வீணை
பவா செல்லதுரை
மிக அழகாக பார்சல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வீணையை என் அருகாமையில் உணர்ந்தபோது, ஒரு பெண்ணின்நெருக்கமான இருப்பை நான் அழுத்தமாக உணர்ந்தேன். பஸ் மேடுபள்ளங்களில் குலுங்கியதில்அந்த உணர்வு மேலும் தீவிரமடைந்தது.
வாழ்வின் அபூர்வமான தருணங்கள் இப்படி எப்போதாவதுதான் நிகழும்.இரவு பத்து மணியளவில் அந்தக் கூரியர் நிறுவனத்தின் ஷட்டரை இழுத்து மூடுகையில், அந்தஇளைஞன் அவசரமாக ஒரு புல்லட்டில் வந்து சேர்ந்தான். பாதி மூடியிருந்த ஷட்டருக்கு முன்அவனைப் பார்த்தபடி நான் அப்படியே நின்றிருந்தேன். அவன் கையில் ஒரு பொக்கிஷத்தைப் போலஏந்தியிருந்த அந்த பார்சலுடன் என்னை உற்று நோக்கினான்.
"ஐ அம் ஸ்டீபன் ராஜ், ஃப்ரம் சேலம்."
"இது வீணை."

"நாளைக்கு எப்படியாவது கோவாவுக்குப் போய்ச் சேரனும்.எவ்வளவு செலவானாலும் சரி. நாளைக்கு அவர்களுக்கு பர்த்டே. இது என்னோட கிஃப்ட்."பாதி ஆங்கிலம், பாதித் தமிழ், மீதிப் பதற்றத்துடன் அவன் சொல்லி முடித்தான். நான் அவனைப்பார்த்துக் கொண்டே நிதானமாக ஷட்டரை இழுத்து மூடினேன். நிராசை நிறைந்த அவன் கண்களைக்கவனித்தேன். அவனை மேலும் நிலைகுலைய வைக்க மனம் ஒப்பாமல், "நான் இன்றிரவு கோவாவுக்குத்தான் போகிறேன்.பில் போட மாட்டேன். நேரடியா டெலிவரி பண்ணிவிடுகிறேன், எழுநூறு ரூபாய் ஆகும். பரவாலயா?"என்றேன் நிதானமாக. அடுத்த நொடி, அவன் தன் பின்புறப் பேண்டு பாக்கெட்டிலிருந்து எடுத்தபரிசிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை என் கைக்குள்ள திணித்து, "இத வச்சுக்கோங்க,எப்படியாவது நாளைக்குள் அவங்ககிட்ட சேர்த்தா போதும்," என்றான். அவனின் துள்ளல்,உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டதற்குக் காரணம், அந்த பேக்கிங்கில் எழுதப்பட்டிருந்தபெயர் தான்.
மிஸ். ஜெனிபர் பிலோமி. அதற்குக் கீழ எழுதப்பட்ட முகவரிஎதுவும் என் மனதில் பதியவேயில்லை. இப் பெயருக்குரிய பெண்ணை ஒரே நிமிடத்தில் பேரழகியாகக்கற்பனை செய்து கொண்டேன். அதற்குள் நானே அவளது முழு உருவத்தையும் ஓவியமாக வரைந்து முடித்திருந்தேன். ஒரு பெண்ணின்பெயருக்கான வசீகரம் கண நேரத்தில் ஓர் ஆண் மனதில் இத்தனையும் செய்து முடித்து விடுகிறதுதானே.நான் இப்பொழுது காதல் ததும்பிய ஸ்டீபன் ராஜ் ஆகவே மாறியிருந்தேன்.
எனக்கு சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீது ஒரு விதப்பித்திருந்தது. நான் கையில் ஏந்திக் கொண்டிருந்த வீணை, வண்ணநிலவனின் 'கடல்புறத்து பிலோமியை'ஏந்திக்கொண்டது மாதிரி ஸ்பரிசித்துக் கொண்டேன். ச. தமிழ்ச்செல்வனின் கதையில் வரும்தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்களின் க்யூ வரிசை என் ஜபாகத்திக்குவந்து போனது. வருகை பதிவேட்டில் இருக்கும் ராமாயி, மாரியம்மாகளுக்கு நிமிர்த்து பார்க்கத்தேவையில்லாத முகங்களும் பிருந்தா, சவீதா, லீனா, நீமா போன்ற பெயர்களுக்கு நிமிர்ந்துபார்க்கத் தூண்டும் உருவங்களாகவும் இருக்கும். அப்படியெல்லாம் பெயருக்கும் உருவத்திற்கும்சம்பந்தமில்லை என்பதை நிமிர்ந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. வேலை பார்க்கும் இக்கூரியர் நிறுவனத்திலும் இந்த அனுபவம் தினம் தினம் நிகழ்வதுதான். 'கடலோரக் கவிதைகள்'ஜெனிபர் டீச்சர் வேறு என் கண்முன் வந்து வந்து போனார்கள். இப்போது இந்த பார்சலின் மேற்பகுதியில்மிக அழகான கையெழுத்தில் எழுதியிருக்கும், பிலோமியை நான் நிமிர்ந்து பார்க்கத் தேவையிராது.அவள் பேரழகியாகத்தான் இருக்க முடியும். அதுவும் சேலத்திலிருந்து இரவு பத்து மணிக்குஒருவன் அவசர அவசரமாக வந்து ஒரு வீணையை அவள் பிறந்தநாளுக்கு அவ்வளவு தூரம் அனுப்புகிறானென்றால்,அவள்தான் கோவாவிற்கே பேரழகியாக இருக்க வேண்டும்.
யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று ஒருமுறை கவனித்துவிட்டு,வீணையை என்னில் இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டேன். அது மற்றவர்களின் கண்ணுக்குத்தான்வீணை, எனக்கு பிலோமி! இக்கணத்தில் மிகுந்த பரிதாபத்தோடு ஸ்டீபன் ராஜை வேறு, மனம் நினைத்துகொண்டது. பஸ் ஒரு சீரான வேகத்தில் எங்கள் அணைப்பை அங்கீகரித்ததுப் போலச் சென்று கொண்டிருந்தது.எனக்கு எப்போதும் நல்ல மனநிலை, நல்ல தூக்கத்தையும் தானாகவே கொண்டு வந்து சேர்த்துவிடும்.ஊரடைதலை ஏதோ ஓர் உள்ளுணர்வு அறிவித்து எழுப்பிவிடும். அன்றும் அவ்வாறே நிகழ்ந்தது.பழக்கமான கோவாவின் பனாதியை அடைந்திருந்தேன். என் பிலோமியை கையில் ஏந்தியபடி இறங்கியதைச்சிலர் வேடிக்கை பார்த்தனர். எதைப் பற்றியும் கவலைப்படாத மனநிலையை நான் நேற்றிரவு பயணத்தின்துவக்கத்திலேயே கடந்திருந்தேன்.
கோவாவில் எனக்கென்று எப்போதுமிருக்கும் அந்த அறையில் ஒருசுவரின் மீது அதைச் சாய்த்து வைத்து விட்டுக் குளிக்கலாம் என முடிவு எடுத்தேன். அதைகையாளும் ஒவ்வொரு நிமிடமும் எனக்குள் ஏற்பட்டிருந்த பொறுமையும் நிதானமும் என் வாழ்வில்இதற்கு முன் இருந்ததில்லை. குளித்து முடித்து இருப்பதிலேயே நல்ல உடையாக தேர்ந்தெடுத்து,டக் பண்ணும் பொது அந்த உடை எனக்கொரு ஆபீஸர் அந்தஸ்தை தந்திருந்தது. எதிர்ப்பாரத இந்தப்பயணத்திற்கு இந்த உடைத்தேர்வு பெரிதும் கை கொடுக்கும். நான் எப்போதுமே கூரியர் நிறுவனத்தின்டெலிவரி பாய் இல்லை, அதற்கும் இரண்டு படி மேலே. எங்கள் மண்டலம் முழுவதும் பயணப்படவும்,ஆய்வு செய்யவும் எனக்கு கிடைத்த சிறு அதிகாரம் சட்டையைச் டக் செய்யக்கூடிய அந்தஸ்தையும்கூடவே தந்திருந்தது. இப்போது என் அறைக்கட்டிலில் உட்கார்ந்து எனக்கு மிக அருகில் சுவரில்சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த வீணையின் நீள அகலத்தை என் கண்களால் அளவிட்டேன். அதுஅப்படியே பிலோமியின் நீல அகலமாகத்தான் இருக்க வேண்டும். வீணைதான் எத்தகைய கம்பீரமானஇசைக் கருவி! மற்ற இசைக்கருவிகளைப் போல அதை அலட்சியமாகக் கையாண்ட எந்த ஒரு மனிதரையும்நான் இதுவரை பார்த்ததில்லை. அதுவே அதற்கான உன்னதத்தைக் கலைஞர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.ஐந்தாவது முறையாக, ஆங்கிலத்தில் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த, அந்தப் பெயரைஇப்போதும் நான் நிதானமாகப் படித்தேன்.
Miss. Jenifer Philomi
அதற்கும் கீழ் எழுதப்பட்டிருந்த முகவரியை இப்போதும் படிக்கமுடியவில்லை, அதை மனம் வெளியே தள்ளியது. வாஸ்கோவிற்கு இங்கிருந்து சில மைல்கள் பயணிக்கவேண்டும். என் பயண எல்லை இதுவரை மட்டும்தான், ஆனால் இப்போது நான் ஓர் அழகிய பெயருக்காக மட்டுமே ஆறுஏழு மயில்கள் பயணிக்கப் போகிறேன். மனமெல்லாம் காதலை நிரப்பிக் கொண்டு, கடற்கரையை எதிர்கொண்டுஇன்னும் சில நிமிடங்களில் அவளைச் சந்தித்து விடப் போகிறேன். அதுவும் இல்லாமல் நான்கூரியர் நிறுவன பணியாளன் இல்லை. அதனால்தான் எழுநூறு ரூபாய்க்கு பில் போடவில்லை.
இக்கணம் என் பெயர் எனக்கு மறந்து விட்டது. என் பெயர் ஸ்டீபன்ராஜ். ஜெனிஃபர் பிலோமி என்ற அந்த அழகிய பெயருக்காக, ஸ்டீபன் ராஜ் என்ற அந்த சேலத்துஇளைஞனின் சார்பில், என்ன அவன் சார்பில், நான் ஸ்டீபன் ராஜாகவே போகிறேன். எனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை என்பதுஎதுவுமில்லை. கோவாவின் இந்நிலம், இக் கடல் என எல்லாமும் இனி எனதே. ஒரு பெயர் இப்படிஒருவனுக்கு இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தியிருக்கிறதே! வாஸ்கோடகாமா நான்அடிக்கடி சென்று பழகிய இடமில்லை என்றாலும், சில முறை சுற்றித் திரிந்த பிரதேசம் தான்.எப்பொழுதுமே அதன் சந்து பொந்துகள் என் நினைவில் நிற்காதவை. ஆனாலும் ஸ்டீபன் ராஜுக்குபிலோமிபோல எனக்கும் சில ஜெனிஃபர்கள் இப்பிரதேசத்தில் உண்டு.
பிலோமியின் தெருவைக் கண்டுபிடிப்பதிலோ! அல்லது வீட்டைக்கண்டறிவதிலோ! அதிகச் சிரமம் இருக்கவில்லை. மாறாக, என் கற்பனையில் வரைந்திருந்த சுற்றுச்சுவர்கொண்ட பெரிய பங்களாவிற்குப் பதிலாக, குறுகலான சந்தில் ஓடுகள் வேயப்பட்டிருந்த ஒரு சாதாரணவீடாக அது இருந்தது.
ஓட்டு வீடுகளில் ஜெனிஃபர் போன்ற தேவதைகள் வசிக்க மாட்டார்களா என்ன? காலிங்பெல்லில்லாத அந்த வீட்டின் கதவுகள் தட்டப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு திறந்தன.ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட எழுத்துக்கள் கொண்ட சிவப்பு நிறடீ ஷர்ட்டும் பாவாடையும் அணிந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், எதிரே ஒருவன் பெரியபார்சலுடன் நிற்பதை எவ்வித ஆச்சரியமின்றி எதிர்கொண்டாள். நான் சற்றுத் தயங்கி"மிஸ் ஜெனிஃபர் பிலோமி" என்று இழுத்துச் சொன்னதும், ஏதோ ஞாபகம் வந்தவளைப்போல, "எஸ், கம் இன்" என்ற குரலை மட்டும் கதவருகில் விட்டுவிட்டு அந்தச் சிறுஹாலுக்குள் நடந்தாள். நான் வேறு வழியின்றி அவளைப் பின் தொடர வேண்டியிருந்தது. ஜெனிஃபர்பிலோமி இவளாக இருக்க வாய்ப்பே இல்லை. கதைகளில் கூட எப்போதும் தேவதைகள் உடனே வெளிப்பட்டடுவதில்லை.அவர்களின் வசிப்பிடங்களை அடைய இன்னும் இன்னும் நாம் மெனக்கெட வேண்டியிருக்கும். “அதுஇதுவரை யாரும் தீண்டியிராத அழகிய வெற்று கணைகள்.” கூரியர் தொழிலுக்காக நான் விட்டொழித்தகவிதை வரிகள் தொக்கி தொக்கி ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, ஒரு வயர் பின்னிய கூடை நாற்காலியில்நான் உட்கார வைக்கப்பட்டேன். கண்ணாடி டம்ளரில் இருந்த குளிர்ந்த நீரை அந்த முப்பத்தைந்துவயது சிவப்பு டி ஷார்ட் காரி என் கைகளுக்கு மற்ற முயன்ற போது நான் சர்வ ஜாக்கிரதையாகஅந்த வீணையை மேற்குப் பக்கச் சுவரில் சாய்த்து வைத்துவிட்டு டம்ளரைப் பெற்றுக் கொண்டேன்.அமைதி, மௌனம், காதல் ததும்பல் அப்படியெல்லாம் அந்த அரை எதையும் அனுமதிக்க வில்லை.
"ம், சொல்லு." என்ற சூழலே என்னை அடுத்துப் பேசத்தூண்டியது. நான் டெலிவரி பாய் இல்லை என்ற எண்ணம் மட்டும் என் மூளையில் ஆழமாகப் பதிந்துவிட்டது.தொலைக்காட்சியில் நேர்காணலில் பேசுவது போல, "நான் சேலம் ஸ்டீபன் ராஜின் நண்பன்.அவனால் இன்று. ஜெனிஃபர் பிறந்தநாளுக்கு வரஇயலவில்லை. அதனால் இந்தப் பரிசை என்னிடம் கொடுத்து அனுப்பினார்," என்று எனக்குள்முந்திய வார்த்தைகளை நான் மிகச் சரியாக வெளிப்படுத்தி விட்டேன். இப்போது அப் பெண் வலதுபக்கமாக இருந்த அந்தச் சிறிய அறையை நோக்கி ஜெனி அல்லது பிலோமி என்று அழைப்பாள் என நான்எதிர்பார்த்து ஏமாந்தேன்.
"நான்தான் . ஜெனிஃபர் பிலோமி, ஆனால் இன்று எனக்குப் பிறந்தநாள் இல்லையே!"வார்த்தைகள் மட்டும் என் காதுகளுக்குள் போய்க்கொண்டிருந்தது. நான் அந்த ஹாலில் இடைவெளியின்றி,எந்த ஒழுங்குமுறையுமின்றி ஒட்டப்பட்டிருந்த அப் பெண்ணின் கடந்த காலத்து நிமிர் பருவங்களைச்சுமந்த புகைப்படங்களை அப்போதுதான் கவனித்தேன். பல சினிமா பத்திரிகைகளில் வந்த அட்டைப்படங்களைநினைவூட்டின அவைகள். ஏமாற்றத்துடன் கூடிய ஆசுவாசம் என்பார்களே அதை அந்த அறையிலிருந்துஎடுத்து எனக்குள் நிரப்பிக் கொண்டேன். நான் முற்றிலும் இலகுவாகியிருந்தேன் அல்லது தெளிவடைந்திருந்தேன்.இனி எந்த அறையிலிருந்தும் தேவதைகள் வெளிப்படப் போவதும் இல்லை.
"இல்லையே!, என் நண்பன் ஸ்டீபன் இன்றுதான் உங்கள்பிறந்தநாள் என்று சொல்லி இத்தனை அருமையான ஒரு பிறந்தநாள் பரிசோடு அத்தனை தூரத்திலிருந்துஎன்னை அனுப்பி வைத்தானே!" என் வார்த்தைகளை இடைமறித்து, "நான் ஒவ்வொருவரிடமும்ஒரு நாளை என் பிறந்த நாளாகச் சொல்வேன். அதை சீரியசாக எடுத்துக்கொண்டு இப்படி ஒரு பரிசுப்பொருளுடன் உன்னை அனுப்பியிருக்கிறானே... இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது?" இரவுகாதல் ததும்பும் மனதோடு அவளை ஏந்தி இருந்த ஸ்டீபன்ராஜ் இப்போது அவள் வார்த்தைகளில்அதவாகி இருந்தான். எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்சமும் வடிந்துவிட்டது. இப்போதுதான் அவள்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த பார்சலை முழுமையாகப் பார்த்தாள்.
"இது என்னவென்று உனக்குத் தெரியுமா?" அவள் என்னைஒருமையில் அழைக்கின்ற நெருக்கத்திற்கு வந்திருந்தாள்.
"வீணை," என் வார்த்தையே கவிதையாகி இருந்தது.
"இது என்ன விலையிருக்கும்?"
"தெரியல.... ஆனா முப்பது நாற்பதாயிரம் ரூபாய் வரைஇருக்கும்."
"எனக்கு வீணையைப் பற்றி எதுவும் தெரியாது, நான் அதைப்பார்த்ததுகூட கிடையாது. இதை உங்கள் நண்பர் சேலத்திலா வாங்கினார்?" இப்போது நானேஅவள் அனுமதிக்குக் காத்திராமல் பார்சலை பிரித்தேன். கூரியரில் வேலை பார்க்கும் எனக்குபார்சலை பிரிக்கும் பொது மட்டும் இவ்வளவு நுட்பம் எப்படி கை கூடுகிறது? நான் இன்னமும்பிலோமியாகவே கையாளுகிறேன். வீணையின்ன் கம்பியில் கட்டித் தொங்கவிடப்பட்ட அட்டையில்நான் சொன்னதை விடக் கூடுதலான விலை இருந்தது. அது சேலத்தில் வாங்கப்பட்டதில்லை."தஞ்சாவூர்" என முழு முகவரி தெளிவாக இருந்தது.
"இல்லை, இதை தஞ்சாவூர் சென்று உங்களுக்காக வாங்கிவந்திருக்கிறான்." அவள் உதட்டோரத்தில் ஓர் அலட்சியமான புன்னகை தோன்றி மறைந்ததைக்கவனித்தேன். எல்லாப் பெண்களின் உதடுகளும், எல்லா வகையான அக உணர்வுகளையும் மறைத்து வைத்திருக்கும் மர்மமான பிரதேசங்கள்போலும்.
"நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?"அவளிடமிருந்து தெளிவான வார்த்தைகள் வெளிவந்தன.
"சொல்லுங்கள்,"
என்று சொல்ல நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை. அது ஒன்றும்அவசியமில்லை என்பது போல அவளே,
"இதை வாங்கியகடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டு பணமாகக் கொடுக்க முடியுமா?"
இப்போது என் கண்களைப்பார்க்காமல் அந்த வீணையைப் பார்த்தவாறு பேசினாள். என் கடைசி சொட்டு எதிர்பார்ப்பும்வழிந்து விட்டிருந்தது. என் எதிரில் நிற்கும் இவள் பெயர் கூட என் நினைவிலிருந்து அகன்றது.நேற்று இரவிலிருந்து என் இரு கைகளிலும் ஏந்திப்பிடித்திருந்த பிலோமி என்ற பீங்கான்பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கி விட்டது. எந்த வசீகரமான பெயர் ஓர் இளைஞனை 800கிலோ மீட்டர் தூரம் அலைக்கழித்து, அழைத்து வந்ததோ அப்பெயர் இப்போது ஞாபகத்தில் இல்லை. இப்போது, கொரியர் நிறுவனத்தின்சட்டையை டக் செய்த சாதாரணமானதொரு அலுவலராக பேச ஆரம்பித்தேன். அது முழுக்க முழுக்க தொழில் முறைப் பேச்சு.
"பணமாக மாற்றி கொடுக்க முடியாது மேடம். முதலில் இந்தபார்சலை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு ரசீதில் ஒப்பமிட்டுத் தர வேண்டும்."
"பின்பு இந்த பார்சலை வேறொரு கூரியர் கடைக்கு எடுத்துச்சென்று அந்த வீணை கடைக்கு புக் செய்ய வேண்டும்.அதில் இந்த வீணையை அவர்களே எடுத்துக்கொண்டு பணமாக அனுப்ப முடியுமா..? என்ற உங்கள் வேண்டுதல்கடிதத்தையும் இணைக்கலாம். அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் உரிமை." என் வார்த்தைகளில்வெளிப்படுத்தலில் அவள் என்னைக் கண்டடைந்திருந்தாள்.
"நீங்கள் கூரியரில் வேலை பார்க்கிறீர்களா?"
நான் ஒரு நிமிடம் தடுமாறி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நாளைபிறந்த நாளாக சொல்கின்ற இவள் முன், “முதலில் ஸ்டீபன் ராஜின் நண்பன், கூடவே கூரியரில்வேலை பார்க்கிறேன்”.
இப்போது அவள்ஹாலில் இருந்து நகர்ந்து அச்சிறு அறையில் பாதி மறைத்தும் விலகியும் இருந்த திரைச்சீலையின்முன் நின்று என்னை ஊடுருவினால். தவிர்த்தல் எனக்கும் பழகியதுதான். அவள் ஊடுரும் கண்களைதவிர்த்து அந்த வீணையைப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.
"ஒருநாள் இதே காதல் மீதூர ஸ்டீபன் ராஜ் இங்கு வந்துஇக்காதல் பரிசை தேடினால் அவனை எப்படி எதிர்கொள்வீர்கள்?" அவள் இன்னும் இரு அடிகள்என்னை நெருங்கி வந்து தலை குனிந்து நின்றாள். சத்தம் இல்லாத ஒரு தருணம்... அறை அதனை உள்வாங்கிக் கொண்டது. அவள் வீணையைப் பார்த்துக்கொண்டேஎன்னிடம் சொன்னாள்,
"இதைப் பழையபடிபேக் செய்து இந்தப் பரண் மீது வைக்க முடியுமா?" நிமிர்த்து அவள் கை காட்டிய பரணையைப்பார்த்தேன். தேவையில்லாத பொருட்களால் நிரம்பித் ததும்பியது அப்பரல். எந்த மனிதனும்ஒரு வீணையைச் சற்றே அலட்சியமாகக் கையாண்டதைக்கூட நான் பார்த்திராதபோது இதை நான் பரண்மீது தூக்கிப் போட முடியாது.
"என்னால் அது முடியாது." மறுபடியும் அதே வார்த்தைசொன்னேன்.
“உங்கள் நண்பனுக்காக இதை நீங்கள் செய்யக் கூடாதா”
“என் நண்பனுக்காகத்தான் இதை என்னால் செய்ய முடியாது”
முற்றும்
Bava Chelladurai's Blog
- Bava Chelladurai's profile
- 93 followers
