லாவண்யா சுந்தர்ராஜன் கட்டுரை

 

லாவன்யாசுந்தர்ராஜன்

 

கட்டுரை

தேவிபாரதி படைப்புலகில் பாலியல் கட்டமைப்புகள்:

 

பாலியல் கட்டமைப்புகள் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவரை பாலினம்(Sex as Gender), பாலுணர்வு(Sex as feeling), பாலியல்(Sexuality) என்று மூன்று வரையறைக்குள் அடக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. பாலினம் என்ற வரைமுறையில் ஆண், பெண், ஆணும் பெணும் அல்லாத மூன்றாம் பாலினம் என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியும். பாலுணர்வு அந்த மூன்று பாலினரும் அவர்களுக்குரிய பிரித்தியோக குணாதியங்களை வெளிப்படும் எல்லாம் உணர்வுகளையும் குறிப்பிட்டு பேச வேண்டிய மிக விரிவான தளம். வெறும் உடல் ஊடல் சித்தரிப்புகளை மட்டும் பேசுவதல்ல இந்த வகைமை. உதாரணத்துக்கு எதிர்பாலினத்தின் மீதான எந்த விதமான ஈர்ப்பையும் உரையாடலையும் மட்டுமல்லது அவ்வறவுகளுகிடையே நிகழும் வெறுப்பு, கயமைத்தனம், அதன் பொருட்டு விளையும் நோய்மை கூறுகள் என்ற எல்லா உணர்வுகளையும் இந்த வகைமைக்குள் அடக்கலாம் என்பது எனது எண்ணம். மூன்றாம் பிரிவான பாலியல் என்ற தலைப்புக்குள் பேச வேண்டிய விஷயங்கள் ஓரிரு வரிகளுக்கு அடங்கி விட முடியுமா என்பது எனது தீராத சந்தேகம். ஒரு புனிதத் தன்மையுடனான விளக்கமென்றால் "இனப்பெருக்கத்திற்கு தேவைப்படும் எல்லா விதமான செயல்பாடுகள்" என்பதும் அதற்கு உபப்பட்டியலாக பாலினம், பாலுணர்வு இன்னபிற விஷயங்கள் அமைகிறது என்று தோராயமாக சொல்லி வைக்கலாம். ஆக ஆண், பெண் இவர்களை பாலினம், பாலுணர்வு சார்ந்து ஒரு படைப்பு என்னவெல்லாம் பேசுகிறதோ அது அனைத்தும் பாலியல் கட்டமைப்புக்குள் பேசலாம் புரிந்து கொண்டு இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆண் பெண் உடல் சார்ந்த பதிவுகள். ஆண் பெண் இடையே நிகழும் உறவு, அதன் புதிர் தன்மை, அவ்வுறவுகளில் சித்தரிப்புகள், அவை தரும் பல்வேறு அனுபவ பதிவுகள், சமூகம், சூழல் ஆண் பெண் உறவிற்கு அமைத்திருக்கும் கட்டுபாடு, கற்பித்து வைத்திருக்கும் ஒழுங்கு முறைகள், பாலியல் சித்திரிப்புகள் என்ற பல விஷயங்களை பட்டியலிட்டபடி தேவிபாரதியின் படைப்புகளை படிக்கத் தொடங்கினேன். அதில் எனக்கு புலப்பட்ட சில  விஷயங்கள், அவர் படைப்புகளில் சமூக சூழல் மற்றம் ஜாதி கட்டமைப்பு பாலியல் கட்டமைப்புகளின் ஒழுங்கநெறிகளை தீர்மானிப்பவையாக திகழ்கின்றன.பெரும்பாலான இடங்களில் அச்சித்தரிப்புகள் சமூக, ஜாதியீய கட்டமைப்புகளை மறைமுகமாக சாடியும் அல்லது கட்டுபட்டும் நிற்கும் பதிவுகளாகவும் இருக்கின்றன.

அவர் படைப்புலகில் பாலியல் அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள் பதிவாகி இருக்கின்றன. உறவின் சிக்கல்களும், பாலியல் சார்ந்த உளவியல் பிரச்சனைகளும் பல பிரதிகளில் பேசபடுகிறது. பெண் பாலினம் ஆண் பாலினினத்திலும் தாழ்ந்ததாவளாகவே தேவிபாரதியின் பெரும்பாலான படைப்புகளில் சித்தரிக்கபடுகிறாள்.  

 

இயன்ற அளவு தேவிபாரதியின் படைப்புகளை கால வரிசையின் அடிப்படையில் அணுகி அப்படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ள பாலியல் காட்சிகள், அவை பூடகமாக உணர்த்திச் செல்லும் விஷயங்களை பதிவு செய்ய திட்டமிட்டுருந்தேன். அதன்படி அவரது சிறுகதைகளில் தொடங்கி பின்னர் குறுநாவல்களையும் இறுதியாக நாவல்களையும் பற்றி எழுதுவது சரியான வரிசையாக இருக்கலாம். ஆயினும் சில பொதுவான விஷயங்களும் பூடமாய் சொல்லப்பட்ட விஷயங்களும்(உதாரணத்துக்கு பெண் உடலை சித்தரவரை செய்யும் காட்சிகள் சில சிறுகதைகளிலும், ஒரு குறுநாவலிலும் மேலும் ஒரு நாவலிலும் பதிவாகி இருக்கிறது. அதே போல சமூக, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் சிக்கல்கள் அனேகமாக அவரது பெரும்பாலான படைப்புலகில் இடம் பெற்றிருக்கின்றன) இவற்றை தனித்தனியே பதிவு செய்திருக்கிறேன். 

 

ஆண் மன உளவியலுள் பாலுறவு என்பது பெண்ணுடலை வெல்வதற்கு என்றும், அந்த வெற்றியை நிர்ணயிப்பது அவ்வுறவின் பரவசநிலையில் வெளிப்படும் வார்த்தைகள் தீர்மானிக்கின்றன என்றும் பதிவு செய்கிறது தேவிபாரதியின் சிறுகதை ஒன்று, அந்த வார்த்தைகளில் குறிப்பாக ஒரு அன்னிய ஆண்மகனை பற்றிய குறிப்புகளை பூடமாக உணர்ந்து கொள்ளும் ஆண் மனம், தன்னுடைய தோல்விக்கு காரணமானவனை பலி கொள்ளவும் துணிகிறது. தன்னுடைய மனைவியை பழி வாக்கவும், பயங்கொள்ள செய்யவும் மேற்கொள்ளும் தன் உடலை சிதைத்துக் கொள்ளும் மன நோய்மையை "தாஸ் என்பவனும் தாஸ் என்பவனும்" என்ற சிறுகதை பதிவு செய்கிறது. தாஸ் என்ற ஒவியனிடம் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டேன் என்று சொல்லிவிட்டு போக விழையும் கதை சொல்லி, தான் வருமுன்னரே தாஸ் அங்கிருந்து ஓடிவிட்டான் என்று பதிவு செய்வதன் மூலம் நுட்பமாய் தன்னுடைய கதாநாயத்துவத்தை முன்னிருத்த விழைகிறான் கதைசொல்லி. .

 

"சிகரெட் துண்டுகளும் சில உள்ளாடைகளும்" சிறுகதை பேசுவது இன்னொரு விதமான நோய்மை. இந்த கதையின் மையப் பொருளாக ஒரு வரியில் கதையின் கருவை சொல்வதென்றால், பெண்ணுடலை தன்னுடமையாக நினைக்கும் ஆண் மனச் சிக்கல். அந்த சிக்கல் ஒரு மனபிறழ்வு போல இந்த கதையில் பதிவாகிறது. மனைவியை தன்னுடையாக கருதி, அந்த உரிமை கோராலின் உட்சபட்சமாக அவளை சந்தேகிக்கும் ஆண் மனம் அவள் மீது சொல்லும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்களை தேடியபடியே அல்லது கிடைக்கும் எல்லாவற்றையும் ஆதாரமாக தீவிரமாக நம்பும், வாசகர்களை நம்ப வைத்து கதை மாந்தர் அனைவரையும் சந்தேகிக்க வைக்கும் ஒரு யுத்தி இந்த கதையில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கதையின் கதை சொல்லி தாஸ். முன்னர் சொன்ன கதையில் பூடாகமாய் உளவும் தாஸ் என்ற ஒவியன் தானே இந்த கதையின் கதை சொல்லி என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. 

 

வீடென்ப சிறுகதையில் சொல்லப்பட்ட பாழடைந்த அப்பராயன் வீடு ஒரு நுட்பமான குறியீடு. அவ்வீடு பாழடையக் காரணமானது வீட்டின் ரீப்பர் பழுதடைந்தது என்பதும் அதனை நீண்ட நாள் கவனிக்காமல் போனதும் என்பதும் குறிப்பது வீட்டை மட்டுமல்ல என்று ஆழ்ந்த வாசிப்பில் புரிந்து கொள்ளவியலும். அந்த வீட்டை பழுதடைந்த தன்னுடலோடு கதை சொல்லி ஒப்பீடுவது அந்த சிறுகதைக்கான ஆதாரம் என்று நினைக்கிறேன். அதனை தன்னுடலுடன் மட்டுமின்றி, மனைவியின் உடலுடனும் அவள் உடல் கிளர்த்தும் வாசனைகளுடனும் எளிதாக ஒப்பிட்டு பார்க்கலாம். முதலிரவில் மனைவியுடனான உடல் செயர்க்கை தாழம்பூ வாசனையை கிளர்ந்த்தியதாக பதிவு செய்யும் கதை சொல்லி பின்னர் அதே உறவு துர்நாற்றம் நிறைந்ததாக மாறி போவதாகவும் பதிவு செய்கிறார். அப்படி துர்நாற்றம் பரப்பும் உடலுறவுக்கு காரணமாய் தன்னுடல் பிறருடன் கொண்ட பொருந்தா காமம் என்று சொல்கிறார் கதை சொல்லி. ஆனால் கதை சொல்லி தன் வரிகளில் சொல்லாமலே உணர்த்தும் விஷயங்கள் ஆண் மனதில் நிகழும் பொது புத்தியே பதிவு செய்கிறது. முன்னம் தாழம்பூ வாசனையை கிளர்த்தியவள், கதை சொல்லி சிறைசாலையிலிருந்து பதினான்கு ஆண்டுகள் கழித்து வரும் போது, அவள் உடலிலிருந்து அழுகிய மாம்பழ வாசனை பரவுவதாக பதிவு செய்கிறார். அதற்கு காரணமாய் தன் மனைவியின் தொழில் அழுகிய மாம்பழங்களை விற்பது என்ற நேரடி பொருளை மட்டும் உணரமல், அவர் நுட்பமாக பதிவு செய்திருக்கும் ஒரிரு காட்சிகளால் , வாசகங்களால் அவள் ஒழுக்கம் மற்றும் தொழில் சார்ந்த கற்பனைகளை வாசகர் மனதிற்குள் நிகழ்த்துகிறார். ரீப்பர் பழதடைந்த வீடு போல, காலமும், வரைமுறையற்ற காமமும் இருவரின் உடலையும் பாழாக்கி விட்டதாக உணரலாம். உடல் நறுமணத்தை பற்றிய பதிவுகள் இந்த கதையில் இருப்பதை போலவே நட்ராஜ் மஹராஜ் கதையில் கதை சொல்லியின் மனைவியின் உடன் தவுட்டு மணம் வீசுவதாகவும்,(தி ஜா வின மாப்பிள்ளை தோழன் கதையிலும் உடன் கற்றாழை மணமும் தவிட்டு மணமும் வீசுவதாக ஒரு பதிவிருக்கிறது) கதை சொல்லி அழகான பெண்கள் என்று உணரும் ஒரு சிலர் மேல் சொல்லில் சொல்ல முடியாத நறுமணம் வீசுவதாகவும் பதிவு செய்து இருப்பார்.

 

பலி சிறுகதையில் வரும் சித்திரவதை காட்சி மற்றொரு வகையான ஆண் மன உளவியல் சிக்கல்.  ஒடுக்கப்பட்ட ஜாதியில் இருந்து வரும் ஆண் மகன் தன்னை அடிமைபடுத்திய உயிர் ஜாதி பெண் உடலை சித்திரவதைக்கு உள்ளாக்கி பலி தீர்ப்பதாக சித்தரிக்கபட்ட கதையிலும் ஆண் மனசிக்கலை தாண்டிய உளவியல் செயல்படுகிறது. தன்னை மலம் அல்ல செய்த ஜாதியை சார்ந்தவள் என்பதற்காக இயலாதவளிடம், அதிகாரமற்றவளுமான ஒரு வேசியை பழி தீர்க்கும் உளவியல் சிக்கல், ஆண்ட ஜாதி அடிமை ஜாதியினரை செய்து பார்த்த சித்தரவதைகளுக்கு சற்றும் குறைந்தல்ல. யாரோ செய்த தவறுக்கு யாரையோ பழி தீர்க்கும் இந்த சிக்கலை எந்த விதத்திலும் நியாயபடுத்திவிட முடியவில்லை. "அழிவு" என்ற சிறுகதையில் இன்னதென்று தெளிவே இல்லாத காரணத்திற்காக தன் மனைவி அகல்யா தன்னை கொன்று விடுவாள் என்று கற்பனையாய் பீதியுறும் கணவன் ஒரு மனநோயாளி போல சித்தரிக்கபடுகிறான். அந்த கணவனும் அவன் நண்பனும் பேசிக் கொள்ளும் ஒரு பதிவாக "ஒரு கணவனுக்கு தன் மனைவியை கொல்ல எத்தனை காரணங்களுண்டோ அத்தனை காரணங்கள் மனைவிக்கு கணவன் மேலுண்டு" என்பதை என்னால் எளிதாக கடந்து போக இயலவில்லை. அகல்யாவுக்கு கௌதமன் இழைத்த அநீதிக்கு என்று புராண கதையோடு தொடர்புடையதாக இந்த கதையை பார்த்தாலும் யார் தவறுக்கோ யாரையோ பலி தீர்ப்பது ஒருவித உளவியல் சிக்கலன்றி வேறு என்னவென்று யோசிப்பது.

 

சமூக கட்டமைப்பை பூடமாக பேசும் பிரதி "கரும்பு வெள்ளை கடவுள்" என்ற குறுநாவல். இந்த குறுநாவலில் முதலிலிருந்து கடைசிவரை நாவலின் ஒரு பாத்திரமாகவே வரும் வெள்ளியங்கரிப் புதூரை சேர்ந்த சுப்பரமணியக் கவுண்டர் என்னும் பக்தரொருவரால் கட்டி வைக்கப்பட்ட இளைப்பாறு மண்டபம் ஒரு சாதீய சமூக கட்டமைப்பு பாலியல் ஒழுக்கமுறைமைகளை நாவலில் பறைசாற்றும் அடையாள சின்னம். முதல் பத்தியிலேயே அறிமுகம் ஆகுமிந்த அழகு ததும்பும் கிரைனைட் கல்மண்டபம் இளைப்பாற மட்டும் கட்டபடவில்லை. தன்னுடைய வேண்டுதலை ஏற்று, தன்னுடைய ஒரே மகள் தன்னுடன் ஒன்பதாவது வரை டெம்போ டிரைவருடன் ஓடி போயிருந்திருப்பதற்கான  சாத்தியத்தை தடுத்து நிறுத்தியதற்கான நன்றியறிதலாக   முருகனுக்கு கட்டி வைத்திருந்த அற்புத மண்டபமென்று ஒரு குறிப்பு அடுத்த சில பத்திகளில் பின்னே வருகிறது. நுட்பமாக கவனித்தால் இயல்பாய் தன்னுடன் பயின்ற ஒருவன் மீது நாட்டம் கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் அவன் பால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய பாலியல் உணர்வுகளால் உத்தப்பட்ட ஒரு பெண் அவள் விரும்பத்திற்கு இணங்க களவு மணம் செய்ய இருந்தது சமூக காவலர்கள் தடுத்து நிறுத்தி அந்த செய்கையை புனைவில் வரும் முருகன் மேல் பழிபோட்டு, அதற்கான வெற்றியின் சின்னமாக அடையாளமாக  குளிர்ந்த தரை கொண்ட அந்த கல்மண்டபம் திகழ்கிறது. அது பின்னர் பரதேசிகளின் கூடமாகவும், சில பாலியல் நிகழ்வுகளுக்கு சாட்சியாகவும், சில அசாதாரண மரணங்கள் நிகழ்த்தும் இடமாகவும், கருப்பு வெள்ளை கடவுள் முடிவாக இறுதியாக குடியமர்ந்து அந்த மண்டபம் அழியும் விதமாக நகர்கிறது நாவல்.

 

இதே சாதீய சமூக கட்டமைப்பு மற்றொரு கதையிலும் "பரமனின் பட்டுப் பாவாடை உடுத்திய நான்காவது மகள்" வருகிறது. நாவிதன் மகள், ஆனாலும் வெள்ளைத் தோலும் புத்தி கூர்மையும் கொண்டவள். பச்சை நிற பட்டுபாவாடையை மிகவும் விரும்பு உடுப்பவள். தோலின் நிறம், அறிவுக் கூர்மை, நவ நாகரிக உடையணிதல் இவையாவும் ஒரு குறியீடு போலவும் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு பொருத்தமற்றது என்பது போலும், அப்படி வளரும் பெண் பாலியல் ஒழுங்க கட்டுமாடுகளை மீறுபவர்களாக அல்லது அவள் பரமனின் பிற மகள்களை போலல்லாது தானே தன் மணவாளனை தேரிந்தெடுப்பாள், உயர் ஜாதி பையனோடு தன்னுடைய வீட்டாரின் பலமான கண்காணிப்பை தாண்டியும் ஓடிப்போவாள், சில காலத்திற்கு பிறகு பெரிய நகரில் தனியாக பெரிய நகரில் என்ன ஆனாளோ என்று பைத்தியகாரன் போல் தனது தந்தையை தேடவிடுவாள். இந்த நாவலில்  "கவுண்டனா பெறந்து போயும் போயும் ஒரு நவுசத்திய இழுத்துகிட்டு போயிருக்கறேம் பாரு"  என்ற வரிகள் வருகின்றன, அதன் பின்னர் கதை மாந்தர் பேசும் எல்லாமே அடிமை சாதியின் மீது ஆண்ட சாதியினர் குறிப்பாக அடிமை சாதி பெண் உடல் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை சித்தரப்பதாக வருகிறது. 

 

பஷீரின் கதையொன்றில் நாயர் பெண்கள் ஜாபர் அணியாமல் திறந்த மார்புடன் நம்பூரியின் இல்லத்திற்கு செல்வதை சித்தரிக்கும் காட்சியை நினைவுபடும் பதிவுகள் தேவிபாரதியின் படைப்புலக பிரதிகளிலும் வந்திருக்கின்றன. பலி என்ற சிறுகதையில் தலித் இளைஞன் பிரமண வேசியிடம் தன்னுடைய மூதாதையர் மேலாடை அணியாது அவளுடைய மூதாதையர் முன் நின்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜாதி ஏற்றதாழ்வுகள் மட்டுமல்லாது அதிகாரத்திற்கு உட்பட்டோர் பெண்ணுடல் மீது நடத்தும் அத்துமீறல்களையும் அதனை அடிமைபடுத்தும் காட்சிகளும் தேவிபாரதியின்  படைப்புலகில் பதிவாகி இருக்கிறது, "கருப்பு வெள்ளை கடவுள்" குறுநாவலின் வரும் இன்ஸ்பெக்கர் கொடூரன் என்பதை சித்தரிக்க தேவிபாரதிக்கு கிடைப்பது சித்தரவதைக்கு உள்ளாக்கப்படும் இருபத்தி ஏழு வயதே நிரம்பிய, பள்ளி ஆசிரியின் உடல். அத்தனை சித்திரவதையையும் தாங்கிக் கொண்டு உயிர் பிரியும் நேரத்தில் அந்த பெண்ணில் இதழ்களில் அருப்பும் புன்னகையைக் கூட தாள முடியாத ஆண்ணின் உளவியலை சித்தரிக்கும் அந்த சித்தரவதை காட்சி குறுநாவலுக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறது என்பது எனக்கு இன்னும் விளங்காத புதிர். அந்த பெண்ணுக்கும் கதைக்கும் இருக்கும் ஒரே இணைப்பாக என்னால் பார்க்க முடிந்த விஷயம் அவள் வீட்டிலிருந்து பரிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கிடைத்த காமராஜரின் கருப்பு வெள்ளை புகைப்படம். அந்த புகைப்படத்தை கூட இறுதியில் பொக்கரைன் இயந்திரம் நொருக்கித் தள்ளிவிட்டு போவதாக இறுதியில் ஒரு பதிவு வரும். கல்விக் கண் தந்த கடவுளென்று போற்றபடும் காமராஜரின் புகைப்படத்திற்கே அந்த மரியாதை தான் என்ற நுட்ப சித்தரிப்பை உள்ளடக்கிய பதிவு மேலும் அந்த இன்ஸ்பெக்கடரின் கொடூர குணத்தை மறுபதிவு செய்வதற்கும் உதவும் பதிவாகவும் அதனை காணலாம்.

 

 அதே போலவே நிழலின் தனிமை நாவலின் வரும் சாரதாவுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை. அதுவே கதை சொல்லி அந்த கதை சொல்ல ஆரம்பிக்கும் ஆதார நிகழ்வாய், பல இடங்களில் கதை சொல்லியே பதிவது போல "பழி வாங்கும் இந்த கதை" அந்த நிகழ்விருந்தாலும், அது ஒரு சினிமாத்தனம் நிறைந்தது போல இருக்கும் நுட்பமான பதிவு. ஆண்ட ஜாதியினரோ, பணம் படைத்தவராக இருக்கும் அதிகாரம் படைத்தவர் தனக்கு அடிமைப்பட்டவரிடமோ, பணம் வாங்கிக் கொண்டு தன் அதிகாரத்திற்கு உட்பட்டவரோ இருக்கும் பட்சம் அவர்களின் வீட்டு பெண்களில் உடலை தனது உடைமையாக அதன் மீது ஏதோ ஒரு விதத்தில் தன் அதிகாரத்தை நிலைத்தும் பிரதியாக இந்த நிகழ்வும் வந்து போகிறது. ஒரு ஆணை கொடூரன் என்று நிறுவ, அவன் பழிவாங்கப்பட வேண்டியவன் என்று தீர்க்கமான முடிவுக்கு முடிவுக்கு வர அவன் மேல் வன்மம் கொள்ளச் செய்ய பெண் உடல் அவமானப்பட வேண்டி இருப்பதையே தேவிபாரதியின் "கருப்பு வெள்ளை கடவுள்" குறுநாவலில் வரும் பெண் உடல் மீது நடத்தப்படும் சித்திரவதையும், "நிழலின் தனிமை" நாவலின் வரும் சாரதாவுக்கு நடந்ததாக சித்திரக்கப்படும் வன்கொடுமையும். மஹாபாரத கதையை வெறும் அறியணை உரிமை போராட்டக்கதையாக சித்தரித்திருந்தால் அது மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்க முடியாது. மஹாபாரத போர் தர்மம் தனை சூது கவ்வும் என்ற நியாயத்தை வலுவாக நிலைநாட்டி இருக்க முடியாது திரௌபதி நடு சபையில் மானபங்கபடுத்தபடுவது பின்னர் நிகழவிருக்கும் மஹாபாரத போரில் துச்சாதானும் துரியோதனும் அழிக்கபட என்பதை நியாயபடுத்தவே. இந்த தொழில்நுட்பத்தையே, தேவிபாரதியும் பயன்படுத்தி இருக்கிறார். 

  

பலி கதையை நாடகமாக மாற்ற முயலும் அ. ராமசாமியின் விலகல் தத்துவம் என்ற குறுநாவலில் நிலவும் பாலியல் புனை சித்தரப்பு அதே நாவலில் சொல்லபடும் கலக மனநிலையுடைய. பலி கதையில் வரும் பிரமண வேசி பாத்திரத்தில் ஒரு தலித்தாகவும், தலித் இளைஞனாக பன்றியை தின்று வளர்ந்த வாய் உருவாக்கிய எச்சில் என்று அவள் வாயில் துப்பும், அவள் உடலை பழி கொள்ளும் வரும் பாத்திரமாக ஒரு பிரமண இளைஞனாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேடையில் மூர்க்கமான புணர்வதாகவும், சிகரெட்லாம் சூடுவதாக சித்தரிக்கப்படும் காட்சிகள் நிஜமாகவே நடந்தெரியதாக முடிகிறது நாவல். இங்கே சித்தரவதைக்கு உள்ளானது பிராமண இளைஞனின் உடல், பிரமண இளைஞனை சிகரெட்டால் சுட்டது பெண் வேடமணிந்த தலித் இளைஞன் இவ்விடத்தில் பெண் உடலையும் தாண்டி அடிமை ஜாதி என்ற அழுத்தமான பதிவையும் அவர் உளசிக்கலைகளையும் சித்தரிக்கிறார் தேவிபாரதி. இதற்கும் பிராமண வேசியாக வேடம் தரிக்கும் இளைஞன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகன். அவன் தம் முன்னோர் யாரென்று கூட அறியாது வேறு மாநிலத்தில் வளர்க்கபடுபவன். பின்னரும் இவ்வாறாக காட்சி மாறுவது நமது சமூக அமைப்பின் மீது படைபாளி கொண்டிருக்கும் வெறுப்பான மனநிலையை தான் சுட்டுகிறது.

 

களவொழுக்கத்தில் ஈடுபடும் தமது மனைவிரை கண்டிக்கவோ தண்டிக்கவோ விழையாத அல்லது முடியாத ஆனாலும் அவர்களின் ரகசிய காதலை அறிந்து கொள்ளும் ஆவலில் மணல்வெளியின் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அலைந்து திரியும் "கழைக்கூத்தாடியின் இசை" குறுநாவலில் மிஸ்டர் எக்ஸ் போன்ற கதை மாந்தரின் உளவியல் சிக்கலையும் தேவிபாரதியில் பாலியல் சித்தரிப்புகளின் ஒரு பிரதியாகவே பார்க்க முடிகிறது.  இதே போன்ற இன்னொரு கதாபாத்திரம் நிழலின் தனிமை நாவலில் வரும் பழம் துணி விற்பவன். சுகந்தியின் கணவராக வரும் இவர், தன்னுடைய மனைவி இன்னொருவரிடம் நெருக்கி பழகுவதை(அவள் நிர்வாணமாய் இன்னொருவருடன் படுத்திருப்பதை கூட) கண்டும் காணமல் இருக்கிறார். பழந்துணி விற்பதிலிருந்து கட்பீஸ் கடை வைக்க கதை சொல்லி உதவுவதாக சித்தரிக்கபடுகிறது. அதை தவிர வேறு பெரிய காரணங்கள் எதுவும் தெளிவாக பதியப்படவில்லை. சுகந்திக்கும் அவள் கணவனுக்கும் பாலியல் விஷயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் அழுத்தமான பதிவில்லை. வெறும் பொருளாதார ஆதயங்களுக்காக ஒரு இந்திய கணவன் தன் மனைவியை கண்டும் காணாது இருப்பாரா என்பது என் பெண் மனதுக்கு மட்டும் அகப்படும் சந்தேகமாக இருக்கலாம். சுகந்தியின் கணவனை அவர் செய்யும் தொழிலோடு ஒப்பிட்டு பழந்துணி வியாபாரி என்றும் பின்னர் அவரை கட்பீஸ் கடைக்காரன் என்று குறிப்பிடுவதில் சுகந்தி கதைசொல்லியோடு அறிமுகமாகும் போது இருப்பதற்கும் பின்னர் அவள் புறத்தோற்றம் நவீனமாக உயர்ந்திருப்பதை குறிப்பிடும் நுட்ப பதிவுகளாக பார்த்து வியக்க வைக்கின்றன. பழந்துணியும், கட்பீஸ் என்ற வார்த்தை பிரயோகங்கள் சுகந்தியை குறிப்பவையாக என்னால் உணர முடிகிறது.

 

வேணு கானம் இசைக்க நீலமேக வண்ண சியாமள  உபயோகபடுத்தும் புல்லாங்குழல் பல பெண்களை, ஆண்களை மயங்கி மாயம் செய்தாக பல பதிவுகளை இதிகாச புராண காவியங்களில் பார்க்கிறோம். அதே புல்லாங்குழலை புலம்பி அழுவது போலும் இசைக்க முடியும், கேட்பவர் அனைவரையும் கண்ணீர் விட செய்ய முடியும். அப்படியே தேவிபாரதி சித்தரிக்கும் உடல் கூடல்கள். இவர் சித்திரிக்கும் காமம், பெண் உடல் கொண்டாட்டத்திற்குரியதாக இல்லை. அது ஏதேனும் ஒரு காரிய நிமித்தமே நடைபெறுகிறது. தனிமையின் நிழல் நாவலில் கதை சொல்லிக்கு சுலோச்சனாவோடு நடக்கும் உடல் சேர்க்கை எல்லாமே கதைசொல்லி, அந்த கதையில் வரும் கருணாகரன் என்ற கதாபாத்திரம் சாரதாவுக்கு நடத்திய பாலியல் கொடுமைக்கு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துகிறார். அதே நாவலின் சுகந்தியுடனான அவரது உறவும் ஏதோ ஒரு ஆதாயத்தின் பொருட்டே நகர்கிறது. சுகந்திக்கும் அவள் கணவருக்கும் அது பொருளாதார மேம்பாடாக இருக்கிறது. கதை சொல்லிக்கு அது தன்னுடைய பழி வாங்கும் படலம் பொருட்டு தன்னால் ஏமாற்றப்பட்ட முன்னாள் காதலியை மறக்கவும் அதிலிருந்து மீண்டு மறுவாழ்வை பேண காரணியாக இருக்கிறது.

 

நிழலின் தனிமை நாவலில் "காலம்" மிக முக்கியமான உணர்வின் நகர்வுகளும் அதனால் தேவிபாரதி சித்திரிக்கும் மனித உணர்வுகளை தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது. அது அவர் நிர்மாணிக்கும் பாலியல் கட்டமைப்புகளையும் கூட காலம் மாற்றுகிறது. கதை சொல்லியின் நிகழ்காலத்திலிருந்து சற்றேரக்குறைய முப்பதைந்தாண்டுகளுக்கு முன்னர் வரும் கருணாகரன், சாரதாவுக்கு நிகழ்ந்தும் வன்கொடுமைக்கு கிட்டத்தட்ட நிகரான சிக்கல்களை கதைசொல்லி சுலோச்சனாவுக்கும், சுகந்திக்கும் செய்கிறான். தன்னை பல இடங்களில் கருணாகரனின் பிரதியாக நினைத்து குற்ற உணர்வுக்கு உள்ளாகிறான். நாவலின் முக்கியமான ஒரு இடத்தில் "உங்க பெரு கருணாகரனா?" என்று ஒரு கந்துவட்டிகாரன் கேட்கும் போது கதை சொல்லிக்கு ஏற்படும் அதே அளவிளான அதிர்ச்சி படிப்பவர்களுக்கும் ஏற்படுவது தேவிபாரதியின் நாவலுக்கு கிடைத்த வெற்றி. கருணகாரன் என்ற பெயரை அந்த நாவலின் ஆழமான கெட்ட வார்த்தை போலவும் பாலியல் குறியீடு போலவும் பழி தீர்க்க பட வேண்டியவன் என்பது போலவும் உபயோகபடுத்தி இருக்கிறார் நாவலாசிரியர். நாவலின் இறுதியில் சாரதா "இவன் அவன் இல்லை, அவனோட சாயலில் இருக்கறதால நீயும் ஏமாந்துட்டன்னு" என்பது மிக நுட்பமான பதிவு. காலமே மட்டும் இந்த மாறுபட்ட நிகழ்வுகளுக்கு காரணமாகிறது 

 

மேலும் மிகவும் அதிர்ச்சியுட்ட கூட இன்னொரு பதிவு நிழலின் தனிமை நாவலில் வின்சென்ட் என்று கதைசொல்லியின் நண்பனுக்கு, கதை சொல்லியின் சகோதரி வன்கொடுமைக்கு ஆளான விஷயத்தை, கதை சொல்லி ரகசிய பரிமாறலாகவும், தன்னை ஆற்றுபடுத்தி கொள்ளவும் பகிரப்படும் வார்த்தைகளையும் கருணாகரனை தன் கொன்று பழி தீர்க்க இருப்பதாக சூளுரைப்பதையும் பார்த்து அவனுக்கு ஆறுதல் தேறுதல் சொல்லும் அதே நேரம் அவன் சுயமைதுவம் செய்து கொள்வதையும் சேர்த்து பதிவு செய்து நம்மை அதிரவிடுகிறார் நாவலாசிரியர்.

 

நிழலின் தனிமை நாவலில் கதை சொல்லிக்கு சுலோசனா, சுகந்தி இருவரிடத்திலும் காதலற்ற காமம் இருக்கிறது.  தமக்கைக்கு நடந்த வன்கொடுமை பழி தீர்க்க என்று சுலோசனாவோடு ஆரம்பித்த உணர்வு பின்னர் காதலாக அவர் அறியாமலேயே கனிகிறது. அதே போலவே சுகந்தி பிறன்மனை என்ற உணர்வு கதைசொல்லியின் மன ஆழங்களில் இருக்கும் போதும், அவளுடைய அன்யோன்யம் அவளை தன்னுடையவளாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்க வைக்கிறது. அவள் மேல் காதல் வருகிறது. ஆனால் மீண்டும் சுலோசனாவை பற்றி அவன் கேள்வியுறும் விஷயங்கள் சுகந்தியிடமிருந்து விலக செய்கிறது, சுகந்தியிடமிருந்து விலகியும் விலக முடியாமலும் ஊசலாடும் உறவு சுகந்தியின் கணவன் மேல் அவள் காட்டும் பரிவில் நிரந்தரமாக பிரிந்து பரிதவிக்கும் அல்லது ஆசுவசிக்கும் உணர்வாக மேலோட்டமாக பதியும் பிரதியில், ஊருக்கு ஓரிரு நாள் சென்று பின்னர் அலுவலத்தில் தன்னை யாரும் வந்து விசாரித்தார்களா என்றும் ஒருவேளை சுகந்தி வந்திருப்பாளோ என்ற உள்மன பிரதியை  பதிவு செய்யும் போது மிக நுட்பமாக கதைசொல்லி சுகந்தி மீது கொண்டிருக்கும் நுண்ணார்வம் பூடமாக பதிவாகிறது. சுகந்தியிடமிருந்து விலகி ஓடுவது சுலோசனாவின் மீது அவனுக்கு இருக்கும் பரிவு தான். தனக்கும் சுலோவுக்கும் இருந்த உறவை சுலோசனாவின் மாமியார் மற்றும் அவள் வீட்டு உறவினர் தொடர் அவமானம் செய்யும் போது உணர்வின்வயப்பட்டு வெளிபடுத்தி அவளுக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திய குற்றஉணர்வுமே சுலோச்சனா மீதான பரிவுக்கு காரணமாகும். ஆக சுலோசனாவை பழிவாங்க என்று ஏற்படுத்திக் கொண்ட உறவு பின்னர் அவள் மேல் பரிவு காட்ட காரணமாக ஆகிறது. ஆயினும் அந்த பரிவை அங்கீகாரம் பெற முடியாத அவநிலைக்கு கதை சொல்லி தள்ளபடுவதும், சுலோசனா அவளை பின்னர் முன்னிலையில் அதிகாரம் செய்வதும், செய்யும் உதவிகளுக்கு பணம் கொடுத்து அவனை அவமானப்படுத்துவதும் பரிதாபத்திற்குரியதும், சுலோசனாவின் பார்வையில்(வாசக பிரதியில்) மிகவும் நியாமானதாகவும் சித்தரிக்கபடுகிறது. 

 

"நிழிலின் தனிமை" நாவலில் பழி வாங்க துடிக்கும் கதை சொல்லி எல்லா இடத்திலும் தோல்வியடைந்தவனாக தன் கதையை, தன் பாலியல் இச்சைகளை தன்னிஷ்டபட நகர்த்த முடியாதவனாகவே பதிவாகிறான். பழந்துணி வியாபாரி, கட் பீஸ் கடையை முதலாளி ஆன பின்னர் தன் மனைவியை தக்க வைத்துக் கொள்ள சின்ன இருமலால் எல்லா உரிமைகளையும் மீட்டு எடுத்துவிட முடிகிறது. முதல் முறை அன்பென்று ஏமாற்றப்பட்டவள் மறுபடி நிஜமான பரிவோடு காதலோடு கதை சொல்லி அணுகி தரும் ஒரு முத்தம் அவளை தன் கணவனோடு யாருமே எதிர்பார்க்காத வகையில் சமாதானம் செய்து கொள்ள துரத்துகிறது. கதை சொல்லி என்றென்றைக்குமான தனிமையில் தள்ளப்படுகிறான். சுமார் நான்பாதாண்டு காலம் தனக்குள் எரிந்து கொண்டிருந்த பழி என்ற தீயும் "இவன் அவனில்லை" என்று சாரதா கூறும் ஒரு வார்த்தையில் நாராசமாக அழிந்து போகிறது.

 

நட்ராஜ் மஹாராஜ் நாவலில் பெண் , ஆண் பாலினம் சார்ந்த நுட்பமான பதிவொன்று வருகிறது. டிசி பதிவு செய்யும் பதிவேட்டில் மாணவர்களில் விபரங்களை நீல வண்ண மையிலும் மாணவிகளில் விபரங்களை சிவப்பு வண்ண மையிலும் எழுதுவதாக வரும் பதிவது. பார்வைக்கு இது பார்த்ததும் பாலினத்தை அடையாளபடுத்த ஏற்படுத்தப்பட்ட நிற வேறுபாடாக மட்டும் எனக்கு தோன்றவில்லை. தேவிபாரதியின் அடிமனத்தில் ஆழமாய் பதிந்திருக்கும் கலக மனநிலையை இது பறை சாற்றுகிறது. சிவப்பு என்பது கலகம், புரட்சியை குறிக்கும். மேலும் அறிவுசார் துறைகளில் பிழைகளை அடிக்குறியிட சிவப்பு நிறம் பயன்படுத்தப்படும். பாலியல் தொழிலை குறிக்கும் நிறமும் சிவப்பு. ஒருவர் ஜாதியை சொல்லி அழைத்தாலே குற்றமாகும் இந்த சூழலில், ஒரு பாலினத்தையே வேறு நிறத்தில் பதிவு செய்ய துணியும் தேவிபாரதியில் எழுத்தை என்ன சொல்லி வியப்பது அல்லது சாடுவதென்று எனக்கு தெரியவில்லை. இப்படி கூட இட்டுகட்டி பேச முடியுமா என்று என்னை நானே வியக்கிறேன். ஆம் சிவப்பு என்ற நிறத்தை பெண்ணுக்கு குறீயீடாக பயன்படுத்தியது தேவிபாரதி படைப்புலக கலகம் என்று சுட்டிக்காட்ட விழைகிறேன். 

 

நட்ராஜ் மஹராஜ் நாவலில் நாவலாசிரியர் பெண்களுக்கு பெயரிடும் முறையிலும் பாலினம் மற்றும் பாலுணர்வு சார்ந்த குறியீடுகளை பிரதி முழுக்க காணமுடியும். குறிப்பேட்டில் சிவப்பு நிறத்தில் மாணவிகளின் பெயர்கள் எழுதப்படும் போது ச என்ற பெயருடைய பெண்ணின் பெயரை சா என்று பிழையோடு எழுதி முடிக்கும் கதை சொல்லி அது மிகவும் ஆபாசமான பொருள் படுவதாகவும் பதிவு செய்தது மேம்போக்கான பதிவாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பெண்களை பொது புத்தியோடு ஒரு எழுத்து பிழையில் ஆபாசமாக சித்தரித்துவிட முடியும் என்ற ஆண் மன உளவியல் சிக்கலாய் இதை பார்க்கிறேன். மேலும் பேராசிரியர் பூவின் உதவியாளராய் அவருடன் வரும் பெண்ணுக்கு ஸ் என்று பெயரிடுவதிலும் இந்த நுட்ப பரிகாசத்தை என்னால் உணர முடிந்தது. Sex என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது வரும் ஒலியையும், S என்று தமிழில் தட்டச்சினால் ஸ் என்று வரும் அமைப்பையும் நினைவூட்டும் பரிகாசம் அது என்று நான் நினைக்கிறேன்.

 

தேவிபாரதியின் படைப்புலகில் வரும் பாலியல் சித்தரிப்புகள், கண நேர பிசகுகள் போல் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு பெண் தன் வாழ்க்கையை பகிர, ஒருவடனும் ஓடிப்போக வேண்டும் என்று தீர்மானிக்க சில மணித்துளிகள் போதுமானதாக இருக்கிறது. அதற்கு ஒரு பாம்பே மிட்டாய் விற்பவன் பொற்கொல்லன் போல் மிகுந்த கலைநுட்பத்தோடு செய்துத் தரும் மிட்டாய் கை கடிகாரம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் அது சமூக காவலர்களால் பரப்பட்ட கட்டுகதையோ என்று நினைப்பதற்கு நாற்பத்து ஐந்து நாள் கழித்து நடக்கும் விழாவில் மீண்டும் கேட்டும் பாம்பே மிட்டாய்ய்ய்ய் என்ற குரல் போதுமானதாக இருக்கிறது. ஒரு கூட்ட நெரிசலில் யாருக்கு தெரிந்து விட போகிறது என்று பெண்ணுடல் மீது ஆண் தனது பாலியல் இச்சையால் உத்தப்பட்டு நடத்து அத்துமீறலகள் பதிவாகிறது. இதில் அந்த பெண்ணுக்கும் உடன்பாடிருக்கிறது அவளும் களிபுறுகிறாள், யாரும் அறிந்துவிட மாட்டார் என்ற பரிபூரண சுந்தரமே இந்த கண நேர பிசகுகளுக்கு காரணம் என்று பதிவு செய்கிறார் நாவலாசிரியர். இது வாசககளில் உள்ள கிடங்கில் தேங்கி கிடக்கும் கசடுகளை அசைத்து பார்ப்பது. ஜன நெரிசலில் யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியை உரசியோ, அழுத்தியோ பார்ப்பதால் என்ன பேரின்பம் கிடைத்திட கூடும். தேவிபாரதியின் பதிவின் இரு பாலினரும் இந்த பிசகுக்கு துணை போகின்றார். இருவருமே யாருக்கும் தெரியாமல் இதனால் களிப்புறுகின்றனர்.  ஒழுக்க மனம் ஏற்கமறுக்கும் நிதர்சன பதிவு. அதே போல பெருவேடன் காளிங்க நடராஜின் படங்களும் பேனர்களும் அவரின் பட்டத்து மஹாராணியின் படங்களையும் கண்ணுறும் நட்ராஜ் மஹாராஜ் அந்த சித்திரங்களில் வரையப்பட்ட பெண்ணை அதே கதையில் வரும் ஸ் என்ற பெண்ணோடு ஒப்பிட்டு உருவ ஒற்றுமை வேற்றுமைகளை பதிவு செய்து கொண்டே வரும் போது அந்த பெண்ணின் அங்க வளைவுகளை தன்னை அறியாது ரகசியமாக ரசிக்கிறான்  காளிங்க மஹாராஜ் தனது கொள்ளு பாட்டன் என்றால் அவரது பட்டது மஹாராணியான அந்த படத்திலிருப்பது தனது கொள்ளுபாட்டி என்று ஒழுங்க நியதிகளை நினைவுற்று, அந்த புகைப்படத்தை பாலியல் கண்ணோட்டத்தோடு பார்த்தது தவறு என்று குற்ற உணர்வும் கொள்கிறான். தன்னுடைய கொள்ளு பாட்டியின் பேனரின் வரையப்பட்டிருக்கும் பெண் அவயங்களை அவன் மூன்று முறை பார்க்கும் போது வெவ்வேறு ஆடவர் மூவர் அதனை தடவிக் கொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாகிறான். நமது சமூக கட்டமைப்பில் பாலின

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2022 22:12
No comments have been added yet.


Devibharathi's Blog

Devibharathi
Devibharathi isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Devibharathi's blog with rss.