மேய்ப்பர்கள்விமர்சனம்


                                 

மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என வாழ்ந்த வாழ்வியல் சூழல் அல்லது சுழல் துண்டிக்கப்பட்டு ஆனது ஐந்து மாதம். சகமனிதனின் கரம்பிடித்து, அவன் சூட்டை உணர மனம் துடிக்கிறது. எத்தனை எத்தனையோ இலக்கியக் கூட்டங்கள். அதில் மனம் கவரும் தோழர்களின் வியர்வை வாசம். அவர்களின் முகங்களில் பளிச்சிடும் புன்னகை அத்தனையும் நினைவு அடுக்குகளாய்த் தங்கி விட்ட பொழுதுகளில் வாசிப்பதற்குக்கூட மனம் ஒப்பாதுநிழலாடிக்கொண்டிருந்த தருணம் ஒன்றில், பவா செல்லத்துரையின் மேய்ப்பர்கள் புத்தகம் வந்து சேர்ந்தது.அடுக்கியிருந்த புத்தகங்களைத் தடவித்தடவிப் பார்த்துக் கொண்டிருந்ததருணத்தில் மேய்ப்பர்களுக்கான வம்சியின் அட்டைப்படம் வியந்து பார்க்க வைத்தது. அக்கணத்தில் புத்தகத்தின்தாளும் பசையும் புதுமையின் வாசனையும்,காதலியின் தாவணி வீசியடிக்கும்வாசத்தை உணர்த்தியது. வாசனையின் கிளர்ச்சி உள்ளுக்குள் வேதிவினை மாற்றத்தை ஏற்படுத்தியது. மூளையின் சுரப்பி, இதழை சுவைக்கத்தூண்டியது.வாசிப்பு வசப்படும் தருணங்கள் அவை. அந்தரங்கமாய் சிலாகித்துக் கொள்ளும் பொழுதுகளும் கூட அவை தான்.


தன் வாழ்வில் சந்தித்த, மனிதர்களாய்மதிக்கத்தக்கவர்களைப் பற்றி தோழர் பவா செல்லத்துரைதொகுத்த நூல் ‘மேய்ப்பர்கள்’. மகத்தான சல்லிப்பயல்கள் மத்தியில் மகத்தானவர்களை மட்டும் பேசியுள்ளார் பவா.மன்னிக்கவும் எழுதியுள்ளார். பேசும் பவா வேறாகவும் எழுதும்பவா வேறாகவும் பளிச்சிடுகிறார். கதை சொல்லல் மூலம் அசோகமித்திரனையும் ஜெயகாந்தனையும் பிரபஞ்சனையும் இன்னும் இன்னும் ஆகச்சிறந்த எழுத்தாளர்களையும் வாசகர்களின் மன அடுக்குகளுக்குக்கொண்டு சேர்த்த பவா, தன் மன அடுக்குகளில் சேகரித்து வைத்து சிலாகித்த மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார் ‘மேய்ப்பர்கள்’ நூலில்.



ஆற்றுமணலில் வெற்றுக்காலில் ஓடியாடி ஆயிரம் கற்களுக்கு நடுவே தனக்குப் பிடித்த கூழாங்கற்களை கையளவு அள்ளி வரும் சிறுவனின் மகிழ்ச்சி பவாவின் எழுத்தில் தெரிகிறது. சிறுவனுக்குப் பிடிக்கும் கூழாங்கற்கள் நிரம்ப ஆற்றில் கிடக்கிறது. ஆறு நிரந்தரமானது. துலாவி துலாவி சேகரிக்கும் கரங்கள் பவாவுடையது. தமுஎகச -வின் அறிமுகத்தால் அவருக்குள் சங்கமித்த கூழாங்கற்கள் அதிகம்.அவர்களில் கையடக்க மேய்ப்பர்கள்இந்த நூலின் அடக்கம்.நூலை வாசிக்க வாசிக்க மேய்ப்பர்கள் நமக்குள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். சிரிக்க வைக்கிறார்கள். அவர்களின் பாடுகளைப் படிக்கும் போது உங்களால் கண்ணீர் சிந்தாமல் கடக்கவே முடியாது.


கொடைக்கானலிலிருந்து ஒரு நீண்ட கார் பயணத்தின் முடிவில் மதுரை வந்து,தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களைதூரத்திலிருந்து பார்த்துவிட்டு ‘சரி வா போகலாம்’ எனத்தன் கார் டிரைவரிடம் பவா சொல்லும் வரிகள் தோழர்எஸ்.ஏ.பி.யின் உயரத்தைமேலும் உயர்த்திக் காட்டுகிறது.

‘காதலியின் பர்ஃபியூம்வாசனைக்கு நிகராக ஓவியர் பல்லவன் கூடத்திருந்துவீசும் எனாமல் பெயிண்டின் வாசனை என்னைக் கிறங்கடித்தது’என்று பவா சொல்லும் போது,நாமும் கூட கொஞ்சம்நாசியை விரித்து விரித்து நுகர முடிந்ததுஅந்த வாசனையை (பெயிண்ட் வாசனையை மட்டும்).


‘கரன்சி நோட்டுகள் அசல் கலைஞனைசலனப்படுத்தாது.அந்த ஆன்ம பலம் கொண்டவன் கலைஞன்’என்று பவா எழுதிய வரிகள், ‘மாயக் கோமாளியின்ஜாலக்கண்ணாடி’ நாடகம் முடிந்த கடைசியில் கூடை சுமந்துவந்த கலைஞனிடம் நாடகத்தின் பிரமிப்பில்ஆழ்ந்துவிட்டநண்பன் ஒருவன் அவன் சட்டைப்பையிலிருந்து பணத்தாளை எண்ணிப்பார்காமல் மொத்தமாய்போட்டபோதுஎந்தச் சலனமும் இல்லாமல் நகர்ந்து சென்றநாடகக் கலைஞன் முருகபூபதியை நினைவுபடுத்தியது.


சமூகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும்உள்வாங்கிக் கொண்டுநடிகனாக மட்டுமேதன்னை வெளிப்படுத்தியதருணத்தை தோழர் பிரளயன் மூலமாகவும்,


பால் பிடித்து முற்றி பொன் நிறத்தில் நெல் மணியாய் வெளிவரும்படைப்பாளியின்முளை தருணத்தை வையம்பட்டி முத்துசாமி மூலமாகவும்வெளிப்படுத்தும் பவாவின் எழுத்துகள்உணர்வுப்பூர்வமானவை.

ஒரு எம்.எல்.ஏ வின் பேருந்து பயணம் சுற்றி இருப்பவர்களிடம்எப்படிப்பட்டதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் தொடங்கி,அவருக்கும் முன்னாள் முதலமைச்சர்களுக்குமான நட்பினையும் நன்றிக்கடனையும் பற்றி தோழர்நன்மாறன் நினைவுகளாக கூறும்போதுஇடதுசாரிகளின் உன்னதமானவாழ்க்கையினை நாம் உணர முடிகிறது.இன்னும் இன்னும் தோழர் உதயசங்கர்,தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி,தோழர் சு.வெங்கடேசன் என்று நீண்டு கொண்டே செல்லும் இந்த மேய்ப்பர்களில் எனக்கும் பவாவுக்கும்பரஸ்பரம் அறிமுகமான தோழர்களும் அடக்கம்.




அவர்களைப் பற்றி வாசிக்கும் போதுஏற்பட்ட உணர்வுஅலாதியானது.


காட்டுக்குள் வீரப்பனுடன் வாழ்ந்து விட்டு நாட்டுக்குள் மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கும்தோழர் அன்புராஜ்.வாழ்க்கையின் பிடிமானங்கள் அற்று போய் சிறைக்கொட்டடியில்தன் மூச்சு முடியும் என்ற நிலையிலும் கூடகடைசித் துரும்பாக நாடகத்தைக்கையிலெடுத்துதப்பிப்பிழைத்தவன் அன்புராஜ்.


பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் எளிமையில்விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கும்தோழர் வி.பி.ஜி.


“பஜ்ஜி எடுத்துக்கோங்கஇந்த வயசுல அது உங்கள என்ன செய்யப்போகுது “என்று எனக்கொன்றும்அவருக்கொன்றுமாக கூட்ட அரங்கில்எடுத்துக்கொடுக்கும்இளைஞன் டாக்டர் ஜீவா.


பயந்து பயந்து நான் பக்கத்தில் சென்ற போதுகுழந்தையாகக் காட்சி தந்த BK.


இப்படி நான் அருகிலிருந்து நேசித்த மனிதர்களை பவா எழுதி, அதை வாசிக்க வாசிக்க அவர்களின்அருகமையை மனம் தேடியது.இது பவாவின்எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.‘மேய்ப்பர்களை 'முழுவதும் வாசித்து முடித்தபோது,பெருந்தொற்று காலத்தில் விலகி இருந்த தோழர் அன்புராஜின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்.வி.பி.ஜியின்சுவாசச் சூட்டை உணரத் தொடங்கினேன்.டாக்டர் ஜீவாவின் மென்மையை என்னால்ரசிக்க முடிந்தது.BK யின் மந்திரக்குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


பவா குரலால் மட்டுமல்ல எழுத்தாலும் இவர்களை எல்லாம் அருகே கொண்டு வந்து சேர்த்து விட்டார்.துண்டிக்கப்பட்டிருந்த மனிதச் சுழல்என்னைச் சூழ்ந்து கொண்டது. ‘மேய்ப்பர்கள்’ நூல் அதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. மகத்தான சல்லிப்பயல்களைச் சலித்துவிட்டு மீண்டுமொருமுறை வம்சி, மேய்ப்பர்களால்கட்டி எழுப்பப்பட்டுள்ளது.



-      இ.கலைகோவன்

-      e.kalaikovan@gmail.com


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2020 01:03
No comments have been added yet.


Bava Chelladurai's Blog

Bava Chelladurai
Bava Chelladurai isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Bava Chelladurai's blog with rss.