பட்டினப்பாலையின் காலம்
பெரியாழ்வாராலும் திருமங்கை மன்னனாலும் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோவில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் திருவெள்ளறைக் கோவில். பெருமாள் செந்தாமரைக் கண்ணன். தாயார் பங்கயச் செல்வி.
இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் செயல்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை அவன் எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல இது:,
வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவேரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணிலை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றானே!
சுந்தரபாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றிய போது அங்கிருந்த எல்லா மண்டபங்களை இடித்து தள்ளினான். அவன் அழிக்காமல் விட்டது இக்கோவிலில் இருக்கும் 16 தூண்களை உடைய மண்டபத்தை. ஏனென்றால் அம்மண்டபம் சோழ மன்னன் கரிகாலனை பாடியமைக்காக பட்டினப்பாலை பாடிய உருத்திரக்கண்ணருக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்பதால்.
இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தமிழ் நாட்டில் கல்லால் ஆகிய மண்டபங்கள் கட்டப்பட்டது மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்தான். அதற்கு முன்னால் கட்டப்பட்டவை செங்கற்களால் ஆனவை. மகேந்திரவர்மனின் காலம் பொது ஆண்டு 600லிருந்து 630 வரை. எனவே உருத்திரங்கண்ணனாருக்கு இம்மண்டபம் பரிசாக அளிக்கப்பட்ட காலம் இதற்குப் பின்னதாகத்தன் இருக்க வேண்டும். அக்கால கட்டத்தில் கரிகால் சோழன் எங்கிருந்து வந்தான்? இதே இடத்தில் செங்கல் கட்டிடம் இருந்திருக்கலாம். அதன் இடத்தில் கல் மண்டபம் எழுப்பப் பட்டாலும் கரிகாலனின் கொடை நினைவு கூறப் பெற்றிருக்கலாம். இது வெறும் ஊகம்தான். பட்டினப்பாலையில் கரிகாலனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அது திருமாவளவன் என்ற பெயரைத்தான் சொல்கிறது. இவனே கரிகாலன் என்று சொல்லியவர் நச்சினார்க்கினியர். உரை ஆசிரியர். எனவே இது இன்னொரு மன்னனைக் குறித்துப் பாடப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. திரு ரா. ராகவையங்கார் தன்னுடைய பட்டினப்பாலைப் பதிப்பில் திருமாவளவன் என்ற பெயர் கரிகால் சோழனுடையது என்பதற்கு பல ஆதாரங்களைக் கொடுக்கிறார். ஆனால் அவை அனைத்தும் பிற்காலத்தியவை. எனவே உருத்திரங்கண்ணனார் பாடிய அரசன் வேறு ஒருவனாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இது போன்ற புதிர்களுக்குப் பதில் தேடுவது தமிழ் வரலாற்று அறிஞர்களின் கடமை. பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களின் காலம் என்ன என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. வசதிக்கேற்ப கி மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியத்தின் காலத்தை அறுதியிடும் அறிஞர்கள் இருக்கிறார்கள். இது போன்ற சர்ச்சைக்குரிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு கீழடி சங்ககாலத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் கீழடியின் காலத்தை மிகவும் பின்னுக்குத் தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். சங்க இலக்கியத்தில் நகரத்தைப் பற்றி விரிவாகப் பேசும் மதுரைக் காஞ்சியும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
