பெருங்களிறு [குறுநாவல்] - 4

பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல்   பெருங்களிறு - பாகம் 3: கால்

*
  பாகம் 4: வால்

மனதால் தனித்து விடப்படும்போதுதான் கொடூரமான தனிமையை அனுபவிக்கிறோம்.

ஒரு நாள் இரவு தம்மா யோசித்தபடி படுத்திருந்தாள். இப்படி வீம்பில் எல்லோரையும் ஒதுக்கி எதை அடையப் போகிறேன்? சந்தா இத்தனை ஆண்டுகளும் தினம் புணர்ச்சி கண்டவள், காலைக் கடன் போல் கலவியும் தினசரிகளில் அங்கமாகி விட்ட ஒன்று. திடீரென ஒற்றை ராத்திரியில் இனி உடற்சுகம் கிடையாது என்று சொன்னால் என்ன செய்வாள்? அதுதான் தடுமாறி விட்டாள். மின்சாவும் இத்தனை நாளும் என் காலைக் கட்டிக் கொண்டு கிடந்தவன். எத்தனையோ முறை கெஞ்சி இருக்கிறான், நான்தான் கறாராகப் பிடிவாதமாக இருந்து விட்டேன். அப்படிப் பட்டினி போட்டதன் விளைவாக சந்தா அழைத்ததும் சலனப்பட்டு விட்டான். தனக்கு உரிமை இல்லாத பெண் கலவிக்கு அழைக்கும் போது பெரும்பாலும் ஆண் மறுப்பதே இல்லை. அது அவனுக்கு வாய்ப்பு, அது அவனுக்கான‌ அங்கீகாரம். தவிர‌, அப்போது மறுத்தால் அது அவனது இயலாமை என்றும் தூற்றப்படும். அதைத் தவிர்க்க ஆண் இயல்பாகவே இணங்கிப் போகிறான்.

அது மனமோ உடலோ, எப்போதும் உறவைத் தேர்ந்தெடுக்கும், தீர்மானிக்கும் இடத்தில் பெண்ணே இருக்கிறாள். அந்த வகையில் பார்த்தால் மின்சாவும் ஆண் - பெண் உறவுச் சதுரங்கத்தின் பலிகடாதான். சந்தா, மின்சா இருவருமே சூழ்நிலையின் கைதிகள்தாம். 

அதே சமயம் சந்தா செய்தது நரதுவைப் பழி வாங்கத்தானோ என்று தோன்றியது. அதே அறையில் அவன் கண் முன்னே அந்தக் களியாட்டத்தை நிகழ்த்தி இருக்கிறாள், அதுவும் தன் தங்கையின் காதலன் என்று தெரிந்தும், தன்னை விட வயதில் மிகச் சிறியவன் என அறிந்தும். எவ்வளவு நெஞ்சழுத்தம் சந்தாவுக்கு! நீ சிறுபெண்ணை அடைய நினைத்தால், நான் மட்டும் சளைத்தவளா என்ற ஆங்காரத்தை அதன் வழி வெளிப்படுத்துகிறாளோ!

அது சந்தாவின் இயல்பல்ல. இத்தனை காலமும் சாந்தமானவளாக, விட்டுத் தருபவளாக‌, வலியை ஏற்றுக் கொள்பவளாகவே அவளைப் பார்த்திருக்கிறாள் தம்மா. அவளே இப்படி மாறி நிற்கிறாள் எனில் எவ்வளவு தூரம் அவள் மனம் ஆற்றாமையில் உழன்றிருக்கிறது!

தம்மாவுக்கு சந்தா, மின்சா இருவர் மீதும் இப்போது பரிதாபமே எஞ்சியது. பாவம்தான்.

நாளையே அவர்கள் இருவரிடமும் பேசிச் சமாதானமாகி விடலாம் எனத் தீர்மானித்தாள். குறிப்பாக மின்சாவின் கைகளை மறுபடி பற்றித் திரிய வேண்டும். ஆனால் இனி இங்கே இருக்க முடியாது, கூடாது. அது மூவருக்கும் நல்லது இல்லை. உடனே மின்சாவுக்கு ஒரு வேலை பார்த்துக் கொண்டு தலை நகருக்கோ வேறு எங்கோ நகர்ந்து விட வேண்டும்.

முக்கியமாக இன்னொன்று செய்ய வேண்டும். இனியும் மின்சாவைப் பட்டினி போடக் கூடாது. திருமணம் என்பது ஊருக்கு அறிவிக்கும் ஒரு வெற்றுச் சம்பிரதாயம் மட்டுமே. இருவரின் மனமும், உடலும் கலவிக்குத் தயாராகி விட்ட பிறகு எதற்கு அதை ஒத்திப் போட்டு இத்தகு சூழல்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும்? நாளை காலை சமாதானம் பேசி விட்டு நாளை இரவே... எங்கே செய்யலாம்? மின்சாவும் சந்தாவும் கலந்த இந்தக் குடிலில் வேண்டாம். தன்னை நரது இழிவு செய்த அந்தக் கொட்டடியும் வேண்டாம்.

பிறகு எங்கே செய்யலாம்? இப்பரந்த மேய்ச்சல் காடுகளில் எங்கேனும்? அந்த முகாமில் யானை குளிக்க இருக்கும் சிறிய குளத்தில் நீருக்குள் நீந்தியபடி? அல்லது அவர்களை ஒன்றிணைத்த ரத்த நந்தகாவின் முதுகில்? சிரித்துக் கொண்டாள். வெட்கப்பட்டாள்.

மனம் இனிப்பாக இருந்தது. அந்த இன்பத்தின் நுகர்வில் மிதந்தபடி தூங்கிப் போனாள்.

பின்னிரவில் அந்தச் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். அதே ஓசைகள். ஆவேசத்தின் பெருமூச்சுகள் அந்தக் குடிலில் நிரம்பின. தம்மா அழ ஆரம்பித்தாள்.

மறுபடியுமா! எனில் சந்தா, மின்சா இருவரும் இதைக் கை விடுவதாக இல்லை. தம்மா அருவருப்பாக உணர்ந்தாள். முக்கியமாக மின்சாவுக்கு எப்படி மனம் வந்தது? எனில் அவன் கேட்ட மன்னிப்புக்கு எல்லாம் என்ன பொருள்? செய்த தவறுக்கு மட்டுமானதா மன்னிப்பு, அதே தவறை மறுபடி செய்ய மாட்டேன் என்ற சத்தியத்தை உள்ளடக்கியது அல்லவா மனப்பூர்வமான மன்னிப்பு! முதல் முறை செய்ததை உணர்ச்சிவசத்தின் பிழை எனக் கடந்தாலும் இப்போது செய்து கொண்டிருப்பது அசலான நம்பிக்கை துரோகம்!

மறுநாள் விடிந்தது. இரவு முழுக்க அழுததில் தம்மாவின் கண்கள் சிவந்து மனம் இறுகிப் போயிருந்தது. அன்றொரு நாள் சந்தா இரவு முழுக்க அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்ததன் முழு வீரியமும் விளங்கியது. அவள் தொய்வடைந்திருந்தாள், ஆனால் தெளிந்திருந்தாள். வெறுமை அவள் மனதைச் சூழ்ந்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் அம்மாவுடனான‌ சண்டையின் போது அவளது தந்தையார் சொன்னது நினைவு வந்தது -

“எல்லா ஆம்பளையும் வல்லுறவாளன்தான். எல்லாப் பொம்பளையும் விபச்சாரிதான். நம்ம‌ நாகரிகம் அதை ஆழ்மனசுல போட்டு புதைச்சு வெச்சிருக்கு. தேவை இருந்தா, வாய்ப்பு அமைஞ்சா அது வெளிப்படும். அதுவரைக்கும் எல்லோரும் நல்லவங்கதான்.”

அது உண்மைதானோ எனத் தம்மாவுக்குத் தோன்றியது. இந்த யதார்த்தத்தோடு வாழப் பழகுவதே நிம்மதிக்கு வழி. நாமாக ஒரு கனவும் கற்பனையும் கட்டிக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தனக்கு இரண்டு வழிதான் இருக்கிறது எனப் புரிந்தது அவளுக்கு.

ஒன்று இந்தக் குரூர யதார்த்தத்தோடு சமரசம் செய்து கொண்டு இதற்குள் வாழ்வது. அல்லது இதிலிருந்து வெளியேறுவது, குறைந்தது தற்காலிகமாக. இரண்டாவதைத் தேர்ந்தாள் தம்மா. முந்தைய நாட்களைப் போலவே சந்தாவோடும், மின்சாவுடனும் அவள் பேசவில்லை. ஆனால் இம்முறை மனதில் எந்தக் குழப்பமோ பாரமோ இல்லை.

வெறுமையை நிரப்ப‌ கொட்டடியில் ரத்த நந்தகாவிடம் சற்று நேரம் செலவழித்தாள். அதன் விலங்குகளை விடுவித்தாள். அது என்ன நினைத்ததோ, நாயின் குழைவோடு குனிந்து அவளருகே உட்கார்ந்து முதுகு காண்பித்தது. அவள் வியப்புடன் அதன் முதுகில் சிரமப்பட்டு எட்டி ஏறினாள். அப்படித் தனியாக அதன் முதுகில் ஏறுவது அதுவே முதல் முறை. எப்போதும் அது நின்று கொண்டிருக்கும், முதலில் மின்சா லாகவமாக அதன் முதுகில் ஏறுவான். பின் கை கொடுத்து தம்மாவையும் ஏற்றிக் கொள்வான். மனநிலை பொறுத்து அவனுக்கு முன்னாலோ பின்னாலோ உட்கார்ந்து கொள்வாள். இப்போது தானே ஏறிய‌து புதிதாக இருந்தது. அத்தனிமை மகிழ்ச்சியாவும் கர்வமாகவும் இருந்தது.

யானையானது ஒரு நாயைப் போலவோ, பூனையைப் போலவோ, ஆடு, மாடு போலவோ இல்லை. அவை சாது அல்லது மனிதனின் பலத்தை உணர்ந்தவை அல்லது இணங்கிப் போவதன் லாபங்கள் உணர்ந்தவை. யானைக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை. ஆனாலும் அது பெரும்பாலும் மனிதனைத் தொடாமல் இருப்பது அதன் கருணைதான்.

ரத்த நந்தகா எழுந்து கொண்டு கொட்டடியை விட்டு வெளியே வந்தது. அதை எப்படித் திசைப்படுத்துவது எனத் தம்மாவுக்குப் புரியவில்லை. வெண்களிறே தன் இஷ்டத்துக்கு வழியைத் தேர்ந்தெடுத்து நடந்தது. தம்மாவின் மனதைப் படித்தது போல்தான் இருந்தது.

பின் வந்த நாட்களில் தம்மா தவறாமல் தினமும் ரத்த நந்தகா மீதேறி உலாப் போனாள். அதன் பதற்றங்கள் முற்றிலுமாகவே ஒழிந்தது போலிருந்தது. மின்சா அதை வியப்பாகப் பார்த்தான். அவன் அதனை நெருங்க‌வே பல‌ மாதங்கள் எடுத்துக் கொண்டான். பற்பல‌ நுட்பங்கள் முயன்று, மார்க்கங்கள் கண்டடைந்தே அதைச் சாதிக்க முடிந்தது. ஆனால் இச்சிறுபெண் ஓரிரு நாளில் அதைச் செய்திருக்கிறாள். அவனுக்கு அது புரியவில்லை.

இப்போதும் சவாரி முடிந்து கீழே இறங்கும் போது ரத்த நந்தகாவை மண்டியிடச் செய்து அதன் தந்தங்களைப் பற்றியபடி மத்தகத்தில் முத்தமிடுவதைத் தம்மா நிறுத்தவில்லை.

உள்ளூரப் பரவியோடும் சிலிர்ப்பைத் தாண்டி ஓர் எதிர்வினையும் புரியாமல் மௌனம் காக்கும் ‘கல்லுளி மங்கன்’, ஒரு நாள் திடீரென முத்தம் தந்த பின் தம்மாவின் தலையில் தன் தும்பிக்கை கொண்டு தொட்டது. அவள் மீது தன் எடையின் பலு இறங்கி விடலாகா என்ற கவனத்துடன் செய்த, வாஞ்சை நிரம்பிய‌, மிக‌ மென்மையான தொடுகை. தம்மா ஒரு மாதிரி அதை எதிர்பார்த்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். என் அன்பின் வெளிப்பாட்டுக்குப் பதிலே சொல்ல மாட்டாயா, அவ்வளவு அகங்காரம், அலட்சியம் என்று மனம் குமைந்திருக்கிறாள். அன்பு தருமிடங்கள் சாதாரணமாகி விடுகின்றன. அது வராத‌ இடத்தில்தான் மனம் விடாமல் தொங்கி அதை எதிர்பார்த்து ஏங்குகிறது.

அன்று மகிழ்ச்சியில் அகம் நிறைந்தாள் தம்மா. மின்சா விளங்காத‌ அக்காட்சியை வியப்புடன் பார்த்தான். அவனுக்கு அக்களிறு மீது மெல்லிய பொறாமை எழுந்தது.

சந்தா அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தம்மாவுக்கு மறுபடி ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறோமோ என்ற ஜாக்கிரதை உணர்வு எட்டிப் பார்த்தது. ஆனால் இம்முறை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத உறவு. ஐந்தறிவு ஜீவன் மீதான பிரியம். எனவே எவ்வகையிலும் ஏமாற்றத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை என்பது புரிந்து நிம்மதி எழுந்தது. யானைக்கும் அவளுக்கும் இடையே ஒரு சூட்சம பாஷை படிந்தது.

சந்தாவும் மின்சாவும் கணவன் - மனைவி போலவே வாழத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் அவள் நரதுவைக் கவனிப்பதில் குறை வைக்கவில்லை. ஒரே வித்தியாசம் அவன் படுத்திருந்த மூலையை மறைப்பது போல் ஒரு திரைத்தடுப்பு போட்டுக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் தம்மா இரவில் இடையில் ஓசை கேட்டுக் கண் விழித்தால் இயல்பாக மறுபடி தூக்கத்துக்குள் நழுவுவதைப் பழக்கமாக்கிக் கொண்டாள். வசந்த ருது வந்தது.

*

சிறப்பு முகாமின் சூழலே மலர்களும் கனிகளுமாக பல‌ வண்ண மயமாகக் குலுங்கின.

தம்மாவுக்குத் திடீரெனத் தோன்றியது. ரத்த நந்தகா ஏன் இப்படி இங்கே வந்து தன் இணையைப் பிரிந்து வாழ வேண்டும்? யானை என்பது பெருமா! மனிதர்களின் அற்ப யுத்த வெறிக்காக ஏன் வனத்தின் அரசன் போன்ற இந்த பிரம்மாண்ட உயிர் துயருற வேண்டும்? இணையைப் பிரிந்த சந்தா என்ன செய்தாள்? தன் சொந்தச் சகோதரியின் வாழ்வையே குலைத்து நாசம் செய்து காமம் தேடிக் கொண்டாள். அப்படி இருக்க, இந்த யானை இணையை விலகி வந்த‌ துக்கத்தில் வன்முறையில் ஈடுபடுவ‌து இயல்புதானே!

என்னதான் இப்போது அது மெல்லச் சரியாகி இயல்புக்குத் திரும்பியது போல் பட்டாலும் உள்ளே எங்கோ அடியாழத்தில் அப்பிரிவின் ரணம் இன்னும் ஆறாமல் இருக்கத்தானே செய்யும்! அதே போல் அங்கே சியாமிலும் இதன் இணை அப்படித்தானே துன்பத்தில் திளைத்திருக்கும்! எதற்கு இதெல்லாம்? தான்தான் இந்த மனிதர்களின் கீழ்மையால் இப்படித் தனித்திருக்கிறேன். யானை ஏன் அதே வாதையை அனுபவிக்க வேண்டும்?

தீர்மானித்தாள். ரத்த நந்தகாவை அதன் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி விடுவது.

மனிதர்களாகிய தாங்கள் இருவரும் அந்த முகாமை விட்டுத் தலைநகரை நோக்கி ஓடும் திட்டமே தோல்வியுற்று அங்கே தேங்கியிருக்கிறோம். இதில் இந்த வெள்ளை யானையை எல்லாம் அப்படி அனுப்பி வைத்து விட முடியுமா என ஆரம்பத்தில் ஆயாசமாக இருந்தது.

ஆனால் தளராமல் எல்லா விஷயங்களையும் கவனித்தாள். தகவல் சேகரித்தாள். திட்டம் போட்டாள். எங்கே எது தவறிப் போகும் என்று ஊகம் செய்தாள். அவற்றை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளை யோசித்தாள். துண்டு துண்டாக ஒத்திகை பார்த்தாள். எல்லாம் திருப்திகரமாக இருந்தது. கொஞ்சம் அதிர்ஷடம் மட்டும் துணைக்கு இருந்தால் அனுப்பி வைத்து விடலாம் என்கிற‌ நம்பிக்கை வந்தது. அது எப்போதும் தனக்கு இருந்ததில்லை என்றாலும் இம்முறை இது த‌னக்கான முயற்சி அல்ல. ரத்த நந்தகாவின் ஜாதகம் சுத்தம் என்றால் அதற்குத் தன் இணையைத் திரும்பப் பார்க்கும் கணம் வாய்க்கும். பார்ப்போம்.

அன்று முற்பகலில் சூரியனின் நிலையை வைத்து நேரம் கணித்து ரத்த நந்தகா முதுகில் ஏறி உலாப் போனாள். அது காவலாளி சிறுநீர் கழிக்கச் செல்லும் நேரம். சரியாக ஆளற்ற சமயத்தில் வேலியைக் கடந்தாள். கவனமாகத் திசை தேர்ந்தெடுத்தாள். யானையைத் தான் விரும்பிய திசையில் வழி நடத்தும் பாங்கு இப்போது கை வந்திருந்தது. அது சியாம் எல்லைப் புறத்தில் இருக்கும் வனப்பகுதி நோக்கிய பாட்டை. அன்றைய பகலில் பாதி பயணித்து அந்தக் காட்டினை அடைந்தாள். அங்கே அவள் கீழே இறங்கிக் கொண்டாள்.

பர்மிய அரசின் ராஜ யானை என்பதற்கு அடையாளமாக ரத்த நந்தகாவின் கழுத்தில் தொடங்க விடப்பட்டிருந்த அணிகலன்களை நீக்கினாள். அந்த ஆபரணங்கள் யானை பாதை தவறினாலோ, தப்பிச் சென்றாலோ பிடிக்க. மங்கையோ மிருகமோ நகைகள் அப்படித்தான். அலங்காரப்படுத்தி அடிமைப்படுத்துவதுதான் அவற்றின் உள்நோக்கு! சப்தமெழுப்பும் மணி கொண்ட‌ கொலுசை வயதுப் பெண்ணின் காலில் அணிவிப்பது அழகு பார்க்க மட்டுமா? அவளது நடமாட்டைத்தை எளிதில் கண்காணிக்கவும்தானே!

தம்மா ரத்த நந்தகாவை மண்டியிடப் பணித்தாள். கால்கள் மடக்கி அது அமர்ந்தது. அதன் முகத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். ஓர் இறுதி முத்தத்தின் பரிதவிப்பு அதில் இருந்தது. அவள் கண்களின் ஈரம் அந்த மத்தகப் பரப்பில் படர்ந்தது. சுதாரித்தாள்.

இப்போது மறுபடி அதை எழச் சொல்லி வனத்துள் போகச் சொல்லி சைகை காட்டினாள். அதற்குள் புகுந்து மேலும் அதே திசையில் சென்றால் சியாம் தேச‌ எல்லை வந்து விடும். அதுவும் பெருங்காடுதான். அந்த வனமும் கடந்து வெளியேறினால் ஏதாவது சிறிய ஊர் வரும். அங்கிருந்து ரத்த நந்தகா இணையோடு போய் இணைந்து கொள்ள வேண்டும். சியாம் நாட்டு மக்களாவது யானைக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை நம்புபவர்கள் என்றால் அங்கே யாராவது உதவுவார்கள். அது தன் குடும்பத்தைக் கண்டடைய முடியும்.

ஆனால் ரத்த நந்தகா அவளை விடுத்துச் செல்ல மறுத்து முரண்டு பிடித்தது. வெய்யில் தாழ‌த் தொடங்கியிருந்தது. தம்மாவுக்குப் பதற்றம் ஆனது. அவள் சைகையால் அதற்குப் புரிய வைக்க முனைந்தாள். தான் திரும்பிப் போவேன், த‌ன்னோடு வரக்கூடாது எனக் கண்டிப்பாகச் சொன்னாள். வந்த வழியே திரும்பி நடந்தாள். யானையைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள். அது அவள் விட்டுச் சென்ற இடத்திலேயே அசையாமல் நின்று அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அவளுக்குக் கவலையாக இருந்தது.

சரியாகப் போய்ச் சேருமா? அல்லது வேறு புதிய ஆபத்துகளில் மாட்டிக் கொள்ளுமா?

இறுதியாக இருவரும் பரஸ்பரம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர் என்றான‌ போது ரத்த நந்தகா அந்தக் காட்டுக்குள் நுழைந்தது. தம்மா இங்கிருந்தே கையை அசைத்தாள். அவளது கண்கள் நீரால் நிரம்பின. இனி அவனைப் பார்க்க முடியாது. வெள்ளை யானை என்பது ஒரு கனவாக‌ மட்டுமே எஞ்சும். முகாம் இருந்த திசை நோக்கி வேகமாக‌ நடக்க ஆரம்பித்தாள். வழியெங்கும் அவளது கண்கள் உப்பு நீரைச் சுரந்து கொண்டே வந்தன.

முகாமில் தம்மா அருகில் இல்லாத தனிமையில் முதன் முறையாகப் பகலில் ஒரு நீண்ட நெடிய சம்போகத்தை நிகழ்த்தினார்கள் மின்சாவும் சந்தாவும். பின் நல்ல ஆட்டுக்குட்டி ஒன்றை அடித்துக் குழம்பு வைத்து இருவரும் உண்டார்கள். சந்தா நரதுவுக்கு உணவூட்டி விட்டு வந்து ஏப்பம் விட்டபடி மறுபடி இன்னொரு சுற்று கலவி. அது வரையில் தம்மாவும் ரத்த நந்தகாவும் திரும்பவில்லை. அதைக் கவனித்து ஏதோ சிக்கல் என்று உறைக்கவே அந்தி ஆகி விட்டது. பதற்றத்துடன் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் தேட இறங்கினர்.

இரவு கவிய ஆரம்பித்த போது தம்மா மட்டும் தனியே முகாம் வந்து சேர்ந்தாள். மின்சா அவளைப் பிடித்துக் கோபத்துடன் ஏன் இத்தனை தாமதம், ரத்த நந்தகா எங்கே என்று விசாரித்தான். அவள் வழக்கம் போல அவனுக்குப் பதில் சொல்லாமல் விலகி நடந்தாள்.

மின்சா சினம் தலைக்கேற அவளைக் கன்னத்தில் அறைந்து தள்ளினான். அவள் புற்கள் நிறைந்த அந்த நிலத்தில் விழுந்து அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள்.

சந்தா தூரத்திலிருந்து அவர்களை நோக்கி நடந்து வந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது.

மின்சாவும் சந்தாவும் மூன்று முழு நாள் தேடினார்கள். வெளியே வாய் திறக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ரகசியமாகச் சில உறவினர்களையும் தேடுவதற்கு உதவியாக‌ இணைத்துக் கொண்டார்கள். எவ்வளவு அடித்துக் கேட்டும் தம்மா வாயைத் திறக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அவளை அடிக்கக்கூடாது எனச் சந்தா அதட்டினாள்.

மின்சா அமைதியானான். எத்திசையில் தேடுவது என்று தெரியாமல் எப்படித் தேடுவது?

யாரும் பார்தார்களா என வெளிப்படையாகவும் விசாரிக்க முடியாது. ஆனால் யாருமே கவனிக்காத அளவு, அலட்சியப்படுத்திக் கடக்குமளவு வெள்ளை ஆனை அப்படி ஒன்றும் தினம் கண்களில் படும் விஷயமும் கிடையாது. மின்சாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

முகாமை விட்டு வெளியேறியதும் வேண்டுமென்றே முதலில் தவறான திசை நோக்கிக் கொஞ்சம் போய் விட்டுத்தான் சியாம் எல்லைப் புறத் திசைக்கு மாறி இருந்தாள் தம்மா. எனவே முகாமுக்கு வெளியே கடைசியாக அவளை யானையுடன் பார்த்தோர் சொன்ன தகவலை வைத்துக் கொண்டு தேடியோர் தவறான திசையில் தேட‌த்தான் போனார்கள்.

இன்னொன்றும் செய்திருந்தாள் தம்மா. ஓரிடத்தில் நிறுத்தி கையோடு எடுத்து வந்த அடுப்புக் கரிச் சேகரிப்பை முடிந்த அளவு ரத்த நந்தகாவின் உடலெங்கும் பூசினாள். இப்போது வெள்ளை யானை அடையாளம் இழந்து வழமையான யானைகளின் அடர் சாம்பல் நிறத்தை எட்டியது. இனி பர்மாவிலோ சியாமிலோ பார்ப்போர் கண்களை அது உறுத்தாது. வெண்களிறுகளுக்கு நேரும் தொந்தரவுகள் சாம்பல் யானைகட்கு இல்லை!

ஒரு கட்டத்தில் மறைப்பது குற்றமாகிடும் என்பதால் அரசுக்கு அறிவித்தான் மின்சா.

*

யாழ தேவி கொதிப்பு உயர்ந்து நின்றாள். அதை மன்னித்துக் கடக்க விரும்பவில்லை. வென்று வந்த வெள்ளை யானையைக் கோட்டை விடுவது போரில் தோற்றதற்குச் சமம் என்றே எண்ணினாள். அரசன் பயின்னவுங்கை அமைதிப்படுத்தி விட்டு தான் மட்டும் ஐம்பது படை வீரர்களுடன் கிளம்பி ரத்த நந்தகாவின் சிறப்பு முகாமுக்கு வந்திருந்தாள்.

ஆரம்ப விசாரணையில் எதுவுமே தெரியாது என எல்லோரும் சாதிக்க, சற்று அழுத்தி விசாரித்த போது மின்சாவும் சந்தாவும் நிஜம் ஒப்புக் கொண்டு தம்மாவைக் காட்டிக் கொடுத்தனர். அவளே அதை விடுவித்து எங்கோ அனுப்பி விட்டாள் என்று சொன்னான் மின்சா. அவள் உடலில் சாத்தானின் ஆவி புகுந்து கொண்டது என்று சொல்லி அழுதாள் சந்தா. தம்மா ஏதும் பேசாமல் நின்றாள். அவளது அந்த‌ மௌனம் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கருதப்பட்டது. யாழ தேவி அவளுக்கு மரண தண்டனை விதித்தாள்.

அலட்சியமாக இருந்து யானையைத் தப்பிக்க விட்டுக் கடமை தவறிய குற்றத்துக்காக மின்சாவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக‌ சந்தாவுக்கும் கண்களைப் பிடுங்க உத்தரவிட்டாள் யாழ தேவி. பரிவாரங்களுடன் அங்கு வந்திருந்த வைத்தியரைக் கொண்டு எல்லோருக்கும் உடற்சோதனை நடத்தப்பட்டது. எவரும் எதிர்பாரா வண்ணம் சந்தா கர்ப்பம் எனக் கண்டறிந்தார்கள். ஒரு கணம் கூட யோசிக்காமல் தம்மா ஓடிப் போய் அவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். இருவரும் அழுதனர்.

அப்போதும் மிகக் கவனமாக‌ ஒரு வார்த்தை கூட தம்மா சந்தாவிடம் பேசவில்லை.

கர்ப்பவதிக்கு கடும் தண்டனை தருவது பர்மிய மரபல்ல. எனவே யாழ தேவி அவளது தண்டனையைச் சில்லாண்டு சிறை தண்டனை ஆக்கினாள். காவலர்கள் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனார்கள். மின்சாவுக்கு மட்டும் கண்கள் பிடுங்கப்பட்டன.

கண்கள் இரண்டும் பிடுங்கப்படும் முன் கடைசியாகத் தம்மாவைத்தான் பார்த்தான். அவன் கண்ட சந்தாவின் நிர்வாணத்தைக் காட்டிலும் மேலான பரிசுத்தமான தம்மா!

மின்சாவின் அலறலும் சந்தாவின் அழுகையும் குடில் வரை கேட்டது. நரது சிரித்தபடியே நகர முயற்சி செய்தான். வலது காலின் சுண்டு விரலில் மெல்லிய அசைவு தெரிந்தது.

தம்மா குளித்துத் தயாராகி நல்ல ஆடை அணிந்து வந்து நின்றாள். பின்னால் கை கட்டப் பட, மண்டியிட்டுச் சிரஞ்சீவி எந்திரத்தில் தலையை வைத்தாள். ரத்த நந்தகா சியாமில் இணையுடன் சேர்ந்தது என்ற‌ தகவல் வந்து சேர்ந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. அது மட்டுமே அக்கணம் அவளுக்குக் கவலையளித்தது.

அன்று ரத்த நந்தகா எல்லைப்புறக் காட்டுக்குள் நுழைய மறுத்து நின்ற‌ காட்சி அப்போது அவளுக்கு நினைவு வந்தது. ஏன் அப்ப‌டி நின்றது? அதற்குத் தன் மீது இனம் புரியாத ஒரு பிரியம் உண்டு. தன் மகளான குட்டி யானையை நினைவூட்டுவதாகக் கூடத் தன்னைக் கண்டிருக்கலாம். எனில் அந்தத் தருணம் எதை நினைவூட்டி இருக்கும் அதற்கு? முன்பு சியாமில் அதன் குடும்பம், குட்டியிடமிருந்து பிரித்து பர்மா அழைத்து வந்த போது உற்ற அதே துயரை மறுபடி அடைந்திருக்கும் அல்லவா! அதையா அதற்கு நான் கொடுத்தேன்!

எந்திரத்தை முடுக்கினார்கள். அது கச்சிதமாக ஒரே கணத்தில் தம்மாவின் தலையைத் துண்டாக்கியது. வலியே இல்லாத மரணம். அதாவது வலி பற்றிய தகவல் மனதை எட்டும் முன்பே சம்பவித்த சாவு. அல்லது அதிகபட்சம் ஒற்றைக் கண உச்ச வலியாக இருக்கும்.

யாழ தேவி திருப்தியாக அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள். அப்போது யானையின் பிளிறல் தொலைவில் கேட்டது. யாழ தேவியும் வீரர்களும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள்.

ரத்த நந்தகா வேகமாக முகாமுள் நுழைந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அங்கே வந்து ரத்தம் பீறிடத் துவண்டு கிடக்கும் தம்மாவின் உடலையும் நிலைகுத்திய விழிகளோடு உறைந்து விட்ட தலையையும் கண்டது. ஆவேசமாக ஓடி வந்து உடலுக்கும் தலைக்கும் இடையே மாறி மாறி நடந்தது. அந்த மரணம் உண்டாக்கிய‌ இடைவெளியை அளக்க‌ முனைந்தது போல் தோன்றியது. யாழ தேவி அதை வினோதமாகப் பார்த்தாள்.

ரத்த நந்தகா சுற்றிப் பார்த்தது. ஒரு சூழலில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இருப்பதில்லை. அவர்களின் உடல் மொழியும் மற்றவர்களின் உடல் மொழியும் அதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. ரத்த நந்தகா அதற்கு மேல் யோசிக்கவில்லை. யாரும் எதிர்பாரா வண்ணம் யாழ தேவி இருந்த திசையில் வேகமாக நடக்க ஆரம்பிக்க, நடுவே நின்றிருந்த வீரர்கள் அதன் ஆகிருதியில் அஞ்சிச் சிதறினார்கள். என்ன செய்வது என்ற‌ குழப்பம் நிலவியது.

அங்கிருந்த நூறு கண்களும் இமைக்கும் நேரத்தில் ரத்த நந்தகா என்ற வெண் வராகம் யாழ தேவியைத் தன் தும்பிக்கையால் சுற்றித் தூக்கித் தரையில் அறைந்தது. நிலத்தில் மோதித் தலை சிதறி குருதி தெறித்தது. அதுவும் தம்மாவுடையதைப் போலவே கண நேர ரணமாகவே இருந்திருக்க வேண்டும். உயிர் துறந்த‌ யாழ தேவியில் உடல் துவண்டது. ரௌத்ரம் அடங்காமல் மரித்த உடலைக் கால்களால் பல முறை மிதித்துச் சிதைத்தது.

சூழ்ந்திருந்த வீரர்கள் அனைவரும் உறைந்து நின்றனர். தேசத்தின் மஹாராணியை வெள்ளை யானை கொன்று விட்டது. இப்போது அவர்களுக்குள் சுதாரித்துக் கொண்டு குரல்கள் மூலம் ஒன்றிணைத்து நாற்புறமும் கயிறு வீசி யானையைப் பிடித்தார்கள்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. மூத்த வீரன் ஒருவன் புரவியேறி மன்னனிடம் செய்தி சொல்ல ஓடினான். பயின்னவுங்கிடம் தயங்கித் தலை குனிந்து செய்தி சொன்னார்கள். அவன் உன்னிப்பாகக் கேட்டான். ஆரம்பித்ததும் யாழ தேவி இறந்த செய்தி கேட்ட போது துடித்த அவன் உதடுகள், மற்ற விவகாரங்கள் கேட்ட பிறகு அமைதி அடைந்தது. தீவிரமாக‌ யோசித்தான். நிதானமாகச் சொன்னான் -

“யாழ தேவியை அந்த யானை முகாமிலேயே புதைத்து விடச் சொல்லுங்கள். சமாதி ஏதும் எழுப்ப வேண்டியதில்லை. அந்த முகாமை மூடி விடுங்கள். அங்கே இனி யாரும் செல்ல வேண்டியது இல்லை. அவளை பர்மாவின் சரித்திரம் மறந்து விடட்டும். தம்மா என்ற அந்தப் பெண்ணின் உடலை இங்கே தலைநகருக்கு எடுத்து வரச் சொல்லுங்கள். அரசு மரியாதையுடன் அவள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். வெண்களிறால் ஆசீர்வதிக்கப்பட்டவள் அவள். இந்தத் தேசத்தின் சொத்து. நமது குலசாமி. அவளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவளைக் கொன்றது தவறான தீர்ப்பு. என் நாடு நீதி வழுவி விட்டது. அதற்குரிய சிறிய பரிகாரமாவது செய்ய வேண்டும். அவளது நினைவகம் எழுப்பபடட்டும். நான் தினம் போய் அங்கே அவளிடம் மன்னிப்பு கேட்பேன். என் ஆயுள் தீரும் வரை. இதுவே தவுங்கூ ராஜ்யப் பேரரசன் பயின்னவுங்கின் ஆணை.”

மூத்த வீரன் அதிர்ந்து நின்றான். அதை கிரகித்துக் கொண்டு மேற்கொண்டு பேசினான்.

“அந்த வெண் யானை இந்நாட்டின் அரசியைக் கொலை செய்திருக்கிறது. அது தேசத் துரோகம். எனவே அதனைக் கைது செய்து கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அதன் ஆக்ரோஷம் அடங்கவில்லை. வெண்களிறு மீது வன்முறை பிரயோகிப்பது பர்மிய நிலத்தின் அறம் அல்ல‌. எனவே அஹிம்சை முறையில் அதைக் கையாளக் கூடுதல் காவல் தேவை. எனவே மேலும் ஐம்பது வீரர்களையேனும் அனுப்பக் கோருகிறேன்.”

“அவசியமில்லை. அதை விடுவித்து விடு. அது எங்கே விரும்புகிறதோ செல்லட்டும்.”

“…”

“யாழ தேவி தன் வினைக்கான‌ எதிர்வினையைத்தான் பெற்றாள். கர்மபலன். நாட்டின் பிரஜைகளைத் துன்புறுத்தி ஆட்சி நடத்தக்கூடாது என்ற தெய்வ‌ நினைவூட்டலாகவே இதைப் பார்க்கிறேன். ரத்த நந்தகா என்ற பெருங்களிறு அந்த‌ வகையில் இறை தூதன். அதை அடைத்து வைப்பது மரபல்ல. கணமும் தாமதிக்காமல் அதை விடுவியுங்கள்.”

அந்த வீரன் கிளம்பியதும் முகாம் இருந்த திசை நோக்கி பயின்னவுங் மண்டியிட்டான். அவனது உதடுகள் முணுமுணுத்தன: “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி.”

*

முகாமுக்குச் செய்தி வந்த போது வீரர்கள் அதைப் புரிந்து கொள்ளச் சமயமெடுத்தது. இரண்டு முறை செய்தி கொண்டு வந்தவனைக் கேட்டு உறுதி செய்து கொண்டார்கள்.

முதலில் ரத்த நந்தகாவை விடுவித்தார்கள். அது தம்மாவின் உடலருகே போய் அமர்ந்து கொண்டது. தன் தும்பிக்கையால் தம்மாவின் துண்டான தலையைத் தொட்டது. அதன் இரு கண்களிலும் நீர் வழிந்தது. வீரர்கள் ஓர் அதிசயம் போல் வேடிக்கை பார்த்தார்கள்.

காத்திருந்து பார்த்து விட்டு சில வீரர்கள் தைரியம் பெற்று தம்மாவின் உடலருகே வந்து யானைத் தந்த‌த்தால் செய்த பேழையில் பட்டாடை விரிப்பைப் போட்டு அதில் அவளது தலையையும் உடலையும் வைத்து மூடினார்கள். அதைச் சுமந்தெடுத்துச் சென்றார்கள்.

சுமந்த வீரர்களில் ஒருவன் கேட்டான் - “அந்த யானை துக்கத்தில் அழுகிறதா? குற்ற உணர்விலா?”. இன்னொருவன் துடுக்காகச் சொன்னான் - “எனக்கு யானை பாஷை தெரியாது, இல்லையென்றால் அதனிடமே கேட்டிருப்பேன்.”. சிலர் சிரித்தனர். பிறகு அதன் அசந்தர்ப்பம் புரிந்து எல்லோரும் சட்டென‌ மௌனமாகினர். திடீரென ஒருவன் சொன்னான் - “இதற்கான பதில் அந்தப் பெண் தம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.”

ஏழெட்டு வீரர்கள் சேர்ந்து அவசரமாக யாழ தேவியின் சிதிலமுற்ற‌ உடலை ச் சேகரித்து அங்கேயே புதைத்தார்கள். மின்சாவையும் நரதுவையும் குடிலைக் காலி செய்து கிளம்ப உத்தரவு கொடுத்தார்கள். மின்சா நரதுவைச் சுமந்து கொண்டு தடவித் தடவி நடந்தான். மூலிகை வைத்துத் துணியால் கட்டப்பட்ட அவன் கண்களில் கண்ணீர் வழிந்து எரிந்தது.

வீரர்களும் கிளம்பினர். இப்போது மொத்த முகாமிலும் யானை மட்டுமே மீதமிருந்தது.

சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்த ரத்த நந்தகா மெல்ல எழுந்தது. சுற்றிப் பார்த்தது. எல்லாத் திசைகளிலும் அதற்குத் தம்மா தெரிந்தாள். ஒரு முறை பலவீனமான குரலில் பிளிறியது. அது ஆள் அரவமற்ற அந்தப் பிராந்தியத்தின் சகல திசைகளிலும் மோதி எதிரொலித்தது. பின் எல்லோரும் சென்ற திசைக்கு எதிர்திசையில் நகர‌ ஆரம்பித்தது. தம்மா அழைத்துச் சென்ற அதே வழி. நினைவை மீட்டிக் கொண்டே அசைந்து நடந்தது.

ரத்த நந்தகா சருமத்தின் வெண்ணிறம் மெல்ல சாம்பல் நிறத்துக்கு மாற ஆரம்பித்தது.

***

(முற்றும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2023 19:26
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.