கடல் கடந்து விடக்கூடியதல்ல

நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிவந்து இருபது நாட்கள் கடந்துவிட்டது. இந்த தடவையேனும் பயணக் கட்டுரை எழுதிவிட வேண்டும்.என்ற உந்துதலும் தள்ளி, தள்ளிப் போய்விட்டது. இம்முறையேனும் தவறவிடக் கூடாது.
நண்பர்களுக்காக வாங்கி வந்த சிலபொருட்கள், குழந்தைகள் உள்ள வீடுகளுக்கென கொஞ்சம் விமான நிலையங்களிலும், கொஞ்சம் உள்ளூரிலும்வாங்கப்பட்ட அமெரிக்கசாக்லேட்டுகள் என நம்ப படுபவைகள், மச்சான்களுக்கு தருவதற்கான வாங்கப்பட்டவிஸ்கியில் இன்னும் மிச்சமிருக்கும் பாட்டில்கள். பார்க்கிற ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கெனகொஞ்சம் வெளிநாட்டுக் கதைகள் என இந்த அனுபவங்களும் எழுத முடியாமல் இப்போதும் கரைய ஆரம்பிக்கிறது.
எங்கள் விமானம் நியூயார்க் விமானநிலையத்தில்காலை 8.50 க்கு தரையிரங்கியது என்று ஒரு போதும் ஒரு பயணக்கட்டுரையை ஆரம்பித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
பரந்துவிரிந்த அமெரிக்க நிலப்பரப்பும், அங்கு நான் சந்தித்த மனிதர்கள், உண்ட பலநாட்டு உணவுகள்,தங்கிய வீடுகள், கலந்து கொண்ட நிகழ்வுகள், ஏற்படுத்திக் கொண்ட சந்திப்புகள், அடைந்தகொஞ்சமே கொஞ்சமான கசப்புகள் என எல்லாவற்றையும் திரட்டுவேன்.
அதற்குள், உள்ளூர் இலக்கிய நிகழ்வுகளுக்கானஅழைப்புகள், மல்லாட்டை செடிகளுக்கு களை எடுக்க வேண்டும், ஒரு புதிய திரைப்பட படப்பிடிப்பில்கலந்து கொள்ள அழைப்பு, ஒரு இலக்கிய நண்பனின் மரணம், எழுதி முடித்த இன்னொரு சிறுகதைஎன அந்த மன திரட்டலே கலைந்து போகும். இந்த இரண்டுக்குமிடையே இருபது நாட்களை நகர்த்திவிட்டேன்.
இதை எங்கிருந்தாவது துவங்கியாகவேண்டும். இது அமெரிக்காவுக்கான என் இரண்டாவதுப் பயணம்.
முதல் பயணம், அவர்கள் மொழியில்‘பே ஏரியா’ எனச் சொல்லப்படும் சாக்ரமெண்டோவில் துவங்கியது. எனினும் சியாட்டல், ராலே,நார்த் கரோலினா, ப்ளோரிடா, டேலஸ், ஹூஸ்டன், நியூஜெர்சி எனப் பயணித்து நியூயார்க்கில்JFk என அவர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜான் பிராங்களின்ஏர்ட்போர்டில் விமானம் ஏறி ஊர்த் திரும்பின நினைவுகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.

இம்முறை அதே ஏர்ப்போர்ட்டில்இறங்கி, இருபது நாட்கள் அதைச் சுற்றியே அலைந்து, திரிந்து மறுபடி விமானம் ஏறி ஊரடைந்தேன்.
இரண்டுப் பயணங்களுக்கும் ஒருபெரிய வித்தியாசமிருக்கிறது.
சென்ற முறை பயணம் நிகழ்ந்ததுஅனைத்துமே உள்ளூர் விமானங்களில் மட்டுமே. அநேகமாக நிலத்தில் நீண்டதூரக் கார் பயணம்வாய்க்கவே இல்லை. ஆனால் அவைகளை அத்தனைக் கச்சிதமாக என்னை அப்பாவென வாய்நிறைய அழைக்கும்மகன்பிரகாஷ் ஒருங்கிணைத்திருந்தான்.
இம்முறை எட்டாயிரம் கிலோ மீட்டர்களைஅமெரிக்க நிலப்பரப்பில் நான் தரை வழியாக குறுக்கும்.நெடுக்குமாக கடந்திருக்கிறேன். இப்படி நாம் இதுவரை அறிந்திராத ஒரு நிலத்தில், உணர்ந்திராதஒரு சீதோஷ்ணத்தில், பயணிப்பது என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு, ஊர்,மாவட்டம், மாநிலம், தேசம் எல்லாவற்றையும் ஒரு சிறு புள்ளியாசு மாற்றிவிடக்கூடிய வல்லமைபெற்றதாகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்துமீண்டும் வீடடைந்த அந்த நாளின் அதிகாலையில் என் வாழ்வில் எதையோ, இழந்துவிட்ட வெறுமையையும்,ஒரு பூமிப் பந்து என் கை நழுவிப் போய் சமுத்திரத்தில் விழுந்து விட்டது போலவும், நான்என் நிலப்பரப்பில் அனாதை மாதிரி இறக்கிவிடப்பட்டதாகவும் உணர்ந்தேன்.
முதன் முறைப் அமெரிக்கப் பயணத்தில்சாக்ரமெண்டோவில் நாங்கள் தங்கப்போகும் அந்த பெரிய விடுதிக்கு முன் காரிலிருந்து இறங்கியவுடன்நான் பார்த்த முதல் அமெரிக்கக்காட்சி இது.
ஒரு ஆப்பிரிக்கஅமெரிக்க இளைஞனை,நான்கு அமெரிக்க போலீஸ்காரர்கள் பின்பக்கமாக கைகளைப் பிணைத்து விலங்கிட்டுக் கொண்டிருந்தகாட்சி. அவன் தளர்ந்த கண்களால் அவர்களை ஏறெடுத்துப் பார்த்ததும்கூட.

நான்காண்டுகளை கடந்த பின்னும்கூட,என் உடல் அதன் அதிர்வுகளை இன்னமும் மிச்சம் வைத்திருக்கிறது.
திரும்பி விடலாமா? என சட்டெனஒரு மனநிலை எழுந்தடங்கிய தருணமது.
ஆப்பிரிக்கஅமெரிக்க கறுப்பு மனிதர்களைஇன்னும் வெள்ளைக்காரர்கள் குற்றவாளிகளாகவே பாவிக்கிறார்கள், வளர்க்கிறார்கள், நடத்துகிறார்கள்.அப்படி ஒரு குற்றச்சூழலில் வாழவே அவர்களை தொடர்ந்து நிர்பந்திக்கிறார்கள்.
அவர்களில் பத்தில் ஒருவர் குற்றவாளியாகமாறிவிடுவார் என என் நண்பர் சொன்னபோது சொர்க அமெரிக்காவின் இப்படியான இருட்டு பிரதேசங்கள்நமக்கெல்லாம் காட்டப்படாமலேயே போய்விடுகிறதே என நினைத்தேன்.
எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தபதினேழாவது மாடியிலிருந்து ஒவ்வொரு முறையும் சிகெரெட் புகைக்க கீழிறங்கி வரும்போதுயாராது ஒரு கறுப்பு மனிதனை இந்த வெள்ளைக்கார போலீஸ்காரர்கள் கைது செய்யும் காட்சி மீண்டும்கண்ணில்படுமோ? என என் பார்வையின் நீள அகலத்தின்சுருக்கிக் கொள்வேன்.
அந்நகரில் நான்பார்த்து வியந்த மாளிகைகளுக்கு முன், பாலித்தின் பை விரித்து, ப்ளக்ஸ்பேனர் கட்டி, பலநாட்கள் அழுக்கேறிய உடையணிந்து கிழிந்து போன ஷூக்கள் போட்டு, I Want one dollor என்ற வாசகம்ஒட்டிய அட்டைப்பிடித்து அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களைபார்த்தேன்.
அவர்களை பிச்சைக்காரர்கள் எனசொல்லக்கூடாது. அவர்கள் (Homeless) வீடற்றவர்கள் என நண்பர்கள் எனக்குஅறிவுறுத்தினார்கள். என் மனதளவில் நான் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
“அமெரிக்காவின் பணக்காரப் பிச்சைக்காரர்கள்”
‘பெட்னா’ திருவிழாவில் நானும் இருந்தேன். அது ஒருபெரும் திருவிழா. அதில் கொஞ்சம் தீவிர இலக்கியத்திற்கும், நவீன கதையாடல்களுக்கும் இடமுண்டுஅவ்வளவுதான். ஆனால் பல விதமான மனிதர்களின் சங்கமம் அது. கிடைத்த சிறு, சிறு அவகாசங்களில்நாங்கள் தமிழ் நவீன இலக்கிய உரையாடல்களை எங்களுக்குள் அமைத்துக்கொண்டோம்.

அங்குதான் எனக்கு மஞ்சுநாதன்அவர் மனைவி மருத்துவர் ராஜி, அண்ணாதுரை என பல நல்ல வாசிப்பாளர்கள் நண்பர்களாகக் கிடைத்தார்கள்.
‘பெட்னா’ முடிந்து நானும் ஷைலஜாவும் சியாட்டலுக்குபறந்தோம்.
என்னையும், ஷைலஜாவையும் அப்பாஅம்மாக்களாக ஸ்வீகரித்த மகள் மைதிலியும், மருமகன் மனோவும் விமான நிலையத்திலிருந்துஎங்களை அழைத்துக் கொண்டு ஒரு சிறுமலைமீது கட்டப்பட்டிருக்கும் அவர்கள் வீடடைந்தார்கள்.அவர்கள் வீட்டில் இந்திய உணவை வெகுநேரம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இன்னமும் நினைவில்சுவைக்கிறது.
மைதிலியும், மனோவும் எங்களுக்காகமட்டுமே ஒரு தனி ஹெலிகாப்படரை வாடகைக்கு எடுத்து, சியாட்டல் நகரை இரண்டு மணி நேரம்சுற்றி காட்டினார்கள்.
ஒரு பிரிட்டிஷ்காரன்தான் அந்தஹெலிகேப்டரின் ஓட்டுநர். அத்தனை இலகுவான ஆங்கிலத்தில் அவன் ஜோக்கடித்துக் கொண்டே அந்தஹெலிகாப்டரை செலுத்தியது அத்தனை அழகு. கீழே நதிகளும், கட்டிடங்களும், மரங்களும், பாதைகளுமாய்சியாட்டல் நகரம் தன் அழகுக் காட்டி மிளிர்ந்துகொண்டிருந்தது.
மேலிருந்து கீழே விரிந்திருக்கும்ஒரு பெரிய நீர்ப்பரப்பிற்கருகில் தன் சுட்டுவிரல் காட்டி,
“இது தான் பவாப்பா’ நான் வேலைப் பார்க்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்” என மனோ கைகாட்டிய மையத்தை கொஞ்சம் எட்டிப்பார்த்தேன்.மேலிருந்து அதன் பிரமாண்டம் எதையும் உணர முடியவில்லை.
கீழே இறங்கி வரும்போது, ‘பில்கேட்சைஎப்படியாவது சந்தித்து அவரோடு ஒரு “டீ”க்குடித்துவிட வேண்டும் மனோ”என்ற என் செல்லஅடம் கேட்டு மனோ சிரித்து, இந்த சிறு பர்கர் கடை வரிசையில் அவரும் எப்போதாவது நிற்பார்.அப்போது அவரை சுலபமாக சந்திக்கலாமென என்னை ஆச்சர்யப்படுத்தினார்.
என் கோரிக்கையை மனோ உதாசீனப்படுத்தாமல்அடுத்தநாள் ‘மைக்ரோ சாப்ட் நிறுவன கட்டிட சுற்றிப்பார்த்தலின் நிறைவில், ஒரு ஏரிக்கரைவிளிம்பிலிருந்த பில்கேட்ஸ் வீட்டின் முன் நின்று நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.வீட்டிலிருந்து அவர் வெளியில் வந்து, ஒரு ‘டீ’ குடிக்க எங்களை அழைத்துப் போவார் என்ற நம்பிக்கைமட்டுமே இப்போது தள்ளிப்போயிருக்கிறது.

அடுத்தநாள் சியாட்டலில் நண்பர்களால்ஒருங்கிணைக்கப்பட்ட பெரும் இலக்கிய நிகழ்வில்ஷைலஜாவும், நானும் உரையாற்றினோம். அந்த உரை இன்னமும் இணையத்தில் கிடைக்கிறது.
அன்று எனக்குப் பிடித்தமான பால்சக்காரியாவின் ‘சலாம் அமெரிக்கா’கதையை நான் சிரிக்க,சிரிக்க சொன்னேன்.
அமெரிக்கவாழ்வின் அபத்தசுவையைஅக்கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருக்கும் சக்காரியா என் மூலம் பருகக் கொடுத்துக்கொண்டிருந்தார்.அவர்களும் என்னிடம் இன்னும், இன்னுமென கேட்டு வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த என் இரண்டாம் பயணத்தில்ஒரு நல்ல மழைநாளில் நியூ ஜெர்சியிலிருந்து, நான் இதுவரை கேள்விப்படாத ஸ்டாம்போர்ட்என்ற நகரத்திற்கு என் மூன்று வாசகர்கள் ஒரு டெக்சலா காரில் என்னை அழைத்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.
நான் பாதிதூக்கத்தில் அவர்களின்கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு, முன் சீட்டை நன்கு சாய்த்து படுத்துக்கொண்டுநியூயார்க் நகரம் இங்கிருந்து எவ்வளவு தூரம்? என்ற என் கேள்விக்கு,
‘ஒரே ஒரு குறுக்கு சந்துதான்’ என்ற வில்சனின் பதில் தற்காலிகத் தூக்கத்திலிருந்துஎன்னை எழுப்பிவிட்டது.
“ராயல் பிரியாணிக்கடை” முன் எங்கள் கார் நின்றபோது திருநெல்வேலிஜானகிராம் ஹோட்டலுக்கு பக்கத்துக் கடையில் நிற்கிறோமோ என்ற மன நிலையில் இறங்கினேன்.
அந்த வளாகம் முழுக்க சின்னதும்பெரிதுமாக பல நாட்டு உணவுக் கடைகள்.
இன்னும் நிற்காத மழைத் தூறலில்நனைந்து கொண்டே மனிதர்கள் காரிலும், தரையிலும், இப்படியும், அப்படியும் அலைந்து கொண்டிருந்தவர்களில்நான் யாராவது ஒரு வெள்ளைக்காரனையோ, வெள்ளைக்காரியையோ தேடினேன்.
ஒருவரும் இல்லை. எல்லோருமே இந்தியர்கள்.
இது அமெரிக்கா இல்லை. திருநெல்வேலி.ஜங்ஷன் ‘இருட்டுக்கடை அல்வா’போர்டைத் தேடியபோதுபிரியாணிக் கடையின் உள்ளேயிருந்து “பவா நான் சுரேஷ்” என ஒரு குரல் வந்தது.
சுரேஷ் திருநெல்வேலிக்காரர்.சாப்ட்வேர் இன்ஜினியர், ப்ளஸ் இந்த பிரியாணி கடையின் பாட்னர்.
நான் என் இந்த அமெரிக்கப் பயணத்தைஒருங்கிணைக்கும் மோகன் தாசைத் தேடினேன்.
என் தேடுதல் புரிந்து,
மோகன் நாளை மாலைதான் இங்கு வருவார்பவா. அவருக்கும் நமக்கும் இரண்டு மணி நேர இடைவெளி.
அடுத்த நிமிடம் விதவிதமான மனிதர்கள்,விசாரிப்புகள், கைக்குலுக்கள், சிறுஅணைப்புகள், கொஞ்சம் கதைகள், சுடச்சுடப் பிரியாணிஎன எல்லாம் நிறைந்திருந்தது அவ்வளாகம்.
நண்பர்கள் இந்துவும், ஞானவேலுவும்காத்திருந்து அவர்கள் காரில் என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு அழகிய அடர்த்தி மிகுந்தமரங்களடர்ந்த பயணத்தின் விளிம்பிளிருந்த அவர்களின் புது பங்களாவிற்கு என்னை அழைத்துப்போனார்கள்.
நான் காரிலிருந்து இறங்கி அம்மழையிலும்நனைந்துகொண்டே அவ்வீட்டின் அழகை தூரத்திலிருந்து ரசித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதை நோக்கிநடந்தேன். அத்தனை அபூர்வமான அனுபவம் அது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அவர்களுடையது.அதில் கட்டப்பட்டிருந்த இந்த வீட்டை அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்புதான் வாங்கியிருந்தார்கள்.அது வீடு என்று நாம் வகுத்து வைத்திருக்கிற எல்லா வரைமுறைகளையும் மீறியது. முழுக்கமுழுக்க மரங்களிலான அதன் உள் கட்டமைப்பே என்னை வியக்க வைத்தது. தூக்கம் வராமல் அந்தஅறையில் படுத்துக் கொண்டு என் நண்பர்கள் பழனிஜோதியும், மகேஸ்வரியும் நியூஜெர்சியிலிருந்துதந்தனுப்பிய கிண்டிலில் அ.முத்துலிங்கத்தின்“கடவுள் தொடங்கிய இடம்”நாவலின் துவக்கஅத்தியாயத்தை வாசிக்கத் துவங்கினேன்.
எப்போது தூங்கினேன் என்பதுத்தெரியாது.இந்துவின் கையிலிருந்த பெரியக் கோப்பையில் ததும்பிய காபி மணம் உணர்ந்து எழும்பினேன்மணி காலை எட்டு.
பத்து மணிக்கு ஸ்டாம்போர்டு தமிழ்ச்சங்ககூட்டம். கச்சிதமான நாற்பது, ஐம்பது வாசகர்களோடு ஓர் உரையும், கலந்துரையாடலும். மனதிற்குஅத்தனை நெருக்கமான மனிதர்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். அன்று அப்படி அமைந்தார்கள்.
நிகழ்வுத் துவங்க பத்து நிமிடங்களுக்குமுன் இந்துவும், வேலுவும் என்னை ஒரு பெரிய ஷாப்பிங்க மாலுக்கு அழைத்து போய் எவ்வளவுஉடைகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்ற போது நான் அவர்களை ஏறெடுத்துப் பார்த்தேன்.
இந்து,
அப்பா, நிறைய எடுத்துக்கோங்கஎன்றபோது இன்னமும் அவர்களை நெருக்கமாய் உணர்ந்தேன்.
அப்படி, இப்படியென்று மாலை நான்குமணிக்குஅதே ………… பிரியாணி கடையில் நான் கைமாற்றி விடப்பட்டேன்.
மோகன்தாஸ் தன் பதிமூன்று வயதுமகளோடு வந்திருந்தார். சென்றமுறை பயணத்திலேயே நியூயார்க் வரை என்னுடனேத் தங்கி என்னைவிமானம் ஏற்றிவிட்ட என் தீவிர வாசகர். அவர்.
புதிதாக இரு நண்பர்களிடம் நான்கைப்புதைத்தேன்.
நிவேதா என்கிற நிவி.
ஜெய்கணேஷ்
முகம் நிறைய புன்னகையுடன், அவர்கள்இருவரும் தங்கள் இருக் குழந்தைகளை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
நாங்கள் ஏழுபேர் மட்டுமே அடுத்தஐந்து நாட்களுக்கு சுமார் நாலாயிரம் கிலோமீட்டர்களை கடக்கப் போகிறோம் என அப்போது எனக்குத்தெரியாது.
Bava Chelladurai's Blog
- Bava Chelladurai's profile
- 93 followers
