ஒரு நிரந்தர நம்பர் 2வின் மரணம்
1999ம் ஆண்டு ஒரு மரண தண்டனை அறிவிப்பு (எகிப்து). 2001ம் ஆண்டு தலைக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிப்பு (அமெரிக்கா). 2004ம் ஆண்டு அதிக உலக நாடுகள் தேடுகிற அபாயகரமான மனிதர்களின் பட்டியலில் இரண்டாமிடம். மே 2, 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் இறந்ததில் இருந்து ஜூலை 31, 2022 அன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, சுட்டுக் கொல்லப்பட்டது வரை அய்மன் அல் ஜவாஹிரிதான் அல் காயிதாவின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
பெரிய டாக்டர். கண் அறுவைச் சிகிச்சை நிபுணர். பெரிய குடும்பஸ்தர். குறைந்தது நான்கு மனைவிகளையும், குறைந்தது ஒன்பது குழந்தைகளையும் (ஒரு செட் இரட்டைக் குழந்தைகள் உள்பட) பெற்றவர். பெரிய புரட்சியாளர். எகிப்தில் வசித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் விரல் அசைத்தால் மறு கணமே ஆயுதம் ஏந்திப் போராட வருவதற்கு ஆயிரக் கணக்கான சீடர்களை உருவாக்கி வைத்திருந்தார். ஆப்கனுக்கு அவர் இடம் பெயர்ந்தபோது அதே ஆயிரக் கணக்கான எகிப்தியப் போராளிகளும் பைப்பரின் எலிகள் போல அவர் பின்னால் அணி வகுத்து வந்ததை ஆப்கன் சரித்திரம் இன்றும் சொல்லும். பெரிய சித்தாந்தவாதி. நிறையப் படித்தவர். 1998ம் ஆண்டு முதல் அல் காயிதாவுக்கு ஃபத்வாக்களெல்லாம் அவர்தான் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அல் காயிதாவில் ஒசாமாவுக்கு அடுத்தபடி உலகறிந்த நபர் அவர்தான். எந்தப் புள்ளியில் அவர் தன்னையும் தனது இயக்கத்தையும் அல் காயிதாவுடன் இணைத்து, இரண்டறக் கலந்தார் என்பது முக்கியம். இறுதி வரை ஒசாமா பின் லேடன் நம்பிய ஒரே லெஃப்டினண்ட் அவர்தான் என்பது அதைவிட முக்கியம்.
நவீன உலகம் மிகச் சமீபத்தில் கண்டு களித்த மாபெரும் நகைச்சுவைக் காட்சி என்றால், அது தாலிபன்களிடம் ஆப்கனிஸ்தானை ஒப்படைத்துவிட்டு, ‘இனி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தராமல் இருங்கள்’ என்று அமெரிக்கா சொல்லிவிட்டுப் போனதுதான். ஆப்கனிஸ்தான் என்பது அப்பாவி மக்களை மைனாரிடிகளாகவும் தீவிரவாதிகளைப் பெரும்பான்மை சமூகமாகவும் கொண்ட ஒரு தேசம். இதில் உள்ளூர், வெளியூர் பாகுபாடுகள் அர்த்தமற்றவை. அல் காயிதா, ஐ.எஸ் என்பவை நாமறிந்த பெயர்கள். நமக்கு அறிமுகமில்லாத இன்னும் பல தீவிரவாத இயக்கங்களுக்கு அத்தேசம் சரணாலயமாக விளங்கத் தொடங்கி குறைந்தது நாற்பது வருடங்களாகின்றன. பெரும்பாலும் சோவியத் யுத்த காலத்தில் வந்து சேர்ந்த இயக்கங்கள். அல்லது அப்போது வந்து சேர்ந்து பிறகு ஏதேனும் ஓர் இயக்கத்துடன் ஒட்டிக்கொண்டவர்கள்.
அய்மன் அல் ஜவாஹிரியும் அதே சோவியத் யுத்த காலத்தில் ஆப்கனுக்கு வந்தவர்தான். ஆனால் ஒசாமாவுக்கு அவர் அப்போது அறிமுகமாகவில்லை. யுத்தத்தில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட்டு காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக அவர் பணியாற்றினார். யுத்தம் முடிந்த பின்பு என்ன என்ற வினா அவருக்கு மட்டுமல்ல; அவரைப் போல-அவரது இயக்கத்தினரைப் போலப் பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்கனுக்கு வந்திருந்த இஸ்லாமியப் போராளிகள் அனைவருக்குமே இருந்தது. ஜவாஹிரியால் மிக நிச்சயமாக அவரது சொந்த தேசமான எகிப்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்ற சூழல் இருந்தது. ஏனெனில், 1981ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டவர். மூன்றாண்டுகள் கெய்ரோ மத்திய சிறையில் இருந்தார்.
சிறைக்குள் இருந்த காலத்திலும் சரி; சிறைக்குச் செல்வதற்கு முன்னால் நீதி மன்றத்தில் அவர் தன்னை விடுவிக்கக் கோரி வாதாடிய போதும் சரி. ஒரு மாபெரும் மதப் புரட்சியாளன் உருவாகிவிட்டான் என்னும் பிம்பத்தை மிக அழகாகக் கட்டியெழுப்பியிருந்தார். எகிப்து புரட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் அவர்தான் அன்றைக்குக் கனவு நாயகன். ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிச் சொல்லி வியக்கும் வண்ணம் அமைந்தது அவரது நீதி மன்ற வாதங்கள்.
ஆன போதிலும் அவை எடுபடாமல், தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறைக்குச் சென்றார். அங்கே கைதிகள் அவரைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். ஜவாஹிரி அவர்களுக்கு சித்தாந்த வகுப்பெடுத்தார். புரட்சிப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். இஸ்லாத்தின் எதிரியாக அன்று அவர் கண்ணுக்குத் தென்பட்ட ஒரே சக்தி இஸ்ரேல் அரசாங்கம். யூதர்களைத் தாக்கி அழிப்பது ஒன்றே இலக்கு என்கிற தனது கருத்தை, அகப்பட்ட அத்தனை தொண்டர்களுக்கும் புகட்டினார். ஜவாஹிரியின் புரட்சிப் படை என்பது இப்படி உருவானதுதான்.
சிறையில் ஜவாஹிரி மிகக் கொடூரமான முறையில் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டதாகவும் வேறு யாராகவேனும் இருந்தால் நிச்சயமாக இறந்திருப்பார்கள்; அவர் மட்டும் எப்படியோ உயிர் பிழைத்தார் என்றும் ஒரு கதை சொல்வார்கள். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் 1985ம் ஆண்டு ஜவாஹிரி விடுதலை ஆனதும் முதல் காரியமாக எகிப்தை விட்டு வெளியேறினார். சவூதி அரேபியாவில் சிறிது காலம். ஏமனில் சிறிது காலம். பாகிஸ்தானுக்குச் சென்று, பெஷாவரில் சில ஆண்டுகள். அங்கிருந்து ஆப்கனிஸ்தான் வந்து சோவியத் யுத்த நீரோட்டத்தில் – அது முடிகிற வரை.
இடைப்பட்ட காலத்தில் எகிப்திய இஸ்லாமியப் போராளி இயக்கம் தனது அடையாளத்தை இழந்து, சிதறிக் கிடந்தது. 1993ம் ஆண்டு மீண்டும் அது உயிர்த்தெழுந்த போது, ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1993-95க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் எவ்வளவு; படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் எத்தனை பேர் என்று கூகுள் செய்து பாருங்கள். அவை அனைத்தின் பின்னணியிலும் ஜவாஹிரி இருந்தார். இவை அனைத்துக்கும் தொடர்ச்சியாகத்தான் 1999ம் ஆண்டு எகிப்து நீதி மன்றம் ஜவாஹிரிக்கு மரண தண்டனை விதித்தது.
சரி, நீ விதித்தால் விதித்துக்கொள்; அதை எவன் மதித்தான் என்று அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமது இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு மேற்குலக இஸ்லாமிய அமைப்புகளிடமும் தனி நபர் பணக்காரர்களிடமும் நிதி வசூல் செய்தார். 1996 அல்லது 97ல் அவர் மீண்டும் ஆப்கனிஸ்தானுக்கு வரும்போதுதான் முதல் முதலில் ஒசாமா பின் லேடனைச் சந்திக்கிறார் (இந்தச் சந்திப்பு ஜலாலாபாத் நகரில் நடைபெற்றது). ஒருவேளை, முன்பே அறிமுகமாகியிருக்கலாம். அது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இருவரும் நண்பர்களாகி, நெருக்கமாகி, இரண்டறக் கலப்பதெல்லாம் இதன் பிறகு நடப்பவைதாம்.
உண்மையில் அப்போதுகூட ஜவாஹிரி அமெரிக்காவைத் தமது எதிரியாகக் கருதியதில்லை. உலகெங்கும் செயல்படும் இஸ்லாமியப் போராளி இயக்கங்களை ஒருங்கிணைத்து, யூதர்களுக்கு எதிரான ஒரு முழு நீளத் தாக்குதலை திட்டமிடும் கனவுதான் அவர் வசம் இருந்தது. அமெரிக்கப் பக்க பலம் இருக்கும் வரை யூதர்களை அசைக்க முடியாது என்பதை அவருக்குப் புரிய வைத்தவர் ஒசாமா பின் லேடன். இஸ்ரேலைக் காட்டிலும் அமெரிக்கா அபாயகரமான தேசம் என்பதை எடுத்துச் சொன்னதும் அவர்தான்.
1998 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜவாஹிரி தமது இயக்கத்தை முறைப்படி அல் காயிதாவுடன் இணைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் கென்யாவிலும் தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல் காயிதா நடத்திய தற்கொலைத் தாக்குதல்களை அவர்தான் ஒசாமாவுடன் இணைந்து வடிவமைத்தார். உண்மையில், இந்த இருவரும் உலக அளவில் கவனம் பெற்ற முதல் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்பே ஒசாமா பின் லேடன் அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கத் தொடங்கி இருந்தார் எனினும், இந்தக் குறிப்பிட்ட (223 பேர் மரணத்தை உள்ளடக்கிய) தூதரகத் தாக்குதல்களுக்குப் பிறகுதான் அவர் ஜவாஹிரியிடம் தனது திட்டத்தை எடுத்துச் சொன்னார். பிறகு நடந்ததெல்லாம் நாமறிந்த சரித்திரம்.
அய்மன் அல் ஜவாஹிரி மட்டுமல்ல. அல் காயிதாவின் இதர மிச்சங்கள், ஐ.எஸ்ஸின் மிச்சங்கள், பல பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, இதர பல மத்தியக் கிழக்கு இயக்கங்களின் மிச்சங்கள் அனைத்தும் இன்னும் ஆப்கனிஸ்தானில்தான் நிலைகொண்டுள்ளன. முன்னளவு தீவிரம், முன்னளவு அமைப்பு ரீதியிலான செயல்பாடுகள் இன்று மட்டுப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆப்கன் இன்று வரை ஒரு தீவிரவாதக் கூடாரமாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களாகிவிட்டாலும் தாலிபன்களும் அந்த வகையறாதானே? எல்லாம் ஒரு ‘புரிதலில்’ நகரும் வாழ்க்கைதான்.
ஜூலை 31, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை காபூலுக்குச் சற்றுத் தள்ளி புறநகரப் பக்கமாக வசித்து வந்த ஜவாஹிரியின் வீட்டில் ஆளில்லா விமானம் மூலம் சி.ஐ.ஏ தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னால் அவர் அங்கேதான் இருக்கிறார் என்பது சி.ஐ.ஏவுக்குத் தெரியாதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அன்றைக்கு முகூர்த்தம் பார்த்தார்கள். முடித்துவிட்டார்கள். அவ்வளவுதான். இதில் வினோதம் என்னவென்றால், ‘தமது ரகசிய வீட்டில் பதுங்கியிருந்த ஜவாஹிரி பால்கனியில் உலவிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று வருகிற செய்தியைக் கவனியுங்கள். பதுங்கியிருக்கும் பிரகஸ்பதி எதற்காக உலவ வெளியே வர வேண்டும்?
அவர் அங்கே சகஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பதுதான் உண்மை. என்னதான் அமெரிக்கா அத்துமீறிவிட்டது என்று இன்றைக்குத் தாலிபன் அறிக்கை விட்டாலும், கதவைத் திறந்து காட்டி காவிக்கொண்டு போ என்று கொடியசைத்ததும் அவர்கள்தாம். ஏதாவது வருடாந்திரக் கப்ப ஒப்பந்தமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்?
இருபதாண்டுக் காலத்துக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வந்த ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் நாடி நரம்பெல்லாம் தளர்ந்து அவர் எழுபத்தொரு வயதுக் கிழவராகும் வரை அமெரிக்கா அதற்குக் காத்திருக்க வேண்டி இருந்தது.
(2022 ஆம் ஆண்டு ஜவாஹிரி கொல்லப்பட்டபோது மெட்ராஸ் பேப்பரில் வெளியானது.)
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .