குடும்பஸ்தன் - தமிழ் சினிமா

பலகோடி குடும்பங்களின் கதை இது.
சர்வவல்லமை படைத்த பணம்தான் இந்த சமூக அமைப்பையே ஆட்டுவிக்கிறது. பணம்தான் குடும்ப உறவுகளை தீர்மானிக்கிறது. மனிதனின் மதிப்பைமட்டும் அல்ல, இருப்பையும் கூட பணமே முடிவுசெய்கிறது. அனுபவங்களில் அதைக் கண்டு வெறுத்துப் போகிற மனிதர்களின் கதை இது.
நம்மசொந்த பந்தம் என்ன பேசும், நாலு பேர் என்ன நினைப்பாங்க, ஊர் எப்படி பார்க்கும் என்றுகடிகார முள் ஒன்று உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும். கிழிந்து கிடக்கும் உண்மை நிலைமையை தனக்குள் மறைத்துக்கொண்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கவும் தலைநிமிர்ந்து நடக்கவும் மெனக்கெடுவதே வாழ்க்கையாகிப்போகும் மனிதர்களின் கதை இது.
தனக்குபிடித்தமானது எது, தன்னால் இயன்றது எது எனத் தெரிந்திருந்தாலும், அதை விட்டு விட்டுசம்பந்தமில்லாத வழிகளில் எல்லாம் சென்று ஒவ்வொருமுறையும் அடிபட்டு, காயங்களோடு திரும்புகிறமனிதர்களின் கதை இது.
எப்படியாவதுபிழைத்துக் கொள்ள முயன்று, தோற்று, தோற்று, கடைசியில் எதாவது ஒருநாளில் நடந்து விடாதாஎன மூளையில் பதற்றம் தொற்றி அலைபாயும் மனிதர்களின் கதை இது.
நாம்அன்றாடம் பயணிக்கும் வழியெல்லாம், பார்க்கும் இடமெல்லாம் நடமாடும் எத்தனையோ மனிதர்களின் கதைஇது.
தன் உழைப்பிலிருந்து தானே அந்நியமாகும் மனிதர்களின் கதை இது.
அந்தமனிதர்கள் எல்லோருக்குமான உதாரணம்தான் குடும்பஸ்தனாக வரும் நவீன். இயல்பான தோற்றத்தில்,சாதாரண உடையில், சின்னச் சின்னக் கனவுகளோடு இருக்கும் அவன் காதல் திருமணத்தில் துவங்குகிறதுபடம். அவர்கள் இருவருக்கும் ஒழு பெண் குழந்தை பிறப்பதோடு படம் முடிவடைகிறது. அதற்குள்அவன் படும் பாடுதான் குடும்பஸ்தன்.
இடைவேளைவரை வலி, கோபம், சந்தோஷம் எல்லாவற்றையுமே நகைச்சுவை துணுக்குகள் போலாக்கி அதைக் கோர்த்திருக்கிறார்கள்.உணர்வுகள் மேலோங்காமல் அங்கங்கு அலுப்பும் கூட தட்டுகிறது. பல இடங்களில் தர்க்கங்கள்இடறுகின்றன. இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் ஊடாகவும், மேலோங்கியும் மனிதத்தின் வண்ணங்கள்தெரிகின்றன. பணத்தை மீறி நிற்கும் மனித அழகுகள் பிடிபட படத்தின் இறுதி நெகிழ்ச்சியடையவைக்கிறது.
இந்தப்படத்தில் பணம் சம்பாதிப்பவர்களாகவும், குடிகாரர்களாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாகவும், ஆண்கள் கிடந்து அல்லோலப்படுகிறார்கள். குழந்தை சுமப்பவராக, தனக்குள் பொருமுகிறவர்களாக, புரணி பேசுகிறவர்களாக துண பாத்திரங்களாய் பெண்கள் இருக்கின்றனர்.பணம் சம்பாதிக்கும் ஒரே பெண், ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு யூடியுபராக இருக்கிறார். நடுத்தர, எளிய குடும்பங்களில் பெண்களின்நிலைமையும், பங்களிப்பும் இன்று முக்கியம்பெற்றிருக்கிறது. அவர்களுக்குரிய இடம் இந்தப் படத்தின் கதையிலும், காட்சிகளிலும் இல்லை.
நவீனின்மாமாவாக வரும் குருசோமசுந்தரமும், நவீனின் மனைவியாக வரும் மேகன்னாவும் சிறப்பாக நடித்திருந்தாலும்மொத்தப் படத்தையும் சுமந்து நிற்கிறார் நவீனாக வரும் நடிகர் மணிகண்டன். அவரது உடல்மொழியும், குரல் தொனியும் அவ்வளவு இயல்பாய் கதாபாத்திரத்தோடு இணைந்து விடுகிறது. தமிழுக்குகிடைத்த இன்னொரு நல்ல திரைக்கலைஞர் அவர். மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையோடுஅவர் பேசும் காட்சிகள் கவிதைகளாய் இருக்கின்றன. இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதும்அதுதான்.
எதையெல்லாம்நக்கலடித்துக் கொண்டு கடக்க முடியும். எதையெல்லாம் அப்படி கடக்க முடியாது என்பதையும்‘குடும்பஸ்தன்’ காட்டுகிறது. படத்தின் பலவீனம் அது. இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி அதைஅறிந்து கொண்டால் மேலும் நல்ல படங்களைத் தரமுடியும்.