ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                     ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                          அ.முத்துலிங்கம்

புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadnessof Geography. புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் நாவல் ஒன்றில் வரும்  வரியை தலைப்பாக ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார். புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்கிடையில் அதன்ஆசிரியரைத் தேடி  தொடர்பு கொண்டேன். ஓர் உணவகத்தில்சந்தித்தோம்.  முதல் ஐந்து நிமிடத்தில் நான்அவரிடம் கேட்ட  கேள்வி ‘ஏன் நீங்கள் புத்தகத்தைதமிழில் எழுதவில்லை?’ அவர் திகைத்து விட்டார். ஒருவரும் அவரிடம் அப்படியான கேள்வியைகேட்டிருக்கமாட்டார்கள். அவர் சொன்னார், ‘நான் இங்கே ஆங்கிலத்தில்தான் படித்தேன். ஆங்கிலத்தில்தான்சிந்தித்தேன். ஆகவே அந்த மொழியில் எழுதினேன்.’ ‘நீங்கள் கனடாவுக்கு வந்தபோது உங்கள்வயது 19. தமிழிலேயே படித்திருந்தபடியால் உங்களுக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது.எப்படி இது சாத்தியமாயிற்று?’ அவர் சொன்னார், ’என்ன செய்வது? 32 வருடங்கள் தமிழ் பேசவும்இல்லை. படிக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.  மறந்துவிட்டது, அதுதான் ஆங்கிலத்தில் எழுதினேன்.’

நூலை எழுதிய ஆசிரியருடைய பெயர் லோகதாசன் தர்மதுரை. வசதிக்காகஇனிமேல் அவரை தாசன் என்றே அழைப்போம். அவர் எழுதிய புத்தகத்தின் பெயரை சிலர் ’நிலவியலின்துயரம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ  ’நிலங்களின் துயரம்’ பொருத்தமானது  போலத் தோன்றுகிறது. இது நாவல் இல்லை; சுயசரிதையும்இல்லை. ஒருவரின் வாழ்க்கை குறிப்புகள் என்று வைத்துக்கொள்ளலாம். யுத்தகாலத்தில் ஓர்இளைஞன் யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டு பல நாடுகளில் அலைந்து, அல்லலுற்று இறுதியாக16 மாதங்களுக்கு பின்னர் கனடா போய்ச் சேரும் கதை. இதில் கற்பனை கிடையாது. உண்மையாகநடந்த சம்பவங்களின் தொகுப்பு. ஒரு யுத்த காலகட்டத்தை அப்படியே பதிவு செய்திருப்பதால்இதை ஒரு காலத்தின் வரலாறாகவும் பார்க்கலாம்.

இலங்கையில் போர் நடந்தபோதும், அது முடிந்த பின்னரும் பலர்ஆங்கிலத்திலும், தமிழிலும் போர் இலக்கியங்கள் படைத்தனர். சிலதை போராளிகளே எழுதினார்கள்.சில நூல்கள் புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டன. ஆசிரியர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியைநினைவுக் குறிப்புகளாக பதிந்துள்ளார். இவருடைய  பதின்ம  வயதில்நடந்த சம்பவத்துடன் கதை தொடங்குகிறது.  அவருடையபடிப்பு, போரினால் ஏற்பட்ட இன்னல்கள்,  வெளிநாட்டுப்பயணங்களில் சந்தித்த அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள்  என கதை விரிந்து கனடா போய் சேர்வதுடன் முடிவுக்குவருகிறது.  கனடாவில்   தாசன்  32 வருடங்கள் வாழ்ந்தாலும் அவரால் பழைய  வாழ்க்கையை மறக்கமுடியவில்லை. ராணுவம் சித்திரவதைசெய்கிறது, சிறையில் அவதிப்படுகிறார், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள். இப்படி கொடூரமானகனவுகள் தினம் அவரை துன்புறுத்தின. இறுதியில் பழைய ஞாபகங்களை எழுதுவதன் மூலம் இந்தஇம்சையை கடக்கலாம் என முடிவு செய்கிறார். ஏதோ  உந்துதலில்  ஒரு வருடம் முழுவதும் வேலையை துறந்து வீட்டிலே உட்கார்ந்துநூலை எழுதி முடிக்கிறார். இவர் நாள் குறிப்பு எழுதுகிறவர் அல்ல. அபாரமான ஞாபக சக்திஉள்ளவர்  என்பதால் அவரால் ஒவ்வொரு சிறு தகவலையும்மீட்க முடிகிறது. ஒரு சம்பவத்தை குறைத்தோ, கூட்டியோ, மறைத்தோ சொல்லவில்லை. வாசகர்களால்ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் உள்ளதை உள்ளபடியே எழுதியதுதான் என்று நினைக்கிறேன்.

இந்த நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றியதை ஆசிரியரிடம் கேட்டேன்.’ஆங்கிலம் தெரியாமல் தனி ஆளாகப் படித்து,  நாள்கூலியாகவேலை பார்த்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் பாதியை வீட்டுக்கு அனுப்பி, பரீட்சையில்வெற்றி பெற்று,  வேலையில் படிப்படியாக உயர்ந்து,இன்று 32 வருடங்கள் கடந்து Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிப்பது  எத்தனை பெருமைக்குரிய விசயம். உங்களுடைய கனடா வாழ்க்கை அனுபவத்தை எழுதினால் பலர் பயன்பெற வாய்ப்புண்டு.இந்த நூலும் முழுமை பெறும். எழுதுவீர்களா?’ புன்னகை செய்தார். அதன் பொருள் என்ன? எழுதுவார்என்றுதான் நினைக்கிறேன்.

இந்நூலில் பல பகுதிகள் திகைப்பூட்டுவனவாகவும், இப்படியும்நடக்குமா என்ற கேள்வியை எழுப்புவனவாகவும், நெஞ்சை துணுக்குற வைப்பனவாகவும் இருக்கின்றன.முழுநூலை இங்கே சொல்லப்போவதில்லை. ஒன்றிரண்டு இடங்களை சுவாரஸ்யம் கருதி சொல்லலாம் எனநினைக்கிறேன்.

ஆரம்பமே திகிலுடன்தான் இருந்தது. அப்பொழுது தாசன் பதின்மவயதுச் சிறுவன்.  அதிகாலை பெரும் கூக்குரல்கேட்டு சட்டென்று விழித்து  திடீரென்று திசைதெரியாமல் ஒரு பக்கமாக ஓடுகிறான். ராணுவம் ஊரை சுற்றி வளைத்துவிட்டது. ஒரே கூச்சலும்குழப்பமுமாக இருக்கிறது. வயலில்  அவன் உயரத்துக்குமேல் வளர்ந்து நிற்கும் நெற்கதிருக்குள்  ஓடிஒளிந்து கொள்கிறான். ராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்களும் ஆட்களை துரத்திப் பிடிக்கும்கூச்சலும், அதிகார கட்டளைகளும் கேட்கின்றன. ஒரு ஹெலிகொப்டர் இவனை நோக்கி மிகப் பதிவாகபறந்து வருகிறது. சேற்றுக்குள் போய் புதைந்து கொள்கிறான். இன்னொரு தடவை வட்டமடித்துவந்து ஹெலிகொப்டர் அவனை தேடிவிட்டு போகிறது. மாலையாகிறது. அன்று முழுக்க ஒன்றுமே உண்ணவில்லை,குடிக்கவும் இல்லை. இருட்டியதும் ராணுவம் போனபின்னர் வீட்டுக்கு திரும்புகிறான்,

ஒன்றிரண்டு சம்பவங்களை கடந்து போகவே முடியவில்லை. சிறுவனாயிருக்கும்போதேதாசனை பள்ளிக்கூட விடுதியில் பெற்றோர் சேர்த்துவிடுகிறார்கள். ஒரு முறை விடுமுறையைவீட்டிலே கழிப்பதற்காக தாசன் தனியாக விடுதியிலிருந்து  புறப்படுகிறான்.  இவன் ஏறிய ரயில் வண்டியில் எதிர்பாராத விதமாக சிங்களராணுவக்காரர்கள்  உட்கார்ந்திருந்தார்கள். இவன்ஒதுங்கிப் போய் ஒரு மூலையில் அமர்ந்தான். ஒருத்தன் வந்து இவனை எதேச்சையாகத் இடிப்பதுபோலதொட்டான். இவன் உடல் சுருங்கி மறுபக்கம் திரும்பியது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் அதை அவமானமாக எடுத்துக்கொண்டான். ராணுவக்காரன் தன் கைகளை இவனுடைய கால் சட்டைக்குள் நுழைத்தான்.அத்தனை ராணுவத்தினர் முன்னிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான். வெட்கம்,கோபம், துயரம் ஆகிய உணர்ச்சிகள்  மேலிட வீட்டுக்குஓடியவன்  இந்த சம்பவம் பற்றி ஒருவருக்கும் மூச்சுவிடவில்லை. முதன்முதலாக இந்தப் புத்தகத்தில் தான் அது பற்றி எழுதப்பட்டிருக்கிறது.  வீட்டுக்குப்போனபின்னர்  ஓர் எண்ணம் முளைவிட்டது. எப்படியும்நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

தாசனுடையதகப்பன் நகைக்கடை உரிமையாளர். மிகப் பெரிய செல்வந்தர். கிராமத்திலே அவருக்குத்தான்முதல் மரியாதை. எந்தக் கடைக்குப் போய் என்ன பொருள் வாங்கினாலும் விலை கேட்கமாட்டார்.கடைக்காரன் சொல்லும் விலைக்கு காசுத் தாள்களை நீட்டுவார். மீதிப்பணத்தை வாங்கமாட்டார்;வாங்கினால் அது கௌரவக் குறைச்சல் என்று நினைப்பவர்.  ஒருநாள் சிறுவன் தாசன் தரையில் படுத்திருக்கிறான்.விடிந்துவிட்டது, யாரோ தரையை குனிந்து கூட்டும் சத்தம் கேட்டு  விழிக்கிறான். ஓர் இளம் பெண் அவனை எழுப்பாமல் அவன்படுத்திருந்த இடத்தை சுற்றி விளக்குமாற்றால் கூட்டியபடி நகர்கிறாள்.  தாயாரிடம் ஓடிப்போய் யார் இது என்று சிறுவன் கேட்கிறான்.தாயார் ‘நேற்று இரவு உன் அப்பா கூட்டி வந்தார்’ என்கிறார். சிறுவனுடைய இரண்டாவது அம்மாஇப்படித்தான் அவனுக்கு அறிமுகமாகிறார். ’ஏன் எனக்கு இன்னொரு அம்மா. ஒரு அம்மா  போதுமே’என்று சிறுவன் குழம்பிவிடுகிறான்.

இப்படிஅதிர்ச்சி தரும் சம்பவங்கள் பல.  தாசனின் அப்பாவுடையநகைக்கடையில் வியாபாரம் நின்றுவிட்டது. போர் நடக்கும்போது யார் நகை வாங்க வருவார்கள்?வருமானம் இல்லை, கையில் காசு இல்லாததால் வீட்டில் எந்நேரமும் சண்டை. தாசனின் அப்பாகாலை மாலை என்ற வித்தியாசம் இல்லாமல்   குடிக்கஆரம்பித்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு வராததால் தாசன் அவரை தேடிப் போனான்.  பெரியம்மா  முறையான ஒருவர் வீட்டில்  அவனுடைய அப்பா குடிவெறியில் தரையில் கிடந்தார். அவரைதூக்கி வர முயன்றபோது கையை வீசி பலமாக முகத்தில் அடித்தார். தாசன் நிலைதடுமாறி நிலத்திலேவிழுந்துவிட்டான். கிராமத்துப் பெரிய மனிதர் கிடந்த நிலையை பார்த்து தாசனுக்கு அவமானமாகப்போனது. பக்கத்தில் கிருமி நாசினி போத்தல் இருந்ததால் அதை எடுத்து அப்படியே குடித்துவிட்டான்.மயங்கி கீழே விழும்போது அவன் சிந்தனை ‘அப்பாவுக்கு நல்ல பாடம் படிப்பித்துவிட்டேன்’என்பதாகவே இருந்தது. உடனேயே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனதால்  ஒருவாறு தாசன்  உயிர் பிழைத்தான்.  இதன் பின்னர் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில்பெரிய பிளவு ஏற்பட்டது.

தகப்பனைப் பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்றையும் தாசன் பதிவுசெய்கிறார். தாசனுடைய அண்ணன் லண்டனிலிருந்து இந்தியா போயிருக்கும் செய்தி அவருடைய அப்பாவுக்குகிடைக்கிறது. மகனை எப்படியாவது சந்திக்கவேண்டும் என்று தகப்பன் விருப்பப்படுகிறார்.தாசன் அப்போது கனடாவில் இருக்கிறார். போர் மும்முரமாக நடந்த சமயம் என்றாலும் தகப்பன்இந்தியா போகவேண்டும் என அடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் ஒரு போராளிக்குழுவின்படகில் ஏறி இந்தியா போகிறார். அவருடைய கெட்ட காலம் இலங்கை கடல்படை  படகை சுட்டு வீழ்த்துகிறது. தகப்பன் படு காயத்தோடுமன்னார் தீவு  கடற்கரையில் அனாதரவாகக் கிடந்தபோதுஅந்த வழியால் போன  பாதிரியார் ஒருவர் அவரை காப்பாற்றுகிறார்.

பயணத்தை மேலே தொடர்ந்து மகனைப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதமாகநிற்கிறார் தகப்பன். இவருடைய கடைசி மகன் இவரை மறுபடியும் போராளிக் கப்பல் ஒன்றில் ஏற்றிஅழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் போய்ச் சேருகிறார். அங்கே  உடல் நிலை மேலும்  மோசமாகி தகப்பன் இறந்துவிடுகிறார். சிறுவன் உதவியில்லாமல்அந்நிய நாட்டில் தவித்துப்போகிறான். அவனிடம் பிணத்தை புதைக்கக்கூட காசு இல்லை.  ஒரு காலத்தில் சாவகச்சேரியில் மிகப் பிரபலமான நகைக்கடையின் முதலாளியாக அறியப்பட்டவர்  ராமேஸ்வரத்தில் அடையாளம் இல்லாத கிடங்கில் அனாதையாகஅடக்கம் செய்யப்பட்டார்.

இங்கிலாந்திலிருந்து தாசன் புறப்பட்டு கனடாவின் மொன்ரியல்நகரத்தை அடைந்த  சம்பவ வர்ணனை திகில் நிறைந்தது.இப்படியும் நடக்குமா என்று ஒவ்வொரு வரி படிக்கும்போதும் சந்தேகம் தோன்றிக்கொண்டே இருந்தது.பிரான்ஸ் நாட்டில் ஒரு கை மட்டுமே உள்ள தமிழர் ஒருவர் தாசனுக்கு கள்ள பாஸ்போர்ட் செய்துகொடுத்தார். களவாடிய பிரெஞ்சுக் கடவுச்சீட்டு ஒன்றில் பழைய படத்தை நீக்கிவிட்டு தாசனுடையபடத்தை  கச்சிதமாகப் பொருத்தியிருந்தார்.  வித்தியாசம் ஒருவருமே கண்டுபிடிக்க முடியாது. அந்தபாஸ்போர்ட்டின் முடிவு தேதிக்கு இன்னும் 3 மாதம் மட்டுமே இருந்ததால் அது முடிவதற்கிடையில்எப்படியும் கனடா போய்ச் சேர்ந்துவிடவேண்டும். ஒரு அசட்டு துணிச்சலில் தாசன்  மொன்ரியல் விமானச் சீட்டை  வாங்கிவிட்டார்.  அவருடைய நண்பர் தாசனை ஹீத்ரோ விமான நிலையத்தில்இறக்கிவிட்டு திரும்பி பாராமல் போய்விட்டார். எல்லா பயணிகளும் போன பின்னர் கடைசி நேரத்தில்டிக்கட் கவுண்டருக்கு போய் டிக்கட்டை நீட்டினார்.  குடிவரவு அதிகாரிகள் அதிக நேரம் தன்னை விசாரிக்கமாட்டார்கள்என்று தாசன் கணக்குப் போட்டிருந்தார்.  டிக்கட்பெண் அவர்  பெயரைக் கேட்டார். ’அந்தோனி பிரங்கோய்’என்று சொன்னபோது தாசனுக்கே சிரிப்பு வந்தது. அவளுடைய  கேள்விகளுக்கு பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலும்பதில் கூறினார். பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. இவரிடம் பிரான்ஸ் தேசத்து கடவுச்சீட்டுஇருந்ததால் முழுக்க முழுக்க பிரெஞ்ச் பேசும் அதிகாரி வந்து இவரை குறுக்கு விசாரணை செய்யஆரம்பித்தார். முகத்தை கோபமாகவும், எரிச்சலாகவும், மன்றாட்டமாகவும் மாற்றி மாற்றி வைத்துஉடைந்த பிரெஞ்சு மொழியில் தாசன் பதில் கூறினார். அதிகாரிக்கு திருப்தியில்லை. பிரெஞ்சுதூதரகத்தை அழைத்து  கடவுச்சீட்டு நம்பரை கொடுத்துஅது உண்மையான பாஸ்போர்ட்டா என்று விசாரித்தார். தாசனுக்கு நடுக்கம் பிடித்தது. ஏனென்றால்அது திருடிய பாஸ்போர்ட். திருட்டுக் கொடுத்தவன் முறைப்பாடு செய்திருப்பான். ஆகவே அவர்நேரே சிறைக்கு போவதற்கு தயாரானார்.  ஆனால் திருட்டுக்கொடுத்தவன் என்ன காரணமோ முறைப்பாடு செய்யாததால் தாசன் தப்பினார்.

எல்லா தடங்கல்களும் நீங்கிய நிலையில் விமானம் புறப்படத் தயாராகநின்ற வாசலுக்கு ஓட்டமாக ஓடிச்சென்று  போர்டிங்அட்டையை நீட்டினார். அங்கேயும் ஒரு பெண் நின்றாள்.  நிதானமாக ’உங்கள் பெயர் என்ன?’ என்று ஆரம்பித்தாள்.இதற்கிடையில் விமானத்துக்குப் போகும் கதவை மூடிவிட்டார்கள். ’பூட்டவேண்டாம், நான் இந்தவிமானத்தை பிடிக்கவேண்டும்’ என்று தாசன் கத்தியும் பிரயோசனமில்லை. பதறியபடி நின்றதால்அவர் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது.  பெண் அசரவில்லை. மிக அமைதியாக  ’நீங்கள் எதற்காக போகிறீர்கள்?’ ’வேறு எதற்கு? நான்ஒரு சுற்றுலாப் பயணி.’   ’மிக நல்லது. சுற்றுலா முடிந்த பின்னர் நீங்கள் திரும்புவதற்கான விமான டிக்கட்டை காட்டுங்கள்.’ தாசனிடம் திரும்புவதற்கான விமான டிக்கட் கிடையாது. பையில் இருந்த பணத்தைஎல்லாம் கொடுத்து லண்டன் திரும்புவதற்கான டிக்கட் ஒன்றை அங்கேயே வாங்கினார்.   பெண் தன்  அதிகாரத்தை பாவித்து பூட்டிய கதவை திறந்தார். அரைமணிநேரம் தாமதமாக தாசன் விமானத்துக்குள் நுழைந்தபோது  பயணிகளின் கண்கள் அவரை எரிப்பதுபோல பார்த்தன. இடப்பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நெஞ்சு படபடக்க நேரே போய் தன் ஆசனத்தில் அமர்ந்தார். விமானம் பறந்த முழுநேரமும் நெஞ்சு படபடப்புஅடங்கவே இல்லை.

மொன்ரியலில்  விமானம்இறங்கியதும் பயணிகள் அவசரமாக வெளியேறினர். தாசன் பொறுமை காத்து கடைசி ஆளாக இறங்கி மெதுவாகநடந்தார். குடிவரவு அதிகாரியை நடுக்கத்துடன்   அணுகி மனனம் செய்து வந்ததை சொன்னார். ‘நான் சிறீலங்காவைவிட்டு வெளியேறிய தமிழன். கனடாவில் தஞ்சம் கோருகிறேன்.’ அதிகாரி வியப்புறவில்லை. ஒருநிமிடம் கழித்து எழுந்து நின்று  தாசனை அழைத்துப்போய்ஒரு சின்ன அறையில் உட்கார வைத்தார். ஒரு மேசை. இரண்டு நாற்காலிகள்; யன்னல்கூட இல்லை.சிறைதான் என்று தாசன் நினைத்தார். சிறிது நேரம் கழித்து ஓர் அலுவலர் உள்ளே நுழைந்தார்.அவர் கையிலிருந்த தட்டத்தில் பலவிதமான உணவு வகைகளும், குளிர் பானமும் இருந்தன. உணவுத்தட்டை மேசையில் வைத்து ‘ ஐயா, கனடாவுக்கு நல்வரவு’ என்றார். தாசனுக்கு அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை உணர பல நிமிடங்கள் தேவைப்பட்டன.

வாழ்க்கை நினைவு நூல்கள் பல வந்திருக்கின்றன. இந்த நூல் அப்படிஎன்ன சிறப்பு பெற்றது? ரொறொன்ரோ பல்கலைக்கழக நூலகம் இதை ஆக விலைப்பட்ட நூல் (BestSeller) என்று அறிவித்திருக்கிறது.  ஈழத்துப்போர் பின்னணியில் பல நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கட்டுரைகளாகவும்,  நாவல்களாகவும்,சுயசரிதைகளாகவும் வெளியாகியுள்ளன. முன்னைநாள் போராளிகள், போரை நேரில் அனுபவித்தவர்கள்,வெளிநாட்டில் இருந்து போரை அவதானித்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என எல்லோருமே எழுதியிருக்கிறார்கள்.  இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப்பையனின்  குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான்.இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில்  ஒரு நம்பகத்தன்மைகிடைக்கிறது. நூல் முழுக்க விறுவிறுப்புடன் நகர்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லை.செயற்கையான விவரிப்புகளோ, பூச்சுக்களோ கிடையாது. மொழிநடை வித்தை கிடையாது; உத்திகள்இல்லை. எளிமைதான் இதன் பலம். அடுத்து என்ன என்று மனம் துடிக்க சம்பவங்கள் தானாகவே நகர்கின்றன. இந்த நூல் ஒரு வரலாற்றை  சொல்வதுடன் ஓர் இளைஞன் கொடியதில் இருந்து நல்லதைநோக்கி ஒடும் கதையை பதிவு செய்கிறது.

ரொறொன்ரோவில் அரசு அனுமதித்த ஆகக் குறைந்த கூலி ஒருவருக்குமணித்தியாலத்துக்கு 14 டொலர். ஒருவர் ஆறுமாதம் ஓய்வெடுத்து  ஒரு புத்தகத்தை எழுதிமுடித்தால் அந்தப் புத்தகத்தின்பெறுமதி ஏறக்குறைய 17,000 டொலர்களாக இருக்கும்.  இந்தக் கணக்கின்படி தாசன் ஒருவருட காலம் ஓய்வெடுத்து  புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். இவர்Fortune 500 கம்பனி ஒன்றில் உயர் பதவி வகித்தவர். இவருடைய ஒரு வருட உழைப்பு 100,000 டொலர்கள் என்று  பார்த்தால் இந்தப் புத்தகத்தின் உண்மையான பெறுமதி  ஒரு லட்சம் டொலர்கள். கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.ஆனால் வாசித்து முடிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு! அதற்கு விலையே இல்லை.

END

.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:09
No comments have been added yet.


A. Muttulingam's Blog

A. Muttulingam
A. Muttulingam isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow A. Muttulingam's blog with rss.