டொரினா பற்றி ஹரிஷ் கணபதி
கார்த்திக்கின் முதல் சிறுகதைத் தொகுப்பு.சமகாலத்தில் பெரும்பான்மைப் பிற துறைகளின் மாதச் சம்பளக்காரர்கள் தங்களுக்குக் கிட்டவில்லையே என்ற ஆதங்கத்தில் கரித்துக் கொட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பளபளப்பான சம்பளங்களுக்குப் பின்னிருக்கும் இருண்ட பக்கங்களைத் தொட்டுக் காட்டுகின்றன கணிசமான கதைகள்.2011 முதல் 2017 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகள். கால மாற்றத்தினால் எழுத்தின் தன்மையில் பெரும் பாய்ச்சலோ பின்தங்கிடலோ ஏற்படவில்லை.கார்த்தியின் கதை சொல்லல் முறை ஒரு தெளிந்த நீரோடையைப் போல் பயணிக்கிறது. திருகலான மொழிநடையின்றியும் கனமான கதைகளைச் சொல்வது சாத்தியம் என்பதை அறிவிக்கிறது. முன்பொரு முறை அவருடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தபடிக்கும் இந்தப் புத்தகத்தைச் சமர்ப்பித்திருக்கும்படிக்கும் அவர் மானசீக ஆசானாகக் கொண்டிருக்கும் அசோகமித்திரன் அவர்களின் சுவடுகள் அழுந்தப் பதிந்த கதை சொல்லல் முறை தெரிவிக்கிறது.இத்தொகுப்பின் கதைகளின் தலைப்புகள் பற்றி முன்னுரையில் திரு கோபால கிருஷ்ணன் அவர்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.கதைகளுக்குத் தலைப்புகள் வைப்பது என் வரையில் சிலைக்கு இறுதியில் கண் திறப்பது போன்றது. கதையின் அழகியலுக்கு மட்டுமன்றி, சொல்ல வரும் விஷயத்த்துக்கும் தலைப்பு ஒரு ஈர்ப்பான் போல் செயல்பட வேண்டும். இதில் கார்த்திக் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம்.கதைகளைப் பொறுத்தவரை, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கதைகளாதலால், ஒவ்வொரு கதையிலும் விதவிதமான கதை சொல்லல் முறைகளை முயன்றிருக்கிறார்.சில கதைகள் நேரடிக் கதை சொல்லல் முறையில் எழுதப் பட்டிருக்கின்றன. சில கதைகள் முடிவை முற்று முழுதாய்த் தெரிவிக்காமல் வாசிப்பவரின் அவதானிப்புக்கு விட்டு விடும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றன.ஒரே ஒரு கதையை மட்டும் என்னளவில் நான் முற்றாக நிராகரிக்க எண்ணுகிறேன். அந்தக் கதை அவ்வளவாகப் பயன்படுத்தப்படாத, சிறுகதை எழுத சற்றே கடினமான உத்தியில் எழுதப் பட்டிருந்தாலும், மொத்தக் கதையும் இறுதியில் ஏற்படும் திருப்பத்தின் அதிர்ச்சி மதிப்பை நோக்கி மட்டுமே கதையைச் செலுத்துவதால் புதுமையான உத்தியும் பயனளிக்காமல் போகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.இதர கதைகளைப் பொறுத்தவரை , பொதுவாக எனக்கு நேரடிக் கதை சொல்லல் முறையிலேயே அதிக விருப்பமென்றாலும் , வாசகரின் யோசனைக்காகக் கதையின் முடிவை ஒரு திறப்போடு விட்டு விடும் உத்தி கார்த்திக்கின் கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.வெளியான புதிதில் பரவலாக சிலாகிக்கப் பட்ட இரு கோப்பைகள், தலைப்புக் கதையான டொரினா ஆகியவை மிக நல்ல கதைகள் என்றாலும் அவை நல்ல கதைகள் என்ற அளவில் என்னைப் பொறுத்தவரை நின்று விடுகின்றன.காரணம், திரு கோபால கிருஷ்ணன் சொன்னது போல் புதிதாகச் சிறுகதைகள் எழுதுபவர்கள் (நான் உட்பட) தத்தமது திறமையை எளிதாய்ப் பரிசோதிக்கத் தேர்ந்தெடுக்கும் களம் பெரும்பாலும் பால்ய நினைவுகள் பற்றியதாக, அல்லது திருமணம் தாண்டிய உறவு பற்றியதாகவே இருக்கிறது. டொரினா இந்த வகைமைக்குள் வருவதால் இந்த genreல் மிக நல்ல கதை என்று கூறலாம்.இரு கோப்பைகள் பற்றிய கருத்து முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே.என்னளவில் தொகுப்பில் யயகிரகணம், முடிச்சுகள் ஆகிய கதைகள் நிரப்பப் பிடித்திருந்தன.முதல் தொகுப்பை பேர் சொல்லும்படியான தொகுப்பாகவே கொடுத்திருக்கிறார் கார்த்திக். அடுத்தடுத்த தொகுப்புகள் மேலும் காத்திரமாகப் படைக்க வாழ்த்துக்கள்.தலைப்பு- டொரினா
வகை. - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்- கார்த்திக் பாலசுப்ரமணியன்
வெளியீடு-யாவரும் பதிப்பகம்
வகை. - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்- கார்த்திக் பாலசுப்ரமணியன்
வெளியீடு-யாவரும் பதிப்பகம்
Published on January 28, 2019 07:54
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
