ஒத்தி வை

Pa Raghavan

மெட்ராஸ் பேப்பரின் மினிமலிசச் சிறப்பிதழுக்கு ஒரு கட்டுரை எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால், அதை எழுதும் அளவுக்கு முழுத் தகுதி கூடவில்லை என்று தோன்றிவிட்டதால் கட்டுரையாக அப்போது அதனை எழுதாது விடுத்தேன். ஆனால் சாரத்தை இங்கே பேசலாம். பிழையில்லை.

மினிமலிசம் என்றால் கொசகொசவென்று இல்லாதிருப்பது. வாழ்க்கை முறையில் இது சாத்தியம். பயிற்சியின் மூலம் அடைந்துவிடலாம். ஆனால், சிந்தனைக்கு மினிமலிசம் உதவுமா? நிறைய யோசிப்பது, தேவையில்லாதவற்றை யோசிப்பது, யோசித்து யோசித்துக் குப்பை சேர்ப்பது, பிறகு அந்தக் குப்பையில் ஏதாவது அகப்படுகிறதா என்று தேடுவது. இது எழுதுபவர்களின் அடிப்படைக் குணமாக இருக்கும். இதில், யோசிப்பதுடன்கூடப் படித்தறிவது என்பது சேரும். அனுபவித்துத் தெரிந்துகொள்வது சேரும். புலன்களின் வழியே உணர்பவை உள்ளே போய் உட்காருவது சேரும். வேண்டாத பொருள்களைக் குப்பை என்று வகைப்படுத்துவோமானால், வேண்டாத சிந்தனையும் குப்பைதான். ஆனால் எது வேண்டாதது?

தூய ஆன்மிகம், தியானம் என்றொரு மினிமலிசக் கருவியைப் பரிந்துரை செய்யும். சிந்தனைகளை ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பது. அவை ஒன்றுமில்லாதவை என்பதை ஆழ்மனத்தில் உணர முடிகிற தருணத்தில் அவற்றைப் பெருக்கித் தள்ளிவிட்டு, புத்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி வைப்பது. பிறகு அதனை ஒன்றன்மீது மட்டும் குவிப்பது.

இந்த ஒரு பத்தியே எவ்வளவு அச்சுறுத்துகிறது பாருங்கள். சாதாரண மனிதர்களுக்கு இது பெரும்பாலும் சாத்தியமற்றது. சாதாரண மனிதர்களுக்கே சாத்தியமில்லாதபோது எழுத்தாளர்களுக்கு மிக நிச்சயமாக முடியாது. உறக்கத்திலும் அலைபாய்ந்துகொண்டே இருப்பதுதான் அவர்களது புத்தியின் வடிவமைப்பு. இயற்கையை ஒன்றும் செய்ய இயலாது. எனவே, சாத்தியமுள்ள வேறு எளிய உபாயம் ஒன்று இருக்கிறதா?

கடந்த பல வருடங்களாக இதனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். குறைந்த அளவே சிந்திப்பது என்பது, சிந்திக்கத் தெரியாதிருப்பது என்னும் வகைமைக்கு நேரெதிரானது. தேவையானவற்றை மட்டும் மனத்துக்குள் ஏற்றி வைத்துக்கொண்டு, அவற்றில் மட்டும் வாழ்வது என்று இதற்குப் பொருள். இதில் உள்ள சிக்கல், தேவையானவை என்பதை எப்படி வரையறுப்பது என்பது.

ஒரு மனிதனுக்கு என்ன தேவை?

மிக எளிய வினா. ஆனால் வாழ்நாள் முழுவதும் இதற்கு விடை சொல்லிக்கொண்டே இருக்கலாம். வாழும் கணம்தோறும் புதிய புதிய தேவைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அது ஒரு முடிவிலி. நான் முதல் முதலில் கம்ப்யூட்டரில் எழுதத் தொடங்கியது முதல் கட்டக்கடைசியாக இப்போது பயன்படுத்தும் M4 வரை என்னவெல்லாம் அழிச்சாட்டியங்கள் செய்திருக்கிறேன் என்பது குறித்து இந்தத் தளத்திலேயே தேடினால் நிறைய கட்டுரைகள் அகப்படும். ஆயிரம் இரண்டாயிரத்துக்குள் முடிய வேண்டிய கீ போர்டுக்கு பதில் ஆப்பிள் கீபோர்டும் நூறு இருநூறில் முடிய வேண்டிய மௌஸுக்கு பதில் டிராக் பேடும் வாங்கிய வகையில் செலவழித்ததையெல்லாம் சேமித்திருந்தால் இந்நேரம் ஒரு ஐபிஎல் அணியை ஏலத்தில் எடுத்திருக்கலாம். சம்பாதிப்பதில் பெரும் பகுதியை எழுதுவதற்கான உபகரணங்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே செலவழிப்பது என் இயல்பாக இருக்கிறது. மிக அவசியம் என்று நான் கருதும் சில புத்தகங்களுக்கு வீட்டில் ஒன்றும் அலுவலகத்தில் ஒன்றுமாக இரண்டு பிரதிகள் வைத்திருப்பேன். போதாமல் கிண்டிலிலும் ஒரு பிரதி இருக்கும். அக்கிரமம் அல்லவா?

இதன் அடிப்படைக் காரணத்தை சிந்தித்துப் பார்த்தால், என் பணி இடையூறின்றி நடப்பதை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதில் சென்று நிற்கும். ஆனால் உலகம் அதை ஒப்புக்கொள்ளாது. சிறிதளவு சொகுசுக் குறைபாடுகளுக்கும் நான் இடம் தருவதில்லை என்றே கருதும். இரண்டுமே சரிதான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இவையெல்லாம் இல்லாமல் எழுதவே முடியாதா, வாழவே முடியாதா என்றால் நிச்சயமாக முடியும். என்னால் முடியுமா என்பது மட்டும்தான் கேள்வி.

கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றனைப் பார்த்தேன். முழங்கை கறுத்துப் போகும் அளவுக்குக் கரும்பலகையிலேயே எழுதி எழுதி அவர் அழிப்பதையும், கணக்குப் போட்டுப் பார்ப்பதற்காகக் குப்பைக் காகிதங்களைத் தேடிப் பொறுக்குவதையும் பார்த்தபோது கண்ணீர் வந்தது. வாழ்க்கை, பெரும்பாலான மேதைகளைக் கஷ்டப்படுத்தித்தான் இருத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் கவனியுங்கள். அவர்கள் அதைக் கஷ்டமென்று கருதியதில்லை. காரணம், முன்சொன்ன சிந்தனை மினிமலிசம். தனது இலக்கு ஒன்றைத் தவிர வேறு எது குறித்தும் கருதாதிருக்கும் கலை கைவந்துவிட்ட பின்பே அவர்களால் அப்படியும் வாழ முடிந்திருக்கிறது. என்ன ஒன்று அவர்களுக்கு அது வெகு விரைவில் சாத்தியமாகியிருக்கிறது. நமக்குத் தாமதமாகிறது. அவ்வளவுதான்.

இம்மாதிரித் தருணங்களில் ஏ.ஆர். ரஹ்மானை நினைத்துக்கொண்டுவிடுவது நல்ல பலனைத் தரும். ஒவ்வொரு பெரிய செலவின்போதும் நான் அவரைத்தான் எண்ணிக்கொள்வேன். புதிய புதிய கருவிகள், புதிய புதிய தொழில்நுட்பம், புதிய வசதிகளுக்காக அவர் கணக்குப் பார்ப்பதேயில்லை. இன்றல்ல. தொடக்கம் முதலே அப்படித்தான். 1993 இல் அவரை ஒரே ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது அவர் மிகவும் இளைஞர். ஆனால் தெளிவாகச் சொன்னார், ‘அவசியம் என்று உணரும் ஒன்றைச் செலவு என்று மாற்றி யோசிப்பதேயில்லை.’

யூ ட்யூபில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ஒலிப்பதிவுக் கூடம் குறித்த ஒரு விடியோ இருக்கிறது. உலகத் தரமான அந்த ஸ்டுடியோவை உருவாக்க அவர் எத்தனை பாடுபட்டிருப்பார், எவ்வளவு செலவு செய்திருப்பார், எவ்வளவு நுணுக்கமாகச் சிந்தித்துச் செயலாற்றியிருப்பார்! எம்.எஸ்.வி இதையெல்லாம் செய்தாரா, மகாதேவன் இதையெல்லாம் வைத்துக்கொண்டா இசையமைத்தார் என்று கேட்பது அறிவீனம். தொழிற்படும்போது இது இருந்தால் நன்றாக இருக்கும், அது இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனத்தில் தோன்றவே கூடாது. எல்லாம் இருக்கும்படிப் பார்த்துக்கொண்டு முழுக் கவனத்தைப் பணியில் குவிப்பதே சரி என்பது என் நிலைபாடு.

இந்த இடத்தில்தான் பொதுவாக இடறும். சொகுசுகளில் புத்தி நிலைத்துவிடுமானால் செயல் கெடும். இதில் எனக்குச் சந்தேகமேயில்லை. எனவே, எதற்காக இந்த சொகுசுகள் என்று எப்போதும் ஒரு பக்கம் சிந்தித்துக்கொண்டே இருப்பேன். செயலில் அமர்ந்துவிடும் கணத்தில் அப்பட்டமாக அனைத்தையும் புத்தியிலிருந்து நகர்த்தி வைத்துவிடுவது..

இந்த ‘புத்தியிலிருந்து நகர்த்துவது’ என்பதுதான் யோகம். அதற்குத்தான் பயிற்சி தேவை. எது இப்போது முக்கியமோ, அதைத் தவிர பிற எதுவும் பொருட்டல்ல என்று எண்ணுவது. இந்தப் பயிற்சியைக் கடந்த 10-15 ஆண்டுகளாகச் சிறிது தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன். தலைபோகிற பிரச்னையானாலும் சரி. அந்தக் கணத்தின் தேவை அதுதானா என்று சிந்திப்பேன். இல்லை என்று தோன்றுமானால் உடனே ஒத்தி வைத்துவிடுவது.

இயற்கை அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அழகிய பூச்செடி சாலையோரம் முளைவிட்டு வளர்ந்திருக்கும். பூக்கவும் தொடங்கியிருக்கும். ஆடு மாடுகளின் மேய்ச்சலில் இருந்து எப்படியோ தப்பித்திருக்கும். மனிதர்கள் பிடுங்காது விட்டிருப்பார்கள். வாகனங்கள் ஏறி நசுக்கிச் செல்லாமல் இருந்திருக்கும். ஈரமே இல்லாத நிலமானாலும் அதற்குரிய நீர் எங்கிருந்தோ கிடைத்திருக்கும். என்னவாவது செய்து உயிர் பிழைத்திருக்கும். எதற்காக இயற்கை அந்த ஒரு பூச்செடியை அத்தனைக் கவனமாக வளர்த்து வைத்திருக்கிறது என்று சிந்திக்கும்போதே ஒரு பெரும் புயல் தாக்கலாம். நிலச் சரிவு ஏற்படலாம். பூகம்பம் உண்டாகலாம். அந்தச் செடி இருந்த தடயமின்றிப் போகலாம். அது இயற்கையின் அந்நேரத்து அத்தியாவசியமாக இருக்கும். முந்தைய கணம் வரை முக்கியமாக இருந்த எது ஒன்றும் அதற்கு அப்போது பொருட்டல்ல. கரும்பலகை முழுவதும் கணக்கெழுதிப் பார்த்து, முழங்கையால் அழித்துத் துடைத்துவிட்டு மீண்டும் பலகையை நிரப்பும் ராமானுஜத்தை இயற்கையின் ஓர் உறுப்பாகக் காண முடியுமானால் இது புரிந்துவிடும்.

சிந்தனையில் மினிமலிசம் என்பது எதையும் சிந்திக்காதிருப்பதல்ல. அது சாத்தியமற்றது. ஆனால் அந்தந்தத் தருணங்களுக்குத் தேவையற்றதைத் தள்ளி வைக்க முடியும். வாழ்க்கை முறைக்குச் சாத்தியமானது சிந்திக்கும் முறைக்கு மட்டும் முடியாது போய்விடுமா என்ன?

முடியும் என்றுதான் தோன்றுகிறது.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 10:12
No comments have been added yet.