தாமரையில் வந்த கட்டுரை
நிரம்பித் தழும்பும் நதி
- மதன் ராமலிங்கம் .
சிறுகதை, நாவல் என்ற வடிவங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அடித்தட்டு மக்களின் வேதனைகளையும் சக மனிதர்களினால் சுரண்டப்படும் அவலங்களையும் பதிவு செய்தே வந்திருக்கிறது. ஆங்கில இலக்கியம் பயின்ற முதல் தலைமுறை எழுத்தாளர்களால் அவைப் பொதுமொழியில் எழுதப்பட்டு ,எண்பதுகளில் வட்டார வழக்கில் எழுதும் படைப்பாளிகளால் தங்கள் மண்ணின் அசலான மனிதர்கள், அந்த பிராந்தியத்தின் தொன்மங்கள்,அவலங்கள் எழுதப்பட்டன .தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை புதிய திறப்பை எற்படுத்தியது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், சாதி மேலாதிக்கத்தின் அடக்குமுறைகளையும் எழுதும் சுதந்திரத்தைப் படைப்பாளிகளுக்கு வழங்கியது. மேல்சாதியின மக்களை அண்டிவாழும், அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை ஊழியம் செய்துதங்களின் வாழ்வை அவர்களுக்காகவே அற்பணித்த சமூகங்களிலிருந்து எழுத வந்த படைப்பாளிகள் மூலம் பல சாதிகளின் பிரச்சனைகளையும் அவர்கள் வாழ்வின் சுக துக்கங்களையும் இரத்தமும் சதையுமாக உணர முடிகிறது. அந்த வகையில் எழுத்தாளர் தேவிபாரதி தன் எழுத்தின் துவக்கம் முதலே கொங்கு வட்டாரத்தில் நிலவுடமைச் சமூகத்திற்கு குடிநாவிதர்களாக ஊழியம் செய்யும் எளிய மனிதர்கள் குறித்து தொடர்ச்சியாகப் பதிவு செய்தே வந்திருக்கிறார். இந்த "நீர்வழிப் படூஉம்" நாவலும் குடிநாவிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது.
இந்த நாவல் குறித்து பேசுவதற்கு முன் தமிழ் புனைவுப் பரப்பில் நாவிதர் சமூகம் குறித்து வெளி வந்த படைப்புகள் எவை என்பதைப் பார்த்தால் சிறுகதைகளில் புதுமைப்பித்தன் எழுதிய ‘நாசகாரக் கும்பல்’ கதையில், தன் சொல்லுக்கு கட்டுப்படாத மருத்துவன் மருதப்பனை அடித்து உதைத்து ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் சிதம்பரம் பிள்ளை. சாபமிட்டுப் போகும் மருதப்பன் பின்னர் முஸ்லீம் சமுதாயத்துக்கு மாறிவிட்டதாகக் கதை முடியும். இந்தக் கதை நாவிதர்கள் மருத்துவர்களாகவும் பணி செய்ததைப் பதிவு செய்கிறது. முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ நாவலும் இதே கருத்தை வழியுறுத்துகிறது. வரலாற்றில் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படாத நாவிதர்களின் வாழ்வையும், அவர்கள் சார்ந்திருந்த மருத்துவத்தையும் "சுளுந்தீ"விரிவாகச் சொன்ன நாவல்களில் முக்கியமானது..
வண்ணநிலவனின் ‘மயான காண்டம்’ சிறுகதையில் மயானத்தில் பிணம் எறிக்கும் பண்டிதன் செல்லையாவின் வறுமையையும், அவனின் பாடுகளையும் சொல்கிறது. இந்தக் கதை கிராமங்களில் பிணத்தை எறிக்க, புதைக்க, மயானச் சாங்கியங்களைச் செய்பவர்களாகவும் நாவிதர்கள் இருந்தார்கள் என்கிற சித்திரத்தைத் தருகிறது. எஸ். ராமகிருஷ்ணனின் ‘ மினர்வா சலூன் ‘ சிறுகதையில் ரங்கூனில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவும் வகையில் இந்திய தேசிய ராணுவம் கட்டமைப்பதில் அணுக்கமாக இருந்த கருப்பையா எனும் நாவிதனைப் பற்றிச் சொல்கிறது.
கொங்கு வட்டாரத்தின் படைப்பாளிகளான ஆர்.சண்முக சுந்தரம், பெருமாள் முருகன், என்.ஸ்ரீராம், எம்.கோபாலகிருஷ்ணன், வாமு.கோமு தொடங்கி குணா கந்தசாமி, கே.என்.செந்தில் முதலானவர்களின் சிறுகதைகளில் கதைமாந்தர்களாக நாவிதர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் .சிறுகதைகள் எழுதப்பட்டஅளவிற்கு நாவல்கள் அதிகம் வரவில்லை .தேவிபாரதியின் "நிழலின்தனிமை", முத்துநாகுவின் "சுளுந்தீ’’ என சில நாவல்கள் தான் நினைவுக்கு வருகிறது.
மீபத்தில் வெளிவந்த தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’’ ’நாவல் கொங்குப் பகுதி கிராமம் ஒன்றில் வேளாளர்களை அண்டி வாழ்ந்த ஒரு நாவிதர் குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்கிறது. குடிமகன், மருத்துவன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் அச்சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவித்த சாதிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருக்க்க்கூடும். ஆனால் நாவலின் ஒரு பகுதியில் கூடஅத்தகைய சம்பவங்களோ காட்சிகளோ இடம்பெறவே இல்லை. இது நாவலின் மிக சிறப்பான அம்சம். குறை கூறுவதும் மற்றவர்களின் மீது பழி போடுவதும் வன்மத்தைத் தான் வளர்க்குமே தவிர இணக்கத்தை உருவாக்காது என்பதை நாவலாசிரியர் உணர்ந்திருப்பதால் கதைமாந்தருக்குள் இருக்கும் இரக்கத்தையும் அன்பின் தருணங்களையுமே பேச விழைகிறார்.
கொங்குப் பகுதியில் பாடப்படும் அண்ணன்மார் கதைப்பாடல் அண்ணன் தங்கையின் அன்பைப் பேசும் தொன்மம். இந்த நாவலில் அது நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. இறப்பு வீடுகளில் பாடப்படும் ஒப்பாரி ,தங்களின் துயர்வுறும் சமயங்களில் அண்ணன்மார் கதைப் பாடலில் நல்லதங்களின் துயர் நிறைந்த வாழ்வை தங்களின் வாழ்வோடு ஒப்பீடு செய்வதையும் காணமுடிகிறது. பின்னாளில்" பாசமலர்" போன்ற திரைப்படங்களை, அதில் இடம் பெறும் காட்சிகளை முன்னுதாரணமாக அம்மக்கள் கொண்டிருப்பதையும் நாவல் சில இடங்களில் பதிவு செய்கிறது. இது சமூகத்தின் வளர்ச்சியாகப் பார்க்கலாம்.
காருமாமா என்ற குடிநாவிதனின் மரணத்தில் துவங்கும் நாவல் அவரின் தனிமை நிரம்பிய வீழ்ச்சியுற்ற வாழ்வின் துயரங்களைப் பேசுகிறது. தன்னைவிட்டுச் சென்ற மனைவியை தேடித்திரியும் காருமாமா பழனியில் சில நாவிதர்களால் சந்தேகத்தின் பேரில் அடித்து உதைக்கப்பட்டு பின் அவர்களால் கப்பாற்றப்படும் போதும், நோய்வாய்ப்பட்டு பெருநகரத்தின் புறநகர்பகுதியில் வாழும் தங்கையின் வீட்டில் தஞ்சம் அடையும் போதும், அங்கிருக்கும் ஒரு சலூன் கடைக்காரனால் துறத்தப்பட்டுபின் காருமாமாவின் நிலையைத் தெரிந்துகொண்டு அவருக்கு சிகை அலங்காரம் செய்வது போன்ற காட்சிகளின் ஊடாக அவர்களின் துயர வாழ்வையும் அதில் கசியும் அன்பையும் சொல்லும் இடங்கள் நாவலில் உட்சமான இடங்களாகச் சொல்லலாம்.
உலகமயமாக்கப்பட்ட, நவீன வாழ்வில் வழக்கொழிந்துபோன வட்டார வழக்கு பேச்சு மொழியை, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வழங்குச் சொற்களை நுட்பமாக பயன்படுத்தியது நாவலை வாசிக்கும் போது அந்த காலகட்டத்திற்கு இட்டுச்செல்கிறது.
தேவிபாரதியின் முந்தைய நாவலான ‘நிழலின்தனிமை’யில் ஆதிக்கசாதி ஆண் ஒருவனால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நாவிதப் பெண்ணின் பழிவாங்கும் அறைகூவலாகவும், அதற்கு தன்அண்ணன்கருவியாவதும். அவரின் அக, புறச்சிக்கல்களை மிக நேர்த்தியான மொழிநடையில் சொல்லியிருப்பார். முதல் நாவலில் பழிவாங்கத் துடிக்கும் கதைமாந்தர்கள் மூன்றாம் நாவலில் மிகப்பெரிய துரோகத்தை மன்னிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அன்பு செலுத்தவும் செய்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது இது வெறும் கதைமாந்தர்களின் மனமுதிர்ச்சி மட்டுமல்ல இதை எழுதிய தேவிபாரதியின் படைப்பு சார்ந்த வளர்ச்சி என்பதாகவே பார்க்கிறேன்.
எல்லோராலும் கைவிடப்பட்ட காருமாமா தான் நாவலின் மையம் என்ற போதிலும் இதில் வரும் பெண்களே முதன்மையானவர்கள். கதைசொல்லியின் மூன்று பெரியம்மாக்கள், அம்மா, அத்தை, அக்காள், தங்கை, முறைப்பெண்கள் என்று இந்த நாவல் வரும் பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்தாலும் சரியோ தவறோ எல்லா முடிவுகளையும் தாங்களாகவே எடுக்கும் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள்.
தன் படைப்பின் வழியாக ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் வாழும் சமூகம் சார்ந்த படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். அவைகளால் அச்சமூகத்தின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. அந்தவகையில் தேவிபாரதியின் இந்த நாவல் தன் மொழி ஆளுமையால், சக மனிதர்கள் மீதான அன்பால் நிரம்பித் தழும்பி ஓடும் நதியாக எந்த தடையும் இல்லாமல் பாய்ந்து செல்கிறது.
நன்றி
தாமரை
நவம்பர் -2020
Devibharathi's Blog
- Devibharathi's profile
- 18 followers
