உரி – அடுத்த நாவல்
யதி எழுதுவதற்குப் பல ஆண்டுகள் முன்பாக மனத்தில் தோன்றிய கரு, சலம். ஆனால் யதி முதலில் வந்தது. அது வெளியாகி ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் சலம் எழுத முடிந்தது. அந்த வரிசையின் அடுத்த நாவல் எப்போது வரும் என்று யார் கேட்டாலும் தெரியாது என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே அது தெரியாதுதான். அதுவாக வரும்; வந்தால் உண்டு. இல்லையேல் இல்லை.
நேற்று வரை இப்படித்தான் இருந்தது. இன்று அதிகாலை அம்மூன்றாவது நாவலுக்கான முதல் வெளிச்சம் மனத்தில் விழுந்துவிட்டது. ஒரு நாவலின் வித்து பிளந்து முதல் தளிர் புலப்படும் தருணம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஒரு மாதிரி கிறுகிறுவென்றாகிவிடும். வேறெதுவும் செய்யத் தோன்றாது. புறக்காட்சிகளின் மீது அலட்சியம் உண்டாகி எல்லாம், எல்லாமே துச்சமாகத் தோன்றும். இருக்கிற கடமைகள் அனைத்தையும் முடித்துக் கடாசிவிட்டு முழு மூச்சாக உட்கார்ந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.
சலம், வேதகால நாகரிகத்தின் மீது கட்டப்பட்ட புனைவு. சாதி-இன-வர்க்க பேதங்களின் மீது முதல் எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்திய ஒருவனின் கதை. ரிக் வேதத்தில் வருகிற பிராமணரல்லாத ரிஷி ஒருவரின் (மொத்த ரிக் வேதத்திலும் அந்த ஒருவர்தான் சூத்திர ரிஷி.) சாயலில் குத்சனைப் படைத்தேன். யதி, அனைத்து அடையாளங்களையும் துறக்க விரும்பிப் புதிய அடையாளச் சுமைகளை ஏந்தித் திரியும் நான்கு சகோதரர்களின் கதை. இப்போது எழுதவிருக்கும் நாவல், இந்த இரண்டினைக் காட்டிலும் பக்க அளவிலும் காலப் பரப்பிலும் பேசுபொருள் சார்ந்தும் மிகப் பெரிதாக வரும் என்று தோன்றுகிறது.
தலைப்பு: உரி.
இன்று காலை புத்தி இதில் நிலைகொள்ளத் தொடங்கியதிலிருந்து பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் எழுத்துப் பயிற்சி வகுப்பினை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று எண்ணி, அறிவித்தேன். ஐந்தாம் தேதி முதல் அதில் மட்டும்தான் என் முழுக் கவனமும் இருக்கும். அதை நல்லபடியாக முடிக்கும் வரை இதில் உட்கார முடியாது. நாவலைக் குறித்துச் சிந்திக்கக்கூட நேரம் இருக்காது. அல்புனைவில் இந்தச் சிக்கலே இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் அதை என்னால் எழுதிவிட முடியும். ஏற்கெனவே படித்தவை. எங்கெங்கிருந்தோ தொகுத்தவை. கோத்துக் கதையாக்கித் தருவது ஒன்றே அதில் எனக்கு வேலை. தெளிவாகச் சொல்வதென்றால், அல்புனைவில் நான் ஒரு லேபர். நாவல் என்றால் லேபர் வார்டுக்குச் செல்லும் பெண்.
நாளை மறுநாள் தொடங்கும் இந்த எழுத்து வகுப்புகள், அநேகமாக இந்த ஆண்டில் நான் எடுக்கும் கடைசி வகுப்புகளாக இருக்கலாம். நாவலை ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அது முடியும் வரை வேறெதையும் செய்ய இயலாது என்பதே காரணம். எப்போது ஆரம்பிப்பேன் என்று தெரியவில்லை. இது ஒரு கிறுக்கு. எக்கணமும் பிடிக்கும்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .