பராமரிப்புக் கலை

Pa Raghavan

பராமரிப்புக் கலையில் முனைவர் பட்டத்துக்கும் மேம்பட்ட ஒன்று உண்டானால் நியாயமாக அதை எனக்குத்தான் தர வேண்டும். நட்போ, உறவுகளோ, கருவிகளோ, அட என்னை நானே பராமரித்துக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சல்லி பெற மாட்டேன். அப்பேர்க்கொத்த உத்தமோத்தமன்.

முன்னொரு காலத்தில் எல்லா இந்தியர்களையும் போல விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய அடாவடித்தனம் சகிக்காமல் ஒவ்வொரு டப்பாவும் சுருண்டு சுருண்டு செத்து விழுந்துகொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிதானமே கிடையாது. வேகம், வேகம், பேய் பிசாசுகளை விஞ்சும் வேகம். ஒரு அப்ளிகேஷனைத் தொட்டு, அது திறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நான்கைந்து வினாடிகளைக் கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. திறப்பதற்கு முன்பே க்ளோஸ் செய்துவிட்டு இன்னொன்றைத் திறப்பேன். அதுவும் வரவில்லையா? உடனே வேறொன்று. அரை நிமிட அவகாசத்தில் பத்திருபது அப்ளிகேஷன்களைத் திறக்கப் பார்த்தால் எல்லாம் சேர்ந்து கூழாகாமல் என்ன செய்யும்? உடனே ரீ ஸ்டார்ட். இது நாட் ரெஸ்பாண்டிங், அது நாட் ரெஸ்பாண்டிங் என்று செய்தி வந்துகொண்டே இருக்கும். உடனே ஓங்கி ஒரே குத்து. பவர் பட்டன் பஞ்சராகிவிடும்.

cache க்ளியர் செய்ய மாட்டேன். ரீ சைக்கிள் பின்னை காலி செய்ய மாட்டேன். பேட்டரியை கவனிக்கவே மாட்டேன். திறந்த அப்ளிகேஷன் எதையும் மூட மாட்டேன். டிஸ்க் டீஃப்ராக்மெண்ட் செய்ய மாட்டேன். வைரஸ் ஸ்கேனர் ஓட்ட மாட்டேன். கோப்புகள் எதையும் ஒழுங்காகப் பராமரிக்க மாட்டேன். ஒரு பிரதிக்கு நூறு வர்ஷன் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஃபோல்டரில் இருக்கும். ரகசிய கசமுசா ஃபைல் என்னவாவது இருக்குமானால் அதை சி டிரைவில் விண்டோஸ் பேட்டைக்குள் இருக்கும் ப்ரோக்ராம் ஃபைல்ஸ் என்னும் போல்டருக்குள் போட்டு வைப்பேன். செய்யாத அக்கிரமம் இல்லை. இதனால் எப்பேர்ப்பட்ட கம்ப்யூட்டர் வாங்கினாலும் மிக விரைவில் அது என்னிடம் வீர மரணம் அடைந்தே தீரும்.

எவ்வளவுதான் புதிதாக வாங்குவது? எதில்தான் திருப்தி அடைவது? அல்லது எதுதான் இறுதி வரை எனக்குத் தோள் கொடுக்க முன்வரும்? என்ன அடித்தாலும் தாங்கும் காட்டெருமைத்தனம் மிக்க லெனோவோ திங்க் பேடால்கூட என் கோணங்கித்தனங்களை வெல்ல முடிந்ததில்லை. குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு டிசம்பரில் என்னுடைய முதல் கம்ப்யூட்டரை வாங்கினேன் (அசெம்பிள்டு செட். பெண்டியம் 3 ப்ராசசர். விண்டோஸ் 5 ஆப்பரேடிங் சிஸ்டம். பூரண கர்ப்ப ஸ்திரி மாதிரி முதுகு புடைத்துக்கொண்டிருக்கும்). பிறகு ஒரு ஹெச்பி, இரண்டு லெனோவோ திங்க் பேட், ஒரு லெனோவோ ஐடியா பேட், ஒரு சாம்சங் நெட் புக். இவை சொந்தமாக வாங்கி உபயோகித்தவை. போதாக் குறைக்கு அலுவலக லேப்டாப்கள்.

எதுவும் சரிப்பட்டு வராமல் வெறுத்துப் போய் 2012ம் ஆண்டு விண்டோஸைத் தலை முழுகிவிட்டு ஆப்பிளுக்கு முழுதாக மதம் மாறினேன். அதன் பிறகு முதல் ஆறு ஆண்டுகள் ஒரு மேக் புக் ஏருடன் சிக்கலின்றிக் குடும்பம் நடத்த முடிந்தது. அதற்கு மேல் அதனால் முடியவில்லை. எனவே, போட்டுவிட்டு தகதகவென மின்னும் ரோஸ் கோல்ட் நிறத்தில் கையடக்கமாக ஒரு மேக் புக் வாங்கினேன். ஆனால் ஆப்பிள் அப்போது அறிமுகப்படுத்தியிருந்த பட்டர் ஃப்ளை மெக்கானிசம் என்னும் தட்டச்சுத் தொழில்நுட்பம் எனக்கு ஒத்து வரவில்லை. சில மாதங்கள் அதனுடன் போராடிப் பார்த்து, வெறுத்துப் போய் அதைக் கொடுத்துவிட்டுப் பழைய மேக் புக் ஏர் மாடலையே மீண்டும் வாங்கினேன் (2017). ஒன்றிரண்டு மாத இடைவெளியில் இன்னொரு மேக் புக் ஏர். ஒன்று வீட்டுக்கு. இன்னொன்று அலுவலகத்துக்கு. மனைவிக்குப் பிறகு நான் மாற்றாமல் வைத்துக்கொண்டிருக்கும் இரண்டாவது ஆத்மா இதுதான்.

இதுவரை வாசித்ததில், இவன் பெரும் பணக்காரன் என்னும் எண்ணம் வந்திருக்குமானால் அதை முதலில் அழுத்தித் துடைக்கவும். எல்லா தமிழ் எழுத்தாளர்களின் பொருளாதார நிலைமை என்னவோ, அதுதான் என்னுடையதும். மற்றவர்கள் சாப்பிட ஆகும் செலவு போக மீதமுள்ளதை வங்கியில் வைப்பார்கள். சீட்டுப் போடுவார்கள். ஷேர் வாங்குவார்கள். நவீன எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் க்ரிப்டோ கரன்சியில் எல்லாம் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். எதற்கும் துப்பில்லாத நான் கம்ப்யூட்டர் வாங்கியே வீணாய்ப் போனவன்.

நிற்க. மேக்குக்கு மாறிய பின்பு கருவியுடனான என்னுடைய துவந்த யுத்தத்துக்கு மிக நிச்சயமாக ஒரு முடிவு கிடைத்தது. விண்டோஸில் அனுபவித்த எந்தச் சித்திரவதையும் இதில் நிச்சயமாக இல்லை. குறிப்பாகக் கருவி தூக்கில் தொங்குவது என்னும் நடைமுறை மேக்கில் கிடையாது. பேட்டரி போய்விடும் அவலம் கிடையாது. குறைந்தது எட்டு மணி நேரம் நின்று ஆடும் அல்லது ஓடும். எழுதுவதைச் சேமிக்காவிட்டால் இழக்க நேரும் அபாயம் இதில் இல்லை. தினசரி லாகின், லாக் அவுட் சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்தால் அதிகம்.) எந்தச் செயலியைத் தொட்டாலும் கணப் பொழுதில் திறக்கும். திறந்த கணத்தில் விட்ட வேகத்தைக் குறையாமல் தொடரலாம். அனைத்திலும் முக்கியம் – வாங்கிய நாள் முதல் சர்வீசுக்குக் கொடுப்பது அல்லது இஞ்சினியரை அழைத்து ரிப்பேர் பார்ப்பது என்ற ஒன்று அறவே இருந்ததில்லை. வாழும் வரை உழைக்கும். உயிரை விடும்போது தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்றை வாங்கிவிட வேண்டியதுதான்.

இதனை இவ்வளவு விலாவாரியாகச் சொல்ல ஒரு காரணம் உண்டு. என்னைப் போன்ற அராஜகவாதிக்கே இவ்வளவு விசுவாசமாக இது உழைக்கிறது என்றால், கம்ப்யூட்டரை ஒழுங்காகப் பராமரிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்படி உழைக்கும்!

ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு சௌகரியம் என்னவெனில், பராமரிப்பு என்பது இதில் ஓர் எளிய செயல். இரண்டு மூன்று டிரைவ்கள் அமைத்துக்கொண்டு ஆப்பரேடிங் சிஸ்டம் ஒரு டிரைவிலும் நமது இதர சேகரங்களை இன்னொரு டிரைவிலும் போட்டு வைக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே ஜனதா டிரைவ்தான். நாம் என்ன பெயர் கொடுத்து முதல் முதலில் யூசர் ஐடி உருவாக்குகிறோமோ, அந்தப் பெயரில் ஒரு ஃபோல்டர் உருவாகும். நமது சரக்குகள் அனைத்தும் அதில் சேகரமாகும். கூகுள் டிரைவ், ஒன் டிரைவ், டிராப் பாக்ஸ் என்று நமது மேகச் சேமிப்புக் கிடங்குக் கணக்கை அந்த ஃபோல்டருடன் இணைத்துவிட்டால், நாம் சேர்க்கச் சேர்க்க அது பாட்டுக்கு அங்கே ஸிங்க் ஆகிக்கொண்டிருக்கும். அதில் பராமரிப்புக்கு வேலையே இருக்காது.

எங்கே கவனிக்க வேண்டுமென்றால், டவுன்லோட் ஃபோல்டர். ஸ்கிரீன் ஷாட் ஃபோல்டர். ஸ்கிரீன் கேப்சர் ஃபோல்டர். இடத்தைப் பிடுங்கும் பிடாரிகள் இவைதாம். பிறகு cache ஃபோல்டர்.

விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் வள்ளலாக இப்போதெல்லாம் முந்நூறு ஜிபி, ஐந்நூறு ஜிபி, ஒரு டிபி ஹார்ட் டிரைவ் ஸ்பேஸ் தருகிறார்கள். மேக்கில் அந்தளவு இடம் வாங்குவதென்பது போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டுவதற்குச் சமம். நம் சொத்து மட்டுமின்றி அக்கம்பக்கம் நாலு வீட்டு சொத்தையும் கேட்டு வாங்கி அழித்துவிடுவது போன்றது. நான் இதுவரை 128 ஜிபி மேக்குக்கு மேல் சிந்தித்ததே இல்லை. அதில் மூன்றில் ஒரு பங்கை ஆப்பரேடிங் சிஸ்டம் எடுத்துக்கொள்ளும். வேறொரு பங்கை ஆப்புகள் எடுத்துக்கொள்ளும். எல்லாம் போக நமக்கு மீதமாகும் இடத்தில் முதல் ஆறு மாதங்கள் வேண்டுமானால் சிக்கலின்றி வாழலாம். அதன் பிறகு ஆரம்பித்துவிடுவான். யுவர் சிஸ்டம் இஸ் ரன்னிங் அவுட் ஆஃப் ஸ்பேஸ்.

இதனைத் தவிர்க்க இரண்டு காரியங்களை அவசியம் செய்ய வேண்டும். முதலாவது முன் சொன்ன டவுன்லோட், ஸ்கிரீன் ஷாட், ஸ்கிரீன் கேப்சர் ஃபோல்டர்களை வாரம் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு காலி செய்வது. இரண்டாவது, கம்ப்யூட்டரில் சொத்து சேகரிக்காமல் க்ளவுடில் சேகரித்துக்கொண்டு, அதை இழுத்து வேலை செய்கிற களமாக மட்டும் டப்பாவை வைத்துக்கொள்வது.

முன்னொரு காலத்தில் நான் விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்தபோது டி டிரைவில் நான் எழுதிச் சேர்ப்பவை, ரெஃபரன்ஸ் குறிப்புகள், பிடிஎஃப்கள், போட்டோக்கள் போன்றவற்றை வைத்திருப்பேன். ஈ என்று ஒரு டிரைவ் திறந்து அதில் உலக சினிமாக்கள், கவுண்டமணி செந்தில் காமெடி விடியோக்கள், இளையராஜா பாடல்கள் போன்றவற்றைப் போட்டு வைப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் எஃப் என்று இன்னொரு டிரைவைத் திறந்து அதை ஒரு ரீசைக்கிள் பின்னாகவே பயன்படுத்தி வந்தது நினைவுக்கு வருகிறது. மேக்குக்கு மாறிய பின்பு அதெல்லாம் அறவே இல்லை. சிக்கனமான ஒரு பெட்ரூம் வீட்டில் வசிக்கிற மனநிலை இருக்க வேண்டும். எதுவானாலும் கிளவுடில் மட்டும். கிளவுடில் சேர்த்து வைக்கும் அளவுக்கு முக்கியமில்லை என்றால் கையோடு அழித்துவிடுவது. முன்னைப் போல் இப்போது திரைப்படங்கள், பாடல்களைச் சேர்த்து வைக்கும் அவசியமின்றி அனைத்தும் இணையத்தில் எப்போதும் கிடைத்துவிடுவதால் இயல்பாகவே அது சார்ந்த இடப் பிரச்னை இல்லாமல் போய்விடுகிறது.

மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது. ஆப் ஸ்டோரில் இல்லாத பல ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களும் இருக்கின்றன. அவற்றை அந்தந்த மென்பொருள்களுக்கான தளத்தில் இருந்தோ, மொத்தமாக மென்பொருள் கிடைக்கும் மேக் மூர் மார்க்கெட்டுகளில் இருந்தோ பெறலாம். என்ன சிக்கல் என்றால், இவற்றால் நம் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்னை வருமானால் அதற்கு ஆப்பிள்காரன் பொறுப்பேற்க மாட்டான். அவன் கடைச் சரக்குகளை மட்டுமே பயன்படுத்தி, நம் கம்ப்யூட்டரை ஒரு கற்புக்கரசியாகப் பராமரித்து வந்தோமானால், தப்பித் தவறி ஏதாவது பிரச்னை வந்து சிகிச்சைக்குக் கொண்டு சென்றால் சர்வீஸ் செண்டரில் வேலை சுமூகமாக நடந்துவிடும்.

செலவு வைக்காத வரை ஆப்பிள் கம்ப்யூட்டர்களைப் போல சமத்து வேறில்லை. ஒரு ரிப்பேர் என்று கொண்டு போக நேர்ந்துவிட்டால் கூசாமல் சொத்தை எழுதி வாங்கிவிடுவான். இதனாலேயே நான் ஆப் ஸ்டோரில் இல்லாத மென்பொருள்களைப் பரீட்சைக்குக் கூட டவுன்லோட் செய்வதில்லை. க்ராக்டு வர்ஷன் என்று எதையும் என் பெட்டிக்குள் ஏற்றியதில்லை.

நீங்கள் புதிதாக ஒரு ஆப்பிள் மடிக்கணினி வாங்குகிறீர்கள் அல்லது இப்போதுதான் ஆப்பிளுக்கு மாறுகிறீர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு பின் வரும் விதிகளைப் பின்பற்றுங்கள். இவை உங்கள் கருவியின் ஆயுட்காலத்துக்குள் சுகக் கேடுகள் வராமல் காக்க உதவும்.

1. கம்ப்யூட்டரை எப்போதும் ப்ளக்கில் சொருகி சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும்படி வைக்காதீர்கள். ஒரு முழு சார்ஜ் ஏற்றினால் அடுத்தப் பத்து மணி நேரங்களுக்கு ஒயரைப் பிடுங்கிப் போட்டுவிட வேண்டும். இதுதான் நீடித்த பேட்டரி வாழ்வுக்கு உதவும். வேலை செய்யும் நேரம் முழுதும் சார்ஜ் ஆகிக்கொண்டே இருப்பது கருவிக்கு சுகக் கேடு தரும்.

2. டீஃபால்ட்டாக வருகிற Mail என்கிற மின்னஞ்சல் மென்பொருளை முதல் வேலையாக டெலீட் செய்யுங்கள். அவுட்லுக் போன்ற வெளியார் சரக்குகளையும் டவுன்லோட் செய்யாதீர்கள். அஞ்சல்கள் பெட்டிக்குள் ஆஃப்லைனில் இருந்தே தீரவேண்டும் என்கிற அவசியம் இப்போதோ, இனி வரும் காலத்திலோ இல்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு வருகிறவற்றை இன்னொரு ஐடிக்கு (உருவாக்கி) ஃபார்வர்ட் ஆகும்படி மட்டும் செய்து வைத்துக்கொண்டால் போதும். மேக்கில் அநியாயமாக இடம் அடைப்பதில் இதற்கு நிகரே கிடையாது.

3. ஆப்பிள் இலவசமாகத் தருகிற பேஜஸ், டெக்ஸ்ட் எடிட் என்கிற இரண்டு எழுது மென்பொருள்களும் திராபையர் குலத் திலகங்கள். மைக்ரோசாஃப்ட் வேர்ட் போலவே இடம் அடைக்கும் குண்டர்களும்கூட. எனவே டப்பா கைக்கு வந்ததும் அந்த இரண்டையும் கண்ணை மூடிக்கொண்டு டெலீட் செய்துவிடுங்கள். லிப்ரே ஆபீஸ் என்கிற பூஜா ஹெக்டேவை நிகர்த்த ஒல்லி தேக ஓப்பனாபீஸ் மென்பொருளை டவுன்லோட் செய்து, அதில் எழுதுங்கள். இலவசம் என்பது தவிர, எழுதும் அனுபவமும் பரம சுகமாக இருக்கும். எம்.எஸ். வேர்டைவிட வேகமாகத் திறக்கும். துரிதமாக இயங்கும். பவர் பாயிண்ட், எக்செல் உள்ளிட்ட ஆபீஸ் சமாசாரங்கள் அனைத்தும் இதில் உண்டு. பயன்பாடும் மிக எளிதாக இருக்கும். (நான் இதனினும் மெலிதான simple text என்னும் டெக்ஸ்ட் எடிட்டரை உபயோகிக்கிறேன். ப்ளைன் டெக்ஸ்டாக எழுதிக்கொண்டு விடுவது. பிறகு தேவைப்பட்டால் லிப்ரே ஆபீஸில் போட்டு .docx எக்ஸ்டென்ஷன் கொடுத்துக்கொண்டால் வேலை முடிந்தது.)

4. ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்குப் பொதுவாக வைரஸ் தாக்குதல் வராது என்பார்கள். ஆனால் மால்வேர்-ஸ்பைவேர் தாக்குதல்கள் இன்று அண்ட சராசரம் முழுதும் உண்டு. Cleanup my system என்றொரு இலவச மென்பொருள் ஆப் ஸ்டோரில் உள்ளது. இலவசம் என்கிற பெயரில் வேறு பல மென்பொருள்கள் உண்டென்றாலும் அவன் ஒரு ஸ்கேன் மட்டும் செய்துகொடுத்துவிட்டு, மொத்த க்ளீனிங்குக்குக் காசு கொடுத்து வாங்கு என்பான். வேண்டாம். மேற்படி cleanup my system முற்றிலும் இலவசமானது மற்றும் நம்பகமான வேலைக்காரனும்கூட. வாரம் ஒருமுறை இதனை ஓடவிட்டு சுத்தம் செய்வது சிறப்பு. தேவையற்ற குப்பைகள் அனைத்தையும் அடையாளம் காட்டிவிடும்.

5. ஆட்டமேடிக் அப்டேட் எப்போதும் ஆனில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும். அப்டேட்டுகளைத் தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ நல்லதல்ல. வருடம் ஒருமுறை கட்டாய திவசம் செய்வது போல ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் அப்டேட் வரும். அதை மட்டும் பத்திருபது நாள் தாமதித்துச் செய்வது உசிதம். எப்படியும் அப்டேட் வந்ததும் அதில் இது சரியில்லை; அது சரியில்லை என்று லட்சக் கணக்கில் புகார்கள் போகும். கம்பெனிக்காரனும் ஒரே மாதத்தில் 12.3.1, 12.3.2 என்று வாரம் ஒரு புள்ளி வைத்துக் கோலம் போடுவான். அப்போது டவுன்லோட் செய்து கொண்டால் போதும்.

6. ஆப்பிள்காரனிடம் உள்ள ஒரே பிரச்னை, அவன் தருகிற க்ளவுட் ஸ்டோரேஜ் இடம் மிகவும் குறைவு. ஐந்து ஜிபியை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. காசு கொடுத்து இடம் வாங்கு, வாங்கு என்று உயிரை எடுப்பான். ஆனால் வாங்காதீர்கள். க்ளவுட் ஸ்டோரேஜுக்கு இவனைவிட கூகுள் சிறந்தவன். நூறு ஐடி உருவாக்கிக்கொண்டு எல்லா இடங்களிலும் போட்டு வைக்கலாம். காசு கொடுக்கத் தயார் என்றால், கூகுளைவிட ஒன் டிரைவ் சிறந்தது. ஒரு டிபி இடத்தோடு, மொத்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களையும் லைசென்ஸுடன் தருவான். டிராப் பாக்ஸிலும் பேப்பர், டிஜிட்டல் சிக்னேச்சர் போன்ற சௌகரியங்கள் பெய்ட் வர்ஷனில் உண்டு. வசதிப்படித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

7. osxdaily.com என்றொரு பத்திரிகை இருக்கிறது. இந்தப் பத்திரிகையின் தனிச் சிறப்பு, எல்லா கட்டுரைகளின் தலைப்பும் How to என்றே ஆரம்பிக்கும். மேக் பயனர்களுக்கு வரக்கூடிய அனைத்து விதமான பிரச்னைகள், சந்தேகங்களுக்கும் மிக நிச்சயமாக இதில் பதில் இருக்கும். நிறைய டிப்ஸ் & டிரிக்ஸ் தருவான். ஆப்பிள் ஃபோரங்களில் கேள்வி கேட்டு பதில் வந்து சேர்வதற்குள் இங்கே ஒரு தட்டுத் தட்டித் தேடினால் சட்டென்று பதில் அகப்பட்டுவிடும்.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். நான் விண்டோஸ் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில்கூட எனக்கு நேர்ந்த அனைத்து சிக்கல்களுக்கும் மூலக் காரணம் கண்ணில் பட்ட அனைத்து ரகக் கண்ணராவி மென்பொருள்களையும் தராதரம் பாராமல் இழுத்துப் போட்டுக் கொண்டதுதான். அந்த வெறியை மட்டும் வென்றுவிட்டால் போதும். இப்போதெல்லாம் தேவையற்ற ஒரு மென்பொருளைக் கூட கம்ப்யூட்டருக்குள் வைத்துக்கொள்வதில்லை. ஒரு முழு மாதம் ஒரு மென்பொருளைத் தொடவே இல்லை என்று தோன்றினால் உடனே டெலிட் செய்துவிடுகிறேன். எப்போது தேவையோ அப்போது திரும்பவும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இலவசமோ, காசு கொடுத்து வாங்கியதோ, எல்லாமே ஆப் ஸ்டோருக்குள்தான் என்பதால் நம் சரக்கு எங்கும் ஓடிப் போய்விடாது. அங்கேயேதான் இருக்கும்.

புற க்ளீனிங் குறிப்புகள்:

1. லேப்டாப் க்ளீனிங் கிட் என்று அமேசானில் தேடினீர்கள் என்றால் அருமையான பல சங்கதிகள் அகப்படும். சுத்திகரிப்பு திரவம் முதல் துடைக்கும் துணி வரை அதில் இருக்கும். முந்நூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை விலை சொல்லுவான்.

2. இதற்கெல்லாமா காசு செலவழிப்பது என்று என்னைப் போல் நினைப்பீர்கள் என்றால் என் வழியைச் சொல்கிறேன். வருடம்தோறும் மூக்குக் கண்ணாடி மாற்றும்போது கடைக்காரன் கொடுக்கும் கண்ணாடி க்ளீனிங் திரவம் மற்றும் வெல்வெட் துணித் துண்டுகளைச் சேகரித்து வைப்பேன். அவற்றைக் கொண்டு லேப்டாப் துடைப்பேன்.

3. பழைய ஷேவிங் பிரஷ்ஷைக் கொண்டு கீபோர்டை சுத்தம் செய்வது எளிது. ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போதும் ஷேவிங் பிரஷ்ஷால் பரபரவென நாலு இழுப்பு இழுத்தால் போதும். தூசு தும்புகள் இல்லாமலாகிவிடும்.

3A. Key Pad-இல், ஒவ்வொரு கீக்கும் இடைப்பட்ட வெளியில் சேரும் அழுக்கை நீக்க இயர் பட்ஸ் போதும்.

4. காப்பிக் கறை, இதர கறைகள் பட்டு மேக்கின் வெளிப்புறப் பளபளப்பு குன்றியிருக்குமானால் டெட்டால் ஹேண்ட் சானிடைசர் போதும். சிறிய, மெல்லிய துணியில் ஒரு சொட்டு விட்டு அதைக் கொண்டு துடைத்தால் கறைகள் போய்விடும்.

5. மானிட்டரைத் துடைக்கும்போது அதை ஒரு குழந்தை போல பாவிக்க வேண்டும். கொரபுரவென்று தேய்த்தால் ஸ்கிராச் ஆகிவிடும். கவனம்.

6. லேப்டாப்பை சுத்தம் செய்யும்போது ஷட்டவுன் செய்து, ஒயர்களைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, முழு நிர்வாணக் கோலத்தில் வைத்து சுத்தம் செய்யவும். உங்கள் குழந்தையைக் குளிப்பாட்டும் உணர்வு உங்களுக்கு அப்போது இருக்க வேண்டும்.

(ஜூலை 2022 இல் எழுதியது. மெட்ராஸ் பேப்பரில் வெளியானது.)

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 17:55
No comments have been added yet.