வாஜ்பாய் – எந்தப் பாதையில் செல்வது?
கண்ணியம் நாற்சந்தியில் காணாமல் போனது
மலிந்தவர் மதிப்பு மிக்கவர்களை மறித்து வைத்திருக்கிறார்கள்.
கடைசி ஒரு முறை நான் முன்னால் செல்லட்டுமா?
அல்லது
காட்சியிலிருந்தே விலகிக் கொள்ளட்டுமா?
எந்தப்பாதையில் செல்வது?
வாஜ்பாய் எழுதிய கவிதையில் சில வரிகள்இரண்டு பிம்பங்கள்
வாஜ்பாய் (1924-2018) நிறைவாழ்வு வாழ்ந்தவர். இளவயதிலிருந்தே அரசியலில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். ஆனால் தன் அரசியல் வாழ்க்கையின் கடைசி நாள் வரை அவருக்கு எந்தப் பாதையில் செல்வது என்பது பற்றிய குழப்பம் இருந்தது. அவரைப் பற்றி மற்றவர்களுக்கும் குழப்பம் இருந்தது. பாஜகவினர் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது உண்மை என்றாலும் “மோதி பதவி விலக வேண்டும்” என்று அவர் 2002ல் குஜராத் கலவரங்கள் நடந்தபோது சொன்னதை பல இந்துத்துவர்களால் மன்னிக்கவே முடியவில்லை. நேரு மீது அவருக்கு இருந்த மரியாதை மதவாதிகளுக்கு மிகுந்த கோபத்தை வரவழைதது. “ஆர் எஸ் எஸ் என் ஆத்மா” என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவ்வியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது அவருக்கு அதிகம் பிடிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. “மதவாத அரசியலை மையத்திற்குக் கொண்டு வருவதில் மிகப் பெரிய பங்கு வகித்தவர்” என்று இடதுசாரிகள் சொன்னார்கள். ஆனால் பால்ராஜ் மதோக் போன்ற தீவிர இந்துத்துவவாதிகள் “வாஜ்பாய் போன்ற கம்யூனிஸ்டு ஊடுருவிகளால்தான் ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய பெயர்) சீரழந்தது” என்று குற்றம் சாட்டினார்கள். நாட்டிற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் என்று அவர் புகழப்பட்டார். ஆனால்ராஜ்குமாரி கௌல் என்ற திருமணமானவரோடு அவருக்கு உறவு இருந்தது. உறவில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
சுதந்திரத்திற்கு முன்
வாஜ்பாய் ஆக்ராவிற்கு அருகே உள்ள படேஷ்வர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். மத்தியவர்க்கத்திற்கு சிறிது கீழான பொருளாதார நிலைமை. தந்தை பள்ளி ஆசிரியராக குவாலியர் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1939ம் ஆண்டில் தனது 15ம் வயதில் சுயம்சேவகராக ஆர் எஸ் எஸ்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவர் கலந்து கொண்டதைப் பற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவர் குவாலியரில் நடந்த ஊர்வலத்தில் பங்கு பெற்றது உண்மை. ஆனால் படேஷ்வரில் கூட்டத்தில் இருந்ததற்காகக் கைதாகி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்தார். 1947ல் வெள்ளையனே வெளியேறு இயக்கமே நேர விரயம் என்று கூறத் துவங்கி விட்டார். இளைஞராக இருந்த போது காந்தியைப் பற்றி அன்றைய சுயம்சேவகர்களைப் போலவே கடுமையாக எதிர்வினை ஆற்றினார். “காந்தி ஆப்கானிஸ்தானை இந்தியா மீது படையெடுக்க அழைத்தார்” என்ற அவதூறைக் கூசாமல் சொன்னார். ஆனால் காந்தியின் மறைவிற்குப் பின் அவர் இருந்த இயக்கமே வேறுவிதமாகப் பாடத் துவங்கி விட்டது. அவரும் பாட்டை மாற்றிக் கொண்டார்.
நேருவின் காலம்
வாஜ்பாய் ஜனசங்கத்தின் தலைவரான சியாம் பிரசாத் முகர்ஜியின் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய மறைவிற்கு நேருவும் மறைமுகக் காரணம் என்று எழுதியிருக்கிறார். 1957ல் நாடளுமன்ற உறுப்பினராக அவர் பேசிய முதல் பேச்சிலும் நேருவின் கொள்கைகளை வலுவாக விமரிசனம் செய்தார். நேரு அவருடைய பேச்சு வல்லமையை மதித்தார் என்பது உண்மை. ஆனால் அவர் வருங்காலத்தில் பிரதமராக வருவார் என்று நேரு சொன்னர் என்ற பரப்புரை முழுவதும் பொய். 1962ல் சீனாவுடன் நடந்த போர் காரணமாக நேரு மீது பாய முழு வாய்ப்புக் கிடைத்த போதும் அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்ள வாஜ்பாய் தயங்கவில்லை.”இந்தியா முழுவதும் நேருவின் பின் நிற்கிறது” என்று அறிக்கை விடுத்தார். நேரு மீது அவர் பெருமதிப்பு வைத்திருந்தார் என்பதும் உண்மை.
இந்திரா காந்தி காலம்
பங்களாதேஷ் விடுதலைப் போரில் வெற்றி பெற்றதற்காக
அவரை வாஜ்பாய் அன்னை துர்க்கை என்று அழைத்தார் என்ற கூற்று முழுக் கற்பனை. நேரு இறந்தவுடனேயே வலதுசாரி சக்திகள் தங்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன என்பதைக் கணக்கிட்டுச் செயல்படத் துவங்கின. ஆனால் மக்களிடம் செல்ல வேண்டுமானால் முதலாளித்துவத்திற்கு முழுவதும் சாதகமாக இயங்குவதாகக் காட்டிக் கொள்ள முடியாது என்ற தெளிவு வாஜ்பாய்க்கு இருந்தது. எனவே வங்கிகளைத் தேசியமயமாக்கல் போன்ற கொள்கைகளை அவர் ஆதரித்தார்.
பிரதமர் வாஜ்பாய்
மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட்டணி தருமத்தைப் பற்றிப் பேசினாலும் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது மிகத் தெளிவாக ‘நமக்கு கூட்டணி என்பது ஒரு மைல்கல்தான் இலக்கு அல்ல’ என்று சொன்னார். கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரும் போது, மூன்று இலக்குகளை நிச்சயம் அடையும் என்றார் – அயோத்தியில் கோவில் கட்டப்படும் அரசியல் சட்டம் 370 திரும்பப் பெறப்படும் மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற மூன்று இலக்குகள். அயோத்தியைப் பொருத்தவரை, பாபர் மசூதி இடிப்பட்ட போது அது தன் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள் என்று அவர் கூறினாலும், கோவில் அங்குதான் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
வாஜ்பாய்க்கு இதைத் தவிர மூன்று முக்கியமான இலக்குகளும் இருந்தன. முதலாவது அணு ஆயுத சோதனை. அவர் ஆட்சி காலத்தில்தான் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாகச் செய்தது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் (அன்று ரஷ்யாவும் அமெரிக்கா பக்கத்தில் இருந்தது) பல தடைகளைக் கொண்டு வந்தாலும் வாஜ்பாய் நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித்தார். ஆனால் இந்தியா பயங்கரவாதத்தைச் சமாளிக்கத் திணறியது. இரண்டாவது இலக்கு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது. பாகிஸ்தானுக்கு பேருந்தில் பயணம் செய்து அந்நாட்டுப் பிரதமர் நவாப் ஷரீஃபைச் சந்தித்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்றாவது இலக்கு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது. அங்குள்ள மக்களுக்குத் தேவை ‘காஷ்மீரியம், மனிதத்தன்மை, உண்மையான மக்களாட்சி’ என்று சொன்னார் அவர். நான் 2017ல் காஷ்மீர் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இருந்தது என்றார்கள்.
பாகிஸ்தானோடு நல்லுறவு என்ற பாதையில் பெருங்கற்கள் கார்கில் போர் நடந்த போது விழுந்தன. பாகிஸ்தான் முதுகில் குத்துவதை ஒரு கலையாக ஆக்கி விட்டது என்று இந்தியாவில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். முஷரஃப் ஆக்ரா வந்து இந்தியாவோடு ஒப்பந்தம் செய்ய முயன்றாலும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 11 2001ல் பின் லாடன் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலில் பயங்கரவாதம் மனிதகுலத்தின் முதல் எதிரி என்ற உண்மை மேற்கத்திய நாடுகளுக்குப் பிடிபடத் துவங்கியது. இருந்தாலும், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை விட்டுக் கொடுக்கத் தயராக இல்லை. 13 டிசம்பர் 2001 அன்று நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது என் அலுவலக அறை நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இருந்ததால் துப்பாக்கி சுடுவதின் ஒலிகள் துல்லியமாகக் கேட்டன. உலகம் முழுவதும் அதன் எதிரொலிகள் கேட்டதால் இந்தியா பயங்கரவாதத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினை உலக நாடுகளுக்குப் புரியத் துவங்கியது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் ஒரிசாவில் ஸ்டேன்ஸ் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார். அவர் ஆட்சியில் இருந்த போதுதான் 2002ல் குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. வாஜ்பாய் மோதியைப் பற்றி பேசியதைச் செயலில் காட்டியிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக ஆகியிருக்கும்.
நல்ல நண்பர்
வாஜ்பாய் பழகுவதற்கு மிகவும் இனியவர் என்று அவருடன் நட்பில் இருந்தவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக கேரள முதல்வராக இருந்த இ. கே. நயினார் வாஜ்பாய் தலைமையில் மலப்புரம் மாவட்டத்தில் குடும்பஸ்ரீ திட்டத்தைத் திறந்து வைக்கச் செய்தார். பத்திரிகைகள் கம்யூனிஸ்டான நயினார் பாஜக பிரதமரை இஸ்லாமியப் பெரும்பான்மை மாவட்டமான மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்ததை பேரதிசயமாகக் கருதின. அவர் கருணாநிதியோடு கூட நட்போடு இருந்தார். அவருக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்த ஒரே நண்பர் ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும்.
நகைச்சுவையுணர்வு
வாஜ்பாய் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை ஜகஜீவன் ராம் ரயில்வே அமைச்சராக இருந்தபோது விபத்துகள் அதிகமாக நடைபெறுவதைக் குறிப்பிட்டு வாஜ்பாய் பேசினார். “மக்கள் ரயில் செல்லும் போதெல்லாம் தங்கள் “ஜீவன்” (உயிர்) “ஜகத்தை” ( உலகத்தை) விட்டு போய் விடுமோ என்ற பயத்தில் ராம் ராம் என்று ராமநாமத்தை சொல்லாமல் பயணம் செய்வதில்லை. எனவே அமைச்சரின் பெயர் தினமும் கோடிக்கணக்கான பேர்களால் நினைவு கூரப்படுகிறது” என்று அவர் பேசியதைக் கேட்டு ஜகஜீவன் ராமிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
முடிவாக
வாஜ்பாய்க்கு தன் கவிதைகளைப் பற்றி உயரிய எண்ணம் இருந்தது. ‘நான் அரசியலுக்கு வந்தது இந்திக் கவிதை உலகிற்கு நஷ்டம் என்று பலர் கருதுகிறார்கள்’ என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்த ஹிந்திக் கவிஞர்கள் பலர் அதை விடப் பெரிய லாபம் இந்திக் கவிதைக்கு இல்லை என்று கருதுகிறார்கள். அவருடைய அரசியலைப் பற்றியும் இப்படியே சொல்லலாம். மோதியின் இன்றைய அரசியலோடு ஒப்பிடும் போது வாஜ்பாய் காலம் பொற்காலம் என்று கருதுவர்களை விட அவருடைய காலம் இன்றைய அரசியலுக்கு ஓர் ஒத்திகை என்று கருதுபவர்களே அதிகம் இருப்பார்கள்.
பி ஏ கிருஷ்ணன்
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
