காலைத் தொடுவேன் – நிதி சேகரிப்பு அனுபவங்கள்
காலைத் தொடுவேன் – (நிதி சேகரிப்பு அனுபவங்கள்)
அ.முத்துலிங்கம்
ஹார்வர்ட்
ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை ஆரம்பித்தபோது அந்தக்குழுவில் நானும் இருந்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் ஆரம்ப நிதி கொடுத்துதமிழ் இருக்கைக்கான சம்மதத்தை பெற்றுவிட்டார்கள். நிதியை பெற்றுக்கொண்ட அதிகாரியின்மனதில் என்ன இருந்தது என்பது ஒருத்தருக்கும் தெரியாது.
ஆறுமாதம் கழித்து அந்த மருத்துவர்களுடன் ஹார்வர்ட் அதிகாரியைபார்க்க நானும் சென்றேன். வரவேற்பு பெண் தன் நகத்தை பார்த்துக்கொண்டே எங்களை அமரச்சொன்னார். அமர்ந்தோம். யன்னல் வழியாக அன்றைய கடைசி வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. திடுக்கிட்டுநிமிர்ந்து எங்களை உள்ளே அனுமதித்தார். அதிகாரி இழுப்பறையை திறந்து கடந்த முறை கொடுத்தகாசோலையை வெளியே எடுத்தார். அவர் அதை வங்கியில் செலுத்தவே இல்லை. ஹார்வர்ட் தமிழ் இருக்கையின்மீது அவருக்கு நம்பிக்கையே கிடையாது. தமிழர்கள் ஒன்றுசேர்ந்து எப்படி ஆறு மில்லியன்டொலர்களை திரட்டப்போகிறார்கள் என்ற நம்பிக்கையீனம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.ஆனால் எப்படியோ அவருக்கு ஆறு மில்லியன் டொலர்கள் திரட்டிவிடுவோம் என நம்பிக்கையூட்டிசம்மதத்தை பெற்றோம். எதிர்பாராத விதமாக பணம் வந்து குவியத் தொடங்கியது. கனடா, சீனா,இந்தியா, அமெரிக்கா, இலங்கை, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தெல்லாம் பணம் வந்தது.ஒரு கட்டத்தில் ஆறு மில்லியன் டொலர்களை தாண்டிய பின்னரும் பணம் தொடர்ந்து வந்தது. ஒருபொது அறிவிப்பு வெளியிட்டு பணத்தை நிறுத்த வேண்டி நேர்ந்தது. என்ன பிரச்சினை என்றால்கொரியா நாட்டில் இருந்து ஒருவர் பத்து டொலர் அனுப்பினால் ஹார்வர்ட் அதற்கு ரசீது அனுப்பவேண்டும். கடிதத்தைதட்டச்சு செய்து ரசீதுடன் தபால் மூலம் அனுப்புவது முக்கியம். 10 டொலருக்கு ரசீது என்றால்அதை அனுப்பும் செலவு 15 டொலர். ஹார்வர்ட் நன்கொடைகள் அனுப்பவேண்டாம் என்று சொல்லி எங்களிடம் கெஞ்சவேண்டிநேர்ந்தது.
சிறைசென்றவர்
இந்த நிதி திரட்டலின்போது நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்கமுடியாது. தமிழ்நாட்டில் ஒரு சின்னக் கிராமத்தில் இளைஞன் ஒருவன் ஏதோ குற்றம் செய்து நாலு வருடம் சிறையில் இருந்தான். அவன் வெளியேறியபோதுஅவனுடைய உழைப்பு கூலியை சிறை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தார்கள். அவன் செய்த முதல் வேலைஅந்தப் பணத்தை ஹார்வர்டுக்கு அனுப்பியதுதான். எப்படியோ யாரையோ பிடித்து பணத்தை செலுத்திவிட்டான்.அவனுக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறது என்ற அறிவு கிடையாது. ஹார்வர்ட் என்ற பெயரை எப்படி எழுத்துக்கூட்டுவது என்றுகூடத் தெரியாது.தப்பாக எழுதினாலும் எப்படியோ பணம் வந்து சேர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகைஅவனை அணுகி எதற்காக பணம் அனுப்பினான் என்றுகேட்டது. அவன் ‘ஹார்வர்ட் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் வளராது. ஆங்கிலம்தான் வளரும். வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான்தமிழ் வளரும். அதுதான் பணம் அனுப்பினேன்’ என்றான்.
அவசரமாகஅழைத்தவர்
ரொறொன்ரோ பல்கலைக்கழகத்து தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியஅனுபவம் வேறுமாதிரி இருந்தது. ஹார்வர்ட் போல நிதி வேகமாக வராவிட்டாலும் முன்னேற்றம்திட்டமிட்டபடிதான் நடந்தது. மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. நாங்கள் நிதி திரட்ட பலவிதமானஉத்திகளை பயன்படுத்தினோம். ஒரு வருட காலத்தில் ஒரு மில்லியன் டொலர்கள் சேகரமாகிவிட்டது.பார்க்கப்போனால் அது ஒருவிதத்தில் வெற்றிதான்.
நான் ஒரு சமயம் பொஸ்டனில் இருந்தேன். அவசரமாக ஒரு டெலிபோன்அழைப்பு கனடாவிலிருந்து வந்தது. முன்பின் தெரியா ஒருவர் சொன்னார், ’தமிழ் இருக்கை முக்கியமானது.இதைப்பற்றி பேப்பரில் படித்து தெரிந்துகொண்டேன். நானும் இந்த முயற்சியில் பங்குபற்றுவேன்.உங்கள் குழு மிகவும் தாமதமாகவும், வேகமில்லாமலும் செயல்படுகிறது. எனக்கு விஜய் டிவியைதெரியும். சன் டிவியை தெரியும். ஓர் இரவுக்குள் என்னால் 50,000 டொலர்கள் திரட்டமுடியும்.உடனே வாருங்கள்’ என்றார்.
எனக்கு மகிழ்ச்சி சொல்லமுடியாது. பல தொலைபேசி அழைப்புகள்;பல மின்னஞ்சல்கள். கடைசியில் ஒருநாள் ரொறொன்ரோ உணவகம் ஒன்றில் சந்தித்து விரிவாகப்பேசி திட்டமிடுவதென்று தீர்மானித்தோம். நான் காத்திருந்தேன். முதலில் அவர் வந்தார். பின்னால் அதே உயரமான மனைவி; அதே பருமன். பின்னால் நாலு குழந்தைகள். பெரும் ஆரவாரமாகவும்,கூச்சலாகவும் இருந்தது. 50,000 டொலர் திரட்டி வைப்பதாக சொல்லியிருந்தார். அது பற்றியபேச்சே இல்லை. சந்திப்பு முடிந்ததும் கார் கண்ணாடி துடைப்பான்போல இரண்டு பேரும் ஒரேநேரத்தில் சாய்ந்து, ஒரே நேரத்தில் எழும்பி, ஒரே நேரத்தில் நடந்தனர். மேலும் மூன்றுவாரங்கள். மறுபடியும் சந்திப்பு. இது இப்படியே போனது. ஒன்றுமே பெயரவில்லை.
நாலு மாதங்கள் ஓடிவிட்டன. மதிய உணவுக்கு வழக்கம்போல சந்தித்தோம்.அவர் கழுத்திலே தடித்த சங்கிலி. என்னுடன் பேசுவதும், கையிலே கட்டியிருந்த அப்பிள் கடிகாரத்தில்செய்திகள் பார்ப்பதுமாக நேரம் ஓடியது. இது எங்கே போகிறது என்றே எனக்கு தெரியவில்லை.அன்று துணிந்து அவரிடம் கேட்டேன். ’உங்கள் நண்பர்களும், டிவி காரர்களும் பணம் தரும்போதுதரட்டும். நீங்கள் ஒரு நன்கொடை கொடுக்கலாமே. எவ்வளவு எழுதலாம் என்று நன்கொடை உறுதிப்பத்திரத்தை வெளியே எடுத்தேன். அவர் மிரண்டுவிட்டார். இதை எதிர்பார்க்கவில்லை என்றுநினைக்கிறேன். பெரும் யோசனைக்கு பின்னர் சொன்னார், ‘என்னால் 100 டொலர் கொடுக்கமுடியும்.இந்த மாதம் 50 டொலர்; அடுத்த மாதம் 50 டொலர்.’
நான் அன்றைய 8 பேரின் உணவுக்கான தொகை $162 ஐக் கட்டிவிட்டுவெளியேறினேன்.
அழகிப்போட்டி
சில வாரங்களுக்கு முன்னர் கனடாவில் உலகத் தமிழ் அழகிப் போட்டிநடந்தது. பல நாடுகளிலிருந்து தமிழ் பெண்கள் பங்கு பற்றினார்கள். இதில் முதலாவதாக வந்தது ஓர் இலங்கைப் பெண். அவருடையபெயர் தக்சிணி சிதம்பரப்பிள்ளை. அவருடைய நேர்காணல் ஒன்றை பார்க்க நேரிட்டது. நல்ல தமிழில்சொல்ல வந்த சொற்களை விழுங்காமல் நிதானமாகப் பேசினார். அவர் சொன்னது இதுதான். ’கனடாவில் என்னை ஆச்சரியப் படுத்தியது சி.என் கோபுரமல்ல;நயாகரா நீர் வீழ்ச்சியுமல்ல. கனடாவில் முதல் இடத்தில் இருக்கும் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைய இருக்கும் செய்திதான். என்னை இது மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது.உலக அழகிப் பட்டம் என்பது ஒரு வருடம்தான். ஆனால் இங்கே அமையப் போகும் தமிழ் இருக்கைஎன்றென்றும் நிலைத்திருக்கப்போகிறது என்பது எத்தனை பெருமையான விடயம். தமிழ் இருக்கைஅமைத்தவர்களின் நன்கொடை பட்டியலில் என் பெயரும்இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆகவே ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு என்னால் இயன்றசிறிய தொகையை நன்கொடையாக வழங்குகிறேன்.’ அவரைதமிழ் இருக்கை ஆச்சரியப் படுத்தியதுபோல அவருடைய செய்கையும் எங்களை ஆச்சரியப்படுத்தியது.அவருடைய தமிழ் பற்று மேலும் வளரட்டும்.
பத்துஏக்கர் செல்வந்தர்
பொது வாழ்க்கையில் நிதி சேகரிப்பவர்களுக்கு பல அவமானங்கள்நேர்ந்திருக்கின்றன. ஒரு நகரத்து மக்கள் பொது நீச்சல் குளம் கட்ட தீர்மானித்தார்கள்.வீடு வீடாகப் போய் அதற்காக பணம் சேர்த்தார்கள். ஒரு வீட்டில் போய் கதவைத்தட்டி பொதுநீச்சல் குளம் கட்ட உதவி என்று யாசித்தபோது வீட்டுக்காரர் உள்ளே சென்று ஒரு வாளி தண்ணீர்கொண்டு வந்து கொடுத்தார். இது மிகையல்ல, அடிக்கடி நடப்பதுதான்.
கனடாவின் அதிசெல்வந்தர்களில் ஒருவரிடம் அவரை சந்திப்பதற்குநேரம் வாங்கிவிட்டேன். இவர் சிறுவயதில் அகதியாக பெற்றோருடன் கனடாவுக்கு வந்தவர். அந்த வயதில் அவருக்கு தமிழ் அன்றி வேறு ஒரு மொழியும்தெரியாது. அவரை வகுப்பில் சேர்த்தபோது ஆங்கிலம் தெரியாததால் அவராகவே ஆசிரியரிடம் வேண்டிஒரு வகுப்பு கீழே இறங்கி படிப்பை தொடங்கியவர். ஆரம்ப தடங்கலைத் தாண்டி இங்கேயே படித்து முன்னேறி சொந்தமாக கம்பனி தொடங்கி மிகப்பெரிய செல்வந்தராக குறுகிய காலத்தில் உச்சத்தை அடைந்திருந்தார்.
அவருடைய வீடு பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. கேட்டுக்குவெளியே நின்று செல்பேசியில் அழைக்க அவர் அங்கிருந்தபடியே கேட்டைத் திறந்துவிட்டார்.வாசலிலே உள்ள காலநிலைக்கும் வீட்டின் எல்லையில்உள்ள கால நிலைக்கும் வித்தியாசம் இருக்கும் என்று சொன்னார்கள். அத்தனை பெரிய வீடு.நாலு பிள்ளைகள். ஒவ்வொருவரும் வீட்டிலே ஒவ்வொரு திசையில் இருந்தபடியால் ஒலிபெருக்கிமூலம் அவர்களுக்கிடையில் உரையாடல்கள் நடந்தன. அவருடைய மனைவி விருந்துக்கு புறப்பட்டவர்போலநீண்ட ஆடையணிந்திருந்தார். தேநீர் கொண்டுவந்தபோது பறவை சிறகடிப்பதுபோல அவருடைய ஆடைமடிந்து மடிந்து விரிந்தது அவருடைய நடைபோல அழகாயிருந்தது.
என்னைக் கேட்காமலே சீனி போட்ட தேநீரை அருந்தியபடியே நான்விசயத்தை சொன்னேன். அவர் அமைதியாக கேட்டார். இடைக்கிடை செல்பெசி அழைப்பு வந்தபோது அதைத் தடுத்து உரையாடலை தொடர்ந்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக்கேட்டபின்னர் ஒரேயொரு கேள்வி கேட்டார். ’என்னுடைய பிள்ளைகளுக்கு தமிழ் பேசவோ, எழுதவோதெரியாது. அவர்கள் ஆங்கிலமும், பிரெஞ்சும் படிக்கிறார்கள். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைவதால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ என்ன பிரயோசனம்?’ எனக்கு வாய் அடைத்துவிட்டது.’உங்களுடைய அம்மா உங்களை குழந்தையாக மடியில் கிடத்தி என்ன மொழியில் பேசினார்?’ என்றுகேட்டேன். அவர் தமிழ் என்றார். நான் வேறு ஒன்றுமே பேசவில்லை. விடைபெற்றுக்கொண்டு திரும்பினேன்.
ஒருசிறுமியும், மூன்று யுவதிகளும்
சிறுமியின் பெயர் நேயா. இந்தியாவிலிருந்து தன் பெற்றோருடன்சுற்றுலாப் பயணியாக கனடா வந்திருந்தார். உணவகத்தில் இவர்களைச் சந்தித்தேன். சிறுமிஇட்லி என்றார், பின்னர் மசாலா தோசை என ஊசலாடி இறுதியில் ஊத்தப்பத்தில் உறுதியானார். நான் ‘சலம் புணர் நேயா’ என்றேன். நான்அவரை திட்டினேன் என்று நினைத்தார். அவருடைய தகப்பன் மனதை மாற்றும் நேயா என்று பொருள்சொல்ல சிறுமி சமாதானமானார். தகப்பன் தமிழ்பற்றாளர். தமிழுக்கு பல நாடுகளில் நன்கொடைகள் வழங்கியிருக்கிறார். தமிழ் இருக்கை பற்றிகேள்விப்பட்டு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார். இந்தச் சிறுமியும் தன் பங்குக்கு50 டொலர் தந்து ரசீது தன்பெயருக்கு வரவேண்டும் என கட்டளையாகக் கேட்டுக்கொண்டார்.
முதலாம்இடம்
ரொறொன்ரோவில் வதியும் சரண்யா ஜெயகாந்தன் கல்விச் சபையின்(TDSB) கீழ்வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு தேர்வுகளில் முதல் இடம்பெற்ற நால்வரில் ஒருவர். இவருடைய பெற்றோர்யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்தவர்கள். சரண்யா மேல் படிப்பிற்காக வாட்டர்லூ பல்கலைக்கழகத்துக்குச்செல்ல இருக்கிறார். இவருடைய வெற்றியை பாராட்டிபலர் நேரில் வாழ்த்தினார்கள். சிலர் கடிதம் மூலம் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.ஓர் அன்பர் எதிர்பாராத பரிசுப் பொருளை வழங்கினார்.சரண்யாவின் பெயரில் அவர் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கினார்.
சாக்குத்துணிதாம்பூலப் பை
எனக்கு சாக்குத் துணியில் செய்த தாம்பூலப் பை ஒன்று கும்பகோணத்திலுள்ள சின்னக் கிராமத்திலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்தநான் ஆச்சரியப்பட்டேன். அதில் இப்படி அச்சடித்திருந்தது.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.
Tamil Chair Inc
University of Toronto, Canada.
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கும் தாம்பூலப் பையுக்கும்என்ன சம்பந்தம்? அதை அனுப்பியவரையே அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை,விளம்பரம்தான். கல்யாண வீட்டுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் பை வழங்கப்பட்டது. அவர் வாசகத்தைபார்ப்பார். அந்தப் பை வேறு ஒருவர் கையுக்குபோகும். அவரும் வாசகத்தை பார்ப்பார். இப்படி இந்தச் செய்தியை பத்தாயிரம் பேராவது படிப்பார்கள்’ என்றார். ஒருவாரம் கழித்து அதே வீட்டில் ஒரு தம்பதியரின்அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவும் நடந்தது. அந்த விழாவில் ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ்இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அந்த தம்பதியினரால் வழங்கப்பட்டது.
அந்த தம்பதியினரின் வீடு, ரொறொன்ரோவிலிருந்து 13,000 கி.மீட்டர் தூரத்தில் ஒரு சின்னக் கிராமத்தில்இருந்தது. இவர்கள் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தைபார்த்ததில்லை. அங்கே இவர்களுடைய சொந்தக்காரர் யாராவது படித்ததும் கிடையாது. இதனால் பெரிய புகழ் ஒன்றும் இவர்களுக்கு கிட்டப்போவதில்லை. இவர்களுக்கும் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே இல்லை, தமிழ் என்னும் மொழி தான். அறுபதுவயது தம்பதியினருக்கு இந்த நன்கொடையால் என்னபிரயோசனம்? பத்து ஏக்கர் வீட்டுக்காரருக்குஇதுதான் பதில்.
சுந்தர்பிச்சையை தெரியும்
சுந்தர்பிச்சையை எனக்குத் தெரியும்.
யார் அது?
இது என்ன? கூகிள் நிறுவனத்தின் தலைவர்.
ஓ, அவரா? எப்படித் தெரியும்?
என் பக்கத்து வீட்டுக்காரரின்மாமனாரும், சுந்தர் பிச்சையின் பெற்றோரும் சிநேகிதர்கள்.
எப்படி?
அவர்கள் பஜனைக்கு ஒன்றாகப் போவார்கள், வருவார்கள்.
அப்படியா?
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு 2 மில்லியன்டொலர்கள்.
அதனால் எனக்கு என்ன?
அவர் நினைத்தால் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டொலர் கொடுப்பார். அது அவருக்கு காசேஅல்ல.
அவருக்கு எத்தனையோ வேலை. இன்னும் எவ்வளவு பணம் சேர்க்கவேண்டும்.இதற்கெல்லாம் கொடுப்பாரா?
அப்படிவிட முடியாது. நான் மாமாவுக்கு இப்பவே எழுதுகிறேன்.ஒரு மில்லியன் டொலர் காசோலை வரும். அதற்கு நான் உத்தரவாதம்.
எப்படி வரும்?
கூரியரில்தான். நேராக ரொறொன்ரோ பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவிடுவார்.
எப்படி முகவரி கிடைக்கும்?
உலகத்துக்கே தேடுதலை சொல்லிக் கொடுத்தவர். அவருக்கு ஒரு முகவரிதேடுவதா பிரச்சினை?
நண்பர் சொன்னபடியே தன் மாமாவுக்கு எழுதிப்போட்டார். அவருடையமாமாவும் இதோ அதோ என்று சொன்னார். நினைவூட்டல்களும் அனுப்பினார். இ ப்பொழுதெல்லாம்நண்பர் கண்ணில் படுவதே இல்லை. நானோ நம்பிக்கை இழக்கவில்லை. யார் கண்டது? நான் எழுதிக்கொண்டிருக்கும்இந்த நேரம் கலிஃபோர்னியாவிலிருந்து காசோலை கிளம்பியிருக்கும்.
இருபெண்கள்
அவரை அடிக்கடி கூட்டங்களில் சந்தித்தேன். தங்கமலர் என்றுபெயர். எழுபது வயது இருக்கும். தமிழ் இருக்கைக்கு தான் பணம் சேர்க்கப்போவதாகச் சொன்னார்.சரி என்றேன். வாசலைக் கடந்ததும் மற்றவர்கள்போல மறந்துவிடுவார் என நினைத்தேன். ஒரு மாதம்கழித்து தொலைபேசி வந்தது. 5000 டொலர்கள் சேகரித்துவிட்டார். வீடு வீடாகப் போய் கதவுகளைத்தட்டி பணம் சேர்ந்திருந்தார். வெளிநாட்டில் இருப்பவர்களையும் டெலிபோனில் அழைத்து பணம்திரட்டியிருக்கிறார். நன்றி என்று சொன்னேன். அவர் சொன்னார், ‘ஐயா, தொடக்கத்தில் எனக்குநிறைய சிநேகிதிகளும் சில எதிரிகளும் இருந்தார்கள். இப்போ எதிரிகள் அதிகரித்துவிட்டார்கள்‘என்றார். ’நிதி சேகரிப்பவர் எல்லோருக்கும் நடப்பதுதான்’ என்று ஆறுதல் படுத்தினேன்.
இந்த சகோதரிகளின் பெயர்கள் ஆதினி மற்றும் மீனாட்சி. இவர்களுக்கு சிநேகிதி ஒருவரிடமிருந்து Bridal Shower ( மனப்பெண் நீராட்டு) நிகழ்வுக்குஅழைப்பு வந்திருந்தது. அழைப்பிதழில் பரிசுகள் வேண்டாம் என்ற வேண்டுகோள். ஆகவே இவர்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்தனர். மணமகள் பெயரில்ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.
இருவாசகர்கள்
பெயர் உதயகுமாரி. நல்ல வாசகர். எழுத்தாளர்களைத் தேடித்தேடிசந்திப்பார். இவரிலும் பார்க்க இவருடைய பிள்ளைகளின் தமிழ் பற்று நம்பமுடியாததாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் பெயர்களை தேன்மொழிஎன்றும் தமிழ்செல்வன் என்றும் தாங்களாகவே மாற்றிக் கொண்டவர்கள். ஒருநாள் உதயகுமாரிஎன்னிடம், ’தமிழ் இருக்கை நிதி இந்தமாதம் இலக்கைஅடைந்துவிட்டதா?’ என்று கேட்டார். நான் 8000 டொலர்கள் குறைகிறது என்று சொன்னேன். அவர்உடனே 8000 டொலர்களுக்கு ஒரு காசோலை எழுதி நன்கொடையாக வழங்கினார். அவர் பெரிய செல்வந்தர்அல்ல. ஆனால் ஒரு நிமிடம்கூட தயங்காமல் இந்த தானத்தை செய்தார்.
இதேபோல இன்னொரு ஆர்வமான வாசகர். அவருடைய பெயர் தனசேகரன் மகாலிங்கம். பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் உயர் பதவியில் இருக்கிறார். இவரை தொலைபேசியில்அழைத்து ரொறொன்ரோ தமிழ் இருக்கை பற்றி சொன்னேன். அமைதியாக நான் சொன்னதை கேட்டார்.’என்னால் ஆனதை முயற்சி செய்கிறேன்’ என்றார். வாக்கு கொடுக்கவே இல்லை. சில நாட்கள் கழிந்துரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு தொலைபேசி வந்தது. தனசேகரன் 1,845 டொலர்கள் அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள். இப்படி எதிர்பாராமல்பணம் வரும்; மிக எதிர்பார்த்த இடத்திலிருந்துஒன்றுமே பெயராது.
இளம்எழுத்தாளர்
நிதி சேகரிப்பு, வெற்றி தோல்விகள் நிறைந்ததுதான். முன்பின்தெரியாத ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை கேட்டிருந்தார்.முன்னுரை எழுதச் சொல்லி யார் கேட்டாலும் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். ஏன் என்றால்ஒரு முன்னுரை எழுதும் நேரத்தில் நான் மூன்று கட்டுரை எழுதிவிடுவேன். அத்துடன் ரொறொன்ரோபல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிது சேர்ப்பதில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தேன்.ஆகவே சில மணி நேரத்தை திருடித்தான் முன்னுரை எழுதவேண்டும். நான் எழுத்தாளரிடம் இப்படிச் சொன்னேன். ‘எப்படியும்நேரம் சம்பாதித்து முன்னுரை எழுதிவிடுகிறேன். நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?’ ‘சொல்லுங்கள்,ஐயா காத்திருக்கிறேன்.’ ‘ உங்கள் எழுத்திலிருந்துநீங்கள் தமிழ் பற்றாளர் என்பது தெரிகிறது.ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு உங்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஆதரவுதிரட்டமுடியுமா? எத்தனை சிறு நன்கொடை என்றாலும் பரவாயில்லை. அதை நேரே பல்கலைக்கழக வங்கிக்கணக்குக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றேன். மிக்க மகிழ்ச்சியுடன் ’செய்கிறேன், செய்கிறேன்’என்று உறுதியளித்தார்.
வாக்குக் கொடுத்தபடியே எழுத்தாளரின் புத்தகத்தை இருதரம் வாசித்துகுறிப்புகள் எடுத்து முன்னுரை எழுதினேன். நாலு தடவை திருத்தங்கள் செய்தேன். முன்னுரைதிருப்தியாக அமைந்ததும் எழுத்தாளருக்கு அனுப்பிவைத்தேன். அவரும் நன்றாக இருக்கிறதுஎன்று பாராட்டினார். அது மூன்று மாதங்களுக்கு முன்பு. பின்னர் புத்தகம் வெளிவந்துவிட்டதாககேள்விப்பட்டேன். என்னுடைய முன்னுரையினால் ஒரு பிரதிகூட அதிகமாக விற்காது என்பது எனக்குத்தெரியும்; ஒன்றிரண்டு குறைவாகக்கூட விற்றிருக்கலாம். எனக்கு ஒரு பிரதி அனுப்புவார்என எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் பல்கலைக்கழகத்தை அழைத்து இன்னார்பணம் அனுப்பினாரா என்று கேட்பேன். அவர்கள் இல்லை என்பார்கள். அது ஆறுமாதம் முன்னர்.இப்பொழுது கேட்பதை நிறுத்திவிட்டேன்.
இசையமைப்பாளர்இமான்
ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில்எங்களுக்கு உதவியவர்களில் என்னால் என்றும் மறக்க முடியாதவர் இசையமைப்பாளர் இமான்.இவர்தொடர்ந்து ஈழத்து கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார். முதலில் ’செந்தூரா’ பாடல் கொடுத்துலட்சுமி சிவனேஸ்வரலிங்கத்தை உலகம் வியக்கும் பாடகியாக்கினார். பின்னர் ஸ்ருதி பாலமுரளிக்கு’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் வயலின் வாய்ப்புவழங்கினார்.
ஆனால் நான் சொல்ல வந்த விசயம் வேறு. வெளிநாட்டிலிருந்து இசைக்கலைஞர்களைகனடாவுக்கு வருவிக்கும்போது செலவுகள் எக்கச்சக்கமாக ஏறிவிடுகின்றன. பல நேரங்களில் வருமானத்திலும்பார்க்க செலவு அதிகமாகிவிடுவதால் பெரும் நட்டம் ஏற்படுகிறது. ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்குஅடையாளமாக இருக்கவும், நிதி சேகரிக்கும் வேலையை இலகுவாக்கவும், ஒரு கீதம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டோம். முதலில்பாடல் எழுதுவதற்கு நான் யுகபாரதியை அணுகிணேன். 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு ரோட்டோரக்கடையில் நாங்கள் இருவரும் சீனிபோடாத தேநீர் அருந்தியிருக்கிறோம். அது ஒன்றுதான் எங்களுக்கானதொடர்பு. உடனேயே பாடல் எழுத ஒப்புக்கொண்டார். கனடிய நண்பர் ஒருவர் இமானை கீதம் அமைக்ககேட்டுக்கொண்டார். பாட்டை சுப்பர் சிங்கர் திவாகர் பாடினார். பாடல் தயாரான பின்னர்அதை வெளியிட இமான் கனடா வரவேண்டும். ஆனால் அதற்கு கொடுப்பதற்கு எங்களிடம் பணமில்லை.இமான் தன் செலவிலே கனடாவுக்கு பயணம் செய்தார். அவர் செலவிலேயே ஹொட்டலில் தங்கி இசையைவெளியிட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எங்களுக்கு ஒருசதம் செலவு வைக்கவில்லை. என்பொது வாழ்க்கையில் இப்படியான ஒரு நல்ல உள்ளத்தை நான் கண்டதே கிடையாது. அவருடைய தமிழ்பற்று அசரவைத்தது. அவர் நெடுநாள் வாழ்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்.
அறிஞர்போற்றுதும்
எஸ்.ஆர்.வி பள்ளி (திருச்சி) பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான பள்ளிக்கூடம். இவர்கள் வருடாந்தம் பிரம்மாண்டமான விருதுவிழா எடுப்பார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ’அறிஞர் போற்றுதும் 2019’ விழாவுக்குவரும்படி தலைவர் துளசிதாசன் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு, சு.வெங்கடேசன் M.P, Dr. P.S. மகாதேவன், உமா மகேஸ்வரிஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பிதழை பார்த்த நான் திகைத்துவிட்டேன். ’கனடா டோரண்டோபல்கலைக்கழக தமிழ் இருக்கை விருது’ என்று எழுதியிருந்தது. விருதுப்பணத்தை பெறுவதற்குநான் போயே ஆகவேண்டும். எத்தனை பேர் வருவார்கள் என்று விசாரித்தேன். 7000 பேர் என்றார்.நான் பேசிய ஆகப்பெரிய கூட்டத்தில் சபையோரின் எண்ணிக்கை 70 தான். வீடியோப் பேச்சை அனுப்பிவைக்கலாமா என்றேன். சரி என்றார்.
விழா சிறப்பாக முடிந்தது. பத்திரிகை செய்திகளை நண்பர் அனுப்பிவைத்தார்.என் சார்பாக எழுத்தாளர் இமையம் விருது பெற்றுக்கொண்டார். ஆனால் பணம் வரவில்லை. இந்தியாவிலிருந்துவெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதில் இருக்கும் சிரமம் பலருக்கும் தெரியும். பணம் எங்கேஎன்று கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது. ஒருவாரம் சென்று ரொறொன்ரோ பல்கலைக்கழக அதிகாரிஎன்னை அழைத்து டொலர் 9,233 வந்து சேர்ந்த நற்செய்தியை சொன்னார். தலைவர் துளசிதாசனின் நல்ல உள்ளத்தை நெகிழ்வுடன்நினைத்துக்கொண்டேன்.
பத்துவயதுச் சிறுமி
சிறுமியின் பெயர் ஆதினி பார்த்திபன். தன்னுடைய பத்தாவது வயதுபிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிடைத்த அத்தனை பணத்தையும் (ஏறக்குறைய 1000 டொலர்கள்) ரொறொன்ரோபல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வழங்கத் தீர்மானித்தார். அப்பொழுது ஒரு பெரியவர் சிறுமியிடம்’எதற்காக தமிழ் இருக்கைக்கு கொடுக்கவேண்டும். வேறு ஏதாவது நல்ல தர்மத்துக்கு கொடுக்கலாமே?’என்றார். அந்தச் சிறுமி ’நான் பிறந்து வளர்ந்தது கனடாவில். இங்கேதான் தமிழ் படிக்ககற்றுக்கொள்கிறேன். என்னுடைய மொழிக்கு ஓர் இருக்கை கனடாவில் முதல் இடத்தில் இருக்கும்பல்கலைக்கழகத்தில் அமைவது எத்தனை பெருமை. இதனிலும் சிறப்பான ஒரு நன்கொடை பற்றி என்னால்சிந்திக்கவே முடியாது’ என்று பதில் கூறினார்.
சந்தைப்படுத்தல்
ஒருநாள் தமிழ் இருக்கைக்கான telemarketing ரொறொன்ரோ பல்கலைக்கழகவளாகத்தில் நடந்தது. 25 பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தொலைபேசி முன் அமர்ந்து ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்முன்னாட்களில் படித்தவர்களை அழைத்து தமிழ் இருக்கைக்கு நன்கொடை யாசித்தனர்.எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழ் இருக்கை பற்றி அவர்களுக்குஅறிமுகம் செய்வதற்காக நான் அங்கே சென்றிருந்தேன். அவர்கள் பேசாத ஒரு மொழிக்காக அவர்கள்அப்படி உளமார உழைத்தது என்னை நெகிழவைத்தது. அன்று அவர்கள் 53 பழைய மாணவ மாணவியரிடம் 2,770 டொலர்கள் திரட்டியிருந்தனர். ‘ஒரு மாணவியிடம்ஏன் இந்த தொண்டு வேலையை செய்கிறீர்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாகவாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால் அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’ அந்த நொடியில் என் கண்களை அவர் திறந்துவிட்டார். அதுவரைக்கும் நான் தமிழ் இருக்கைஅமைவதால் தமிழுக்குத்தான் பெருமை என நினைத்திருந்தேன்.
காலைத்தொடுவேன்
தமிழ் இருக்கைக்கு இணையம் வழியாக பணம் அனுப்புபவர்களின் எண்ணிக்கைசிறிது சிறிதாக அதிகரித்தது. ஒரு முறை பணம் அனுப்பியவர்களின் பட்டியலைப் பார்த்தபோதுமுன்பின் தெரியாத ஒருவர் 50 டொலர் அனுப்பியிருந்தார். ஏதோ உந்துதலில் அவரை தொலைபேசியில்அழைத்து பேச்சுக்கொடுத்தேன். அவர் தன் அனுபவத்தைசொன்னார். முதல் நாள் அரைமணி நேரம் முயற்சி செய்தும் பணம் போகவில்லை. அடுத்த நாள் வேறொருகடன் அட்டை வழியாக பணத்தை அனுப்ப முயன்றார். அப்பொழுது பணம் போகவில்லை. விரக்தி மேலிடரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அழைத்து பிரச்சினையை சொன்னார். அவர்கள் வழிகாட்ட இவர் ஒருவாறு50 டொலர் காசை கடனட்டை மூலம் செலுத்திவிட்டார்.
இத்தனைக்கும் எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. அவருடையபெயர் ஆனந்த் மன்னா என்று இருந்ததால் என் சந்தேகத்தை கேட்டேன். ’நீங்கள் தமிழரா?’ அவர்’இல்லை, நான் தெலுங்கு பேசுபவன்’ என்றார். ’நீங்கள் தமிழ் பேசுவீர்களா?’ அவர் தனக்குதமிழ் பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது என்றார். ஆச்சரியமாயிருந்தது. ’எதற்காக தமிழ்இருக்கைக்கு இரண்டு நாட்கள் விடாப்பிடியாக முயன்று பணம் கட்டினீர்கள்?’ அவர் சொன்னார், ’தமிழ் மிகப் பழமையானது. இந்தியமொழிகளில் அரிய இலக்கியங்களைக் கொண்டது. தமிழுக்கு ஓர் இருக்கை அமைந்தால் அது இந்தியர்களுக்குபெருமைதானே.’ என்னால் நம்ப முடியவில்லை. உணர்ச்சி பெருகி என் குரல் தழுதழுத்தது. நான்சத்தமாக, ’அன்பரே, உங்களை எங்காவது வழியில் சந்தித்தால் நான் உங்கள் காலைத் தொடுவேன்’ என்றேன். என் மனைவிக்குஅது கேட்டுவிட்டது. ‘யார்? யார்? எதற்காக காலைத் தொடவேண்டும்?’ என்று பக்கத்தில் வந்துவிட்டார்.அவருக்கு தெரியும் நான் ஒருவர் காலையும் தொட்டது கிடையாது. நான் நடந்ததை சொன்னேன்.முழுக்கதையையும் கேட்டுவிட்டு ‘தொடலாம்’ என்று தீர்ப்பு வழங்கினார்.
END
A. Muttulingam's Blog
- A. Muttulingam's profile
- 43 followers
