Suneel Krishnan's Blog
August 25, 2025
கல்மலர் - 3- சத்திய சோதனை
ஓலைச்சுவடி இதழில் வெளியான கட்டுரை தொடரின் இறுதி பகுதி.
1
‘சத்திய சோதனை’க்கு உரையுடன் கூடிய செம்பதிப்பு சென்ற ஆண்டு வெளிவந்தது. த்ரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு பல திருத்தங்களை செய்திருக்கிறார். பழைய பதிப்பையும் புதிய பதிப்பையும் இணையாக வாசிக்க வழிவகை செய்திருக்கிறார். அடிக்குறிப்புகளில் நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய சுவாரசியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. உரையுடன் கூடிய செம்பதிப்பை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த நூலின் முன்னுரையில் சத்தியசோதனையை காந்தி எழுதிய பின்புலத்தை வனைந்து காட்டுகிறார் த்ரிதீப் சுஹ்ருத். சத்தியசோதனை ஒரு தொடராக குஜராத்தியில் வெளிவர தொடங்கியது. மகாதேவ் தேசாய் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். காந்தியின் மேற்பார்வையில் அந்த மொழியாக்கம் நிகழ்ந்தது. சில அத்தியாயங்கள் மட்டும் பியாரிலால் செய்தவை. காந்தி இந்த காலகட்டத்தில் ஆசிரமத்தில் வசித்தார். அவருடைய வாழ்நாளிலேயே தொடர்ச்சியாக நெடுங்காலம் ஆசிரமத்தில் வசித்த காலகட்டமும் இதுதான். ஆசிரமத்தில் சில இளைஞர்கள் ஒழுக்கத்தை மீறிய செய்தி அறிந்து காந்தி வருந்துகிறார். அதற்காக ஒருவாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இது ஆசிரமவாசிகள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்கள் குற்றங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் வாக்குமூலங்களை ஆசிரம பொதுவில் அளிக்கத் தொடங்கினர். அவை உள்ளத் தூய்மையை அவர்களிடத்தே கொணர்கிறது என எண்ணினார். இதே காலகட்டத்தில் காந்திக்கு கீதையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. கீதை குறித்தும் புதிய ஏற்பாடு குறித்தும் தொடர் உரைகளை ஆசிரமத்திலும் கல்லூரி மாணவர்களின் மத்தியிலும் நிகழ்த்தினார்.
காந்தி தனக்குள் ஒலிக்கும் சன்னமான ஆனால் தீர்க்கமான குரலை கேட்டு அதன் ஆணைக்கு உட்பட்டே எழுதினார் என்பதை திரிதீப் சுஹ்ருத் விரிவாக காந்தியின் வாழ்விலிருந்து சான்றுகளோடு நிறுவுகிறார். காந்தியின் ஆன்மீக வாழ்வை நெருங்கி புரிந்துகொள்ள மிக முக்கியமான தரவு என கூறலாம். சத்திய சோதனை எத்தகைய நூல் என்பது குறித்து காந்திக்கு தெளிவிருந்தது. “எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரங்களாவதற்கு ஏற்றவையல்ல என்பதை வெகு காலத்திற்கு முன்பே படித்திருக்கிறேன். இதை இன்று அதிகத் தெளிவாக அறிகிறேன். எனக்கு நினைவிருப்பவை எல்லாவற்றையும் இக்கதையில் நான் கூறவில்லை. உண்மையின் முக்கியத்தை முன்னிட்டு நான் எவ்வளவு கூறலாம், எவ்வளவு கூறாமல் விடலாம் என்பதை யார் கூறமுடியும்? என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கூறும் அரைகுறையானதும் ஒரு தலைப் பட்சமானதுமான சாட்சியங்களுக்கு ஒரு நீதிமன்றத்தின் முன்பு என்ன மதிப்பு இருக்கும்? நான் இது வரையில் எழுதியிருக்கும் அத்தியாயங்களின் பேரில், குறும்புத்தனமானவர் யாரெனும் குறுக்கு விசாரணை செய்வதாக இருந்தால், அவைகளைக் குறித்து மற்றும் பல விவரங்கள் வெளியாகலாம். இது விரோத உணர்ச்சியுடன் குறை கூறுபவரின் குறுக்கு விசாரணையாக இருந்தால், என்னுடைய பாசாங்குகளில் பலவற்றை வெளிப்படுத்திவிட்டதாக அவர் பெருமையடித்துக் கொள்ளலாம்,” என அவரே சொல்லி செல்கிறார்.
காந்தி ‘ஜீவன் விருத்தாந்தம்’ (வாழ்க்கை சரிதை) ஆத்ம கதை’ (ஆன்மாவின் கதை) என இரு வடிவங்களைப் பற்றி குஜராத்தியில் குறிப்பிட்டு இவை இரண்டும் வேறு வேறு என வாதிடுகிறார். தான் ஆத்ம கதையையே எழுத விரும்புவதாகவும், ஆகவே இதை வரலாறென கொள்ள முடியுமா எனும் ஐயம் காந்திக்கும் மகாதேவ் தேசாய்க்கும் இருந்தது. வாழ்க்கை சரிதை தகவல் பிழைக்கு இடம் அளிக்காதது. ஆனால் காந்திக்கு அது ஒரு பொருட்டாக இல்லை. திரிதீப் சுஹ்ருத் அக்காலகட்டங்களில் காந்தியின் தன்வரலாற்றில் வரும் பாத்திரங்கள் காந்தியுடன் ஊடாடிய சில கடிதங்களை அளிக்கிறார். ராஜ்கோட்டில் சந்தித்த கிறிஸ்தவ போதகர் இந்துக்களையும் இந்து மதத்தையும் அவதூறு செய்ததாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்திருந்தார். அந்த காலகட்டத்தில் அங்கு போதகராக இருந்த பாதிரியார் தான் ஒருபோதும் அப்படி செய்ததில்லை. இது அவதூறு என காந்திக்கு மறுப்பு எழுதுகிறார். அந்த கடிதத்தை பதிப்பிக்கும் காந்தி, அது யாரென நினைவில்லை ஆனால் கல்விக்கூட வாயில்களில் அவர் செய்த பிரச்சாரம் என் மனதில் உள்ளது என பதில் அளித்து அப்பகுதியை திருத்த மறுக்கிறார். போலாக் அவருடைய மனைவி மிலி போலாக் பற்றி காந்தி சரியான சித்திரத்தை அளிக்கவில்லை எனும் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் காந்தியின் செயலராக இருந்த சோன்யா செல்சின் பற்றி மிகுந்த மதிப்புடன் உயர்வாக குறிப்பிடும் காந்தி தற்போது அவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார் என எழுதுகிறார். சோன்யா செல்சின் இதற்கு தான் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே தலைமை ஆசிரியர் எல்லாம் இல்லை, அது காந்தியின் பகல்கனவு என காட்டமாகவே மறுப்பு எழுதுகிறார். (இத்தனை காட்டமாக மறுக்கும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என தெரியவில்லை). காந்தி சோன்யா செல்சினின் மறுப்பை மட்டுமே பொருட்படுத்தி திருத்தத்தை ஏற்கிறார். புறவயமான தகவல்களை காட்டிலும் அவருடைய மனப்பதிவு என்னவோ அதை நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் எனும் விழைவே அவரை இயக்கியது. ஒருவகையில் இதை உண்மைக்கும் சத்தியத்திற்குமான வேறுபாடாக கொள்ளலாம் என தோன்றுகிறது. காந்தியின் சத்தியம் புறவயமான, அரசியல் சரித்தன்மை கொண்ட, இறுகிய உண்மை அல்ல. முன்னுரையில் எழுதுகிறார் ‘என் மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து அலசிப் பார்த்திருக்கிறேன். என்றாலும் நான் கண்ட முடிவுகள் குறையற்றவை, முடிவானவை என்று சொல்லிக்கொள்ளும் நிலைக்கு நான் வந்துவிடவில்லை. ஒன்று மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன், அதாவது அந்த முடிவுகள் முற்றும் சரியானவையாகவே எனக்கு தோன்றுகின்றன; இப்போதைக்கு முடிவானவை என்றும் தோன்றுகின்றன.’
வாழ்வு முழுவதும் சத்திய வடிவிலான கடவுளை காணும் வேட்கை அவரை இயக்கியது. இந்நூலும் அதன் ஒரு வெளிப்பாடே. “ஆனால் கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவே இல்லை. ஆயினும் அவரை தேடிக்கொண்டே இருக்கிறேன். ... சுத்த சத்தியமான கடவுளின் மங்கலான தோற்றங்களை நான் அடிக்கடி காண்கிறேன்” காந்திக்கு மங்கலாக புலப்பட்ட சத்தியம் எனும் கடவுளை நெருங்கவும் மேலும் துலங்க செய்யவும், அவரை அயராது பின்தொடரவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றே இந்த தன்வரலாற்று நூலான சத்திய சோதனை.
மொத்தம் 166 அத்தியாயங்களும் ஐந்து பகுதிகளும் கொண்டது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டு பின்னர் ஒரே தொகுதியாக வெளியானது. தன்வரலாறு எழுத்தில் ஒரு செவ்வியல் ஆக்கம் என சத்திய சோதனையை சொல்லலாம். ஒரு இலக்கிய வாசகனாக உலகின் எந்த சிறந்த யதார்த்த நாவல் அளிக்கும் வாசிப்பிற்கு இணையான அமைதியையும் அமைதியின்மையும் சத்திய சோதனை வாசகருக்கு கடத்துகிறது. அபாரமான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. காந்தியிலிருந்து காந்தியம் உருவாகும் தருணங்களையே இக்கட்டுரையில் கோர்த்து எடுக்க முயல்கிறேன். குறிப்பாக அவரை நெருங்கி புரிந்துகொள்ளும் நோக்கிலுள்ள நிகழ்வுகளை ஒரு புனைவு எழுத்தாளரின் கோணத்திலிருந்து காண முயல்கிறேன். அவருடைய வாழ்வில் ஏற்பட்ட அற கேள்விகள், ஆன்மீக தத்தளிப்புகள், அவற்றை அவர் எதிர்கொண்டு கடந்த விதங்கள் இன்றும் நம் வாழ்க்கையின் நெருக்கடிகளில் நமக்கு ஒளி பாய்ச்சக்கூடிய தருணங்கள்
சத்திய சோதனையை ஒரு நாவல் என கொண்டோம் என்றால் இதன் மையக் கேள்வி என்ன? இரண்டு கேள்விகள் காந்தியை இயக்கின என கூறலாம். பாலசுந்தரம் பற்றிய அத்தியாயத்தின் இறுதியில் காந்தி இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார். ‘மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.’ சுயமரியாதை எனும் சொல் தமிழக சூழலில் திராவிட இயக்கத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஆனால் காந்தியின் அடிப்படை செயல்பாடுகளில் மிக முக்கியமானது என்று இந்த சுய மரியாதையை கட்டியெழுப்புவதற்கான முயற்சியையே சொல்லலாம். வாழ்நாள் முழுவதும் இதற்காக முயன்றார்.
இரண்டாவது கேள்வி அடிப்படையில் ஒரு இருத்தலியல் கேள்வி. சத்தியசோதனையில் இவ்வரிகள் உள்ளன ‘மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ள கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது?’ காந்தியை இளமையில் இந்த இருத்தலியல் கேள்வி வெகுவாக அலைக்கழிக்கிறது. இந்த கேள்வியை சத்திய சோதனை பின்தொடர்கிறது. காந்தி தன்னுடைய பதின்ம வயதின் ஒரு கட்டத்தில் எதையுமே பெரியவர்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது என தோன்றியதால் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். கேதார்ஜி கோவிலுக்கு சென்று நெய் வார்த்து இறைவனை வணங்கி ஒரு மூலையில் அமர்ந்து மூன்று ஊமத்தை விதைகளை அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் விழுங்குகிறார்கள். ஆனால் அதற்கு மேல் அதை உண்ணுவதற்கு துணிவில்லை. ஒருவேளை சட்டென உயிர் பிரியவில்லை என்றால் என்னாகும் என அஞ்சி பின்வாங்குகிறார்கள். ‘சுதந்திரமின்மையை ஏன் சகித்துக்கொள்ள கூடாது?’ என காந்தி ஒரு சமாதானத்தை கண்டுகொள்கிறார்.
1918-19 களில் உலகம் முழுக்க பரவி பலரையும் பலிவாங்கிய ஸ்பானிய ஃப்ளூ காந்தியையும் தாக்கியது. ஹரிலாலின் மனைவி சஞ்சல் மற்றும் அவருடைய மகனை இந்த காய்ச்சலுக்கு பறிகொடுத்தார்கள். காந்தியும் ஏறத்தாழ மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டார். சத்திய சோதனையில் ஐந்தாம் பகுதியில் ‘மரணத்தின் வாயிலில்’ என தலைப்பிட்ட அத்தியாயத்தில் அவரே இதை பதிவு செய்கிறார். கடும் வயிற்று போக்கும் காய்ச்சலும் ஏற்படுகிறது. மருத்துவர் நாடி நோக்கி ஆபத்து ஏதுமில்லை என சொல்கிறார். ஆனால் காந்திக்கு நம்பிக்கை இல்லை. இரவெல்லாம் உறங்காமல் மரணத்தின் வாயிலில் இருப்பதாகவே உணர்கிறார். ஆசிரமவாசிகளை கீதையை வாசிக்க சொல்கிறார். வாழும் இச்சையையே துறந்துவிட்டார். அன்றிரவு எப்படியோ கடந்தது. பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவரான கேல்கர் என்பவரை அவருக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி வைக்கிறார்கள். அவர் மருத்துவம் பயின்றவர் என்றாலும் விசித்திரமான வழிமுறைகளை கையாள்வதில் பேர் பெற்றவர். காந்தி அவரை பார்த்தவுடனே ‘அவரும் தன்னைப் போன்றே ஒரு பைத்தியம்’ என கண்டுகொண்டு அவருடைய பனிக்கட்டி சிகிச்சை முறைக்கு ஒப்புக்கொடுக்கிறார். ஜெயமோகனின் ‘நீரும் நெருப்பும்’ சிறுகதை இந்நிகழ்வை தழுவி எழுதப்பட்டது. கேல்கர் அக்கதையில் ஒரு பைராகியாக உருமாற்றம் கொண்டிருப்பார். காந்தி எப்படியோ தன்னை மீட்டுக்கொண்டு வாழும் இச்சையை பெருக்கிகொண்டு அதன் பின்னர் முப்பதாண்டு காலம் வாழ்ந்தார். காந்தி தன் வாழ்வில் தன்னுடைய திட்டங்களுக்கு பெரிய பெறுமதி ஏதுமில்லை. கடவுள் தனக்கான திட்டத்தை வகுத்தளிக்கிறார் என்பதை ஒரு சமாதானமாக அல்ல ஒரு கண்டடைதலாக சத்திய சோதனையில் முன்வைக்கிறார். பல்வேறு தருணங்களில் வெவ்வேறு சொற்களில் இதை குறிப்பிடுகிறார்.
சத்திய சோதனையில் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த சிறிய உரையாடலின் பகுதியை காந்தி பதிவு செய்கிறார்.
“நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுகிறீர்கள். இவர்கள் பசப்புப் பேச்சினால் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பது கடைசியாக உங்களுக்குத் தெரியும் போது சத்தியாக்கிரகம் செய்யும்படி எங்களிடம் கூறுவீர்கள். இவ்விதம் நீங்கள் துன்பப்படுவதோடு உங்களோடு சேர்ந்து நாங்கள் எல்லோரும் துன்பப்பட நேரும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“நீங்கள் என்னுடன் சேர்ந்துவிட்டபிறகு துன்பத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? சத்தியாக்கிரகி ஏமாற்றப்படவே பிறந்திருக்கிறான். இப்பிரதம அதிகாரி நம்மை ஏமாற்றட்டும். ‘ஏய்ப்பவனே முடிவில் ஏமாற்றப்படுகிறான்’ என்று உங்களுக்கு எத்தனையோ முறை நான் சொல்லவில்லையா?” என்றேன்.
சோராப்ஜி உடனே உரக்கச் சிரித்தார். “அப்படியானால் சரி, தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வாருங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் சத்தியாக்கிரகத்திலேயே மரணமடைவீர்கள். அப்பொழுது எங்களைப்போன்ற அப்பாவிகளையும் உங்களுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு போவீர்கள்” என்றார்.
இந்தச் சொற்கள், ஒத்துழையாமையைக் குறித்துக் குமாரி எமிலி ஹாப்ஹவுஸ் எனக்கு எழுதியதை என் நினைவிற்குக் கொண்டு வருகின்றன. “சத்தியத்திற்காக என்றாவது ஒரு நாள் நீங்கள் தூக்குமேடைக்குப் போக நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கடவுள் உங்களுக்குச் சரியான வழியைக் காட்டிப் பாதுகாப்பாராக” என்று அவர் எழுதினார்.
உரையாடல் நிகழ்ந்த காலகட்டம், அதை காந்தி நினைவுகூர்ந்து எழதும் காலகட்டம் என இரண்டையும் கணக்கில் கொண்டால் ஒருவகையில் இது அச்சமூட்டத்தக்க ஒரு முன்னறிவிப்பு. அல்லது காந்தி விரும்பிய திசையில் வாழ்நாள் முழுக்க பயணித்து துர்மரணம் எனும் இலக்கை எய்தினார். இப்படியான மற்றொரு முன்னறிவிப்பு இந்நூலில் உள்ளது ‘இந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்கா அனுபவம் எனக்கு தெளிவாக காட்டியிருந்தது.’ என கிலாபத் பற்றிய அத்தியாயத்தில் காந்தி எழுதுகிறார். காந்தி பிரிவினை கலவரத்தின்போது மரணத்தை ஏற்க தயார்கிவிட்டார் அல்லது ஒருவகையில் மரணத்தை வரவேற்றார் என சொல்லிவிடமுடியும்.
2
காந்தி நடைமுறை லட்சியவாதி என சொல்லும்போதே அவர் பெரும் வாசிப்பு ஏதும் இல்லாதவர் என்பதாக ஒரு சித்திரம் இங்கே உண்டு. நேரு, அம்பேத்கர், சாவர்க்கர் போன்றோருக்கு இருந்த அளவிற்கு வரலாறு, தத்துவம் மற்றும் இலக்கிய வாசிப்பு காந்திக்கு கிடையாது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர அவரை வாசிப்பு பழக்கமற்ற பாமரர் என கருதுவது அபத்தம். உண்மையில் காந்தியின் இளமைக் காலத்தில் கணிசமாக வாசித்திருக்கிறார் என்பதற்கு சத்திய சோதனையில் அவர் சுட்டும் நூல்களே சாட்சி. பிற்காலங்களிலும் சிறை வாசத்தின்போது அவருடைய வாசிப்பு தொடர்ந்தது. அவருடைய ஆன்மீக வேட்கைக்கு உகந்த நூல்களை, அவை வெவ்வேறு மதத்தை சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றை தேடித்தேடி வாசித்திருக்கிறார். சட்டங்களையும் ஆவணங்களையும் வாசித்து அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் திறனை அவருடைய பாரிஸ்டர் கல்வி அவருக்கு அளித்திருந்தது.
காந்தி தால்ஸ்தாயை தனது ஆசிரியர்களுள் ஒருவர் என கருதினாலும் அவருடைய நாவல்களையோ கதைகளையோ அதிகம் வாசித்ததாக தெரியவில்லை. ஆனால் அவருடைய புனைவற்ற நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறார். சத்திய சோதனையில் ஆலிவ் ஸ்ரைனர் எனும் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் பற்றியும் அவருடைய நாவலான ‘ட்ரீம்ஸ்’ பற்றியும் குறிப்பிடுகிறார். காந்தி ஒரு புனைவை அடிக்கொடிட்டு எழுதியது என ஒரேயொரு இடத்தை மட்டும் சத்திய சோதனையில் குறிப்பிடலாம். ‘தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன் குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின், அவர்கள் கதை வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக் குடியேறிய நாடு ஒன்றேனும் உலகில் இருப்பதாக நாம் அறியோம்.’ காந்தியின் மொழியில் புனைவுகளின் தாக்கம் என்பது இல்லை. பொதுவாக அவருக்கு புனைவுகளின் மீது மதிப்போ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. ஆனால் காந்திக்கு தொன்மங்கள் மீது பெரும் ஈடுபாடு உண்டு. சிரவணன், மற்றும் ஹரிச்சந்திரன் கதைகள் பால்ய காலத்தில் காந்தியை வெகுவாக பாதித்தன. இவை சத்தியத்தின் பொருட்டும் பக்தியின் பொருட்டும் துன்பத்தை ஏற்று அனுபவிக்கும் காவிய சாயல் கொண்ட பாத்திரங்கள். காந்தியின் லட்சியமும் இவையே.
காந்திக்கு புனைவுகள் மீது ஆர்வமில்லாமல் இருந்ததற்கு கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்கும் ஒரு காரணம் என சொல்லலாம். ‘மனித உள்ளத்திலிருக்கும் நல்ல தன்மையை எழுப்பிவிட வல்லவனே கவி’ என விளைவு அல்லது பயன்பாட்டு நோக்கில் கவிதையும் கவிஞரும் என்ன அளிப்பார் எனும் தளத்தில் வரையறை செய்கிறார். .பாரீசுக்கு செல்லும் காந்தி அங்கு நோத்ரதாம் தேவாலயத்தை ரசிக்கிறார் ‘அதன் அற்புதமான அமைப்பும் உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோவில்களை கோடிக்கணக்கில் செலவிட்டு கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாக கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.’ என எழுதுகிறார். இதே காந்தி ஈஃபில் கோபுரத்தை காணும் போது அதில் கலைத்திறன் என எதுவும் இல்லை என கூறி ‘ஈஃபில் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமே அன்றி அவனுடைய அறிவுக்கு சின்னம் அல்ல’ என தால்ஸ்தாயை மேற்கோள் காட்டுகிறார். பகட்டும் அகங்காரமும் கலைக்கான இயக்குவிசையாக இருப்பதை காந்தி நிராகரிக்கிறார். மெய்யான அன்பும் ஈடுபாடும் எளிமையும் இயக்குவதையே கலையாக மதிப்பிடுகிறார். ஒருவகையில் இது யதார்த்தவாத அழகியல் என கூறலாம். கணேஷ் தேவி காந்திக்கு வாழ்வை பற்றிய சிறு சிறு அசல் அவதானிப்புகள், தகவல்கள் மீதிருந்த ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.
எழுத்தாளர் காந்தியினுடைய மொழி நேரடியானது. எளிமையானது. ஜோடனைகள் ஏதுமற்றது. அவர் அடிப்படையில் ஒரு இதழாசிரியர். தென்னாப்பிரிக்க சிக்கலின் பின்புலத்தை விவரிக்கும் போது அவருடைய மொழியில் உள்ள தெளிவு நமக்கு பிடிபடும். காந்தி உவமைகளை பயன்படுத்த தவறவில்லை. அவர் பயன்படுத்தும் உவமைகள் வாழ்விலிருந்தும், மக்கள் நன்கறிந்த உருவகங்களில் இருந்தும், பேச்சு மொழியில் புழங்கும் சொலவடைகளில் இருந்தும் உருக்கொள்பவை. நவீன நாகரீகத்தின் அழிவைச் சொல்லும்போது “சுண்டெலி அரிக்கும் சப்தம் நம் காதுக்கு இனிமையாயிருந்தாலும் அது செய்வது நாசமே” என்கிறார். மற்றொரு இடத்தில் ‘மீன் நீரை விரும்புவது போல நாம் கோர்ட்டையும் சச்சரவுகளையும் விரும்புகிறோம்.’ என எழுதுகிறார். ‘விஷப்பூண்டை நட்டுவிட்டு அதிலிருந்து ரோஜா மலரை அடையலாம் என்பதைப் போன்றது’ என விளைவுக்கும் வழிமுறைக்கும் இடையிலான உறவைப் பற்றி கூறுகிறார். ‘பானை உடைய அதன் மீது கல்லெறிய வேண்டியதில்லை ஒன்றுடன் ஒன்று சற்று பலமாக மோதிக்கொண்டாலே போதும்’ இது காந்தி இந்திய சுயராஜ்ஜியத்தில் இந்து இஸ்லாமிய உறவு குறித்து பயன்படுத்தும் உருவகம். தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தில் ஆங்கிலேயருக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையிலான உறவை சொல்லும்போது ‘ஒரே சூளையில் உருவான பானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளத்தானே செய்யும்?’ என எழுதுகிறார். சத்திய சோதனையில் ‘நெருஞ்சி செடியிலிருந்து அத்திப்பழம் எடுக்கலாம் என எண்ணிவிட்டேன்.’ என ஷேக் மேத்தாப்பின் நடத்தையின் மீது விமர்சனமாக சொல்கிறார். இந்தியாவிற்கும் ஆங்கிலேய அரசிற்கும் இடையிலான உறவையும் இந்தியாவின் சுயாட்சியின் நியாயத்தை பற்றி ‘யானைக்கு எறும்பினிடம் நல்லெண்ணமே இருக்கலாம் ஆனால் எறும்பின் தேவையையும் சௌகரியத்தையும் கொண்டு சிந்திக்கும் சக்தி எவ்வாறு யானைக்கு இல்லையோ அதேபோல இந்தியருக்கு சௌகரியமான வகையில் சிந்திக்கவோ சட்டம் செய்யவோ ஆங்கிலேயருக்கு சக்தியில்லை.’ என எழுதுகிறார்.
இந்த இணை வைப்பின் சாத்தியங்களை யோசித்தால் பிரமிப்பே எஞ்சுகிறது. யானை ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்பை காப்பதற்காக என எண்ணிக்கொண்டு துதிக்கையில் பிடித்தால் அது செத்துவிட கூடும். தூய நோக்கம் இருக்கலாம் ஆனால் புரிதல் வேண்டுமே. பாரிஸ்டர் கல்வி முடித்த காந்தி தொழிலின் நடைமுறையை கற்கவில்லை. ஒருவித மன சோர்வுடன் இந்தியா திரும்புகிறார். அந்த அத்தியாயம் இப்படி முடிகிறது. ‘இவ்விதமான மனச்சோர்வுடன் அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும் எஸ் எஸ் அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவி படகு மூலமே கப்பலிலிருந்து கரை சேர்ந்தேன்.’ அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இப்படி ஒரு வரி எழுதுகிறார் ‘வெளிப்புயல் என் அகப்புயலுக்கு ஒரு சின்னமாகவே இருந்தது.’ காந்தியால் அகத்தையும் புறத்தையும் ஒன்று மற்றொன்றின் பிரதிபலிப்பாக காட்ட முடிந்தது.
சத்திய சோதனை பல அபாரமான புனைவு தருணங்களால் நிரம்பியது. நாராயண ஹேமசந்திரர் பற்றிய ஒரு அத்தியாயம் நுண்ணிய கதைமாந்தர் சித்திரம் என்றே சொல்லலாம். காந்தியின் எழுத்துக்களில் எவருக்கு எல்லாம் தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று நோக்கினால் காந்தியின் ஆளுமை குறித்து புரிந்து கொள்ள இயலும். சத்திய சோதனையில் நாராயண ஹேமசந்திரர், ராய்சந்த் மற்றும் கோகலேவிற்கு மட்டுமே அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவருமே ஏதோ ஒருவகையில் அவருடைய ஆசிரியர்கள். நாராயண ஹேமசந்திரர் காந்திக்கு முன்னர் சுயசரிதை எழுதிய குஜராத்திகளில் ஒருவர். இவர்களுக்கு இணையாக காந்தி ஒப்பந்த கூலிகளை பற்றிய அத்தியாயத்திற்கு ‘பாலசுந்தரம்’ என பெயரிட்டுள்ளார். பால சுந்தரம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒப்பந்த கூலி. அவருடைய எஜமானர் அவரை தாக்குகிறார். அதற்கு நியாயம் பெற்றுத்தர காந்தி போராடுகிறார். ஒப்பந்த கூலிகளின் உலகத்திற்குள் காந்தி நுழைவதற்கு வழியமைத்து கொடுத்த நிகழ்விது.
காந்திக்கும் கஸ்தூரி பாவிற்கும் இடையிலான உறவு ஒரு தனி சரடாக இந்நூலிலிருந்து கோர்க்க முடியும். லட்சிய கிறுக்கர்களின் மனைவிகளின் பாடு வரலாறு முழுக்க கடுமையானதாகவே இருந்து வருகிறது. காந்தியின் பிரம்மச்சரியம் கடும் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. வாழ்வில் நான்குமுறை அது உடையும் விளிம்பு வரை சென்று மீண்டதாக காந்தி சத்திய சோதனையில் பதிவு செய்கிறார். முதல்முறை நண்பர் திருமண வாழ்விற்கு காந்தியை தயாரிக்க அழைத்து செல்கிறார், இங்கிலாந்தில் சைவ உணவாளர் சந்திப்பின்போது உடன் வந்த நண்பர், ‘உன்னில் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது? சீக்கிரம் எழுந்து போய்விடு,’ என்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு கப்பலில் செல்லும் வழியில் ஜான்சிபாரில் கரையிறங்கி, நட்பாக இருந்த கப்பல் கேப்டன் காந்தியை அழைத்துக்கொண்டு ஒரு விலைமாதரிடம் செல்கிறார். அறைக்குள் சென்றவர் வெட்கத்தால் நிலைகுலைந்து சிலைந்து நின்றுவிடுகிறார். கேப்டன் அழைத்ததும் சென்ற விதத்திலேயே திரும்புகிறார். ‘அறைக்குள் போக மறுக்கும் துணிச்சல் எனக்கு இல்லாதது குறித்து எனக்கு நானே பரிதாபப்பட்டுக்கொண்டேன்.’ என எழுதுகிறார். காந்தியை இத்தகைய ஒழுக்க ஊசலாட்ட தருணங்களிலேயே நாம் மிகவும் நெருக்கமாக உணர முடியும் என தோன்றும்.
சத்திய சோதனையில் இங்கிலாந்து வாசத்தின்போது அவருக்கு ஏற்பட்ட பெண் நட்புகள் பற்றி ஒரு அத்தியாயத்தில் எழுதி இருப்பார். முதல் நிகழ்வு இங்கிலாந்தின் நாகரீக பழக்கத்தின் விளைவாக ஏற்பட்டது. மெல்லிய எள்ளலுடன் நினைவு கூர்ந்திருப்பார். அப்பகுதியை அப்படியே தருவது அவருடைய தொனியை கடத்தும். கதையாக்கத்தக்க தருணம் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே திரிதீப் சுஹ்ருத் அடிக்குறிப்பில் கெய்த் ஹெல்லர் 2004 ஆம் ஆண்டு ”The Woman who knew Gandhi,” என்றொரு நாவலை இந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறார்.
“எனது வீட்டு உடைமையாள பெண்மணியின் மகள் வெண்ட்னரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அழகிய குன்றுகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் மெதுவாக நடப்பவன் அல்ல ஆனால் மொத்த நேரமும் அரட்டையடித்தபடி என்னை இழுத்துச்சென்ற எனது சகி என்னைவிட வேகமாக நடப்பவர். அவருடைய அரட்டைக்கு சில நேரங்களில் தாழ்குரலில் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ அல்லது அதிகபட்சமாக ‘ஆம், எத்தனை அழகானது!’ என எதிர்வினையாற்றினேன். அவர் ஒரு பறவையை போல் பறந்து கொண்டிருந்தபோது நான் எப்போது வீடு திரும்புவது என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்படியாக நாங்கள் ஒரு குன்றின் உச்சியை அடைந்தோம். எப்படி இறங்குவது என்பதுதான் அப்போது என் கேள்வியாக இருந்தது. அவருடைய உயரமான குதியணியை மீறி இந்த இருபத்தி ஐந்து வயது சுறுசுறுப்பான பெண் ஒரு மின்னலைப் போல பாய்ந்து இறங்கினார். நான் இன்னமும் எப்படி கீழே இறங்குவது என கூச்சத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் அடிவாரத்தில் சிரித்துக் கொண்டும் என்னை உற்சாகப்படுத்தியும், என்னை இழுத்து வரட்டுமா என கேட்டபடியும் நின்றிருந்தார். நான் எப்படி இப்படியொரு கோழையாக இருக்க முடியும்? மிகுந்த சிரமத்திற்கு இடையே அவ்வப்போது ஊர்ந்து எப்படியோ போராடி கீழே வந்து சேர்ந்தேன். அவர் உரக்கச் சிரித்து, ‘சபாஷ்,’ என்றார். அவரால் எவ்வளவு இயலுமோ அந்த அளவிற்கு என்னை கிண்டல் செய்துவிட்டார்.”
காந்திக்கு மற்றொரு இளம் பெண்ணுடன் ஏற்படும் ஈர்ப்பு பற்றி அதே அத்தியாயத்தில் பதிவு செய்கிறார். குற்ற உணர்வில் தொடங்கி அவல நகைச்சுவையை சென்றடைகிறது. இங்கிலாந்தில் இளம் பெண்களுடன் பழகுவதற்காக திருமணம் முடித்த இந்திய இளைஞர்கள் தங்களது திருமணத்தை மறைப்பது வழக்கம். காந்திக்கு ஒரு முதிய பெண்மணியுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவர்களுடன் நட்புகொள்கிறார். அவருடைய வீட்டிற்கு விருந்துண்ண செல்கிறார். அந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் பழகுகிறார். காந்திக்கு அது கிளர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் அந்த பெண்ணுடன் உரையாட வேண்டும் எனும் ஆவல் கூடிக்கொண்டிருந்தது. முதிய பெண்மணிக்கு இந்த பெண்ணுக்கும் காந்திக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றொரு யோசனை தோன்றியிருக்கிறது என்பதை காந்தி உணர்ந்து கொள்கிறார். சட்டென காந்தி விழித்துக்கொண்டு அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதுகிறார்.
‘நான் உங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தபோதே எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன். அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும். சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனுக்கு நான் தந்தை. இவ்வளவுகாலமும் இதையெல்லாம் உங்களுக்கு தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் நோகிறேன். ஆனால் உண்மையை சொல்லிவிடும் தைரியத்தை எனக்கு கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா? நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த இளம் பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆகவேண்டும் என இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள் போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும்.”
இறுதியில் “இக்கடித்ததிற்கு பிறகும் என்னை நீங்கள் நிராகரித்து விடாமல் உங்களுடைய அன்பான வீட்டிற்கு வர தகுதியுடையவனாக என்னை கருதினீர்கள் என்றால் அதற்கு உரியவனாவதற்கு பாடுபட நான் தவறமாட்டேன். இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்வேன்.” என முடிக்கிறார். இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வந்த பதில் இதைவிடவும் சுவாரசியமானது.
“எதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியோடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்தும் விட்டோம். நீங்கள் செய்துவிட்ட உண்மையை மறைத்தது குற்றம் என்று நீங்கள் கூறும் செயல் மன்னிக்கத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர்ப்பார்க்கிறோம். அதோடு உங்கள் குழந்தைத் திருமணத்தை பற்றிய விவரங்களை எல்லாம் அறிந்து உங்கள் சங்கடத்தில் நாங்கள் சிரித்து இன்புருவதையும் எதிர்நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா?”
காந்தியின் நுண்ணிய நகைச்சுவை உணர்வு பல தருணங்களில் வெளிப்படுகிறது. காந்தியின் நகைச்சுவையில் பிறரை இழிவுபடுத்தும் தொனி இருக்காது. அதிகமும் சுய எள்ளல் தான். பாரிஸ்டராவதற்காக இங்கிலாந்து சென்றபோது காந்தியை விருந்திற்கு அழைத்து செல்ல எப்போதும் பெரும் கிராக்கி இருந்ததாக கிண்டலாக சொல்கிறார். காரணம் அவர் மது அருந்தாதவர் என்பதால் அவர் பங்கையும் சேர்த்து அருந்திவிட முடியும். பம்பாயில் காந்தி உயர்நீதிமன்றத்திற்கு தினமும் செல்வார். ஆனால் நீதிமன்ற வழமைகள் சுவாரசியமற்றதாக இருக்கும். தூங்கிவிடுவார். இது சார்ந்து அவருக்கு தொடக்கத்தில் குற்ற உணர்வு இருந்தாலும் கூட காலப்போக்கில் அங்கு உறங்குவதே நாகரீகம் எனும் முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். இதே போன்று தென்னாப்பிரிக்காவில் நண்பரின் அழைப்பின் பேரில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் உறங்கிவிடும் வழக்கமும் காந்திக்கு இருந்தது.
காந்தியின் பிடிவாதம் புகழ்பெற்றது. காந்தி இங்கிலாந்திற்கு புறப்படுவதற்கு முன் அவருக்கு ஒரு வழியனுப்புதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்ற எழுந்து நின்ற காந்தி பேச அஞ்சி அங்கேயே மயங்கி விழுகிறார். ஆனால் அதே காந்தி தான் மோத் பனியாக்கள் அவருடைய பயணத்தை தடை செய்து அவரை சாதி நீக்கம் செய்தபோது தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நின்றார். காந்தி
August 11, 2025
ஙப் போல் வளை- முன்னுரை

ஆயுர்வேத மூல நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் மருத்துவர்களை ‘உயிரை வளர்ப்பவர்’ (பிராணாபிசார) ‘நோயை வளர்ப்பவர்’ (ரோகாபிசார) என இரண்டாக பிரிக்கிறார். இன்று நாம் பயன்படுத்தும் போலி மருத்துவர் எனும் சொல் அன்று புழக்கத்தில் இல்லை. ‘போலி’ என்பது தகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மையமான அதிகாரம் அங்கீகாரம் வழங்கும் நிறுவனமாக இன்று செயல்படுகிறது. கல்விநிலையத்தில் கற்றவர் அசலான மருத்துவர். கற்காதவர் போலி மருத்துவர். கற்ற அசல் மருத்துவர் திறனற்றவரா இல்லையா என்பது ஒரு பொருட்டே அல்ல. இந்த கோணத்திலிருந்து அசல் - போலி எனும் இருமை சார்ந்த உரையாடலை காட்டிலும் சரகரின் பகுப்பு பொருளுடையதாக இருக்கிறது. இதை யோகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். பரந்தபார்வையோ திறமையோ அற்ற யோகாசிரியர்களுக்கும் தேர்ந்த பயிற்சியும் ஞானமும் கொண்ட ஆசிரியர்கள் மிகக்குறைவு. எங்களது குடும்ப நண்பரும் தேர்ந்த இலக்கிய வாசகருமான சவுந்தர் அருகிவரும் பிந்தைய பிரிவைச் சேர்ந்தவர். புற்றீசலாக யோகாசிரியர்கள் தோன்றுவதை எப்படிப் புரிந்துகொள்வது?
தமிழில் கவிதைகள் அளவிற்கு பிற இலக்கிய வடிவங்கள் நகலெடுக்கப்பட்டதில்லை. ஏன் என யோசிக்கும்போது, எங்கெல்லாம் நுட்பமும், மகத்துவமும் செயல்படுகிறதோ அங்கெல்லாம் போலிகள் அதிகமும் செயல்படுவார்கள். கவிதை பெருவாரியாக போலி செய்யப்படுவதற்கு காரணம் அதன் உன்னதத்தின் மீது சமூகம் கொண்டிருக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைதான். மேலும், வெகுமக்களின் அறியாமையை மூலதனமாக்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கும் இடங்களிலேயே இவை அதிகமும் செல்லுபடியாகின்றன. வாசிப்பு பழக்கமற்றவருக்கு நல்ல கவிதை என சுட்டிக்காட்டப்படும் கவிதைக்கும் போலச் செய்யப்படும் நீர்த்த கவிதைகளுக்குமிடையே வேறுபாடை கண்டடைய முடியாது. ‘யோகமும்’ ஏறத்தாழ அத்தகையதானதொன்று. இந்தியாவின் ‘மென் ஆற்றலாக’ யோகம் நிறுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச யோக நாளை’ அனுசரிப்பது இந்தியாவின் மென் ஆற்றலுக்கு கிடைத்த வெற்றி என சொல்லிக்கொள்பவர்கள் உண்டு. யோகத்திற்கான சர்வதேச சந்தை பெருகியுள்ளது என்பது ஐயமற்ற உண்மை. ஆன்மிக சுற்றுலாக்காக வரும் வெளிநாட்டவர்களை நாம் பல்வேறு புனித தலங்களில் காண்கிறோம். ‘யோகம்’ தான் வேரூன்றி இருக்கும் நிலத்தின் மெய்யியல் பரப்பிலிருந்து புதிய பண்பாடுகளை உள்ளிழுக்கும் வகையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. யோகம் தன்னை ஆபத்தற்ற, மானுட மேன்மைக்கு உதவும் கருவியாக உலக அரங்கில் தன்னை முன்வைப்பதில் வெற்றியடைந்துள்ளது. ஆயுர்வேதத்திற்கு சர்வதேச ஏற்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதை ஒப்புநோக்கி அறிந்துகொள்ளலாம். ஆயுர்வேதம் உட்கொள்ளும் மருந்துகளை பரிந்துரைக்கிறது. உடலியங்கியலுடன் தொடர்புள்ள வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஆகவே அறிவியல் சமூகம் ஐயத்துடன் நோக்குகிறது. இந்நூலில் சவுந்தர் குறிப்பிடும் ‘ஷட் கர்மா’ போன்ற சற்றே வலுவான வழிமுறைகளை யோகம் உலக மேடையில் தன் முகமாக முன்வைப்பதில்லை. ஏறத்தாழ மூச்சுடன் இணைந்த உடற்பயிற்சியாக தன்னைச் சுருக்கி தகவமைத்துக்கொண்டே உலக அரங்கில் உலாவருகிறது. யோகம் அறிவியல் நிரூபணங்கள் கொண்ட முறையாக இன்று கருதப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதத்திலிருந்தே அது உடலைப் பற்றிய பார்வையை வளர்த்துக்கொள்கிறது. யோகம் உடல் நலம், மன நலத்திற்கான தீர்வாக தற்காலத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால் தன்னளவில் மானுட விடுதலையை கனவு கொண்ட மெய்யியல் பள்ளிகளில் ஒன்று. இந்த பரிணாமம் தவிர்க்கமுடியாதது, இயல்பானதும் கூட. யோகத்தின் மீதான இந்த சர்வதேச கவனம் நம்பகமான ஆசிரியருக்கான தேவையை பன்மடங்கு பெருக்கியுள்ளது. இந்திய அளவில் யோகம் முறைபடுத்தப்பட காரணமாயிருந்த பீகார் யோகப் பள்ளியில் முறையாக கற்றவர் சவுந்தர். அவரது ஆழ்ந்த நவீன வாசிப்பினூடாக யோகத்தைப் பற்றி தனித்துவமான புரிதலை அளிக்க முடிகிறது. யோகம் கோரிக்கொள்வது போல உண்மையில் அது ஆபத்தற்றதா? யோகத்தின் எதிர்பாரா விளைவுகள் குறித்து இங்கு யாரும் எதுவும் பேசுவதில்லை. குண்டலினி பயிற்சிகள் சிலருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதை கவனித்தேன். சவுந்தரிடம் தொடர்ந்து உரையாடுபவன் எனும் முறையில் அவருக்கு எவ்வித மிகை நோக்கும் கிடையாது என்பதை அறிவேன். ஆயுர்வேதமும் சரி யோகமும் சரி ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது. சில அடிப்படை பயிற்சிகளை பொதுவாக வழங்கலாம். அதற்கப்பால் செல்வதற்கு கவனம் தேவை. இந்நூலில் அவரே குறிப்பிடுகிறார் "எனினும் இது மூச்சை சரியான நிகர்நிலையில் உள்ளிழுத்தல் ,வெளியிடுதல், குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளே மற்றும் வெளியே நிலை நிறுத்துதல் என்கிற பல்வேறு அங்கங்களை கொண்டது என்பதால் , சிறு மாறுதல் கூட ஒவ்வாமையை , எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்." என எழுதுகிறார். மிகைப்படுத்தாமல் யோகத்தைப் பற்றி அணுகும் குரல் முக்கியமானது. நடைமுறை பயனளிக்கும் யோக பயிற்சிகளுக்கும் யோகத்தின் அறுதி நோக்கம் குறித்தும் தெள்ளிய புரிதல் கொண்டவர் சவுந்தர் என்பதை அவருடனான தனிப்பட்ட உரையாடல்களின் வழி அவதானித்திருக்கிறேன். அப்பண்பை இந்நூலை வாசிப்பவர்களும் உணர முடியும். இந்தியாவில் ஒன்றை புனிதப்படுத்தவும், ஏற்பை உருவாக்கவும் அதை தொன்மைப்படுத்துவது நம் வழக்கம். இன்று உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்படும் சூர்யநமஸ்காரம் எனும் பயிற்சிமுறைக்கு வயது சில நூறாண்டுகள்தான் என குறிப்பிடுகிறார். 'மராட்டிய மன்னர்களின் குருவான ‘சமர்த்த ராம்தாஸ்’ எனும் துறவி தான், சூரிய வழிபாட்டை மேம்படுத்தி அதையொட்டி சில உடற்பயிற்சிகளை வடிவமைக்கிறார். அது படைவீரர்களுக்கு ,போர்த்தொழிலில் ஈடுபடுவோருக்குமான ஒரு பயிற்சியாக மாறுகிறது. இது அனைத்தும் 17ம் நூற்றாண்டில் தான் புழக்கத்திற்கு வருகிறது. ஆக சூரிய நமஸ்காரம் எனும் ஆசனப்பயிற்சி ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பயிற்சி செய்யப்படவில்லை, சூரிய வழிபாட்டில் இருந்த ஒன்று ஆசனங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்பதே நம்மிடமுள்ள சான்று.' என எழுதுகிறார். அதேபோல் ஹடயோக பிரதிபீகை போன்ற நூலில் மொத்தம் 84 ஆசனங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று அவை ஆயிரக்கணக்கான ஆசனங்களாக பெருகியுள்ளன. நேர்மாறாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருந்துகளின் எண்ணிககை குறைந்தபடியே உள்ளன. யோகம் வளரும் துறையாக உள்ளது. ஆயுர்வேத மருத்துவர் இல மகாதேவனிடமிருந்து நான் பெற்ற முக்கியதாக்கம் என்பது அவருடைய நோயாளி மைய நோக்கு. சிகிச்சைக்காக யோக பயிற்சிகளை பயன்படுத்தும் போது 'நவீன மருத்துவம் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகளை கைவிட்டு விட்டு இதை தொடங்கவேண்டிய அவசியமில்லை' என்கிறார்.
நமக்கான யோகாசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது? 'ஒரு முழுமையான அறிவு அல்லது பாடத்திட்டம் என்பது மரபார்ந்த ஒன்றாக இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சமகால அறிவியல் சார்ந்ததாகவும் இருத்தல் அவசியமாகிறது, அதுவும் யோகம் போன்ற உடல், மனம், இயக்கம் ,போன்ற வாழ்வியல் அம்சங்களில் இந்த அணுகுமுறை முக்கியமான ஒன்று. ஆகவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் ,யோக ஆசிரியர் அல்லது நிறுவனம், உங்களுக்கு பரிந்துரைக்கும் பயிற்சிகள் சார்ந்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முன் வைக்கிறார்களா? அந்த பயிற்சிகளின் சாதக பாதகங்கள் விரிவாக சொல்லப்படுகிறதா ? எந்த வகையில் இந்த பயிற்சி உங்கள் உடலியல் /மனம் சார்ந்த உபாதைக்கு உதவும். உடலில் எந்த மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமாக தவறாக பயிற்சி செய்தல் நிகழும் பக்கவிளைவுகள் யாவை ? போன்ற அனைத்தும் அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவிலோ , உலக அளவிலோ, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்களா? அதன் எதிர்வினை என்ன? போன்ற அறிவுசார் விவாதங்கள் நிகழ்திருக்கிறதா ? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், உலக அளவில் முக்கியமான நான்கு நிறுவனங்கள் இதை மிகச்சிறப்பாக செய்து வருவதை இணையத்தில் சற்று தேடினாலே கண்டு கொள்ள முடியும்.' மேலும் 'வெறும் ஆர்வத்தால் , அல்லது இணையத்தில் உலவும் யோகம் சார்ந்த அமானுஷ்ய காரணங்களால், அல்லது பொழுதுபோக்கிற்காக, என்கிற மேலோட்டமான , எவ்வகையிலும் நமக்கு உதவாத ஒன்றை செய்து பார்ப்பதை விட அதை செய்யாமலே இருக்கலாம். ' என எச்சரிக்கவும் செய்கிறார். 'இன்று பெரும்பாலான யோக மையங்களில் சொல்லிக்கொடுக்கபடுவது போல, கண்களை மூடி கையை ஒரு குறிப்பிட்ட முத்திரையில் வைத்து அமர்ந்திருப்பது தியானமல்ல. இங்கே ஒருவர் கண்களை மூடி எதையோ சிந்தித்துக்கொண்டு அல்லது எதோ ஒரு எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்பதே முழு உண்மை.' என தியான முறை குறித்து சொல்கிறார். இவற்றை எடுத்துக்கூறவே ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
துறை சார்ந்த வல்லுனர்கள் பொதுமக்களுக்கான நுல் எழுதுவதில் உள்ள மிக முக்கியமான சவால்களென்பது எந்த அளவிற்கு தகவல் தர வேண்டும், மொழியை எப்படி எளிதாக்க வேண்டும் ஆகியவை தான். யோகம் குறித்த நல்ல அறிமுக கையேடு என இந்நூலை சொல்லலாம். தொன்மையான, நுட்பமான விஷயங்களை நடைமுறை தளத்தில் கொணர்ந்து பேசுவதே காரணம். எளிய உருவகங்கள் வழி நுட்பங்களை உணர்த்துகிறார். 'அதே பிராணன் தான் நம் உடல் மனம் புத்தி உணர்வு என ஒவ்வொரு தளமாக இயங்கிக்கொண்டு இருக்கையில் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் இணைப்பாக இயங்குகிறது. ஒரு காரில் நாம் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை கியரை மாற்றுவது போல அப்படி மாற்றும் பொழுது நடுவே நியூட்ரல் நிலைக்கு வந்து பின் அடுத்த கியருக்கு மாற்றுவது போல நம்மில் பிராணன் இயங்குகிறது.' மனதை பாண்டோர பெட்டியாக உருவகிக்கிறார். ஒலிம்பிக் ஜோதியின் தொடரோட்டத்தை நரம்பு மண்டல செய்தி கடத்திகளுடன் ஒப்பிடுகிறார்.
சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆசன பயிற்சிகள் போதும் என்கிறார். அவற்றைத் தேர்ந்தெடுக்க ஆசிரியரின் உதவி தேவை. வாத பித்த கப அமைப்புகள், கால - இட பிரக்ஞை என பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பிரத்யேகமான பயிற்சியை வடிவமைக்க வேண்டும் என்கிறார்.'யோக மரபும் தன் பயிற்சிகளில் முதலில் ஒருவருக்கு வழங்குவது, இந்த அபானனை சமன்செய்யக்கூடிய பயிற்சிகள் தான், இதை ஒருவர் சரிசெய்து விட்டாலே ,பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் ஓரளவு சரியாகி விடுகிறது. ஆரோக்கியத்தின் திறவுகோல் என்று இந்த பகுதியை சுவாமி சத்யானந்தர் குறிப்பிடுகிறார்.'
எளிய மொழியில் ஆழத்துடன் அனைவருக்குமான யோக நூலை எழுதியுள்ள நண்பரும் ஆசிரியருமான சவுந்தருக்கு வாழ்த்துகள்.
August 4, 2025
சத்திய சோதனை ஆய்வு பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

https://books.kalachuvadu.com/catalog...
‘சத்திய சோதனை’யின் இந்த ஆய்வுப் பதிப்பின் பதிப்பாசிரியரான திரிதீப் சுஹ்ருத். காந்திய அறிஞர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.
சத்திய சோதனை நூலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்கள், அவற்றின் பின்னணி சார்ந்த குறிப்புகள், குஜராத்தி மூலத்திற்கும் ஆங்கில மொழியாக்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் கொண்ட விரிவான பதிப்பு இது. குஜராத்தியில் காந்தி எழுதியதை, காந்தியின் மேற்பார்வையில் செய்யப்பட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் இந்த நூல் தனித்துவமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திக்கு வந்த கடிதங்களையும் தேவையான இடங்களில் அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார் திரிதீப் சுஹ்ருத்.
காந்தியின் தன்வரலாறுக்குத் தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. காந்தியை அவரது மனப் போராட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அது அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய மொழியாக்கம் காந்தியை மேலும் நெருக்கமாக நமக்கு அறிமுகப்படுத்தும்.
July 31, 2025
காந்தியின் குரலாக ஒலிப்பது- மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை & மொழிபெயர்ப்பாளர் நன்றி குறிப்பு
காலச்சுவடு பதிப்பகம் நான் மொழியாக்கம் செய்த சத்திய சோதனை ஆய்வு பதிப்பிற்கு முன்வெளியீட்டு திட்டம் அறிவித்துள்ளது.

முன்வெளியீட்டு விலைத்திட்டம்காந்தியின் தன்வரலாறு - சத்திய சோதனையின் ஆய்வுப் பதிப்புமூல ஆசிரியர் : மகாதேவ் தேசாய் அறிமுகமும் அடிக்குறிப்புகளும் : திரிதீப் சுஹ்ருத் தமிழில் : சுனில் கிருஷ்ணன்பக்கம் : 984விலை : ரூ.990முன் வெளியீட்டு விலை : ரூ.750பதிவு தொடங்கும் நாள் : ஆகஸ்ட் 1கடைசி நாள் : செப்டம்பர் 20நூல் செப்டம்பர் 25 க்குப் பிறகு அனுப்பி வைக்கப்படும்நூலைப் பெற: https://books.kalachuvadu.com/catalog...
தமிழுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தன்வரலாறு ஒன்றும் புதிதல்ல. 1948 ஆம் ஆண்டு T. விசுவநாதன் மொழியாக்கத்தில் ஒரு பதிப்பு வெளிவந்தது. கா. ஸ்ரீ. ஸ்ரீ யும் மொழியாக்கம் செய்துள்ளார். கல்கி மொழியாக்கம் செய்தபோதுதான் 'சத்திய சோதனை' எனும் தலைப்பு வழங்கப்பட்டது. சி.எஸ். தேவநாதன் மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பதிப்பு வெளியானது. சமீப காலத்தில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி மொழியாக்கம் செய்துள்ளார். இன்று சர்வோதய பண்ணை மற்றும் காந்தி இலக்கியச் சங்கம் வெளியீடாக நமக்கு கிடைக்கும் பதிப்பு என்பது ரா. வேங்கடராஜூலு மொழியாக்கம் செய்ததுதான். இந்த மொழியாக்கமே பரவலாக கவனம் பெற்றது, வாசிக்க கிடைப்பது.
இன்று வாசிக்கும் போது கூட பெரிய அர்த்தப் பிழைகள் ஏதுமற்ற, சரளமான வாசிப்பை அளிக்கக்கூடிய மொழியாக்கம் அவருடையது. இந்நூலை வேங்கடராஜூலுவின் தன்னலமற்ற மகத்தான பணியையும் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தே தொடங்க வேண்டும். எனது மொழியாக்கத்திற்கு வழிகாட்டியாக நான் கருதியது அவரது மொழியாக்கத்தை தான்.
வேங்கடராஜூலுவின் புகைப்படம் கூட நமக்கு கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் என பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. தொ.மு.சி ரகுநாதன் அவரது புதுமைப்பித்தன் வரலாறு நூலில் போகிற போக்கில் 'தினசரியின் துணையாசிரியர் ரா. வேங்கடராஜூலு நாயுடுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் சௌஜன்யத் தொடர்பில்லை. புதுமைப்பித்தனோடு எந்தவித சுமுக பாவம் கொண்டிருந்தாரோ, அதே சுமுக பாவத்தோடு சொக்கலிங்கம் நாயுடுவோடும் பழகி வந்தார்.' என ஒரு சிறு குறிப்பை அளிக்கிறார். தால்ஸ்தாயின் போரும் வாழ்வும் நாவலை மொழியாக்கம் செய்த டி.எஸ். சொக்கலிங்கம் திணமணியிலிருந்து விலகி ‘தினசரி’ என ஒரு இதழை தொடங்குகிறார். அதில் புதுமைப்பித்தனும் ரா. வேங்கடராஜுலுவும் துணை ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளார்கள். நமக்கு கிடைக்கும் மற்றொரு குறிப்பு என்பது க.நா.சு வின் 'பெரிய மனிதன்' எனும் நாவலின் முன்னுரையில் இந்த நாவலை அழகாக வெளியிட்ட வேல் புத்தக நிலையத்தின் ரா. வேங்கடராஜூலுவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பிரசாத்தின் 'அண்ணல் காந்தி அடிச்சுவட்டில்' எனும் நூலும் வேல் புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டது. மற்றொரு தகவல் என்பது எழுத்தாளர் கு. அழகிரிசாமியும் வேங்கடராஜுலுவுடன் இணைந்து காந்தியின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்துள்ளார்கள். மிக சமீப ஆண்டுகளில் வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியவில்லை. அதுவும் தமிழில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ஒரு நூலின் மொழிபெயர்ப்பாளர் அவர்!
இந்த புதிய மொழியாக்கத்திற்கு தேவை என்ன? முந்தைய மொழியாக்கத்தில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? திரிதீப் சுஹ்ருத் கொணர்ந்திருப்பது உரையுடன் கூடிய ஆய்வு பதிப்பு. மூலமொழியான குஜராத்தியில் எழுதப்பட்ட பிரதியை, காந்தியின் காலத்தில், அவரது மேற்பார்வையில் செய்யப்பட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் தனித்துவமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. சுஹ்ருத் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குனராக பணியாற்றியவர். காந்திய அறிஞர் என்பதால் அவர் அளிக்கும் அடிக்குறிப்புகளில் பல தரவுகள் புதியவை. காந்தியின் எழுத்துக்களை தாண்டி காந்திக்கு வந்த கடிதங்களை ஆங்காங்கு அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார். ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்திற்குரிய மொழியில் மறு மொழியாக்கம் செய்யப்படுவதன் வழி பிரதியின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. புதிய வாசகர்களை சென்றடைகிறது. ஏதோ ஒருவகையில் சமகால பொருத்தப்பாடு இருக்கும் பிரதிகளே காலந்தோறும் மீண்டும் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. மொழியாக்கம் என்பது மூல பிரதியை, அதன் ஆசிரியரை இன்னும் இன்னும் என நெருங்கி செல்வதற்கான ஒரு வழிமுறையாக காண முடியும். 'தன்வரலாறின்' முக்கியத்துவம் என்பது ஒரு வகையில் காந்தியின் முக்கியத்துவமும் கூட. எனினும் காந்தியின் தன்வரலாறுக்கு தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. மகத்தான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. காந்தியை அவரது மன ஊசலாட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்துவது. ஒரு பெரும் யதார்த்த நாவல் வாசிக்கும் கிளர்ச்சியை அளிப்பது.
இந்த புதிய மொழியாக்கம் குஜராத்தி மூலத்துடன் ஒப்பிட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கிடைக்கும் காந்தி ஒருவித பண்படுத்தப்பட்ட காந்தி, மூல மொழியில் அவர் வேறு மாதிரி இருப்பார் என்பது டாக்டர். அம்பேத்கர் காந்தி மீது வைக்கும் விமர்சனங்களில் ஒன்று. இந்த மொழியாக்கத்தில் ஈடுபடும்போது அம்பேத்கர் எதை குறிப்பிடுகிறார் என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. பண்படாத உணரப்படுவதை நான் உள்ளூர் தன்மை என்று குறிப்பிடுவேன். காந்தியின் எழுத்தில் மிளிரும் இந்த ‘உள்ளூர்’ தன்மை அவரது மெய்யியலுக்கு முரணானது இல்லை. விமர்சன பூர்வமாக நிராகரிக்கப்பட வேண்டிய அம்சம் இல்லை என்பதே என் பார்வை. ‘உள்ளூர் தன்மை’ என்பதை ‘நாட்டார் தன்மை’ என்று சொல்லலாம். நாட்டார் வழக்குகள் மிகச் சரளமாக வந்து விழுவதைக் காண முடிகிறது. எனக்கு காந்தி சில இடங்களில் கி.ராவிற்கு நெருக்கமானவராக தோன்றியிருக்கிறார். சற்றே துடுக்கான கேலியும் கிண்டலும் மொழியில் விரவிக் கிடக்கிறது. ஒரு உதாரணம் அளிக்கலாம் என்றால் இந்நூலில் இரண்டு மூன்று இடங்களில் தனது நிலையை விளக்க காந்தி 'between devil and the deep sea' எனும் உவமை சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றை நாம் ஒன்றுபோலவே மொழியாக்கம் செய்துள்ளோம் ஆனால் திரிதீப் சுஹ்ருத் குஜராத்தி மூலத்தில் ஒவ்வொன்றும் வேறு வேறு சொல்வழக்குகள் என்பதை காட்டுகிறார். 'ஆட்டுக்கல்லின் இரண்டு கற்களுக்கு நடுவே அரைபடுவது போல்' என கும்பமேளா அத்தியாயத்தில் வருகிறது, மற்றொரு இடத்தில் 'பாக்குவெட்டியில் சிக்கிய கொட்டைப்பாக்கைப் போல' எனும் சொல் வழக்கு வருகிறது. ஆங்கிலத்தில் எல்லா மதத்தையும் சகித்துக்கொள்வது எனும் பொருளில் 'tolerance' என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் காந்தி மூலத்தில் அளித்திருக்கும் சொல்லை மொழியாக்கம் செய்தால் 'equability' என்று வருகிறது. எல்லா மதங்களையும் ஒரே மாதிரியாக காணும் பார்வை என இதை சொல்லலாம். ஒன்றை சகித்துக் கொள்வதற்கு சமபாவத்தில் நோக்குவதற்கும் வேறுபாடு உண்டு. இன்னொரு உதாரணத்தைச் சொல்லலாம் எனில் ஃபெரோஸ்ஷா மேத்தாவிற்கு காந்தி ஆற்றிய உரை பிடித்திருந்ததாக அறியும் போது, தற்போதைய ஆங்கில வடிவத்தில் உள்ளபடி மொழியாக்கம் செய்தால் 'மிகவும் மகிழ்ச்சியாக' உள்ளதாக பொருள்படும். புதிய மொழியாக்கத்தில் காந்தியின் சொற்கள் அந்த மகிழ்ச்சியை இப்படி விவரிக்கிறது 'எனக்கது கங்கையில் நீராடியதற்கு இணையாகும்.' இந்த இரண்டு வெளிப்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை நாம் கவனிக்க முடியும் என எண்ணுகிறேன். இந்த புதிய மொழியாக்கம் காந்தியை மேலும் நெருக்கமான ஆளுமையாக நமக்கு அறிமுகப்படுத்தும். இவைத்தவிர திரிதீப் சுஹ்ருத் அளிக்கும் அடிக்குறிப்புகள் மிக முக்கியமானவை. துதா பாய், ஷேக் மேத்தாப் என பலரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
திரிதீப் சுஹ்ருத் இந்நூலில் இரண்டுவிதமான குறிப்புகளை அளித்துள்ளார். பக்கவாட்டில் மேம்பட்ட மொழியாக்கத்தையும் அடிக்குறிப்பில் குறிப்புரையும் அளித்துள்ளார். ஆங்கில - குஜராத்தி பிரதிகளுக்கு இடையேயான மொழி ரீதியான மாற்றங்களை பதிவு செய்வதே அவர் நோக்கம். அதிலிருந்து மூலத்திற்கு நெருக்கமான வடிவத்தை அடைய முயல்கிறார். ஒரு நூலிற்குள் இரண்டு பிரதிகளை உருவாக்குகிறார். அவற்றை இணை வாசிப்பு செய்ய வழிவகை செய்கிறார். தமிழ் மொழியாக்கத்தில் அத்தகைய ஒரு பாணி பொருந்தாது. மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் என இரண்டு கட்ட மொழிபெயர்ப்புக்கு பின் வெளிவருகிறது. ஆங்கில மொழியாக்கத்தை மூலமாக கொண்டு, குஜராத்தி மூலத்தில் பயன்படுத்தியிருப்பவற்றை அடிக்குறிப்புகளாக அளித்திருக்கிறோம். பிற அடிக்குறிப்புகள் மூல நூலில் உள்ளபடியே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அடிக்குறிப்பு எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திரிதீப் சுஹ்ருத் பகுதி வாரியாக எண்ணிக்கையை அளித்துள்ளார். வாசிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் இப்பதிப்பில் அத்தியாய வாரியாக எண்ணிக்கை இடப்பட்டுள்ளது.
இந்த மொழியாக்கத்தை முடிக்க ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகியுள்ளன. முதல் ஒன்றரை ஆண்டுகள் அத்தனை முனைப்புடன் ஈடுபடவில்லை என்றாலும் கூட, அதற்கு பிந்தைய ஒன்றரை ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் மொழியாக்கப் பணியில் ஈடுபட்டேன். ஆங்கில பிரதியோடு ஒப்பிட்டு திருத்தங்கள் செய்ய மட்டும் மூன்று மாதங்கள் ஆயின. வளர்ந்து வரும் புனைவு எழுத்தாளராக இந்த முக்கியமான காலகட்டத்தை மொழியாக்கத்திற்கு அளித்தது புத்திசாலித்தனமான செயல் அல்ல என நண்பர்கள் பலர் அக்கறையுடன் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களின் அன்பையும் அக்கறையையும் புரிந்து கொள்கிறேன். இந்நூலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் நான் வேறு பலவற்றையும் எழுதினேன். ஆனால் அவை எனக்கு குற்ற உணர்வை அளித்தன. மலைபோல ஒரு பணி காத்துக்கொண்டு இருக்கிறது எனும் எச்சரிக்கை மணி உள்ளே ஒலித்தபடி இருக்கும். பல பணிகளை ஒத்தி போடவும் கைவிடவும் நேர்ந்தன. எனினும் காந்தியின் தமிழ் குரலாக இருப்பதற்கான பெரும் வாய்ப்பு இது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அது அவரை உட்செரிப்பதற்கான பயிற்சி. புத்திசாலித்தனமான முடிவா என்றால் எனக்கு சொல்லத் தெரியவில்லை ஆனால் நிறைவான, ஆன்மீக ரீதியான அனுபவம் என்பதை உறுதியாகச் சொல்வேன். நிறைவளிக்கும் ஒன்று ஆற்றலை பெருக்குமே ஒழிய குன்றச் செய்யாது.
மொழியாக்க அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 2022 ல் திருத்தப்பட்ட வரைவை காலச்சுவடிற்கு அனுப்பினேன். 2023 மார்ச் மாதத்தில்தான் 200 பக்க அடிக்குறிப்புகள் காணாமல் போன விஷயத்தை அறிந்து கொண்டேன். எப்படி இறுதி கோப்பிலிருந்து அவை காணாமல் போயின என்பதை என்னால் இப்போதும் அறியமுடியவில்லை! மீண்டும் இரண்டு மாதங்கள் அவற்றை மொழியாக்கம் செய்தேன். மொழிபெயர்ப்பாளர் தி.அ. ஸ்ரீனிவாசன் பிரதியை திருத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். முதற்கட்ட மொழியாக்கத்தில் அவர் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட விதம் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். சிற்றிதழ் தமிழ், தனித்தமிழ் சொற்களை சரளமாக பயன்படுத்தி இருந்தேன். அவை இந்த மொழியாக்கத்தில் என்னுடைய பங்களிப்பு என்றொரு எண்ணம் எனக்கிருந்தது. ‘சரிதான், காந்தியின் மொழி எளிமையானது, நேரடியானது சாமானிய மக்களை சென்று சேர வேண்டும் என்பதை இலக்காக கொண்டது, அவர் இத்தனை சிடுக்கான சொற்களை பயன்படுத்தி இருப்பாரா என்பதை யோசியுங்கள்’ என்றார். எனக்கு பெரும் திறப்பை அளித்தது. காந்திக்கு, அவரது குரலுக்கு உண்மையாக இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. பாடகர்கள் சுருதி சேர்ப்பது என்று சொல்வார்கள். மொழிபெயர்ப்பும் மொழி வழி ஆசிரியருடையுடைய சுருதியுடன் இயைவது தான். அடிக்குறிப்புகள் பயன்பாட்டில் சில குழப்பங்களை ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டினார். உச்சரிப்பிற்கு frovo, யு ட்யூப் போன்ற ஆங்கில தளத்தின் உதவியை நாடினேன். ஸ்ரீனிவாசனுக்கு இந்தி தெரியும். ஆங்கிலத்தில் குழப்பம் நேரும்போது இந்தி பிரதியுடன் ஒப்புநோக்கும் முறையை பின்பற்றினார். ஆங்கிலத்தை விடவும் இந்தி மொழியாக்கம் குஜராத்திற்கு நெருக்கமாக இருக்கும். இந்தியை சரளமாக பொருள் கொள்ள தெரியாது என்றாலும் சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியும். உச்சரிப்பு சார்ந்த குழப்பங்களுக்கு நானும் இதே முறையை பின்பற்றினேன். பெரிய விஷயங்களை சிடுக்கான மொழியில் சொல்ல வேண்டியதில்லை, சத்தியத்தின் ஆற்றல் சொற்களில் தோயும் தோறும் எளிய சொற்களை கொண்டு பெரிய விஷயங்களை சுட்டிவிட முடியும் என்பதே இந்த மொழியாக்கம் வழி நான் கற்றுக்கொண்டது. இயன்றவரை ஒழுங்காக செய்துள்ளேன் என நம்புகிறேன்.
சுனில்கிருஷ்ணன்
1-5-2025
காரைக்குடி
மொழிபெயர்ப்பாளர் நன்றி குறிப்பு
மொழியாக்கத்தை வரைவு வடிவத்தில் வாசித்து திருத்தங்கள் அளித்த திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி. மொழியாக்கத்தை சுலபமாக்கியதில் நவீன தொழில்நுட்பத்திற்கு பங்கு உண்டு. ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்ட இந்நூலின் 700 பக்கங்களாவது கைப்பேசியில் எழுதியவை தான். தமிழ் விக்சனரி இணைய தளம் பல துறை சொற்களுக்கான தமிழ் சொற்களை அளித்து உதவியது. forvo இணையதளம் உச்சரிப்புக்கு வழிகாட்டியது.
2018 ஆம் ஆண்டு காந்தி குறித்து ஒரு நூலை கொண்டு வருவோம் என காலச்சுவடு கண்ணன் பேசினார். வேறு சில நூல்களை பரிசீலித்த பின் இந்நூலை முடிவு செய்தோம். ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பொறுமையாக காத்திருந்து வெளியிட முன்வந்ததற்கு காலச்சுவடு கண்ணனுக்கும், எழுத்தாளர் அரவிந்தனுக்கும் நன்றி.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் தி.அ ஸ்ரீனிவாசன் ஏறத்தாழ இணை ஆசிரியரை போல் செயல்பட்டு இந்த பிரதியை மேம்படுத்தியுள்ளார். மொழியாக்கம் செய்வதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. காந்தியரான திருமதி. சித்ரா பாலசுப்பிரமணியன் இந்த பிரதியை வாசித்து மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த பிரதியை நூலாக்கம் செய்வது மிகச்சவாலான பணி. திறம்பட செய்த திரு பெருமாளுக்கும், காலச்சுவடு குழுவினருக்கு நன்றி. பலகட்ட திருத்தங்களை சுணங்காமல் செய்தார் பெருமாள். அம்மா ரமாதேவி, மனைவி டாக்டர். மானசா, குழந்தைகள் சுதிர் மற்றும் சபர்மதிக்கு அன்பும் நன்றியும்.
June 22, 2025
பழைய தனிமையின் புதிய கதைகள்
தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்
2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அவருடைய ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ (யாவரும் பதிப்பக வெளியீடு) எனும் சிறுகதை தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான லட்சுமிஹர் படத்தொகுப்பில் ஆர்வம் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் பங்காற்றி வருகிறார். உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். மொத்தம் 12 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு அவரது நான்காவது சிறுகதை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னுரையில் தனது கதைகளை ‘ட்ரான்ஸ் ரிஜிட் கதைகள்’ என வரையறை செய்கிறார். அவரளிக்கும் வரையறை என்பது ‘கதைகூறலின் ஒழுங்கின்மை தனக்கான வரைமுறைகளை வகுத்துக் கொள்கிறது’ என்பதாக உள்ளது. லட்சுமிஹரின் மொழி உரைநடை மொழி அமைப்பைவிட கவிதைக்கான மொழியமைவுக்கு (Syntax) நெருக்கமாக உள்ளது என்பதே அவரது பலமும் பலவீனமும் ஆகும். நில அளவையாளர் - அகழ்வாராய்ச்சியாளர் என எழுத்தாளர்களை இரண்டாக வகுக்கலாம் என தோன்றும். யுவன் சந்திரசேகர் ஒரு கதைக்கு ‘அகழ்வாராய்ச்சி’ என்று தலைப்பிட்டிருப்பார். இலக்கியமே ஒரு அகழ்வாராய்ச்சி. எல்லா இலக்கியவாதிகளும் அகழ்வாராய்ச்சியாளர் தான் என்று காண இடமுண்டு. உள்ளிருந்து அகழ்ந்து அரிய உண்மையை மீட்கும் முயற்சி. லட்சுமிஹரும் நேர்மையாக அதற்குத்தான் முயல்கிறார் அகத்தை ஊடுருவி காணும் எழுத்துமுறைக்கு வலுவான சொற்கலன் இருப்பது அவசியம். மரபிலக்கிய கற்றல் வழி அந்த செழுமையை எட்டிய பிரமிளை ஒரு முன்மாதிரியாக சொல்லலாம். லட்சுமிஹரின் சிடுக்கான மொழியில் சில போதாமைகளை உணர முடிகிறது. மொழி மீதான ஆளுகை கூடுந்தோறும் அவரது படைப்புலகம் இன்னும் ஆழம் பெறும் என எண்ணுகிறேன்.

லட்சுமிஹரின் கதை மாந்தர்கள் தனிமையில் உழல்பவர்கள். அவர்கள் தங்களைப் போன்ற சக தனியர்களை கதைகளின் ஊடாக கண்டு கொள்கிறார்கள். கரிசனமும் குரூரமும் மாறிமாறி ஒரு விளையாட்டை போல் நிகழ்கிறது. தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ கதையில், கதை சொல்லி பேபி எனும் கிழவியை தேவாலயத்தில் சந்தித்து தினமும் கதை பேசுகிறான். ஒரு விளையாட்டு போல தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல் பத்திரங்களை எடுத்து வாசிக்க சொல்லுகிறார் பேபி. வேண்டுதல்கள் ரகசியமானவை. அந்தரங்கமானவை. நோயுற்றிருக்கும் கதைசொல்லி அந்த வேண்டுதலை வாசித்து தொந்திரவுக்கு உள்ளாகிறான். வாழும் இச்சை அவனை இயக்கும் போது, மரணத்தை வேண்டுதலாக தேவனிடம் கோருபவரை சந்திக்க வேண்டும் என எண்ணுகிறான். அந்த வேண்டுதல் பேபியினுடையதாக அவனுக்குள் ஒலிக்கிறது. பேபியை தேடி வரும்போது அங்கே அவளுடைய அதே வடிவத்தை கொண்ட ஒரு அழுக்கு மூட்டை மட்டுமே எஞ்சியிருக்கிறது. வேண்டுதல் பத்திரங்களால் ஆன ஒரு அழுக்கு மூட்டையாக ஒரு மனிதர் உருமாறுகிறார் என்பதொரு விசித்திரமான ஆழ்மன வெளிப்பாடு. பேபி அவனை தவிக்கவிடுகிறார். உண்மையில் அவர் கரிசனம் கொண்டவரா அல்லது அவனை மாட்டிவிட்டாரா? இரண்டு சாத்தியங்களையும் இக்கதை அளிக்கின்றது.
லட்சுமிஹரின் வெவ்வேறு கதை மாந்தர்கள் இத்தகைய வண்ண வேறுபாடுகளை கொண்டவர்களாக உள்ளார்கள். பேபியை போலவே வெவ்வேறு கதை மாந்தர்கள் சுவடின்றி வாழ்விலிருந்து மறைந்து போகிறார்கள். லட்சுமிஹரின் கதை மாந்தர்கள் இத்தகைய உதிரிகள் மீது பற்று கொள்கிறார்கள். அவர்களின் மீது கரிசனம் கொள்கிறார்கள். ‘கதவு சிறகு’ கதையில் பறவை பார்த்தலுக்கு செல்லும் கதைசொல்லிக்கு அங்கு எப்போதும் வருபவரை பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் புகைப்படம் எடுப்பவர். கடைசியாக காணும்போது கானகத்தின் மரத்தடியில் அமர்ந்து தனியாக அழுகிறார். அதற்கு பின் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி அவரைப் பற்றியே சிந்திக்கிறான். ‘எதன் பொருட்டு அந்த மனிதன் என்னிடம் இப்படித் தொற்றிக்கொண்டான் என்று தெரியவில்லை. எங்கோ கிடைத்த ஒன்றை இங்குவரை தூக்கிக்கொண்டு அலைவது எதனால்.’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். லட்சுமிஹரின் கதை மாந்தர்களின் பொது இயல்பு என்றே இதை சுட்ட முடியும். ‘ஆன் தி ராக்ஸ்’ இதே வரிசையில் வரும் இன்னொரு கதை. உடன் பணிபுரியும் பெண் கதை சொல்லியை கோவா திரைப்பட விழாவிற்கு அழைத்து சென்று ஒரு புதிய ரசனையை அறிமுகம் செய்து வைக்கிறாள். அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் கதைசொல்லி திரைப்பட விழாவிற்கு செல்கிறான். ஆனால் அந்த ஆண்டோடு அவள் சுவடின்றி மறைகிறாள். ஏதோ ஒன்றை கையளித்து சுவடின்றி மறைபவர்கள் தேவதைகளா சாத்தானா எனும் குழப்பமே லட்சுமிஹரின் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி என தோன்றுகிறது. தொகுப்பின் தலைப்பு கதையான ‘கூத்தொன்று கூடிற்று’ இப்படியான ஒரு நிகழ்வை சித்தரிக்கிறது. பரபரப்பிற்கு நடுவே செயல் நேர்த்தி கொண்ட சற்றே விசித்திரமான பெண் ஒரு இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அவளுடைய தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத அந்த கருவியை விளையாட்டுத்தனமாக கையாள்கிறாள். கதைசொல்லிக்கு அந்த கருவியை எப்படியாவது அவளிடமிருந்து கைக்கொள்ள வேண்டும் என்று அவா பிறக்கிறது. அதை விலை பேசுகிறான். பணத்தை தொடாமல் ‘வாசித்து காட்டி எடுத்துக்கொள்’ என அவன் முன் வைக்கிறாள். அது அவனை வெகுவாக சீண்டுகிறது. வாசிக்க தெரியாதவன் அந்த கருவியின் மீது ஏன் இத்தனை ஈடுபாடு கொள்கிறான்? அந்த கருவியை அவன் முன்னே வைத்துவிட்டு மறைகிறாள். அது அவனை கேலி செய்வதாக தோன்றுகிறது. படைப்பு செயல்பாடு குறித்த நுட்பமான அவதானிப்பு கொண்டதாக இந்த கதையை வாசிக்க இடமுண்டு.
இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை என ‘கூடார கரிசனம்’ கதையை சொல்வேன். ‘வேடிக்கையும் இன்னபிறவும்’ கூடார கரிசனத்தின் தொடர்ச்சி என சொல்லலாம். நாட்டார் தொன்மமும் நவீன வாழ்வும் இயையும் களத்தில் கதை நிகழ்கிறது. அடைக்கலம் கொடுத்த குலத்தை, வந்து சேர்ந்த இனம் விரட்டியடிக்கிறது. சென்றவர்கள் தங்கள் தெய்வம் குடியிருந்த ஆலமரத்தில் இருந்து அவளை சுமந்து செல்கிறார்கள். உங்களுக்கு கூரையில்லாம போகட்டும் என்று அவள் விட்ட சாபத்தை மக்கள் அஞ்சுகிறார்கள். கதைசொல்லி பெற்றோர்களின் ஓயாத சண்டையின் ஊடாக பால்யத்தை கழித்தவன். தற்கொலை செய்துகொண்ட அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ஊருக்கு திரும்பி ஒரு மாடி வீடு கட்ட விரும்புகிறான். சாபத்தினால் விளையும் ஆபத்துக்களை எதிர்நோக்கி மக்கள் காத்து கொண்டிருக்கையில் அப்படி ஏதும் நிகழவில்லை. சிறுவனாக இருக்கும்போது அவன் அந்த தெய்வம் அகன்று சென்ற பள்ளத்தில் விழுந்து உயிர்பிழைத்தவன் என்பதால் அவனை விதிவிலக்காக ஆலமரத்துக்காரி அனுமதித்து விட்டாள் என மக்கள் நம்பினர். வீடை கட்டி முடித்தவன் உள்ளே அவனது அம்மா அப்பாவின் சண்டைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்கிறான். ஊர்மக்கள் அவன் வென்று விட்டதாக எண்ணும் போது, ஒருபோதும் திரும்புவதில்லை எனும் வைராக்கியத்துடன் வீடை பூட்டிக்கொண்டு கிளம்புகிறான். கூடார கரிசனம் உண்மையில் தரிசனமா அல்லது தண்டனையா என்றொரு கேள்வி எழுகிறது. நாம் விரும்பி கைக்கொள்ளும் விஷயங்கள் நம்மை வேறொரு வகையில் எப்படி சிறைபிடிக்கின்றன என்பதை தொடர்ந்து வெவ்வேறு கதைகளில் லட்சுமிஹர் எழுதி பார்ப்பதாக தோன்றியது.
லட்சுமிஹரின் கதைகளை வாசிக்கும்போது அவரது கதைகளின் முதன்மையான பேசுபொருள் என்பது தனிமை என்று சொல்லலாம். இலக்கியத்தில் தனிமை என்பது புதிய பேசுபொருள் அல்ல. எனினும் சமகாலத்தில், உலகம் ஒரு வலைப்பின்னலாக இணைந்திருக்கும்போது இப்போது உணரும் தனிமையும் வெறுமையும் சற்றே மாறுபட்டது. மிகைகளின், தேர்வுகளின் வெறுமை என சொல்லலாம். குணா கந்தசாமியின் ‘டாங்கோ’, வே.நி. சூர்யாவின் கவிதைகள் வரிசையில் இவரது கதைகளை வைக்கலாம். என் நோக்கில் நவீன இலக்கியவாதி தன்னை ஆட்கொள்ளும் கேள்வியை பின்தொடர்ந்து செல்வதன் விளைவே படைப்பு என்று கருதுகிறேன். இந்த பண்பே கேளிக்கை எழுத்துக்களில் இருந்து தீவிர இலக்கியத்தை தனித்து காட்டுவதாகும். மொழி, எழுது முறை போன்றவற்றை எழுத்தாளர்கள் வாசிப்பின் வழி பயின்று அடைய முடியும். அவ்வகையில் லட்சுமிஹர் தனக்கான தனித்த புனைவு மொழியில் கதைகளின் வழி தனக்கான கேள்விகளை பின்தொடர்கிறார் என்பதை முக்கியமாக காண்கிறேன்.
‘தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றினை முழுவதும் கற்பனை என்று என்னால் கூறிவிட முடியாது’ (கித்தானுடைய வண்ணப்பேழை) என்றொரு வரி அவரது கதைகளின் மையமாக எனக்கு தோன்றியது. இந்த விருது ஒரு தொடக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்ற லட்சுமிஹருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
June 6, 2025
இந்தக் கதையை உங்களுக்கு பெருமையுடன் வழங்குவது உங்கள் அபிமான …
நண்பர் பழுவேட்டையர் ஒரு கதை வாசிக்க சொல்லி அனுப்பினார். ஏற்கனவே ‘குறிஞ்சி’ சிற்றிதழில் வெளியான கதை. “ஆனாலும் இது உங்களுக்கு தேவையில்லாத வம்பு” என்று கண்டித்தேன். “ஆனால் தமிழ் இலக்கியத்தின் செல்திசை குறித்து சில முக்கிய அவதானிப்புகள் உள்ளதாக வாதிட்டார். மூத்த எழுத்தாளர் என்பதால் பதிலுக்கு பதில் பேசவில்லை. அவரது, வேண்டுகோளுக்கு இணங்க, இணையதள வாசகர்களுக்காக இங்கே பதியப்படுகிறது. நன்றி- சுனில் கிருஷ்ணன்
------
கிடாரம் சோபாவின் நுனியில் அமர்ந்து கொண்டிருந்தான். பழுவேட்டையருக்கு இருப்பு கொள்ளவில்லை. எதிர் சுவற்றில் இந்த மாத ‘டாப் பெர்மார்ஸ்’ என்றொரு பட்டியல் தென்பட்டது. லிங்கராஜ் எனும் பெயருக்கு அருகே இருந்த படத்தை பார்த்தால் அவருக்கு 65 வயதிருக்கலாம். பழுவேட்டையர் குழம்பினார். “இதுல எப்புடிடா இந்தாளு டாப் பெர்பார்மரானான்” என கிடாரம் காதில் கிசுகிசுத்தார். “அத விடுண்ணே. இவன்தான் டாப்னு எப்புடி கண்டுபிடிச்சாய்ங்க?” வழுவழுப்பான பளிங்கு தரையில் கால் வைக்க கூசியது. கண்ணாடி சுவரில் வேட்டியும் ஜிப்பாவும் அணிந்த தனது பிம்பத்தை கண்டதும் என்னவோ போல இருந்தது. “இதெல்லாம் சரியா வருமாடா” “நீ சும்மா இருன்னே. இப்ப இதுதான் ட்ரெண்டு”
பழுவேட்டையர் எழுதிமுடித்த ‘அத்தான்’ நாவலுக்கு விளம்பரதாரரை பார்க்க தான் இருவரும் வந்திருந்தார்கள். கிடாரம் பழுவேட்டையரிடம் கேட்காமலேயே ஃபேஸ்புக்கில் பழுவேட்டையரின் புதிய நாவலுக்கு விளம்பரதாரர் தேவை என அறிவிப்பு வெளியிட்டிருந்தான். “என்னடா இது அசிங்கமா,பிச்சை எடுக்க சொல்லுறியா” “இது பிச்சை இல்லை. எழுத்தாளர் உரிமை தொகை. சமூகத்துக்கு நமக்கு செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கு. அதை நியாபகப்படுத்துறோம். அம்புட்டுதான். மேல்நிலைப்பட்டி பேய்க்காமன் தெரியும்ல, அவனுக்கே ஒரு திருப்பூர் பனியன் கம்பெனி விளம்பரமா அஞ்சு லகரம் கொடுத்துருக்காய்ங்க. கீழாநிலகோட்டை முத்து காமாட்சிக்கு கொடுத்த காசுல மாவரைக்கிற மிஷினை வாங்கி செட்டில் ஆயிட்டா. உனக்கும் நல்லது நடக்க வேண்டாமா?” என்று அவர் வாயடைந்தான்.
பழுவேட்டையருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக நீ முந்தி நான் முந்தி என ஆளாளுக்கு முன்வந்தார்கள். “நான் பழுவேட்டையரின் தீவிர வாசகர். நாளைக்கே இந்த விலாசத்துக்கு வாங்க” என்று ஆவுடையப்பன் என்பவர் கிடாரத்தை தொடர்பு கொண்டார். “நெசமாத்தான் சொல்றியா” என வியப்பு பொங்க கேட்டார் பழுவேட்டையர். “நம்புன்னே. எக்கசக்க பேரு போட்டி போடுறாய்ங்க. ஒரே நாவல்ல செட்டிலாகிடலாம். இவரு ஏதோ பெரிய இடம் போல. போய் பாப்போம்” “ஆளு யாரு என்னன்னு சாரிச்சியா?” “சாரிக்காம என்ன. நம்ம பக்கட்டு ஆளுதான். மெட்ராஸ் பக்கத்துல ரப்பர் பேக்டரில ஏதோ மேனேஜர்னு சொன்னதா நினவு” “வர சொன்னாரா?” “முதல்ல புத்தகத்த அனுப்ப சொன்னாரு. வாட்சப்ல ரெண்டு நாளைக்கு முன்ன அனுப்பிட்டேன். இப்ப நேர்ல வாங்கன்னு தகவல் சொன்னார்.”
காலையில் ரயிலில் வந்திறங்கி அங்கேயே குளித்து உடைமாற்றி அவர் கொடுத்த விலாசத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அது ஒரு ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதை அங்கு போய்தான் தெரிந்து கொண்டார்கள். வாசலில் பால் புட்டியின் மேல் இருக்கும் ரப்பர் உறிஞ்சான் போல ஒன்று கண்கள் சிமிட்டியபடி அவர்களை வரவேற்றது. “கவசம் எக்ஸ்” எனும் பெயருக்கு கீழே “சிந்தாது சிதறாது” என சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. “இதானாடா நீ சொன்னா ரப்பர் ஃபேக்டரி?” “பணம் வேணுமா வேணாமா? பேசாம வாண்ணே.” உள்ளே சென்று கிடாரம் வரவேற்பில் என்னமோ பேசிவிட்டு வந்தான். அவர் வரவேற்று உள்ளே அழைத்துக்கொண்டு சென்று ஒரு சோபாவில் அமரச் சொன்னார். “இதெல்லாம் சரியா வராதுடா. இவைங்கட்ட எப்படிடா விளம்பரம் வாங்குறது? “கவசம் எக்ஸ் ஆணுறை பெருமையுடன் வழங்கும் உங்கள் அபிமான எழுத்தாளர் பழுவேட்டையரின் ‘அத்தான்னு’ அட்டையில போட முடியுமாடா?” “அண்ணே 5 லட்ச ரூபா தரேன்னு சொன்னா. எம்புட்டு குஞ்சாமணிய படம் புடிச்சு அட்டைப்படமா போட சொன்னாலும் சரித்தேன்” என்றான்.
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண் தட்டில் தர்ப்பூசணி பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள். குடித்து முடிப்பதற்குள் “சார் கூப்பிடுகிறார்” என்று ஒரு சிப்பந்தி வந்து அழைத்தான். நீண்ட வளாகத்தில் கோப்பையை கையில் பிடித்தபடி அவனை தொடர்ந்தார்கள். தள்ளு கதவை திறந்து அந்த அறைக்குள் சென்றார்கள். பழைய காலத்து சலூனை போன்று சுவர்கள் முழுவதும் கட்டுமஸ்தான ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தழுவி கிடந்தார்கள். பாதாம், பிஸ்தா, சாக்லேட், மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றின் படங்கள் ஓட்டப்பட்டிருந்த வரிசையில் கீழே “இப்போது தர்ப்பூசனி பிளவரில்” என எழுதி இருந்தது. கையிலிருந்த கோப்பையை டக்கென்று மேசையில் வைத்ததில் இரு துளி மேசையில் சிதறியது.. குமட்டிக்கொண்டு வந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார். “ஒன்னும் அவசரமில்லை. பொறுமையா குடிங்க” என்று உபசரித்தார் நாற்காலியில் அமர்ந்திருந்தவர். ஆவுடையப்பன் குள்ளமாக குண்டாக தங்கபிரேம் போட்ட கண்ணாடியுடன் எழுந்து நின்று எங்களை வரவேற்றார். கழுத்தில் தென்பட்ட தடித்த தங்க சங்கிலி அவரது கார்ப்பரேட் அடையாளத்துக்கு குந்தகம் விளைவித்தது. “நான் உங்க தீவிர வாசகன்” என்று பரவசத்துடன் கை கொடுத்தார். “உங்க கூத காற்று நாவலை மட்டும் எட்டு தடவை படிச்சி இருப்பேன் .. என்ன எழுத்து சார் உங்களுக்கு. அதுல ஒரு வரி எழுதியிருப்பீங்க பாருங்க “அடேய் மானுடா.. காதல்ல ஏதுடா நல்ல காதல் கள்ளகாதல்?” சித்தர் பாட்டு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு . இந்த வரியெல்வாம் இன்னைக்கி எழுதுற சின்ன பயலுவலுக்கு வருமா சொல்லுங்க? சொன்னா நம்பமாட்டீங்க என் வாழ்க்கையையே புரட்டி போட்டுருச்சு அந்த ஒரு வரி” என்று நெகிழ்ந்தார். பழுவேட்டையருக்கு பெருமையாக இருந்தது. விளம்பரம் கிடைக்கிறதோ இல்லையோ ஒரு வாசகனை பார்த்த நிறைவு போதும். “அனுபவம்னு ஒன்னு இருக்குல்ல..” என்று பெருமிதம் பொங்க புன்னகைத்தார். “இப்படியாப்பட்ட எழுத்தாளருக்கு நாவலுக்கு ஸ்பான்ஸர் கொடுப்பது என் கடமை சார்” கிடாரம் மலர்ந்தான். எழுந்து ஏதோ முக்கியமானதை சொல்வது போல மேலும் கீழுமாக நடந்தார்.
“ஆனா பாருங்க அதிலவொரு சிக்கல் இருக்கு” என்று பீடிகை போட்டார். அப்போது கண்ணாடி மூக்கில் இறங்கியது. பார்வையை கண்ணாடிக்கு மேலே நிறுத்தினார். “என்ன” என்பது போல பார்த்தான். “எனக்கு நாவல் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நிர்வாகத்துல யோசிக்கிறாங்க. பெருசா கில்மா சீன் ஏதும் வரலை பாத்துகிடுங்க. இதுவொரு தொழில், முதலீடு, எவ்வளவு திரும்பி வரும்னு பாப்பாங்க இல்லியா” கிடாரம் பதட்டமடைந்தான் “இல்லையே சார் வள்ளியும் முத்துவும் கல்யாணத்துக்கு முன்னாடியே வைக்கப்போருல கட்டி உருளுற காட்சி உண்டே சார். அப்புறம் அந்த முத ராத்திரி காட்சி வேற” “வாஸ்தவம்தான் வாஸ்தவம் தான். “ அவனை அமைதி படுத்தினார். “ஆனா அதெல்லாம் ரொம்ப மென்மையா இருக்கு. நாங்க எதிர்பாக்குற வன்மை இல்ல” கிடாரம் அமைதியிழந்தான் “என்ன எதிர்பார்க்குறீங்க புரியுற மாதிரி சொல்லுங்க” என்றான். “இப்ப விளம்பரம் எல்லாம் முன்ன மாதிரி இல்ல. கோவிலுக்கு போறோம், உபயம்னு பேர் போட்டிருந்தான்ன அதை படிக்க மாட்டோம். மனசுலையே நிக்காது. விளம்பரம் வந்தாலே டிவிய மாத்திருவோம். அதனால விளம்பரம்னு தெரியாத மாதிரி விளம்பரம் செய்யணும். அப்பத்தான் மக்கள் மனசுல பதியும்.”
“எப்புடின்னு சொல்லுங்க கேப்போம்”
“இப்ப வள்ளியும் முத்துவும் வைக்கப்போர்ல உருளும்போது நீங்க என்ன எழுதி இருக்கீங்க “சர்ப்பங்கள் பிணைந்து கொண்டது போல அவர்கள் இருவரும் கிடந்தார்கள்” கொஞ்சம் வேற மாதிரி எழுதலாம். அந்த இடத்துல வள்ளி முத்துக்கிட்ட இப்புடி கேக்குற மாதிரி எழுதலாம் “உன்கிட்ட கவசம் எக்ஸ் இருக்கா?” இல்லைனா முத்து அவ காதுல “என்கிட்டே கவசம் எக்ஸ் இருக்கு. வர்றியா?” இப்புடி கேக்குற மாதிரி.”
பழுவேட்டையர் மண்டை சூடானது. “ வாசகர்னு சொன்ன காரணத்துல உன்ன சும்மா விடுறேன் இல்லையினா இந்நேரம் பல்லை கழட்டி கையில கொடுத்திருப்பேன்” என்று ஆவேசமாக எழுந்தார்.
கிடாரம் தவித்தான். “இருண்ணே செத்த பொறு”
“என்னடா பொறுக்க சொல்லுற. கதைங்கிறது எனக்கு குழந்தை மாதிரி. அத இந்தாளு அறிவுகெட்ட தனமா மாத்த சொல்லுறான்.”
கிடாரம் மெதுவாக செவியில் கிசுகிசுத்தான் “அண்ணே நமக்கு இது ஒன்னும் புதுசில்ல” பழுவேட்டையர் மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.
“புரியுது. நீங்க யோசிங்க. உங்க வாசகருங்குற வகையில இன்னொரு வழி சொல்லுறேன். உங்க டெக்ஸ்ட் கெடாது. வைக்கப்போர் சீன் வரும்போது பாதில நிறுத்தி ஒரு பக்கத்துல “இந்த காட்சியை பெருமையுடன் வழங்குபவர் கவசம் எக்ஸ் என போடலாம்.”
பழுவேட்டையரின் முகம் இறுகி கண்கள் கனல் உமிழ்ந்தது.
கிடாரம் சுதாரித்துக்கொண்டு “ இல்ல முத ரூட்டுலயே போவோம். அதுவே பரவால்ல. முத ராத்திரி சீன்ல வேணா இதை சொருகலாம்னு அண்ணன் சொல்லுறாரு. கொஞ்சம் பொருத்தமா இருக்கும். “முத்து கவசம் எக்ஸை துழாவி எடுத்தான். தொட்டவுடன் இன்பகனாவில் மூழ்கினான்.” இது ஓகேவா?”
“வள்ளி கர்ப்பமடையிறதோட நாவல் முடியுது” என்று பற்களை நரநரத்தார் பழுவேட்டையர்.
“அப்படின்னா இன்னொரு வரிய சேத்துக்குவோம். “நமக்கு பிள்ளை வேண்டும். ஆகவே ஆற்றல் வாய்ந்த கவசம் எக்ஸ் இன்று நமக்கு வேண்டியதில்லை என்று வள்ளி தடுத்தாள்” என்ன சரி தான. இப்ப ஒன்னுக்கு ரெண்டுவாட்டி வருது பாருங்க”
ஆவுடையப்பன் அகமகிழ்ந்து தலையாட்டினார். சிக்கலை முடித்த திருப்தி கிடாரத்தின் முகத்தில் தென்பட்டது. ஆனால் ஆவுடையப்பனின் முகத்தில் மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. அது அழிந்து அதிருப்தி குடிகொண்டது. இன்னும் என்ன என்பதை போல் பழுவேட்டையரின் முகம் சோர்வு கொண்டது. “அஞ்சு லட்சத்துக்கு ரெண்டு இடம் பத்தாது. ஒரு இடத்துக்கு 50,000 ன்னு கணக்கு வச்சா ஒரு லட்சம் கொடுக்கலாம். எதாவது எழுதி சேர்க்க முடியுமான்னு பாருங்க. முத்துவை கட்டிக்கிறதுக்கு முன்னாடி வள்ளிக்கு ராமுவோட உறவு இருந்ததா எழுதலாம். அதுபோல முத்துவுக்கு ராமு பொண்டாட்டி மீனாவோட உறவு. இப்புடி ” என்றதும் பழுவேட்டையர் சட்டென எழுந்து கையெடுத்து கும்பிட்டார். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. விடுவிடுவென வெளியே போனார். கிடாரம் அவரை நிறுத்த முயன்றான். ஆனால் கையை தட்டிவிட்டு ஆவேசமாக வெளியே சென்றார்.
“நீங்க ஒரு லட்சத்துக்கு கண்டிராக்ட் போடுங்க. மிச்சத்துக்கு நாங்க வெளியே பாத்துக்குறோம்” என்று ஆவுடையப்பனிடம் சமாதானம் சொல்லிவிட்டு வெளியே வந்தான். பழுவேட்டையர் வண்டி நிறுத்துமிடத்தில் தரையை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கிடாரம் அவரருகே அமைதியாக அமர்ந்தான். “என்னடா சொன்னான்?” “லட்சத்த கொடுங்க மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்னு சொல்லிட்டு வந்தேன்” “ஏழை எழுத்தாளன்ன இளக்காரமா போச்சு.அவன் பிச்ச காச நா கையாலையும் தொடமாட்டேன்.” கிடாரம் “இது என்னடா புது இம்சை” என குழம்பிக்கொண்டிருந்தபோது பழுவேட்டையார் தொடர்ந்தார் “எனக்கு அவனை பாக்க பிடிக்கல. நீயே அவன்ட்ட வாங்கி பேங்குல போட்டுரு” என்று சொல்லிவிட்டு பீடியை பற்றவைத்து ஆழ இழுத்தார். (புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடுதரும்- சமூக பொறுப்புடன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம்) ஆவேசம் அடங்கியவராக தொடர்ந்தார் “சின்ன புள்ளைகள தொந்தரவு செஞ்சு ஜெயிலுக்கு போற கிழவன் கதை ஒன்னு எழுதனும்னு சொன்னேன்ல அதுல கிழவனுக்கு பேரு ஆவுடையப்பன். குறிச்சிக்க” என்று சொல்லிவிட்டு புகைந்த பீடி கங்கை காலால் அழுத்தினார். “விடுண்ணே.. விடுண்ணே. கலைவாணி குடியிருக்குற நாவால எவனையும் சபிக்காத. இப்ப அம்மாபேட்டை பாய் ஒருத்தரு காசு தரேன்னு சொல்லியிருக்காரு. போய் பாப்போம்” “நா வரலடா. நீ போயி பாத்துட்டு வா. அவரு என்ன சொல்லுவாரோ?” “ஒன்னும் சொல்லமாட்டார். போய்தான் பாப்போம்” “அவரு என்ன தொழிலு?” “இவிங்க மாதிரி ரத்தம் குடிக்கிறவைங்க இல்ல. ரெண்டுமூனு சூப்பர் மார்க்கெட் வச்சுருக்காரு” “அப்ப சரி. அவரு கடையில உப்பு புளி வாங்குனான்னு என்னமாவது எழுதி விடலாம்.”
–
பாய் வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றார். வீட்டில் அத்தர் மணத்தது. மெத்து மெத்தென்று இருந்த சோபாவில் அமர்ந்தார்கள். வீடு அல்ல அது மாளிகை. “அய்யா அவுங்களை பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன். நமக்கு படிப்பெல்லாம் பெருசா இல்லை. அத்தாகூட சிறு வயசுலேந்து வியாபாரத்துலேயே திரிஞ்சுட்டேன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆவுடையப்பன் மாதிரி போலிகளை பார்த்து வெறுத்து போயிருந்தவர் கிடாரம் காதில் கிசுகிசுத்தார் “ரொம்ப நேர்மையான ஆளுடா” அப்துல் சமது பாய் கைலியை நொடிக்கொருமுறை அவிழ்த்து இறுக்கி கட்டினார். கைலி வாகாக நிற்கமுடியாத வாகில் அவரது வயிறு புடைத்திருந்தது. “முதல்ல சாப்பிடுவோம் வாங்க” என உணவு மேசைக்கு அழைத்து போனார். இது நம்ம பீவி என புர்கா அணிந்த குண்டு பெண்மணியை அறிமுகம் செய்தார். வணக்கம் வைத்தவர் “வாங்க.. சாப்பிடுங்க” என பரிமாறினார். முதலில் கால் சூப்பு. அடுத்து மீன் வறுவல். மட்டன் பிரியாணி கோழி குருமா என கொண்டு வந்து வைத்துக்கொண்டே இருந்தார். இப்படியான சாப்பாட்டை எப்போது உண்டோம் என எண்ணிப்பார்த்த போது இருவருக்கும் கண்ணீர் சுரந்தது. கடைசியாக ஃபிரினீ என்றொரு பாயாசம் போன்ற இனிப்பை பரிமாறியதும் ‘இந்த ஒருவேளை சோத்துக்காக பாய் என்ன கேட்டாலும் கொடுத்துரனும்” எனும் முடிவுக்கு வந்திருந்தார் பழுவேட்டையர். வயிறு வெடித்துவிடும் போல நிறைந்திருந்தது. வெற்றிலை சுண்ணாம்பு நெய் வறுவல் சீவல் தட்டை கொண்டு வைத்து வைத்தார். கண் அசத்திக்கொண்டு வந்தது. நிலமையை புரிந்து கொண்டவராக “சோடா குடிங்க” என்று உடைத்துக்கொடுத்தார். ஏப்பம் பிரிந்தது. “செத்த நேரம் படுக்குறீகளா?” “இல்ல இல்ல வேணாம் பாய்” என்று மறுத்தார். “ஒரு நிமிஷம்” என சொல்லி உள்ளே சென்றவர் ஒரு சிறிய பையுடன் வந்தார். “இதுல லட்ச ரூபா இருக்கு. இப்ப கொஞ்சம் பணமுட. இன்ஷா அல்லா உங்களுக்கு நிறைய செய்யனும்னு பிரியப்படுறேன்” “பணம் கிடக்கட்டும் பாய். உங்களுக்கு நான் என்ன செய்யனும்” என்றபோது பழுவேட்டையரின் குரல் வெகுவாக நெகிழ்ந்திருந்தது. கிடாரம் அதற்குள் பையை வாங்கி வைத்துக்கொண்டான். “எங்க வாப்பான்ன எனக்கு உசுரு. அவரு உழைச்சு கட்டுனதுதான் இந்த சாம்ராஜ்யம்.” அவர் குரல் தழுதழுத்தது. “ஆனா பாருங்க இளவயசுல நமக்கு வாப்பாவ பிடிக்காம போயிரும். நானா தொழில் செஞ்சு நின்னு காட்டுறேன்னு திமிரு பேசி அவர நோகடிச்சேன். கொள்ள காசு போச்சு. அவருக்கு தெரியக்கூடாதுன்னு கடன் வாங்கினேன். முஸ்லீமாகப்பட்டவங்க கடனே வாங்க. கூடாதுன்னு கறாரா இருப்பாரு. எப்படியோ கைய மீறி போச்சு. எல்லாத்தையும் அடைச்சாரு. ஆனா அவரு எனக்கு செய்ய செய்ய அவர் மேல கோவமா வந்துச்சு. விலகி விலகி போனேன். என்னைக்காவது உங்க வாப்பா அப்துல் பாசித் உனக்கு நல்லதே செஞ்சான்னு புரிஞ்சுக்குவடா சமதுன்னு ஒரு நாள் சொன்னாரு. அவ்வளவுதான். அதுக்கப்புறம் சொல்ல அவரு இல்லை” குலுங்கி குலுங்கி அழுதார். பழுவேட்டையருக்கும் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவருக்கு அடி புரட்டியெடுத்த அவரது தந்தையின் நினைவு வந்தது. கிடாரமும் அழுது கொண்டிருந்தான். “எனக்கு ஒரேயொரு ஆசைதான். அம்மாப்பேட்டை அப்துல் பாசித்து ரொம்ப நல்லவருன்னு அப்துல் சமது புரிஞ்சுகிட்டான்னு ஒரு ரெண்டு தடவை எழுதுங்க அது போதம். வாப்பாக்கு சொல்லுற சேதியாருக்கும். அவருக்கு எப்படியோ போயி சேரும்” “ஒரு வரி என்ன பாய். ஒரு அத்தியாயமே எழுதுறேன்” என்று சத்தியம் செய்தார் பழுவேட்டையர். ஒரு சிறிய சாக்கு பையில் அரைகிலோ உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு போட்டு பிரியாவிடை அளித்தார்.
பேருந்து நிலையம் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மனம் ததும்பிக்கொண்டு இருந்தது. பீடியை பற்றவைத்து ஆழ இழுத்ததும் மனம் சற்று அமைதியானது. கிடாரம் தயங்கித்தயங்கி “இந்த நாவலுக்குள்ள எப்படிண்ணே எழுதுவ?” என்று பேருந்து புறப்பட்டதும் கேட்டான். “தெரியலைடா.. ஆனா செய்யனும். முத்துவுக்கு காய்ச்சல் வந்து பிதற்றினான்னு 12 ஆம் அத்தியாயம் முடியுதுல்ல. அடுத்த அத்தியாயத்துல நம்ம சாரு ஜீரோ டிகிரில செஞ்ச மாதிரி ஒரு அத்தியாயம் முழுக்க ‘அம்மாபேட்டை அப்துல் பாசித் மிகவும் நல்லவர் என்பதை அவரது மகன் அப்துல் சமது புரிந்து கொண்டார்’ னு எழுதிடலாம்னு தோணுது. அப்புறம் தர்க்காவுல தாயத்து மந்திரிச்சு கட்டுனதும் சரியாயிட்டான்னு அத்தியாயத்தை முடிப்போம்” என்றார். கிடாரம் புன்னகைத்தான் “தேறிட்டண்ணே. இப்ப மிச்சத்துக்கு எதாவது ஆப்படுதான்னு பாப்போம்”
–
அண்ணாச்சி இலக்கியம் ஆர்வமுடையவர். எழுத்தாளர்களுக்கு நிறைய உதவி செய்பவர். விருது, பரிசுகளுக்கு தொகை கொடுப்பவர். அவர் வர சொல்லியிருக்கிறார் என்றால் உறுதியாக உதவி கிடைக்கும் என்றான். “இத்தோட முடிச்சிக்குவோம். எவ்வளவானாலும் சரி” என்றார் பழுவேட்டையர். அவருடைய ‘அக்கா மசாலா’ அலுவலகத்திற்கு சென்றார்கள். அழகிய அக்கா ஒருத்தி ஒரு கையால் மசாலா பாக்கேட்டை பிடித்தபடி மறுகையால் சின்முத்திரை காண்பித்தாள். கீழே “இது பக்கா மசாலா” என எழுதப்பட்டிருந்தது. கிடாரம் அந்த பதாகையையே வெகுநேரம் பார்த்துகொண்டிருந்தான்.
அண்ணாச்சி “சவத்து மூதிகளா.. என்னைய சாவடிக்கவே வந்துருகீகளா” (சவத்து மூதி, எலே போன்றவற்றை உரையாடலில் பயன்படுத்தினான் அது திருநெல்வேலி வட்டாரவழக்கு என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்) என எவரிடமோ தொலைபேசியில் கத்திக்கொண்டு இருந்தார். அதனூடாகவே கையால் வருக என சமிக்ஞை செய்தார். போனை கையால் பொத்தி “இன்னும் எம்புட்டு பாக்கி?” “அண்ணாச்சி மூனு. நீங்க எவ்வளவு கொடுத்தாலும்…” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிறுத்தினார். கழுத்தில் போனை அழுத்தியபடி செக்புக்கில் கையெழுத்திட்டார். மூன்று லட்சம்! “ஒரு நிமிஷம் நில்லுடா மயிராண்டி” என கத்திவிட்டு கிடாரத்தை பார்த்து. “வெளி அட்டையில வரனும். விளங்குதா. படத்துலயெல்லாம் வரும்ல அந்ந மாதிரி. அக்கா மசாலா பெருமையுடன் வழங்கும் அத்தான்னு போடனும். நான் கும்பிடுற படத்தை ஓரமா போடனும். படத்த மேனேஜருகிட்ட வாங்கிக்க போ” என்றார். இருவருக்கும் முகம் மலர்ந்தது. மீண்டும் “எலே யார ஏமாத்துற.. “ என்று போனில் கத்தத்தொடங்கினார். வணக்கம் வைத்து வெளியே செல்ல இருந்தபோது மீண்டும் போனை பொத்திவிட்டு “ஒரு நிமிஷம். இந்த. ‘குஸ்தி மசாலாகாரன்’ ரொம்ப துள்ளுரான். குஸ்தி மசாலா கேவலமாருக்கு வாயில விளங்கலன்னு ரெண்டு மூனு இடத்துல எழுதிவிடு. குஸ்தி மசாலா சாப்பிட்டதால அநியாயமா செத்து போயிட்டாரே. சோறு திங்கிறியா குஸ்தி மசாலா திங்கிறாயா இப்புடி கேனாபுனா தனமா சிந்திக்கிற. இப்படி என்னமாச்சும் எழுதிவிடு ..சரிதான” என்று சொல்லிவிட்டு மீண்டும் போனுக்கு திரும்பினார். காலை தூக்கி நாற்காலியில் வைத்து குந்தி அமர்ந்தார். பழுவேட்டையர் அங்கேயே நின்று “அது அறமில்லீங்களே” என்று பொறுமையாக சொன்னார். செக்கை கிழித்துவிடுவேன் என பாவனை செய்து நாக்கை துருத்தி எச்சரிக்கை செய்தார். கிடாரம் பழுவேட்டையரை வெளியே இழுத்து வந்தான். “அண்ணாச்சி பொல்லாத ஆளு. ஒன்னுகெடக்க ஒன்னு செஞ்சுருவாரு” “இதெல்லாம் நியாயமில்லடா” “அண்ணே நீ குஸ்தி மசாலா சாப்டுருக்கியா?” “இல்ல” “சாப்பிட்ட நா சொல்லுறேன். விளங்காது. நீ ஒன்னும் பொய்யி சொல்லல” என்று சமாதானம் செய்தான்.
இப்படியாக பழுவேட்டையர் தனது ‘அத்தான்’ நாவலுக்கு ஐந்து லட்சம் திரட்டும் இலக்கை அடைந்தார்.
–
புத்தக வடிவமைப்பு முடிந்து முதற்கட்ட மாதிரி பிரதி வந்திருந்தது. “எப்புடின்னு பாரு” என்று கிடாரத்திடம் கொடுத்தார்.
அத்தான்
அ. பழுவேட்டையர்
இந்த நாவவை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது உங்கள் அபிமான அக்கா மசாலா… இது பக்கா மசாலா.
மேல் வலது ஓரத்தில் அண்ணாச்சி கும்பிடும் படம் வட்டத்திற்குள் இருந்தது. கீழ் இடது ஓரத்தில் மசாலா பாக்கெட்டை பிடித்திருக்கும் அக்காவின் படத்தை கிடாரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சேர்த்திருந்தார்கள்.
பக்கங்களை புரட்டினான். “முதல்ல யோசிச்ச மாதிரி செய்ய முடியலடா. எழுதும்போது வேறமாதிரி வந்திருக்கு. இது சரியாருக்கான்னு பாரு?” என்றார். பக்கங்களை புரட்டினான்.
அத்தியாயம் 39
“வள்ளி என்னிடம் கவசம் எக்ஸ் உள்ளது. நம் திருமண வாழ்வை இனிதே தொடங்கலாமா? இனிய தாம்பத்தியத்துக்கு கவசம் எக்ஸைவிட உற்ற துணை வேறு யார்?”
“வேண்டாம் முத்து. எனக்கு பிள்ளை வரம் வேண்டும். கவசம் எக்ஸோ மிகவும் தரமான ஆணுறை. சிந்தாது சிதறாது. ஆகவே அது வேண்டாம். ஆனால் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்”
“சொல்”
“நீ குஸ்தி மசாலாவை இனி பயன்படுத்தமாட்டேன் என சத்தியம் செய். அப்போது தான் நமக்கு முதலிரவு”
“வள்ளி! என்ன இப்படி சொல்லிவிட்டாய்! ஏன்?”
“அம்மாப்பேட்டை அப்துல் பாசித் மிகவும் நல்லவர் ஆனால் அது அவரது மகன் அப்துல் சமத்துக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா?”
“என்ன?”
“சமயலில் குஸ்தி மசாலா பயன்படுத்தியது தான்.”
“நிஜமாவா சொல்கிறாய்” அதிர்ச்சியில் காதை பொத்திக்கொண்டான் முத்து.
“ஆம். அக்கா மசாலாவுக்கு மாறிய பிறகுதான் அவரது வாப்பா அம்மாபேட்டை அப்துல் பாசித் எவ்வளவு நல்வவர் என்பதை உணர்ந்து கொண்டார் அவரது மகன் அப்துல் சமது. ஆகவே தான் சொல்கிறேன் குஸ்தி மசாலா வேண்டாம் என்று”
தன் வாழ்க்கையின் அங்கமாக அத்தனை நாட்கள் விடப்போகிறோம் எனும் தவிப்பு அவன் முகத்தில் தென்பட்டது. ஆனால் முதலிரவு அதைவிட முக்கியம் என்பதை மனம் உணர்ந்துகொண்டது.
“சரி வள்ளி உனக்காக இதை செய்கிறேன். எவ்வளவு ஒஸ்தியாக இருந்தாலும் இனி என் வாழ்வில் குஸ்தி மசாலா கிடையாது. எப்போதும் அக்கா மசாலா தான், ஏனெனில் அதுதான் பக்கா மசாலா”
காதல் தேவதைகள் அவர்கள் மீது மலர் தூவி வானிலிருந்து வாழ்த்தினர்.
கிடாரம் துள்ளி குதித்தான். “அண்ணே எங்கயோ போயிட்ட. சீக்கிரம் அடுத்த நாவலை எழுது. வண்டு பிராண்ட் லுங்கி, சித்த வைத்தியர் பசவராஜ், 1472 பயோரியா பல்பொடின்னு ரெடியா இருக்கானுங்க” என்றான்.
May 5, 2025
வனம் - சிறுகதை
எனது சிங்கப்பூர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு கதை தொடர் எழுதலாம் என்றிருக்கிறேன். ஃபிப்ரவரி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளிவந்த முதல் கதை/ நாவல் பகுதி.

“அரிபுரத்தில் இப்படியான ஒரு இடத்தை நீ பார்த்திருக்கவே மாட்டாய்” வூ தூண்டிலை இறுகப் பற்றியபடி சொன்னார். இது அவர் அடிக்கடி சொல்வது தான். நாங்கள் இருவரும் யின் யாங் ஏரியில் மீன்பிடித் துறையில் அமர்ந்திருந்தோம். விடுவிடுவென மொய்க்கும் பொன்னிற கொய் மீன்களுக்குள் எவ்வித ஒழுங்கும் இல்லை. கருப்பு நிற கொழுத்த கெளுத்தி மீன்கள் நிதானமாக, வரிசையாக நீந்தின. தூண்டில் இரை அவற்றை பரபரக்கச் செய்யவில்லை. வூ பொறுமையாக்க் காத்திருந்தார். “எப்படியும் சிக்குவாய்.. உன் கட்டுப்பாடு எவ்வளவு நேரம் என்பதை பார்க்கத்தானே போகிறோம்” என்றபடி ஹைனிகன் பியரை ஒரு மிடறு அருந்தினார். வெயிலும் இல்லாத மழைக்கு முந்தைய புழுக்கமும் இல்லாத மாலைப் பொழுது. இங்கே அது மிகவும் அரிது என்பதை என் குறுகியகால வாசத்தில் உணர்ந்து கொண்டேன். அத்தகைய காலநிலை என்றால் வூ பீர் புட்டிகளுடன் என் வீட்டு கதவை தட்டி விடுவார். “நாளை நம் வனத்தில் வேட்டை” என்று நேற்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார். “இப்போது நாம் நம் வனத்திற்கு செல்வோம் வா” என்று சொன்னபடி மாலை வீட்டிற்கு வந்தார். ஏரியையொட்டிய மரம் செடி செறிவுதான் அவருக்கு வனம். நான் அமைதியாக பார்த்ததைக் கவனித்தவர் “தெரியும் நீ இதை வனம் என ஒப்புக்கொள்ளமாட்டாய். ஆனாலும் .. “
“மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். வனத்தை எவரும் வளர்க்க முடியாது. இது தோட்டம்”.
“சரி சரி..ஏதோ ஒன்று. எனக்கு வனம் உனக்கு தோட்டம்.” பொதுவாக நீர்த்துறையில் போடப்பட்ட பெஞ்சுகளில் அமர்ந்தபடியே நீர்வீழ்ச்சியை பார்த்தபடி எங்கள் மாலை பொழுதுகள் கழியும். பேசுவதற்கு ஏதுமற்ற போது ஆளுக்கொரு புத்தகத்துடன் அமர்ந்து விடுவதும் உண்டு.
வூ மிங் லி, அதுதான் வில்லியமின் சீனப் பெயர். ஆனால் அவர் எனக்கு வில்லியமாகவே அறிமுகம் ஆனார். வூ என்கிற வில்லியம் எனக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்தளத்தில் வசிப்பவர். நான் டி ஷர்ட் ஜீன்ஸ் சகிதம் வகுப்பிற்குப் புறப்படும் போது அவர் பளபளவென தேய்த்த தோல் சப்பாத்துக்கள் கோட்டு சூட்டு சகிதம் தனது சைக்கிளில் கல்லூரிக்குக் கிளம்புவார். முதல் முறை அவரை அப்படிப் பார்த்த போது வினோதமாக உணர்ந்தேன். சிநேகத்துடன் புன்னகைத்தார். மாலை நடைக்கு எங்கள் குடியிருப்புக்கு எதிரேயுள்ள செயற்கை ஏரியை சுற்றி நடக்கும் போது காதில் ஹெட்போன் மாட்டியபடி கையில்லா பனியனை போட்டுக்கொண்டு என்னைக் கடந்து ஓடுவார். ஏரிக்கு நடுவே உள்ள மரப் பாலத்தில் நின்று கீழே செல்லும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். சூரியன் மறைந்து செந்நிற கீற்றாக மறையும் வரை வானத்தை வெறித்திருப்பேன். அடுத்த வகுப்புக்கான திட்டம் மனதிற்குள் உருப்பெறும். அப்படியான ஒரு மாலைப் பொழுதில் என்னருகே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “வில்லியம் லி, நான் வரலாற்றுப் பேராசிரியர்.. நீங்கள் தமிழ் எழுத்தாளர் என ஜான் சொன்னார். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள அபாரமான மொழி” என்ற போது சற்றுப் பெருமிதமாக உணர்ந்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நீரில் நீந்திய நட்சத்திர ஆமையை அவர்தான் எனக்கு முதலில் சுட்டிக் காண்பித்தார். அதை பார்த்ததும் வீடு குறித்த வினோத ஏக்கம் என்னுள் எழுந்தது. பிள்ளைகளின் அன்மையை மனம் விழைந்தது. “இங்கே நீர் நாய்கள் கூட வரும். அதிர்ஷ்டம் இருந்தால் காண்பீர்கள். கோவிட் காலத்தில்தான் அரிபுரத்தில் இத்தனை நீர்நாய்கள் உள்ளதைக் கவனித்தேன். அரசு கணக்கெடுத்து வைத்திருந்ததை விட அதிகம் என ஸ்ட்ரெயிட் டைம்ஸில் செய்தி வந்திருந்தது ” நீர்நாயின் படம் வரைந்து அவற்றுக்கு உணவிடக் கூடாது எனும் எச்சரிக்கைப் பதாகைகள் ஏரியை ஒட்டிய நடைபாதை பகுதியில் ஆங்காங்கு தென்பட்டன. திடீரென்று சைரன் ஒலித்தது. “அது அப்படித்தான், இடிக்கான எச்சரிக்கை. ஆனால் எதுவும் ஆகாது” என்றார் நிதானமாக.
ஏரி முடியுமிடத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி. அதைக் காண்பதற்கென்று ஒரு பாலம் உண்டு. நான் அங்குதான் பெரும்பாலான மாலைப் பொழுதுகளைக் கழிப்பேன். நீர்வீழ்ச்சி தினமும் மாலைகளில் மட்டும் தான் விழும். யின் யாங் பல்கலைக்கழகக் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியாகவும் நீர்வீழ்ச்சியாகவும் பராமரிக்கப்படுகிறது. எரியும் நீர் வீழ்ச்சியும் கூட கழிவு நீர் மறு சுழற்சியின் ஒரு பகுதி தான். வில்லியமை நாள்தோறும் காண்பேன். ஒருநாள் மாலை நான் எங்கேனும் வெளியே சென்றாலும் இரவு எத்தனை மணி ஆனாலும் கதவைத் தட்டி “இங்கே உனக்கொரு பெண் கிடைத்துவிட்டால் போல” என்று கேலி செய்யவில்லை என்றால் அவருக்கு உறக்கம் வராது. முதல் மாதம் முடிவதற்குள்ளேயே வில்லியம் எனக்கு நல்ல நண்பராக ஆனார். எங்கள் முதல் பியர் சந்திப்பின்போது தான் தனது சீனப் பெயரைக் கூறினார். அப்படித் தன்னை அவர் வெளிப்படுத்துவது மிகவும் அரிது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.
“இங்கே சீனர்கள் பலருக்கும் இரண்டு பெயர்கள். ஒன்று சீனப் பெயர்” என நெற்றிச் சுருக்கங்கள் தெரிய சிரித்தார். “எனக்கு என்ன வயதிருக்கும் என்று எண்ணுகிறாய்?” என்றார் புன்னகைத்தபடி. நான் அரிபுரத்தை வந்தடைந்த புதிதில் எப்போதும் எனக்கு இந்தக் குழப்பம் இருக்கும். சீனர்கள், அதிலும் பெண்களின் வயதை என்னால் ஊகிக்க முடிந்ததே இல்லை. நாற்பது ஐம்பது வயதுடையவர்கள் கூட இருபது முப்பது வயது மதிக்கத்தக்கவர்கள் போலத் தோன்றுவார்கள். என் கண் பழகவில்லை என்பதால் ஏற்பட்ட குழப்பமாகவும் இருக்கலாம். அல்லது அரிபுரத்துப் பெண்கள் உடலைப் பேணும் விதம் காரணமாகவும் இருக்கலாம். காலப்போக்கில் அவர்கள் அணியும் உடைகளை வைத்தும் பேச்சுக்களை வைத்தும் ஓரளவு வயதை ஊகிக்க முடிந்தது. கல்லூரி செல்லும் மகள், கண் ஓரம் தெரியும் சுருக்கங்கள், வூ வின் மனைவி அமண்டாவின் தோற்றம் இவற்றையெல்லாம் கொண்டு வூவிற்கு என் கணிப்பில் எப்படியும் 55 வயதிருக்கும். ஆனாலும் அவர் கேட்க விரும்பும் பதிலைச் சொன்னேன். “நாற்பத்தைந்து இருக்குமா?” கண்களில் ஒளி மின்னச் சிரித்தார். “எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு அறுபது” என்றார் பெருமிதம் பொங்க. என் புன்னகை அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். “நீ பொய் தானே சொன்னாய்?” என்றார். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரின் மேற்கோள் இது. கதைகள் தான் என்றாலும் அவை எத்தனை அற்புதமானவை!” என்றதும் இருவரும் சிரித்தோம். “வா நாம் நம் வனத்தைச் சுற்றி நடந்துவிட்டு வருவோம்” என அழைத்துச் சென்றார். இருவருமாக யின் யாங் ஏரியின் சுற்றுவட்டப் பாதையில் நடந்து வந்தோம். இரவு விளக்கு மஞ்சள் நிறத்தில் பழைய கால அரிக்கேன் விளக்கு போல அழுது வடிந்தது. நெருங்கி வரும் தோறும் ஒளி கூடியது. ஏதோ ஒரு இயந்திரச் சத்தம் கேட்டது. “அது ஒன்றுமில்லை. மாதம் இருமுறை சாலைக்கு நீளும் கிளைகளை வெட்டி விடுவார்கள். ஒரு காலத்தில் இங்கே மலைப்பாம்புகளைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா?” “பல்கலைக்கழகத்திலா?” “ஆம் இங்குதான். இது ஒரு மழைக்காடு தானே. இப்போதும் சில உடும்புகள் மேற்குப் பக்கம் திரியும். சூழலியல் துறை கணக்குப்படி மொத்தம் பதிமூன்று உடும்புகள் நம் வளாகத்தில் உள்ளன” “அவற்றுக்கு பல்கலைக்கழக அடையாள அட்டையும் பயண அட்டையும் உண்டா?” என்றதும் சிரித்து பியர் புரைக்கேறி துப்பினார். அன்றிரவு நெடுநேரம் மரக்கிளைகள் அறுபடும் மின் ரம்ப ஓசை என் காதிற்குள் கேட்டபடி இருந்தது. படுக்கையில் புரண்டுக்கொண்டே இருந்தேன். வரிசை மாறாமல் நடப்பட்ட தைல மரங்கள் ஊடாக ஊரில் நான் சைக்கிளில் பள்ளிக்கு சென்றது நினைவில் எழுந்தது. தைல மர தோப்பு என சொல்வதில்லை. தைல காடுதான். அதன் சீர்மை அச்சுறுத்தும். அங்கே வேறு செடிகளை காணவே முடியாது. ஏதேதோ நினைவுகள். மனதை உடல் வென்று நான் உறங்கும் போது விடிகாலை நான்கு மணி. ஒன்பது மணிக்கு மேல் எழுந்தேன். மதியம் தான் என் வகுப்பு என்பதால் எனக்கு எந்தப் பரபரப்பும் இல்லை. வாசல் கதவில் வூ சிறிய ஒட்டும் தாளில் குறிப்பை ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார். “உனக்கு மீன் பிடிக்க வருமா? அடுத்த வாரத்தில் நம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும். வா” என்று எழுதி இருந்தது. மூக்கு அடைத்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி அன்று மழை வரும் என்று அதற்குப் பொருள். ஏரி அசைவின்றி ஆகாயத்தின் துல்லிய நீலத்தில் வெளிப்பட்ட வெண்பஞ்சு மேகங்களையும் சுற்றியிருந்த பசுமைகளையும் பிரதிபலித்து கொண்டிருந்தது. சாலையோரக் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெளிச்சம் கண்ணைக் கூசியது. அரிபுரத்து கட்டாய ராணுவ சேவை இளைஞர்களின் தலை போல என்று தோன்றியதும், இந்த உவமையை மனதில் குறித்து கொண்டேன். புற்கள் ஒரே சீராய் வெட்டப்பட்டிருந்தன. ஏரியிலிருந்து கீழே இறங்கினால் வெவ்வேறு நாட்டுத் தாவர வகைகள் உள்ள ஃபூனான் தோட்டம் வரும். மைய மண்டபத்தில் சென்று அமர்ந்தேன். மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி என்னை கடந்து சென்றதை பார்த்ததும் மனம் பெரும் உவகை அடைந்தது. வில்லியமிடம் பல்கலைக்கழகத்தில் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்திருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். அவர் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் அறிவேன். அதற்கான ஆராய்ச்சியில் உள்ளோம் என்பார். இத்தனை மரச் செறிவுக்கு நான் குரங்குகளையோ பறவைகளையோ பார்க்கவில்லை என்பது சட்டென்று உதித்தது.
ஏதோ ஒன்று உந்த கைப்பேசியில் ஒரு கவிதை எழுதினேன்.
முறையீடு
நேற்று
இருந்த முன்னூற்றி முப்பத்தி நான்கு
பட்டாம் பூச்சிகளில்
முப்பதைக் காணவில்லை
புதிதாய் பூத்த முப்பது மலர்களில்
ஒன்று கூட
மஞ்சளாய் இல்லை
என்பதுதான்
முறையீடு
கவிதையை அப்போதே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வில்லியமிற்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. மழை பிடிப்பதற்குள் தரைத்தளத்தில் இருக்கும் என் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டேன். பெரும் இடியோசைகளுடன் ஏரியின் மீது மழை ஆவேசமாக இறங்கியது. கண்ணாடிச் சாளரத்தின் அருகே அமர்ந்து அம்புகள் போல நீரில் பாய்ந்திறங்கிய மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மழைக்கு பின் சாலையில் மழையின் சுவடுகள் மறைந்துவிட்டன. மாலை மீண்டும் எல்லாம் இயல்பிற்கு திரும்பியிருந்தது. காலையில் எழுதி ஒட்டிய குறிப்பை வாசித்தாயா என்று மாலை சந்திக்கும்போது கேட்டார். நான் மீன் பிடித்ததில்லை. எனினும் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன். “இந்த வனம் உனக்கொரு கவிதையைத் தந்திருக்கிறது போலும். வனம் படைப்பூக்கத்தை பெருக்கும் என்பார்கள்.” “அரிபுரத்தின் இலக்கியத்தின் சிக்கல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன்.”
“என்ன?”
“தோட்டம் தான் உங்கள் வனம். ஜாடிக்கு ஏற்ற மூடி தானே இருக்க முடியும் ” என்றதும் சிரித்தார்.
“நீ இதை விடவே மாட்டாய்.”
அன்றைய நாளுக்கு பிறகு பார்க்கும்போதெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். சனிக்கிழமை எந்த வேலையும் வைத்துக் கொள்ளாதே. அன்று உனக்கு வகுப்பு இல்லைதானே? எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். எனக்கு அவரது ஆர்வம் மிகவும் வினோதமாக இருந்தது. வருகிறேன் என ஒப்புக் கொண்டாலும் நாளெல்லாம் அவரருகே அரிபுரத்து வெயிலில் அமர்ந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. வகுப்பில் மாணவர்கள் எழுதிய கதைகளை வாசித்து அவற்றுக்கு கருத்துரை இடவேண்டும். ஏரிக்கரையில் அமர்ந்து அதைச் செய்ய வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டேன்.
சனிக்கிழமை காலையிலேயே வாயில் மணியின் ஓசை கேட்டு விழித்து கொண்டேன். “இன்று காலையுணவு ஏதாவது லேசாக எடுத்துக் கொள். மதியம் நாம் பிடித்த மீனை கொண்டு சமைத்து விருந்து உண்ணலாம். அமண்டாவிடம் சொல்லிவிட்டேன். அவள் சீன முறையில் மீன் சமைத்து தருவதை நீ சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்தில் தயாராகி விடு” என்றார். நான் இன்று அவருடன் மீன்பிடித் துறைக்கு வரும்போது இன்னும் பல முகங்கள் தூண்டிலுடன் ஆங்காங்கு அமர்ந்திருந்ததைக் கண்டேன். “நாங்கள் எல்லோரும் பல்கலைக்கழக தூண்டில் இடுவோர் சங்க உறுப்பினர்கள்…இன்று 76 மீன்கள் வரை நாங்கள் பிடிக்கலாம். எடை மிகுந்த மீன்களைப் பிடிப்பதுதான் இங்கே முக்கியம், கல்லூரிப் பையன்கள் அதிக எண்ணிக்கையில் பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வலுவான போராடும் ஆற்றல் உடைய மீன்களைப் பிடிப்பது தான் உண்மையான வேட்டை. சென்ற முறை நான் பிடித்த மீன் பன்னிரண்டு கிலோ.” “அது என்ன 76 மீன்கள்? ஏதும் புனித எண்ணா?” “புனிதமும் இல்லை ஒன்றும் இல்லை. கடந்த கணக்கெடுப்பில் இருந்து அதிகரித்திருக்கும் மீன்களின் தோராயமான எண்ணிக்கை” விழி விரிய நோக்கினேன் “இங்குள்ள மீன்களுக்கு கணக்கா?” “ஆம் தோராயமான கணக்கு என்று சொன்னேனே. அதை துல்லியப்படுத்த ஒவ்வொரு மீனுக்குள்ளும் ஏதேனும் மின்னணு சிப்பைப் பொருத்தலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நூறு நாட்களுக்கு மேலான மீன்கள் மேலிருந்து சிப்புகள் ஒளிவிடும். பிடிப்பது சுலபம். நம் மாணவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார் பெருமிதம் போங்க. “எனக்கொரு யோசனை தோன்றுகிறது”
“சொல்”
“நீங்கள் ஏன் நூறு நாட்களில் வெடிக்கும் ஒரு சிறிய மின்னணு வெடி குண்டை சிப்புடன் சேர்த்து பொருத்த கூடாது? தானாக மீன்கள் வெடித்துச் சிதறி இறந்து விடும்.”
“நீ சொல்வதை புரிந்து கொள்கிறேன். உன்னால் நம்ப முடியவில்லை இல்லையா? இங்கே கொசுக்கள் இல்லை என்பதைக் கவனித்தாயா?” “ஆம். கவனித்தேன்.”
“இது ஒரு மழைக்காடு என்பதை நினைவில் கொள். மலேரியாவால் இங்கே செத்தவர்கள் ஏராளம்.” “ஒவ்வொரு கொசுவிற்குள்ளும் சிப் வைத்து 10 நாட்களில் அவற்றை வெடிக்க வைத்தோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்” வாய் விட்டு சிரித்தார்.
“நான் எதுவும் சொல்லவில்லை. மரபணு அறிவியலைக் கொண்டு அரிபுரத்தில் எப்படிக் கொசுவை ஒழித்தோம் என்பதைப் படித்துப் பார்த்து நீயே தெரிந்து கொள்.” என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கரங்கள் இறுகின. தூண்டில் பயங்கரமாக இழுபட்டது. “இதோ ஒருவன் சிக்கிவிட்டான்..” பெரிய மீன் சிக்கிவிட்டது என்பதை தூண்டில் இழுபடும் வேகத்தை கொண்டு கணிக்க முடிந்தது. அத்தனை ஆற்றலையும் கொண்டு தூண்டிலை இழுத்துப் பிடித்தார். “என்னைக் கொஞ்சம் தாங்கிக் கொள்” என்றார். “வில்லியமுக்கு ஏதோ ஒன்று சிக்கிவிட்டது. கமான் வில்” என எதிர் சாரியில் குரல்கள் எழுந்தன. நான் வேட்டைக்காரனைக் கண்டதில்லை. ஆனால் கற்காலத்தில் வேட்டையாடி தனது இரையை வென்றடைந்த பிறகு அவன் முகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை வூ முகத்தில் நான் கண்டுகொண்டேன்.
இருபது கிலோ. நம் பல்கலைக்கழக சாதனை என்று நாளெல்லாம் அரற்றியபடி இருந்தார். “மான், சிறுத்தை, புலி, யானை என தலைகளை பழையகால வேட்டைக்காரர்கள் மாட்டி வைப்பார்கள். அப்படி இந்த மீன் மண்டையை பாடம் செய்து மாட்டி வைக்க வழியில்லாமல் போனதே” என்று கண் சிமிட்டினார். விரிந்த உள்ளங்கையை விட பெரிதாக இருந்த மீன் மண்டையில் திறந்திருந்த விழியை நோக்கிக் கொண்டிருந்தேன். அமண்டா அபாரமாக சமைத்திருந்தார். எங்கள் வளாகத்தில் எல்லோருக்கும் அமண்டா சமைத்த மீனை பகிர்ந்து கொடுத்துவிட்டு வந்தார் வில்லியம்.
இரவு “வா நம் வனத்திற்குச் செல்வோம்” என்று ஹைனிக்கனோடு வந்தார். இரவுவொளியின் மஞ்சள் வெளிச்சத்தில் அவர் முகத்தில் மிளிர்ந்த மிடுக்கைப் பார்த்தேன். சில்வண்டுகள் கூட இல்லாத நிசப்தம் இரவை நிறைத்தது. ஏரியைக் கடந்து ஃபூனான் தோட்ட மண்டபத்திற்கு சென்று அமர்ந்து கொண்டோம். அங்கே இரவு விளக்கு கிடையாது. “அரிபுரத்தில் எங்கும் இப்படியான ஒரு இடத்தை நீ பார்த்திருக்கவே மாட்டாய்” என்றார். “உலகத்திலேயே நான் பார்த்ததில்லை..” என்றேன் எரிச்சலுடன். அவருக்கு தமிழ்நாட்டு கார வகைகள் என்றால் பிடிக்கும். “கொண்டு வந்திருக்கிறாயா?” என்றதும் அடையார் ஆனந்தபவனின் மிளகு தட்டையை நீட்டினேன். “உனக்கு தெரியுமா? மனித குலத்தின் இத்தனை நூற்றாண்டு போராட்டம் எதற்கென்று?” “பாதுகாப்பான வாழ்விற்கு” “சரி தான். அதற்கு அவன் இயற்கையை வெல்ல வேண்டும். இயற்கை என்பது என்ன. தன்னால் கட்டுப்படுத்த முடியாத பிரம்மாண்டமான தற்செயல். இந்த நிச்சயமற்ற தன்மையை கணிப்பதற்கு தான் நாம் இத்தனை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கணிப்பது பத்தாது. அதை கட்டுப்படுத்தவும் வேண்டும். வருங்கால மனித நாகரீகத்திற்கு அரிபுரம் அவ்வகையில் ஒரு வழிகாட்டி. முன்னோடி..” என்றார். நான் மவுனமாக இருந்தேன். “காலையில் நீ சொன்னதை யோசித்து பார்த்தேன்” “எதைப்பற்றி?” “கணக்குகள் மீது இருக்கும் தீரா விழைவை பற்றி..அது தான் அரிபுரத்தை பிற தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து தனித்து காட்டுகிறதோ?” “புரியவில்லை..” “கணக்கு என்பது என்ன, நேர்த்தி. ஆனால் இப்படி சொல்வதால் நீ தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது…” என்று நிறுத்தினார். “சொல்லுங்கள்” என்றேன். ஒரு மிடறு பியரை அருந்திய பிறகு தொடர்ந்தார் “உங்கள் தேசத்தவர்களுக்கு பொதுவாக ஒழுங்கு மீது எந்த நம்பிக்கையும் இல்லை. அது தான் உன்னை சீண்டுகிறதோ என்று தோன்றுகிறது” என்றார். கோபம் தலைக்கு ஏறியது. “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே எழுந்து சென்றேன். அவர் என்னை நிறுத்த முயன்றார். ஆனால் வார்த்தை எழவில்லை. பின் தொடர்ந்து வருகிறாரா என்று கவனித்தேன். வரவில்லை. குடியிருப்பிற்குள் விடுவிடுவென்று சென்று கதவை அடைத்துக் கொண்டேன். தொலைக்காட்சியில் டோரா காட்டிற்குள் பயணித்து கொண்டிருந்தாள். இதோ இந்த காடு தான் உங்கள் காடு. கார்ட்டூன் காடு என்று கத்த வேண்டும் போலிருந்தது. உடலெல்லாம் அவமானத்தால் எரிந்தது. அமண்டா அழைத்தார். “வில் உன்னோடு இருக்கிறாரா? அவர் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய கைபேசியை இங்கேயே விட்டு சென்றுள்ளார் என்பதால் உனக்கு அழைக்கிறேன்” என்றார். நான் அங்கிருந்து வந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகி இருக்கும். இவ்வளவு நேரமாக அவர் வரவில்லை என்பது எனக்கு சரியாக படவில்லை. அமண்டாவிடம் “வர சொல்கிறேன்” என சொல்லிவிட்டு கைவிளக்கை எடுத்துக்கொண்டு ஃபூனான் தோட்டத்தை நோக்கி நடந்தேன். வானில் நட்சத்திரங்கள் ஏதுமின்றி இருண்டு இருந்தது. அவர் சொன்னதில் அப்படி என்ன தவறு? ஒழுங்கீனத்துடனான சமரசம் தானே சராசரி இந்தியனின் வாழ்க்கை. மண்டபத்தில் அவரது உருவத்தை கண்டதும் மனம் அமைதி அடைந்தது.
அவர் அதே மண்டபத்திலேயே அமர்ந்திருந்தார். மூன்றாவது பியர் டின் அவர் கையில் இருந்தது. “அமண்டா உங்களை வீட்டிற்கு வர சொன்னார்” என்று ஒருவிதமான கறாரான குரலில் சொன்னேன். “இங்கே உட்கார். உனக்கு இன்னும் கோபம் தணியவில்லை.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நீ புரிந்துகொள்வாய் என்று..” என அவர் பேசி முடிக்கும் முன்னரே எங்கள் மண்டபத்திற்கு பின் இலைகளின் சரசரப்பை கேட்டோம். “காதல் ஜோடிகளாக இருப்பார்கள்..பாவம்” என்று சொல்லிவிட்டு பேச்சை தொடர முயன்றார். சைகையால் அவரை அமைதிப்படுத்தினேன். சரசரப்பு எங்களை நெருங்குவதை இருவருமே கேட்டோம். என் பரபரப்பை பார்த்ததும் அவருக்கு சிரிப்பாக வந்தது. “இங்கே என்ன புலியா வரப்போகிறது? ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு” என்றபடி என்னிடமிருந்த கைவிளக்கை வாங்கி ஓசை வந்த திசையை நோக்கி அடித்தார். பிரம்மாண்டமான சர்ப்பம் எங்கள் முன் படமெடுத்து நின்றது. அதன் தலை என் இரு உள்ளங்கை அகலம். விளக்கொளியில் அதன் மஞ்சள் நிறம் பொன் போல மின்னியது. “ஓ ஷிட். ..ஓ ஷிட்” என பதறி எழுந்தார். “இது எங்கே…இங்கே” என்று குழம்பினார். அதன் சீரான சீற்றத்தை கேட்டதும் இதயம் தாறுமாறாக படபடத்தது. அவர் வலக்கரத்தை இறுக பற்றினேன். பத்தடி தூரத்தில் எங்களை நோக்கி நின்றது சர்ப்பம். அத்தனை வசீகரம். சவுந்தர்யம். ஆம் அதுதான் சரியான சொல். சவுந்தர்யம். கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு ஓசை கேட்டது. விடுக்கென்று தவம் கலைந்தது போல திரும்பி புதர் சரசரப்புக்குள் மறைந்தது. காலியான ஹைனிக்கென் புட்டி சற்று தொலைவில் உருண்டு கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் ஓடி வந்தோம். எரிக்கரையை வந்தடையும் வரை அதன் சீறல் ஒலி எங்களை பின்தொடர்வது போலொரு பிரமை. இதய துடிப்பு சீரடைவதற்கு நெடுநேரம் ஆனது. எனது குடியிருப்புக்குள் நுழைந்து குளிர்நீர் அருந்திய பிறகு தான் சற்று அமைதியானோம். பிராணிகள் வாரியம் அவசர எண்ணை தேடி எடுத்து அதில் புகாரை பதிவு செய்தார். நிமிடத்திற்கு ஒரு முறை “ஷிட்” என்று அரற்றிக்கொண்டே தலையை இல்லை இல்லையென்று அசைத்தபடி இருந்தார். “அது என்ன என்று தெரியுமா?” என்று தனது கைபேசியில் ஒரு படத்தை காட்டினார். மலேயா ராஜநாகம். “இன்று என்னால் உறங்க முடியாது போலிருக்கிறது”. அமண்டா அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு சென்றார். எனக்கு புரியாத மொழியில் அவர்கள் ஏதோ பேசியபடி மாடிக்கு சென்றார்கள். அவர் கண்ட காட்சியை பரவசத்துடன் விவரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு கண் மூடினால் அந்த நாகம் கண் முன் தோன்றியது. ஆனால் ஏனோ அது என்னை அச்சுறுத்தவில்லை. அதன் இமையா விழியின் கீழ் நெடுநாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினேன். ‘விடமேறிய கனவு’ எனும் சொற்றொடர் மனதில் உதித்தது. குணா கவியழகனின் நாவலின் பெயர். படைப்பாளிகள் காண்பவை எல்லாம் விடமேறிய கனவுதான். விடத்தின் இனிமையை தான் அவன் பகிர்ந்தளிக்கிறான்.

காலை ஃபூனான் தோட்டம் மூடப்பட்டது. சீருடை அணிந்த இருவரை பார்த்தேன். இன்னும் சிலர் கவச உடைகள் அணிந்து நீண்ட கழிகளுடன் உள்ளே நடமாடிக்கொண்டிருந்தார்கள். காலை தளர்வான காற்சட்டையும் கைவைக்காத பனியனுடன் வாசலில் வந்து நின்றார் வூ. மிகவும் சோர்வாக காணப்பட்டார். “பாம்பை பிடிக்கும் வரை யாருக்கும் அங்கே அனுமதியில்லை” என்றார். அவரை பார்த்ததும் நாலைந்து பேர் என்ன நடந்தது என்று விசாரித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள். அவர் ஆர்வத்துடன் எல்லோரிடமும் பார்த்ததை விவரித்து கொண்டு இருந்தார். நான் வகுப்புக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதால் உள்ளே சென்றுவிட்டேன். வகுப்புக்கு கிளம்பும்போது ஏரிக்கரையில் மீன்கள் அசையும் நீரை நோக்கியபடி தனித்து அமர்ந்திருந்தவரிடம் சென்றேன். “இனி இதை நீங்கள் வனம் என குறிப்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” சன்னமான குரலில் “ஆனால் இனி நான் அப்படி சொல்லமாட்டேன்” என்றார் நீரை வெறித்தபடி .
April 17, 2025
அம்புப் படுக்கை - சரத்குமார் வாசிப்பு
எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.
வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் காண்பது மரபிலிருக்கும் வாசுதேவ உருவகத்தின் பொருளான பிரபஞ்ச லீலையினை நேரில் காண்பது போல் அமைந்திருக்கிறது. விடையில்லா அந்த மரணத்தினை இப்போது அவனால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
காளிங்க நர்த்தனம் சிறுகதை, புராணத்தை யோக முறையில் மாற்றி கையாளுகிறது. மாணிக்கத்தினது அரைகுறை யோக பயிற்சியால் தோன்றும் சைக்கிளின் பின் அமர்ந்திருக்கும் பெண் உருவம் அவனை கடிக்க வருவதையும், முறுக்கு சாமியின் புராண தலைகீழ் ஆக்கத்தையும் அவர்களது பயிற்சியின் விளைவாக எழும் காமம் விஷமாக மாறி வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதனை அடக்குதலை பாம்பின் தலையில் ஏறி நடனமிடும் கிருஷ்ணனில் முறுக்குசாமி காண்கிறார். மாணிக்கத்தின் கனவில் வரும் பாம்பின் தலை வரை ஏறி சறுக்கும் காந்தியையும் ஏற முயற்சித்து தோற்கும் பிற மனிதர்கள் யாவரையும் அந்த யோக பாதையின் வழிகளில் இருப்பவர்களாக காண முடிகிறது. கிருஷ்ணனை பார்த்து தானும் சின்ன வயசிலேயே ஏறி இருக்கணும் என்று சொல்வது, வயதானவர்களை பாம்பின் அல்லது குண்டலினியின் தலை மேல் ஏறுவதில் இருந்து தடுப்பது எது என சிந்திக்க தூண்டுகிறது. சாபம் அடையும் குடும்ப பின் கதை எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறது என்பது தெரியவில்லை. குண்டலினியிலிருந்து எழும் காமம் எவ்வாறு அத்தனை மனிதர்களையும் சுழித்து இன்மையில் கரைக்கிறது என்பதாக புரிந்து கொண்டேன்.
குருதி சோறு இந்த தொகுப்பின் மிக முக்கியமான கதை. இதன் முக்கியத்துவத்திற்கு காரணம் இது எழுதப்பட்ட வடிவம் தான் என்று தோன்றுகிறது. காளி கோயிலில் நடக்கும் வருட திருவிழாவில் அனைவரது வீட்டிலிருந்து அரிசி கொண்டு வருவதும், மருளாலியின் ஆடலும், பலியும் சடங்குகளும் நடைபெறுகிறது. சுடலையால் அந்த ஆட்டத்தில் இரண்டற கலக்க முடிவதும் அதே நேரத்தில் சபரியால் கலந்து கொள்ள முடியாது போவதும் மிக முக்கியமான ஒன்று. பின்பு பாலாயியின் பஞ்ச கால வாழ்க்கையும் இறப்பும் சொல்லப்படுகிறது. அதன் மேலடுக்காக அவள் எவ்வாறு அன்ன சௌரக்ஷாம்பிகை புராணமாக மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியரின் வீட்டில் கூறப்படும் கதையாடலில் சொல்லப்படுகிறது.
இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று பொருந்தி ஒரு அபாரமான சமூக இயங்கியலை வெளிப்படுத்துகிறது. பாலாயியை கடவுளாக மாற்றி அவளது உக்கிரத்தில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடும் சுடலையின் சமூகம் ஒருபுறம். அதில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட முடியாமல் சபரியை தடுக்கும் பெருந்தெய்வ வழிபாடுடைய சமூக அமைப்பு மற்றோரு பக்கம். பாலாயியை காளியாக மாற்றி ரத்தத்தையும் அன்னத்தையும் படையிலிடும் நாட்டாரியல் வழிபாடும் அந்த திருவிழாவின் இறுதி நாளில் வைத்தியரின் வைதீக குடும்பத்தின் பங்கேற்பும் இணைந்ததாக அது உருமாறியிருக்கும் விதம் மிக முக்கியமானது.பாலாயியை வைதீகம் தனது புராணங்களின் வழி அவளை அன்னலக்ஷ்மியாக்கி திருமகளின் வழியே திருமாலுடன் பிணைக்கிறது. எவ்வாறு ஒரு நாட்டாரியல் தெய்வம் புராண மேல்நிலையாக்கத்தின் வழியே பெருந்தெய்வ மரபோடு இணைக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மருலாளியின் பூர்வீகம் தெரியாமல் அவனை பூசாரியாக ஏற்க மறுப்பதை வைத்தியரின் கனவில் தான் அம்மன் வந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்.
பாலாயியின் வரலாற்றில் இருக்கும் அவளுடைய அடையாளம் புராணத்தில் களையப்படுகிறது. பாலாயியின் வாழ்வில் நடந்தேறிய அவளது பிள்ளைகளின் இறப்பும் அவளது மரணமும் தியாகமாக மாற்றப்படுகிறது. வைத்தியரின் குடும்பத்தின் தெய்வமாகும் பாலாயியின் சந்ததியின் தொடர்ச்சியினை கதைவழியாகவும், சடங்கின் வழியாகவும் பேணும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளது என ஒரு அமைப்பின் இரு பக்கமும் ஒன்றை ஒன்று நிரப்பி செயல்படுவதன் சித்திரம் முழுமையடைந்துள்ளது. இந்த சிக்கலான சமூக இயங்கியல் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இந்த கதையின் சமூக இயங்கியலின் மறு பக்கமாக ஜெயமோகனின் மூத்தோள் கதையை வாசிக்க முடியும்.
அம்புப்படுக்கை சிறுகதையில் ஒவ்வொரு அம்பாக தப்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆனா ரூனா செட்டியார் இறுதி படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரது இறப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நாடி பிடித்து பார்க்க அழைக்கும் சுதர்சன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செட்டியாரின் நாடியைப் பார்க்க சம்மதிக்கிறான். நாடி பிடித்து பார்ப்பதில் அவரது நாடி மெல்ல அடங்குவதை உணர்ந்து கொள்கிறான்.
ஆனா ரூனாவின் இயல்பை அவருக்கும் தனது தாத்தாவிற்கும் இடையேயிருக்கும் பழக்கத்தினால் நன்கு உணர்ந்திருக்கும் சுதர்சன் அவர் எதிர் பார்க்கும் ஓரு பதிலை அளிக்கிறான். தான் விரும்பும் போது உயிர் பிரியும் என்ற பீஷ்மரது அம்பு படுக்கையை போல் ஆனா ரூனா வும் சுதர்சனின் பதிலில் திருப்தியடைந்து உயிரை விட சம்மதிக்கிறார் என்று தோன்றுகிறது.
பொன் முகத்தை காண்பதற்கும் என்கிற கதையில் சமகால சிக்கல் பேசப்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள மட்டுமே உதவும் பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த ஊரினை விட்டு விலகி நகரத்தில் அடைந்து கிடக்கிறார்கள். சிறு குழந்தையின் அன்பில் மட்டுமே தன் இருப்பின் பிடிப்பினை கொண்டவர்கள். ஒரு அவசர நேரத்தில் அவர்கள் சொந்த வேலைக்காக பிரிந்து செல்ல நேரிடும் போது நகர வாழ்வில் உருவாகும் நெருக்கடி. அதனை தொழில் நுட்பத்தை கொண்டு வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக எண்ணும் நகர மனிதர்கள். தான் இல்லாமலே குழந்தை உறங்க பழகிக் கொண்டதால் தனது இருப்பை சந்தேகிக்கும் பெரியவர்.
இன்னும் சமூகத்தின் கறை படியாத இளம் குழந்தை மனித உறவின் ஆழத்தை அர்த்தப்படுத்தும் நொடியில் தனது வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்வது தான் கதை.
2016 சிறுகதை 1984 நாவலின் வின்ஸ்டன் கதாபாத்திரத்தின் இன்றைய முக்கியத்துவம் உணரப்படும் கதை.
முற்றிலும் சுதந்திர சிந்தனையை அனுமதிக்காத வின்சென்ட் வாழ்ந்த நாட்டின் சூழலில் இருக்கும் அம்சத்தை, புரட்சி இல்லாத குடியரசு நாட்டில் வாழும் மக்கள் தங்களது சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்து கொள்ளும் போது அவரை மீள் கண்டடைவு செய்கிறார்கள்.
கடைசியாக நரோபா வெளியேறும் போது இன்னொரு மேசையில் உட்கார்ந்திருக்கும் வின்ஸ்டனையும் அவரை தேடி வந்திருக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்கரையும் காண்பது வின்சென்ட் உருவகிக்கப்படும் சூழல் ஆர்வெல் கற்பனை செய்தவாறு உலகம் துண்டுப்படாமலாகியும் தொடர்ந்து அவர் எவ்வாறு கண்டடையப்படுகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதைக் காட்டுவதாக தோன்றுகிறது.
பேசும் பூனை ஒரு கிளாசிக் ஆவது முதன்மையாக அதன் மொழியினால் நிகழ்கிறது என்று தோன்றுகிறது.
வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் தனித்திருக்கும் பெண்களின் தீர்க்கப்படாத ஏக்கம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் இன்றைய குடும்பத்தில் இருக்கக் கூடிய ஆண் பெண் உறவின் முதிர்ச்சியற்ற தன்மை.
ஆணின் தீராத காமமும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் மனம். சமூகத்தால் உருவாகியிருக்கும் பெண்ணின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளும் தன்முனைப்பும்.
அந்த இடைவெளியில் நுழையும் பூனை பதிவேற்றாத எண்ணிலிருந்து வரும் அழைப்பின் வழியே அந்தரங்கங்களை திருடுகிறது. அவளுக்கு பிடித்த பாடல்கள், தகவல்கள் மற்றும் அக்கறையின் வழியே தனது இருப்பை நிலை நிறுத்துகிறது. விதவிதமான சேலைகளை கட்டி அவள் பூனைக்கு காண்பிப்பது என்பது உண்மையில் அவள் மீது அவளே கொண்ட கிளர்ச்சியாகவே தோன்றுகிறது. அவளுடைய ஏக்கம் தணிக்கப்பட்ட பின்பு அவளுக்கும் கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் சுமூகமாக முடிகிறது.
அவளது குடும்ப செலவுகளை நிர்வகிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக் அவளது தேவைகளை பூனை முடிவு செய்கிறது. பொருட்களை வாங்கி குவிக்கிறது. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை உணர்ந்து தன்னிடம் சொல்லிவிட்டு இனிமேல் வாங்கு என்று சொல்லியதற்கு கோவித்துக் கொள்கிறது. அவளது தன்முனைப்பையும் ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும் பூனையின் திடீர் மறைவு அவளை குழந்தை பெற்றதற்கு அடுத்ததாக அழ வைக்கிறது.
பின்பும் அவளால் பூனையின் ஆதிக்கத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது கட்டுண்டிருக்கும் அவள் நிலை என்பது அவளது மன ஆசைகளுக்கும் தன்முனைப்பிற்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலை தான் என்று தோன்றுகிறது. அவளது மகள் தாயின் அதீத போக்கின் காரணத்தை உணர்ந்து பூனையை அடிக்கும் போது.. அவளை வெறி கொண்டு அடித்து மயங்கச் செய்கிறாள். உன்னால் எனது மகளை அடிக்க நேர்ந்தது என்று சொல்பவளிடம் பூனை சாதாரணமாக அவள் என்னை எத்தனை முறை அடித்தால் தெரியுமா.. ஒரு முறை அடித்ததற்கு இப்படி கவலை படுகிறாயே என்று கேட்குமிடம் மிக வலுவான தாக்கத்தை வாசிப்பவரிடம் உண்டு செய்கிறது. பூனை வெறும் விளையாட்டு என்பதிலிருந்து அவள் வந்து சேர்ந்துள்ள பூனையை தவிர்க்க முடியாத இடமும், அதனது கண்காணிப்பும் அவளை தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.
ஆரம்பத்தில் அவள் முணுமுணுக்கும் சுவர்ணலதா பாடலின் வரி பாடகியின் குரலில் கேட்கிறது. பின்பு தொலைபேசியில் வரும் நிறுவனத்தின் அழைப்பில் கேட்கும் பாடலில் பூனையின் குரல் ஊடுருவியிருக்கிறது. இறுதியாக அவளது அக மொழியிலே பூனை ஊடுருவி இருப்பதன் முடிவு தீவிரமாக அமைந்துள்ளது.
அறிவியல் புனைவு கதையான திமிங்கிலம் இன்னொரு முக்கியமான கதை. கற்பனை உலகத்தில் தொழில் நுட்பத்தின் சிக்கலை தீவிரப்படுத்தி அணுகும் கதை. அவனுக்கும் அவனது முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலே கதையின் மையம்.
மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்கும் உலகம் வாழ வேண்டும் என்பதற்குமான முரண். மனித மைய வாதத்திற்கும் பிரபஞ்ச ஒட்டு மொத்த பார்வைக்குமான போர். அதில் மனித தன்முனைப்பின் சிக்கலும் பிரபஞ்சத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க தவறுவதன் விளைவும் தீவிரமாக விவரிக்கப்படுகிறது.
மக்களில் செயல்படும் வாழ்வதற்கான விழைவு அவர்களை கீழ்மை நோக்கி செலுத்தும் விதமும் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும் போது குற்ற உணர்விற்கு ஆளாகி அதன் பழியை ஆராய்ச்சியாளனின் மீது சுமத்துவதும் வெவ்வேறு நிகழ்விற்கும் பொருத்தி பார்க்க கூடியது.
ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய அறத்திற்கும் அறிவியலின் கண்டுபிடித்தலில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயான சிக்கல் இறுதியில் கூர் கொள்கிறது. இந்த கேள்வியின் இன்னொரு வடிவம் தான் விஷக்கிணறு குறு நாவலாக விரிவடைந்துள்ளது.
மனிதன் இந்த உலகில் மற்ற எதையும் சார்ந்திராமல் வாழ்வதற்கான சோதனையை மேற்கொண்டு அவன் வெற்றியடைகிறான். ஆனால் அவன் அவ்வாறு தனியாக வாழும் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதே அவனுடைய இயல்பு என்று தோன்றுகிறது. அதற்காக சமைக்கப்பட்டதே நாகரிகமும் பண்பாடும்.
அதன் எல்லையை அல்லது வெறுமையை உணரும் அவன் தான் உருவாக்கிய அனைத்தையும் நேர் செய்ய முடியுமா என்று நினைக்கிறான். ஜெமீமாவை நெருங்க அவனுள் இருக்கும் அழியா தேடல் அவன் தன்னை இவ்வுலகில் அரக்கனாக எஞ்சியிருக்க கூடாது என்று நினைக்க வைக்கிறது. அந்த கடற்கரையில் அவன் ஓடும் பாத தடங்களை அழித்துக் கொண்டே திரும்பும் போது புது காலடிகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொள்கிறான். உண்மையில் இங்கு உருவாக்கும் எதையுமே அழித்து விட முடியாது. ஒன்று உருவாகிவிட்டால் அதனை காலத்தில் பின் சென்று அழிப்பது சாத்தியமற்றது. அதனால் இறந்து போன திமிங்கிலத்தின் எலும்பினை இழுத்துக் கொண்டு கடலில் சென்று மரிக்கிறான் என்று தோன்றுகிறது. தேவைக்கு அதிகமாக தின்று அழிக்கும் திமிங்கிலத்தின் தேவை மக்களுக்கு அவ்வப்போது அவனது எல்லையை நினைவில் நிறுத்திக் கொள்ள அவசியமானது தான் போல.
கூண்டு சிறுகதை ஒரு மிகுபுனைவு.. அந்த கூண்டின் உருவாக்கமும் அதன் நோக்கமாக கதையில் சொல்லப்படுவதும் சேர்ந்து என்னை சிறிது பரவசத்திற்கு உள்ளாக்கி விட்டது. கூண்டு அதுவே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டும் என்பதும், கூண்டினை செய்த கொல்லனின் மீசையற்ற ஆயிரக்கணக்கான வருட புன்னகையும் அந்த கூண்டிணை பிரபஞ்சத்தோடு என் மனம் ஒப்பிட்டு கொண்டது. அங்கு நிகழும் மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வு அவர்களின் தண்டனை என்ற அளவில் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கதையின் முடிவு கீழிறக்கியது. எந்த தவறும் செய்யாத ஒருவன் அல்லது சமூகத்தில் சொல்லப்படும் லட்சிய உருவகத்தில் வாழும் ஒருவனின் நிலையை காட்சி படுத்துகிறது.
சமூகம் ஒரு நேரத்தில் தனது உண்மை நிலையினை ஏற்றுக் கொண்டு கூண்டிற்குள்ளேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது, எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இரக்கத்தொடு பார்க்கப்படுகிறான். அவனும் அந்த கூண்டிற்கு செல்ல தனக்கு இருக்கும் காரணங்களை கற்பனை செய்து கூண்டின் தவறால் வெளியிலிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். சமூகத்தின் அழுத்தம் எந்த அளவிற்கு தனியர்களின் மீது செயல்படுகிறது என்பதும் அவனுக்கு தேவைப்படும் ஆத்ம பலத்தின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆரோகணம் தருமனின் இறுதி பயணத்தை போல் காந்தியின் இறுதி பயணத்தை படைக்க முயலும் கதை. இந்த கதையை நான் மிக ரசித்தற்கு காரணம் ஒன்று காந்தியை தொன்மமாக்கும் மிக முக்கியமான கதை.
காந்தியின் மனம் யதார்த்தத்தில் செயல்படும் விதத்தை மெல்லிய நூல் போன்ற கதைகளில் அணுகி அறிய முயன்ற முயற்சிகளில் இருந்து இது வேறுபடும் விதம் சிறப்பானது.
இரண்டாவதாக மரபில் இருந்து ஆத்ம சுத்திகரிப்பை அடைய வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருந்த மனிதர் மரபினால் சொல்லப்படும் சொர்க்கத்தை தனது இயல்பினாலேயே நிராகரிப்பது. இது முக்கியமான மீறல் என்று தோன்றுகிறது.
மிக அற்புதமான கதைகள். தமிழில் இத்தகைய கதைகளை எழுதும் சுனில் நிச்சயமாக முதன்மையான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை.
April 16, 2025
மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத கூடுகை சிறுகதை விவாதம்
எழுத்தாளர் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்’ சிறுகதையும் எழுத்தாளர் சுசித்ராவின் ‘ராம பாணம்’ குறுநாவலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாராயணி அம்மா, கோமளா டீச்சர், வேலாயுதம் பெரியசாமி, நாராயணன் மெய்யப்பன், முகமது கபூர், கவிஞர் சிலம்பரசன், எழுத்தாளர்கள் பிரபாகரன், சித்ரன் ஆகியோர் பங்குபெற்றனர். எல்லோரும் கதைகளை வாசித்து வந்ததால் செறிவான உரையாடல் சாத்தியமானது.


முதலில் அஜிதனின் ‘இந்திய ஆன்மிக அனுபவம்’ கதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுவாசிப்பிற்கு உட்படுத்த முடியாத அளவிற்கு அருவருப்பை மைய உணர்வாக கொண்டுள்ளதாக கூறினார்கள். அஜிதனின் கதைகளில் தொழிற்படும் துல்லியமான புற சித்தரிப்புகள் அவரது பலம். அருவருப்பான அனுபவத்தை மொழியில் நுணுக்கமாக விவரிப்பது சவாலானது. சிறுநீர் உப்பு படிவதை பற்றி அவர் எழுதிய சித்திரம் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. எதை இந்திய ஆன்மிக அனுபவம் என கூறுகிறார் என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் கூறுகிறார் என்பதும் இன்னொரு கேள்வி. தலைப்புதான் கதையை வலுவாக்குகிறது. வாமாச்சார மரபு அருவருப்பை ஆன்மிக பாதையாக முன்வைப்பதைப்பற்றி பேசினோம். லிங்கத்தை வெளியே விட்டபடி உறங்கிக்கிகொண்டிருக்கும் பைத்தியக்காரனை சிவனாக உருவகிக்க இடமுண்டு என்றொரு கருத்து வந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலன் தொழுநோயாளியையும் பள்ளிகொண்ட பெருமாளையும் ஒருவரென காணும் கணம் அவனுக்கு பெரும் தொந்திரவை அளித்தது. ஜெ எழுதிய ‘மலம்’ எனும் கதையும் ‘இந்திய ஆன்மீக அனுபவம்’ கதையுடன் பொருத்தி பார்க்கலாம். கும்பமேளா நிகழ்ந்த சூழலில் இன்று இந்த கதை எழுதப்படுவதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் உள்ளதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் வரும் பாபாக்களை பொது சமூகம் ஒவ்வாமையுடன் நடத்தவில்லை. மாறாக அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது என்பதால் அத்தகைய அரசியல் நிலைப்பாடை வலிந்து இக்கதைக்கு அளிக்க வேண்டியதில்லை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வாசிக்கும்போது இந்த அரசியல் தூண்டுதல் பெரிய காரணியாக பார்க்கப் படாது. கும்பமேளா அளவிற்கு எல்லாம் செல்லாமல் உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள், எச்சிலில் உருள்வது போன்ற சடங்குகளுடன் பொருத்திப் பார்க்கலாம். தினம் தினம் இந்த அருவருப்புடன் வாழ்ந்தபடி தான் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாட்களை கடக்கிறார்கள். எளிய மக்களின் ஆன்மிகமும் வாழ்வனுபவமும் இந்திய சூழலில் அருவருப்பை ஏற்றுக்கொள்ளவும் இயல்பாக கடந்து செல்லவும் வழிவகுக்கிறது. ஆகவே இந்த கதை மேலதிகமாக எந்த அதிர்ச்சியும் அருவருப்பையும் கடத்தவில்லை எனும் விமர்சனம் எழுந்தது. எனினும் அருவருப்புடன் இயல்பாக இயைந்து வாழ பழகும் எல்லோருக்கும் அது ஆன்மிக அனுபவமாக பரிணாமம் கொள்வதில்லை. பொது உண்மையை தொடுவதை விட தனி உண்மையை காட்டி நின்று விடுகிறது என்பதே இந்த கதையின் எல்லை. இது சாமானிய மனிதனின் கதை அல்ல, ஒரு நவீன அறிவு ஜீவியின் சிக்கல். அழகும் அருவருப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அருவருப்பை வேறொன்றாக மாற்றி கற்பனை வழி கடந்து செல்லும் திறனுடையவனாக இருக்கிறான் கதைசொல்லி. தொடுகை தான் அவனை தொந்திரவு செய்யக்கூடியது. இருளில் அத்தகைய மாற்றம் சாத்தியமாகவில்லை. முதல்முறை நேருக்குநேர் மெய்யை எதிர்கொள்கிறான். அது அவனது அகங்காரத்தை உடைக்கிறது. அவன் ஒரு தொடுகையை உணர்கிறான். ஆனால் படுத்துக்கிடக்கும் பைத்தியகாரனைத் தவிர அருகே யாருமே இல்லை. அவனுக்குள் இருப்பவை எல்லாம் கரைந்தழிகின்றன. மீட்பவர்கள் பெண்கள் என்பதற்கு சிறப்பான கவனம் ஏதும் இருக்கிறதா என்று பேசப்பட்டது.
இரண்டாவதாக விவாதிக்கப்பட்ட கதை சுசித்ரா எழுதிய ‘ராம பாணம்’ எனும் குறுநாவல். மீனாட்சிநாதன், சாம்பு மற்றும் ராமுடு ஆகிய மூவர் 1896 ஆம் ஆண்டு காவிரிக்கரையில் அமர்ந்து உரையாடுவதே கதை. ராமுடு தனது குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை தன்னிடம் சொன்ன திருவையாறு பஞ்ச நாத பிரம்மம் எனும் தியாகராஜரைப் பற்றிய கதையை சொல்கிறார். ராமுடு கதைசொல்லும்போது ‘அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க’ என்று சொல்கிறார்.
ராமுடுவிற்கு அவரது குரு ராம நாமத்தை ஜபம் செய்ய அளித்திருக்கிறார். ராமன் எனும் உருவம் மீது அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. “உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல.” மேலும் தனது குடும்பத்தினர் பகலில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இரவில் காமக்களியில் ஈடுபடுவது எனும் கபடம் அவரை எரிச்சல் கொள்ள செய்கிறது. ஆனால் அவரேதான் பெரும் உவகையோடு தனது குருநாதர் சொன்ன தியாகராஜர் ராம விக்கிரகத்தை காவேரியில் கண்டெடுத்த கதையை சொல்வது பாத்திர வார்ப்பிற்கு முரணாக பட்டது.
தில்லைஸ்தானம் ராமுடுவிற்கு ஒருவித அடையாள சிக்கல். ராமய்யராகவும் இல்லை, ராமையா பிள்ளையாகவும் இல்லை. தாயிடமிருந்து பிரிந்து தந்தையிடம் வளர்கிறார். ஆனால் அங்கு ஏறத்தாழ அடிமை வாழ்க்கை தான் வாய்க்கிறது. ராமுடு தனது குருவாக கருதும் ராமாமிர்தம் பிள்ளை ஏறத்தாழ இதே போன்ற குடும்ப பின்புலம் கொண்டவர். எனினும் அவர் ‘பிள்ளையாக’ வளர்பவர். ராமுடுவிடம் பெண் அனுபவம் உண்டா என்றொரு கேள்விக்கு தாசிகள் எனது தாயர்கள் என்றொரு பதிலை அளிக்கிறார். காவேரியை அதன் நிறைவில் கண்டவனுக்கு எந்த பெண்ணும் நிறைவை அளிக்க மாட்டாள் என்பதே அவரது பதிலாக உள்ளது. இயற்கையே முழுமை. ஆகவே வழிபாட்டுக்குரியது. இயற்கையின் முழுமையை அறிந்தவனால் உலகியலில் அமைய முடியாது என்பதே கண்டுகொண்டவனின் சாபம் என்பதை ராமுடு உணர்த்துகிறார். உ வே சாவின் சீடனை போல வருகிறான் மீனாட்சிநாதன். சுவடிகளின் மீது பித்துக்கொண்டு அலைகிறான். சாம்பு நவீனமானவன். பட்டணத்தில் நவீன வரலாறு படிக்கிறான். ஒருவகையில் இவையிரண்டும் வரலாற்றின் இரண்டு பக்கங்கள் என சொல்லலாம். மீனாட்சிநாதன் காவேரிக்கரையை விரும்புகிறான். மீனாட்சி நாதனின் ஆய்வுகளை பழங்குப்பை என கருதும் சாம்பு பட்டனவாசத்தை விரும்புபவன்.
குறுநாவலை இரண்டு கதைகளாக பிரிக்கலாம். ராமுடு - மீனாட்சிநாதன்- சாம்புவின் பகுதி முதல் 7 அத்தியாயங்கள் வரை நீள்கிறது. அந்த பகுதியின் உச்சம் என்பது மீனாட்சிநாதன் நாகசூடாமணி சுவடியை கண்டெடுக்கும் தருணம். வீடு முழுக்க குவியலாக ஒழுங்கின்றி கிடக்கும் சுவடி கட்டிலிருந்து பூச்சி இட்ட துளை வழியாக தேடிய சுவடிகளை பெரும் பரவசத்தோடு கண்டெடுப்பார்கள்.
குறுநாவலின் இரண்டாம் கதை சரடான தியாகராஜருக்கு அவரது சகோதரர் ஜப்பேசருக்குமான உறவையும் முரனையும் இணைவையும் சித்தரிக்கும் பகுதிக்கு இந்த முதல் பகுதி தேவையற்ற சுமையாக உள்ளது என்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கதைப்படி ஜப்யேசன் சிலநொடிகள் முந்தி பிறந்த மூத்தவர். பஞ்சநாத பிரம்மமும் ஜப்யேசனும் இரட்டை பிறவிகள். ஜப்யேசன் அழுகுரலை கேட்டு பூமிக்கு வந்தவன் பஞ்சநாத பிரம்மம். பஞ்சநாத பிரம்மம் பற்றி அவரது தாயார் ‘யார் அழுதாலும் முன்னே சென்று நின்றுவிடுபவன்’ என கேலியாக குறிப்பிடுகிறார். தந்தை ஒருவருக்கு விக்கிரகமாகவும் இன்னொருவருக்கும் தூபதீப மலராகவும் ராமனை அறிமுகம் செய்கிறார். இருவரும் தங்களுக்கு மறுக்கப்பட்ட வடிவத்தில் ராமனை ஏந்தி கொள்கிறார்கள். முக்திக்கான வழியாக பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம் என இரண்டு பாதைகள் உண்டு. பல்கி பெருகி அனுபவிப்பது ஒரு வழி, விலகி துறவு கொள்வது இன்னொரு வழி. ஜப்யேசன் திளைக்கும் வழியில் செல்பவன் என்றால் பஞ்சநாத பிரம்மம் துறவின் வழியில் செல்பவன். பொதுவாக விஷ்ணுவை திளைக்கும் மரபிற்கும் சிவனை ஒடுங்கும் மரபிற்கும் உரியவர்களாக வகைப்படுத்துவர். ஜப்யேசனை சிவனோடு இணை வைப்பது இங்கு பொருந்துமா என்றொரு கேள்வி உண்டு. எனினும் கதையின் தொடக்கத்தில் இருந்தே கறுப்பு - சிவப்பு என்றொரு இருமையை எழுத்தாளர் சுட்டுகிறார். இந்தியர்களுக்கு உரிய நிறமாக கறுப்பும் ஐரோப்பியர்களுக்கு உரிய நிறமாக சிவப்பும் முன்வைக்கப்படுகிறது. பெருமாள்- சிவன் இருமையை இதன் நீட்சியாக காணலாம். சிவனை ராஜசிக குணத்தின் பிரதிநிதியாக காண இடமுண்டு. சிவப்பும் ரஜோ இயல்பின் நிறம் தான்.
ராமாமிர்தம் பிள்ளை ஒன்றுவிட்ட சகோதரியான ராஜதாசி ரமாவாணியை ஜப்யேசன் ஏறெடுத்து பார்க்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த தூது செல்லும் இடத்தில் பஞ்சநாத பிரம்மத்தை சந்திக்கிறார். அவரது தூதும் அதற்கு ஜப்யேசன்பதிலும் என விரிகிறது. ஜப்யேசனும் பஞ்சநாத பிரம்மமும் ஒன்றின் இரு அம்சங்களாக தென்படுகிறார்கள். ரமாவாணி பஞ்சநாத பிரம்மத்தை காணும்போது ஜப்யேசன் இட்டுக்கொள்ளும் நெற்றிக்கண் போன்ற சிவப்பு குறியை நெற்றியில் காண்கிறாள். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உணர்த்தப்படவில்லை. ஜப்யேசன் ராமன் விக்கிரகத்தை காவிரியில் வீசுகிறார். சகோதரர்கள் இருவரும் நீரில் குதிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு ஒருவர் மட்டுமே விக்கிரகத்துடன் கரையேறுகிறார். ஏறியவர் விக்கிரகத்தை கையில் ஏந்தியபடி ஜப்யேசன் குரலில் பாடியபடி வருகிறார். அங்கிருப்பது எவர், காவேரி எடுத்து கொண்டது எவரை என சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரையும் ராமபாணம் ஒன்றாக கோர்க்கிறது. பின்னர் அவர் தியாகபிரம்மம் என வழங்கப்படுகிறார்.
ராமபாணம் எனும் உருவகமே குறுநாவலின் மைய இழை. ராம பாணம் என்பது அழிப்பதல்ல. அது கடவுளின் தொடுகை. ஒன்றை மற்றொன்றுடன் கோர்ப்பது, இணைப்பது, ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது. ஜெயமோகனின் ‘பிழை’ கதை இத்தகைய இறையாற்றலின் இருப்பு/ அல்லது தொடுகையை பற்றி பேசும் அபாரமான கதை. கொரோனா கால கதைகளில் ஜெயமோகன் தாயுமானவரை மையமாக கொண்டு எழுதிய கதைக்கும் ஜப்யேசர்- ரமாவாணி உறவு சித்தரிப்பிற்கும் தொடர்ச்சி இருப்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது.
இந்த கதையின் முக்கியமான சிக்கல் அதில் கையாளப்படும் படிம குவியல் காரணமாக உணர்வு ரீதியான விலக்கத்தை ஏற்படுத்தி படிமங்களை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளும் அறிவு செயல்பாடாக கதை வாசிப்பு ஆகிறது என்பதே. மாறன்- ராமன் எனும் இருமை பேசப்படுகிறது. ஜப்யேசன் மாறனாகவும் பஞ்சநாத பிரம்மம் ராமனாகவும் காண இடமுண்டு. மனதின் மீது நித்தம் நிகழும் சமர் என வாலி - சுக்ரீவன் சமர் உருவகிக்கப்படுகிறது. பலவீனனான சுக்ரீவன் ராமனின் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவன் தியாகராஜராகவும் ஜப்யேசன் வாலியாகவும் சித்தரிக்கப்படுகிறான். இறுதியில் மல்லுக்கு அறைகூவல் விடுகிறான் ஜப்யேசன். நெற்றியில் சிவக்குறியுடன் சிவனுக்கு உவமிக்கப்படுகிறான் ஜப்யேசன். ராமாமிர்தம் பிள்ளை படகில் ஜப்யேசனுடன் செல்லும்போது தன்னை ராவணன் என கூறிக்கொள்கிறார். படகில் எனக்காக ஜப்யேசன் பாடுவார் என்று படகோட்டி சொல்லும்போது ‘குகனுக்கு இல்லாத ராமனா’ என்று ஒரு வரி வருகிறது. பஞ்சநாத பிரம்மம் ராமாமிர்தத்திடம் பேசும்போது தன்னை வீடணன் என்றும் பலி சக்கரவர்த்தி என்றும் சொல்கிறார். ஜப்யேசன் ராமாமிர்தத்திடம் நாத வடிவில் தான் ராமனை அறிவதாகவும் ராமனின் உருவத்தின் மீது தனக்கு ஈடுபாடில்லை என்றும் சொல்கிறார். வலியை கலையாக்கும் சாதகனாக அவர் தென்படுகிறார். கலை கலைக்காக என்பதே அவர் கூற்று. பஞ்சநாத பிரம்மம் கலையை இறை அனுபவத்திற்கான வழியாக காண்கிறார். இப்படி தொடர் முரண்பாடுகளை உணர முடிகிறது. இரண்டாவது முக்கிய சிக்கல், குறுநாவல் பாத்திரங்களில் இருந்து தரிசனத்திற்கு செல்லாமல் தரிசனத்தை அடைந்த பிறகு பாத்திரங்களை அதற்கேற்றவாறு வளைக்க முற்படுகிறது. தியாகராஜரை நீக்கிவிட்டு இக்கதையை வாசித்தால் நல்லதோர் புனைவாக காண முடியும். ஆனால் தியாகராஜர் என்பது கதையிறுதியில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. தியாகராஜர் வாழ்க்கை சரிதத்தை அறிந்தவர்களுக்கு ஜப்யேசன் பாகவதர் அல்ல என்பது தெரியும். எனக்கு தெரிந்தவகையில் அவருக்கு தனது சகோதரரின் மீதிருக்கும் கோபம் என்பது அவரது ராம விக்கிரக பூஜை அரிசி பருப்புக்கு ஆகவில்லை என்பதுதான். இந்த கதையில் தியாகராஜர் ஒருபடி கீழாகவும் ஜப்யேசன் ஒருபடி மேலாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஜெயமோகனின் பல கதைகளில் இந்த போக்கு காண கிடைக்கும். துறவுக்கு சத்வத்தை விட ரஜோ குணத்தை முதன்மைப் படுத்துவார். சத்வ குணமுடையவர் துறவியாவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ரஜோ குணமுடையவர் தன்னை, தனது தன்முனைப்பை வெற்றிகொண்ட பிறகே துறவின் பாதையில் பயணிக்க முடியும். ரஜோ குணத்தவரின் போராட்டம் எழுத்தாளர்களை ஈர்ப்பது இயல்பானதே. எனினும் சத்வ குணத்தை குறைத்து அல்லது அலுப்புடன் காட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெண்முரசில் யுதிஷ்டிரன் பாத்திர வார்ப்பை உதாரணமாக கொள்ளலாம். சுசித்ராவின் இந்த கதையிலும் பஞ்சநாத பிரம்மத்தின் சித்தரிப்பு இத்தகையதே. பொது சமூகம் சத்வ குணத்தின் மீது காட்டும் மரியாதைக்கு எதிர்வினையாககூட கலைஞர்களின் எரிச்சலையும் உதாசீனத்தையும் பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் தோன்றியது. மாறன்- ராமன் கவித்துவமான இடமாக இருந்தாலும் வான்மீகிக்கு அளிக்கப்படுவது மரா எனும் சொல்தான். ஜப்யேசன் பாத்திரத்தின் வலிமைக்கு முன் தியாகராஜர் மிகவும் வலுவற்றவராக தெரிகிறார். தியாகராஜரை பக்திமானாகவும் கவியாகவும் காண இடமுண்டு. அவற்றை இருவேறு கூறுகளின் இணைவாக காண வேண்டுமா என்றொரு கேள்வியும் எழுந்தது. கபீர் தாஸரின் ஜீனி சதாரியா அருமையான பாடல். அப்பாடலில் முன்வைக்கப்படும் நெசவு எனும் படிமமும் நௌகா சரித்திரம் எனும் ஜெயதேவரின் பாடலில் இருந்து கோபிகைகள் ஆடையை கொண்டு படகின் ஓட்டையை அடைக்க முயலும் நெசவு எனும் சித்திரமும் இயைந்து வருகிறது. எனினும் ஜீனி சதாரியா பாடல் கதை நிகழும் கால சூழலுக்கு பொருத்தமானதா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதை நியாயம் செய்வதற்கென மஸ்தானி என்றொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. புறசித்தரிப்பில் சில இடங்கள் திரும்பத்திரும்ப வருவதாக தோன்றுகிறது என்றாலும் காவேரியை சித்தரித்த விதம் மிகச் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. இந்த எல்லைகளை கடந்து வாசகருக்கு ஒரு காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அனுபவத்தை கதை அளிக்கிறது. எல்லாவற்றையும் இணைக்கும் ராம பாணத்தால் கூட பெண்ணின் துயரை போக்க முடியவில்லை என்பது அபாரமான இடம். ராமனே தவறிய இடமல்லவா.
மீனாட்சி நாதன் சொல்லும்போது “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.” சுவடிகள் வழியாக பழையகாலம் தன்னை திரும்பி நோக்குவதை பற்றி சொல்கிறான். ராமனையும் அத்தகைய ஆழமான செதுக்காகவும் அது நம்மை திரும்பி நோக்காதா என பார்ப்பதாகவும் ராமுடு குறிப்பிடுகிறார்.
‘ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய’
‘எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.’ என்கிறார் ராமுடு. வரலாறை மிஞ்சி நிற்கும் ஆழ்படிமம் ராமன். அதை சொல்லின் வழியாக மீட்டெடுக்க முடியும் என்பதாக பொருள்படுகிறது. ராமுடு தனது குரு தனக்கு அளித்த ராம நாமத்தை பற்றி குறிப்பிடும்போது “கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.” என சொல்லும்போது மேற்சொன்ன எண்ணம் வலுப்படுகிறது.
மிக நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது, ஒன்றுக்கும் மேற்பட்ட மைய கேள்விகளை பின்தொடர்ந்து, சிதறியதால் அந்த உயரத்தை எட்ட தவறிவிட்டது என்பதே என் எண்ணம்.
April 11, 2025
பாதி இரவு கடந்துவிட்டது - அமிதபா பக்சி- தமிழில் சுபத்ரா- வாசிப்பு
சமகால உலக/ இந்திய இலக்கியத்திலிருந்து நாவல்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவது குறைவு என்பதே என் எண்ணம். மொழியாக்கங்களுக்கு குறைவில்லை. சமகால கவிதைகள் உதிரி உதிரியாகவாவது நம்மை வந்து சேர்ந்து விடுகிறது. நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு தான். ‘க்ளாஸிக்குகள்’ இன்னும் பல இங்கே வரவில்லை என்பதே நிதர்சனம். 2018 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அமிதபா பக்சி எழுதிய ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவல் நான்காண்டுகளில் தமிழுக்கு இல. சுபத்ராவின் மொழியாக்கத்தில், எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது நல்ல விஷயம். அமிதபா டெல்லியில் பிறந்து வளர்ந்து பணியாற்றி வருபவர். ஐ.ஐ.டியில் கணினி பேராசிரியர் என்று அறிகிறேன்.

இந்திய ஆங்கில இலக்கியம் சார்ந்து ஏதோ ஒரு மன விலக்கம் எப்போதும் எனக்கு உண்டு. நகர்ப்புற வாழ்வை அதனால் நன்றாக/நம்பகமாக சித்தரிக்க முடியும். ஆனால் அதற்கு வெளியே களங்கள் நகரும் போது வெளிப்படும் மெனக்கிடல்கள் அயர்ச்சியை தருபவை. சாமானிய மக்களின் வாழ்விலிருந்து இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் வெகுதூரம் விலகியிருக்கிறார்கள். ஒருபோதும் ஒன்று சேர முடியாத கண்ணாடி தடுப்பு அவர்களை மக்களிடமிருந்து பிரிக்கிறது. மனிதர்களை காட்சி பொருளாக ஆக்குகிறார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. ரஞ்சித் ஹோஸ்கோட்டே போன்றவர்கள் இந்த எல்லையை வெளிப்படையாக மேடைகளில் அங்கீகரித்தது உண்டு. ஆகவேதான் இந்திய மொழிகளின் ஆங்கில மொழியாக்கத்திற்கு பெரும் சந்தை உருவாகி வருகிறது. ஏனெனில் நகரங்களுக்கு வெளியே ரத்தமும் சதையுமாக வாழ்க்கை நிகழும் களம் இந்திய மொழி எழுத்தாளர்களால் தான் அதிகமும் எழுதப்படுகிறது.
‘பாதி இரவு கடந்துவிட்டது’ அவ்வகையில் வழமையான இந்திய ஆங்கில நாவல்களில் இருந்து மாறுபட்ட தனித்துவம் கொண்டவை. நாவல் சாமானியரின் வாழ்க்கையைத்தான் சித்தரிக்கிறது. ஆனால் அதிசயமாக கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பாதுகாப்பான தொலைவிலிருந்து மனிதர்களை அணுகவில்லை. சாமானியர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். ‘பாதி இரவு கடந்து விட்டது’ எனும் தலைப்பு கிளர்த்திய கற்பனையை தான் முதலில் சொல்ல வேண்டும். விடியலின் மீதான நம்பிக்கையா, அல்லது கரைந்து கொண்டிருக்கும் இரவின் மீதான ஏக்கமா? அல்லது இரண்டுமேவா?
நாவல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. விஸ்வநாத் எனும் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கை குறித்து எழுதும் நீள நீள கடிதங்கள் ஒரு பகுதி. பதிப்பகத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சகோதரனுக்கு, இறந்து போன மகனின் வெளிநாட்டு மனைவிக்கு, தனது மனைவிக்கு கடிதங்கள் எழுதுகிறார். அதுவரையிலான பிழை புரிதல்களை, பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவது தான் இந்த கடிதங்களின் பொதுவான பேசுபொருள். எழுத்து, எழுத்தாளர் தொடர்பாக விஸ்வநாத் முன்வைக்கும் பார்வை எனக்கு இணக்கமானவை. இந்த கடிதங்களின் ஊடாக ஒரு கதை நமக்கு சொல்லப்படுகிறது. எழுத்தாளர் விஸ்வநாத், அவரது மனைவி விமலா, சகோதரர் ஜெகன்நாத், அவரது தந்தை, அகால மரணமடையும் அவரது மகன் சுஷாந்த் ஆகியோர் இந்த கடிதங்களில் துலங்கும் பிரதான பாத்திரங்கள். தில்லியில் சமையல்காரராக இருக்கும் தந்தைக்கு தன் விஸ்வநாத் மீது தீராத குறை ஒன்றுண்டு. தன் மகன் பெரிய எழுத்தாளர் என்பதில் பெருமைதான் ஆனால் தந்தையின் சமையல் தொழிலை அவன் இழிவாக கருதினான் என்பதால் அதே தொழிலை கையில் எடுத்த இரண்டாவது மகன் மீது கூடுதல் பிரியம். விஸ்வநாத்தின் சிக்கல் என்ன? “என் வாழ்வில் பிரயோஜனமான சிலவற்றை நான் செய்திருக்கிறேன் என என்னை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. விவாதங்களில் உண்மையில்லை, எழுத்துக்களில் உண்மையில்லை, புகழ்ச்சிக்களில் உண்மையில்லை. எதிலுமே உண்மையில்லை.” அறுபதுகளின் இறுதியில் கோபக்கார இளைஞனாக லட்சியவாதத்தின் வீழ்ச்சியை கண்டு கொதிப்படைகிறான். தனது எழுத்து சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறான். அவனது கொந்தளிப்புக்களை கதையாக எழுதும்போது சமூகம் அவற்றை பகடி கதைகளாக வகைப்படுத்தி செரித்துக்கொள்ள முயல்கிறது. “இலக்கியம் வரலாற்றின் போக்கில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை- ஏனெனில் வரலாறானது ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மக்களினூடாக செயல்படுகையில் இலக்கியமானது ஒரு சமயத்தில் ஒரு மனித மனத்தினுள்ளேயே செயல்படுகிறது” என்பதை விஸ்வநாத் புரிந்து கொள்கிறார். கோபத்தையும் பழியுணர்வையும் இடுபொருளாக கொண்டு சமைத்த இலக்கியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
“பெரும்பாலானவர்களுக்கு சுயநலமாய் இருப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது, அதை அவர்கள் தவறிழைக்கப்பட்டதான - நிஜமான - எண்ணத்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.” தனது நீதியுணர்வு,அறவுணர்வு போலியானது. வஞ்சத்தால் உருவானது என்பதை ஒருவாறு புரிந்துகொள்கிறார் விஸ்வநாத். “ஒழுக்கவாதத்தினடிப்படையிலான கோபங்கள் ஒருவகையில் நியாயமற்றவை: உண்மையிலேயே நீங்கள் சரியான பக்கத்தில்தான் நிற்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதில் இருந்தும், ஒரு விஷயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நியாயங்கள் இருக்கக்கூடும் என நீங்கள் உணர்வதிலிருந்தும் அவை உங்களைத் தடுத்து விடுகின்றன” என்று எழுதுகிறார். இந்த நாவலும் கடிதங்களும் அவரது வயோதிகத்தில், மகனை இழந்த பிறகு எழுதப்படுபவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மகனின் மரணம் ‘நான் என்னை சரியானவனாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று’ என உணர்த்தியதன் விளைவே இவை. விஸ்வநாத் செய்த ஆய்வை திருடி பதிப்பித்த பேராசிரியருக்கு சீற்றம் கொண்டு பாதியில் கைவிடுகிறார். பின்னர் அரசு ஊழியராக தேர்வு பெறுகிறார். இவை பிழையான முடிவுகளாக அவருக்கு தோன்றின. “ஆனால் அவ்வப்போது என்னை கிளர்த்திய அந்த இறுமாப்புணர்வையும் ஒரு துரோகியை துரோகி என தைரியமாக அழைத்ததாக பிறர் என்னை புகழ்ந்தபோது நான் உணர்ந்த நீதியுணர்வையும் தாண்டி எனக்கு என்ன கிடைத்துவிட்டது?” எனும் கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்கிறார். “உலகின் தீமைகளை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம் என எவ்வாறு நம்ப முடிந்தது? நான் எப்படி அப்படி ஒரு குருடாக இருந்தேன்?” என தனது நம்பிக்கையை உடைத்து பார்க்கிறார். “வெறுப்பின் பிரதிகள் ஒருபோதும் மக்களின் இதயத்தை தொடமுடியாது. அன்பின் பிரதிகளால் மட்டும் தானே அதைச் செய்ய முடியும்.” எனும் முடிவுக்கு வருகிறார். எழுத்தாளராக பெயரும் புகழும் பெற்றிருந்தாலும் தன் வாழ்வின் மீது அவருக்கு தீராத வருத்தங்கள் இருந்தன. விஸ்வநாத் தனது வெளிநாட்டு மருமகளுக்கு எழுதும் கடிதத்தில் குர் அதுல்ஜன் ஹைதரின் நாவலில் இருந்து ஒரு பகுதியை சொல்கிறார். நபிகள் சூபிக்களின் தலைவரை தேர்ந்தெடுக்க வைக்கும் தேர்வில் ‘தனிமனிதர்களின் வெட்கக்கேடான குறைபாடுகளை அவர்களது சகமனிதர்களிடமிருந்து மறைப்பேன்’ எனும் பதிலை சொன்ன அலியை தலைவராக ஆக்குகிறார். இதுதான் இந்த நாவலின் மையமும் கூட. சாமானியர்களின் வாழ்வை, அவர்களது பலவீனங்கள் மீது தீர்ப்பெழுதாமல் பரிவுடன் அணுகுகிறது. ‘ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்’ எனும் செய்தியை தான் விஸ்வநாத் வந்தடைகிறார்.
எழுத்தாளர்களுக்கும், அறிவுத்தள செயல்பாட்டார்களுக்கும் எப்போதும் தாங்கள் செயல் வீரர்களாய் இருக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு உண்டு. தனது எழுத்தின் சமூக பெறுமதி என்ன என்றொரு கேள்வி அவர்களை அலைக்கழிக்கும். இத்தகைய கேள்வியை எதிர்கொண்டு விடைகாணும் முயற்சியாக விஸ்வநாத் எழுதும் நாவல் அன்பின், மன்னிப்பின், அரவணைப்பின் செய்தியை தாங்கி வருகிறது. துளசி தாஸரின் ராமாயணம் எழுப்பிய உணர்வின் நீட்சியாய் திகழ்கிறது. ராமனையும், லட்சுமணனையும் அனுமனையும் லட்சியங்களாக கொள்கிறது. இந்நாவல் தனது ஆழத்தில் ஒரு லட்சியவாத, கற்பனாவாத நாவல். ஜெயமோகன் தனது உரையில் குறிப்பிடும் லட்சியவாதத்தின் மீள் வருகையை குறிக்கும் பின்னை பின்நவீனத்துவ கூறுகளுக்கு இந்த நாவலை உதாரணமாக கொள்ள முடியுமா என்று யோசிக்கிறேன். எழுத்தாளரின் வாழ்வும் அவர் எழுதும் நாவலும் இணை வைக்கப்படுகிறது. தினாநாத் - திவான்சந்த் சகோதரர்கள் உறவும் விஸ்வநாத் ஜெகன்நாத் உறவும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. விஸ்வநாத் தன்முனைப்பும், சுயநலமும் கொண்ட எழுத்தாளராக, தனது பிற கடமைகளை சரிவர ஆற்றாதவராக தன்னை உணர்கிறார். தனது மனைவியாகவும் வாசகியாகவும் இருந்தவர் மகனுடைய அம்மாவாக ஆகும்போது எழும் இடைவெளியை நுட்பமாக பதிவு செய்கிறார்.
விஸ்வநாத் எழுதும் நாவல் குதா பக்ஷ் மாங்கே ராமை ரகசியமாக மல்யுத்த வீரராக பயிற்றுவிக்கும் பகுதியிலிருந்து தொடங்குகிறது. நவாபின் ஆஸ்தான பயில்வானாக பல ஆண்டுகளாக இருந்தவர் தனது சீடன் யூசுப் முகம்மதிடம் தோல்வி அடைந்தார். மாங்கே ராமை தயார் செய்வதன் வழி அவனை வென்றுவிட வேண்டும் எனும் முனைப்பு வெளிப்படுகிறது. அதேசமயம் மாங்கே ராம் தோற்றுவிடுவானோ எனும் அச்சமும் இருக்கிறது. ஆகவே அவனை போட்டிகளுக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்திருக்கிறார். போட்டியில் தோப்புக்கரணமும் தண்டாலும் தான் வழிமுறை. யார் இறுதிவரை தொடர்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். யூசுப்பை மாங்கே ராம் வெற்றிகொள்கிறான். தோல்வி அடைந்த யூசுப் மாங்கே ராமின் ஆசிரியராக ஆகிறான். வெற்றி என்பது எதிராளியின் வீழ்ச்சி அல்ல, மாறாக நீட்சி எனும் பார்வையை முன்வைக்கிறது.
நவாபிற்கு கடன் கொடுத்த லாலா மோதிசந்த் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவன். அவனோடு நவாபின் ஆஸ்தான பயில்வான் மாங்கே ராம் மோதுவதாக முடிவாகிறது. மாங்கே ராம் தோற்க வேண்டும் என்பதே நவாபின் விருப்பமாக இருந்தது. அதன்வழி கடன் சுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினார். ஆனால் நோஞ்சானாக இருந்த லாலாவை ஒரே அடியில் வீழ்த்துகிறான். நவாப்புகளும் மன்னர்களும் பின்னுக்கு சென்று புதிய அதிகார மையமாக வணிகர்கள் உருவாகிவரும் சித்திரத்தை நாவல் அளிக்கிறது. வென்றவன் தோற்றவனை தன்னோடு வருமாறு டெல்லிக்கு அழைக்கிறான். மல்யுத்த வீரன் மெல்ல மெல்ல லாலாவின் அணுக்க வேலைக்காரனாக மாறிப் போகிறான். அவனது வித்தைக்கு நகரத்தில் எந்த பொருளும் இல்லை. மல்யுத்த வீரனாக அனுமன் அவனுக்கு வலிமையின் சின்னமாக இருந்தார். ஆனால் லாலாவிடம் சேர்ந்த பிறகு சேவகத்தின், பக்தியின், பணிவின் சின்னமாக ஆகிறார். லாலா மற்றும் மாங்கே ராம் குடும்பங்களின் கதைதான் நாவல்.
லாலாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தினாநாத். லாலாவின் வணிகத்திற்கு சரியான வாரிசு. இளையவன் திவான்சந்த் தத்தளிக்கும் கவியுள்ளம் கொண்டவன். லாலாவின் மகள் முக்கியமான பாத்திரமாக துலங்கவில்லை. லாலாவிற்கும் லஜ்வந்தி எனும் பெண்னின் வழி திருமண உறவிற்கு வெளியே மக்கன்லால் என்றொரு மகனும் பிறக்கிறான். மக்கன்லால் தந்தையின் மீது அன்பு கொண்டவனாக வளர்கிறான். காலப்போக்கில் தந்தை குறித்து உண்மையை அறியும்போது அவரை வெறுக்கிறான். மார்க்சியம் அவனை ஈர்க்கிறது. ஆனால் களத்தில் போராடும் அளவு துணிவும் அவனிடம் இல்லை. திவான்சந்த் ராம சரித மானசில் தன்னை தொலைக்கிறான். அவனது குருவின் அழைப்பிற்கு செவிமடுத்து மகனையும் மனைவியையும் விட்டுவிட்டு காசிக்கு செல்பவன் தந்தையின் மரணப்படுக்கையின் போது துளசிபிரேம்ஜி எனும் துறவியாக திரும்புகிறான். தன் தாயின் மரணத்திற்கு தம்பி தான் காரணம் எனும் உணர்வு அண்ணனுக்கு கடைசிவரை இருந்தது. தம்பி திவானுக்கோ மூர்ச்சை அடைந்து கையறு நிலையில் கிடக்கும் லக்ஷ்மணனாக தன்னை கற்பனை செய்து கொள்வதை நிறுத்த முடியவில்லை. ராமன் அவனை ஏந்திக் கொள்ள வேண்டும் எனும் ஏக்கம் பீடித்திருந்தது அவனுக்கு. உறவுகளின் ஊடாட்டம் தான் இந்த நாவல். சகோதரர்களுக்கு இடையே பகைமை, சகோதரனின் மனைவி ஸ்வர்ணலதாவிற்கும் திவான்சந்துக்கும் இடையேயான அன்பும் வஞ்சமும் கலந்த உறவு, நிறைவேற வாய்ப்பே இல்லாத கமலாவின் காதல், திவான்சந்தின் இங்கிலாந்து வாசத்தில் அவனோடு உடனிருக்கும் ஆல்ப்ரெட் என பல சரடுகள் கொண்டதாக நாவல் விரிகிறது.
மாங்கே ராமின் கதை இன்னொரு சரடு. முதலாளியின் மீதான விசுவாசம் என்பதை தவிர அவன் விழுவது ஒரு படுகுழியில். சதேயி எனும் பணிப்பெண்ணுடன் சேர்ந்து கொள்கிறான். அதிகாரத்தில் திளைக்கிறான். தன்னை அவமானப்படுத்திய கணேஷியின் பதின்வயது மகளை கர்ப்பமாக்கி வஞ்சம் தீர்க்கிறான். முதிர்ந்து பலவீனமான பிறகு சொந்த மருமகளிடம் தவறாக நடக்கிறான். வெளியூருக்கு சென்று சொத்து குடும்பத்தை உயர்த்தியவர் என்பதால் அவரது மகன் பர்சாதிக்கு தந்தை மாங்கே ராம் ஒரு நாயகனாக தான் தெரிகிறான். தந்தைக்கு பிறகு குடும்பத்துடன் டெல்லிக்கு செல்கிறான். ஆனால் அவனால் தந்தையின் இடத்தை ஈட்ட முடியவில்லை.
இந்திய மைய நிலத்தின் ராம பக்தி நமக்கு சற்று அந்நியமானது. அங்கு ராமன் அடைந்திருக்கும் செல்வாக்கு துளசிதாசரால் உருவாக்கி அளிக்கப்பட்டது. வான்மீகி ராமாயணத்தை மக்கள் மொழியான அவுதி மொழியில் யாத்தவர் துளசிதாசர். ராமனை காந்தி தனக்கானவராக கண்டடைந்தது கூட துளசிதாசர் வழியாகத்தான். சீர்ஷேந்து முகோபாத்யாய ‘ராமன் வனவாசம் சென்ற வழி’ நூலில் துளசிதாஸரின் செல்வாக்கு குறித்து அளிக்கும் சித்திரமும் கூட அவர் அங்கு எப்படி சாமானிய மக்களின் கதைகளில் ஊடுருவியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது. சதேயி, லஜ்வந்தி என பலரும் இளமையில் தங்களது எல்லைகளை மீறியவர்கள் ராமனிடம் முழுமையாக சரணடைகிறார்கள். மானஸின் வரிகள், ஆங்காங்கு மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் இந்த நாவலுக்கு அடர்த்தியை சேர்க்கிறது.
உதாரணமாக இரண்டு கவிதைகளை சுட்ட வேண்டும். விஸ்வநாத் மேற்கோள் காட்டும் முநீர் நியாஜின் கவிதை, திவான்சந்த் வாசிக்கும் மாத்யூ அர்னால்டின் கவிதை..
நான் எல்லாவற்றையும் மிகத் தாமதமாக செய்கிறேன்
முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்றை, காப்பாற்ற வேண்டிய ஒரு சத்தியத்தை
ஒருவரை அனுப்பி வைப்பதில் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதில்
நான் எப்போதுமே தாமதமாயிருக்கிறேன்
ஒரு நண்பனுக்கு உதவுவதில், அவனுக்கு தைரியம் சொல்வதில்
தொன்மையான பாதைகளில் ஒருவரைச் சந்திக்க செல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
பருவ மாற்றங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைவதில்
ஒருவரை நினைப்பதில் ஒருவரை மறப்பதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மரணிப்பதற்கு முன் ஒருவரது துயரங்களிலிருந்து அவரைக் காப்பதில்
அவர்கள் நினைத்துக் கொண்டிருந்ததல்ல உண்மை எனச் சொல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மாத்யூ அர்னால்டின் கவிதை தனக்குள் ஆழ்வதற்கு திவான்சந்தை தூண்டுகிறது. அப்படித்தான் அவன் துளசிதாசரையும், ராமனையும் கொள்கிறான்.
இப்படியான உன் வருகைகள் ஒருபோதும் பலனளிப்பதில்லை
இப்போது நீ வா, நிஜமாகவே வா.
எனது கூந்தலை விலக்கி என் நெற்றியில் முத்தமிடு
என் கண்ணா- நீ ஏன் துயருறுகிறாய் எனச் சொல்!
சுபத்ரா செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்காங்கு களையப்பட கூடிய சிற்சில கவனப் பிழைகள் உள்ளன என்றாலும் அவை வாசிப்பிற்கு தடையாக மாறவில்லை. சொல்லாதே காட்டு எனும் பொது இலக்கிய விதிக்கு மாறாக, நாவல் ‘சொல்லப்படுகிறது’ என்பதே இந்நாவலின் எல்லை. படைப்பின் மீது படிந்திருக்கும் எதிர்மறை போலித்தனங்களை விட்டொழித்து வாழ்வின் மீதும், படைப்பின் மீதும் நன்னம்பிக்கையை மீட்டெடுத்தல் என்பதே நாவலின் மையமாக உணர்ந்து கொண்டேன். நாவலின் பல தருணங்கள், கதாபாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். விஸ்வநாத் கொள்ளும் அவநம்பிக்கைக்கு பதில் அவர் எழுதும் நாவலில் கிடைப்பதாக எனக்கு தோன்றியது. வாழ்வை பரிவுடன், கருணையுடன், நன்றியுடன், அன்புடன் அணுகி நோக்க முயல்கிறது. மக்கன்லாலுக்கும் உருது ஆசிரியருக்கும் இடையே நிகழும் உரையாடலின் ஒரு பகுதி இது (நாவலினுடைய ஓட்டத்திலிருந்து சற்றே விலகிய பகுதியாக தோன்றியது). “உண்மையில், செயலே பல சமயங்களில் சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் எதிரியாக இருக்கிறது. செயலில் இறங்க விரும்புகிற ஒரு மனிதன் அதற்கு முன்னதாக தனது மூளையை அமைதிப்படுத்த வேண்டும். இல்லையா? படகில் இருந்தபடி பீரங்கியை செலுத்த முடியுமா? சிந்திக்கிற மனிதன் ஒரு படகைப் போன்றவன். இல்லையா?உறுதியாக நின்று பீரங்கியின் அதிர்வை தாங்க முடியாதபடி எப்போதும் அசைந்து கொண்டே இருக்கின்ற ஒரு படகு. செயல் வீரர்கள் செயலில் இறங்கும் முன் தன்னைத்தான் கேள்விக் கேட்டுக் கொள்வதை நிறுத்தியே ஆகவேண்டும். ஆனால் எண்ணங்களின் மனிதன், நிச்சயங்களின் ஆபத்து குறித்து அறிதலும் அச்சமும் உடையவனாய் இருப்பதால் அவனால் கேள்வி கேட்பதை நிறுத்தமுடியவில்லை. ஆனால் செயல் வீரனாய் இருக்க முடியவில்லை என்பதற்காக உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளத் தேவையில்லை.”
Suneel Krishnan's Blog
- Suneel Krishnan's profile
- 5 followers
