ஓடுகிற பஸ்

                               ஓடுகிற பஸ்சில் ஏறவேண்டும்

தினக்குரல்பாரதி செவ்வி

தமிழ் இருக்கை அமைக்கவேண்டிய பாரிய பணியை நீங்கள் பொறுப்பேற்றுமுன்னெடுக்கின்றீர்கள். இந்த முயற்சியில் இறங்கவேண்டும் என்ற உணர்வு – எண்ணம் உங்களுக்குஎப்படி – ஏன் ஏற்பட்டது?

நான் மட்டுமல்ல, பெரிய குழுவே பணி புரிகிறது.  18 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமையும் வாய்ப்பு ஒன்று வந்தது. அப்பொழுது அதற்கு தேவையான நிதி ஒரு மில்லியன்டொலர்கள் மட்டுமே. அதை திரட்டமுடியாமல் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. அது சோகமான கதை.பின்னர் 2017 ஆரம்பத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க TamilChair Inc எனும் அறக்கட்டளைக்கு அதிசயமாக சம்மதம் கிடைத்தது. இந்த அறக்கட்டளையை  ஆரம்பித்த நிறுவனர்களில் நானும் ஒருவன்.  இருக்கை அமைக்க  தேவை 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றார்கள்.உலகளாவிய ரீதியில் நிதி திரட்டலை தொடங்கினோம். எப்படி இவ்வளவு பணத்தை திரட்டப் போகிறோம்என்ற மலைப்பு ஆரம்பத்தில் இருந்தது. அமெரிக்கா, கனடா, இந்தியா, கொரியா, ஹொங்கொங் ,மலேசியா, பொஸ்ட்வானா (ஆப்பிரிக்கா) போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பணம் வந்து குவியத்தொடங்கியது. இலங்கையில் இருந்துகூட 25,000 டொலர்கள் அனுப்பப்பட்டன  என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். தேவைப்பட்ட நிதிக்குமேலாக பணம் சேர்ந்தபோது ’இனி போதும், நிறுத்துங்கள்’ என்று அறிக்கை விட வேண்டிநேர்ந்தது.

இந்த ஆர்வத்தையும், தமிழர்களின் எழுச்சியையும் அவதானித்தரொறொன்ரோ பல்கலைக்கழகம், இங்கே வதியும்  தமிழ்மக்களை அணுகியது. கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.  தமிழ் இருக்கை ஒன்றை இங்கே  அமைப்பதற்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகம்  சம்மதம் வழங்கியது. இதற்கு தேவையான நிதி 3 மில்லியன்டொலர்கள் (இலங்கை ரூ 39 கோடி). ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கு  நாங்கள் நேரம் பார்த்து காத்திருந்த வேளை அவர்களாகவேஎம்மை தொடர்புகொண்டது ஆச்சரியமான விசயம்.  ஹார்வர்டுக்குநேர்ந்ததுபோல உலகம் முழுக்க இருந்து பணம் வந்து குவியவில்லை. ஆனாலும் தமிழ் மக்களின்ஆர்வம் வியப்பூட்டியது. கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பணம் வந்தது. இந்தியாவிலிருந்துகூடஒன்றிரண்டு பேர் பணம் அனுப்பினார்கள். முதல் வருடத்தில் நாங்கள் வைத்த இலக்கு ஒரு மில்லியன்டொலர்கள். கெடு முடிவதற்குள் அந்தப் பணத்தை சேர்க்க முடிந்தது. மீதி 2 மில்லியன் டொலர்கள்தான்.அதையும் விரைவில் திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உண்டு.

இதிலே சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் நாங்கள் எத்தனை ஆயிரம்டொலர்கள் சேர்ந்தன என்று தினம் தினம் கணக்குப் பார்த்தோம். பல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம்டெட்டி மாத்திரம் எத்தனை பேர் நன்கொடை கொடுத்தார்கள் என்பதையே உன்னிப்பாகக் கவனித்தார்.’இது ஓர் இனக்குழு ஒன்றுசேர்ந்து உண்டாக்கும் இருக்கை. பணம் ஒரு நாள் இலக்கை எட்டும்,ஆனால் எத்தனை பேர் பங்குபற்றுகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்’ என்று விளக்கம்கொடுத்தார்.

தமிழ் இருக்கை தொடர்பாகப் பரவலாகப் பேசப்படுகின்றது. தமிழ்இருக்கை என்றால் என்ன? அதன் மூலமாக எவ்வாறான பலன்களை நாம் எதிர்பார்க்க முடியும் என்பதைதினக்குரல் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா?

மூன்று மில்லியன் டொலர்களை இருப்புநிதியாக வைத்து உருவாக்கப்படும் ரொறொன்ரோ  தமிழ் இருக்கை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக்கற்றுத்தருவதோடு பல்வேறு முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கும் மையப்புள்ளியாகவும்  அமையும். ஏனைய செம்மொழிகள் அனைத்துலக கல்வி மையங்களில்நிறுவப்பட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மூலம் பல நன்மைகள் பெற்றுள்ளன. இங்கே அமையும்தமிழ் இருக்கை  தமிழுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடுதொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுச்சேர்த்து பல கல்வி நிறுவனங்களுக்குஎடுத்துக்காட்டாகத் திகழும். 

ரொறொன்ரோ  பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தின்முன்னாள் தலைவர், ’தமிழ் இருக்கையானது உயர் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பித்தல் மற்றும்ஆராய்ச்சிக்காக மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டு என்றென்றும் நிலைத்திருக்கப்போகும்ஒரு கல்வி அலகாகும். ஒரு மொழி பேசும் குழுவினரால் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும்முதல் இருக்கை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. இது  வேறு இருக்கைகளுக்கு முன்மாதிரியாகஅமையும்.  தமிழ் மொழியின் பாரம்பரியத்துக்கும்,தொன்மைக்கும் அதன் மேன்மைக்கும் சாட்சியாக என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என தமிழ் இருக்கை ஆரம்பக் கூட்டத்தில் கூறிவாழ்த்தினார்.

ரொறொன்ரோவில்  நிறுவப்படும் தமிழ் இருக்கை, இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டிய தமிழ்க் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முதன்மையான இடமாக  அமையும்.  அருகிவரும்தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் எண்மியமாக்கப்பட்டு இங்கே பாதுகாக்கப்படும்.கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.தமிழ் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் ஒழுங்குசெய்வதுடன் வருகைப் பேராசிரியர்களுக்கும்வழி செய்யலாம். சிறந்த ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். தமிழ்இருக்கை என்பது நுழைவாயில்தான். தக்க பேராசிரியர் அமைந்தால் முதல்தரமான பல்கலைக்கழகத்தில்ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடையலாம்.

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்இவ்வாறான தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முதலில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழக அரசுகூட அதற்கு உதவியிருந்தது. அந்த முயற்சி எந்தளவில் உள்ளது? அது வெற்றியளித்துள்ளதா?

ஆரம்பத்தில் ஹார்வர்டுதமிழ் இருக்கை நிதி சேர்ப்பு சரியாகவே போகவில்லை. அதைப் பற்றிய புரிதல் மக்களுக்குப்போய்ச்சேர சில மாதங்கள் பிடித்தன. அமெரிக்க, கனடா போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில செல்வந்தர்கள்பணம் சேர்த்தாலே இந்த இருக்கையை இலகுவில்  உண்டாக்கியிருக்கலாம்.அதை நாங்கள் விரும்பவில்லை. பல்கலைக்கழகமும் அப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. உலகமக்களால் இருக்கை உருவாக்கப்பட்டு அது உலக மக்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்பதே பலரின்கோரிக்கை.  தொலைக்காட்சிகள், பத்திரிகைகள்,வானொலி, முகநூல் என சகல ஊடகங்களிலும் பரப்புரை செய்தோம். தமிழ்நாடு அரசு நன்கொடை வழங்கியதைதொடர்ந்து நிதி சேகரிப்பு வேகம் பிடித்தது. ஆறு மில்லியன் டொலர்களை தாண்டியபோது, ’நிதி இலக்கை அடைந்துவிட்டது, மேலும் பணம்அனுப்பவேண்டாம்’ என உலக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது.இப்பொழுது பேராசிரியர் தேர்வு முயற்சியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது.விரைவில் இருக்கை செயல்படத் தொடங்கும்.

கனடாவில் ரொறொன்ரோவில் தமிழர்கள் அதிகமாகவசிக்கும் ஸ்காபரோ பகுதியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இதனை அமைத்துக்கொள்வது அதிகளவுக்குபலனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

ரொறொன்ரோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில்பெரும்பாலானோர் தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்றவர்கள்.  இங்கே வாரத்துக்கு பல தமிழ் கலாச்சார, கலை நிகழ்ச்சிகள்நிகழ்கின்றன. வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடாவது நடக்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தில்தமிழ் இருக்கை அமைப்பதற்கு இதை விடச் சிறந்த  இடம் ஏது. ஒவ்வொரு சனவரி மாதமும் கனடாவில் தமிழ்மரபு மாதமாக கொண்டாடப்படுகிறது. ரொறொன்ரோ  பல்கலைக்கழகம்கூட2019 வருடம் முதல்முறையாக தமிழ் மரபு மாதத்தை கொண்டாடியது. தமிழின் மேன்மை பற்றி பல்கலைக்கழகத்தலைவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்ற ஆர்வம்தமிழ் மக்களுக்கு  இருக்கும் அதே அளவுக்கு பல்கலைக்கழகத்துக்கும் இருக்கிறது. இது ஒரு வரம் என்றே எனக்குப் படுகிறது.

ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை அமைப்பதான இந்த முயற்சிக்குபுலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கிறதா?

அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்களுடைய  ஆதரவு இல்லாமல் நிதி சேகரிப்பது சாத்தியமே இல்லை. திரட்டிய நிதியில் 99 வீதம் புலம்பெயர்ந்ததமிழர்களிடமிருந்து கிடைத்ததுதான். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் அது கனடாவை மாத்திரம்குறிப்பிடவில்லை. புலம்பெயர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வசிப்பவர்களையும்சேர்த்துத்தான் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான கொடைகள் கனடாவில் கிடைத்தவை. இந்தியாவில்இருந்தும் சிலர் பணம் அனுப்பி உதவியிருக்கிறார்கள். அங்கே அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள்இருந்தாலும்  அதையெல்லாம் தாண்டி பணம் வந்துசேர்ந்திருக்கிறது.

2700 கி.மீட்டர் தொலைவில் அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து ஒரு சிறுமி அவருடைய  பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தை அப்படியே அனுப்பியிருந்தார்.நெகிழ்வாக உணர்ந்த சமயம் அது. சிறுமிக்கு  நன்றிகூறிவிட்டுஅவருடைய அப்பாவிடம் பேசினேன். அவர் சொன்னார்,’ரஜினியின் பேட்ட சினிமா 2 வாரம் ஓடியதற்காகவிழா எடுக்கிறார்கள். தமிழ் 2500 வருடங்களாக ஓடுகிறது. அதையல்லவா நாங்கள் கொண்டாடவேண்டும்.’முதல் ஒரு வருடத்தில் 600 பேர் பணம் கொடுத்து ஒரு மில்லியன் டொலர் சேர்ந்துவிட்டது.மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் ஒரு நாட்டில் 600 என்பது மிக மிகச் சிறிய விழுக்காடுதான்.

கனடாவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களில் ஒருவர் நாடாளுமன்றஉறுப்பினராகவும், இருவர் ஒன்ராறியோ மாகாண அரசாங்க உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.அதனைவிட தமிழ் மரபுரிமை மாதம் ஒன்றும், இங்கு மத்திய அரசாங்கத்தினால் பிரகடனபடுத்தப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் உங்களுடைய இந்த முயற்சிகளுக்கு எந்தளவு துணை புரியும்?

ஹார்வர்ட்  தமிழ் இருக்கையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுக்கதமிழுக்கான எழுச்சியை காணமுடிகிறது. கொரியாவில் இருக்கும் ஒருவர் எதற்காக ஹார்வர்ட்தமிழ் இருக்கைக்கு பணம் அனுப்புகிறார்? ஆப்பிரிக்காவில் பொஸ்ட்வானா நாட்டில் வசிப்பவர்பலவித சிரமங்களுக்கு மத்தியில்  ஒரு சிறு தொகையைஅனுப்புகிறார். தமிழ் நாட்டில் நாலு வருடம் சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் சிறையில்கிடைத்த ஊதியப்பணத்தை ஹார்வர்டுக்கு அனுப்புகிறார். அவருக்கு ஹார்வர்ட் எங்கே இருக்கிறதுஎன்பது தெரியாது. ஹார்வர்ட் என்பதை இரண்டு பிழைகளுடன்தான் அவரால் எழுத முடிந்தது. ஆனால்பணம் அனுப்பினார். எதற்காக? தமிழ் மொழி வாழவேண்டும் என்ற வெறிதான்.

தமிழர் ஒருவர்கனடா நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதும், இரு தமிழர்கள் மாகாண அரசு உறுப்பினர்களாகஇருப்பதும் எங்களுக்கு எவ்வளவு பெருமை தருவது. நாங்கள் நடத்தும் தமிழ் மரபு கொண்டாட்டங்கள்கனடாவில் பிரபலமடைந்திருக்கின்றன. வேற்று மொழிக்காரர்கள் எங்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.எங்களுக்கு தேசிய கீதம் இல்லை, ஆனால் தமிழ் மொழி கீதம் பாடித்தான் நாங்கள் விழாக்களைஆரம்பிக்கிறோம்.  உலகத்திலேயே, ஒரு மொழிக்கானவணக்கப் பாடலைப்  பாடி நிகழ்ச்சியை தொடங்குவதுதமிழர்கள் மட்டும்தான். நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண உறுப்பினர்களும் எங்கள் முயற்சிகளுக்குதொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்.

ரொறொன்ரோ பல்கலைக்கழகம்ஒருநாள் தமிழ் இருக்கைக்காக telemarketing செய்தது. 25 பல்கலைக்கழக மாணவமாணவிகள்  தொலைபேசி முன் அமர்ந்து பழைய மணவமாணவிகளை அழைத்துதமிழ் இருக்கைக்கு நன்கொடை கேட்டனர். எல்லோருமே வேறு வேறு மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்கள்.கூகிளில் தமிழ் பற்றி படித்ததுதான் அவர்கள் அறிவு.  ஒரு மாணவியிடம் ஏன் இந்த வேலையை செய்கிறார் என்றுகேட்டேன். அவர் சொன்னார், ‘2500 வருடங்களாக வாழும் ஒரு மொழிக்கு இருக்கை அமைந்தால்அது பல்கலைக்கழகத்துக்கு பெருமையல்லவா?’  

கனடாவின் முக்கியமான தமிழர் பிரதிநிதிகளாக மூவர் அரசாங்கத்தில்அங்கம் வகிக்கும் நிலையில் ரொறொன்ரோ தமிழ் இருக்கைக்கு அரசாங்கங்களின் மட்டத்திலிருந்துநிதியுதவி ஏதாவது பெறக்கூடிய சாத்தியமுண்டோ?

ஏற்கனவே சொன்னதுபோல  இந்த தமிழ் இருக்கைதமிழர்களுக்கு சொந்தமானது. கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்குசொந்தமானது. தமிழ் மொழிக்கு சொந்தமாக ஒரு நாடு இல்லையென்றாலும் அந்த மொழி ஓர் உலகமொழி.உலகத் தமிழர்களிடமிருந்து நிதி சேர்ப்பதுதான் நோக்கம். ஏற்கனவே சொன்னதுபோல கனடிய அரசு வழங்கும் நல்கைகளை தமிழ் வளர்ச்சிக்கும்,ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.  சிறந்த ஆய்வுமாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கலாம். ஒரு மொழிக்கு கிடைக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளையும், பயன்களையும் நாம் முழுமையாகஅடையலாம்.

கனடிய அரசிடம்தமிழ் இருக்கைக்கு பணம்  கேட்கும் திட்டம் தற்சமயம்இல்லை. கணிசமான தொகை சேர்ந்த பின்னர் அரசாங்கத்தை அணுகலாம் என்ற எண்ணம் உண்டு. சமயம்வரும்போது அதற்கான முயற்சிகளை கைக்கொள்வதில் ஒரு தடையும் கிடையாது.  

தமிழ் இருக்கை மிகவும் முக்கியமான முயற்சி என்று நீங்கள்கருதுவதற்கு காரணம் என்ன?

பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்  தமிழ்மொழியின் தொன்மை அத்துடன் அது இன்னும் வாழ்கிறதுஎன்ற பெருமை. ’ஏற்றுக உலையே, ஆக்குக சோறே, கள்ளும் குறைபட ஓம்புக.’ இந்த வரிகள்2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. இன்றும், ஐந்தாம் வகுப்பு சிறுமியால் இதைப்படித்து புரிந்துகொள்ள முடியும். அதுதான் தமிழின் பெருமை. ஏனைய செம்மொழிகளுக்கு பல்கலைக்கழகங்களில்இடம் உண்டு, ஆனால் தமிழ் மொழியை ஒருவரும் கவனிப்பதில்லை. இது பெரிய அநீதியாகப் படுகிறது.இதைச் சரிசெய்ய வேண்டும். மற்றைய மொழிகளுக்கு நாடு இருக்கிறது. தமிழுக்கு சொந்தமாகஒரு நாடும் இல்லை. ஆகவே எங்களுக்காக ஒரு நாடும் போராடப் போவதில்லை. நாங்கள்தான் செய்யவேண்டும்.

ஆங்கில மொழி இலக்கியம் தோன்றியது 1500 வருடங்களுக்கு முன்னர். ஆனால் அதற்கு1000 வருடங்களுக்கு முன்னரே பெரும் தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. இன்றைக்கும் அறிஞர்கள்வியக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம்  அன்றேபிறந்துவிட்டது. வெளிநாட்டு அறிஞர்கள் தமிழின் பெருமையை உலகுக்கு பரப்பியிருக்கிறார்கள்.G.U.Pope, Robert Caldwell, Constanzo Beschi ( வீரமாமுனிவர்) இவர்கள் எல்லாம் தமிழுக்காகஉழைத்தார்கள். தமிழை வெளியுலகத்துக்கு அறிமுகம் செய்தார்கள். நாம் என்ன செய்தோம்?  ரொறொன்ரோவில் இருக்கை ஒன்றை உண்டாக்குவதன் மூலம் தமிழை உலகமயமாக்கலாம். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து இந்த  வாய்ப்பு எங்களைத் தேடி வந்திருக்கிறது. கனடாவின்இரண்டாம் தலைமுறை இப்போது  தலையெடுத்திருக்கிறது.முற்றிலும் கனடியச் சூழலில் வாழும் மூன்றாவது தலைமுறை தமிழை மறந்துவிடும். மிக  முக்கியமான ஒரு சந்தியில் நாங்கள் நிற்கிறோம். இந்தத்தலைமுறை  தாண்டினால் தமிழ் இருக்கை என்பது கனவாகிவிடும்.இதுதான் தருணம். இப்பொழுதே செய்யவேண்டும்.

முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அடுத்து ரொறொன்ரோ பல்கலைக்கழகம்என்பதன் தொடர்ச்சியாக தமிழர்கள் பரந்து வாழும் வேறு நாடுகளிலும் இவ்வாறான முயற்சிகளைமேற்கொள்ளும் எண்ணம் உண்டா?

ஆரம்பத்தில் நிறுவனத்தின் பெயர்  TamilChair Inc. இது அமெரிக்காவில் ஓர் அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இதில் ஹார்வர்ட்என்ற பெயரே கிடையாது. எங்கள்  இலக்கு ஹார்வர்ட்டில்தமிழ் இருக்கை உண்டாக்குவது மட்டுமல்ல. உலகத்தில் பல பல்கலைக்கழகங்களில் இருக்கைகள்அமைப்பது. அதுதான் நோக்கம். எங்கள் முதல் முயற்சியான ஹார்வர்ட் முழுமையான  பின்னர்  ரொன்றொன்ரோவில் முயற்சி தொடங்கியிருக்கிறது.  இதைத்தொடர்ந்து தென் கரோலினாவில் திருமூலர் தமிழ்இருக்கைக்கான முயற்சி ஆரம்பமாகிவிட்டது. அதுபோல ஹூஸ்டனில் தமிழ் இருக்கைக்காக நிதிசேர்க்கிறார்கள். ஜேர்மனியில்  கோலன் பல்கலைக்கழகத்தில்தமிழ் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்தது. நிதி பற்றாக்குறையினால் சமீபத்தில் அதை மூடுவதற்கு முயற்சி நடந்தது. TamilChair Inc.  தற்காலிகமாக நிதி வழங்கி கல்விமையத்தின் ஆயுளை நீடித்திருக்கிறது.  ஆரம்பத்திலிருந்தேஉலகெங்கும் தமிழ் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைக்கவேண்டும்என்பதே எமது குறிக்கோள். அது சிறிது சிறிதாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

 ரொறொன்ரோ தமிழ் இருக்கைசம்பந்தமாக வேறு ஏதாவது குறிப்பிட விரும்புகிரீர்களா?

ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவின்சனத்தொகை 40 கோடி, ஆனால் சுதந்திரத்துக்காக உயிரைக்கொடுத்து  போராடியவர்கள் வெறும் மூன்று லட்சம் பேர்தான்.  இப்போது இந்தியாவில் 1.35 பில்லியன் மக்கள் அப்படிபோராடிப்பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.

கனடாவில் தமிழர்களின் சனத்தொகை 3 லட்சம். உலகத் தமிழர்களின் சனத்தொகை 8 கோடி.ஆனல் முதல் வருடத்தில் தமிழ் இருக்கைக்கு ஒரு மில்லியன் டொலர்  கொடுத்தவர்கள் வெறும் 600  பேர்தான்.  மேலும் 1200 பேர் முன்வந்தால் தமிழ் இருக்கை நாளைக்கேஉதயமாகிவிடும். எட்டுக்கோடி தமிழர்களில் எங்களுக்கு தேவை 1200 பேர்களின் உதவி. அவர்களிடம்மனம் இருக்கவேண்டும். பணமும் இருக்கவேண்டும். தமிழ் இருக்கை உருவான பின்பு அதனால் கிடைக்கும்பயனை அனுபவிக்கப் போவது 8 கோடி மக்கள்.

சிறுவயதில் நான் கற்ற ஒரு விசயம். நிற்கும் பஸ்சில் ஏறக்கூடாது. அது எப்போதுபுறப்படும், எப்போது போய்ச்சேரும் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஓடும் பஸ்சில் ஏறினால்அது நிச்சயம் இலக்கை அடையும். ஹார்வர்டு தொடங்கி வைத்த பஸ் ஓடும்போதே நாங்கள் ஏறிவிட்டோம்.இலக்கு இதோ தெரிகிறது.  

END

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2019 14:11
No comments have been added yet.


A. Muttulingam's Blog

A. Muttulingam
A. Muttulingam isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow A. Muttulingam's blog with rss.