C. Saravanakarthikeyan's Blog
August 10, 2024
பெங்களூர் புக் ப்ரம்மா: ஜெயமோகன் உரை
(ஆகஸ்ட் 9, 2024 - பெங்களூர் புக் பிரம்மா இலக்கிய நிகழ்வின் முதல் நாளில் ஜெயமோகன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம் (அவர் தளத்தில் தந்துள்ளபடி - https://www.jeyamohan.in/203929/)
*

அனைவருக்கும் வணக்கம். அமெரிக்காவில் ஒரு பேட்டியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று. நான் இரண்டுமொழிகள் மிக நன்றாகத் தெரியும், ஆங்கிலத்தில் சமாளிப்பேன் என்று பதில் சொன்னேன். ஆச்சரியத்துடன் எவ்வாறு இரண்டுமொழிகள் தெரியும் என்று கேட்டனர். என் தாய்மொழி மலையாளம், எழுதும் மொழி தமிழ் என்று பதில் சொன்னேன். அது இன்னும் ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் நமக்கு இது வியப்பூட்டுவது அல்ல. தென்னகத்தின் யதார்த்தம் இது. இந்த அரங்கில் இருப்பவர்களிலேயே எம்.கோபாலகிருஷ்ணனின் தாய்மொழி கன்னடம். இன்னொரு எழுத்தாளரான சு.வேணுகோபாலின் தாய்மொழியும் கன்னடம். இங்கிருக்கும் எங்கள் பெருங்கவிஞரான சுகுமாரனின் தாய்மொழி மலையாளம். நெடுங்கால இடப்பெயர்வுளால் நம் ஒவ்வொரு பகுதியும் பன்மொழித்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது.
இதுவே தென்னகப் பண்பாடு. தென்னகத்திற்கென ஒரு தனிப்பண்பாடு உண்டு. நாம் ஒரு தனிப் பண்பாட்டுத்தேசம். பெர்னாட் ஷா சொன்னார், அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகள் என்று. நாம் ஐந்து மொழிகளால் இணைக்கப்பட்ட ஒரு தேசம். இந்த தென்னக இலக்கியவிழாவை முன்னெடுக்கும் புக்பிரம்மா அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.
என் மொழியின் இலக்கியத்தின் போக்குகளைப்பற்றி சில சொற்கள் சொல்லும்படி சொன்னார்கள். தமிழில் இரண்டு போக்குகளின் கீழிறக்கமும், இரண்டு போக்குகளின் மேலெழலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வேன். பின்நவீனத்துவம் கீழிறங்கிவிட்டது. இன்று எந்த குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளரும் தன்னை பின்நவீனத்துவர் என்று சொல்லிக்கொள்வதில்லை. தலித் இலக்கியம் பின்னகர்ந்து வருகிறது. தலித் இலக்கிய முன்னோடிகளான மூத்த படைப்பாளிகளே தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தலாகாது என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இரு போக்குகள் மேலெழுகின்றன. ஒன்று, மையப்போக்கு. அதை நான் நுண்மையின் அழகியல் என்பேன். இன்றைய இளையதலைமுறை நவீன உலகில் வாழ்கிறது. அதற்கு வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடில்லை. அரசியலார்வகங்ளும் பெரிதாக இல்லை. அதிநவீன நுகர்வுக்கலாச்சாரமும், பெருகிவரும் உயர்தொழில்நுட்ப உலகமும்தான் அதன் பிரச்சினை. அது உருவாக்கும் உறவுச்சிக்கல்கள், ஆளுமைச்சிக்கல்களே அவர்களின் பேசுபொருட்கள்.
அவர்கள் அதற்கான அழகியலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது பல அடுக்குகள் கொண்டது அல்ல. சிக்கலானதும் அல்ல. ஆனால் மிகமிக நுட்பமான கூறுமுறையும், பூடகமான சந்தர்ப்பங்களும் கொண்டது. மிக உள்ளடங்கியது. கடிகாரம் பழுதுபார்ப்பவரின் கருவி போல என்று உவமை சொல்லலாம். மிகச்சிறிய, மிகநுணுக்கமான ஒன்று. அந்த அழகியலை முன்வைக்கும் இளையபடைப்பாளிகள் என்று சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சி.சரவணகார்த்திகேயன், அனோஜன் பாலகிருஷ்ணன், சுஷீல்குமார் என பலரை குறிப்பிடமுடியும்.
என் முன்னோடிகளான படைப்பாளிகளாகிய சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் கற்பனாவாதத்திற்கு நவீன இலக்கியத்தில் இடமில்லை என்னும் கொள்கை கொண்டிருந்தனர். கற்பனாவாதத்தின் அடிப்படையான உயர் இலட்சியவாதம் மீது கொண்ட அவநம்பிக்கையால்தான் நவீன இலக்கியம் உருவாகியது என்றனர். ஆனால் அவர்களின் சமகாலத்திலேயே மாபெரும் இலட்சியவாதியும் கற்பனாவாதியுமான வைக்கம் முகமது பஷீர் எழுதிக்கொண்டிருந்தார்.
இன்று சில படைப்பாளிகள் பஷீரை தங்கள் ஆதர்சமாகக் கொண்டிருக்கிறார்கள். உயர் இலட்சியவாதமின்றி உயர் இலக்கியம் இல்லை என நினைக்கிறார்கள். ஆன்மிகமான அடிப்படைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆகவே அவர்களின் அழகியல் கற்பனாவாதம் சார்ந்ததாக உள்ளது. அதை நவீன கற்பனாவாதம் என்பேன். இன்னும் குறிப்பாக ஆன்மிகக் கற்பனாவாதம் என்பேன். அந்த வகை எழுத்துக்களை அஜிதன் எழுதி வருகிறார். இன்னொருவகை கற்பனாவாதம் அகரமுதல்வன் எழுதுவது. அகரமுதல்வன் இந்தியாவில் குடியேறிய ஈழத்தவர். தன் நாட்டின், தன் பண்பாட்டின் எழுச்சியை அவர் கனவு காண்கிறார். ஆகவே இயல்பாகவே கற்பனாவாதம் அவரில் திரள்கிறது.
இந்த இரு போக்குகளையும் ஒன்றோடொன்று மோதி முன்னகரும் முரணியக்கமாகச் சொல்லலாமா என்று தெரியவில்லை. அதை எதிர்காலம்தான் சொல்லவேண்டும். நன்றி.
***
February 8, 2024
வீரனின் பாடல்கள்
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அனேகமாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன்.
ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட வாசல்கள் மறுபுறம் என வசீகரமான பக்க விளைவுகள் கொண்டவை. நேரடியாகச் சர்வதேசப் பதிப்பகங்கள் மூலம் நூல் வெளிவருதல் முதல் உலக இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுதல் வரை இதன் சாத்தியங்கள் அளப்பரியவை. தமிழில் அவ்வேலை செம்மையாக நடந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பெருமாள்முருகன். அதன் பலனாக அவரது பெயர் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்வதேசிய விருதுகளின் இறுதிப் பட்டியல்களிலும் இந்திய அளவிலான பெரும் பரிசுகளிலும் இடம் பெறுகிறது.
அதற்கு அவரது எழுத்துக்களின் தரம், தகுதி மட்டுமின்றி பதிப்பிக்கும் காலச்சுவடின் முன்னெடுப்புகளும் முக்கியக் காரணம். சமீப வெற்றி 25 லகரம் இந்திய ரூபாய்கள் பரிசாகக் கொண்ட ஜேசிபி இலக்கிய விருது - அனேகமாக இந்தியப் புத்தகங்களுக்கு அளிக்கப்படுகிற பரிசுகளில் அதிகத் தொகை கொண்டது இதுதான். அவர் எழுதிய ‘ஆளண்டாப் பட்சி’ நாவல் ‘Fire Bird’ என்ற பெயரில் ஜனனி கண்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரிசை வென்றிருக்கிறது. அவருக்கு வாழ்த்தும் வணக்கமும்.
*

பெருமாள்முருகன் பற்றிய என் தனிப்பட்ட வாசிப்பு அனுபவக் குறிப்பாகவும் அவரது எழுத்தாளுமை குறித்த குறுக்குவெட்டுப் பார்வையாகவும் இக்கட்டுரையை அமைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவரெழுத்தைப் பெருமளவு படித்தவன், கொஞ்சம் பழகியவன் என்கிற அடிப்படையில் அதுவே எனக்கு உவப்பானதும் வசதியானதும் கூட.
‘பீக்கதைகள்’ சிறுகதைத் தொகுதிதான் பெருமாள்முருகனை நான் முதலில் வாசித்தது. அப்படி ஒரு பொருளில் சுவாரஸ்யமாகவும் அனாவசியத் திணிப்பின்றியும் எழுதப்பட்ட சிறப்பான சிறுகதைகள். முகஞ்சுழிக்கும் ஒரு கருப்பொருள் கல்லூரி நாட்களில் என்னை முகம் மலர்த்தியது நினைவிருக்கிறது. அப்போதிருந்து கடந்த 17 ஆண்டுகளாக எனக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்களில் ஒருவராக நீடிக்கிறார். இடையில் நிகழ்ந்த துன்பியல் நிகழ்விலிருந்து மீண்டெழுந்து மறுபடி தனது மார்க்கத்தைக் கண்டடைந்திருக்கிறார்.
அவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனச் சகல வடிவுகளிலும் வீரிய செல்வாக்கு செலுத்தும் அரிய எழுத்தாளர். அவற்றோடு பதிப்பு, தொகுப்பு, அகராதி என இன்ன பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார். அவரது புனைவெழுத்துகள் அத்தனையும் கொங்கு வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும் அவை உலகளாவிய பொருத்தப்பாடு கொண்டவை என்பதையே அவர் பெறும் சர்வதேச அங்கீகாரங்கள் உணர்த்துகின்றன.
Think Local, Go Global என்பதற்கான சரியான உதாரணம் அவரது படைப்பிலக்கியங்கள்.
இடதுசாரி மனநிலை, கவிதை எழுதுதல், சிற்றிதழ் பங்களிப்பு என தமிழின் எந்தவொரு படைப்பாளியையும் போலவே எழுத்து வாழ்வைத் தொடங்கியவர் பெருமாள்முருகன். ஆனால் அவரை வித்தியாசப்படுத்தி மேலெழ வைத்தது அவர் மனித உறவுகள் மற்றும் மன உணர்வுகள் குறித்து புனைவுகளில் முன்வைக்கும் நுண்மையான அவதானிப்புகள்.
சாத்தியமான இலக்கிய வடிவங்களில் எல்லாம் அவர் பங்களிப்புகள் செய்திருந்தாலும் கூட என் பார்வையில் பெருமாள்முருகன் பிரதானமாக ஒரு நாவலாசிரியர்தான். 1991ல் வெளியான ‘ஏறுவெயில்’ தொடங்கி தொற்று ஊரடங்கு காலத்தில் எழுதிய ‘நெடுநேரம்’ வரை மொத்தம் பன்னிரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இப்போது பார்த்தால் இந்த வரிசைக்கும் அவரது வயதுக்கும் ஒரு விதத் தொடர்பு இருப்பது போல் தென்படுகிறது.
முதல் மூன்று நாவல்கள் (ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி) சிறுவர்கள் அல்லது பதின்மர்கள் பற்றியோ அல்லது அவர்கள் பார்வையிலோ அமைந்தவை. அடுத்த மூன்று நாவல்கள் (கங்கணம், மாதொருபாகன், பூக்குழி) காதல் அல்லது திருமணம் உள்ளிட்ட உறவுச் சிக்கல்கள் தொடர்புடையவை. அதன் பிந்தைய மூன்று நாவல்கள் (ஆளண்டாப் பட்சி, ஆலவாயன், அர்த்தநாரி) பிள்ளைப்பேறு, வாழ்க்கையில் உழைத்து முன்னேறுதல் சம்மந்தப்பட்டவை. சமீப மூன்று நாவல்கள் (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, கழிமுகம், நெடுநேரம்) ஒரு தந்தையின் அல்லது தாயின் ஸ்தானத்திலிருந்து அடுத்த தலைமுறையைக் கவனிப்பவை, கவலைப்படுபவை, முரண்படுபவை, இணங்குபவை.
அதாவது ஒரு சிறுவன் வளர்ந்து, காதலித்து, கல்யாணம் செய்து. பிள்ளைகள் பெற்று, உழைத்து முன்னேறி, தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது என்கிற ஒரு தலைமுறையின் நகர்ச்சியை இப்பன்னிரு நாவல்கள் வழியே உணர முடிகிறது.
இன்னொரு காலகட்ட அடிப்படையிலும் அவரது புனைவுகள் இரு வகையாகப் பிரிந்து கிடக்கின்றன. மாதொருபாகன் நாவலை ஒட்டி வலதுசாரி உதிரி அமைப்புகள் தந்த அழுத்தத்தால் ஜனவரி 2015ல் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று அவரே அறிவிக்கிறார். பிறகு 2016 மத்தியில் படைப்புச் சுதந்திரத்தை ஆதரித்து வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் மறுபடி எழுதத் தொடங்குகிறார். இந்த இருண்ட காலத்துக்கு முன் அவர் எழுதிய நாவல்கள் கொங்கு வட்டாரப் பகுதிகளில் நடப்பவை. அதன் பிறகு அவர் எழுதிய புனைவுகள் யாவும் கற்பனையான ஓர் அசுர லோகத்தில் நடப்பவை. அவர்களிடம் மனிதச் சாயலும், கொங்கு பாஷையும் பயின்று வந்தாலும் அவர்களின் நிலவியல் நமக்குப் பரிச்சயமான எதனோடும் தொடர்புடையவை அல்ல.
அவர் மறுபடி எழுத ஆரம்பித்ததை மீட்சி என்பதை விட எழுச்சி என்றே சொல்வேன். Blessing in disguise என்பார்கள் - அந்தத் துர்நிகழ்வுதான் சர்வதேச ஊடகக் கவனத்தை பெருமாள்முருகன் மீது திருப்பியது; அவருக்கு எதிராகக் கொதித்த அப்பிற்போக்கு அமைப்புகளுக்கு நன்றி நவில வேண்டிய அளவு அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதற்குரிய தகுதியைக் கொண்டவை அவரது எழுத்துக்கள் என்பதில் மறுப்பில்லை என்றாலும் இத்தனை துரித ஏற்றம் நிகழ அந்தச் சம்பவம் மிக முக்கியமான காரணி.
“தடைகளால் தழைத்தவர்” என அவரைப் பற்றிக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகிறது.
*
பெருமாள்முருகன் நாவல்களில் ஒட்டுமொத்தமாகக் கதையின் நகர்வு குறைவாகவே இருக்கும். மாறாக ஒரு சிக்கல் சூழலைச் சிறுசம்பவங்கள் வழி, உரையாடல்கள் வழி நிறுவி, அதன் பாதிப்புகள் அல்லது விளைவுகள் பற்றிய பல்வேறு சாத்தியங்களும் ஆராய்வதே அவரது பாணி. உதாரணமாக கங்கணம் நாவலில் திருமணம் ஆகாத ஓர் ஆண் எதிர்கொள்ளும் பலவித அவமதிப்புகள் சொல்லப்படுகின்றன; மாதொருபாகன் நாவலில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகள் அதைக் கையாளச் செய்யும் முயற்சிகள் பேசப்படுகின்றன. அப்படிச் சின்னஞ்சிறுபொட்டலங்களின் தோரணமாக இருப்பதே அவரது ஆக்கங்களை வாசிப்பின்பம் மிக்க சுவாரஸ்யப் பிரதிகளாக ஆக்குகின்றன.
பெருமாள்முருகன் ஆரம்ப காலம் முதல் தான் நம்பும் அரசியலைத் தன் படைப்புகளின் வழி பிரச்சார நெடியின்றி subtle-ஆகச் சொல்லி வருபவர். அதோடு சங்கடம் பாராமல் புனிதங்களை அடித்து நொறுக்கியவர். அவருக்கு வந்த இடர்பாடு கூட அதன் நேரடி விளைதான் - நம் சமூகத்துக்கு உண்மையை விட உண்மையைச் சொல்வது கசக்கும்.
அறிவித்துக் கொள்ளாவிட்டாலும் சுயசரிதைக்கூறுகள் இவரது புனைவுகளில் ஏராளம் உண்டு. தனது கிராமத்து அனுபவங்களையே கச்சாவாக்கி பெரும்பாலும் எழுதியவர். அதனாலேயே அவை வெறும் வட்டார வழக்கிலான கதைகளாக மட்டும் அமையாமல் அவ்வட்டாரத்தின் இயல்பைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளன. நீரும், நிலமும், பயிரும், கிணறும், ஆடும், மாடும் அவற்றில் மலர்ந்து மணக்கின்றன. உதாரணமாக பெண்ணின் அல்குலை வர்ணிக்கும் போதும் “பூக்கட்டிய சோளக்கதிர்” என்கிறார். அவ்வளவு தூரம் விவசாயம் அவர் எழுத்துக்களில் வேர் பாய்ச்சியிருக்கிறது.
கொங்கு வட்டாரத்தை நிறைய எழுதியவர் என்ற வகையில் பெருமாள்முருகன் ஆர். சண்முகசுந்தரத்தின் நேரடி நீட்சி. ஆனால் அப்படி எழுதிய விஷயங்களின் விரிவின் அடிப்படையில் அவர் எப்போதோ ஆர். சண்முகசுந்தரத்தைக் கடந்து விட்டார். அவர் அசுர லோகத்தை வைத்து எழுத ஆரம்பிக்கும் வரை கொங்கு பகுதி மக்களின் உழவு முறைகள், தினசரிச் சிக்கல்கள், தனித்துவப் பழக்கங்கள், பேச்சு வழக்குகள் எனப் பல விஷயங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வந்திருக்கின்றன. மண்ணுக்கும் மனிதர்கள் மனவோட்டத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை அவற்றின் வழியே உணர முடிகிறது.
பெருமாள்முருகன் தன் புனைவுகளில் மிக வலுவான பல பெண் பாத்திரங்களை எழுதி இருக்கிறார். நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகளில் கூட இத்தகு வல்லிய வார்ப்புகள் கணிசமாக இருக்கின்றன. குறிப்பாகக் கணவனை இழந்து குழந்தையை வளர்க்கும் தாய் என்ற பிம்பம் தொடர்ச்சியாக அவரது புனைவுகளில் வருகிறது. அதன் பூரணமாக தன் தாய் பற்றிய அனுபவப் பதிவு நூலாக ‘தோன்றாத் துணை’யை எழுதினார் எனலாம்.
போலவே தலித்கள் பற்றிய நேர்மையான சித்திரங்களையும் அவரது எழுத்துக்களில் காண முடிகிறது. அவர் தலித் அல்லாதவர் என்ற அடிப்படையில் மேலிருந்து கொண்டு தலித்கள் மீது அதீத அன்பு காட்டும் பாவனை அவரது படைப்புகளில் அறவே இல்லை. சொல்லப் போனால் ஆதிக்க சாதி போல் மிக இயல்பாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் ‘மாதொருபாகன்’ Trilogy-யின் நாயகியான பொன்னா எனக்குப் பிடித்தமான பாத்திரம். மாதொருபாகன், அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் என்ற மூன்று நாவல்களிலும் பேசப்படும் அவளது உளவியல் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் உரியது. ஒரு நாவலின் இறுதிப் பகுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நாயகன் இறந்தால் என்ன ஆகியிருக்கும், பிழைத்தால் என்ன ஆகியிருக்கும் எனத் தொடர்ச்சியாக இரண்டு நாவல்கள் பெருமாள்முருகன் எழுதியிருப்பதும் தமிழில் முன்னுதாரணம் இல்லாதது.
பெருமாள்முருகன் கட்டுரைகள் எழுதுகையில் ஓர் ஆய்வாளருக்குரிய ஆழ மொழியும் தரவுகளின் செறிவும் இயல்பாகவே வந்தமர்ந்து விடுகிறது. ஆனால் சற்றும் அலுப்பு தராமல் ஆர்வமாக வாசிக்க வைக்கும் சரளமும் அதோடு சேர்த்து வாய்த்திருக்கிறது.
பெருமாள்முருகனுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. தமிழில் பிழையின்றி எழுதும் மூன்று புனைவெழுத்தாளர்களுள் அவரும் ஒருவர் (யுவன் சந்திரசேகரும் பா.ராகவனும் மற்றவர்கள்). அது அவரது பேராசிரியப் பின்புலத்திலிருந்து வந்ததாக எடுத்தாலும் கல்விப் புலத்திலிருந்து எழுதும் எல்லோருமா அதைச் செய்கிறார்கள்!
*
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். வயதைக் கொண்டு அளந்தாலும் - இன்னும் மணி விழாவுக்கே காலமிருக்கிறது - பெருமாள்முருகனின் வீச்சு வியப்பானது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஜெர்மன், சீனம், இத்தாலி, போலிஷ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளுக்கும் அவர் படைப்புகள் போயிருக்கின்றன.
பேராசிரியர், கணவர், தந்தை என்ற லௌகீக வாழ்வின் பொறுப்புகளையும் ஏற்றவர். பெருமாள்முருகனை நான் தனிப்பட்டு அறிந்த அளவில் எழுத்துக்களில் வெளிப்படும் முற்போக்குக் கருத்துக்களைத் தன் சொந்த வாழ்விலும் அமல்படுத்துகிறார். அப்படி எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி குறைக்கும் வீம்பு சாதரணமானதல்ல. அதுவும் அவரைத் தமிழின் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்பேன்.
விளக்கு, கதா, கனடா இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருந்தாலும் வழக்கம் போல் தமிழின் சாஹித்ய அகாதமியால் பெருமாள்முருகன் இதுகாறும் கண்டு கொள்ளப்படவில்லை. (அவரது ‘மாதொருபாகன்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘One Part Woman’ ஆங்கில மொழியாக்கத்துக்கான சாஹித்ய அகாதமி விருதினைப் பெற்றது.)
முன்பே சொன்னது போல் தேசிய, உலகளாவிய அங்கீகாரங்கள் அவருக்குப் புதிதல்ல. 2023க்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் அவரது ‘பூக்குழி’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘Pyre’ இடம் பெற்றது. அதற்குப் போன முதல் தமிழ் நாவல் அதுவே. அந்நூல் தெற்காசிய இலக்கியங்களுக்கு வழங்கப்படும் DSC பரிசின் நெடும்பட்டியல் 2017ம் ஆண்டு இடம் பெற்றது. 2019ம் ஆண்டு அப்பரிசின் நெடும்பட்டியலில் அவரது ‘ஆலவாயன்’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘A Lonely Harvest’ இடம் பெற்றது. இப்போது அவர் பெற்றிருக்கும் JCB பரிசின் கதவுகளையும் அவர் தட்டுவது முதல் முறை அல்ல. 2018ல் அவரது பூனாச்சி நாவலின் மொழிபெயர்ப்பான ‘Poonaachi or the story of a Black Goat’ம் 2019ல் அவரது ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ நாவல்களின் மொழியாக்கங்களான ‘A Lonely Harvest’ & ‘Trial by Silence’ இரண்டும் அப்பரிசின் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன.
ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் அண்ணாந்து பார்த்த சில சர்வதேச அங்கீகாரங்களை இன்று பெருமாள்முருகன் கைப்பற்றி இருக்கிறார், அல்லது அருகே போயிருக்கிறார். இன்னும் அப்படியான பற்பல விருதுகள், பரிசுகள் அவரை வந்தடையும் என்பதில் சந்தேகமில்லை. அது இறுதியில் இலக்கிய நொபேல் பரிசு வரையிலும் பாயக்கூடும்.
*
பெருமாள்முருகன் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓர் அரிய நிகழ்வு. தரமும் வெற்றியும் ஒருங்கே சேர்வது அதிகம் இங்கே நிகழ்ந்தது கிடையாது. ஜெயகாந்தன் ஓர் உதாரணம். சமகாலத்தில் ஜெயமோகனையும் பெருமாள்முருகனையும் சொல்லலாம். இந்த வெற்றி தொடர வேண்டும். அது தமிழின் பிற படைப்புகள் வெளியில் செல்லவும் வழிவகுக்கும். எனவே பெருமாள்முருகனை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் தமிழ் வாசகர்களின் கடமை.
அவரால் மலம் மணக்கும் ‘பீக்கதைகள்’ எழுத முடிகிறது, வசை வார்த்தைகளை ஆய்ந்து ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்று சொல்ல முடிகிறது, சமூகத்தில் நிலவிய, நிலவும் பாலியல் மீறல்களைச் சமரசமின்றியும் வக்கிரமின்றியும் வடித்துக் காட்ட முடிகிறது, தான் சார்ந்த சாதியின் ஆணவச் செயல்களைத் தயக்கமின்றி விமர்சனம் செய்ய முடிகிறது. அவர் புனைவுகளில் மனித மனதின் இருள் சூழ்ந்த இடுக்குகளில் கூசாமல், தயங்காமல் ஒளிக் கதிர் பாய்ச்சுகிறார். பேசாப் பொருளை மட்டுமின்றி, பேசக்கூடாப் பொருளையும் பேசுபவர் என்ற வகையில் அவரது எழுத்துக்கள் அவரை ஒரு மாபெரும் துணிச்சல்காரர் என்றே நிறுவுகிறது. அவ்வகையில் ‘கோழையின் பாடல்கள்’ எழுதிய பெருமாள்முருகனின் படைப்புகளை வீரனின் பாடல்கள் என்றே வரையறுப்பேன்.
பெருமாள்முருகன் கருத்துரிமை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் இறுதி வரி: “Let the author be resurrected to what he is best at. Write.” அதையேதான் நானும் அடிக்கோடிடுகிறேன். இன்று அவர் வேகம் குறைத்திருக்கிறார். அளந்தே அடிகள் எடுத்து வைக்கிறார். அசுர லோக அரிதாரம் ஓர் உதாரணம். அவரது சாவுக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பிருந்த தீவிரம் மறுபடி அவர் எழுத்தில் திரும்ப வேண்டும் என்றே அவரிடம் வாசகனாகவும் மாணவனாகவும் கோருவேன். ஒப்பீட்டளவில் அதுவே எனக்கு விருப்பம். இது பழைய சொலவடைதான்; ஆனால் இப்போது சொல்வது பொருத்தமானது - கப்பல் கரையில் நங்கூரமிட்டிருப்பது பாதுகாப்பானதே, ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்பட்டதல்ல.
***
(22 நவம்பர் 2023 அன்றைய மெட்ராஸ் பேப்பர் மின்னிதழில் 'பெருமாள் முருகன்: புனிதங்களை நொறுக்கும் கலைஞன்' என்ற தலைப்பில் வெளியானது.)
December 5, 2023
பெருங்களிறு [குறுநாவல்] - 4
*
பாகம் 4: வால்
மனதால் தனித்து விடப்படும்போதுதான் கொடூரமான தனிமையை அனுபவிக்கிறோம்.
ஒரு நாள் இரவு தம்மா யோசித்தபடி படுத்திருந்தாள். இப்படி வீம்பில் எல்லோரையும் ஒதுக்கி எதை அடையப் போகிறேன்? சந்தா இத்தனை ஆண்டுகளும் தினம் புணர்ச்சி கண்டவள், காலைக் கடன் போல் கலவியும் தினசரிகளில் அங்கமாகி விட்ட ஒன்று. திடீரென ஒற்றை ராத்திரியில் இனி உடற்சுகம் கிடையாது என்று சொன்னால் என்ன செய்வாள்? அதுதான் தடுமாறி விட்டாள். மின்சாவும் இத்தனை நாளும் என் காலைக் கட்டிக் கொண்டு கிடந்தவன். எத்தனையோ முறை கெஞ்சி இருக்கிறான், நான்தான் கறாராகப் பிடிவாதமாக இருந்து விட்டேன். அப்படிப் பட்டினி போட்டதன் விளைவாக சந்தா அழைத்ததும் சலனப்பட்டு விட்டான். தனக்கு உரிமை இல்லாத பெண் கலவிக்கு அழைக்கும் போது பெரும்பாலும் ஆண் மறுப்பதே இல்லை. அது அவனுக்கு வாய்ப்பு, அது அவனுக்கான அங்கீகாரம். தவிர, அப்போது மறுத்தால் அது அவனது இயலாமை என்றும் தூற்றப்படும். அதைத் தவிர்க்க ஆண் இயல்பாகவே இணங்கிப் போகிறான்.
அது மனமோ உடலோ, எப்போதும் உறவைத் தேர்ந்தெடுக்கும், தீர்மானிக்கும் இடத்தில் பெண்ணே இருக்கிறாள். அந்த வகையில் பார்த்தால் மின்சாவும் ஆண் - பெண் உறவுச் சதுரங்கத்தின் பலிகடாதான். சந்தா, மின்சா இருவருமே சூழ்நிலையின் கைதிகள்தாம்.

அதே சமயம் சந்தா செய்தது நரதுவைப் பழி வாங்கத்தானோ என்று தோன்றியது. அதே அறையில் அவன் கண் முன்னே அந்தக் களியாட்டத்தை நிகழ்த்தி இருக்கிறாள், அதுவும் தன் தங்கையின் காதலன் என்று தெரிந்தும், தன்னை விட வயதில் மிகச் சிறியவன் என அறிந்தும். எவ்வளவு நெஞ்சழுத்தம் சந்தாவுக்கு! நீ சிறுபெண்ணை அடைய நினைத்தால், நான் மட்டும் சளைத்தவளா என்ற ஆங்காரத்தை அதன் வழி வெளிப்படுத்துகிறாளோ!
அது சந்தாவின் இயல்பல்ல. இத்தனை காலமும் சாந்தமானவளாக, விட்டுத் தருபவளாக, வலியை ஏற்றுக் கொள்பவளாகவே அவளைப் பார்த்திருக்கிறாள் தம்மா. அவளே இப்படி மாறி நிற்கிறாள் எனில் எவ்வளவு தூரம் அவள் மனம் ஆற்றாமையில் உழன்றிருக்கிறது!
தம்மாவுக்கு சந்தா, மின்சா இருவர் மீதும் இப்போது பரிதாபமே எஞ்சியது. பாவம்தான்.
நாளையே அவர்கள் இருவரிடமும் பேசிச் சமாதானமாகி விடலாம் எனத் தீர்மானித்தாள். குறிப்பாக மின்சாவின் கைகளை மறுபடி பற்றித் திரிய வேண்டும். ஆனால் இனி இங்கே இருக்க முடியாது, கூடாது. அது மூவருக்கும் நல்லது இல்லை. உடனே மின்சாவுக்கு ஒரு வேலை பார்த்துக் கொண்டு தலை நகருக்கோ வேறு எங்கோ நகர்ந்து விட வேண்டும்.
முக்கியமாக இன்னொன்று செய்ய வேண்டும். இனியும் மின்சாவைப் பட்டினி போடக் கூடாது. திருமணம் என்பது ஊருக்கு அறிவிக்கும் ஒரு வெற்றுச் சம்பிரதாயம் மட்டுமே. இருவரின் மனமும், உடலும் கலவிக்குத் தயாராகி விட்ட பிறகு எதற்கு அதை ஒத்திப் போட்டு இத்தகு சூழல்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும்? நாளை காலை சமாதானம் பேசி விட்டு நாளை இரவே... எங்கே செய்யலாம்? மின்சாவும் சந்தாவும் கலந்த இந்தக் குடிலில் வேண்டாம். தன்னை நரது இழிவு செய்த அந்தக் கொட்டடியும் வேண்டாம்.
பிறகு எங்கே செய்யலாம்? இப்பரந்த மேய்ச்சல் காடுகளில் எங்கேனும்? அந்த முகாமில் யானை குளிக்க இருக்கும் சிறிய குளத்தில் நீருக்குள் நீந்தியபடி? அல்லது அவர்களை ஒன்றிணைத்த ரத்த நந்தகாவின் முதுகில்? சிரித்துக் கொண்டாள். வெட்கப்பட்டாள்.
மனம் இனிப்பாக இருந்தது. அந்த இன்பத்தின் நுகர்வில் மிதந்தபடி தூங்கிப் போனாள்.
பின்னிரவில் அந்தச் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். அதே ஓசைகள். ஆவேசத்தின் பெருமூச்சுகள் அந்தக் குடிலில் நிரம்பின. தம்மா அழ ஆரம்பித்தாள்.
மறுபடியுமா! எனில் சந்தா, மின்சா இருவரும் இதைக் கை விடுவதாக இல்லை. தம்மா அருவருப்பாக உணர்ந்தாள். முக்கியமாக மின்சாவுக்கு எப்படி மனம் வந்தது? எனில் அவன் கேட்ட மன்னிப்புக்கு எல்லாம் என்ன பொருள்? செய்த தவறுக்கு மட்டுமானதா மன்னிப்பு, அதே தவறை மறுபடி செய்ய மாட்டேன் என்ற சத்தியத்தை உள்ளடக்கியது அல்லவா மனப்பூர்வமான மன்னிப்பு! முதல் முறை செய்ததை உணர்ச்சிவசத்தின் பிழை எனக் கடந்தாலும் இப்போது செய்து கொண்டிருப்பது அசலான நம்பிக்கை துரோகம்!
மறுநாள் விடிந்தது. இரவு முழுக்க அழுததில் தம்மாவின் கண்கள் சிவந்து மனம் இறுகிப் போயிருந்தது. அன்றொரு நாள் சந்தா இரவு முழுக்க அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்ததன் முழு வீரியமும் விளங்கியது. அவள் தொய்வடைந்திருந்தாள், ஆனால் தெளிந்திருந்தாள். வெறுமை அவள் மனதைச் சூழ்ந்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் அம்மாவுடனான சண்டையின் போது அவளது தந்தையார் சொன்னது நினைவு வந்தது -
“எல்லா ஆம்பளையும் வல்லுறவாளன்தான். எல்லாப் பொம்பளையும் விபச்சாரிதான். நம்ம நாகரிகம் அதை ஆழ்மனசுல போட்டு புதைச்சு வெச்சிருக்கு. தேவை இருந்தா, வாய்ப்பு அமைஞ்சா அது வெளிப்படும். அதுவரைக்கும் எல்லோரும் நல்லவங்கதான்.”
அது உண்மைதானோ எனத் தம்மாவுக்குத் தோன்றியது. இந்த யதார்த்தத்தோடு வாழப் பழகுவதே நிம்மதிக்கு வழி. நாமாக ஒரு கனவும் கற்பனையும் கட்டிக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தனக்கு இரண்டு வழிதான் இருக்கிறது எனப் புரிந்தது அவளுக்கு.
ஒன்று இந்தக் குரூர யதார்த்தத்தோடு சமரசம் செய்து கொண்டு இதற்குள் வாழ்வது. அல்லது இதிலிருந்து வெளியேறுவது, குறைந்தது தற்காலிகமாக. இரண்டாவதைத் தேர்ந்தாள் தம்மா. முந்தைய நாட்களைப் போலவே சந்தாவோடும், மின்சாவுடனும் அவள் பேசவில்லை. ஆனால் இம்முறை மனதில் எந்தக் குழப்பமோ பாரமோ இல்லை.
வெறுமையை நிரப்ப கொட்டடியில் ரத்த நந்தகாவிடம் சற்று நேரம் செலவழித்தாள். அதன் விலங்குகளை விடுவித்தாள். அது என்ன நினைத்ததோ, நாயின் குழைவோடு குனிந்து அவளருகே உட்கார்ந்து முதுகு காண்பித்தது. அவள் வியப்புடன் அதன் முதுகில் சிரமப்பட்டு எட்டி ஏறினாள். அப்படித் தனியாக அதன் முதுகில் ஏறுவது அதுவே முதல் முறை. எப்போதும் அது நின்று கொண்டிருக்கும், முதலில் மின்சா லாகவமாக அதன் முதுகில் ஏறுவான். பின் கை கொடுத்து தம்மாவையும் ஏற்றிக் கொள்வான். மனநிலை பொறுத்து அவனுக்கு முன்னாலோ பின்னாலோ உட்கார்ந்து கொள்வாள். இப்போது தானே ஏறியது புதிதாக இருந்தது. அத்தனிமை மகிழ்ச்சியாவும் கர்வமாகவும் இருந்தது.
யானையானது ஒரு நாயைப் போலவோ, பூனையைப் போலவோ, ஆடு, மாடு போலவோ இல்லை. அவை சாது அல்லது மனிதனின் பலத்தை உணர்ந்தவை அல்லது இணங்கிப் போவதன் லாபங்கள் உணர்ந்தவை. யானைக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை. ஆனாலும் அது பெரும்பாலும் மனிதனைத் தொடாமல் இருப்பது அதன் கருணைதான்.
ரத்த நந்தகா எழுந்து கொண்டு கொட்டடியை விட்டு வெளியே வந்தது. அதை எப்படித் திசைப்படுத்துவது எனத் தம்மாவுக்குப் புரியவில்லை. வெண்களிறே தன் இஷ்டத்துக்கு வழியைத் தேர்ந்தெடுத்து நடந்தது. தம்மாவின் மனதைப் படித்தது போல்தான் இருந்தது.
பின் வந்த நாட்களில் தம்மா தவறாமல் தினமும் ரத்த நந்தகா மீதேறி உலாப் போனாள். அதன் பதற்றங்கள் முற்றிலுமாகவே ஒழிந்தது போலிருந்தது. மின்சா அதை வியப்பாகப் பார்த்தான். அவன் அதனை நெருங்கவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டான். பற்பல நுட்பங்கள் முயன்று, மார்க்கங்கள் கண்டடைந்தே அதைச் சாதிக்க முடிந்தது. ஆனால் இச்சிறுபெண் ஓரிரு நாளில் அதைச் செய்திருக்கிறாள். அவனுக்கு அது புரியவில்லை.
இப்போதும் சவாரி முடிந்து கீழே இறங்கும் போது ரத்த நந்தகாவை மண்டியிடச் செய்து அதன் தந்தங்களைப் பற்றியபடி மத்தகத்தில் முத்தமிடுவதைத் தம்மா நிறுத்தவில்லை.
உள்ளூரப் பரவியோடும் சிலிர்ப்பைத் தாண்டி ஓர் எதிர்வினையும் புரியாமல் மௌனம் காக்கும் ‘கல்லுளி மங்கன்’, ஒரு நாள் திடீரென முத்தம் தந்த பின் தம்மாவின் தலையில் தன் தும்பிக்கை கொண்டு தொட்டது. அவள் மீது தன் எடையின் பலு இறங்கி விடலாகா என்ற கவனத்துடன் செய்த, வாஞ்சை நிரம்பிய, மிக மென்மையான தொடுகை. தம்மா ஒரு மாதிரி அதை எதிர்பார்த்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். என் அன்பின் வெளிப்பாட்டுக்குப் பதிலே சொல்ல மாட்டாயா, அவ்வளவு அகங்காரம், அலட்சியம் என்று மனம் குமைந்திருக்கிறாள். அன்பு தருமிடங்கள் சாதாரணமாகி விடுகின்றன. அது வராத இடத்தில்தான் மனம் விடாமல் தொங்கி அதை எதிர்பார்த்து ஏங்குகிறது.
அன்று மகிழ்ச்சியில் அகம் நிறைந்தாள் தம்மா. மின்சா விளங்காத அக்காட்சியை வியப்புடன் பார்த்தான். அவனுக்கு அக்களிறு மீது மெல்லிய பொறாமை எழுந்தது.
சந்தா அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தம்மாவுக்கு மறுபடி ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறோமோ என்ற ஜாக்கிரதை உணர்வு எட்டிப் பார்த்தது. ஆனால் இம்முறை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத உறவு. ஐந்தறிவு ஜீவன் மீதான பிரியம். எனவே எவ்வகையிலும் ஏமாற்றத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை என்பது புரிந்து நிம்மதி எழுந்தது. யானைக்கும் அவளுக்கும் இடையே ஒரு சூட்சம பாஷை படிந்தது.
சந்தாவும் மின்சாவும் கணவன் - மனைவி போலவே வாழத் தொடங்கி விட்டார்கள். அதே சமயம் அவள் நரதுவைக் கவனிப்பதில் குறை வைக்கவில்லை. ஒரே வித்தியாசம் அவன் படுத்திருந்த மூலையை மறைப்பது போல் ஒரு திரைத்தடுப்பு போட்டுக் கொண்டார்கள்.
இப்போதெல்லாம் தம்மா இரவில் இடையில் ஓசை கேட்டுக் கண் விழித்தால் இயல்பாக மறுபடி தூக்கத்துக்குள் நழுவுவதைப் பழக்கமாக்கிக் கொண்டாள். வசந்த ருது வந்தது.
*
சிறப்பு முகாமின் சூழலே மலர்களும் கனிகளுமாக பல வண்ண மயமாகக் குலுங்கின.
தம்மாவுக்குத் திடீரெனத் தோன்றியது. ரத்த நந்தகா ஏன் இப்படி இங்கே வந்து தன் இணையைப் பிரிந்து வாழ வேண்டும்? யானை என்பது பெருமா! மனிதர்களின் அற்ப யுத்த வெறிக்காக ஏன் வனத்தின் அரசன் போன்ற இந்த பிரம்மாண்ட உயிர் துயருற வேண்டும்? இணையைப் பிரிந்த சந்தா என்ன செய்தாள்? தன் சொந்தச் சகோதரியின் வாழ்வையே குலைத்து நாசம் செய்து காமம் தேடிக் கொண்டாள். அப்படி இருக்க, இந்த யானை இணையை விலகி வந்த துக்கத்தில் வன்முறையில் ஈடுபடுவது இயல்புதானே!
என்னதான் இப்போது அது மெல்லச் சரியாகி இயல்புக்குத் திரும்பியது போல் பட்டாலும் உள்ளே எங்கோ அடியாழத்தில் அப்பிரிவின் ரணம் இன்னும் ஆறாமல் இருக்கத்தானே செய்யும்! அதே போல் அங்கே சியாமிலும் இதன் இணை அப்படித்தானே துன்பத்தில் திளைத்திருக்கும்! எதற்கு இதெல்லாம்? தான்தான் இந்த மனிதர்களின் கீழ்மையால் இப்படித் தனித்திருக்கிறேன். யானை ஏன் அதே வாதையை அனுபவிக்க வேண்டும்?
தீர்மானித்தாள். ரத்த நந்தகாவை அதன் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி விடுவது.
மனிதர்களாகிய தாங்கள் இருவரும் அந்த முகாமை விட்டுத் தலைநகரை நோக்கி ஓடும் திட்டமே தோல்வியுற்று அங்கே தேங்கியிருக்கிறோம். இதில் இந்த வெள்ளை யானையை எல்லாம் அப்படி அனுப்பி வைத்து விட முடியுமா என ஆரம்பத்தில் ஆயாசமாக இருந்தது.
ஆனால் தளராமல் எல்லா விஷயங்களையும் கவனித்தாள். தகவல் சேகரித்தாள். திட்டம் போட்டாள். எங்கே எது தவறிப் போகும் என்று ஊகம் செய்தாள். அவற்றை எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளை யோசித்தாள். துண்டு துண்டாக ஒத்திகை பார்த்தாள். எல்லாம் திருப்திகரமாக இருந்தது. கொஞ்சம் அதிர்ஷடம் மட்டும் துணைக்கு இருந்தால் அனுப்பி வைத்து விடலாம் என்கிற நம்பிக்கை வந்தது. அது எப்போதும் தனக்கு இருந்ததில்லை என்றாலும் இம்முறை இது தனக்கான முயற்சி அல்ல. ரத்த நந்தகாவின் ஜாதகம் சுத்தம் என்றால் அதற்குத் தன் இணையைத் திரும்பப் பார்க்கும் கணம் வாய்க்கும். பார்ப்போம்.
அன்று முற்பகலில் சூரியனின் நிலையை வைத்து நேரம் கணித்து ரத்த நந்தகா முதுகில் ஏறி உலாப் போனாள். அது காவலாளி சிறுநீர் கழிக்கச் செல்லும் நேரம். சரியாக ஆளற்ற சமயத்தில் வேலியைக் கடந்தாள். கவனமாகத் திசை தேர்ந்தெடுத்தாள். யானையைத் தான் விரும்பிய திசையில் வழி நடத்தும் பாங்கு இப்போது கை வந்திருந்தது. அது சியாம் எல்லைப் புறத்தில் இருக்கும் வனப்பகுதி நோக்கிய பாட்டை. அன்றைய பகலில் பாதி பயணித்து அந்தக் காட்டினை அடைந்தாள். அங்கே அவள் கீழே இறங்கிக் கொண்டாள்.
பர்மிய அரசின் ராஜ யானை என்பதற்கு அடையாளமாக ரத்த நந்தகாவின் கழுத்தில் தொடங்க விடப்பட்டிருந்த அணிகலன்களை நீக்கினாள். அந்த ஆபரணங்கள் யானை பாதை தவறினாலோ, தப்பிச் சென்றாலோ பிடிக்க. மங்கையோ மிருகமோ நகைகள் அப்படித்தான். அலங்காரப்படுத்தி அடிமைப்படுத்துவதுதான் அவற்றின் உள்நோக்கு! சப்தமெழுப்பும் மணி கொண்ட கொலுசை வயதுப் பெண்ணின் காலில் அணிவிப்பது அழகு பார்க்க மட்டுமா? அவளது நடமாட்டைத்தை எளிதில் கண்காணிக்கவும்தானே!
தம்மா ரத்த நந்தகாவை மண்டியிடப் பணித்தாள். கால்கள் மடக்கி அது அமர்ந்தது. அதன் முகத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். ஓர் இறுதி முத்தத்தின் பரிதவிப்பு அதில் இருந்தது. அவள் கண்களின் ஈரம் அந்த மத்தகப் பரப்பில் படர்ந்தது. சுதாரித்தாள்.
இப்போது மறுபடி அதை எழச் சொல்லி வனத்துள் போகச் சொல்லி சைகை காட்டினாள். அதற்குள் புகுந்து மேலும் அதே திசையில் சென்றால் சியாம் தேச எல்லை வந்து விடும். அதுவும் பெருங்காடுதான். அந்த வனமும் கடந்து வெளியேறினால் ஏதாவது சிறிய ஊர் வரும். அங்கிருந்து ரத்த நந்தகா இணையோடு போய் இணைந்து கொள்ள வேண்டும். சியாம் நாட்டு மக்களாவது யானைக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை நம்புபவர்கள் என்றால் அங்கே யாராவது உதவுவார்கள். அது தன் குடும்பத்தைக் கண்டடைய முடியும்.
ஆனால் ரத்த நந்தகா அவளை விடுத்துச் செல்ல மறுத்து முரண்டு பிடித்தது. வெய்யில் தாழத் தொடங்கியிருந்தது. தம்மாவுக்குப் பதற்றம் ஆனது. அவள் சைகையால் அதற்குப் புரிய வைக்க முனைந்தாள். தான் திரும்பிப் போவேன், தன்னோடு வரக்கூடாது எனக் கண்டிப்பாகச் சொன்னாள். வந்த வழியே திரும்பி நடந்தாள். யானையைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள். அது அவள் விட்டுச் சென்ற இடத்திலேயே அசையாமல் நின்று அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அவளுக்குக் கவலையாக இருந்தது.
சரியாகப் போய்ச் சேருமா? அல்லது வேறு புதிய ஆபத்துகளில் மாட்டிக் கொள்ளுமா?
இறுதியாக இருவரும் பரஸ்பரம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர் என்றான போது ரத்த நந்தகா அந்தக் காட்டுக்குள் நுழைந்தது. தம்மா இங்கிருந்தே கையை அசைத்தாள். அவளது கண்கள் நீரால் நிரம்பின. இனி அவனைப் பார்க்க முடியாது. வெள்ளை யானை என்பது ஒரு கனவாக மட்டுமே எஞ்சும். முகாம் இருந்த திசை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். வழியெங்கும் அவளது கண்கள் உப்பு நீரைச் சுரந்து கொண்டே வந்தன.
முகாமில் தம்மா அருகில் இல்லாத தனிமையில் முதன் முறையாகப் பகலில் ஒரு நீண்ட நெடிய சம்போகத்தை நிகழ்த்தினார்கள் மின்சாவும் சந்தாவும். பின் நல்ல ஆட்டுக்குட்டி ஒன்றை அடித்துக் குழம்பு வைத்து இருவரும் உண்டார்கள். சந்தா நரதுவுக்கு உணவூட்டி விட்டு வந்து ஏப்பம் விட்டபடி மறுபடி இன்னொரு சுற்று கலவி. அது வரையில் தம்மாவும் ரத்த நந்தகாவும் திரும்பவில்லை. அதைக் கவனித்து ஏதோ சிக்கல் என்று உறைக்கவே அந்தி ஆகி விட்டது. பதற்றத்துடன் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் தேட இறங்கினர்.
இரவு கவிய ஆரம்பித்த போது தம்மா மட்டும் தனியே முகாம் வந்து சேர்ந்தாள். மின்சா அவளைப் பிடித்துக் கோபத்துடன் ஏன் இத்தனை தாமதம், ரத்த நந்தகா எங்கே என்று விசாரித்தான். அவள் வழக்கம் போல அவனுக்குப் பதில் சொல்லாமல் விலகி நடந்தாள்.
மின்சா சினம் தலைக்கேற அவளைக் கன்னத்தில் அறைந்து தள்ளினான். அவள் புற்கள் நிறைந்த அந்த நிலத்தில் விழுந்து அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள்.
சந்தா தூரத்திலிருந்து அவர்களை நோக்கி நடந்து வந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது.
மின்சாவும் சந்தாவும் மூன்று முழு நாள் தேடினார்கள். வெளியே வாய் திறக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ரகசியமாகச் சில உறவினர்களையும் தேடுவதற்கு உதவியாக இணைத்துக் கொண்டார்கள். எவ்வளவு அடித்துக் கேட்டும் தம்மா வாயைத் திறக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அவளை அடிக்கக்கூடாது எனச் சந்தா அதட்டினாள்.
மின்சா அமைதியானான். எத்திசையில் தேடுவது என்று தெரியாமல் எப்படித் தேடுவது?
யாரும் பார்தார்களா என வெளிப்படையாகவும் விசாரிக்க முடியாது. ஆனால் யாருமே கவனிக்காத அளவு, அலட்சியப்படுத்திக் கடக்குமளவு வெள்ளை ஆனை அப்படி ஒன்றும் தினம் கண்களில் படும் விஷயமும் கிடையாது. மின்சாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
முகாமை விட்டு வெளியேறியதும் வேண்டுமென்றே முதலில் தவறான திசை நோக்கிக் கொஞ்சம் போய் விட்டுத்தான் சியாம் எல்லைப் புறத் திசைக்கு மாறி இருந்தாள் தம்மா. எனவே முகாமுக்கு வெளியே கடைசியாக அவளை யானையுடன் பார்த்தோர் சொன்ன தகவலை வைத்துக் கொண்டு தேடியோர் தவறான திசையில் தேடத்தான் போனார்கள்.
இன்னொன்றும் செய்திருந்தாள் தம்மா. ஓரிடத்தில் நிறுத்தி கையோடு எடுத்து வந்த அடுப்புக் கரிச் சேகரிப்பை முடிந்த அளவு ரத்த நந்தகாவின் உடலெங்கும் பூசினாள். இப்போது வெள்ளை யானை அடையாளம் இழந்து வழமையான யானைகளின் அடர் சாம்பல் நிறத்தை எட்டியது. இனி பர்மாவிலோ சியாமிலோ பார்ப்போர் கண்களை அது உறுத்தாது. வெண்களிறுகளுக்கு நேரும் தொந்தரவுகள் சாம்பல் யானைகட்கு இல்லை!
ஒரு கட்டத்தில் மறைப்பது குற்றமாகிடும் என்பதால் அரசுக்கு அறிவித்தான் மின்சா.
*
யாழ தேவி கொதிப்பு உயர்ந்து நின்றாள். அதை மன்னித்துக் கடக்க விரும்பவில்லை. வென்று வந்த வெள்ளை யானையைக் கோட்டை விடுவது போரில் தோற்றதற்குச் சமம் என்றே எண்ணினாள். அரசன் பயின்னவுங்கை அமைதிப்படுத்தி விட்டு தான் மட்டும் ஐம்பது படை வீரர்களுடன் கிளம்பி ரத்த நந்தகாவின் சிறப்பு முகாமுக்கு வந்திருந்தாள்.
ஆரம்ப விசாரணையில் எதுவுமே தெரியாது என எல்லோரும் சாதிக்க, சற்று அழுத்தி விசாரித்த போது மின்சாவும் சந்தாவும் நிஜம் ஒப்புக் கொண்டு தம்மாவைக் காட்டிக் கொடுத்தனர். அவளே அதை விடுவித்து எங்கோ அனுப்பி விட்டாள் என்று சொன்னான் மின்சா. அவள் உடலில் சாத்தானின் ஆவி புகுந்து கொண்டது என்று சொல்லி அழுதாள் சந்தா. தம்மா ஏதும் பேசாமல் நின்றாள். அவளது அந்த மௌனம் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கருதப்பட்டது. யாழ தேவி அவளுக்கு மரண தண்டனை விதித்தாள்.
அலட்சியமாக இருந்து யானையைத் தப்பிக்க விட்டுக் கடமை தவறிய குற்றத்துக்காக மின்சாவுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக சந்தாவுக்கும் கண்களைப் பிடுங்க உத்தரவிட்டாள் யாழ தேவி. பரிவாரங்களுடன் அங்கு வந்திருந்த வைத்தியரைக் கொண்டு எல்லோருக்கும் உடற்சோதனை நடத்தப்பட்டது. எவரும் எதிர்பாரா வண்ணம் சந்தா கர்ப்பம் எனக் கண்டறிந்தார்கள். ஒரு கணம் கூட யோசிக்காமல் தம்மா ஓடிப் போய் அவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். இருவரும் அழுதனர்.
அப்போதும் மிகக் கவனமாக ஒரு வார்த்தை கூட தம்மா சந்தாவிடம் பேசவில்லை.
கர்ப்பவதிக்கு கடும் தண்டனை தருவது பர்மிய மரபல்ல. எனவே யாழ தேவி அவளது தண்டனையைச் சில்லாண்டு சிறை தண்டனை ஆக்கினாள். காவலர்கள் அவளைச் சிறைக்கு அழைத்துப் போனார்கள். மின்சாவுக்கு மட்டும் கண்கள் பிடுங்கப்பட்டன.
கண்கள் இரண்டும் பிடுங்கப்படும் முன் கடைசியாகத் தம்மாவைத்தான் பார்த்தான். அவன் கண்ட சந்தாவின் நிர்வாணத்தைக் காட்டிலும் மேலான பரிசுத்தமான தம்மா!
மின்சாவின் அலறலும் சந்தாவின் அழுகையும் குடில் வரை கேட்டது. நரது சிரித்தபடியே நகர முயற்சி செய்தான். வலது காலின் சுண்டு விரலில் மெல்லிய அசைவு தெரிந்தது.
தம்மா குளித்துத் தயாராகி நல்ல ஆடை அணிந்து வந்து நின்றாள். பின்னால் கை கட்டப் பட, மண்டியிட்டுச் சிரஞ்சீவி எந்திரத்தில் தலையை வைத்தாள். ரத்த நந்தகா சியாமில் இணையுடன் சேர்ந்தது என்ற தகவல் வந்து சேர்ந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. அது மட்டுமே அக்கணம் அவளுக்குக் கவலையளித்தது.
அன்று ரத்த நந்தகா எல்லைப்புறக் காட்டுக்குள் நுழைய மறுத்து நின்ற காட்சி அப்போது அவளுக்கு நினைவு வந்தது. ஏன் அப்படி நின்றது? அதற்குத் தன் மீது இனம் புரியாத ஒரு பிரியம் உண்டு. தன் மகளான குட்டி யானையை நினைவூட்டுவதாகக் கூடத் தன்னைக் கண்டிருக்கலாம். எனில் அந்தத் தருணம் எதை நினைவூட்டி இருக்கும் அதற்கு? முன்பு சியாமில் அதன் குடும்பம், குட்டியிடமிருந்து பிரித்து பர்மா அழைத்து வந்த போது உற்ற அதே துயரை மறுபடி அடைந்திருக்கும் அல்லவா! அதையா அதற்கு நான் கொடுத்தேன்!
எந்திரத்தை முடுக்கினார்கள். அது கச்சிதமாக ஒரே கணத்தில் தம்மாவின் தலையைத் துண்டாக்கியது. வலியே இல்லாத மரணம். அதாவது வலி பற்றிய தகவல் மனதை எட்டும் முன்பே சம்பவித்த சாவு. அல்லது அதிகபட்சம் ஒற்றைக் கண உச்ச வலியாக இருக்கும்.
யாழ தேவி திருப்தியாக அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள். அப்போது யானையின் பிளிறல் தொலைவில் கேட்டது. யாழ தேவியும் வீரர்களும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள்.
ரத்த நந்தகா வேகமாக முகாமுள் நுழைந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அங்கே வந்து ரத்தம் பீறிடத் துவண்டு கிடக்கும் தம்மாவின் உடலையும் நிலைகுத்திய விழிகளோடு உறைந்து விட்ட தலையையும் கண்டது. ஆவேசமாக ஓடி வந்து உடலுக்கும் தலைக்கும் இடையே மாறி மாறி நடந்தது. அந்த மரணம் உண்டாக்கிய இடைவெளியை அளக்க முனைந்தது போல் தோன்றியது. யாழ தேவி அதை வினோதமாகப் பார்த்தாள்.
ரத்த நந்தகா சுற்றிப் பார்த்தது. ஒரு சூழலில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இருப்பதில்லை. அவர்களின் உடல் மொழியும் மற்றவர்களின் உடல் மொழியும் அதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. ரத்த நந்தகா அதற்கு மேல் யோசிக்கவில்லை. யாரும் எதிர்பாரா வண்ணம் யாழ தேவி இருந்த திசையில் வேகமாக நடக்க ஆரம்பிக்க, நடுவே நின்றிருந்த வீரர்கள் அதன் ஆகிருதியில் அஞ்சிச் சிதறினார்கள். என்ன செய்வது என்ற குழப்பம் நிலவியது.
அங்கிருந்த நூறு கண்களும் இமைக்கும் நேரத்தில் ரத்த நந்தகா என்ற வெண் வராகம் யாழ தேவியைத் தன் தும்பிக்கையால் சுற்றித் தூக்கித் தரையில் அறைந்தது. நிலத்தில் மோதித் தலை சிதறி குருதி தெறித்தது. அதுவும் தம்மாவுடையதைப் போலவே கண நேர ரணமாகவே இருந்திருக்க வேண்டும். உயிர் துறந்த யாழ தேவியில் உடல் துவண்டது. ரௌத்ரம் அடங்காமல் மரித்த உடலைக் கால்களால் பல முறை மிதித்துச் சிதைத்தது.
சூழ்ந்திருந்த வீரர்கள் அனைவரும் உறைந்து நின்றனர். தேசத்தின் மஹாராணியை வெள்ளை யானை கொன்று விட்டது. இப்போது அவர்களுக்குள் சுதாரித்துக் கொண்டு குரல்கள் மூலம் ஒன்றிணைத்து நாற்புறமும் கயிறு வீசி யானையைப் பிடித்தார்கள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. மூத்த வீரன் ஒருவன் புரவியேறி மன்னனிடம் செய்தி சொல்ல ஓடினான். பயின்னவுங்கிடம் தயங்கித் தலை குனிந்து செய்தி சொன்னார்கள். அவன் உன்னிப்பாகக் கேட்டான். ஆரம்பித்ததும் யாழ தேவி இறந்த செய்தி கேட்ட போது துடித்த அவன் உதடுகள், மற்ற விவகாரங்கள் கேட்ட பிறகு அமைதி அடைந்தது. தீவிரமாக யோசித்தான். நிதானமாகச் சொன்னான் -
“யாழ தேவியை அந்த யானை முகாமிலேயே புதைத்து விடச் சொல்லுங்கள். சமாதி ஏதும் எழுப்ப வேண்டியதில்லை. அந்த முகாமை மூடி விடுங்கள். அங்கே இனி யாரும் செல்ல வேண்டியது இல்லை. அவளை பர்மாவின் சரித்திரம் மறந்து விடட்டும். தம்மா என்ற அந்தப் பெண்ணின் உடலை இங்கே தலைநகருக்கு எடுத்து வரச் சொல்லுங்கள். அரசு மரியாதையுடன் அவள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். வெண்களிறால் ஆசீர்வதிக்கப்பட்டவள் அவள். இந்தத் தேசத்தின் சொத்து. நமது குலசாமி. அவளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவளைக் கொன்றது தவறான தீர்ப்பு. என் நாடு நீதி வழுவி விட்டது. அதற்குரிய சிறிய பரிகாரமாவது செய்ய வேண்டும். அவளது நினைவகம் எழுப்பபடட்டும். நான் தினம் போய் அங்கே அவளிடம் மன்னிப்பு கேட்பேன். என் ஆயுள் தீரும் வரை. இதுவே தவுங்கூ ராஜ்யப் பேரரசன் பயின்னவுங்கின் ஆணை.”
மூத்த வீரன் அதிர்ந்து நின்றான். அதை கிரகித்துக் கொண்டு மேற்கொண்டு பேசினான்.
“அந்த வெண் யானை இந்நாட்டின் அரசியைக் கொலை செய்திருக்கிறது. அது தேசத் துரோகம். எனவே அதனைக் கைது செய்து கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் அதன் ஆக்ரோஷம் அடங்கவில்லை. வெண்களிறு மீது வன்முறை பிரயோகிப்பது பர்மிய நிலத்தின் அறம் அல்ல. எனவே அஹிம்சை முறையில் அதைக் கையாளக் கூடுதல் காவல் தேவை. எனவே மேலும் ஐம்பது வீரர்களையேனும் அனுப்பக் கோருகிறேன்.”
“அவசியமில்லை. அதை விடுவித்து விடு. அது எங்கே விரும்புகிறதோ செல்லட்டும்.”
“…”
“யாழ தேவி தன் வினைக்கான எதிர்வினையைத்தான் பெற்றாள். கர்மபலன். நாட்டின் பிரஜைகளைத் துன்புறுத்தி ஆட்சி நடத்தக்கூடாது என்ற தெய்வ நினைவூட்டலாகவே இதைப் பார்க்கிறேன். ரத்த நந்தகா என்ற பெருங்களிறு அந்த வகையில் இறை தூதன். அதை அடைத்து வைப்பது மரபல்ல. கணமும் தாமதிக்காமல் அதை விடுவியுங்கள்.”
அந்த வீரன் கிளம்பியதும் முகாம் இருந்த திசை நோக்கி பயின்னவுங் மண்டியிட்டான். அவனது உதடுகள் முணுமுணுத்தன: “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி.”
*
முகாமுக்குச் செய்தி வந்த போது வீரர்கள் அதைப் புரிந்து கொள்ளச் சமயமெடுத்தது. இரண்டு முறை செய்தி கொண்டு வந்தவனைக் கேட்டு உறுதி செய்து கொண்டார்கள்.
முதலில் ரத்த நந்தகாவை விடுவித்தார்கள். அது தம்மாவின் உடலருகே போய் அமர்ந்து கொண்டது. தன் தும்பிக்கையால் தம்மாவின் துண்டான தலையைத் தொட்டது. அதன் இரு கண்களிலும் நீர் வழிந்தது. வீரர்கள் ஓர் அதிசயம் போல் வேடிக்கை பார்த்தார்கள்.
காத்திருந்து பார்த்து விட்டு சில வீரர்கள் தைரியம் பெற்று தம்மாவின் உடலருகே வந்து யானைத் தந்தத்தால் செய்த பேழையில் பட்டாடை விரிப்பைப் போட்டு அதில் அவளது தலையையும் உடலையும் வைத்து மூடினார்கள். அதைச் சுமந்தெடுத்துச் சென்றார்கள்.
சுமந்த வீரர்களில் ஒருவன் கேட்டான் - “அந்த யானை துக்கத்தில் அழுகிறதா? குற்ற உணர்விலா?”. இன்னொருவன் துடுக்காகச் சொன்னான் - “எனக்கு யானை பாஷை தெரியாது, இல்லையென்றால் அதனிடமே கேட்டிருப்பேன்.”. சிலர் சிரித்தனர். பிறகு அதன் அசந்தர்ப்பம் புரிந்து எல்லோரும் சட்டென மௌனமாகினர். திடீரென ஒருவன் சொன்னான் - “இதற்கான பதில் அந்தப் பெண் தம்மாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.”
ஏழெட்டு வீரர்கள் சேர்ந்து அவசரமாக யாழ தேவியின் சிதிலமுற்ற உடலை ச் சேகரித்து அங்கேயே புதைத்தார்கள். மின்சாவையும் நரதுவையும் குடிலைக் காலி செய்து கிளம்ப உத்தரவு கொடுத்தார்கள். மின்சா நரதுவைச் சுமந்து கொண்டு தடவித் தடவி நடந்தான். மூலிகை வைத்துத் துணியால் கட்டப்பட்ட அவன் கண்களில் கண்ணீர் வழிந்து எரிந்தது.
வீரர்களும் கிளம்பினர். இப்போது மொத்த முகாமிலும் யானை மட்டுமே மீதமிருந்தது.
சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்த ரத்த நந்தகா மெல்ல எழுந்தது. சுற்றிப் பார்த்தது. எல்லாத் திசைகளிலும் அதற்குத் தம்மா தெரிந்தாள். ஒரு முறை பலவீனமான குரலில் பிளிறியது. அது ஆள் அரவமற்ற அந்தப் பிராந்தியத்தின் சகல திசைகளிலும் மோதி எதிரொலித்தது. பின் எல்லோரும் சென்ற திசைக்கு எதிர்திசையில் நகர ஆரம்பித்தது. தம்மா அழைத்துச் சென்ற அதே வழி. நினைவை மீட்டிக் கொண்டே அசைந்து நடந்தது.
ரத்த நந்தகா சருமத்தின் வெண்ணிறம் மெல்ல சாம்பல் நிறத்துக்கு மாற ஆரம்பித்தது.
***
(முற்றும்)
December 4, 2023
பெருங்களிறு [குறுநாவல்] - 3
*
பாகம் 3: கால்
அமாவாசை இரவு நரதுவுக்கு நன்கு மதுவை ஊற்றிக் கொடுத்தாள் சந்தா. அன்று மிக உற்சாகமாகக் குடித்தான். வழக்கத்தை விட இரண்டு மடங்கு. வயிறு நிரம்பி விட்டது என்று சொல்லி உணவை மறுத்து விட்டுக் கலவிக்குத் தயாரானான். இடையிலேயே போதையில் மயங்கிச் சரிந்தான். அவனைத் தள்ளி விட்டு ஆடைகளைச் சரி செய்து அடுத்து அறைக்குப் போனாள் வந்தாள் சந்தா. தம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். நீண்ட பயணம் இருக்கும் என்பதால் அவளைச் சற்று தூங்கச் சொல்லி இருந்தாள்.
நள்ளிரவு கடந்திருந்தது. அவளை உலுக்கி எழுப்பினாள். தம்மா ஆழ்நித்திரைக்குள் செல்லாமல் புரண்டு கொண்டிருந்ததால் உடனே எழுந்து கொண்டாள். ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த மூட்டையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டாள்.
நிலவின் துணையற்ற அவ்விரவின் கைப் பற்றிப் பிரயாணத்துக்கு ஆயத்தமானாள்.

சந்தா கைகளில் விளக்கை எடுத்துக் கொண்டாள். குடிலில் இருந்து சப்தம் காட்டாமல் இருவரும் வெளியே வந்தார்கள். ரத்த நந்தகாவின் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே மின்சாவும் மூட்டையுடன் தயாராக இருந்தான். அவனுக்கு அந்தப் பயணமே ஒரு சாகசம் போல் உற்சாகமாக இருந்தது. தம்மாவிடம் தன் கம்பீரம் நிரூபிக்க ஒரு வாய்ப்பு. அவள் தன் பொறுமையைப் பயம் எனக் கருதிக் கொண்டிருக்கிறாள். முதலில் அதை உடைக்க வேண்டும். தவிர, அவளைத் தொடவும் வாய்ப்பு உண்டு. இனி யார் கேட்பது? இப்பெண் எனக்கு உரிமையானவள். எங்கள் சுதந்திரம். தலைநகர் போவதற்குள் நிதானமாக ஒரு சம்போகம் கூட நிகழ்த்தலாம். உற்சாகச் சிரிப்புடன் அவர்களைப் பார்த்தான் மின்சா.
ரத்த நந்தகா படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. தம்மா அதன் அருகே போய் அதைத் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். ஆலமரம் ஒன்றினை ஆரத் தழுவ முயற்சி செய்வது போலிருந்தது அவள் செய்கை. அதை விட்டுப் பிரியப் போகிறோம் என்பது அவளுக்கு மிகுந்த மனக்கிலேசம் அளித்தது. அது வரை அவள் அது குறித்து யோசிக்கவே இல்லை.
மிகச் சில மாதங்களின் பழக்கம்தான். ஆனால் தம்மாவை ஒரு மஹாராணியைப் போல் உணரச் செய்தது ரத்த நந்தகாதான். அவ்வளவு ஆண்டுகளாகத் தாயைப் போல் பார்த்த சந்தாவை நீங்குவதைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தம்மாவின் கண்ணீர்த் துளிகள் யானையின் தடித்த தோலில் விழுந்து மயிர்களுக்குள், பிளவுகளுக்குள் ஓடியது.
“அதிக அவகாசமில்லை, தம்மா! உடனே கிளம்புவோம்.” - அவசரப்படுத்தினான் மின்சா.
அப்போது கொட்டடி வாயிலில் அரவம் கேட்டது. நரது நின்றிருந்தான். அந்த நள்ளிரவில் தம்மா, மின்சா இருவரும் கையில் மூட்டைகளுடன் நின்றிருந்ததைப் பார்த்து அவன் ஒருவாறாகச் சூழலை ஊகித்திருக்க வேண்டும். அவர்கள் அருகே சந்தாவும் பதற்றமாக நின்றிருந்ததை வைத்து அவளும் அதற்கு உடந்தை என்பதும் எளிதில் புரிந்திருக்கும்.
நரதுவின் இரு கண்களும் சிவந்து வெறியேறி இருந்தன. அது சற்று முன் அவன் ஏற்றிக் கொண்ட மதுவாலா, அந்த ராத்திரியில் பாதியில் கலைந்து எழுந்த தூக்கமின்மையாலா அல்லது அங்கே நடந்திருக்கும் நிகழ்வு குறித்த சினத்தாலா எனக் குழப்பமாக இருந்தது.
மூவரும் அச்சத்தின் உச்சத்தில் கண்டிருக்க, நரது முதலில் மின்சாவை அடித்துக் கீழே தள்ளினான். அடுத்து சந்தாவை. தம்மா திகைத்துப் பார்த்திருந்தாள். நரது குனிந்து தம்மாவின் முகத்தருகே வந்து வாயின் துர்நாற்றம் வீச, ஆவேசமாகச் சொன்னான் -
“தம்மா, உன் சம்மதத்துடனே உன்னை அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஒரு கனி உரிப்பது போல் பொறுமையாக உன்னைத் திறந்து ரசித்துண்ண வேண்டும் எனக் கற்பனை செய்திருந்தேன். எல்லாவற்றுக்கும் மேல் என் மனமுதித்த சில சிறந்த கலவிக் களியாட்டுகளைப் பயன்படுத்தாமல் உனக்கென ஒதுக்கிக் காத்திருந்தேன்.”
“…”
“எல்லாம் ஏன்? எப்படியும் என்னிடம் படிவாய் என்ற நம்பிக்கையால். ஆனால் அதற்கு மாறாக இப்படி ஓர் ஓடுகாலி எண்ணம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. உனக்கு ஆண் பிள்ளை வாடை வேண்டுமெனில் நான் இருக்கிறேன். உன் அக்காளிடம் கேட்டுப் பார், என் ஆட்டம் பற்றி. ருசி கண்டு விட்டால் இவ்வீட்டின் வாசற்படி தாண்ட மாட்டாய். தினம் வேண்டும் எனக் கெஞ்சிக் கதற விடுவேன். அதை விடுத்து போயும் போயும் ஒரு எடுபிடி வேலை செய்யும் இழிமகனுடன்தான் உனக்குக் கொட்டமடிக்கக் கேட்கிறதா?”
“…”
“நானே நினைத்தாலும் எங்கே என்னை நல்லவனாக இருக்க விடுகிறீர்கள்? இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. இதற்கு மேல் உன்னை விட்டு வைத்திருப்பது சரியல்ல. இப்போதே உன்னைப் பிளந்து நுழைந்தால் ஒழுக்கமாக என் காலைக் கட்டிக் கொண்டு கிடப்பாய். உன் தினவை என் தோளில் தனி. உனது அரிப்பை என்னிடம் சொறி. வாடி!”
தம்மா ஓட முற்பட்டாள். நரது சுலபமாகக் குறுக்கில் ஓடி அவளை அடைந்தான். அவன் வேட்டையாடிப் பழகியவன். முயல் வேட்டை, மான் வேட்டை எல்லாமும். எனவே பெண் வேட்டை அவனுக்குப் பெரிய சவால் ஒன்றும் இல்லை. நரது தம்மாவை எட்டிப் பிடிக்க முற்படுகையில் அவளது மேலாடை கிழிந்து அவிழ்ந்து கீழே விழுந்தது. பெருமுலைகள் விடுதலையுற்று அதிர்ந்தன. பால் வல்லுறவு முயற்சிகளில் பெண்ணின் ஆடையைக் கிழிப்பதன் நோக்கம் ஓடுவதை மட்டுப்படுத்தி முடக்கத்தான். தம்மா கூனிக் குறுகி அருகே படுத்திருந்த ரத்த நந்தகாவின் வயிற்றுப் பகுதியில் போய்த் தஞ்சமடைந்தாள்.
சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருந்த யானை அசைவின்றி உறங்கிக் கொண்டிருந்தது.
நரது வெறிச் சிரிப்புடன் அவளை அணுக, யானை விழித்துக் கொண்டு எழுந்தது. ரத்த நந்தகாவின் முன் காலை இறுகக் கட்டிக் கொண்டதன் மூலம் தன் அரை நிர்வாணத்தை மறைத்தபடி நின்று அழுதாள் தம்மா. நரது அவளை நெருங்கிக் கைப் பற்றி இழுத்தான்.
தம்மா யானையின் கால்களுக்கு இடையே ஓடிப் போக்குக் காட்டினாள். யானை என்ன நடக்கிறதெனப் புரியாமல் இங்கும் அங்கும் கால்களை அசைத்தது. தன் முயற்சிக்குச் தடையாக அமைந்ததால் நரது கோபமேறி அந்த யானையின் மத்தகத்தில் ஓங்கிக் குத்தினான். ரத்த நந்தகா பிளிறியது. அதன் அசைவுகள் மேலும் முரட்டுத்தனமாகின.
அந்தக் கொட்டடியே அதிர்ந்தது. நின்று வேடிக்கை பார்த்திருந்த சந்தாவும் மின்சாவும் நிதானமற்ற அந்த யானையின் கால்களில் மாட்டி தம்மா இறந்து விடுவாள் என அஞ்சி அலறினார்கள். நரது எதையும் பொருட்படுத்தாமல் அருகே கிடந்த அங்குசத்தை எடுத்து யானையின் காலில் குத்தினான். ரத்த நந்தகா தற்காத்துக் கொள்ளத் தும்பிக்கையால் அவன் தலையில் வைத்துத் தள்ளியது. அவன் விடாமல் குத்த, யானை சட்டெனத் தன் காலைத் தூக்கி அவனை உதைத்தது. நரது தடுமாறித் தரையில் விழுந்து திகைத்தான்.
யானை அவனை ஒரு கணம் நின்று பார்த்து நிதானித்தது. பின் சட்டெனத் தன் காலை உயர்த்தி அவன் வயிற்றில் பதித்து அழுத்தியது. புழு ஒன்றை மனிதன் விரல் நுனியில் வைத்து நசுக்குவது போலிருந்து அது. நரது அலறினான். அப்பெரிய காலடியில் சிக்கிக் கொண்டவனின் கைகளும் கால்களும் வலியில் துடித்தன. கண்களில் வெறி தெரிய, யானை அவன் உடலை நசுக்கியது. ரத்தம் பீறிட்டுச் சாத்தியமான சகல திசைகளிலும் சீரற்றுத் தெறித்தது. மிகச் சில கணங்கள்தாம். நரது ஒலிகள் அடங்கி மயக்கமுற்றான்.
தம்மா அச்சத்தில் ரத்த நந்தகாவின் பின் காலை இறுகக் கட்டிக் கொண்டு அதில் முகம் பதித்துக் கண்களை மூடி இருந்தாள். யானை திரும்பிப் பார்த்தது. சந்தா அவசரமாக தம்மாவின் அருகில் போய் அவளை யானையின் காலிலிருந்து விடுவித்து இழுத்தாள். மின்சா தன் மேற்சட்டையை அவிழ்த்துக் கொடுத்து தம்மாவை அணியச் செய்தான்.
தம்மா பிரமை பிடித்தது போல் நின்றாள். ரத்த நந்தகா மறுபடி பிளிறி அவர்களைப் பார்த்து காலை உயர்த்தியது. மூன்று பேரும் அலறி அடித்து அங்கிருந்து ஓடினார்கள்.
*
அந்த ராத்திரி முடிவே இல்லாதது போல் நீண்டு கொண்டே இருந்தது. மூன்று பேரும் குடிலுக்கு வந்து காத்திருந்தார்கள். யாரும் ஏதும் பேசவில்லை. தம்மா மட்டும் அழுது கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் யானைக் கொட்டடியிலிருந்து எந்த அரவமும் வெளிப்படவில்லை. தம்மாவையும் மின்சாவையும் இருக்கச் சொல்லி விட்டு சந்தா மட்டும் தயக்கமாக மறுபடி கொட்டடிக்குப் போனாள். யானை அதன் இடத்தில் ஏதும் நடக்காதது போல் படுத்துத் தூங்கியிருந்தது. நரது விழுந்த இடத்தில் அசைவின்றிக் கிடந்தான். அவன் உடலெங்கும் ரத்தம் உறைந்து படர்ந்திருந்தது. வயிற்றுப் பகுதியில் பாதி சிதைந்திருந்தது. யானை எழுந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். சந்தா சப்தம் எழுப்பாமல் அவனைத் தன் பலத்தால் தரையோடு இழுத்துக் கொண்டு கொட்டடியை விட்டு வெளியே வந்தாள். அங்கே நரதுவைப் போட்டு விட்டு மூச்சு வாங்கினாள் சந்தா. அவளது உடலெல்லாம் வியர்வை அரும்பியிருந்தது. நரதுவின் மீது காறி உமிழ்ந்தாள்.
மனம் கேட்காமல் அவள் பின்னே வந்திருந்த மின்சா நரதுவின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். துடிப்பு இருந்தது. மின்சாவும் கை கொடுக்க, இருவரும் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குடிலுக்குள் நுழைந்தார்கள். அந்த அறையின் நடுவில் போட்டார்கள்.
சந்தா ஓரமாகப் போய் அமந்து கொண்டாள். தம்மா அவளருகில் போய் உட்கார்ந்தாள்.
அத்தனை மாதங்களில் அப்போதுதான் அக்குடிலுக்குள் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது மின்சாவுக்கு உறைத்தது. அவசரமாக வைத்தியரை அழைக்கக் கிளம்பினான்.
வைகறைக்குச் சற்று முன் வைத்தியர் வந்து சேர்ந்தார். தேகம் முழுக்கப் பரவியிருந்த ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரண சிகிச்சை செய்தார். சில மூலிகைகளைக் கசக்கிப் பிழிந்தார். கட்டுப் போட்டார். நரது அசைவே இல்லாமல் படுத்திருந்தான். மூச்சு மட்டும் சீர் இல்லாமல் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. வைத்தியர் அவன் உயிர் பிழைக்க மிகச் சிறிய அளவில்தான் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போனார்.
நித்தம் காலை, மாலை என இரு வேளைகளும் குடிலுக்கே வந்து மருத்துவம் பார்த்துப் போனார் வைத்தியர். அரசாங்கத்துக்குச் செய்தி சொன்னார்கள். நடந்த விஷயங்களை மறைத்து விட்டு, இரவில் பிளிறல் அதிகமாக இருக்கவே பார்க்கப் போனவனை யானை தூக்கிப் போட்டு மிதித்து விட்டது என்றார்கள். அரசு வைத்தியரும் வந்து பார்த்து விட்டு சிகிச்சையில் சில மாற்றங்கள் சொன்னார். மூன்றாம் நாளில் நரது கண் விழித்தான்.
அவன் உடலில் உயிர் மட்டும்தான் மிச்சமிருந்தது. கை, கால்கள் முழுக்க நிரந்தரமாகச் செயலற்று விட்டன. இனி எங்கும் அவன் அசைய முடியாது. தின்பது, தூங்குவது, கழிவது என எல்லாம் அதே இடத்தில்தான். அதிர்ச்சியில் பேச்சும் போயிருந்தது. பேச முயன்றால் வினோத ஒலிகளை மட்டுமே எழுப்ப முடிந்தது. கண்களும், காதுகளும் செயல்பட்டன.
சந்தா அவனுக்கு நீரூட்டுவது, சோறூட்டுவது முதல் குளிப்பாட்டுவது, உடுத்தி விடுவது, மூத்திரமும் மலமும் சுத்திகரிப்பது என எல்லாமும் பார்த்துக் கொண்டாள். தம்மாவுக்கே அவள் நரதுவின் மீது அத்தனை அக்கறையாக இருப்பது வியப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் நரதுவின் உடல்நிலை தேறுவதில் சந்தாவுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் எனத் தம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. அவன் அவளுக்குத் துரோகம் செய்து தன்னை அடைய முற்பட்டவன். அன்று இரவு யானை மிதிக்கவில்லை எனில் தன்னைச் சிதைத்திருப்பான். அப்படியானவன் குணமாகி இயல்பானாலும் அவனோடு சந்தா வாழ விரும்புவாளா? இக்கேள்விக்குத் தம்மாவிடம் விடை இல்லை. ஒன்று சந்தா அவ்வளவு தூரம் நல்லவளாக இருக்க வேண்டும், அல்லது அவளுக்கு நரது மீது கண்மூடித்தனமான காதல் இருக்க வேண்டும். ஒருவேளை கலவி மறுபடி கிடைக்கத் தொடங்கும் என்பதால் மற்ற எல்லாவற்றையும் மன்னிக்கத் தயாராகி விட்டாளா என ஒரு முறை ஓர் எண்ணம் எழுந்தது. திடுக்கிட்டுத் தலையை உலுக்கிக் கொண்டாள். என்ன ஆபாசமான சிந்தனை!
சந்தாவின் சிசுருஷை நிமித்தமேனும் நரது எழுந்து நடமாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் தம்மா. அவளும் அவ்விரவின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு கொண்டிருந்தாள்.
உறவினர்கள் பலர் வந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். சந்தா பேருக்குக் கொஞ்சம் அழுதாள். கணவன் இன்னொருத்தியிடம் படுக்கப் போவதை விட, அதன் வழி தன்னை மலடி என நிரூபிப்பதை விட, இப்படி முடமாகிப் போவது குறைந்த துயரம் தருவதாக இருந்திருக்கலாம் எனத் தோன்றியது தம்மாவுக்கு. இந்தச் சூழலில் சந்தாவைத் தனியே விடுத்துப் போவது சரியல்ல என்று அவளுக்குத் தோன்றியது. எனவே தலைநகருக்கு நகர்ந்து, மின்சா வேலையில் சேர்ந்து, அவர்கள் இருவரும் மணம் செய்து கொள்ளும் திட்டத்தை ஒத்திப் போட்டார்கள். மின்சாவுக்கு உண்மையில் மனமே இல்லை. அங்கே குதிரை லாயத்தில் அவன் போகும் வரை வேலையை வைத்துக் கொண்டு காத்திருக்க மாட்டார்கள், உடனே மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள். ஆனால் அது தம்மாவின் முடிவு. மறுத்துப் பேச அவனுக்கு மனமும் இல்லை, திராணியும் இல்லை. பொறுத்தான்.
ஆனால் இன்னொரு விஷயம் அவனை அங்கே பிடித்து வைத்தது. யானையைப் பார்க்க ஆள் வேண்டும். அதுவும் இப்படி ஒரு சம்பவம் செய்திருக்கும் சூழலில் அதை அப்படியே விட முடியாது. அப்படி யானையைப் பராமரிக்க ஆளற்றுப் போனது அரசாங்கத்துக்குத் தெரிய வந்தால் கடும் தண்டனை சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் கிடைக்கும். அதனால் மாற்று ஆள் வரும் வரையேனும் அவன் அங்கு பணியிலிருந்தாக வேண்டியது கட்டாயம்.
அது யானைப் பாகனாகத் தேற வேண்டும் என்ற அவனது ஆசைக்குக் கிடைத்த வாயில்.
ரத்த நந்தகாவை மின்சாதான் இப்போது பார்த்துக் கொள்கிறான். அந்த இரவில் கண்ட யானையின் ஆக்ரோஷம் தந்த அதிர்ச்சியும் அச்சமும் முற்றிலும் விலகாமல் மிச்சம் இருந்ததால் அதனிடமிருந்து சற்று விலகியே இருக்கிறான். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் யானை மேய்த்தான். அதுவும் சற்று பதற்றத்துடனேதான் காணப்பட்டது.
மின்சா ஓரிரு முறை தனித்த சந்தர்ப்பம் கிடைக்கையில் தம்மாவை இழுத்து அணைத்து முத்தமிட முயன்றான். அவள் போதிய ஆர்வம் காட்டாததால் முழுக்க மீண்டு அதற்குத் தயாராகவில்லை எனப் புரிந்து தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி நின்று காத்திருந்தான்.
அந்த இரவுக்குப் பின் ரத்த நந்தகாவிடம் எந்த வித்தியாசமும் இன்றி முன்பு போலவே பழகியது தம்மா ஒருத்திதான். அவளுக்கு அந்த யானை மீது எந்தப் பயமும் இல்லை. இப்போதும் மனம் பாரமாக இருக்கும் போதெல்லாம் அதன் மடியில் தஞ்சம் புகுந்தாள்.
நாட்கள் மிக மெதுவாகவும் நகர்வது போலிருந்தது. உற்சாகமற்ற நாட்கள் அப்படித்தாம்.
*
அரசு ரத்த நந்தகாவைக் கவனித்துக் கொள்ள யானைப் பாகன் தேடுவதாக அறிவித்தது.
ஆனால் அந்த யானையின் நிலை பற்றிய செய்திகள் அறிந்து பாகன்கள் எவரும் அங்கே வர மறுத்து விட்டார்கள். யாழ தேவி அவர்களின் சம்பளத் தொகையை இரண்டு மடங்கு ஆக்கச் சொன்னாள். அப்போதும் எவரும் முன்வரவில்லை. அடுத்து போகாதவர்களைக் கடுமையாகத் தண்டிப்போம் என மிரட்டச் சொன்னாள். “போகாவிடில் கொல்வீர்கள் எனில் யானையிடம் போனாலும் அதுதானே?” எனக் கேட்டார்கள். அரசு யோசித்தது.
யாழ தேவி விஷயத்தை ஆறப் போடச் சொன்னாள். நரதுவின் மனைவியான சந்தாவை ஆலோசனை கேட்டறிய ஆட்களை அனுப்பினாள். அவள் மின்சாவைக் கை காட்டினாள்.
மின்சாவைத் தற்காலிகப் பொறுப்பாளனாக நியமித்தது அரசு. இன்னொரு வகையில் அவனுக்கு அது மிகுந்த சுதந்திரம் கிடைத்தது போல் ஆகி விட்டது. இப்போது அவன் பாகனுக்கு நிகர். அந்த முகாம் மொத்தமும் அவனது கட்டுப்பாட்டில். சந்தா குடிலில் நரதுவுடன் முடங்கி விட, இஷ்டம் போல் தம்மாவுடன் நேரம் செலவிட்டான் மின்சா.
தம்மா மெல்ல இயல்பு நிலை திரும்பினாள். புன்னகை செய்ய ஆரம்பித்தாள், சிரிக்கத் தொடங்கினாள், துடுக்குப் பேச்சு மீண்டது. மின்சாவுடன் இணக்கம் காட்டினாள். பழைய நெருக்கம் துளிர்த்தது. சின்னச் சின்ன சில்மிஷங்கள் அனுமதித்தாள். ஆனால் எல்லைக் கோடு வகுத்துக் கொண்டாள். மற்றதெல்லாம் திருமணம் முடிந்த பின் என்றாள். மின்சா சிணுங்கினான். தம்மா அதில் சிலிர்த்தாள், கிறங்கினாள். ஆனால் இறங்கி வரவில்லை; இறுக்கம் தளர்த்தவில்லை. “கல்நெஞ்சக்காரி” என்று கூறி கன்னத்தில் எச்சில் படாமல் புனித முத்தமிட்டான் மின்சா. தம்மா மகிழ்ச்சியாக அவனைக் கட்டிக் கொண்டாள்.
மின்சா அந்தக் கூத்தாடலுக்கு இடையிலும் காரியத்தில் கண்ணாக இருந்தான். சின்னச் சின்ன நுணுக்கங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த நந்தகாவை நெருங்கினான்.
அன்றைய இரவில் நடந்த அசம்பாவிதம் யானையின் கோபம் என்பதை விட ஒரு விபத்து என்றே அவன் நம்ப விரும்பினான். அல்லது அது தன் இணையைப் பிரிந்த மனநிலை என்றாலும் அதிலிருந்து அது நகர்ந்து வந்து விட முடியும் என நினைத்தான். எனவே அதற்கு அது விரும்பிய உணவைக் கொடுத்தான், வேண்டிய உறக்கத்தை அளித்தான், நீரில் நிறைய நேரம் விளையாட அனுமதித்தான். அதன் சங்கிலியைத் தளர்த்துவதை மட்டும் தவிர்த்தான். வெள்ளை யானை மெல்ல அவனை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தது.
பிற்பகல் தீர்ந்த இளவெயில் நேரத்தில் தம்மாவும் மின்சாவும் யானைச் சவாரி செல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை இறங்கிய பின்பும் ரத்த நந்தகாவின் தந்தங்களைப் பற்றிக் கொண்டு அதன் மத்தகத்தில் முத்தம் தந்தாள் தம்மா. எல்லா முறையும் அதன் உடலில் சிலிர்ப்பை உணர்வாள். ஆனால் அதைத் தவிர எந்த எதிர்வினையும் இராது. பெருமூச்சு விடுவாள். ‘கல்லுளி மங்கன்’ என்று மனதில் அதைத் திட்டிக் கொள்வாள்.
தம்மாவும் மின்சாவும் பகலில் அந்த முகாமில் பேசிச் சிரித்துத் திரிந்தார்கள். சந்தா அதை வேடிக்கை பார்த்திருந்தாள். அவள் அதைத் தடுக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை. தம்மா அது பற்றிக் கவலைப்படவில்லை. அவளுக்கு வாழ்க்கை மீண்டாற் போல் இருந்தது. இனி துயர் இல்லை. அவர்கள் தலைநகருக்குப் புலம்பெயரவும் கூட அவசியமில்லை. அவர்கள் அங்கிருந்து ஓட நினைத்தது நரதுவுக்கு அஞ்சி. இனி மேல் அவனால் தொந்தரவு இல்லை. அவன் எழுந்து நடமாட ஆரம்பித்தாலும் பழையபடி அதிகாரம் அவனிடம் இல்லை. எனவே பிரச்சனை ஏதும் செய்ய அவனால் இயலாது.
மின்சாவுக்கும் வேலை இருக்கிறது, நல்ல தொகை சம்பளமாக வருகிறது. அவன் அங்கே தற்காலிக நியமனத்தில்தான் இருக்கிறான் என்றாலும் அவனை மாற்றி விடுவார்கள் என தம்மாவுக்குத் தோன்றவில்லை. அந்த வீட்டில் நிலைமை கொஞ்சம் சரியானதும், அதாவது நடப்புத் துக்கம் ஓரளவு வடிந்ததும், அவர்கள் திருமணம் செய்து அங்கேயே வாழலாம். முரண்பட்ட நால்வரும் அந்த முகாமிலேயே மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்.
தம்மா அப்படித்தான் கணக்குப் போட்டாள். மின்சாவிடமும் சொன்னாள். குதூகலமாகக் கேட்டவனுக்கு அவளை முழுதாக ஆளும் நாள் நெருங்குகிறதென மகிழ்ச்சிக் கிறுக்கில் இளித்து நின்றான். தம்மாவைச் சந்தாவிடம் சீக்கிரம் பேசும்படி வற்புறுத்தினான். அவள் ஒத்திப் போட்டு, தாமதப்படுத்தி ஒரு நாள் தயக்கமாகச் சந்தாவிடம் போய்ப் பேசினாள்.
சந்தா தம்மாவை உற்றுப் பார்த்து விட்டு யோசித்தாள். பின் ஏதோ கணக்கிட்டு விட்டு, அச்சம்பவம் நடந்ததில் இருந்து ஓராண்டு போகட்டும் என்று சொல்லி விட்டாள். தம்மா மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. ‘சரி’ என அதற்குத் தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.
மின்சாவிடம் வந்து சொன்னதும் அவன் முகம் வாடியது. இன்னும் முழு ஆறு மாதங்கள் இருக்கின்றன. தம்மா சமாதானம் செய்தாள் – “எங்கேயடா போய் விடப் போகிறேன்?”
மின்சா புன்னகை செய்தான். அவர்களின் சுற்றல் அதிலிருந்து அதிகமானது. இணைப் பறவைகள் போல் அந்தப் பிரதேசத்தில் ஒன்றாகவே அலைந்தார்கள். ரத்த நந்தாகாவும் ஓரளவு பழகி விட்டதால் அதன் முதுகில் தம்மாவை அழைத்துக் கொண்டு சுற்றினான்.
நரதுவுக்குச் சரியாகும் என்ற நம்பிக்கை அறுந்து விட்டது. ஒரு முன்னேற்றமும் இல்லை.
அவன் மௌனமாக எல்லாவற்றையும் பார்த்திருந்தான். அழுகிறானா என அவ்வப்போது எட்டிப் பார்ப்பாள் சந்தா. தன் குற்றங்களை நினைத்து அதற்கு தண்டனை கிடைத்ததை எண்ணி அவன் வருந்துகிறானா என அறிய விரும்பினாள். ஆனால் அவன் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவளுக்கு அளிக்கவே இல்லை. கல் போல் உணர்ச்சியற்றுக் கிடந்தான்.
*
ஒருமுறை ரத்த நந்தகா முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கையில் தம்மா கேட்டாள்
“மின்சா, அன்று இரவு இது ஏன் அவ்வாறு நடந்து கொண்டது?”
“முன்பு இது தொடர்பாக நரது சொன்ன அதே ஊகம்தான்.”
“ம்.”
“சியாமில் விட்டுப் பிரிந்து வந்த இதன் இணையை எண்ணித்தான் எல்லாமும். இங்கு உலவும் மனிதர்கள் எவரெனினும் தன் நிலைக்குக் காரணமானவர்கள் அவர்களே என்று எண்ணிக் கொள்கிறது. எனவே விரோதம் பாராட்டுகிறது. அன்று அது நரது. ஆனால் எப்போது, யார் வேண்டுமானாலும் சிக்கலாம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.”
“எனில், உனக்கும் ஆபத்து விளைவிக்குமா என்ன?”
“ம்.”
“ஒன்றுமில்லை. வெள்ளையன் நல்லவன். நாயகன். கெட்டவர்களை மட்டுமே துவம்சம் செய்வான். நீ நல்லவன், என்னவன். உனக்கு ஒன்றும் ஆகாது. சரிதானே, ரத்த நந்தகா?”
யானையின் முதுகைத் தட்டிக் கேட்டாள் தம்மா. அது பிளிறியது. அதில் ஒரு மாசற்ற உற்சாகம் இருந்தது. அவளது கேள்வியை வலுவாக ஆமோதிக்கும் தொனி இருந்தது!
சமீப நாட்களாக நிம்மதியாக உறங்குகிறாள் தம்மா. அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவள் தன் அக்காளை அண்டி வந்த பிறகு அவளுக்கு ராத்திரிகளில் விநோத ஓசைகள் கேட்கும். முனகல், பெருமூச்சு, அடிக்குரல் உரையாடல், சில சமயம் மெல்லிய அலறல் என வெவ்வேறு வடிவில். முதலில் சில நாட்கள் புரியாமல் பயந்தவள் அது சந்தா மற்றும் நரது இடையிலான ஆபத்தற்ற இரவு விளையாட்டு என்ற அளவில் புரிந்து கொண்டாள்.
மறுநாள் காலைகளில் அக்காளின் முகம் பார்த்து அதனை உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதை ஏன் ஆடையின்றி விளையாடுகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை.
தம்மா வயதுக்கு வந்த மூன்று மாதங்களில் விஷயம் தெளிவாகப் புரிந்து போயிற்று.
அதன் பிறகு ஓசை கேட்டால் இறுகக் கண்களை மூடிக் கொள்வாள். பின் காதுகளைப் பொத்திக் கொள்வாள். ஆனால் மனதினை மட்டும் மூட முடிந்ததில்லை. யாரோ ஒரு முகமற்ற ராஜகுமாரன் புரவியேறி தன்னை அடைய வருவது போல் கற்பனை செய்து கொள்வாள். உளம் பிழை செய்கிறதோ எனக் குற்றவுணர்வு எழும். ஆம், இல்லை என இரு புறமும் வாதாடிக் களைப்புற்று அப்படியே தூங்கிப் போவாள். பிறகு மின்சாவின் மீது காதல் வந்ததும் அந்த ராஜகுமாரனுக்கு மின்சாவின் முகத்தைப் பொருத்தினாள்.
இப்போது குற்றவுணர்வு இல்லாமல் நெருங்கிப் புழங்கினாள். நேரில் மின்சா பேசும் ஆபாச விஷயங்களுக்கு - பதிலளிக்க இயலாமல் தவித்தவற்றுக்கு - தனித்த இரவின் தாழாக் குளிரில் அந்த ராஜகுமாரனிடம் இன்னும் ஆபாசமாகப் பதில் சொன்னாள்.
ஒற்றை இரவின் பயங்கரத்தில் நரது படுக்கையோடு மல ஜலம் கழிக்கும் நிலைக்கு வந்து முடங்கிய பின் சிருங்கார ஒலிகள் ஏதுமில்லாமல் நிம்மதியாகத் தூங்கினாள்.
பல மாதங்களுக்குப் பின் முந்தைய அதே ஒலி கேட்ட போது திடுக்கிட்டு விழித்தாள்.
அது நிச்சயம் சந்தாவின் முனகல். அது எப்படி சாத்தியம் ஆகும்? ஒரு வேளை தனியாக சுயமாகவா? அல்லது நரதுவின் மீதேறி ஏதும்? அவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை. பார்க்க வேண்டும் என உந்துதல் எழுந்தது. அதே சமயம் தன் புத்தியின் வக்கிரத்தை ஏசினாள்.
தூக்கம் முற்றிலும் கலைந்து விட, காதுகளைக் கூர்மை செய்தாள். இன்னொரு முனகல், சந்தா தவிர. நிச்சயம் ஆண் குரல். ஆனால் நரது இல்லை. இன்னும் இளமையான குரல்.
தம்மா உள்ளுணர்வு உந்தித் தள்ளப் பதற்றமானாள். ஒருவேளை அப்படி இருக்குமோ?
மனதில் அப்படிப் பட்டு விட்ட பின் உதாசீனம் செய்யலாகாது. இனி இங்கிதம் பார்க்க இயலாது. சட்டென அறைக் கதவைத் திறந்து குடிலின் பெரிய அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சி ஆயுளுக்கும் மறக்காத சித்திரமாக மனதில் பதிந்தது. இரு நிர்வாண உடல்கள். மல்லாந்திருந்த மின்சாவின் மீது சந்தா ஏறி இயங்கியிருந்தாள்.
கதவு திறந்த சப்தம் கேட்டு சந்தா, மின்சா இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மின்சா அதிர்ந்து எழ முயற்சி செய்ய, சந்தா அவனை விடாமல் அழுத்தி வைத்துத் தொடர்ந்து விட்டுச் சில கணங்களில் எழுந்து நிதானமாகத் தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு கூந்தலை அள்ளி முடிந்தாள். மின்சாவும் அவசரமாக உடை தேடி அணிந்து வந்து தம்மாவின் முன் மண்டியிட்டு அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அழுதான்.
தம்மா ஏதும் பேசாமல் அப்படியே நின்றிருந்தாள். அது கனவாக இருக்கலாகாதா என நப்பாசை எழுந்தது அவளுக்கு. இதோ விழித்துக் கொண்டு கனவு எனப் புரிந்து நிம்மதிப் பெருமூச்சு விடப் போகிறோம் எனக் காத்திருந்தாள். ஆனால் அப்படி நடக்கவில்லை.
திரும்பிப் பார்த்தாள். நரது அறையின் மூலையில் மல்லாந்து படுத்திருந்தான். அவனது கண்களில் நீர் ஊற்றாக உற்பத்தியாகி கன்னங்களில் வழிந்து கொண்டே இருந்ததது.
தம்மாவிடம் தினமும் மன்னிப்புக் கேட்டான் மின்சா. அது அவன் தவறு இல்லை, சந்தா அழைத்த போது தன்னால் மறுக்க முடியவில்லை என்றான். தலை குனிந்தபடி அதற்கு தம்மா அவனைக் காத்திருக்க வைத்துப் பட்டினி போட்டதுதான் காரணம் என்றான்.
தம்மா அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டாள். அவள் அவனிடம் ஏதுமே பேசவில்லை. ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை. சந்தாவிடமும் கூட மௌனமே பேணினாள். சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை.
கண்ணுக்குத் தெரியாத பூதம் ஒன்று அவளிடமிருந்த மொத்த சொற்களையும் பிடுங்கிக் கொண்டது போலிருந்தது. அல்லது யாரோ ஒரு கொள்ளையன் இரவோடு இரவாக அவள் நாக்கைத் துண்டித்துத் திருடி எடுத்துப் போனது போல் தோன்றியது. மின்சா அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டான். இப்போது அவனுமே பேசுவது இல்லை. கல்லில் எவ்வளவு காலம் நீரோடினாலும் கரையாது. கல்நெஞ்சக்காரிகளும் அப்படியே!
ஒழுக்கம் கெட்டவனுக்கு இத்தனை ரோஷம் வேறா எனக் கேள்வி எழுந்தது தம்மாவுக்கு.
ஆனால் தான் மட்டும் சுத்தமா? மின்சாவின் கண் முன்னாலேயே நரது தம்மாவின் முலை பற்றியிருக்கிறான். கூசிப் போய் நின்றிருக்கிறாள். அதை எல்லாம் ஒரு நாளும் மின்சா பொருட்படுத்தி விலகியதில்லை, கோபித்ததில்லை. இன்னும் சொன்னால் இப்போதைய அவளது விலக்கத்தின் போது கூட சொல்லிக் காட்டியதில்லை. அப்படி எனில் அவன் என் உடலின் களங்கம் பொருட்படுத்தாமல் என் மனதைக் காதலிப்பதாகத்தானே அர்த்தம்?
ஆனால் அதுவும் இதுவும் ஒன்றா? தான் நிஜமாகவே மனதால் அழுக்குறாதவள். நரது தன்னைத் தீண்டியதெல்லாம் நாயிடம் கடிபட்டது போல்தான். அதற்கு தான் பொறுப்பு ஆக முடியாதே! மின்சாவின் செயல் அப்படிப்பட்டதா? அவன் சம்மதித்து சந்தாவிடம் சாய்ந்திருக்கிறான்! எனில் உடல் மட்டுமின்றி மனம் கறைபட்டதாகத்தானே பொருள்?
சரி, அவனாவது ஆண். உலகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான ஒழுக்கக் கோடுகளைத்தான் வைத்திருக்கிறது. சந்தாவுக்கு என்ன கேடு வந்தது தொலைந்தது?
சந்தா தம்மாவிடம் பேசத் தொடர்ந்து முற்பட்டாலும், மன்னிப்போ வருத்தமோ ஒரு சொல்லும் தெரிவிக்கவில்லை. அதைப் பற்றியே ஏதும் பேசவில்லை. தான் செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக அவள் கருதவில்லை என்பதைத் தம்மாவுக்கு உணர்த்தினாள். ஆனால் மின்சா போல் சந்தா அவளிடம் பேசுவதை ஒருகட்டத்தில் நிறுத்தி விடவில்லை. ஒன்றுமே நடக்காதது போல் சகஜமாகப் பேசிக் கொண்டேதான் இருந்தாள். தம்மாவின் அமைதியைச் சந்தா பொருட்படுத்தவே இல்லை என்கிற செய்தியும் அதில் இருந்தது.
கோடை காலம் தொடங்கியது. வனத்தை விட மனத்தில்தான் தகிப்பு அதிகமிருந்தது.
*
(தொடரும்)
December 3, 2023
பெருங்களிறு [குறுநாவல்] - 2
பாகம் 2: உடல்
தம்மா வழக்கம் போல் கொட்டடியில் இருந்த நரதுவுக்கும் மின்சாவுக்கும் குடுவையில் தேநீர் எடுத்துப் போய் கோப்பையில் ஊற்றினாள். மின்சா அதைப் பருகியபடி கேட்டான்.
“அண்ணா, இந்த வெள்ளை யானை ஏன் இப்படி இருக்கிறது?”
“இப்படி என்றால்?”
“அமைதியற்று
“ம்ம்ம். அதைக் கேட்கிறாயா! இதற்குப் பின் ஒரு சிறிய கதை இருக்கிறது என்கிறார்கள்.”
“என்ன அது?”
“துயரக் கதை. பரவாயில்லையா?”
“சொல்லுங்கள்.”

தேநீர் பருகிக் காலிக் கோப்பைகளைத் தரும் வரை காத்திருந்து அவற்றை வாங்கிப் போவது தம்மாவின் வழக்கம். அன்று அப்பேச்சு ஆர்வம் ஊட்டியது. அவர்கள் சீக்கிரம் தேநீர் பருகி விடக்கூடாதே எனக் கவலைப்பட்டாள். அப்புறம் அங்கே நிற்க முடியாது.
“ரத்த நந்தகாவுக்கு ஒரு பெண் துணை உண்டு. அதன் வழி ஓர் அழகிய குட்டி யானையும் இருந்துள்ளது. பெட்டைக் குட்டி என்கிறார்கள். நம் ஆட்கள் சியாம் ஆக்ரமிப்புப் போரில் வெற்றி பெற்று ரத்த நந்தகாவை இங்கே அழைத்து வரும் போது குடும்பத்தோடா கூட்டி வருவார்கள்! மனைவியையும் மகளையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார்கள். ரத்த நந்தகா குடும்பத்தைப் பிரிந்த துயரத்தில்தான் எல்லோர் மீதும் எரிந்து விழுகிறது என்கிறார்கள். குறிப்பாக அதன் கலவித் தேவையை யார் நிறைவேற்றுவார்கள், சொல்?”
நரது சொல்லி விட்டு வலக்கை விரல்களை மடக்கிக் குத்துவது போல் சைகை செய்தான். மின்சா நாணத்தில் இளிக்க, தம்மா சங்கடமாகிக் காலிக் கோப்பைகளுடன் நழுவினாள்.
அன்றைய இரவு ரத்த நந்தகா மீதேறி உலாப் போன போது தம்மா மறவாமல் கேட்டாள் –
“நரது என்ன அப்படிப் பேசுகிறார்!”
“எப்படி?”
“கேட்டு எனக்குக் காதுகள் கூசி விட்டன. நீயோ வாயெல்லாம் பல்லாக நிற்கிறாய்.”
“எதைச் சொல்கிறாய் தம்மா?”
“ரத்த நந்தகாவின் கதையைச் சொல்லி முடித்து விட்டு…”
“ஓ! அதுவா! உண்மைதானே அது!”
“கலவி என்ன அவ்வளவு முக்கியமா?”
“இல்லையா?”
“ம்.”
“உன் தனித்த இரவுகளைக் கேளேன்.”
“ம்ம்ம்.”
“நிச்சயமாக கூடல் இன்பம் என்பது மிக முக்கியமானதுதான் தம்மா. மிருகம், மனிதர் என ஒவ்வோர் உயிருக்கும் அத்தியாவசியம். சற்று யோசித்தால் நீரை விட, உணவை விடவும் கூட மேலாக முக்கியமானது என்பேன். உலகை இயக்குவது காமம்தான். உலகம் ஒரு மையப் புள்ளியைச் சுற்றி இயங்க முடியும் எனில் அது பெண்ணின் யோனிதான்.”
“ச்சீய்...”
“இந்த யானை விரக தாபத்தில் இருக்கிறது. இதைச் சாந்தப்படுத்த இங்கே ஒரு பெண் யானையை அழைத்து வந்து கூட்டிக் கொடுக்கப் பார்த்தார்கள். ஆனால் ரத்த நந்தகா அதை நிராகரித்து விட்டது. யானைகள் மனிதர்கள் போல்தான். வாழ்நாளில் ஒரே ஒரு பெண் இணையுடன்தான் வாழும். பிரிந்த தனது இணைக்கு இது ஏங்கிக் கிடக்கிறது.”
“ம். பாவம்.”
“நானும்தான் பாவம்.”
மின்சா சொல்லிக் கண்ணடிக்க, திரும்பி பின்னமர்ந்த அவன் நெஞ்சில் குத்தினாள்.
யானை சமதளமற்ற பரப்பில் ஏறி இறங்கியதில் குலுங்கியது. அவர்கள் இருவரும் விழுவது போல் தடுமாறிச் சீரானார்கள். அந்த ஆட்டத்தைப் பயன்படுத்தித் தகாத இடத்தில் கை வைத்தான் மின்சா. தம்மா வெட்கத்தில் கண்கள் மூடிக் கொண்டாள். சாட்சியாகப் பார்த்திருந்த வெண்ணிலவும் மேகத்தின் பின்னோடிக் கண் மூடியது.
அன்று தைரியம் பெற்று சவாரி முடிந்து ரத்த நந்தகாவை விட்டு இறங்கியதும் அதை மண்டியிடச் செய்து அதன் தந்தங்கள் இரண்டிலும் தன் கைகளை வைத்தாள் தம்மா. அதற்கு நன்றி சொல்வது போல் மத்தகம் எனப்படும் அதன் முகத்தில் முத்தமிட்டாள்.
பாறையைப் போன்ற அந்தப் பிரம்மாண்ட உடல், உயிர் பெற்றது போல் ஒரு கணம் சிலிர்த்தது. அதை அவளால் துல்லியமாக உணர முடிந்தது. திடுக்கிட்டாள். மின்சாவிடம் பரபரப்பாக அதைச் சொன்னாள். அவன் அலட்சியமாக அது அவளது பிரமை என்றான்.
*
காதலையும் கர்ப்பத்தையும் வெகுகாலம் மறைக்க முடியாது என்பது தம்மாவுக்குத் தெரியவில்லை. ஓர் இரவு தம்மா யானைச் சவாரிக்குப் போயிருந்த போது சிறுநீர் கழிக்க எழுந்த சந்தா அவளைக் காணாமல் பதறிக் கண் விழித்துக் காத்திருந்தாள். தம்மா அவளைக் கண்டு அதிர்ந்தபடி தலை குனிந்தபடி குடிலுக்குள் நுழைந்தாள்.
“தம்மா, உன் விருப்பத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை. மின்சா என்ற தேர்வில் ஆட்சேபமும் கூட இல்லை. ஆனால் எனக்கு ஒரு கேள்வியும் ஒரு கட்டளையும் உண்டு.”
“ம்.”
“உனது ஒரே சொத்தான கன்னித்தன்மை இன்னும் களங்கமுறாமல் இருக்கிறதா?”
சந்தாவைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் தம்மா. ‘ஆம்’ என உறுதியாகத் தலையாட்டினாள்.
“உரிய வேளை வரட்டும். நரதுவிடம் பேசிச் சம்மதம் பெற்று உங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். அது வரை இப்படி இரவில் அலைய வேண்டாம். பகலிலும்தான்.”
“…”
அவ்வளவுதான். வேறு பேச்சில்லை. அவ்விரவு வெகுநேரம் இருவரும் உறங்கவில்லை.
மறுநாள் மின்சா ரத்த நந்தகாவுக்கு வெல்லம் கலந்த சோற்றுக் கவளம் உருட்டி ஊட்டிக் கொண்டிருந்த போது சந்தாவுக்கு விஷயம் வெளிப்பட்டு விட்டதைச் சொன்னாள் தம்மா. கல்யாணம் நடப்பதன் பொருட்டு இந்தத் தற்காலிக விலகலை ஏற்று அமைதி காப்போம் என்று கூறினாள். மின்சாவுக்கு முகமே இல்லை. ஆனால் வேறு வழியும் இல்லை, அரை மனதாய்த் தலையாட்டிச் சம்மதித்தான். பாவமாகத் தோன்றிய அவனைச் சமாதானப் படுத்தும் நோக்கில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் தம்மா. ரத்த நந்தகா பேருடலைச் சிலிர்த்தது. அதன் சிரத்துக்கு நேர் மேலே பறந்திருந்த இரண்டு பட்சிகள் பதறிச் சிதறின.
அன்றோடு தம்மாவும் மின்சாவும் இரவுகளில் யானைச் சவாரி போவது நின்று போனது.
தம்மாவுக்கு எப்போதும் சந்தாவின் கண்கள் அவள் மீதே இருப்பது போல் தோன்றியது. இளஞ்சோடிகள் இருவரும் பார்ப்பது, பேசுவது, பழகுவது அறவே நின்றது. நினைப்பது பன்மடங்கானது, காதல் பெருகி ஓடியது. அவனை அணைத்துக் கொள்வதாக எண்ணிக் கொண்டு கொட்டடியில் ரத்த நந்தகாவை அணைத்துக் கிடந்தாள் தம்மா. அங்கிருந்து அவள் போன பிறகு ஓர் இடைவெளி விட்டு யானையின் அதே உடல் பகுதியை தழுவிக் கொள்வான் மின்சா. அதனிடம் தம்மாவின் நறுமணம் வீசுவதாகத் தோன்றும். தம்மா அணைத்தால் சும்மா இருக்கும் அந்த யானை மின்சா வந்து தழுவும் போது சுணங்கும்.
சந்தா இதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அதே சமயம் நரதுவிடம் விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தாள். ஒத்திகை பார்த்தாள். கர்ப்பவதி பிள்ளையைப் பெற்றுப் போட பேறுகாலம் முடிய நேரம் பார்த்திருப்பதைப் போல் அந்த உண்மையை உள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது அவஸ்தையாக இருந்தது. ஓரிரு முறை சொல்ல எத்தனித்து நரதுவின் கோபமான, ஆங்காரமான மனநிலையைக் கண்டு அடங்கினாள்.
ஒரு நாள் இரவு கலவி முடிந்து கசகசப்புடன் மல்லாந்திருக்கையில் சந்தா சொன்னாள்.
“தம்மாவுக்கு வயசு வந்தாச்சு. பொருத்தமான ஒரு ஆள் கிட்ட பிடிச்சுக் கொடுக்கனும்.”
“என்ன அவசரம் இப்ப? கொஞ்ச காலம் போகட்டும். சின்னப் பொண்ணுதானே அவ?”
“என்ன சின்னவ? திமிறிக்கிட்டு நிக்குது உடம்பு. எல்லாம் நேரத்துக்கு செஞ்சிடனும்.”
“அப்படியா! ம்ம்ம். சரி, பார்ப்போம்.”
நரது யோசனையாய்க் கண் மூடிக் கொண்டான். சந்தா அவனைக் கட்டிக் கொண்டாள்.
மறுநாள் புலர்ந்த பொழுதில் படுத்துக் கிடந்த ரத்த நந்தகாவின் அருகில் சென்று அதன் உடலை ஆராய்ந்து கொண்டிருந்தான் நரது. மின்சா காலைக் கடனடைக்கப் பக்கத்தில் ஒதுங்கியிருந்தான். நரதுவுக்குத் தேநீர் எடுத்து வந்தாள் தம்மா. அவளை அன்று உற்றுப் பார்த்தான். சந்தா சொன்னது உண்மைதான். இவள் சிறுபெண் அல்ல. மார்பு விரிந்து, இடை இடுங்கி, புட்டம் பரவியிருந்தது. அதே சமயம் இவள் சந்தாவைப் போல் இல்லை. ஏனோ தானோ என்றில்லாமல் இயற்கை இவளை இழைக்க மெனக்கெட்டிருந்தது.
சந்தாவும் கல்யாணத்தின் போது இப்படித்தான் இருந்தாளோ என யோசித்தான் நரது. இருக்கலாம். அழகியோ இல்லையோ இவள் புதிய பொருள், கை படாத கன்னி உடல்!
தம்மா பாத்திரத்தில் இருந்து குவளை நிறைய தேநீரை ஊற்றினாள். ஆவி பறக்க, அதன் முழுமை சிந்தாமல் கவனமாக எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த நரதுவுக்கு அந்த நிதானமும் நளினமும் என்னவோ செய்ய, தேநீர்க் குவளையை வாங்காமல் சட்டெனத் தம்மாவை இறுகக் கட்டி அணைத்தான்.
அவள் பதறிக் குவளையைத் தவற விட்டு அவனை உதறி விலகினாள். சூடான தேநீர்த் துளிகள் சிதறி ரத்த நந்தகாவின் முதுகில் விழுந்து தெறித்தன. கண் மூடிப் படுத்திருந்த யானை தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்து விட்டு, மறுபடி படுத்துக் கொண்டது.
நரது அவளது மென்மையான கரங்களைத் தனது வலுக்கொண்ட கையால் பற்றினான். அந்த அதிர்வில் பாத்திரம் கீழே விழுந்து தேநீர் மண்ணில் வீணானது. தம்மா கத்தினாள்.
“ஐயோ, என்ன செய்கிறீர்கள்?”
“தம்மா உனக்கு உலகின் உச்சமான உன்னதமான இன்பத்தைக் காட்டுகிறேன், வா.”
“நீங்கள் என் தந்தை போன்றவர்.”
“ஆனால் நான் உன்னை என்றுமே என் மகளாக மனதில் வரித்ததே இல்லை, தம்மா.”
“உங்களுக்குத்தான் மகவே இல்லையே!”
தம்மாவின் குரலில் இருந்த ஏளனம் நரதுவைக் கீறியது. அவன் சீற்றமாகச் சொன்னான்.
“அது உன் அக்காளின் இயலாமை. அதை நிரூபிக்கத்தான் நீ எனக்கு உதவப்போகிறாய்.”
“…”
“என் உயிர்த் துளிகளை உன்னில் விதைத்துக் கருவாக்குவேன். அப்போது என் பத்தினி சந்தாவுக்கும் என் சுற்றத்துக்கும் நட்புக்கும் இந்தப் புல், பூண்டு, புழு, பூச்சி, வெண்களிறு உள்ளிட்ட மொத்த உலகிற்கும் தெரியும் என் ஆண்மையில் குறையேதும் இல்லை என.”
“ச்சீய்…”
தம்மாவின் கண்களில் நீர் முட்டியது. அவள் நிஜமாகவே நரதுவை தந்தை ஸ்தானத்தில் வைத்தே பார்த்திருந்தாள். பல்லாண்டுகள் முன் அவன் சந்தாவைக் கல்யாணம் செய்த போது அவன் மீது தம்மாவுக்கு ஒரு வசீகரம் இருந்ததுதான். ஆனால் அது புதிதாகக் காணும் அந்நிய ஆணின் மேல் ஒரு சிறுமிக்கு ஏற்படும் ஆர்வம் மட்டுமே எனப் புரிந்து போய் பிற்பாடு யானையை நிர்வகிக்கும் அவனது தொழிற்திறன், அக்காவின் மீது அவன் காட்டும் அலாதிப் பிரியம் எல்லாம் வைத்து மரியாதைதான் அதிகம் இருந்தது.
எல்லாம் மிகச் சில கணங்களில் நொறுங்கிப் போய்க் கிடக்கிறது. இன்னமும் அவளால் நரதுவின் அந்தச் செய்கையை நம்பவும் இயலவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை.
அப்போது மின்சா அங்கே வர, தன் கையைப் பற்றிக் கொண்டிருந்த நரதுவின் கரத்தை விடுவித்துக் கொண்டு கீழே கிடந்த குவளையையும் தேநீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிப் போனாள் தம்மா. நரது மின்சாவைப் பார்த்து முறைத்தான்.
மின்சா சூழல் புரிந்து ஏதும் பேசாமல் யானையின் மீது சிந்தியிருந்த தேநீர்க் கறையைத் துடைத்துச் சுத்தம் செய்தான். நிலத்தில் கொட்டியிருந்த தேநீர் உலரத் தொடங்கியது.
*
உண்மையில் இது நரது மனதில் அல்லது உடலில் உண்டான ஒரு தற்காலிகச் சலனம் என்றும் நாட்கள் போகக் கரைந்து காணாமல் ஆகிடும் என்றே நம்பியிருந்தாள் தம்மா. ஆனால் நாட்கள் போகப் போக அவனது வேட்கை அதிகரித்தபடியேதான் இருந்தது.
நரது கிட்டத்தட்ட தினம் ஏதாவது சந்தர்ப்பத்தில் தம்மாவைச் சீண்டினான். தொடுகை, அணைப்பு, முத்தம் என மெல்ல அவனது அராஜகங்களின் எல்லை விரிந்து கொண்டே போனது. அவளது பகல்கள் நரகமாகின; விடியல்கள் வெறுப்புக்கு உரியதாக மாறின. எங்கிருந்து எங்கே நரது தீண்டுவான் என்ற அச்சத்திலேயே தினங்களின் கணங்கள் யாவும் தீர்ந்தன. நரதுவுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்தாள்.
ஒரு கட்டத்தில் மின்சா அருகே இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இது நடந்தேறியது. மின்சா ஒன்றும் செய்யவியலாமல் பல்லைக் கடித்தான். சில சமயம் நரதுவை அடித்துப் போட்டு விட்டு தம்மாவை அழைத்து வெளியேறி விடலாம் என்று வெறியேறும். ஆனால் அதற்குப் பின் எப்படிப் பிழைப்பது? அதுவும் தம்மாவைத் துன்புறுத்தவே செய்யும் எனப் பொறுத்துக் கொண்டான். தவிர, ரத்த நந்தகாவின் வழியாக நரதுவுக்கு அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்குக்கு என்ன வேண்டுமானாலும் தங்களைச் செய்ய முடியும். ஒருத்தி மீது காமப் பித்தேறிய ஆண் பசியிலிருக்கும் புலியை விடக் குரூரமானவன், எந்த நியாய தர்மமும் அவன் யோசனையில் இராது. தன் இலக்கை எய்த எந்தப் பாவமும் செய்யத் தயங்க மாட்டான். எனவே தம்மாவிடம் நரது அத்துமீறும் போதெல்லாம் தன் கண்களை மூடிக் கொண்டான், காதுகளை மூடிக் கொண்டான், மனதையும் மூடிக் கொண்டான்.
சந்தாவிடம் மட்டும் இதைக் கவனமாக மறைத்தான் நரது. அது அவள் மீதான பிரியமா, பயமா எனத் தம்மா யோசித்தாள். இரண்டும் இல்லை, இரவின் தேவைதான் என்று புரிய அதிக காலம் எடுக்கவில்லை. தம்மாவும் அதைச் சந்தாவிடம் சொல்லி அவள் மனதை உடைக்க விரும்பவில்லை. பிள்ளைப் பேறில்லை என்பதைத் தாண்டி அவர்கள் வாழ்வில் பிரச்சனை ஒன்றுமில்லை. இதைச் சொல்வது அவர்களிடையே நிரந்தரப் பிரிவைக் கூட உண்டாக்கலாம். ஆனால் இதற்கு முடிவு என்ன என்பதும் தம்மாவுக்குத் தெரியவில்லை. தாளவியலாமல் என்றேனும் அவளிடம் சொல்ல வேண்டி வரும் என்பது மட்டும் புரிந்தது.
ஆனால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரியாத அளவு பெண் நுண்ணுணர்வு அற்றவள் கிடையாது. அதுவும் தனக்கு உரியவனின் பிறழ்வுகள் அவளுக்குப் புரியாமல் போவதே இல்லை. சந்தா மிகச் சீக்கிரத்திலேயே நரது தனது தங்கையைப் பெண்டாள நினைப்பதைப் புரிந்து கொண்டாள். ஆனால் அதை அவர்கள் இருவரிடமுமே காட்டிக் கொள்ளவில்லை. நரதுவுக்குத் தெரிந்தால் அதன் பிறகு இருக்கும் தயக்கம் போய், தன் முன்னாலேயே அக்கிரமங்களை நிகழ்த்தக்கூடும், மணம் செய்து கொள்கிறேன் எனத் தன்னையே அதற்குத் துணை போகக் கேட்கக்கூடும். தெரியாத வரைதான் குற்றத்தை மறைத்துச் செய்யும் மரியாதை எல்லாம். தம்மாவிடமும் என்னவென வெளிப்படுத்திக் கொள்வது? அவள் தீர்வு கேட்க மாட்டாளா? பொறுத்துப் போ என்பதைத் தவிர என்ன தீர்வு என்னிடம் இருக்கிறது? தனக்குள்ளையே வைத்துப் புழுங்கி மனம் குமுறினாள்.
இயற்கை தீர்வையும் பிரச்சனை வடிவில்தான் கொடுக்கும். ஓர் இரவு சந்தாவுடனான கலவி முடிந்து அவள் அயர்ந்து உறங்கிய பின் பின்னிரவில் நரது சப்தமெழுப்பாமல் தம்மா படுத்திருக்கும் வலப்புற அறைக்கு நழுவினான். அங்கே தூங்கிக் கொண்டிருந்த தம்மாவின் மார்பை மூடியிருந்த மேலாடையின் முடிச்சுகள் ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாக, எந்த அசைவோ ஓசையோ இன்றி மிக லாகவமாக அவிழ்த்தான். அவன் விரல் இறுதி முடிச்சை அவிழ்த்த கணம் பதறி விழித்துக் கொண்டு அலறினாள் தம்மா.
அது அடுத்த அறையிலிருந்த சந்தாவையும் துயிலெழுப்பி விட்டது. அவசரமாக எழுந்து ஓடி வந்தாள். தம்மா அறையின் மூலையில் நின்று தன் மேலாடை திறந்திருக்க இரண்டு கரங்களையும் மார்புக்குக் குறுக்கே வைத்து மறைத்தபடியே அழுது கொண்டிருந்தாள்.
நரது மௌனமாக அந்த அறையிலிருந்து நீங்கினான். சந்தா ஒன்றும் சொல்லவில்லை. தம்மாவைப் படுக்கச் சொல்லி விட்டு அவளருகே படுத்துக்கொண்டாள். தம்மா அவளை அணைத்துக் கொள்ள, சந்தாவின் விழிகள் அந்த இரவு முழுக்க கண்ணீரைச் சொரிந்து கொண்டே இருந்தன. தம்மாவும் கூட நெடுநேரம் விழித்துக் கொண்டுதான் இருந்தாள். அந்தக் கண்ணீர் தன் பொருட்டு என்பது அவளுக்குக் குற்றவுணர்ச்சியை அளித்தது.
சந்தா பிறகு அது பற்றி நரதுவிடம் ஏதும் கேட்கவில்லை. தம்மாவிடமும் பேசவில்லை.
சந்தாவுக்கு அவ்விரவின் அசம்பாவிதத்தில் ஓர் உறுத்தல் இருந்தது. தம்மாவின் சம்மதம் அல்லது ஒத்துழைப்பு இல்லாமல் அவ்வளவு இறுக்கமான மேலாடை முடிச்சுகளை நரது அவிழ்த்திருக்க முடியுமா என. தம்மா சிறுவயதிலிருந்தே சன்னச் சலனத்துக்கும் தூக்கம் கலைபவள். ஆழ்ந்த நித்திரையில் இருக்கையில் அது சாத்தியம்தான் எனச் சமாதானம் செய்து கொண்டாள். இல்லை என்றால் தம்மா ஏன் அலறி ஊரைக் கூட்டப் போகிறாள்? சத்தம் காட்டாமல் மேற்கொண்டு காரியம் ஆற்றியிருக்கலாமே! ஒருவேளை இடையில் மனம் மாறி விட்டாளோ! சந்தாவின் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை.
இரண்டுங்கெட்டான் வயதுடைய தம்மாவுக்கு நரது மீதான ஈர்ப்பு எந்த வகையிலும் வந்திருக்கலாம். அவன் திண்மையாக உடலைப் பேணுபவன். அழகன் எனச் சொல்லும் அளவு சிறப்பான முகவெட்டு உடையவன். அவன் மீது எந்தப் பெண்ணுக்கும் கவர்ச்சி தோன்றவே செய்யும். தம்மா அருகே இருந்து அவனது முழு ஆகிருதியைப் பார்த்தவள்.
இன்னொரு விஷயம் தினமும் சந்தாவைக் கலவி செய்பவன். தடுப்புகள் உண்டெனினும் அது ரகசியங்கள் பேண முடியாத குடில். சந்தாவும் நரதுவும் புணர்ந்த தருணங்களின் காட்சிகளோ ஒலிகளோ விபத்தாகத் தம்மாவை அடைந்திருந்தால் வியப்பில்லை. இவை யாவும் ஒரு பதின்மப் பெண்ணுக்கு அந்த ஆடவனின் மீது மோகமேறவே வழி கோலும்.
அதுவும் அவனே அவளை அணுகும் போது உடலைத் திறப்பதற்கு அவளது மனம் இளகக் கூடும். அதனால் தம்மா நரதுவுக்கு இணங்கி விடக்கூடாது என்பதே சந்தாவின் பிரதானக் கவலை. ஆனால் தம்மா மின்சாவைக் காதலிக்கிறாள். அதன் பொருட்டேனும் நரதுவின் இச்சைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவே விழைவாள் என்று சமாதானம் கொண்டாள்.
மற்றபடி, தம்மா நரதுவின் பக்கம் சாய முடிவெடுத்து விட்டால் எதுவும் அதைத் தடுக்க முடியாது என்பது சந்தாவுக்குப் புரிந்தே இருந்தது. அடைத்து வைத்தாலும் பயனில்லை, பெண் தன் விருப்பம் நிறைவேற்றிக் கொள்வாள். சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்!
ஆனாலும் தன்னால் ஆனதைச் செய்து இருவரையும் விலக்கி வைக்கத் தீர்மானித்தாள்.
சந்தா இரவுகளில் தம்மாவை அணைத்துப் படுத்துக் கொண்டாள். அதாவது நரதுவுடன் கலவி முடிந்ததும் எழுந்து பக்கத்து அறைக்கு வந்து தம்மாவுடன் படுத்துக் கொள்வாள். அது நரதுவுக்கு எரிச்சலை ஊட்டினாலும் அதைக் கேட்க அவனுக்குத் திராணியில்லை.
சந்தா எப்போதும் அவளைத் தன் கண்காணிப்பு வட்டத்திலேயே வைத்துக் கொண்டாள். அது தம்மாவுக்குச் சற்று சங்கடம் ஊட்டியது. சந்தாவிடம் ஏதோ உறுத்தல் இருப்பதைக் கண்டுகொண்டாள். சந்தாவின் கவலை நரது தம்மாவைப் புணர்வது பற்றியதா அல்லது அதன் விளைவாக தம்மா கர்ப்பமுற்று, குறை சந்தா மீதுதான் என்று நிரூபணமாவது பற்றியதா என யோசித்தாள் தம்மா. அப்படியே முதல் விஷயம்தான் கவலை என்றாலும் அது தன் புருஷன் இன்னொருத்தியை நாடிப் போய்த் தன்னை அவமதிப்பது பற்றியதா அல்லது தங்கை வாழ்க்கை அவளது விருப்பமின்றிச் சீரழிகிறதே என்பது பற்றியதா?
தலை வலித்தது. ச்சே, அவள் என் அக்கா. அவளையா சந்தேகிப்பது? அதுவே அவளுக்கு இழைக்கும் துரோகம்தானே! அன்றைய நெடிய இரவில் தன்னை நனைத்துக் கொண்டே இருந்த சந்தாவின் கண்ணீர்த்துளிகள் தனக்கானவைதாம் என எண்ணிக் கொண்டாள்.
*
அந்த இரவால் ஒரு நன்மை நேர்ந்தது. நரதுவின் தொந்தரவுகள் மட்டுப்பட்டன. முற்றிலும் நிற்கவில்லை என்றாலும் முந்தைய அளவுக்கு அதிகமாக இல்லாமல் குறைந்தன. அவன் சந்தாவிடம் இணக்கம் பேண விரும்புகிறான் என்பதே அதிலிருக்கும் செய்தி என தம்மா புரிந்து கொண்டாள். ஆனால் அது தற்காலிகமாக இருக்கலாம். பாய்வதற்குப் பதுங்கும் புலியாகவும் இருக்கலாம், புயலுக்கு முந்தைய அமைதியாகவும் இருக்கலாம். எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை துரிதமாக இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும்.
தம்மா தொடர்ச்சியாக இச்சிக்கலுக்கு வழிகள் யோசித்தாள். அக்கா வெளிப்படையாகப் பேசினால் அவளிடம் ஆலோசனைகள் கேட்கலாம். ஆனால் அவளோ இப்போதெல்லாம் ரொம்ப அமைதியாகி விட்டாள். ஏதாவது தேவை என்றால் மட்டுமே பேசுகிறாள். எனவே தனியாகவே குழம்பினாள். ஒரு நாள் தீர்மானம் செய்தவளாக மின்சாவிடம் பேசினாள்.
“மின்சா, நான் நரதுவிடம் நம் காதலைப் பற்றிச் சொல்லி விடப் போகிறேன்.”
“அவசரப்படாதே, தம்மா...”
“அஞ்சுகிறாயா, மின்சா?”
“நிச்சயம் இல்லை. பொறுமை காக்கச் சொல்கிறேன். நமக்குக் காரியமாவது முக்கியம். நிதானமாகக் காய் நகர்த்திச் சேர்ந்து வாழ ஏதுவான சூழலை அமைத்துக் கொள்வோம்.”
“ம்.”
“யோசித்துப் பார். நாம் இருவருமே பதின்ம வயதைத் தாண்டவில்லை. எனக்குள்ள ஒரே வருமானம் இங்கே நரதுவிடம் உதவியாளனாக இருப்பதை ஒட்டித்தான். இப்போது நம் விஷயம் அவனுக்குத் தெரிய வந்தால் என்னை வேலையிலிருந்து அடித்து விரட்டுவான். உன் மனம் காதலில் உழல்வதை அறிந்தால் இப்போது சில்லறைத் தொந்தரவு என்ற அளவில் செய்து கொண்டிருப்பவன் உன்னை உடனே அடைய ஏதும் செய்து விட்டால்?”
“அதாவது நரது என்னை இப்போது செய்யும் சுரண்டல்கள் உனக்குப் பொருட்டல்ல?”
“அப்படி இல்லை, தம்மா. இதை வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கும் எனது கையறு நிலையை எண்ணிக் குமையாத நாளில்லை. நான் ஓர் ஆண்மகன்தானா என என்னை நானே வசை பாடிக் கொண்டு குற்றவுணர்வில் உழல்கிறேன். சில சமயம் தற்கொலை எண்ணங்கள் உதிக்கின்றன. சில வேளைகளில் நரதுவைக் கொலை செய்து விடலாமா என்றும் தோன்றுகிறது. ஆனாலும் ஏதும் செய்து வீரியம் காட்டாதிருக்க ஒரே காரணம் - நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னோடு வாழ விரும்புகிறேன். இவற்றை ஒரு வெறி நாய்க் கடி போல், ஒரு மோசமான விபத்து போல். துர்சொப்பனமாக எண்ணிக் கடந்து விடவே விரும்புகிறேன். நீயும் அப்படி இருப்பதேமன உளைச்சல் இல்லாத எதிர்காலம் காண ஒரே வழி. மாறாக நீ எதிர்த் திசையில் பேசி மேலும் என்னைப் புண்படுத்தாதே.”
“ம்.”
“அதனால் அவசரப்படாதே. நாம் இங்கே சேர்ந்து வாழ இயலாது. பொருளாதாரரீதியாக நாம் வெளியே போய் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எனக்கு வெளியே ஏதாவது வேலை வாய்க்க வேண்டும். அப்படிக் கிடைத்த மறுநாளே இங்கே இருந்து ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வோம். அப்புறம் தொந்தரவு கிடையாது.”
“அப்படிப் போனால் மட்டும் விட்டு விடுவானா? நரதுவின் செல்வாக்கு தெரியாதா?”
“ஆம். அவன் நம்மை விரட்டி வரக்கூடும். தொந்தரவுகள் தரக்கூடும். ஆனால் அப்போது நமக்கு ஆதரவு வரும் என நம்புகிறேன். சுற்றத்திடம், அரசாங்கத்திடம், வெகுமக்களிடம். அந்த நம்பிக்கைதான். நாம் எதையாவது பற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும், தம்மா.”
அரை மனதாய்த் தலையாட்டினாள். மின்சாவுக்கு வேலை கிடைத்ததும் அங்கிருந்து போய் விடலாம் என்ற யோசனை அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் தேடாமல் பணி கிட்டாது. யாரும் வந்து அவனை வேலைக்கு அழைக்கப் போவதில்லை. இங்கிருந்தபடி வேலை தேட மின்சாவால் முடியாது. அவன் அத்தனை சூதானமானவனும் அல்லன்.
தம்மா தீர்மானித்தாள். சந்தாவிடம் போய் நின்றாள். மொத்தக் கதையும் ஒப்பித்தாள். மின்சாவுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இருவரும் தப்பிப் போக உதவ வேண்டும் என்றும் கோரினாள். சந்தாவின் கண்களில் ஓர் ஒளி தெரிந்தது.
நரதுவின் மீது தம்மாவுக்கு ஆசை இல்லை என்பதே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள். அது வரையில் அவளை நரதுவிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னாள். அவர்களின் காதல் விஷயம் அவனுக்குத் தெரியாமலும் கவனமாக இருக்கச் சொன்னாள். யோசிக்க ஆரம்பித்தாள்.
தம்மாவின் தாய் அவள் பிறந்த ஓராண்டிலேயே கொள்ளை நோய் கண்டு மாண்டாள். அப்போது தம்மா பால் குடியைக் கூட நிறுத்தியிருக்கவில்லை. அன்றிலிருந்து சந்தா அவளுக்கு அம்மாவானாள். தம்மாவின் அப்பா சந்தாவுக்குத் திருமணமான மிகச் சில மாதங்களில் காட்டில் மரம் வெட்டப் போகையில் நெடிய, கரிய பாம்பு ஒன்று தீண்ட, வெண்ணுரை கக்கிச் செத்துப் போனார். அப்போது இல்லத்தில் இருந்த ஒரே ஆணான புது மாப்பிள்ளை நரதுவைத் தகப்பனின் இடத்தில் வரித்துக் கொண்டாள் தம்மா. நரது, சந்தாவுக்குப் பிள்ளை இல்லை என்றதும் அவர்களின் வாரிசாகவே ஆகிப் போனாள்.
காமப் பித்தேறி நரது அதிலிருந்து பிறழ்ந்தாலும் தம்மா மீதான பார்வையை சந்தா மாற்றவில்லை. எனவே அவளுக்கு மகளைக் கரை சேர்க்கும் பெரும் கடனிருந்தது.
மிகுந்த சிரமத்திடையே சந்தா தனது தந்தை வழித் தொடர்புகளைக் கண்டடைந்தாள். அவர்கள் மூலம் மின்சாவுக்கு வேலை தேடினாள். அதை நரதுவின் செவிகட்குப் போய்ச் சேராமல் செய்து முடிக்க வேண்டும் என்பதே பெரிய சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா உறவினர்களுக்கும் அவனோடு பழக்கம், தொடர்பு இருந்தது. அவள் அவர்களைத் தொடர்பு கொண்டதுமே விஷயம் நரதுவுக்குத் தெரிய வந்து விடும் என்பதாக இருந்தது. எனவே சர்வ கவனத்துடன் தேடினாள். சரியாக மூன்று திங்களில் வேலை வாங்கினாள்.
தலைநகரில் மாமன்னன் பயின்னவுங்கின் படைத் தளபதிகளில் ஒருவராகச் சமீபத்தில் பொறுப்பு ஏற்றவரின் குதிரை லாயத்தைப் பராமரிக்கும் வேலை. மின்சா மணமானவன் என்று சந்தா ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் அந்த மாளிகைக்கு உள்ளேயே பணியாளர்கள் தங்குமிடத்தில் அவன் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முதல் தடை நீங்கியது. அடுத்து அங்கிருந்து விடுவித்துக் கொள்தல். இப்போது மூவரும் அவ்வப்போது ஒன்று கூடிப் பேசினார்கள். நிதானமாகத் திட்டமிட்டார்கள். சந்தாவின் யோசனைகள் கேட்க தம்மாவுக்கு வியப்பாக இருந்தது. எத்தனை குற்றத் தீவிரத்துடன் யோசிக்கிறாள்! வீட்டில் சோறாக்கி வைத்து, மல்லாக்கப் படுத்துப் பிள்ளைக்கு ஏங்கிக் கொண்டிருந்த அப்பாவியா இவள் என வியந்தாள். ஒரு பெண் தன் கணவனைக் காத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வாள் என்று என்ணிக் கொண்டாள். எதிர்காலத்தில் மின்சா இப்படி ஏதும் தடுமாறினால் தான் எப்படி எதிர்கொள்வேன் என யோசித்தாள்.
இருள் திருட்டுத்தனத்தின் நற்துணை. அமாவாசை அன்று நள்ளிரவுக்குப் பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தலைநகரை நோக்கிக் கிளம்புவது என முடிவானது. தான் சிறுகச் சேர்த்திருந்த சிறிய தொகையை எடுத்து தம்மாவிடம் கொடுத்துச் சொன்னாள் சந்தா -
“நம் பெற்றோர் இன்றில்லை. நான் உன் தாய் ஸ்தானத்தில் இருந்து நகை, உடை போட்டு உனக்குத் திருமணம் முடிக்க வேண்டும். இன்று அதற்குச் சூழல் இல்லை. எனவே இந்தப் பணத்தை வைத்துக் கொள். இது என்னாலான சீதனம். நீங்கள் வாழ்க்கை தொடங்கவும், பிற்பாடு அவசரத் தேவைகள் வந்தாலும் இது உதவும். ஆனால் கவனமாகச் செலவழி!”
“…”
“என் அறிதலில் மின்சா நல்லவன். அப்பாவி. நீ வளைப்பதற்கேற்ப வளைவான். அவனை வெற்றிகரமானவனாக ஆக்குவது உன் கையில்தான் இருக்கிறது. முடிந்த அளவு உந்து. அவன் முன்னேறட்டும். ஆனால் எப்போதும் அவனை உன் கைக்குள் வைத்திரு. நீ வயது வந்தவள். நான் சொல்லித் தரப் பெரிதாக ஒன்றுமில்லை. வித்தை தானாக வசப்படும்.”
“…”
“உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதே. குழந்தை - அதுதான் உன் வாழ்க்கையை நிச்சயமாக்கும். உனக்குப் பாதுகாப்பினை அளிக்கும்.”
தம்மாவின் வயிற்றில் கரம் வைத்து சந்தா ஆவேசமாகச் சொல்லி விட்டு அழுதாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள் தம்மா. நெடுநேரம் பிரியவே இல்லை.
*
(தொடரும்)
பெருங்களிறு [குறுநாவல்] - 1
மலைப் பாறையில் படர்ந்து பரவும் அருவியாய் இரவு மீது இருள் தழுவிக் கிடந்தது. யாகத்தின் மந்திர உச்சாடனம் போல் ராப்பூச்சிகள் சதா உளறிக் கொண்டிருந்தன.
ரத்த நந்தகாவின் பரந்த முதுகின் மீது ஏறி அமர்ந்த போது தம்மாவுக்குக் கால்களின் சங்கமத்தில் குறுகுறுவென ஓர் உணர்வு ஓடியது. முதலில் அந்த வெண்யானையின் ரோமக் கம்பிகள் தன் அந்தரங்கத்தில் குத்துவதாகத் தோன்றி, இடுப்பாடை அள்ளிச் செருகித் தடுப்பு செய்தாள். அப்போதும் அந்த வினோதக் குறுகுறுப்பு நீங்கவில்லை.
எனில் அது இல்லை. வேறு என்ன? யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடி வலி தாங்கிய சில கணங்களில் குருதி கசியப் பூப்படைந்தாள். அஃது புரிந்தோ புரியாமலோ வெள்ளைக் களிறு பிளிறியது!

அந்த வாலைக் குமரியின் அறியாமையை, ஆர்வத்தை புது வனப்பும் மிகு வெட்கமும் ஆட்கொண்டன. அவளுக்குப் பின் அமர்ந்து, ஒரு கையில் அங்குசத்துடன் மறுகரத்தை அவளது வறிய இடையைச் சுற்றித் தயக்கமாகப் போட்டிருந்த மின்சாவைச் சட்டெனத் தள்ளி விட்டு யானையின் முதுகிலிருந்து சரிந்திறங்கி குடில் நோக்கி ஓடினாள் தம்மா.
மின்சா புரியாமல் விழித்தான். ஏன் இவள் இப்படித் திடீரெனப் பரபரத்து ஓடுகிறாள்? அவளாகத்தானே ரத்த நந்தகா என்கிற அந்த வெண்வாரணம் மீதேறிச் சவாரி போக வேண்டும் என இந்தப் பின்னிரவில் ரகசியமாகத் தன்னை இங்கே அழைத்து வந்தாள்!
தம்மா இறங்கியதும் ஆர்வம் தீர்ந்தது என்பது போல் ரத்த நந்தகா தன் பிரம்மாண்ட உடலை மெல்லச் சிலிர்த்தது. மின்சா தடுமாறி, அவசரமாகக் கீழே சறுக்கினான். ஒரு ராட்சசப் பட்சி இறகை உதிர்ப்பது போலிருந்தது அக்காட்சி. மின்சா எரிச்சலுற்றாலும் அதன் செயல் ஆச்சரியமளிக்கவில்லை. அது வந்த நாளிலிருந்து அப்படி முரடாகத்தான் இருக்கிறது. மாறாக, அவனுக்கு வியப்பளித்தது சற்று முன் அவனும் தம்மாவும் வந்து அதன் அருகே நின்ற போது இருவரும் அதன் மேலேறச் சாதுவாக ஒத்துழைத்ததுதான்.
விழுந்ததில் நேர்ந்த முழங்கால்ச் சிராய்ப்பைப் பொருட்படுத்தாமல் மின்சாவும் அவள் பின்னே ஓடினான். கடந்த மூன்று மாதங்களாக அவன் அவள் பின்னால் அப்படி ஓடிக் கொண்டுதான் இருக்கிறான். காதலா என்று கேட்டால் அப்படியும் சொல்ல முடியாது.
அவள் இன்னும் வயதுக்குக் கூட வரவில்லை. அவளைக் காதலிப்பதாகச் சொன்னால் அந்தக் கிராமம் ஒன்று கூடி, தலை குனிந்து நிற்கும் அவனைச் சூழ்ந்து நின்று, நெடிய அறிவுரைகள் சொல்லும். அவனுக்கு மட்டும் என்ன, அவளை விட ஐந்து வயது அதிகம். இப்போதுதான் மீசையே முளைக்கிறது. அதனால் என்ன? மணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு எல்லாம், காதலுக்கு எதற்கு என்று தோன்றியது. தவிர, தம்மாவும் இன்றோ நாளையோ ருதுவாகாமலா போய் விடுவாள்! பெருமூச்சு விட்டான் மின்சா.
தம்மா குடிலுக்குள் ஓடிப் போய் விட்டாள். குடிலில் விளக்கு தூண்டப்பட்டது தெரிந்தது. அவளது அக்காள் சந்தாவை எழுப்பி இருக்கிறாள். ஏன்? புரியவில்லை. திருட்டுத்தனமாக வந்தவள் திடீரெனப் பயந்து போய்த் திரும்பி விட்டாள் என்று வைத்துக் கொண்டாலும் உறங்கிக் கிடந்த சகோதரியை ஏன் அகால வேளையில் எழுப்ப வேண்டும்? எப்படியும் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்றே தோன்றியது மின்சாவுக்கு. அப்படிச் செய்தால் அவளும் மாட்டிக் கொள்வாள் என்பது ஒரு புறம். தம்மாவின் தங்கம் நிகர்த்த குணம் அப்படிப்பட்டது என்ற புரிதல் இன்னொரு பக்கம். அதுவே அவனை ஈர்த்தது.
இதற்கு மேல் அங்கே அவன் நின்று கொண்டிருப்பது நல்லதல்ல. நரது மட்டும் பார்த்து விட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டான். அவசரமாக மறுபடி ரத்த நந்தகா இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தான். அதை மெல்ல நடத்தி கொட்டடிக்கு அழைத்து வந்து அடைத்தான். அதன் பக்க வாட்டில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் படுக்கை என்று உளமாறச் சொல்ல முடியாது. உலர் வைக்கோல் திணிவாலான அடுக்கு. கண் செருகும் வரை தம்மா பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.
பிடித்த பெண்ணை நினைத்துக் கொள்வதை விட ஒரு போதை கண்டறியப்படவில்லை.
*
புத்தர் வாழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்து பௌத்த மார்க்கம் பூமிப் பரப்பில் ஆங்காங்கே செழித்திருந்த காலகட்டம். பர்மா எனும் தேசத்தில் தவுங்கூ எனும் ராஜ்யம் நடந்திருந்தது. அதோடு ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி போலிருக்கும் சியாம் நாட்டில் அயுத்தயா ராஜ்யம் நடந்திருந்தது. பர்மாவை பேரரசன் பயின்னவுங் ஆண்டிருந்தான். சியாமின் மாமன்னன் மஹா சக்கரபத். இருவருக்கும் மாளாப் பகை. அஃது இரண்டு நிலங்களின் முரணாகத் திரண்டு யுத்தங்கள் நிகழ்ந்தன. பதினைந்து ஆண்டுகள் முன் பர்மா போரெடுத்து ஆக்ரமிக்க முயற்சி செய்த போது, சியாம் தற்காத்துக் கொண்டது.
அப்போது பயின்னவுங் பர்மாவின் இளவரசனாக இருந்தான். அத்தோல்வி அவனுக்குள் புகையிலைக் கங்கு போல் கனன்று கொண்டே இருந்தது. தவுங்கூ ராஜ்யத்தை பர்மா தாண்டி விரித்து எழுத வேண்டும் என்பது அவனது பெருங்கனவு. மன்னனாகப் பட்டம் சூடியதுமே அதற்கான முயற்சிகளில்தான் முதலில் இறங்கினான். கங்லெய்பாக், லான் நா, சீனத்தின் ஷான் மாகாணங்கள் என பர்மாவைச் சுற்றி இருந்த சகல நாடுகளையும் போரிட்டுத் தன் வசமாக்கினான். பர்மாவின் வரலாறு அதுகாறும் கண்டிராத மானுட சக்திப் பெருவெடிப்பாக பயின்னவுங்கின் திக்விஜயங்கள் அமைந்தன. தென்கிழக்கு ஆசியாவின் பெரிய சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோட்டைக் குருதியால் வரைந்தான்.
மஹாராஜன் பயின்னவுங்குக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரே மண் சியாம்!
அது அவனது மனதில் கிடந்து சதா உறுத்திக் கொண்டே இருந்தது. இடையே அவனது தினவுக்குப் பதிலளிக்க வந்த யாழ தேவி மூன்றாவது மனைவியாக மாறிப் போனாள். முதலிரு ராணிகளின் செல்வாக்கைப் பெருமளவில் அழித்தொழித்து மேலேறிய பிறகு அவள் பயின்னவுங் காதில் ஓதினாள் - அவன் பர்மாவை மாபெரும் சாம்ராஜ்யமாகக் கட்டியமைக்க வேண்டுமெனில் இறை நிமித்தம் அவன் பக்கம் இருந்தாக வேண்டும்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், தேவி?”
“வெள்ளை யானைகளை அடைய வேண்டும்.”
“என்ன?”
“பக்கத்திலிருக்கும் சியாமின் அயுத்தயா ராஜ்யத்தில் நான்கு வெள்ளை யானைகள் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டைச் சினேகமாகவே கேட்டு வாங்குங்கள்.”
“தருவார்களா?”
“மறுத்தால் பிடுங்குவோம்.”
“ஆனைக்குப் போரா!”
“இல்லை. ஆசிக்கு.”
“இதை எல்லாம் நீ நம்புகிறாயா?”
“சர்வ நிச்சயமாக. சக்ரவர்த்தி என்பவன் வெண் வாரணங்களின் அதிபதி என்பதை உறுதியாக நம்புகிறேன். வரலாற்றில் இருந்து இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். நமது பர்மாவின் வரலாற்றில் இருந்தும் சரி, சியாமின் சரித்திரத்தில் இருந்தும் சரி.”
“ம்ம்ம்.”
“தெரவாடா பௌத்தம் என்ன சொல்கிறது? நம் புத்தர் எப்படிக் கருவானார்? அரசி மாயா ஆறு தந்தங்கள் கொண்ட ஒரு வெள்ளை யானை தன் வயிற்றின் வலப்பகுதியில் புகுவது போல் கனவு காண்கிறாள். அப்புறம் பாரத நாடு தெரியுமல்லவா? அங்கு இந்து மதத்தில் தேவர்களின் அரசன் இந்திரன் என்பவனின் வாகனம் ஐந்து தலைகள், நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்ற வெண்களிறு. வெள்ளை யானை என்பது தெய்வாம்சம். அது நம்முடன் இருப்பது நமது வெற்றிகளையும் உறுதி செய்யும், உங்கள் பாதுகாப்பையும்.”
“பிரமாதம், தேவி. உனது வசீகரம் என்பது முலையில் மட்டுமல்ல; மூளையிலும்தான்.”
“நேற்று வேறொரு வசனம் சொன்னீர்களே!”
“என்ன அது? மறந்து போனேன், நினைவூட்டு.”
“மனதிலிருந்து வந்திருந்தால் மறக்குமோ?”
“வசனங்களை கேட்பவர்கள்தாம் நினைவில் நிறுத்துவார்கள். சொல்பவர்கள் அல்ல.”
“ம்.”
“சொல், அப்படி என்ன சொன்னேன்?”
“தாயின் மடியும் தாரத்தின் பிருஷ்டமும்தான் உலகின் மகத்தான தலையணைகள்.”
“அடடா! ஆனால் அது பிற்போக்குச் சிந்தனை, தேவி. இன்று முற்போக்குக்கான நாள்.”
சொல்லி விட்டு மல்லாக்கப் படுத்திருந்த யாழ தேவியின் மீதேறி அவளது ஆடைச் சுமை நீக்கினான் பயின்னவுங். நன்கு வளர்ந்த ஆண் யானையின் பரிசுத்தமான தந்தத்தைப் போல் பளீரிட்ட அவளது கொழுப்பு படர்ந்த வயிற்றில் முத்தமிட்டு விட்டுச் சொன்னான் -
“வெள்ளை யானைகளை அடைவேன். ஆனால் என் அதிர்ஷ்ட வெண்களிறு நீதான்!”
விடிந்ததும் அயுத்தயா ராஜ்யத்துக்குத் தூதுவனை அனுப்பினான் பயின்னவுங். மன்னன் மஹா சக்கரபத் சற்றும் யோசிக்காமல் மறுத்து பதிலனுப்பினான் - “சியாம் மண்ணின் வெண்களிறைத் தருவது நாட்டின் மஹாராணியைத் தருவதற்குச் சமானம். முடியாது. மறுத்தால் போர் மூளும் என்றால் அதையும் சந்திக்கத் தயார். வரலாறு திரும்பட்டும்.”
பயின்னவுங் உண்மையில் அந்தக் கணம் வரையிலும் யுத்தம் நடத்துகிற எண்ணத்தில் இருக்கவில்லை. ஆனால் அந்தக் கடைசி வரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பர்மாவின் தோல்வியை மஹா சக்கரபத் எள்ளலாக அடிக்கோடிட்டிருந்தது எரிச்சலை ஊட்டியது. யாழ தேவி மேலும் அவனைச் சீண்டி விட - “கேட்டுப் பெற்றால் இரு வெண் களிறுதான், வென்றெடுத்தால் நான்கும் நமதே!” - அவசரமாகப் போர் தொடங்கியது.
அயுத்தயா ராஜ்யம் அறுபதினாயிரம் பர்மியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. போர்த்துக்கீசியக் கப்பல்களையும் பீரங்கிகளையும் பயின்னவுங் இறக்கினான். மூன்று நாட்களில் சியாம் கோட்டை வீழ்ந்தது. அரசன் மஹா சக்கரபத் சரணடைந்து சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டான். அயுத்தயா அரசு தவுங்கூ ராஜ்ய ஆளுகைக்குக் கீழ் வர வேண்டும், மஹா சக்கரபத் பர்மாவில் கைதியாக இருக்க வேண்டும் என்பதோடு சியாமில் இருந்த நான்கு வெள்ளை யானைகளையும் பர்மாவுக்குத் தந்து விட வேண்டும்.
மஹா சக்கரபத்திடம் பயின்னவுங் சொன்னான்: “உன் மஹாராணியைப் பார்த்தேன். மாதவிலக்கு நின்று விட்டதா நிற்கப் போகிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் நீ இந்த அற்புதமான வெள்ளை யானைகளோடு அக்கிழவியை ஒப்பிட்டிருக்கக்கூடாது.”
பயின்னவுங் மீது வெறுமையாக ஒரு பார்வையை வீசினான் மஹா சக்கரபத். பிறகு சொன்னான்: “பொறுத்துப் பார், என் மண்ணின் யானைகள் உன் ராஜ்யம் அழிக்கும்.”
யாழ தேவியின் ஆலோசனைப்படி நான்கு வெண் யானைகளையும் தேசத்தின் நால் திசைகளிலும் இருத்தி வைக்க முடிவானது. அதுவே சகல திக்குகளிலும் நாட்டிற்கு வெற்றியையும் காப்பையும் அளிக்கும் என நம்பினாள். பர்மிய எல்லையிலிருந்து பாதுகாப்பான தொலைவில் கானகப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அங்கே யானை வாழும் நல்ல சூழல் கொண்ட வகையிலான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
அப்படிப் பர்மாவுக்கு வந்த நான்கு வெண் வேழங்களில் ஒன்று ரத்த நந்தகா. சியாம் தேசம் இருக்கும் மேற்கு திசையில் உள்ள வனப் பிரதேசத்தில் அது நிறுத்தப்பட்டது.
*
சுமார் இருபதாண்டு யானைப் பாகனாக இருந்து அனுபவமேறிய நரது ரத்த நந்தாவின் முதன்மைக் கவனிப்பாளனாகப் பணியமர்த்தப்பட்டான். அவன் குடும்பத்துடன் சிறப்பு முகாமுக்கு குடிபெயர்ந்தான். குடும்பம் என்பது அவன், அவனது மனைவி சந்தா, அவளது தங்கை தம்மா என்ற மூவர். அவர்கள் போக, அம்முகாமின் நீர், நிலம், மரம், மிருகத்தைப் பராமரிக்கச் வேலையாட்களும், காவல்காரர்களும் இருந்தார்கள். யாவரும் நரதுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அங்கே ஓர் நிலச்சுவான்தார் போல் இருந்தான் நரது.
முகாமின் மையத்தில் பெரிய கொட்டடி இருந்தது. உயரக் கூரை வேய்ந்த பரந்து விரிந்த இடம். அங்கிருந்து குரல் கேட்கும் தொலைவில் ஒரு குடில். அங்கே நரதுவின் குடித்தனம். சற்று தொலைவில் ஒரு பெரிய ஏரி. யானை குளிக்கவும் களிக்கவுமான நீர்நிலை அது. அது போக ஒரு கரும்புக் காடு, யானை திரிவதற்கேற்ற சிறிய வனப் பகுதி, முறித்து விளையாட ஏதுவான மூங்கில் மரங்கள் நிறைந்த பிரதேசம் எல்லாம் இருந்தது. அந்த முகாமைச் சுற்றிச் சற்று சீரற்ற வட்டமாக எல்லைக் கோடு இட்டது போல் முள் வேலி.
நரதுவுக்கும் சந்தாவுக்கும் திருமணமாகிப் பத்தாண்டுகள் தீர்ந்தும் மகவு இல்லை. அது பற்றிய குறை அவர்கள் இருவர் மனதிலும் வடுவாக இருந்தது. அது யார் மீதான குறை என்ற வினாவுக்குள் போகாமல் சுமூகம் காக்க தாம்பத்ய உறவுதான் துணை நின்றது. இருவரும் பரஸ்பரம் பிய்த்துத் தின்று பின்னிக் கிடக்காத இரவுகள் அரிது. சில சமயம் பகல்களும் கூட கூசிக் கண் மூடிக் கொண்டன. திகட்டாத இன்பத்தில் திளைத்தார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தும் சந்தாவின் வயிறு மட்டும் மௌனமாகவே இருந்தது.
மிகச் சில தினங்களில் யானையைக் கையாள நரதுவுக்கு உதவியாக இருக்க மின்சா அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்குப் பதின்மம் தீர்ந்து கொண்டிருந்தது; பதிலாக மீசை அடர ஆரம்பித்திருந்தது. மூன்று திங்கள்கள் முன் மின்சா முதலில் ரத்த நந்தகாவையும் பின் தம்மாவையும் ஒரே நாளில் பார்த்தான். இருவருமே தன் வாழ்வில் பெரும் மாற்றம் உண்டாக்கப் போகிறார்கள் என்பது முதல் பார்வையிலேயே புரிந்து விட்டது அவனுக்கு.
முதலில் தம்மா சிறுமி என்றே அவனுக்குத் தெரியவில்லை. பருவப் பெண்ணுக்குரிய அகலம் கொண்டிருந்தாள். பேசிப் பழக ஆரம்பித்த சில நாட்களில் விஷயம் புரிந்தது. ஒரு வகையில் மின்சா காத்திருந்தான். சொற்களில், செயல்களில் குழந்தையாகவும் குமரியாகவும் மாறி மாறி விளையாட்டுக்கள் காட்டிக் கொண்டே இருந்தாள் தம்மா.
ஆனால் தம்மா எந்த விகற்பமும் இல்லாமல் மின்சாவுடன் பழகினாள். அவளுக்கு அந்த வெள்ளை யானை மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ஆனால் நரது எவரையும் அதன் அருகே நெருங்க விடுவதில்லை. சந்தாவே அதனிடம் தள்ளித்தான் நிற்க வேண்டும். மின்சாவும் உடனிருந்து ஒத்தாசைகள் செய்யலாமே ஒழிய ரொம்ப நெருங்கச் சந்தர்ப்பம் இல்லை. அரச கட்டளையும் அதுவே. அது புனிதம். நரதுவே கூட அனாவசியமாக அதன் மீது ஏறக் கூடாது. அதன் மீது பொறுப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது; உரிமைகள் ஏதும் இல்லை.
தம்மா தனக்கும் ரத்த நந்தகாவுக்குமான பாலமாக மின்சாவைப் பார்த்தாள். அது போக, பாதுகாப்பு கருதி அந்த யானை முகாமிற்கு அருகே மற்ற குடியேற்றங்கள் ஏதுமில்லை. எனவே அத்தனித்த வனாந்திரத்தில் அவள் வயதொத்த ஒரே தோழனும் அவன் மட்டுமே.
தம்மாவுக்கு யானைகள் புதிதல்ல. நரது மட்டுமல்ல, அவளது தகப்பனாரும் காடுகளில் பிழைப்புப் பார்த்தவர்தான். ஆனால் அவள் அது வரை வெண் யானை என்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை. அதனால் ஆர்வமாக வந்தாள். அவள் முதலில் ரத்த நந்தகாவைப் பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது. அவள் எதிர்பார்த்து வந்தது வெள்ளை வெளேரென வான் மேகப் பொதி போல் ஒரு பிரம்மாண்டத்தை. ஆனால் ரத்த நந்தகா அத்தனை வெள்ளையாக இல்லை. வழமையான யானையின் வெளிறிய வடிவமாகவே இருந்தது. சற்றே சிவப்பும் கொஞ்சம் பழுப்பும் புணர்ந்து உருவான வண்ணம் கொண்டிருந்தது. முழுக்க நீரில் நனைந்து எழுகையில் ஒருவிதமான இளஞ்செம்மை நிறத்தை எட்டியது.
ரத்த நந்தகாவின் உடலில் அவள் எதிர்பார்த்தது போல் மாசு மருவற்ற வெண் வண்ணம் தரித்திருந்தது அதன் வளைந்த, வலுத்த தந்தங்கள் மட்டுமே. ஒவ்வொரு முறை அந்தத் தந்தங்களைக் காணும் போதும் தம்மாவுக்கு உடலெங்கும் ஒருவிதப் பரவசம் பரவும். அவற்றை ஸ்பரிசித்துப் பார்க்கும் இச்சை எழும். ஆணுக்கு மீசை போல் ஆனைக்குத் தந்தம் என்று தம்மாவுக்குத் தோன்றும். அதற்குரிய கம்பீரத்தை அதுவே அளிக்கிறது.
ரத்த நந்தகா என்ற அதன் பெயரே முதலில் தம்மாவுக்கு வாயில் நுழையவில்லை. தம்மா, சந்தா என்ற எளிமையான பெயர்கள் வைத்தால் என்ன என நினைத்தாள். மின்சாதான் அவளுக்கு அதிலிருக்கும் அரசியல் சூட்சமங்களை விளக்கினான். பாலி பாஷையில் ரத்த நந்தகா என்பதன் பொருள் தேசப் பிரியம், முடிவற்ற மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு. தன் பெயருக்கும் அது போல் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தாள் தம்மா.
மின்சாவிடம் கேட்ட போது “அனேகமாகப் பேரழகி என்பதாக இருக்கும்” என்று அவன் சொன்னான். அவள் சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்துக் கலகலவென சிரித்தாள்.
மின்சா அபினி நுகர்ந்தது போல் உற்சாகமாகி அவளை நெருங்கிப் புன்னகை ஈந்தான்.
*
அந்த முகாம் வந்ததில் இருந்தே ரத்த நந்தகா ஒரு விதப் பதற்றத்துடன்தான் இருந்தது. எவருடனும் இணக்கம் காட்டவில்லை. ஒருவித ஆக்ரோஷம் அதை ஆக்ரமித்திருந்தது.
புது நிலம், புது மனிதர்கள் என்ற சூழற்சிக்கல் காரணமாக இருக்கும் என நரது முதலில் நினைத்தான். ஓரிரு வாரத்தில் சரியாகி, இயல்பாகி விடும் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அது அவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கவே இல்லை. பெரிய பெருமூச்சுகள் அதனிடமிருந்து சதா வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கண்கள் சிவந்தே காணப்பட்டன. அதன் கால்கள் எப்போதும் எதையேனும் மிதித்தெறிய வேண்டும் என்ற பசியுடன் இருப்பது போல் தென்பட்டது. எல்லோரும் அதை நெருங்கத் தயங்கினார்கள். யானைகளுடன் அத்தனை அனுபவம் கொண்ட நரதுவே எப்போதும் ஓர் அச்சத்துடனே அதனை அணுக வேண்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யானை அங்கே வந்த ஒரு மாதத்துக்குப் பின் அதைக் கண்டு அதன் நிலை பற்றிக் குறிப்பெழுதிப் போக வந்த இரு அரசுப் பிரதிநிதிகளை ஓட ஓடத் துரத்தித் தூக்கித் தூரமாக எறிந்தது. அதில் ஒருவனுக்கு இடுப்பெலும்பு உடைந்தது. மற்றவன் பயத்தில் சுவாதீனம் கெட்டான்.
பயின்னவுங் கவலைப்பட்டான். அவனுக்கு மஹா சக்கரபத் சரணடையும் போது வெண் யானை பர்மாவை அழிக்கும் என்று சொன்ன எச்சரிக்கை நினைவு வர, யாழ தேவியிடம் புலம்பினான். அவள் கொஞ்சமும் பதறாமல் அவனைப் பொறுமை காக்கச் சொன்னாள்.
“மனிதன் எப்படி மாற்றத்துக்கு மனமொப்ப மாட்டானோ அப்படியே குஞ்சரங்களும்!”
“நரனும் ஆனையும் ஒன்றா?”
“அரசே, யானை பல விஷயங்களில் மனிதனைப் போன்றதே. இன்னும் சொன்னால் சில பழங்குடிகளிடம் ஒரு கதை உண்டு - மனிதன்தான் யானையாக மாறி விட்டான் என.”
“அப்படியா!”
“ஆம். சிறு வயதில் நான் கேட்ட கதை. ஓர் ஊருக்கு ஒரு துறவி வந்தார். அங்கே வாழ்ந்த ஓர் ஏழை அவரிடம் போய் தான் பெரும் பணக்காரனாக வேண்டும் எனக் கோரினான். துறவி புன்னகையுடன் ஒரு களிம்பை அவனுக்குக் கொடுத்து அதை அவன் மனைவியின் கோரைப் பற்களில் தடவச் சொன்னார். அவனும் பெண்டாட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்குச் சம்மதிக்க வைத்தான். சில தினங்களில் அவளது பற்கள் கையின் நீளத்துக்குப் பெரிதாக வளர்ந்தன. அவை தந்தங்களாகப் பளபளத்தன. மனைவியின் வலியைப் பொருட்படுத்தாமல் ஏழை அவற்றை வெட்டிக் கொண்டு போய் சந்தையில் விற்றான்.”
“ஐயய்யோ!”
“கேளுங்கள். பணம் கையில் நிறைந்தது. ஏழை அன்று இரவு வந்து மறுபடி மனைவியின் கோரைப் பற்களில் களிம்பு தடவினான். கண்ணீருடன் அவள் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இம்முறை தீர்மானித்து விட்டாள் - தந்தங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது. வளர்ந்ததும் அவன் வெட்ட எத்தனிக்க, அவள் முரண்டு பிடித்து மறுக்க, அவர்களுக்குள் சண்டை வந்தது. கணவன் செய்வதறியாது திகைத்து நின்றான். கெஞ்ச ஆரம்பித்தான். அவள் இரங்கவே இல்லை. இறங்கி வரவே இல்லை. மெல்ல அவளது உடலும் பெரிதாக வளர்ந்தது. சில நாட்களில் அவள் ஒரு முழு யானையாகிப் போனாள். அந்த வீட்டையும் புருஷனையும் விட்டு காட்டுக்குப் போனாள். அங்கே குட்டிகள் ஈன்றாள். அதுதான் முதல் யானைச் சந்ததி. அப்படி மனுஷிதான் இப்பூமியில் யானை இனமாக மாறிப் போனாள்.”
“…”
“அதனால் பெண்ணின் அத்தனை அற்பத்தனங்களும் யானையிடம் இருக்கும். அதில் ஒன்றுதான் இந்த வெள்ளை யானையிடம் இருக்கும் காரணமற்ற முரட்டுப் பிடிவாதம். ஆனால் அதே சமயம் பெண்ணின் அத்தனை தாய்மையும் அருளும் யானையிடம் குடி கொண்டிருக்கும். பொறுமையாக இருங்கள். சரியாகும். எல்லா இரவும் விடிந்தே தீரும்.”
பயின்னவுங் அதை அப்படியே விட்டு விடத் தீர்மானித்தான். நரது அதன் பராமரிப்புக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நரது அது பற்றி அரசுக்கு அறிக்கை தர வேண்டும். அரசு எவ்வகையிலும் ரத்த நந்தகாவைத் தொந்தரவு புரியாது. அப்படித்தான் மாதங்கள் சில ஓடிப் போயிருந்தன.
மின்சா நரதுவுக்கு உதவியாளனாக வந்து சேர்ந்தது அந்தச் சலுகையில்தான். அவனுக்கு யானைக்குப் பக்குவமாகக் கவளம் உருட்டவும், அதன் லத்தியை அள்ளித் தள்ளவும், அதன் பெருவுடலைக் குளிப்பாட்டிச் சுத்திகரிக்கவுமான கடமைகள் அளிக்கப்பட்டன.
மின்சா நரதுவின் பணியைப் பாதி ஆக்கினான். ஆனால் அவனுக்கு முக்கியச் சவாலாக இருந்தது ரத்த நந்தகாவைச் சமாதானப்படுத்த, சாந்தப்படுத்த இயலவில்லை என்பதே.
நரது தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் அதனிடம் பிரயோகித்துப் பார்த்தான். தோல் கருவிகளை வைத்து ஓசை எழுப்பி இரவுகளில் அதனைத் தூங்க விடாமல் செய்து பார்த்தான். உறக்கமின்மை அதனைப் பலவீனமாக்கி இறுதியில் அடி பணியச் செய்யும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அது இரவில் விழித்திருந்து விட்டு பகலில் நன்றாக உறங்க ஆரம்பித்தது. அதற்குத் தரும் கவளங்களின் ருசியைக் குறைத்தான், அடுத்து அளவைக் குறைத்துப் பார்த்தான். அதன் நடமாட்டம் முடக்க, பெரும்பாலான நேரம் சங்கிலியால் பிணைத்தே வைத்துப் பார்த்தான். ஆனால் எதற்கும் ரத்த நந்தகா மசியவே இல்லை.
அடுத்து நரது தன் அங்குசத்துக்குப் பழகிய மற்ற யானைகள் வைத்து அதனை மிரட்டப் பார்த்தான். ஆனால் ரத்த நந்தகாவை விட அளவில் பெரிய யானைகளும் கூட அதன் மூர்க்கத்துக்கு அஞ்சிப் பின்வாங்கின. இறுதி முயற்சியாக ஒரு பெண் யானையை ரத்த நந்தகாவிடம் அழைத்து வந்தான். இரண்டும் நெருங்கி பரஸ்பரம் மோப்பம் பிடித்துக் கொண்டு உரசின. சட்டென ரத்த நந்தகா அந்தப் பெண் யானையை தனது தந்தத்தை வைத்து இடித்துத் தள்ள, அது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தெறித்தோடியது.
அதற்கு மென்மையாக மதம் பிடித்திருக்கிறதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது.
வெண்களிறுகளை எவ்வகையிலும் உடலளவில் துன்புறுத்தக்கூடாது என்பது பர்மிய அரசின் சட்டம். அது ராஜதுரோகத்துக்கு இணையாகக் கருதப்படும். பாகன் அங்குசம் வைத்துக் கொள்வது கூட யானையை மிரட்ட மட்டுமே; குத்திக் காயப்படுத்தக் கூடாது. மீறியவர்களுக்குக் கடும் தண்டனை உண்டு. வெள்ளை யானைகள் குறைவு என்பதால் இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. பொதுவாகப் பாகன்கள் வெள்ளை யானையைப் பராமரிக்க முன்வருவதில்லை. அதனால் இவ்வேலைக்கு வருவோருக்குப் பெருஞ்சம்பளமும் நல்ல வசதிகளும் செய்து தருவது வழக்கம். நரது அது நாள் வரை வெண்களிறுகளைப் பார்த்துக் கொண்டவன் அல்லன். ஆனால் இம்முறை வசதிகளின் பொருட்டு முயற்சி செய்து பார்க்க எண்ணி, அரசு கேட்ட போது ஒப்புக் கொண்டான்.
மின்சாவுக்கு சிறந்த யானைப் பாகனாக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம். அவனுக்கு யானையை நெருங்கிக் கையாள, குறிப்பாக அதன் மீதேறிச் சவாரி செய்ய ஆர்வமும் தைரியமும் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. நரது கண்டிப்பானவன் என்பது முக்கியக் காரணம். ஒரு முறை மின்சா யானைக்குக் குளியல் காட்டிக் கொண்டிருந்த போது சற்று நேரம் அதன் முதுகிலேறி அமர்ந்ததை நரது பார்த்து அவனை அறைந்து விட்டான், அதுவும் தம்மா முன்பாக. அவள் அவன் மீது பரிதாபப்பட, அவன் தடுமாறி யானைச் சாணி அள்ளும் கூடை மீது விழுந்தது கண்டு சந்தா மெல்லச் சிரித்தது போலிருந்தது. சந்தா சிரித்ததை விட தம்மாவின் பரிதாபம் அதிகம் வலித்தது. அதிலிருந்து அவன் தனது கடமைகளைத் தாண்டி ரத்த நந்தகாவைத் தீண்டுவதில்லை.
அப்படி அவன் கட்டுப்பாடு காத்திருந்த போதுதான் தம்மா வந்து மின்சாவிடம் கேட்டாள் - ரத்த நந்தகாவின் முதுகிலேறிச் சவாரி போக வேண்டும் என. மின்சாவை ஒரு பக்கம் தயக்கம் உந்த, தம்மாவின் கெஞ்சல் முகமும், அவனது காதல் மனமும் அதை உதாசீனம் செய்தது. உடனே உற்சாகமாக ஒப்புக் கொண்டான். மின்சாவின் தயக்கத்துக்கு நரது மட்டும் காரணமல்ல; ரத்த நந்தகா பிளிறிக் காட்டிக் கொடுத்து விட்டாலோ, வெறியேறி ஏதும் அசம்பாவிதச் செயல்கள் நடத்தி விட்டாலோ என்ற கவலையும்தான். ஆனால் தன்னை நம்பிக் கேட்டவளிடம் தன் வீரம் நிரூபிக்க நல்ல சந்தர்ப்பம் அது. தம்மாவின் மனதில் நெருக்கமாக, அழுத்தமாக இடம் பெற அழகான வாய்ப்பு. எனவே மின்சா தவற விட விரும்பவில்லை. நரது இரவில் கள் அருந்தும் நாள் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நரதுவின் கள்ளும் கலவியும் முடிந்து தேகம் சாய்த்துக் கண்ணயர்ந்து குறட்டை விட்ட பிறகு தம்மா சற்றும் சப்தம் எழுப்பாமல் மெல்ல எழுந்து குடிலின் கதவின் தாழ் நீக்கித் திறந்து, சற்று தூரத்தில் இருக்கும் யானைக் கொட்டடிக்கு வந்து விட வேண்டும். அங்கே மின்சா அவளுக்காக உறங்காமல் காத்திருப்பான். பின் யானையை எழுப்பி அதன் மீது இருவரும் சிறிது தூரம் சவாரி செய்து விட்டுத் திரும்புவதுதான் திட்டம். பின் அவள் வந்த வழியே மறுபடி குடிலுக்குப் போய்ப் படுத்துக் கொண்டு விடுவது. எளிமையான ஏற்பாடு.
அப்படித்தான் அந்த இரவில் தம்மா சிறுமியாக யானை மீதேறி குமரியாக இறங்கினாள்!
மறுநாள் தம்மா ருதுவடைந்த செய்தி முகாமில் அறிவிக்கப்பட்டது. அது அவர்கள் மரபு.
வயதடைந்த பெண்ணை எல்லோரும் பொறுப்புடன் அணுக வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. ஆடவர்கள் அந்தப் பெண்ணை அதன் பிறகு தொடத் தடை, உற்றுப் பார்க்கக் கூடாது, உறுத்தலாகப் பேசலாகாது. ஓரிரு நாளில் குறைந்த அளவிலான உறவினர்கள் அந்த முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பூப்படைதல் சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தம்மா சிறுமிக்கான உடைகளை விடுத்து பெண்ணின் உடைகளைத் தரித்தாள். விதவிதமான இனிப்புப் பண்டங்கள் அவளுக்கு வழங்கப்பட்டன. மாதா மாதம் வயதுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என அவளுக்குத் தோன்றியது. இளம் பெண்கள் அவளைச் சூழந்து கொண்டு ஆபாசக் கேலி செய்தனர். அவர்களை விரட்டி விட்டு சில கிழவிகள் அவளது காதோடு காதாக அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் சொன்னார்கள். மின்சா பார்த்த அளவில் தம்மா முதன் முறையாக வெட்கப்பட்டாள். அவனுக்குத் தடை நீங்கித் தன் பாதை தெளிந்தாற் போலிருந்தது.
தம்மா யோசித்தாள். அவள் உடல் இளகிப் பிளந்த போது அவளை ஸ்பரிசித்திருந்தது இரு ஆண்கள். ஒன்று ரத்த நந்தகா, மற்றது மின்சா. மின்சாவைப் புதிதாகப் பார்த்தாள். அழகன்தான். தன் அக்காள் கணவனை விடவும் மென்மையானவன், தன்மையானவன். அக்குளிர் பிடித்த இரவில் யானையில் அவளை ஏற்றிப் பின் தான் ஏறி அவளது இடை சுற்றிக் கரம் போட்டுப் பாதுகாப்பாக அணைத்துக் கொண்ட மின்சாவின் லாகவம் நினைவில் வந்தது. வாழ்நாள் முழுக்க அந்தக் கையின் அணைப்பிற்குள் இருப்பது சொகுசுதான். அப்படி எண்ணிய போது என்ன நினைப்பு இது என்று அச்சப்பட்டாள்.
ஆனால் அவனை நினைக்கச் சுகமாக இருந்தது. பெரியவளான பின் சந்தா அவளுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனவே மின்சாவைப் பார்க்கவும் பேசவும் தம்மா உறுத்தாத காரணங்களை உண்டாக்கிக் கொண்டாள். அவனை நிறைய கவனித்தாள்.
சரியாகச் செதுக்கப்படாத மீசை அவன் முகத்தை மேலும் ஈர்ப்புக்குரியதாக்குவதாகத் தோன்றியது. அவன் ஒருமுறை அவளது பெயரின் பொருள் ‘பேரழகி’ என்று சொன்னதை எண்ணி எண்ணி நாணம் கொண்டாள். எனில் அவனுக்கும் தன் மீது சாய்வு இருக்கிறது எனக் கணித்தாள். ஆனால் அவனே தன் விருப்பம் சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.
அதன் பின் தம்மாவும் மின்சாவும் அவ்வப்போது இரவுகளில் திருட்டுத்தனமாக யானை மீது உலாப் போக ஆரம்பித்தனர். மின்சாவின் தீண்டலில் மெல்லிய மீறல்கள் இருந்தன என்பதை தம்மா உணர்ந்து தனக்குள் புன்னகை செய்து கொண்டாள். அவளது ஒப்புதல் மின்சாவை மேலும் உற்சாகம் ஆக்கி முன்னேற உந்தியது. தம்மா பருவமடைந்ததில் இருந்து சரியாக ஒரு திங்கள் கழிந்து ஒரு பௌர்ணமி நாளில் ரத்த நந்தகாவின் மீது இருவரும் அமர்ந்திருந்த தருணத்தில் பின்னிருந்து அவளது கழுத்தோரம் முத்தமிட்டு மின்சா தன் காதலை வெளிப்படுத்தினான். அவள் கிறங்கி, “ம்ம்ம்” என்ற இழுவையில் சம்மதம் சொன்னாள். பூரணை பால் பொழிய, வெண்வாரணம் உற்சாகமாக நடந்தது.
பெண்மை திறந்து பருவத்துக்கு வந்ததுமே கள்ளத்தனம் பெண்ணுக்குள்ளே நுழைந்து விடுகிறது. உடன் காதலும் சேர்ந்து விட்டால் கள்ளம் இரட்டை மடங்காகி விடுகிறது. பின் தம்மா நிறைய மறைத்தாள், மழுப்பினாள், மெய் திரித்தாள், பொய் சொன்னாள். அவளே வியக்கும் வண்ணம் நரதுவுக்கும் சந்தாவுக்கும் அவள் மீது ஒரு சந்தேகமும் எழவில்லை.
சந்தா நரதுவிடம் சொன்னாள் - தங்கை வயதுக்கு வந்து விட்டதால் இனி ராத்திரிகளில் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என. அவன் அதைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அந்தக் குடில் மிக எளிமையான கட்டமைப்பு கொண்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய அறை. இடப்புறம் சமையல் கூடம், வலப்புறம் ஒரு சிறிய அறை. அந்தப் பெரிய அறையில் சந்தாவும் நரதுவும் படுத்துக் கொள்கிறார்கள். வலப்புறச் சிறிய அறையில் தம்மா படுத்துக் கொள்கிறாள். சிறிய அறைக்குக் கதவு உண்டு என்றாலும் பெரிய அறையின் சப்தங்கள் அங்கு எட்டுவதைத் தவிர்க்க முடியாது. எனவே சந்தாவுக்கு சமீப நாட்களில் ஒரு சங்கடம் புகுந்திருந்தது.
தம்மா மாதாந்திர சுழற்சிகளில் சுகாதாரமாகப் புழங்குவதைக் கற்றுக் கொண்டாள். தன் உடலின் மாற்றங்களைக் கவனித்தாள். மார்பும், இடையும், புட்டமும், தொடையும் ஒரு மாதிரி சிற்பம் போல் வடிவெடுப்பதை உணந்தாள். தன் பொன்னுடலில் சுகத்தின் ஒரு பெரும் பொக்கிஷம் பல்வேறு புள்ளிகளில் ஒளிந்திருப்பதைக் கணிக்க முடிந்தது.
வழி தெரிந்து விட்டாலும் தம்மா சுயஇன்பம் செய்யவில்லை. அந்த இன்பத்தை முதலில் மின்சாவிடம் நேரடியாகவே அடைய வேண்டும். கண் மூடிய கற்பனையாக வேண்டாம். போக, தன்னை மு
November 8, 2023
எழுத்தாளன் அரசியல் பேசலாமா?
ஓர் எழுத்தாளனின் அரசியல் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்ச் சூழலில் எப்போதும் கலவையான கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. அவன் சமகால அரசியலை நேரடியாகப் பேச வேண்டும் என்பது முதல் அரசியல் குறித்து ஏதும் பேசவே கூடாது என்பது வரை அவற்றிடையே பார தூர வித்தியாசங்கள் இருக்கின்றன.
இவற்றுக்கு உதாரணமாக உள்ள எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். மனுஷ்ய புத்திரன், இமையம், சு. வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்றோர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கண்மணி குணசேகரன், ஜோ டி க்ரூஸ் போன்றோர் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் தீவிரமான சார்பெடுத்து அரசியல் பேசுகிறார்கள். ஜெயமோகன் மீதும் அரசியல் சார்புள்ளவர் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அவர் கிட்டத்தட்ட எல்லாத் தரப்பையும் கடுமையாக எதிர்த்தும் கொஞ்சம் ஆதரித்தும் எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா எல்லோரும் வியக்கும் வண்ணம் எப்போதாவது எதையாவது எதிர்த்தோ ஆதரித்தோ எழுதுவார். பெருமாள் முருகன் முற்போக்கு தரப்பு. எஸ். ராமகிருஷ்ணனோ, யுவன் சந்திரசேகரோ என்ன அரசியல் தரப்பென எவருக்கும் தெரியாது. அக்காலத்தில் ஜெயகாந்தன் வெளிப்படையான அரசியல் சார்பு கருத்துக்களைக் கொண்டிருந்தார். காலங்காலமாகவே இந்த வித்தியாசங்கள் எழுத்தாளர்களிடையே இருந்திருக்கின்றன.
தமிழ் தாண்டிப் பார்த்தாலும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்த எழுத்தாளர்கள் பலர் உண்டு. மலையாள எழுத்தாளர்கள் பலரும் இடதுசாரிச் சார்பு கொண்டவர்கள். கன்னட எழுத்தாளர்களான யூஆர் அனந்த மூர்த்தி, கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோர் இந்தியாவில் இன்று நிலவும் மதச் சகிப்பின்மையைக் கண்டித்தவர்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரும் முற்போக்கு அரசியலை எழுதியதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.
இன்னொரு நுணுக்கம் (Nuance) இதில் உண்டு. எழுத்தாளன் என்று யாரைக் குறிக்கிறோம் என்பதைப் பொறுத்து. அரசியல் எழுத்தாளர்கள் (Political Writers) என்றே இருக்கிறார்கள் - ஆனந்த் டெல்டும்டே, ஆஷிஸ் நந்தி போன்றவர்களைச் சொல்கிறேன். அவர்கள் பிரதான இலக்கே சமகால அரசியலை விமர்சித்து எழுதுவதுதான். அவர்கள் இவ்விவாதத்துக்குள் வர மாட்டார்கள். அரசியல் வரலாறு எழுதும் அபுனைவு எழுத்தாளர்ளுக்கும் சமகால அரசியலை எழுதும் கடமை உண்டு. உதாரணமாக ராமச்சந்திர குஹாவோ மருதனோ ஆர். முத்துக்குமாரோ அரசியல் எழுதாமல் இருந்து விட முடியுமா! பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளராக மாறியவர்கள் (உதா: தருண் தேஜ்பால்), நேரடிக் களப் பணிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் (உதா: அருந்ததி ராய்) ஆகியோருக்கும் குழப்பமே கிடையாது அரசியல் எழுதுவது இயல்புதான். நாம் இந்தக் கட்டுரையில் யோசிப்பது அரசியலை நேரடியாக எழுதும் கட்டாயமற்ற புனைவு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றியே.
*
“கலை மக்களுக்காகவே" என்ற கருத்து பரவலாக நம் சமூகத்தில் உண்டு. குறிப்பாக இடதுசாரி, திராவிட, தலித்திய மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் இந்தக் கருத்துடன் இயங்குவதைக் காணலாம். அவர்களின் செயல்முறை (Modus Operandi) இரண்டு: ஒன்று அவர்களின் இலக்கியப் படைப்புகளில் உரத்த குரலில், நேரடியாக மக்களை நோக்கி கருத்துக்களும் நிலைப்பாடுகளும் பேசப்படும். அடுத்து அவர்கள் அரசியல் கட்டுரை எழுதுகையில் கருப்பு வெள்ளையாக ஒரு தரப்பை நிராகரித்தும் அதன் எதிர்தரப்பை ஆதரித்தும் எழுதுவார்கள். இந்த இரண்டுமே எளிய மக்களைச் சென்றடைய இலகுவான, குழப்பமற்ற வழிகள் என்றாலும் அதனால் இரண்டு பக்க விளைவுகள் நிகழ்கின்றன: ஒன்று படைப்பில் கலை பின்னுக்குத் தள்ளப்படுகிறது - நேரடியாகப் பிரச்சாரம் செய்ய இலக்கியப் படைப்பு ஒன்றும் பிட் நோட்டீஸ் அல்ல. அடுத்து எழுத்தாளனுக்கு ஒரு நிறம் பூசப்பட்டு விடுகிறது - அவனுக்கு ஒரு வட்டம் வரையப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகிறது. அது அவனைச் சுருக்கும் செயல்தான். ஆனால் அதை அந்த எழுத்தாளனே விரும்பி ஏற்றுக் கொண்டு விட்ட பின் மற்றவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான்.
எனில் கலை மக்களுக்காக இல்லையா? கலை கலைக்காகவேதானா? இல்லை, அப்படி வைத்தால் குடுமி, எடுத்தால் மொட்டை என வறட்டுத்தனமாக மற்றோர் எல்லைக்கும் சென்று ஒட்டிக் கொள்ள அவசியமில்லை. “கலை மானுடத்துக்காக.” அதாவது காலம் கடந்து ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. அதாவது எழுதப்படும் காலத்தில் தொடங்கி இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரும் மனிதனுக்குமானதாகவே நல்ல கலை வடிக்கப்படும். நேரடியான, உடனடியான மாற்றங்கள் அதன் உத்தேசம் அல்ல. காலப்போக்கில் மனிதர்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுவதுதான் அதன் உத்தேசம். மாற்றுவது என்று சொல்வதைக் காட்டிலும் பாதிப்பது என்று சொல்வது துல்லியமாக இருக்கும். இந்த அடிப்படையில் பார்க்கையில் சமகால அரசியல் பிரச்சனைகள் கலையின் முன் சிறிய சிக்கல்கள், சில்லறைப் பிரச்சனைகள். எனவே அதற்கான தயார்நிலைத் தீர்வுகள் (Ready-made Solutions) இலக்கியப் பிரதிகளில் கிடைக்காது. அப்படியான தீர்வுகளை முன்வைக்கும் இலக்கியங்களின் ஆயுள் குறைவு. ஏனெனில் அப்பிரச்சனை தீர்ந்த பிறகு அப்படைப்பு மானுடத்துக்குத் தொடர்பற்றதாகி (irrelevant) விடுகிறது. இலக்கிய மதிப்பீட்டில் அறிவுரை சொல்லும் படைப்புகள் சிந்திக்கச் செய்யும் படைப்புகளைக் காட்டிலும் கீழாகப் பாவிக்கப்படுவது இக்காரணத்தால்தான்.
அரசியல் பற்றி முதலில் விஸ்தாரமாகச் சிந்தித்தவர் ப்ளாட்டோ. அதை நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார் (Republic). ஆனால் ப்ளாட்டோ எழுத்தாளர் அல்ல; தத்துவ ஞானி.
எழுத்தாளன் தத்துவ ஞானி அல்ல; எழுத்தாளன் இறைதூதரும் அல்ல. அவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்டவன். முன்னவர் குறைவானவர்களையே போய்ச் சேர்வார். அவர்கள் அறிவுஜீவிகள். பின்னவர் கோடிக்கணக்கான எளியவர்களைச் சென்றடைவார். எழுத்தாளன் இரண்டுக்கும் மத்தியிலான ஒரு கூட்டத்திடம் உரையாடி மாற்றங்களை உண்டாக்க வேண்டியிருக்கிறது. அவன் அரசியல் எழுதலாமா என்ற கேள்வியை இந்தக் கோணத்திலிருந்தே அணுகலாம். எழுத்தாளன் ஜாக்கிரதையாக அரசியல் எழுதலாம்!
*
எழுத்தாளன் அரசியலை எழுதுவதில் அப்படி என்ன ஜாக்கிரதை உணர்வு அவசியம்? வானின் கீழிருக்கும் ஏராள விஷயங்களைப் பற்றிப் பேசுவதைப் போல் அரசியலையும் பேசுகிறான். மற்ற விஷயங்களுக்கு இல்லாத எச்சரிக்கை இதில் மட்டும் ஏன்? காரணம் இருக்கிறது. வரலாறு, விஞ்ஞானம், சமூகம், தத்துவம் என எது குறித்தும் அவன் எழுதும் போது அவனுக்கு ஒரு சார்பு உருவாவது இல்லை. (அப்படியே உருவானாலும் அது ஓர் ஆபத்தற்ற சார்பாகவே பார்க்கப்படுகிறது.) ஆனால் எழுத்தாளன் அரசியலை எழுத ஆரம்பித்ததுமே அவனுக்கு ஒரு வலுவான சார்பு உண்டாகி விடுகிறது. தான் வாழும் காலத்தில் உள்ள யாரையோ எதிர்த்தோ அல்லது யாரையோ ஆதரித்தோதான் அவன் அரசியல் எழுத முடியும். எனவே அவன் தெளிவாக ஒரு தரப்பின் பகுதியாகி விடுகிறான்.
எழுத்தாளன் நடுநிலையானவன். அவனுக்குச் சார்புகள், சாய்வுகள் கூடாது. அதனால் அவன் அரசியல் எழுதுவதில் உள்ள பிரதான பிரச்சனை அவன் ஒரு தரப்பை எடுக்க வேண்டி இருப்பதுதான். நடுநிலை என்பது நடுவே இருப்பதல்ல, நியாயத்தின் பக்கம் இருப்பதே என்றாலும் பொதுவாகக் கள எதார்த்தம் பூரண நியாயம் கொண்ட அரசியல் தரப்புகள் இருப்பதில்லை என்பதே. எனவே எழுத்தாளனுக்கு இருக்கும் நடைமுறைச் சாத்தியம் மோசமான தரப்பை எதிர்த்து, இருப்பதில் மேலான தரப்பை ஆதரிப்பதே.
இங்கே ஒரு கேள்வி எழும். மோசமான தரப்பை எதிர்ப்பதோடு அவன் நிற்கக்கூடாதா, ஏதேனும் ஒரு தரப்பை அதன் போதாமைகள் தாண்டி ஆதரித்தே ஆக வேண்டுமா என.
ஆம், மக்களாட்சியில் வேறு வழியில்லை. அதுவும் இந்தியா போன்ற சிந்தனைத் திறனும் அறச் சார்பும் மலிந்த மக்களால் கட்டப்பட்ட ஜனநாயக நாட்டில் எது கூடாது என்பதோடு எது வேண்டும் என்றும் அவன் கை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இல்லை எனில் அவன் தோற்க வேண்டும் என எண்ணும் தரப்புக்கு எதிரான வாக்குகள் சிதறி அது அத்தரப்பு வெல்லவே வழிகோலும். எனவே இங்கே எழுத்தாளன் வேறு வழியின்றி ஒரு தரப்பை ஆதரிக்க வேண்டியதாகிறது - அதுவும் எந்த விமர்சனம் இல்லாமல். ஏன் எனில் விமர்சித்தால் நீ ஆதரிக்கும் தரப்பையே விமர்சித்துக் குழப்புகிறாயே என்ற கேள்வி எழும். இங்கே அரசியலில் கருப்பு - வெள்ளை மட்டுமே சாத்தியப்படுகிறது.
ஆக, எழுத்தாளன் அரசியல் எழுதுவதன் முதல் பக்க விளைவு அவன் மீது விழும் சார்பு முத்திரை. அது எத்தனை நல்ல தரப்பு என்றாலும் கூட அதற்கு எதிரான, குறைந்தபட்சம் மாற்றான தரப்புகள் இருக்கவே செய்யும். ஆக, இயல்பாகவே அவனை மறுப்போரும், எதிர்ப்போரும், விலகுவோரும், வெறுப்போரும் உருவாகிறார்கள். அதை விட ஆபத்து அவனது எழுத்தைத் தாண்டி இந்தச் சார்பின் அடிப்படையில் அவனை விரும்புவோரும், ஆதரிப்போரும், போற்றுவோரும், நெருங்குவோரும் உருவாகிறார்கள். ஒரு வகையில் அது தேவையற்ற சுமை. சரி, மற்றவர்களைப் பற்றி எழுத்தாளனுக்குக் கவலை இல்லை என்றே கொண்டாலும் அவனுக்குள்ளுமே கூட அது சிக்கல்களை உருவாக்குகிறது.
*
எழுத்தாளன் ஒரு கட்சி சார்பெடுப்பதில், அதன் விசுவாசியாக ஆவதில் நிச்சயம் சில சுதந்திரங்களை இழக்கிறான். சரி, எழுத்தாளனுக்கு ஏன் அந்தச் சுதந்திரம் வேண்டும்?
ஏனெனில் அவன் மானுடத்தின் பிரதிநிதி. எதற்குள்ளும் அவன் தன்னை அடைத்துக் கொள்ளக்கூடாது. எதுவொன்றில் அவன் ஒட்டிக் கொண்டாலும் அவனது சிந்தனை குறுக்குகிறது. உதாரணமாக அவன் ஓர் அரசியல் கட்சியை ஆதரிக்கும் சார்பை மேற்கொண்டால் கட்சி என்ன பிழை செய்தாலும் அவனால் விமர்சிக்க முடியாது. அல்லது தன் நடுநிலையைக் காட்டிக் கொள்ள மயிலிறகால் வருடும் தொனியில் அக்குறைகளைச் சுட்டிக் கடக்க வேண்டி இருக்கும். கட்சியின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்குமளவு மோசமாக இல்லை என்றாலும் கள்ள மௌனத்தின் வழி அவற்றைக் கண்டும் காணாமல் கடக்க வேண்டியிருக்கும். மாற்றுக் கட்சிகள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்ட முடியாது. சுருக்கமாக அவன் தன் அசல் கருத்துக்களைக் கட்சியின் கொள்கை அல்லது செயல்கள் என்ற வடிகட்டி கொண்டு வடித்து மிஞ்சியதை மட்டுமே வெளிப்படுத்த முடியும். இது கையைக் கட்டிப் போட்டுக் கொள்வதுதான்.
இன்னொன்று எழுத்தாளன் அரசியல் எழுதுவது ஏராளப் பகை சம்பாதிக்க ஏதுவாகும். முதலில் அவன் எதிர்க்கும் தரப்பு அவனை எதிரியாக வரிக்கும். சரி, அது பரவாயில்லை. எதிர்பார்த்ததுதான். அடுத்து நடப்பதுதான் விநோத முரண். தோழமை சுட்டல் என்ற விஷயமே நம் சூழலில் சாத்தியமில்லை; சுட்டிய கணமே எதிரி! எழுத்தாளன் ஆதரிக்கும் தரப்பின் சிறிய குறைகளைச் சொன்னாலும் அவன் துரோகி என முத்திரை குத்தப்பட்டு அவர்களால் கடுமையாக வசைபாடப்படுவான். ஏனெனில் அரசியலில் எத்தரப்பாகினும் அவர்களுக்குத் தேவை முழு விசுவாசி. மாறாக, சிறு விமர்சனம் வைத்த கணமே அதற்கு முன் ஆண்டுக்கணக்காக தந்த ஆதரவெல்லாம் ரத்து செய்யப்பட்டு வாளின் கூர்நுனி எதிரே அவன் நிறுத்தப்படுவான். எனவே அரசியலில் இரு தரப்புக்கும் எதிரியாவது மட்டுமே மனசாட்சி கொண்ட எழுத்தாளன் இறுதியில் கண்டடைவதாக இருக்கும்.
இன்னொரு பிரச்சனை இருக்கிறது. எந்த அரசும் முழுமையாகச் சரியானதாக இருக்க முடியாது. அதன் குறைகளை விமர்சிப்பதே எழுத்தாளன் செய்ய வேண்டியது. அதுவே அந்த அரசுக்கும் நல்ல வழிகாட்டலாக அமையும். ஆனால் எழுத்தாளன் ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதன் குறைகளைச் சுட்டும் போது அவனுக்கு ஒரு சங்கடம் எழும். இத்தனை நாளும் அவன் ஆதரித்த தரப்பை அவனே குறை சொல்ல வேண்டி இருக்கும். மாறி மாறிப் பேசுவதான தோற்றம் எழும். ஆனால் அதை அவன் செய்யாவிடில் இரட்டை நிலைப்பாடு கொண்டவன் என்றாகிடும். எனவே விமர்சிப்பது கடமையாகி விடுகிறது.
எழுத்தாளன் அரசியல் விவகாரங்களில் உடனடி எதிர்வினை ஆற்றுவதைத் தவிர்ப்பதும் நல்ல உத்திதான். ஏனெனில் அவசரக் கருத்துகளில் தெளிவு, நிதானம் இராது என்பது ஒரு பக்கம். ஆரம்பத்தில் விஷயத்தின் முழு உண்மையும் தெரிந்திருக்காது என்பது இன்னொரு பக்கம். ஆக, எழுத்தாளன் அரசியல் நிகழ்வுகளில் கருத்துரைக்க வேண்டும் என்றாலும் முதல் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை விட, சற்று பொறுத்து வந்தாலும் சரியான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி என்றில்லை, அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசுகளுக்குமே கூட இந்தச் சார்பு விவகாரம் பொருந்தும். எனவே எழுத்தாளன் முடிந்த அளவுக்கு எந்தக் கட்சி, அமைப்பு, நிறுவனம், அரசுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமலும், நிதி உள்ளிட்ட லௌகீக லாபங்களை வாங்காமலும் இருக்க வேண்டும். அதிகபட்சம் விருது போன்ற அங்கீகாரங்களை ஏற்கலாம். (ஜெயமோகனோ ஒரு படி மேலே போய் பாஜக ஆட்சியில் இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நிராகரித்தார்.)
*
இங்கே என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து (சுமார் பதினைந்து ஆண்டுகளாக) பாஜகவை எதிர்த்து வந்திருக்கிறேன். அதன் நிமித்தம் பிரச்சனை அடிப்படையில் (Issue Based Support) அதற்கு எதிராக நிற்கும் காங்கிரஸையோ திமுகவையோ ஆதரித்து எழுதி வந்திருக்கிறேன். அவசியப்படுகையில் ஆதரித்த இந்தக் கட்சிகளையே மறுத்தும் எழுதி வந்திருக்கிறேன். அதனால் இழந்தவைதாம் அதிகம். என் பால் அக்கறை கொண்ட மூத்த எழுத்தாளர்கள் நான் அரசியல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் அவர்கள் சொல்வது சரியல்ல, எழுத்தாளன் தீவிரமாக அரசியல் எழுத வேண்டும், நாட்டைச் சீராக்குவதில் அவனுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்று எண்ணி வந்திருக்கிறேன். நம் எழுத்தாளர்கள் அரசியல் எழுதாததை ஒருவிதத் தப்பித்தலாகவே பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் சமீப ஆண்டுகளில் அதிலிருந்து மாறி அரசியல் எழுதாமல் தவிர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய பாவமில்லை என்று உணர்கிறேன்.
சமீப ஆண்டுகளில் பா. ராகவன் இதில் ஓரளவு தெளிவாக இருக்கிறார் எனப் படுகிறது.
எழுத்தாளன் தான் பேச விரும்பும் அரசியலைப் படைப்பில் அமைதியாக, பூடகமாகச் சொன்னாலே போதுமானது. இன்னும் சொன்னால் அதுதான் சரியானதும், வலுவானதும் கூட. அதுவே நீண்ட கால நோக்கில் இன்னும் தீவிரமான விளைவுகளை உண்டாக்கும். அவன் தன் அரசியல் நிலைப்பாட்டை நேரடியாக எழுதியாக வேண்டும் என எவரும் கட்டாயப்படுத்த முடியாது. எதைச் செய்யலாம் என்ற சுதந்திரம் அவனுக்கு அவசியம்.
அதே சமயம் எழுத்தாளன் அரசியல் சார்பெடுப்பதில் லாபங்களும் உண்டு. மரியாதை, அதிகாரம், செல்வாக்கு, பணம், பதவி, பரிசு, விருது, உதவி எனப் பல வழிகளில் அவன் பெற்றுக் கொள்ளச் சாத்தியம் இருக்கிறது. எழுத்தாளனை மதிக்காத நாட்டில் அவன் அதைப் பெற இரண்டு வழிகள்தாம். ஒன்று சினிமா, மற்றது அரசியல். அங்கீகாரங்கள் இல்லாமல் நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒரு விரக்தியுற்ற எழுத்தாளன் தான் இழந்ததை எல்லாம் மீட்க அரசியலைத் தன் மார்க்கமாகக் கொண்டால் அதை நாம் கேள்வி கேட்கவும் முடியாது. எனவே எழுத்தாளன் அரசியல் பேசுவதால் லாபமும் உண்டு, நஷ்டமும் உண்டு. எது வேண்டும் என அவன்தான் தீர்மானிக்க வேண்டும்.
சுதந்திரன் (Independant) என்ற அடையாளத்தில் எழுத்தாளன் கட்சியை ஆதரிப்பதை விட நேரடியாகக் கட்சி உறுப்பினரான பின் அக்கட்சிக்குச் சார்பு நிலை எடுப்பது உத்தமம். ஏனெனில் அதற்குப் பின் அவனது அரசியல் கருத்துக்கள் அக்கட்சி உறுப்பினன் என்ற அடிப்படையில்தான் பார்க்கப்படும், அவன் ஓர் எழுத்தாளன் என்பதோடு அவற்றைக் குழப்பிக் கொள்ள அவசியமிராது. அதுவே நேர்மையான முன்வைத்தலாக இருக்கும்.
*
ஆக, இறுதிப் புரிதலாக இந்த இடத்துக்கு வந்தடைய வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் அரசியல் எழுதலாம். ஆனால் தன் படைப்புகளின் கலைப்பெறுமதியில் சமரசம் செய்து கொள்ளலாகாது. போலவே எந்தத் தரப்புக்கும் தன்னை விசுவாசியாக அவன் கருதக் கூடாது - முக்கியமாக அரசுக்கு, ஆளும் தரப்புக்கு ஒருபோதும் அவன் ஆதரவாளனாக இருக்கவே கூடாது. அதுவே அவனைச் சுதந்திரமாகவும் சரியாகவும் இயங்க வைக்கும். உடனடி, உணர்ச்சிகர எதிர்வினைகளையும் அரசியல் விவகாரங்களில் தவிர்க்கலாம்.
சமகால அரசியல் என்பது எழுத்தாளனுக்கு கட்டாயமற்ற கூடுதல் பொறுப்பு மட்டுமே. தன் பகுத்தறிவு, மனசாட்சி தவிர எதற்கும் அடிபணியாமல், நிதானமாக அவன் அதை எழுதி விட்டு நகரலாம். இல்லை எனில் அவன் நேரடியாகக் கட்சி உறுப்பினராவதே சரி.
***
(உயிர்மை - அக்டோபர் 2023 இதழில் வெளியானது)
October 2, 2023
கல்லளை [சிறுகதை]
(Disclaimer: இக்கதை நெடிய மானுட வரலாற்றில் எங்கேனும், எப்போதேனும் நடந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எழுத்தாளச் சுதந்திரத்துடன் முழுக்கக் கற்பனைப் புனைவாகவே நான் இதை முன்வைக்கிறேன். வாசகர்களையும் அவ்வாறே அணுகக் கோருகிறேன்.)
“மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!”
மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவர் சொன்னாள்.
அஹிம்ஸா புன்னகை செய்தாள். அவள் கொஞ்சம் கவலைகளுடன்தான் வந்திருந்தாள். சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. வீங்கித் தொங்கும் வயிற்றின் அடியில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அந்தப் புகார்களை எல்லாம் சொன்ன போது மருத்துவர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். அது அவளது பாஷை - ஒன்றும் பிரச்சனை இல்லை, அவை இயல்பான அறிகுறிகள் என்று அதற்கு அர்த்தம். அவள் சற்று நெற்றி சுருக்கினால் வழமையிலிருந்து விலகி இருக்கிறது, ஆனாலும் சரி சீர் படுத்திடலாம் என்று அர்த்தம். அசலாகவே பிரச்சனை எனில் வாய் திறப்பாள். சிக்கலும் தீர்வும் சுருங்கச் சொல்வாள்.
மருத்துவரிடம் வந்து செல்லும் இந்த ஏழெட்டு மாதங்களில் இச்சங்கேதக் குறிப்புகளை வாசிக்கக் கற்றிருந்தாள் அஹிம்ஸா. தாய்க்கும் சேய்க்கும் சேதாரமின்றி பிரசவம் பார்த்துக் கொடுப்பதில் அத்தீவு தேசத் தலைநகரின் அதிகார மட்டத்திடையே அந்த அம்மாள் பெயர் போனவள் என்பதால் அதையெல்லாம் சகித்துக் கொள்ளலாம்தான். போக, துல்லியமாகக் குழந்தை பிறக்கும் தினம் கணிப்பாள் என்றும் பேச்சு இருந்தது.

“கணவர் வரவில்லையா?”
“இல்லை, டாக்டர். எங்கள் நாட்டின் ஹை கமிஷனர்தான் இன்று இந்நகரின் மோஸ்ட் வான்டட் ஆள். தெரியும்தானே? அவர் எனது கணவராகவும் இருப்பதை யாராவது அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவரை நான் வீட்டில் பார்ப்பதே அரிதாகி விட்டது. பின்னிரவில் வந்து விட்டு அதிகாலையில் கிளம்பிப் போய் விடுகிறார். என் அம்மா என்னைப் பார்த்துக் கொள்ள இங்கே வந்திருப்பதால் சமாளிக்க முடிகிறது. குழந்தை பிறக்கும் போதாவது இந்த மருத்துவமனைப் பக்கம் வந்து விடுவார் என நம்புகிறேன்.”
“சமாதானப் படை வந்து இறங்கியதில் இருந்தே பதற்றமாக இருக்கிறது என்கிறார்கள்.”
“ஆனால் அவர்கள் வந்திருப்பதே இழந்துள்ள அமைதியை மீட்டுக் கொடுக்கத்தானே!”
மருத்துவர் பேசவில்லை. அவர் அரசியல் கதைக்க விரும்பவில்லை எனத் தோன்றியது.
அஹிம்ஸாவின் அம்மா சில கூடுதல் விபரங்கள் கேட்டுக் கொண்டாள். கிளம்புகையில் மருத்துவமனைக்கு அவள் முன் கூட்டியே வர வேண்டியதில்லை, ஆனால் வலி கண்டதும் தாமதிக்காமல் வந்து சேர்ந்திட வேண்டும் என்று சொல்லி அனுப்பினாள் மருத்துவர்.
*
தூதரகக் காரில் அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தாள். நிம்மதியாக இருந்தது. அப்பாவுக்கு அழைத்துச் சொன்னாள். அப்பா தாயகத்தில் சத்யாவின் வீட்டில் இருக்கிறார். சத்யாவும் வேலைக்குப் போவதால் அவளது குழந்தையைப் பார்க்க ஆள் வேண்டும். சத்யா அவளது அக்கா, பத்து நிமிடங்கள் மூத்தவள். அப்பாவுக்கு மஹாத்மாவை ரொம்பப் பிடிக்கும். அந்த வேகத்தில்தான் அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த போது சத்யா, அஹிம்சா எனப் பெயரிட்டார். அதை அக்குழந்தைகளே கேலிக்குரியதாகப் பார்த்தது அவருக்கு வருத்தம்தான். ஒருவேளை அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் மூன்றாவதற்கு ப்ரம்மச்சர்யா என்றுதான் பெயர் வைத்திருப்பார் அப்பா என்று பகடி செய்தார்கள். அவர்களுக்கு மஹாத்மா என்பவர் ஓர் அருங்காட்சியக வஸ்து மட்டுமே!
அப்பா மத்திய அரசின் நவரத்னா நிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருந்தவர். அதன் வழியே கிடைத்த மேல்மட்டத் தொடர்புகள் மூலம் தன் மகள்கள் இருவருக்கும் அரசில் உயர் பதவி வகிக்கும் மாப்பிள்ளைகளைப் பேசி முடித்தார். அஹிம்ஸாவை அவளை விடப் பத்து வயது அதிகமான மிஷ்ரா கல்யாணம் செய்த மறுவாரமே அவனுக்கு ஹை கமிஷனராகப் பதவி உயர்வு கிடைத்து இத்தீவுக்குச் செல்லும் உத்தரவு வந்தது. மிகச் சிறிய வயதில் அப்பதவியை அடைந்தவன் என்பதால் அது அஹிம்ஸாவின் அதிர்ஷ்டம் என்றே கொண்டாடினான். ஒவ்வொரு கலவி முடிவிலும் அதைச் சொல்லிக் காட்டினான்.
அவர்கள் இத்தீவில் வந்திறங்கிய போது பூட்டானில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியுற்று மீண்டும் யுத்தம் வெடித்திருந்தது. அதனால் அருகிலுள்ள பெரிய நாட்டின் தூதரான மிஷ்ராவுக்கு நிறையப் பணி இருந்தது. அதனூடேதான் தேனிலவு கண்டார்கள்.
அவனுக்கு அவனது அறிவும் அவளது அதிர்ஷ்டமும் கலந்த ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் வேட்கை இருந்தது. மணமாகி ஓராண்டு கழித்து அவள் கர்ப்பமுற்ற போது அவன் பெரிதாக மகிழ்ந்தான். இப்போது பிரசவத் தேதி துல்லியமாகத் தெரிந்துள்ளது.
இந்தத் தீவிலிருக்கும் தனது நாட்டின் தூதரகத்துக்குத் தொலைபேசினாள் அஹிம்ஸா. மிஷ்ராவைக் கேட்டாள். முக்கிய வேலையில் இருக்கிறார், அவரே மறுபடி அழைப்பார், ஏதும் செய்தி இருக்கிறதா என்று அப்பெண் கேட்டாள். இல்லை என்று சொல்லி வைத்து விட்டாள். மறுபடி மிஷ்ரா அழைக்கவே இல்லை. அஹிம்ஸா தூங்கிப் போய் விட்டாள்.
*
அஹிம்ஸா மீண்டும் எழுந்த போது இருட்டி விட்டிருந்தது. மிஷ்ரா வீடு வந்திருந்தான்.
அம்மா அவனுக்கு உணவு பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கி இருந்தாள். அவசரமாக முகம் கழுவி வந்தவள், தான் உணவு பரிமாற எத்தனிக்க, அவன் அவளைத் தடுத்து தன்னுடன் சேர்ந்து சாப்பிடச் சொன்னான். புன்னகையுடன் அமர்ந்து கொண்டாள்.
“நல்ல தூக்கமோ?”
“ஆமா. அலைச்சல்.”
“டாக்டர் என்ன சொன்னார்?”
“செப்டெம்பர் 26 டெலிவரி.”
“ம்ம்ம். எல்லாம் நார்மலா?”
“அப்படித்தான் சொல்றார்.”
“சரி, பார்த்துக்கலாம்.”
“உங்களுக்கு லீவ் கிடைக்குமா?”
“இப்போதைக்குக் கஷ்டம்.”
“ம்.”
“புதுத் தலை வலி வேற ஆரம்பிச்சிருக்கு.”
“என்னது?”
“ஒரு சின்னப் பையன் தொந்தரவு கொடுக்கறான்.”
“போராளியா?”
“ஆமா. இருபத்து மூணு வயசுதான்.”
“போர் நிறுத்தம் அமலில் இருக்கே?”
“அவன் ஆரம்பித்திருப்பது பட்டினிப் போர்!”
“ஓ! முப்பது வருச அறவழிப் போராட்டம் வேலைக்காகலனுதானே ஆயுதம் ஏந்தினாங்க!”
“இப்ப மறுபடி ஏதோ ஞானோதயம்!”
“ஒருவேளை, இனி இப்படித்தானோ?”
“இல்ல இல்ல. போரும் அமைதியும் மாறி மாறித்தான் வரும். அமைதி நிலவுகையில் போராட வேறு வழியில்லை, அஹிம்சை மார்க்கத்தைத்தான் தேர்ந்தெடுத்தாகனும்.”
“ம்ம்ம். அப்படியா சொல்றீங்க?”
“ஆமா. ஒரு முறை துப்பாக்கி பிடிச்ச கை, கடைசி வரை அதை விடாது, விட முடியாது.”
“விடக்கூடாதுன்னும் சொல்லிடுவீங்க போல!”
மிஷ்ரா அடிபட்டவன் போல் அஹிம்ஸாவைப் பார்த்தான். அவள் கவனிக்கவில்லை.
“என்ன கோரிக்கையாம் அந்தப் பையனுக்கு?”
“என்னனவோ சொல்றான். சாத்தியமற்றவை.”
“என்னனுதான் சொல்லுங்களேன், கேட்போம்.”
“சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும், அவர்கள் பிரதேசங்களில் அரசு புதிய காவல் நிலையங்களைத் திறக்கக் கூடாது, ஊர்க்காவல் படைக்குத் வழங்கப்பட்ட ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும், அவர்களின் பகுதிகளில் நிகழும் பேரினக் குடியேற்றங்களை உடனே நிறுத்த வேண்டும், அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும்.”
“எல்லாம் தூரத்துச் சொப்பனங்கள் அல்லவா!”
“எல்லாவற்றையும் விட முக்கியமானது - இதை எல்லாம் சமாதானப் படை முன்னின்று உறுதி செய்யனும். அதுக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் நம் அரசு சார்பில் தரப்படனும்.”
“ஓ! போராட்டமே நம் அரசை நோக்கித்தானா? இந்த நாட்டு அரசுக்கானது இல்லையா?”
“ஆமா. போராளிகள் இதே கோரிக்கைகளை ரெண்டு நாள் முன் எனக்கு அனுப்பி வெச்சு, பதிலளிக்க 24 மணி நேர அவகாசம் கொடுத்தாங்க. நான் இன்னும் பதிலளிக்கல. இப்ப அதே கோரிக்கைகளை முன் வெச்சு சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்கான்.”
“அதாவது நம்ம அரசு சொன்னா இந்த அரசு தலையாட்டிக் கேட்கும்னு நம்பறாங்க?”
“ஆமா.”
“நியாயம்தான்.”
“என்ன நியாயம்? இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? நாம சொன்னா கேட்பாங்களா?”
“மாட்டாங்களா என்ன?”
“இப்பிரச்சனையில் நம் முதன்மை ஆர்வம் நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. பக்கத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரின் பக்கவிளைவு நம்மையும் பாதிக்கக்கூடும்.”
“அது மட்டும்தானா?”
“பிறகு? வேறென்ன?”
“இந்தப் பிராந்தியத்தில் பெரியண்ணன் வேடம் போடறோம். செஞ்சுதானே ஆகனும்!”
“அது வேற வழியில்ல. வல்லரசுக் கனவுகளின் பகுதி. ஆனா அதுக்கு எல்லை இருக்கு. இதெல்லாம் அவுங்க உள்நாட்டு விவகாரங்கள், நாம ரொம்பத் தலையிட முடியாது.”
“மூணு மாசம் முன்ன இங்கே ஆபரேஷன் பூமாலை நடத்தினப்ப இதை யோசிக்கலயா? ஒன்றரை மாசம் முன்ன சமாதானப் படையை இறக்கின போது? இப்ப என்ன புதுசா?”
“…”
“போராளிகளுக்கு ஆதரவா இந்தத் தீவின் அரசை எதிர்த்து வான் வழியா பாராசூட்ல உணவுப் பொட்டலம் வீசுனீங்களே, அதனால் அரசு போரை நிறுத்திப் பின்வாங்குச்சே, அப்ப நம்மை நம்பத்தானே செய்வான்? பக்கத்தில் இருக்கும் பெரிய நாட்டின் அழுத்தம் மாற்றம் ஏற்படுத்தும்ங்கற ருசி காமிச்சாச்சு. மறுபடி எதிர்பார்க்கத்தானே செய்வான்?”
“இல்ல. அது ஹ்யூமானிடேரியன் க்ரவுண்ட்ஸ்ல செஞ்சது. சிவிலியன் பகுதிகளில் குண்டு வீசினாங்க. அது சர்வதேசிய யுத்த விதிகளுக்குப் புறம்பானது. அப்ப நாம தலையிட வேண்டியதாச்சு. அதுக்காக நிர்வாகத் தீர்மானங்களில் மூக்கை நுழைக்க முடியுமா?”
“அவ்வளவு நல்லவர்களா நாம்!”
“இதில் நல்லவர், கெட்டவர் என்பதெல்லாம் இல்லை. நாம் பொறுப்பு மிக்க, சக்தி மிக்க ஓர் அண்டை நாடாக இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் ஒப்பந்தம் போட்டு சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு மேல் அவர்கள் தம்முள் பேசித் தீர்வு காண வேண்டும். அதை உறுதி செய்யும் பொருட்டே சமாதனப் படையை இத்தீவுக்குள் கொண்டு வந்தோம். இதுவே ஒருவகையில் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆனால் நம் பிரதமர் இதில் ஆர்வம் காட்டுகிறார். இதைத் தீர்த்து வைக்க விரும்புகிறார். அவருக்கும் தன் தாத்தாவைப் போல், அம்மாவைப் போல் உலக வரலாற்றில் இடம் பெறும் ஆசை இருப்பதில் தவறில்லைதானே! எனவே உலக அமைதி என்ற லேபிளில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாப் பொது நலத்திலும் ஒரு சுயநலம் உண்டு, அஹிம்ஸா!”
“சமாதானப் படை வந்ததை இந்தத் தீவு விரும்புகிறதா? அதுக்கு எவ்ளோ எதிர்ப்புனு பார்த்தீங்கல்ல? முதல் நாளே ராணுவ அணிவகுப்புல வெச்சு நம் பிரதமரை ஒருத்தன் தலையில அடிச்சுக் கொல்லப் பார்த்தான். இன்னிக்கு என்னைப் பார்த்த டாக்டர் கூட சமாதானப் படை சம்மந்தமாத் தன் அதிருப்தியை அடிக்கோடிட்டாங்க. நாம இதில் இறங்கிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதை இவர்கள் விரும்பல. இதுதான் ரியாலிட்டி.”
“ஆனா போராளிகள் விரும்பறாங்க, நம்மை நம்பறாங்க.”
“எக்ஸாட்லி. தேர் யூ ஆர். அப்ப அந்தப் பையன் கோரிக்கைகளை நிறைவேத்தனும்ல!”
மிஷ்ரா பெருமூச்சு விட்டான். எழுந்து கை கழுவி விட்டு நிதானமாகச் சொன்னான்.
“அது அவ்ளோ ப்ளாக் அண்ட் வொய்ட் இல்ல. அப்படி எளிதா முடிவெடுக்க முடியாது.”
“என்னவோ செய்ங்க! ஆனா சீக்கிரம் அந்த உண்ணாவிரதத்தை முடிக்கப் பாருங்க.”
“ம்ம்ம்.”
மிஷ்ரா எழுந்து கொண்டான். கடைசிக் கவளத்தை வாயிலிட்டு அஹிம்ஸா கேட்டாள்.
“மஹாத்மாதான் இந்த ஹங்கர் ஃபாஸ்ட் என்ற போராட்ட முறையின் பயனீர். ரைட்?”
“ஆமா.”
“பதினெட்டு உண்ணா விரதங்கள். அதுல ஒண்ணு 21 நாள். அப்பா சொல்லி இருக்கார்.”
“ஆனா இது அதை விட மோசம்.”
“எந்த வகையில்?”
“இந்தப் பையன் தண்ணியும் குடிக்க மாட்டேங்கறான். பூரணமான உண்ணா விரதம்.”
“அப்படியா? அதாவது உணவு சுத்தமா கிடையாது, அதோடு தண்ணியும் கிடையாதா?”
“கரெக்ட். ஐரிஷ் போராளி பாபி சாண்ட்ஸ் அப்படிங்கற ஆள் சிறையில் உண்ணா விரதமிருந்தார். அவர் கடைசி வரை தண்ணீர் குடிச்சிட்டுதான் இருந்தார். அப்படி இருந்தும் உண்ணா விரதத்தால் செத்துப் போனார். இவன் வேற ரகமா இருக்கான்.”
அஹிம்ஸா திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை. மிஷ்ரா “குட்நைட்” சொல்லிப் படுக்கப் போய் விட்டான். காலை அவன் சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும்.
அஹிம்ஸாவுக்குத் தானும் நீர் அருந்தாமல் இருந்து பார்க்கலாம் எனத் தோன்றியது. உண்ட கரம் கழுவி விட்டு வந்து எப்போதும் தண்ணீர் குடிப்பாள். அன்று தவிர்த்தாள்.
சற்று நேரம் மொட்டை மாடியில் நடை பயின்றாள். வயிறு ரொம்பக் கனமாக இருந்தது. பிறகு கீழே இறங்கி வந்து மிஷ்ராவின் அருகில் படுத்தாள். தண்ணீர் தாகமாக இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். பிற்பகலில் தூங்கியதால் உடனே உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தவள் பின் எப்போதென்றே அறியாமல் தூங்கிப் போனாள்.
மருத்துவர் வந்து அவளை எழுப்பி, "நீங்கள் தண்ணீர் அருந்தாமல் இருந்ததால் சிசு கருப்பையிலேயே தாகமெடுத்து இறந்து விட்டது." என்கிறாள். திடுக்கிட்டு எழுந்தாள் அஹிம்ஸா. முகமெல்லாம் வியர்த்திருந்தது. கனவு. தொண்டை வறண்டு நீருக்குத் தவித்தது. எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு முழுச் சொம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வந்த போது பரம நிம்மதியாக இருந்தது. படுத்து மறுபடியும் தூங்கிப் போனாள்.
*
காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து பதினோராம் நாள் பிரசவம்!”
அன்று அவளுக்கு அஜீரணக் கோளாறு இருந்தது, புளிப்பு ஏப்பம் வந்தது, சப்தமாக வாயு பிரிந்தது, அதோடு மலச் சிக்கலும் சேர்ந்து கொண்டது. அஹிம்ஸா கர்ப்பம் ஆனதில் இருந்தே அவளது உடலில் ஏதாவது உபாதைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
அஹிம்ஸாவுக்கும் மிஷ்ராவுக்கும் இடையே வடக்கு - தெற்கு முரண்கள் பல தினசரி பழக்க வழக்கங்களில் வெளிப்பட்டன. குறிப்பாக மொழி, உணவு என நா சம்பந்தப்பட்ட விஷயங்களில். குழந்தைக்குப் பெயர் வைக்கும் விஷயத்திலும் அப்பிரச்சனை எழுந்தது.
மிஷ்ரா ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவன். எனவே அஹிம்ஸாவின் கர்ப்பம் உறுதியான போதே ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். பெண் குழந்தை பிறந்தால் மிஷ்ராவின் விருப்பப்படி பெயர் வைப்பது, ஆண் குழந்தை எனில் அது அஹிம்ஸாவின் விருப்பம். ஏழு மாதமான போது அவள் வயிற்றின் அமைப்பைப் பார்த்து நிச்சயம் ஆண் குழந்தைதான் என அவளது அம்மா அடித்துச் சொன்னாள். அப்போதே அவள் பெயர் தேர்ந்திருந்தாள். கமல். அவளுக்கு மிகப் பிடித்த நடிகர். ‘பேர் சொல்லும் பிள்ளை’ வேறு. அது வடக்கத்திய ஆட்களுக்கும் தொந்தரவில்லாத பெயர். பெரிய சலசலப்பு இராது.
மிஷ்ரா என்ன பெயரை மனதில் வைத்திருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். நாட்டின் முன்னாள் பிரதமரின் பெயர். அவர் இன்றைய பிரதமரின் அன்னையும் கூட.
மிஷ்ரா பெண் குழந்தை பிடிக்கும் எனக் காட்டிக் கொண்டாலும் அவன் உள்ளூர ஆண் பிறப்பதையே விரும்புகிறான் என அஹிம்ஸாவுக்குத் தோன்றும். அவனைப் போல் தன் நாட்டுக்கு ஓய்வு ஒழிச்சலின்றிப் பணியாற்றும் ஒரு தேச பக்தனைப் பெறுவதையே விரும்புவான். திடீரென உண்ணா விரதம் இருக்கும் இளைஞன் நினைவுக்கு வந்தான்.
என்ன ஆயிற்று அவன் விஷயம்? அவசரமாக அன்றைய செய்தித்தாள்களை எடுத்துப் பிரித்தாள். ஆங்கில தினசரியில் கடைசிப் பக்கத்தில் சிறிய செய்தியாக வெளியாகி இருந்தது. தமிழ் நாளேட்டில் மூன்றாம் பக்கத்தில் கால் பக்கச் செய்தி வந்திருந்தது.
“ஒருவேளை, இந்தப் பட்டினிப் போரில் நான் இறக்க நேரிட்டால் எனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தந்து விடுங்கள். தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணி மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். எனது மக்கள் விடுதலை அடைகின்ற காட்சியை என் கண்கள் பாராது என்பதே ஒரே ஏக்கம்.” என்று உரையாற்றி இருந்தான்.
மாணவர்கள் அவனைச் சந்திக்கிறார்கள். தள்ளாத தாய்மார்கள் உச்சி முகர்கின்றனர். போராளி இயக்கத் தலைவரே நேரடியாக அவனிடம் வாக்கி டாக்கியில் பேசுகிறார். எனில் இயக்கத்தில் அவ்வளவு பெரிய ஆளா என்ற கேள்வி அஹிம்ஸாவுக்கு எழுந்தது.
மருத்துவக் கல்லூரி மாணவன். தேசச்சூழல் உணர்ந்து படிப்பைக் கை விட்டுப் போராளி ஆனவன். இருபது வயதில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் கையிலிருந்த ஆயுதங்கள் தாங்கிய சூட்கேஸைத் தனி ஆளாகக் காப்பாற்றித் தப்பிக்கையில் கையில் துப்பாக்கிக் குண்டு வாங்கியிருக்கிறான். சில மாதங்கள் முன் நிகழ்ந்த சண்டையில் ராணுவத்தினர் பலரைச் சுட்டுக் கொன்றிருக்கிறான். அப்போது அவன் மேல் விழுந்த குண்டு உடலைச் சிதைத்தது. அவன் உயிரைக் காக்க, குடலின் 14 அங்குலத்தை அறுவை சிகிச்சை செய்து நீக்கி இருக்கிறார்கள். அந்த குடலுடன்தான் உண்ணா விரதத்துக்கு அமர்ந்திருக்கிறான்.
அவன் மீது மெல்லிய மதிப்பும் பிரியமும் அஹிம்ஸாவுக்கு எழுந்தது. எந்த இடத்தில் அவன் உண்ணா விரதம் நடக்கிறது எனப் பார்த்தாள் - நல்லூர் கந்தசுவாமி கோயில்.
திடுக்கிட்டாள். அது அத்தீவின் பிரபலக் கோயில்களில் ஒன்று. முழுக்கப் போராளிகள் கட்டுப்பாட்டில் இருந்த வடக்குப் பிராந்தியத்தில் இருக்கிறது. தலைநகரிலிருந்து சுமார் இருநூற்று நாற்பது மைல் தொலைவு. அத்தீவுக்கு வந்ததிலிருந்து அக்கோயிலுக்குப் போக வேண்டும் என்பது அவளது விருப்பம். ஆனால் வெவ்வேறு தடைகள் உண்டாகித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவள் கருவுற்றது உறுதியான முதல் நாளே தனக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்தால் முதலில் அங்கே வருவதாக வேண்டிக் கொண்டாள்.
மிஷ்ராவுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்பதால் அவனிடம் ஏதும் சொல்லவில்லை.
*
நுரை பொங்கப் பற்கள் துலக்கித் துப்புகையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து பத்தாம் நாள் பிரசவம்!”
அன்று அவளுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் இல்லை. படுக்கையிலிருந்து எழும் போதே வலது காலில் தசை பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் உயிர் போய் வந்தது.
பத்திரிக்கைகள் துணையோடு உண்ணா விரத நிகழ்வுகளைக் கண்காணித்தாள்.
அவன் உண்ணாவிரதப் போராட்ட மேடையிலிருந்தபடி பத்திரிக்கைகள், புத்தகங்கள் என வாசிக்கிறான். போராட்டம் பற்றிய உணர்ச்சிகரக் கவிதைகள் வாசிக்கப்படுவதை ரசிக்கிறான். அவனும் உரை நிகழ்த்துகிறான். போராளி இயக்கத் தலைவர் அவனை வந்து நேரில் சந்திக்கிறார். இரவு வரை பேசிக் கொண்டிருக்கிறார். கிளம்புகையில் உண்ணா விரதத்தின் போது அதிகம் பேசினால் உடல் சோர்வுறும் எனத் தவிர்க்கச் சொல்கிறார். அவன் ஏற்கிறான். அவனைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்புகிறார்.
அவனது கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று அன்றைய தினசரியில் வெளியாகி இருந்தது. மிக ஒல்லி. வசீகரமான முகம். அதில் கண்ணாடி போட்டிருந்தான். அளவான அடர்மீசை. இடக் கையில் கடிகாரம். முழுக்கை சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தான். அவனது உதடுகள் வெடித்து வெளிறிப் போயிருந்தன. கண்கள் உள்ளே போயிருந்தன. முகம் வறண்டு, காய்ந்து கிடந்தது. தலை கலைந்திருந்தது.
அவன் உயிர் பிழைக்க வேண்டும். ஒரு வேளை செத்தாலும் துப்பாக்கியால் சுடப்பட்டோ, குண்டு வெடித்துச் சிதறியோ சாகட்டும். பசியால் கூடாது என நினைத்துக் கொண்டாள்.
*
கழிவறையில் முக்கிக் கொண்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் பிரசவம்!”
அன்று காலையிலிருந்து அவளுக்கு சோப்புத்துண்டோ சாக்கட்டியோ தின்ன வேண்டும் என்ற வேட்கை இருந்தது. வீட்டிலிருந்த சகல வாசனைகளும் துல்லியமாகத் தெரிந்தன.
வானொலி மூலம் உண்ணா விரதச் செய்திகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் அஹிம்ஸா.
அவன் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் ஆலயத்தின் முன்னிருந்த மைதானம் ஜனக் கூட்டத்தால் நிறைந்தது. முதலில் நூற்றுக்கணக்கிலும் அப்புறம் ஆயிரக்கணக்கிலும் இருந்த கூட்டம் இப்போது லட்சத்தைத் தொட்டு விட்டது. மழை பெய்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது நின்றனர். ஒலிபெருக்கி பிரபலக் கவியின் வரிகளை முழக்கமிட்டுக் கொண்டிருந்தது: ‘இவன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா?’
அவன் பற்றிக் கூடுதல் தகவல் சொன்னார்கள். ஈராண்டுகள் முன் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டதிலிருந்து சிக்கலான பொது மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்திருந்தான். பஸ் வழிமறிப்புப் போராட்டம், மீனவர்களிடையேயான கடல் எல்லைப் பூசல்கள், தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள், பல்கலைக்கழகத்தில் உண்டான தகராறுகள், கடை முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இடையேயான பிரச்சினைகள் – இப்படிப் பல விஷயங்களைப் பேசியே சமரசம் செய்திருக்கிறான்.
ஒரு முறை இரண்டு மதத்தினரிடையே நடந்த துப்பாக்கி, எறிகுண்டு பாவித்த கலவரச் சண்டையையே பேச்சுவார்த்தைகள் மூலமே சரி செய்தான். எனவே அஹிம்சையின் மீது அடிப்படையிலேயே அசலாக நம்பிக்கை வைத்திருப்பவன். மிஷ்ரா சொன்னது போல் போர் நிறுத்த காலத்தில் கையாளும் தற்காலிக உத்தி அல்ல எனத் தோன்றியது.
அன்றைய மாலை செய்தித்தாள் அவன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க இயலாமல் சிரமப்பட்டான் என்றது. அவன் நீர் அருந்தி ஐம்பது மணி நேரம் மேலாகி விட்டது. உடனிருந்த போராளிகள் தண்ணீர் எடுக்கச் சொல்லி அவனை வற்புறுத்த, அவன் சட்டென வெகுண்டான்: "பெயரைக் கவனியுங்கள். உண்ணா விரதம். அதன் அர்த்தம் என்ன? ஏதும் உண்ணாதிருப்பது. க்ளுக்கோஸ், இளநீர், தண்ணீர் எல்லாமே உணவுதாம். இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். அது உண்ணாவிரதம் இல்லை. ஒரு புனித இலட்சியத்துக்காகவே நான் என்னை வருத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன். வெறும் அரசியல் லாபத்துக்காக அல்ல. வயிறு முட்டத் நீரருந்தி விட்டு என்னையும் ஏமாற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது. இனி என்னை யாரும் தண்ணீர் குடிக்கச் சொல்லிக் கேட்க வேண்டாம். நேரடியாகச் சொன்னால் அது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது.”
பெருமூச்செறிந்தாள். அப்பிடிவாதத்தின் மீது சினமெழுந்தது. தூங்க முயற்சி செய்தாள்.
*
குளியலறை நீர்ப் பொழிவில் நின்றிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து எட்டாம் நாள் பிரசவம்!”
முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. கண்கள் சிவந்திருந்தன. தலை வலி வந்தது.
இன்னும் வானொலியையும் பத்திரிக்கைகளையுமே தகவலுக்குச் சார்ந்திருந்தாள்.
உண்ணாவிரத மேடையில் முந்தைய இரவு அவ்விளைஞன் நன்றாக உறங்கி விட்டான். தாமதமாகக் கண் விழித்தவன் எழச் சத்தின்றி படுக்கையில் கிடந்தான். நாடித் துடிப்பு அதிகரித்திருக்கிறது. நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் குறையத் தொடங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்கள் சிறுநீர் கழியவில்லை எனில் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும். அது இருதயத்தில் பாதிப்பை உண்டாக்கி ஆளைச் சாகடிக்கும்.
அன்று அவனுக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர் வரவழைக்கப்பட்ட போது குழறிய குரலில் அவன் சொன்னான்: “எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பலவந்தமாகவோ, சுயநினைவற்ற நிலையிலோ தர முயற்சி செய்யக்கூடாது. என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறப்பது வரை எவ்விதப் பரிசோதனையும், சிகிச்சையும் செய்யக் கூடாது. இதுக்குச் சம்மதிப்பதாகச் சத்தியம் செய்து தாருங்கள்.” போராளிகள் அவனது கை பிடித்தனர். மருத்துவர் வேறு வழியின்றி வெளியேறினார்.
தேவாலயப் பாதிரியார் ஒருவர் வந்து அவன் கிடந்த கோலம் கண்டு தான் உணர்ச்சி துறந்தவன் என்பதையும் மறந்து கதறி அழுதார். நல்லூர் கந்தசுவாமியிடம் அவனைக் காக்கும்படி மக்கள் மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். நாடெங்கும் ஆலயங்களில் அது நடந்தது. உண்ணாவிரதம் பற்றிய செய்தி சர்வதேச அளவில் பரவியது. ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பலர் கவலையுடன் தொலைபேசி நிலைமையை விசாரிக்க ஆரம்பித்தனர். அது அவளது நாட்டின் தென்முனையிலும் கொந்தளிப்புகளை உண்டாக்கி இருப்பது தெரிந்தது. அன்றைய இரவில் அவளும் அவனுக்காக வழிபட்டாள்.
*
புடவை கட்டி மடிப்புகளைச் சரி செய்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஏழாம் நாள் பிரசவம்!”
காலையிலிருந்தே வாந்தி வருவது போல் உணர்வு. ஆனால் வரவில்லை. பெயர்தான் ‘மார்னிங் சிக்னஸ்’, ஆனால் நாளெல்லாம் இருக்கிறது என நொந்து கொண்டாள்.
போராளிகள் நடத்தும் தொலைக்காட்சிச் சேவையைக் கண்டுகொண்டாள். அதில் தினமும் அரை மணி உண்ணா விரதம் பற்றிய செய்தித் தொகுப்பு இடம் பெற்றது.
அன்று அவனால் பத்திரிக்கைகள் வாசிக்க முடியாத அளவுக்குச் சோர்வும் மயக்கமும் ஆட்கொண்டு விட்டது. போர்வைக்குள்ளையே அடைந்திருந்தான். மின் விசிறியை மீறி உடல் வியர்த்தது. சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்து விட்டதன் அறிகுறி அது. மக்கள் நாடெங்கிலும் இருந்து பேருந்துகள், மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் என கிடைக்கும் வாகனங்களில் எல்லாம் ஏறிவந்து குவிய ஆரம்பித்தார்கள். சிலர் நடை பயணமாகவும்.
போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் வந்து அன்று அவனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் என்ற செய்தி மாலை வந்தது. ஆனால் பேசிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. நள்ளிரவில் மிஷ்ரா வந்த போது தவறாமல் அது பற்றி வசாரித்தாள்.
“நம் அரசிடமிருந்தோ, என்னிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றுதான் அவரால் அவனிடம் சொல்லியிருக்க முடியும். அவன் நம் அரசை நோக்கி சரியாக நமது அடையாளமான மஹாத்மாவின் ஆயுதம் ஏந்தி நிற்கிறான். அது நல்ல நகர்வு. இரு அரசுகளும் இந்தப் போராட்ட வடிவிற்குச் சங்கடம் கொள்கின்றன. இதை எப்படிக் கையாள்வது எனத் தடுமாறுகின்றன. ஒருவேளை அவன் வெல்லவும் கூடும்.”
அஹிம்ஸா மனம் நிறைந்து மிஷ்ராவை இறுகக் கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள்.
*
தலையில் மலர் சூடி நுதற்பொட்டு வைக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஆறாம் நாள் பிரசவம்!”
அன்று அவள் எழுந்த போதே லேசான தலை சுற்றல் இருந்தது. கால்களும் கைகளும் வீக்கம் கண்டிருந்தன. சிறுநீர் கழித்த போது ஒருவிதமான எரிச்சலை உணர்ந்தாள்.
ஒரே செய்தியை தனியார் பத்திரிக்கை, அரசின் வானொலி, போராளி தொலைக்காட்சி என ஒவ்வோர் ஊடகமும் வெளியிடுகையில் அவற்றுக்கிடையே மெல்லிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள். உண்மைச் செய்தி என ஒன்று இருக்கிறதா என்று வியந்தாள்.
அன்று அதிகாலையிலேயே எழுந்து அதிசயமாக அரை லிட்டர் சிறுநீர் கழித்தான். அதை ஒரு சாதனை போல் உற்சாமாகச் சொல்லியிருக்கிறான். “விளக்கு அணையும் முன்பு பிரகாசமாக எரியும், அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று சுயபகடியும் செய்திருக்கிறான். பின் மெல்லிய குரலில் ஓர் உரை ஆற்றியிருக்கிறான்.
“என் மண்ணின் மக்களே! என்னால் பேச முடியவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் தரும் உற்சாகம் என்னைப் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்தின் பிரஜைகளே, உங்களிடம் பெரிய பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் யாவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். இந்நிலத்துக்காக உயிர் நீத்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக மேலிருந்து மலரும் தனி தேசத்தை மகிழ்ந்து பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.”
போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் அன்று அவள் நாட்டிற்குப் போயிருக்கிறார் எனச் செய்தி வந்தது. அது அவள் தேசப் பிரதமர் அழைப்பின் பேரில், உண்ணா விரதம் பற்றிப் பேசுவதற்காக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பி இருந்தன. இரவு மிஷ்ரா வருவதற்காகக் காத்திருந்து அது பற்றி விசாரித்தாள் அஹிம்ஸா. அங்கே அப்படி ஏதும் சந்திப்பு நிகழவில்லை, சாதாரணப் பயணம் அது என்று சொல்லி ஏமாற்றம் தந்தான்.
*
சமையல் அறையில் காஃபி போட்டிருக்கையில் அஹிம்ஸா சொல்லிக் கொண்டாள் –
“இன்றிலிருந்து ஐந்தாம் நாள் பிரசவம்!”
அவளது வாய் ஈறுகளில் வீக்கமும் பற்களில் ரத்தக் கசிவும் உண்டாகின. சூல் கொண்ட வயிற்றில் வீக்கம் அதிகரித்து பக்கவாட்டில் லேசாக வலிக்கும் உணர்வு தோன்றியது.
அவனது இதயத் துடிப்பு 140 ஆக அதிகரிக்க, இரத்த அழுத்தம் 80/50 என்று விழுந்தது.
மக்கள் பெருக்கம் அதிகரிப்பதாலும், வெயிலும் மழையும் குளிரும் தாக்குவதாலும், பெண்களும், குழந்தைகளும் கூடுவதாலும் மைதானம் முழுக்கவும் உண்ணா விரத மேடையைச் சுற்றிக் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்தனர். அங்கேயே வேறு சிலரும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். நாட்டின் மற்ற பாகங்களிலும் தம் ஆதரவை வெளிப்படுத்த மக்கள் அடையாள உண்ணாவிரதங்கள் இருந்தனர். மெல்ல மெல்ல ஒரு மக்கள் எழுச்சி இயல்பாக உருவாகிக் கொண்டிருந்தது. அரசு கவலைப்பட்டது. நகரைச் சுற்றி சமாதானப் படையின் ஹெலிகாப்டர்கள் பறந்து அதை அளந்து கொண்டிருந்தன.
மிஷ்ரா இன்று போராளிகளின் அரசியல் பிரிவுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தக்கூடும் என்று ஒரு செய்தி வந்தது. எப்போதும் மிஷ்ராவின் பெயர் அப்படி வானொலியிலோ செய்தித்தாளிலோ தொலைக்காட்சியிலோ கண்டால் அவளுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால் அன்று அதை மீறி உண்ணா விரத விஷயத்தில் என்ன முடிவு எட்டப்படும் என்பதே அவளது ஆர்வமாக இருந்தது. அதன் மூலம் அவன் உணாவிரதத்தைக் கைவிட்டால் உடனடியாகப் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தயார் நிலையில் இருக்கிறது. அங்கே அவசர சிகிச்சை அளித்தால் மூன்று நாட்களில் அவன் உயிர் பிழ
March 1, 2023
தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்கு
பொ.ஊ. 969ம் ஆண்டு என்பது ஓர் உத்தேசக் கணக்கு. ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசன் கொலை ஆகிறான். கொன்றது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள். அனேகமாகத் தமிழ் வரலாற்றில் பதிவாகி இருக்கும் முதல் கொலை வழக்கு அதுவே.
எப்படி தஞ்சை பெரிய கோயில் என்பது ராஜராஜ சோழன் என்ற மாபெரும் தமிழரசன் கட்டினான் என்பதே பல்லாண்டுகளாக மக்களுக்குத் தெரியாமல் போய் இறுதியில் ஒரு ப்ரிட்டிஷ்காரர் வந்து மறுகண்டுபிடிப்பு செய்து மீள்அறிமுகப்படுத்த வேண்டிய நிலை இருந்ததோ அப்படி ஆதித்த கரிகாலன் கொலையும் பல காலம் மக்களால் மறக்கப்பட்டு பிறகு 1950-ல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக நினைவூட்டப்பட்டது.
ஆனால் பொன்னியின் செல்வன் ஒரு புதினம். கற்பனைக் கதை. இந்தக் கொலை பற்றி இருக்கும் அசல் வரலாற்று ஆவணங்கள் என்னென்ன? சரித்திர ஆய்வாளர்கள் இது பற்றி அதிகாரப்பூர்வமாகச் சொல்வது என்ன? இது பற்றி முழு உண்மை வெளிவந்து விட்டதா?
*
ஆதித்த கரிகாலன் கொலை பற்றிப் பார்க்கும் முன் சோழ நாட்டில் அப்போது நிலவிய அரசியல் சூழல் சுருக்கமாக: சோழ மன்னர் கண்டராதித்தர் மறைய, அவரது மகனான மதுராந்தகன் சிறுவனாக இருக்க, கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயர் அரசனாகிறார். ஆனால் அவரும் ஓரிரு ஆண்டில் மறைய, அவரது மகன் சுந்தர சோழர் அரசனாகிறார். நியாயமாக அவர் அசல் உரிமை கொண்ட மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, தனக்கு அடுத்து அரசனாக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாது தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகிறார். இந்தப் பதவிப் பிரச்சனை முதல் பகை. வரி கட்ட மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்த பாண்டிய நாட்டின் மீது ஆதித்த கரிகாலன் போர் தொடுத்த போது மன்னன் வீர பாண்டியனின் தலையைக் கொய்து தஞ்சைக் கோட்டை வாயிலில் குத்தி வைக்கிறான். அது பாண்டியர்களிடம் உண்டாக்கிய வன்மம் இரண்டாம் பகை. இச்சூழலில்தான் அவன் கொல்லப்படுகிறான்.
அதன் பிறகு உத்தம சோழன் என்ற பெயரில் மதுராந்தகன் அரசனாகிறான். அவனுக்குப் பிறகு ஆதித்த கரிகாலனின் தம்பியான (பிற்பாடு ராஜராஜ சோழனாகப் புகழ் பெற்ற) அருண்மொழி வர்மன் அரசனாகிறான். ஆதித்தன், அருண்மொழியின் சகோதரியான குந்தவை, வந்தியத்தேவன் என்ற சிற்றரசனை மணந்து செல்வாக்குடன் திகழ்கிறாள்.
ஆதித்த கரிகாலன் கொலை பற்றி நமக்கு இரண்டே ஆவணங்கள்தாம் கிடைக்கின்றன. ஒன்று உடையார்குடி கல்வெட்டு, மற்றொன்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள். அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் தத்தம் நிலைப்பாட்டை இந்த விஷயத்தில் வந்தடைந்தார்கள். அந்தக் கருத்துக்களை ஒட்டியே பொன்னியின் செல்வன் முதல் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு வரை நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று நாவல்கள் கடந்த முக்கால் நூற்றாண்டில் எழுதிக் குவிக்கப்பட்டன.
*
உடையார்குடி கல்வெட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலுள்ள அனந்தீசுவரம் ஆலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சாசனம். ராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப் பெற்றது. அதாவது உத்தேசமாக பொ.ஊ. 987. பலரும் புரிந்து கொண்டிருப்பது போல் இது மன்னனின் சாசனமே அல்ல; மாறாக ஒரு தனி நபர் கோயிலுக்களித்த அறக்கொடை பற்றியும், அதற்காக வாங்கிய நிலங்கள் பற்றியும்தான் பேசுகிறது. சரி, இதில் ஆதித்த கரிகாலன் எங்கே வருகிறான்?
வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோருக்கு குறிப்பிட்ட நிலம் தொடர்பாக மன்னன் அனுப்பிய ஓர் அனுமதிக் கடிதம் இதில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அந்நிலம் முன்பு ஆதித்த கரிகாலன் கொலையாளிகளுக்குச் சொந்தமாக இருந்தது. கொலைச்சதி தெரிந்ததும் தண்டனையாக அவர்களிடமிருந்த நிலம் பறிக்கப்பட்டது.
கல்வெட்டைப் பொறித்த ஆள் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன். அவன் அனந்தீசுவரம் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் சிவனடியார்களின் உணவுக்காகவும் குறிப்பிட்ட நிலத்தைப் பொன் கொடுத்து வாங்கி நன்கொடையாக அளித்தான் என்பதைப் பதியவே இக்கல்வெட்டு. நிலத்தை அவனுக்கு விற்றது வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினர். கல்வெட்டு அந்நிலத்தின் முன்கதையையும் பேசுகிறது. ஆதித்தனைக் கொன்ற ராஜ துரோகிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நிலங்கள் முழுவதும் முன்பு அரசின் ஆணைக்கேற்ப வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினரால் கையகப்படுத்தப்பட்டு, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளன. அதன் ஒரு பகுதிதான் மேற்சொன்ன கோயில் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிலம்.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விற்பனை செய்ய கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் என்ற இரு கண்காணிப்பாளர்களை நியமித்து ராஜராஜ சோழன் அனுப்பியிருந்த ஆணைக் கடிதமே கல்வெட்டில் இருந்த மேற்கோள்.
கொலையாளிகள் யார் என இந்தக் கல்வெட்டு தெளிவாகவே சொல்கிறது. சோமன், அவன் தம்பி ரவிதாசன் என்ற பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் என்ற இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவரும் கொலை செய்த துரோகிகள்.
பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் பிராமணர்களுக்கு வழங்கப்படுவது. பஞ்சவன் பிரமாதிராஜன் விருது பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்கள் தரும் விருது. இருமுடிச் சோழ பிரமாதிராஜன் விருது சோழப் அரசர்கள் வழங்குவது. ஆக, ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டில் உருவானது என்பதும் பாண்டியர் சிலர் சோழ நாட்டில் ஊடுருவி அங்கே பதவிகள் பெற்று துரோகிகளாக நடந்து கொண்டனர் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
குறிப்பிட்ட நிலம் இவர்களின் தம்பி மலையனூரான் என்ற பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன், அவன் தாய் பெரிய நங்கைச்சாணி, அவனது மகன் என மூவருக்குச் சொந்தமானது. நெருங்கிய உறவினர் நிலங்கள் யாவும் பறிக்கப்பட்டன என்பதால் இதையும் எடுத்திருக்கிறார்கள். இதுவே உடையார்குடி கல்வெட்டின் உள்ளடக்கம்.
ஆக, உடையார்குடி கல்வெட்டு ஆதித்த கரிகாலன் கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கும் சாசனமல்ல; மாறாக, ஒரு நில விற்பனை ஆவணம் மட்டுமே.
எனவே இக்கல்வெட்டின் மூலம் ராஜராஜன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் தண்டிக்கப்பட்டனர் என்று சொல்ல முடியாது, சுந்தர சோழர் அல்லது உத்தம சோழன் காலத்தில் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என ‘உடையார்குடி கல்வெட்டு: ஒரு மீள்பார்வை’ என்ற கட்டுரையில் நிறுவுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
*
இரண்டாம் ஆதாரம் திருவாலங்காட்டுச் செப்பேடு. சோழ அரசின் இலச்சினை கொண்ட பெரிய இணைப்பு வளையத்துடன் மொத்தம் 31 ஏடுகள் உள்ள தொகுதி இது. ராஜேந்திர சோழனின் ஆறாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இஃது பிற்கால சோழர் வரலாற்றினை விவரிக்கிறது. 10 ஏடுகள் சமஸ்கிருத ஸ்லோகமாகவும் மீதம் தமிழ் உரைநடையிலும் உள்ளன. அதில் மூன்று சமஸ்கிருத ஏடுகள் ஆதித்த கரிகாலன் பற்றிப் பேசுகின்றன.
ஆதித்த கரிகாலன் போரில் பாண்டிய இளவரசனைக் கொன்றவன்; அவன் தலையைத் தன் நகரில் உள்ள கம்பத்தில் தொங்க விட்டவன்; வானுலகைக் காணும் ஆசையோடு அஸ்மனமானான் என்கிறது. அதாவது உரிய காலத்துக்கு முன்பே செத்துப் போனான் என்றே அர்த்தம். கொலை செய்யப்பட்டான் என்று சூசகமாகச் சொல்கிறது. பாண்டியப் பகை குறிக்கப்படுவதால் செப்பேடு அவர்களையே கொலைகாரர்கள் ஆக்குகிறது. (எசாலம் செப்பேடுகளும் பாண்டிய மன்னனின் தலையை வெட்டி தஞ்சை வாயில் மரத்தில் தொங்க விட்டான் ஆதித்த கரிகாலன் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.)
இதன் அடுத்த பகுதியிலேயே ஆதித்தன் மறைந்த இருளைப் போக்க (அதாவது அரச பதவி ஏற்க) மக்கள் அருண்மொழியை வேண்டியதாகவும் ஆனால் தர்மத்தை அறிந்த அவனோ அதை ஏற்காது அரச பதவியில் ஆசை கொண்ட சிற்றப்பன் மதுராந்தகனிடம் பொறுப்பை ஒப்படைத்ததாகவும் சொல்கிறது. ஆக, மதுராந்தகன் சோழ அரியணைக்கு ஏங்கியதும் ஆதித்த கரிகாலன் அதற்குத் தடையாக இருந்ததும் இதன் மூலம் தெளிவு.
*
இவற்றைக் கொண்டு வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கும் முடிவுகளைப் பார்க்கலாம்.
சோழர்கள் (புத்தகம் 1) நூலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலன் ஒரு சதி மூலம் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார். ஆனால் அக்கொலைக் குற்றவாளிகள் மதுராந்தகனாகிய உத்தம சோழன் ஆட்சியில் தண்டிக்கப்படவில்லை, ராஜராஜன் அரியணை ஏறிய பின்பே தண்டனை வழங்கப்பட்டது என்று உடையார்குடி கல்வெட்டு உணர்த்துவதாகப் புரிந்து கொள்கிறார். அதையும் மதுராந்தகனுக்கு நாடாளும் ஆசை இருந்ததையும் இணைத்து, அவனே அந்தக் கொலைச் சதிகாரன் என்கிறார் சாஸ்திரி.
பிற்காலச் சோழர் சரித்திரம் (பகுதி I) நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார், சோழத்தின் பிராமண உயர் அதிகாரர்களே ஏன் தம் இளவரசனையே வஞ்சமாகக் கொன்றனர் என வியக்கிறார். ஆனால் உத்தம சோழன் சதி செய்து கொன்றிருக்கலாம் என்ற கூற்றை மறுக்கிறார். அப்படி இருந்தால் ஆதித்தனின் தம்பியான அருண்மொழி வர்மன் எப்படி உத்தமனை அரச பதவி ஏற்க அனுமதித்திருப்பான், எப்படி அவன் மீது பேரன்புடன் இருந்திருப்பான், குடிகளின் ஆதரவு எப்படி உத்தம சோழனுக்குக் கிடைத்திருக்கும் எனக் கேள்விகள் எழுப்புகிறார் (உத்தம சோழன் நல்லாட்சி புரிந்தமைக்குச் சான்றுகள் உண்டு). எனவே இது அதிகாரிகள் சதி மட்டுமே என்கிறார். உடையார்குடி கல்வெட்டை ராஜராஜ சோழன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் என்பதாகவே பண்டாரத்தாரும் புரிந்து கொண்டாலும் வழக்கின் விசாரணை முடியவும் தண்டனை அறிவிக்கவும் தாமதம் ஆகியிருக்கலாம் என நல்லவிதமாகவே புரிந்து கொள்கிறார்.
கே.கே. பிள்ளையும் பண்டாரத்தார் போல கொலை செய்தது பிராமணர்கள் என்பதைச் சுட்டி அரசாங்க அதிகாரிகள் ஏன் அரசிளங்குமாரனைக் கொன்றனர் என வியக்கிறார். சோழர் வரலாறு (2ம் பாகம்) நூலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அரியணை ஏறும் நிமித்தம் மதுராந்தகனே சூழ்ச்சி செய்து ஆதித்தனைக் கொன்று விட்டான் என்கிறார். தென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் கா. அப்பாத்துரை எதிரிகள் சிலரால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் எனப் பொதுவாகச் சொல்லி முடித்துக் கொள்கிறார்.
‘ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு ஒரு மறு ஆய்வு’ என்ற கட்டுரையிலும் ‘முதலாம் இராசராச சோழன்’ நூலிலும் க.த. திருநாவுக்கரசு கிட்டத்தட்ட சதாசிவ பண்டாரத்தார் சொல்லும் கருத்தையே வழிமொழிகிறார். கூடுதலாக, மதுராந்தகன் மீது குற்றமில்லை என்று மக்களுக்கு உறுதிபடச் சொல்லவே அருண்மொழி அவனை அரியணை ஏறச் செய்தான் என்றும் அவன் குற்றமற்றவன் என மக்களும் ஏற்றதாலேயே உத்தம சோழன் என்ற பெயர் பெற்றான் என்றும் சேர்த்துக் கொள்கிறார். குற்றவாளிகள் பிராமணர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ராஜராஜன் மரண தண்டனை விதிக்கவில்லை என்கிறார். இந்தக் கட்டுரை தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட அருண்மொழி ஆய்வுத் தொகுதி (பதிப்பாசிரியர்: நடன. காசிநாதன்) மற்றும் சோழர் சமுதாயம் (பதிப்பாசிரியர்: முனைவர் சீ. வசந்தி) ஆகிய இரு நூல்களிலும் இடம் பெற்றது இதன் ஏற்புக்குச் சான்று.
‘A Note on the accession of Rajaraja Chola’ என்ற கட்டுரையில் ஆர்.வி. ஸ்ரீநிவாசன் என்பவர் ஒருபடி மேலே போய் அருண்மொழி வர்மன் அரச பதவிக்கு வர வேண்டி தன் சொந்தச் சகோதரனான ஆதித்த கரிகாலனை குந்தவை, வந்தியத்தேவன் துணை கொண்டு கொன்றிருக்கலாம் என்கிறார். ராஜராஜன் தர்மம் என்றெல்லாம் சொன்னாலும் தன் தவறை மறைக்கவே மதுராந்தகனுக்கு அரச பதவியை விட்டுக் கொடுத்தான் என்பது அவர் ஊகம். ராஜராஜனைத் தப்புவிக்க வேண்டுமென்றே உத்தமனைக் குற்றவாளி ஆக்குகிறார் என்று நீலகண்ட சாஸ்திரியையும் சாடுகிறார். இவ்வாதங்களில் தர்க்கம் இருந்தாலும் இக்கட்டுரையின் நோக்கம் அதிர்ச்சி மதிப்பீடு என்றே எனக்குப் படுகிறது.
‘ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும்’ கட்டுரையில் துரை இளமுருகு, இந்தக் கொலை மதுராந்தகன், அருண்மொழி வர்மன் இருவரின் கூட்டுச் சதிதான் என்கிறார். சந்தேகம் வராமல் இருக்க மதுராந்தகனை அரசனாக்கினான் ராஜராஜன் என்கிறார்.
‘பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும்’ என்ற கட்டுரையில் நடன. காசிநாதன் சத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே காலகாலமாக இருக்கும் பொறாமை மற்றும் பகையே ஆதித்த கரிகாலன் கொலைக்குக் காரணம் என்கிறார். அதற்குப் பழி தீர்க்கவே ராஜராஜன் தான் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்துப் போய் அங்கே பிராமணர்களின் கடிகையை அழித்தான் என்கிறார்.
காலந்தோறும் பிராமணியம் (பாகம் ஒன்று) நூலில் அருணன் சுந்தர சோழர் போல் அவரது மைந்தன் ஆதித்த கரிகாலனும் பிராமணிய மதமல்லாது, சமண, பௌத்த மதங்களை ஆதரித்து வந்திருக்கலாம் என்றும் அதனால் சினமுற்ற சில சோழ உயர் அதிகாரிகளான பிராமணர்கள் அவனைக் கொன்றிருக்கலாம் என ஊகம் சொல்கிறார்.
இப்படி வரலாற்றில் கைதேர்ந்த பலரும் பல ஆதாரங்கள், தர்க்கங்களின் அடிப்படையில் ஆதித்தன் கொலையில் பற்பல கருதுகோள்களை முன்வைத்திருக்கின்றனர். இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது இவற்றில் சிலவற்றின் கலவையாகவோ உண்மை இருக்கலாம்.
நான் இந்த ஒவ்வொன்றில் இருந்தும் உண்மைக்கு மிக அருகில் இருப்பதாகத் தோன்றிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்ற ஆயிரம் பக்க நாவலை எழுதினேன். புனைவெனினும் உண்மைக்கு அருகில் இருந்தால் மட்டுமே மதிப்பு - எதிர்கால நூற்றாண்டின் விஞ்ஞானக் கதை என்றாலும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்காக இருந்தாலும் சரி!
***
(தீராநதி - ஃபிப்ரவரி 2023 இதழில் வெளியானது)
February 13, 2023
மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை
காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்!
காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்?
வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது.

ஆணின் காதல் என்பது அவனது இதர வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு.
இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே.
ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வேண்டி இருக்கிறது; மறுபுறம் ஆகக் கொடூரமான வழிகளில் குருதி சிந்தவும் வேண்டி உள்ளது. பெண்கள் மீது உடல்ரீதியான வன்முறைகளை, பாலியல் குற்றங்களை இழைக்கும் அதே ஆண்தான் மறுபுறம் உயிருருகக் காதலிக்கவும் அதன்நிமித்தம் துயருறவும் செய்கிறான்.
அப்படி நாமறிந்த சில ஆண்களுக்குப் பின் இருக்கும் அரிதான காதலைப் பார்ப்போம்.
(இலக்கியமோ திரைப்படமோ மக்களின் வாழ்விலிருந்து பாதிப்பை எடுத்துக் கொண்டு திரும்ப மக்களின் வாழ்விலேயே செல்வாக்கு செலுத்துகிறது. எனவே நிஜமாக வாழ்ந்த காதலர்களுடன் மனிதக் கற்பனையில் உதித்த காதலர்களும் இப்பட்டியலில் உண்டு.)
*
(1)
மஜ்னுவின் காதலிலிருந்தே ஆரம்பிக்கலாம். அவன் ஏழாம் நூற்றாண்டு அரபுப் பழங்குடி. காஸ் இபின் அல்-முலவ்வா என்பதே அவனது அசல்ப் பெயர். பள்ளிப் பருவத்திலேயே உடன் படித்த லைலா அல்-ஆமிரியா என்பாளைக் காதலிக்க ஆரம்பித்தான். பித்தேறி அவளது அழகை வர்ணித்துக் கவிதைகள் எழுதினான். அவளை ஈர்க்க அவற்றைத் தெரு முனைகளில் நின்றுக் கூவி வாசித்தான். அவனை எல்லோரும் மஜ்னு(ன்) என அழைக்க ஆரம்பித்தனர். அரபியில் அதற்குப் ‘பைத்தியம்’ என்று பொருள். அவள் விழுந்தாள்.
ஆனால் அவளது பெற்றோருக்கு பைத்தியம் என்றழைக்கப்படும் அவனுக்கு அவளை மணம் முடித்துத் தர விருப்பமில்லை. அவர்களைப் பிரித்து அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்தனர். மனம் உடைந்த மஜ்னு பாலைவனத்துள் புகுந்தான். மிருகங்களுடன் வாழத் தொடங்கினான். அங்கும் மணலில் குச்சி வைத்து லைலா பற்றிக் கவிதைகள் எழுதினான். இதைக் கண்டு சகியாத அவன் தந்தை அவனது காதல் பித்தினை ஒழிக்க காபா என்ற புனிதத் தலத்துக்கு அழைத்துச் சென்ற போது லைலாவின் மீதான காதல் இன்னும் நூறு மடங்கு பெருக வேண்டும் என இறையிடம் வேண்டிக் கொண்டான் மஜ்னு.
மறுபக்கம் லைலா கணவனை நெருங்க விடவே இல்லை. நிராகரிப்பின் வலியிலேயே அவன் செத்துப் போனான். அதன் பிறகு லைலாவைச் சந்திக்கப் பல வாய்ப்பிருந்தும் மஜ்னு பாலைவன வாசத்தை விடுத்து அவளை வந்து சந்திக்கவே இல்லை. (கதையின் ஒரு வடிவில் லைலா அவனைத் தேடிப் போய்ச் சந்திந்த போதும் கூட அவன் அவளைத் தொடவே இல்லை என்று இருக்கிறது.) லைலா அந்தத் துக்கத்திலேயே உளம் வெதும்பி நோய் கண்டு இறந்தாள். செய்தி அறிந்து பாலைவனத்தை விடுத்து நகருள் நுழைந்த மஜ்னு அவளைப் புதைத்த சமாதியின் அருகிலேயே படுத்து அழுதே உயிர் விட்டான்.
மரணத்தில்தான் மஜ்னுவும் லைலாவும் சேர்ந்தார்கள். இருவரும் இறுதி வரை தொட்டுக் கொள்ளவே இல்லை. எது மஜ்னுவை அப்படிப் பிடிவாதமாக இருக்க வைத்தது? ஆன்மீகக் காரணங்கள் சொல்கிறார்கள். காதலின் மிகப் பரிசுத்தமான வடிவம் அது என்கிறார்கள்.
ஆனால் அது ஆணுக்கான பிரத்யேகத் திமிரின் துயர் என்றே எனக்குத் தோன்றுகிறது.
*
(2)
அடுத்தது ரோமியோவும் ஜூலியட்டும். இது ஷேக்ஸ்பியரின் நாடகம். மான்டேக் மற்றும் கேப்புலெட் என்ற இரண்டு இத்தாலிய அதிகாரக் குடும்பங்களுக்குள் பல காலமாக, பல முறை ரத்தம் சிந்திய ஜென்மப் பகை. ரோமியோ மான்டேக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜூலியட் கேப்புலட் குடும்பத்தில் ஒருத்தி. ஒரு முறை ரோமியோ உள்ளிட்ட மாண்டேக் குடும்ப இளைஞர்கள் சிலர் கேப்புலெட் குடும்பத்தில் ஒரு விருந்து நடப்பதை அறிந்து அதற்குள் ஊடுருவுகின்றனர். அங்கு அவர்கள் நுழைவதன் நோக்கமே ரோமியோ தான் காதலிக்கும் ரோஸ்லின் என்ற பெண்ணைச் சந்திப்பதே. மறுபக்கம் விருந்து நடப்பதே ஜூலியட்டுக்கு மணம் முடிக்க அவள் தந்தை மாப்பிள்ளை பார்த்திருப்பதன் நிமித்தமே.
ஆனால் அந்த விருந்தில் விபத்தாக ரோமியோவும் ஜூலியட்டும் சந்தித்துக் கொள்ள, முதற் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அதற்குள் மான்டேக் இளைஞர்கள் கண்டறியப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அன்று இரவே மாளிகையின் உப்பரிகை வழி ஜூலியட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து காதலைச் சொல்கிறான் ரோமியோ. மறுநாள் இருவரும் ரகசிய மணம் செய்து கொள்கிறார்கள்.
ரோமியோ அன்றிரவு அவளைத் திறக்கிறான். இனித்த உடலுடன் ஜூலியட் வீட்டுக்குத் திரும்புகிறாள். மறுநாள் நடக்கவிருந்த ஜூலியட்டின் திருமணம் அவளது சகோதரனை ரோமியோ ஒரு தெருக் கைகலப்பில் கொன்றதால் ஒரு நாள் தள்ளிப் போடப்படுகிறது.
ஜூலியட் கல்யாணத்திலிருந்து தப்பிக்க அவளுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த பாதிரியார் ஒரு யோசனை சொல்கிறார். அவர் அவளுக்கு மயக்கமூட்டும் ஒரு மருந்தை அளிப்பார். அவள் இறந்தது போல் நடிக்க வேண்டும். சமாதி செய்ததும் ரோமியோ வந்து அவளை மீட்டு இருவரும் சேர்வது. திட்டப்படி அவள் இறந்தது போல் நாடகமாட சமாதி செய்யப்படுகிறாள். ஆனால் அவளை மீட்க ரோமியோ வர வேண்டும் என்று பாதிரியார் அனுப்பிய தகவல் ப்ளேக் தொற்று காரணமாகப் போய்ச் சேரவில்லை. மாறாக, அவள் இறந்த செய்தி அவனைச் சேர்கிறது. அவள் சமாதிக்கு வருகிறான் ரோமியோ. அங்கே அழுது கொண்டிருந்த ஜூலியட்டின் மாப்பிள்ளையைக் கொன்று, தானும் விடமருந்தி உயிர் விடுகிறான். பாதிரியார் வந்து ஜூலியட்டை மீட்க, மயக்கம் தெளிந்து எழுந்தவள் விஷயமறிந்து சமாதியை விட்டு வர மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். அங்கு வந்த இரு பகையாளிக் குடும்பங்களும் அத்துயரின் மேல் சமாதானம் கொள்கின்றன.
மிகச் சுலபமாக, மிகச் சுபமாக முடிந்திருக்க வேண்டிய எளிய காதல் கதை. ஆனால் ஆண்களுக்கு மத்தியிலான பகையே ரோமியோவின் காதலைக் கொன்றது. ஆண் தன் காதலை நிலை நாட்ட தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அஃதில்லை என்றாகும் போது அவன் தன்னைத் தானே மாய்க்கவும் தயங்குவதில்லை.
*
(3)
கிரேக்க புராணத்தில் ஒரு காதல் கதை இருக்கிறது. பாரிஸ் - ஹெலன். பாரிஸ் ட்ராய் நகரில் வாழ்ந்த இளவரசன். ஹெலன் ஸ்பார்டா நகரில் வாழ்ந்த மெனெலௌஸ் என்ற அரசனின் மனைவி. பாரிஸ் ஒரு முறை ஸ்பார்டா நகருக்கு விருந்தாளியாக வந்த போது ஹெலன் அழகில் அவள் மீது மோகம் கொள்கிறான். அப்படிப் பிறனில் விழையுமளவு நிகரற்ற உயரழகு வாய்த்தவள்தான் ஹெலன். அவளுக்கும் பாரிஸின் மேல் காதல் உண்டாகிறது. பாரிஸ் ஹெலனை ட்ராய்க்குத் தூக்கிச் செல்கிறான். மெனெலௌஸ் சினமுற்று, தன் சகோதரன் உதவியுடன் ஆயிரம் கப்பல்களில் படைகளுடன் போய் ட்ராய் நகர் மீது போர் தொடுக்கிறான். (ஹெலனை “the face that launched a thousand ships” என்றுதான் வரலாறு வர்ணிக்கிறது.) ஆனால் ட்ராய் வலுவான கோட்டை என்பதால் பல்லாண்டு தாக்குப் பிடிக்கிறது. பாரிஸ் ஹெலனை ஒப்படைக்க மறுத்து விடுகிறான்.
இறுதியில் பிரம்மாண்ட மரக் குதிரையில் பரிசுப் பொருட்களை அனுப்பிச் சமாதானம் செய்வதாக மெனெலௌஸ் அனுப்பியதை நம்பி கோட்டைக் கதவுகள் திறக்கப்பட, மரக் குதிரை உள்ளே நுழைகிறது. அதில் ஒளிந்திருந்த வீரர்கள் இரவில் வெளியே வந்து ட்ராய் நகரைத் தாக்கத் தொடங்குகிறார்கள், கோட்டைக் கதவுகளைத் திறந்து விடுகிறார்கள். சில நாட்களிலேயே ட்ராய் வீழ்கிறது. பாரிஸ் கொல்லப்படுகிறான். ஹெலன் மறுபடி மெனெலௌஸ் மனைவியாகி ஸ்பார்டா நகருக்குத் திரும்புகிறாள். பெண் மீதான காதலின் நிமித்தம் ஒரு போர் நடந்து ஒருவன் செத்து ஒரு நகரம் அழிக்கப்படுகிறது.
ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி காவியங்களில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. நம் ராமாயணத்தை இதனுடன் இணை வைக்கலாம். இங்கும் சீதையின் பொருட்டே ராமன் இலங்கை மீது போர் தொடுத்து அழிக்கிறான்; ராவணனை வேரறுக்கிறான்.
இதில் பாரிஸ், மெனெலௌஸ் ஆகிய இரண்டு ஆண்களில் யாரேனும் ஒருவர் போய்த் தொலைகிறது என ஹெலனை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஆணுக்குக் காதல் என்பது தன் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரம். ஆக, அதன் பரிசான காதலியை மற்றொருவன் அபகரித்துச் செல்வது என்பது அவனது தன்முனைப்புக்கு விடுக்கப்படும் சவால். அதனால்தான் இப்படி முட்டாள்தனமான லாப நஷ்டக் கணக்கு கொண்ட யுத்தங்களை அவன் வரலாறெங்கும் நிகழ்த்தி இருக்கிறான். அரசன் என்றால் போர் நிகழும். சாதாரணன் அவனளவில் இதே போல் போராடுகிறான்.
ஆண் மரித்தே போனாலும் காதலை மீட்கவே முனைவான். அவனது பிறவிச் சாபம் அது.
(4)
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்ரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. அப்போது நாட்டை ஆண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகளான அமராவதி மீது அவனுக்குக் காதல். அம்பிகாபதியும் நல்ல கவி. அதனால் இயல்பாகவே அமராவதிக்கு அவன் மீது காதல் வந்தது. சொற்களும் வெட்கமுறும் வண்ணம் அமராவதியின் அழகை அம்பிகாபதி பாடல்களாக வடித்துக் கொண்டே இருந்தான். அரசனுக்கு இது தொடர்பாக சந்தேகம் எழ, அவன் கம்பரையும் அவரது மைந்தனையும் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தான். அங்கே அமராவதியின் பேரெழில் கண்டு நிலை தடுமாறிய அம்பிகாபதி அவளை வர்ணித்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். குலோத்துங்கன் கடும் கோபம் கொள்ள, சூழலைச் சமாளிக்க கம்பர் அப்பாடலை சரஸ்வதி தேவி மீது பாடி முடித்தார்.
அன்றைக்கு அம்பிகாபதியின் தலை தப்பித்தாலும் தும்மலும் காதலும் அப்படி அடக்கி வைத்து விட முடியுமா என்ன! ஒரு நாள் விஷயம் வெளியே வந்தது. சினத்தின் உச்சத்தில் மன்னன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதித்தான். கம்பர் கண்ணீருடன் கருணை கோரி நின்றார். ஒட்டக்கூத்தர் ஆலோசனைப்படி அம்பிகாபதி காதல் கலவாத பக்திப் பாடல் நூறு பாடிக் காட்டினால் அவனை மன்னித்து விடுவதாக அறிவித்தான் மன்னன்.
அம்பிகாபதியின் திறனுக்கு அச்சவால் பிள்ளை விளையாட்டு. மறுநாள் அவை கூடியது. அமராவதி ஒரு திரைக்குப் பின் அமர்ந்து நடப்பதைக் கவனித்திருந்தாள். அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். அமராவதி ஒவ்வொரு பாடலாக எண்ணிக் கொண்டே இருந்தாள். நூறு பாடல் பாடி முடித்ததும் அவள் உற்சாகமாக திரையை விலக்கி அம்பிகாபதி முன் வந்து நின்றாள். அவளது நல்வனப்பைக் கண்டு வெறியேறிய அம்பிகாபதி உடனே ஒரு காதல் பா இசைத்தான். அவ்வளவுதான் ஒட்டக்கூத்தர் அவன் தோற்றதாக அறிவித்தார்.
ஏனெனில் அம்பிகாபதி பாடிய முதற்பா கடவுள் வாழ்த்து. அது பாடல் கணக்கில் வராது. எனவே அவன் அது வரை 99 பக்திப் பாடல்கள் மட்டுமே பாடியிருந்தான். இதை அறியாத அமராவதி அவன் முன்பு தோன்றி, அவனது கவனத்தைச் சிதற வைத்து தொடர்ச்சியை அறுத்து விட்டாள். சோழக் கோ அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றினான். கம்பர் மனமுடைந்து நாட்டை விட்டு வெளியேறினார். சிறிது காலத்தில் அமராவதியும் துயரில் உழன்றே செத்துப் போனாள். காதலர்கள் வழமை போல் மரணத்தில் சேர்ந்தனர்.
பெண்ணின் அவசரத்துக்கும் சேர்த்து ஆணே காதலில் தண்டனையை அனுபவிப்பதை இதில் கவனிக்கலாம். அவனது போராட்டம் உலகோடு மட்டுமல்ல, காதலியோடும்தான்.
*
(5)
16ம் நூற்றாண்டில் அம்பிகாபதி - அமராவதி கதைக்கு நேர் எதிரான ஒரு கதை உண்டு. அன்றைய முகலாய சாம்ராஜ்யத்தில் அக்பர் அரசனாக, (பிற்பாடு ஜெஹாங்கீர் எனப் புகழ் பெற்ற) சலீம் இளவரசனாக இருந்தார்கள். லாஹூரைச் சேர்ந்த புத்திசாலிப் பெண் ஷர்ஃப்-உன்-நிசா அக்பரின் அரசவையில் இடம் பெற்றிருந்தாள். அவளுக்கு இன்னொரு பெயர் அனார்கலி. அப்போது அலுவல் நிமித்தம் தேச இளவரசனுடனும் பழக வேண்டிய சூழல் அமைந்த போது சலீமுக்கும் அனார்கலிக்கும் காதல் முகிழ்த்தது. மனதைக் கடந்து உடலுக்கும் விரைவிலேயே தாவியது. விஷயம் பேரரசன் அக்பர் காதுகளுக்குச் சென்றது.
அக்பரின் எச்சரிக்கைகள் ஏதும் சலீமின் காதில் விழவில்லை. எல்லாம் காதல் படுத்தும் பாடு. சலீம் தன்னைப் புராதன அரேபியத்தின் மஹா காதலனான மஜ்னு என்றே கருதிக் கொண்டான். அனார்கலியின் மீது காதலை அளவின்றிப் பொழிந்தான். அக்பருக்கு வேறு வழி இல்லை. சலீம் இல்லாத சமயம் அக்பரின் ஆணைப்படி அனார்கலியைச் சுற்றி நால் புறமும் நெருக்கமான சுவர் எழுப்பி காற்றுப் புகாமல் மூடினார்கள். உயிருடன் சமாதி.
விஷயமறிந்து சலீம் அங்கே வந்து சேர்வதற்குள் அவள் செத்துப் போனாள். அதற்கு சலீம் எப்படி எதிர்வினை ஆற்றினான் என்பது பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அதன் பிறகு அனார்கலி சமாதி இருந்த இடத்தில் ஒரு நினைவு மாளிகை எழுப்பினான். அது இன்றும் லாஹூரில் காற்றுடன் மௌனக் காதல் கதைகள் சொல்லியபடி நிற்கிறது.
அதன் பிறகு சலீம் பேரரசனாகி நன்கு நாடாண்டான். புகழ் பெற்ற அரசி நூர் ஜஹான் உள்ளிட்ட பலரை மணம் செய்து கொண்டான். ஆனால் அவை யாவும் புற வரலாறுதாம். அகத்தில் ஒரு பெண்ணின் மரணத்துக்குத் தன் காதல் காரணமாகி விட்டதை எண்ணி ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வுடனே வாழ்ந்து மடிந்திருப்பான். கற்பனைக்கெட்டாத சர்வாதிகாரம் கொண்ட தன் தகப்பனை ரகசியமாக வெறுத்திருப்பான். அவளற்ற வெறுமையில் திணறியிருப்பான். யோசித்துப் பார்த்தால் இதிலுமே ஆண்தான் பலி.
அனார்கலியின் கல்லறை மீது ‘மஜ்னு சலீம் அக்பர்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள வரி:
“என் காதலியின் முகத்தை இன்னொரு முறை நான் கரத்தில் ஏந்த முடிந்தால்
கடவுளுக்கு நான் செத்து உயிர்த்தெழும் வரை நன்றியுடைவனாயிருப்பேன்.”
செத்தவளுக்கு ஒரு நாள் வேதனையோடு போனது. இருப்பவனுக்குத் தினமும் ரணம்.
*
(6)
இதே போல் இன்னொரு துன்பியல் கதை ஆன்டணியும் க்ளியோபாட்ராவும். இதையும் ஷேக்ஸ்பியர் நாடகமாக்கி இருக்கிறார் என்றாலும் இது உண்மையில் நடந்த வரலாறு. க்ளியோபாட்ராவுக்கு ஏராளம் கணவர்கள் காதலர்கள் உண்டு என்றாலும் மனித குலம் ஆன்டணியை மட்டுமே அவளது காதலன் என்று நினைவில் கொள்ளக் காரணம் உண்டு.
க்ளியோபாட்ரா கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பதாண்டுகள் முன் எகிப்தில் வாழ்ந்த பேரரசி. அன்றைய தேதியில் உலகப் பேரழகி. “The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” என்று 17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு தத்துவ ஞானி ப்ளைஸ் பேஸ்கல் அவளது மூக்கு குறித்து எழுதினார். ஆண்கள் அவளை அடையத் துடித்தனர்.
தன் தந்தை மறைவுக்குப் பின் தனது சகோதரர்கள் இருவரையும் மணம் செய்து நாட்டை ஆட்சி செய்தவள். அதே சமயத்தில் ரோம் மன்னன் ஜூலியஸ் சீஸருடன் காதல் உறவில் இருந்து குழந்தை பெற்றவள். சீஸர் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின் அவரிடம் தளபதிகளாக இருந்த மார்க் ஆன்டணியும் மார்கஸ் ஏமிலியுஸ் லெபிடஸும் சீஸரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியன் சீஸரும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டனர். ரோம் ராஜ்யத்தின் கீழிருந்த எகிப்தைக் கவனிக்கும் பொறுக்கு ஆன்டணிக்கு வந்தது. அவர் அங்கிருந்த ஏழாம் க்ளியோபாட்ராவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டான்.
ஆன்டணிக்கு க்ளியோபாட்ரா தன் போர்ப் படைகளின் ஆதரவை நல்கினாள். பதிலுக்கு அவளுக்குத் தொந்தரவாக அவளது சகோதரி ஒருத்தியைக் கொன்றழித்தான் ஆன்டணி. இருவரும் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரவு பகல் பாராது, புறச் சூழல் பற்றிய கவலைகள் இல்லாது காதல் பறவைகளாகத் திரிந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன.
இடையே ஆன்டணிக்கும் ஆக்டேவியனுக்கும் உரசல்கள் எழுந்தன. அதைச் சரி செய்ய ஆக்டேவியனின் தங்கையை ஆண்டனி மணந்தான். அதே சமயம் க்ளியோபாட்ராவின் உறவும் தொடர, அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தது ஆக்டேவியனுடனான பகையை அதிகரித்தது. அதன் உச்சமாக ஆன்டணி க்ளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு ஆக்டேவியனின் தங்கையுடனான திருமணம் உறவை முறித்து அவளைத் திருப்பி அனுப்பினான். கடுப்பான ஆக்டேவியஸ், ஆன்டணியை ரோமின் துரோகி என அறிவித்து க்ளியோபாட்ரா மீது போர் தொடுத்தான். யுத்தத்தில் தோல்வியுற்ற ஆன்டணியும் க்ளியோபாட்ராவும் எகிப்துக்குத் தப்பித்து ஓடினார்கள்.
ஆக்டேவியன் எகித்துக்கும் அவர்களைத் தேடி வந்தான். அங்கே இருவரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்திருந்தார்கள். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து இறந்ததாக வந்த தவறான செய்தியை நம்பிய ஆன்டணி வாளின் மீது பாய்ந்து தானும் சாக முயன்றான். உயிர் போய்க் கொண்டிருக்கையில் க்ளியோபாட்ரா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டான் ஆன்டணி. அவனது நண்பர்கள் அவனை க்ளியோபாட்ரா ஒளிந்திருந்த இடத்துக்குத் தூக்கிச் செல்ல, அவளது மடியில் கிடந்து உயிர் துறந்தான் ஆன்டணி.
ஆக்டேவியினால் அவமானப்படுத்தப்படுவோம் என்று அஞ்சிய க்ளியோபாட்ரா ஒரு கொடிய விடமுடைய நாகத்தைத் மார்பில் கொத்த விட்டு இறந்தாள் எனகிறார்கள். அவள் ஆக்டேவியனையும் மயக்க முயன்று தோற்றதாலேயே இறந்தாள் என்று ஒரு வடிவமும் உண்டு. ஆன்டணி - க்ளியோபாட்ரா ஆகிய இரண்டு பெருந்தடைகளும் நீங்கியதால் ரோம் சாம்ராஜ்யத்தின் எதிர்ப்பற்ற ஒற்றை அரசனானன் ஆக்டேவியன்.
க்ளியோபாட்ராவின் காதலர்களில் ஆன்டணி ஏன் தனித்துவமானவன்? அவன் மட்டுமே அவளுக்காக உயிரை விட்டான். ஆண் போரில் தோற்று நாட்டை விட்டோடிய போதும் கலங்காதவன். ஆனால் காதலி செத்ததாகச் செய்தி கேட்ட கணம் வாழ்வு வெறுத்தான்.
ஆண்கள் காதலின் பொருட்டு உணர்ச்சி வசப்படும் தருணங்களும் இவ்வாறு உண்டு.
*
(7)
1997ல் வெளியான திரைப்படமான Titanic ஆண் காதலின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. தியாகம். 1912ல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசுக் கப்பலில் ரோஸ் என்ற பெண்ணும், அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் பெரும்பணக்காரனான கேல்டனும், அவளது தாயும் கிளம்புகின்றனர். அத்திருமணம் தங்களைக் கடனிலிருந்து மீட்கும் என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. ரோஸுக்கு அதில் விருப்பமில்லை. அதே கப்பலில் ஜேக் என்ற இளைஞனும் சூதாட்டத்தில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் ஜெயித்து நுழைகிறான். ரோஸ் விரக்தியில் கப்பலிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போகும் போது ஜேக் காப்பாற்றுகிறான். அவர்களுக்குள் நட்பும், சீக்கரம் காதலும் உண்டாகிறது.
ஜேக் ரோஸை நிர்வாணமாக வரைகிறான். அவளுடன் கலவி கொள்கிறான். அப்போது கப்பல் பெரிய பனிப்பாளத்தில் மோதிச் சேதமுறுகிறது. கேல்டன் ரோஸில் நிர்வாண ஓவியத்தைப் பார்த்து சினத்தில் ஜேக்கைக் கப்பலில் ஓர் அறையில் விலங்கிட்டு சிறை செய்கிறான். கடல் நீர் புக, கப்பல் மூழ்க ஆரம்பிக்கிறது. அதில் ஆபத்து காலப் படகுகள் அதிகமில்லை என்பதால் பெண்களும், குழந்தைகளும், சில பணக்காரர்களும் இருக்கும் சொற்ப படகுகளில் கடலில் இறக்கப்படுகிறார்கள். ரோஸ் படகேறப் போகும் தாயையும் கேல்டனையும் விட்டு விலகி ஜேக்கைத் தேடிப் போகிறாள். அவனை விடுவிக்கிறாள்.
ஜேக்கும் ரோஸும் பெரும் சிரமத்திடையே தப்பிக்க முனைகையில் கப்பல் இரண்டாக உடைந்து மொத்தமும் மூழ்குகிறது. ஜேக் ரோஸை ஒரு மரப் பலகை மீது ஏற்றுகிறான். அவனும் உடன் ஏற இடமில்லை என்பதால் உறையும் குளிருடைய கடல் நீரில் அவன் அவளைப் பற்றியபடி மிதந்து இறந்து கடலுக்குள் போகிறான். உயிர் காக்கும் படகு ஒன்று வெகுநேரம் கழித்து வந்து ரோஸை மீட்கிறது. ரோஸ் இறுதி வரை திருமணம் செய்யாமல் ஜேக்கின் மனைவி என்ற அடையாளத்துடனேயே வாழ்ந்து முடிக்கிறாள்.
இது மேலே பார்த்த சலீம் அனார்கலி கதைக்குத் தலைகீழானது. இங்கே காதலி தன் காதலனை நினைத்தபடி ஆயுள் முழுக்கத் தனித்தே வாழ்ந்து மரிக்கிறாள். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் வேறொன்று. ஆண் பலவான். எப்படிக் கப்பல் மூழ்குகையில் உயிர் பிழைக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அப்படி இருக்கும் ஒரு மரப் பலகையில் காதலன் ஏறாமல் காதலிக்கு விட்டுத் தருவதே அறமும் காதலும். அப்படித்தான் ஒரு காதலன் நடந்து கொள்ள முடியும். தன் உயிரைக் கொடுத்தேனும் காதலியின் உயிரைக் காக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்கப்பட்ட விதி. அவனுக்கும் ஒரு பலகை இருந்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுமே ஒழிய, அவளுக்கு பதில் அவன் மரப் பலகையில் ஏறிப் பிழைத்திருக்கலாம் என்று தோன்றவே செய்யாது. அப்படித்தான் மனித இனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ஆண் காதலில் தியாகம் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும், தன் உயிரையும் கூட.
*
(8)
1956ல் தி. ஜானகிராமனால் எழுதப்பட்ட மோக முள் நாவல் மற்றுமொரு கோணத்தைத் தருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தஞ்சையில் நிகழும் கதை. பாபு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்க, இருபது வயதைத் தொடும் பிராமண இளைஞன். யமுனா அவளை விட பத்து வயது அதிகம் கொண்ட மராட்டியப் பூர்வீகம் கொண்டவள்.
பால்யத்திலிருந்தே யமுனாவுடன் பழகி வரும் பாபுவுக்கு வயது வரும் போது அவளது அழகு மனதில் மோகத்தை எரியச் செய்கிறது. விபத்தாக பக்கத்து வீட்டுக் கிழவனின் இளம் மனைவியுடன் கூடி விடுகிறான். அது தான் யமுனா மீதான காதலை அவனுக்கு உணர்த்துகிறது. அவள் கடவுள் போல் தோன்றுகிறாள். அவளுக்கு துரோகம் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. அவளிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள். சமூகத்தைக் காட்டி இது பொருந்தாக் காதல் என்று சொல்லி நிராகரித்து ஊரை விட்டுப் போகிறாள்.
அந்தத் துயரிலிருந்து வெளிவரும் உத்தேசத்தில் வெறியுடன் கர்நாடக இசை கற்கத் தொடங்கி அதில் முன்னேற்றம் காண்கிறான். எட்டாண்டுகள் கழித்து யமுனாவைச் சென்னையில் சந்திக்கிறான். வறுமை அவள் இளமையைக் குலைத்து விட்டிருந்தது. அப்போதும் யமுனா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாபுவுக்குத் தன்னைத் தருகிறாள். கலவி முடிந்ததும் பாபுவிடம் “எல்லாம் இதற்குத்தானா?” என்று கேட்கிறாள். பாபுவிடம் அதற்குப் பதில் இல்லை. “இதற்குத்தான்” என்று அவளே பதில் சொல்கிறாள்.
அதன் பிறகும் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. அவ்வளவுதான் அவர்களின் உறவு. பாபு இனி அவன் வழியைப் பார்த்துக் கொண்டு ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
இதில் கவனித்தால் ஆண் இந்தக் காதலில் தன் காதல் அல்லது காமம் சார்ந்து எந்த முடிவையும் எடுப்பதே இல்லை என்பது விளங்கும். பெண்ணே வழி நடத்துகிறாள். கிழவரின் இளம் மனைவியுடன் பாபு கூட நேர்ந்ததும் அவளது முடிவுதான். இறுதியில் யமுனாவுடன் புணர நேர்ந்ததும் அவளது முடிவே. பாபு இதில் வெறும் உடல் மட்டுமே. தொடர்ந்து காமத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அலைவது மட்டுமே அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காதலோ காமமோ முடிவுகளைப் பெண்களே எடுக்கிறார்கள்.
யமுனா பாபுவுக்குத் தன் உடலை ஒப்புவிக்கும் இடத்தில் நிகழும் உரையாடல் இது:
“எனக்கு நீதான் வேணும்.”
“சரி எடுத்துக்கோ…”
“அன்னிக்கி நான் கேட்டேனே?”
“அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது.”
“உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?”
“நீ உயிர் கொடேன்.”
போனால் போகிறது என்றுதான் யமுனா சம்மதிக்கிறாள். அதில் காமம் பெறும் சுயநலம் இருக்கிறது. அதற்காக மற்றவரிடம் போகாமல் பாபுவைத் தேர்ந்தெடுப்பதில் அவளது காதல் துலங்கத்தான் செய்கிறது. ஆனால் பாபு இதில் வெறும் பகடைக்காய்தானே!
காதலில் ஆயுள் முழுக்க பெண்களால் அலைக்கழிக்கப்படுவதே ஆண்களின் விதி.
*
(9)
2018ம் ஆண்டு வெளியான 96 படத்தை இதன் இன்னோர் உதாரணமாகக் கொள்ளலாம்.
பள்ளிக் காலத்தில் ராமும் ஜானுவும் சொல்லிக் கொள்ளாமலே காதலிக்கிறார்கள். சூழல் அவர்களைப் பிரிக்கிறது. கல்லூரிக் காலத்தில் ஜானுவைத் தேடி வரும் ராம் ஒரு சிறிய குழப்பத்தில் ஜானுவுக்குத் தன் மீது விருப்பமில்லை என்று எண்ணிக் கொள்கிறான். அவளைத் தொந்தரவு செய்யாமல் விலகுகிறான். ரகசியமாக அவள் திருமணத்துக்குச் சென்று காண முடியாமல் ஓடி வருகிறான். பிற்பாடு இருபதாண்டுகள் கழித்து பள்ளி ரீயூனியனில் ராமும் ஜானுவும் சந்திக்கிறார்கள். ராம் மாறவே இல்லை. அவன் காதலும்.
ஜானு திருமணமாகிக் குழந்தை பெற்றவள். காமத்தின் சாயை சிறிதுமின்றி அவ்விரவை அவர்கள் ஒன்றாகக் கழிக்கிறார்கள். ராம் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமின்றி, இன்னும் கன்னித்தன்மை இழக்காது இருக்கிறான் என்பதை ஜானு புரிந்து கொள்கிறாள். குற்ற உணர்வில் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறாள். அழுது விடை பெறுகிறாள். ராம் திருமணம் செய்யப் போவதில்லை. ஜானுவுடனான தன் பள்ளிக்கால நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தது போலவே அந்த ஓர் இரவையும் இனி அவன் ஞாபகங்களில் ஏந்தி நின்று மகிழ்ச்சி கொள்ளப் போகிறான்.
இதில் கவனிக்க வேண்டியது ராம் ஏன் அப்படித் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்பதே. ஜானுவின் காதலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவனுக்கு இணையாக அவளும் அவனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அவன் மட்டுமே அந்த முடிவெடுக்கிறான். காரணம் ஆண் என்ற திமிர்தான். அவனால் முடியும். அவன் சமூகத்துக்காக ஒரு சமரசத்துக்குள் புக வேண்டியதில்லை. இரட்டை வாழ்க்கை வாழும் கட்டாயம் இல்லை. அதனால் அவன் தன் காதலைப் பற்றிக் கொண்டு வாழ்கிறான்.
ஆண் என்ற அகங்காரம் காதலில் மட்டுமல்ல, காதல் பிரிவிலும் தூக்கலாகவே இருக்கும். பெண் அதை உள்ளுக்குள் புதைத்து வளைந்து கொடுக்க, ஆண் பிடிவாதமாய் நிற்பான். அதன் வழி தனக்குத் தானே வதை தருவான். அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை.
*
(10)
2022ல் வெளியான லவ் டுடே படத்தில் காதலில் பெண்களே முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதை, ஆண் அதைச் செயல்படுத்தும் இடத்தில் மட்டுமே இருப்பதைச் சுட்டும் ஒரு நல்ல சமகால உதாரணத்தைக் காணலாம். அதில் பிரதானக் காதலர்கள் உத்தமனும் நிகிதாவும் என்றாலும் நான் இங்கே குறிப்பது மாமாக் குட்டி நிகிதா ஜோடியைப் பற்றி.
மாமக்குட்டி நிகிதாவின் முன்னாள் காதலன். அவனிடமிருந்து அவள் விலகி வந்து வெகு நாளாகிற்று. இப்போது அவள் காதலிப்பது உத்தமனை. ஆனால் உத்தமனுடன் பிணக்கு உண்டாகும் போது அவள் மனம் இயல்பாகவே மாமாக் குட்டியைத் தேடுகிறது. அவனை சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை இரவில் காரில் லாங் ட்ரைவ் போய் வரலாமா எனக் கேட்கிறாள். அவனுக்கு நிச்சயம் சந்திப்பைத் தாண்டி அதில் வேறு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். எனவே உடனே சம்மதித்து அழைத்துப் போகின்றான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஏதும் நடப்பதில்லை. அது வெறும் சைவப் பயணம். அவள் தன் மனக் கிலேசத்தைச் சரி செய்து கொண்டு திரும்புகிறாள். அவன் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். அல்லது தன்னை நீங்கிப் போன காதலி இன்னும் தன்னிடம் இளைப்பாறல் தேடுகிறாள் என்பதையே தனக்கான அங்கீகாரமாகக் கூட கருதிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்நாள் காதலன் மட்டுமல்ல, முன்னாள் காதலன் கூட காதலியின் கையில் பாவைதான். அவள் நினைப்பு மிக எளிதில் நிறைவேறும், அந்த இடத்தில்தான் இயற்கை ஆணையும் பெண்ணையும் வைத்திருக்கிறது என்பதைத்தான்.
*
காதலிக்க ஆண், பெண் இருவரும் அவசியம். ஆனால் இரண்டும் வெவ்வேறு. சொல்லப் போனால் இரண்டும் நேரெதிர். காமத்தின் பொருட்டே ஆண் காதல் என்பது பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி பல சிடுக்கான விஷயங்களை அடக்கியது.
காதலிக்கும் ஆண் உண்மையில் சிறகுகள் கட்டப்பட்ட பட்சி போன்றவன். அக்காதல் தீரும் வரை அல்லது அவன் சாகும் வரை பறக்க இயலாத சாபம் அவனைப் பீடிக்கும்.
ஆணுக்குக் காதல் என்பது வெற்றி. அதற்காகப் போர் எடுப்பான். அவனுக்குக் காதல் என்பது மானம். அதற்காக உயிரைக் கொடுப்பான். இப்படிச் சொல்கையில் ஒரு காதல் உறவில் அவனே ஆதிக்கம் செலுத்துபவன் போன்றதொரு தோற்றம் எழுந்தாலும் அது உண்மையில்லை. அது எல்லாம் வெளியே. காதலுக்குள் நடப்பது வேறு கதை. அவன் தொடர்ந்து தன் காதலியுடன் போராடுகிறான். அவளால் அலைக்கழிப்படுகிறான்.
காதலுக்காக அவன் தியாகங்கள் செய்வான். காமத்தின் பொருட்டே ஆணின் காதல் என்று சொல்லப்படுவதைக் கூட உடைத்து காதலின் நிமித்தம் புலனை அடக்குவான். காதலில் அவனது எதிரிகள் பட்டியல் நீளமானது. காதலியின் குடும்பம் தொடங்கி சக ஆண்கள், பெற்றோர், உற்றார், சமூகம், அந்தக் காதலி வரை சகலரும் விரோதிகளே!
ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஆண்களின் அத்தனை கீழ்மை நிறைந்த அயோக்கியத்தனங்களையும் தாண்டி காதலிக்கும் ஆண்களின் மீது ஒருவிதமான பரிவுதான் உண்டாகிறது. ஏனெனில் அவனுக்கு காதல் என்பது காதல் மட்டுமல்ல.
மஜ்னு முதல் மாமாக் குட்டி வரை காதலன்கள் யாவரும் பரிதாபத்துக்குரியோரே!
***
(மெட்ராஸ் பேப்பர் ஃபிப்ரவரி 8, 2023 காதலர் தின சிறப்பிதழில் வெளியானது)
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
