Mathavaraj's Blog
August 16, 2025
சிந்துவெளியும் சங்க காலமும்!

ஆரியர்கள் வந்த பிறகேஇந்திய நிலப்பரப்பு நாகரீகம் அடைந்ததாகவும் அதற்கு முன், இங்கே இருந்த மக்கள் காட்டுமிராண்டிகளாய்இருந்தது போலவும் கட்டுக்கதைகளை வரலாறென இங்கு காலம் காலமாக சொல்லப்பட்டுக் கொண்டேஇருக்கிறது.
வேதங்களே இந்தியநாகரீகத்தின் மூலங்களாகவும், வேத காலமே இந்திய வரலாற்றின் துவக்கமாகவும், ரிஷிகளின்வாயசைவில் காலமே அசைந்ததாகவும் இங்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பூமியில் இதுவரைகாண முடியாத சரஸ்வதி நதியை கற்பனையில் பெருக்கெடுக்கச் செய்து நம்ப வைக்கிறார்கள்.இதிகாசங்களும், அதன் கற்பனை பாத்திரங்களையும் இங்கு தெய்வீக மயமாக்கி வைத்திருக்கிறார்கள்.
உண்மைகள் மண்மூடிப்போவதில்லை.
அகழ்வராய்ச்சிகள்வரலாற்றுப் பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி ஆதாரங்களை பூமிக்குள்ளிருந்துவெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. வேத காலத்துக்கும் 1500 ஆண்டுகள் முந்தைய சிந்துவெளிநாகரீகம் வெளிப்பட்டு கடந்த காலத்தின் மீது வெளிச்சக் கீற்றுகளை வீசியிருக்கிறது.
4500 ஆண்டுகளுக்குமுந்தைய நாகரீகம் அது. ஒரே அளவிலான செங்கற்கள், தரக் கட்டுப்பாடுகள் கொண்ட வணிகத்தைச்சொல்லும் ஒரே அளவுள்ள எடைக்கற்கள், தாய் தெய்வவழிபாடுகள், முத்திரைகளில் காணப்படும் எழுத்துக்கள் என முதிர்ச்சியடைந்த நகர நாகரீகம்அது.
அந்த நாகரீகம் எப்படிசிதைந்தது, அந்த மக்கள் என்ன ஆனார்கள், அவர்கள் பேசிய மொழி என்ன போன்ற கேள்விகள் எல்லாம்நூறு ஆண்டுகளாய் முழுமையான விடையில்லாமல் இருக்கிறது.
தேதிகள் அற்ற அந்தகடந்தகாலம் குறித்து அதற்குப் பின் வந்த வேதங்களில் பேச்சு மூச்சே இல்லை. ஆனால் அதுகுறித்த தடயங்கள் சங்கப் பாடல்களில் சிந்துவெளியின் நாடியை அறிய முடிகிறது.
வழிவழியாய் வந்தநம் தொன்மங்களின் உடல்மொழியில், அதாவது பண்பாட்டில் சிந்துவெளி நாகரீகம் தென்படுகிறது.தென்னிந்திய நிலப்பரப்புக்கும், சிந்துவெளிக்கும் இருக்கும் தொடர்புகள் புலப்படுகிறது.கீழடியும், ஆதிச்ச நல்லூரும், சங்கப் பாடல்களும் அவைகளை உறுதி செய்கின்றன.
நம் கடந்த காலம்பற்றிய அந்த குறிப்புகளை இன்றைய டிஜிட்டல் வடிவில் சொல்லத் தோன்றியது. மதிப்பிற்குரியஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலை அடிப்படையாகக் கொண்டு,எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வழிகாட்டுதலோடு யூடியுபில் Short-களாக வெளியிட்டு வருகிறேன்.
இதுவரை 8 shortsவெளியாகி இருக்கின்றன.
ஆர்வமுள்ளவர்கள்பார்க்கலாம்!
August 15, 2025
கூலி இன்ன பிற ’பான் இந்தியா’ குப்பைகள்

வெள்ளி,சனி, ஞாயிறு மூன்று நாள் லீவு. வேறு எந்த பிரபலபடங்களும் ரிலீஸ் ஆகாது. ஒரு நகரில் இருக்கும் அனைத்து தியேட்டர்கள், அந்த தியேட்டரில்இருக்கும் அனைத்து ஸ்கிரீன்கள் எல்லாவற்றிலும் ஒரே படம்தான். யாரும் படம் பார்க்கும்முன்னால் இருக்கைகள் புக் ஆகிவிடும். அப்புறம் என்ன ஐநூறு கோடி, ஆயிரம் கோடி என உலகம்முழுவதும் அளக்க வேண்டியதுதானே. இந்த மெகா மோசடிக்கு சினிமா உலகம் வைத்திருக்கும் பெயர்‘பான் இந்தியா”.
ஒருபொருளைப் பற்றி ’ஆஹா’, ‘ஓஹோ’ என விளம்பரம் செய்து, மக்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு,பொருளின் தரத்தைப் பற்றி மக்கள் அறிந்து சுதாரிக்க கால அவகாசம் கொடுக்காமல் பணத்தைசுருட்டுகிறவர்களை ஊருக்குள் ஃபிராடு கம்பெனி,சீட்டிங் பார்ட்டி என்றுதானே அழைப்பார்கள்?
முதல்நாள்,முதல் ஷோ படம் பார்த்து விட்டு வருகிறவர்கள் சிலர், மீண்டும் தாங்கள் ஏமாந்து போனதைச்சொல்ல முடியாமல், ‘ஒ.கே’, ‘பார்க்கலாம், ‘கடைசி பதினைந்து நிமிஷம் அட்டகாசம்’ என எதையாவதுஒப்புக்கு சொல்லி வைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அமைதியாகி விடுகிறார்கள்.
இந்தபடங்கள் எல்லாம் இப்படித்தான் படுமொக்கையாக இருக்கும் என்பதை இன்னும் அறியாமல் அடுத்தபிரமோக்களைப் பார்த்து அடுத்த படத்துக்கு புக் செய்ய ஆயத்தமாகவே இருக்கிறார்கள். எதைஎதிர்பார்க்கிறார்கள், எப்படி ஏமாறுகிறார்கள் என்று கூட அறியாத விந்தை மனிதர்கள்தாம்பெரும்பாலான நம்மக்கள். சீட்டிங் பார்ட்டிகளையும், ஃபிராடு கம்பெனிகளையும் ‘வாழ வைக்கும்தெய்வங்கள்’.
இதோகூலி படத்தை படு மொக்கை என்று தெரிந்த நண்பர்கள் சொல்கிறார்கள். ‘புளு சட்டை மாறன்’அதை உறுதி செய்து விட்டார். இப்படித்தான் ஆகும். கதையைப் பற்றி யோசிக்கவே யோசிக்காமல்– தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழி நடிகர்களையும் அள்ளி போட்டுக் கொண்டு- ஷூட்டிங் சென்றால் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது.
இதேகதியில் அண்மையில் வெளிவந்த - பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட - படங்கள் எல்லாம்வரிசை கட்டி வணிக ரீதியாக தோல்வியே கண்டு வருகின்றன. கலை ரீதியாக பார்த்தால் எப்போதுமே,இவை எதுவும் தேறாது என்பது வேறு கதை. இந்த பிரம்மாண்ட குப்பைகளுக்காக நடந்த பிரமோக்களையும்,அதில் நடித்த ஹீரோக்கள் விட்ட உதார்களையும் நினைத்தால் குமட்டிக் கொண்டுதான் வருகிறது.
புதுசாகஎதையும் சொல்லாமல், அரதப் பழசையே காசாக்கும் இந்த சீட்டிங் பிஸினஸில் பேர் பெற்ற இயக்குனர்களாகஅட்லீ, லோகேஷ் போன்றவர்கள் முன்னால் இருக்கிறார்கள். பாவம் சங்கர், மணிரத்னம் போன்றஜாம்பவான்கள் தம் கட்டி முண்டியடித்துப் பார்த்து விழுந்து கிடக்கிறார்கள்.
ஒருமொழியில் எடுத்த படம், அதன் கதையால், மனதை விட்டு நீங்காத காட்சியமைப்பால், மற்ற மொழிகளிலும்திரைக்கு வருமானால் அது ‘பான் இந்தியா’ படம். நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பிருந்தேஅப்படி பல படங்கள் இங்கு வந்திருக்கின்றன. நாடு முழுவதும் பேசப்பட்டு இருக்கின்றன.இன்று அந்த ‘பான் இந்தியா’ உத்தியை தங்கள் வியாபாரத்துக்காக பயன்படுத்துவதில்தான் பிரபலசினிமாக்காரர்களின் மூளை 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.
குறைந்தசெலவில், நல்ல கதைகளோடு, மனதை விட்டு நீங்காத காட்சியமைப்புகளோடு அழுத்தமான படங்கள்வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த ’மெட்ராஸ் மேட்னி’, மலையாளத்தில்வந்த ’ரோந்து’ படங்கள் நல்ல சினிமாவின் அடையாளங்களோடு இருந்தன. அந்தப் படங்கள்தாம்இன்னும் சில காலம் கழித்தும் பேசப்படும்.
கூலிபோன்றவை நாளைக்கே நினைவில் இல்லாமல் போய்விடும். அற்ப ஆயுள் கொண்டவை அவை.
August 13, 2025
AI தொழில்நுட்பத்தில் குறும்படம்.

இந்த குறும்படம் முகநூலில் 77 ஆயிரம் பார்வைகளும், யூடியுபில் 37ஆயிரம் பார்வைகளும் என மொத்தம் 1,14,000 பார்வைகளைஇதுவரை பெற்றிருக்கிறது.
AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நான் உருவாக்கிய குறும்படம்இது.
இதைப் பார்த்து விட்டு ”எப்படி சார் AI வீடியோக்கள் உருவாக்குவது?”.“என்ன AI Tool உபயோகிக்கிறீர்கள்?”, “ கொஞ்சம் டிப்ஸ் தரலாமா?” என சில நண்பர்கள் போனிலும்இன்பாக்ஸிலும் பேசினார்கள். போன் நம்பர் கேட்டுப் பேசினார்கள்.
முதலில் இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும். இது யாரையும் தயக்கம் கொள்ளவோ, பின்வாங்கவோசெய்து விடக் கூடாது என்று என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
முதலாவது, 1956லேயே AI தொழில்நுட்பம் குறித்த பிரயோகங்களும். தொடர்ந்து ஆய்வுகளும்,முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டாலும், அது வளர்ந்து வளர்ந்து இன்று அசுரத்தனமாய் வியாபித்தபிறகுதான் நாம் அதனைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். அதில் நான் ரொம்ப ரொம்பச் சின்னஒரு கத்துக்குட்டி.
இரண்டாவது, யோசிக்காமல் தைரியமாக பணத்தை செலவு செய்ய முன்வர வேண்டும். Prompt கொடுத்துஇமேஜ் உருவாக்குவதிலிருந்து, வீடியோவாக்குவது, ஆடியோக்களை உருவாக்குவது, வீடியோக்களாய்எடிட் செய்வது என்று AI தொட்டதற்கெல்லாம் காசு கேட்டுக்கொண்டே இருக்கும். பெரிய ஓட்டலுக்குச்சென்றால், மெயின் டிஷ் சாப்பாடு கொடுத்துவிட்டு, சைட் டிஷ் என ஒவ்வொரு வகைக்கும் ரேட்டைவைத்து வசூலிப்பது போலத்தான். எந்த AI Toolம் Free, trial period என்று சொன்னாலும்அதை வைத்துக் கொண்டு உங்களை எட்டிப் பார்க்க வைத்து, பிறகு ஒவ்வொரு டிஷ்ஷுக்குமான மெனுவைக்காண்பிக்கும். மிரள வைக்கும்.
AI தொழில்நுட்பத்தில் முக்கியமானது Prompt. நீங்கள் இமேஜைஉருவாக்க, வீடியோவை உருவாக்க, ஆடியோவை உருவாக்க முயற்சி செய்தாலும், AI உங்களிடம்Promptஐ கேட்கும். அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. உங்கள் வீடியோவுக்கான முழு காட்சிகளும்,அசைவுகளும் உங்கள் கற்பனையில் தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு என்ன காட்சி வேண்டும், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த கோணத்தில்,யார் யாரை வைத்து, அவர்களின் தோற்றம், உடல்மொழி, என்னென்ன உடைகள் என சகலத்தையும் தீர்மானித்து,AI கேட்கும் Promptஐ கொடுக்க வேண்டும். நிச்சயமாக நாம் நினைப்பதற்கு மாறாய் ஒன்றுதான்வந்து சேரும். ஆனால் நீங்கள் பணம் செலுத்தி உங்கள் கணக்கில் வைத்து இருக்கும் AIcreditலிருந்து அந்த காட்சிக்குரிய AI credit காணாமல் போய்விடும். மலைக்கக் கூடாது.அந்த காட்சியில் / வீடியோவில் / ஆடியோவில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்தPromptஐ கொடுக்க வேண்டும். ஓரளவு சரியாய் வரலாம். ஆனால் பணம் போய்விட்டிருக்கும். அதில்உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்த Promptஐ கொடுக்க வேண்டும். சரியாய் வரலாம். ஒன்றைஇந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு காரியத்துக்காக மூன்றுமுறை, நான்கு முறை செலவு செய்ய நேரிட்டலும், நீங்கள் Promptஐ எப்படி கொடுக்க வேண்டும்என்று கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தவறுகளைமறுபடி செய்யாமல் கவனம் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் கற்பனை செய்யும் காட்சிகள் எல்லாவற்றையும் AI அனுமதித்து விடாது. தங்கள்POLICYக்கு முரணானது என கார்டை காண்பித்துவிடும். அதிலும் சிறுவர்கள் குறித்த காட்சிகள்என்றால் நம்மை சாகடித்து விடும். ‘வீடு என்ன ஸ்கூலா’ குறும்படத்தில் அந்த சிறுவன் தன்தந்தையைத் தாண்டி சமயலறைக்குச் செல்லும் காட்சிக்கு மட்டும் எனக்கு முழுசாய் ஒருநாளும்,பல நூறு ருபாய்களும் ஆயின. குழந்தை தலையைக் குனிகிறான் என்றால், ஏன், எதற்கு என பலகேள்விகள். .கடைசியில் முடியாது என்றே சொல்லிவிட்டது. ஒரு வழியாய் அந்தக் காட்சியைஉருவாக்குவதற்குள் பெரும்பாடு பட்டேன்.
இதெல்லாம் கூட சாதாரணம்தான். ஒவ்வொரு காட்சியிலும் நமது கதாபாத்திரங்கள் ஒரே முகச்சாயலுடனும், காட்சிக்குரிய பாவனையுடனும் காட்சியளிக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும்promptக்கு கிடைக்கும் உருவத்திலிருந்து நீங்கள் அதற்குரிய promptஐ கற்றுக் கொள்ள வேண்டும்.அதை மீண்டும் மீண்டும் விடாமல் கொடுக்க வேண்டும். இதில் தவறத் தவற காசு போய்க்கொண்டேஇருக்கும்.
அடுத்து மிகப் பெரிய சோதனை. லிப் மூவ்மெண்ட். அதற்கு சூத்திரம் எல்லாம் இல்லை. உங்கள்அனுபவத்தாலேயே பெற வேண்டும்.
AI Tools?
இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாம் காசுதான். அங்குமிங்கும் முட்டி மோதி, நான்உபயோகித்த AI Tools:
1. Gemini
2.ChatGPT
3.Wondershare Filmora
4.canva AI
5.ClipFly
6.Imagine art
இறுதியாகவும் இரண்டு விஷயங்கள்.
ஒன்று, நீச்சல் தெரியும் வரை தண்ணீரைப் பார்த்தால் பயமாய் இருக்கும்.
இரண்டாவது, பெரும் கொள்ளை. பணத்தை செலவு செய்ய துணிந்தவர்களும்அல்லது பணத்தை மதிக்காதவர்களும் கொஞ்சம் நீந்திப் பார்க்கலாம்.
வீடு என்ன ஸ்கூலா? - யூடியுபில்
August 12, 2025
திரும்பவும் தீராத பக்கங்கள்!

நண்பர்களுக்கு,
வணக்கம்.
மீண்டும் தீராதபக்கங்களுக்கே வந்து விட்டேன்.
நவீன வசதிகளோடுகூடிய புதிய வலைத்தளம் பக்கம் சென்று பார்த்து, பெரிதாய் ஒன்றும் பயனில்லை என்பது அறிந்திருக்கிறேன்.அவ்வளவுதான். பட்டறிவுதான் நமது அறிவும் போல.
பிளாக் எனப்படும்இந்த வசதி கொண்ட ‘தீராத பக்கங்கள்’ பழைய ஏற்பாடுதான் என்றாலும் இதுதான் நமக்கான இடமாகவும்,பழகிய இடமாகவும் இருக்கிறது.
இந்த இடைப்பட்டகாலத்தில், AI தொழில்நுட்பம் மூலம் சில வீடியோக்களை உருவாக்கி யூடியுபில் பதிவேற்றிஇருக்கிறேன். அதுகுறித்து பகிர விஷயங்கள் இருக்கின்றன.
பாதியில் விட்டகதைகளை தொடர வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு நல்ல சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். அரசியல்களம் வெப்பமடைந்திருக்கிறது.
தீராத பக்கங்களைMobile appல் வைத்திருக்கும் நண்பர்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
இனி, நாம் இங்கேயேசந்திப்போம். பேசுவோம்.
June 27, 2025
அம்மா அப்பா

Youtube Shorts ஆக ஒரு நிமிட ஓளிச்சித்திரமாகி இருக்கிறது.
பார்க்க: அம்மா அப்பா
May 27, 2025
பறவை மாடு
May 4, 2025
புதிய வலைத்தளம் - அறிவிப்பு

அனைவருக்கும்வணக்கம்.
2009ல்துவங்கப்பட்ட blog (பிளாக் ) வலைத்தளம் இது.Google Blogspot மூலம் பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் எழுதுவதுகுறைந்து போனது.
மொபைலில்பகிரும்படியான நவீன தொழில்நுட்ப வசதிகளோடு இப்போது பல வலைத்தளங்கள் வந்து விட்டன.
அதற்கேற்பblog இன்னும் அப்டேட் செய்யப்படாமல் பழையபடியே இருந்து வருகிறது. எனவே மொபைலில் பகிரும்படி (மொபைல் செயலி) appஐ உருவாக்கி எழுத ஆரம்பித்தேன்.
அதிலும்முக்கியமான வசதிகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.
எனவே-
இன்றையதொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, காலத்திற்கேற்ற வகையில் எனது பெயரில் ஒரு புதிய வலைத்தளம்உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிமிடம் வரை 1677835 பார்வையாளர்கள்’தீராத பக்கங்கள்’ வந்து சென்றிருக்கிறார்கள். ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அன்பும்அக்கறையும் கொண்ட நண்பர்கள் தடங்கள் இங்கே பதிந்து இருக்கின்றன. இந்த வலைத்தளம் இங்கு இப்படியேஇருக்கும். மெல்ல மெல்ல தீராத பக்கங்களின்முக்கிய பக்கங்களை புதிய இணைத்தளத்தில் இணைக்கும்ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதன்இணைய தள முகவரி :
தொடர்ந்துஉங்கள் வருகையையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
கீழ்கண்ட பக்கத்தில் சென்று வலைத்தளத்தில் உங்கள் இமெயிலை தெரிவித்து subscribe செய்யுமாறு அன்புடன்அழைக்கிறேன்.
https://www.mathavaraj.in/contact
எப்போதும்தொடர்பில் இருப்போம்.
தொடர்ந்துபயணிப்போம்!
அன்புடன்
மாதவராஜ்
April 25, 2025
இங்கிருந்துதான் வந்தான் - 3ம் அத்தியாயம்

”முத்தையாண்ணன்பொண்ணு கண்மணி அந்த ஆட்டோக்காரனோட போய்ட்டாளாம்” சண்முகம் வந்து படுத்திருந்த சுப்புத்தாயிடம்சொன்னான்.
”அடப்பாவமே” என்று எழுந்து தலையை முடிந்து கொண்டவர் வேறு எதுவும் பேசாமல் கிழக்கு திசை நோக்கிபார்த்துக் கொண்டிருந்தார். சண்முகமும் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தான்.
”இப்பஎங்கே இருக்காங்களாம்?” மெல்ல வாயில் வழிந்த எச்சலை துடைத்துக்கொண்டு கேட்டார்.
“அதெல்லாம்யாருக்குத் தெரியும்? கேள்விப்பட்டேன். வந்து சொன்னேன்.” என்றான். குரலில் கவலையோ,கோபமோ காணவில்லை. ஒரு மாதிரி சலிப்புத்தான் தெரிந்தது.
“முத்தையாவுக்குத்தெரியுமா?”
“அண்ணந்தான்சொல்லிச்சு…” என்றான்.
”இப்பஅவன் எங்க இருக்கான்?”
“செல்வியநாமக்கல் ஸ்கூல்ல சேக்க பஸ்ஸில் போகும்போது பேசினான்” என்றவன் “சரி நா வர்றேன்.” எழுந்துசென்றான். அதற்கு மேல் அவனுக்கு பேசப் பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டார். அந்தஓட்டு வீட்டின் அறைக்குள்ளேயே மேலும் அடைந்து கிடக்க விரும்பாமல் வெளியே வந்து நின்றார்.சண்முகம் தெற்குரத வீதியில் திரும்பிக் கொண்டிருந்தான்.
முச்சந்திமுனை அது. அங்கிருந்து தெற்கு பக்கம் தெற்கு ரத வீதியையும், வடக்குப் பக்கம் மார்க்கெட்டையும்,நேர் எதிரே மேற்கு பக்கம் செல்லும் சந்தின் வழியாக மெயின் ரோட்டையும் பார்க்க முடியும்.மார்க்கெட்டை ஒட்டி தனலட்சுமி தியேட்டர் இருந்தது. எதிரே சுவரோடு சுவராக சின்னஞ்சிறியஇடத்தில் வடக்குப் பக்கம் பார்த்த வண்ணம் இருந்த வடக்கத்தியம்மன்னால் சந்துக்கு வடக்கத்தியம்மன்கோவில் தெருவென்றும் பேர். பங்குனி மாசத்தின்குறித்த நாளில் ’மாரியாத்தா’ வந்து சுப்புத்தாய்க்குள் இறங்கிவிடுவாள். ஓங்காரக் குரலெடுத்துவெண்கலத் தீச்சட்டியெடுத்து சாமியாடுவார். “ஏ, மாரியாத்தா” பயபக்தியோடு சொல்லிக்கொண்டேகுனிந்து முட்டியில் கைவைத்து வாசலுக்கு வெளியே திண்டில் சுப்புத்தாய் உட்கார்ந்துகொண்டார்.
ஊருக்குள்இங்கு வந்த பிறகு டிரைவருக்கு ஆளே கிடைக்காவிட்டால் யாராவது எப்போதாவது செல்லச்சாமியைவிசாரித்து கூப்பிட வருவார்கள். மற்றபடி காலையில் கஞ்சி குடித்தாரென்றால் வெள்ளக்கரைரோட்டில் வைப்பாற்று ஓரம் அடர்ந்திருக்கும் புளியமரம், வேப்ப மரத்தடிகளில் உட்கார்ந்துதாயம் விளையாடவோ, படுத்துக் கிடக்கவோ போய் விடுவார். சுப்புத்தாயோ வீட்டின் வெளியேசுவற்றில் சாய்ந்து, கால்களை நீட்டி, கண்களை வடக்கத்தியம்மன் கோவில் தெரு தாண்டி மெயின்ரோட்டில் போகிற வருகிற மனிதர்கள், வாகனங்கள் மீது வைத்துக்கொண்டு கடந்த காலங்களை அசைபோட்டுக் கொண்டிருப்பார். வைப்பாற்றிலிருந்து வண்டிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு மெயின்ரோட்டில் அசைந்து அசைந்து செல்லும் மாடுகள் வாழ்வின் துயரங்களை வழியெல்லாம் சொல்லிக்கொண்டேபோவது போலிருக்கும்.
முன்னைப்போல தீப்பெட்டி வேலைகள் இல்லை. பெரிய முதலாளிகள் மெஷின்களை கம்பெனிக்குள் இறக்கி விட்டார்கள்.கட்டை அடுக்குவது, மருந்தில் முக்குவது, தீப்பெட்டி ஒட்டுவது, அதற்குள் குச்சிகளை அடுக்குவதுஎன எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கின்றன. மெஷின் வாங்க முடியாதவர்களும் தங்கள்சக்திக்கு சாத்தூரில் தீப்பெட்டி பண்டல்கள் பண்ணிக் கொண்டுதான் இருந்தார்கள். சுப்புத்தாய்போன்றவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் வேலை கிடைப்பதே சிரமமாய் இருந்தது. தெரு முழுக்க வரிசையாக வீட்டு வாசல்களில் ஜனங்கள் உட்கார்ந்துபேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் கட்டையடுக்கியது, தீப்பெட்டிஒட்டியது எல்லாம் காட்டு புதுத்தெருவில் இருந்தகாலத்தோடு முடிந்து விட்டது.
எழுபத்துநான்கு வயதுக்குள் சுப்புத்தாய் நிறைய ’ஓடிப்போனவர்களை’ பார்த்திருந்தார். கிளுகிளுப்பாகவும்,சுவாரசியமாகவும் சில நேரங்களில் அதிர்ச்சியாகவும் இருந்த பேச்சுக்கள் இப்போது சர்வசாதாரணமாகி விட்டிருந்தன. தீப்பெட்டி ஆபிஸில், தெருவில், சொந்தங்களில் என்று விதம்விதமாக கதைகளை பார்த்தும் கேட்டும் இருந்தார். நினைவுகளில் இருந்து நிறைய உதிர்ந்தும் கூட போய்விட்டிருந்தன. தன் வீட்டில் அவை நிகழ்ந்தபோது கொஞ்ச நாள் முறுக்கிக் கொண்டு நின்ற மனிதர்கள்மீண்டும் பழையபடி ஆனதையும் பார்த்திருந்தார்.
காலேஜ்முடித்ததும் மூத்தவன் முருகனுக்கு சொந்தக்காரர் ஒருவர் மூலம் சாத்தூர் தொலைபேசித் துறையில்அத்தக் கூலிக்கு வாட்டர்பாய் வேலை கிடைத்தது, ஆபிஸை பெருக்கி சுத்தம் செய்து குடிக்கதண்ணீர் எடுத்து வைக்க வேண்டும். டிகிரி படித்துவிட்டு இந்த வேலையா பார்க்க வேண்டும்என்று உள்ளுக்குள் குமைந்தாலும் வேறு வழி எதுவும் தெரியவில்லை. கவர்ன்மெண்ட் உத்தியோகம்என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடிந்தது. அப்போது சாயங்காலங்களில் டைப்ரைட்டிங் படிக்கப்போன இடத்தில் முருகனுக்கும் ஈஸ்வரிக்கும் லவ்வாகி விட்டது. அந்த பெண் தங்கள் ஜாதிதான் என்பதிலும் தங்களை விடவசதியான குடும்பம் என்பதிலும் சுப்புத்தாய்க்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். ஈஸ்வரியின்அம்மா சாத்தூர் அண்ணா திமுக மளிரணித் தலைவராயிருந்தார், முடியவே முடியாது என கல்யாணத்துக்குமறுத்தார். ‘கவர்ன்மெண்ட் உத்தியோகந்தான். கொஞ்ச நாளில் பர்மெனெண்ட் ஆகிரும்’ என்றுஜாதியில் முக்கியமானவர்கள் எடுத்துச் சொன்ன பிறகு மனமேயில்லாமல் சம்மதித்தார். தன் பங்குக்கு செல்லச்சாமிதான் குடித்துவிட்டு கொஞ்சநாள்அனத்திக் கொண்டிருந்தார். ஈ காக்காய் கூட அவரை சமாதானம் செய்ய முன்வரவில்லை. இந்திராகாந்தி இறந்த நான்காம் நாள் நடந்த கல்யாணத்தில் செல்லச்சாமி மட்டும்தான் இல்லை. அந்தகல்யாணம் நடக்கவில்லையென்றால் அன்றைக்கு முருகனும் ஈஸ்வரியும் ஓடிப் போயிருப்பார்கள்.
அதிலிருந்துமூன்றாவது வருடம் இளைய மகள் லட்சுமியை சிவகாசியில் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்கள். ஒரு வாரத்தில் பக்கத்து வீட்டில்பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த குமாரோடு லட்சுமி ஓடிப் போய்விட்டாள்.சிவகாசியிலிருந்து பத்து இருபது பேர் வந்து, இன்ன பேச்சுதான் என்றில்லை, வாய்க்கு வந்தபடிபேசிச் சென்றார்கள். சுப்புத்தாய்க்கு திருப்பி பேசுவதற்கு வாய் இல்லாமல் போனது. மாரியாத்தாவைபேரைத்தான் மனசுக்குள் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நாள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. காட்டு புதுத்தெருவில் இருந்து இங்கு குடி பெயர்ந்தார்கள். ஓடிப்போனவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து அடுத்த வருசம் குழந்தையும்கையுமாய் வந்து நின்றபோது வடக்கத்தியம்மன் கோவில் திருநீற்றையும், குங்குமத்தையும்அவர்கள் நெற்றியில் வைத்து சுப்புத்தாய் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர்உடல்நலமில்லாமல் போயிருந்த அப்போதெல்லாம் முத்தையா சென்னையில் மளிகைக் கடைகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். “ஏ… மாரியாத்தா” என்னும் பெருமூச்சோடு சுப்புத்தாயால் அந்தக்கல்யாணங்களை ஜீரணிக்க முடிந்தது. கண்மணி விஷயம் முள்ளாய் உறுத்தியது. அந்த கிறுக்குப்பயல் முத்தையா எப்படித் தாங்கிக் கொள்வான் என மருகினார். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் அப்போதுதான் வயதுக்குவந்தவர்களிடம் இருக்கும் பிடித்தம் பேய்த்தனமாத்தான் இருக்கிறது. ’எந்த ஆத்தா அப்படிபொம்பளைக்குள்ள எறங்கிர்றாளோ’ என நாடியில் கைவைத்து முன்னெல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதிலும்கண்மணி இருக்காளே! எவ்வளவு பாசக்காரியோ அதை விட அதிகமாய் பிடிவாதக்காரியுங்கூட. நடக்கஆரம்பித்து நாட்களிலேயே ஒன்றைச் செய்யாதே என்றால் அதைத்தான் உடனே செய்வாள். தடுத்தால்கையை காலை உதைத்து தரையில் விழுந்து அழுவாள்.
வெளியிலும்கவனம் தங்கவில்லை. செல்லச்சாமி வந்ததும் விருதுநகருக்கு போக வேண்டும் என்றிருந்தது.தன் பிள்ளைகளை எல்லாம் படிக்க வைத்துவிட வேண்டும் என கிறுக்குப்பயலுக்குள் இருந்த ஆசையைப்பார்த்திருந்தார். ஒருமுறை விருதுநகரில் அவன்வீட்டில் தங்கியிருந்தபோது கண்மணி, செந்தில், செல்வி மூன்று பேரும் யூனிபார்ம் போட்டுபைக்கட்டுகளை சுமந்து சென்ற காலையில் முத்தையாவின் கண்களில் பூரிப்பு அப்படித்தான்மின்னிக் கிடந்தது. அவனது நெஞ்சு விம்மிக் கொண்டிருந்தது. பெற்ற தாய் அதற்கு முன்பு தன் மகனை அப்படி கண்டது இல்லை. பத்தாம் வகுப்புதேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாள் கண்மணிஎன்பதை எவ்வளவு ஆசையாய் கருப்பட்டி மிட்டாயும், மிளகுச் சேவும் வாங்கி வந்து இதோ இந்தவீட்டில் வைத்து தன்னிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தானே என கலங்கினார். இப்போது கூட விருதுநகருக்குத்திரும்பாமல் செல்வியை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறதுதானே முக்கியமானதாய் இருக்கிறதுஅவனுக்கு.
அவருக்கோ,செல்லச்சாமிக்கோ முருகன், லட்சுமி, முத்தையா, சண்முகத்தையெல்லாம் படிக்க வைக்க வேண்டும்என்று அப்படியெல்லாம் ஆசை இருந்ததில்லை. அவர்கள்என்ன படித்தார்கள் என்று கூட தெரியாது. காலை ஆறரை மணிக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டுமுருகன் கிளம்புவான். பாண்டியன் சோடாக் கம்பெனியில் இரண்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் சோடா பாட்டில்களை எடுத்துக்கொண்டு மூச்சிரைக்க பெடலைமிதித்து வரிசையாய் கடைகளில் போட்டபடி ஏழாயிரம்பண்ணை வரைக்கும் போவான். திரும்பும்வழியில் தண்ணி கண்ட இடத்தில் குளித்து, சைக்கிளில் சுருட்டி வைத்திருக்கும் பேண்ட்சட்டையை போட்டுக்கொண்டு காலேஜ்க்கு போவான். அவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா என்றுதான்அப்போது தோன்றியது. அவனை விட எட்டு வயதுக் குறைவான முத்தையா ராஜாமணி நாடார் நினைவுதுவக்கப்பள்ளியில் ஐந்து வரை படித்துவிட்டு ஆரிய வைஸ்ய பள்ளியில் ஆறாவது படிக்கும்போது ஒருநாள் “நான் இனி படிக்கப் போகவில்லை” என்று காட்டுப் புதுத்தெருவில் பழனிச்சாமித்தேவர் ரொட்டிக்கடைக்குவேலைக்குப் போனான். அந்த முத்தையாவுக்கு படிப்பின் மீது இவ்வளவு ஆசை எங்கிருந்து வந்ததுஎன்பதை சுப்புத்தாய் பிறகு போகப் போகத்தான் அறிந்திருந்தார்.
முத்தையாவேலைக்குப் போனதும் சின்ன வயதிலேயே எம்மகனுக்கு பொறுப்பு வந்துவிட்டது என்று அக்கம்பக்கத்தில் பெருமையாய் சொல்லிக்கொண்டார். சென்னையில் மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்றபிறகு அவன் இல்லாத வீடு பாடாய் படுத்தியது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முருகனும், சண்முகமும் வீட்டில்தன் கையால் சாப்பிடுகிறார்கள், முத்தையாவோ எங்கேயோக் கிடந்து, யாரையோ எதிர்பார்த்துகஷ்டப்படுகிறானே என்று புலம்புவார். இரவில் சோடியம் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் நிறைந்தமெயின் ரோட்டில் வந்து அசையாமல் அப்படியே நிற்கும் கழுதைகள் போல வாழ்க்கை நினைவுகளைக்கொண்டிருந்தன.
சுப்புத்தாய்கல்யாணமாகி வேறு ஊருக்குப் போய்விடக் கூடாதே என்று பெற்றவர்களும், கூடப் பிறந்தவர்களும்வருச நாட்டிலிருந்து செல்லச்சாமியைக் கல்யாணம் செய்து சாத்தூரிலேயே வைத்துக் கொண்டார்கள். அம்மா சிறு வயசிலேயே இறந்து விட, இன்னொருஅம்மாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுக்கத்தில் வளர்ந்த செல்லச்சாமிக்கு சாத்தூருக்குப்போவது கஷ்டமாய் இல்லை. மனைவி, குழந்தைகள் என தனக்கென்று குடும்பமாய் இருந்தாலும் தனித்துவிடப்பட்ட மனநிலையில், எதையோ இழந்தவராய்த்தான் செல்லச்சாமி இருந்தார். குடித்து விட்டுசரியாய் வேலைக்கு வருவதில்லையென்று அவரை டிவிஎல்லெஸ்கம்பெனியில் டிரைவர் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். மார்க்கெட்டை ஒட்டிய தனலட்சுமிதியேட்டர் பக்கம் இருந்த வீடும், படந்தாலில் இருந்த கொஞ்ச நிலமும் கைவிட்டுப் போன பிறகுதான்முத்தையா பிறந்தான். தரையில் பரப்பப்பட்ட தீக்குச்சிகளாகவும், தீப்பெட்டிகளாகவும்தான்நாட்கள் காய்ந்து கொண்டிருந்தன. நாள் கணக்கில் லாரி ஒட்டிவிட்டு, வீடு வந்து குடித்துக்கிடக்கும் செல்லச்சாமியின் உடல் அனலாக கொதித்தது. வேர்க்க விறுவிறுக்க மகன்கள் எல்லாம்சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தனர். நாளை என்பது மட்டுமே நினைவில் தகித்துக் கொண்டிருந்தது.சுப்புத்தாய் சாத்தூரிலேயே இருக்க, அவரது குழந்தைகள் ஒவ்வொருவராய் சாத்தூரை விட்டுப்போய்க் கொண்டிருந்தார்கள்.
கல்யாணமானகொஞ்ச நாளில் முருகன் வாட்டர் பாயிலிருந்து மஸ்தூர் ஆனான். நிரந்தர வேலை இல்லை என்றாலும்,நிரந்தர ஊழியருக்கான ஊதியம் கிடைத்தது. விருதுநகருக்கு மாற்றலாகிப் போய்விட்டான். அங்குயூனியனில் சேர்ந்து கொடி பிடித்து ரோட்டில் நின்று கோஷம் போடுவதாக முருகனைப் பற்றி பேச்சுக்கள் வந்தன. கறிக்கடை மாயாண்டிமெனக்கெட்டு வீட்டுக்கு வந்து “சித்தி, நீங்க சொன்னீங்கன்னுதான் முருகனை டெலிபோன் டிபார்ட்மெண்ட்லஎங்கப்பா சேத்து விட்டாங்க. இப்ப பாருங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கூட சேந்துட்டு திரிறான். இதெல்லாம் உருப்படுறதுக்கா?”கேட்டான். சுப்புத்தாய்க்கு திகைப்பாய் இருந்தது. ’கஷ்டப்பட்டு படிச்சதுக்கு இப்பத்தான்ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதயும் தொலைச்சிட்டு நிப்பானோ’ என திகைத்தார்.
சாத்தூரில்வீட்டு நிலைமையும் மோசமாகிக் கொண்டிருந்தது. தெற்குரத வீதியில் இருந்த பாபு பிரதர்ஸ்ஆபிஸில் சண்முகம் காலையில் போய் பெருக்கி தண்ணீர் எடுத்து வைத்து விட்டு ஏவிஎஸ் ஸ்கூலில்படிக்கச் சென்றான். மார்க்கெட்டிலும், மெயின் ரோட்டுக் கடைகளிலும் சில்லறையாய் வாங்கும்எண்ணெய்க்கும், காய்கறிகளுக்கும் ’மாரியாத்தாவிடம்’துட்டு வாங்க மாட்டார்கள். அதுவே பெரிய உபகாரமாக இருந்தது.
எம்.ஜி.ஆர்முதலமைச்சராக இருந்த பனிரெண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தசமயத்தில் முத்தையா சென்னையிலிருந்து வந்து தன் அண்ணன் முருகன் ஏற்கனவே பார்த்த வேலையைஎடுத்துக் கொண்டான். பாண்டியன் சோடா கம்பெனிக்கு காலையில் சைக்கிள் பெடலை அழுத்திப்புறப்பட்டான். சத்திரப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, சூரங்குடி, லஷ்மியாபுரம், சங்குரெட்டியாபட்டி,ஏழாயிரம்பண்ணை சென்று திரும்புவான். கிறுக்குப்பயல் மீண்டும் தன் அருகிலேயே வந்ததுசுப்புத்தாய்க்கு ஆறுதலாய் இருந்தது. முத்தையா சென்னைக்குப் போனதற்கும், எட்டு வருசம்கழித்து திரும்பி வந்ததுக்கும் இருந்த காரணம் ஒன்றுதான் என்பதை பெத்த வயிறு அறிந்துகொண்டது. வீடு தடுமாறிய போதெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு தாங்கிக் கொள்ள அவனாகவேமுன்வந்தவன். அவனைப் பற்றி அவருக்குத்தான் தெரியும். சின்னப் பெண் கண்மணிக்கு என்ன தெரியும்?
திரும்பிவந்த முத்தையாவிடம் புதுசாய் ஒரு பழக்கத்தை சுப்புத்தாய் கண்டார். கையில் புத்தகங்களைக்கொண்டு வருவதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவைகளைப் படிப்பதும் ஆச்சரியமாய் இருந்தது.கேட்டதற்கு கதைப்புத்தகம் என்றான். மேற்கு ரத வீதியில் மார்க்கெட்டுக்கு அருகில் இருந்தசிவந்தி சைக்கிள் கடையில் வேலை பார்த்த கண்ணன், அப்புறம் ஆதி, இன்னும் சில பையன்கள்வடக்கத்தியம்மன் தெருவில் ராத்திரியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ’ராஜேஷ்குமார்பேரவை’ என்று அவர்கள் ஆரம்பித்தபோது சுப்புத்தாய்க்கு வேடிக்கையாய் இருந்தது. ஒருநாள் சாயங்காலம் சுப்புத்தாயை வந்து பார்த்த முருகன் “நீ சொல்ற மாதிரி முத்தையா சரியானகிறுக்குப்பயதான் போலுக்கு” நக்கலாகச் சொன்னான். அவரோ புத்தகங்களை இப்படி கூடவே வைத்திருக்கிறஒருவன் எப்படி படிப்பை விட்டு வேலைக்குப் போனான் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
சுப்புத்தாய்க்குவாழ்க்கை கொஞ்சம் நிதானமானது அந்த நாட்களில்தான். முத்தையாவுக்கு ஒரு பெண் பார்த்துகல்யாணம் முடித்து விட்டால், பிறகு சண்முகம் மட்டும்தான், தங்கள் கடன் முடிந்தது என்னும்நினைப்பே நிம்மதி தந்தது. சாயங்காலங்களில்தெருவிளக்குகள் போட்டதும் மனம் ஆசுவாசமடைந்தது.
ராஜாஎலக்டிரிக்கல்ஸில் நடந்த அந்தக் கொலை எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டது. அடுத்து அடுத்துஎன சில நாட்களில் பரவிய செய்திகளில் மனித ரத்தத்தின் வாடையடித்தன. சாத்தூரில் தொடங்கியஜாதிக் கலவரம் அங்கங்கு தொட்டு சுற்றிலும் பரவியது. பகல் மட்டுமே மனிதர்கள் நடமாட்டங்களுடன்இருந்தது. மாலையிலேயே வைப்பாற்றங்கரை இருளடைந்தது. இரவு யாருமற்று நின்றது. மனிதர்களோடுஜொலித்துக் கொண்டிருந்த முக்கனாந்தல் வெட்ட வெளியாகிப் போனது. ஊரின் கனத்த அமைதியைக்கிழிக்க முடியாமல் நடுநிசியில் திருவள்ளுவர் பஸ்கள் மெயின் ரோட்டில் தடதடத்து ஓடி மறைந்தன.. வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என்று ஜாதி சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்றுகேள்விப்பட்டதும் சுப்புத்தாய்க்கு பதறியது. விருதுநகர் ஆனைக்குட்டத்தில் மூத்த மகள்சொர்ணத்தின் வீட்டுக்கு முத்தையா அனுப்பி வைக்கப்பட்டான்.
தாய்மாமாகுருசாமி புண்ணியத்தில் ரேஷன் கடையில் அவன் வேலைக்குச் சேர்ந்ததும் இருக்கன்குடிக்கு நடந்தே சென்று மாரியாத்தாவை பார்த்துவந்தார். ரேஷன் கடையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும்அதுகுறித்து முத்தையாவிடம் ஒருநாளும் சுப்புத்தாய்கேட்டதில்லை. வீட்டில் அரிசிக்கும், சீனிக்கும்,மண்ணென்ணெய்க்கும் குறைவில்லாமல் போனது. விருதுநகரில் முருகன் வீட்டுக்கும் ரேஷன் கடையிலிருந்துமுத்தையா கொடுத்து அனுப்புவான். பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சண்முகத்திற்குஅவ்வப்போது செலவுக்கு கொடுத்து உதவினான். அதிமுக வென்று ஜெயலலிதா அப்போது முதல் முறையாய்முதலமைச்சராகியிருந்தார்.
முத்தையாவின்போக்கும் நடவடிக்கைகளும்தான் பயமுறுத்த ஆரம்பித்தன. தினமும் தண்ணியடிக்கிறான், சமாதியில்போய் உட்கார்ந்து குறி சொல்கிறான் என்பது வதைத்தது. இன்னொரு செல்லச்சாமியாகி விடுவானோஎன்றிருந்தது. தூக்கம் வராமல் தனலட்சுமி தியேட்டரின் ஓடும் சினிமாச் சத்தத்தோடு புரண்டு புரண்டு படுத்தார். வடக்கத்தியம்மன் கோவில்திருநீற்றை எடுத்து தனது நெற்றியெல்லாம் பூசிக்கொண்டார். பெரிய கொல்லப்பட்டியில் சீனியம்மாவைக்கண்டு அவசரம் அவசரமாக முத்தையாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார். வருசம் ஒரு குழந்தைஎன வரிசையாக பெற்றாலும், குடியும் சீனியம்மாவுக்கு அடியும் குறைந்த பாடில்லை. மூன்றுபிள்ளைகளோடு சீனியம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா? சாத்தூரிலிருந்து பதைபதைப்போடு டவுண்பஸ்ஸில்விருதுநகர் சென்று முத்தையாவை சத்தம் போட்டு சீனியம்மாவுக்கு ஆறுதலாய் இருப்பார். தனலட்சுமிதியேட்டரில் சின்னக்கவுண்டர் படம் பார்த்த அன்று வழியில் தன் கண்ணில் படாமல் சீனியம்மாஇருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்திருக்கிறார். “உலகந் தெரியாம பாவம் போல இருந்தஒரு பொண்ணோட வாழ்க்கைய அநியாயமா நீதான் நாசமாக்கிட்ட.” முருகன் பல தடவை குத்திக்காட்டியிருக்கிறான்.
டிப்ளமோபடித்து முடித்த சண்முகம் மஸ்கட்டில் வேலை கிடைத்து சென்றான். சுப்புத்தாய்க்கு மாதா மாதம் இருநூறு ருபாய் முருகனின்பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தான். முருகனும், சண்முகமும் எப்படியோ படித்து எதோஒரு வேலையில் சேர்ந்து தங்கள் காலத்தை நல்லபடியாய் தள்ளி விடுவார்கள் என்ற நம்பிக்கைவந்தது. முத்தையா மட்டும் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என கவலைப்பட்டார்.
”ஓங்கிறுக்குப்பய இப்ப ரவுடிப்பய ஆய்ட்டாம் போலுக்கு” வெறுத்துப் போய் முருகன் சுப்புத்தாயிடம்சொன்னான். குடிப்பவர்களைக் கண்டால் அவனுக்கு ஆகவே ஆகாது. செல்லச்சாமியைப் பார்த்துவளர்ந்த வெறுப்பு அது. அப்போது முருகன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.ஒரு சாயங்காலம் நடராஜா தியேட்டரில் படம் பார்க்க அப்போதுதான் கல்யாணமாகியிருந்த மூத்தஅக்கா சொர்ணமும் அவளது மாப்பிள்ளையும் புறப்பட்டு வெளியே சென்றார்கள். அந்தத் தெருவில்இருந்த கவர்ன்மெண்ட் டாக்டர் சொர்ணத்தை பார்த்த பார்வை சரியில்லையென்று தண்ணியில் இருந்தசெல்லச்சாமி சண்டைக்குப் போய் அசிங்கமாய் பேசி விட்டார். குடித்துவிட்டு ரகளை செய்கிறார் என்று டாக்டர் புகார்அளித்ததும், செல்லச்சாமியை போலீஸார் பிடித்து சென்று விட்டார்கள். பக்கத்தில் தங்கள்ஜாதியில் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரை அழைத்துக் கொண்டு பதிமூன்று வயது முருகன் ஸ்டேஷனுக்குச்சென்றான். ஸ்டேஷனில் கூனிக் குறுகி நின்ற செல்லச்சாமியையும், கெட்ட கெட்ட வார்த்தைகளில்பேசிய போலீஸையும் பார்த்து அவமானத்தில் உறைந்து போனான். அன்றிலிருந்து அப்பாவிடம் அவன்பேசுவதே இல்லை. முத்தையாவிடம் பேசுவதையும் இப்போது குறைத்துக் கொண்டான்.
தாமாகாவோடுஇணைந்து திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முத்தையாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டநிகழ்வும் அப்போதுதான் நடந்தது. ரேஷன் கடைக்கு வழக்கமாய் வந்து அரிசியும், சீனியும்வாங்கிச் சென்று கொண்டிருந்த பால்ராஜ் ஒருநாள் “ஏன் தம்பி, நீங்க எட்டாம் வகுப்பு டைரக்டாஎழுதக் கூடாது?” என்று கேட்டார். விருதுநகர் கலெக்டர் ஆபிஸில் கல்வித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் அவர். சிரித்துக் கொண்டு, “நா எப்படி இனும..” என தயங்கியவனை, “நானுந்தான்பாக்குறேன். புத்தகங்கள் படிக்கிறீங்க. சின்ஸியரா இருக்கீங்க. ஒங்களால முடியும். எழுதிப்பாருங்க..” என்று மேலும் சொல்லவும் யோசிக்க ஆரம்பித்தான். அடுத்த நாள் ஆபிஸிலிருந்துவரும்போது எட்டாம் வகுப்பு பரிட்சை நேரடியாக எழுதுவதற்குரிய விண்ணப்பங்களை கொடுத்துஅதை நிரப்புவதற்கு உதவி செய்தார்.
படிக்கிறகாலத்தில் படிக்காமல், கல்யாணம் பண்ணி, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு எட்டாம்வகுப்பு எழுதுவதை அறிந்தவர்கள் பலரும் முதலில் கிண்டல் செய்தார்கள். ‘அட கிறுக்குப்பயலே, இது என்ன கூத்து’ என்றுதான் சுப்புத்தாய்க்கும் இருந்தது. சரியாக அந்த நேரத்தில்தான்‘ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சாலைப் பணியாளர்கள் வேலை’ என முதலமைச்சர் கருணாநிதிஅறிவித்தார். விருதுநகர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராயிருந்த பாட்சா ஆறுமுகம், வேலைக்குநான் கேரண்டி என்று சொல்லி முத்தையாவை விண்ணப்பிக்கச் சொன்னார். ரேஷன் கடையில் தினமும்முன்னூறு நானூறு வரும்படி கிடைத்தது. சாலைப் பணியாளார்களுக்கு ஒரு மாசத்துக்கே அறுநூறுருபாய் போலத்தான். முத்தையா யோசித்தாலும், ‘கவர்ன்மெண்ட் வேலை’ என்பதே பெரிதாய் தெரிந்தது.முன்பணம் கட்டுவதற்கு மஸ்கட்டிலிருந்து சண்முகம் இருபதாயிரம் ருபாய் அனுப்பினான்.
ஃபேனுக்கடியில்உட்கார்ந்து ரேஷன் கடையில் வேலை பார்த்த தன் மகன் திரும்பவும் ரோட்டில் வெயிலில் கிடந்துகஷ்டப்படுகிறானே என சுப்புத்தாய் தவித்தார். ஒரு வகையில் அதுவும் நல்லதாகவேப் பட்டது.பணம் கையில் புரளாததால் குடியும் அவனிடம் குறைந்து போயிருந்தது. இரண்டு முறை பெயிலானாலும்தக்கி முக்கி முத்தையா எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணிய நேரத்தில்தான் கண்மணியும் ஸ்கூலுக்குபோக ஆரம்பித்திருந்தாள்.
சின்னவன்சண்முகத்திற்கு தன் மூத்த மகள் சொர்ணத்தின் மகள் கனகத்தை திருமணம் செய்து வைத்து, தனக்குஇருந்த எல்லாக் கடன்களையும் அடைத்த நிம்மதி கொஞ்ச நாள் கூட சுப்புத்தாய்க்கு நிலைக்கவில்லை.இரண்டாவது தடவையாக முதலமைச்சராக வந்த ஜெயலலிதா ஒரே நாளில் சாலைப் பணியாளர்கள் அனைவரையும்வேலையை விட்டு வெளியே அனுப்பினார். பத்தாயிரம் குடும்பங்கள் செய்வதறியாமல் நிலைகுலைந்துபோயின. சாலைப் பணியாளர்கள் தெருவில் இறங்கிப் போராடினர். அந்த சங்கத்தின் முக்கிய தலைவர்களில்ஒருவன் முத்தையா என்றும் அவன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் கேள்விப்பட்டார்.தண்ணியடிப்பதை முழுசாக நிறுத்திவிட்டு ஊர் ஊராகச் சென்று கொடி பிடித்து போராட்டங்களில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான்.பேப்பர்களிலும், டிவிகளிலும் வரும் செய்திகளைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்சொன்னார்கள். கிறுக்குப் பயலை பார்ப்பதே சுப்புத்தாய்க்குஅபூர்வமானது.
மூன்றரைவருட போராட்டங்களின் முடிவில் சாலைப் பணியாளர்களை ஜெயலலிதா மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டதாக அறிவித்தார். அத்தனைக்கும் மத்தியிலும் முத்தையா பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருந்தான். தொடர்ந்து ப்ளஸ் டூ, பி.காம், எம்.காம், என்சீனியரிங்டிப்ளமா என வாயில் நுழையாத படிப்பையெல்லாம் முத்தையா படித்து முடித்ததும் மகனுக்குஎன்ன கிறுக்கு என்பது தெரிந்தது. உள்ளுக்குள் இத்தனை ஆசையை வைத்துக்கொண்டுதான் அந்தசின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றானா என குற்ற உணர்வு வந்தது.ரோடு இன்ஸ்பெக்டராகி இன்று ஜூனியர் எஞ்சீனியராக பேண்ட் சட்டை போட்டு, சட்டைப்பையில்பேனா குத்தி நடந்து வரும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஏங்கிறுக்குப் பயலே, கிறுக்குப்பயலே’என கட்டிப் பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. படிப்பு ஒரு மனிதனை எப்படி உயர்த்துகிறதுஎன்பதை அவருக்கு முத்தையா காட்டி விட்டான்.
தான்படிக்கவில்லை, தன் அண்ணன் முருகனைப் போல ஒரு மரியாதையுடன் தன்னை யாரும் பார்க்கவில்லைஎன்ற புழுக்கத்தில்தான் இத்தனை நாளும் அப்படி குடித்துத் திரிந்தானோ என்றெல்லாம் கூடதனலட்சுமி தியேட்டரின் சினிமா சத்தத்தோடு படுக்கையில் கிடந்து யோசித்திருந்தார். ஒருஇரவில் எழுந்து “ஏ மாரியாத்தா” என பெரிதாய் குரலெடுத்து அழுதார். பதறி எழுந்த செல்லச்சாமிக்குஅவரது அழுகை வித்தியாசமாயிருந்தது. இப்போதும் சுப்புத்தாய்க்கு அப்படி அழத்தான் தோன்றியது.
சட்டென்றுகோபத்தில் கை நீட்டுகிற முத்தையா இப்போது எவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கிறான்.ஒருநாளும் கண்மணியைக் கடிந்து கூட பேசவில்லையே. ”நீ மொதல்ல படிச்சு முடிம்மா. அப்பாவேஉனக்கு அந்தப் பையன கல்யாணம் பண்ணி வைக்கேன்” என்றுதானே சொன்னான்.
“ஏஞ்செல்லம்கண்மணி! ஏம்மா இப்படி பண்ணிட்டே..”
செல்லச்சாமிதெற்குரத வீதியில் இருந்து திரும்பி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
(தொடரும்)
March 22, 2025
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்

முன்பதிவுசெய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப் பார்த்து அதை நோக்கி கண்மணியைஅழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி அப்பாவைப் பார்த்தாள். முத்தையாவோ ஜன்னல்களை ஒட்டி பிளாட்பாரத்தில் வேகமாய் நடந்து“கண்மணி இங்க ஒரு இடமிருக்கு” ஒரு ஜன்னல் பகுதியைக் காட்டியவாறு வெளியிலிருந்து கத்தினான்.அவள் அதை நோக்கி உள்ளே சென்றாள். உறங்கிக் கொண்டிருந்த வயதான அம்மா பக்கத்தில் ஒண்டிக்கொண்டாள்.முத்தையாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஒரு வெட்டு வெட்டி ரயில் புறப்படவும் “பாப்போம்கண்மணி, நல்லாப் படிம்மா” முத்தையா கையசைத்தான். ரெயில் வேகமெடுத்துக் கடந்தது. பிளாட்பாரம்பின்னால் சென்று கொண்டிருந்தது. தனியே நின்றிருந்த முத்தையா சின்ன உருவமாகிக் கொண்டிருந்தான்.வெளி இருட்டு ரெயிலைச் சூழ்ந்தது. கண்மண் தெரியாமல் ரெயில் ஓட்டம் பிடிக்க தூரத்துவெளிச்சப் புள்ளிகளோடு இரவு சரசரவென பின்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. அவள்மீது அப்பா காட்டிய அக்கறையும், வைத்திருந்த நம்பிக்கையும் கூடவே வந்தது.
கண்மணியும்முத்தையாவும் அப்படியே ’அபியும்.நானும்’ படத்தில் வரும் மகளும் அப்பாவுமாக இருக்கிறார்கள்என்று சாத்தூரில் லாரி ஷெட்டில் வேலை பார்க்கும் சீனியம்மாவின் தம்பி பாண்டி சொல்வான்.முத்தையாவோடு கூடவே இருக்கும் தோழர் கோட்டைராஜும் படம் பார்த்து சொல்லியிருந்தான்.அமிர்தராஜ் தியேட்டரில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து குடும்பத்தோடு அந்த படம் பார்த்ததைகண்மணியால் மறக்க முடியாது. அபியையும் அவள் அப்பாவையும் போல அப்படியே தாங்கள் இல்லைஎன்றாலும் அப்படி பார்க்கப்படுவதிலும் பேசப்படுவதிலும் முத்தையாவுக்கும் கண்மணிக்கும்ஒரு மகிழ்ச்சி இருந்தது.
கேட்கிறமகள் அவள் இல்லை. கேட்டதையெல்லாம் வாங்கித் தருகிற அப்பா அவன் இல்லை. மிஞ்சிப் போனால்சென்னையில் பாண்டிபஜாரில் பத்து ருபாய் இருபது ருபாய்க்குள் கம்மல், கிளிப் போன்றுசின்னச் சின்னதாய் வாங்கித் தருவான். அவளும் ஆசையோடு போட்டுக் கொள்வாள். நம் சக்திக்குமீறி ஆசைப்பட்டு அவமானங்களை சந்திக்கக் கூடாது, சுயமரியாதையை இழக்கக் கூடாது என்றுஅடிக்கடி முத்தையா சொல்வான். அப்பத்தா சுப்புத்தாய் ‘அந்தக் கிறுக்குப்பய’ என ஆரம்பித்துஅப்பாவைப் பற்றி சொல்லியிருந்த பழைய கதைகளிலிருந்து ஹார்லிக்ஸ் மேலெழுந்து வரும். கண்கலங்கிப்போவாள்.
சாத்தூரில்காட்டு புதுத்தெருவில் இருக்கும்போது வீட்டில் ஒரே கஷ்டம். முத்தையாவின் அப்பா செல்லச்சாமிக்குவருமானம் பெரிதாய் ஒன்றும் இல்லை. குடிக்க மட்டும் செய்வார். வீட்டில் மூத்தவன் முருகன்,முத்தையா, இளையவன் சண்முகமும் படித்துக்கொண்டு இருந்தார்கள். அக்கா லட்சுமி தீப்பெட்டிஅட்டை ஒட்டினாள். ஆரிய வைஷ்யா பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்த முத்தையா தானும் ஒருபாரமாய் இருக்க விரும்பாமல் படிப்பை நிறுத்திவிட்டு பழனிச்சாமியின் ரொட்டிக்கடைக்குவேலைக்குச் சென்றுவிட்டான். அங்கிருந்து நிப்புக்கம்பெனி, ஐஸ் கடை என்று மாறி மாறிஇரண்டு வருடம் வேலை பார்த்தான். சென்னையில் பின்னி மில் பக்கத்தில் மேட்டுப் பாளையத்தில்பலசரக்குக் கடைக்கு வேலைக்குப் போனான். சாப்பாடு போக மாதம் முப்பது ருபாய். வீட்டுக்குஅனுப்பி விடுவான். சுப்புத்தாய்க்கு அந்த பணம் பக்க பலமாய் இருந்தது. பிறகு அகரத்தில்ஒரு கடையில் வேலை. அங்கிருந்து ஆத்தியப்பனின் ஸ்டேஷனரிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான்.
முத்தையாவோடுசேர்ந்து அந்தக் கடையில் மேலும் இரண்டு பையன்கள் வேலை பார்த்தார்கள். ஆத்தியப்பன் வீட்டுமாடியில் போட்டிருந்த குடிசையில் தங்கியிருந்தார்கள். மூன்று வேளை சாப்பாடும் வீட்டில்தான்.மதியம் மட்டும் கேரியரில் கடைக்கு வந்துவிடும். முத்தையாவின் சுறுசுறுப்பும், கடைக்குவருகிறவர்களிடம் பொறுப்பாய் பேசும் விதமும் ஆத்தியப்பனுக்கு பிடித்திருக்கிறது. அவனுக்கும்மற்ற இடங்களை விட அங்கு வசதியாகத் தெரிந்தது.
கடையில்யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒருநாள் ஹார்லிக்ஸ்டப்பா ஒன்றைத் திறந்து கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டுஅவ்வளவு ருசியாய் இருந்தது. திரும்பவும் ஒரு கை எடுத்துத் தின்றான். ஹார்லிக்ஸ் டப்பாவைமூடி வைத்து விட்டு பிசுபிசுப்பாய் இருந்த வாயையும் கையையும் துடைத்துக் கொண்டான்.மூன்று நாள் கழித்து ஹார்லிக்ஸ் வாங்கிய ஒருவர், டப்பா திறக்கப்பட்டு இருப்பதையும்,ஹார்லிக்ஸ் கொஞ்சம் குறைந்திருப்பதையும் ஆத்தியப்பனிடம் காட்டினார். அதற்கு பதிலாகஇன்னொரு ஹார்லிக்ஸ் பாட்டிலைக் கொடுத்தனுப்பிவிட்டு வேலைக்கு இருந்த மூன்று பேரிடமும் ஆத்தியப்பன் விசாரித்தார். தாங்கள்எடுக்கவில்லை என்றனர். யோசனை செய்தவாறு கேட்டுக் கொண்டார்.
அடுத்தநாள் ராத்திரி மாடிக்கு வந்த ஆத்தியப்பன் முத்தையாவை மட்டும் கீழே வீட்டுக்கு அழைத்துச்சென்றார். டிவியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் செங்கோல் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியும்செய்தியும் ஓடிக்கொண்டு இருந்தது. உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும்புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்துஅவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா”என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்குகைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன் இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார்.அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.
முத்தையாவுக்குஅழுகையாய் வந்தது. கையெடுத்துக் கும்பிட்டு, “முதலாளி…. தெரியாமச் செஞ்சிட்டேன். இனுமஇப்படி செய்ய மாட்டேன்” கெஞ்சினான்.
“சாப்பிடுன்னுசொன்னேன்….” அதட்டினார். தட்டிலிருந்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ”ம்” என்றுசொல்லவும் பயத்தில் இன்னொரு கையள்ளி வாயில் போட்டுக் கொண்டு அவரை பரிதாபமாகப் பார்த்தான்.
”அவசரப்படாத.மெல்ல சாப்பிடு. எல்லாம் உனக்குத்தான். சாப்பிடாம எந்திக்கக் கூடாது.” சோபாவில் உட்கார்ந்துகைகளைக் கட்டிக் கொண்டார். அவரது மனைவி உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தார்.
“முடிலமுதலாளி… என்ன விட்டிருங்க… இனும ஒருநாளும் செய்ய மாட்டேன்.” ஹார்லிக்ஸ் அடைத்திருந்தவாயைத் திறக்க முடியாமல் அழுதான் நெஞ்சையடைத்தது முத்தைய்யாவுக்கு.
அவரதுமனைவி வேகமாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, “என்னங்க இது? எதோ ஆசையில் ஒரு வாய்எடுத்ததுக்கு இப்படி பாடாய் படுத்துறீங்க.” என்றாள்.
”பாடாய்படுத்தலடி. பாடம் எடுக்குறேன்.” சொல்லிவிட்டு முத்தையாவிடம், ”உனக்கு உரிமையில்லாதஒரு பொருள் வேணும்னா கேக்கணும். எடுக்கக் கூடாது” எச்சரிப்பதைப் போல கைகளைக் காட்டி,“எந்திச்சுப் போ” என்றார்.
சொல்லிக்கொண்டுவந்த அப்பத்தா சுப்புத்தாய். கண்களை மூடி”முத்தையா” என்றார். கண்களைத் திறந்தபோது கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. தோல் சுருங்கியஅப்பத்தாவின் கைகளை எடுத்து வைத்துக் கொண்டு கண்மணி வருடிக் கொடுத்தாள். தழும்பேறியஅந்த கடந்தகால வாழ்க்கையின் காயங்களை சுமந்த நினைவுகளே அப்பாவின் வாசமாய் இருந்தது.வயிற்றுப் பிழைப்புக்குக் கிடந்து அவதிப்படுகிற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் கவனிக்கவும்,நேசம் கொள்ளவும் செய்தது.
வீட்டைவிட்டு புறப்பட்டபோது மேற்குப் பக்கம் கண்ட நிலா அடிவானத்தில் இறங்கியிருந்தது. கொஞ்சநேரத்தில் சாத்தூர் வந்துவிடும். வழக்கமாய் சுப்பையா இன்னேரம் அங்கு காத்திருப்பான்.மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்கள் இரவில் ஊருக்குள் வராமல் பைபாஸில் சென்றுவிடும்என்பதால் விடிகாலை மூன்று மணிக்கு விருதுநகர் கலெக்டர் ஆபிஸ் சென்று பஸ் ஏறுவான். மூன்றரை,மூன்றே முக்காலுக்கு சாத்தூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விடுவான். ரெயில் நிற்கும்அந்த இரண்டு மூன்று நிமிடங்கள் தன்னைப் பார்க்கவும் சில வார்த்தைகள் பேசவும் அப்படிவந்து நிற்பது கஷ்டமாயிருந்தாலும் கண்மணிக்குப் பிடித்து இருந்தது. இதமான காற்று முடியைபறக்க விட, மெல்ல மெல்ல வெளியெல்லாம் பார்வையில்பிடிபட, பொழுது புலரும் ரெயில் பயணத்தின் அழகிய நினைவாக அன்று முழுவதும் அவளுக்கு சுகமாயிருக்கும்.
சுப்பையாஇன்று வருவானா என்று சந்தேகமாயிருந்தது. முந்தாநாள் கோபத்தில் சென்றிருந்தான். ”இன்னும்கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன…… ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” தெப்பக்குளம்அருகே ஜெராக்ஸ் கடைப்பக்கத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது கேட்ட பாட்டும்சுப்பையாவின் வாடிய முகமும் ஒருபுறம் வதைத்துக் கொண்டிருந்தது. தன்னால்தான் எல்லாம்என்று இரண்டு நாளாய் வருந்திக் கொண்டிருந்தாள். அவனோடு இருந்த கொஞ்ச நேரத்தில் தன்னைஅப்படியே வெளிக்காட்டுவதாய் நினைத்து பேசியதுதான் வினையாகி விட்டது. தனிமையில் தலையிலடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
கடையின்இடது பக்கம் அடைப்பு வைத்து மறைவாய் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில்டீக்கடையில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ”எனக்கு இந்த திங்கட்கிழமை காலேஜ்க்கேபோகவேப் பிடிக்கல. இன்னும் ரெண்டு நாள் இருக்கணும்னு தோணுது. அப்பாக்கிட்ட சொல்ல முடியாது,படிக்குறதுக்கு மட்டம் போடுறதாய் நினைப்பாங்க.” என்றாள்.
சுப்பையாஉற்சாகமானான். “அப்போ ஒன்னு செய்யலாம். திங்கக்கிழமை காலைல நா சாத்தூர் வந்துர்றேன்.நீ அங்க இறங்கிரு. நாம ஒன்பது மணிக்குள்ள குத்தாலத்துக்குப் போயிரலாம். கொஞ்ச நேரம்ஜாலியா சுத்திப் பாத்துட்டு மதியத்துக்கு மேல அங்கயிருந்து நீ திருச்செந்தூருக்குப்போயிரு. நா விருதுநகருக்கு வந்துர்றேன்.”
“அய்யய்யோ…முடியாது”சட்டென்று மறுத்தாள் கண்மணி.
“ப்ளீஸ்கண்மணி. நாம இது வரைக்கும் தனியா எங்கயும் போனதில்ல. அடடா மழைடா அடை மழைடா…. அழகா சிரிச்சா…..புயல் மழைடா…… பாட்டுப் பிடிக்கும்னு சொல்லிட்டு, அத மாரி யாருமில்லாத இடத்துக்குப்போயி மழைல ஆட்டம் போடணும்னு சொல்வேல்ல… ஆட்டமெல்லாம் வேண்டாம். அஞ்சு நிமிஷம் பத்துநிமிஷம்னு இப்படி பயந்து பயந்து பாத்துட்டு பேசிட்டு இருக்குறதுக்கு உங்கூட ரொம்ப நேரம்இருக்கலாம். நிறையா பேசலாம்” இழுத்தான்.
“ஐடியால்லாம்நல்லா இருக்கு. எனக்கும் ஆசைதான். ஆனா வேண்டாம். வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்.உடைஞ்சு போவாங்க.” கொஞ்சிக் கொண்டே மறுத்தாள்.
“வீட்டுக்குத்தெரியாது கண்மணி. பாத்துக்கலாம்”
“இல்ல.அப்பாவுக்கு எல்லா ஊர்லயும் யாராவது தோழர்கள் இருப்பாங்க.”
“அப்பாவுக்குத்தெரிஞ்சவங்க இருப்பாங்க. நீதான் முத்தையாவோட பொண்ணுன்னு யாருக்குத் தெரியும்? உன்னயும்என்னயும் தெரிஞ்சவங்க யார் இருப்பா?”
கைகளைக்கட்டியபடி யோசித்தவள், “சரிதான். ஆனா வேண்டாம்ப்பா. பயம்மா இருக்கு.” தலையை வேகமாகஆட்டிக்கொண்டு சொன்னாள். அவன் பேசவில்லை. முகம் வாட்டமடைந்தது. தெப்பக்குளத்தையும்,சுற்றியிருந்த கடை வீதியில் சந்தடியாயிருந்த மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கோபமா..”கேட்டாள்.
பதில்சொல்லாமல் அவளை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, திரும்பவும் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
அவளும்அமைதியானாள்.
“வர்றேன்…”கிளம்பினான்.
“ஏம்ப்பாஇப்படி பண்றீங்க, நல்லால்ல. நாள கழிச்சு காலேஜ்க்கு போயிருவேன். அப்புறம் ஒரு வாரம்நாம பாக்க முடியாது.” சோகத்தோடு சொன்னாள்.
“உனக்கும்உங்க அப்பாவுக்கும் படிப்புத்தான் முக்கியம். எனக்கு அப்படியில்ல. நீ மட்டுந்தா முக்கியம்.ஏன்னா நா ஒரு முட்டாள்.”
“எனக்குபடிப்பும் முக்கியம். நீங்களும் முக்கியம். படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏம்ப்பாஇப்டி. ப்ளீஸ்… என்னை வருத்தப்பட வைக்காதீங்க.”
“படிப்புமுடிஞ்சதும் உங்கப்பா இந்த ஆட்டோக்காரனுக்கு உன்ன கல்யாணம் பண்னி வைப்பாராக்கும்? எனக்கு அந்த நம்பிக்கைலாம் இல்ல.”
“அப்பாபண்ணி வைக்கலண்ணா, உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காதா?”
“அதெல்லாம்பேசலாம் கண்மணி. படிச்சு முடிச்சதும் நீ எங்கயோ போயிருவே. நா இப்படி ரோடு ரோடா அலைஞ்சுக்கிட்டுகிடக்க வேண்டியதுதான்..”
அவர்களதுபேச்சை பக்கத்தில் இரண்டு பேர் டீ குடித்துக்கொண்டே கவனித்துக் கொண்டிருப்பது போல கண்மணிக்குத்தோன்றியது. அமைதியானாள்.
“நீஎன்ன விட்டுப் போயிருவியோன்னு பயம்மா இருக்கு. உன்னப் பாக்காம இருக்கவே முடில. கண்டதையும்நெனைச்சு நெனச்சு இப்பவே பைத்தியமாய்ட்டு இருக்கேன். நீ இல்லன்னா அவ்ளோதான். பேசாமசெத்துத் தொலைச்சிரலாம்னு தோணுது”
கண்மணியால்தாங்க முடியவில்லை. பக்கத்தில் நெருங்கி அவன் கையைப் பிடித்து, ”ப்ளீஸ்பா. எல்லாரும்பாக்குற மாரி இருக்கு. என்ன நம்புங்க. அவ்ளோதான் சொல்ல முடியும்.” மெல்லிய குரலில்,அதே நேரம் அழுத்தமாய் சொன்னாள். அவளது கையை உதறியபடி சுப்பையா வேகமாய் போய்விட்டான்.
சாத்தூர்நெருங்கிக்கொண்டு இருந்தது. ரெயிலின் வேகம் குறைந்தது. தான் உட்கார்ந்திருந்த இடத்தில்பையை வைத்துவிட்டு எழுந்து செல்லப் போனவள், நின்று பையை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டு முன்னால் கதவுப்பக்கம் சென்றாள். ஒருவேளைசுப்பையா வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் போலிருந்தது. அவனைத் தேடிப்பார்த்துவிட்டு, இல்லையென்றால், திரும்ப உள்ளே வந்து பையை எடுத்துக் கொண்டு இறங்குவதற்குநேரமிருக்காது. சுப்பையாவைப் பார்க்காமல் காலேஜ் போனாலும் நிம்மதியாய் இருக்காது. பேசிக்கொண்டுகதவருகில் நின்ற இரண்டு ஆண்கள் அவளுக்கு வழிவிட்டு உள்ளே நகர்ந்து கொண்டார்கள். அந்தஇடத்தில் மூத்திர வாடை பொறுக்க முடியாமல் இருந்தது.
ரெயில்நின்றதும் கண்மணி வெளியே தலையை எட்டிப் பார்த்தாள். அடுத்து இருந்த பெட்டியின் உள்ளேஜன்னல் வழியாய் சுப்பையா அவளைத் தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும்இருந்தது. ரெயிலில் ஏறுவதற்காக கீழே நின்றிருந்தவர்களில்ஒருவன், “ஹலோ, இறங்குறதுன்னா இறங்குங்க. வழிய மறிச்சுட்டு நிக்காதீங்க” அவசரப்பட்டான்.
சுப்பையாவைபார்த்து விட வேண்டும், சமாதானமாய் இரண்டு வார்த்தை பேசிவிட வேண்டும் என்றிருந்தது.இறங்கினாள். சுப்பையா அவளைப் பார்த்து, “கண்மணி!” என பொங்கிக்கொண்டு அருகில் வந்தான்.ஷேவ் செய்யாமல் இருந்தான். பையோடு அவளைப் பார்த்ததும் வேகமாய் வந்து கைகளைப் பிடித்துக்கொண்டு “ஏந்தங்கம்” என்றான்.
திரும்பவும்ஏமாறக் கூடாதே என்று இருந்தது. “ஸ்டேஷனுக்கு நீங்க வரலண்ணா விருதுநகருக்குத் திரும்பிரணும்னுபையோட எறங்கினேன். நீங்கதான் வந்தாச்சே. காலேஜ்க்கு போறேன்” சொல்ல நினைத்து நிதானித்தாள்,
”இதுபோதும் கண்மணி. உன்ன முழுசா நம்புறேன். இனும அப்படியெல்லாம் பேச மாட்டேன் மன்னிச்சுரு.”நெஞ்சில் கை வைத்துச் சொன்னான்.
”இப்பவாதுபுரிஞ்சுக்கிட்டீங்களே. அப்பாடி. காலேஜ்க்கு போலாமா?” கெஞ்சலாய் கேட்டாள்.
“விளையாடுறியா…”பையை எடுத்து தன் முதுகில் போட்டுக் கொண்டு “வா…வா” நடக்க ஆரம்பித்தான். என்ன செய்வதுஎன்று தெரியாமல் திகைத்தாள். விசில் சத்தம் கேட்க, வெட்டு வெட்டி ரயில் நகர ஆரம்பித்தது.அவளும் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். ஸ்டேஷனுக்கு வெளியே ஆட்டோக்காரர் ஒருவர்நெருங்கி, “எங்க போகணும்” கேட்டார். ”பஸ் ஸ்டாண்ட்தான்” சொன்னதும் விலகிக் கொண்டார்.பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்தான் இருந்தது.
காலேஜ்க்குப்போய்க்கொண்டிருப்பதாய் மொத்த வீடும் நம்பிக்கொண்டிருக்கும். சற்று முன்னால் அப்பாவின்கையைப் பிடித்து அழுததில் அவர் சமாதானமாகித் தெரிந்தார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி சுப்பையாவின்பின்னால் இப்படி நடந்து கொண்டிருப்பது தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று உறுத்தியது.அடுத்த கணமே தெரிந்தால்தானே, நாம்தான் சாயங்காலம் காலேஜ்க்கு போய்விடலாமே என்று நம்பிக்கையும்வந்தது. பஸ் ஸ்டாண்டில் அங்கங்கு சில பேர் நின்றிருந்தார்கள். அன்றைக்கு வந்த பேப்பர்களைஇரண்டு பேர் சைக்கிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.டீக்கடையில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். ராஜபாளையம் பஸ் புறப்பட நின்றிருந்தது.போய் ஏறிக் கொண்டார்கள். நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பையை உடலிலிருந்து கழற்றிஉட்கார்ந்ததும் சுப்பையா கண்மணியைப் பார்த்து சிரித்தான்.
“ம்…ஒருவழியா நினைச்சத சாதிச்சிட்டீங்க” கண்களை உருட்டி பெரிய ஆளுதான் என்பது போல காட்டினாள்.
“ஆமாம்,இதுக்கே இவ்வளவு அடிச்சிக்கிட வேண்டியிருக்கு” பெருமூச்சு விட்டான்.
“சரி. உங்க வீட்டுல என்ன சொல்வீங்க?” கேட்டாள்.
“ஆட்டோரிப்பேர். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க மதுரைக்கு வந்திருக்கேன்.” யோசிக்கமல் சொன்னான்.
“சரியானகளவாணி..” அவனை அடிப்பது போல பாவனை செய்தாள்.
அவன்அருகில் குனிந்து ”நீ இவ்வளவு பக்கத்துல இருக்க. தெரிஞ்சவங்க யாரும் இல்ல. எந்த அவசரமும்இல்ல. நா ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். இப்படி ஒரு நாள் அமையணும்னு எவ்வளவு நாள் ஏங்கியிருப்பேன்தெரிமா?” ரகசியம் போல மிக மெல்லிய குரலில் சொன்னான்.
கண்மணிஅவன் கைகளை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். இருவரும் பேசாமல் இருந்தார்கள்.காலேஜ்க்குப் போகாமல் இறங்கியதும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டாள். டிரைவர் ஏறவும்பஸ் புறப்பட்டது. காதல் படத்தில் அந்த இருவரும் இப்படித்தானே பஸ்ஸில் போனார்கள் என்றிருந்தது.
‘உனக்கெனஇருப்பேன்…. உயிரையும் கொடுப்பேன்…. உன்னை நான் பிரிந்தால்….. உனக்கு முன்னே இறப்பேன்……கண்மணியே….” பத்தாவது வயதில் உட்கார்ந்த இடம், நின்ற இடம், போன இடமெல்லாம் அவள் பேரைச்சொல்லி வலியோடு அழைத்துக் கிடந்தது அந்தக் குரலும் இசையும். நடுரோட்டில் தாடி முடியோடு பைத்தியமாய் சுற்றிக்கொண்டிருந்தபரத்தின் நெஞ்சில் பச்சைக்குத்தியிருந்ததை தன் பேராகவே உணர வைத்தது. எப்போது கேட்டாலும்அந்த பாட்டு உயிரைப் பிசைவது போலிருக்கும்.
முத்தையாஅப்போது வீட்டில் இருந்ததே குறைச்சல்தான். இரண்டாயிரத்து இரண்டு செப்டம்பரில் பத்தாயிரம்சாலைப் பணியாளர்களை ஜெயலலிதாவின் அரசு பணிநீக்கம் செய்தது. ஐந்து வரைப் படித்தவர்களுக்குஒரு அரசு வேலை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. தங்களுக்கு நிச்சயமான ஒரு எதிர்காலம்இருக்கும் என அவர்கள் கண்டிருந்த கனவில் மண்ணள்ளிப் போட்டது. சிலருக்குப் பைத்தியம்பிடித்து தெருவில் அலைந்தார்கள். அறுபது பேருக்கும் மேலே தற்கொலை செய்து கொண்டார்கள்.மூன்றரை வருடங்கள் தமிழ்நாடு முழுவதும் சாலைப் பணியாளர்கள் திரும்பவும் வேலை கேட்டுபோராடினார்கள். அதற்குத் தலைமை தாங்கி நடத்தியதில் முத்தையாவின் பங்கு முக்கியமானது.அதிகாலையில் புறப்பட்டுப் போவான். எல்லோரும்தூங்கிய பின்னிரவில் வருவான். பல நாட்கள் வீட்டில் தங்குவதும் இல்லை. ஒரு தடவை சென்னைக்குப்போனவன் ஒரு வாரத்துக்கும் மேலாய் வரவில்லை. ஆனைக்குழாய் பகுதியில் வெள்ளம் வீட்டுக்குள்புகுந்து அவதிப்பட்டார்கள். சாலைப்பணியாளர் சங்கத் தோழர்கள்தான் வந்து உதவிகள் செய்தார்கள்.இரண்டாயிரத்து ஆறு பிப்ரவரியில் மீண்டும் சாலைப் பணியாளர்கள் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். வீடும் சூழலும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தாலும் அப்போது கண்மணிக்குள்எழுந்திருந்த குழப்பங்களை, சந்தேகங்களை வீட்டில் யாரும் அறிந்திருக்கவில்லை.
வளரும்பெண்ணின் மாற்றங்களை தன்னில் பார்க்க ஆரம்பித்ததும் கண்மணிக்கு மின்சாரக் கம்பிகளில்மைனாக்கள் கூடு கட்ட ஆரம்பித்தன. எட்டாவது படிக்கும்போது வயதுக்கு மீறி பெரிய பெண்ணாய்கண்மணி தெரிவதாய் அடுத்த தெருவிலிருக்கும் ராணியக்கா சீனியம்மாவிடம் ஒருநாள் வீட்டுவாசலில் வைத்துச் சொன்னதைக் கேட்டதும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு பாத்ரூமிற்குள்நுழைந்து கொண்டாள். அங்குமட்டும்தான் கதவை மூடிக்கொள்ள முடியும். அந்தச் சின்ன வீட்டில்அவள் தன்னை அறிந்து கொள்ள இடமில்லை. எல்லோருக்கும் நேர்வதுதான் அவளுக்கும் நேர்கிறதுஎன்பதைச் சொல்லி இயல்பாக்கும் மனிதர்கள் இல்லை. விரிந்திருந்த பள்ளிதான் அடைக்கலமாயிருந்தது.கூட படிக்கும் தோழிகளோடு பேசுவது சுவாரசியமாகவும், நன்றாக படிப்பதாக டீச்சர்கள் பாராட்டுவது உற்சாகமாகவும் இருந்தது.
பள்ளிக்குப்போகும் வழியில் புதிதாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் உடலெல்லாம் புழுதியும் சிமெண்ட்டுமாய் சித்தாள்வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனின் அசைவுகளும் சுறுசுறுப்பும் கவனிக்க வைத்தது.தினமும் போகும்போதும் வரும்போதும் அந்த இடத்தைக் கடக்கும்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தான்அவன். காணாத போது கண்கள் தேட ஆரம்பித்தன. கண்டதும் சந்தோஷம் வந்தது. பாதியளவுக்கு சுவர்உயர்ந்த நேரத்தில் அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்து கொண்டான் அவன். தன்னை சரிசெய்துகொண்டு எனக்கும் உன்னைத் தெரியும் என்பது போல்நின்று பார்க்க ஆரம்பித்தான். மாடிச்சுவர் கட்டி முடியும்போது இருவரும் ஒருவரையொருவர்எந்நேரமும் தேடிக்கொண்டு இருந்தார்கள். கட்டிய வீட்டிற்கு பால் காய்ச்சி, யாரோ குடிவந்த பிறகு கண்மணிக்கு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் வெறிச்சென்று இருந்தது. அவளது பாதையில் வேறொரு இடத்தில் அவன் வந்து நிற்கஆரம்பித்தான். ஒருநாள் எதிரே வந்தவன் அவளைக் கடக்கும்போது, ”கண்மணி” என்று எங்கோ பார்த்துசொல்லிக்கொண்டு போனான். அடுத்தநாள் ”சுப்பையா” என தன் பெயரைச் சொல்லிக்கொண்டு போனான்.பெயரை அறிந்தவர்களுக்கு மேலும் தங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள வேண்டும்போலிருந்தது.
படித்துக்கொண்டிருந்தசத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி முன்பு ஒருநாள் சுப்பையா ஆட்டோவுடன் வந்து நின்றான்.அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிறகெல்லாம் அவனை ஆட்டோவில்தான் பார்க்க முடிந்தது. சித்தாள்வேலையை விட்டு அவனும் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்பது சந்தோஷமாயிருந்தது. அந்தவருடம் ஊர்ப் பொங்கலின்போது கூட்டத்தில் தனியேநின்ற சமயம் அவளருகே வந்து, “கண்மணி, அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” சொல்லிக்கொண்டேஒரு காகிதத்தைக் கொடுத்து சென்றான். பத்திரமாய் அதை வீட்டில் வந்து நெஞ்செல்லாம் துடிதுடிக்கபிரித்தாள். ஒன்றும் எழுதியிருக்கவில்லை. வெறும் காகிதம். அடுத்த நாள் அவளே அவனிடம்போய்க் காகிதத்தை காண்பித்து “என்ன இது?” கேட்டாள். அவனும் அதை வாங்கிப் பார்த்து,”என்ன, ஒன்னும் எழுதல” திருப்பிக் கேட்டான். “என்ன விளையாடுறியா?” அவள் கோபமாய் கேட்க,”எனக்கு எழுத வராது. நாஞ் சொல்ல சொல்ல நீதான எழுதணும். கண்மணி அன்புடன் காதலன் நான்எழுதும் கடிதம்” சொல்லி சிரித்தான். அவளுக்கும் சிரிப்பு வந்தது. தெப்பக்குளம் அருகில்சந்தித்ததெல்லாம் அதன் பிறகுதான். நாட்களெல்லாம் பாடங்களோடும், கனவுகளோடும் அழகாய்வந்தன.
நன்றாகபடித்தால்தான் இந்தக் காதலும், திருமணமும் சாத்தியமாகும் என்பதில் கண்மணி உறுதியாய்இருந்தாள். தன் அப்பா பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். பெண்களைப் பற்றி பெரியார்எழுதியிருப்பதையெல்லாம் வீட்டில் முத்தையா சொல்வதை கேட்டிருந்தாள். தன் பெண் நன்றாகபடிக்க வேண்டும், தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன் காலில் நிற்க வேண்டும் என்றுதான்அவளிடமும் சொல்லியிருந்தான். பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்று எழுபத்தெட்டு மார்க்குகள்வாங்கினாள்.
ப்ளஸ்டூவுக்குநாமக்கல்லில் சேர்த்ததுதான் கஷ்டமாய் போய்விட்டது. காலை நான்கு மணிக்கே எழுந்திரிக்கவைத்து, ஓய்வு, பேச்சு, சிரிப்பு எதுவுமின்றி சதாநேரமும் மெஷின் போல படிக்க கட்டாயப்படுத்தியதைஅவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் விருப்பத்தோடுபுத்தகங்களை கையிலெடுத்தவளுக்கு, தன்னுடைய நேரத்தைத் தானே தீர்மானித்து விருப்பத்தோடுபடித்தவளுக்கு நாமக்கல் பள்ளியும் கல்வியும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அப்பாவிடம்சொல்லவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்ட அந்த இரண்டு வருடங்களும் நரகம்போல்தான் கழிந்தன. சுப்பையாவிடம் புலம்புவாள். அந்த சமயங்களில் ஆறுதலாய் இருந்தவனும்அவளைத் தேற்றியவனும் அவன்தான். அவளது உலகத்தில் முத்தையா வீட்டிலும், சுப்பையா வெளியிலும்தெரிந்தார்கள்.
“கண்மணிதூக்கம் வருதா.” சுப்பையா அவள் தலையைத் தடவி விட்டான். நேற்றிரவு சரியாகத் தூங்காதது,மூன்று மணிக்கு எழுந்தது அவளை அசத்தியது. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். பரட்டைத்தலையோடு பைத்தியமாகி விடாமல் சுப்பையா நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தூக்கத்திற்குள்நுழைந்து கொண்டாள்.
ராஜபாளையம்இறங்கும்போது மணி ஆறு நாற்பதுதான் ஆகியிருந்தது. ரெஸ்ட் ரூம் போய் விட்டு இருவரும்காபி குடித்தார்கள். போனில் பேசிக்கொண்டே தென்காசி போகும் பஸ்ஸைத் தேடினான் சுப்பையா.ஒரு மணி நேரம் போலத் தூங்கியது புத்துணர்ச்சியாய் இருந்து அவளுக்கு.
ராஜபாளையத்திலிருந்துதென்காசி போகும் வழியில் மலைகள் கூடவே வந்தன. இருவரும் விடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தார்கள்.தென்காசியில் இறங்கி ஒரு கடையில் ஆவி பறக்க இட்லி சாப்பிட்டார்கள். ஒரு ஆட்டோவில் பழையகுற்றாலம் சென்றார்கள். மலைத்திரட்சியையும்,அருவியையும் ரசித்தார்கள். ஆடை மாற்றிக்கொண்டு அவள் ஆசை தீரக் குளித்தாள். தன்மீதுகொட்டிய வெள்ளத்தை குழந்தை போல கொண்டாடினாள். ரொம்ப நாள் இருந்த ஏக்கமெல்லாம் கரைந்துகொண்டிருந்தது. அவன் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டும் போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
அருவியைவிட்டு வெளியே வந்து உடைமாற்றி வெயிலில் நடந்த போது “தென்காசிக்கு வந்ததிலிருந்து பாக்குறேன்.போனோடுதான் இருக்கீங்க...” என்றாள்.
”ஒன்னுமில்ல.“ஃபிரண்ட்ஸ்தான்” சொல்லி அமைதியானான். இருவரும் மீண்டும் தென்காசிக்கு வந்தபோது மணிமதியம் ஒன்றைத் தாண்டியிருந்தது.
ஓட்டலில்சாப்பிட்டு கை கழுவும்போது கண்மணி அருகே வந்த சுப்பையா, “நீ காலேஜ்க்கு போகலங்குறதும்,நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கோம்கிறதும் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு.” என்றான்
(தொடரும்)
March 15, 2025
இங்கிருந்துதான் வந்தான் - 1ம் அத்தியாயம்

( ஒரு மனிதனின் கதை இது. ஒரு தோழரின் கதை இது. அவரைஉங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது முக்கியமல்ல இப்போது. அவர் எங்கிருந்து, எப்படிவந்தார் என்பதுதான் முக்கியமானது. வாழ்வின்இருட்டையும் வெளிச்சத்தையும் அடைகாத்திருக்கும் வாழ்வனுபவம் இது. )
”அவக்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க” முகத்தைக்கழுவி பாத்ரூமில் இருந்து வெளியே வந்த முத்தையாவிடம் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய்சொன்னாள் சீனியம்மா. கண்மணி இருந்த அறையையும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துக் கொண்டாள். புரிந்து கொண்டதைப் போல கண்களை மெல்ல மூடித்திறந்து ’பொறு.. பொறு’ என்பதாய் சைகை செய்தான் அவன்.
அதிகாலை மூன்று மணிக்கு விழித்துக் கொண்ட ஒரு வீட்டில்மனிதர்கள் சத்தமில்லாமல்தான் நடமாடுகிறார்கள். பேசுகிறார்கள். உறங்கிக் கொண்டிருப்பவர்களைதொந்தரவு செய்யக் கூடாது என்னும் உணர்வு மனிதர்களுக்கு தன்னியல்பாகவே இருக்கிறது. என்றாலும்சாதாரணமாகவே ரகசியம் பேசிக்கொள்ள முடியாத சின்ன வீடுதான் அது. முன்னறை. அதைத் தாண்டிசமையலறை. பக்கவாட்டில் இரண்டு சின்ன அறைகள். நானூறு சதுர அடிகளுக்குள்தான் மொத்த வீடும்.ஜே.இ சி.எம் சார் (ஜூனியர் எஞ்சினியர். செல்லச்சாமிமகன் முத்தையா) வீடு என்று சமீபமாய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிறந்ததும், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி எனஎல்லோரோடும் முத்தையா வளர்ந்ததும் சாத்தூரில்தான். சாதிக் கலவரமாய்க் கிடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்துதொண்ணூறில் ஆனைக்குட்டத்துக்கு ஒருநாள் அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது அவனுக்குபத்தொன்பது வயது. தாய்மாமா குருசாமியின் பார்வையில்இருக்கட்டும் என்பது அம்மா சுப்புத்தாயின் யோசனைதான். கழுத்தில் சேலையைத் தொட்டிலாகக்கட்டி அதில் குழந்தையாய் இருந்தவனைப் போட்டு இருக்கன்குடி மாரியம்மனுக்கு அக்னிச்சட்டிஎடுத்து வைத்த பேர்தான் முத்தையா. ஜாதித்திமிரும், சட்டென கைநீட்டும் கோபமும் கொண்டஅவனின் சேர்க்கைகள் சுப்புத்தாயை பயமுறுத்தின.வேறு வழி தெரியவில்லை. குருசாமிக்கு இருந்தஅரசியல் செல்வாக்கில் விருதுநகர் ரேஷன் கடையொன்றில் தினக்கூலியாய் வேலை கிடைத்தது.ஆறு வரைக்கும் படித்தவனுக்கு அது ரொம்பப் பெரிய விஷயம். தில்லுமுல்லுகளுக்கு பழகியதும்தினமும் நானூறு ஐநூறு என்று ருபாய் நோட்டுகள் பங்காய் கிடைத்தது. பாட்ஷா ஆறுமுகத்தோடுஎல்லாம் பழக்கம் உண்டானது. அமிர்தம் ஒயின்ஷாப்பில் சாயங்காலத்துக்கு மேல் குரூப்பாகஉட்கார்ந்து தண்ணியடித்து வம்பு தும்பென்று இஷ்டத்துக்கு இருந்தான். ’கல்யாணம் பண்ணாத்தான்உருப்படுவான்’ என பெரியகொல்லப்பட்டி சீனியம்மாவுக்கு முத்தையாவைத் திருமணம் செய்துவைத்தார்கள். அவளது கையைப் பிடித்துக் கொண்டு விருதுநகரில் ஆனைக்குழாய் பகுதியில் குடிவந்தவன்தான்.இருபது வருடங்கள் ஓடிவிட்டன. மகள், மகன், மகள் என அடுத்தடுத்த வருடங்களில் பெற்றது, இந்த இடத்தை வாங்கியது, ஒரு அறையும் சமையலறையுமாய்இருந்ததை மேலும் இரண்டு அறைகளோடு விரித்துக் கொண்டதை எல்லாம் நினைவுபடுத்தி நிற்கிறதுஇந்த வீடு.
சீனியம்மா எட்டிப்பார்த்த பக்கத்து அறையில் உடைகளையும்புத்தகங்களையும் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பவள்தான் பெரியவள் கண்மணி.பத்தாம் வகுப்புத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்றமாணவி. ப்ளஸ்டூ படிக்க அவளை நாமக்கல்லில் சேர்த்தார்கள். தங்கள் வீடுகளுக்கு மாணவிகள்போன் பண்ணிப் பேச மாதத்துக்கு ஐந்து ஒரு ருபாய் நாணயங்களை ஹாஸ்டலில் கொடுப்பார்கள்.அங்கிருக்கும் போனில் நாணயத்தைப் போட்டு பேசிக்கொள்ள வேண்டும். வீட்டின் நம்பர் இல்லாமல்இன்னொரு நம்பருக்கும் கண்மணி பேசுவதை கவனித்து அங்குள்ள டீச்சர் முத்தையாவை வரவழைத்துச்சொல்லியிருக்கிறார். விசாரிக்கும்போதுதான் விருதுநகரில் ஆட்டோ ஒட்டும் சுப்பையா என்னும்பையனோடு பழக்கம் இருப்பது தெரிந்தது. கண்மணிக்கு புத்திமதிகள் சொல்லிவிட்டு வந்தான்.ப்ளஸ்டூவில் ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்து எழுபது போலத்தான் மார்க்குகள் வாங்கினாள்.இப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் எஞ்சீனியரிங் கல்லூரியில் முதல் வருடம் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துக்கொண்டிருக்கிறாள்.சனி ஞாயிறுக்கு வந்தவள் இன்று திங்கட்கிழமைகல்லூரிக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். காலை மூன்றே முக்காலுக்கு விருதுநகர்ஸ்டேஷனில் செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க வேண்டும்.
இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டு இருப்பவன் செந்தில்.இரண்டாவது மகன். கேவிஎஸ் ஹையர் செகண்டரி பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கிறான். சனிக்கிழமை சாயங்காலம் எதோ ஜெராக்ஸ் எடுக்கப் போவதாக வெளியேசென்ற கண்மணியை தெப்பக்குளம் அருகே அந்த சுப்பையாவோடு பார்த்திருக்கிறான். அம்மாவும்அப்பாவும் கவலைப்படுவதை உணர்ந்தவன். சீனியம்மாவிடம் வந்து சொன்னான். பெற்ற தாய்க்குதவிப்பாய் வந்தது. அன்றிரவு முத்தையா சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கு வெளியே அவனைஅழைத்து, அடங்கியிருந்த அந்த குறுகலான தெருவில் ஒரு ஓரமாய் நின்று குரல் உடைந்து போனாள்.முத்தையா சமாதானப்படுத்தினான். தான் பேசினால் சரியா வராது என்று அவனை கண்மணியிடம் பேசச்சொன்னாள். சரியென்று சொல்லியிருந்தான்.
கண்மணி புறப்பட்டுக்கொண்டிருக்கும் அறையில் தூங்கிக் கொண்டு இருக்கும் இன்னொருத்தி சின்னவள் செல்வி. பத்தாம்வகுப்பு முடித்திருக்கிறாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். நாமக்கல்லில் ப்ளஸ்டூவில் சேர அவளுக்கு இன்று இண்டர்வ்யூ. கண்மணியைசெந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் அனுப்பி் வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்து செல்வியை அழைத்துக்கொண்டுமுத்தையா புறப்பட வேண்டும். மரியான் படத்தின் ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன……ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” வரியை சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து திரும்பத்திரும்ப கண்மணி பாடிக்கொண்டிருந்தது அவளை விட இரண்டு வயது குறைவான செல்விக்கு புரியாமல்இல்லை. “என்னக்கா அந்த பாட்டையே பாடிட்டு இருக்க…” கொஞ்சம் கிண்டலாய்த்தான் கேட்டாள்.தங்கையைக் அப்படியே பார்த்திருந்துவிட்டு, ”எனக்குப் பிடிச்சிருக்கு. அதுக்கு என்ன?”கண்மணி கேட்டிருக்கிறாள். நேற்று இரவு பேச்சோடு பேச்சாக செல்வி அதை அம்மாவின் காதில்ஒரு ஒரமாய் போட்டு வைத்தாள். ‘அதுக்கு என்ன?’ வார்த்தையில் இருந்த பிடிவாதம் உறுத்தியது.
அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கூட்டம் முடிந்து வீட்டுக்குவந்து படுக்கவே முத்தையாவுக்கு பனிரெண்டு மணி ஆகிவிட்டது. கண்மணியிடம் அன்று அவன் எதுவும்பேசவில்லை என்பது சீனியம்மாவுக்கு கலக்கம் தந்தது. காலையில் மூன்று மணிக்கு எழுந்ததும்”கண்மணி எந்திச்சிட்டாளா” என்றுதான் கேட்டான்.
“அவ தூங்கினாத்தான எந்திரிக்க…” சீனியம்மா முணுமுணுத்தாள்.
அப்போதிலிருந்து மனைவியின் பரிதவிப்பை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். யோசனையாய் இருந்தது, தொழிற்சங்க அரங்கில் பெரும் கூட்டத்திற்கேநம்பிக்கையளித்து பேச முடிந்திருக்கிறது. கோரிக்கைகள் மீதான அவனது பேச்சின் சாதுரியத்தால்அரசு அதிகாரிகள் வார்த்தைகளின்றி போயிருக்கிறார்கள். தனி அறையில் அழைத்து மிரட்டியதமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரியை சமாளித்த அவனது உரையாடல்கள் ஏழு வருடங்களுக்குமுன்பு நெடுஞ்சாலைத் துறையின் தோழர்களிடையே பிரபலமான சம்பவம். அப்பேர்ப்பட்டவனுக்குஇன்று பெரியவளாகி நிற்கும் தன் குழந்தையிடம் என்ன பேசுவது, எப்படி புரிய வைப்பது என்று குழப்பமாயிருந்தது.
ரேஷன் கடையில் இருந்த இளமையின் ஆரம்ப காலங்களில் பெண்களைஎப்படியெல்லாமோ பார்க்கத் தூண்டிய தன் கண்களை அவனுக்குத் தெரியும். அந்தக் கண்கள்தானேஆட்டோ ஓட்டும் அந்த ஆண் பையனுக்கும் இருக்கும் என்ற உணர்வுதான் ’அட என் மகளே” என தலையில்அடித்துக் கொள்ள வைத்தது. ஆசையோடு ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்த அனுபவங்கள் அவனுக்கும்சில பெண்களிடம் அப்போதெல்லாம் இருக்கத்தான் செய்தன. அவை வெறும் ஆசைகள்தான். அதற்கும் மேலே நகர்ந்து எந்தப் பெண்ணையும் அவன் காதலிப்பதாகக்கருதியதோ, கல்யாணம் செய்து கொள்ளத் தோன்றியதோ இல்லை. எந்தப் பெண்ணுக்காவது தன் மீதுஈர்ப்பு ஏற்பட்டிருக்குமா என்றும் தெரியாது. சினிமாத் தியேட்டர்களின் திரைகளில் பலகதாநாயகிகளை அவன் காதலித்துக் கொண்டு இருந்தான். கனவில் வந்து அவர்களும் அவனை காதலித்தார்கள்.காதல், காமம் எல்லாம் பெரும்பாலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தனிமையிலேயே வந்துசென்றன. இந்த ஆட்டோக்காரப் பையன் அப்படித் தெரியவில்லை.
ஆரம்பத்தில் பட்டும் படாமல் மகளுக்கு பொதுவாக புத்திமதிசொன்னான். ‘நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்னு ரஜினி ஆடுனா ரசிக்கிறதோட நிறுத்திக்கணும்”என சாதாரணமாகக் கிண்டல் கூட செய்தான். ப்ளஸ்டூவில் மதிப்பெண்கள் குறைந்ததும்தான் தாங்க முடியவில்லை. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, கண்மணியை அருகில் உட்காரவைத்து, ”மார்க்கெல்லாம்ஏன் குறைஞ்சுதுன்னு புரியுதா” அமைதியாகக் கேட்டான். ”உன்னோட கவனம் பாடத்தில இல்ல. அதனாலகுறையுது” அவனே பதிலும் சொன்னான். இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுகள்தான்என்பதையும் நமக்குப் படிப்புதான் முக்கியம் என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினான். இதைக் கடந்துசெல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது, பார்த்துக்கொள் என எச்சரித்தான். அவள்கண்ணீர் வடியக் கேட்டுக் கொண்டிருந்தாள். இங்கிருந்தால் நினைப்பை பறிகொடுத்து விடுவாள்என்று திருச்செந்தூரில் போய் எஞ்சீனியரிங்கில் சேர்த்திருந்தான்.
முத்தையாவுக்கு ஒரு விஷயம் உறுதியாய்த் தெரிந்தது.ஆட்டோ ஓட்டும் அந்த பையன் ஒருநாளும் இன்னொரு முத்தையாவாக முடியாது. தன் மகள் கண்மணிஒருநாளும் இன்னொரு சீனியம்மாவாகி விடக் கூடாது. படிப்பு என்பது மனிதர்களுக்கு எவ்வளவுமுக்கியம் என்பதை வாழ்க்கைதான் அவனுக்கு ஊட்டியிருந்தது.
திருமணம் நடந்து சீனியம்மாவோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தபிறகு, எத்தனையோ நாட்கள் அவளை இதே வீட்டில்,தெருவில் போட்டு அடித்திருக்கிறான். பெண்ணைப்பற்றி எந்த மதிப்பும் அப்போது கிடையாது. கோபம் வந்தால் பேச்சே கிடையாது. அடிதான். நடுங்கித்தான்சாவாள் சீனியம்மா. வீட்டு வேலை செய்து கொண்டும், பிள்ளைகளை அணைத்துக் கொண்டும் புழுவைப்போல இந்த வீட்டில் துடித்து அழுத கோலங்கள் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன. “ஏ… என்ன பெத்த அம்மா” நெஞ்சில் அடித்துக் கொண்டுஓலமிட்டதை தெருவே கேட்டிருக்கிறது. காட்டுப்பாதையில் கொளுத்தும் வெயிலில் எந்த பேச்சுமில்லாமல் தன் கல்யாணத்தை நிச்சயம் செய்தவள்அம்மாதானே.
சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் சின்னக் கவுண்டர்பகல் காட்சி பார்த்துவிட்டு குமரம்மாவும் அவள்மகள் சீனியம்மாவும் பெரியகொல்லப்பட்டிக்கு வெயிலோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். தன் உறவுக்காரர்களை பார்க்க சுப்புத்தாய்பெரிய கொல்லப்பட்டிக்குச் சென்றுவிட்டு சாத்தூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். குமரம்மாவும் சுப்புத்தாய்யும் சின்ன வயதுத்தோழிகள். எதிர் எதிரே பார்த்து விசாரித்துக் கொண்டார்கள். தன் தோழியின் அருகில் நின்றசீனியம்மாவை யாரென்று கேட்டிருக்கிறார் சுப்புத்தாய். ”தெரியலயா… உங்க மருமகா” என கிராமத்துவழக்கில் சொந்தம் வைத்து குமரம்மா சொல்லவும், ”எம் பையன் முத்தையாவுக்குத் தர்றியா”என சுப்புத்தாய் கேட்டிருக்கிறார். அங்கேயே நிச்சயமாகி இருக்கிறது. பெத்த கடனுக்குமூன்று பவுண் நகை போட்டு சாத்தூர் பெருமாள் கோவிலில் கல்யாணத்தை நடத்தி குமரம்மா தன் மகளை முத்தையாவோடு அனுப்பி வைத்தாள்.
சீனியம்மாவையும் அவளது உலகையும் தெரிந்து கொள்ள முத்தையாவுக்குபத்து வருடங்களுக்கும் மேல் வேண்டியிருந்தது. சங்கமும் கட்சியும்தான் அந்த அறிவைத்தந்திருந்தன. தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும்அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத்தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில்மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்னமுத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?
கண்மணி காலேஜ்க்கு சென்ற பிறகும் சுப்பையாவோடு சேர்த்துபேச்சுக்கள் வந்தன. சொந்தக்கார மனிதர் ஒருவர் “விடுங்க முத்தையா. இன்னிக்கு உலகம் ரொம்பக்கெட்டுக் கிடக்கு. யாரையோ அவ லவ் பண்ணலயே. நம்ம இனத்துக்காரப் பையந்தானே” என்றபோதுஅப்படியே அந்தாளு செவிட்டில் ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது. கச்சேரி ரோட்டில் இருக்கும்சிபிஎம் ஆபிஸுக்குச் சென்றான்.
கட்சித்தோழர் சீனிவாசன் ஆட்டோ ஒட்டும் சுப்பையாவைஅழைத்து, “காதலுக்கு முத்தையாவும் சரி, நாங்களும் சரி, எதிரில்லாம் இல்ல. எத்தனையோகல்யாணங்கள எங்க ஆபிஸ்லயே வச்சி நடத்தி இருக்கோம். பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னுதான்அவங்க அப்பா சொல்றாரு. முடிக்கட்டும். அப்ப முத்தையான்னு இல்ல, யாரு மறுத்தாலும் எங்கக்கிட்ட வா. பாத்துக்காலம்.” என தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்கள் கழித்துபார்த்த போது ”பையங்கிட்ட பேசிட்டேன் தோழா. சரியாயிரும்னு நினைக்கேன்.” என்று சொல்லியிருந்தார்.அதற்குப் பிறகு ஒரு மாதமாய் எந்தப் பேச்சும் வரவில்லை. இப்போது மீண்டும் தலைதூக்கிஇருக்கிறது.
பையைத் தூக்கிக் கொண்டு முன்னறைக்கு வந்த கண்மணி கட்டிலில்உட்கார்ந்தாள். தலைசீவிக் கொண்டிருந்த முத்தையா கவனித்தான். மகள் அப்படி இருப்பது என்னவோபோலிருந்தது. அவளாக பேசுவதில்லை. கேட்டால்ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் வரும். கொஞ்ச நாளாகவே அப்படித்தான் இருக்கிறாள். முன்பெல்லாம் பார்வையும் பேச்சும் எவ்வளவு துடிப்பாகவும், பிரியமாகவும்இருக்கும். பார்த்ததும் “அப்பா”வென குழந்தையாய் ஓட்டிக் கொள்வாள்.
மணி மூன்று பதினெட்டு காட்டியது. “எல்லாம் எடுத்துவச்சிட்டியாம்மா. கிளம்பலாமா?” அவள் பக்கம் திரும்பினான்.
“ஆமாம்ப்பா… போலாம்.”
”இருக்கங்குடி மாரியாத்தா, புள்ளைக்கு நல்ல புத்திகுடும்மா” பயபக்தியோடு குங்குமத்தை கண்மணியின் நெற்றியில் வைத்துவிட்டு சீனியம்மா வாசல் கதவைத்திறந்தாள். திறந்ததும் தெருதான். முன்னால் கொஞ்சம் இடமோ, அடைப்போ கிடையாது. வெளியேஇருட்டாய் இருந்தது. வாசல் விளக்கை போட்டாள். வீட்டுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளை தெருவில் கொண்டு வந்து நிறுத்தினான்முத்தையா. பையை முதுகில் போட்டுக் கொண்டு சைக்கிள் பின்னால் ஒரு பக்கமாய் கண்மணி உட்கார்ந்தாள்.
“சீனி! சின்னவள எழுப்பி புறப்பட வை. திரும்பி வந்ததும்குளிச்சிட்டு அவளை கூட்டிட்டு நாமக்கல் போகணும்” சொல்லி சைக்கிளை அழுத்த ஆரம்பித்தான்.
தெருமுனையில் திரும்பும் வரைக்கும் வீட்டு வாசலில்நின்று கொண்டிருந்த அம்மாவின் உருவம் தெரிந்தது. கண்மணி பார்த்துக்கொண்டே சென்றாள்.போகும் வழியெல்லாம் சைக்கிளின் கிறீச் கிறீச் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சாலைப்பணியாளராய்வேலைப் பார்த்த காலத்தில் வாங்கிய சைக்கிள் இது. பத்துப் பனிரெண்டு வருஷமிருக்கும்.ரோடு இன்ஸ்பெக்டராகி, இந்த வருடம் ஜூனியர் எஞ்சீனியரானாலும் அப்பா அதே சைக்கிளைத்தான் வைத்திருக்கிறார் என்பது அவ்வப்போது அவள் நினைவில்வந்து போகும். உன்னி உன்னி கால்கள் பெடலை அழுத்துவதைஉணர முடிந்தது. “வேற வண்டி எதாவது வாங்குனா என்னப்பா?” கேட்க நினைத்து முடியாமல் போனது. கண்கள் கலங்க ஆரம்பித்தன.
டிடிகே சாலையில் ஏறியதும் முழுசாய் ஓளியோடு இருந்தநிலாவை மேற்குப் பக்கம் முத்தையா கவனித்தான். முன்னொரு காலத்தில் வெள்ளம் நிறைந்துஒடிய கவுசிகா நதியின் மீதும் இந்த நிலா தெரிந்திருக்கும். இப்போது அந்தப் பகுதியெல்லாம்வேலிக்கருவேல மரங்களும், சாக்கடையும், இருட்டும் அடர்ந்திருந்தன. தண்டி தண்டியாய் யானைமாதிரியாய் குழாய்கள் தெரிந்தன. வானம் மட்டும் எப்போதும் போல அழகாயிருந்தது. நிலா அந்த நேரத்தில் அபூர்வமாய்த்தெரிந்தது.
‘அதிகாலை நிலா’ என்று ராஜேஷ்குமார் ஒரு நாவல் எழுதியிருப்பதை முத்தையாகேள்விப்பட்டிருந்தான். படித்திருக்கவில்லை. வீட்டின் நிலைமையைப் பார்த்து ஆறாம் வகுப்போடுபள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு ஒரு மளிகைக்கடைக்கு வேலைக்குச் சென்ற போது அங்கிருந்த பழைய பேப்பர்களில் ராஜேஷ்குமாரின் கதையைமுதன்முதலாக படிக்க ஆரம்பித்தான். பிடித்துப்போய் அவரது கதைகளை தேடித் தேடி படித்தான்.சாத்தூரில் ராஜேஷ்குமாரின் பேரவை என்று சில நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தான். அப்படிஒரு காலமும் கதையும் உண்டு.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆள் நடமாட்டங்கள் இருந்தன.வெளிச்சமாகவும் இருந்தது. இங்கு எத்தனையோ இரவுகளில் பஸ்களுக்காக காத்திருந்திருக்கிறான்.பஸ்களிலிருந்து இறங்கி ஊருக்குள் தனியே நடந்திருக்கிறான்.சாலைப்பணியாளர் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறான். அதிரும்படி பெரும் முழக்கங்களை எழுப்பியிருக்கிறான்.தோழர்களோடு டீக்களாய் குடித்து பேசியிருக்கிறான். நேற்று கூட கட்சியின் மாவட்டச் செயலாளர்தோழர் சேகர், “எல்லா மீடியாக்களும் மோடி மோடின்னுதான் காட்டுறாங்க. கார்ப்பரேட்களோடு ஆர்.எஸ்.எஸும், பிஜேபியும் கூட்டு வச்சுக்கிட்டுஅத்வானிய ஒரங்கட்டிட்டாங்க” என்று இங்கேதான் டீ குடித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.
ரெயில்வே பீடர் ரோட்டில் போகும்போது அப்பாவின் கழுத்துப்பக்கம் அந்த நேரத்திலும் வேர்த்திருந்ததை கண்மணி கவனித்தாள். ஸ்டேஷனை அவர்கள் அடைந்தபோது மணி சரியாக மூன்று முப்பத்தைந்து. எப்படியும்டிரெயின் கால்மணி நேரம் லேட்டாகத்தான் பெரும்பாலும் வரும். டியூப் லைட்களோடு சிமெண்ட்தளமாய் நீண்டிருந்த பிளாட்பாரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே மெல்ல நடந்தனர். பக்கத்தில்தண்டவாளங்கள் மின்னிக்கிடந்தன. ஒன்றிரண்டு பேர் பெஞ்ச்களில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.சூட்கேஸைத் தலைக்கு வைத்து ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். ரெயில் வரும் திசையில்ஒரு வயதானவர் ஆழ்ந்திருந்தார். தூரத்துக் கம்பங்களில் சிவப்புப் புள்ளிகளாய் விளக்குவெளிச்சம் ரெயில்வே ஸ்டேஷன் என்று சொல்லிக்கொண்டு இருந்தது.
அப்பாவும் மகளும் ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தார்கள்.சில வினாடிகள் அமைதியாய் இருந்த முத்தையா, “படிப்புல கவனம் செலுத்தும்மா. அந்தப் பையனநெனச்சிக்கிட்டு படிப்பு தொலைச்சிராத” என்றான். எத்தனையோ முறை அவளிடம் சொன்னதுதான். அதையேத்தான் திரும்பவும் சொல்லத் தோன்றியது.
கண்மணி ஒன்றும் பேசவில்லை.
“அந்தப் பையனப் பாத்து எதும் பேசினியா?”
இல்லையென்பதாய் தலையாட்டினாள்.
“பொய் சொல்ல வேண்டாம்மா. அப்பாவுக்கு கஷ்டமா இருக்கு.முந்தாநாள் உன்னையும், அந்தப் பையனையும் தெப்பக்குளம் பக்கம் பாத்துட்டு எங்க தோழங்கரெண்டு பேர் சொன்னாங்க. வீட்டுல வச்சி பேசுறது சரியாத் தெரில. அதான் இங்க வச்சு கேட்டேன்.”
கண்மணி தண்டவாளங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா அம்மாக் கிட்ட நீ சகஜமா பேசி ரொம்ப நாளாச்சுதெரியுமா?“
அவள் தலைகுனிந்து கொண்டாள்.
“தப்புச் செய்றவங்கதான் தலை குனிவாங்க. எம் பொண்ணுதலை குனியுறது நல்லால்ல கண்மணி!”
நிமிர்ந்து “அப்படில்லாம் இல்லப்பா. திரும்பத் திரும்பஅதப்பத்தி பேச வேணாமேன்னு பாத்தேன்…” இழுத்தாள். பத்தொன்பது வருஷமாய் அவளது ஒவ்வொருஅசைவையும் அறிந்தவனுக்கு அந்த முகத்தில் பிடிபடாமல் எதோ வேதனை அடைந்திருப்பது தெரிந்தது.
”எம் பொண்ணு எனக்கு முக்கியம். அவ படிப்பு எனக்குமுக்கியம். நீ நல்லா படிக்குறவ. அதக் கெடுத்துக்காத. இந்த நாலு வருஷம் படிச்சு ஒருடிகிரிய மட்டும் வாங்கிட்டு யாரை வேண்ணாலும் கல்யாணம் பண்ணிக்க.” தான் சொல்ல வேண்டியதைசொல்லி விட்டது போலிருந்தது முத்தையாவுக்கு.
கண்மணி பையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூரத்துசிவப்புப் புள்ளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் அடுத்த சில வினாடிகளில் வரும்என்று அறிவிப்பு ஒலித்தது.
“நாஞ் சொன்னது கேட்டுச்சா. படிச்சு முடிக்கிற வரைக்கும்காத்திருப்பியா?” கேட்டான்.
அவளது கண்கள் கலங்கத் தொடங்கின. எழுந்து தன் அப்பாவின்கைகளைப் பிடித்துக் கொண்டாள். முத்தையாவின் கண்களிலும் நீர் நிறைந்தது.
டிரெயின் வரும் சத்தம் பக்கத்தில் கேட்டது.
***
முத்தையாவும் செல்வியும் பஸ்ஸில் மதுரையை நெருங்கி போய்க்கொண்டு இருந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்தஅப்பாவை எழுப்பி, “போன் அடிக்குதுப்பா” என்றாள் செல்வி.
பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்தான். அரசுஊழியர் சங்கத் தோழர் சதாசிவம் அழைத்துக் கொண்டிருந்தார்.
“வணக்கம் தோழர்..” என்று உற்சாகமாக சொன்னான்.
வாக்கிங் போகும்போது சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காலைஐந்து மணிக்கு கண்மணியையும், இன்னொரு பையனையும் பார்த்ததாகவும், ராஜபாளையம் போகிற முதல்பஸ்ஸில் இருவரும் ஏறியதாகவும் சதாசிவம் சொல்லச் சொல்ல விக்கித்துப் போனான். அப்போது தன் கையில் போன் இல்லையென்றும்.வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சந்தேகத்தில் பேசுவதாகவும் சதாசிவம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம்முத்தையா காதில் வாங்கவே இல்லை. முகத்தில் அருளே இல்லாமல் போனது.
‘அப்பாவ விட்டுட்டுப் போகப் போறோம்னுதான் என் கையப்பிடிச்சு அப்படி அழுதியா மகளே’ என்பதுதான் சிந்தனையாய் வந்தது.
”என்னப்பா ஆச்சு. ஒரு மாரியா இருக்கீங்க…” கேட்டாள்செல்வி.
“ஒன்னுமில்லம்மா. இது வேற..” என அவளது தலையை வருடினான்முத்தையா.
திரும்பி ஜன்னல் வழியே வெளியுலகை பார்க்க ஆரம்பித்தாள்செல்வி.
(தொடரும்)