Pa Raghavan's Blog

August 15, 2025

மெட்ராஸ் பேப்பர் – சுதந்தர நாள் விழா

Pa Raghavan

இன்று மாலை (ஆகஸ்ட் 15, 2025) ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் வார இதழ் நடத்தும் சுதந்தர நாள் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன். நிகழ்ச்சி zoom வழி நடைபெறும். விவரங்கள் மேலே காணும் அழைப்பிதழில் உள்ளன. இணைவதற்கான லிங்க், கீழே.

வருக.

நிகழ்ச்சியில் இணைவதற்கான zoom link இங்கே உள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

 

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2025 04:00

July 24, 2025

வேட்டி

Pa Raghavan

இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.

அழகாக வேட்டி கட்டிக்கொள்வோரை எனக்குப் பிடிக்கும். இடுப்பில் அதனை வெறுமனே சொருகிக்கொண்டு நாளெல்லாம் பொழுதெல்லாம் ஊர் திரிவோர் பலரை அறிவேன். பாதுகாப்பு கருதி பெல்ட் கட்டிக்கொள்பவர்கள், லுங்கி மடித்து விடுவது போல வேட்டி நுனியில் நான்கு மடிப்பு வைத்து இறுக்கிக்கொள்வோரையும் பார்த்திருக்கிறேன். வேட்டியை இடுப்பில் நிலைநிறுத்துவது ஒரு கலை என்றால், அது விலகிக் கவர்ச்சி காட்டாமல் வண்டி ஓட்டுவது இன்னும் பெரிய கலை. மேற்படி இரண்டு கலைகளிலுமே என் முயற்சிகள் படுதோல்வி கண்டிருக்கின்றன. ஏழெட்டு கழுதை வயதான பின்பும் எனக்கு வேட்டி கட்ட வரவில்லை. மீறி, கட்டிக்கொண்டு வண்டியை எடுத்தால் வீதிக்கெல்லாம் ரம்பா டான்ஸ் காட்டும்படி ஆகிவிடுகிறது.

என் மனைவிக்கு இது குறித்த வருத்தம் உண்டு. ஒரு நாள் கிழமை என்றால்கூட அரை டிராயரைப் போட்டுக்கொண்டு நிற்கிறானே என்று வருத்தப்படுவாள். தொப்பையுள்ள மற்றவர்கள் எல்லாம் வேட்டி கட்டாமலா இருக்கிறார்கள்? நீ வேண்டுமென்றே அதை நிராகரிக்கிறாய்.

இல்லை. நான் வேண்டுமென்று வேட்டி கட்டாதிருப்பதில்லை. உண்மையிலேயே எனக்கு வேட்டி இடுப்பில் நிற்பதில்லை. அது அவிழ்ந்துவிடாமல் இருப்பதற்காக இடுப்பில் மிக வலுவான அஸ்திவாரமெல்லாம் போடுவேன். மடித்து மடித்து இழுத்துச் சொருகி என்னவெல்லாமோ செய்வேன். எல்லாம் சரியாகச் செய்துவிட்டது போலத்தான் இருக்கும். ஆனால் கட்டி முடித்து வெளிப்பட்டால், பார்ப்பவர்கள் சிரிக்கும்படியாக அமைந்துவிடும். முன்புறம் சரியாகப் பாதம் மறையும் அளவுக்கு இடைவெளிவிட்டுத்தான் இடுப்பில் மடித்திருப்பேன். ஆனால் பின்பக்கம் விளக்குக் கம்பம் பார்த்த நாய் போல அது தூக்கிக்கொண்டு நிற்கும். காணச் சகிக்காது. அதை இறக்கிவிடலாம் என்று பார்த்தால் முன்புறத் தொப்பைச் சரிவில் வேட்டி விழுந்துவிடும்.

ஆ, தொப்பை. அது என் தீராத அவமானம். ஐந்து வருட காலம் படு உக்கிரமான பேலியோ டயட் இருந்து இருபத்தெட்டு கிலோ எடை குறைத்தபோதும் அது மட்டும் குறைவேனா என்று நின்று ஆட்டம் காட்டியது. வெறுத்துப் போய்தான் டயட்டையே விட்டொழித்துவிட்டுப் பழைய பாசத்தில் மத்தியப் பிரதேசத்தைச் செழிக்க வைக்கத் தொடங்கினேன். மீண்டுமொரு முயற்சியெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. எனவே, என் உருண்டு திரண்ட தொப்பையை உள்ளடக்கித்தான் வேட்டி கட்டப் பழக வேண்டும்.

இன்னொன்று. என்னைக் காட்டிலும் பெரிய தொப்பை உள்ளவர்களை அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் எல்லோரும் எளிதாக வேட்டி கட்டிக்கொண்டு வெளியே வருகிறார்கள். ஆனால் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் என் தொப்பையின் தனித்துவம் நிகரற்றது. கடம் வடிவ, தவில் வடிவத் தொப்பையர்களின் இடுப்புகளில் வேட்டி நிற்பதில் சிக்கலில்லை போலிருக்கிறது. என்னுடையது ஓர் அருவியின் உச்சிப்பாறையை நிகர்த்தது. வேட்டி என்றில்லை. பேன்ட் அணிந்தாலும் தொப்பைக்கு மேலே நிற்காமல் சரிந்து விழும். பேன்ட்டுக்கு பெல்ட் போட்டு இறுக்கினாலும் சரிந்துதான் விழும்.

இதனைத் தவிர்க்க இரண்டு வித உத்திகளைக் கையாள்கிறேன்.

1. தொப்பைக்குக் கீழே அணியும் வகையில் மெலிதான எலாஸ்டிக் தன்மை கொண்ட ஜீன்ஸ் பேன்ட்களை மட்டும் அணிகிறேன்.

2. அதி அவசியம் இல்லாத மீட்டிங்குகளுக்கு பேன்ட் அணிந்து செல்வதேயில்லை. எங்கும் எப்போதும் எலாஸ்டிக் வைத்த அரை டிராயர்தான்.

பேன்ட்டுக்கே இந்த நிலைமை என்றால் வேட்டி எப்படி? அதுதான் தெரியவில்லை.

சிறு வயதுகளில் இந்த அளவு தொப்பையெல்லாம் எனக்கில்லை. ஆனாலும் நானொரு வளரும் பிள்ளையாகவே அப்போதும் இருந்தேன். அக்காலங்களில் கட்டம் போட்ட லுங்கிகளே என் விருப்பமான வீட்டு உடையாக இருந்தது. ஒரு சம்பவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அப்போது நான் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு விடுமுறைக் காலம் என்று நினைவு. வீட்டில் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு இங்குமங்கும் திரிந்துகொண்டிருந்த சமயத்தில், திருக்கண்ணபுரத்தில் இருந்து என் அப்பாவின் மாமா எதிர்பாராமல் வந்தார். மிகவும் வயதானவர். சௌரிராஜப் பெருமாள் கோயிலில் பணியாற்றுபவர். படு பயங்கர ஆசாரசீலர். வீட்டு வாசலில் நின்று கண்ணை இடுக்கி, புருவத்துக்கு மேலே விரல்களைக் குவித்து என்னைப் பார்த்தார். சரியான வீட்டுக்குத்தான் வந்திருக்கிறோமா, முகவரி மாறிவிட்டோமா என்கிற சந்தேகத்தில் பார்ப்பது போலத் தெரிந்தது. எனக்கு அவரை அடையாளம் தெரிந்தது. எனவே வேகமாக வாசலுக்குச் சென்று வரவேற்றேன்.

‘இருக்கட்டும் இருக்கட்டும். பார்ஸார்தி இருக்கானா?’ என்றார்.

‘உள்ள வாங்க. இப்ப வர்ற நேரம்தான்’ என்று சொன்னேன்.

ஓரிரு நிமிடங்களுக்குள்ளாகவே அப்பா வந்துவிட்டார் என்றாலும் அவர் தலையைக் காணும் வரை அம்மனிதர் வீட்டுக்குள் காலெடுத்து வைக்கவேயில்லை.

பிறகு அப்பாவிடம் சொன்னார், ‘உம்பிள்ள உள்ள வான்னுதான் கூப்ட்டான். ஆனா கைலி கட்டிண்டிருந்தானா, கொஞ்சம் தெகச்சுப் போயிட்டேன்.’

வாசகசாலை அருண்

லுங்கி அநாசாரம் என்று தெரிந்த பின்பு அதன்மீது இன்னும் பாசம் அதிகமாகிப் போனது. 2004 ஆம் ஆண்டு வரை வீட்டில் லுங்கிதான் அணிந்து வந்தேன். கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்து, அங்கே பணியில் சேர்ந்த பின்புதான் அரை டிராயர் அறிமுகமானது. அரை டிராயருடன் ஆபீசுக்கும் வரலாம் என்று நல்வழி காட்டி அதைத் தானே தொடங்கி வைத்தவர் பத்ரி. பத்ரியிடம் கற்பதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு. நான் அரை டிராயர் அணிந்து எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம் என்பதை மட்டும் கற்றேன்.

இன்றுவரை அதுதான் என் உடையாக உள்ளது. இடுப்பில் இருப்பதே தெரியாது. வியர்க்காது. மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை பார்க்கலாம். அப்படியே கிளம்பி வெளியே போகலாம். என் தொப்பை அங்கீகரித்த ஒரே ஆடை அதுதான்.

செல்வேந்திரன், வாசகசாலை அருண் போன்ற எழுத்துலக நண்பர்கள் அழகாக வேட்டி கட்டிக்கொண்டு விழாக்களுக்கும் புத்தகக் காட்சிகளுக்கும் வரும்போது சிறிது ஏக்கமாகப் பார்ப்பேன். சிலதெல்லாம் ஏக்கமாகவே நீடித்திருப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டுவிடுவேன்.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2025 17:30

July 21, 2025

கருவி(யி)ன் குற்றம்

Pa Raghavan

சிறிய விஷயங்களில் சிறப்பாக விளக்கு பெறும் கலையில் நான் விற்பன்னன்.

ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ் கீழே விழுந்துவிடும். அல்லது திருகும் வேகத்தில் பாடுவது நின்றுவிடும். திருக வேண்டாம்; சொருகினால் போதும் என்பது தெரியும். ஆனால், உலகுக்கே ஒழுங்காக வேலை செய்யும் அக்கருவி எனக்கு மட்டும் செய்யாது. இதனாலேயே ஆப்பிள் ஏர்பாட் வாங்கும் ஆசையை நிரந்தரமாகத் தவிர்த்திருக்கிறேன்.

பல்லாண்டுக் காலமாக ஒரு சோனி வயர்ட் ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் நடைப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அது ஏற்கெனவே மண்டை பெருத்த மகாதேவனான என் சிரத்தைத் திரிசிரமாக்கிக் காட்டும். பிராந்தியமே என்னை ஒரு வினோத ஜந்துவைப் போலப் பார்க்கும். ஒரு கட்டத்தில் அது நடையை பாதிக்கத் தொடங்கியதால் பாட்டு கேட்பதை நிறுத்திவிட்டு, கிண்டிலை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் முப்பது, நாற்பது பக்கங்கள் படிக்க முடிந்தது. ஆனால் நடந்து முடித்ததும் வழக்கத்தினும் களைப்பாகிவிடும். சரிப்படவில்லை.

என் மனைவி பலநாள் போதனை செய்து, திட்டி, சொல்லிக் கொடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வசதியுள்ள ப்ளூடூத் இயர்போனைப் பழக்கினார். இதில் ஒரு சௌகரியம் என்னவெனில், காதுக் குமிழ் கீழே விழுந்தாலும் கருவி தரையில் விழுந்து மாளாது. கழுத்தில் மாட்டிக்கொண்டு புன்னகை மன்னன் கமலைப் போலத் தொங்கும்.

கல்லூரி மாணவியான என் மகள் ஐடி கார்டுடன் இதனையும் நிரந்தரமாகவே கழுத்தில் அணிந்துகொண்டு இருப்பதையும் அவளையொத்த பிற மாணவர்களும் இவ்வண்ணமே செய்வதையும் பார்த்து சிறிது நம்பிக்கை வந்தது. அவள் உபயோகித்துக் கடாசிய இயர்போன் ஒன்றை மாட்டிக்கொண்டு நடைப் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினேன்.

என் காதில் அப்படி என்ன பிரச்னை என்று உண்மையிலேயே தெரியவில்லை. பத்தடிக்கு ஒருமுறை அது கழண்டு விழுந்துகொண்டே இருந்தது. இருப்பினும் விடா முயற்சியின் காரணமாக ஏதோ ஒரு நன்னாளில் அது என் காதுகளின் காதலை ஏற்றுக்கொண்டு தங்கத் தொடங்கிவிட்டது. சொகுசாகப் பாட்டு கேட்டுக்கொண்டு நல்லபடியாகத்தான் நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென ஒருநாள் அக்கருவி மரணத் தறுவாயை அடைந்தது. முழு சார்ஜ் ஏற்றினாலும் முதல் பாடலின் பாதியிலேயே எவனோ ஒரு தென்னமெரிக்கன் வந்து விடைபெறுகிறேன் நண்பனே என்று இசுப்பானியத்தில் சொல்லிவிட்டுச் செத்துவிடுவான்.

சரி, வேறு வாங்கலாம் என்று நினைத்தபோது அட்மின் ஆனவர் மறுத்தார். மகளிடம், பயன்படுத்தாத ஏர்டொப் 441 என்னும் ப்ளூடூத் கம்மல் உள்ளது. அதன் கோவிந்தா மஞ்சள் நிறம் பிடிக்காமல் (நான் வாங்கித் தந்ததுதான்) அவள் இன்னொரு வசதியான கம்மல் வாங்கிவிட்டதால் இந்தப் பழைய நிராகரிக்கப்பட்ட நீலப்பல் கம்மலை அணிந்துகொண்டுதான் நான் நடைக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவானது.

இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது. அதுகூடப் பரவாயில்லை. என் கைபேசியுடன் pare ஆகிற விஷயத்தில் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்ளும். சில நாள் அதன் செல்லப்பெட்டியைத் திறக்கும்போதே பேசியுடன் இணைந்துகொள்ளும். சில நாள் புரட்டிப் போட்டு அடித்தாலும் இணையாது. வேறு வழியின்றி கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்தில் உள்ள மகளிடமே சென்று நிற்பேன். அவள் தொட்டால் மட்டும் உடனே இணையும் பித்தலாட்டத்தை அது எங்கிருந்து கற்றது என்று தெரியாது.

இணைவது ஒரு பிரச்னை என்றால் முன்சொன்ன, நடக்கும்போது நட்டுக்கொண்டு விழும் பிரச்னைக்கு அவளாலும் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த சில மாதங்களாகப் பாட்டுக் கேட்கவோ, தொலைபேசியில் யாருடனாவது பேசிக்கொண்டோ நடப்பதே பெரும் பிரச்னையாக இருந்தது. காதில் உள்ள உருளைக்கிழங்கு போண்டா கீழே விழுந்துவிடாதிருப்பது குறித்து மட்டுமே சிந்தித்தபடி நடப்பது ஒரு பெருங்கொடுமை.

தாங்கவே முடியாமல் அமேசானில் ஒரு நீலநிறத் தாலியை ஆர்டர் போட்டேன் (JBL Tune 215BT) மூவாயிரம் விலை. ஐம்பது சதமானத் தள்ளுபடி. மேலுக்கு அமேசான் பே க்ரெடிட் கார்ட் உபயோகித்து நான் சேகரித்து வைத்திருந்த 960 ரூபாயைக் கழித்துக்கொள்ளச் சொல்லி, ரூபாய் 539க்கு பேரத்தை முடித்தேன். அது சில மாதங்கள் ஒழுங்காகப் பாடியது. ஆனாலும் என்ன? இந்த இரண்டு கே கிட்டுகள் பயன்படுத்தும் எந்த ஓர் உபகரணமும் என் காதில் ஏற மறுக்கிறது. அப்படியே ஏறி உட்காரும் கருவி வேறு விதங்களில் இம்சிக்கிறது. உதாரணமாக ஒரு நல்ல படே குலாம் அலிகான் கஸல் கச்சேரியைப் பத்து நிமிடங்கள் வலப்புறக் காதிலும் அடுத்த ஐந்து நிமிடங்கள் இடப்புறக் காதிலுமாக மாற்றி மாற்றி உங்களால் கேட்க முடியுமா? நான் ஆசைப்பட்டு வாங்கிய காதுக் கருவி அப்படித்தான் இசையைப் பகுப்பாய்வு செய்து கொடுத்தது.

வெறுத்துப் போய் அதையும் தூக்கி எறிந்தேன். மண்டை பெருத்த மகாதேவன்களுக்கு ஹெட்செட்களே சரி. இரண்டு காதுகளிலும் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடிகளைப் போல அழுத்தி மூடிக்கொண்டு தலைக்கு மேலே பெண் குழந்தைகள் அணியும் ஹேர் பேண்டையே சற்றுப் பட்டையாகப் பொருத்தினாற்போல மாட்டிக்கொண்டு நடக்கிறேன். கால மாற்றத்தால் இப்போது ஒயர் தேவைப்படுவதில்லை. எல்லாம் நீலப் பல். எல்லாம் வசதியாகவே இருக்கிறது.

என்ன ஒன்று, எப்போதும் சார்ஜ் போட மறந்துவிடுகிறேன். அதுவும் எப்போது உயிரை விடப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் சாவதில்லை என்பதால் வாரத்தில் ஒரு நாளாவது ஹெட் செட் என்பதை ஒரு செட் ப்ராபர்ட்டியாக மட்டுமே சுமந்துகொண்டு நடக்க வேண்டியதாகிவிடுகிறது.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 17:30

July 20, 2025

பராமரிப்புக் கலை

Pa Raghavan

பராமரிப்புக் கலையில் முனைவர் பட்டத்துக்கும் மேம்பட்ட ஒன்று உண்டானால் நியாயமாக அதை எனக்குத்தான் தர வேண்டும். நட்போ, உறவுகளோ, கருவிகளோ, அட என்னை நானே பராமரித்துக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சல்லி பெற மாட்டேன். அப்பேர்க்கொத்த உத்தமோத்தமன்.

முன்னொரு காலத்தில் எல்லா இந்தியர்களையும் போல விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய அடாவடித்தனம் சகிக்காமல் ஒவ்வொரு டப்பாவும் சுருண்டு சுருண்டு செத்து விழுந்துகொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிதானமே கிடையாது. வேகம், வேகம், பேய் பிசாசுகளை விஞ்சும் வேகம். ஒரு அப்ளிகேஷனைத் தொட்டு, அது திறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நான்கைந்து வினாடிகளைக் கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. திறப்பதற்கு முன்பே க்ளோஸ் செய்துவிட்டு இன்னொன்றைத் திறப்பேன். அதுவும் வரவில்லையா? உடனே வேறொன்று. அரை நிமிட அவகாசத்தில் பத்திருபது அப்ளிகேஷன்களைத் திறக்கப் பார்த்தால் எல்லாம் சேர்ந்து கூழாகாமல் என்ன செய்யும்? உடனே ரீ ஸ்டார்ட். இது நாட் ரெஸ்பாண்டிங், அது நாட் ரெஸ்பாண்டிங் என்று செய்தி வந்துகொண்டே இருக்கும். உடனே ஓங்கி ஒரே குத்து. பவர் பட்டன் பஞ்சராகிவிடும்.

cache க்ளியர் செய்ய மாட்டேன். ரீ சைக்கிள் பின்னை காலி செய்ய மாட்டேன். பேட்டரியை கவனிக்கவே மாட்டேன். திறந்த அப்ளிகேஷன் எதையும் மூட மாட்டேன். டிஸ்க் டீஃப்ராக்மெண்ட் செய்ய மாட்டேன். வைரஸ் ஸ்கேனர் ஓட்ட மாட்டேன். கோப்புகள் எதையும் ஒழுங்காகப் பராமரிக்க மாட்டேன். ஒரு பிரதிக்கு நூறு வர்ஷன் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஃபோல்டரில் இருக்கும். ரகசிய கசமுசா ஃபைல் என்னவாவது இருக்குமானால் அதை சி டிரைவில் விண்டோஸ் பேட்டைக்குள் இருக்கும் ப்ரோக்ராம் ஃபைல்ஸ் என்னும் போல்டருக்குள் போட்டு வைப்பேன். செய்யாத அக்கிரமம் இல்லை. இதனால் எப்பேர்ப்பட்ட கம்ப்யூட்டர் வாங்கினாலும் மிக விரைவில் அது என்னிடம் வீர மரணம் அடைந்தே தீரும்.

எவ்வளவுதான் புதிதாக வாங்குவது? எதில்தான் திருப்தி அடைவது? அல்லது எதுதான் இறுதி வரை எனக்குத் தோள் கொடுக்க முன்வரும்? என்ன அடித்தாலும் தாங்கும் காட்டெருமைத்தனம் மிக்க லெனோவோ திங்க் பேடால்கூட என் கோணங்கித்தனங்களை வெல்ல முடிந்ததில்லை. குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு டிசம்பரில் என்னுடைய முதல் கம்ப்யூட்டரை வாங்கினேன் (அசெம்பிள்டு செட். பெண்டியம் 3 ப்ராசசர். விண்டோஸ் 5 ஆப்பரேடிங் சிஸ்டம். பூரண கர்ப்ப ஸ்திரி மாதிரி முதுகு புடைத்துக்கொண்டிருக்கும்). பிறகு ஒரு ஹெச்பி, இரண்டு லெனோவோ திங்க் பேட், ஒரு லெனோவோ ஐடியா பேட், ஒரு சாம்சங் நெட் புக். இவை சொந்தமாக வாங்கி உபயோகித்தவை. போதாக் குறைக்கு அலுவலக லேப்டாப்கள்.

எதுவும் சரிப்பட்டு வராமல் வெறுத்துப் போய் 2012ம் ஆண்டு விண்டோஸைத் தலை முழுகிவிட்டு ஆப்பிளுக்கு முழுதாக மதம் மாறினேன். அதன் பிறகு முதல் ஆறு ஆண்டுகள் ஒரு மேக் புக் ஏருடன் சிக்கலின்றிக் குடும்பம் நடத்த முடிந்தது. அதற்கு மேல் அதனால் முடியவில்லை. எனவே, போட்டுவிட்டு தகதகவென மின்னும் ரோஸ் கோல்ட் நிறத்தில் கையடக்கமாக ஒரு மேக் புக் வாங்கினேன். ஆனால் ஆப்பிள் அப்போது அறிமுகப்படுத்தியிருந்த பட்டர் ஃப்ளை மெக்கானிசம் என்னும் தட்டச்சுத் தொழில்நுட்பம் எனக்கு ஒத்து வரவில்லை. சில மாதங்கள் அதனுடன் போராடிப் பார்த்து, வெறுத்துப் போய் அதைக் கொடுத்துவிட்டுப் பழைய மேக் புக் ஏர் மாடலையே மீண்டும் வாங்கினேன் (2017). ஒன்றிரண்டு மாத இடைவெளியில் இன்னொரு மேக் புக் ஏர். ஒன்று வீட்டுக்கு. இன்னொன்று அலுவலகத்துக்கு. மனைவிக்குப் பிறகு நான் மாற்றாமல் வைத்துக்கொண்டிருக்கும் இரண்டாவது ஆத்மா இதுதான்.

இதுவரை வாசித்ததில், இவன் பெரும் பணக்காரன் என்னும் எண்ணம் வந்திருக்குமானால் அதை முதலில் அழுத்தித் துடைக்கவும். எல்லா தமிழ் எழுத்தாளர்களின் பொருளாதார நிலைமை என்னவோ, அதுதான் என்னுடையதும். மற்றவர்கள் சாப்பிட ஆகும் செலவு போக மீதமுள்ளதை வங்கியில் வைப்பார்கள். சீட்டுப் போடுவார்கள். ஷேர் வாங்குவார்கள். நவீன எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் க்ரிப்டோ கரன்சியில் எல்லாம் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். எதற்கும் துப்பில்லாத நான் கம்ப்யூட்டர் வாங்கியே வீணாய்ப் போனவன்.

நிற்க. மேக்குக்கு மாறிய பின்பு கருவியுடனான என்னுடைய துவந்த யுத்தத்துக்கு மிக நிச்சயமாக ஒரு முடிவு கிடைத்தது. விண்டோஸில் அனுபவித்த எந்தச் சித்திரவதையும் இதில் நிச்சயமாக இல்லை. குறிப்பாகக் கருவி தூக்கில் தொங்குவது என்னும் நடைமுறை மேக்கில் கிடையாது. பேட்டரி போய்விடும் அவலம் கிடையாது. குறைந்தது எட்டு மணி நேரம் நின்று ஆடும் அல்லது ஓடும். எழுதுவதைச் சேமிக்காவிட்டால் இழக்க நேரும் அபாயம் இதில் இல்லை. தினசரி லாகின், லாக் அவுட் சடங்கு சம்பிரதாயங்கள் கிடையாது. (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்தால் அதிகம்.) எந்தச் செயலியைத் தொட்டாலும் கணப் பொழுதில் திறக்கும். திறந்த கணத்தில் விட்ட வேகத்தைக் குறையாமல் தொடரலாம். அனைத்திலும் முக்கியம் – வாங்கிய நாள் முதல் சர்வீசுக்குக் கொடுப்பது அல்லது இஞ்சினியரை அழைத்து ரிப்பேர் பார்ப்பது என்ற ஒன்று அறவே இருந்ததில்லை. வாழும் வரை உழைக்கும். உயிரை விடும்போது தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்றை வாங்கிவிட வேண்டியதுதான்.

இதனை இவ்வளவு விலாவாரியாகச் சொல்ல ஒரு காரணம் உண்டு. என்னைப் போன்ற அராஜகவாதிக்கே இவ்வளவு விசுவாசமாக இது உழைக்கிறது என்றால், கம்ப்யூட்டரை ஒழுங்காகப் பராமரிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்படி உழைக்கும்!

ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு சௌகரியம் என்னவெனில், பராமரிப்பு என்பது இதில் ஓர் எளிய செயல். இரண்டு மூன்று டிரைவ்கள் அமைத்துக்கொண்டு ஆப்பரேடிங் சிஸ்டம் ஒரு டிரைவிலும் நமது இதர சேகரங்களை இன்னொரு டிரைவிலும் போட்டு வைக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே ஜனதா டிரைவ்தான். நாம் என்ன பெயர் கொடுத்து முதல் முதலில் யூசர் ஐடி உருவாக்குகிறோமோ, அந்தப் பெயரில் ஒரு ஃபோல்டர் உருவாகும். நமது சரக்குகள் அனைத்தும் அதில் சேகரமாகும். கூகுள் டிரைவ், ஒன் டிரைவ், டிராப் பாக்ஸ் என்று நமது மேகச் சேமிப்புக் கிடங்குக் கணக்கை அந்த ஃபோல்டருடன் இணைத்துவிட்டால், நாம் சேர்க்கச் சேர்க்க அது பாட்டுக்கு அங்கே ஸிங்க் ஆகிக்கொண்டிருக்கும். அதில் பராமரிப்புக்கு வேலையே இருக்காது.

எங்கே கவனிக்க வேண்டுமென்றால், டவுன்லோட் ஃபோல்டர். ஸ்கிரீன் ஷாட் ஃபோல்டர். ஸ்கிரீன் கேப்சர் ஃபோல்டர். இடத்தைப் பிடுங்கும் பிடாரிகள் இவைதாம். பிறகு cache ஃபோல்டர்.

விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் வள்ளலாக இப்போதெல்லாம் முந்நூறு ஜிபி, ஐந்நூறு ஜிபி, ஒரு டிபி ஹார்ட் டிரைவ் ஸ்பேஸ் தருகிறார்கள். மேக்கில் அந்தளவு இடம் வாங்குவதென்பது போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டுவதற்குச் சமம். நம் சொத்து மட்டுமின்றி அக்கம்பக்கம் நாலு வீட்டு சொத்தையும் கேட்டு வாங்கி அழித்துவிடுவது போன்றது. நான் இதுவரை 128 ஜிபி மேக்குக்கு மேல் சிந்தித்ததே இல்லை. அதில் மூன்றில் ஒரு பங்கை ஆப்பரேடிங் சிஸ்டம் எடுத்துக்கொள்ளும். வேறொரு பங்கை ஆப்புகள் எடுத்துக்கொள்ளும். எல்லாம் போக நமக்கு மீதமாகும் இடத்தில் முதல் ஆறு மாதங்கள் வேண்டுமானால் சிக்கலின்றி வாழலாம். அதன் பிறகு ஆரம்பித்துவிடுவான். யுவர் சிஸ்டம் இஸ் ரன்னிங் அவுட் ஆஃப் ஸ்பேஸ்.

இதனைத் தவிர்க்க இரண்டு காரியங்களை அவசியம் செய்ய வேண்டும். முதலாவது முன் சொன்ன டவுன்லோட், ஸ்கிரீன் ஷாட், ஸ்கிரீன் கேப்சர் ஃபோல்டர்களை வாரம் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு காலி செய்வது. இரண்டாவது, கம்ப்யூட்டரில் சொத்து சேகரிக்காமல் க்ளவுடில் சேகரித்துக்கொண்டு, அதை இழுத்து வேலை செய்கிற களமாக மட்டும் டப்பாவை வைத்துக்கொள்வது.

முன்னொரு காலத்தில் நான் விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்தபோது டி டிரைவில் நான் எழுதிச் சேர்ப்பவை, ரெஃபரன்ஸ் குறிப்புகள், பிடிஎஃப்கள், போட்டோக்கள் போன்றவற்றை வைத்திருப்பேன். ஈ என்று ஒரு டிரைவ் திறந்து அதில் உலக சினிமாக்கள், கவுண்டமணி செந்தில் காமெடி விடியோக்கள், இளையராஜா பாடல்கள் போன்றவற்றைப் போட்டு வைப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் எஃப் என்று இன்னொரு டிரைவைத் திறந்து அதை ஒரு ரீசைக்கிள் பின்னாகவே பயன்படுத்தி வந்தது நினைவுக்கு வருகிறது. மேக்குக்கு மாறிய பின்பு அதெல்லாம் அறவே இல்லை. சிக்கனமான ஒரு பெட்ரூம் வீட்டில் வசிக்கிற மனநிலை இருக்க வேண்டும். எதுவானாலும் கிளவுடில் மட்டும். கிளவுடில் சேர்த்து வைக்கும் அளவுக்கு முக்கியமில்லை என்றால் கையோடு அழித்துவிடுவது. முன்னைப் போல் இப்போது திரைப்படங்கள், பாடல்களைச் சேர்த்து வைக்கும் அவசியமின்றி அனைத்தும் இணையத்தில் எப்போதும் கிடைத்துவிடுவதால் இயல்பாகவே அது சார்ந்த இடப் பிரச்னை இல்லாமல் போய்விடுகிறது.

மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது. ஆப் ஸ்டோரில் இல்லாத பல ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களும் இருக்கின்றன. அவற்றை அந்தந்த மென்பொருள்களுக்கான தளத்தில் இருந்தோ, மொத்தமாக மென்பொருள் கிடைக்கும் மேக் மூர் மார்க்கெட்டுகளில் இருந்தோ பெறலாம். என்ன சிக்கல் என்றால், இவற்றால் நம் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்னை வருமானால் அதற்கு ஆப்பிள்காரன் பொறுப்பேற்க மாட்டான். அவன் கடைச் சரக்குகளை மட்டுமே பயன்படுத்தி, நம் கம்ப்யூட்டரை ஒரு கற்புக்கரசியாகப் பராமரித்து வந்தோமானால், தப்பித் தவறி ஏதாவது பிரச்னை வந்து சிகிச்சைக்குக் கொண்டு சென்றால் சர்வீஸ் செண்டரில் வேலை சுமூகமாக நடந்துவிடும்.

செலவு வைக்காத வரை ஆப்பிள் கம்ப்யூட்டர்களைப் போல சமத்து வேறில்லை. ஒரு ரிப்பேர் என்று கொண்டு போக நேர்ந்துவிட்டால் கூசாமல் சொத்தை எழுதி வாங்கிவிடுவான். இதனாலேயே நான் ஆப் ஸ்டோரில் இல்லாத மென்பொருள்களைப் பரீட்சைக்குக் கூட டவுன்லோட் செய்வதில்லை. க்ராக்டு வர்ஷன் என்று எதையும் என் பெட்டிக்குள் ஏற்றியதில்லை.

நீங்கள் புதிதாக ஒரு ஆப்பிள் மடிக்கணினி வாங்குகிறீர்கள் அல்லது இப்போதுதான் ஆப்பிளுக்கு மாறுகிறீர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு பின் வரும் விதிகளைப் பின்பற்றுங்கள். இவை உங்கள் கருவியின் ஆயுட்காலத்துக்குள் சுகக் கேடுகள் வராமல் காக்க உதவும்.

1. கம்ப்யூட்டரை எப்போதும் ப்ளக்கில் சொருகி சார்ஜ் ஆகிக்கொண்டே இருக்கும்படி வைக்காதீர்கள். ஒரு முழு சார்ஜ் ஏற்றினால் அடுத்தப் பத்து மணி நேரங்களுக்கு ஒயரைப் பிடுங்கிப் போட்டுவிட வேண்டும். இதுதான் நீடித்த பேட்டரி வாழ்வுக்கு உதவும். வேலை செய்யும் நேரம் முழுதும் சார்ஜ் ஆகிக்கொண்டே இருப்பது கருவிக்கு சுகக் கேடு தரும்.

2. டீஃபால்ட்டாக வருகிற Mail என்கிற மின்னஞ்சல் மென்பொருளை முதல் வேலையாக டெலீட் செய்யுங்கள். அவுட்லுக் போன்ற வெளியார் சரக்குகளையும் டவுன்லோட் செய்யாதீர்கள். அஞ்சல்கள் பெட்டிக்குள் ஆஃப்லைனில் இருந்தே தீரவேண்டும் என்கிற அவசியம் இப்போதோ, இனி வரும் காலத்திலோ இல்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு வருகிறவற்றை இன்னொரு ஐடிக்கு (உருவாக்கி) ஃபார்வர்ட் ஆகும்படி மட்டும் செய்து வைத்துக்கொண்டால் போதும். மேக்கில் அநியாயமாக இடம் அடைப்பதில் இதற்கு நிகரே கிடையாது.

3. ஆப்பிள் இலவசமாகத் தருகிற பேஜஸ், டெக்ஸ்ட் எடிட் என்கிற இரண்டு எழுது மென்பொருள்களும் திராபையர் குலத் திலகங்கள். மைக்ரோசாஃப்ட் வேர்ட் போலவே இடம் அடைக்கும் குண்டர்களும்கூட. எனவே டப்பா கைக்கு வந்ததும் அந்த இரண்டையும் கண்ணை மூடிக்கொண்டு டெலீட் செய்துவிடுங்கள். லிப்ரே ஆபீஸ் என்கிற பூஜா ஹெக்டேவை நிகர்த்த ஒல்லி தேக ஓப்பனாபீஸ் மென்பொருளை டவுன்லோட் செய்து, அதில் எழுதுங்கள். இலவசம் என்பது தவிர, எழுதும் அனுபவமும் பரம சுகமாக இருக்கும். எம்.எஸ். வேர்டைவிட வேகமாகத் திறக்கும். துரிதமாக இயங்கும். பவர் பாயிண்ட், எக்செல் உள்ளிட்ட ஆபீஸ் சமாசாரங்கள் அனைத்தும் இதில் உண்டு. பயன்பாடும் மிக எளிதாக இருக்கும். (நான் இதனினும் மெலிதான simple text என்னும் டெக்ஸ்ட் எடிட்டரை உபயோகிக்கிறேன். ப்ளைன் டெக்ஸ்டாக எழுதிக்கொண்டு விடுவது. பிறகு தேவைப்பட்டால் லிப்ரே ஆபீஸில் போட்டு .docx எக்ஸ்டென்ஷன் கொடுத்துக்கொண்டால் வேலை முடிந்தது.)

4. ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்குப் பொதுவாக வைரஸ் தாக்குதல் வராது என்பார்கள். ஆனால் மால்வேர்-ஸ்பைவேர் தாக்குதல்கள் இன்று அண்ட சராசரம் முழுதும் உண்டு. Cleanup my system என்றொரு இலவச மென்பொருள் ஆப் ஸ்டோரில் உள்ளது. இலவசம் என்கிற பெயரில் வேறு பல மென்பொருள்கள் உண்டென்றாலும் அவன் ஒரு ஸ்கேன் மட்டும் செய்துகொடுத்துவிட்டு, மொத்த க்ளீனிங்குக்குக் காசு கொடுத்து வாங்கு என்பான். வேண்டாம். மேற்படி cleanup my system முற்றிலும் இலவசமானது மற்றும் நம்பகமான வேலைக்காரனும்கூட. வாரம் ஒருமுறை இதனை ஓடவிட்டு சுத்தம் செய்வது சிறப்பு. தேவையற்ற குப்பைகள் அனைத்தையும் அடையாளம் காட்டிவிடும்.

5. ஆட்டமேடிக் அப்டேட் எப்போதும் ஆனில் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும். அப்டேட்டுகளைத் தவிர்ப்பதோ, தள்ளிப் போடுவதோ நல்லதல்ல. வருடம் ஒருமுறை கட்டாய திவசம் செய்வது போல ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் அப்டேட் வரும். அதை மட்டும் பத்திருபது நாள் தாமதித்துச் செய்வது உசிதம். எப்படியும் அப்டேட் வந்ததும் அதில் இது சரியில்லை; அது சரியில்லை என்று லட்சக் கணக்கில் புகார்கள் போகும். கம்பெனிக்காரனும் ஒரே மாதத்தில் 12.3.1, 12.3.2 என்று வாரம் ஒரு புள்ளி வைத்துக் கோலம் போடுவான். அப்போது டவுன்லோட் செய்து கொண்டால் போதும்.

6. ஆப்பிள்காரனிடம் உள்ள ஒரே பிரச்னை, அவன் தருகிற க்ளவுட் ஸ்டோரேஜ் இடம் மிகவும் குறைவு. ஐந்து ஜிபியை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. காசு கொடுத்து இடம் வாங்கு, வாங்கு என்று உயிரை எடுப்பான். ஆனால் வாங்காதீர்கள். க்ளவுட் ஸ்டோரேஜுக்கு இவனைவிட கூகுள் சிறந்தவன். நூறு ஐடி உருவாக்கிக்கொண்டு எல்லா இடங்களிலும் போட்டு வைக்கலாம். காசு கொடுக்கத் தயார் என்றால், கூகுளைவிட ஒன் டிரைவ் சிறந்தது. ஒரு டிபி இடத்தோடு, மொத்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களையும் லைசென்ஸுடன் தருவான். டிராப் பாக்ஸிலும் பேப்பர், டிஜிட்டல் சிக்னேச்சர் போன்ற சௌகரியங்கள் பெய்ட் வர்ஷனில் உண்டு. வசதிப்படித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

7. osxdaily.com என்றொரு பத்திரிகை இருக்கிறது. இந்தப் பத்திரிகையின் தனிச் சிறப்பு, எல்லா கட்டுரைகளின் தலைப்பும் How to என்றே ஆரம்பிக்கும். மேக் பயனர்களுக்கு வரக்கூடிய அனைத்து விதமான பிரச்னைகள், சந்தேகங்களுக்கும் மிக நிச்சயமாக இதில் பதில் இருக்கும். நிறைய டிப்ஸ் & டிரிக்ஸ் தருவான். ஆப்பிள் ஃபோரங்களில் கேள்வி கேட்டு பதில் வந்து சேர்வதற்குள் இங்கே ஒரு தட்டுத் தட்டித் தேடினால் சட்டென்று பதில் அகப்பட்டுவிடும்.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். நான் விண்டோஸ் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில்கூட எனக்கு நேர்ந்த அனைத்து சிக்கல்களுக்கும் மூலக் காரணம் கண்ணில் பட்ட அனைத்து ரகக் கண்ணராவி மென்பொருள்களையும் தராதரம் பாராமல் இழுத்துப் போட்டுக் கொண்டதுதான். அந்த வெறியை மட்டும் வென்றுவிட்டால் போதும். இப்போதெல்லாம் தேவையற்ற ஒரு மென்பொருளைக் கூட கம்ப்யூட்டருக்குள் வைத்துக்கொள்வதில்லை. ஒரு முழு மாதம் ஒரு மென்பொருளைத் தொடவே இல்லை என்று தோன்றினால் உடனே டெலிட் செய்துவிடுகிறேன். எப்போது தேவையோ அப்போது திரும்பவும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இலவசமோ, காசு கொடுத்து வாங்கியதோ, எல்லாமே ஆப் ஸ்டோருக்குள்தான் என்பதால் நம் சரக்கு எங்கும் ஓடிப் போய்விடாது. அங்கேயேதான் இருக்கும்.

புற க்ளீனிங் குறிப்புகள்:

1. லேப்டாப் க்ளீனிங் கிட் என்று அமேசானில் தேடினீர்கள் என்றால் அருமையான பல சங்கதிகள் அகப்படும். சுத்திகரிப்பு திரவம் முதல் துடைக்கும் துணி வரை அதில் இருக்கும். முந்நூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை விலை சொல்லுவான்.

2. இதற்கெல்லாமா காசு செலவழிப்பது என்று என்னைப் போல் நினைப்பீர்கள் என்றால் என் வழியைச் சொல்கிறேன். வருடம்தோறும் மூக்குக் கண்ணாடி மாற்றும்போது கடைக்காரன் கொடுக்கும் கண்ணாடி க்ளீனிங் திரவம் மற்றும் வெல்வெட் துணித் துண்டுகளைச் சேகரித்து வைப்பேன். அவற்றைக் கொண்டு லேப்டாப் துடைப்பேன்.

3. பழைய ஷேவிங் பிரஷ்ஷைக் கொண்டு கீபோர்டை சுத்தம் செய்வது எளிது. ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போதும் ஷேவிங் பிரஷ்ஷால் பரபரவென நாலு இழுப்பு இழுத்தால் போதும். தூசு தும்புகள் இல்லாமலாகிவிடும்.

3A. Key Pad-இல், ஒவ்வொரு கீக்கும் இடைப்பட்ட வெளியில் சேரும் அழுக்கை நீக்க இயர் பட்ஸ் போதும்.

4. காப்பிக் கறை, இதர கறைகள் பட்டு மேக்கின் வெளிப்புறப் பளபளப்பு குன்றியிருக்குமானால் டெட்டால் ஹேண்ட் சானிடைசர் போதும். சிறிய, மெல்லிய துணியில் ஒரு சொட்டு விட்டு அதைக் கொண்டு துடைத்தால் கறைகள் போய்விடும்.

5. மானிட்டரைத் துடைக்கும்போது அதை ஒரு குழந்தை போல பாவிக்க வேண்டும். கொரபுரவென்று தேய்த்தால் ஸ்கிராச் ஆகிவிடும். கவனம்.

6. லேப்டாப்பை சுத்தம் செய்யும்போது ஷட்டவுன் செய்து, ஒயர்களைப் பிடுங்கிப் போட்டுவிட்டு, முழு நிர்வாணக் கோலத்தில் வைத்து சுத்தம் செய்யவும். உங்கள் குழந்தையைக் குளிப்பாட்டும் உணர்வு உங்களுக்கு அப்போது இருக்க வேண்டும்.

(ஜூலை 2022 இல் எழுதியது. மெட்ராஸ் பேப்பரில் வெளியானது.)

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 17:55

உதயம்: சில நினைவுகள்

Pa Raghavan

சென்னை உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது என்ற செய்தி அறிந்து சிறிது வருத்தமாக இருந்தது. இப்போது தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதில்லை என்றாலும், பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் திரையரங்கில்தான் அதிகமான படங்களைப் பார்த்திருக்கிறேன்.

உதயத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் புது வசந்தம். 1990 ஆம் வருடத் தமிழ்ப் புத்தாண்டுக்கு அந்தப் படம் வெளியானது. அப்போது ஊர் சுற்றலையெல்லாம் நிறுத்திக்கொண்டு முதல் முதலாக அமுதசுரபியில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் யதார்த்தவாதியாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். கையில் சிறிது காசுப் புழக்கம் இருந்தது. பெரிய கற்பனைகளுக்கு இடமில்லை. நாநூறு ரூபாய் சம்பளம். அதில் என் செலவுக்குப் பதினைந்து அல்லது இருபது ரூபாய் எடுத்துக்கொள்வது வழக்கம். செலவு செய்யவே தோன்றாது. அப்பா காசில் வாழ்ந்துகொண்டிருந்தவரை நான் அப்படி இல்லை என்பதை விழிப்புடன் கவனித்து உணர்ந்ததுதான் அன்றைய தேதியில் அடைந்த ஞானம். ஊரே பாராட்டுகிறதே, அப்படி என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று அந்தப் படத்துக்குப் போனேன்.

உதயத்தில் அப்போது மினி உதயம் கிடையாது. சூரியன் இருந்தது. சந்திரன் உருவாகிக்கொண்டிருந்த நினைவு. அட்வான்ஸ் புக்கிங் வசதிகள் இல்லாத காலம் என்பதால் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கித்தான் உள்ளே செல்ல முடியும். அரங்கு நல்ல பிரம்மாண்டமாக, குளுகுளுவென்றிருந்தது. அன்று நானறிந்ததெல்லாம் குரோம்பேட்டை வெற்றி, பல்லாவரம் லட்சுமி, தேவி, ஆலந்தூர் ராமகிருஷ்ணா, பறங்கிமலை ஜோதி மட்டுமே. இவை ஓலைக் கொட்டகைத் திரையரங்குகள் இல்லை என்றாலும் அந்த வகையில்தான் வரிசைப்படுத்த வேண்டும். லட்சுமியில் ஒரு சமயம் அனகோண்டா படம் பார்க்கப் போனபோது, அந்தப் படம் பிடிக்காத யாரோ ஒருவர் பாய்ந்து சென்று திரையைக் கிழித்துவிட்டு வெளியே ஓடிப் போனார். அந்தச் சம்பவம் நடந்ததற்கு ஓராண்டுக்குப் பின்னர் உள்ளம் கவர்ந்த கள்வன் என்ற பாண்டியராஜன் படம் பார்க்கச் சென்றபோது, அனகோண்டா பிடிக்காத மனிதர் கிழித்த திரை அப்படியே இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

தவிர, இந்த எந்த தியேட்டரிலும் அப்போது ஏசி இருக்காது. தவறிப் போய்ப் பகல் காட்சிக்குச் சென்றுவிட்டால் சிதையில் இருந்துவிட்டுத் திரும்புவது போலத்தான் இருக்கும். உதயம் எனக்கு முதல் முதலாக ஏசியை அறிமுகம் செய்தது. அந்த அரங்கில் எந்தப் படத்தைப் பார்த்தாலுமே நல்ல படம் என்று தோன்றிவிடும் போலிருந்தது.

ஆனால் புது வசந்தம் ஒரு நல்ல படம்தான். அதன் அனைத்து அபத்த நாடகக் காட்சிகளுக்கும் அப்பால் கதை என்று ஒன்றிருந்தது. அது ரசிக்கும்படியாகவும் அக்காலக்கட்டத்துக்குப் புதுமையானதாகவும் இருந்தது. சிரிப்பே வந்துவிடக் கூடாது என்ற கவனமுடன் நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான சார்லி அந்தப் படத்திலும் கெ-ள-ரி என்கிற காட்சியில் நடித்துப் புகழ் பெற்றார்.

படத்தைவிட உதயம் தியேட்டர் பெட்டிக் கடையில் அப்போது பாப்கார்னும் நாலணா சமோசாவும் நன்றாக இருந்தன. இனி படம் பார்ப்பதென்றால் உதயத்தில் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டேன்.

அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு கல்கியில் வேலை கிடைத்தது. உதயம் அப்போது இன்னும் நெருக்கமானது. அந்நாள்களில் திரைப்படங்களுக்குப் பத்திரிகையாளர் காட்சி என்ற ஒன்று வைப்பார்கள். பெரும்பாலும் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த மேனா, டிடிகே சாலையில் இருந்த சுப்ரகீத், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்த குட்லக் போன்ற ப்ரீவ்யூ திரையரங்குகளில் அக்காட்சி நடக்கும். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டும் அது ரிலீஸ் ஆகும் தியேட்டரிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுத்துப் பார்க்கச் சொல்லிவிடுவார்கள்.

அண்ணாசாலை என்றால் பெரும்பாலும் சாந்தி தியேட்டரில் ரிலீஸாகும் படங்களுக்குத்தான் வைப்பார்கள். அது இல்லாதபட்சத்தில் அசோக் நகர் உதயம்தான். தொண்ணூறுகளில் வெளிவந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் படங்கள் பெரும்பாலானவற்றை உதயத்தில்தான் பார்த்தேன். அந்நாள்களில் அநேகமாக வாரம் இரண்டு படங்களாவது பார்க்க வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றால் வியாழன் மாலைக் காட்சி கண்டிப்பாக இருக்கும். பண்டிகைக் காலமென்றால் வாரம் முழுதுமே பத்திரிகையாளர் காட்சிகள் இருக்கும். ஏதாவது ஓர் இனிப்பு, ஒரு சமோசா, காப்பி கொடுப்பார்கள். சாப்பிட்டுவிட்டுப் படத்தைப் பார்த்து முடித்ததும் படத்தின் பி.ஆர்.ஓ ஒரு போட்டோவையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் கவரில் போட்டுக் கொடுப்பார்.

சென்னை நகரத்தின் பிற திரையரங்குகளில் இல்லாத ஒரு வழக்கம் உதயத்தில் இருந்தது. இடைவேளைப் பொழுதுகளில் கழிப்பறைக்குள் ஒரு காவலாளி நிற்பார். ஒவ்வொருவரும் சரியாகச் சிறுநீர் கழிக்கிறார்களா என்று அக்கறையுடன் பார்த்துக்கொள்ள ஒரு ஆளை வேலைக்கு வைப்பார்களா என்று ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பிறகு தெரிய வந்தது. கழிப்பறைச் சுவரில் எழுதுவோரை எச்சரித்து அனுப்புவதற்காக அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். காலப் போக்கில காவலாளிகள் அதற்குச் சலித்துக்கொண்டிருக்க வேண்டும். கழிப்பறைச் சுவர்களுக்கும் மொசைக் போட்டுவிட்டார்கள்.

1997 ஆம் வருடம் மார்ச் மாதம் எனக்குத் திருமணம் நிச்சயமானது. நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் மூன்று மாதங்கள் இருந்தன. இடைப்பட்ட நாளொன்றில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படம் வெளியானது. அதன் பத்திரிகையாளர் காட்சியை உதயத்தில் வைத்தார்கள். அதற்கு முன் எப்போதும் இன்னொருவருடன் நான் சினிமாக்களுக்குச் சென்றதேயில்லை. நண்பர்களுடன் வேறு பல இடங்களுக்குப் போயிருக்கிறேன். உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திரைப்படத்தைத் தனியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற கொள்கை உள்ளவன் நான். முதல் முறையாக அதில் ஒரு மாறுதலைச் செய்ய முடிவு செய்து நேரே என் எதிர்கால மனைவியின் அம்மாவிடம் சென்று ‘உங்கள் பெண்ணை என்னுடன் சினிமாவுக்கு அனுப்ப முடியுமா? பக்கத்தில் உதயம் தியேட்டரில்தான். முடிந்ததும் நானே கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னேன்.

அவ்வளவு நல்லவனாகக் காட்சியளித்த ஒருவனை அந்தப் பெண்மணி தன் வாழ்நாளில் அதற்குமுன் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. உடனே சம்மதம் சொன்னார்.

அன்று அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, வழக்கத்துக்கு மாறாகப் பெட்டிக்கடையில் மெடிமிக்ஸ் சாம்பிள் சோப்பு வாங்கி முகமெல்லாம் கழுவி, தலை வாரிக்கொண்டு மேற்கு மாம்பலத்தில் இருந்த அவர்கள் வீட்டுக்கு என் டிவிஎஸ் 50யில் சென்றேன். அவளை அழைத்துக்கொண்டு உதயத்துக்கு வந்து அருணாசலம் பார்த்தேன். அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்பதற்காகவேனும் அந்தப் படம் நன்றாக இருந்திருக்கலாம். கிரேசி மோகன் எழுதியிருந்தும் வசனங்களில் நகைச்சுவையே இல்லாதிருந்தது. பிறகு மோகனுக்கு போன் செய்து அது குறித்து வருத்தப்பட்டபோது, ‘பாரா, சார்லி சாப்ளினே திரும்பப் பொறந்து வந்து எழுதினாலும் ரஜினி படத்துல இவ்ளதான்யா முடியும்’ என்று சொன்னார்.

என் மனைவிக்கு அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை என்னோடு பார்த்த முதல் படம் என்பதாலும் இருக்கலாம். அல்லது படம் பார்க்க சமோசா கொடுக்கிறார்களே என்ற காரணமாகவும் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. படம் முடிந்ததும் அதே நல்லவனாக அவளை பத்திரமாக அவர்கள் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டுக் குரோம்பேட்டைக்குக் கிளம்பிச் சென்றேன். ஆனால் கடைசிவரை, திருமணத்துக்கு முன்னால் அவளோடு அந்தப் படத்துக்குச் சென்றதை வீட்டில் சொல்லவில்லை. பிறகொரு நாள் என்னைக் குறித்த இதர பல உண்மைகளை உடைத்ததைப் போலவே இதையும் அவளேதான் என் வீட்டாரிடம் சொன்னாள்.

கல்கி நாள்களில் என்னைச் சந்திக்க வரும் வெளியூர் நண்பர்களைப் பெரும்பாலும் உதயம் திரையரங்கப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் சந்திப்பேன். பலநாள் பல மணி நேரம் எழுத்தாளர் சு. வேணுகோபாலுடன் அங்கே இலக்கியம் பேசிக் களித்திருக்கிறேன். அப்போது கல்கியில் அவர் மதுரைப் பிராந்திய நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி வந்து போவார்.

திடீரென்று ஒரு நாள், ‘பேசணும். வா’ என்று உதயத்துக்கு அழைத்துச் சென்றார். டீ குடித்தோம். ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

‘அவ்ளதான்யா. இன்னியோட இந்த வேலைய விட்டுடுறேன்’ என்று சொன்னார். அதிர்ந்து போய், ஏன் என்று கேட்டேன். ஒரு நாவலின் கதைச் சுருக்கத்தைச் சொல்லி, ‘ஐடியா வந்திருச்சிய்யா. இனி இத எழுதி முடிக்கற வரைக்கும் புத்தி வேற எதுலயும் நிக்காது. வேலையெல்லாம் அப்பறம் பாத்துக்குவம். என்ன அவசரம்?’ என்றார்.

அன்று அது எனக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நாவல் எழுதுவதற்காக ஒரு நல்ல வேலையை விடுவார்களா என்று நினைத்தேன். ஆனால் வேணு விளையாட்டுக்குப் பேசவில்லை. உண்மையிலேயே ராஜிநாமா செய்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார். எழுத்தைத் தவிர இன்னொன்று முக்கியமில்லை என்ற மனநிலை எனக்கு வருவதற்கு நான் மேலும் பதினைந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

கவிஞர் விக்கிரமாதித்யன், பிரபஞ்சன், செம்பூர் ஜெயராஜ், ஜோ ஜார்ஜ், க.சீ. சிவகுமார், ம.வே. சிவகுமார், கல்கியில் அடிக்கடி எழுதும் இதர பல எழுத்தாளர்கள் – யாரும் மிச்சமில்லை. எனக்காகவே யாரோ கட்டிவைத்த திறந்த வெளி ஆபீஸ் போலத்தான் அந்தத் திரையரங்கப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வந்தேன்.

அந்நாள்களில் உதயம் திரையரங்கத்தின் சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல இடது பக்கம் ஒரு சிறிய உணவகம் இருந்தது. கீழே ஒரு ஜெராக்ஸ் கடையும் ஒரு பெட்டிக்கடையும் இருக்கும். குறுகலான படியேறி மேலே சென்றால் உணவகம். குறைந்த விலையில் தரமான சிற்றுண்டி கிடைக்கும் இடமாக அது இருந்தது. கிச்சடி என்கிற – பெரும்பாலும் சமைப்போரால் நாசமாக்கப்படும் உணவைச் சென்னையில் கற்புடன் சமைத்துக் கொடுத்த ஒரே உணவகம் அதுதான். இரவு பத்து மணிக்குப் பிறகும் கிடைக்கும். படம் பார்த்து முடித்து, உணவகத்தில் டிபனும் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தால் சுமார் ஐம்பது பேர் அந்த பிளாட்பாரத்தில் கால் நீட்டிப் படுத்திருப்பார்கள். வீடு வாசலென்று ஏதுமில்லாமல் அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, வாழ்ந்த ஒரு தலைமுறையை முழுதாகப் பார்த்திருக்கிறேன். அன்றிருந்த அந்த உணவகத்தை நடத்திக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு மீதமாகும் உணவை அவர்களுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டமே இரவு பதினொரு மணிக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் கூடி உண்பதைப் பார்த்திருக்கிறேன்.

பிறகொரு நாள் யாரோ ஒரு பிரமுகப் பிரபலம் குடித்துவிட்டுத் தாறுமாறாகக் கார் ஓட்டி வந்து அவர்கள் மீது ஏற்றிச் சிலரைக் கொன்றுவிட்டுச் சென்ற செய்தி நாளிதழ்களில் வந்தது. சில காலம் வழக்கும் நடந்தது. ஆனால் தீர்ப்பு என்னவானதென்று தெரியவில்லை.

கல்கி நாள்களுக்குப் பிறகு உதயம் தியேட்டருக்குச் செல்வது அநேகமாக இல்லாமலாகிவிட்டது. இன்று வரை கோடம்பாக்கம் போகும்போதெல்லாம் என்னையறியாமல் உதயத்தைத் திரும்பிப் பார்ப்பேன். அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வரும். ம.வே. சிவகுமார் தனது பாப்கார்ன் கனவுகள் கதையை அங்கே வைத்துத்தான் எனக்குச் சொன்னார். சொல்லும்போது அருமையாக இருந்தது. இதை இப்படியே எழுதுங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டு சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கல்கியில் அது வெளியான வடிவம் எனக்கு உவப்பானதாக இல்லை. ‘உங்கள் வாழ்வில் நீங்கள் எழுதிய ஆக மோசமான கதை இதுதான்’ என்று சிவகுமாரிடம் சொன்னேன். அதுவும் அந்த உதயம் தியேட்டர் வாசலில் வைத்துச் சொன்னதுதான்.

நான் அப்படிச் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை. கோபித்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டுப் போய்விட்டார். பிறகு பல வருடங்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருப்பதற்கு அவரே ஒரு வழியையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார். காஞ்சீபுரம் ஜெயேந்திர சரசுவதியின் அடியாள் என்று என்னைக் குறிப்பிட்டு அவர் ஒரு கட்டுரை எழுதப் போக, நக்கீரன் கோபாலும் பரீக்‌ஷா ஞாநியும் எங்கள் பிரிவுக்கு உதவுகிறோம் என்று தெரியாமலேயே உதவி செய்தார்கள்.

எல்லாம் பழைய கசப்புகள். ஆனால் சிவகுமாரே ஒரு நாள் நேரில் வந்து தான் நடந்துகொண்டதை மறந்துவிடும்படிக் கேட்டுக்கொண்டு பழைய பாசத்துடன் பேசிவிட்டுச் சென்றார். நட்பு புதுப்பிக்கப்பட்டதைக் கொண்டாட வேண்டுமல்லவா? உதயம் திரையரங்குக்குச் சென்று மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்தோம். படம் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஜாபர்கான்பேட்டை சரவணபவன் வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுவிட்டு, அது நன்றாக இருந்ததைச் சிலாகித்துக்கொண்டு பிரிந்தோம்.

திருமணத்துக்கு முன்னால் என் மனைவியுடன் பார்த்த படத்தை உதயத்தில்தான் பார்த்தேன் என்று சொன்னேன். திருமணத்துக்குப் பிறகு அவளுடன் பார்த்த முதல் படமும் அங்கேதான். அது நாகார்ஜுனா நடித்த ஒரு தெலுங்கு படத்தின் டப்பிங் பதிப்பு. தலைப்பு, ‘உன்னையே கல்யாணம் பண்ணிக்கறேன்.’

(பிப்ரவரி 2024 – மெட்ராஸ் பேப்பரில் வெளியானது)

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 17:30

July 19, 2025

டிஜிட்டல் உலகில் தமிழ்  வாசிப்பு

Pa Raghavan

இந்த மாதிரி பத்திக்குப் பத்தி சப் டைட்டில் போட்டு, பொருட்சுருக்கம் எல்லாம் சொல்லி, கடைசியில் உசாத்துணை கொடுத்து வாழ்நாளில் நான் எழுதியதே இல்லை. இது கவர்மெண்ட் சமாசாரம். வேறு வழியில்லாமல் போய்விட்டது. 2024 ஆம் வருடம் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டு மலருக்காக எழுதிய கட்டுரை இப்போது இங்கே பிரசுரமாகிறது.

பொருட்சுருக்கம் :

பதினாறாம் நூற்றாண்டில் வெளியான முதல் தமிழ் நூலில் இருந்து இன்று வந்திருக்கும் கிண்டில் செல்பேசி செயலிகள் வரை தமிழ் நூல்களும் வாசகர்களும் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

அடுத்து வந்துகொண்டிருக்கும் ஈனும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் எழுத்தாளர் என்பவர் யார்? அவரது பணி என்னவாக இருக்கும்இனி வரும் காலங்களில் கணினியும், செயற்கை நுண்ணறிவும் இல்லாமல்  தமிழ் எழுத்தும் வாசிப்பும்  இயங்க முடியாது என்கிற சூழ்நிலையில் தமிழ் வாசிப்பின் அடுத்தக் கட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்று இக்கட்டுரை ஆராய்கிறது.

வாசிப்பு : வந்த வழியும் வளரும் வழியும்

முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன், எழுத்துத் துறையில் மட்டும்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் இந்தத் துறை சார்ந்து பேசப்பட்ட கருத்துகளுள் முதன்மையானது, ‘வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதுஎன்பதுதான். பதிப்புத் துறையிலும் சரி, பத்திரிகைத் துறையிலும் சரி. யாரைக் கேட்டாலும் தயங்காமல் இதனைச் சொல்வார்கள். இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டுக்கு முன்புவரை இக்கூற்றை உறுதி செய்வதற்குப் புள்ளி விவரங்களைத் தேடி எடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட பத்திரிகைகள், முடங்கிப் போன பதிப்பகங்களைச் சுட்டிக்காட்டினாலே போதும் என்ற நிலை உண்டாகியிருக்கிறது.

நல்லது. இது ஒரு சிக்கல். ஆனால் தீர்க்க முடியாத சிக்கல் அல்ல. இதன் தீர்வு, இந்தச் சிக்கலை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் இருக்கிறது. பொதுவாகத் தமிழ் சமூகம் வாசிப்பில் இருந்து விலகிச் செல்கிறது என்று குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் எப்படி இருந்தோம், எங்கிருந்து எங்கே நகர்ந்து வந்திருக்கிறோம் என்று சுய மதிப்பீடு செய்து பார்ப்பது இவ்விஷயத்தில் சரியான பலனைத் தரும்.

கிபி 1492 ஆம் ஆண்டுதான் அமெரிக்கா என்ற நாடே கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் கிபி 1554 பிப்ரவரி 11ம் தேதி போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில் முதல் தமிழ் புத்தகம் அச்சாகிவிட்டது. இன்றைக்கு ஆங்கில லிபியில் தமிழை எழுதுவதை தங்கிலீஷ் என்கிறோம் அல்லவா? அன்றைக்குத் தமிழை லத்தீன் மொழியில் எழுதிப் பதிப்பித்தார்கள். ‘தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு’ [1] என்பது அந்நூலின் பெயர்.

கவனிக்க வேண்டிய இடம் இதுதான். பதினாறாம் நூற்றாண்டில் இந்த முதல் தமிழ்ப் புத்தகம் அச்சான சமயத்தில் இங்கே தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்களில் அரச செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. கல்வெட்டில் எழுதும் வழக்கமும் இருந்தது. அச்சு நூல்கள் வெளியாகத் தொடங்கியதால் நமது பாரம்பரியமான செப்புப் பட்டயங்களில் எழுதுவதும் கல்வெட்டில் எழுதுவதும் அருகி, இல்லாமல் போய்விட்டன என்று என்றாவது வருத்தப்பட்டிருக்கிறோமா?

இதுவேதான் இன்றையவாசிப்பு அருகிவிட்டதுஎன்கிற வாதத்துக்கும் நாம் முன்வைக்கக்கூடிய எளிய பதில். வாசிப்பு குறையவில்லை. ஆனால் வேறு தடங்களில் விலகி முன்னேறத் தொடங்கியிருக்கிறது. தமிழ் வாசிப்பு என்பது டிஜிட்டல்மயமாகியிருக்கிறது. இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், யாஹூ, கூகுள் குழுமங்கள், ஆர்குட், பஸ் என்று தொடங்கி இன்று  ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், த்ரெட் என்று  விரிந்திருக்கிறது. மின் நூல்கள், ஒலி நூல்கள், ஒலிஒளி நூல்கள் ஏராளமாக வரத் தொடங்கியிருக்கின்றன. கால மாற்றத்தைத் தவிர்க்க முடியாதது போலவே, அந்தந்தக் காலக்கட்டத்தின் வளர்ச்சிகளை உள்வாங்கிச் செழிப்பதையும் ஒரு செம்மொழி தவிர்க்க விரும்பாது.

நாம் இம்மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்வதால் இரு தரப்பையும் கவனிக்க முடிகிறது. உணர்ச்சிவசப்படாமல் அலசிப் பார்க்க முடிகிறது.

இம்மாற்றம் தொண்ணூறுகளின் இறுதியில் நிகழ ஆரம்பித்தது. இணையம் அப்போது ஓர் ஆடம்பரம். நிறுவனங்களில் இருக்கும். வசதி படைத்தவர்களின் வீடுகளில் மட்டும் இருக்கும். மின்னஞ்சல் அனுப்ப கம்ப்யூட்டர் செண்டருக்குச் சென்று வந்தேன் என்று சொல்வதும் ஓர் அந்தஸ்து அறிகுறியாகப் பார்க்கப்பட்ட காலம் அது. இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வைஃபை தொழில்நுட்பம் இந்தியாவில் பரவ ஆரம்பித்து, சாதாரண மக்களுக்கும் இணையம் சாத்தியம் என்றானபின்பு டிஜிட்டல் வாசிப்பு வேகமெடுக்கத் தொடங்கியது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிகளை அடுத்து அதிக வலைப்பதிவுகளைக் கொண்ட மொழியாகத் தமிழ் திகழ்ந்தது. மறைந்த தமிழ் அறிஞர் அவ்வை நடராசன் 2004 ஆம் ஆண்டு ஓர் இலக்கிய மேடையிலேயே இத்தகவலைத் தெரிவித்தார். உண்மையில், தமிழில் எழுதுவோரும் படிப்போரும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகுதான்.

அதற்கு முன்னால் எண்ணிக்கையாகச் சொல்லப்பட்ட அதிகபட்ச சாதனை எதுவென்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். குமுதம் வார இதழ் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆறு லட்சம் பிரதிகள் விற்றதை மட்டுமே நினைவுகூர முடியும். நாளிதழ்களிலேயே மிக அதிக விற்பனை காணும் தினத்தந்தி தனித்தனியே பதினாறு பிராந்தியங்களில் அச்சிடப்பட்டு வெளியாகிறது. இந்நாளிதழின் அதிகபட்ச விற்பனையாகச் சுட்டிக்காட்டப்படுவது, 2015 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் இது எட்டிய  பதினேழு லட்சம் என்கிற எண்ணிக்கை. [2]  தமிழ் அறிந்த மக்களின் எண்ணிக்கையோடு இந்த எண்ணை ஒப்பிடக்கூட முடியாது. உலகில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோரின் எண்ணிக்கை எண்பத்தொன்பது கோடி.அதனை நினைவுகூர்ந்தால் மேற்சொன்ன எண்ணிக்கை ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.

ஒரு வெகுஜன வாரப் பத்திரிகை, வெகுஜன நாளிதழின்  அதிகபட்ச எண்ணிக்கையே தமிழில் இதுவாகத்தான் இருந்திருக்கிறது என்னும்போது புத்தகங்களின் விற்பனை எப்படி இருக்கும்?

ஆண்டுக்குத் தோராயமாகப் பதினைந்தாயிரம் தமிழ் நூல்கள் [4] வெளியாகின்றன. இந்திய அளவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருவது தமிழில்தான். இதர மூன்று தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களின் எண்ணிக்கை இதில் பாதியளவுகூட இல்லை. ஆனால் புத்தக வாசகர்கள் என்று பார்த்தால் தமிழில் அதிகபட்சம் இரண்டு லட்சம் பேரைச் சொல்ல முடியும். இந்த எண்ணிக்கைக்கு ஆதாரப் புள்ளிவிவரமாக ஏதுமில்லை. ஆனால் பத்தாண்டுக் காலம் தமிழின் முன்னணி பதிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவன் நான். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறுதரப்பட்ட வாசகர்களுடன் உரையாடியிருக்கிறேன். ஏராளமான புத்தகக் காட்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அந்த அனுபவம் தருகிற எண் இது. இதற்குமேல் மிக நிச்சயமாக இல்லை. இவர்கள்தாம் சமையல் நூல்கள், ஆன்மிக நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், சோதிட நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், தொழில்சார் நூல்கள், நவீன இலக்கிய நூல்கள், கவிதைகள் எனத் தமது விருப்பத்துக்கேற்ப வாங்கி வாசிப்பவர்கள்இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. இந்த இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையே மெல்ல மெல்லப் பெருகி உருவாகி வந்ததுதான். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்னர் தமிழ் புத்தக வாசகர் உலகின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் கிடையாது.

நன்கு விற்கும் புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள். மிக நன்றாக விற்கும் புத்தகம் என்றால் இரண்டாயிரம் பிரதிகள். தமிழ் பதிப்புலகம் எப்போதும் சொல்லும் எண்ணிக்கை இதுதான். அபூர்வமாக எப்போதேனும் ஒன்றிரண்டு புத்தகங்கள் ஐயாயிரம், ஆறாயிரம் என்ற இலக்கை எட்டியிருக்கின்றன. அது எழுதுபவரின் நட்சத்திர மதிப்பினைப் பொறுத்து நிகழ்வது. கணக்கில் கொள்ள முடியாத வகையைச் சேர்ந்தது.

இதனை இவ்வளவு உடைத்துக் காட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஒப்பீட்டளவில் தமிழ் சமூகம் வாசிப்பில் மிகவும் பின் தங்கிய சமூகமே ஆகும். புத்தகங்களின் எண்ணிக்கை இங்கே அதிகரிக்குமே தவிர, வாசக எண்ணிக்கை பெருகாது. காரணம், மிகத் தொடக்க காலம் முதலே நாம்பேசிக் கேட்டுப் பழகியவர்கள்.[5] வாசித்து அறிந்து வந்தவர்கள் அல்லர். அரசியல், ஆன்மிகம் தொடங்கி அனைத்துத் துறைசார் தகவல்களையும் உரைகளின் மூலமாக, சொற்பொழிவுகளின் மூலமாகவே உள்வாங்கிப் பழகிய ஒரு மக்கள் கூட்டம், வாசிப்பு என்னும் செயலுக்குச் சுணங்குவது இயற்கை.

யுனிகோட் என்னும் புரட்சி

இந்த வழக்கம் மாறத் தொடங்கியதே இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு நிகழத் தொடங்கிய டிஜிட்டல் வாசிப்புப் பழக்கத்தினால்தான். தமிழில் இது அதிவேகம் கொள்ள மூல முதற்காரணம் யுனிகோட் என்னும் ஒருங்குறியின் வரவும் வீச்சும் என்பதில் சந்தேகமில்லை.

இணையம் இங்கே அறிமுகமான காலத்தில் தமிழில் ஒரு மின்னஞ்சல் எழுதினால் கூடவே நாம் பயன்படுத்திய எழுத்துருவை அதே அஞ்சலில் இணைத்து அனுப்பும் சூழ்நிலை இருந்தது. அஞ்சல் கிடைக்கப் பெறுபவர் அதைப் படிக்க வேண்டுமானால், நாம் இணைத்து அனுப்பிய எழுத்துருவை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து ஒரு ரெஃப்ரெஷும் செய்தால்தான் சாத்தியம்.

எண்ணிப் பார்த்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. ஆனால் அப்படியும் வாழ்ந்திருக்கிறோம். தமிழில் நெடுங்காலமாக அச்சிதழ் வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனங்கள் அனைத்தும் தமக்கென இணையத்தளம் தொடங்கியபோது ஆளுக்கொரு எழுத்துருவைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு தளத்தைத் திறப்பதற்கும் வாசகருக்கு ஒவ்வொரு எழுத்துரு தேவைப்பட்டது.

இந்த அவலம் அனைத்தையும் யூனிகோட் துடைத்தழித்தது. தொழில்நுட்பம் அல்ல சாகசம். நுட்பத்தின் பயனை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்ப்பதே பெருஞ்செயல். அந்த வகையில், யுனிகோடின் வரவும் பயன்பாடும்தான் தமிழ் வாசிப்பை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றது என்று உறுதியாகச் சொல்லலாம். திண்ணை, பதிவுகள், வார்ப்பு, அம்பலம், ஊடறு, ஆறாம்திணை, தமிழோவியம் போன்ற இணையப் பத்திரிகைகள் இதன் பிறகே பெருமளவு வாசக கவனம் பெறத் தொடங்கின.

ஆனால் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டுக்குப் பிறகு இந்த இணைய இதழ் வாசிப்பில் ஒரு தேக்கம் உருவாகத் தொடங்கியது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதன் தலையாய காரணம்கலவையான ரசனை கொண்ட அனைவரும் இணைய இதழ்களைக் காத்திருந்து வாசித்தது போக, எதுவும் நிகழும் கணத்திலேயே என்கிற புதிய சித்தாந்தம் மேலெழத் தொடங்கி, மிக விரைவில் அது அனைவரையும் கவர்ந்துகொண்டது.

தவிர, எழுதுவோர்வாசிப்போர் என்ற இரு தரப்பாக  நிகழ்ந்த ஒரு செயல்பாடு மெல்ல மெல்லத் தனது முகத்தை மாற்றிக்கொண்டு எல்லோரும் எழுதலாம், எல்லோரும் படிக்கலாம் என்கிற ஜனநாயகமயத்தின் விளைவாக மிகப்பெரிய அளவில் பிரபலமடையத் தொடங்கியது.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி

தமிழ்க் கணிமைச் சாதனைகளில் ஒருங்குறியைத் தொடக்கப் புள்ளியாகக் கொள்வோமானால், இந்த சமூக ஊடகப் பரவல் இன்னொரு புள்ளி. எழுதுவது என்னும் செயல்பாடு மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியம், வாசிப்பது ஒன்றே வெகு மக்கள் செய்யக்கூடியது என்னும் கருத்தாக்கத்தையே தகர்த்தது இது. யாரும் எழுதலாம் என்பது மட்டுமல்ல. எதையும் எழுதலாம் என்கிற சூழலும் இதன்பின்பே உருவாகத் தொடங்கியது. அன்றாட நிகழ்ச்சிகள், சிறிய சம்பவங்கள், நினைவுக் கோவைகள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை, விமரிசனம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், வர்த்தகம் தொடங்கி வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவரவர் மொழியில் எழுதிப் பார்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்து, இணையத்துக்கு வெளியிலும் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள் பலருண்டு. எழுத்துத் துறைக்கு மட்டுமன்றி, இங்கிருந்து திரைத்துறைக்குச் சென்று சாதித்தவர்களும் இருக்கிறார்கள்.

அனைத்திலும் உச்சம், இன்று வெளியாகும் பெரும்பாலான வார இதழ்களில் பணியாற்றுபவர்களில் பலர் சமூக ஊடகங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர்களேவலைப்பதிவில், ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்த ஒருவர் தமிழின் புகழ்பெற்ற வார இதழ் ஒன்றின் பொறுப்பாசிரியராகவே ஆனார் என்பது வரலாறு.

இதுவும் ஒரு கட்டம். காட்சி ஊடகங்கள்குறிப்பாக யூட்யூப் பிரபலமாகத் தொடங்கிய பின்பு, சமூக ஊடகங்களில் இருந்து பலபேர் அதற்குத் தாவினார்கள். பயண நேரத்தில் இரண்டு விடியோ பார்ப்பது. தூங்கப் போகுமுன் நான்கு வீடியோ பார்ப்பது. சும்மா இருக்கும் போதெல்லாம் வீடியோ பார்ப்பது.

இது பெருக ஆரம்பித்தபோது சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் குத்தகைக்கு எடுத்தன. பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களே அதிகம் பேசப்பட்டன. அரசியலும் உள்ளிட்ட அனைத்தைக் குறித்தும் எழுதவும் படிக்கவும் விரும்பியவர்கள் இப்போது மீண்டும் இணைய இதழ்களைத் தேடத் தொடங்கினார்கள்இதன் விளைவாக வெளிவரத் தொடங்கியவையே சொல்வனம், தமிழினி, கனலி, நீலி, அருஞ்சொல், அகழ், மெட்ராஸ் பேப்பர் போன்ற மின்னிதழ்கள்.

வாசகர்கள் தத்தமது ரசனை சார்ந்து இதழ்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் இக்காலக்கட்டம் வசதியளித்தது. மறுபுறம் டெய்லி ஹண்ட் என்கிற நிறுவனம், அனைத்து அச்சிதழ்களுக்கும் டிஜிட்டல் பிரதியைத் தன்னிடம் வந்து வாசிக்க வழி செய்தது. திரள் போன்ற சில தொகுப்பு முயற்சிகள், அனைத்துச் செய்திகளையும் அவை வெளியாகும்போதே உடனுக்குடன் திரட்டி, ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி, வாசகரின் அலைச்சலை எளிமைப்படுத்தியது. திரள் தனது சேவைக்கு இயந்திரக் கற்றல் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதன் மூலம் செய்திகளை வகை பிரித்து பிராந்தியவாரியாக, செய்திகளின் தன்மைவாரியாகப் பிரித்து எளிமைப்படுத்தித் தருகிறது.

வாசிப்பும் எழுத்தும் ஜனநாயகமயமானதன் நல்விளைவுகளுள் ஒன்று இது. இதன் இன்னொரு பாய்ச்சல் வேறொரு புறம் சத்தமின்றி நடந்தது. மின்நூல்கள்.

மின்நூல் வெளி

இணைய இதழ்கள் வரத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே சில மின்நூல் முயற்சிகளும் செய்து பார்க்கப்பட்டன. ‘ப்ராஜக்ட் மதுரைஇதில் முதன்மையான முன்னெடுப்பு. புதிய அச்சு காணாத பண்டைய இலக்கியப் பிரதிகளைத் தேடித் தொகுத்து டிஜிட்டல் வடிவமாக இவர்கள் அளித்தார்கள். புராதனமான புத்தகங்களின்மீது ஆர்வமுள்ளோருக்கு அது பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு தமிழோவியம் மின் இதழின் சார்பாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்றை முதல் முதலில் மின்நூலாக்கிப் பார்த்தோம்இந்தத் தொடக்க கால மின்நூல் முயற்சிகளை இப்போது எண்ணிப் பார்த்தால் திகைப்பும் வியப்புமே ஆக்கிரமிக்கின்றன. அன்று ஒரு மின்நூல் என்பது ஒரு exe file. திறந்தால் ஒரு கோப்பு வரும். உள்ளே எத்தனைக் கட்டுரைகள் அல்லது கதைகள் உண்டோ அத்தனைக்கும் தனித்தனியே ஒரு எச்.டி.எம்.எல் வடிவம் இருக்கும். பயன்படுத்தப்பட்ட எழுத்துரு தனியாக இருக்கும். அப்படியெல்லாம் உடைத்துப் பார்க்க விரும்பாவிட்டால் exe file இயக்கி நேரடியாகப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிடலாம். இணைய உலாவியில் அதுவும் ஒரு பக்கம் போல வந்து நிற்கும்.

எப்படியும் ஆயிரம் பிரதிகள் விற்றுவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இரண்டோ மூன்றோ பிரதிகள் விற்றன என்று நினைவு. ஆனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலபேர் பேசினார்கள். யாஹூ குழுமங்களில் ஏராளமான மதிப்புரைகள் வெளிவந்தன. எப்படி இதெல்லாம் நடக்கிறது என்றே புரியவில்லை. பிறகு தெரிந்தது. அந்த இரண்டோ மூன்றோ நல்லவர்கள் தமது மின்னஞ்சல் பட்டியலில் உள்ள அத்தனை பேருக்கும் தாம் பெற்ற இன்பத்தைத் தள்ளி விட்டிருக்கிறார்கள்.

இது எக்காலத்திலும் எல்லாத் தளங்களிலும் இருக்கும் பிரச்னை. பைரசி. இணையத்தின் எல்லைகளற்ற வசதி வாய்ப்புகள் இத்திருட்டை இன்னும் விரிவாகச் செய்வதற்கு உதவியது. ஓசிஆர் என்னும் ஈடு இணையற்ற நுட்பம் கண்டறியப்பட்டபோது தமிழ் சமூகம் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அச்சுப் புத்தகங்களைப் படியெடுத்து, திருட்டுத்தனமாகச் சுற்ற விடுவதற்கே அது பெரும்பாலும் பயன்படத் தொடங்கியது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2005 ஆம் ஆண்டு என்னுடைய டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு) புத்தகம் வெளியாகி, புத்தகக் காட்சிக்கு விற்பனைக்குச் சென்றது. ஆயிரம் பக்கப் புத்தகம். முந்நூறு ரூபாய் விலை. கண்காட்சியில் புத்தகம் நன்றாக விற்பனை ஆனது. பலரால் பேசப்பட்டது. அதுவல்ல விஷயம். கண்காட்சி முடிந்த ஒரு வாரத்தில் அந்த ஆயிரம் பக்கப் புத்தகமும் முறையாக ஒளிநகல் எடுக்கப்பட்டு அழகான பிடிஎஃப் பிரதியாக உலகெங்கும் வலம் வரத் தொடங்கிவிட்டது. இதன் உச்சம், ஒரு நண்பர் எனக்கே அந்தப் பிரதியை அனுப்பி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டவும் செய்தது.

மின்நூல்கள் வரத் தொடங்கியபோது பைரசியும் வளமாகவே வாழத் தொடங்கியதுஎன்னைப் போல வேறு சில எழுத்தாளர்களும் அந்நாளில் மின்நூல் வெளியிடும் முயற்சியைத் தொடங்கி, இதனாலேயே பாதியில் நிறுத்தும்படி ஆனது.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, ஒவ்வொரு மின்நூல் வெளியீட்டாளரும் தத்தமது நூலை வாசிக்கத் தானே செயலியைச் சேர்த்துச் செய்து தருவதுதான் என்று முடிவு செய்தார்கள். அதாவது, குறிப்பிட்ட நிறுவனத்தின் செயலிக்குள் மட்டும்தான் அவர்கள் தரும் மின்நூலைப் படிக்க முடியும். பிரதி எடுக்க முடியாது, வினியோகம் செய்ய முடியாது.

இணையத்தில் குடிசைத் தொழில் செய்துகொண்டிருந்தோர் தொடங்கி, ஆப்பிள், கூகுள், அமேசான்வரை அனைத்துத் தரப்பினரும் இத்தகு முயற்சிகளை ஆரம்பித்தார்கள். சென்னையில் இருந்து இயங்கும் நியூ ஹொரைசன் மீடியா என்னும் நிறுவனம் நானறிந்து இப்படிப் பிரத்தியேக மின்நூல் செயலி ஒன்றைச் செய்து பார்த்தது.

ஆனால் அனைவரும் யோசிக்கத் தவறியது ஒன்றுண்டு. ஒரு வாசகன் தனது செல்போனில் எத்தனை வாசிப்புச் செயலிகளை வைத்திருக்க முடியும்? புத்தகங்கள் இடத்தை அடைத்துக்கொள்ளும்; மின்நூலில் அந்தச் சிரமம் கிடையாது என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்து, மின்நூல் செயலிகளுக்கு போனில் இடம் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு இது போனது.

ஆனால் தீர்ப்பளிக்கும் விஷயத்தில் பயனரை விஞ்ச யாருமில்லை. எல்லா விதங்களிலும் சௌகரியமான அமேசான் கிண்டில் மின்நூல்களை ஏற்றுக்கொண்டு மற்ற அனைத்தையுமே தமிழ் வாசகர்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆப்பிள், கூகுள் மின்நூல்களும் இதற்குத் தப்பவில்லை என்பதே இங்கே முக்கியம்.

ஒரு விஷயம். அமேசான் கிண்டில் புத்தகங்களுக்கும் திருட்டுப் பிரதிகள் தயாரிக்க முடிந்தது. அப்படித் தயாரித்து, அவற்றை வெளியிடுவதற்கென்றே டெலிகிராமில் பல பிரத்தியேக சானல்கள் திறக்கப்பட்டன. அடையாளம் மறைத்த நபர்கள் திரை மறைவில் இருந்துகொண்டு இந்தத் திருட்டுப் பிரதிகளைத் தொடர்ந்து வெளியிட்டபோது கிண்டில் நிறுவனத்தாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றிரண்டு பிடிஎஃப் குழுக்களைப் புகார் அளித்து நீக்க முடிந்ததே தவிர, புதிது புதிதாக வேறு வேறு பெயர்களில் அவை மீண்டும் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அனைத்தையும் மீறி அமேசான் கிண்டில் மின்நூல்கள் மட்டும் எப்படி வெற்றி கண்டன? இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. பயன்பாட்டு எளிமை.

2. இயந்திரக் கற்றல் நுட்பம் மூலம் ஒரு வாசகர் ஒரு முறை தேர்வ் செய்யும் புத்தகத்தைக் கொண்டு அவரது விருப்பம் அறிந்து அதற்கேற்பப் பரிந்துரைகள் செய்வது.

3. சக்தி மிக்க தேடுபொறி வசதி.

கிண்டிலின் வரவு, தமிழ் வாசிப்பு வரலாற்றில் சந்தேகமின்றி, ஒரு முக்கியமான புள்ளி. குறிப்பாக, அவர்கள் தருகிற வாடகை நூலக வசதி. அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் நாவல் போட்டிகள் குறித்து அறிவீர்கள். ஓராண்டு அந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது கிண்டில் தமிழ்ப் பிரிவின் உயரதிகாரிகளுடனும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் கலந்து பேசி அதன் செயல்பாட்டினை ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது.

அதிகம் படிக்காத, எளிய வேலைகளுக்கு மணிக்கணக்கில் பேருந்து அல்லது ரயில் பயணம் செய்து திரும்பும் பெண்களே கிண்டில் வாடகை நூலகத்தின் பெரும்பான்மை வாசகர்களாக இருக்கிறார்கள். கையில் ஒரு போனும் மாதம் நூற்றைம்பது ரூபாய் சந்தா தொகையும் இருந்தால் போதும், எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை அவர்கள் தமக்குக் கிடைத்த வரமாகப் பார்க்கிறார்கள். முன்னொரு காலத்தில் தமிழ் வார இதழ்களில் கோலோச்சிய பெண் எழுத்தாளர்களை அடியொற்றி, இந்தப் புதிய தலைமுறை வாசகர்களுக்காகக் கதைகள் எழுதவென்றே நூற்றுக் கணக்கான புதிய பெண் எழுத்தாளர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். எளிய குடும்பக் கதைகள். எளிய காதல் கதைகள். இவற்றைத் தவிர வேறெதுவும் இல்லை. பெரிய மொழி அறிவோ, இலக்கண அறிவோ, புனைவாற்றலோ இந்த எழுத்தாளர்களுக்குக் கிடையாது. ஆனால் கதைகளை வாழ்க்கையில் இருந்து எடுக்க வேண்டும் என்கிற சூட்சுமம் மட்டும் தெரியும். கிண்டிலில் வாழும் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் நூற்றுக் கணக்கான கதைகளை (அவர்கள் நாவல் என்பார்கள்) எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். கிண்டில் வாசகர்களிடையே அவர்கள் பெருநட்சத்திரங்கள். ஆனால் மின்நூல் உலகுக்கு வெளியே வசிக்கும் யாருக்கும் அந்த எழுத்தாளர்களின் பெயர்கள்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செயற்கை நுண்ணறிவு என்னும் சாகசம்

பெயரில் என்ன இருக்கிறது? அல்லது பெயரேதான் எதற்கு? சாட் ஜிபிடியின் வரவுக்குப் பிறகு என்ன கேட்டாலும் சில வினாடிகளில் கிடைத்துவிடும் என்றாகிவிட்டது. உள்ளே உட்கார்ந்துகொண்டு எழுதுபவர் யார்? தெரியாது. அவருக்கு எப்படி உலகில் உள்ள எல்லாவற்றைப் பற்றியும் ஏதோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறது? தெரியாது. கேள்வி கேட்டால் பதில் சொல்கிறது. கதை எழுதச் சொன்னால் எழுதுகிறது. கட்டுரை கேட்டால் தருகிறது. கவிதை வேண்டுமானாலும் உடனே தயார்முன்னும் பின்னும் சிறிது தட்டி சரி செய்ய வேண்டிய வேலை மட்டும்தான் நமக்கென மிச்சம் இருக்கிறது. ஏழாம் அறிவு என்றே சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நம்மை இப்போது ஆளத் தொடங்கியிருக்கிறது. நான் எழுதுவதை நீ படி என்ற காலம் இனி இல்லை. உனக்கு என்ன பிடிக்கும் அல்லது இந்தக் கணம் என்ன படிக்க விரும்புகிறாய் என்று சொல், அதனைத் தருகிறேன் என்று கேட்டு உபசரிக்கக் கூடிய காலம் மிகச் சமீபத்திலேயே உள்ளது.

தமிழைப் பொறுத்தவரை இந்த நுட்பம் இன்னும் அவ்வளவு துல்லியமாகவில்லை என்றாலும் அது நிகழக்கூடிய காலம் குறைவானதாகவே இருக்கும். ஆழி செந்தில்நாதனின்ஐலேசா‘ [6] போன்ற முயற்சிகள் இந்நம்பிக்கையை வலுவாகவே அளிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி, தேவையான எந்தத் துறை சார்ந்தும் புதிய பிரதிகளை உருவாக்க முடியும் என்கிறது ஐலேசா. இயந்திரம் கற்கும் என்றால் இயந்திரம் படைக்கவும் செய்யவல்லதுதானே? ‘கண்டெண்ட் க்ரியேஷன்என்பதை இயந்திரத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு, அதனைச்<

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 20:58

ஒரு நிரந்தர நம்பர் 2வின் மரணம்

Pa Raghavan

1999ம் ஆண்டு ஒரு மரண தண்டனை அறிவிப்பு (எகிப்து). 2001ம் ஆண்டு தலைக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிப்பு (அமெரிக்கா). 2004ம் ஆண்டு அதிக உலக நாடுகள் தேடுகிற அபாயகரமான மனிதர்களின் பட்டியலில் இரண்டாமிடம். மே 2, 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் இறந்ததில் இருந்து ஜூலை 31, 2022 அன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி, சுட்டுக் கொல்லப்பட்டது வரை அய்மன் அல் ஜவாஹிரிதான் அல் காயிதாவின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

பெரிய டாக்டர். கண் அறுவைச் சிகிச்சை நிபுணர். பெரிய குடும்பஸ்தர். குறைந்தது நான்கு மனைவிகளையும், குறைந்தது ஒன்பது குழந்தைகளையும் (ஒரு செட் இரட்டைக் குழந்தைகள் உள்பட) பெற்றவர். பெரிய புரட்சியாளர். எகிப்தில் வசித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் விரல் அசைத்தால் மறு கணமே ஆயுதம் ஏந்திப் போராட வருவதற்கு ஆயிரக் கணக்கான சீடர்களை உருவாக்கி வைத்திருந்தார். ஆப்கனுக்கு அவர் இடம் பெயர்ந்தபோது அதே ஆயிரக் கணக்கான எகிப்தியப் போராளிகளும் பைப்பரின் எலிகள் போல அவர் பின்னால் அணி வகுத்து வந்ததை ஆப்கன் சரித்திரம் இன்றும் சொல்லும். பெரிய சித்தாந்தவாதி. நிறையப் படித்தவர். 1998ம் ஆண்டு முதல் அல் காயிதாவுக்கு ஃபத்வாக்களெல்லாம் அவர்தான் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அல் காயிதாவில் ஒசாமாவுக்கு அடுத்தபடி உலகறிந்த நபர் அவர்தான். எந்தப் புள்ளியில் அவர் தன்னையும் தனது இயக்கத்தையும் அல் காயிதாவுடன் இணைத்து, இரண்டறக் கலந்தார் என்பது முக்கியம். இறுதி வரை ஒசாமா பின் லேடன் நம்பிய ஒரே லெஃப்டினண்ட் அவர்தான் என்பது அதைவிட முக்கியம்.

நவீன உலகம் மிகச் சமீபத்தில் கண்டு களித்த மாபெரும் நகைச்சுவைக் காட்சி என்றால், அது தாலிபன்களிடம் ஆப்கனிஸ்தானை ஒப்படைத்துவிட்டு, ‘இனி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தராமல் இருங்கள்’ என்று அமெரிக்கா சொல்லிவிட்டுப் போனதுதான். ஆப்கனிஸ்தான் என்பது அப்பாவி மக்களை மைனாரிடிகளாகவும் தீவிரவாதிகளைப் பெரும்பான்மை சமூகமாகவும் கொண்ட ஒரு தேசம். இதில் உள்ளூர், வெளியூர் பாகுபாடுகள் அர்த்தமற்றவை. அல் காயிதா, ஐ.எஸ் என்பவை நாமறிந்த பெயர்கள். நமக்கு அறிமுகமில்லாத இன்னும் பல தீவிரவாத இயக்கங்களுக்கு அத்தேசம் சரணாலயமாக விளங்கத் தொடங்கி குறைந்தது நாற்பது வருடங்களாகின்றன. பெரும்பாலும் சோவியத் யுத்த காலத்தில் வந்து சேர்ந்த இயக்கங்கள். அல்லது அப்போது வந்து சேர்ந்து பிறகு ஏதேனும் ஓர் இயக்கத்துடன் ஒட்டிக்கொண்டவர்கள்.

அய்மன் அல் ஜவாஹிரியும் அதே சோவியத் யுத்த காலத்தில் ஆப்கனுக்கு வந்தவர்தான். ஆனால் ஒசாமாவுக்கு அவர் அப்போது அறிமுகமாகவில்லை. யுத்தத்தில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட்டு காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக அவர் பணியாற்றினார். யுத்தம் முடிந்த பின்பு என்ன என்ற வினா அவருக்கு மட்டுமல்ல; அவரைப் போல-அவரது இயக்கத்தினரைப் போலப் பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்கனுக்கு வந்திருந்த இஸ்லாமியப் போராளிகள் அனைவருக்குமே இருந்தது. ஜவாஹிரியால் மிக நிச்சயமாக அவரது சொந்த தேசமான எகிப்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்ற சூழல் இருந்தது. ஏனெனில், 1981ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டவர். மூன்றாண்டுகள் கெய்ரோ மத்திய சிறையில் இருந்தார்.

சிறைக்குள் இருந்த காலத்திலும் சரி; சிறைக்குச் செல்வதற்கு முன்னால் நீதி மன்றத்தில் அவர் தன்னை விடுவிக்கக் கோரி வாதாடிய போதும் சரி. ஒரு மாபெரும் மதப் புரட்சியாளன் உருவாகிவிட்டான் என்னும் பிம்பத்தை மிக அழகாகக் கட்டியெழுப்பியிருந்தார். எகிப்து புரட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் அவர்தான் அன்றைக்குக் கனவு நாயகன். ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிச் சொல்லி வியக்கும் வண்ணம் அமைந்தது அவரது நீதி மன்ற வாதங்கள்.

ஆன போதிலும் அவை எடுபடாமல், தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறைக்குச் சென்றார். அங்கே கைதிகள் அவரைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். ஜவாஹிரி அவர்களுக்கு சித்தாந்த வகுப்பெடுத்தார். புரட்சிப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். இஸ்லாத்தின் எதிரியாக அன்று அவர் கண்ணுக்குத் தென்பட்ட ஒரே சக்தி இஸ்ரேல் அரசாங்கம். யூதர்களைத் தாக்கி அழிப்பது ஒன்றே இலக்கு என்கிற தனது கருத்தை, அகப்பட்ட அத்தனை தொண்டர்களுக்கும் புகட்டினார். ஜவாஹிரியின் புரட்சிப் படை என்பது இப்படி உருவானதுதான்.

சிறையில் ஜவாஹிரி மிகக் கொடூரமான முறையில் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டதாகவும் வேறு யாராகவேனும் இருந்தால் நிச்சயமாக இறந்திருப்பார்கள்; அவர் மட்டும் எப்படியோ உயிர் பிழைத்தார் என்றும் ஒரு கதை சொல்வார்கள். அதற்கு ஆதாரமில்லை. ஆனால் 1985ம் ஆண்டு ஜவாஹிரி விடுதலை ஆனதும் முதல் காரியமாக எகிப்தை விட்டு வெளியேறினார். சவூதி அரேபியாவில் சிறிது காலம். ஏமனில் சிறிது காலம். பாகிஸ்தானுக்குச் சென்று, பெஷாவரில் சில ஆண்டுகள். அங்கிருந்து ஆப்கனிஸ்தான் வந்து சோவியத் யுத்த நீரோட்டத்தில் – அது முடிகிற வரை.

இடைப்பட்ட காலத்தில் எகிப்திய இஸ்லாமியப் போராளி இயக்கம் தனது அடையாளத்தை இழந்து, சிதறிக் கிடந்தது. 1993ம் ஆண்டு மீண்டும் அது உயிர்த்தெழுந்த போது, ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1993-95க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் எவ்வளவு; படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் எத்தனை பேர் என்று கூகுள் செய்து பாருங்கள். அவை அனைத்தின் பின்னணியிலும் ஜவாஹிரி இருந்தார். இவை அனைத்துக்கும் தொடர்ச்சியாகத்தான் 1999ம் ஆண்டு எகிப்து நீதி மன்றம் ஜவாஹிரிக்கு மரண தண்டனை விதித்தது.

சரி, நீ விதித்தால் விதித்துக்கொள்; அதை எவன் மதித்தான் என்று அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமது இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு மேற்குலக இஸ்லாமிய அமைப்புகளிடமும் தனி நபர் பணக்காரர்களிடமும் நிதி வசூல் செய்தார். 1996 அல்லது 97ல் அவர் மீண்டும் ஆப்கனிஸ்தானுக்கு வரும்போதுதான் முதல் முதலில் ஒசாமா பின் லேடனைச் சந்திக்கிறார் (இந்தச் சந்திப்பு ஜலாலாபாத் நகரில் நடைபெற்றது). ஒருவேளை, முன்பே அறிமுகமாகியிருக்கலாம். அது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இருவரும் நண்பர்களாகி, நெருக்கமாகி, இரண்டறக் கலப்பதெல்லாம் இதன் பிறகு நடப்பவைதாம்.

உண்மையில் அப்போதுகூட ஜவாஹிரி அமெரிக்காவைத் தமது எதிரியாகக் கருதியதில்லை. உலகெங்கும் செயல்படும் இஸ்லாமியப் போராளி இயக்கங்களை ஒருங்கிணைத்து, யூதர்களுக்கு எதிரான ஒரு முழு நீளத் தாக்குதலை திட்டமிடும் கனவுதான் அவர் வசம் இருந்தது. அமெரிக்கப் பக்க பலம் இருக்கும் வரை யூதர்களை அசைக்க முடியாது என்பதை அவருக்குப் புரிய வைத்தவர் ஒசாமா பின் லேடன். இஸ்ரேலைக் காட்டிலும் அமெரிக்கா அபாயகரமான தேசம் என்பதை எடுத்துச் சொன்னதும் அவர்தான்.

1998 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜவாஹிரி தமது இயக்கத்தை முறைப்படி அல் காயிதாவுடன் இணைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் கென்யாவிலும் தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல் காயிதா நடத்திய தற்கொலைத் தாக்குதல்களை அவர்தான் ஒசாமாவுடன் இணைந்து வடிவமைத்தார். உண்மையில், இந்த இருவரும் உலக அளவில் கவனம் பெற்ற முதல் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்பே ஒசாமா பின் லேடன் அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கத் தொடங்கி இருந்தார் எனினும், இந்தக் குறிப்பிட்ட (223 பேர் மரணத்தை உள்ளடக்கிய) தூதரகத் தாக்குதல்களுக்குப் பிறகுதான் அவர் ஜவாஹிரியிடம் தனது திட்டத்தை எடுத்துச் சொன்னார். பிறகு நடந்ததெல்லாம் நாமறிந்த சரித்திரம்.

அய்மன் அல் ஜவாஹிரி மட்டுமல்ல. அல் காயிதாவின் இதர மிச்சங்கள், ஐ.எஸ்ஸின் மிச்சங்கள், பல பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, இதர பல மத்தியக் கிழக்கு இயக்கங்களின் மிச்சங்கள் அனைத்தும் இன்னும் ஆப்கனிஸ்தானில்தான் நிலைகொண்டுள்ளன. முன்னளவு தீவிரம், முன்னளவு அமைப்பு ரீதியிலான செயல்பாடுகள் இன்று மட்டுப்பட்டிருக்கின்றன என்றாலும் ஆப்கன் இன்று வரை ஒரு தீவிரவாதக் கூடாரமாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களாகிவிட்டாலும் தாலிபன்களும் அந்த வகையறாதானே? எல்லாம் ஒரு ‘புரிதலில்’ நகரும் வாழ்க்கைதான்.

ஜூலை 31, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை காபூலுக்குச் சற்றுத் தள்ளி புறநகரப் பக்கமாக வசித்து வந்த ஜவாஹிரியின் வீட்டில் ஆளில்லா விமானம் மூலம் சி.ஐ.ஏ தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னால் அவர் அங்கேதான் இருக்கிறார் என்பது சி.ஐ.ஏவுக்குத் தெரியாதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அன்றைக்கு முகூர்த்தம் பார்த்தார்கள். முடித்துவிட்டார்கள். அவ்வளவுதான். இதில் வினோதம் என்னவென்றால், ‘தமது ரகசிய வீட்டில் பதுங்கியிருந்த ஜவாஹிரி பால்கனியில் உலவிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று வருகிற செய்தியைக் கவனியுங்கள். பதுங்கியிருக்கும் பிரகஸ்பதி எதற்காக உலவ வெளியே வர வேண்டும்?

அவர் அங்கே சகஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்பதுதான் உண்மை. என்னதான் அமெரிக்கா அத்துமீறிவிட்டது என்று இன்றைக்குத் தாலிபன் அறிக்கை விட்டாலும், கதவைத் திறந்து காட்டி காவிக்கொண்டு போ என்று கொடியசைத்ததும் அவர்கள்தாம். ஏதாவது வருடாந்திரக் கப்ப ஒப்பந்தமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

இருபதாண்டுக் காலத்துக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வந்த ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் நாடி நரம்பெல்லாம் தளர்ந்து அவர் எழுபத்தொரு வயதுக் கிழவராகும் வரை அமெரிக்கா அதற்குக் காத்திருக்க வேண்டி இருந்தது.

(2022 ஆம் ஆண்டு ஜவாஹிரி கொல்லப்பட்டபோது மெட்ராஸ் பேப்பரில் வெளியானது.)

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2025 20:34

July 11, 2025

நம்பாதே.

Pa Raghavan

சமூக ஊடகங்களில் சில விஷயங்கள் நம்ப முடியாத வகையில் டிரெண்ட் ஆகின்றன. உதாரணமாகக் கூமாபட்டி. அபத்தமே என்றாலும் ஒரு வார காலத்துக்கும் மேலாக ஓர் ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டது. இன்னொன்று, நடிகர் கிங்காங் மகள் திருமணம். அவர் ஒவ்வொரு நடிகரையும் அழைப்பதற்காகச் சென்ற விவரங்கள் முதல் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிங்காங்கை இடுப்பில் தூக்கிக்கொண்டு திருமண வரவேற்பில் நின்றது வரை ஒவ்வொரு ரெஃப்ரெஷ்ஷிலும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தன. நொடிக்கொரு போஸ்ட் போட்டாலும் டைம்லைன் இவ்வளவு நிரம்ப வாய்ப்பில்லை. எனவே இது வேறு என்னவோ.

விஜய் டிவி நடிகர் பாலா என்பவர் இன்னாருக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார், அன்னாருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தார், அசோகரைப் போல சாலை அமைத்தார், மரம் நட்டார் என்கிற தினசரி அப்டேட்டுகள். இது பல மாதங்களாக வருகிற தகவல் தொடர். எந்தப் பிரபல நடிகருக்கும்கூட சாத்தியமில்லாத அளவுக்கு இவரது ஒவ்வொரு செயல்பாடும் கவனம் பெறுகிறது.

பிறகு சாய் அப்யங்கர் என்னும் இளைஞர், முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் இரண்டாவது படம் கமிட் ஆகிவிட்டார், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது படங்கள் புக்காகிவிட்டன என்று அடிக்கொரு அப்டேட் வந்து இப்போது எட்டுப் படங்களுக்கு இசையமைக்கிறார் என்பதில் நிற்கிறது. நீங்கள் இதனைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை ஒன்பது அல்லது பத்தாகியிருக்கலாம். அவரது முதல் படம் வெளியாகும்போது அவர் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து முடித்திருக்கலாம்.

விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். உண்மை போன்றவையாகவும் இருக்கலாம்.

இப்போதெல்லாம் புகைப்பட, விடியோ ஆதாரமே இணைக்கப்பட்டாலும் செய்யறிவுச் செயல்பாடாக இருக்கலாம் என்று தோன்றிவிடுகிறது. எழுத்தாளர் ஷான் கருப்பசாமி, ஒரு செய்யறிவுப் பெண்ணை உருவாக்கி, அவரை ஒரு கிராமத்து விஞ்ஞானியாக வடிவமைத்து, டிரெண்டாக்கி நம்ப வைத்து அழிச்சாட்டியம் செய்ததைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் நானும் ஷானும் இணைந்தே ஒரு முழு செய்யறிவுத் திரைப்படத்தை எழுதி, இயக்கி நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்றுக் கோடீஸ்வரர்கள் ஆகலாம். அதுவேறு விஷயம். ஆனால் இனி வாழ்க்கையில் நான் நேரடி சாட்சியாக இல்லாத எதையும் நம்புவேனா என்று தெரியவில்லை.

பிரத்தியட்சம், பிரமாணம், சுருதி என்று மூன்று முதன்மையான அறிதல் முறைகளைச் சொல்வார்கள். இவை தவிரவும் சில உள்ளன என்றாலும் இவை மேலே வருபவை. பிரத்தியட்சம் என்றால் ஐம்புலன்களால் உணர்ந்து உறுதி செய்வது. நேரடி சாட்சி. சூரியனைப் பார்க்கிறோம். எனவே அது இருப்பது உறுதி. தீயைத் தொட்டால் சுடுகிறது. எனவே நெருப்பு சுடும். வாயில் போட்டால் இனிக்கிறது. எனவே மைசூர்பா இனிக்கும். இதைப் போல.

பிரமாணம் என்பது காரண காரியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. விளக்கு எரிவது முதல் மயானத்தில் பிணம் எரிப்பது வரை அனைத்தையும் மின்சாரம் செய்கிறது. எனவே, காண முடியாவிட்டாலும் அதைத் தொடுவது அபாயம் என்று அறிவது.

சுருதி என்பது வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே நம்புவது. ‘அபௌருஷேய’ என்பார்கள். புருஷத் (மனித) தொடர்பின்றி, மனிதனுக்கு முன்பிருந்தே இருக்கும் உண்மைகள் என்று இது வகைப்படுத்தப்படும். அதைக் கேள்வி கேட்காமல் நம்பி ஏற்பது. ரொம்பக் குடைய நேர்ந்தால் உள்ளுணர்வு என்று சொல்லிக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒன்றுமில்லை.

முன் சொன்னதைப் போல இம்மூன்று அறிதல் முறைகளும் அதிகம் புழங்குபவை. இவை தவிர வேறு வேறு தத்துவப் பள்ளிகள் வேறு வேறு அறிதல் முறைகளைப் பரிந்துரை செய்யும். அதிகம் உள்ளே சென்றால் தலை சுற்றும். உண்மை என்னவென்றால், அறிவியல் வளராத காலக்கட்டத்தில் திகைப்புக்கும் பிரமிப்புக்கும், அதனாலேயே உண்டான அச்சங்களுக்கும் அடிபணியும் தன்மைக்கும் நிறைய இடம் இருந்தது. செவ்வாயை தோஷம் உண்டாக்கும் கிரகமாக மட்டுமே கண்டு நடுங்கிய காலம் தொடங்கி, அங்கே என்ன இருக்கிறது என்று கண்டறிய செயற்கைக்கோள் அனுப்பிப் படம் பார்த்த காலம் வரை நாம் கடந்து வந்திருக்கிறோம். விண்ணில் சொர்க்கம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம். சுனிதா வில்லியம்ஸும் அவரது துறை சார்ந்த முன்னோரும் பின்னோரும் போய்ப் பார்த்துவிட்டு வந்த பிறகு விண்ணில் ஓர் ஆராய்ச்சி நிலையம் இருப்பது மட்டுமே பிரத்தியட்சம் என்று அறிந்தோம்.

எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்பதல்ல. உண்மையை உணர்வது வேறு, ஏற்பது வேறு, பகிரங்கமாக ஒப்புக்கொள்வது முற்றிலும் வேறு. அதை அவரவர் பின்புலம், மனச்சாய்வு போன்ற பல காரணிகள் தீர்மானிக்கும். ஆனால் ஆதிகால நம்பிக்கைகள் அசைக்கப்படும் அல்லது தகர்க்கப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மட்டும் உறுதியாகிறது அல்லவா?

இதனைக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. சுய நிரூபணங்களற்ற வெறும் நம்பிக்கைகள் அறிவியலால் தகர்க்கப்படுவது மனித குல வளர்ச்சிக்கு அத்தியாவசியம். ஆனால் இந்த அறிவியலின் உச்சம் என்பது, அறிவியலின் மீதான நம்பிக்கையையே தகர்க்கும் விதமாக மாறிக்கொண்டு வருகிறதோ என்று அச்சமாக உள்ளது. செய்யறிவு அதனை மிகவும் சிறப்பாகச் செய்யத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இன்றைய சமூக ஊடகங்கள் பிரத்தியட்சம், பிரமாணத்தைக் கூட நம்பாதே என்கின்றன. அங்கே உலவும் தருணங்களில் எல்லாம் உள்ளுணர்வு மட்டுமே தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டிருக்கிறது. இதை நம்பாதே. அதை நம்பாதே. எதையும் நம்பாதே. யாரையும் நம்பாதே.

ஒரு சம்பவம். ஓரிரு மாதங்களுக்கு முன்பு என் மனைவியுடன் குறிப்பிட்ட ஒரு பொருள்-கடை-விலை சார்ந்து சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தேன். டைனிங் டேபிளில் நாங்கள் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் இருவருடைய போன்களும் எங்கள் அருகே இருந்தன.

அன்று தொடங்கி அடுத்த சில நாள்களுக்கு நாங்கள் பேசிய பொருளைக் குறித்த விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் வந்துகொண்டே இருந்தன. ஃபேஸ்புக் ஒட்டுக் கேட்கிறது என்பது பாமர சிந்தனை. செட்டிங்ஸில் செயலிகளுக்கு நாம் என்னென்ன அனுமதி அளித்திருக்கிறோம், எதையெல்லாம் மறுத்திருக்கிறோம் என்று பார்ப்பதே அறிவுள்ளோர் செய்யும் முதல் பணியாக இருக்கும். மைக்ரோபோன் எப்போதும் இயங்குகிறதா, இருப்பிடங்களை எப்போதும் பகிர்ந்துகொள்ள வழி செய்திருக்கிறோமா என்று தொடங்கி எதையெதையோ கவனிக்கச் சொல்லி வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள். பயனர் அனைவரும் வல்லுநர்களாக முடியாது. பூட்டைச் செய்பவன் சாவியுடனே சேர்த்துச் செய்வது போல, தொழில்நுட்ப சௌகரியங்கள், அவற்றின் இடர்பாடுகளுடன் சேர்த்தே கட்டமைக்கப்படுகிறது. பகல்-இரவு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகளின் பட்டியலில் இதனையும் இணைத்து இதற்கும் ஒரு தத்துவ விளக்கம் தந்துவிட முடியும்.

என் பிரச்னை அதுவல்ல. வாழ்வில் பெரிய அளவு முக்கியத்துவம் கோராத எளிய கேளிக்கைகளில் உள்ள இடர்பாடுகளில் இருந்து விலகி நிற்க முடிந்தால் நல்லதென்று இப்போதெல்லாம் அடிக்கடித் தோன்றுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். ஃபேஸ்புக் தனது பயனர்களுக்குப் பணம் தருவது என்று தொடங்கியபோது, எந்தத் தனி முயற்சியும் இன்றி முதல் மாதம் முதலே எனக்கு அதில் வருமானம் வரத் தொடங்கியது. அடுத்தடுத்த மாதங்களில் தொகை கணிசமாக ஏறவும் ஆரம்பித்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு சட்டென்று நின்றது. இரண்டு மாதத் தொகை சேர்ந்து வந்தது. பிறகு அது மூன்று மாதத் தொகையாகச் சேர்ந்தது. இன்னும் எழுது, படங்கள் போடு, ரீல்ஸ் போடு, ஸ்டோரி வை என்று அவன் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் வரும். மானிடைசேஷன் பக்கத்தில் அறிவிப்பு வரும்.

அடுத்தவர் சொல்வதையெல்லாம் கேட்பவனாக இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்? எனக்குத் தோன்றியபோது தோன்றியதைத் தோன்றிய விதத்தில் எழுதுவேனே தவிர எவனுக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளும் வழக்கம் என்றும் இருந்ததில்லை.

இது அவனுக்குப் புரிந்துவிட்டபோது என்னுடைய போஸ்ட்களை lower feed இல் விடத் தொடங்கினான். என்ன எழுதினாலும் யாருக்கும் போய்ச் சேராது. மாதக் கணக்கில் இப்படி இருந்துவிட்டுச் சட்டென்று ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு சாதாரண போஸ்டை வைரல் ஆக்கிக் காட்டுவான். ஆயிரம் லைக்குகள். இரண்டாயிரம் லைக்குகள். ஐந்நூறு கமெண்ட்கள். நட்பு வட்டத்தில் இல்லாத பல்லாயிரக் கணக்கானோர் பார்த்திருப்பதாகப் படம் வரைந்து காட்டுவான். சிரித்துக்கொண்டு கடந்துவிடுவேன்.

கடந்த சில மாதங்களாக லோயர் ஃபீடும் இல்லை; அதிக ரீச்சும் இல்லை. ஆனால் டைம்லைனில் வருகிற போஸ்ட்களில் இருபதுக்கு ஒன்றுதான் நண்பர் வட்டத்தில் உள்ளவர்களுடையதாகவோ, followers எழுதியவையாகவோ இருக்கிறது. மற்ற அனைத்தும் ‘இதை நீ ஃபாலோ செய்யலாம்’ என்கிற பரிந்துரை போஸ்ட்களாகவே இருக்கின்றன. என்னுடைய போஸ்ட்களும் இப்படித்தான் போகும் என்று புரிந்தது. இதனால்தான் நான் யாரென்றே தெரியாத / படிப்பு எழுத்து என்றால் என்னவென்றே அறியாத கூட்டத்துக்கு ஒவ்வொரு போஸ்டிலும் தன்னிலை விளக்கம் தரவேண்டியதானது. வேலை வெட்டி இல்லாதவன் அதனைச் செய்யலாம். நானோ, வேலை வெட்டி இல்லாதவனாகவே இருந்தாலும் செய்ய விரும்பாதவன். எனவே சத்தமின்றி ஃபேஸ்புக்குக்கு அளித்த நேரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, இப்போதெல்லாம் எதையாவது அறிவிப்பதென்றால் மட்டும் அங்கே செல்வது என்று அமைத்துக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு அவன் தொழில் முக்கியமென்றால் எனக்கு என் திட்டங்கள் முக்கியமல்லவா.

இங்கே எழுதுகிறேன். இது என் இடம். இன்னொருவன் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லை. சிறிய குறிப்புகள் ஏதாகிலுமென்றால் வாட்சப் சேனலில் எழுதுகிறேன். அதுவும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. நான் மட்டும் நிரந்தரமா! ஆனால் இருக்கும் வரை எழுதிக்கொண்டிருப்பேன். என்னைப் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் தேடி வருவார்கள். அதில் எனக்குச் சந்தேகமேயில்லை. எனவே, கவனத்தைக் கலைக்கக்கூடிய அனைத்தினின்றும் விடுவித்துக்கொண்டு விடலாம் என்று தோன்றிவிட்டது.

இப்போது எழுதத் திட்டமிட்டிருக்கும் ‘உரி’, யதி – சலத்தைக் காட்டிலும் அளவில் மிகப் பெரிதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை. ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும் கட்டம் வரைதான் நான் அதற்கு எஜமானன். பிறகு அது அப்பொறுப்பை எடுத்துக்கொள்ளும். ஆனால் சாத்தியமுள்ள அனைத்து கவனச் சிதறல் சாளரங்களையும் அடைத்து வைக்கும் முயற்சியில் இப்போதே இறங்குவது நல்லதுதான் என்று நினைக்கிறேன்.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2025 17:30

July 8, 2025

ஒன்றென்றிருத்தல், கடிதம் – சிகரம் பாரதி

Pa Raghavan

அன்பின் பாராவுக்கு,

Multi Tasking பற்றிய பதிவைக் கண்டேன். அந்தக் கலையில் நான் பூச்சியம் என்கிறீர்கள். முற்று முழுதாக அப்படிச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. போன் பார்க்கும் போதே, எழுதவும், அதன்போதே சாப்பிடவும், அதே சமயம் நடக்கவும் முடியும் என்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது. கணினி, தொலைபேசி ஆகிய உபகரணங்கள் Multi Tasking வசதிகளை வழங்குகின்றன. ஆனால் அவையும் வீடியோ எடிட்டிங் செய்யும் போதே ஆடியோ எடிட்டிங் செய்வதில்லையே? மாறாக ஒரு பக்கம் யூடியூப் வீடியோவை ஓடவிட்டு, மறுபக்கம் ஆடியோ எடிட்டிங் செய்ய வசதியளிக்கின்றன. அல்லது ஒரே திரையில் பல ஆவணங்களை திறந்து வைத்து அவற்றைப் பார்த்து வேறு ஏதாவதொரு ஆவணத்தில் தட்டச்சு செய்ய உதவுகின்றன. ஆகவே ஒரே நேரத்தில் பத்து விடயங்களை செய்யும் Multi Tasking வசதி உபகரணங்களிலேயே இல்லை என்றே நினைக்கிறேன்.

பொதுவாக Multi Tasking என்பது பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்கும் திறன் அல்லது பல பணிகளுக்கு இடையில் விரைவாகவும் திறமையாகவும் மாறுவது என்று கூறப்படுகிறது. டிவி பார்க்கும் போதே சாப்பிடுவது என்பது இரண்டின் மீதும் முழுக் கவனம் இல்லாமல் இரண்டையும் அரைகுறையாக செய்யும் ஒன்று. அதை Multi Tasking கலை என்று சொன்னால் அது கொலையாகிவிடும். அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளுக்கு இடையே இலகுவாக மாறிக்கொள்ள முடிகிற வசதியே அந்தக் கலையாக இருக்க வேண்டும். தாங்கள் தொலைக்காட்சித் தொடர் எழுதும் போது ஒரு கட்டுரைக்கான அவசரம் வந்தால் இதை வைத்துவிட்டு அந்தக் கட்டுரையை எழுத முடிந்தால் அதுதான் Multi Tasking என நினைக்கிறேன். அதை நீங்கள் சிறப்பாக செய்திருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

இன்றைய அவசர உலகில் நாம் செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆகவே இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கட்டுரை என்றால் அதை மட்டும் தான் எழுதுவேன், கவிதையைத் தொடக்கூட மாட்டேன் என்று தலைகீழாக நிற்க முடியாது. ஒவ்வொரு வேலைகளுக்கு இடையிலும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஆகவே Multi Tasking என்பது ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது அல்ல என்பதும், பல வேலைகளை ஒரே சந்தர்ப்பத்தில் முகாமைத்துவம் செய்வது என்பதும் எனது கருத்து. ஆனால் வேலைகளுக்கு இடையே எவ்வாறு நம்மால் விரைவாக மாறிக்கொள்ள முடிகிறது என்பதுதான் அந்தக் கலையில் நாம் விற்பன்னரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

சிகரம் பாரதி
இலங்கை
மலையகம்

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 05:33

July 7, 2025

ஒன்றென்றிருத்தல்

Pa Raghavan

ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவதை multi-tasking என்கிறார்கள். இப்போது வெளியாகும் புதிய சாதனங்களில் எல்லாம் multi-tasking வசதி செய்யப்பட்டிருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். வரவிருக்கும் ஐபேடின் புதிய ஆப்பரேடிங் சிஸ்டம் இதனை இன்னும் சுலபமாக்கித் தரும் என்று சொல்கிறார்கள். கருவிக்கென்ன. என்ன வேண்டுமானாலும் செய்யும். கருவியைப் பயன்படுத்துபவனுக்கு அந்தத் திறன் உள்ளதா என்பதுதான் விஷயம்.

முன்னொரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கைந்து தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆறு தொடர்களுக்கு எழுதினேன். அப்போது சன் தொலைக்காட்சியில் வெளியான மொத்தத் தொடர்களின் எண்ணிக்கை பதினெட்டு. நாளெல்லாம், மாதமெல்லாம் ஆண்டெல்லாம் எழுதுவது தவிர வேறு எதுவுமே இல்லை என்றிருந்த காலம் அது. அப்போதெல்லாம் என் அளவுக்கு multi-tasking செய்ய உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது என்று அவ்வப்போது தோன்றிச் சிறிது கிளுகிளுப்பூட்டும்.

பிறகுதான் உணர்ந்தேன். ஒரே நாளில் ஐந்து வேறு வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதினாலும், ஒன்றை முடித்துவிட்டுத்தான் அடுத்ததை எடுக்கிறேன். அது multi-tasking இல் சேராது.

இது தெரிந்தபோது சிறிது சோர்வாகிவிட்டது. அதெப்படி multi-tasking இல்லாமல் போகும் என்று வெகுண்டெழுந்து இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு, இருவேறு தொடர்களின் காட்சிகளை அடுத்தடுத்து எழுதிப் பார்த்தேன். ஆனால், அதுவுமே ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததற்குப் போவதுதான் என்பதால் அதுவும் இல்லை என்றானது.

பதற்றம் நீங்கி, நிதானமாக யோசித்தபோது இன்னொன்றும் தோன்றியது. எழுதுகிறேன். அது ஒரே டாஸ்க்தான். தொடர் எதுவானால் என்ன? எவ்வளவு ஆனால் என்ன? நாவலோ கட்டுரையோ வேறொன்றோ ஆனால்தான் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே வேலையை நாளெல்லாம் செய்வதன் பெயர் நிச்சயமாக multi-tasking ஆக இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது. இந்த ஞானம் பிறந்த கணத்திலிருந்து எந்தெந்த விதங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை ஒன்றாகச் செய்கிறேன்; அதைச் சரியாகவும் செய்கிறேன் என்று யோசிக்கத் ஆரம்பித்தேன்.

சாப்பிடும்போது டிவி பார்க்கிறேன். அதில் சிக்கல் வருவதில்லை. ஆனால் பார்க்கிற காட்சியில் கவனம் குவிந்துவிட்டால் சாப்பாடு மேலே சிந்திவிடுகிறது. நடைப் பயிற்சிக்குச் செல்லும்போது ஹெட்போனில் பாட்டுக் கேட்கிறேன். அல்லது ஏதாவது சொற்பொழிவு கேட்கிறேன். இந்த இரண்டு பணிகளும் கூடியவரை சரியாகவே அமைகின்றன. ஆனால் சில சமயம் நடப்பதிலும் கவனம் குவியாமல், கேட்கும் இசையிலும் மனம் பதியாமல் வேறு எதையாவது சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன். என் மகள், படிக்கும்போது, கோடிங் செய்யும்போது, கணக்குப் போடும்போதுகூட ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். எழுதும்போது இசை கேட்பேன் என்று சில எழுத்தாளர்கள் சொல்வதைப் பார்க்கும்போதும் வியப்பாகவே இருக்கும். எழுத உட்கார்ந்தால் எனக்கு மின்விசிறி சத்தம்கூட இடைஞ்சல். போனை சைலன்ட்டில் போட்டுக் கவிழ்த்து வைப்பேன். . லேப்டாப்பின் வால்யூமை பூஜ்ஜியத்தில் வைப்பேன். நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்வேன். நான் டைப் செய்யும் சத்தத்துக்கு மட்டுமே என் சித்தம் அனுமதி அளிக்கும்.

நேர்மையாகத் தீர்ப்பளிப்பதென்றால் multi-tasking என்னும் கலையில் நான் மிகப்பெரிய சைபர். என் மனைவி அடிக்கடி சொல்வாள். எதையாவது வாங்கி வருவதன் பொருட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றால், எதை நினைத்துக்கொண்டு செல்கிறேனோ அதை மட்டுமே வாங்கி வருகிறேன். தேவையான வேறு ஏதாவது கையெட்டும் தொலைவிலேயே இருந்தாலும் கவனிப்பதில்லை; வாங்கி வருவதில்லை.

இது ஒரு நியாயமான குற்றச்சாட்டு என்றே எப்போதும் தோன்றும். ஆனால் அக்கம்பக்கம் கண்ணும் கவனமும் போகாமல் இருக்காது. வேண்டாத எதையாவது வாங்கி வந்து விட்டு, அதன் பொருட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாமே என்கிற எச்சரிக்கை உணர்வே பெரும்பாலும் அதற்குக் காரணம்.

நானறிந்த சில மல்ட்டி டாஸ்கர்கள் இயங்கும் விதம், நினைக்கும்போதே கலவரமூட்டும். மேலே ஓடும் டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டே முகச் சவரம் செய்யும் சிகையலங்காரக் கலைஞர் ஒருவரை அறிவேன். போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் விற்பன்னர்களை அநேகமாக தினமுமே பார்க்கிறேன். ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பில்லுக்குப் பணம் வாங்கி உள்ளே போட்டு மீதிச் சில்லறை எண்ணிக் கொடுக்கும் கோடம்பாக்கம் அட்சயா ஓட்டல் கல்லாக்காரரை வாரம் ஒருமுறையாவது எதிர்கொள்கிறேன்.

இவர்கள் எல்லோரும் மல்டி டாஸ்கிங் மீதான என் விருப்பத்தை அவ்வப்போது நீரூற்றி அணைப்பவர்கள். ஆனால் இந்தக் கலை என்னை ஏனோ வசீகரிக்கிறது. எப்படியாவது கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் மூலம் இன்னும் சிறிது நேரம் கிடைக்குமானால் மேலும் உருப்படியாக எதையாவது செய்யலாம் என்று ஆசை வருகிறது.

இப்படித் தோன்றும்போதே இன்னொன்றும் தோன்றுகிறது. இன்னும் சிறிது நேரம் கிடைத்து மேலும் சிறிது உருப்படியாக எதைப் புதிதாகச் செய்ய முடியும் என்னால்? இன்னும் நூறு சொற்கள் வேண்டுமானால் அதிகமாக எழுதலாம். மீண்டும் அது multi-tasking இல் சேராது என்கிற புள்ளியில்தான் போய் நிற்கும். கணினியில் ஒரே திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் வசதி எப்போதோ வந்தது. இனி என் ஆட்டத்தைப் பார் என்று அந்நாளில் உணர்ச்சிவசப்பட்டு உள்ளுக்குள் கொக்கரித்திருக்கிறேன். இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஒரே ஒரு நாள் – ஒரே ஒரு முறைகூட அப்படியொரு முயற்சியை நான் செய்து பார்த்ததேயில்லை.

ஒன்றென்றிருப்பதே எனக்குச் சரி என்று ஏதோ ஒன்று என்றைக்கோ முடிவு செய்து வடிவமைத்திருக்கிறது. இதனால்தான் எனக்கு விசிஷ்டாத்வைதம்கூட அவ்வளவாக ஒத்து வருவதில்லை.

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2025 17:30