தனசீலி அக்காவிடமிருந்து கடிதம் 2
22.06.2020அன்பு தம்பி பவாவிற்கு
உங்கள் எழுத்துக்களை வாசித்துக்கொண்டும் குரலைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். புத்தகங்களை அனுப்பிய ஷைலஜாவிற்கு என் அன்பையும் (ஒரு முத்தம் கொடுத்து) நன்றியையும் தெரிவியுங்கள்.எனக்கு புத்தகங்களை செய்திவாசிப்பது போல் வாசித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசிக்க வேண்டுமே என்ற அவசரத்துடன் வாசித்து முடித்துவிடப் பிடிக்காது. உங்கள் நண்பர் பிரபஞ்சன் கூறுவது போல் அது உடலைக் கழுவும் பாத்ரும் குனியால் எனக்கு நதியில் நீராடுவது போல் ஆசைதீர அமிழ்ந்து வாசிக்க வேண்டும். நீங்கள் பரிந்துரைத்ததால் இயேசு கதைகளில் தொடங்கி ஷைலஜாவின் சிதம்பர நினைவுகள், முத்தியம்மாவை வாசித்துவிட்டு, ஒரு சிக்கனமான கடிதத்தை அவருக்கு எழுதினேன். உங்களுடன் அவர் அதனைப் பகிர்ந்து கொண்டிருப்பார் என் நினைக்கிறேன்.இடைப்பட்ட இந்நாட்களில் உங்கள் எழுத்தில் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ கதையை பலரிடம் பகிர்ந்து கொண்டேன் இதயம் ஒவ்வொரு முறையும் கனத்தது. “பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல”. “19.டி.எம்.சாரோனிலிருந்து” போது “எல்லா நாளும் கார்த்திகையை” வாசித்து முடித்தேன். ஒளியின் குழந்தையின் முதல் புதுமையின் சுவையான திராட்சை இரசம் போல.இப்போது எனக்குள் ஒரு விவாதமெடுத்து பவா கதை சொல்லியா? எழுத்தாளனா? எனக்குள் விஞ்சிநின்றது எழுத்தாளன்தான். “அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன். நீர் எங்களின் காலம்மீதேறி நனைகிறது. நாங்கள் முழுவதுமாக நிறைகிறோம்”இதைத்தான் காட்சியாகக் காண முடிந்தது. இப்படி நிறைய குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்ற கடிதமே நீண்டு போனது. நீங்கள் எழுதுங்கள் பவா மிச்சமிருக்கிற கதைகளும், நேரமிருந்தால் எனக்குக் கடிதமும்.“வையபுரி, மொரம்புல ஈரம் தெரியுது…. இந்தக் கல்லுக்குக்கீழ கூடப்பாரையால மெல்ல நெம்பு. இத்தனை யுகமாய்க் கல்லின் மூட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம்”மனித மனங்களில் கசியும் ஈரத்தை நாம் கண்டு கொள்வதேல்லை. சிறிய கடப்பரையின் நெம்பலுக்காய் அது யுகயுகமாய் காத்துக்கிடக்கிறது. சிலருக்கு நல்ல மனிதர்கள் நண்பர்களாய்க் கிடைப்பார்கள் நண்பர்களாய், காதலியாய், மனைவியாய், மகனாய் அந்த கருணையெனும் ஊற்றினை திறப்பவர்களாய், வற்றாமல் பாதுகாப்பவர்களாய், சிலர் அதனை நிராகரித்து விட்டு, வாழ்நாளெல்லாம் வறண்டு கிடப்பதும் உண்டு.பாலுமகேந்திரா அவர்கள் இறந்த பிறகு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தரப்பட்டது. அதனைப் பெறுவதற்கு பாலா, அவரின் துணைவியார் அகிலாம்மாவை கரம் பிடித்து மேடைக்கு அழைத்துவந்தார். அவரை அப்போதுதான் முதல் முதலாகப்பார்த்தேன். அவரின் முகத்தில் மகிழ்ச்சியோ, பெருமிதமோ இலலை. மாறாக நிராகரிப்பின் ரேகைகள் அந்த வெளிர் முகத்தில் ஓடியது. அவ்விருதை பாலாவே பெற்றுக் கொண்டாலும் யாரும் (அகிலாமா உட்பட அதனை மறந்திருக்க மாட்டார்கள் ஆனால் அகிலாம்மாவைத்தான் அழைத்து வந்திருந்தார். A Woman without any choice and voice பாலா ஒரு வேளை தன் ஆசான் உயிரோடு இருக்கும் போது அவரிடம் இருந்து அகிலாமவிற்கு எதனையும் பெற்றுத்தர இயலாமல், இதனையாவது பெற்றுத்தந்து தனக்குள் ஆறுதல் அடைந்திருக்கூடும். அகிலாம்மா அப்படி ஆறுதல் அடைந்திருப்பாரா?‘உடல்மொழியோடு வாழ்ந்த கலைஞனை’ பேட்டி எடுத்த பெண்ஷோபாவின் தற்கொலையில் உங்களுக்கு… என ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. காரணம் கலைஞரினின் ஒப்பற்ற கலைக்காக அவர்களைக் கொண்டாடும் போது அவர்களின் வாழ்வு குறித்து கேள்விகள் தானாக வந்து விழுகிறது.ஒத்துக்கொள்கிறேன் எல்லாக் கலைஞர்களும் மென்மையான இளகிய மனமும், நுட்பமான அறிவுத் திறனும் கொண்டவர்கள்தான், கலை அவர்களை மெல்ல மெல்ல உள்ளிழுத்து புதைகுழிபோல் தனக்குள் புதைத்துக்கொள்கிறது. இயல்பான வாழ்வு அந்நியப்பட்டு அது அவர்களுக்கு ஒரு தனிஉலகத்தை ஸ்தாபித்துத்தருகிறது. அங்கு அவர்களுக்கு நண்பர்கள், எதிரிகள், காதலர்கள், காதலிகள், துரோகிகள், போதையூட்டும் புகழ், சூழ்ந்து கொள்ளம் ரசிகர்கள்… இதில் அவர்கள் தொலைந்து இயல்பாகவே போகிறார்கள். தன் மனைவி. குழந்தைகள் உறவுகளிடமிருந்து மெல்ல, மெல்ல தொலை தூரம் போய்விடுகிறார்கள்.பாலுமகேந்திரா, பல பெண்களைக் கடந்துவந்தவர், இன்னொரு பெண்ணுடனும் வாழவை பகிர்ந்துகொண்டவர். ஏன் இறுதியில் தனித்து வாழநேரிட்டது? தனிமைக் கொடியது. வயதானகாலத்தில் அதுதரும் வலி அளப்பறியது. ஷைலஜாவின் குரலில் அவரை அப்பா என அழைக்க ஆசைப்படுகிறார். எல்லோருக்கும் இரத்தமும் சதையுமான மனிதர்களின் உறவும் அவர்களின் ஈரம்கசியும் இதயமும் கண்களும் வேண்டும் பவ.பொதுவெளியில் பயணிக்கும் அனுபவம் அற்றவர்களுக்கு குடும்பமும், பணித்தளமும், சுற்றமும் நட்புமே அதனைப் பூர்த்தி செய்கிறது. சிலருக்கு பொதுவெளியில் அதுவாய்க்கிறது. இருப்பினும் மாலையானதும் அல்லது பயணம் போனாலும் வந்தடைய குடும்பக் கூடுகளே தேவைப்படுகிறது. கூடுகளை புறக்கணித்தவர்கள் என்றும் அவர்களுக்காக திறந்தே இருக்கும் கூடுகளுக்குத்திரும்பத் தயங்குகிறார்கள். இந்தத் தயக்கத்தால் தனியே தன்னந்தனியே… வாழ நேருகிறது பவா,பாலுமகேந்திராவோ, பாராதிராஜாவோ, முத்துக்குமாரோ ஏன் உங்கள் வீட்டிற்குவர ஆசைப்படுகிறார்கள் என நான் எண்ணிப்பார்க்கிறேன். உங்கள் குடும்பம் போன்ற ஒன்று அவர்கள் விரும்புவது நான் என் பயிற்சி வகுப்புகளில் கூறுவ தெல்லாம், அத்தனை குறைகள் இருந்தாலும் குடும்பங்களுக்கு மாற்று இல்லை ஆனால் அது இதே நிலையில் தொடர்ந்தால் முற்றிலும் அழிந்து போகும். குடும்பங்களை ஜனநாயகத் தன்மைக் கொண்டதாக, இன்னும் உரிமைகள், கொண்டவையாக மாற்றியாகவேண்டும். எனக் குறிப்பிடுவேன். ஜனநாயகத் தன்மைக் கொண்ட குடும்பங்களை நான் இன்னமும் தேடிக்கொண்டேயிருக்கிறேன். அப்படிப்ப்டட குடும்பமாக உங்கள் குடும்பத்தை உணர்வதால் அவர்கள் உங்கள் வீடுதேடி வருகிறார்கள்.சின்னச்சின்ன ஏன் பெரிய சண்டைகள் சச்சரவுகள் இல்லாத குடும்பங்கள் ஏது? ஆனால், இன்றே பிரிந்து போவதுபோல் சண்டைபோட்டுக்கொண்டு, குளிக்க வெந்நீர் விளாவிவைத்துக் கணவணின் முதுகு தேய்க்கும் மனைவியும், தன் தட்டில் விழுந்த பெரிய மீன் துண்டை மனைவி தட்டில் எடுத்துப்போட்டு எல்லாத்தையும் எங்களுக்கேபோட்டு, நீ என்ன செய்வ? என சமாதானப்படுத்தும் கணவனையும், வெகு இயல்பாக எல்லாவற்றையும் மறந்து உறவுக்கு தயராகி ஊக்கு மட்டிக்குச்சு, எனச் சொல்லும் மனைவியை அணைத்துக் கொள்ளும் கணவனைப் போல, அகங்கராமற்ற எளிய மனிதர்களாய் ஏன் மெத்தப் படித்தவர்களால் இருக்கமுடிவை தில்லை என நான் எப்போதும் வியப்பதுண்டு.ஒரு விவசாயிக்கும், நிலத்திற்குமான உறவு போலத்தானே குடும்ப உறவும், அதை கண்டு கொள்ளாமல் விட்டால் விளைச்சலை எப்படி எதிர்பார்க்க முடியும்? கலைஞர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இப்படித்தான் குடும்பங்களை தவறவிட்டு விடுகிறார்கள். ஒரு சிலர் காதலை இறுதிவரை துறப்பதே இலலை. கார்ல்மார்க்ஸ் மனைவி ஜெனியின் “எங்களின் ஒரு நாள் வாழ்க்கை”யை வாசித்திருக்கிறேன். என்னை அற்புதமான உறவு அவர்களுடையது வறுமையும், நோயும் அவர்களை இறுதிவரை பிரிக்கவேயில்லை. வேறுஒரு மனைவியாக இருந்தால் என்றோ விடைபெற்றுப் போய் இருப்பாள். இவர்களைத்தான் நான் என் ஆதர்சங்களாகப் பார்க்கிறேன் பவ.உங்கள் பாலுமகேந்திரா குறித்த பகிர்வும், ராஜேந்திர சோழனின் கதையும் இப்படியெல்லாம் என்னை எழுதவைத்துவிட்டது. எங்கள் கல்லூரிக்குத் தரவேண்டிய கட்டுரையை முடித்துவிட்டேன். எங்களின் ரோட்டு வீடு குறித்து எழுத ஆரம்பித்து அப்படியே பாதியில் நிற்கிறது எனக்குக் கட்டுரைகள் எழுதியும், பேசியும் தான் பழக்கம். கதைக்காண முயற்சியில் இறங்க இன்னமும் தயக்கமாக இருக்கிறது.இக்கோவிட் காலங்களில் பெண் இறையியலார் கூட்டங்களுக்காக எலாளும், சாராளும் இன்னும் சில பெண்களும் என எழுதியதை செழுமைபடுத்தலாம் என நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களையெல்லாம் பார்த்தபின்னர், “அக்கா நீ எதுக்குக்கா எழுதற பேசம கதை கேளு, வாசி, இல்ல சொன்னது மாதிரி சமைக்க வந்திருன்னு” பவா சொல்லிட்டா என்ன செய்யறது?எழுத ஆரம்பித்தால் இப்படி எட்டு பக்கத்தில் தான் வந்துநிற்கிறது. உங்களுக்கு, ஷைலஜா வம்சி, மானசிக்கு என் அன்பும், நட்பும் எப்போதும்,அன்புடன்தனசீலி.
Published on August 18, 2020 23:27
No comments have been added yet.
Bava Chelladurai's Blog
- Bava Chelladurai's profile
- 93 followers
Bava Chelladurai isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
