அறுக்கமாட்டாதவனின் ஆயிரத்தெட்டு அருவாக்கள்

Pa Raghavan

இன்று என் அலுவலகத்துக்கு வந்திருந்த என் மாணவரும் எழுத்தாளருமான ஜான்பால் ரொஸாரியோ, மேலே நீங்கள் காணும் Sheaffer பேனாவை அன்பளிப்பாகத் தந்து சென்றார். சென்ற மாதம் சலம் படித்துவிட்டு வரிவரியாகச் சிலாகித்துப் பாராட்டிய எழுத்தாளர் தேவேந்திர பூபதி, இதே போன்றதொரு Sheafferஐ அன்பளிப்பாகத் தந்திருந்தார். சென்ற வருடம், அதற்கு முந்தைய வருடத்திலும் தலா ஒரு Sheaffer அன்பளிப்பாக வந்தது. எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்த பிராண்டின் அருமை தெரியும். பெண்களுக்கு நகை எப்படியோ எழுத்தாளர்களுக்கு இந்தப் பேனா அப்படி.

என் பள்ளிக்கூட நாள்களில், சாண்டில்யன் Sheaffer இல்தான் எழுதுவார் என்று கேள்விப்பட்டேன். அந்தப் பெயர் அப்போது எனக்குப் புதிது. அன்று நான் அறிந்திருந்த ஒரே பணக்காரப் பேனா, ஹீரோ. யார் ஹீரோ பேனாவில் எழுதினாலும் காதலுடன் நெருங்கி நின்று அதையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதன் பளபளப்பும் வழுவழுப்பும் கூர் முனையும் என்னை என்னென்னவோ செய்யும். ஒரு ஹீரோ பேனா வாங்க முடிந்துவிட்டால் அடுத்த மாதம் நோபல் வாங்கிவிடலாம் என்று எண்ணிக்கொள்வேன். அதுவே முடியாதபோது சாண்டில்யனின் Sheaffer குறித்த தகவலும் சேர்ந்துகொள்ள, அது எங்கே கிடைக்கும், என்ன விலை, எப்படி இருக்கும் என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் யாருக்கும் பெரிதாக விவரம் தெரிந்திருக்கவில்லை.

பெயரைக் கேள்விப்பட்டதிலிருந்து குறைந்தது ஓராண்டுக்குப் பிறகே அது ஓர் அமெரிக்க பிராண்ட் என்பது தெரிந்தது. பிரபல அமெரிக்கக் கவி சில்வியா ப்ளாத்தும் பிரெஞ்சு எழுத்தாளர் சிமோன் த பொவாரும் Sheaffer பேனாவில் மட்டுமே எழுதுவார்கள் என்று அறிந்தபோது எப்படியாவது அந்தப் பேனாவை வாங்கிவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். கூடவே எந்தெந்த எழுத்தாளர்கள் என்னென்ன பேனாவில் எழுதுவார்கள் என்று தெரிந்துகொள்ளும் பைத்தியமும் பிடித்துக்கொண்டது.

மார்க் ட்வைன் Conklin Crescent Filler என்ற பேனாவில்தான் கதை எழுதுவார். இந்தப் பேனாவுக்கு ஒரு சிறப்பு உண்டு. இதுதான் முதல் முதலில் தனது அந்தராத்மாவை வெளிப்படையாகக் காட்டிய பேனா. அதாவது, உள்ளே உள்ள மையின் அளவைப் பார்த்துக்கொண்டே எழுதும் வசதி கொண்ட கண்ணாடிப் பேனா. எண்பதுகளின் ஏதோ ஒரு வருடத்து, ஏதோ ஒரு குமுதம் இதழில் அந்தப் பேனாவின் படமும் மார்க் ட்வைன் படமும் போட்டு இதை ஒரு துணுக்குச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

Bond & Regent: ஜெயரூபலிங்கம் தந்தது

ஹெமிங்வே, Montegrappa என்ற பிராண்டைப் பயன்படுத்தினார். ஆர்தர் கோனான் டாயில், Parker Duofold இல் எழுதுவார். ஸ்டீபன் கிங் Waterman Hemisphere என்ற பேனாவில் மட்டும்தான் எழுதுவார். அது ரிப்பேர் ஆனாலோ, காணாமல் போனாலோ அவசரத்துக்குக் கூட இன்னொன்றைத் தொட்டதில்லை என்று அறிந்தபோது காரணமே தெரியாமல் பரவசப்பட்டுப் போனேன். எழுத்தாளனுக்கும் பேனாவுக்குமான உறவு அப்படி இருக்கவேண்டும் என்று ஒரு காலத்தில் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பேன்.

தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திய பேனாக்களைக் குறித்து அன்று எனக்குப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி Wality என்கிற பேனாவில்தான் எழுதுவார்; அதை பிராட்வேவில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஜெம் அண்ட் கோவில்தான் வாங்குவார் என்பதும் சாண்டில்யன் Sheaffer இல்தான் எழுதுவார் என்பதும் மட்டுமே தெரிய வந்த தகவல்களாக இருந்தன.

இந்தத் தகவல்களைத் தொகுத்துக்கொண்டு ஒரு நாள் அப்பா நல்ல மூடில் இருந்தபோது அவரிடம் ஆர்வத்துடன் எடுத்துச் சொன்னேன். பத்தாம் வகுப்பு விடுமுறைக் காலம். அப்போதுதான் தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘உனக்கு ஜான் ஸ்டெய்ன்பெக் எதுல எழுதுவார்னு தெரியாதா?’ என்று கேட்டார்.

எனக்கு அவர் யாரென்றே தெரியாது என்று சொன்னேன். மேலே குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்களைக் கூட அந்நாளில் பெயராக மட்டும்தான் தெரியுமே தவிர, யாருடைய எந்தப் புத்தகத்தையும் படித்திருக்கவில்லை. அப்பா எனக்கு ஸ்டெய்ன்பெக்கைக் குறித்துச் சில தகவல்களைச் சொன்னார். அவர் அந்த எழுத்தாளரின் இரண்டு புத்தகங்களைப் படித்திருந்தார். Travels with Charley, The Grapes of Wrath. அதைச் சொல்லிவிட்டு, அவர் நோபல் பரிசு வாங்கிய அமெரிக்க எழுத்தாளர் என்பதையும் வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கு பென்சில்களை மட்டுமே பயன்படுத்தினார் என்றும் சொன்னார். அதன் பிறகு அவரிடம் Sheaffer வேண்டும் என்று கேட்கத் தோன்றவில்லை.

கல்கியில் வேலைக்குச் சேர்ந்து கையில் சிறிது பணம் பார்க்க முடிந்தபோதுதான் என்னுடைய முதல் ஹீரோ பேனாவை வாங்கினேன். ஆனால் அப்போது என் ஆசை, பார்க்கருக்குத் தாவிவிட்டிருந்தது. 1997 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. என் மனைவிதான் முதல் முதலில் எனக்குப் பார்க்கர் பேனா ஒன்றை வாங்கித் தந்தாள். பிறகு குமுதத்துக்குச் சென்றதும் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு நிலத்தடி வெளிநாட்டுச் சரக்குக் கடைக்கு அழைத்துச் சென்று என் ஆசிரியர் இளங்கோவன் உயர்தர பைலட் பேனா ஒன்றை வாங்கித் தந்தார். பேனாவில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நான் பயன்படுத்திய அதிக விலைப் பேனா அதுதான் என்று நினைக்கிறேன். Sheaffer எல்லாம் கிடைக்கவேயில்லை.

தேவேந்திர பூபதியின் அன்பளிப்பு

2003 ஆம் ஆண்டு தொடங்கி, கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு பேனாக்களைக் குறித்துச் சிந்திப்பது படிப்படியாகக் குறைந்து, விரைவில் நின்றே போனது. கையில் கிடைக்கும் பேனாவில், தேவைப்பட்டபோது எதையாவது எழுதுவதுடன் சரி. இன்று என்னிடம் மூன்று Sheaffer பேனாக்கள் உள்ளன. Bond & Regent ஒன்று. இரண்டு பார்க்கர். எண்ணிலடங்காத Pentel EnerGel. பயன்படுத்தவே வழியில்லாமல் அவற்றை வைத்திருப்பதை நினைத்தால் துக்கமாக இருக்கும். இன்றும் கையால்தான் நோட்ஸ் எழுதுகிறேன். இந்தப் பேனாக்களில்தான் எழுதுகிறேன். ஆனால் அதெல்லாம் எழுதுவதில் சேராது.

நான் கையால் எழுதிய கடைசி நாவல் அலை உறங்கும் கடல். அதற்குத்தான் என் மனைவி பார்க்கர் வாங்கித் தந்தாள். அந்த நாவலை எழுதுவதற்காகவே பிரத்தியேகமாக ஒரு கணக்குப் பிள்ளை மேசையும் செய்துகொண்டேன். கையால் எழுதுவது நின்றுபோனதும் அந்தக் கணக்குப் பிள்ளை மேசைக்கும் வேலை போய்விட்டது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2025 07:54
No comments have been added yet.