பெருங்களிறு [குறுநாவல்] - 3

பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல்
*
 
பாகம் 3: கால்

அமாவாசை இரவு நரதுவுக்கு நன்கு மதுவை ஊற்றிக் கொடுத்தாள் சந்தா. அன்று மிக உற்சாகமாகக் குடித்தான். வழக்க‌த்தை விட இரண்டு மடங்கு. வயிறு நிரம்பி விட்டது என்று சொல்லி உணவை மறுத்து விட்டுக் கலவிக்குத் தயாரானான். இடையிலேயே போதையில் மயங்கிச் சரிந்தான். அவனைத் தள்ளி விட்டு ஆடைகளைச் சரி செய்து அடுத்து அறைக்குப் போனாள் வந்தாள் சந்தா. தம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். நீண்ட பயணம் இருக்கும் என்பதால் அவளைச் சற்று தூங்கச் சொல்லி இருந்தாள்.

நள்ளிரவு கடந்திருந்தது. அவளை உலுக்கி எழுப்பினாள். தம்மா ஆழ்நித்திரைக்குள் செல்லாமல் புரண்டு கொண்டிருந்ததால் உடனே எழுந்து கொண்டாள். ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த மூட்டையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டாள்.

நிலவின் துணையற்ற அவ்விரவின் கைப் பற்றிப் பிரயாணத்துக்கு ஆயத்தமானாள்.

சந்தா கைகளில் விளக்கை எடுத்துக் கொண்டாள். குடிலில் இருந்து சப்தம் காட்டாமல் இருவரும் வெளியே வந்தார்கள். ரத்த நந்தகாவின் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே மின்சாவும் மூட்டையுடன் தயாராக இருந்தான். அவனுக்கு அந்த‌ப் பயணமே ஒரு சாகசம் போல் உற்சாகமாக இருந்தது. தம்மாவிடம் தன் கம்பீரம் நிரூபிக்க ஒரு வாய்ப்பு. அவள் தன் பொறுமையைப் பயம் எனக் கருதிக் கொண்டிருக்கிறாள். முதலில் அதை உடைக்க வேண்டும். தவிர, அவளைத் தொடவும் வாய்ப்பு உண்டு. இனி யார் கேட்பது? இப்பெண் எனக்கு உரிமையானவள். எங்கள் சுதந்திரம். தலைநகர் போவதற்குள் நிதானமாக ஒரு சம்போகம் கூட நிகழ்த்தலாம். உற்சாகச் சிரிப்புடன் அவர்களைப் பார்த்தான் மின்சா.

ரத்த நந்தகா படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. தம்மா அதன் அருகே போய் அதைத் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். ஆலமரம் ஒன்றினை ஆரத் தழுவ முயற்சி செய்வது போலிருந்தது அவள் செய்கை. அதை விட்டுப் பிரியப் போகிறோம் என்பது அவளுக்கு மிகுந்த மனக்கிலேசம் அளித்தது. அது வரை அவள் அது குறித்து யோசிக்கவே இல்லை.

மிகச் சில மாதங்களின் பழக்கம்தான். ஆனால் தம்மாவை ஒரு மஹாராணியைப் போல் உணரச் செய்தது ரத்த நந்தகாதான். அவ்வளவு ஆண்டுகளாகத் தாயைப் போல் பார்த்த சந்தாவை நீங்குவதைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தம்மாவின் கண்ணீர்த் துளிகள் யானையின் தடித்த தோலில் விழுந்து மயிர்களுக்குள், பிளவுகளுக்குள் ஓடியது.

“அதிக‌ அவகாசமில்லை, தம்மா! உடனே கிளம்புவோம்.” - அவசரப்படுத்தினான் மின்சா.

அப்போது கொட்டடி வாயிலில் அரவம் கேட்டது. நரது நின்றிருந்தான். அந்த நள்ளிரவில் தம்மா, மின்சா இருவரும் கையில் மூட்டைகளுடன் நின்றிருந்ததைப் பார்த்து அவன் ஒருவாறாகச் சூழலை ஊகித்திருக்க வேண்டும். அவர்கள் அருகே சந்தாவும் பதற்றமாக நின்றிருந்ததை வைத்து அவளும் அதற்கு உடந்தை என்பதும் எளிதில் புரிந்திருக்கும்.

நரதுவின் இரு கண்களும் சிவந்து வெறியேறி இருந்தன‌. அது சற்று முன் அவன் ஏற்றிக் கொண்ட‌ மதுவாலா, அந்த ராத்திரியில் பாதியில் கலைந்து எழுந்த‌ தூக்கமின்மையாலா அல்லது அங்கே நடந்திருக்கும் நிகழ்வு குறித்த‌ சினத்தாலா எனக் குழப்பமாக இருந்தது.

மூவரும் அச்சத்தின் உச்சத்தில் கண்டிருக்க‌, நரது முதலில் மின்சாவை அடித்துக் கீழே தள்ளினான். அடுத்து சந்தாவை. தம்மா திகைத்துப் பார்த்திருந்தாள். நரது குனிந்து தம்மாவின் முகத்தருகே வந்து வாயின் துர்நாற்றம் வீச, ஆவேசமாகச் சொன்னான் -

“தம்மா, உன் சம்மதத்துடனே உன்னை அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஒரு கனி உரிப்பது போல் பொறுமையாக உன்னைத் திறந்து ரசித்துண்ண வேண்டும் எனக் கற்பனை செய்திருந்தேன். எல்லாவற்றுக்கும் மேல் என் மனமுதித்த சில சிறந்த கலவிக் களியாட்டுகளைப் பயன்படுத்தாமல் உனக்கென‌ ஒதுக்கிக் காத்திருந்தேன்.”

“…”

“எல்லாம் ஏன்? எப்படியும் என்னிடம் படிவாய் என்ற நம்பிக்கையால். ஆனால் அதற்கு மாறாக‌ இப்படி ஓர் ஓடுகாலி எண்ணம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. உனக்கு ஆண் பிள்ளை வாடை வேண்டுமெனில் நான் இருக்கிறேன். உன் அக்காளிடம் கேட்டுப் பார், என் ஆட்டம் பற்றி. ருசி கண்டு விட்டால் இவ்வீட்டின் வாசற்படி தாண்ட மாட்டாய். தினம் வேண்டும் எனக் கெஞ்சிக் கதற விடுவேன். அதை விடுத்து போயும் போயும் ஒரு எடுபிடி வேலை செய்யும் இழிமகனுடன்தான் உனக்குக் கொட்டமடிக்கக் கேட்கிறதா?”

“…”

“நானே நினைத்தாலும் எங்கே என்னை நல்லவனாக இருக்க விடுகிறீர்கள்? இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. இதற்கு மேல் உன்னை விட்டு வைத்திருப்பது சரியல்ல. இப்போதே உன்னைப் பிளந்து நுழைந்தால் ஒழுக்கமாக என் காலைக் கட்டிக் கொண்டு கிடப்பாய். உன் தினவை என் தோளில் தனி. உனது அரிப்பை என்னிடம் சொறி. வாடி!”

தம்மா ஓட முற்பட்டாள். நரது சுலபமாகக் குறுக்கில் ஓடி அவளை அடைந்தான். அவன் வேட்டையாடிப் பழகியவன். முயல் வேட்டை, மான் வேட்டை எல்லாமும். எனவே பெண் வேட்டை அவனுக்குப் பெரிய சவால் ஒன்றும் இல்லை. நரது தம்மாவை எட்டிப் பிடிக்க முற்படுகையில் அவளது மேலாடை கிழிந்து அவிழ்ந்து கீழே விழுந்தது. பெருமுலைகள் விடுதலையுற்று அதிர்ந்தன. பால் வல்லுறவு முயற்சிகளில் பெண்ணின் ஆடையைக் கிழிப்பதன் நோக்கம் ஓடுவதை மட்டுப்படுத்தி முடக்கத்தான். தம்மா கூனிக் குறுகி அருகே படுத்திருந்த ரத்த நந்தகாவின் வயிற்றுப் பகுதியில் போய்த் தஞ்சமடைந்தாள்.

சங்கிலியில் கட்டிப் போடப்பட்டிருந்த யானை அசைவின்றி உறங்கிக் கொண்டிருந்தது.

நரது வெறிச் சிரிப்புடன் அவளை அணுக, யானை விழித்துக் கொண்டு எழுந்தது. ரத்த நந்தகாவின் முன் காலை இறுக‌க் கட்டிக் கொண்ட‌தன் மூலம் தன் அரை நிர்வாணத்தை மறைத்தபடி நின்று அழுதாள் தம்மா. நரது அவளை நெருங்கிக் கைப் பற்றி இழுத்தான்.

தம்மா யானையின் கால்களுக்கு இடையே ஓடிப் போக்குக் காட்டினாள். யானை என்ன நடக்கிறதெனப் புரியாமல் இங்கும் அங்கும் கால்களை அசைத்தது. தன் முயற்சிக்குச் தடையாக அமைந்ததால் நரது கோபமேறி அந்த‌ யானையின் மத்தகத்தில் ஓங்கிக் குத்தினான். ரத்த நந்தகா பிளிறியது. அதன் அசைவுகள் மேலும் முரட்டுத்தனமாகின.

அந்தக் கொட்டடியே அதிர்ந்தது. நின்று வேடிக்கை பார்த்திருந்த சந்தாவும் மின்சாவும் நிதானமற்ற அந்த யானையின் கால்களில் மாட்டி தம்மா இறந்து விடுவாள் என அஞ்சி அலறினார்கள். நரது எதையும் பொருட்படுத்தாமல் அருகே கிடந்த அங்குசத்தை எடுத்து யானையின் காலில் குத்தினான். ரத்த நந்தகா தற்காத்துக் கொள்ள‌த் தும்பிக்கையால் அவன் தலையில் வைத்துத் தள்ளியது. அவன் விடாமல் குத்த, யானை சட்டெனத் தன் காலைத் தூக்கி அவனை உதைத்தது. நரது தடுமாறித் தரையில் விழுந்து திகைத்தான்.

யானை அவனை ஒரு கணம் நின்று பார்த்து நிதானித்தது. பின் சட்டெனத் தன் காலை உயர்த்தி அவன் வயிற்றில் பதித்து அழுத்தியது. புழு ஒன்றை மனிதன் விரல் நுனியில் வைத்து நசுக்குவது போலிருந்து அது. நரது அலறினான். அப்பெரிய காலடியில் சிக்கிக் கொண்டவனின் கைகளும் கால்களும் வலியில் துடித்தன. கண்களில் வெறி தெரிய‌, யானை அவன் உடலை நசுக்கியது. ரத்தம் பீறிட்டுச் சாத்தியமான சகல திசைகளிலும் சீரற்றுத் தெறித்தது. மிகச் சில கணங்கள்தாம். நரது ஒலிகள் அடங்கி மயக்கமுற்றான்.

தம்மா அச்சத்தில் ரத்த நந்தகாவின் பின் காலை இறுக‌க் கட்டிக் கொண்டு அதில் முகம் பதித்துக் கண்களை மூடி இருந்தாள். யானை திரும்பிப் பார்த்தது. சந்தா அவசரமாக தம்மாவின் அருகில் போய் அவளை யானையின் காலிலிருந்து விடுவித்து இழுத்தாள். மின்சா தன் மேற்சட்டையை அவிழ்த்துக் கொடுத்து தம்மாவை அணியச் செய்தான்.

தம்மா பிரமை பிடித்தது போல் நின்றாள். ரத்த நந்தகா மறுபடி பிளிறி அவர்களைப் பார்த்து காலை உயர்த்தியது. மூன்று பேரும் அலறி அடித்து அங்கிருந்து ஓடினார்கள்.

*

அந்த ராத்திரி முடிவே இல்லாதது போல் நீண்டு கொண்டே இருந்தது. மூன்று பேரும் குடிலுக்கு வந்து காத்திருந்தார்கள். யாரும் ஏதும் பேசவில்லை. தம்மா மட்டும் அழுது கொண்டே இருந்தாள். சற்று நேரத்தில் யானைக் கொட்டடியிலிருந்து எந்த அரவமும் வெளிப்படவில்லை. தம்மாவையும் மின்சாவையும் இருக்கச் சொல்லி விட்டு சந்தா மட்டும் தயக்கமாக மறுபடி கொட்டடிக்குப் போனாள். யானை அதன் இடத்தில் ஏதும் நடக்காதது போல் படுத்துத் தூங்கியிருந்தது. நரது விழுந்த இடத்தில் அசைவின்றிக் கிடந்தான். அவன் உடலெங்கும் ரத்தம் உறைந்து படர்ந்திருந்தது. வயிற்றுப் பகுதியில் பாதி சிதைந்திருந்தது. யானை எழுந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். சந்தா சப்தம் எழுப்பாமல் அவனைத் தன் பலத்தால் தரையோடு இழுத்துக் கொண்டு கொட்டடியை விட்டு வெளியே வந்தாள். அங்கே நரதுவைப் போட்டு விட்டு மூச்சு வாங்கினாள் சந்தா. அவளது உடலெல்லாம் வியர்வை அரும்பியிருந்தது. நரதுவின் மீது காறி உமிழ்ந்தாள்.

மனம் கேட்காமல் அவள் பின்னே வந்திருந்த மின்சா நரதுவின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். துடிப்பு இருந்தது. மின்சாவும் கை கொடுக்க, இருவரும் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குடிலுக்குள் நுழைந்தார்கள். அந்த‌ அறையின் நடுவில் போட்டார்கள்.

சந்தா ஓரமாகப் போய் அமந்து கொண்டாள். தம்மா அவளருகில் போய் உட்கார்ந்தாள்.

அத்தனை மாதங்களில் அப்போதுதான் அக்குடிலுக்குள் காலடி எடுத்து வைக்கிறோம் என்பது மின்சாவுக்கு உறைத்தது. அவசரமாக வைத்தியரை அழைக்கக் கிளம்பினான்.

வைகறைக்குச் சற்று முன் வைத்தியர் வந்து சேர்ந்தார். தேகம் முழுக்கப் பரவியிருந்த ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரண சிகிச்சை செய்தார். சில மூலிகைகளைக் கசக்கிப் பிழிந்தார். கட்டுப் போட்டார். நரது அசைவே இல்லாமல் படுத்திருந்தான். மூச்சு மட்டும் சீர் இல்லாமல் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. வைத்தியர் அவன் உயிர் பிழைக்க மிகச் சிறிய அளவில்தான் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போனார்.

நித்தம் காலை, மாலை என இரு வேளைகளும் குடிலுக்கே வந்து மருத்துவம் பார்த்துப் போனார் வைத்தியர். அரசாங்கத்துக்குச் செய்தி சொன்னார்கள். நடந்த விஷயங்களை மறைத்து விட்டு, இரவில் பிளிறல் அதிகமாக இருக்கவே பார்க்கப் போனவனை யானை தூக்கிப் போட்டு மிதித்து விட்டது என்றார்கள். அரசு வைத்தியரும் வந்து பார்த்து விட்டு சிகிச்சையில் சில மாற்றங்கள் சொன்னார். மூன்றாம் நாளில் நரது கண் விழித்தான்.

அவன் உடலில் உயிர் மட்டும்தான் மிச்சமிருந்தது. கை, கால்கள் முழுக்க நிரந்தரமாகச் செயலற்று விட்டன. இனி எங்கும் அவன் அசைய முடியாது. தின்பது, தூங்குவது, கழிவது என எல்லாம் அதே இடத்தில்தான். அதிர்ச்சியில் பேச்சும் போயிருந்தது. பேச முயன்றால் வினோத ஒலிகளை மட்டுமே எழுப்ப முடிந்தது. கண்களும், காதுகளும் செயல்பட்டன.

சந்தா அவனுக்கு நீரூட்டுவது, சோறூட்டுவது முதல் குளிப்பாட்டுவது, உடுத்தி விடுவது, மூத்திரமும் மலமும் சுத்திகரிப்பது என எல்லாமும் பார்த்துக் கொண்டாள். தம்மாவுக்கே அவள் நரதுவின் மீது அத்தனை அக்கறையாக இருப்பது வியப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் நரதுவின் உடல்நிலை தேறுவதில் சந்தாவுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் எனத் தம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. அவன் அவளுக்குத் துரோகம் செய்து தன்னை அடைய முற்பட்டவன். அன்று இரவு யானை மிதிக்கவில்லை எனில் தன்னைச் சிதைத்திருப்பான். அப்படியானவன் குணமாகி இயல்பானாலும் அவனோடு சந்தா வாழ விரும்புவாளா? இக்கேள்விக்குத் தம்மாவிடம் விடை இல்லை. ஒன்று சந்தா அவ்வளவு தூரம் நல்லவளாக இருக்க வேண்டும், அல்லது அவளுக்கு நரது மீது கண்மூடித்தனமான காதல் இருக்க வேண்டும். ஒருவேளை கலவி மறுபடி கிடைக்கத் தொடங்கும் என்பதால் மற்ற எல்லாவற்றையும் மன்னிக்கத் தயாராகி விட்டாளா என ஒரு முறை ஓர் எண்ணம் எழுந்தது. திடுக்கிட்டுத் தலையை உலுக்கிக் கொண்டாள். என்ன ஆபாசமான‌ சிந்தனை!

சந்தாவின் சிசுருஷை நிமித்தமேனும் நர‌து எழுந்து நடமாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் தம்மா. அவளும் அவ்விரவின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு கொண்டிருந்தாள்.

உறவினர்கள் பலர் வந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். சந்தா பேருக்குக் கொஞ்சம் அழுதாள். கணவன் இன்னொருத்தியிடம் படுக்கப் போவதை விட, அதன் வழி தன்னை மலடி என நிரூபிப்பதை விட, இப்படி முடமாகிப் போவது குறைந்த துயரம் தருவதாக‌ இருந்திருக்கலாம் எனத் தோன்றியது தம்மாவுக்கு. இந்தச் சூழலில் சந்தாவைத் தனியே விடுத்துப் போவது சரியல்ல என்று அவளுக்குத் தோன்றியது. எனவே தலைநகருக்கு நகர்ந்து, மின்சா வேலையில் சேர்ந்து, அவர்கள் இருவரும் மணம் செய்து கொள்ளும் திட்டத்தை ஒத்திப் போட்டார்கள். மின்சாவுக்கு உண்மையில் மனமே இல்லை. அங்கே குதிரை லாயத்தில் அவன் போகும் வரை வேலையை வைத்துக் கொண்டு காத்திருக்க மாட்டார்கள், உடனே மாற்று ஏற்பாடு செய்து விடுவார்கள். ஆனால் அது தம்மாவின் முடிவு. மறுத்துப் பேச அவனுக்கு மனமும் இல்லை, திராணியும் இல்லை. பொறுத்தான்.

ஆனால் இன்னொரு விஷயம் அவனை அங்கே பிடித்து வைத்தது. யானையைப் பார்க்க ஆள் வேண்டும். அதுவும் இப்படி ஒரு சம்பவம் செய்திருக்கும் சூழலில் அதை அப்படியே விட முடியாது. அப்படி யானையைப் பராமரிக்க‌ ஆளற்றுப் போனது அரசாங்கத்துக்குத் தெரிய வந்தால் கடும் தண்டனை சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் கிடைக்கும். அதனால் மாற்று ஆள் வரும் வரையேனும் அவன் அங்கு பணியிலிருந்தாக வேண்டியது கட்டாயம்.

அது யானைப் பாகனாகத் தேற வேண்டும் என்ற அவனது ஆசைக்குக் கிடைத்த வாயில்.

ரத்த நந்தகாவை மின்சாதான் இப்போது பார்த்துக் கொள்கிறான். அந்த‌ இரவில் கண்ட‌ யானையின் ஆக்ரோஷம் தந்த அதிர்ச்சியும் அச்சமும் முற்றிலும் விலகாமல் மிச்சம் இருந்ததால் அதனிடமிருந்து சற்று விலகியே இருக்கிறான். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் யானை மேய்த்தான். அதுவும் சற்று பதற்றத்துடனேதான் காணப்பட்டது.

மின்சா ஓரிரு முறை தனித்த சந்தர்ப்பம் கிடைக்கையில் தம்மாவை இழுத்து அணைத்து முத்தமிட முயன்றான். அவள் போதிய‌ ஆர்வம் காட்டாததால் முழுக்க மீண்டு அதற்குத் தயாராகவில்லை எனப் புரிந்து தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி நின்று காத்திருந்தான்.

அந்த இரவுக்குப் பின் ரத்த நந்தகாவிடம் எந்த வித்தியாசமும் இன்றி முன்பு போலவே பழகியது தம்மா ஒருத்திதான். அவளுக்கு அந்த யானை மீது எந்தப் பயமும் இல்லை. இப்போதும் மனம் பாரமாக இருக்கும் போதெல்லாம் அதன் மடியில் தஞ்சம் புகுந்தாள்.

நாட்கள் மிக மெதுவாகவும் நகர்வது போலிருந்தது. உற்சாகமற்ற நாட்கள் அப்படித்தாம்.

*

அரசு ரத்த நந்தகாவைக் கவனித்துக் கொள்ள யானைப் பாகன் தேடுவதாக அறிவித்தது.

ஆனால் அந்த யானையின் நிலை பற்றிய செய்திகள் அறிந்து பாகன்கள் எவரும் அங்கே வர மறுத்து விட்டார்கள். யாழ தேவி அவர்களின் சம்பளத் தொகையை இரண்டு மடங்கு ஆக்கச் சொன்னாள். அப்போதும் எவரும் முன்வரவில்லை. அடுத்து போகாதவர்களைக் கடுமையாகத் தண்டிப்போம் என மிரட்டச் சொன்னாள். “போகாவிடில் கொல்வீர்கள் எனில் யானையிடம் போனாலும் அதுதானே?” எனக் கேட்டார்கள். அரசு யோசித்தது.

யாழ தேவி விஷயத்தை ஆறப் போடச் சொன்னாள். நரதுவின் மனைவியான‌ சந்தாவை ஆலோசனை கேட்டறிய‌ ஆட்களை அனுப்பினாள். அவள் மின்சாவைக் கை காட்டினாள்.

மின்சாவைத் தற்காலிகப் பொறுப்பாளனாக நியமித்தது அரசு. இன்னொரு வகையில் அவனுக்கு அது மிகுந்த சுதந்திரம் கிடைத்தது போல் ஆகி விட்டது. இப்போது அவன் பாகனுக்கு நிகர். அந்த முகாம் மொத்தமும் அவனது கட்டுப்பாட்டில். சந்தா குடிலில் நரதுவுடன் முடங்கி விட, இஷ்டம் போல் தம்மாவுடன் நேரம் செலவிட்டான் மின்சா.

தம்மா மெல்ல இயல்பு நிலை திரும்பினாள். புன்னகை செய்ய ஆரம்பித்தாள், சிரிக்கத் தொடங்கினாள், துடுக்குப் பேச்சு மீண்டது. மின்சாவுடன் இணக்கம் காட்டினாள். பழைய நெருக்கம் துளிர்த்தது. சின்னச் சின்ன சில்மிஷங்கள் அனுமதித்தாள். ஆனால் எல்லைக் கோடு வகுத்துக் கொண்டாள். மற்றதெல்லாம் திருமணம் முடிந்த பின் என்றாள். மின்சா சிணுங்கினான். தம்மா அதில் சிலிர்த்தாள், கிறங்கினாள். ஆனால் இறங்கி வரவில்லை; இறுக்கம் தளர்த்தவில்லை. “கல்நெஞ்சக்காரி” என்று கூறி கன்னத்தில் எச்சில் படாமல் புனித‌ முத்தமிட்டான் மின்சா. தம்மா மகிழ்ச்சியாக அவனைக் கட்டிக் கொண்டாள்.

மின்சா அந்தக் கூத்தாடலுக்கு இடையிலும் காரியத்தில் கண்ணாக இருந்தான். சின்னச் சின்ன நுணுக்கங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த நந்தகாவை நெருங்கினான்.

அன்றைய இரவில் நடந்த அசம்பாவிதம் யானையின் கோபம் என்பதை விட ஒரு விபத்து என்றே அவன் நம்ப விரும்பினான். அல்லது அது தன் இணையைப் பிரிந்த மனநிலை என்றாலும் அதிலிருந்து அது நகர்ந்து வந்து விட முடியும் என நினைத்தான். எனவே அதற்கு அது விரும்பிய உணவைக் கொடுத்தான், வேண்டிய உறக்கத்தை அளித்தான், நீரில் நிறைய நேரம் விளையாட அனுமதித்தான். அதன் சங்கிலியைத் தளர்த்துவதை மட்டும் தவிர்த்தான். வெள்ளை யானை மெல்ல அவனை ஏற்றுக் கொள்ள‌ ஆரம்பித்தது.

பிற்பகல் தீர்ந்த இளவெயில் நேரத்தில் தம்மாவும் மின்சாவும் யானைச் சவாரி செல்ல ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை இறங்கிய‌ பின்பும் ரத்த நந்தகாவின் தந்தங்களைப் பற்றிக் கொண்டு அதன் மத்தகத்தில் முத்தம் தந்தாள் தம்மா. எல்லா முறையும் அதன் உடலில் சிலிர்ப்பை உணர்வாள். ஆனால் அதைத் தவிர எந்த எதிர்வினையும் இராது. பெருமூச்சு விடுவாள். ‘கல்லுளி மங்கன்’ என்று மனதில் அதைத் திட்டிக் கொள்வாள்.

தம்மாவும் மின்சாவும் பகலில் அந்த முகாமில் பேசிச் சிரித்துத் திரிந்தார்கள். சந்தா அதை வேடிக்கை பார்த்திருந்தாள். அவள் அதைத் தடுக்கவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை. தம்மா அது பற்றிக் கவலைப்படவில்லை. அவளுக்கு வாழ்க்கை மீண்டாற் போல் இருந்தது. இனி துயர் இல்லை. அவர்கள் தலைநகருக்குப் புலம்பெயரவும் கூட‌ அவசியமில்லை. அவர்கள் அங்கிருந்து ஓட நினைத்தது நரதுவுக்கு அஞ்சி. இனி மேல் அவனால் தொந்தரவு இல்லை. அவன் எழுந்து நடமாட ஆரம்பித்தாலும் பழையபடி அதிகாரம் அவனிடம் இல்லை. எனவே பிரச்சனை ஏதும் செய்ய அவனால் இயலாது.

மின்சாவுக்கும் வேலை இருக்கிறது, நல்ல தொகை சம்பளமாக வருகிறது. அவன் அங்கே தற்காலிக நியமனத்தில்தான் இருக்கிறான் என்றாலும் அவனை மாற்றி விடுவார்கள் என தம்மாவுக்குத் தோன்றவில்லை. அந்த‌ வீட்டில் நிலைமை கொஞ்சம் சரியானதும், அதாவது நடப்புத் துக்கம் ஓரளவு வடிந்ததும், அவர்கள் திருமணம் செய்து அங்கேயே வாழலாம். முரண்பட்ட‌ நால்வரும் அந்த‌ முகாமிலேயே மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்.

தம்மா அப்படித்தான் கணக்குப் போட்டாள். மின்சாவிடமும் சொன்னாள். குதூகலமாகக் கேட்டவனுக்கு அவளை முழுதாக‌ ஆளும் நாள் நெருங்குகிறதென மகிழ்ச்சிக் கிறுக்கில் இளித்து நின்றான். தம்மாவைச் சந்தாவிடம் சீக்கிரம் பேசும்படி வற்புறுத்தினான். அவள் ஒத்திப் போட்டு, தாமதப்படுத்தி ஒரு நாள் தயக்கமாகச் சந்தாவிடம் போய்ப் பேசினாள்.

சந்தா தம்மாவை உற்றுப் பார்த்து விட்டு யோசித்தாள். பின் ஏதோ கணக்கிட்டு விட்டு, அச்சம்பவம் நடந்ததில் இருந்து ஓராண்டு போகட்டும் என்று சொல்லி விட்டாள். தம்மா மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. ‘சரி’ என அதற்குத் தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.

மின்சாவிடம் வந்து சொன்னதும் அவன் முகம் வாடியது. இன்னும் முழு ஆறு மாதங்கள் இருக்கின்றன. தம்மா சமாதானம் செய்தாள் – “எங்கேயடா போய் விடப் போகிறேன்?”

மின்சா புன்னகை செய்தான். அவர்களின் சுற்றல் அதிலிருந்து அதிகமானது. இணைப் பறவைகள் போல் அந்தப் பிரதேசத்தில் ஒன்றாகவே அலைந்தார்கள். ரத்த நந்தாகாவும் ஓரளவு பழகி விட்டதால் அதன் முதுகில் தம்மாவை அழைத்துக் கொண்டு சுற்றினான்.

நரதுவுக்குச் சரியாகும் என்ற நம்பிக்கை அறுந்து விட்டது. ஒரு முன்னேற்றமும் இல்லை.

அவன் மௌனமாக எல்லாவற்றையும் பார்த்திருந்தான். அழுகிறானா என அவ்வப்போது எட்டிப் பார்ப்பாள் சந்தா. தன் குற்றங்களை நினைத்து அதற்கு தண்டனை கிடைத்ததை எண்ணி அவன் வருந்துகிறானா என அறிய விரும்பினாள். ஆனால் அவன் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவளுக்கு அளிக்கவே இல்லை. கல் போல் உணர்ச்சியற்றுக் கிடந்தான்.

*

ஒருமுறை ரத்த நந்தகா முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கையில் தம்மா கேட்டாள்

“மின்சா, அன்று இரவு இது ஏன் அவ்வாறு நடந்து கொண்டது?”

“முன்பு இது தொடர்பாக நரது சொன்ன‌ அதே ஊகம்தான்.”

“ம்.”

“சியாமில் விட்டுப் பிரிந்து வந்த‌ இதன் இணையை எண்ணித்தான் எல்லாமும். இங்கு உலவும் மனிதர்கள் எவரெனினும் தன் நிலைக்குக் காரணமானவர்கள் அவர்களே என்று எண்ணிக் கொள்கிறது. எனவே விரோதம் பாராட்டுகிறது. அன்று அது நரது. ஆனால் எப்போது, யார் வேண்டுமானாலும் சிக்கலாம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.”

“எனில், உனக்கும் ஆபத்து விளைவிக்குமா என்ன‌?”

“ம்.”

“ஒன்றுமில்லை. வெள்ளையன் நல்லவன். நாயகன். கெட்டவர்களை மட்டுமே துவம்சம் செய்வான். நீ நல்லவன், என்னவன். உனக்கு ஒன்றும் ஆகாது. சரிதானே, ரத்த நந்தகா?”

யானையின் முதுகைத் தட்டிக் கேட்டாள் தம்மா. அது பிளிறியது. அதில் ஒரு மாசற்ற‌ உற்சாகம் இருந்தது. அவளது கேள்வியை வலுவாக ஆமோதிக்கும் தொனி இருந்தது!

சமீப நாட்களாக நிம்மதியாக உறங்குகிறாள் தம்மா. அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவள் தன் அக்காளை அண்டி வந்த பிறகு அவளுக்கு ராத்திரிகளில் விநோத ஓசைகள் கேட்கும். முனகல், பெருமூச்சு, அடிக்குரல் உரையாடல், சில சமயம் மெல்லிய அலறல் என வெவ்வேறு வடிவில். முதலில் சில நாட்கள் புரியாமல் பயந்தவள் அது சந்தா மற்றும் நரது இடையிலான ஆபத்தற்ற‌ இரவு விளையாட்டு என்ற அளவில் புரிந்து கொண்டாள்.

மறுநாள் காலைகளில் அக்காளின் முகம் பார்த்து அதனை உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதை ஏன் ஆடையின்றி விளையாடுகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை.

தம்மா வயதுக்கு வந்த மூன்று மாதங்களில் விஷயம் தெளிவாகப் புரிந்து போயிற்று.

அதன் பிறகு ஓசை கேட்டால் இறுகக் கண்களை மூடிக் கொள்வாள். பின் காதுகளைப் பொத்திக் கொள்வாள். ஆனால் மனதினை மட்டும் மூட முடிந்ததில்லை. யாரோ ஒரு முகமற்ற ராஜகுமாரன் புரவியேறி தன்னை அடைய வருவது போல் கற்பனை செய்து கொள்வாள். உளம் பிழை செய்கிறதோ எனக் குற்றவுணர்வு எழும். ஆம், இல்லை என இரு புறமும் வாதாடிக் களைப்புற்று அப்படியே தூங்கிப் போவாள். பிறகு மின்சாவின் மீது காதல் வந்ததும் அந்த ராஜகுமாரனுக்கு மின்சாவின் முகத்தைப் பொருத்தினாள்.

இப்போது குற்றவுணர்வு இல்லாமல் நெருங்கிப் புழங்கினாள். நேரில் மின்சா பேசும் ஆபாச விஷயங்களுக்கு - பதிலளிக்க இயலாமல் தவித்தவற்றுக்கு - தனித்த இரவின் தாழாக் குளிரில் அந்த ராஜகுமாரனிடம் இன்னும் ஆபாசமாகப் பதில் சொன்னாள்.

ஒற்றை இரவின் பயங்கரத்தில் நரது படுக்கையோடு மல ஜலம் கழிக்கும் நிலைக்கு வந்து முடங்கிய பின் சிருங்கார ஒலிகள் ஏதுமில்லாமல் நிம்மதியாகத் தூங்கினாள்.

பல மாதங்களுக்குப் பின் முந்தைய‌ அதே ஒலி கேட்ட போது திடுக்கிட்டு விழித்தாள்.

அது நிச்சயம் சந்தாவின் முனகல். அது எப்படி சாத்தியம் ஆகும்? ஒரு வேளை தனியாக சுயமாக‌வா? அல்லது நரதுவின் மீதேறி ஏதும்? அவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை. பார்க்க வேண்டும் என உந்துதல் எழுந்தது. அதே சமயம் தன் புத்தியின் வக்கிரத்தை ஏசினாள்.

தூக்கம் முற்றிலும் கலைந்து விட, காதுகளைக் கூர்மை செய்தாள். இன்னொரு முனகல், சந்தா தவிர‌. நிச்சயம் ஆண் குரல். ஆனால் நரது இல்லை. இன்னும் இளமையான குரல்.

தம்மா உள்ளுணர்வு உந்தித் தள்ளப் பதற்றமானாள். ஒருவேளை அப்படி இருக்குமோ?

மனதில் அப்படிப் பட்டு விட்ட பின் உதாசீனம் செய்யலாகாது. இனி இங்கிதம் பார்க்க இயலாது. சட்டென அறைக் கதவைத் திறந்து குடிலின் பெரிய‌ அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அவள் கண்ட காட்சி ஆயுளுக்கும் மறக்காத சித்திரமாக மனதில் பதிந்தது. இரு நிர்வாண உடல்கள். மல்லாந்திருந்த மின்சாவின் மீது சந்தா ஏறி இயங்கியிருந்தாள்.

கதவு திறந்த சப்தம் கேட்டு சந்தா, மின்சா இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மின்சா அதிர்ந்து எழ முயற்சி செய்ய, சந்தா அவனை விடாமல் அழுத்தி வைத்துத் தொடர்ந்து விட்டுச் சில கணங்களில் எழுந்து நிதானமாகத் தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு கூந்தலை அள்ளி முடிந்தாள். மின்சாவும் அவசரமாக உடை தேடி அணிந்து வந்து தம்மாவின் முன் மண்டியிட்டு அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அழுதான்.

தம்மா ஏதும் பேசாமல் அப்படியே நின்றிருந்தாள். அது கனவாக இருக்கலாகாதா என நப்பாசை எழுந்தது அவளுக்கு. இதோ விழித்துக் கொண்டு கனவு எனப் புரிந்து நிம்மதிப் பெருமூச்சு விடப் போகிறோம் எனக் காத்திருந்தாள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

திரும்பிப் பார்த்தாள். நரது அறையின் மூலையில் மல்லாந்து படுத்திருந்தான். அவனது கண்களில் நீர் ஊற்றாக‌ உற்பத்தியாகி கன்னங்களில் வழிந்து கொண்டே இருந்ததது.

தம்மாவிடம் தினமும் மன்னிப்புக் கேட்டான் மின்சா. அது அவன் தவறு இல்லை, சந்தா அழைத்த போது தன்னால் மறுக்க முடியவில்லை என்றான். தலை குனிந்தபடி அதற்கு தம்மா அவனைக் காத்திருக்க வைத்துப் பட்டினி போட்டதுதான் காரணம் என்றான்.

தம்மா அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டாள். அவள் அவனிடம் ஏதுமே பேசவில்லை. ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை. சந்தாவிடமும் கூட‌ மௌனமே பேணினாள். சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லவில்லை.

கண்ணுக்குத் தெரியாத பூதம் ஒன்று அவளிடமிருந்த மொத்த சொற்களையும் பிடுங்கிக் கொண்டது போலிருந்தது. அல்லது யாரோ ஒரு கொள்ளையன் இரவோடு இரவாக அவள் நாக்கைத் துண்டித்துத் திருடி எடுத்துப் போனது போல் தோன்றியது. மின்சா அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கேட்டு அலுத்து விட்டான். இப்போது அவனுமே பேசுவது இல்லை. கல்லில் எவ்வளவு காலம் நீரோடினாலும் கரையாது. கல்நெஞ்சக்காரிகளும் அப்படியே!

ஒழுக்கம் கெட்ட‌வனுக்கு இத்தனை ரோஷம் வேறா எனக் கேள்வி எழுந்தது தம்மாவுக்கு.

ஆனால் தான் மட்டும் சுத்தமா? மின்சாவின் கண் முன்னாலேயே நரது தம்மாவின் முலை பற்றியிருக்கிறான். கூசிப் போய் நின்றிருக்கிறாள். அதை எல்லாம் ஒரு நாளும் மின்சா பொருட்படுத்தி விலகியதில்லை, கோபித்ததில்லை. இன்னும் சொன்னால் இப்போதைய அவளது விலக்கத்தின் போது கூட சொல்லிக் காட்டியதில்லை. அப்படி எனில் அவன் என் உடலின் களங்கம் பொருட்படுத்தாமல் என் மனதைக் காதலிப்பதாகத்தானே அர்த்தம்?

ஆனால் அதுவும் இதுவும் ஒன்றா? தான் நிஜமாகவே மனதால் அழுக்குறாதவள். நரது தன்னைத் தீண்டியதெல்லாம் நாயிடம் கடிபட்டது போல்தான். அதற்கு தான் பொறுப்பு ஆக‌ முடியாதே! மின்சாவின் செயல் அப்படிப்பட்டதா? அவன் சம்மதித்து சந்தாவிடம் சாய்ந்திருக்கிறான்! எனில் உடல் மட்டுமின்றி மனம் கறைபட்டதாகத்தானே பொருள்?

சரி, அவனாவது ஆண். உலகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான‌ ஒழுக்கக் கோடுகளைத்தான் வைத்திருக்கிறது. சந்தாவுக்கு என்ன கேடு வந்தது தொலைந்தது?

சந்தா தம்மாவிடம் பேசத் தொடர்ந்து முற்பட்டாலும், மன்னிப்போ வருத்தமோ ஒரு சொல்லும் தெரிவிக்க‌வில்லை. அதைப் பற்றியே ஏதும் பேசவில்லை. தான் செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக அவள் கருதவில்லை என்பதைத் தம்மாவுக்கு உணர்த்தினாள். ஆனால் மின்சா போல் சந்தா அவளிடம் பேசுவதை ஒருகட்டத்தில் நிறுத்தி விட‌வில்லை. ஒன்றுமே நடக்காதது போல் சகஜமாகப் பேசிக் கொண்டேதான் இருந்தாள். தம்மாவின் அமைதியைச் சந்தா பொருட்படுத்தவே இல்லை என்கிற செய்தியும் அதில் இருந்தது.

கோடை காலம் தொடங்கியது. வனத்தை விட மனத்தில்தான் தகிப்பு அதிகமிருந்தது.

*
(தொடரும்)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2023 17:58
No comments have been added yet.


C. Saravanakarthikeyan's Blog

C. Saravanakarthikeyan
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow C. Saravanakarthikeyan's blog with rss.