சார்ஜ் ஷீட் 42/2021- 7ம் அத்தியாயம்

மிஸ்டர்செல்வராஜ் தலைமையிலான தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அடுத்து என்ன செய்யும் என்பதைஅறிந்தே இருந்தோம். அப்படியே நடந்தது. ஜூன் 10ம் தேதி ஒரு பதிவு தபால் சாத்தூர் குயில்தோப்பிற்கு வந்தது. ஹெச்.ஆர்.டிபார்ட்மெண்ட் முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார் கையெழுத்திட்டிருந்தார். அவர்தான் ஒழுங்கு அதிகாரி! (Disciplinary Authority) ஜூன் 7ம் தேதியிட்ட கடிதம் அது. அதாவது நான் சார்ஜ் ஷீட்டிற்கு பதிலளித்த பின்னர் ஏறத்தாழஇரண்டு மாதம் கழித்து என் பதில் மீதான நிர்வாகத்தின் கடிதம்.
“30.3.2021தேதியிட்ட சார்ஜ் ஷீட்டிற்கு மிஸ்டர் மாதவராஜ் அனுப்பிய கடிதம் என் பார்வைக்கு வைக்கப்பட்டுஇருந்தது. சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையும், அந்த குற்றச்சாட்டிற்குஅடிப்படையான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படித்தேன். குற்றச்சாட்டுகளையும் அதற்குரியபதிலையும் ஆராய்ந்து பார்த்ததில், அந்த பதில் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. எனவே தமிழ்நாடுகிராம வங்கி பணியாளர் விதிகளின்படி, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.”

அதற்குமேல் கடிதத்தைப் படிக்காமல் எழுந்து உட்கார்ந்தேன். கொரோனா வைரஸிலிருந்து மீண்டு, உடல் மெலிந்து, அசதியில்துவண்டு போயிருந்ததை எல்லாம் மீறிய வீம்பு ஜிவ்வென்றிருந்தது.
முதலில்குற்றச்சாட்டுகளே ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லையே. சார்ஜ் ஷீட் என்பது குழப்பமில்லாமல்தெளிவாகவும், தேவையான விபரங்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் விதி. (InDisciplinary proceedings, a charge sheet should not be vague. It should beclear and specific with all relevant details.) அப்படி எந்த விபரங்களும் சார்ஜ் ஷீட்டில்இல்லை.
முதலாவதாக,1.3.2021 அன்று ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிலரோடு நான் தலைமையலுவலகத்தில் முரட்டுத்தனமாகவும்அநாகரீகமாகவும் நுழைந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் நுழைந்தார்கள்என்ற விபரம் இல்லை. யார் யார் என்று பெயர்கள் இல்லை. முரட்டுத்தனமாக என்றால் எப்படி?யாரையாவது தள்ளிவிட்டு அல்லது எதையாவது போட்டு உடைத்துவிட்டு நுழைந்தோமா? அது குறித்தவிபரம் இல்லை. அப்புறம் அநாகரீகமாக என்றால்? சட்டை கிட்டை போடாமலா உள்ளே நுழைந்தோம்? குழப்பமாகஇருக்கிறதா இல்லையா?
இரண்டாவதாக,அலுவலகத்திற்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் நிறுவனத்தின் கண்ணியத்தை சீரழித்துவிட்டீர்கள் என்று குற்றச்சாட்டு. என்னய்யாஅந்த அலுவலகத்திற்குரிய ஒழுக்கம்? அதை முதலில் சொல்ல வேண்டாமா? அதில் எதை கடைப்பிடிக்கவில்லை,எப்படி மீறினார்கள் என்று சொல்ல வேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நிறுவனத்தின்கண்ணியத்தை குலைத்து விட்டீர்கள் என்றால் எப்படி புரிந்து கொள்வது?
மூன்றாவதுதலைமையலுவலகதிற்குள் சத்தம் போட்டு, சேர்மன் கேபின் முன்னால் சலசலப்பை ஏற்படுத்தினோம்என்று குற்றச்சாட்டு. என்ன சொல்லி சத்தம் போட்டார்கள்,என்ன வார்த்தைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்பட வேண்டாமா? அந்த விபரங்களைச் சொன்னால்தான்மனிதர்களைக் குறிப்பதாக அர்த்தம். வெறுமனே சத்தம் போட்டார்கள், சலசலப்பை ஏற்படுத்தினார்கள்என்றால் உள்ளே சென்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?
கடைசியாகதலைமையலுவலகத்தில் சேர்மன் வெளியே செல்லும்போது வழி விடாமல் தடுத்தீர்கள் என்றும் தலைமையலுவலக ஊழியர்களின் நடமாட்டங்களுக்குஇடையூறு செய்தீர்கள் என்றும் குற்றச்சாட்டு. வழி விடவில்லை என்றால் எந்த வழி என்று குறிப்பிட வேண்டும். யார் யாரெல்லாம் வழிவிடவில்லை என பெயர்களை தெரிவிக்க வேண்டும். எந்ததலைமையலுவலக ஊழியர்கள் நடமாடமுடியாமல் இடையூறு செய்யப்பட்டார்கள் என்று அவர்களது பெயர்களையும்தெரிவிக்க வேண்டும். எல்லோரும் பெயரற்ற அநாமதேயங்களா?
இதையெல்லாம்விட மிகப் பெரிய கூத்து ஒன்றும் நடந்திருந்தது. ’கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவைகளை இங்கே இணைத்திருக்கிறோம்’ என்று சார்ஜ் ஷீட்டோடுஇரண்டு ஆவணங்களை இணைத்திருந்தார்கள். ஒன்று, இதே குற்றச்சாட்டுகளோடு நிர்வாகத்திலிருந்து10.3.2021 அன்று எனக்கு விளக்கம் கேட்டு பொதுமேலாளரிடம் இருந்து வந்த கடிதம்! இரண்டாவது,அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து 16.3.2021 அன்று நான் எழுதிய பதில் கடிதம்! அவைகளா அடிப்படை ஆவணங்கள் (basic documents)? எதாவதுஅடிப்படை அறிவு இருக்கிறதா இதில்?
1.3.2021அன்று தலைமையலுவலகத்தில் நடந்த விஷயங்கள் குறித்து யாராவது புகார் அளித்திருந்தால்அந்த ஆவணத்தை இணைக்கலாம். அல்லது எதாவது விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அப்படியொரு விசாரணைநடந்திருந்தால் அதன் அறிக்கையை ஒரு அடிப்படைஆவணமாக இணைக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பியகடிதத்தையும், அதற்கு நான் கொடுத்த பதிலையுமே அடிப்படை ஆவணங்களாக தாக்கல் செய்வதெல்லாம்’செக்குன்னு தெரியாம, சிவலிங்கம்னு தெரியாம நக்குன நாய்’ கதைதான்.
இப்படியெல்லாம்சட்ட விதிகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் விரோதமாக குற்றச்சாட்டுகளைசுமத்திவிட்டு, ’கவனமாக படித்தேன்’, ’எல்லாவற்றையும் ஆராய்ந்தேன்’, ‘பதில் ஒப்புக்கொள்ளும்படியாய் இல்லை’ என்று யோக்கிய சிகாமணியாய் எழுதுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.நாடி நரம்பெல்லாம் பொய்யும் பித்தாலாட்டமும் நிறைந்தவர்களால்தான் அது முடியும்.
நான்ரிடையர் ஆவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் தலைமையலுவலகத்தில் உயர் அதிகாரிகளாகப்பணிபுரிந்த தோழர்கள் வரதராஜப் பெருமாளும், சௌந்திர நாகேஸ்வரனும் பணி ஓய்வு பெற்றார்கள்.மார்ச் 28, ஞாயிறு அன்று அவர்கள் இருவரும்தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.பாண்டியன் கிராம வங்கியிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் என்னையும் அழைத்து இருந்தார்கள்.இருவரின் அன்பிற்காக கலந்து கொண்டேன். சேர்மன் உட்பட அனைவரும் வந்திருந்தனர். நம் சங்கத்தோழர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது மிஸ்டர் ஜெயக்குமார் என்னருகில் வந்து”அடுத்த மாதம் உங்கள் பணி ஓய்வையும் கொண்டாடிவிடுவோம்” என்று சிரித்தார். அதற்கு இரண்டுநாள் கழித்து 30.3.2021 அன்று எனக்கு சார்ஜ் ஷீட் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார்.அப்பேர்ப்பட்டவர் அவர்!
மீண்டும்கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் மீது விசாரணை நடத்த, அப்போதைய நாமக்கல்மண்டல மேலாளர் மிஸ்டர் சந்திரனை விசாரணை அதிகாரியாக (Enquiry Officer) நியமித்திருந்தார்.நிர்வாகத்தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரியாக (Presenting Officer) மிஸ்டர்திருமூர்த்தியை நியமித்திருந்தார்.
இனிமிஸ்டர் சந்திரனிடமிருந்து விரைவில் ஒரு கடிதம் வரும். எந்த தேதியில் எங்கு வைத்துவிசாரணை என்பதைக் குறிப்பிட்டு அதில் அழைப்பு விடுக்கப்படும்.
நமதுஇரு சங்கத் தலைமைக்கும், பெஃபி தமிழ்நாடு தலைவர்கள் தோழர் சி.பி.கிருஷ்ணன், தோழர் ராஜகோபால்ஆகியோருக்கும் தெரிவித்தேன். அட்வகேட் கீதா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். சென்னைஹைகோர்ட்டில் வழக்குத் தொடுக்க அஃபிடவேட் நகலைகீதா மேடம் மெயிலில் அனுப்பி்யிருந்தார்கள். அதை இறுதிப்படுத்தியாகி விட்டது. ஓரிருநாட்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆன்-லைனில்தான் ஹியரிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விரைவில்தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றொரு பேச்சு எழுந்து கொண்டிருந்தது. அப்போதுஆன்–லைனில் வழக்கு நடைபெறுமா எனத் தெரியவில்லை. 2020ல் இருந்ததை விடவும் 2021ல் தொற்று தீவீரமாகஇருப்பதாக டிவிகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட்ட தெரிந்தவர்கள்அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு வந்து போய்க்கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள்,நம்மோடு பணிபுரிந்த தோழர் வேதமுத்து, தோழர் அந்தோணி மரியராஜ், தற்காலிக ஊழியர் பிரசாத்,ஆகியோரின் உயிரிழப்புகள் சூழலின் தீவீரத்தை உணர்த்தின. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும்லீவு கிடைக்காமல் வேலை பார்த்து இறந்து போன புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர் சங்கத்தைச்சேர்ந்த 37 வயதனான தோழர் நாகலிங்கத்தின் சிரித்த முகம் இன்னும் எதையோ சொல்லிக்கொண்டேஇருக்கிறது. துயரங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப் போயிருந்த காலம். எப்போதுமனிதர்களின் முகங்களை மீண்டும் புன்னகையோடு பார்க்கப் போகிறோம் என ஏக்கங்கள் அடர்ந்தன.
நிர்வாகம்வழக்கம் போல் ஈவிரக்கமில்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாமல்பழிவாங்கும் போக்கை தீவீரப்படுத்திக் கொண்டிருந்தது. 1.3.2021 அன்றைய சம்பவத்திற்காகநிர்வாகம் ஓய்வு பெற்ற தோழர்கள் மீதும் பாய்ந்திருந்தது. சோலைமாணிக்கம், கிருஷ்ணன்,சுப்பாராமன் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பென்ஷனைநிறுத்த வேண்டும் என்ற வெறி சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்துக்கு இருந்திருக்கவேண்டும். தோழர்கள் சோலைமாணிக்கமும், கிருஷ்ணனும் அதற்கு பதில் கொடுத்து விட்டனர்.உடல்நலம் இல்லாத உறவினரைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் சுப்பாராமன் உரிய நேரத்தில்பதில் அளிக்கவில்லை. அவருக்கு மாறி மாறி கடிதங்களை நிர்வாகம் அனுப்பிக் கொண்டிருந்தது.தங்கள் பாதுகாப்பு கருதி கிளைகளில் இருந்து ஊழியர்கள் அனுப்பும் கடிதங்களின் மீது உரியநேரத்தில் பதில் அளிக்காத நிர்வாகம், பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் வேகத்தைக்காட்டிக் கொண்டிருந்தது.
கணுவாய்கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தற்காலிக ஊழியர் முத்து லட்சுமியின் மரணம் தாங்கமுடியாத துயரத்தைத் தந்தது. கோவிட் தொற்று தீவீரமாய் இருந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம்3ம் தேதி அவரை வேலைக்கு வர வேண்டாம் என அந்தக் கிளையின் மேலாளர் வெளியே அனுப்பி விட்டார்.சங்கத்திலிருந்து மிஸ்டர் ஜெயக்குமாரிடம் பேசினோம். கண்டு கொள்ளவே இல்லை. நாம் ரீஜினல்லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில்உள்ள அலுவலகத்தில் வைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. நானும் தோழர் அறிவுடைநம்பியும்சங்கத்தரப்பில் சென்றோம். மிஸ்டர் ஜெயக்குமார் நிர்வாகத்தரப்பில் வந்தார். ”இந்த கொரோனாநேரத்தில் வெளியே அனுப்பினால் அந்த ஊழியர் என்ன செய்வார், அவரை பணிக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்” என ரீஜினல் லேபர் கமிஷனர் சொல்லிப் பார்த்தார். மிஸ்டர் ஜெயக்குமார் கேட்கவேஇல்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.அதன் மீது மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்து லேபர் கோர்ட்டில்விசாரணை ஆரம்பிக்க சாதாரண காலங்களிலேயே நான்கைந்து மாதங்கள் ஆகும். கொரோனா நேரத்தில்கேட்கவா வேண்டும்? தோழர் முத்து லட்சுமி அவ்வப்போதுபோன் செய்து கேட்பார்கள். நான் எதாவது நம்பிக்கையளித்து பொறுமையாய் இருக்கும்படிச்சொல்லிக்கொண்டு இருந்தேன். நெஞ்சடைத்துப் போய் ஒருநாள் அவரும் காலமானார். ”மாதவராஜ்சார்” என அழைக்கும் அந்தக் குரல் நினைவிலேயே இருந்தது. நம்பிக்கையான செய்தி என்னிடம்இருந்து வரும் என காத்திருந்து காத்திருந்து காணாமலேயே போய்விட்டது. நிர்வாகத்துக்கும்,மிஸ்டர் ஜெயக்குமாருக்கும் அந்த வலி என்னவென்று தெரியுமா?
பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர் என்பதால் மாதவராஜால் கேள்வி கேட்க முடிகிறது. சட்டப்படிநிர்வாகத்தை எதிர்த்து நிற்க முடிகிறது. தோழர் முத்து லட்சுமியின் நிலைமை? ’அடித்தால்கேள்வி கேட்க ஆள் இல்லாத அனாதையே’ என்ற விதத்தில்தானே அந்த கிளை மேலாளர் அவரை வேலையிலிருந்து ஒரே நாளில் வாய்மொழி உத்தரவுமூலம் வெளியேற்றினார்? அப்படித்தானே அவரை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள மிஸ்டர்ஜெயக்குமார் இரக்கமே இல்லாமல் மறுத்தார்? தற்காலிக ஊழியர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுமையானதாகவும்,நகரமாகவும் இருக்கிறது. வாழ்வில் என்றேனும் ஒரு நல்ல நாள் வருமென எல்லாரையும் போல்அவர்கள் காத்திருக்கிறார்கள்.
யோசித்துப்பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதுபோலவே தெரிந்தது.
எனக்குஅந்த நாள் 2021 ஜூன் 24ம் தேதியாக வந்தது போலிருந்தது.
(தொடரும்)