ஒன்றென்றிருத்தல்
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவதை multi-tasking என்கிறார்கள். இப்போது வெளியாகும் புதிய சாதனங்களில் எல்லாம் multi-tasking வசதி செய்யப்பட்டிருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். வரவிருக்கும் ஐபேடின் புதிய ஆப்பரேடிங் சிஸ்டம் இதனை இன்னும் சுலபமாக்கித் தரும் என்று சொல்கிறார்கள். கருவிக்கென்ன. என்ன வேண்டுமானாலும் செய்யும். கருவியைப் பயன்படுத்துபவனுக்கு அந்தத் திறன் உள்ளதா என்பதுதான் விஷயம்.
முன்னொரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கைந்து தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆறு தொடர்களுக்கு எழுதினேன். அப்போது சன் தொலைக்காட்சியில் வெளியான மொத்தத் தொடர்களின் எண்ணிக்கை பதினெட்டு. நாளெல்லாம், மாதமெல்லாம் ஆண்டெல்லாம் எழுதுவது தவிர வேறு எதுவுமே இல்லை என்றிருந்த காலம் அது. அப்போதெல்லாம் என் அளவுக்கு multi-tasking செய்ய உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது என்று அவ்வப்போது தோன்றிச் சிறிது கிளுகிளுப்பூட்டும்.
பிறகுதான் உணர்ந்தேன். ஒரே நாளில் ஐந்து வேறு வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதினாலும், ஒன்றை முடித்துவிட்டுத்தான் அடுத்ததை எடுக்கிறேன். அது multi-tasking இல் சேராது.
இது தெரிந்தபோது சிறிது சோர்வாகிவிட்டது. அதெப்படி multi-tasking இல்லாமல் போகும் என்று வெகுண்டெழுந்து இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு, இருவேறு தொடர்களின் காட்சிகளை அடுத்தடுத்து எழுதிப் பார்த்தேன். ஆனால், அதுவுமே ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததற்குப் போவதுதான் என்பதால் அதுவும் இல்லை என்றானது.
பதற்றம் நீங்கி, நிதானமாக யோசித்தபோது இன்னொன்றும் தோன்றியது. எழுதுகிறேன். அது ஒரே டாஸ்க்தான். தொடர் எதுவானால் என்ன? எவ்வளவு ஆனால் என்ன? நாவலோ கட்டுரையோ வேறொன்றோ ஆனால்தான் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே வேலையை நாளெல்லாம் செய்வதன் பெயர் நிச்சயமாக multi-tasking ஆக இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது. இந்த ஞானம் பிறந்த கணத்திலிருந்து எந்தெந்த விதங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒன்றாகச் செய்கிறேன்; அதைச் சரியாகவும் செய்கிறேன் என்று யோசிக்கத் ஆரம்பித்தேன்.
சாப்பிடும்போது டிவி பார்க்கிறேன். அதில் சிக்கல் வருவதில்லை. ஆனால் பார்க்கிற காட்சியில் கவனம் குவிந்துவிட்டால் சாப்பாடு மேலே சிந்திவிடுகிறது. நடைப் பயிற்சிக்குச் செல்லும்போது ஹெட்போனில் பாட்டுக் கேட்கிறேன். அல்லது ஏதாவது சொற்பொழிவு கேட்கிறேன். இந்த இரண்டு பணிகளும் கூடியவரை சரியாகவே அமைகின்றன. ஆனால் சில சமயம் நடப்பதிலும் கவனம் குவியாமல், கேட்கும் இசையிலும் மனம் பதியாமல் வேறு எதையாவது சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன். என் மகள், படிக்கும்போது, கோடிங் செய்யும்போது, கணக்குப் போடும்போதுகூட ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். எழுதும்போது இசை கேட்பேன் என்று சில எழுத்தாளர்கள் சொல்வதைப் பார்க்கும்போதும் வியப்பாகவே இருக்கும். எழுத உட்கார்ந்தால் எனக்கு மின்விசிறி சத்தம்கூட இடைஞ்சல். போனை சைலன்ட்டில் போட்டுக் கவிழ்த்து வைப்பேன். . லேப்டாப்பின் வால்யூமை பூஜ்ஜியத்தில் வைப்பேன். நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்வேன். நான் டைப் செய்யும் சத்தத்துக்கு மட்டுமே என் சித்தம் அனுமதி அளிக்கும்.
நேர்மையாகத் தீர்ப்பளிப்பதென்றால் multi-tasking என்னும் கலையில் நான் மிகப்பெரிய சைபர். என் மனைவி அடிக்கடி சொல்வாள். எதையாவது வாங்கி வருவதன் பொருட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றால், எதை நினைத்துக்கொண்டு செல்கிறேனோ அதை மட்டுமே வாங்கி வருகிறேன். தேவையான வேறு ஏதாவது கையெட்டும் தொலைவிலேயே இருந்தாலும் கவனிப்பதில்லை; வாங்கி வருவதில்லை.
இது ஒரு நியாயமான குற்றச்சாட்டு என்றே எப்போதும் தோன்றும். ஆனால் அக்கம்பக்கம் கண்ணும் கவனமும் போகாமல் இருக்காது. வேண்டாத எதையாவது வாங்கி வந்து விட்டு, அதன் பொருட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாமே என்கிற எச்சரிக்கை உணர்வே பெரும்பாலும் அதற்குக் காரணம்.
நானறிந்த சில மல்ட்டி டாஸ்கர்கள் இயங்கும் விதம், நினைக்கும்போதே கலவரமூட்டும். மேலே ஓடும் டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டே முகச் சவரம் செய்யும் சிகையலங்காரக் கலைஞர் ஒருவரை அறிவேன். போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் விற்பன்னர்களை அநேகமாக தினமுமே பார்க்கிறேன். ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பில்லுக்குப் பணம் வாங்கி உள்ளே போட்டு மீதிச் சில்லறை எண்ணிக் கொடுக்கும் கோடம்பாக்கம் அட்சயா ஓட்டல் கல்லாக்காரரை வாரம் ஒருமுறையாவது எதிர்கொள்கிறேன்.
இவர்கள் எல்லோரும் மல்டி டாஸ்கிங் மீதான என் விருப்பத்தை அவ்வப்போது நீரூற்றி அணைப்பவர்கள். ஆனால் இந்தக் கலை என்னை ஏனோ வசீகரிக்கிறது. எப்படியாவது கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் மூலம் இன்னும் சிறிது நேரம் கிடைக்குமானால் மேலும் உருப்படியாக எதையாவது செய்யலாம் என்று ஆசை வருகிறது.
இப்படித் தோன்றும்போதே இன்னொன்றும் தோன்றுகிறது. இன்னும் சிறிது நேரம் கிடைத்து மேலும் சிறிது உருப்படியாக எதைப் புதிதாகச் செய்ய முடியும் என்னால்? இன்னும் நூறு சொற்கள் வேண்டுமானால் அதிகமாக எழுதலாம். மீண்டும் அது multi-tasking இல் சேராது என்கிற புள்ளியில்தான் போய் நிற்கும். கணினியில் ஒரே திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் வசதி எப்போதோ வந்தது. இனி என் ஆட்டத்தைப் பார் என்று அந்நாளில் உணர்ச்சிவசப்பட்டு உள்ளுக்குள் கொக்கரித்திருக்கிறேன். இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஒரே ஒரு நாள் – ஒரே ஒரு முறைகூட அப்படியொரு முயற்சியை நான் செய்து பார்த்ததேயில்லை.
ஒன்றென்றிருப்பதே எனக்குச் சரி என்று ஏதோ ஒன்று என்றைக்கோ முடிவு செய்து வடிவமைத்திருக்கிறது. இதனால்தான் எனக்கு விசிஷ்டாத்வைதம்கூட அவ்வளவாக ஒத்து வருவதில்லை.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .