தப் பகுதியைத் தருகிறேன். ஈரோடு மாவட்டத்துக் கிராமம் ஒன்றின் பேச்சு மொழியில் தேவிபாரதியின் வசனத்தைத் தந்திருக்கிறேன். நாவலில் சில இடங்களில் மட்டுமே பேச்சு மொழி பரவி வருகிறது. பெரும்பாலும் ஆசிரியரே அவரது எழுத்து மொழியில் பேசி இருக்கிறார். மிகவும் செறிவான உரைநடையில் தேவையற்ற சொற்கள் காணக்கிடைக்காத செட்டான மிகச் சில அண்மை நாவல்களில் இது ஒன்று.
….இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் கருணாகரனின் நாவிதனைச் சந்தித்தேன். என்னைக் கண்டவுடன் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டான்.
திடீரெனமனதை நிரப்பத் தொடங்கியிருந்த பழைய நினைவுகளின் சுமை தாளாமல் அவனை அழைத்துக்கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றேன். நடந்துகொண்டிருந்தபோதே கருணாகரனைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தான்.
“சொல்லாமக்கொள்ளாமப் போயிட்டீங்களே, கவண்டருகோட எதாவது மனஸ்தாபமுங்களா? …ஒண்ணுமில்லாமப் போயிட்டாங்க சார், மனசுட்டுட்டாங்கொ, சின்னக்கவண்டருக்குவேற ஆயுள் (தண்டனை) உறுதியாயிருச்சுங்களா, அந்தக் கவலையே அவுங்களக் கெடைல தள்ளிப்புடுச்சு. சொத்துப்பத்தெல்லா மாயமாப் போச்சு. வக்கீலுக்குக் குடுத்தாங்களா, டாக்டருக்குக் குடுத்தாங்களான்னு தெரீலீங்க சார்.
நெறையாக்கடனிருக்குமாட்டஇருக்குது, காரு, கீரு, வண்டி, கிண்டி அல்லாத்தையும் குடுத்துட்டாங்கொ, இப்ப ஒண்ணுமே இல்லீங்க சார், ஒரு டீவியெஸ் பிப்டி நிக்குது, பாவம்ங்க சார் நாள எண்ணிக்கிட்டிருக்கறாங்கொ. ..
இந்தப்பதிவின் மூலம் தேவிபாரதி ஒரு முக்கியத் தத்துவ விசாரத்தைக் கடந்து செல்கிறார். பாவம், அதைச் செய்தவனை ஏதோ ஒரு வகையில் இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ பயனை ஈனும் என்கிற சித்தாந்தத்தில் அநேகமான (கடவுளை மறுத்தனை, வினைப் பயன் கொள்கிற) இந்தியச் சமய மரவுகளும் சிந்தனை மரபுகளும் ஒன்றியே நிற்கின்றன. கோவலன் வெட்டுண்டு செத்ததற்கும் முன் ஜென்மப் பயன் என்று கூடச் சொல்லிவிட முடிகிறது. பாவம் புண்ணியம் தொடர்பான விஷயங்களில் தல்ஸ்தோய்க்கும் தஸ்த்தயேவ்ஸ்கிக்கும் பெரும் விசாரங்கள் இருந்தன என்பதை அவர்களது படைப்புப் பேசிகொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ சபதம் செய்த அந்த இளைஞனோ ஆற்ற வேண்டிய பழியைக் காலம் அவர்கள் சார்பாக ஆற்றிவிடுகிறது. அந்தப் பெண்ணுடனும் அந்த இளைஞனுடனும் பயணம் செய்த வாசகர்களுக்கும் எனக்கும் ஆசுவாசம் தருகிறது. காலம் எல்லோர்க்கும் பழி தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை. சிலருக்குக் காலம் தன் கடமையை நிறைவேற்றுகிறது.
அகங்காரம், அதிகாரம், ஆணவம் என்பவற்றின் முன் நிறுத்தி வைக்கப்படுகிறது. துர்பலமான மனிதம். அந்த அகண்டாகாரம், எதையும் சீரழிக்கத் துடிக்கிறது. செய்தும் முடிக்கிறது. ஆயுதங்களுக்குள் சிக்கிக்கொண்ட நிராயுதபாணியம் பகையை, பகை முடிப்பை நெஞ்சுக்குள் வைத்து மூடி மறைத்துக்கொள்கிறது. பகை, பழி, அனைத்தையும் மீறி மனிதக் கருணை ஒன்றே மேலெழுகிறது. இதுதான்முக்கியம். இதுவே இந்த நாவல் நமக்குத் தரும் அனுபவம்.
சாதாரணமாகச்சொற்களுக்குள்அடங்காத தாபங்கள், ரௌத்திர விகாசங்கள், உள்ளுக்குள்ளே சுருண்டு சுருண்டு புதையும் கானல் வெறிகள் என்று இருளின் திசைகள் எங்கும் சுழன்று சுற்றித் திரிந்து, அவ்வுணர்ச்சிகளை வார்த்தைகளில் கொண்டுவந்தது தேவிபாரதியின் கலை வெற்றி. இது அசாதரணமானது. தமிழ் நாவல் பரப்பில் இது முக்கியமான படைப்பு.
உலகம்ஒன்றல்ல, இரண்டு. , இரண்டும் வேறுவேறு உலகங்கள். இரண்டு உலகங்களுக்கும் வேறு வேறு இயற்கையும் இயல்புகளும் ஸ்பாவங்களும் இருக்கின்றன. பகல்உலகம் என்றும் இரவுலகம் என்றும் சௌகர்யத்துக்காகப் பிரிக்கலாம். பகலைஞானலோகம்இரவை அஞ்ஞான லோகம் என்றோ கூறிவருவது சரி இல்லை. இரண்டிலும் இரண்டும் உண்டு. நாமும் நம்மில் பலரும் இருள் உலகவாசிகளேயாவோம். நமக்கு இந்த உலகுக்கான வார்த்தைகள், எண்ணங்கள், செயல்கள் எல்லாமும் பிரிதொரு உலகத்தில் உருவாகி வழங்கப்படுகிறது. இதுவே இருள் உலகின் துரதிருஷ்டம். உண்மையில் இருள் உலகவாசிகளின் வார்த்தைகள் பறித்துச் செல்லப்பட்டவை. களவாடிகொண்டு சென்றவர்களே களவுகொடுத்தவர்க்கும் வார்த்தை தானம் செய்கிற நிலையே எல்லாத் துறைகளிலும்.
எழுதுபவர்க்கு இதுபெரிய சவால். இருள் உலகவாசிகளின், நிழல் உலகின் வார்த்தைகள் கண்டுபிடித்தே எழுதப்பட வேண்டும். எந்த அகர முதலியும் இந்த வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை. தேவிபாரதிஅந்த வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுத வேண்டியிருக்கிறது. அவர் அதைத் திறம்படச் செய்திருக்கிறார். அதற்கு இந்த நாவல் சாட்சி.
நன்றி பிரபஞ்சன்
Devibharathi's Blog
- Devibharathi's profile
- 18 followers
