தொ.பரமசிவத்தின் "தெய்வம் என்பதோர்"
'தெய்மென்பதோர் சித்தமுண்டாகி' என்ற திருவாசகப் பாடலைத் தலைப்பாகக் கொண்டு தெய்வங்கள், அவற்றின் வழிபாட்டு முறைமைகள், நாட்டார் தொன்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல்."தாய்த் தெய்வம்" என்னும் கட்டுரையில் எப்படி நாட்டாரிய தெய்வங்களில் பெண் தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் அதே நேரத்தில் இன்று பெருந்தெய்வங்களாகக் கொண்டாடப்படும் வைதீக தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் பின்னுக்குத்தள்ளப்பட்டு ஆண் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் எழுதியிருப்பார். இந்தக் கட்டுரையை ராகுலின் "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலில் எப்படி தாய் வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகமாக நாம் மாறிப்போனோம் என்பதை விவரிக்கும் 'நிஷா' என்னும் ஆதித்தாய் பற்றிய அத்தியாயத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் போது முற்றிலும் புதியதோர் பரிமாணத்தை அளிக்கிறது. மிக முக்கியமான கட்டுரை.நீலிக்கண்ணீர் என்ற பதத்துக்குப் பின் இருக்கும் கதையை விளக்கும் "பழையனூர் நீலி கதை" சுவாரஷ்யமான ஒன்று.எங்கள் ஊர்களில் தீபாவளியைவிட அம்மன் திருவிழாக்களையும், ஊர்க்கொடைகளையுமே இப்போதும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். எப்போதும் எளிய மக்களின் கொண்டாட்டமாக அவையே இருந்துள்ளன. மாரியம்மன், முனியம்மன், முத்தாலம்மன், பெத்தநாச்சியம்மன் என்று ஊரில் விழா எடுக்கப்படும் தெய்வங்களை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. எல்லாமே பெண் தெய்வங்களாக இருப்பது வெறும் தற்செயல் அல்ல!இப்படியான திருநிலைப்படுத்தப்பட்ட தெய்வங்களைப்பற்றியும், பள்ளிப்படை கோவில்களைப் பற்றியும் கூறுகிறது "உலகம்மன்" கட்டுரை. பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கூட ஒரு சோழ அரசியின் பள்ளிப்படை கோவிலாக இருக்கலாம் என்பது போன்ற திறப்புகள் முக்கியமானவை.கோவில் வழிபாடுகள், திருவிழாக்கள், முதல் மரியாதைகள் - இவற்றின் மூலமாக நிலை நிறுத்தப்படும் ஜாதிய பாகுபாடுகளையும், இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தப்படும் விதம் பற்றியும் பேசும் "மரபு மீறலும்" என்னும் கட்டுரையும், பெரியாரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டியவை. இந்தக் கட்டுரைகளை முன்வைத்து எங்கள் ஊர் திருவிழாக்களை மறு பரிசீலனை செய்யும் போது ஜாதிய அடுக்குகளும், அவை தந்திருக்கும் அழுத்தமும் எத்தனை கொடுமையானது என்பதை உணர முடிகிறது. அதே நேரத்தில் இத்தனை காலமாய் இது பற்றிய சிறு பிரக்ஞையும் இல்லாதிருந்தது குறித்து வெட்கப்படவும் வேண்டியிருக்கிறது.பற்பல பக்கங்களுக்கு விரித்து எழுதுவதற்கு உள்ளடக்கம் இருக்கும் விசயங்களைக் கூட ஓரிரு பக்கக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இதுவே இக்கட்டுரைகளின் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆய்வுக் கட்டுரைகள் என்றாலும் சில பல இடங்களில் யூகங்களின் வழியே முடிவுக்கு வந்திருப்பதை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளவியலாது. ஆனால் ஓர் அமைப்போ அரசோ செய்ய வேண்டிய விசயத்தை தனியொரு ஆளாய் செய்திருப்பதற்கு தொ.ப-வுக்கு என் வணக்கங்கள்.இதற்கு முன்பு சிறுதெய்வ கோவில்களையும் அவர்களின் வழிப்பாடுகளையும் நான் அணுகிய முறைக்கும் இப்புத்தகத்தை வாசித்தப்பிறகு அவற்றை அணுகப் போகும் முறைக்கும் நிச்சயம் நிறைய வேறுபாடு இருக்கும். அதற்காக அவருக்கு என் நன்றிகள்!

Published on July 10, 2018 08:56
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
