வேட்டி

Pa Raghavan

இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.

அழகாக வேட்டி கட்டிக்கொள்வோரை எனக்குப் பிடிக்கும். இடுப்பில் அதனை வெறுமனே சொருகிக்கொண்டு நாளெல்லாம் பொழுதெல்லாம் ஊர் திரிவோர் பலரை அறிவேன். பாதுகாப்பு கருதி பெல்ட் கட்டிக்கொள்பவர்கள், லுங்கி மடித்து விடுவது போல வேட்டி நுனியில் நான்கு மடிப்பு வைத்து இறுக்கிக்கொள்வோரையும் பார்த்திருக்கிறேன். வேட்டியை இடுப்பில் நிலைநிறுத்துவது ஒரு கலை என்றால், அது விலகிக் கவர்ச்சி காட்டாமல் வண்டி ஓட்டுவது இன்னும் பெரிய கலை. மேற்படி இரண்டு கலைகளிலுமே என் முயற்சிகள் படுதோல்வி கண்டிருக்கின்றன. ஏழெட்டு கழுதை வயதான பின்பும் எனக்கு வேட்டி கட்ட வரவில்லை. மீறி, கட்டிக்கொண்டு வண்டியை எடுத்தால் வீதிக்கெல்லாம் ரம்பா டான்ஸ் காட்டும்படி ஆகிவிடுகிறது.

என் மனைவிக்கு இது குறித்த வருத்தம் உண்டு. ஒரு நாள் கிழமை என்றால்கூட அரை டிராயரைப் போட்டுக்கொண்டு நிற்கிறானே என்று வருத்தப்படுவாள். தொப்பையுள்ள மற்றவர்கள் எல்லாம் வேட்டி கட்டாமலா இருக்கிறார்கள்? நீ வேண்டுமென்றே அதை நிராகரிக்கிறாய்.

இல்லை. நான் வேண்டுமென்று வேட்டி கட்டாதிருப்பதில்லை. உண்மையிலேயே எனக்கு வேட்டி இடுப்பில் நிற்பதில்லை. அது அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக இடுப்பில் மிக வலுவான அஸ்திவாரமெல்லாம் போடுவேன். மடித்து மடித்து இழுத்துச் சொருகி என்னவெல்லாமோ செய்வேன். எல்லாம் சரியாகச் செய்துவிட்டது போலத்தான் இருக்கும். ஆனால் கட்டி முடித்து வெளிப்பட்டால், பார்ப்பவர்கள் சிரிக்கும்படியாக அமைந்துவிடும். முன்புறம் சரியாகப் பாதம் மறையும் அளவுக்கு இடைவெளிவிட்டுத்தான் இடுப்பில் மடித்திருப்பேன். ஆனால் பின்பக்கம் விளக்குக் கம்பம் பார்த்த நாய் போல அது தூக்கிக்கொண்டு நிற்கும். காணச் சகிக்காது. அதை இறக்கிவிடலாம் என்று பார்த்தால் முன்புறத் தொப்பைச் சரிவில் வேட்டி விழுந்துவிடும்.

ஆ, தொப்பை. அது என் தீராத அவமானம். ஐந்து வருட காலம் படு உக்கிரமான பேலியோ டயட் இருந்து இருபத்தெட்டு கிலோ எடை குறைத்தபோதும் அது மட்டும் குறைவேனா என்று நின்று ஆட்டம் காட்டியது. வெறுத்துப் போய்தான் டயட்டையே விட்டொழித்துவிட்டுப் பழைய பாசத்தில் மத்தியப் பிரதேசத்தைச் செழிக்க வைக்கத் தொடங்கினேன். மீண்டுமொரு முயற்சியெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, என் உருண்டு திரண்ட தொப்பையை உள்ளடக்கித்தான் வேட்டி கட்டப் பழக வேண்டும்.

இன்னொன்று. என்னைக் காட்டிலும் பெரிய தொப்பை உள்ளவர்களை அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் எளிதாக வேட்டி கட்டிக்கொண்டு வெளியே வருகிறார்கள். ஆனால் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் என் தொப்பையின் தனித்துவம் நிகரற்றது. கடம் வடிவ, தவில் வடிவத் தொப்பையர்களின் இடுப்புகளில் வேட்டி நிற்பதில் சிக்கலில்லை போலிருக்கிறது. என்னுடையது ஓர் அருவியின் உச்சிப்பாறையை நிகர்த்தது. வேட்டி என்றில்லை. பேன்ட் அணிந்தாலும் தொப்பைக்கு மேலே நிற்காமல் சரிந்து விழும். பேன்ட்டுக்கு பெல்ட் போட்டு இறுக்கினாலும் சரிந்துதான் விழும்.

இதனைத் தவிர்க்க இரண்டு வித உத்திகளைக் கையாள்கிறேன்.

1. தொப்பைக்குக் கீழே அணியும் வகையில் மெலிதான எலாஸ்டிக் தன்மை கொண்ட ஜீன்ஸ் பேன்ட்களை மட்டும் அணிகிறேன்.

2. அதி அவசியம் இல்லாத மீட்டிங்குகளுக்கு பேன்ட் அணிந்து செல்வதேயில்லை. எங்கும் எப்போதும் எலாஸ்டிக் வைத்த அரை டிராயர்தான்.

பேன்ட்டுக்கே இந்த நிலைமை என்றால் வேட்டி எப்படி? அதுதான் தெரியவில்லை.

சிறு வயதுகளில் இந்த அளவு தொப்பையெல்லாம் எனக்கில்லை. ஆனாலும் நானொரு வளரும் பிள்ளையாகவே அப்போதும் இருந்தேன். அக்காலங்களில் கட்டம் போட்ட லுங்கிகளே என் விருப்பமான வீட்டு உடையாக இருந்தது. ஒரு சம்பவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அப்போது நான் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறைக் காலம் என்று நினைவு. வீட்டில் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு இங்குமங்கும் திரிந்துகொண்டிருந்த சமயத்தில், திருக்கண்ணபுரத்தில் இருந்து என் அப்பாவின் மாமா எதிர்பாராமல் வந்தார். மிகவும் வயதானவர். சௌரிராஜப் பெருமாள் கோயிலில் பணியாற்றுபவர். படு பயங்கர ஆசாரசீலர். வீட்டு வாசலில் நின்று கண்ணை இடுக்கி, புருவத்துக்கு மேலே விரல்களைக் குவித்து என்னைப் பார்த்தார். சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறோமா, முகவரி மாறிவிட்டோமா என்கிற சந்தேகத்தில் பார்ப்பது போலத் தெரிந்தது. எனக்கு அவரை அடையாளம் தெரிந்தது. எனவே வேகமாக வாசலுக்குச் சென்று வரவேற்றேன்.

‘இருக்கட்டும் இருக்கட்டும். பார்ஸார்தி இருக்கானா?’ என்றார்.

‘உள்ள வாங்க. இப்ப வர்ற நேரம்தான்’ என்று சொன்னேன்.

ஓரிரு நிமிடங்களுக்குள்ளாகவே அப்பா வந்துவிட்டார் என்றாலும் அவர் தலையைக் காணும் வரை அம்மனிதர் வீட்டுக்குள் காலெடுத்து வைக்கவேயில்லை.

பிறகு அப்பாவிடம் சொன்னார், ‘உம்பிள்ள உள்ள வான்னுதான் கூப்ட்டான். ஆனா கைலி கட்டிண்டிருந்தானா, கொஞ்சம் தெகச்சுப் போயிட்டேன்.’

வாசகசாலை அருண்

லுங்கி அநாசாரம் என்று தெரிந்த பின்பு அதன்மீது இன்னும் பாசம் அதிகமாகிப் போனது. 2004 ஆம் ஆண்டு வரை வீட்டில் லுங்கிதான் அணிந்து வந்தேன். கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்து, அங்கே பணியில் சேர்ந்த பின்புதான் அரை டிராயர் அறிமுகமானது. அரை டிராயருடன் ஆபீசுக்கும் வரலாம் என்று நல்வழி காட்டி அதைத் தானே தொடங்கி வைத்தவர் பத்ரி. பத்ரியிடம் கற்பதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு. நான் அரை டிராயர் அணிந்து எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம் என்பதை மட்டும் கற்றேன்.

இன்றுவரை அதுதான் என் உடையாக உள்ளது. இடுப்பில் இருப்பதே தெரியாது. வியர்க்காது. மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை பார்க்கலாம். அப்படியே கிளம்பி வெளியே போகலாம். என் தொப்பை அங்கீகரித்த ஒரே ஆடை அதுதான்.

செல்வேந்திரன், வாசகசாலை அருண் போன்ற எழுத்துலக நண்பர்கள் அழகாக வேட்டி கட்டிக்கொண்டு விழாக்களுக்கும் புத்தகக் காட்சிகளுக்கும் வரும்போது சிறிது ஏக்கமாகப் பார்ப்பேன். சிலதெல்லாம் ஏக்கமாகவே நீடித்திருப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டுவிடுவேன்.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 17:30
No comments have been added yet.