கனவில் பிறந்த உலகம்.
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மையப்படுத்தியோ, தேவதை கதைகளையோ, விஞ்ஞானப்புனைவுகளையோ மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

இதற்கு மாறாக இயற்கையின் பிரம்மாண்டத்தை, மனிதர்கள் இயற்கையோடு கொள்ள வேண்டிய உறவினை. போரின் விளைவுகளை, சிறார்களின் வியப்பூட்டும் கற்பனைகளை ஜப்பானிய அனிமேஷன் படமாக ஹயாவோ மியாசாகி உருவாக்குகிறார். அதே ஜப்பானில் வெளியாகும் அனீம் படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை தனியொரு திரைப்பட வகைமையாகும்.
சீனா, பிரான்ஸ் மற்றும் ஈரானிலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட அனிமேஷன் படங்களைச் சமீபமாக உருவாக்குகிறார்கள். அவை பெரிய வெற்றியை பெறவில்லை. இந்தியாவில் அனிமேஷன் திரைப்பட உருவாக்கம் மிகவும் குறைவு. சமீபமாகச் சிலர் புராணக்கதைகளை அனிமேஷன் திரைப்படமாக வெளியிடுகிறார்கள். அவை வணிக ரீதியான வரம்புகளுக்குள்ளே அடங்கி நிற்கின்றன.
வெகு அரிதாகவே அரசியலை முதன்மைப்படுத்தி Persepolis. Waltz with Bashir போன்ற அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒலிக்கும் உண்மையின் குரல் வலுவானது. அந்த வரிசையில் 2023ல் வெளியாகியுள்ள Four Souls of Coyote சிறப்பான அனிமேஷன் படமாகும்.

அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்கள் தங்கள் நிலத்தில் எண்ணெய் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்ட களத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் குலத்தந்தை போன்ற கிழவர் பூர்வகுடிகளின் பழங்கதை ஒன்றினைச் சொல்லத் துவங்குகிறார்.

பூமியில் இயற்கை எப்படி உருவானது உயிரினங்கள் எவ்வாறு தோன்றின . மனிதன் தோன்றிய விதம். நன்மை தீமை உருவான விதம். மனிதனின் பேராசை ஏற்படுத்திய விளைவுகள் எனப் படம் தனித்துவமான கதையை விவரிக்கிறது.
உலகை சிருஷ்டிக்கும் படைப்பாளி ஒரு கிழவர். அவர் கனவுகளின் அடிப்படையில் உலகைக் கட்டமைக்கிறார். முதலில் மலை, மரம் செடிகொடிகள் நீர்நிலைகள் உருவாகின்றன. வாத்து தான் அவர் உருவாக்கிய முதற்பறவை. அவருக்குக் கோபம் அதிகம். அதைக் கட்டுப்படுத்த முடியாத போது இடிமின்னல் பிறக்கிறது அது பறக்கும், பேசும் பாம்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

கொயோட் என்பது வட அமெரிக்காவின் சமவெளிகளில் வாழும் ஒரு வகை ஓநாய். அந்தக் கொயோட்டினை படைப்பாளி உருவாக்குகிறார். அதன் தவறான செயல்கள், தந்திரங்கள் எவ்வாறு அழகான வாழ்விடத்தை சிதைக்கிறது எனப் படம் விரிவு கொள்கிறது.
ஆரம்பத்தில் பூமி சொர்க்கத்தைப் போல அமைதியாக, அழகாக விளங்குகிறது. அங்கு அனைத்து விலங்குகளும் இணைந்து வாழுகின்றன.. எல்லோரும் தாவரங்களை மட்டுமே உண்ணுகிறார்கள்.

பசிக்காக இன்னொரு உயிரை கொல்வதைக் கொயோட் அறிமுகப்படுத்துகிறது. அது முதலில் ஒரு வாத்தைக் கொல்கிறது. முதல் கொலையின் பின்பாக உலகம் இரண்டாகப் பிளவுபடுகிறது. தான் உருவாக்கிய உயிர்களுக்குள் ஏற்படும் மோதலைப் படைப்பாளி காணுகிறார். அவரால் உலகின் தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
கொயோட்டிற்கு மரணமில்லை. அது ஒவ்வொரு முறை அழிக்கப்படும் போதும் புதிய உருவம் எடுத்தபடியே இருக்கிறது. நான்கு ஆன்மாக்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது. உண்மையில் அது ஒரு அடையாளம். இதில் வரும் படைப்பாளி புனிதரில்லை. அவர் பலவீனங்கள் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறார். கனவிலிருந்தே உலகம் தோன்றுகிறது.
Only when the last tree has died, the last river has been poisoned and the last fish has been caught will we realise that we can’t eat money.” எனப் படத்தின் மையக்கருத்தை துவக்கத்திலே தெரிவித்துவிடுகிறார்கள்
ஆரோன் கௌடர் உருவாக்கியுள்ள Four Souls of Coyote மிக முக்கியமான அனிமேஷன் படமாகும். இதன் திரைக்கதையை எழுத்தாளர் கெசா பெரெமெனி எழுதியுள்ளார்
படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கையால் வரையப்பட்டிருக்கின்றன. 2D மற்றும் 3D ஐ ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள காட்சிகள், மாறுபட்ட கதை சொல்லும் முறை, மற்றும் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக உள்ளது. 100 நிமிஷங்கள் ஒடும் இந்த ஹங்கேரிய அனிமேஷன் படம் மிகவும் தனித்துவமானது,

பூர்வகுடியினருக்கே உரித்தான வண்ணங்கள். கதாபாத்திரங்களின் முக அமைப்புகள். நிலம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள். அழகான நிலப்பரப்புகள் எனத் துல்லியமாக உருவாக்கியுள்ளார்கள். வியப்பூட்டும் கேமிரா கோணங்கள், பிரம்மாண்டமான இயற்கை காட்சிகள் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கபட்டுள்ளன
எண்ணெய் குழாய் பதிப்பதற்காகக் கையகப்படுத்தபடும் அந்த நிலத்தின் வரலாற்றை அவர்கள் முடிவில் அறிந்து கொள்கிறார்கள். பூமியை காக்க வேண்டியது அனைவரின் கடமை என்பதை உணருகிறார்கள்.
பெரும்பான்மை ஹாலிவுட் படங்களில் பூர்வகுடி இந்தியர்கள் நாகரீகமற்ற, குரூரமான வேட்டையாடிகளைப் போலவே சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். அவர்களைக் கொன்று நிலத்தைக் கைப்பற்றிய வெள்ளைவீரர்களை நாயகராகச் சித்தரித்தே படங்கள் உருவாக்கபட்டுள்ளன. இந்தப் படம் அதற்கு மாற்றாகப் பூர்வகுடிகளுக்கே உரித்தான தொன்மக்கதையை, நம்பிக்கையை, சாகசங்களை நேர்மையாகப் பதிவு செய்துள்ளது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
