கோழிக்கோடு-வெளியீட்டு விழா உரை
கோழிக்கோடு-வெளியீட்டு விழா உரை
கோழிக்கோடுக்கு அழைத்து வந்த ரயில்
- தேவிபாரதி
இதுஒரு ஆச்சரியமான நாள். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் மிகுந்த நாள்.
ஆச்சரியத்திற்கான முதன்மையானகாரணம், எனது புத்தகம் ஒன்றை நானே வெளியிடுவது. இதற்கு முன் இது போல் எங்கும் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. வேறு எங்காவது எப்போதாவது நடந்திருக்கலாம். எங்கள் மொழியில், எங்கள் ஊரில் இப்படி நடந்ததாக நினைவில்லை. ஒருவிதத்தில் இது என் புத்தகமும் இல்லை அல்லவா? மொழி பெயர்ப்பாளர் ஏ.பி,குஞ்ஞாம்புவின் புத்தகம். அவரை இன்றுதான் முதன் முதலில் சந்திக்கிறேன். இங்கே, இந்தக் கூட்டத்தில். அவருடைய மூன்று வருடங்களுக்கு மேலான உழைப்பில் உருவான புத்தகம் இது.
ஏறத்தாழஇரண்டாண்டுகளுக்குமுன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. அம்ரித் லால் காந்தியின் இறுதிநாள்கள் பற்றிய என் கதையான பிறகொரு இரவை மலையாளத்தில் வாசித்திருப்பதாகச் சொன்னபோதும் இதே போன்ற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது. அவர்தான் எனக்கு பாடபேதம் பற்றியும் சிவிக் சந்திரன் பற்றியும் சொன்னார், அவர் மூலமாக முதலில் சிவிக் சந்திரனிடமும் பிறகு மொழி பெயர்ப்பாளர் ஏ.பி..குஞ்ஞாம்புவிடமும் தொலைபேசியில் பேசினேன். அவர் வழியாகவே பாடபேதம் இதழில் எனது சில சிறுகதைகளின் மொழியெர்ப்பு வந்திருப்பதை அறிந்தேன். அவர் அனுப்பிக் கொடுத்த எனது சிறுகதைகள் இடம்பெற்றிருந்த பாடபேதம் இதழ்களைப் பல நாட்கள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது உடைந்த, ஒழுங்கற்ற தப்பும் தவறுமான ஆங்கிலத்தின் வழியே அவரிடம் நடத்திய உரையாடல்களின் போது எனது கதைகளின் தொகுப்பு ஒன்றை வெளிக்கொண்டு வரும் தனது விருப்பத்தைச் சொன்னார் குஞ்ஞாம்பு.
இப்போதுஅது வந்திருக்கிறது.
இந்தப்புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் காணப்படுவது போல் ஏறத்தாழ எட்டாண்டுகளுக்கு முன் 2011இல் திரு.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் காரவனில் வந்த பிறகொரு இரவு கதை மூலம் அவர்தான் என்னைக் கண்டு பிடித்தார். பிறகு கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Harper Collins வெளியீடாக ஆங்கிலத்தில் வந்த எனது சிறுகதைகளின் தொகுப்பான Farewell Mahatma வழியாக மற்ற சிறுகதைகளைத் தன் மொழிக்குக் கொண்டு வந்திருக்கிறார் குஞ்ஞாம்பு. இதில் என்னுடைய முயற்சி எதுவுமே இல்லை. நான் அரைகுறையாக தெரிந்துகொண்ட ஆங்கிலம் அளவுக்குக்கூட மலையாளம் தெரியாது. இந்த மொழியின் ஒரு எழுத்தைக்கூட எனக்கு அடையாளம் காணமுடியாது. இந்தப் புத்தகத்தின் முன் அட்டையில் இடம்பெற்றிருக்கும் காந்தியின் ஓவியத்தையும் பின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் எனது சமீபத்திய புகைப்படத்தையும் கொண்டே இது என்னுடைய புத்தகம் என்பதை நான் அறிந்துகொள்கிறேன்.
இதைநான் ஏ.பி.குஞ்ஞாம்புவின் புத்தகம் என்றே அழைக்க விரும்புகிறேன். அதை வெளியிடுவதற்கான அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. என் மகிழ்ச்சிக்குக் காரணம் இது.
மலையாளஇலக்கியத்தோடுஎனக்குள்ள தொடர்பு ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலானது.
வாசிப்பின்மீது எனக்கு இருந்த அக்கறையை இனம்கண்டுகொண்ட, எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான திரு.சுரேந்திரன் ஏதோ ஒரு நம்பிக்கையில் எனது பதனான்காவது வயதிலேயே தகழி சிவசங்கரம்பிள்ளையையும் கேசவதேவையும் எஸ்.கே.பொற்றேகாட்டைப் பற்றியும் சொன்னார். எம்.டி.வாசுதேவன் நாயரைப் பற்றிச் சொன்னார். பின்னாட்களில் அவர்களது படைப்புகளை எங்கள் மொழியில் வாசிக்கத் தொடங்கியபோது நான் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய எனது ஆசிரியரை நினைத்துக்கொண்டேன்.
எங்கள்மொழியின் இலக்கிய வாசகனுக்கு உங்களுடைய இந்த மொழியின் இலக்கியங்கள் நன்கு அறிமுகமானவை. ஒரு நவீனத் தமிழ் வாசகன் புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனை, மௌனியை, தி.ஜானகிராமனை, அசாகமித்திரனை, சுந்தரராமசாமியை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறானோ, எந்த அளவுக்கு நேசிக்கிறானோ அதே அளவுக்கு ஒருவேளை அதைவிட அதிகமாக தகழியையும் பஷீரையும் மலையாற்றூர் ராமகிருஷ்ணனையும் எம்.டி.வாசுதேவன் நாயரையும் ஓ.வி.விஜயனையும், பூனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் காக்கநாடனையும், சேதுவையும், எம்.கோவிந்தனையும், சக்கரியாவையும் வாசித்திருப்பான் என்பதில் அவர்களை நேசித்திருப்பான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
இப்படிமலையாள இலக்கியத்தின் போற்றுதலுக்குரிய இலக்கிய ஆளுமைகளில் பலர் எங்கள் மொழிக்கு வந்திருக்கிறார்கள், அவர்களது முக்கியமான படைப்புகள் எங்களுடைய மொழியின் முக்கியமான படைப்புகளாகியிருக்கின்றன. இன்றைய இளம் மலையாளச் சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள் வரை நாங்கள் அவர்களை இடையறாது கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர்களால் தாக்கம் பெற்றிருக்கிறோம்.
நான்பஷீரின் தாக்கம் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவன் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்பவன். எங்கள் மொழியின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான வண்ணநிலவன், என்றாவது ஒருநாள் தன்னால் கேசதேவின் அண்டை வீட்டார் போன்ற நாவலொன்றை எழுதிவிட முடியும் என்னும் நம்பிக்கையிலேயே தொடர்ந்து எழுதிவருவதாக ஒருமுறை சொல்லியிருந்தார்.
எனக்கும்அதுபோன்ற ஆசை ஒன்று இருந்தது.
பலவருடங்களுக்குமுன் நேஷணல்புக் ட்ரஸ்ட் வெளியீடாக தமிழில் வந்த சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றிருந்த எம்.கோவிந்தனின் பாம்பு போன்ற சிறுகதையொன்றை எழுதிவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. எனது இந்தத் தொகுப்பில் இடம்பெறாத சிகரெட்துண்டுகளும் உள்ளாடைகளும் என்னும் நெடுங்கதையின் வழியாக அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டுவிட்டதாக எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த ஆசையின் தொடர்ச்சியாக நான் எழுதிய வேறு இரண்டு கதைகள் தாஸ்என்பவனும் தாஸ்என்பவனும், ஒளிக்கும்பிறகு இருளுக்கும்அப்பால் ஆகிய கதைகளைச் சொல்வேன்.
ஒளிக்கும் பிறகுஇருளுக்கும் அப்பால் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. அதன் வழியாகவும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள புகழ் பெற்ற காந்தியின் இறுதிநாள்கள் பற்றிய கதையான பிறகொருஇரவு வழியாகவும் நான் உங்கள் மொழிக்கு வந்திருக்கிறேன். உங்கள் மொழியின் ஒரு பகுதியாக எனது சிறுகதைகள் மாறியிருக்கின்றன. அதைச் சாதித்த எனதன்புக்குரிய ஏ.பி.குஞ்ஞாம்பு உங்களுக்கு நன்றி, பாடபேதம் ஆசிரியர் தோழர் சிவிக் சந்திரன் உங்களுக்கு நன்றி. புத்தகத்தை அழகாக வடிவமைத்தவர்களுக்கும் பாடபேதம் குழுவினருக்கும் மகத்தானதாக எனக்கு மாறியிருக்கும் இந்த நாளில் இப்போது என்னோடு இருந்துகொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி.
•••
தேவிபாரதி, 02, ஜூலை 2019
கோழிக்கோடு
Devibharathi's Blog
- Devibharathi's profile
- 18 followers
