நம்பாதே.
சமூக ஊடகங்களில் சில விஷயங்கள் நம்ப முடியாத வகையில் டிரெண்ட் ஆகின்றன. உதாரணமாகக் கூமாபட்டி. அபத்தமே என்றாலும் ஒரு வார காலத்துக்கும் மேலாக ஓர் ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டது. இன்னொன்று, நடிகர் கிங்காங் மகள் திருமணம். அவர் ஒவ்வொரு நடிகரையும் அழைப்பதற்காகச் சென்ற விவரங்கள் முதல் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிங்காங்கை இடுப்பில் தூக்கிக்கொண்டு திருமண வரவேற்பில் நின்றது வரை ஒவ்வொரு ரெஃப்ரெஷ்ஷிலும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தன. நொடிக்கொரு போஸ்ட் போட்டாலும் டைம்லைன் இவ்வளவு நிரம்ப வாய்ப்பில்லை. எனவே இது வேறு என்னவோ.
விஜய் டிவி நடிகர் பாலா என்பவர் இன்னாருக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார், அன்னாருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தார், அசோகரைப் போல சாலை அமைத்தார், மரம் நட்டார் என்கிற தினசரி அப்டேட்டுகள். இது பல மாதங்களாக வருகிற தகவல் தொடர். எந்தப் பிரபல நடிகருக்கும்கூட சாத்தியமில்லாத அளவுக்கு இவரது ஒவ்வொரு செயல்பாடும் கவனம் பெறுகிறது.
பிறகு சாய் அப்யங்கர் என்னும் இளைஞர், முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் இரண்டாவது படம் கமிட் ஆகிவிட்டார், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது படங்கள் புக்காகிவிட்டன என்று அடிக்கொரு அப்டேட் வந்து இப்போது எட்டுப் படங்களுக்கு இசையமைக்கிறார் என்பதில் நிற்கிறது. நீங்கள் இதனைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை ஒன்பது அல்லது பத்தாகியிருக்கலாம். அவரது முதல் படம் வெளியாகும்போது அவர் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து முடித்திருக்கலாம்.
விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். உண்மை போன்றவையாகவும் இருக்கலாம்.
இப்போதெல்லாம் புகைப்பட, விடியோ ஆதாரமே இணைக்கப்பட்டாலும் செய்யறிவுச் செயல்பாடாக இருக்கலாம் என்று தோன்றிவிடுகிறது. எழுத்தாளர் ஷான் கருப்பசாமி, ஒரு செய்யறிவுப் பெண்ணை உருவாக்கி, அவரை ஒரு கிராமத்து விஞ்ஞானியாக வடிவமைத்து, டிரெண்டாக்கி நம்ப வைத்து அழிச்சாட்டியம் செய்ததைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் நானும் ஷானும் இணைந்தே ஒரு முழு செய்யறிவுத் திரைப்படத்தை எழுதி, இயக்கி நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்றுக் கோடீஸ்வரர்கள் ஆகலாம். அதுவேறு விஷயம். ஆனால் இனி வாழ்க்கையில் நான் நேரடி சாட்சியாக இல்லாத எதையும் நம்புவேனா என்று தெரியவில்லை.
பிரத்தியட்சம், பிரமாணம், சுருதி என்று மூன்று முதன்மையான அறிதல் முறைகளைச் சொல்வார்கள். இவை தவிரவும் சில உள்ளன என்றாலும் இவை மேலே வருபவை. பிரத்தியட்சம் என்றால் ஐம்புலன்களால் உணர்ந்து உறுதி செய்வது. நேரடி சாட்சி. சூரியனைப் பார்க்கிறோம். எனவே அது இருப்பது உறுதி. தீயைத் தொட்டால் சுடுகிறது. எனவே நெருப்பு சுடும். வாயில் போட்டால் இனிக்கிறது. எனவே மைசூர்பா இனிக்கும். இதைப் போல.
பிரமாணம் என்பது காரண காரியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. விளக்கு எரிவது முதல் மயானத்தில் பிணம் எரிப்பது வரை அனைத்தையும் மின்சாரம் செய்கிறது. எனவே, காண முடியாவிட்டாலும் அதைத் தொடுவது அபாயம் என்று அறிவது.
சுருதி என்பது வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே நம்புவது. ‘அபௌருஷேய’ என்பார்கள். புருஷத் (மனித) தொடர்பின்றி, மனிதனுக்கு முன்பிருந்தே இருக்கும் உண்மைகள் என்று இது வகைப்படுத்தப்படும். அதைக் கேள்வி கேட்காமல் நம்பி ஏற்பது. ரொம்பக் குடைய நேர்ந்தால் உள்ளுணர்வு என்று சொல்லிக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒன்றுமில்லை.
முன் சொன்னதைப் போல இம்மூன்று அறிதல் முறைகளும் அதிகம் புழங்குபவை. இவை தவிர வேறு வேறு தத்துவப் பள்ளிகள் வேறு வேறு அறிதல் முறைகளைப் பரிந்துரை செய்யும். அதிகம் உள்ளே சென்றால் தலை சுற்றும். உண்மை என்னவென்றால், அறிவியல் வளராத காலக்கட்டத்தில் திகைப்புக்கும் பிரமிப்புக்கும், அதனாலேயே உண்டான அச்சங்களுக்கும் அடிபணியும் தன்மைக்கும் நிறைய இடம் இருந்தது. செவ்வாயை தோஷம் உண்டாக்கும் கிரகமாக மட்டுமே கண்டு நடுங்கிய காலம் தொடங்கி, அங்கே என்ன இருக்கிறது என்று கண்டறிய செயற்கைக்கோள் அனுப்பிப் படம் பார்த்த காலம் வரை நாம் கடந்து வந்திருக்கிறோம். விண்ணில் சொர்க்கம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம். சுனிதா வில்லியம்ஸும் அவரது துறை சார்ந்த முன்னோரும் பின்னோரும் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகு விண்ணில் ஓர் ஆராய்ச்சி நிலையம் இருப்பது மட்டுமே பிரத்தியட்சம் என்று அறிந்தோம்.
எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்பதல்ல. உண்மையை உணர்வது வேறு, ஏற்பது வேறு, பகிரங்கமாக ஒப்புக்கொள்வது முற்றிலும் வேறு. அதை அவரவர் பின்புலம், மனச்சாய்வு போன்ற பல காரணிகள் தீர்மானிக்கும். ஆனால் ஆதிகால நம்பிக்கைகள் அசைக்கப்படும் அல்லது தகர்க்கப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மட்டும் உறுதியாகிறது அல்லவா?
இதனைக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. சுய நிரூபணங்களற்ற வெறும் நம்பிக்கைகள் அறிவியலால் தகர்க்கப்படுவது மனித குல வளர்ச்சிக்கு அத்தியாவசியம். ஆனால் இந்த அறிவியலின் உச்சம் என்பது, அறிவியலின் மீதான நம்பிக்கையையே தகர்க்கும் விதமாக மாறிக்கொண்டு வருகிறதோ என்று அச்சமாக உள்ளது. செய்யறிவு அதனை மிகவும் சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைய சமூக ஊடகங்கள் பிரத்தியட்சம், பிரமாணத்தைக் கூட நம்பாதே என்கின்றன. அங்கே உலவும் தருணங்களில் எல்லாம் உள்ளுணர்வு மட்டுமே தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டிருக்கிறது. இதை நம்பாதே. அதை நம்பாதே. எதையும் நம்பாதே. யாரையும் நம்பாதே.
ஒரு சம்பவம். ஓரிரு மாதங்களுக்கு முன்பு என் மனைவியுடன் குறிப்பிட்ட ஒரு பொருள்-கடை-விலை சார்ந்து சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தேன். டைனிங் டேபிளில் நாங்கள் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் இருவருடைய போன்களும் எங்கள் அருகே இருந்தன.
அன்று தொடங்கி அடுத்த சில நாள்களுக்கு நாங்கள் பேசிய பொருளைக் குறித்த விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் வந்துகொண்டே இருந்தன. ஃபேஸ்புக் ஒட்டுக் கேட்கிறது என்பது பாமர சிந்தனை. செட்டிங்ஸில் செயலிகளுக்கு நாம் என்னென்ன அனுமதி அளித்திருக்கிறோம், எதையெல்லாம் மறுத்திருக்கிறோம் என்று பார்ப்பதே அறிவுள்ளோர் செய்யும் முதல் பணியாக இருக்கும். மைக்ரோபோன் எப்போதும் இயங்குகிறதா, இருப்பிடங்களை எப்போதும் பகிர்ந்துகொள்ள வழி செய்திருக்கிறோமா என்று தொடங்கி எதையெதையோ கவனிக்கச் சொல்லி வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள். பயனர் அனைவரும் வல்லுநர்களாக முடியாது. பூட்டைச் செய்பவன் சாவியுடனே சேர்த்துச் செய்வது போல, தொழில்நுட்ப சௌகரியங்கள், அவற்றின் இடர்பாடுகளுடன் சேர்த்தே கட்டமைக்கப்படுகிறது. பகல்-இரவு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகளின் பட்டியலில் இதனையும் இணைத்து இதற்கும் ஒரு தத்துவ விளக்கம் தந்துவிட முடியும்.
என் பிரச்னை அதுவல்ல. வாழ்வில் பெரிய அளவு முக்கியத்துவம் கோராத எளிய கேளிக்கைகளில் உள்ள இடர்பாடுகளில் இருந்து விலகி நிற்க முடிந்தால் நல்லதென்று இப்போதெல்லாம் அடிக்கடித் தோன்றுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். ஃபேஸ்புக் தனது பயனர்களுக்குப் பணம் தருவது என்று தொடங்கியபோது, எந்தத் தனி முயற்சியும் இன்றி முதல் மாதம் முதலே எனக்கு அதில் வருமானம் வரத் தொடங்கியது. அடுத்தடுத்த மாதங்களில் தொகை கணிசமாக ஏறவும் ஆரம்பித்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு சட்டென்று நின்றது. இரண்டு மாதத் தொகை சேர்ந்து வந்தது. பிறகு அது மூன்று மாதத் தொகையாகச் சேர்ந்தது. இன்னும் எழுது, படங்கள் போடு, ரீல்ஸ் போடு, ஸ்டோரி வை என்று அவன் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் வரும். மானிடைசேஷன் பக்கத்தில் அறிவிப்பு வரும்.
அடுத்தவர் சொல்வதையெல்லாம் கேட்பவனாக இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்? எனக்குத் தோன்றியபோது தோன்றியதைத் தோன்றிய விதத்தில் எழுதுவேனே தவிர எவனுக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளும் வழக்கம் என்றும் இருந்ததில்லை.
இது அவனுக்குப் புரிந்துவிட்டபோது என்னுடைய போஸ்ட்களை lower feed இல் விடத் தொடங்கினான். என்ன எழுதினாலும் யாருக்கும் போய்ச் சேராது. மாதக் கணக்கில் இப்படி இருந்துவிட்டுச் சட்டென்று ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு சாதாரண போஸ்டை வைரல் ஆக்கிக் காட்டுவான். ஆயிரம் லைக்குகள். இரண்டாயிரம் லைக்குகள். ஐந்நூறு கமெண்ட்கள். நட்பு வட்டத்தில் இல்லாத பல்லாயிரக் கணக்கானோர் பார்த்திருப்பதாகப் படம் வரைந்து காட்டுவான். சிரித்துக்கொண்டு கடந்துவிடுவேன்.
கடந்த சில மாதங்களாக லோயர் ஃபீடும் இல்லை; அதிக ரீச்சும் இல்லை. ஆனால் டைம்லைனில் வருகிற போஸ்ட்களில் இருபதுக்கு ஒன்றுதான் நண்பர் வட்டத்தில் உள்ளவர்களுடையதாகவோ, followers எழுதியவையாகவோ இருக்கிறது. மற்ற அனைத்தும் ‘இதை நீ ஃபாலோ செய்யலாம்’ என்கிற பரிந்துரை போஸ்ட்களாகவே இருக்கின்றன. என்னுடைய போஸ்ட்களும் இப்படித்தான் போகும் என்று புரிந்தது. இதனால்தான் நான் யாரென்றே தெரியாத / படிப்பு எழுத்து என்றால் என்னவென்றே அறியாத கூட்டத்துக்கு ஒவ்வொரு போஸ்டிலும் தன்னிலை விளக்கம் தரவேண்டியதானது. வேலை வெட்டி இல்லாதவன் அதனைச் செய்யலாம். நானோ, வேலை வெட்டி இல்லாதவனாகவே இருந்தாலும் செய்ய விரும்பாதவன். எனவே சத்தமின்றி ஃபேஸ்புக்குக்கு அளித்த நேரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, இப்போதெல்லாம் எதையாவது அறிவிப்பதென்றால் மட்டும் அங்கே செல்வது என்று அமைத்துக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு அவன் தொழில் முக்கியமென்றால் எனக்கு என் திட்டங்கள் முக்கியமல்லவா.
இங்கே எழுதுகிறேன். இது என் இடம். இன்னொருவன் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லை. சிறிய குறிப்புகள் ஏதாகிலுமென்றால் வாட்சப் சேனலில் எழுதுகிறேன். அதுவும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. நான் மட்டும் நிரந்தரமா! ஆனால் இருக்கும் வரை எழுதிக்கொண்டிருப்பேன். என்னைப் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் தேடி வருவார்கள். அதில் எனக்குச் சந்தேகமேயில்லை. எனவே, கவனத்தைக் கலைக்கக்கூடிய அனைத்தினின்றும் விடுவித்துக்கொண்டு விடலாம் என்று தோன்றிவிட்டது.
இப்போது எழுதத் திட்டமிட்டிருக்கும் ‘உரி’, யதி – சலத்தைக் காட்டிலும் அளவில் மிகப் பெரிதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை. ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும் கட்டம் வரைதான் நான் அதற்கு எஜமானன். பிறகு அது அப்பொறுப்பை எடுத்துக்கொள்ளும். ஆனால் சாத்தியமுள்ள அனைத்து கவனச் சிதறல் சாளரங்களையும் அடைத்து வைக்கும் முயற்சியில் இப்போதே இறங்குவது நல்லதுதான் என்று நினைக்கிறேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .