அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி

காலச்சுவடு மார்ச் 2025ல் வெளிவந்த கட்டுரை:

அகழ்வாய்வும் அரசியலும்

அகழ்வாய்வு என்றும் அறிவியலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து எத்தனை தொலைவில் இருக்க முடியுமோ அத்தனை தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அகழ்வாய்வும் தொல்லியல் துறைகளும் அறிவியலை விட்டு வெகு தூரம் சென்று விட்டன என அண்மைக்கால நிகழ்வுகள் சில நினைக்க வைக்கின்றன. அவை அரசியலை இறுக்கமாக அணைத்துச் செயல்படுகின்றன. முன்முடிவுகளோடு அகழ்வாய்வுகள் அணுகப்படுகின்றன. முழுமையான நோக்கு இல்லாமல் தேவையானவற்றை மட்டும் உருவி எடுத்து, அவற்றை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தோதான தரவுகளை முன் வைத்து அவற்றின் மூலம் முன்முடிவுகளை நிறுவும் வேலைகள்தான் இங்கு நடக்கின்றன.

தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு “இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழ்வாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அரசியல் வெளியீடு போல அமைச்சர்களின் ஆசி பெற்று வருவது இந்தியாவில் மட்டும் நடைபெறும் அதிசயம். சில அகழ்வாய்வாளர்களும் புத்தகத்திற்கு பட்டும் படாமலும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியர்கள் வரவு என்பதே பொய், அவர்கள் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்ற முன்முடிவை நிறுவ வட இந்தியாவில் நடத்தப்படும் விந்தை நிகழ்வுகளுக்கு ஈடாக தமிழகத்திலும் நடைபெறுகிறது. இங்கு தமிழன் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வன் என்ற முன்முடிவை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இரும்புக்காலம் என்றால் என்ன?

இரும்பின் தொன்மை என்ற தலைப்பு சரியானதாகத் தோன்றவில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் மனிதன் இரும்பை மற்றப் பொருட்களிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி. அதை முதலில் செய்தது தமிழன்தான் என்று நிறுவ வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லும் புத்தகம் இது. ஆனால் அப்படி வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல புத்தகம் கொடுக்கும் தரவுகள் சரியானவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெண்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic). இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்பிரிவுகளுக்கான காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான வெப்பம் 232 C) சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்கான தொழில் நுட்பம் அன்றைய மனிதனிடம் இல்லை.

 இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம். வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலம். விதி விலக்குகளும் இருக்கின்றன.. உதாரணமாக எகிப்து நாட்டில் இரும்பு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுத்து முறை இருந்தது. வரலாறு பதியப்பட்டு வந்தது.

இந்தியா ஒரு விதி விலக்காக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் வரிவடிவங்கள் எழுத்துகள்தாம் என்பது நிறுவப்பட்டால்,  அதுவும் வரலாற்றுக் காலத்திற்குள் வரலாம். வரலாற்றுக் காலம் என்பதும்  இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

 ஒரு இடத்தில் இரும்புக்காலம் பிறந்தது என்று சொல்ல வேண்டுமானால் இரும்பைப் பரவலாக அங்கிருந்த மனிதன் பயன்படுத்தத் துவங்கிய காலமாக அது இருக்க வேண்டும்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆயுதங்களின் துணையோடு அண்டையில் இருக்கும் பகுதிகள் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையு்ம், அதனால் மக்கள் தொகை பெருகிய காலத்தையுமே இரும்புக் காலம் என்று அழைக்க முடியும். முக்கியமாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்தது.

இரும்புக்காலத்திற்கு முன் இரும்பு

இரும்புக்காலம் வந்தபிறகுதான் மனிதன் இரும்பை பயன்படுத்தத் துவங்கினான் என்று ஆய்வுகள் சொல்லவில்லை. மாறாக இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பைப் பயன்படுத்திக்   கொண்டிருந்தான் என்று சொல்கின்றன. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பு தயாரிக்கும் முறை பரவியதா? மக்கள் தொகை அதிகரித்ததா போன்ற பல விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.

இரும்பின் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிவகளையிலும் மற்றைய இடங்களிலும் கிடைத்த இரும்பின் காலம் அதே குழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்தை வைத்துக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இரும்பும் அதுவும் ஒரே இடத்தில் கிடைத்ததால் அவை இரண்டும் ஒரே காலத்தியது என்று ஊகம் செய்யலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செய்ய முடியுமா, அறிவியல்பூர்வமாக அத்தகைய கணிப்பு ஒப்புக்கொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவதற்கு முன்னால் அகழ்வாய்வு குறித்த சில விவரங்களையும் விதிகளையும்  புரிந்து கொள்வது அவசியம்.

மண்ணடுக்கு – Stratigraphy

ஓர் இடம் மண்மூடிப் போகும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருள்கள் எந்த இடத்தில் புதையும் போது இருந்தனவோ அதே இடத்தில் அப்ப்படியே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன – நில அதிர்வு, வெள்ளம் , மனிதர்களே அங்கு தோண்டிப்பார்த்து திரும்ப மூடுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வரை.  ஒரே இடத்தில் மனிதன் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கலாம். அது நடக்கும்போது அவனது வாழ்விடம் முந்தையர் வாழ்ந்த இடத்தில் மேல் இருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வாழும் இடத்தில் மண்ணில் மாற்ற ஏற்பட்டாலும் அதன் அடியில் புதைந்து இருப்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இது தொடர்ந்து நடக்கும் போது பல அடுக்குகள் ஏற்படுகின்றன. இதை அகழ்வாய்வாளர்கள் மண்ணடுக்குகள் (Stratigraphy) என்று அழைக்கிறார்கள்

மண்ணடுக்கு விதிகள்

அதாவது ஒரு இடத்தில் காலப்போக்கில் மண், மணல், பாறை, பாகுபட்ட பொருட்கள் ஆகியவை அடுக்குகளாக தேங்குகின்றன. ஒவ்வொரு அடுக்கும் (stratum) ஒரு குறிப்பிட்ட காலத்தினை குறிக்கும். பழைய அடுக்குகள் கீழே இருக்கும்.  புதியவை மேலே இருக்கும். எனவே மண்ணடுக்குகளில் தொல்பொருடகள் கீழுள்ள மண்ணடுக்குகளில் காணப்படும் எனில் அவை காலத்தால் முற்பட்டவை. நடு அடுக்குகளில் கிடைக்கும் தொல்பொருட்கள்  கீழடுக்களில் கிடைக்கும் பொருட்களுக்கு காலத்தால் பிறபட்டவை.. மேலுள்ள மண்ணடுக்களில் கிடைப்பவை காலத்தால் கீழுள்ள அடுக்குகளில் கிடைத்தவற்றிற்குப் பிற்பட்டவை. இது Law of Superposition (மேற்கிடை நிலை விதி?) என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர இன்னொரு விதியும் இருக்கிறது: எந்த மண்ணடுக்கின் காலமும்  அதில் கிடைக்கும் மிகவும் பிற்பட்ட காலத்திய தொல்பொருளை விட முன்னதாக இருக்காது.  அதாவது ஒரு மண்ணடுக்கில் 18ம் நூற்றாண்டுப் பொருள் கிடைத்தால் அந்த அடுக்கு 17ம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க முடியாது என்று இந்த விதி சொல்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இடத்தில் சோழர்கள் கால படிமம் ஒன்றும் பால்பாயிண்ட் பேனா ஒன்றும் கிடைத்தால் அந்த இடத்தின் காலம் சோழர் காலப் படிமத்தியது அல்ல. பால்பாயிண்ட் பேனாவின் காலத்தியது என்பதுதான். இன்னொன்றும் சொல்ல வேண்டும் சோழர் காலப்படிமமும் பால்பாயிண்ட் பேனாவும் ஒரே அடுக்கில் கிடைத்தன் என்பதினால் பால் பாயிண்ட் பேனா சோழர் காலத்திலேயே இருந்தது என்று சொல்ல முடியாது.  இனி இரும்பும் கரித்துண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் கரித்துண்டின் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு வருவோம். இது கரித்துண்டு எங்கே இருந்தது என்பதைப் பொருத்திருக்கிறது. தோண்டும்போது ஒரு அடுப்பும் கரித்துண்டுகளும் இரும்புப் பாத்திரங்களும் கிடைத்தால் இரும்புப்பாத்திரமும் கரித்துண்டுகளும் ஒரே காலத்தியதாக இருக்கும் என்று ஊகம் செய்யலாம். இது போன்ற இல்லாத பட்சத்தில் கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது சரியாக இருக்காது. ஒரு இடத்தில் கரித்துண்டு இருப்பது பல காரணங்கள் இருக்கலாம். அது அங்கே இரும்புப் பொருட்கள் புதைபடும் முன்னால் இருந்திருக்கலாம். வேறு எங்கோ கிடைத்த கரியை/ காட்டுத்தீயால் உருவான கரியை மனிதன் அங்கு கொண்டு வந்திருக்கலாம். இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். மேலும் ஒரு அடுக்கில் சிதைவுற்றதின் அடையாளங்கள் இருந்தால் (அதாவது புதைந்திருந்த இடத்தை மனிதன் திரும்பத் தோண்டியிருக்கலாம். இடம் நாளடையில் மறுபடியும் புதைந்து போய் இருக்கலாம்) அங்கு கிடைக்கும் பொருட்களின் வயது ஒரே காலத்தியதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இனி புத்தகத்திற்கு வருவோம்

புத்தகம் என்ன சொல்கிறது?

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பிட்ட சில இரும்பு ஆலைகளைப் பற்றிப் பேசி விட்டு அவை கி.மு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் புத்தகம் பேசும் காலத்தைய -அதாவது இன்றைக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த- எந்த இரும்பு ஆலையும் மாங்காடு, கீழ்நமண்டி, மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் அக்காலகட்டத்தின் இரும்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.(ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது உள்ளூர் மக்கள் தோண்டி அவர்களாகவே அறிவித்தது. எந்தச் சான்றுகளையும் கொடுக்கவில்லை.)

மாங்காடு முதலிய இடங்களில் எல்லாம் இரும்புப் பொருட்கள் ஈமக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்குழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலத்தைக் கணக்கிட்டு அதன் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது. ஈமக்குழிகள் என்பவை மனிதர்கள் மீண்டும் மீண்டும் வரும் இடம். எனவே அவற்றில் இருக்கும் எல்லாப் பொருட்களும் சமகாலத்தியவையாக இருக்கலாம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

மாங்காடு, கீழ்நமண்டி மற்றும் மயிலாடும் பாறை

மாங்காட்டில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது. இது சிதைவுற்ற பதுக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று புத்தகமே சொல்வதால்  இதை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இங்கு முக்கியமாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாங்காட்டில் எடுத்துக் கொண்ட மாதிரி இரும்பு. கரித்துண்டு அல்ல.  இதே போன்று சேலம் மாவட்டத்தில் தெலுங்கனூர் என்ற இடத்தில் கிடைத்த வாளின் காலம் கணிக்கப்பட்டது. இங்கு பிடிக்கு ஒரு காலமும் (1425-1233 கி.மு.) வாளுக்கு ஒரு காலமும் (2900 -2627 கி.மு.)கிடைத்தது இரண்டிற்கு இடையே வித்தியாசம் சுமார் 1500 வருடங்கள்!

 கீழ்நமண்டியில் கிடைத்த இரும்புப் பொருட்களில் காலம் கி.மு 1692 என்று புத்தகம் சொல்கிறது. இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டது கரித்துண்டு. அது ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றிய தகவல் இல்லாமல் அதன் வயதை இரும்பிற்கு ஏற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

மயிலாடும் பாறை அகழ்வாய்வுகளைப் பற்றி தமிழ் நாடு அரசு இன்னொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது: அது சொல்வது இது:¨ வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில் முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்  கா.ராஜன் அவர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்அகழாய்வில்  வெளிக்கொணரப்பட்டநம்பிக்கை  அளிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், முறையான அகழாய்வுப் பணிகள் 2021-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக்குழிகளிலிருந்து  பெறப்பட்ட மாதிரிகளின் வழி முக்கியமான இரண்டு AMS காலக்கணிப்புகள்  பெறப்பட்டுள்ளன.  இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ  மற்றும்  130 செ.மீ  ஆழத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இவற்றின் சராசரி  மைய அளவீட்டுக்காலம் (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும்.

புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் எங்கே இருந்தன என்ற தகவல் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் வாழ்விடப் பகுதிக்கும் ஈமப்பகுதிக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றியும் வாழ்விடப் பொருட்களின் காலம் பற்றியும் ;புத்தகம் ஏதும் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தன. பின்னர் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்தன. இங்கு இந்தியத் தொல்லியல் துறையும் தமிழ் நாடு தொல்லியியல் துறையும் iஅகழ்வாய்வுகள் நடத்தின. இதில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் நெல் தானிய மாதிரிகள் காலக்கணக்கீட்டிற்கு அனுப்பப்பட்டன. கிடைத்த காலம் கி.மு.650 -840. இதே ஆதிச்ச நல்லூரில் தமிழ் நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் வாழ்விடப் பகுதியில் மேற்கொண்ட காலக்கணக்கீடில் கரித்துண்டின் காலம் கி.மு 2613 என்று அறியப்படுகிறது. இங்கும் இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இனி சிவகளைக்கு வருவோம். சிவகளைப் பறம்பில் மொத்தம் 17 அகழ்வாய்வுக் குழிகள் (10×10 மீட்டர்) தோண்டப்பட்டன. அகழ்வாய்வுக் குழியின் இவற்றில் முக்கியமான குழிகள் A 2 பகுதி II மற்றும் III. A 2 பகுதியில் மூன்றாவது தாழி இறுக்கமாக இருந்தது. அதில் இருந்த நெல்மணியும் இரும்பாலான பொருட்களும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155.  

மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தன. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 2953 முதல் 3345 வரை.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

அரிசி மணிகளின் காலத்தையும் கரித்துண்டுகளின் காலத்தையும் இரும்புப் பொருட்களுக்கு மாற்றி இருக்கிறது என்பதைத் தவிர ,கிடைத்த  பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் ஒரே பத்திற்கு பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு.  புத்தகம் என்ன சொல்ல வருகிறது? இரண்டாயிரம் வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2000 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை. மேலும் இரும்புப் பொருட்கள் இரண்டாயிரம் ஆண்டுகளில் மாற்றமே இல்லாமல்  இருந்தனவா? ஒரே மாதிரியான இரும்புப் பொருட்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்களா? இவற்றைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இக்கட்டுரையின் முற்பகுதியின் சொன்னேன். இ்ங்கும் சொல்கிறேன்.. இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலம். இரும்பின் காலம் அல்ல. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அவற்றின் காலங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை.புத்தகம் இன்னொரு முக்கியமான தகவலைக் கொடுக்கிறது. அதை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் விட்டது வியப்பை அளிக்கிறது.  நெல்மணிகளின் காலம் ஆதிச்சநல்லூரிலும் கணக்கிடப்பட்டது. சிவகளையிலும் கணக்கிடப்பட்டது. சிவகளை ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கிலோமீட்டரில் இருக்கிறது. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த நெல்மணிகளின் காலங்கள் மூன்று இடங்களில் கணக்கிடப்பட்டன. அவை  கி.மு. 1052, 1257 மற்றும் 1384. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு.1155. நெல்மணிகள் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் இருப்பதும் கரித்துண்டுகளின் கால வித்தியாசம் ஆயிரக்கணக்கில் இருப்பதும் எதைக் காட்டுகிறது? கரித்துண்டின் காலத்தை வைத்து எதையும் கணிப்பது சரியாக இருக்காது என்பதைத்தானே? அதுவும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் தாழிகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்குமானால் அதை வலுவான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியுமா?புத்தககம் தரும் மற்றொரு வியப்பான தகவல் ஒரே குழியில் இருக்கும் இரண்டு தாழிகளுக்கு இடையே இருக்கும் கால வித்தியாசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! அதாவது ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்து கொண்டிருந்தது என்பது நம்பக் கூடியதாகவா இருக்கிறது? அதுவும் அங்கு இருக்கும் தாழிகளுக்கு அதிகச் சேதம் இல்லாமல்?

8. எனக்குத் தெரிந்து ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அக்காலத்திய செங்கல் கிடைத்ததாகத் தெரியவில்லை. இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தை விட செங்கல் செய்யும் தொழில் நுட்பம் கடினமானது அல்ல. வெட்பமும் இரும்பை உருக்குவதை விட அதிகம் தேவையில்லை. செங்கல் என்ற சொல்லே தமிழில் மிகப் பின்னால் வருகிறது. சங்க இலக்கியத்தில் கூட செங்கல் என்ற சொல் இடம் பெறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘இஷ்டிகா’ என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமான இட்டிகை என்ற சொல்லே அகநானூற்றில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் மற்றைய இடங்களில் செங்கல் கி.மு 3500 ஆண்டு காலத்திலேயே பயன்படுத்தப்படத் துவங்கி விட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் செங்கல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  ஆனால் தென்னிந்தியாவில் செங்கல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே பரவலாகக் கிடைக்கத் துவங்குகிறது. எனவே  இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு செங்கல் செய்யும் முறை ஏன் தெரியவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதுவும் இரும்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகில் மற்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் பயன்படுத்திய மக்களுக்கு செங்கல் பற்றிய தொழில் நுட்பம் தெரியவில்லை என்று கூற முடியுமா? அதுவும் வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த ஆதிச்சநல்லூர் மக்களுக்கு செங்கலைப் பற்றி ஏன் தெரியவில்லை?

ஆப்பிரிக்க உதாரணம்

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artifacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் தொல்லியல் வல்லுனர்கள் நைஜர், ருவாண்டா, புருண்டி போன்ற இடங்களில் ஆய்வு செய்து ஆப்பிரிக்கர்கள் கி.மு 3600 காலகட்டத்திலேயே இரும்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொன்ன கூற்று கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது.  இவர்கள் காலவரையறை செய்வது என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்) அடிப்படையிலே தவிர இரும்பு பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்தத்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது.

கட்டுரை மேலும் சொல்கிறது.

Zangato began excavations at the site after a violent storm struck in 1992, sweeping away part of the capping sediments and exposing a layer of metallic objects, potsherds, and stone tools. Zangato and his team spent nine field seasons at the site, opening more than 800 square meters. They recovered 339 stone artifacts and a host of evidence for ironsmithing: a blacksmith’s forge, consisting of a clay-lined furnace, stone anvil, and part of a ceramic pot that likely held water for cooling or possibly tempering red-hot iron. They also found charcoal storage pits, 1450 pieces of slag, 181 pieces of iron bloom, and 280 small iron lumps and objects, including two needles.

சங்காடொ என்பவர் ஆய்வு செய்து முழு இரும்பு ஆலைகளையே கண்டுபிடித்தார். இரும்பை உருவாக்கியிருப்பதற்கு தேவையான ஆதாரங்களை அளித்தார். நம்மைப் போலவே அவர்களும் கரித்துண்டு மாதிரிகளை (ஏழு மாதிரிகள்) காலக்கணக்கீடு செய்தனர். கி.மு. 1612 முதல் கி.மு.3490 வரை.

மற்றைய ஆய்வாளர்கள் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இதையும் சொல்கிறார்கள்.

 “Although it seems that the seven oldest radiocarbon dates form a coherent group, they are all coming from a few square meters in a very disturbed

archaeological site.”…“They are closely bounded by pits and structures well

dated to around 2000 B.P. and later.” This means that later ironworkers could have dug into ground laced with charcoal from an earlier occupation or forest fire, giving dates that are far too old. To push back the dates convincingly, say critics, the team needs to publish more detailed stratigraphic data and charcoal studies. They also need several consistent lines of chronological evidence,

such as thermoluminescence (TL) dates on clay furnaces, accelerator mass spectrometre (AMS) dates on short-lived plant remains, and indirect dates from sequences of ceramic tiles.

மிகச் சிறிய இடத்தில் சிதைவுற்ற பகுதிகளில், கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு அறுதியான முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள். கரித்துண்டுகள் முன்னால் இருந்தவர்கள் பயன்படுத்தியதாக இருந்திருக்கலாம் அல்லது காட்டுத்தீயின் எச்சமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்கள்! இன்று வரை உலகளவில் இந்த காலக் கணக்கீட்டை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

முடிவாக,

இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது வலுக்கட்டாயமாக ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிட்டு அதுதான் துல்லியமானது என்று சொல்வது சரியாகாது.

தமிழன் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தத் துவங்கி விட்டான் என்று சொல்வதற்கு இன்னும் வலுவான ஆதாரங்கள் வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன்.

உதவி செய்த புத்தகங்கள்

இரும்பின் தொன்மை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2025

மயிலாடும் பாறை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2022

Excavations ar Adichchanallur, Archaeological Survey of India, 2020

SCIENCE, VOLUME 323, 9 January, 209

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2025 10:30
No comments have been added yet.


P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.