உதயம்: சில நினைவுகள்
சென்னை உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது என்ற செய்தி அறிந்து சிறிது வருத்தமாக இருந்தது. இப்போது தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதில்லை என்றாலும், பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் திரையரங்கில்தான் அதிகமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.
உதயத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் புது வசந்தம். 1990 ஆம் வருடத் தமிழ்ப் புத்தாண்டுக்கு அந்தப் படம் வெளியானது. அப்போது ஊர் சுற்றலையெல்லாம் நிறுத்திக்கொண்டு முதல் முதலாக அமுதசுரபியில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் யதார்த்தவாதியாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். கையில் சிறிது காசுப் புழக்கம் இருந்தது. பெரிய கற்பனைகளுக்கு இடமில்லை. நாநூறு ரூபாய் சம்பளம். அதில் என் செலவுக்குப் பதினைந்து அல்லது இருபது ரூபாய் எடுத்துக்கொள்வது வழக்கம். செலவு செய்யவே தோன்றாது. அப்பா காசில் வாழ்ந்துகொண்டிருந்தவரை நான் அப்படி இல்லை என்பதை விழிப்புடன் கவனித்து உணர்ந்ததுதான் அன்றைய தேதியில் அடைந்த ஞானம். ஊரே பாராட்டுகிறதே, அப்படி என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று அந்தப் படத்துக்குப் போனேன்.
உதயத்தில் அப்போது மினி உதயம் கிடையாது. சூரியன் இருந்தது. சந்திரன் உருவாகிக்கொண்டிருந்த நினைவு. அட்வான்ஸ் புக்கிங் வசதிகள் இல்லாத காலம் என்பதால் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கித்தான் உள்ளே செல்ல முடியும். அரங்கு நல்ல பிரம்மாண்டமாக, குளுகுளுவென்றிருந்தது. அன்று நானறிந்ததெல்லாம் குரோம்பேட்டை வெற்றி, பல்லாவரம் லட்சுமி, தேவி, ஆலந்தூர் ராமகிருஷ்ணா, பறங்கிமலை ஜோதி மட்டுமே. இவை ஓலைக் கொட்டகைத் திரையரங்குகள் இல்லை என்றாலும் அந்த வகையில்தான் வரிசைப்படுத்த வேண்டும். லட்சுமியில் ஒரு சமயம் அனகோண்டா படம் பார்க்கப் போனபோது, அந்தப் படம் பிடிக்காத யாரோ ஒருவர் பாய்ந்து சென்று திரையைக் கிழித்துவிட்டு வெளியே ஓடிப் போனார். அந்தச் சம்பவம் நடந்ததற்கு ஓராண்டுக்குப் பின்னர் உள்ளம் கவர்ந்த கள்வன் என்ற பாண்டியராஜன் படம் பார்க்கச் சென்றபோது, அனகோண்டா பிடிக்காத மனிதர் கிழித்த திரை அப்படியே இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
தவிர, இந்த எந்த தியேட்டரிலும் அப்போது ஏசி இருக்காது. தவறிப் போய்ப் பகல் காட்சிக்குச் சென்றுவிட்டால் சிதையில் இருந்துவிட்டுத் திரும்புவது போலத்தான் இருக்கும். உதயம் எனக்கு முதல் முதலாக ஏசியை அறிமுகம் செய்தது. அந்த அரங்கில் எந்தப் படத்தைப் பார்த்தாலுமே நல்ல படம் என்று தோன்றிவிடும் போலிருந்தது.
ஆனால் புது வசந்தம் ஒரு நல்ல படம்தான். அதன் அனைத்து அபத்த நாடகக் காட்சிகளுக்கும் அப்பால் கதை என்று ஒன்றிருந்தது. அது ரசிக்கும்படியாகவும் அக்காலக்கட்டத்துக்குப் புதுமையானதாகவும் இருந்தது. சிரிப்பே வந்துவிடக் கூடாது என்ற கவனமுடன் நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான சார்லி அந்தப் படத்திலும் கெ-ள-ரி என்கிற காட்சியில் நடித்துப் புகழ் பெற்றார்.
படத்தைவிட உதயம் தியேட்டர் பெட்டிக் கடையில் அப்போது பாப்கார்னும் நாலணா சமோசாவும் நன்றாக இருந்தன. இனி படம் பார்ப்பதென்றால் உதயத்தில் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டேன்.
அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு கல்கியில் வேலை கிடைத்தது. உதயம் அப்போது இன்னும் நெருக்கமானது. அந்நாள்களில் திரைப்படங்களுக்குப் பத்திரிகையாளர் காட்சி என்ற ஒன்று வைப்பார்கள். பெரும்பாலும் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த மேனா, டிடிகே சாலையில் இருந்த சுப்ரகீத், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்த குட்லக் போன்ற ப்ரீவ்யூ திரையரங்குகளில் அக்காட்சி நடக்கும். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டும் அது ரிலீஸ் ஆகும் தியேட்டரிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுத்துப் பார்க்கச் சொல்லிவிடுவார்கள்.
அண்ணாசாலை என்றால் பெரும்பாலும் சாந்தி தியேட்டரில் ரிலீஸாகும் படங்களுக்குத்தான் வைப்பார்கள். அது இல்லாதபட்சத்தில் அசோக் நகர் உதயம்தான். தொண்ணூறுகளில் வெளிவந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பெரும்பாலானவற்றை உதயத்தில்தான் பார்த்தேன். அந்நாள்களில் அநேகமாக வாரம் இரண்டு படங்களாவது பார்க்க வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றால் வியாழன் மாலைக் காட்சி கண்டிப்பாக இருக்கும். பண்டிகைக் காலமென்றால் வாரம் முழுதுமே பத்திரிகையாளர் காட்சிகள் இருக்கும். ஏதாவது ஓர் இனிப்பு, ஒரு சமோசா, காப்பி கொடுப்பார்கள். சாப்பிட்டுவிட்டுப் படத்தைப் பார்த்து முடித்ததும் படத்தின் பி.ஆர்.ஓ ஒரு போட்டோவையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் கவரில் போட்டுக் கொடுப்பார்.
சென்னை நகரத்தின் பிற திரையரங்குகளில் இல்லாத ஒரு வழக்கம் உதயத்தில் இருந்தது. இடைவேளைப் பொழுதுகளில் கழிப்பறைக்குள் ஒரு காவலாளி நிற்பார். ஒவ்வொருவரும் சரியாகச் சிறுநீர் கழிக்கிறார்களா என்று அக்கறையுடன் பார்த்துக்கொள்ள ஒரு ஆளை வேலைக்கு வைப்பார்களா என்று ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பிறகு தெரிய வந்தது. கழிப்பறைச் சுவரில் எழுதுவோரை எச்சரித்து அனுப்புவதற்காக அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். காலப் போக்கில காவலாளிகள் அதற்குச் சலித்துக்கொண்டிருக்க வேண்டும். கழிப்பறைச் சுவர்களுக்கும் மொசைக் போட்டுவிட்டார்கள்.
1997 ஆம் வருடம் மார்ச் மாதம் எனக்குத் திருமணம் நிச்சயமானது. நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் மூன்று மாதங்கள் இருந்தன. இடைப்பட்ட நாளொன்றில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படம் வெளியானது. அதன் பத்திரிகையாளர் காட்சியை உதயத்தில் வைத்தார்கள். அதற்கு முன் எப்போதும் இன்னொருவருடன் நான் சினிமாக்களுக்குச் சென்றதேயில்லை. நண்பர்களுடன் வேறு பல இடங்களுக்குப் போயிருக்கிறேன். உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திரைப்படத்தைத் தனியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற கொள்கை உள்ளவன் நான். முதல் முறையாக அதில் ஒரு மாறுதலைச் செய்ய முடிவு செய்து நேரே என் எதிர்கால மனைவியின் அம்மாவிடம் சென்று ‘உங்கள் பெண்ணை என்னுடன் சினிமாவுக்கு அனுப்ப முடியுமா? பக்கத்தில் உதயம் தியேட்டரில்தான். முடிந்ததும் நானே கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னேன்.
அவ்வளவு நல்லவனாகக் காட்சியளித்த ஒருவனை அந்தப் பெண்மணி தன் வாழ்நாளில் அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. உடனே சம்மதம் சொன்னார்.
அன்று அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, வழக்கத்துக்கு மாறாகப் பெட்டிக்கடையில் மெடிமிக்ஸ் சாம்பிள் சோப்பு வாங்கி முகமெல்லாம் கழுவி, தலை வாரிக்கொண்டு மேற்கு மாம்பலத்தில் இருந்த அவர்கள் வீட்டுக்கு என் டிவிஎஸ் 50யில் சென்றேன். அவளை அழைத்துக்கொண்டு உதயத்துக்கு வந்து அருணாசலம் பார்த்தேன். அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்பதற்காகவேனும் அந்தப் படம் நன்றாக இருந்திருக்கலாம். கிரேசி மோகன் எழுதியிருந்தும் வசனங்களில் நகைச்சுவையே இல்லாதிருந்தது. பிறகு மோகனுக்கு போன் செய்து அது குறித்து வருத்தப்பட்டபோது, ‘பாரா, சார்லி சாப்ளினே திரும்பப் பொறந்து வந்து எழுதினாலும் ரஜினி படத்துல இவ்ளதான்யா முடியும்’ என்று சொன்னார்.
என் மனைவிக்கு அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை என்னோடு பார்த்த முதல் படம் என்பதாலும் இருக்கலாம். அல்லது படம் பார்க்க சமோசா கொடுக்கிறார்களே என்ற காரணமாகவும் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. படம் முடிந்ததும் அதே நல்லவனாக அவளை பத்திரமாக அவர்கள் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டுக் குரோம்பேட்டைக்குக் கிளம்பிச் சென்றேன். ஆனால் கடைசிவரை, திருமணத்துக்கு முன்னால் அவளோடு அந்தப் படத்துக்குச் சென்றதை வீட்டில் சொல்லவில்லை. பிறகொரு நாள் என்னைக் குறித்த இதர பல உண்மைகளை உடைத்ததைப் போலவே இதையும் அவளேதான் என் வீட்டாரிடம் சொன்னாள்.
கல்கி நாள்களில் என்னைச் சந்திக்க வரும் வெளியூர் நண்பர்களைப் பெரும்பாலும் உதயம் திரையரங்கப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் சந்திப்பேன். பலநாள் பல மணி நேரம் எழுத்தாளர் சு. வேணுகோபாலுடன் அங்கே இலக்கியம் பேசிக் களித்திருக்கிறேன். அப்போது கல்கியில் அவர் மதுரைப் பிராந்திய நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி வந்து போவார்.
திடீரென்று ஒரு நாள், ‘பேசணும். வா’ என்று உதயத்துக்கு அழைத்துச் சென்றார். டீ குடித்தோம். ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.
‘அவ்ளதான்யா. இன்னியோட இந்த வேலைய விட்டுடுறேன்’ என்று சொன்னார். அதிர்ந்து போய், ஏன் என்று கேட்டேன். ஒரு நாவலின் கதைச் சுருக்கத்தைச் சொல்லி, ‘ஐடியா வந்திருச்சிய்யா. இனி இத எழுதி முடிக்கற வரைக்கும் புத்தி வேற எதுலயும் நிக்காது. வேலையெல்லாம் அப்பறம் பாத்துக்குவம். என்ன அவசரம்?’ என்றார்.
அன்று அது எனக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நாவல் எழுதுவதற்காக ஒரு நல்ல வேலையை விடுவார்களா என்று நினைத்தேன். ஆனால் வேணு விளையாட்டுக்குப் பேசவில்லை. உண்மையிலேயே ராஜிநாமா செய்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார். எழுத்தைத் தவிர இன்னொன்று முக்கியமில்லை என்ற மனநிலை எனக்கு வருவதற்கு நான் மேலும் பதினைந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
கவிஞர் விக்கிரமாதித்யன், பிரபஞ்சன், செம்பூர் ஜெயராஜ், ஜோ ஜார்ஜ், க.சீ. சிவகுமார், ம.வே. சிவகுமார், கல்கியில் அடிக்கடி எழுதும் இதர பல எழுத்தாளர்கள் – யாரும் மிச்சமில்லை. எனக்காகவே யாரோ கட்டிவைத்த திறந்த வெளி ஆபீஸ் போலத்தான் அந்தத் திரையரங்கப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வந்தேன்.
அந்நாள்களில் உதயம் திரையரங்கத்தின் சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல இடது பக்கம் ஒரு சிறிய உணவகம் இருந்தது. கீழே ஒரு ஜெராக்ஸ் கடையும் ஒரு பெட்டிக்கடையும் இருக்கும். குறுகலான படியேறி மேலே சென்றால் உணவகம். குறைந்த விலையில் தரமான சிற்றுண்டி கிடைக்கும் இடமாக அது இருந்தது. கிச்சடி என்கிற – பெரும்பாலும் சமைப்போரால் நாசமாக்கப்படும் உணவைச் சென்னையில் கற்புடன் சமைத்துக் கொடுத்த ஒரே உணவகம் அதுதான். இரவு பத்து மணிக்குப் பிறகும் கிடைக்கும். படம் பார்த்து முடித்து, உணவகத்தில் டிபனும் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தால் சுமார் ஐம்பது பேர் அந்த பிளாட்பாரத்தில் கால் நீட்டிப் படுத்திருப்பார்கள். வீடு வாசலென்று ஏதுமில்லாமல் அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, வாழ்ந்த ஒரு தலைமுறையை முழுதாகப் பார்த்திருக்கிறேன். அன்றிருந்த அந்த உணவகத்தை நடத்திக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு மீதமாகும் உணவை அவர்களுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டமே இரவு பதினொரு மணிக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் கூடி உண்பதைப் பார்த்திருக்கிறேன்.
பிறகொரு நாள் யாரோ ஒரு பிரமுகப் பிரபலம் குடித்துவிட்டுத் தாறுமாறாகக் கார் ஓட்டி வந்து அவர்கள் மீது ஏற்றிச் சிலரைக் கொன்றுவிட்டுச் சென்ற செய்தி நாளிதழ்களில் வந்தது. சில காலம் வழக்கும் நடந்தது. ஆனால் தீர்ப்பு என்னவானதென்று தெரியவில்லை.
கல்கி நாள்களுக்குப் பிறகு உதயம் தியேட்டருக்குச் செல்வது அநேகமாக இல்லாமலாகிவிட்டது. இன்று வரை கோடம்பாக்கம் போகும்போதெல்லாம் என்னையறியாமல் உதயத்தைத் திரும்பிப் பார்ப்பேன். அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வரும். ம.வே. சிவகுமார் தனது பாப்கார்ன் கனவுகள் கதையை அங்கே வைத்துத்தான் எனக்குச் சொன்னார். சொல்லும்போது அருமையாக இருந்தது. இதை இப்படியே எழுதுங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டு சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கல்கியில் அது வெளியான வடிவம் எனக்கு உவப்பானதாக இல்லை. ‘உங்கள் வாழ்வில் நீங்கள் எழுதிய ஆக மோசமான கதை இதுதான்’ என்று சிவகுமாரிடம் சொன்னேன். அதுவும் அந்த உதயம் தியேட்டர் வாசலில் வைத்துச் சொன்னதுதான்.
நான் அப்படிச் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை. கோபித்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டுப் போய்விட்டார். பிறகு பல வருடங்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருப்பதற்கு அவரே ஒரு வழியையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார். காஞ்சீபுரம் ஜெயேந்திர சரசுவதியின் அடியாள் என்று என்னைக் குறிப்பிட்டு அவர் ஒரு கட்டுரை எழுதப் போக, நக்கீரன் கோபாலும் பரீக்ஷா ஞாநியும் எங்கள் பிரிவுக்கு உதவுகிறோம் என்று தெரியாமலேயே உதவி செய்தார்கள்.
எல்லாம் பழைய கசப்புகள். ஆனால் சிவகுமாரே ஒரு நாள் நேரில் வந்து தான் நடந்துகொண்டதை மறந்துவிடும்படிக் கேட்டுக்கொண்டு பழைய பாசத்துடன் பேசிவிட்டுச் சென்றார். நட்பு புதுப்பிக்கப்பட்டதைக் கொண்டாட வேண்டுமல்லவா? உதயம் திரையரங்குக்குச் சென்று மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்தோம். படம் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஜாபர்கான்பேட்டை சரவணபவன் வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுவிட்டு, அது நன்றாக இருந்ததைச் சிலாகித்துக்கொண்டு பிரிந்தோம்.
திருமணத்துக்கு முன்னால் என் மனைவியுடன் பார்த்த படத்தை உதயத்தில்தான் பார்த்தேன் என்று சொன்னேன். திருமணத்துக்குப் பிறகு அவளுடன் பார்த்த முதல் படமும் அங்கேதான். அது நாகார்ஜுனா நடித்த ஒரு தெலுங்கு படத்தின் டப்பிங் பதிப்பு. தலைப்பு, ‘உன்னையே கல்யாணம் பண்ணிக்கறேன்.’
(பிப்ரவரி 2024 – மெட்ராஸ் பேப்பரில் வெளியானது)
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .