நெருப்பின் சாட்சியம்
இன் தி ஃபயர் ஆஃப் வார் நியூசிலாந்து பூர்வகுடிகளான மாவோரி இனத்தின் கடைசி யுத்தத்தை மையமாகக் கொண்டது. 1864 ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பிரிட்டிஷ் ராணுவம் ஒராக்காவ் என்ற இடத்தில் மாவோரி படைகளைத் தாக்கியது. அந்த நிகழ்வினை தான் படம் விவரிக்கிறது. இந்தப் போர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 1864 வரை தே அவமுட்டுவிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஹிகிஹி நகருக்கு அருகில் நடந்தது

1840 இல், மாவோரி தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அவர்கள் பூர்வகுடி நிலத்தை ஆக்ரமிக்கவோ, அவர்களை மதம் மாற்றம் செய்யவோ, பண்பாட்டு விஷயங்களில் தலையிடவோ கூடாது என்று அறிவிக்கபட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை மீறி கணிசமான அளவு மாவோரி நிலத்தைக் ஆக்ரமித்துக் கொண்டார்கள். இதனை எதிர்த்த மாவோரிகளைக் கைது செய்து தண்டித்தார்கள். ,
மாவோரி மக்கள் ஒன்றுதிரண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட துவங்கியதும் அவர்களை ராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கினார்கள். ஆங்கிலேயர்கள் வடக்கே படேரங்கியில் உள்ள பாதுகாப்புகளை மீறி, ரங்கியாவோஹியா கிராமத்தை சூறையாடினர், அங்கு மாவோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் தான் படம் நிகழுகிறது.
ஆயுதம் ஏந்திய மிகப் பெரிய பிரிட்டீஷ் படையைக் குறைவான வீரர்களைக் கொண்ட பூர்வகுடிகளால் எப்படிச் சந்திக்க முடியும் என இனக்குழு தலைவர் மனியபோடோ கேள்வி எழுப்புவதில் படம் துவங்குகிறது . நமது சுதந்திரத்திற்காகக் கடைசி வரை போராடுவோம் எனக் குலத் தலைவன் உறுதியாக நிற்கிறான்.

போருக்கான ஆயுத்தங்களைத் துவங்குகிறார்கள். இந்த நிலையில் போர்கடவுள் ஒரு இளம்பெண் மூலமாக ஆசி வழங்குகிறாள். கிரேக்கத்திலும் இது போலப் போருக்கு முன்பாக அருள் வேண்டுவார்கள். கடவுளின் ஆசியில்லாமல் போர் நடத்தமாட்டார்கள். மாவோரி போர் கடவுளான பபதுவானுகுவின் பிரதிநிதியாகத் திருமணம் செய்து கொள்ளாத இளம்பெண்ணைத் தான் தேர்வு செய்வார்கள். அவள் அமானுஷ்ய திறன் கொண்டவளாக கருதப்படுவாள். சில சடங்குகள் மூலம் அவள் கடவுளின் உத்தரவை அறிவிப்பாள்.

தெய்வ அருள் கொண்ட இளம் பெண் தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரம். தான் போர்கடவுளின் குரலாக இருக்க விரும்பவில்லை. எல்லோரையும் போல மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகக் கோபு என்ற பெண் சொல்கிறாள். ஆனால் அதனை இனக்குழு அனுமதிக்கவில்லை. அவள் ஒரு பல்லியை வைத்திருக்கிறாள். அது நாக்கை சுழற்றுகிறது. அதனை விடுவித்தாலும் அவளையே சுற்றிவருகிறது. போரின் நடுவே அவள் தப்பியோடிவிடக் கூடாது என்பதற்காகக் கிணற்றில் அடைத்து வைக்கிறார்கள். அவளால் ஹக்கியின் கடந்தகாலத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஹக்கியின் அன்னையைப் பற்றி அவள் சரியாகவே சொல்கிறாள்.

மாவோரிகள் பச்சை குத்தி கொள்வதில் ஆர்வமானவர்கள். முகத்திலும் உடம்பிலும் சித்திரங்களை வரைந்து கொள்கிறார்கள். இது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மூதாதையர் ஆவிகளுடனான தொடர்பாகவும் செயல்படுகிறது. இப்படத்தில் போரிடும் இனக்குழு தலைவர்கள் அது போன்ற முகச்சித்திரம் கொண்டிருக்கிறார்கள்.

பூர்வகுடிப் பெண்ணிற்கும் ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்தவன் ஹக்கி . பதின் பருவத்திலிருக்கிறான். அவனது தாய் போரின் போது கொல்லப்படுகிறாள். தந்தை ஒரு பிரிட்டீஷ் சிப்பாய்.
ஹக்கி துஹோ படைகளால் பிடிபடுகிறான். மாவோரிகள் அவனைப் போருக்கான களப்பலியாகக் கொடுக்க முடிவு செய்கிறார்கள். அவன் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கோபு அவனைப் பலியிடக் கூடாது எனக் கட்டளை இடுகிறாள்.
இது தெய்வத்தின் வாக்கு என்பதால் அவரை உயிரோடு விடுகிறார்கள். தப்பிச் செல்ல முயலும் ஹக்கி தன்னுடன் வந்துவிடும்படி கோபுவையும் அழைக்கிறான். அவள் தயங்குகிறாள். இதனிடையில் பிரிட்டீஷ் ராணுவம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்கிறது. துப்பாக்கி சண்டை துவங்குகிறது. மாவோரிகளில் பலரும் களத்திலே செத்து மடிகிறார்கள். ஆனாலும் அவர்கள் சரணடைய விரும்பவில்லை. பெண்களும் ஆயுதமேந்தி போராடுகிறார்கள்.
இந்நிலையில் பழங்குடியினருக்கு வெடிமருந்து கலந்து தருவதில் ஹக்கி உதவி செய்கிறான். அவர்களுக்காகச் சண்டையிடுகிறான். ஆனால் பிரிட்டீஷ் படைகள் மாவோரிகளை மோசமாகத் தாக்கி அழித்து ஒழிக்கிறார்கள். இதில் உயிர்தப்பி ராணுவத்திலிருந்த தனது வெள்ளைக்கார தந்தையிடம் ஹக்கி அடைக்கலமாகிறான். அவரது முகாமில் தங்குகிறான்.
மறைந்து வாழும் கோபுவையும் இனக்குழுவின் பெண்களையும் காப்பாற்ற ஹக்கி திட்டமிடுகிறான். அது எதிர்பாராத விளைவை உருவாக்குகிறது. மாவோரி பண்பாட்டின் அடையாளங்களையும் அவர்கள் போர்முறைகளையும் நம்பிக்கைகளையும் படம் விவரிக்கிறது. மாவோரி மொழியிலே படம் உருவாக்கபட்டிருக்கிறது. முக்கிய நடிகர்களும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே.

திரைக்கதை எழுத்தாளர் டிம் வொரால் மற்றும் இயக்குனர் மைக் ஜோனாதன் இணைந்து மாவோரிகள் வரலாற்றின் அறியப்படாத உண்மைகளைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். வனநெருப்பு நடந்த உண்மைகளின் சாட்சியம் போலிருக்கிறது. குதிரையில் நோயுற்ற குழந்தையை ஏற்றி நடத்திச் செல்லும் காட்சி. போர் களத்தில் அனைவரும் சேர்ந்து முழங்குவது. கைவிடப்பட்ட கோபியை காப்பாற்ற ஹக்கி முயலுவது. முகாமில் தந்தையுடன் ஹக்கி முரண்படுவது எனத் தேர்ந்த காட்சிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன. இருளும் ஒளியும் கலந்து போர்கள அனுபவத்தினை நிஜமாக்குகிறது ஒளிப்பதிவு. அந்த வகையில் தேர்ந்த ஒளிப்பதிவு. சிறந்த கலை இயக்கம், இசையமைப்பாளர் ஆர்லி லிபர்மேன் வழங்கியுள்ள இனிமையான மரபிசை எனப் படம் சிறந்த அனுபவத்தைத் தருகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
