பழைய தனிமையின் புதிய கதைகள்

தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் 

 

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அவருடைய ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ (யாவரும் பதிப்பக வெளியீடு) எனும் சிறுகதை தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான லட்சுமிஹர் படத்தொகுப்பில் ஆர்வம் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் பங்காற்றி வருகிறார். உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். மொத்தம் 12 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு அவரது நான்காவது சிறுகதை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 




முன்னுரையில் தனது கதைகளை ‘ட்ரான்ஸ் ரிஜிட் கதைகள்’  என வரையறை செய்கிறார். அவரளிக்கும் வரையறை என்பது ‘கதைகூறலின் ஒழுங்கின்மை தனக்கான வரைமுறைகளை வகுத்துக் கொள்கிறது’ என்பதாக உள்ளது. லட்சுமிஹரின் மொழி உரைநடை மொழி அமைப்பைவிட கவிதைக்கான மொழியமைவுக்கு (Syntax) நெருக்கமாக உள்ளது என்பதே அவரது பலமும் பலவீனமும் ஆகும். நில அளவையாளர் - அகழ்வாராய்ச்சியாளர் என எழுத்தாளர்களை இரண்டாக வகுக்கலாம் என  தோன்றும். யுவன் சந்திரசேகர்  ஒரு கதைக்கு ‘அகழ்வாராய்ச்சி’ என்று தலைப்பிட்டிருப்பார். இலக்கியமே ஒரு  அகழ்வாராய்ச்சி.  எல்லா இலக்கியவாதிகளும் அகழ்வாராய்ச்சியாளர் தான் என்று காண இடமுண்டு. உள்ளிருந்து அகழ்ந்து அரிய உண்மையை மீட்கும் முயற்சி. லட்சுமிஹரும் நேர்மையாக அதற்குத்தான்  முயல்கிறார் அகத்தை ஊடுருவி காணும் எழுத்துமுறைக்கு வலுவான சொற்கலன் இருப்பது அவசியம். மரபிலக்கிய கற்றல் வழி அந்த செழுமையை எட்டிய பிரமிளை ஒரு முன்மாதிரியாக சொல்லலாம். லட்சுமிஹரின் சிடுக்கான மொழியில் சில போதாமைகளை உணர முடிகிறது. மொழி மீதான ஆளுகை கூடுந்தோறும் அவரது படைப்புலகம் இன்னும் ஆழம் பெறும் என எண்ணுகிறேன்.  





லட்சுமிஹரின் கதை மாந்தர்கள் தனிமையில் உழல்பவர்கள்.  அவர்கள் தங்களைப் போன்ற சக தனியர்களை கதைகளின் ஊடாக கண்டு கொள்கிறார்கள். கரிசனமும் குரூரமும் மாறிமாறி ஒரு விளையாட்டை போல் நிகழ்கிறது. தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ கதையில்,  கதை சொல்லி பேபி எனும் கிழவியை தேவாலயத்தில் சந்தித்து தினமும் கதை  பேசுகிறான். ஒரு விளையாட்டு போல தேவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல் பத்திரங்களை எடுத்து வாசிக்க சொல்லுகிறார் பேபி. வேண்டுதல்கள்  ரகசியமானவை. அந்தரங்கமானவை. நோயுற்றிருக்கும் கதைசொல்லி அந்த வேண்டுதலை வாசித்து தொந்திரவுக்கு உள்ளாகிறான். வாழும் இச்சை அவனை இயக்கும் போது, மரணத்தை வேண்டுதலாக தேவனிடம் கோருபவரை சந்திக்க வேண்டும் என எண்ணுகிறான். அந்த வேண்டுதல் பேபியினுடையதாக அவனுக்குள் ஒலிக்கிறது. பேபியை தேடி வரும்போது அங்கே அவளுடைய அதே வடிவத்தை கொண்ட ஒரு அழுக்கு மூட்டை மட்டுமே எஞ்சியிருக்கிறது. வேண்டுதல் பத்திரங்களால் ஆன ஒரு அழுக்கு மூட்டையாக ஒரு மனிதர் உருமாறுகிறார் என்பதொரு விசித்திரமான ஆழ்மன வெளிப்பாடு. பேபி அவனை தவிக்கவிடுகிறார். உண்மையில் அவர் கரிசனம் கொண்டவரா அல்லது அவனை மாட்டிவிட்டாரா? இரண்டு சாத்தியங்களையும் இக்கதை அளிக்கின்றது. 



லட்சுமிஹரின் வெவ்வேறு கதை மாந்தர்கள் இத்தகைய வண்ண வேறுபாடுகளை கொண்டவர்களாக உள்ளார்கள். பேபியை போலவே வெவ்வேறு கதை மாந்தர்கள் சுவடின்றி வாழ்விலிருந்து மறைந்து போகிறார்கள். லட்சுமிஹரின் கதை மாந்தர்கள் இத்தகைய உதிரிகள் மீது பற்று கொள்கிறார்கள். அவர்களின் மீது கரிசனம் கொள்கிறார்கள்.  ‘கதவு சிறகு’ கதையில்  பறவை பார்த்தலுக்கு செல்லும்  கதைசொல்லிக்கு  அங்கு எப்போதும் வருபவரை பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது.  எல்லாவற்றையும் புகைப்படம்  எடுப்பவர். கடைசியாக காணும்போது கானகத்தின் மரத்தடியில் அமர்ந்து தனியாக அழுகிறார். அதற்கு பின் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கதைசொல்லி அவரைப் பற்றியே சிந்திக்கிறான். ‘எதன் பொருட்டு அந்த மனிதன் என்னிடம் இப்படித் தொற்றிக்கொண்டான் என்று தெரியவில்லை. எங்கோ கிடைத்த ஒன்றை இங்குவரை தூக்கிக்கொண்டு அலைவது எதனால்.’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். லட்சுமிஹரின் கதை மாந்தர்களின் பொது இயல்பு என்றே இதை சுட்ட முடியும். ‘ஆன் தி ராக்ஸ்’ இதே வரிசையில் வரும் இன்னொரு கதை. உடன் பணிபுரியும் பெண் கதை சொல்லியை கோவா திரைப்பட விழாவிற்கு அழைத்து சென்று ஒரு புதிய  ரசனையை அறிமுகம் செய்து வைக்கிறாள். அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் கதைசொல்லி திரைப்பட விழாவிற்கு செல்கிறான். ஆனால் அந்த ஆண்டோடு அவள் சுவடின்றி மறைகிறாள். ஏதோ ஒன்றை கையளித்து சுவடின்றி மறைபவர்கள் தேவதைகளா சாத்தானா எனும் குழப்பமே லட்சுமிஹரின் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி என தோன்றுகிறது. தொகுப்பின் தலைப்பு கதையான ‘கூத்தொன்று கூடிற்று’ இப்படியான ஒரு நிகழ்வை சித்தரிக்கிறது. பரபரப்பிற்கு நடுவே செயல் நேர்த்தி கொண்ட சற்றே விசித்திரமான பெண் ஒரு இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அவளுடைய தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாத அந்த கருவியை விளையாட்டுத்தனமாக கையாள்கிறாள். கதைசொல்லிக்கு அந்த கருவியை எப்படியாவது அவளிடமிருந்து கைக்கொள்ள வேண்டும் என்று அவா பிறக்கிறது. அதை விலை பேசுகிறான். பணத்தை தொடாமல் ‘வாசித்து காட்டி எடுத்துக்கொள்’ என அவன் முன் வைக்கிறாள். அது அவனை வெகுவாக சீண்டுகிறது. வாசிக்க தெரியாதவன் அந்த கருவியின் மீது ஏன் இத்தனை ஈடுபாடு கொள்கிறான்? அந்த கருவியை அவன் முன்னே வைத்துவிட்டு மறைகிறாள். அது அவனை கேலி செய்வதாக தோன்றுகிறது. படைப்பு செயல்பாடு குறித்த நுட்பமான அவதானிப்பு  கொண்டதாக இந்த கதையை வாசிக்க இடமுண்டு. 



இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை என ‘கூடார கரிசனம்’ கதையை சொல்வேன். ‘வேடிக்கையும் இன்னபிறவும்’ கூடார கரிசனத்தின் தொடர்ச்சி என சொல்லலாம். நாட்டார் தொன்மமும் நவீன வாழ்வும் இயையும் களத்தில் கதை நிகழ்கிறது.  அடைக்கலம் கொடுத்த குலத்தை, வந்து சேர்ந்த இனம்  விரட்டியடிக்கிறது. சென்றவர்கள் தங்கள் தெய்வம் குடியிருந்த ஆலமரத்தில் இருந்து அவளை சுமந்து செல்கிறார்கள். உங்களுக்கு கூரையில்லாம போகட்டும் என்று அவள் விட்ட சாபத்தை மக்கள் அஞ்சுகிறார்கள். கதைசொல்லி பெற்றோர்களின் ஓயாத சண்டையின் ஊடாக பால்யத்தை கழித்தவன். தற்கொலை செய்துகொண்ட அம்மாவின்  ஆசையை நிறைவேற்ற ஊருக்கு திரும்பி ஒரு மாடி வீடு கட்ட விரும்புகிறான். சாபத்தினால் விளையும் ஆபத்துக்களை எதிர்நோக்கி மக்கள் காத்து கொண்டிருக்கையில் அப்படி ஏதும் நிகழவில்லை. சிறுவனாக இருக்கும்போது அவன் அந்த தெய்வம் அகன்று சென்ற  பள்ளத்தில் விழுந்து உயிர்பிழைத்தவன் என்பதால் அவனை விதிவிலக்காக ஆலமரத்துக்காரி அனுமதித்து விட்டாள் என மக்கள் நம்பினர். வீடை கட்டி முடித்தவன் உள்ளே அவனது அம்மா அப்பாவின் சண்டைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதை  கேட்கிறான். ஊர்மக்கள் அவன்  வென்று விட்டதாக எண்ணும் போது, ஒருபோதும் திரும்புவதில்லை எனும் வைராக்கியத்துடன் வீடை பூட்டிக்கொண்டு கிளம்புகிறான். கூடார கரிசனம் உண்மையில் தரிசனமா அல்லது தண்டனையா என்றொரு கேள்வி எழுகிறது. நாம் விரும்பி கைக்கொள்ளும் விஷயங்கள் நம்மை வேறொரு வகையில் எப்படி சிறைபிடிக்கின்றன என்பதை தொடர்ந்து வெவ்வேறு கதைகளில் லட்சுமிஹர் எழுதி பார்ப்பதாக தோன்றியது.  



லட்சுமிஹரின் கதைகளை வாசிக்கும்போது அவரது கதைகளின் முதன்மையான பேசுபொருள் என்பது தனிமை என்று சொல்லலாம். இலக்கியத்தில் தனிமை என்பது புதிய பேசுபொருள் அல்ல. எனினும் சமகாலத்தில், உலகம் ஒரு வலைப்பின்னலாக இணைந்திருக்கும்போது இப்போது  உணரும் தனிமையும் வெறுமையும் சற்றே மாறுபட்டது. மிகைகளின், தேர்வுகளின் வெறுமை என சொல்லலாம். குணா கந்தசாமியின் ‘டாங்கோ’, வே.நி. சூர்யாவின் கவிதைகள் வரிசையில் இவரது கதைகளை வைக்கலாம். என் நோக்கில் நவீன இலக்கியவாதி தன்னை ஆட்கொள்ளும் கேள்வியை பின்தொடர்ந்து செல்வதன் விளைவே படைப்பு என்று கருதுகிறேன். இந்த பண்பே கேளிக்கை எழுத்துக்களில் இருந்து தீவிர இலக்கியத்தை தனித்து காட்டுவதாகும். மொழி, எழுது முறை போன்றவற்றை எழுத்தாளர்கள் வாசிப்பின் வழி பயின்று அடைய முடியும். அவ்வகையில் லட்சுமிஹர் தனக்கான தனித்த புனைவு மொழியில் கதைகளின் வழி தனக்கான கேள்விகளை பின்தொடர்கிறார் என்பதை முக்கியமாக காண்கிறேன்.


‘தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றினை முழுவதும் கற்பனை என்று என்னால் கூறிவிட முடியாது’ (கித்தானுடைய வண்ணப்பேழை) என்றொரு வரி அவரது கதைகளின் மையமாக எனக்கு தோன்றியது. இந்த விருது ஒரு தொடக்கத்தை அளிக்கும் என்று  நம்புகிறேன். சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்ற லட்சுமிஹருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 01:52
No comments have been added yet.


Suneel Krishnan's Blog

Suneel Krishnan
Suneel Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Suneel Krishnan's blog with rss.