டிஜிட்டல் உலகில் தமிழ் வாசிப்பு
இந்த மாதிரி பத்திக்குப் பத்தி சப் டைட்டில் போட்டு, பொருட்சுருக்கம் எல்லாம் சொல்லி, கடைசியில் உசாத்துணை கொடுத்து வாழ்நாளில் நான் எழுதியதே இல்லை. இது கவர்மெண்ட் சமாசாரம். வேறு வழியில்லாமல் போய்விட்டது. 2024 ஆம் வருடம் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டு மலருக்காக எழுதிய கட்டுரை இப்போது இங்கே பிரசுரமாகிறது.
பொருட்சுருக்கம் :
பதினாறாம் நூற்றாண்டில் வெளியான முதல் தமிழ் நூலில் இருந்து இன்று வந்திருக்கும் கிண்டில் செல்பேசி செயலிகள் வரை தமிழ் நூல்களும் வாசகர்களும் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
அடுத்து வந்துகொண்டிருக்கும் ஈனும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் எழுத்தாளர் என்பவர் யார்? அவரது பணி என்னவாக இருக்கும்? இனி வரும் காலங்களில் கணினியும், செயற்கை நுண்ணறிவும் இல்லாமல் தமிழ் எழுத்தும் வாசிப்பும் இயங்க முடியாது என்கிற சூழ்நிலையில் தமிழ் வாசிப்பின் அடுத்தக் கட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்று இக்கட்டுரை ஆராய்கிறது.
வாசிப்பு : வந்த வழியும் வளரும் வழியும்
முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன், எழுத்துத் துறையில் மட்டும்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் இந்தத் துறை சார்ந்து பேசப்பட்ட கருத்துகளுள் முதன்மையானது, ‘வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது’ என்பதுதான். பதிப்புத் துறையிலும் சரி, பத்திரிகைத் துறையிலும் சரி. யாரைக் கேட்டாலும் தயங்காமல் இதனைச் சொல்வார்கள். இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டுக்கு முன்புவரை இக்கூற்றை உறுதி செய்வதற்குப் புள்ளி விவரங்களைத் தேடி எடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட பத்திரிகைகள், முடங்கிப் போன பதிப்பகங்களைச் சுட்டிக்காட்டினாலே போதும் என்ற நிலை உண்டாகியிருக்கிறது.
நல்லது. இது ஒரு சிக்கல். ஆனால் தீர்க்க முடியாத சிக்கல் அல்ல. இதன் தீர்வு, இந்தச் சிக்கலை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் இருக்கிறது. பொதுவாகத் தமிழ் சமூகம் வாசிப்பில் இருந்து விலகிச் செல்கிறது என்று குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் எப்படி இருந்தோம், எங்கிருந்து எங்கே நகர்ந்து வந்திருக்கிறோம் என்று சுய மதிப்பீடு செய்து பார்ப்பது இவ்விஷயத்தில் சரியான பலனைத் தரும்.
கிபி 1492 ஆம் ஆண்டுதான் அமெரிக்கா என்ற நாடே கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் கிபி 1554 பிப்ரவரி 11ம் தேதி போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில் முதல் தமிழ் புத்தகம் அச்சாகிவிட்டது. இன்றைக்கு ஆங்கில லிபியில் தமிழை எழுதுவதை தங்கிலீஷ் என்கிறோம் அல்லவா? அன்றைக்குத் தமிழை லத்தீன் மொழியில் எழுதிப் பதிப்பித்தார்கள். ‘தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு’ [1] என்பது அந்நூலின் பெயர்.
கவனிக்க வேண்டிய இடம் இதுதான். பதினாறாம் நூற்றாண்டில் இந்த முதல் தமிழ்ப் புத்தகம் அச்சான சமயத்தில் இங்கே தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்களில் அரச செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. கல்வெட்டில் எழுதும் வழக்கமும் இருந்தது. அச்சு நூல்கள் வெளியாகத் தொடங்கியதால் நமது பாரம்பரியமான செப்புப் பட்டயங்களில் எழுதுவதும் கல்வெட்டில் எழுதுவதும் அருகி, இல்லாமல் போய்விட்டன என்று என்றாவது வருத்தப்பட்டிருக்கிறோமா?
இதுவேதான் இன்றைய ‘வாசிப்பு அருகிவிட்டது’ என்கிற வாதத்துக்கும் நாம் முன்வைக்கக்கூடிய எளிய பதில். வாசிப்பு குறையவில்லை. ஆனால் வேறு தடங்களில் விலகி முன்னேறத் தொடங்கியிருக்கிறது. தமிழ் வாசிப்பு என்பது டிஜிட்டல்மயமாகியிருக்கிறது. இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், யாஹூ, கூகுள் குழுமங்கள், ஆர்குட், பஸ் என்று தொடங்கி இன்று ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், த்ரெட் என்று விரிந்திருக்கிறது. மின் நூல்கள், ஒலி நூல்கள், ஒலி–ஒளி நூல்கள் ஏராளமாக வரத் தொடங்கியிருக்கின்றன. கால மாற்றத்தைத் தவிர்க்க முடியாதது போலவே, அந்தந்தக் காலக்கட்டத்தின் வளர்ச்சிகளை உள்வாங்கிச் செழிப்பதையும் ஒரு செம்மொழி தவிர்க்க விரும்பாது.
நாம் இம்மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்வதால் இரு தரப்பையும் கவனிக்க முடிகிறது. உணர்ச்சிவசப்படாமல் அலசிப் பார்க்க முடிகிறது.
இம்மாற்றம் தொண்ணூறுகளின் இறுதியில் நிகழ ஆரம்பித்தது. இணையம் அப்போது ஓர் ஆடம்பரம். நிறுவனங்களில் இருக்கும். வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் இருக்கும். மின்னஞ்சல் அனுப்ப கம்ப்யூட்டர் செண்டருக்குச் சென்று வந்தேன் என்று சொல்வதும் ஓர் அந்தஸ்து அறிகுறியாகப் பார்க்கப்பட்ட காலம் அது. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வைஃபை தொழில்நுட்பம் இந்தியாவில் பரவ ஆரம்பித்து, சாதாரண மக்களுக்கும் இணையம் சாத்தியம் என்றானபின்பு டிஜிட்டல் வாசிப்பு வேகமெடுக்கத் தொடங்கியது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிகளை அடுத்து அதிக வலைப்பதிவுகளைக் கொண்ட மொழியாகத் தமிழ் திகழ்ந்தது. மறைந்த தமிழ் அறிஞர் அவ்வை நடராசன் 2004 ஆம் ஆண்டு ஓர் இலக்கிய மேடையிலேயே இத்தகவலைத் தெரிவித்தார். உண்மையில், தமிழில் எழுதுவோரும் படிப்போரும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகுதான்.
அதற்கு முன்னால் எண்ணிக்கையாகச் சொல்லப்பட்ட அதிகபட்ச சாதனை எதுவென்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். குமுதம் வார இதழ் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆறு லட்சம் பிரதிகள் விற்றதை மட்டுமே நினைவுகூர முடியும். நாளிதழ்களிலேயே மிக அதிக விற்பனை காணும் தினத்தந்தி தனித்தனியே பதினாறு பிராந்தியங்களில் அச்சிடப்பட்டு வெளியாகிறது. இந்நாளிதழின் அதிகபட்ச விற்பனையாகச் சுட்டிக்காட்டப்படுவது, 2015 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் இது எட்டிய பதினேழு லட்சம் என்கிற எண்ணிக்கை. [2] தமிழ் அறிந்த மக்களின் எண்ணிக்கையோடு இந்த எண்ணை ஒப்பிடக்கூட முடியாது. உலகில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோரின் எண்ணிக்கை எண்பத்தொன்பது கோடி.அதனை நினைவுகூர்ந்தால் மேற்சொன்ன எண்ணிக்கை ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.
ஒரு வெகுஜன வாரப் பத்திரிகை, வெகுஜன நாளிதழின் அதிகபட்ச எண்ணிக்கையே தமிழில் இதுவாகத்தான் இருந்திருக்கிறது என்னும்போது புத்தகங்களின் விற்பனை எப்படி இருக்கும்?
ஆண்டுக்குத் தோராயமாகப் பதினைந்தாயிரம் தமிழ் நூல்கள் [4] வெளியாகின்றன. இந்திய அளவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருவது தமிழில்தான். இதர மூன்று தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களின் எண்ணிக்கை இதில் பாதியளவுகூட இல்லை. ஆனால் புத்தக வாசகர்கள் என்று பார்த்தால் தமிழில் அதிகபட்சம் இரண்டு லட்சம் பேரைச் சொல்ல முடியும். இந்த எண்ணிக்கைக்கு ஆதாரப் புள்ளிவிவரமாக ஏதுமில்லை. ஆனால் பத்தாண்டுக் காலம் தமிழின் முன்னணி பதிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவன் நான். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறுதரப்பட்ட வாசகர்களுடன் உரையாடியிருக்கிறேன். ஏராளமான புத்தகக் காட்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த அனுபவம் தருகிற எண் இது. இதற்குமேல் மிக நிச்சயமாக இல்லை. இவர்கள்தாம் சமையல் நூல்கள், ஆன்மிக நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், சோதிட நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், தொழில்சார் நூல்கள், நவீன இலக்கிய நூல்கள், கவிதைகள் எனத் தமது விருப்பத்துக்கேற்ப வாங்கி வாசிப்பவர்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. இந்த இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையே மெல்ல மெல்லப் பெருகி உருவாகி வந்ததுதான். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்னர் தமிழ் புத்தக வாசகர் உலகின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் கிடையாது.
நன்கு விற்கும் புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள். மிக நன்றாக விற்கும் புத்தகம் என்றால் இரண்டாயிரம் பிரதிகள். தமிழ் பதிப்புலகம் எப்போதும் சொல்லும் எண்ணிக்கை இதுதான். அபூர்வமாக எப்போதேனும் ஒன்றிரண்டு புத்தகங்கள் ஐயாயிரம், ஆறாயிரம் என்ற இலக்கை எட்டியிருக்கின்றன. அது எழுதுபவரின் நட்சத்திர மதிப்பினைப் பொறுத்து நிகழ்வது. கணக்கில் கொள்ள முடியாத வகையைச் சேர்ந்தது.
இதனை இவ்வளவு உடைத்துக் காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஒப்பீட்டளவில் தமிழ் சமூகம் வாசிப்பில் மிகவும் பின் தங்கிய சமூகமே ஆகும். புத்தகங்களின் எண்ணிக்கை இங்கே அதிகரிக்குமே தவிர, வாசக எண்ணிக்கை பெருகாது. காரணம், மிகத் தொடக்க காலம் முதலே நாம் ‘பேசிக் கேட்டு’ப் பழகியவர்கள்.[5] வாசித்து அறிந்து வந்தவர்கள் அல்லர். அரசியல், ஆன்மிகம் தொடங்கி அனைத்துத் துறைசார் தகவல்களையும் உரைகளின் மூலமாக, சொற்பொழிவுகளின் மூலமாகவே உள்வாங்கிப் பழகிய ஒரு மக்கள் கூட்டம், வாசிப்பு என்னும் செயலுக்குச் சுணங்குவது இயற்கை.
யுனிகோட் என்னும் புரட்சி
இந்த வழக்கம் மாறத் தொடங்கியதே இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு நிகழத் தொடங்கிய டிஜிட்டல் வாசிப்புப் பழக்கத்தினால்தான். தமிழில் இது அதிவேகம் கொள்ள மூல முதற்காரணம் யுனிகோட் என்னும் ஒருங்குறியின் வரவும் வீச்சும் என்பதில் சந்தேகமில்லை.
இணையம் இங்கே அறிமுகமான காலத்தில் தமிழில் ஒரு மின்னஞ்சல் எழுதினால் கூடவே நாம் பயன்படுத்திய எழுத்துருவை அதே அஞ்சலில் இணைத்து அனுப்பும் சூழ்நிலை இருந்தது. அஞ்சல் கிடைக்கப் பெறுபவர் அதைப் படிக்க வேண்டுமானால், நாம் இணைத்து அனுப்பிய எழுத்துருவை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து ஒரு ரெஃப்ரெஷும் செய்தால்தான் சாத்தியம்.
எண்ணிப் பார்த்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. ஆனால் அப்படியும் வாழ்ந்திருக்கிறோம். தமிழில் நெடுங்காலமாக அச்சிதழ் வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனங்கள் அனைத்தும் தமக்கென இணையத்தளம் தொடங்கியபோது ஆளுக்கொரு எழுத்துருவைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு தளத்தைத் திறப்பதற்கும் வாசகருக்கு ஒவ்வொரு எழுத்துரு தேவைப்பட்டது.
இந்த அவலம் அனைத்தையும் யூனிகோட் துடைத்தழித்தது. தொழில்நுட்பம் அல்ல சாகசம். நுட்பத்தின் பயனை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்ப்பதே பெருஞ்செயல். அந்த வகையில், யுனிகோடின் வரவும் பயன்பாடும்தான் தமிழ் வாசிப்பை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றது என்று உறுதியாகச் சொல்லலாம். திண்ணை, பதிவுகள், வார்ப்பு, அம்பலம், ஊடறு, ஆறாம்திணை, தமிழோவியம் போன்ற இணையப் பத்திரிகைகள் இதன் பிறகே பெருமளவு வாசக கவனம் பெறத் தொடங்கின.
ஆனால் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டுக்குப் பிறகு இந்த இணைய இதழ் வாசிப்பில் ஒரு தேக்கம் உருவாகத் தொடங்கியது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதன் தலையாய காரணம். கலவையான ரசனை கொண்ட அனைவரும் இணைய இதழ்களைக் காத்திருந்து வாசித்தது போக, எதுவும் நிகழும் கணத்திலேயே என்கிற புதிய சித்தாந்தம் மேலெழத் தொடங்கி, மிக விரைவில் அது அனைவரையும் கவர்ந்துகொண்டது.
தவிர, எழுதுவோர்–வாசிப்போர் என்ற இரு தரப்பாக நிகழ்ந்த ஒரு செயல்பாடு மெல்ல மெல்லத் தனது முகத்தை மாற்றிக்கொண்டு எல்லோரும் எழுதலாம், எல்லோரும் படிக்கலாம் என்கிற ஜனநாயகமயத்தின் விளைவாக மிகப்பெரிய அளவில் பிரபலமடையத் தொடங்கியது.
சமூக ஊடகங்களின் வளர்ச்சி
தமிழ்க் கணிமைச் சாதனைகளில் ஒருங்குறியைத் தொடக்கப் புள்ளியாகக் கொள்வோமானால், இந்த சமூக ஊடகப் பரவல் இன்னொரு புள்ளி. எழுதுவது என்னும் செயல்பாடு மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியம், வாசிப்பது ஒன்றே வெகு மக்கள் செய்யக்கூடியது என்னும் கருத்தாக்கத்தையே தகர்த்தது இது. யாரும் எழுதலாம் என்பது மட்டுமல்ல. எதையும் எழுதலாம் என்கிற சூழலும் இதன்பின்பே உருவாகத் தொடங்கியது. அன்றாட நிகழ்ச்சிகள், சிறிய சம்பவங்கள், நினைவுக் கோவைகள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை, விமரிசனம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், வர்த்தகம் தொடங்கி வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவரவர் மொழியில் எழுதிப் பார்க்கத் தொடங்கினார்கள்.
இப்படி சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்து, இணையத்துக்கு வெளியிலும் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள் பலருண்டு. எழுத்துத் துறைக்கு மட்டுமன்றி, இங்கிருந்து திரைத்துறைக்குச் சென்று சாதித்தவர்களும் இருக்கிறார்கள்.
அனைத்திலும் உச்சம், இன்று வெளியாகும் பெரும்பாலான வார இதழ்களில் பணியாற்றுபவர்களில் பலர் சமூக ஊடகங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர்களே. வலைப்பதிவில், ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்த ஒருவர் தமிழின் புகழ்பெற்ற வார இதழ் ஒன்றின் பொறுப்பாசிரியராகவே ஆனார் என்பது வரலாறு.
இதுவும் ஒரு கட்டம். காட்சி ஊடகங்கள் – குறிப்பாக யூட்யூப் பிரபலமாகத் தொடங்கிய பின்பு, சமூக ஊடகங்களில் இருந்து பலபேர் அதற்குத் தாவினார்கள். பயண நேரத்தில் இரண்டு விடியோ பார்ப்பது. தூங்கப் போகுமுன் நான்கு வீடியோ பார்ப்பது. சும்மா இருக்கும் போதெல்லாம் வீடியோ பார்ப்பது.
இது பெருக ஆரம்பித்தபோது சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் குத்தகைக்கு எடுத்தன. பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களே அதிகம் பேசப்பட்டன. அரசியலும் உள்ளிட்ட அனைத்தைக் குறித்தும் எழுதவும் படிக்கவும் விரும்பியவர்கள் இப்போது மீண்டும் இணைய இதழ்களைத் தேடத் தொடங்கினார்கள். இதன் விளைவாக வெளிவரத் தொடங்கியவையே சொல்வனம், தமிழினி, கனலி, நீலி, அருஞ்சொல், அகழ், மெட்ராஸ் பேப்பர் போன்ற மின்னிதழ்கள்.
வாசகர்கள் தத்தமது ரசனை சார்ந்து இதழ்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் இக்காலக்கட்டம் வசதியளித்தது. மறுபுறம் டெய்லி ஹண்ட் என்கிற நிறுவனம், அனைத்து அச்சிதழ்களுக்கும் டிஜிட்டல் பிரதியைத் தன்னிடம் வந்து வாசிக்க வழி செய்தது. திரள் போன்ற சில தொகுப்பு முயற்சிகள், அனைத்துச் செய்திகளையும் அவை வெளியாகும்போதே உடனுக்குடன் திரட்டி, ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி, வாசகரின் அலைச்சலை எளிமைப்படுத்தியது. திரள் தனது சேவைக்கு இயந்திரக் கற்றல் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் செய்திகளை வகை பிரித்து பிராந்தியவாரியாக, செய்திகளின் தன்மைவாரியாகப் பிரித்து எளிமைப்படுத்தித் தருகிறது.
வாசிப்பும் எழுத்தும் ஜனநாயகமயமானதன் நல்விளைவுகளுள் ஒன்று இது. இதன் இன்னொரு பாய்ச்சல் வேறொரு புறம் சத்தமின்றி நடந்தது. மின்நூல்கள்.
மின்நூல் வெளி
இணைய இதழ்கள் வரத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே சில மின்நூல் முயற்சிகளும் செய்து பார்க்கப்பட்டன. ‘ப்ராஜக்ட் மதுரை‘ இதில் முதன்மையான முன்னெடுப்பு. புதிய அச்சு காணாத பண்டைய இலக்கியப் பிரதிகளைத் தேடித் தொகுத்து டிஜிட்டல் வடிவமாக இவர்கள் அளித்தார்கள். புராதனமான புத்தகங்களின்மீது ஆர்வமுள்ளோருக்கு அது பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு தமிழோவியம் மின் இதழின் சார்பாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்றை முதல் முதலில் மின்நூலாக்கிப் பார்த்தோம். இந்தத் தொடக்க கால மின்நூல் முயற்சிகளை இப்போது எண்ணிப் பார்த்தால் திகைப்பும் வியப்புமே ஆக்கிரமிக்கின்றன. அன்று ஒரு மின்நூல் என்பது ஒரு exe file. திறந்தால் ஒரு கோப்பு வரும். உள்ளே எத்தனைக் கட்டுரைகள் அல்லது கதைகள் உண்டோ அத்தனைக்கும் தனித்தனியே ஒரு எச்.டி.எம்.எல் வடிவம் இருக்கும். பயன்படுத்தப்பட்ட எழுத்துரு தனியாக இருக்கும். அப்படியெல்லாம் உடைத்துப் பார்க்க விரும்பாவிட்டால் exe fileஐ இயக்கி நேரடியாகப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிடலாம். இணைய உலாவியில் அதுவும் ஒரு பக்கம் போல வந்து நிற்கும்.
எப்படியும் ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இரண்டோ மூன்றோ பிரதிகள் விற்றன என்று நினைவு. ஆனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலபேர் பேசினார்கள். யாஹூ குழுமங்களில் ஏராளமான மதிப்புரைகள் வெளிவந்தன. எப்படி இதெல்லாம் நடக்கிறது என்றே புரியவில்லை. பிறகு தெரிந்தது. அந்த இரண்டோ மூன்றோ நல்லவர்கள் தமது மின்னஞ்சல் பட்டியலில் உள்ள அத்தனை பேருக்கும் தாம் பெற்ற இன்பத்தைத் தள்ளி விட்டிருக்கிறார்கள்.
இது எக்காலத்திலும் எல்லாத் தளங்களிலும் இருக்கும் பிரச்னை. பைரசி. இணையத்தின் எல்லைகளற்ற வசதி வாய்ப்புகள் இத்திருட்டை இன்னும் விரிவாகச் செய்வதற்கு உதவியது. ஓசிஆர் என்னும் ஈடு இணையற்ற நுட்பம் கண்டறியப்பட்டபோது தமிழ் சமூகம் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அச்சுப் புத்தகங்களைப் படியெடுத்து, திருட்டுத்தனமாகச் சுற்ற விடுவதற்கே அது பெரும்பாலும் பயன்படத் தொடங்கியது.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2005 ஆம் ஆண்டு என்னுடைய டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு) புத்தகம் வெளியாகி, புத்தகக் காட்சிக்கு விற்பனைக்குச் சென்றது. ஆயிரம் பக்கப் புத்தகம். முந்நூறு ரூபாய் விலை. கண்காட்சியில் புத்தகம் நன்றாக விற்பனை ஆனது. பலரால் பேசப்பட்டது. அதுவல்ல விஷயம். கண்காட்சி முடிந்த ஒரு வாரத்தில் அந்த ஆயிரம் பக்கப் புத்தகமும் முறையாக ஒளிநகல் எடுக்கப்பட்டு அழகான பிடிஎஃப் பிரதியாக உலகெங்கும் வலம் வரத் தொடங்கிவிட்டது. இதன் உச்சம், ஒரு நண்பர் எனக்கே அந்தப் பிரதியை அனுப்பி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டவும் செய்தது.
மின்நூல்கள் வரத் தொடங்கியபோது பைரசியும் வளமாகவே வாழத் தொடங்கியது. என்னைப் போல வேறு சில எழுத்தாளர்களும் அந்நாளில் மின்நூல் வெளியிடும் முயற்சியைத் தொடங்கி, இதனாலேயே பாதியில் நிறுத்தும்படி ஆனது.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, ஒவ்வொரு மின்நூல் வெளியீட்டாளரும் தத்தமது நூலை வாசிக்கத் தானே செயலியைச் சேர்த்துச் செய்து தருவதுதான் என்று முடிவு செய்தார்கள். அதாவது, குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலிக்குள் மட்டும்தான் அவர்கள் தரும் மின்நூலைப் படிக்க முடியும். பிரதி எடுக்க முடியாது, வினியோகம் செய்ய முடியாது.
இணையத்தில் குடிசைத் தொழில் செய்துகொண்டிருந்தோர் தொடங்கி, ஆப்பிள், கூகுள், அமேசான்வரை அனைத்துத் தரப்பினரும் இத்தகு முயற்சிகளை ஆரம்பித்தார்கள். சென்னையில் இருந்து இயங்கும் நியூ ஹொரைசன் மீடியா என்னும் நிறுவனம் நானறிந்து இப்படிப் பிரத்தியேக மின்நூல் செயலி ஒன்றைச் செய்து பார்த்தது.
ஆனால் அனைவரும் யோசிக்கத் தவறியது ஒன்றுண்டு. ஒரு வாசகன் தனது செல்போனில் எத்தனை வாசிப்புச் செயலிகளை வைத்திருக்க முடியும்? புத்தகங்கள் இடத்தை அடைத்துக்கொள்ளும்; மின்நூலில் அந்தச் சிரமம் கிடையாது என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்து, மின்நூல் செயலிகளுக்கு போனில் இடம் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு இது போனது.
ஆனால் தீர்ப்பளிக்கும் விஷயத்தில் பயனரை விஞ்ச யாருமில்லை. எல்லா விதங்களிலும் சௌகரியமான அமேசான் கிண்டில் மின்நூல்களை ஏற்றுக்கொண்டு மற்ற அனைத்தையுமே தமிழ் வாசகர்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆப்பிள், கூகுள் மின்நூல்களும் இதற்குத் தப்பவில்லை என்பதே இங்கே முக்கியம்.
ஒரு விஷயம். அமேசான் கிண்டில் புத்தகங்களுக்கும் திருட்டுப் பிரதிகள் தயாரிக்க முடிந்தது. அப்படித் தயாரித்து, அவற்றை வெளியிடுவதற்கென்றே டெலிகிராமில் பல பிரத்தியேக சானல்கள் திறக்கப்பட்டன. அடையாளம் மறைத்த நபர்கள் திரை மறைவில் இருந்துகொண்டு இந்தத் திருட்டுப் பிரதிகளைத் தொடர்ந்து வெளியிட்டபோது கிண்டில் நிறுவனத்தாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றிரண்டு பிடிஎஃப் குழுக்களைப் புகார் அளித்து நீக்க முடிந்ததே தவிர, புதிது புதிதாக வேறு வேறு பெயர்களில் அவை மீண்டும் வருவதைத் தடுக்க முடியவில்லை.
அனைத்தையும் மீறி அமேசான் கிண்டில் மின்நூல்கள் மட்டும் எப்படி வெற்றி கண்டன? இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.
1. பயன்பாட்டு எளிமை.
2. இயந்திரக் கற்றல் நுட்பம் மூலம் ஒரு வாசகர் ஒரு முறை தேர்வ் செய்யும் புத்தகத்தைக் கொண்டு அவரது விருப்பம் அறிந்து அதற்கேற்பப் பரிந்துரைகள் செய்வது.
3. சக்தி மிக்க தேடுபொறி வசதி.
கிண்டிலின் வரவு, தமிழ் வாசிப்பு வரலாற்றில் சந்தேகமின்றி, ஒரு முக்கியமான புள்ளி. குறிப்பாக, அவர்கள் தருகிற வாடகை நூலக வசதி. அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் நாவல் போட்டிகள் குறித்து அறிவீர்கள். ஓராண்டு அந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது கிண்டில் தமிழ்ப் பிரிவின் உயரதிகாரிகளுடனும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் கலந்து பேசி அதன் செயல்பாட்டினை ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது.
அதிகம் படிக்காத, எளிய வேலைகளுக்கு மணிக்கணக்கில் பேருந்து அல்லது ரயில் பயணம் செய்து திரும்பும் பெண்களே கிண்டில் வாடகை நூலகத்தின் பெரும்பான்மை வாசகர்களாக இருக்கிறார்கள். கையில் ஒரு போனும் மாதம் நூற்றைம்பது ரூபாய் சந்தா தொகையும் இருந்தால் போதும், எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை அவர்கள் தமக்குக் கிடைத்த வரமாகப் பார்க்கிறார்கள். முன்னொரு காலத்தில் தமிழ் வார இதழ்களில் கோலோச்சிய பெண் எழுத்தாளர்களை அடியொற்றி, இந்தப் புதிய தலைமுறை வாசகர்களுக்காகக் கதைகள் எழுதவென்றே நூற்றுக் கணக்கான புதிய பெண் எழுத்தாளர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். எளிய குடும்பக் கதைகள். எளிய காதல் கதைகள். இவற்றைத் தவிர வேறெதுவும் இல்லை. பெரிய மொழி அறிவோ, இலக்கண அறிவோ, புனைவாற்றலோ இந்த எழுத்தாளர்களுக்குக் கிடையாது. ஆனால் கதைகளை வாழ்க்கையில் இருந்து எடுக்க வேண்டும் என்கிற சூட்சுமம் மட்டும் தெரியும். கிண்டிலில் வாழும் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் நூற்றுக் கணக்கான கதைகளை (அவர்கள் நாவல் என்பார்கள்) எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். கிண்டில் வாசகர்களிடையே அவர்கள் பெருநட்சத்திரங்கள். ஆனால் மின்நூல் உலகுக்கு வெளியே வசிக்கும் யாருக்கும் அந்த எழுத்தாளர்களின் பெயர்கள்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
செயற்கை நுண்ணறிவு என்னும் சாகசம்
பெயரில் என்ன இருக்கிறது? அல்லது பெயரேதான் எதற்கு? சாட் ஜிபிடியின் வரவுக்குப் பிறகு என்ன கேட்டாலும் சில வினாடிகளில் கிடைத்துவிடும் என்றாகிவிட்டது. உள்ளே உட்கார்ந்துகொண்டு எழுதுபவர் யார்? தெரியாது. அவருக்கு எப்படி உலகில் உள்ள எல்லாவற்றைப் பற்றியும் ஏதோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறது? தெரியாது. கேள்வி கேட்டால் பதில் சொல்கிறது. கதை எழுதச் சொன்னால் எழுதுகிறது. கட்டுரை கேட்டால் தருகிறது. கவிதை வேண்டுமானாலும் உடனே தயார். முன்னும் பின்னும் சிறிது தட்டி சரி செய்ய வேண்டிய வேலை மட்டும்தான் நமக்கென மிச்சம் இருக்கிறது. ஏழாம் அறிவு என்றே சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நம்மை இப்போது ஆளத் தொடங்கியிருக்கிறது. நான் எழுதுவதை நீ படி என்ற காலம் இனி இல்லை. உனக்கு என்ன பிடிக்கும் அல்லது இந்தக் கணம் என்ன படிக்க விரும்புகிறாய் என்று சொல், அதனைத் தருகிறேன் என்று கேட்டு உபசரிக்கக் கூடிய காலம் மிகச் சமீபத்திலேயே உள்ளது.
தமிழைப் பொறுத்தவரை இந்த நுட்பம் இன்னும் அவ்வளவு துல்லியமாகவில்லை என்றாலும் அது நிகழக்கூடிய காலம் குறைவானதாகவே இருக்கும். ஆழி செந்தில்நாதனின் ‘ஐலேசா‘ [6] போன்ற முயற்சிகள் இந்நம்பிக்கையை வலுவாகவே அளிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி, தேவையான எந்தத் துறை சார்ந்தும் புதிய பிரதிகளை உருவாக்க முடியும் என்கிறது ஐலேசா. இயந்திரம் கற்கும் என்றால் இயந்திரம் படைக்கவும் செய்யவல்லதுதானே? ‘கண்டெண்ட் க்ரியேஷன்‘ என்பதை இயந்திரத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு, அதனைச்<