குமாரந நந்தன் கட்டுரை

 

                        தேவிபாரதியின் நீர்வழிப் படூம்\

                                                                                                           காவிய சாயல் கொள்ளும் விளிம்பு நிலை வாழ்வியல்

 

தேவிபாரதியின் புதிய நாவல் நீர்வழிப்படூம் வாழ்க்கையின் எதார்த்தத்தை மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது. வாழ்க்கை என்றால் காரு மாமா என்ற ஒரு நபரின் அவரின் உறவினர்களின் வாழ்க்கையை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. கொங்கு மண்டலத்தில் வாழும் ஆண்ட சாதியினரை அண்டி வாழும் சாதியினரின் வாழ்வியலை இந்நாவலில் வரைந்து காட்டியிருக்கிறார் தேவிபாரதி.\

இந்த வாழ்க்கை என்பது இதுபோன்ற கிராமங்களில் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லை. ஆன்மீகம் தேடல் போன்ற தளங்கள் திறக்கப்படவில்லை அல்லது அப்படியான தளங்களுக்கு அங்கே இயக்கமே இல்லை. சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பது மிகப் பெரிய கட்டுமானம் அதை ஏன் என்று கேள்வி கேட்பது அல்லது தேவையில்லை என்று உதறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் கட்டுமானங்கள் தான் அவர்களின் துயரையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கின்றன.

கதை நாயகனின் தாய் மாமாவான காரு மாமா தன் வீட்டில் தனியாக இறந்து கிடக்கிறார் என்பதில் இருந்து துவங்குகிறது நாவல்.

பின் அந்த துயரம் சடங்கு சம்பிரதாயங்களின் வழியாக கடலாக பெருகிச் செல்கிறது. இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது எல்லா தமிழ் நிலங்களுக்கும் உரியது என்றாலும் கொங்கு மண்டலத்தில் அதன் சக்தி தனித்துவமானது. அப்படியான ஒப்பாரிப் பாடலுடன் நடக்கும் அந்த இறுதிக் காரியத்தைன் அத்தனை பரிமானங்களையும் அதன் சக்தியோடு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் தேவிபாரதி. இழவு காணச் செல்லும் பெண்களின் உடை அழகு படுத்தியிருக்கும் விதம், (எனக்குத் தெரிந்து கொண்டைதான் போட்டிருப்பார்கள்). தலைக்கு முக்காடு பரிதவிப்பான அந்த நடை என எதையும் விட்டுவிடாமல் அந்த நடப்பின் சகலங்களையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார்.. அதைப் படித்தபின் இரண்டு நாட்களாக அந்த நினைவில் கனத்துக் கிடந்துவிட்டு பின்புதான் தொடர்ந்து நாவலை வாசிக்கத் துவங்கினேன்.

சிறு வயதில் மைக் செட்களில் ஒலிக்கும் ஒப்பாரிப்பாடல்கள் அது தரும் துயரமும் மனச் சோர்வும் நினைவுக்கு வந்தன. இவர்கள் எப்படித் துயரப்படுவதென தெரியாத மனதை பெரும் துயரத்தில் ஆழ்த்தி ஆழ்த்தி அதை முழுவதுமாக உள்வாங்கவிட்டு பின் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கிறார்களோ என நினைத்துக் கொண்டேன்.

அவர்களின் சகோதர பாசம் நல்ல தங்காள், சின்னண்ணன் பெரிய அண்ணனின் சகோதரி தாமரை பெரிய நாச்சி மற்றும் பாசமலர் சிவாஜி சாவித்ரியின் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

\அதனால் தான் முத்து அண்ணன்மார்களின் சடலத்தைக் கண்டு தங்காயி பாடும் ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார். அப்போது அவர் ஒரு துயரத்தின் மாபெரும் சக்தியாகவே மாறிப் போகிறார். அவர் தலையில் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றித்தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிகிறது. இதனிடையே விரிகிறது அண்ணன் மார் கதையை பாடும் லிங்க நாவிதனின் சித்திரம்.

அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அல்லது தாங்கள் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்றையும் கற்பனை செய்வதும் இல்லை கனவு காணுவதும் இல்லை. இதுதான் வாழ்க்கை இதை சிக்கல் இல்லாமல் வாழ்ந்து தீர்த்துவிட்டால் போதும் என்ற மனப்பாங்கினர். நாவல் நெடுகிலும் அந்த மனப்பாங்கின் இயக்கமே அந்த சட்டகத்தை மீறாமல் பொங்கிப் பிரவகிக்கிறது.

இதுதான் அவர்கள் உலகம். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் இதுபோல தனக்கான அல்லது தங்களுக்கான உலகத்தில் மட்டுமேதான் வாழகிறார்களோ  என்ற சிந்தனையும் எழுகிறது.

அவர்களின் அண்ணன் தங்கைப் பாசத்தின் குறியீடாக விளங்குகிறது பாசமலர் திரைப்படம். முத்துவுக்கு அந்தப் படம் அத்தனை உயிர். அந்தப் படமும் அது தொடர்பான நிகழ்வுகளும் என ஒரு அத்தியாயமே விரிகிறது. இதுவும் கூட ஒரு படத்தின் ஒரு குடும்பத்தின் கதையாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் நம் சமூகமே அப்படித்தான் இருந்தது. எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மயக்கம் இன்று கேட்பதற்கு வேடிக்கையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும் அல்லவா?

பிள்ளைகளுடன் ஊருக்கு வரும் முத்து தன் வாழ்க்கைப் பாடுகளை நினைத்து ஒரு நிமிடத்தில் குழந்தைகளுடன் கிணற்றில் விழ முடிவு செய்து விடுகிறாள். அந்த வாழக்கைப் பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. மரணித்துவிட அச்சமாக இருக்கிறது எனவே வாழ்கிறோம் என்பதாகத்தான் அது இருக்கிறது. அந்த சமயத்தில் அந்தக் குழந்தைகளின் அலறலும் அங்கே காரு மாமாவின் பிரசன்னமும் என நல்ல தங்காளின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நகரத்தில் வாழ்ந்தாலும் முத்துவின் கணவர் ஒரு ஆசிரியராய் இருந்தாலும் அவர்களை வறுமை ஆட்டிப் படைக்கிறது. பிள்ளைகள் இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு செல்கிறார்கள். அந்த நச்சு அந்த நெடிக்கு நடுவே அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை தொடர்ந்து வாழ்கிறார்கள். \

நம்பிக்கை கொள்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலையில் அவர்கள் சயனைடை சேமித்து வைத்திருக்கிறார்கள் எந்த நிமிடமும் அதைத் தின்று உயிரைவிட்டுவிட அவர்கள் தயாராய் இருக்கிறார்கள்

பூமியின் மீது இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது. நம் மக்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியாக ஏன் வகுத்துக் கொண்டார்கள் இதற்கு அவர்களின் அறியாமைதான் காரணமா அல்லது சமூக அமைப்பா என மன உளைச்சல் தரும் கேள்விகளை உயிர்ப்பித்தவாறு மேலே மேலே செல்கிறது நாவல்.

இதில் இன்னொரு விஷயம் எனக்கு முக்கியமாகப் படுகிறது. குடிநாவிதரின் குடும்பக் கதை என்றாலும் அதில் ஆதிக்க சாதியினரின் சாதிக் கொடுமை பற்றிய பதிவு எங்கேயும் இல்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வது என எனக்குத் தெரியவில்லை. இந்த நாவலைப் படிக்கும்போது கொங்கு மண்டல கிராமங்களில் சாதிப் பிரச்னையோ அல்லது அதன் வக்கிரங்களோ இல்லை என்பது போன்ற சித்திரத்துடன் இருப்பது சரியா என எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை தேவிபாரதி சாதியப் பிரச்னைகளை கண்டுகொள்வது என்ற நிலையில் இருந்து கடந்து போயிருக்கலாம் அதற்காக அதை சொல்லாமல் விடுவது ஒருதிட்டமிடல் போல இருக்கிறதே என்றே நான் யோசிக்கிறேன். தெரியவில்லை எல்லா இடத்திலும் சாதிப் பிரச்னையை சொல்ல வேண்டும் என்ற என் வாசக எதிர்பார்ப்பையும் நான் சந்தேகப்படவே செய்கிறேன்.

இந்த வாழ்க்கை இப்படித்தான் என்றாலும் இது ஒரு காவியத் தன்மை உடையது என்பதே நாவலின் அடிநாதமாக விளங்குகிறது. அதனாலேயே தங்காயியும் நல்ல தங்காளும் எங்கோ எப்போதோ வாழ்ந்த ஒருவராக இல்லாமல் அவர்களின் கூடவே வாழ்பவர்களாக இருக்கிறார்கள். \

இந்த அடிநாதத்தை நாவலின் கடைசி அத்தியாயம் விஸ்தாரமாக காட்டிவிடுகிறது. காரு மாமாவின் எட்டாம் நாள் காரியத்திற்காக அங்கே ஒன்று கூடும் உறவினர்கள் அங்கிருக்கும் தாயக் கட்டையை எடுத்து தாயம் விளையாடத் துவங்குகிறார்கள். (நாவலில் இதற்கு முன்பே கிராமங்களில் தாய விளையாட்டு எவ்வளவு கொண்டாட்டமானது என்பது சொல்லப்பட்டிருக்கிறது)\

தாய விளையாட்டில் உள் மனச் சிடுக்குகள் மனதின் ஆதி உணர்வுகள் விழித்தெழுகின்றன. அது விளையாட்டுதானே என்பது மறந்து போகிகறது. உறவே என்றாலும் பெருகும் வன்மத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. \

கடைசியில் இப்படிக் கேட்கிறாள் ராசம்மா அத்தை ரெண்டு போட்டா என்ன தருவே? அதற்கு முத்து ஒரு கணம் திகைத்து பின் நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்கிறாள். ராசம்மா தயங்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது முத்து  நீ ஒரு ரெண்டப் போட்டு இந்த ஆட்டத்த ஜெயிச்சிக் குடு நா எம் பையனுக்கு ஈஸ்வரியக் கட்டி வச்சி எம்பட மருமவளாக்கிக்கிறேன் என்கிறார்..

இது ஒரு சாதாரண காட்சியாகத் தோன்றலாம். ஒருவேளை இதுபோன்ற ஒரு நாவலில் ஒரு செயற்கையான காட்சியாசக் கூட சிலருக்குத் தோன்றலாம். ஆனால் என் மனதில் மகாபாரதத்தின் சூதாட்டக் காட்சி விரிகிறது. அந்த சூதாட்டத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்த சூதாட்டம். அந்த இதிகாச கதா பாத்திரங்களின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாததும் கூட இந்த வாழ்க்கையும். வாழ்க்கையில் உயர்வில்லை குறையும் இல்லை வாழ்க்கை என்றால் அது வாழ்க்கைதான் எல்லோருக்கும் அது ஒன்றுதான் என்று நிறுவி விடுகிறார் தேவிபாரதி.

காரு மாமாவின் வாழ்வு சகோதரிகள் மீது அவர் கொண்ட பாசம், சகோதரிகள் அவர் மீது கொண்ட பாசம். ராசம்மா பிள்ளைகளுடன் பிரிந்து சென்றதன் துயரம் அவள் கூட்டிச் சென்ற தன் மீது பேரன்பு கொண்ட பிள்ளைகளை பைத்தியமாய்த் தேடியும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியாத சோகம் எல்லாமே அதன் பின் ஒரு காவியத்தின் சாயலைக் கொண்டுவிடுகின்றன. .


குமாரநந்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2022 16:02
No comments have been added yet.


Devibharathi's Blog

Devibharathi
Devibharathi isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Devibharathi's blog with rss.