"காச்சர் கோச்சர்" - விவேக் ஷான்பாக் (காலச்சுவடு வெளியீடு, மொழிப்பெயர்ப்பு - கே. நல்லதம்பி)
முன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடைக்கின்றன.இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு.பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை.வறுமையின் விளிம்பில் உழலும் கீழ் மத்திய வர்க்கத்தையும், அவர்களின் மன நிலையையும், பின் அவர்கள் மெதுவாக உழைத்து முன்னேறி அடுத்த கட்டத்துக்கு நகரும் போது அவர்களிடம் ஏற்படும் லெளகீக மற்றும் மனோபாவ மாற்றங்களையும் "சுருக்"கென்ற அதிர்வைத் தரும் ஒரு முடிவுடன் அற்புதமாக எழுதியிருக்கிறார்.இதில் ஓச்ர் இடத்தில், கதை சொல்லியின் அப்பா வேலையை இழந்துவிடுவார். வீடே அமைதியிலும் ஒருவித அழுத்தத்திலும் உறைந்து போயிருக்கும். பொதுவாக அதிகம் உரையாடாத அப்பா வேலை போன அன்று எதையாவது பேசுவது, தேவையற்ற கேள்விகளைக் கேட்பது என்று வலிந்து திணிக்கப்பட்ட உற்சாகத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகும் நேரங்களில் கலகலப்பாய் இருப்பவர்கள் அமைதியாவதைப் போல அமைதியானவர்கள் சமநிலை தவறிவிடுகிறார்கள். அது முன்னதைவிட இன்னும் கொடுமையானது.இப்படியாக நாவல் நெடுக வரும் நுட்பமான சித்தரிப்புகளும், அதன் மூலம் விவேக் முன் வைக்க விரும்பும் அபத்தங்களுமே இந்நாவலை முக்கியமான இடத்திற்கு நகர்த்துகின்றன.அளவில் மிகச்சிறிய நாவல். நூறே பக்கங்கள். ஒரே அமர்வில் வாசித்துவிடலாம். நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Published on July 10, 2018 09:01
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
