இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்

(குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்)

இரும்பின் தொன்மை என்ற பெயரே சரியில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழன் இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி.

இப்புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெங்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic. இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படிப் பிரிப்பதற்குக் காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை  உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான உஷ்ணம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான உஷ்ணம் 232 C)  சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக உஷ்ணம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்குத் தேவையான தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகள் மனிதனிடம் இல்லை.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தை நான்  சொல்ல வேண்டும். இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் அந்தந்த காலகட்டங்களில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம். நம் இரும்புக் காலமும் சீனத்தின் இரும்புக் காலமும் ஒன்றல்ல.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். (இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம் – சில விதி விலக்குகளைத் தவிர. இந்தியா ஒரு விதி விலக்கு. இங்கே இரும்புக்காலம் வரலாற்றுக் காலத்திற்குள் வருகிறது. இதுவும் இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.) இதில் முக்கியமான சொல் ‘பரவலாக’. அதாவது மனிதன் ஆயுதங்களை வைத்து இன்னொரு இடத்தின் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையுமே நாம் இரும்புக் காலம் என்று அழைக்கிறோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்த காலம்.

இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பை உபயோகித்துக் கொண்டிருந்தான். இது தமிழ் நாட்டில் மட்டும், இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று திரு ஸ்டாலின் சொல்வது போலச் சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பைத் தயாரிக்கும் முறை பரவியதா? போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.  “இரும்பின் தொன்மை” புத்தகம் அவ்வாறு சொல்லவில்லை.  

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் இரும்பு உலைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தன என்று சொல்கிறது. குறிப்பாக கொடுமணல் கிடைத்த இரும்பு உருக்கும் உலையைப் பற்றிச் சொல்லி விட்டு அது போன்ற தொல்லியல்தளங்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று சொல்கிறது.மாங்காட்டில் கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது.மயிலாடும் பாறையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு 2172ஆதிச்ச நல்லூரில் கிடைத்த (மண்ணடுக்கு 4)இரும்புப் பொருட்களின் சராசரிக் காலம் கி.மு 2522.சிவகளையில் கிடைத்த பொருட்களைக் குறித்து புத்தகம் சொல்வது இது: மூன்று தாழிகள் கிடைத்தன. அதில் மூடி இறுக்கமாக இருந்த தாழியிலிருந்து நெல்மணிகளும் இரும்பாலான பொருட்களும் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155. மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தது. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 3345.தெலுங்கனூரில் கிடைத்த வாளின் பிடியின் காலம் 2900-2727. மறுபகுதியின் காலம் 1422-1233.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு புத்தகத்தின் கூற்றுப்படியே 2500 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதாவது 2்000 வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2500 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை.இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டின் காலம். இரும்பின் காலம் அல்ல.  அகழ்வாராய்வின் அடிப்படை விதி ஒரு மண்ணடுக்கின் காலம் அதில் கிடைக்கின்ற காலத்தில் மிகவும் பிற்பட்ட பொருளில் காலம் என்று தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு மண்ணடுக்கில் 15ம் நூற்றாண்டின் பொருள் கிடைத்தால் அதன் காலம் 15ம் நூற்றாண்டு என்றுதான் கொள்ள வேண்டும். அதில் கி மு இரண்டாம் நூற்றாண்டின் பொருள் ஒன்றும் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதே அடுக்கில் காலம் அறுதியிடப்படாத பொருளுக்கு கி மு இரண்டாம் நூற்றாண்டு என்று கால வரையறை செய்ய முடியாது. அதாவது கரித்துண்டின் காலத்தை அப்படியே இரும்பிற்கு ஏற்ற முடியாது. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அதன் காலத்தைப் பற்றியோ குறிப்பிடவில்லை.இவர்களே கத்தியின் பிடிக்குக் காலம் ஒன்று மற்ற பகுதிக்கு ஒன்று என்று சொல்கிறார்கள்! அதாவது பிடி செய்து  1500 ஆண்டுகளுக்கு பிறகு வாள் செய்யப்பட்டு பிடியோடு பொருத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்! எல்லா நம்பிக்கைகளையும் ஆய்வுக்கூட அறிக்கை மீது வைத்தால் முடிவுகள் இது போன்று வேடிக்கையாகத்தான் இருக்கும்.கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. கீழடி நிச்சயம் நகர நாகரிகம் இல்லை.

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artefacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது கி.மு 3600 என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்!) அடிப்படையில் இரும்புப் பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்த்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது!

சுருக்கமாக,

இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது சரியாகாது.ஒரே கத்தியில் பிடிக்கு ஒரு காலம் மற்ற பகுதிக்கு இன்னொரு காலம் என்ற முடிவு வந்தது ஒரு பொருளின் காலத்தை ஆய்வுக் கூட முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றைய சான்றுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரையறை செய்வது சரியாகாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2025 15:33
No comments have been added yet.


P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.