அகவன்மங்களின் வார்த்தை உருவம் - சிறுகதைகள்

 

அகவன்மங்களின் வார்த்தை உருவம்

கிருஷ்ண மூர்த்தி 

தேவிபாரதியை நாவல் வெளியீட்டிற்கு அழைக்க வேண்டும் என்னும்முடிவினை எடுத்திருந்த நேரம். கோவைக்கு அருகில் தான் அவரும்இருக்கிறார் என்பதை அறிந்ததால் நேரிலேயே சந்திக்க முடிவும்செய்திருந்தேன். வெள்ளக்கோயில் ஊருக்குள்ளே சின்னதான குறைந்தவீடுகள் கொண்ட கருவேல மரங்கள் சூழ்ந்திருக்க அழகான தனிமை நிறைந்தஇல்லம். அவர் மட்டுமே நூல்களுடன் தாமசிக்கிறார். எங்கும் காகிதங்களின்மணம். இடையே அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.என்னைப் பற்றியும் அவரைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் பின்எழுத்துகளின் பின்னே இருக்கக்கூடிய வாழ்க்கைப் பற்றியும் சென்றதுபேச்சுகள். இதையெல்லாவற்றையும் அவரின் எழுத்துகளில்அத்தருணத்திலேயே எதிர்நோக்கினேன்.



முதலாய் வாசித்த நூல் பிறகொரு இரவு. இக்கதைகளை வாசிக்கஆரம்பிக்கும் போதே அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது கூறியவிஷயங்கள் நினைவோடையாய் வந்து சென்றது. அவருக்கு குறுநாவல்கள்அல்லது நெடுங்கதைகள் என்னும் வடிவமே அதிகமாக பிடித்திருக்கிறதுஎன்றார். அதற்கான காரணம் எழுத்தாளன் எல்லாவித சோதனைமுயற்சிகளையும் அதில் செய்யலாம். நீண்டு போயின் நாவலாகும்குறைந்தால் சிறுகதையாகும். குறுநாவல் எழுத்தாளனுக்கான comfort zoneஎன்பதாக கூறினார். இந்த கூற்றுடன் அதிகம் ஒத்துப் போவேன். க.நா.சுவும்தன் அசுரகணம் நாவலில் குறுநாவல்களுக்கான விஷயமொன்றைஎழுதியிருப்பார். நூறுபக்கங்களில் சொல்ல முடியாத யாதொருவிஷயத்தையும் பெரிய நாவல்கள் சொல்லிவிடப்போவதில்லை என.தேவிபாரதி கூறியதைப் போலவே சோதனை முயற்சிகளை தன்குறுநாவல்களில் நிகழ்த்தியே இருக்கிறார்.

 

பிறகொரு இரவு தொகுப்பில் நான்கு நெடுங்கதைகள் இருக்கின்றன – ஊழி,சிகரெட்டுகளும் உள்ளாடைகளும், பிறகொரு இரவு, ஒளிக்கு பிறகுஇருளுக்கு அப்பால். இந்நான்கில் முதல் கதை மட்டும் எனக்குபிடிக்கவில்லை. ஊழியில் அவர் கையாண்டிருக்கும் மொழி நடை அதன் கருஅளவில் என்னை சுத்தமாக ஈர்க்கவில்லை. சிறுகதைக்கே உண்டானகருவை வைத்து இவ்வளவு நீளத்தில் ஒரு கதை தேவையா என்னும்அடிப்படை கேள்வியே எனக்குள் தோன்றியது. முழுதும் படிக்க வைக்கஉதவியது அதன் மொழி தான். மணிமேகலையின் கதைநீட்சியாக அல்லதுஅங்கமாக இந்நெடுங்கதை நீள்கிறது. துறவறத்தையே மேற்கொள்ளும்ஒருத்தியினுள் உருவாகும் மெல்லிய கோடான காதல் வயப்படுதல் எப்படிவெளிப்படும் ? பரத்தைக்கு பிறந்த மகளை துறவு பூண்டாலெனினும்ராஜவம்சத்தினர் அதை எப்படி ஏற்றுக் கொள்வர் என்பதைகதையாக்கியிருக்கிறார்.

 

இத்தொகுப்பில் இதைத் தவிர எல்லா கதைகளும் பிடித்திருந்தன. பிறகொருஇரவை கடைசியாக கூற நினைக்கிறேன். சிகரெட்டுகளும் உள்ளாடைகளும்என்னும் கதையில் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் முறையைகையாண்டிருக்கிறார். கதையில் மூன்றே கதாபாத்திரங்கள் தான். மூவரும்ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். எல்லாமே நாயகனின்சந்தேகத்தில் வந்து முடிவடைகிறது. சந்தேகம் ஆணின் இயல்பு.சந்தேகங்கள் எதனால் முளைக்கின்றன ? காதலும் பொஸெஸிவ்னெஸும்எப்படி பிணைந்திருக்கின்றன ? காமம் அதனுள் சென்று சேருமா என்பதைமிக அழகான தர்க்கங்களால் நிறைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல மனிதமனிம் எண்ணற்ற பழிவாங்குதலை அனுதினமும் எதிர்பார்த்துகாத்திருக்கிறது. சுற்றத்தை சொந்தத்தை கூடவே இருக்கும் மனிதர்களைபழிவாங்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். பழிவாங்குதல்கள் தன்னையேஅழிப்பதாகத்தான் பெரும்பாலும் அமைகிறது. இருந்தாலும் கிடைக்கும்ஆசுவாசத்தை மாற்றவியலாது தான். இந்த இன்பத்தை நோக்கி தான்மனிதன் நகர்ந்து கொண்டிருக்கிறான். அதற்காக கதையில் சிகரெட்டையும்புணர்தலையும் தேவிபாரதி பின்வருமாறு துவந்துவம் ஆக்கியிருக்கிறார்.

 

பேரின்பத்திற்கு பெண்சிற்றின்பத்திற்கு சிகரெட்

 

ஒளிக்கும் பிறகும் இருளுக்கு அப்பால் நெடுங்கதை பல கதைசொல்லல்நுட்பங்களை கைகொண்டிருக்கின்றன. கொலையொன்று நிகழ்கிறது.கள்ளக்காதலனின் துணை கொண்டு கணவனை கொலை செய்கிறாள்.ஆட்களைக் கூட்டிக் கொண்டு உடனே வருகிறேன் என்று முத்தமிட்டுகிளம்புகிறான் கள்ளக்காதலன். அவன் வரும் வரை என்ன என்ன நிகழ்கிறதுஎன்பதாக கதை நகர்கிறது. இதில் அவரது நுட்பம் எப்படியெல்லாம்இருக்கிறது எனில் கதை நிகழும் இடங்களில் காலம் பின்னோக்கி நகர்கிறது.பின்னோக்கி நகரும் போது நாம் கடந்த காலத்திற்கு செல்கிறோம். இந்தசின்னதான அம்சத்தின் மூலம் எதிர்காலம் என்னும் பதம் எப்படிஇல்லாமலாகிறது எனபதை மிக அழகாக விவரிக்கிறார். ஆனால் இந்தஅம்சம் கதையில் முதன்மையாக இருப்பதில்லை. காலத்தில் அவர்எண்ணற்ற சாத்தியப்பாடுகளுடன் இயங்கினாலும் கதை நிகழும் இடமேமுதன்மையாக படுகிறது. இது தான் எழுத்தாளனின் touch. முழுக்க கற்பனைசக்தியை முன்வைத்து உழைத்து அதை முதன்மைப் பொருளாக வைக்காமல்இருப்பது. காமம் கட்டற்ற பிரவாகமாக இக்கதையில் செல்கிறது.

 

பிறகொரு இரவு. காந்தியின் சுயசரிதையை நான் வாசித்ததில்லை.வைத்திருக்கிறேன். ஆனால் காந்தி பற்றி அவ்வப்போது வாசிக்கும் சிலகதைகளை கடந்து வந்திருக்கிறேன். அதில் பிடித்தது எஸ்.ரா எழுதியகாந்தியோடு பேசுவேன் என்னும் சிறுகதை. அசோகமித்திரனுடன் சமீபமாகபேசிக் கொண்டிருக்கும் போது கூட தேவிபாரதி என்றவுடன் இக்கதையையேமுன்னெடுப்பாக கூறினார். என் இலக்கிய நண்பர்கள் எல்லோருமேஇக்கதையை பிரதானப்படுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் சொன்னவிஷயம் அவர் காந்திய வச்சி ஒரு கத எழுதியிருப்பார் என்று. எனக்கு அப்படிதோன்றவில்லை.

 

காந்தி கதையின் பாத்திரம். அதன் மூலம் அவர் கணக்கிலடங்கா பேர்களின்கதைகளை கூறியிருக்கிறார். இக்கதை எல்லா நாடுகளிலும் நிகழ்ந்திருக்கவாய்ப்பிருக்கிறது. எல்லா பெருந்தலைவர்களின் வாழ்விலும்வாழ்வினாலும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் சமூகத்திற்காகநல்லதான கோட்பாட்டை வழங்குகிறார்கள். நயவஞ்சகர்களின்பேராசையாலும் புகழாலும் அவர்களைப் போல எண்ணற்ற போலிகள்உருவாகிறார்கள். போலிகள் நிறைய உருவாகும் போது நிஜத்தைகண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. உண்மையான மனிதனேதன்னை போலிகளுக்கிடையில் சுயதர்க்கம் செய்ய நேர்ந்தால் அது எதுசார்ந்ததாக இருக்கக்கூடும் ? எப்படி நிஜத்தை நிஜமென்றுபோலிகளுக்கிடையில் நிரூபிப்பது ? நிரூபனம் தேவையா ? தேவையெனில்யாருக்கு ? என்பதை தான் இக்கதை காந்தியின் உருவத்தில் பேசுகிறது.

 

இக்கதையை கடைசியாக சொல்ல முனைந்ததன் காரணம் சமீபத்தில்வெளிவந்த அடவி இதழை வாசிக்க நேர்ந்தது. அதில் தேவிபாரதி கறுப்புவெள்ளைக் கடவுள் என்னும் நெடுங்கதையை எழுதியிருக்கிறார்.மண்டபத்தின் வாயிலில் ஒரு சடலம் கிடக்கிறது. அதை ஒரு பரதேசிபார்க்கிறான். அது காமராஜர். இந்த சடலத்தை சுற்றி காமராஜரின்வாழ்க்கையை லேசாக அங்கங்கு சொல்லி, இந்த சொற்பதமே தவறு.வாழ்க்கையை அவர் சொல்லவில்லை. மாறாக மனிதர்களின் மனதில் காமராஜர் ஏற்படுத்திய உணர்ச்சி பிரவாகங்களை சொல்லி கதையைநகர்த்துகிறார். நிறைய பேர் கதையில் இடம்பெறுகிறார்கள். வன்முறைகள்,மனதினுள்ளே குடி கொண்டே இருக்கும் வன்மங்கள் என எல்லாமும்கதையினூடாக அரங்கேறுகிறது. அத்தியாயங்களாக கதை குரூரமானத்வனியுடன் சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு அத்தியாயம்இவர்களெல்லாம் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்னும் பதத்தைவைத்து அதுவரை சென்ற கதையின் போக்கை மிக லாவகமாக வாசகனின்புரிதலுக்கு சவால் விடக்கூடியதும் அல்லாத வகையில் மாற்றுகிறார்.

 

இந்தக் குறிப்பிட்ட கதையை மெடா ஃபிக்‌ஷன் என்று மட்டும் சொல்லாமல்பின்நவீனத்துவம் என்றும் வகைப்படுத்த விரும்புகிறேன். காரணம்யதார்த்தமாக நிகழ்கிறது என்னும் தொனியில் சொல்லப்பட்ட கதை சிலஉண்மைகளை கதையின் கருவாக நிருவ முயல்கிறது. அதே நாடகம் எனவரும் போது அங்கே அவ்வளவு நம்பகத்தன்மை தேவையற்றதாகமாறுகிறது. கதையின் வீரியம் மெலிதாகிறது. ஆனாலும் மொழியின் மூலம்கதையை மிக அழகாக நகர்த்தியிருக்கிறார். உண்மை எப்போதும்உபதேசத்தின் வழியே அடையப்பெறுவது அல்ல. மாறாக தேடியேஅடைவது. அனுபவம் சார்ந்தது. இக்கதையின் போக்கும் அப்படியானதொன்றே.

 

எல்லா மனிதர்களினுள்ளும் ஆழமாக புதையுண்டிருக்கும் வன்மங்களை,உறவு சார் எதிர்வினைகளை எப்படியேனும் இவரது பாத்திரங்கள் ஆற்றிக்கொள்கின்றன. அதற்கான சிறந்த சான்றாக இந்த நூல் உதவுகிறது.

•••

நன்றி 

    

கிருஷ்ண மூர்த்தி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2022 00:43
No comments have been added yet.


Devibharathi's Blog

Devibharathi
Devibharathi isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Devibharathi's blog with rss.